Saturday, August 02, 2025

JVP இன் சிங்கப்பூர் பாணி "சகோதரத்துவ தினம்" - கறுப்பு ஜூலைக்கு வெள்ளை அடிக்கிறதா?


ஜூலை 21-23; சிங்கப்பூர், இலங்கையில் நடக்கும் "இன சகோதரத்துவ தினம்" கறுப்பு ஜூலைக்கு வெள்ளையடிக்கும் செயலா?  

இலங்கையில் கறுப்பு ஜூலை படுகொலை நினைவுகூரும் அதே காலகட்டத்தில் ஆளும் NPP(JVP) அரசாங்கம் "சகோதரத்துவ நாள்" என்ற பெயரில் பேரணி நடத்தியதை பலர் கண்டித்தனர் அல்லது கடுமையாக விமர்சித்தனர். இது "ஜூலை படுகொலைக்கு வெள்ளை அடிக்கும் செயல்" என்றும், "ஜேவிபி யின் பேரினவாத மனநிலை" என்றும், தமிழ்த் தேசிய வாதிகள் மட்டுமல்லாமல் சில தமிழ் அறிவுஜீவிகள் கூட குற்றஞ்சாட்டினார்கள். வேறு சிலர் இதன் நோக்கம் நல்லதாக இருந்தாலும், அதை நடத்த தேர்ந்தெடுத்த காலகட்டம் தவறு என்றார்கள். அதை விட "தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டார்கள்" என்பன போன்ற எதிர்ப்புக் குரல்களும் கேட்டன.

உண்மையில் இலங்கையில் சிறுபான்மை இனமான தமிழர்கள் இந்த "இன சகோதரத்துவ பேரணியை" முன்னெடுத்து இருக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் சிங்கப்பூர் உதாரணம் காட்டுவது தமிழ்த் தேசியவாதிகளின் வாடிக்கை. உண்மையில் இவர்கள் சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி குறித்து சிந்திக்கிறார்களே தவிர சிங்கப்பூர் எவ்வாறு இன முரண்பாடுகளை தீர்த்து கொண்டு முன்னேறியது என்பதை கவனிக்க தவறுகிறார்கள். தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த செல்வநாயகம் ஒரு மலேசிய பிரஜை. அவராவது இந்த வரலாற்றை கூறி இருக்கலாம். சரி, அதை விடுவோம். 

ஒரு காலத்தில் சிங்கப்பூர் இனப்பிரச்சினையால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு. 1964 ம் ஆண்டு மிகப்பெரிய இனக் கலவரம் நடந்தது. அது வரை காலமும் நட்புடன் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த சீனர்களும், மலேயர்களும் ஜென்ம பகைவர்களாக நடந்து கொண்டனர். சீனர்களின் பிரதேசத்தில் மலேயர்களுக்கு பாதுகாப்பு இல்லை. மலே பிரதேசத்தில் சீனர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அன்றைய கலவரத்தில் நூற்றுக்கணக்கான கொலைகள், சொத்து அழிவுகள் நடந்துள்ளன. 

1964 இனக்கலவரத்தின் பின்னர் சிங்கப்பூர் ஆட்சியில் இருந்த பிரதமர் லீ குவான் யூ பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். ஒவ்வொரு இனமும் தனித் தனியாக தமக்கான பிரதேசங்களில் வாழ்ந்த நிலையை மாற்றியமைக்க புதிய நவீன அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாக்கப் பட்டன. அங்கு எல்லா இன மக்களும் கலந்து வாழும் வகையில் குடியமர்த்த பட்டனர். புதிய அரசமைப்புச் சட்டம் இன அடிப்படையில் அரசியல் கட்சிகள் இருப்பதை தடுக்கிறது. இதன் மூலம் சீன பெரும்பான்மை இன கட்சியாக இருந்தாலும், மலே அல்லது தமிழ் சிறுபான்மை இனங்களை "பிரதிநிதித்துவ படுத்தும்" கட்சிகளாக இருந்தாலும் ஏனைய இனங்களை சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். 

சிங்கப்பூரில் ஜூலை 21 இன நல்லிணக்க தினம் என அறிவிக்கப் பட்டது. அந்த நாளில் தான் 1964 ம் ஆண்டு இனக் கலவரம் நடந்தது. அதனை "மலே சிறுபான்மையினர் மீது சீன பெரும்பான்மையினர் நடத்திய வன்முறை வெறியாட்டம் அல்லது இனவழிப்பு" என்று தான் மலே தேசியவாதிகள் கூறி வந்தனர். அவர்களைப் பொறுத்த வரையில் "ஜூலை 21 இன நல்லிணக்க நாள்" என்பது "கறுப்பு ஜூலைக்கு வெள்ளை அடிக்கும் செயல்!" தான். ஆனால் காலப் போக்கில் சிங்கப்பூரில் வாழும் மூவின மக்களாலும் இன நல்லிணக்க தினம் ஏற்றுக் கொள்ள பட்டு விட்டது. 

சிங்கப்பூரில் சீனர்களை பெரும்பான்மையாக கொண்ட PAP, இலங்கையில் சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்ட JVP ஆகிய இரண்டு கட்சிகளும் சிறுபான்மையின தேசியவாதிகள் பார்வையில் "பேரினவாத கட்சிகள்" என அழைக்கப் படலாம். ஆனால் அது தவறு. சிங்கப்பூர் PAP, இலங்கை JVP இரண்டுமே இடதுசாரிய கண்ணோட்டத்தில் இனங்களுக்கு இடையிலான நல்லுறவை உண்டாக்கும் நோக்கம் கொண்ட கட்சிகள். இன முரண்பாடுகளை கடந்த பொருளாதார முன்னேற்றம் சிங்கப்பூரில் சாத்தியம் என்றால் ஏன் இலங்கையில் சாத்தியம் இல்லை?