Sunday, October 03, 2010

அந்தார்டிகாவிலும் தீராத இனப்பிரச்சினை

லத்தீன் அமெரிக்கா முழுவதும் ஸ்பானியா போன்ற ஐரோப்பிய மொழிகளே பேசப்படுவதாக பலர் நினைத்துக் கொண்டிருக்கலாம். பூர்வீக செவ்விந்திய இன மக்களின் மொழிகள் அடக்கப்பட்டு, அழிக்கப்பட்டு வருகின்றன. அல்லாவிடின் நவீன காலத்திற்கேற்ப வளர்ச்சி அடையாத காரணத்தால், அந்த மொழிகளைப் பேசுவோரின் எண்ணிக்கை குறைந்து செல்கின்றது. தென் அமெரிக்காவில் பொலீவியா, குவாதமாலா போன்ற நாடுகளில் செவ்விந்திய பழங்குடியினரின் எண்ணிக்கை அதிகம். ஆனால் அவர்களுக்கிடையே வேறு பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதற்கு மாறாக, சிலியில் மட்டும் ஒரே மொழி பேசும் மக்கள், தமக்குரிய தாயக பூமியைக் கொண்டுள்ளனர். அந்தார்டிகாவுக்கு அண்மையில் உள்ள தென் சிலியில் மாபுச்சே மொழி பேசும் மக்கள் பெருமளவில் வாழ்கின்றனர். மொத்த சனத்தொகையில் பத்து வீதமான, அதாவது பத்து லட்சம் மாபுச்சே இன மக்கள் தமக்குரிய தாயக மண்ணில் வாழ்கின்றனர். இவர்களை விட மூன்று லட்சம் மாபுச்செக்கள் தலைநகர் சாந்தியாகோ டெ சிலியிலும், ஆர்ஜென்தீனாவிலும் காணப்படுகின்றனர்.

சிலியில் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய அடித்தட்டு மக்களான மாபுச்செக்களின் சொந்த மண் அந்நிய முதலாளிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது. சர்வாதிகாரி பினோச்செயின் தீவிர வலதுசாரி ஆட்சிக் காலத்தில், மாபுச்செக்களின் பாரம்பரிய பூமி விலை பேசி விற்கப்பட்டது. பணம் படைத்த யாரும் நிலங்களை வாங்கி தமது சொந்தமாக்கிக் கொள்ள முடிந்தது. இதற்கெதிராக மாபுச்சே மக்கள் உரிமை கேட்டு போராடிய பொழுது, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது சர்வாதிகாரம் ஒழிக்கப்பட்டு விட்டது. ஜனநாயக தேர்தலில் தெரிவானவர்கள் ஆட்சியில் உள்ளனர். இருப்பினும் பினோச்சே கால பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழே, மாபுச்சே ஆர்வலர்கள் கைது செய்யப்படுகின்றனர். விசாரணை இன்றி தடுத்து வைக்கப்படுகின்றனர்.

மாபுச்சே ஆர்வலர்களை அரசு சிறையில் அடைத்த போதிலும், அவர்களது உரிமைக்கான போராட்டம் அடங்கவில்லை. சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்களது உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக பெல்ஜியத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. பெல்ஜியத்தில் உள்ள இடதுசாரி அமைப்புகளை சேர்ந்தவர்கள், சிலி தூதுவராலயத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். சர்வதேச தோழமை மாபுச்சே மக்களின் நியாயமான கோரிக்கைகளை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றுள்ளது.

உண்ணாவிரதம் தொடர்பாக மாபுச்சே ஆர்வலர்கள் வெளியிட்ட அறிக்கை:
"எல் மான்சானோ" சிறையில் அடைக்கப்பட்ட அரசியல் கைதிகளான நாம், இத்தால் மாபுச்சே மக்களுக்கும், சர்வதேச கவனத்திற்கும் எமது அறிவிப்புகள் பின்வருமாறு:
- நாம் 12 ஜூலை 2010 அன்று சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவிக்கிறோம்.
- அநீதியான போலிஸ், நீதி மன்ற நடவடிக்கைகளை எதிர்த்தும், சிறைச்சாலைகளில் மனதளவிலும், உடலளவிலும் எமக்கு நடைபெறும் சித்திரவதைகளை எதிர்த்தும் இந்த போராட்டத்தை அறிவிக்கிறோம்.
- மாபுச்சே விடுதலை அமைப்பை அடக்குவதற்காக, சிலி அரசு எமது நியாயமான போராட்டத்தை கிரிமினல்மயப் படுத்தியுள்ளது. எம் மீது கடுமையான பாஸிச அடக்குமுறைச் சட்டங்களை அமுல்படுத்துகிறது.

எமது கோரிக்கைகளாவன:
- பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை இரத்து செய்.
- மாபுச்சே மக்களின் பிரச்சினைகளை இராணுவ நீதிமன்றங்களில் விசாரிப்பதை நிறுத்து
- அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்
- மாபுச்சே தாயகப் பூமியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தை வாபஸ் வாங்கு
- மாபுச்சே மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி.

இங்ஙனம்,
மாபுச்சே அரசியல் கைதிகள்
Concepción,
12 ஜூலை 2010


Chile hunger strike puts focus on Indians' plight
Mapuche

7 comments:

Anand said...

உலகம் முழுக்க அலசுகிறீர்கள், எப்படி இவ்வளவு தெரிகிறது?

Kalaiyarasan said...

நன்றி ஆனந்த். ஓயாத தேடல் தான் அதன் இரகசியம்.

vinthaimanithan said...

உங்கள் பதிவுக்குப் பின்னூட்டம் போடுவதற்குக் கூட ஓரளவுக்காவது விஷயஞானம் வேண்டும்... அந்த அளவு கனம்!

Kalaiyarasan said...

நன்றி விந்தை மனிதன், உங்களது தெரிந்து கொள்ளும் ஆர்வம் வரவேற்கத் தக்கது.

Unknown said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

Anonymous said...

அருமையான பதிவு நன்றி

rami said...

அருமையான பதிவு நன்றி