Friday, October 10, 2008

இருபத்தியோராம் நூற்றாண்டின் அடிமை வியாபாரம்



"இந்தியாவில், மத்தியப்பிரதேசத்தில், அரை மில்லியன் மக்கள் 11 டாலருக்கும் குறைவான கடனுக்காக, அடிமைகளாக வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களில் 90 வீதமானோர் தலித்துகள்."- மத்திய பிரதேச மாநில அறிக்கை.

Benjamin Skinner என்ற அமெரிக்க எழுத்தாளர் இந்தியா உட்பட, உலகின் பல நாடுகளிலும் தற்போதும் அடிமை முறை நிலவுகின்றது என்பதை, நேரடியாக தானே சென்று பார்த்து சேகரித்த தகவல்களை கொண்டு, தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். "A Crime So Monstrous" என்ற பெயருடைய அரிய பொக்கிஷமான இந்த நூல், அவரது பல வருட கடுமையான உழைப்பின் விளைவு. இந்த நூலை எழுதுவதற்காக பல நாடுகளில் அடிமைகளாக வாழும் மக்களுடன் பழகி, அவர்களது இருப்பிடத்தில் தங்கி கஷ்டத்தை புரிந்து கொள்ள முயன்றிருக்கிறார். அடிமைகளின் உழைப்பை சுரண்டும் கிரிமினல்களுக்கும் அஞ்சாமல், அசாத்திய துணிச்சலுடன் ஒடுக்கப்பட்டவர்களின் துயரத்தை உலகறிய செய்யும் மாபெரும் பணியை செய்திருப்பது, இந்த நூலை படிக்கும் போது தெரிகின்றது. வாசிப்பவர்களுக்கு அலுப்புத்தட்டாமல், சில தெரிவுசெய்யப்பட்ட அடிமைகளின் வாழ்க்கை கதைகளை, அதேநேரம் செய்திகளையும், புள்ளிவிபரங்களையும் சேர்த்து சுவைபட அளித்துள்ளார்.

சரித்திர நூல்கள் கூறுவது போல, ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைக்கப்பல்கள் அமெரிக்க கண்டத்திற்கு போவதை தடை செய்ததன் பின்னும், காலனிய ஆதிக்கவாதிகள் தமது அமெரிக்க பெருந்தோட்டங்களில் வைத்திருந்த அடிமைகளை விடுதலை செய்ததன் பிறகும், உலகில் இன்று அடிமைகளே இல்லை என்று பலர் நம்புகின்றனர். அனால் உலகில் நிலவும் ஏழை-பணக்கார சமூக ஏற்றத்தாழ்வானது, ஒரு பக்கத்தில் அடிமைகளாக அடங்கி வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள இழப்பதற்கு எதுவுமற்ற மக்கள், மறுபக்கத்தில் அவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் அடிமை வியாபாரிகள், முதலாளிகள், பணக்காரர்கள், மற்றும் காமவெறியர்கள் ஆகிய சமூக பிரிவுகளை தோற்றுவித்துள்ளது. அடிமைகளால் பயனடைவோர் உலகில் வறுமை தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

Skinner அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும், உலகிலேயே மிக வறிய நாடுகளில் ஒன்றான ஹைத்தியில் இருந்து, நாகரீக உலகின் நவீன அடிமைகளைதேடும் பயணத்தை ஆரம்பிக்கிறார். ஒரு காலத்தில் அடிமைகளின் புரட்சி வெற்றியடைந்து பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்ற ஹைத்தி மக்கள், இன்று நித்திய அடிமை வாழ்வுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அங்கே ஏழைகளின் ஆதரவைப் பெற்ற ஜனாதிபதி அரிஸ்தீத் கிரிமினல் குழுக்களாலும், அமெரிக்காவாலும் விரட்டப்பட்ட பின்னர், அந்நாடு தற்போது ஐ.நா. பாதுகாப்புபடையின் கீழ் ஆளப்பட்டு வருகின்றது. ஐ.நா.இராணுவத்தில் கடமையிலீடுபடுத்தப்பட்ட பன்னாட்டு வீரர்கள்(இலங்கை வீரர்களும் அடக்கம்), ஹைத்தி சிறுமிகளின் ஏழ்மையை பயன்படுத்தி, அவர்களுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்த விவகாரம் வெளிவந்து, ஐ.நா.சமாதானப் படைகளின் மானம் சந்திக்கு வந்தது. வீதிகளில் அநாதரவாக விடப்பட்ட சிறுமிகள் 2 டாலருக்கு தமது உடலை வாடகைக்கு விடுகின்றனர். பாலியல் நுகர்வுக்காக கொடுக்கும் பணம் தான், ஐ.நா.படையினர் ஹைத்தியின் பொருளாதாரத்திற்கு வழங்கும் நேரடி பங்களிப்பு, என்று அங்கத சுவையுடன் சொல்லப்படுவதுண்டு.

இந்த நூலாசிரியர் கொடுக்கும் தகவலின் படி, இவையெல்லாம் அங்கே வழக்கமாக நடக்கும் அட்டூழியங்கள், எப்போதாவது தான் வெளிவருகின்றது. காலங்காலமாக தலைநகர் போர்ட்-ஒ-ப்ரின்சில் வாழும் வசதிபடைத்த ஹைத்தியர்கள், நாட்டுப்புற ஏழை சிறுமியரை வீட்டு வேலைக்காரிகளாக, அதாவது கூலி கொடுக்காத அடிமைகளாக, வைத்திருந்து கொடுமைப்படுத்துவதும், அதேநேரம் அவ்வீட்டு ஆண்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதும் சர்வசாதாரணம். அமெரிக்காவில் வாழும் வசதியான புலம்பெயர்ந்த ஹைத்தியர்கள் கூட, கடத்தி வரப்படும் சிறுமிகளை வீட்டு அடிமைகளாக வைத்திருக்கின்றனர். சில பத்து டாலர்களுக்கு ஒரு சிறுமியை/சிறுவனை வாங்கும் நிலையுள்ளதை, நூலாசிரியர் ஒரு அடிமை வியாபாரியை சந்தித்து விசாரிப்பதன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்கிறார்.

