Wednesday, January 01, 2014

பணக்கார பெற்றோரை வெறுத்த புதிய தலைமுறை இளைஞர்கள்



சோவியத் யூனியனில், 1930 ம் ஆண்டு, ஸ்டாலின் அறிமுகப் படுத்திய ஐந்தாண்டுத் திட்டத்தினால், பல இலட்சம் கிராமப்புற விவசாயிகளின் பிள்ளைகள் பயனடைந்தனர். குறிப்பாக மாணவர் பருவத்தில் இருந்த பிள்ளைகள், சோவியத் பிரச்சாரங்களினால் கவரப் பட்டனர். “மருத்துவர், பொறியியலாளர், விமானிகள், விண்வெளி வீரர்கள், விளையாட்டு வீரர்கள்” போன்ற தகமைகளை பெறுவதற்கான கல்வி கற்பதற்கு, அந்தப் பிரச்சார சாதனங்கள் அழைப்பு விடுத்தன.

ஏராளமான இளைஞர்கள், உயர்கல்வி கற்பதற்காக, பின் தங்கிய கிராமங்களை விட்டு விட்டு, நகர்ப் புறங்களை நாடிச் சென்றார்கள். அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப் பட்ட காரணத்தினால், கிராமப் புறங்களில் படித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. படிப்பறிவற்ற பெற்றோருக்கும், படித்த இளைஞர்களுக்கும் இடையில் தலைமுறை இடைவெளி அதிகரித்தது. படித்த பிள்ளைகள், பெற்றோரின் பழைமைவாத கலாச்சாரத்தை பின்பற்ற மறுத்தார்கள். தேவாலயத்திற்கு போக மறுத்தார்கள். மதச் சின்னங்களை அணிய மறுத்தார்கள். நிறைய குடும்பங்களில், பெற்றோரும் பிள்ளைகளும் கொள்கை முரண்பாடு காரணமாக வாக்குவாதப் பட்டார்கள்.

வர்க்க எதிரிகளான, “கூலாக் “ என்று குற்றஞ்சாட்டப்பட்ட கிராமிய பணக்காரர்களின் பிள்ளைகளின் நிலைமை பரிதாபகரமானது. அவர்களது பெற்றோர்கள், கூலாக் என்று குற்றஞ் சாட்டப்பட்டு தொலைதூர தடுப்பு முகாம்களில் அடைக்கப் பட்டிருந்தனர். ஆனால் பிள்ளைகள், புதிய சோவியத் நாட்டின் பிரஜைகளாக அனைத்து உரிமைகளும் பெற்றிருந்தனர். அவர்களும் பிற பிள்ளைகளைப் போன்று, பாடசாலை சென்று கல்வி கற்க முடிந்தது. கல்வித் தகைமை கொண்டவர்கள் வேலை செய்ய முடிந்தது. ஆனால், தங்களது பெற்றோர், அல்லது உறவினர்கள் கூலாக்குகள் என்ற உண்மையை மறைக்க வேண்டி இருந்தது. அந்தக் கால சோவியத் சமுதாயத்தில் அது அவமானகரமானதாக கருதப் பட்டது. பிள்ளைகள் தங்களது கூலாக் பின்னணியை பாடசாலை பிள்ளைகளிடம் மறைத்தார்கள். விண்ணப் படிவங்களை நிரப்பும் பொழுது, “கூலாக் உறவினர்கள் இறந்து விட்டதாகவோ, அல்லது காணாமல்போனதாகவோ குறிப்பிட்டார்கள்.

சில கூலாக் பெற்றோரின் மகன் மார், கம்யூனிஸ்ட் கட்சியில் அல்லது கொம்சொமோல் மாணவர் அமைப்பு உறுப்பினர்களாக இருந்தார்கள். அவர்கள் தமது பெற்றோரை பூரணமாக நிராகரிக்க வேண்டி இருந்தது. ஒரு சிலர் கொள்கை மீது கொண்ட பற்றுக் காரணமாக,பணக்காரனாக இருந்த சொந்த தகப்பனையும் வெறுத்தார்கள். செல்வத்தை பிறருடன் பகிர்ந்து கொள்ள மறுத்தால், அரசியல் பொலிஸ் வந்து அவரை கைது செய்து கொண்டு செல்வதற்கு உதவினார்கள்.

