Saturday, July 28, 2018

யாழ். சிமிழ் கண்ணகி அம்மன் தேரோட்டத்தில் தெறித்த சாதிவெறி

(ஜூன் 2018) யாழ் குடாநாட்டில் வரணி வடக்கில் உள்ள சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய தேர்த் திருவிழாவில், சாதிப் பாகுபாடு காரணமாக JCB இயந்திரம் கொண்டு தேர் இழுத்தனர். இந்தச் செய்தி இழி புகழ் பெற்று, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் பேசப் பட்டது. ஜேசிபி இயந்திரம் தேர் இழுக்கும் நிழற்படம் சமூக வலைத்தளங்களில் பெருமளவில் பகிர்ந்து கொள்ளப் பட்டது. வழமையாக சாதிப்பிரச்சினைகளை கண்டுகொள்ளாத தமிழ் முதலாளிய பத்திரிகைகள், தவிர்க்கவியலாது அந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்தன.

ஜேசிபி இயந்திரம் தேர் இழுத்த படம் அப்பட்டமான சாதிவெறியை வெளிக்காட்டியதால், வழமையான "நடுநிலையாளர்களும்" கண்டனம் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால், யாழ்ப்பாணத்து சாதிவெறியர்கள் எதுவும் பேசாமால் அடக்கி வாசித்தனர். சில தினங்களின் பின்னர், ஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் கச்சாய் சிவம் என்ற சாதிவெறி பிடித்த மன நோயாளி, தனது பேஸ்புக் லைவ் வீடியோவில் "விஞ்ஞான விளக்கம்" கொடுத்தார். அதில் ஒன்று, மணலுக்குள் தேர்ச் சக்கரம் புதையும் என்பதால், ஜேசிபி வாகனம் கொண்டு இழுத்தார்கள் என்பது.

கச்சாய் சிவத்தின் வீடியோ வெளியாகி சில நாட்களுக்குப் பின்னர், கோயில் அறங்காவலர் சபையும் அதே காரணத்தைக் கூறி பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுத்தனர். பல நாட்களாக, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் பம்மிக் கொண்டிருந்த சாதிவெறியர்கள், கச்சாய் சிவத்தின் வீடியோவையும், கோயில் அறங்காவலர் அறிக்கையையும் காட்டி எதிர்ப் பிரச்சாரம் செய்து வந்தனர். ஜேசிபி இயந்திரம் தேர் இழுக்கக் காரணம் சாதிப் பாகுபாடு அல்ல, மணல் பாதை என்று நிறுவ முயன்றனர். 


நான் ஜூலை மாத விடுமுறையின் போது இலங்கை சென்றிருந்த காலத்தில், சர்ச்சைக்குரிய சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயத்தை நேரில் சென்று பார்த்து வர எண்ணினேன். நான் அங்கு சென்ற பொழுது எடுத்த புகைப்படங்கள், வீடியோவை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த ஆதாரங்களுடன், அயலில் வாழும் மக்களின் நேரடி சாட்சியங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அங்கு சாதிப் பிரச்சினை இருப்பது தெளிவாகத் தெரிகின்றது. 

யாழ் குடாநாட்டில், தென்மராட்சிப் பிரதேசத்தில் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ளது வரணி எனும் கிராமம். பருத்தித்துறை நெடுஞ்சாலையில் இருந்து உள்ளே சில கிலோமீட்டர் தூரம் சென்றால் சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயம் வரும்.

வரணி வடக்கில் உள்ள ஆலய சுற்றாடலில் சனத்தொகை அடர்த்தி குறைவு. இருப்பினும் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வரணி தெற்கில் சனத்தொகை அதிகம். அங்குள்ள சுட்டிபுரம் கண்ணகி அம்மன் ஆலயம் பிரபலமானது. ஆனால், சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயம் ஊரில் இருந்து ஒதுக்குப்புறமான இடத்தில் இருப்பதால் பலருக்கு அது எங்கே இருக்கிறது என்பதே தெரியாது.

"யாழ் மாவட்டத்தில் சனத்தொகை குறைந்து விட்டதாகவும், அதனால் சாமி காவுவதற்கும், தேர் இழுப்பதற்கும் ஆட் பற்றாக்குறை நிலவுகிறது" என்பது வழமையாக சாதிவெறியர்கள் முன்வைக்கும் வாதம். அது உண்மை அல்ல. இலங்கையில் சனத்தொகை அடர்த்தி அதிகமாக உள்ள மாவட்டங்களில் யாழ் மாவட்டமும் ஒன்று. குறிப்பாக தமிழர்களின் எண்ணிக்கை பிற மாவட்டங்களை விட யாழ் குடாநாட்டில் தான் அதிகம்.

முப்பாதாண்டு கால போர் அழிவுகள், வெளிநாட்டுக்கு புலம்பெயர்தல்கள் ஆகியன யாழ் மாவட்ட சனத்தொகையில் பெரியளவு மாற்றங்களை கொண்டு வரவில்லை. ஆனால், சாதிய கட்டமைப்பில் குறிப்பிடத் தக்க மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இன்றைய யாழ்ப்பாணத்தில் பல கிராமங்களில் தாழ்த்தப் பட்ட சாதியினரின் சனத்தொகை அதிகரித்துள்ளது. அதற்கு என்ன காரணம் என்பதையும் பார்க்க வேண்டும்.

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வர்க்கமும், சாதியும் ஒன்றோடொன்று பிணைந்திருப்பதை கண்கூடாகக் காணலாம். பொதுவாக வசதி படைத்தவர்கள் ஆதிக்க சாதியில் தான் அதிகமாக இருப்பார்கள். சரியான புள்ளிவிபரம் எடுக்கப் பட்டால், புலம்பெயர்ந்தோர் தொகையில் 80% ஆதிக்க சாதியினர் என்ற உண்மை தெரிய வரும். வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமல்லாது, அவர்கள் அனுப்பும் பணத்தில் வாழ்வதற்காக கொழும்பிலேயே நிரந்தரமாக தங்கி விட்ட உறவினர்களையும் இங்கே சேர்த்துப் பார்க்க வேண்டும்.

ஆகவே, "ஊரில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக தேர் இழுக்க ஆளில்லை" என்று சாதியவாதிகள் குறிப்பிட்டு சொல்வது தமது சொந்த சாதி ஆட்களைப் பற்றி மட்டும் தான். அங்கு வாழும் தாழ்த்தப் பட்ட சாதியினர் அவர்கள் கண்களுக்கு மனிதர்களாகவே தெரிவதில்லை. இது தான் பிரச்சினையின் அடிநாதம். அதாவது, கோயிலுக்கு அருகாமையில் தாழ்த்தப் பட்ட சாதியினர் பெருமளவில் இருக்கலாம். ஆனால், அவர்களைக் கொண்டு தேர் இழுப்பதற்கு சாதித் திமிர் விடாது.

வரணி சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயம், வெள்ளாளர் எனும் உயர்த்தப் பட்ட சாதியினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. ஆனால், கோயிலுக்கு அருகில் பள்ளர்கள் எனும் தாழ்த்தப்பட்ட சாதியினர் பெருமளவில் வாழ்கின்றனர். முன்பெல்லாம் அங்கு நடக்கும் கோயில் திருவிழாக்களில் அவர்கள் கலந்து கொள்வதில்லை. 

யாழ்ப்பாணத்தில் சாதிக்கொரு கோயில் இருப்பது ஒன்றும் புதினம் அல்ல. கிராமங்களில் இது வழமை. வீட்டுக்கு அருகில் கோயில் இருந்தாலும், அங்கு சென்று கும்பிடாமல் சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோயிலுக்கு சென்று வருவார்கள்.

சர்ச்சைக்குரிய தேர்த் திருவிழாவின் போது நடந்தது என்ன? இது குறித்து கோயிலுக்கு அருகில் குடியிருந்த மக்களை விசாரித்தேன். அவர்களிடம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அங்கு நடந்த சம்பவங்களை வரிசைப் படுத்துகிறேன்.

சிமிழ் அம்மன் ஆலய அறங்காவலர்கள், புதிதாக கட்டிய தேரை வெள்ளோட்டம் விட்டிருக்கிறார்கள். அந்தக் கோயிலுக்கு ஏற்றவாறு, தேரும் சிறியது தான். அதை இழுப்பதற்கு நூற்றுக் கணக்கான மனித வலு தேவையில்லை.

வெள்ளோட்டம் முடிந்து, தேர்த் திருவிழாவுக்கான நாளும் அறிவிக்கப் பட்டிருந்தது. அப்போது ஊரில் இருந்த முற்போக்கு சிந்தனையாளர்கள், தாழ்த்தப் பட்ட சாதி இளைஞர்களை ஒன்று சேர்த்து தேர் இழுப்பது என்று முடிவு செய்தனர். இதன் மூலம் காலங்காலமாக தொடரும் சாதிப் பாகுபாட்டுக்கு முடிவு கட்டுவதே அவர்களது நோக்கம். எப்படியோ கோயில் அறங்காவலர் காதுகளுக்கு இந்தத் தகவல் போய்ச் சேர்ந்து விட்டது.

தேர்த் திருவிழா அன்று, யாருமே எதிர்பாராதவாறு JCB எனும் மண் கிண்டும் இயந்திரத்தை கொண்டு வந்திருந்தனர். இயந்திரத்தைக் கொண்டு தேர் இழுத்ததன் மூலம், யாருமே தேர் வடத்தை பிடிக்க விடாமல் தடுக்கப் பட்டது. உயர் சாதிப் பக்தர்களைப் பொறுத்தவரையில் இது பெரிய ஏமாற்றமாக இருந்திருக்காது. தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்று நினைத்திருப்பார்கள். தாம் தேர் இழுக்கா விட்டாலும் பரவாயில்லை. தாழ்த்தப் பட்ட சாதியினர் தேர் வடத்தை தொட்டு விடக் கூடாது என்று நினைப்பதற்கு எந்தளவு சாதிவெறி இருந்திருக்க வேண்டும்? 

ஜேசிபி இயந்திரம் தேர் இழுத்தமைக்கு, சாதிவெறியர்கள் ஒரு சப்பைக் கட்டு கட்டினார்கள். அதாவது, கோயிலை சுற்றி தேரோடும் வீதி மணலாக இருந்ததாகவும், அதில் தேர் இழுத்தால் சில்லு மணலில் புதைந்து விடும் என்றும் சொன்னார்கள். நான் நேரில் சென்று பார்த்த பொழுது, அது உண்மையல்ல என்று தெரிய வந்தது. அந்த இடம் முழுவதும் சிறு கற்கள் கொண்ட கடினமான தரையாக இருந்தது. கோயிலின் வடக்குப் பக்கத்தில் மட்டும் சிறிதளவு மணல் இருந்தது. ஆனால், அதுவும் தேர் புதையும் அளவிற்கு மணல் அல்ல. கடும் மழை பெய்தால் மட்டுமே, அந்தப் பகுதி சேறும் சகதியுமாக வாய்ப்புண்டு.

 
தீர்த்தக் கேணி
அங்கு நடந்த சர்ச்சை தேர்த் திருவிழாவுடன் மட்டும் முடிந்து விடவில்லை. அடுத்த நாள் தீர்த்தத் திருவிழா. அங்கிருந்தது ஒரு சிறிய தீர்த்தக் கேணி. அதைச் சுற்றிலும் முட்கம்பி வேலி போடப் பட்டது. இதன் மூலம், தீர்த்தக் கேணியில் சாமி நீராடிய பிறகு பக்தர்கள் இறங்கிக் குளிப்பது தடுக்கப் பட்டது. அவர்களது கவலை எல்லாம், தாழ்த்தப் பட்ட சாதியினர் தீர்த்தக் கேணியில் இறங்கினால் தீட்டுப் பட்டு விடும் என்பது தான். நம்புங்கள், இந்தச் சம்பவம் இருபத்தியோராம் நூற்றாண்டில் நடந்துள்ளது. 

இதற்கிடையில், ஊடகங்களின் கவனத்தை கவர்ந்து விட்ட இந்த விவகாரம், அரசாங்க அதிபர் மட்டத்திற்கு சென்றுள்ளது. அரச அதிகாரிகள் கோயிலுக்கு வந்து விசாரித்த நேரம், "தேர் இழுக்க பாதை சரியில்லை" என்ற காரணம் சொல்லப் பட்டது. அதற்கு பதிலளித்த அதிகாரிகள், அடுத்த வருட திருவிழாவுக்கு இடையில் தார் போட்ட பாதை செப்பனிட்டு தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். அதற்குப் பிறகு எந்த சாக்குப் போக்கும் சொல்லாமல் தேரோட்டம் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் தற்போது நூதனமான சாதிப் பாகுபாடு பின்பற்றப் படுகின்றது. வெளியூர்களில் இருந்து வரும் "இனந்தெரியாத" பக்தர்கள் திருவிழாவுக்கு வந்து தேர் இழுப்பதை அனுமதிக்கிறார்கள். ஆனால், உள்ளூரை சேர்ந்த பக்தர்களை தடுக்கிறார்கள். அதற்குக் காரணம் சாதி அன்றி வேறென்ன? உள்ளூரில் இருப்பவர்கள் யார் எந்த சாதியை சேர்ந்தவர் என்பது தெளிவாக தெரியும். ஆனால், வெளியூர்க்காரர்களை கண்டுபிடிக்க முடியாது. இது தான் காரணம்.

இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், அச்சுவேலியில் உள்ள உலவிக் குளம் பிள்ளையார் கோயில் திருவிழாவில் சிங்களப் படையினரும் சேர்ந்து தேர் இழுத்த தகவல் வந்தது. இது அந்தக் கோயிலில் கடந்த இரு வருடங்களாக நடக்கிறது. கோயில் தர்மகர்த்தா, சிறிலங்கா படையினருடன் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி அவர்களை வரவழைத்ததாக சொல்லப் படுகின்றது.

இது மேலெழுந்தவாரியாக "நல்லிணக்கம்" என்ற போர்வையின் கீழான நவீன சாதிப் பாகுபாடு. "தேர் இழுப்பதற்கு சிங்களப் படையினரை கூட அனுமதிப்போம். ஆனால், தாழ்த்தப் பட்ட சாதியினர் தேர் வடத்தை தொடுவதற்கு அனுமதியோம்." என்பதற்குப் பின்னால் உள்ள சாதிவெறி தெட்டத்தெளிவாக தெரிகின்றது. இதையெல்லாம் கண்ட பின்னரும், "இந்தக் காலத்தில் யார் சாதி பார்க்கிறார்கள்" என்று சில நடுநிலை நக்கிகள் சொல்லிக் கொண்டு திரிவார்கள்.


2 comments:

சிவா said...

சிறப்பான கட்டுரை. சரியான தகவல்கள் படங்களுக்கு நன்றி.

Unknown said...

தங்கள் கட்டுரை தங்களது புரிந்துணர்வு ஆனால் அதுவும் முழுமையான உண்மை அல்ல ஆனால் நல்லது இருந்தால் கெட்டது இருக்க தான் செய்யும் அது தானே உலக நியதி புலிகளும் மனிதர்கள் தானே ஏன் இது உங்களுக்கு புரியவில்லை நல்லது தவறு செய்யாத மனிதர்கள் உள்ளாரோ அவர்கள் தவறினை கூற தெரிந்த உங்களுக்கு அவர்கள் தியாகம் ஏன் புரியவில்லை தவறு செய்பவர்கள் தாங்கள் விரும்பி திருந்தினாலே தவறு குறையும்