சூடானில் தெற்குப்பகுதியில் பழங்குடியினமான டிங்கா மக்களின் வாழ்விடங்களை சூறையாட வடக்கில் இருந்து குதிரைகளில் வரும் அரேபியர்கள், பெண்களையும் சிறுவர்களையும் அடிமைகளாக பிடித்துச் சென்று, தமது வீடுகளில் வேலைக்கு அமர்த்துவது காலங்காலமாக நடந்து வரும் சம்பவங்கள். இது பெருபாலும் வாழ்வாதாரங்களுக்கான போராட்டமாக இருந்தாலும், சில அரேபியர்கள் இந்த பழங்குடியினரை இஸ்லாமியமயப்படுத்தவும், அதேநேரம் (அவர்களைப் பொறுத்தவரை) நாகரீகப்படுத்தவும் என்று, இந்த அடிமை வேட்டையாடலை நடத்தி வந்தனர். இருப்பினும் டிங்கா மக்கள் மிஷனரிகளால் கிறிஸ்தவர்களக்கப்பட்ட பின்னர், அதிலும் குறிப்பாக அரசுடன் மோதும் சூடான் மக்கள் விடுதலை இயக்கம்(SPLM) தோன்றிய பிறகு நிலைமை சர்வதேச அவதானத்தை பெறுகின்றது.

ஒரு முறை அமெரிக்க தொலைக்காட்சி சூடான் அடிமைகளைப் பற்றிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது. தொடர்ந்து கிறிஸ்தவ உதவி நிறுவனங்கள், சூடானில் கிறிஸ்தவ அடிமைகளை அரேபியரிடமிருந்து மீட்கப்போவதாக கூறி, நிதி சேர்க்கத்தொடங்கி விட்டன. கோடிக்கணக்கில் சேர்ந்த அமெரிக்க டாலர்களுடன் சூடான் சென்ற இந்த தர்ம ஸ்தாபனங்கள் குறிப்பிட்ட அளவு அடிமைகளை விடுவித்திருந்தாலும், அவமானத்திற்குள்ளும் மாட்டிக் கொண்டனர். SPLM கொமான்டர்கள் தாம் பிடித்து வைத்திருந்த சிறுவர்களையும், உதவிநிறுவனங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, அடிமைகள் என்று பொய் சொல்லிக் கொடுத்தனர். இயக்க கொமாண்டர்களின் சுயதேவைக்கும், ஆயுதங்கள் வாங்க அந்தப்பணம் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு அடிமைகளின் விடுதலை, SPLM மிற்கு நிதி சேர்ப்பதில் போய் முடிந்த கதை அம்பலமாகிய போது, அதையிட்டு தமக்கு கவலையில்லை என்று கூறின இந்த தர்ம ஸ்தாபனங்கள்.

கிழக்கு ஐரோப்பாவில் சோஷலிச கட்டுமானம் வீழ்ந்த பிறகு பெருமளவு மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டனர். ருமேனியா, மற்றும் அதற்கருகே இருக்கும், முன்னாள் சோவியத் குடியரசான மோல்டேவியா என்பன கடுமையாக பாதிக்கப்பட்டன. இன்று இந்நாடுகள் அதிகளவு பாலியல் அடிமைகளை உற்பத்தி செய்து பணக்கார நகரங்களுக்கு விநியோகித்து வருகின்றன. மேற்கு ஐரோப்பிய நகரங்களில், அல்லது துபாயில் வேலைவாய்ப்பு இருப்பதாக ஆசை காட்டி, இளம்பெண்களை கவரும் கடத்தல்காரர்கள், அவர்களை சில நூறு யூரோக்களுக்கு அடிமைகளாக விற்று விடுகின்றனர். இவர்களை வாங்கும் விபச்சார விடுதி உரிமையாளர்கள், இந்த இளம்பெண்களை விபச்சாரம் செய்ய கட்டாயப்படுத்துவதுடன், அப்படி சம்பாதிக்கும் பணத்தையும் தாங்களே பறித்து வைத்துக் கொள்கின்றனர். இந்த பாலியல் அடிமைகள் தப்பியோட முயன்றால், ஊரில் இருக்கும் அவர்களின் குடும்பங்களுக்கு ஆபத்து என்று மிரட்டப்படுகின்றனர்.

"Loverboy" என அழைக்கப்படும் காதலிப்பதாக நடித்து, கன்னியரை ஏமாற்றி விபச்சாரத்தில் தள்ளிவிடும் தரகர்களும் நடமாடுகின்றனர். அவ்வாறு "காதலனால்" ஏமாற்றப்பட்டு ஆம்ஸ்டர்டம் விபச்சாரவிடுதியில் மாட்டிக்கொண்டு, பின்னர் அதிர்ஷ்டவசமாக தப்பிய ருமேனிய யுவதி ஒருவர், இந்த நூலில் நேரடி சாட்சியமளித்துள்ளார். நூலாசிரியர் மொல்டோவியா சென்று அங்கிருந்து இஸ்தான்புல்(துருக்கி) வரை, கடத்தல்காரரின் பாதையை பின்பற்றி சென்று, ஒரே நாளில் எவ்வாறு இந்த இளம்பெண்கள் மூன்றாமுலகில் இருந்து முதலாமுலகிற்கு கடத்தப்படுகின்றனர் என்பதை நேரில் பார்த்துள்ளார். துபாயில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் சிலர் காமவெறியர்களால் கொலையாகி, யாரும் தேடாத அநாதை பிணங்களாக பாலைவனத்தில் வீசப்படும் செய்திகளையும் பதிவு செய்துள்ளார்.

இந்தியா சென்ற நூலாசிரியர், உத்தரப்பிரதேசத்தில் லொகராதல் என்ற இடத்தில், ஒரு கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான "கொள்" பழங்குடியின அடிமைகளைப்பற்றி விபரிக்க குறைந்தது ஐம்பது பங்கங்களை ஒதுக்கியுள்ளார். அங்கே கல் குவாரிகளை வைத்திருக்கும் உயர்சாதி ஒப்பந்தக்காரர் இந்த மக்களை அடிமைகளாக தலைமுறை தலைமுறையாக வைத்திருக்கின்றார். பாட்டன் வாங்கிய வெறும் 60 சதங்களுக்காக (டாலர்), அதற்கு வட்டி வளர்ந்து குட்டி போட்டு விட்டாலும், கடனை கட்டமுடியாமல் இன்று பேரப்பிள்ளைகள் குவாரிகளில் அடிமை வேலை செய்கின்றனர். இவர்கள் மீளமுடியாத கடனுக்குள் சிக்குவதன் காரணம், குடும்பத்தில் ஏற்படும் நன்மை, தீமைகளுக்கு முதலாளியிடமே பணம் கடனாக கேட்டு வாங்க வேண்டிய நிலை தான். ஆகவே திருமண விழா, மரணச்சடங்கு என்பன கடனை அதிகரித்து, இந்த மக்களை பரம்பரை அடிமைகளாக்குகிறது. இடதுசாரி தலித் சமூக ஆர்வலர் உருவாக்கிய, "சங்கல்ப்" என்ற அரசு சாரா நிறுவனம் செயல்பட தொடங்கிய பின்னர், சாத்வீக போராட்டம் மூலம் சில வெற்றிகள் சாத்தியமாகியுள்ளன.

இந்தியாவில் அடிமைகள் இருக்கும் உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள். இந்தியாவை காலனிப்படுத்தியிருந்த பிரிட்டிஷ்காரர்கள், அன்று தமது சாம்ராஜ்யமெங்கும் அடிமை முறையை ஒழித்து விட்டதாக அறிவித்த போதும், இந்தியாவில் ஏனோ விட்டுவைத்தனர். பின்னர் சுதந்திரமடைவதற்கு சில தசாப்தங்களுக்கு முன்னர், இந்தியாவில் அடிமைகள் இல்லையென்றும், "பண்ணையடிமைகளும்", "சுரண்டப்படும் உழைப்பாளிகளும்", அல்லது "ஏழைகளும்" மட்டுமே இருப்பதாக புதிய விளக்கம் கூறினர். இன்றைய இந்திய அரசும் அதே சொல்லாடலை பயன்படுத்துகிறது.

நாடு முழுவதும், சுமார் எட்டு மில்லியன் விவசாய அடிமைகள் உள்ளனர். சில பருத்தி விவசாயிகள், அதிக விளைச்சலை தரும் என்ற நம்பிக்கையில், சிறுமிகளை பருத்தித் தோட்டங்களில் தொழில் புரிய வைக்கின்றனர். உலகில் வேறெந்த நாட்டையும் விட, இந்தியாவில் தான் அதிக குழந்தைத் தொழிலாளர் உள்ளனர். வாரணாசி கம்பளம் தயாரிக்கும் நெசவாலைகளில், பிஹாரி சிறுவர்கள் ஒவ்வொருநாளும் 15 மணித்தியாலங்கள், கூலியற்ற வேலை வாங்கப்படுகின்றனர். கடுமையான வேலை காரணமாக, கண்பார்வை குறைவதுடன், எலும்பும் வளைவதால் சில சிறுவர்கள் நடப்பதற்கு ஊன்றுகோலை பாவிக்க வேண்டியுள்ளது. ஃபிரோசாபாத் நகரில் 1993 ம் ஆண்டு வரை, சேரிகளில் இருந்து கொண்டுவரப்படும் தலித் சிறார்களை விற்கும் "சிறுவர் சந்தை" செயற்பட்டு வந்தது. அங்கே வந்து சிறுவர்களை வாங்கிச் செல்லும் முதலாளிகள், தமது தொழிற்சாலைகளில் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்துகின்றனர்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒரு பக்கம் 350 மில்லியன் வசதிபடைத்த நடுத்தர வர்க்கத்தை உருவாக்கியுள்ளது. அங்கே இப்போது 83,000 லட்சாதிபதிகளும், 15 கோடீஸ்வரர்களும் உள்ளனர். ஆனால் இவையெல்லாம் விதிவிலக்குகள். பெரும்பான்மை மக்கள் வறுமைக்கோட்டின் கீழே வாழ்வதை யாரும் மறுக்க முடியாது. இந்தியா இன்னமும் குழந்தைத் தொழிலாளரை வைத்திருப்பதை ஒழிக்கவில்லை. 14 வயது வரையான கட்டாய இலவச கல்வி இன்னமும் செயல்வடிவம் பெறவில்லை. சாதி ஒழிப்பும் அவ்வாறே சட்டத்தில் மட்டுமே உள்ளது. பிற வளர்முக நாடுகளைப்போல நகரங்கள் வளர்ந்தாலும், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இன்னமும் நாட்டுப்புறங்களில் வாழ்கின்றனர். ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், கடன் தொல்லையிலிருந்து மீள முடியாமல் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்கின்றனர்.


_______________________________________________________________________
-A Crime So Monstrous-
by E. Benjamin Skinner
Published by : Mainstream Publishing Company (Edinburgh)
_______________________________________________________________________

Thursday, October 09, 2008

லாபம் முதலாளிகளுக்கு, நட்டம் மக்களுக்கு



"நவீன கால அரசு, முதலாளித்துவ வர்க்கம் அனைத்துக்குமான பொதுவிவகாரங்களை நிர்வகிக்கும் குழுவே அன்றி வேறில்லை." - மார்க்ஸ், எங்கெல்ஸ் (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை)
முதலாளித்துவம் அழியவில்லை. கடைசியில் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள், பொதுமக்களின் வரிப்பணத்தை கொட்டி, அழிவில் இருந்த வங்கிகளை ஒருவாறு காப்பாற்றிவிட்டனர். தானே ஏற்படுத்திய நிதிநெருக்கடிக்குள் சிக்கிக் கொண்ட முதலாளித்துவம், அரசாங்கத்தால் அழிவில் இருந்து மீட்கப்பட்டுவிட்டது. ஆனால் மக்கள் பிரதிநிதிகள் என கூறிக்கொள்ளும் ஜனநாயக அரசுகள் மக்களை மீளாத்துயருக்குள் தள்ளிவிட்டன. சுருங்கக் கூறின்: ஒரு நிறுவனம் லாபம் சம்பாதித்தால் அதனை முதலாளிகள் தமது தனிச்சொத்து என்று உரிமை கொண்டாடும் அதேநேரம், அந்த நிறுவனம் நட்டமடைந்தால் அதனை மக்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்பார்கள்.

அமெரிக்க அரசு வழங்கிய 700 பில்லியன் டாலர் மீட்புநிதி, முதன்மைப் பங்குதாரரின் ஆதாயப்பங்கு(டிவிடென்ட்) பட்டுவாடா செய்யவும், நிர்வாகிகளின் சம்பளங்களை (குறைந்தது US $ 30,000), போனஸ்களை (லட்சக்கணக்கில்) கொடுப்பதற்கும் செலவிடப்படாது என்பது என்ன நிச்சயம்? அரசுக்கு அதைப்பற்றி எந்த கவலையுமில்லை. அதே நேரம் இந்த மீட்புநிதியை வீட்டுக்கடன் கட்ட முடியாத பொது மக்களுக்கு வழங்கி, அவர்கள் வீட்டை இழந்து நடுத்தெருவுக்கு வருவதை தவிர்த்திருக்கலாம். அமெரிக்க அரசு எப்போது தனது மக்களைப்பற்றி கவலைப்பட்டது? மீட்புநிதி பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து வந்தது என்பதால், வருங்காலத்தில் பொதுநல செலவினங்கள் குறைக்கப்படும். இதனால் அநேகமான பொது மக்கள், வறிய நாடுகளில் உள்ளது போல தப்பிப்பிழைக்கும் வாழ்க்கை நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதே 700 பில்லியன் டாலரை கொட்டியிருந்தால், பரிதாபகரமான பொதுநல மருத்துவ துறையை சிறப்பாக நடத்தியிருக்கலாம். இதற்கிடையே இந்த தொகை, அமெரிக்க அரசு பாதுகாப்புக்கு (ஆப்கன், ஈராக் போர்கள்) செலவழிப்பதை விட குறைவு, என்று பெருமை வேறு.

"Laissez Faire"(பிரெஞ்சு மொழியில் : செய்ய விடு)முதலாளித்துவம் இது, என்று சொல்லி அரச தலையீடற்ற பொருளாதாரம் நடத்திய, அகங்காரம் கொண்ட தாராளவாத சந்தை விற்பன்னர்கள் தற்போது, "தவறு செய்து விட்டு தந்தைக்கு பின்னால் ஒளிக்கும் குழந்தைகளைப் போல" நடந்து கொள்கிறார்கள். இதே நிதி நெருக்கடி மூன்றாம் உலக நாடொன்றில் ஏற்பட்டிருந்தால், அந்நாட்டு அரசு இது போன்று மீட்புநிதி வழங்கி நிறுவனத்தை அழிவில் இருந்து காப்பாற்றக் கூடாது என்று, அமெரிக்க அரசு மட்டுல்ல, உலகவங்கி, ஐ.எம்.எஃப்., எல்லாமே ஆலோசனை வழங்கியிருப்பார்கள். அதற்கு உடன்படா விட்டால், கடனுதவிகளை நிறுத்தி விடுவார்கள். ஆனால் அந்த உபதேசமெல்லாம் உலகிற்கு மட்டுமே, அமெரிக்காவுக்கு இல்லை.

நிலைமையை பயன்படுத்தி, அமெரிக்க நிறுவனங்களை சீனா வாங்க வேண்டும் என்று, சில சீன பொருளியல் நிபுணர்களும், மற்றும் சர்வதேச பெருமுதலாளிகளும் கேட்டுள்ளனர். ஆனால் சீன அரசு தயங்குகின்றது. ஏனெனில் லாபம் வரக்கூடிய நிறுவனங்களிலேயே யாரும் முதலீடு செய்ய விரும்புவர். அதன் அர்த்தம், அமெரிக்க பொருளாதாரத்தில் தற்போது சீனா உட்பட பலரும் நம்பிக்கை இழந்து வருகின்றனர். ஐரோப்பாவும் தனி வழியில் செல்ல விரும்புகின்றது. அனேகமாக அதிக தொழிற்துறை வளர்ச்சி கண்ட ஜெர்மனி, ஐரோப்பிய பொருளாதாரத்தை தலைமை தாங்கலாம்.

கடன் நெருக்கடிக்குள் சிக்கி திவாலான ஐரோப்பிய வங்கிகள் சில அவை பிரதிநிதித்துவப் படுத்திய நாடுகளை விட அதிக பணபலம் கொண்டிருந்தமை அவற்றின் வீழ்ச்சிக்கு காரணம் என்று சொல்லப்படுகின்றது. உதாரணத்திற்கு, மூன்று லட்சம் பேர் சனத்தொகையை கொண்ட சிறிய ஐஸ்லாந்து நாட்டு வங்கிகள், அகலக்கால் வைத்ததன் விளைவாக இன்று அழிவின் விளிம்பில் நிற்கின்றன. அது ஐஸ்லாந்து என்ற ஒரு தேசமே திவாலாகும் நிலைக்கு இட்டுச்சென்றது. வடதுருவ தீவுநாடான ஐஸ்லாந்து பொருளாதாரம், ஒரு காலத்தில் மீன்பிடித் துறையை மட்டுமே நம்பி இருந்தது. கடந்த தசாப்தங்களாக ஏற்பட்ட வங்கித் துறையின் பகாசுர வளர்ச்சி ஐஸ்லாந்தை செல்வந்த நாடாக்கியது. இதனால் நாட்டின் பொருளாதாரத்தையே தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த வங்கிகள், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வாங்கிக் குவித்தன, பெருமளவில் முதலீடு செய்தன. இறுதியில் அமெரிக்க கடன் பிரச்சனைக்குள் அகப்பட்டு, அனைத்தையும் இழந்து நிற்கின்றன. பேராசை பெருநஷ்டம் என்றொரு பழமொழி உண்டு.

ஐஸ்லாந்து அரசு, வங்கிகளை தேசியமயப்படுத்த தேவையான பணமின்றி தவித்தது. அதற்காக "தனது நண்பர்களிடம்" உதவி கேட்டும் கிடைக்காத நிலையில், தற்போது ரஷ்யா நான்கு பில்லியன் யூரோ கடன் வழங்க சம்மதித்துள்ளது. சர்வதேச நிதிநெருக்கடிக்குள் ரஷ்ய பங்குச்சந்தையும் மாட்டிக் கொண்டு நஷ்டமடைந்துள்ளது. இருப்பினும் அங்கே வலிமையான அரசாங்கம் இருப்பதால், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது நாணயமான ரூபிளை சர்வதேச பரிவர்த்தனைக்கு விரிவுபடுத்தப் பார்க்கின்றது. அதனோடு நெருங்கிய உறவைப் பேணும் பெலாரஸ், வாங்கும் எண்ணைக்கு ரூபிளில் பணம் செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டுள்ளது. இது பின்னர் பிற நாடுகளுடனும் விரிவுபடுத்தப்படலாம்.

நெருக்கடியில் இருந்து மீளுவதற்கு சிறந்த வழி உண்டு. லாபவெறி பிடித்தலையும் வங்கிகள் எமக்கு தேவையில்லை. சேமிப்பு வங்கி, கூட்டுறவு வங்கி, விவசாய வங்கி, தபால் வங்கி போன்றன, அவை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசத்தின் பொருளாதாரத்துடனும், மக்களுடனும் ஒன்றிணைந்து இருந்தன. அவை மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்றிருப்பதால், நிதிநெருக்கடிக்குள் சிக்கி திவாலாகும் அபாயம் குறைவு. முன்பெல்லாம் அமெரிக்காவிலும், மேற்கு-ஐரோப்பாவிலும் அப்படியான வங்கிகள் இருந்தன. அனால் Laissez Faire முதலாளித்துவ வளர்ச்சி காரணமாக, பெருமளவு நிதி கொண்ட வர்த்தக-முதலீட்டு வங்கிகள், அவற்றை பிடித்து தின்று விழுங்கி விட்டன. அன்றைய பேராசை, இன்றைய பேரழிவுக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. இன்று மக்கள் வங்கிகளைக் கண்டு பயந்தோடும் நிலைமை உருவாகி விட்டது.



Video: இதுதாண்டா அமெரிக்க சொர்க்கம்!

________________________________________________________________
முன்னைய பதிவுகள் :
காசு ஒரு பிசாசு! (அனைவருக்குமான பொருளியல்)
வீடு வரை கனவு, காடு வரை கடன்
வள்ளல் புஷ் வழங்கும் "வங்கி சோஷலிசம்"
__________________________________________________________________
Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
-
Burned Feeds for kalaiy

காசு ஒரு பிசாசு! (அனைவருக்குமான பொருளியல்)

காசு என்றால் என்ன? பணம் எவ்வாறு உருவாகின்றது? வங்கிகள் எப்படி தோன்றின? அவை மக்களுக்கு கடன் கொடுத்து பணத்தை உருவாக்கும் இரகசியம் பற்றி பொருளியல் அறிஞர்கள் மறைப்பதேன்? இன்றைய நிதி நெருக்கடியை புரிந்து கொள்ள உதவும், அனைவருக்குமான இலகுபடுத்தப்பட்ட பொருளியல் பாடம் கார்டூன் வடிவில்.

MONEY AS DEBT
Money As Debt 1 - The Rothschild Mafia Money As Debt II: promises unleashed

Monday, October 06, 2008

மறைக்கப்பட்ட இஸ்லாமிய-ஐரோப்பாவின் வரலாறு

போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய "கிறிஸ்தவ நாடுகள்" ஒருகாலத்தில் இஸ்லாமிய நாடுகளாக இருந்தன(கி.பி. 711 - 1492) என்ற உண்மை இன்று பலருக்கு தெரியாது. பல நூற்றாண்டுகளாக மூர்(மொரோக்கோ நாட்டை சேர்ந்தவர்கள்) முஸ்லிம்களால் ஆளப்பட்ட "அல் அன்டலுஸ்" என்ற நிலப்பரப்பு, எஞ்சிய ஐரோப்பாவை விட நாகரீகத்தில் முன்னேறியிருந்தது. பின்னர் அந்தப் பிரதேசங்களை போரில் வென்ற ஸ்பானிய கிறிஸ்தவ மன்னர்கள், அழகிய கட்டடக்கலை கண்டு பிரமித்தனர். நூலகங்களில் இருந்த விஞ்ஞான-தொழில்நுட்ப நூல்களை மொழிபெயர்த்து தமது பல்கலைக்கழங்களில் போதித்தனர். (மேலதிக தகவல்களுக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணப்படத்தை பார்க்கவும்.)

இருப்பினும் ஐரோப்பா தனது இஸ்லாமிய கடந்தகாலத்தை வேண்டுமென்றே மறைத்து வந்தது. எதிர்கால சமுதாயம் தெரிந்து கொள்ளக் கூடாது என்ற நோக்கில், சரித்திர ஆசிரியர்கள் அந்தக் கதைகளை சொல்லாமல் மறைத்தனர். உலக வரலாற்றில் நடந்த மிகப்பெரிய இனச்சுத்திகரிப்பு உண்மைகளை திரிக்க உதவியது. மூர்கள் என்ற பெயரில் பல ஸ்பானிய இனத்தை சேர்ந்த முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டனர், அல்லது இனப்படுகொலைக்கு உள்ளாகினர்.

இன்றைய ஐரோப்பா "ஜனநாயக பாரம்பரியத்தில்" வந்ததாக நாடகமாடுகின்றது. ஆனால் நவீன உலகில் நிராகரிக்கப்படும், சர்வாதிகாரம், மத-அடிப்படைவாதம், இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு, சித்திரவதை, மனித உரிமை மீறல்... போன்ற மனிதத்துக்கு எதிரான குற்றங்களை புரிவதையே ஆள்பவர்களின் கலாச்சாரமாக இருந்த ஐரோப்பா; "ஜனநாயகம்", "மனித உரிமைகள்" போன்றவற்றை 20 ம் நூற்றாண்டில் இருந்து தான், தனக்கு தானே கண்டுபிடித்துக் கொண்டது.


_______________________________________________________________

When the Moors Ruled in Europe


Saturday, October 04, 2008

வீடு வரை கனவு, காடு வரை கடன்

அமெரிக்க வங்கிகளின் அகங்காரம் அழிந்த கதையிது. முதலாளித்துவத்தை காப்பாற்ற, சொந்த மக்களை பலி கொடுத்த "ஐக்கிய அமெரிக்க சோஷலிச குடியரசின்"(முதலாளிகளுக்கு மட்டும்) தோற்றம் இது. "அமெரிக்க கனவு". ஒவ்வொரு அமெரிக்க பிரசையும் சொந்த வீட்டில் வாழ வேண்டுமென்ற கனவு. இன்று சுக்குநூறாக நொருங்கிப்போய் கிடக்கின்றது. அமெரிக்காவில் எழுந்துள்ள நிதி நெருக்கடி பல வங்கிகளை திவாலாக்கிய விவகாரம் பற்றிய உண்மையான தகவல்கள் பல வெகுஜன ஊடகங்களால் தமிழ் மக்களுக்கு மறைக்கப்பட்டதால் எழுந்துள்ள தேவையை ஒட்டி இந்த கட்டுரையை எழுதவேண்டியுள்ளது.

ஒரு வீடு வாங்குவது தொடர்பாக நமது நாடுகளுக்கும், அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளுக்குமிடையில் உள்ள வேறுபாடுகளை முதலில் பார்ப்போம். நமது நாடுகளில் (பணக்காரரை விட்டுவிட்டால்) ஓரளவு நல்ல மாத வருமானம் எடுக்கும் நடுத்தர மக்கள், சிறுகச்சிறுக சேர்த்த சேமிப்பு பணத்துடன், தமது சொத்துகள் எதையாவது அடமானம் வைத்து வங்கி கொடுக்கும் கடனையும் வைத்து வாங்குவார்கள். பணக்கார மேற்குலக நாடுகளில் தகைமையற்ற தொழிலாளிக்கும் கிடைக்கும் சம்பளம் சராசரி ஆயிரம் டாலர் ஆகில், அவர் ஒரு லட்சம் டாலர் பெறுமதியான வீட்டை வாங்குவாராகில், அவர் அதற்காக பெற்றுக்கொள்ளும் கடனை 20 அல்லது 30 வருடஙகளில் கட்டி முடிப்பார் என்ற எதிர்பார்ப்பில், வங்கிகள் Mortgage(அடமானம்) பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு கடன் கொடுக்கின்றன. அந்தக் கடனுக்கு தகுதி பெற நிரந்தர வேலை இருப்பது அவசியம் போன்ற பிற நிபந்தனைகள் உள்ளன. நமது நாடுகளுடன் ஒப்பிடும் போது, மேற்குலக நாட்டு பிரசை ஒருவர் தன்னை தானே அடமானம் வைத்துக் கொள்கிறார்.

ஐரோப்பாவில் விதிகள் கடுமையாக உள்ளன. ஒரு வீட்டை வாங்கியவர், சில வருடங்களுக்கு பின்னர் விற்றால், இன்னொரு வீடு வாங்கிக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். காரணம், கடன் கொடுத்த வங்கிகள் அந்தப்பணம் முழுமையாக தமக்கு வட்டியுடன் வரவேண்டுமென நினைக்கின்றன. ஒருவேளை நிரந்தர வேலை பறிபோனால், வாங்கிய வீட்டை விற்று விட்டு, வாடகை வீட்டில் குடியேற வேண்டியிருக்கும். கடன் வாங்கியவர் காலக்கெடுவுக்குள் இறந்தால், வீட்டுக்கடனை வங்கிகள் திரும்பப்பெற ஆயுட்கால காப்புறுதி கட்டியிருக்க வேண்டும். அல்லது அந்த வீட்டில் வசிக்கும் மனைவி, பிள்ளைகள், தொடர்ந்து கட்ட வேண்டும். இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் இந்த விதிகள் கடுமையாக இல்லை.

லண்டனில் எனக்குத் தெரிந்த சிலர், மாதம் 800 பவுன் வருமானம் எடுப்பவர்கள், வாங்கிய வீட்டிற்கு மாதம் 1000 பவுன் Mortgage கட்டுவதை பார்த்தேன். அது எப்படி சாத்தியம் என்று கேட்டால், அங்கே சில வங்கி ஊழியர்கள் செய்யும் ஊழலால், அதாவது போலி பத்திரங்கள் தயாரித்து, வருமானத்தை கூட்டி காட்டி Mortgage எடுப்பது தெரிய வந்தது. அமெரிக்காவிலும் அது போன்ற நிலைமை எப்போதும் இருந்து வந்தது. ஆனால் தற்போது எழுந்திருக்கும் நிதி நெருக்கடி, அதன் காரணமாக எழவில்லை. மோசடியே வங்கிகளின் அலுவலக செயல்முறையாக மாறியதன் விளைவு இது. சில வங்கி முகவர்கள் வருமானம் பற்றி எதுவும் கேட்காமலே கடன் கொடுத்த விடயம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

அதற்கு முன்னர் அமெரிக்க வங்கிகளின் அகங்காரம் பற்றி சிறிய அறிமுகம். முதலாளித்துவ வளர்ச்சியின் உச்சகட்டமாக, அமெரிக்காவில் வங்கிகள் அனைத்து நிறுவனங்களையும்(அது உற்பத்தி துறையாகட்டும், அல்லது சேவைத் துறையாகட்டும்) தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளன. ஒரு கம்பெனி நடத்துவதற்காக வங்கியிடமிருந்து பெறப்படும் கடன்(Liquidity) மட்டும் இதற்கு காரணமல்ல. பல நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளை வங்கிகளே வாங்கி, பிரதிநிதிகளை கொண்டு பங்குதாரர் கூட்டத்தில் தமது செல்வாக்கை நிலைநிறுத்துகின்றன. அப்படித்தான் வீடு கட்டிக் கொடுக்கும் (ரியல் எஸ்டேட்) கம்பனிகளிலும் வங்கிகள் ஆளுமை கொண்டிருந்தன. அந்த அகங்காரமே அவர்களின் வீழ்ச்சிக்கும் காரணமானதை பின்னர் பார்ப்போம்.

அனேகமாக 2001 ம் ஆண்டிற்கு(செப்டம்பர் 11 ன் தாக்கம்?) பிறகாக, அமெரிக்க மக்கள் அதிகம் செலவளிக்க வைக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு விரும்பியது. பணம் ஓடித்திரிய வேண்டும் என்பது சந்தை பொருளாதார தாரக மந்திரம். நாம் செலவளிக்கும் ஒவ்வொரு சதமும், எங்கேயோ ஒருவருக்கு வருமானமாக போய்ச்சேருகின்றது, என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் படி, கடன் வழங்கும் விதிகளை தளர்த்த அரசாங்கமும், வங்கிகளும் முன்வந்தன. சந்தேகத்திற்கிடமின்றி இது பலரை கடன்வாங்க வைத்திருக்கும். ஆகவே வழமைக்கு மாறாக, வருமானம் குறைந்தோரும், அல்லது எந்த வருமானமும் இல்லாதவர்களும் வீடுகளை வாங்கத் தொடங்கினர். இதனால் யாருக்கு என்ன லாபம்? இப்போது தான் வங்கிகளை திவாலாக்கிய மாபெரும் பங்குச்சந்தை சூதாட்டம் ஆரம்பமாகின்றது.

(நமது நாடுகளில் "ரியல் எஸ்டேட் கம்பெனி" என்று அறியப்பட்ட) வீடு விற்கும் நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான புதிய வீடுகளை கட்டி விற்றுத்தள்ளின. Mortgage முறையின் கீழ், ஒருவர் அந்த வீட்டை வாங்கி வங்கியிடம் அடமானம் வைக்கின்றார். அதற்கு வீட்டின் மொத்த விலையை வங்கி ரியல் எஸ்டேட் கம்பெனி கையில் கொடுக்கின்றது. அடமானம் வைத்தவரோ, வீட்டின் விலையை மட்டுமல்ல, தரகர் கூலி, சட்டவாக்க கூலி, போன்றவற்றை ரொக்கமாக கடன் என்ற பெயரில் வீடு வாங்கியவரின் தலையில் கட்டிவிடுகின்றது. கடனுக்கு வரும் வட்டி தான் வங்கிகளின் மிகப்பெரிய வருமானம். வழக்கமாக வீட்டு அடமானப்(Mortgage) பங்குகளை வங்கிகள் சந்தையில் ஏலம் விடுகின்றன. அதேநேரம் சாதாரண "வீட்டு சொந்தக்காரர்" மாதாமாதம் கட்டிவரும் வட்டிப்பணத்தை ஆதாயப் பங்காக(dividend) லாபம் பார்க்கின்றன.

பங்குச்சந்தையில் ஒரு பக்கத்தில் சூதாடியே பணம் சம்பாதிப்பவர்கள் இருக்கின்றனர். ஊகவணிகத்தில் கில்லாடிகளான அவர்கள், வீட்டு அடமானப் பங்குகளை அதன் உண்மையான பெறுமதியை விட பலமடங்கு அதிகமாக உயர்த்தினார்கள். பங்குகளின் விலை அதிகரிக்கும் போது மகிழாதவர் யார் இருக்கமுடியும்? இந்த சூதாட்டத்தால் ரியல் எஸ்டேட் கம்பெனிகள், முதலீட்டு வங்கிகள், பங்குசந்தை தரகர்கள், பங்குதாரர்கள் என்று ஒரு பெரிய கும்பலே பெரும் பணம் புரட்டியது. அமெரிக்காவில் இந்த "அற்புதம்" நடப்பதை கேள்விப்பட்டு, வெளிநாட்டு வங்கிகளும் அமெரிக்க அசையா சொத்துகளில்(இங்கே வீடுகள்) முதலிட்டன. அப்படி கடல்கடந்து முதலிட்டு லாபமீட்டிய பெல்ஜிய வங்கியான Fortis, நெதர்லாந்து வங்கியான ABN-Amro என்பன இன்று நெருக்கடிக்குள் சிக்கி, திவாலாகும் நிலையில் அவ்வவ் அரசாங்கங்களால் தேசியமயமாக்கப் பட்டுள்ளன.

நடந்தது என்ன? அமெரிக்க பங்குச்சந்தையில் நிதி நிறுவனங்கள் எல்லாம் சேர்ந்து, வீட்டு மனை வியாபாரம் பற்றி பல கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டன. விதி தளர்த்தலால், எந்தவித முன்யோசனையுமின்றி சேர்க்கப்பட்ட மக்களின் தொகையை காட்டித் தான் பங்குகளின் பெறுமதி கூடியது. ஆனால் அது ஒரு கற்பனாவாத பெறுமதியாக இருந்தது. பல வருடங்களாக யாரும் அதனை பொருட்படுத்தவில்லை.(பங்குச்சந்தையில் இதெல்லாம் சகஜம்). ஆனால் கடந்த வருடம் தான் வங்கிகளை எதிர்காலம் பற்றிய பயம் கவ்விக்கொண்டது. எந்த யோசனையுமின்றி, இத்தனை கோடி டாலர்களை அள்ளிக்கொடுத்திருக்கிறோமே, அது மீண்டும் எமது கைக்கு வருமா? என்று எழுந்த சந்தேகம் வங்கிகளை திவாலாக்கியது. பொய், புரட்டு, மோசடி நீண்ட நாளைக்கு நிலைக்க முடியாது. அதற்கு அவர்களே பலியாகிப் போனார்கள்.

இப்போது என்ன நடக்கிறது? குற்றம் செய்தவர்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை. மாறாக வெகுமானம் வழங்கப்பட்டுள்ளது. ஆம், அமெரிக்க திறைசேரி அதிகாரி போல்சன் அறிவித்த 700 பில்லியன் டாலர் உதவி, தமக்கு வேண்டிய வங்கிகள் திவாலாகாமல் தடுக்க வழங்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு(வீடு வாங்கி, நடுதெருவுக்கு வந்தவர்கள்) ஒரு சதம் உதவி கூட இல்லை. அதுவும் பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து வழங்கப்படும் உதவி. இறுதியில் வென்றது முதலாளித்துவம், தோற்றது மக்கள்.

பொருளாதார நெருக்கடி இப்போது தான் ஏற்படுவதல்ல. முன்னர் ஒருமுறை தென் கொரியா கார் உற்பத்தி பெருக்கத்தால், வாங்குவார் அற்று தேங்கிப்போய், அது உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியை உருவாக்கியது. அப்போது கார் கம்பெனிகளை தென்கொரிய அரசு தேசியமயமாக்குவதை தடுத்தது I.M.F. (அதுவும் ஒரு அமெரிக்க நிதி நிறுவனம்). இன்று ஒரு சோஷலிச அரசுக்கு நிகராக, அமெரிக்க அரசாங்கம் வங்கிகளை தேசியமயமாக்கி வருகின்றது.

அமெரிக்க அரசாங்கம் வழங்கும் நிதியுதவி எதற்கு பயன்படுத்தப்படப் போகின்றது? நிச்சயமாக பங்குகளின் பெறுமதியை மீண்டும் அதிகரிக்க வைக்குமென்பதால், பங்குதாரர்கள் நிம்மதிப்பெருமூச்சு விடலாம்.(இல்லாவிட்டால் தெருவுக்கு வரவேண்டியிருக்கும்). இந்த அரச திறைசேரி நிதியை ஆதாயப்பங்கு வழங்கவும், அதைவிட மேல்மட்ட மானேஜர்களின் போனஸ் கொடுக்கவும் பயன்படுத்தப்படாது என்பது என்ன நிச்சயம்?

அப்பாவித்தனமாக நெருக்கடியில் சிக்கி வீடுகளை இழந்து நிரந்தர கடனாளிகளாகிய மக்களின் கண்ணீரை துடைப்பதை விட, முதலாளிகளின் செல்வம் குறையக்கூடாது என்பதிலே தான் அமெரிக்க அரசுக்கு அக்கறை.



Video: இதுதாண்டா அமெரிக்க சொர்க்கம்!

முன்னைய பதிவு:
வள்ளல் புஷ் வழங்கும் "வங்கி சோஷலிசம்"
Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
-
Burned Feeds for kalaiy