பிரான்ஸ் நாட்டு பொருளியல் அறிஞர் தாமஸ் பிக்கெட்டி எழுதிய, "21 ம் நூற்றாண்டு மூலதனம்" நூல் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. அது இலகுவாக வாசித்தறியக் கூடிய நூல் இல்லையென்றாலும், அதை வாசிப்பதற்கு பொருளாதாரம் பற்றிய முன் அறிவு தேவையில்லை.
நெதர்லாந்தில், வருமானம் குறைந்தோருக்கும், ஏழைகளுக்கும் இலவசமாக விநியோகிக்கப் படும் MUG சஞ்சிகையில் (ஜனவரி 2015), அந்த நூல் பற்றிய விமர்சனம் ஒன்று வெளியாகி இருந்தது. அதில் ஒரு காலத்தில் சமத்துவ சமுதாயம் இருந்ததாக கருதப் பட்ட நெதர்லாந்து பொருளாதாரம் குறித்தும் தனியாக ஆய்வு செய்யப் பட்டுள்ளது.
பணக்கார மேற்கு ஐரோப்பிய நாடுகளைப் பற்றிய மாயைகளை கொண்டிருக்கும் தமிழர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் அவை. தாமஸ் பிக்கெட்டி பற்றிய கட்டுரையை, தமிழ் வாசகர்களுக்காக மொழிபெயர்த்து தருகிறேன்.
-------------------------------------------------------------
தாமஸ் பிக்கெட்டி பற்றி பலர் ஏற்கனவே கேள்விப் பட்டிருப்பார்கள். பிரெஞ்சு பொருளியல் அறிஞர், உலகம் முழுவதும் ஒரு சினிமா நட்சத்திரம் போன்று வரவேற்கப்பட்டார். 21 ம் நூற்றாண்டு மூலதனம் எனும் ஒரு தடிமனான, கடுமையான நூல் ஒன்றை எழுதிய சமூக விஞ்ஞானியை பொருத்தவரையில் அது குறிப்பிடத் தக்க விடயம்.
அவர் ஒரு புதிய கார்ல் மார்க்ஸ் என்று அழைக்கப் பட்டார். ஆனால், பிக்கெட்டி அதை விரும்பவில்லை. அவர் கம்யூனிசத்தை வெறுக்கிறார். ஆயினும், இந்த நூல் சொல்ல வரும் செய்தி இடதுசாரியக் கருத்தியல் என்பதை மறுக்க முடியாது. உலகத்தில் ஏற்றத்தாழ்வு மிக வேகமாக அதிகரிக்கின்றது. நாங்கள் எதுவுமே செய்யாவிட்டால், 19 நூற்றாண்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டி இருக்கும். அப்போது கையளவு முதலாளிகள் மட்டுமே பணம் வைத்திருந்தார்கள். பாட்டாளிகள் வருந்தி செத்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த முன்னறிவிப்பு தேவையற்ற விடயம் அல்ல. பிக்கெட்டி சில தோழர்களுடன் சேர்ந்து, மிகவும் விரிவான ஆய்வொன்றை செய்துள்ளார். கடந்த இரு நூறாண்டுகளாக, ஐரோப்பா, அமெரிக்காவில் மாற்றமடைந்து வரும் வருமானம், சொத்து அதிகரிப்பை ஆராய்ந்துள்ளனர். அந்த ஆராய்ச்சிக்காக, அவருக்கு ஆதரவாக இடதுசாரி முகாமில் இருந்தும், வலதுசாரி முகாமில் இருந்தும் பலத்த கரகோஷம் எழுந்தது.
அவர் ஒரு இடதுசாரி ஆதரவாளர் என்று யாரும் புறக்கணிக்க முடியவில்லை. தற்காலத்தில் நாங்கள் உழைத்து சம்பாதிப்பதை விட, பணத்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்பது தான் பிக்கெட்டியின் கூற்றின் சாராம்சம் ஆகும். யாராவது பரம்பரைச் சொத்து வைத்திருந்தால், அவர் பங்குகள், வட்டிகள் மூலம் அதிகம் சம்பாதிக்க முடியும். அவ்வாறு தான், பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான். ஏழை மேலும் ஏழை ஆகிறான்.
1980 க்குப் பிறகு தான், மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு உருவானது. நம்ப முடியாத அளவு சம்பளம் வாங்கிய உயர்மட்ட நிர்வாகிகள் வந்தார்கள். கடந்த சில தசாப்த காலமாக, குறிப்பாக நிதித் துறையில், அதி கூடிய சம்பள விகிதம் 700 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், மத்திய தர வர்க்கத்தின் வருமானம் வருடத்திற்கு ஓரிரு சதவீதமே கூடியது. அமெரிக்காவில், 10 சதவீதமாக உள்ள பணக்காரர்கள் அந்த நாட்டின் மொத்த வருமானத்தில் அரைவாசியை சொந்தமாக்கிக் கொள்கின்றனர்.
அளவுக்கு அதிகமாக சம்பாதிப்பவர்கள் குறித்து, பிக்கெட்டி நல்லெண்ணம் கொண்டிருக்கவில்லை. அவர்களது திறமைக்கு மதிப்புக் கொடுத்து அந்த ஊதியம் வழங்கப் படவில்லை. அதிகம் சம்பாதிப்போரின் வர்க்கம் ஒன்று உருவானது. அவர்கள் தமது சம்பளத்தை தாமாகவே தீர்மானித்துக் கொண்டார்கள். அவர்கள் மிகக் குறுகிய காலத்திற்குள் மிகப் பெரிய சொத்துக்களை சேர்த்ததுடன், அவற்றை வரியில்லாத சொர்க்கபுரிகளுக்குள் பதுக்கி வைத்தார்கள். அத்தகைய பணக்காரர்களின் பிள்ளைகள், அந்த செல்வத்தை நிர்வகித்து வந்தாலே போதுமானது. அவர்கள் மென்மேலும் பணக்காரர்கள் ஆகி விடுவார்கள். ஏனென்றால், சொத்து எந்தளவுக்கு அதிகமோ, அந்தளவுக்கு அது கூடிக் கொண்டே செல்லும்.
இதெல்லாம் அமெரிக்காவில் தான் என்று பலர் நினைக்கிறார்கள். நெதர்லாந்து ஒரு சமத்துவ சமுதாயத்தைக் கொண்ட நாடு. இங்கே அது பொருந்தாது என்று நினைக்கலாம். பிக்கெட்டி தனது நூலில் நெதர்லாந்தைப் பற்றி மிகச் சொற்பமாகவே எழுதி இருக்கிறார். ஆனால், டச்சு சமூக விஞ்ஞானிகள் அதை விரிவாக ஆராய்ந்துள்ளனர். வருமானத்தை பங்கிடுவதை பற்றி மட்டுமே ஆராய்ந்தால், சமத்துவ சமுதாயம் என்பது ஓரளவு சரியாக கருதப் படலாம். ஆனால், சொத்துக்களை பார்த்தோமானால், நெதர்லாந்து நாட்டிலும் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு நிலவுவதை அவதானிக்கலாம். 10 சதவீத பணக்காரர்கள், இந்த நாட்டில் உள்ள மொத்த சொத்துக்களில் 60 சதவீதத்தை சொந்தமாக வைத்திருக்கின்றனர். Van Landschot வங்கியின் தகவலின் படி அது முக்கால்வாசிப் பங்கு.
சொத்து அளவீட்டின் படி, நெதர்லாந்தும் ஏற்றத்தாழ்வு அதிகமான ஐரோப்பிய நாடுகளில் ஒன்று தான். குறைந்தளவு செல்வம் வைத்திருக்கும், அல்லது கடன்களை நம்பி வாழும், சனத்தொகையின் அரைவாசி மக்களுக்கும், பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி இங்கேயும் அதிகமாகும். இந்த நாட்டிலும் வறுமை அதிகரிக்கின்றது. ஒவ்வோர் ஆண்டும் அது குறித்து ஆய்வு செய்யும் Sociaal Cultureel Planbureau, Central Bureau voor de Statistiek ஆகிய நிறுவனங்கள் 2014 ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையிலேயே அது குறிப்பிடப் பட்டுள்ளது.
பெரும்பாலான டச்சுக் காரர்களுக்கு, அந்த தகவல் அதிர்ச்சியாக இருக்கும். இன்றைய வயோதிபர்கள், அவர்களது காலத்தில், ஓரளவு ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் ஒன்றில் வளர்ந்து வந்தனர். முப்பதுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி, இரண்டு உலகப் போர்கள், மற்றும் பணக்கார காலனியான இந்தோனேசியாவின் இழப்பு என்பன, எதிர்பாராத அளவிற்கு மூலதனத்தை நொறுக்கி இருந்தன. பலரது தனிப்பட்ட சொத்துக்கள் காற்றில் கரைந்தன.
1950 க்குப் பின்னர், பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான வித்தியாசம் முன்னெப்போதும் இல்லாதவாறு குறைந்திருந்தது. மீள் கட்டுமானத்தில் அனைவரும் கடுமையாக உழைத்தார்கள். நாட்டின் பொருளாதாரம் வருடத்திற்கு 4 - 5 சதவீதம் என உயர்ந்தது. அதனால் சம்பளங்களும் கூடிக் கொண்டிருந்தன. 1980 வரையில் அப்படியே நடந்து கொண்டிருந்தது. அப்போது வந்த பொருளாதார நெருக்கடி, எல்லாவற்றிற்கும் முடிவு கட்டியது.
1950 க்கும் 1980 க்கும் இடைப்பட்ட காலம் தனித்துவமானது. பொதுவாக பொருளாதாரம், வருடத்திற்கு அதிக பட்சம் 1 அல்லது 2 சதவீதம் தான் உயரும் என்று பிக்கெட்டி கூறுகின்றார். சொத்துக்கள் வருடத்திற்கு 5 சதவீதம் உயரும். சொத்துடமையாளர்களுக்கும், உடைமைகள் அற்ற பிரிவினருக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு தவிர்க்க முடியாமல் உயர்ந்து கொண்டு செல்லும். நலன்புரி அரசு சிதைக்கப் பட்டதும், பணக்காரர்கள் குறைந்தளவு வரி கட்டுவதும், ஏற்றத்தாழ்வை அதிகரிக்கும் காரணிகள் ஆகும். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகின்றனர். அரசு கூட ஏழையாகின்றது.
19 ம் நூற்றாண்டை திரும்பிப் பார்ப்போம். சமுதாய ஏற்றத்தாழ்வு அபாயகரமானது என்று பிக்கெட்டி எச்சரிக்கை விடுக்கிறார். ஜனநாயகம் அப்போது அகற்றப் பட்டது. அதீத பணக்காரர்கள் அரசியலில் செல்வாக்குச் செலுத்தினார்கள். சொத்துக்கள் ஏதும் வைத்திராதவர்கள், சமுதாயத்திற்கு வெளியே நிற்பதாக உணர்ந்தனர். தாமஸ் பிக்கெட்டி : "மேட்டுக்குடியினருக்கு எதிரானவன் என்று என் மேல் குற்றஞ் சாட்டப் பட்டது. ஆனால், உச்சியை விட அடித்தளம் மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன்."
இதற்கொரு தீர்வு இருக்கிறதா? உலகளாவிய முற்போக்கான சொத்து வரி ஒன்றை பிக்கெட்டி முன் மொழிகின்றார். அப்படியான வரி அறவிடுவதற்கு உலகம் முழுவதும் ஒத்துழைக்கும் என்று எதிர்பார்ப்பது ஒரு மாயை தான். அது பிக்கெட்டிக்கும் தெரியும். இருப்பினும், அவர் தனது ஆலோசனையை, வரி சீர்திருத்தம் தொடர்பான விவாதங்களுக்கெல்லாம் ஒரு அளவீடாக குறித்து வைத்திருக்கிறார். அது யதார்த்தமானது.
(நன்றி: Mug Magazine, Januari 2015)
1 comment:
சிறப்பான கட்டுரை.
நன்றி.
Post a Comment