Tiraspol நகருக்கு அருகில், Malaeshty எனும் கிராமத்தின் கொம்சொமோல் தலைவராக இருந்த அலெக்சாண்டர் எனும் நபர், மிகத் தீவிரமான கூட்டுத்துவ பண்ணை அமைப்பின் ஆதரவாளர். கூலாக்குகளுக்கு எதிரான போரையும் ஆதரித்து வந்தார். அவரது தந்தை அதற்கு எதிர்மாறானவர். வீட்டில் மகனுடன் முரண்பட்டு வாக்குவாதம் செய்கையில், கூட்டுத்துவ பண்ணை அமைப்பை கடுமையாக விமர்சித்து வந்தார். கடைசியில், தந்தையை கைது செய்து தடுப்பு முகாமுக்கு அனுப்புவதற்கு, தனயனே காரணமாக இருந்தார். அலெக்சாண்டர் தனது செய்கையை விளக்கி, வேறொரு கொம்சொமோல் தலைவருக்கு எழுதிய கடித்ததில் பின்வருமாறு குறிப்பிட்டு இருந்தார்:

“எனது தந்தை முதலாம் உலகப்போரில் இராணுவ வீரராக கடமையாற்றியவர். ஆஸ்திரியாவில் பிடிபட்டு சிறையில் இருந்தவர். திரும்பி வரும் பொழுது ஆஸ்திரிய அதிகார மனோபாவம் கொண்டிருந்தார். ஆஸ்திரியாவில் சிறு பண்ணையாளர்கள் விவசாய பொருளாதாரத்தை வளம் படுத்துவதாக நம்பினார். கூட்டுத்துவ பண்ணை அமைப்பின் ஆரம்ப கட்ட குளறுபடிகளை அவர் பெரும் நாசமாக கருதினார். அவற்றை தற்காலிக கோளாறாக ஏற்றுக் கொள்ள மறுத்தார். அவர் அரசியல் அறிவு பெற்றிருந்தால் மட்டுமே இயங்கியல் விதிகளை புரிந்து கொண்டிருக்க முடியும்.”

அனேகமாக, வீடுகளில் நடக்கும் விவாதங்களில், பிள்ளைகளுடன் முரண்படும் பெற்றோர், அல்லது உறவினர்கள், காட்டிக் கொடுக்கப் பட்டனர். அவ்வாறு காட்டிக் கொடுக்காத பிள்ளைகள் கூட, வர்க்க எதிரிகளாக குற்றஞ்சாட்டப் பட்ட பெற்றோருடனான தொடர்புகளை துண்டித்துக் கொண்டார்கள். கவிஞர் அலெக்சாண்டர் திவார்டோஸ்கி யின் சொந்தக் கதையை உதாரணமாக குறிப்பிடலாம்.

கவிஞர் அலெக்சாண்டர் திவார்டோஸ்கி, ஸ்மோலென்ஸ்க் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். பருவ வயதிலேயே கம்யூனிச சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டு, கொம்சொமோல் அமைப்பில் இணைந்து வேலை செய்தார். அலெக்சாண்டரின் தந்தை ஒரு பணக்கார கூலாக். அவர் தனது தந்தையை பற்றி ஒரு கவிதை எழுதினார்:

பணக்காரனும் தந்தையுமானவருக்கு... 
உன்னுடைய வீட்டில் பற்றாக்குறை என்பதே இல்லை 
நீ ஒரு பணக்காரன், எனக்கும் அது தெரியும் 
ஊரில் உள்ள வீடுகளில் எல்லாம் உன்னுடைய வீடே பெரியது

துரதிர்ஷ்டவசமாக அலெக்சாண்டரின் பெற்றோரும், சகோதரர்களும் கைது செய்யப் பட்டு, தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப் பட்டனர். அலெக்சாண்டர் அந்தப் பிரதேச கட்சிப் பொறுப்பாளரை சந்தித்து, குடும்பத்தினரை விடுவிப்பதற்கு முயற்சி செய்தார். ஆனால், அவர்களை விடுதலை செய்ய மறுத்து விட்ட பொறுப்பாளர் பின்வருமாறு அறிவுரை கூறினார் : “ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு சந்தர்ப்பம் வரும். அவர் ஒன்றில் தனது குடும்பத்தை அல்லது புரட்சியை தெரிவு செய்ய வேண்டி இருக்கும்.”

ஸ்மோலென்ஸ்க் நகரத்தில் படித்துக் கொண்டிருந்த அலெக்சாண்டருக்கு, அவரது தாய், தந்தையர் கடிதம் எழுதினார்கள். அதில் அவர்கள் பணம் எதையும் எதிர்பார்க்கா விட்டாலும், தொடர்பை மட்டும் பேணுமாறு வேண்டிக் கொண்டனர். அலெக்சாண்டர் அவர்களுக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் பின்வருமாறு எழுதி இருந்தது: 
“அன்பானவர்களே! நான் ஒரு காட்டுமிராண்டியோ, மிருகமோ அல்ல. பொறுமையாக இருந்து வேலை செய்யுங்கள். கூலாக்குகள் என்ற வர்க்கத்தை அழித்தொழிப்பது என்றால், அதன் அர்த்தம் மக்களை அழிப்பது அல்ல.”

அந்தக் கடிதத்திற்குப் பிறகு, அலெக்சாண்டர் தனது குடும்பத்துடனான தொடர்புகளை துண்டித்துக் கொண்டார். அனேகமாக, அவர் புரட்சிக்கு தனது விசுவாசத்தை காட்ட வேண்டி இருந்திருக்கும். அதை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய தேவை இல்லாவிட்டாலும், ஒரு நாட்டில் புரட்சி நடக்கும் காலகட்டத்தில், சொந்தக் குடும்பத்திலும் இது போன்ற இழப்புகள் ஏற்படுவது சகஜம் என்று மனதை தேற்றிக் கொண்டிருப்பார்.

(Orlando Figes எழுதிய, “The Whisperers, Private life in Stalin’s Russia” என்ற நூலில் இருந்து எடுத்த சிறிய பகுதி.)

(ஸ்டாலினின் ஆட்சிக் காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் அனுபவங்களைக் கொண்டு தொகுக்கப் பட்ட நூல். இதுவும், மேற்கத்திய நாடுகளின் வாசகர்களை கவரும் நோக்குடன், “ஸ்டாலினின் கொடுங்கோன்மை” பற்றி கூறும் நூல் தான். ஆனால், தவிர்க்கவியலாது ஒரு உண்மையையும் கூறி விடுகின்றது. சோவியத் புரட்சி நடந்த காலத்தில், கிராமங்களில் இருந்த பணக்கார மேல் தட்டு வர்க்கம் பாதிக்கப் பட்டது. அந்த ஊர்களில் இருந்த ஏழை மக்களுக்கு, கட்சி ஆயுதமும், அதிகாரமும் கொடுத்தததால், அவர்கள் தமக்குத் தெரிந்த பணக்காரர்களை எல்லாம் விரட்டி அடித்தார்கள். ஆனால், அடித்து விரட்டப்பட்ட பணக்காரர்கள் என்னென்ன துன்பங்களை அனுபவித்தார்கள் என்பதை அறிந்து கொள்வதில் தான், பல வாசகர்கள் ஆர்வம் காட்டுவார்கள். அதுவும் சற்று மிகைப் படுத்தல்களுடன் இந்த நூலில் விபரிக்கப் பட்டுள்ளது.)

No comments: