Tuesday, January 30, 2018

வேலைக்காரன் - திரையில் ஒலிக்கும் உழைக்கும் மக்களின் கலகக் குரல்

வேலைக்காரன் திரைப்படம்: ஒரு நிகழ்கால அரசியல்- பொருளாதாரக் கண்ணோட்டம்


"எங்களோட இந்த முயற்சியே ஒரு மார்க்கெட்டிங் தான். நல்லது ஜெயிக்கும் என்று sample காட்ட..."

படத்தின் முடிவில் வரும் இந்த வசனம் தான், இதன் "மார்க்கெட்டிங் வெற்றி" எனலாம். மார்க்ஸிய சொல்லாடலான "உழைக்கும் வர்க்கம்" என்பதை, இந்தத் திரைப்படத்தில் "வேலைக்காரர்கள்" என்று மக்களின் பேச்சு மொழியில் பயன்படுத்துகின்றனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, இதுவே படத்தின் வெற்றிக்கு காரணம். அதாவது, கம்யூனிசத்தை உழைக்கும் மக்களின் மொழியில் புரிய வைப்பதே எமது நோக்கமாக இருக்க வேண்டும். அது நிறைவேறியுள்ளது.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர், இந்திய மத்தியதர வர்க்கத்தினர் கார்பரேட் நிறுவனங்களை கைநீட்டி வரவேற்றனர். துரித உணவுகளை Junk food என்றும் பாராமல் உண்டு களித்தனர். அன்று அது "நாகரிகமாக" கருதப் பட்டது. மேலைநாட்டு கார்ப்பரேட் கலாச்சாரத்தை வெறித்தனத்துடன் பின்பற்றுவதில் பெருமைப் பட்டனர்.

ஆனால், காலப்போக்கில் கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டல், துரித உணவுகளில் கலந்துள்ள இரசாயன நஞ்சு போன்ற விடயங்கள் வெளித் தெரியவாரம்பித்தன. அதன் எதிரொலி தான் வேலைக்காரன் திரைப்படம். இது "முதலாளித்துவம் தனது சவக்குழியை தோண்டுகின்றது" என்று கார்ல் மார்க்ஸ் சொன்னதை நினைவுபடுத்துகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்தவர்கள் "படிப்புக்கேற்ற ஊதியம் தருகிறார்கள்" என்று இறுமாந்திருந்தனர். தற்போது தாமும் உழைக்கும் வர்க்கம் தான் என்பதையும், முதலாளிகள் ஈவிரக்கமின்றி தமது உழைப்பை சுரண்டுகிறார்கள் என்பதையும் உணர்கிறார்கள். இவர்கள் நவீன பாட்டாளிவர்க்கமாக மாறியுள்ளனர். 

அத்தகைய சமூகப் பின்னணியில் இருந்து வந்தவன் தான் வேலைக்காரன் படக் கதாநாயகன். இவன் போன்ற குட்டி முதலாளிய இளைஞர்கள், ஆரம்பத்தில் முதலாளிக்கு விசுவாசமாக இருப்பார்கள். ஒரு கட்டத்தில் சமூக விழிப்புணர்வு பெற்று, பாட்டாளி வர்க்க நலன்களுக்காக வென்றெடுக்கப் படுவார்கள். இது நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் கார்ல் மார்க்ஸ் கூறியது. வர்க்க சிந்தனையில் ஏற்படும் பண்பு மாற்றத்தை வேலைக்காரன் திரைப்படம் திறம்பட எடுத்துக் காட்டுகின்றது.

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில்,விற்பனைப் பிரதிநிதியாக வேலைக்கு சேரும் கதாநாயகன் அறிவு, முதலாளிக்கு விசுவாசமாக பொருட்களை விற்றுக் கொண்டிருக்கிறான். ஒரு குப்பத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த, உழைக்கும் வர்க்கப் பின்னணி கொண்ட அறிவு, தனக்குக் கிடைத்த கார்ப்பரேட் வேலையை பெரிதாக எண்ணுகிறான். தனது குப்பத்து இளைஞர்களை அடியாட்களாக பயன்படுத்தி, கூலிக்கு கொலை செய்யும் தாதாவான காசியை வெறுக்கிறான். ஆனால், ஒரு கட்டத்தில் காசி தனது நண்பனை கொல்லும் போது உண்மை தெரிய வருகின்றது.

காசி போன்ற பேட்டை ரவுடிகளையும் காரப்பேட் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. அப்போது ஓர் உண்மை உரைக்கிறது. முதலாளிகளின் அடியாட்களாக கூலிக்கு கொலை செய்யும் ரவுடிக் கும்பலுக்கும், சம்பளம் வாங்கிக் கொண்டு மனச்சாட்சியை அடைவு வைத்து விட்டு வேலை செய்யும் மத்தியதர வர்க்க அடியாட்களுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டு தரப்பினரும் முதலாளிய நிறுவனங்களின் குற்றங்களுக்கு உடந்தையாகின்றனர்.

தமக்கு எதிரானவர்களை அடிப்பது, கொலை செய்வது போன்ற "சட்டவிரோத  செயல்களை" கூலிக்கு மாரடிக்கும் அடியாட்களிடம் ஒப்படைத்து விட்டு, தமது கை சுத்தம் என்று மேட்டுக்குடி கனவான்களாக நடந்து கொள்வது தான் கார்ப்பரேட் கலாச்சாரம். அமெரிக்கா முதல் ஜப்பான் வரையில் இது தான்  நடக்கிறது. 

இருபது வருடங்களுக்கு முன்னர், எண்ணை வள நாடான நைஜீரியாவில், எண்ணைக் கழிவால் மக்களின் வாழ்விடம் மாசடைவதை எதிர்த்துப் போராடிய, ஒரு பிரபல சூழலியல்வாதி (Ken Saro-Wiwa) கொலை செய்யப் பட்ட சம்பவத்திற்குப் பின்னால் ஷெல் நிறுவனம் இருந்தது. அது அப்போது உலகச் செய்தியாகி ஷெல் நிறுவனத்திற்கு அவமானத்தை தேடித் தந்தது.

நெதர்லாந்தில் ஒரு தடவை, "உங்களுக்குப் பிடிக்காத விடயம் எது?" என்று ஒரு கார்ப்பரேட் நிர்வாகியிடம் கேட்ட நேரம், "எல்லாம் தெரிந்து வைத்திருப்பவர்கள்" என்று பதில் கூறினார். அவர் சுட்டிக் காட்டிய "எல்லாம் தெரிந்தவர்கள்" இடதுசாரி சமூக ஆர்வலர்கள் தான். உண்மை தெரிந்தவர்கள், அதை மக்களுக்கு சொல்லி விடக் கூடாது என்பதில் முதலாளிகள் கவனமாக இருக்கிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில், எந்தெந்த கார்ப்பரேட் நிறுவனம், எங்கெல்லாம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றது? அவற்றின் சட்டவிரோத செயல்கள், நிதி மோசடிகள், உழைப்புச் சுரண்டல்கள் போன்ற பல விபரங்களை தேடி அறியும், மேற்கத்திய இடதுசாரி அமைப்புகள், அந்த அறிவை மக்களிடம் பரப்புவதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளன. வேலைக்காரன் திரைப்படத்தில் மேற்படி இடதுசாரி செயற்பாட்டாளர்களின் மொத்த உருவமாக கதாநாயகன் அறிவு காட்டப் படுகின்றான். இங்கே அறிவு என்பது ஒரு தனி மனிதன் அல்ல. சமூக உணர்வாளர்களின் பொது வடிவம்.

மேற்குலக நாடுகளில் உழைக்கும் வர்க்கம் உரிமைக்காக போராடும் ஒவ்வொரு தடவையும், முதலாளிய வர்க்கம் அதைக் கடுமையாக எதிர்த்து நிற்கும். ஆனால், ஒரு தடவை தொழிலாளர்கள் (அல்லது நுகர்வோர்) தமது நியாயமான உரிமைகளை வென்று விட்டால், அந்த வெற்றிக்கு முதலாளிகளும் சொந்தம் கொண்டாடுவார்கள்.

மேற்கைரோப்பிய நாடுகள் மனித உரிமைகள் விடயத்தில் "நாகரிக வளர்ச்சி" கண்டுள்ளது என்றால், அதற்குக் காரணம் அங்கு நடந்த தொழிலாளர் போராட்டங்கள் தான். ஆனால், அயோக்கியத்தனமாக அந்த உண்மையை மறைக்கும் மேற்கத்திய முதலாளிய வர்க்கம், அதை தானே செய்ததாக தம்பட்டம் அடிக்கும். இந்த அயோக்கியத்தனம், வேலைக்காரன் திரைப்படத்தில் ஆதி என்ற பாத்திரம் மூலம் காட்டப் படுகின்றது.

திரைப்படத்தில் தான் வேலை செய்யும் கம்பனி தயாரிக்கும் பொருட்களில் இரசாயன நஞ்சு கலந்துள்ளது என்ற உண்மையை தெரிந்து கொள்ளும் அறிவு, இரண்டு நாட்களுக்கு தரக் கட்டுப்பாட்டுக்கு ஏற்றவாறு வேலை செய்யும் திட்டத்தை கொண்டு வருகிறான். அறிவின் மேலாளரும், போட்டி நிறுவன முதலாளியின் மகனுமான ஆதி, தந்திரமாக அதற்கு உடன்படுகிறான்.

அதற்குப் பின்னால், போட்டி நிறுவனத்தை கழுத்தறுக்கும் முதலாளிகளின் சுயநலம் ஒளிந்துள்ளது. அது மட்டுமல்ல, ஒரு கட்டத்தில் ஆதி தானே தொழிலாளர்களின் பாதுகாவலன் என்றும் காட்டிக் கொள்வான். நிஜ வாழ்வில், இந்த விடயங்கள் பல்வேறு கம்பனிகளில் பல வருட கால இடைவெளிகளுக்குள் நடந்துள்ளன. 

அவற்றை கோர்வையாக்கி, ஒரே கதையாக கூறத் தெரிந்த டைரக்டரின் திறமையை பாராட்ட வேண்டும். பெரும்பாலும் படித்தவர்களும் கவனம் செலுத்தாத, கார்ப்பரேட் ஊழல்களை, பொருளாதார நுணுக்கங்களை, மிகவும் எளிமையாக பாமர மக்களுக்கும் புரிய வகையில் கூறியிருக்கும் டைரக்டரை மெச்சலாம்.

இரண்டு மணிநேர திரைப்படத்தில் எல்லாவற்றையும் சொல்ல முடியாது என்பது உண்மை தான். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் எளிதான விடயம் அல்ல. இருட்டைப் பற்றி புலம்பிக் கொண்டிருக்காமல், ஒரு மெழுவர்த்தியை ஏற்றி வைக்கலாம். அதைத் தான் வேலைக்காரன் திரைப்படம் கூற முனைகின்றது. 

உலகில் எதுவும் போராடாமல் கிடைப்பதில்லை. அதை புதிய சிந்தனைகளுடன் வடிவமைப்பதும் அவசியமாகின்றது. உதாரணத்திற்கு, வேலைநிறுத்தம் செய்வது மட்டும் போராட்டம் அல்ல. "வேலை செய்வதும்" ஒரு போராட்ட வடிவம் தான்.

அமெரிக்காவிலும், வேறு சில நாடுகளிலும் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்த தொழிலாளர்கள் உள்ளிருந்து வேலை செய்து கொண்டு போராடிய சம்பவங்கள் நடந்துள்ளன. (பார்க்க: சிக்காகோ தொழிற்சாலை தொழிலாளர் உடமையாகியது) அதாவது, வழமை போல முதலாளிக்கு விசுவாசமாக உற்பத்தி செய்யாமல், சமூகத்திற்காக உற்பத்தி செய்யும் போராட்டம்.

ஒரு தொழிலகம், சமூகத்தில் கிடைக்கும் மூலப் பொருட்களை கொண்டு தயாரிக்கப் பட்ட முடிவுப் பொருட்களை அந்த சமூகத்திற்கே விற்கிறது. (இது முதலாளித்துவ மார்க்கெட்டிங் பாடநூலில் எழுதப் பட்டுள்ளது.) அதன் அர்த்தம், தொழிலாளர்கள் சமூகத்திற்காக வேலை செய்கிறார்கள். அவர்கள் செய்யும் வேலைக்கான நஷ்டஈடாக சம்பளம் பெற்றுக் கொள்கிறார்கள். எதற்காக முதலாளிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்? இந்தக் கேள்வியை வேலைக்காரன் திரைப்படம் எழுப்புகின்றது.

தொழிலாளர் வர்க்கத்தின் பிரதிநிதியான அறிவுக்கும், முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதியான ஆதிக்கும் இடையில் நடக்கும் விட்டுக்கொடுக்காத போராட்டமே படத்தின் பின்பாதிக் கதை. அறிவின் யோசனைப் படி, தொழிலாளர்கள் இரண்டு நாட்கள் தரக் கட்டுப்பாடுடன் தயாரித்த பொருட்களை, ஆதி எரித்துக் கொளுத்தி நாசமாக்கி விடுகிறான். இதனால் தரமான பொருள் சந்தைக்கு வருவது தடுக்கப் படுகின்றது. 

இறுதியில், தொழிலாளர்கள் நேர்மையாக வேலை செய்யும் விழிப்புணர்வு பெற்றதே வெற்றி தான் என்பது அறிவின் வாதம். அது இன்னொரு கட்டத்திற்கு நகர வேண்டும். தொழிலாளர்கள் தாமே நிர்வாகத்தைப் பொறுப்பேற்று நடத்த வேண்டும். குறைந்த பட்சம், கம்பனி நிர்வாகிகள் குழுவில் தொழிலாளர் பிரதிநிதிகளை சேர்த்துக் கொள்ள வற்புறுத்த வேண்டும்.

No comments: