3000 வருடங்களுக்கு முன்னர் கிழக்கிந்திய அசாம் மாநிலம் தனியான ராஜ்ஜியமாக அசுரர்கள் என்ற அரச வம்சத்தினரால் ஆளப்பட்டது. அனேகமாக அந்நாட்டு மக்களும் அரச வம்சத்தின் பெயரால் அசுரர்கள் என அழைக்கப் படலாயினர். உண்மையில் அவர்கள் தோற்றத்தில் சீனர்கள் போன்றிருக்கும் மொங்கோலொயிட் இன மக்கள். சில நேரம் அவர்கள் ஆதிக்க சமூகமாக இருந்திருக்கலாம். அவர்களது ஆட்சியின் கீழ் கறுப்பின- திராவிட மக்கள் பழங்குடி இனத்தவராக இருந்திருக்கலாம். அனேகமாக நரகாசுரன் அந்த சமூகத்தை சேர்ந்தவனாக இருக்கலாம்.
இந்த அசுர அரச பரம்பரையில் குறிப்பிடத் தக்க மன்னர்களின் பெயர்கள் பின்வருமாறு:
ஹதகாசுரன், சம்பராசுரன், ரத்னாசுரன், கதகாசுரன். கி.மு. 14ம் நூற்றாண்டு அளவில் நடந்த போரில் கதகாசுரனை கொன்று நரகாசுரன் மன்னனாக முடி சூட்டிக் கொண்டான். அவனது பெயரால் நரக அரச பரம்பரை உருவான போதிலும், அது பிற்காலத்தில் தேவர்களின் சாம்ராஜ்யத்திற்கு கப்பம் கட்டும் சிற்றரசாக இருந்து வந்தது.
யார் இந்த தேவர்கள்?
தோற்றத்தில் ஐரோப்பியர் போன்றிருக்கும் இந்தோ- ஆரிய இன மக்கள். எல்லா ஆரியரும் வெள்ளை தோல் கொண்டவர்கள் அல்ல. உள்நாட்டு இந்திய பூர்வ குடிகளுடன் ஒன்று கலந்த கலப்பினமாகவும் இருந்தனர். அதனால் தான் ஆரியமயப் பட்ட கருமை நிற கிருஷ்ணன் ஒரு மன்னனாக வர முடிந்தது.
அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு நிறம், இனம், மொழி ஓர் அடையாளமாக இருக்கவில்லை. ஆட்சியாளர்களிடமும் அப்படி ஓர் உணர்வு இருக்கவில்லை.
ஆகவே கிருஷ்ணன்- நரகாசுரன் போர் இன/மொழி அடிப்படையில் நடந்த போர் அல்ல. இருப்பினும், அந்தக் காலத்து மக்கள், தம்மை நாகரீக அடிப்படையில் வேறு படுத்தி பார்த்தார்கள். தேவர்கள் என்றால் நாகரிகத்தில் சிறந்தவர்கள். அசுரர்கள் என்றால் நாகரிகமடையாத காட்டுவாசிகள் என்ற எண்ணம் பொதுப் புத்தியில் இருந்தது. அந்த வகையில், கிழக்கிந்திய பகுதிகளில் வாழ்ந்த பழங்குடி இன மக்களை பிரதிநிதித்துவப் படுத்திய நரகாசுரன், தேவர்களின் எதிரியாக மட்டுமல்லாமல் தீமையின் வடிவமாகவும் கருதப்பட்டான்.
அநேகமாக இந்த நரகாசுரன் ஒடுக்கப் பட்ட பழங்குடி இனத்தை சேர்ந்த புரட்சியாளராக இருக்கலாம். ஏனெனில் அவனால் தான் அசுரர்கள் என பெயர் சூட்டிக் கொண்ட 'டனவா' அரச பரம்பரை முடிவுக்கு வந்தது. அந்த வம்சத்தில் கடைசியாக வந்த கதகாசுரனை போரில் கொன்ற நரகன், மன்னனாக முடி சூட்டிக் கொண்டதும் தனது பெயரை நரகாசுரன் என்று மாற்றிக் கொண்டான். இருப்பினும் அவன் உருவாக்கிய அரச பரம்பரை நரகர் வம்சம் என்றே அழைக்கப் படலாயிற்று.
கிருஷ்ணன் - நரகாசுரன் போருக்கு காரணமாக நாகரிக முரண்பாடு மட்டுமல்லாது, மத முரண்பாடும் இருந்திருக்கலாம். கிருஷ்ணனும், அவனது நாட்டு மக்களும் விஷ்ணுவை வழிபடும் வைஷ்ணவர்கள். அதற்கு மாறாக நரகாசுரனும் அவனது நாட்டவரும் தாந்திரிக சைவர்கள். அவர்கள் சிவனை வழிபட்டாலும், மந்திரம், மாயம், சூனியம் போன்ற நம்பிக்கைகளும் இருந்துள்ளன. இதுவும் தேவர்கள் கண்களுக்கு காட்டுமிராண்டித்தனமாக தெரிந்திருக்கலாம்.
அன்று நடந்த போரில் நரகாசுரன் கிருஷ்ணனால் கொல்லப் பட்டான். அதற்குப் பிறகு அவனது நாடு தேவர்களின் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகியது. நரக வம்சத்தில் வந்தவர்கள் கிருஷ்ணனின் பேரரசுக்கு கப்பம் கட்டும் சிற்றரசர்களாக ஆண்டு வந்தனர். இருப்பினும் நரகாசுரன் மரணத்துடன் இந்திய பழங்குடியின மக்களின் கடைசி ராஜ்ஜியம் முடிவுக்கு வந்து விட்டது. அதற்குப் பிறகு தேவர்களின் சாம்ராஜ்யத்திற்கு சவாலான நாடு எதுவும் இருக்கவில்லை. பிற்காலத்தில் தேவர்கள் தமக்குள் பிளவு பட்டு மோதிக் கொண்டனர். அது தான் மகாபாரதப் போர்.
இந்திய பூர்வ குடியின மக்களின் சுதந்திரத்தை பாதுகாத்து வந்த, பழங்குடியின மன்னன் நரகாசுரன் தோற்கடிக்கப் பட்ட நாள், இப்றைக்கும் தீபாவளி என்ற பெயரில் ஒரு வெற்றித் திருநாளாக கொண்டாடப் பட்டு வருகின்றது.
No comments:
Post a Comment