Monday, October 21, 2013

டென் மார்க்கை அதிர வைத்த "கம்யூனிச சிறப்புப் படையணி"!


" டென் மார்க் நாட்டில், 
இப்படி எல்லாம் நடந்தது என்று சொன்னால், 
இன்றைக்கும் யாரும் நம்ப மாட்டார்கள்!"

எழுபதுகளில், கம்யூனிச ஆயுதக் குழுக்கள் இயங்காத மேற்கு ஐரோப்பிய நாடுகள் எதுவும் இல்லையெனலாம். வியட்நாம் போரின் எதிர்விளைவாக தோன்றிய மாணவர் போராட்டங்களின் விளைவாக, அந்த ஆயுதக் குழுக்கள் தோன்றி இருந்தன. பாலஸ்தீன விடுதலை அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தன. டென்மார்க்கும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

அன்றிருந்த ஐரோப்பிய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் யாவும், "டென்மார்க் கம்யூனிஸ்ட் கட்சி" க்கும் ஏற்பட்டன. டென்மார்க் கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர், குருஷேவின் நிலைப்பாட்டை ஆதரித்து வந்தது. அது கட்சிக்குள் பிளவை உண்டாக்கியது.

குறிப்பாக கட்சியின் இளைஞர் அணியினர், குருஷேவின் திருத்தல்வாதப் போக்கிற்கு எதிராக கடுமையாக வாதிட்டு வந்தனர். இதனால் அவர்களை கட்சியை விட்டு நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. Gotfred Appel தலைமையில் பிரிந்து சென்ற அணியினர், அன்று ஸ்டாலின் பக்க நியாயங்களை பேசிக் கொண்டிருந்த மாவோ வினை தமது ஆதர்ச நாயகனாக கருதினார்கள். அந்தக் குழுவினர், "கம்யூனிச சிறப்புப் படையணி" (டேனிஷ் மொழியில்: Kommunistisk ArbejdsKreds) என்ற பெயரில் இயங்கினார்கள்.

அப்போது வியட்நாம் போர் நடந்து கொண்டிருந்ததால், "வியட்நாம் கமிட்டி" என்ற பெயரில் பகிரங்கமாக அரசியல் பணிகளில் ஈடுபட்டனர். பெரும்பாலான டேனிஷ் மக்கள், அமெரிக்காவின் வியட்நாம் போரினை எதிர்த்து வந்ததால், அமைப்பிற்கு மக்கள் ஆதரவை திரட்ட முடிந்தது. ஆயினும், எழுபதுகளின் தொடக்கத்தில் வியட்நாம் போர் முடிவடைந்த பின்னர், ஆர்வலர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

இதற்கிடையே, மாவோவின் செஞ்சீனாவுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட டேனிஷ் கம்யூனிஸ்டுகள், முதன்முதலாக "மாவோவின் மேற்கோள்கள்" நூலை டேனிஷ் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தனர். இவ்வாறு, மெல்ல மெல்ல மூன்றாமுலக அரசியலுக்குள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். ஆனால், ஒரு கட்டத்தில், சீனாவுக்கும், டேனிஷ் மாவோயிஸ்டுகளுக்கும் இடையிலான தொடர்பு அறுந்தது. அன்றைய காலங்களில், மேற்கத்திய நாடுகளில் இடம்பெற்ற மாணவர் போராட்டம், "ஒரு குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் எழுச்சி" என்ற நிலைப்பாட்டை டேனிஷ் மாவோயிஸ்டுகள் எடுத்திருந்தமையே பிளவுக்கு காரணம்.

கம்யூனிச சிறப்புப் படையணி (KAK) ஸ்தாபகர், Gotfred Appel தெரிவித்த கருத்துக்கள், அன்றைய மேற்கு ஐரோப்பிய கம்யூனிச ஆயுதக் குழுக்கள், தமது போராட்டத்தை நியாயப் படுத்திய கொள்கைகளில் ஒன்றாக இருந்தது. "மூன்றாமுலக வறிய நாடுகளில் சுரண்டப்படும் மூலதனமானது, டென்மார்க் போன்ற நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பயன்படுகின்றது. அதனால், டென்மார்க்கின் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ வேண்டிய பிரிவினர் கூட, மத்தியதர வர்க்கத்தின் தகுதிக்கு உயர்த்தப் படுகின்றனர். அந்தப் பிரிவினர், முதலாளித்துவத்தை ஆதரிப்பதற்காக கொடுக்கப்படும் இலஞ்சம், டென்மார்க் போன்ற நாடுகளில் கம்யூனிசப் புரட்சியை பின்போடுகின்றது. அதனால், தனது நாட்டில் கம்யூனிச அரசமைக்க விரும்பும் மேற்கத்திய கம்யூனிஸ்ட் ஒருவர், முதலில் மூன்றாமுலக நாடுகளின் விடுதலைக்காக போராட வேண்டும்."

கட்சியின் சார்பில், ஆப்பிரிக்க நாட்டு மக்களுக்கு உடைகளை அனுப்பும் தொண்டு நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கப் பட்டது. டேனிஷ் மொழியில் Tøj til Afrika (TTA) என்ற பெயரிலான அமைப்பின் பெயரில், டென்மார்க் முழுவதும் பிரச்சாரம் செய்து, தொன் கணக்கில் பாவித்த உடைகளை சேகரித்து, ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்பி வைத்தனர். அனேகமாக, மொசாம்பிக், அங்கோலா, கினே பிசாவு போன்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆண்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கே ஆடைகள் ஏற்றுமதி செய்யப் பட்டன. அந்த தொண்டு நிறுவனம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தாலும், பிற்காலத்தில் இடம்பெறப் போகும் இரகசிய வேலைத் திட்டங்களுக்கு முன்னேற்பாடாக பயன்பட்டது. TTA அமைப்பின் ஊடாக தெரிவான சிலர், இன்னொரு இரகசிய கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவையை உணர்ந்தனர்.

அந்தக் காலத்தில், லெபனானில் தளம் அமைத்து இயங்கிய பாலஸ்தீன மார்க்சிய இயக்கமான PFLP, சர்வதேசப் புரட்சி ஒன்றை உருவாக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வந்தது. பல உலக நாடுகளை சேர்ந்த புரட்சியாளர்களுக்கு லெபனானில் ஆயுதப் பயிற்சி வழங்கியது. (அன்றிருந்த லெபனானில் உள்நாட்டுப் போர் காரணமாக, அரசு இயந்திரம் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.பாலஸ்தீன கெரில்லா இயக்கங்கள் சில பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.) அதற்காக, மேற்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த இளைஞர்களும் தெரிவு செய்யப் பட்டு அனுப்பி வைக்கப் பட்டனர்.

டென்மார்க்கில் இருந்து, Niels Jørgensen என்பவரும், இன்னொருவரும் பயிற்சிக்காக லெபனான் சென்றனர். PFLP வெளிநாட்டு இளைஞர்களுக்கு இலவச பயிற்சி கொடுத்தாலும், சில நேரம் அவர்களையும் ஏதாவதொரு தாக்குதல் நடவடிக்கைக்கு அனுப்புவது வழக்கம். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில், மற்றைய டேனிஷ் உறுப்பினர் இயக்கத்தில் இருந்து விலகி விட்டார்.  பல வருடங்களுக்குப் பின்னர், டேனிஷ் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்த Niels Jørgensen, தனது லெபனான் முகாம் வாழ்க்கை பற்றி பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

Niels Jørgensen கொடுத்த வாக்குமூலத்தில் இருந்து: " லெபனானில் PFLP நடத்திய பயிற்சி முகாமில், பன்னாட்டு போராளிகள் தங்கி இருந்தார்கள். வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், அனைவரிடமும் ஒரே குறிக்கோளுக்காக போரிடும் தோழமை உணர்வு காணப்பட்டது. இராணுவப்  பயிற்சியுடன் நில்லாது, பாலஸ்தீன போராளிகளுடன் இணைந்து, இஸ்ரேலிய படையினருக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையிலும் ஈடுபட்டோம். எமது முகாமில் சிறிலங்காவை சேர்ந்த சிலரும் தங்கி இருந்தனர்."

அவர் குறிப்பிட்ட ஸ்ரீலங்கா நாட்டவர்கள், ஈழ விடுதலைப் போராளிகள் ஆவர். அவர்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. அன்றைய காலகட்டத்தில், ஈரோஸ் இயக்கமே லெபனான் பயிற்சிக்காக போராளிகளை அனுப்பி வந்தது. ஆயினும், ஈரோஸ் ஊடாக புலிகள் இயக்கப் உறுப்பினர்களும் சென்றுள்ளனர். பிற்காலத்தில் புலிகள் அமைப்பபில் இருந்து பிரிந்த புளொட் இயக்கமும், லெபனான் பயிற்சிக்கு போராளிகளை அனுப்பி வந்தது.

இதற்கிடையே, பாரிஸ் நகரில் இயங்கிய PFLP தொடர்பாளர் மிஷேல் முக்காபல், ஐரோப்பிய புரட்சியாளர்களுடன் தொடர்புகளை பேணி வந்தார். மிஷேலின் நடமாட்டத்தை பின்தொடர்ந்து அவதானித்த பிரெஞ்சு உளவுத்துறை, ஒரு நாள் அவரை திடீரென கைது செய்தது. ஆயினும், அந்த செய்தியை வெளியே கசிய விடாமல், மிஷேல் முக்காபலிடம் இருந்து பல தகவல்களை திரட்டியது. இறுதியில், பிரெஞ்சுப் போலிசுக்கு ஆட்களை காட்டிக் கொடுக்க சம்மதித்த முக்காபல், கார்லோஸ் என்ற வெனிசுவேலா தீவிரவாதியின் மறைவிடத்திற்கு அழைத்துச் சென்றார். ஆனால், "துரோகி" முக்காபலையும், பிரெஞ்சு அதிகாரிகளையும் சுட்டுக் கொலை செய்த கார்லோஸ் தப்பி ஓடி விட்டார். 

இருப்பினும், முக்காபல் கொடுத்த பட்டியலில் இருந்த ஐரோப்பிய ஆயுதக் குழுக்கள் பற்றிய விபரங்கள், அந்தந்த நாடுகளை சேர்ந்த பொலிஸ் புலனாய்வாளர்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டன. அதிர்ஷ்டவசமாக, டேனிஷ் இயக்கத்தின் பெயரை பிரெஞ்சுக்காரர்கள் தவறாக எழுதி விட்டனர். அதனால் KAK உறுப்பினர்கள், இன்னும் சில காலத்திற்கு போலிசின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு இயங்க முடிந்தது.

KAK பிற்காலத்தில், "கம்யூனிச செயற்குழு" (டேனிஷ் மொழியில்: Kommunistisk Arbejdsgruppe) என்ற பெயரில் இயங்கியது. அதன் உறுப்பினர்கள் தலைமறைவாக இயங்கினாலும், சாதாரண மக்களைப் போல வேலைக்கு போய் வந்து கொண்டிருந்தனர். வேலை செய்யும் இடத்தில், தமது அரசியல் கொள்கைகளை பற்றி யாருடனும் பேச மாட்டார்கள். தமது நண்பர்கள், உறவினர்களுடனும் தொடர்புகளை குறைத்து வந்தனர். 

பல பெயர்களில் அடையாள அட்டைகள், கடவுச் சீட்டுகளை வைத்திருந்தார்கள். தமது இயக்கத் தோழர்களுடன் மட்டுமே நெருங்கிய தொடர்புகளை பேணி வந்தனர். இயக்க உறுப்பினர்கள் ஒன்று கூடி விவாதிப்பதற்கு, தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்கள். இது போன்ற முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள் காரணமாக, டேனிஷ் பொலிஸ் அவர்களைப் பற்றி துப்புத் துலக்க முடியவில்லை. சுருக்கமாக, அந்தக் குழுவினர் ஒரு இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.

டேனிஷ் கம்யூனிச ஆயுதக் குழுவுக்கு, ஒரு காலத்தில் PFLP நிதியும், சிறு ஆயுதங்களும் வழங்கியது. ஒரு தடவை, புதுவருட கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிப்பதை போர்வையாக பயன்படுத்தி, டேனிஷ் குழுவினர் ஒரு காட்டுக்குள் துப்பாக்கியால் சுட்டுப் பயிற்சி எடுத்துள்ளனர். ஆயினும், அவர்கள் டென்மார்க்கில் எந்தவொரு தாக்குதலிலும் ஈடுபடவில்லை. டென்மார்க்கில் KAK, KA அமைப்பினரின் முக்கியமான நடவடிக்கை, கொள்ளையடிப்பது. பொலிஸ் அதனை கிரிமினல் செயலாக கருதியது, ஆனால் அவர்களைப் பொறுத்தவரையில் அது ஒரு புரட்சிகர போராட்டம். டேனிஷ் பணக்காரர்களின் செல்வத்தை கொள்ளையடித்து, ஏழை நாட்டு மக்களின் போராட்டத்திற்கு கொடுப்பது நியாயமானதாக நம்பினார்கள். இன்னொரு விதமாக சொன்னால், "நவீன கால ரொபின்ஹூட் போராட்டம்."

டென்மார்க் கம்யூனிஸ்டுகள், பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கு நிதி சேகரிப்பதற்காக, பல கிரிமினல் வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். டென்மார்க்கின் பல இடங்களில், தபால் நிலையத்திற்கு பணத்தை எடுத்துச் செல்லும் வண்டிகள், வழியில் மறித்து, ஆயுதமேந்திய நபர்களினால் கொள்ளையடிக்கப் பட்டன. இரண்டு, மூன்று தடவைகள் நடந்த தபால் நிலைய கொள்ளையில், ஒவ்வொரு தடவையும் பல இலட்சம் டேனிஷ் குரோணர்கள் கிடைத்தன. தபால் வங்கிகள் தவிர, சில பல்பொருள் அங்காடிகளும் கொள்ளையடிக்கப் பட்டன.

அதைத் தவிர, போலியான வரிப் பத்திரங்கள் அனுப்புதல், போலியான சாரதி அனுமதிப் பத்திரம் தயாரித்தல், மணி ஓடர் திருட்டு போன்றவற்றால் பல இலட்சம் குரோணர்கள் வருமானம் கிடைத்தது. கொள்ளையடிக்கப் பட்ட பணத்தில் பெரும்பகுதி, PFLP க்கு அனுப்பி வைக்கப் பட்டது. டென்மார்க்கில் இருந்து பணம் அனுப்புவது இலகுவாக இருந்தது. ஆனால், ஆயுதங்கள் அனுப்புவது கடினமான காரியமாக இருந்தது. அப்படியும் சில ஆயுதங்கள் பாலஸ்தீனத்திற்கு (லெபனானுக்கு) கடத்தப் பட்டுள்ளன.

பணம், ஆயுதம் தவிர, தொலைத்தொடர்பு கருவிகள், மருந்துகள், கமெராக்கள், போன்றனவும் வாங்கி அனுப்பப் பட்டன. இந்த உதவிகள் எல்லாவற்றையும், பாலஸ்தீன போராளிக் குழுக்களுடன் தொடர்பில் இருந்த, ஐரோப்பிய தோழர்கள் செய்து கொடுத்தனர் என்பதை, இங்கே முக்கியமாக குறிப்பிட வேண்டும். புலிகள் இயக்கத்திற்கு தேவையான நிதி, ஆயுதங்கள், கருவிகள் என்பன வெளிநாட்டுத் தொடர்பாளர்களால் அனுப்பப் பட்டன. ஆனால் அவர்கள் எல்லோரும் ஒரே தமிழ் இனத்தை சேர்ந்தவர்கள். ஒரு தேசியவாத அமைப்பிற்கும், கம்யூனிச அமைப்பிற்கும் இடையிலான வித்தியாசம் அது தான். அதாவது, தேசியவாதிகளை குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே ஆதரிப்பார்கள். கம்யூனிஸ்டுகளுக்கு உலகம் முழுவதும் ஆதரவாளர்கள் இருப்பார்கள்.

1982 ம் ஆண்டு, டேனிஷ் குழுவினர், சுவீடனுக்குள்ளும் தமது கரங்களை நீட்டினார்கள். சுவீடிஷ் இராணுவத்தின், ஆயுதக் களஞ்சிய நிலையம் உடைக்கப் பட்டது. அங்கிருந்து பல நவீன சுவீடிஷ் ஆயுதங்கள் கொள்ளையடிக்கப் பட்டன. தானியங்கி துப்பாக்கிகள், குண்டுகள், கண்ணிவெடிகள், இவற்றுடன் பசூகா மோட்டார் ஆயுதங்கள் களவாடப் பட்டு, டென்மார்க்கில் ஒரு மறைவிடத்தில் பதுக்கி வைக்கப் பட்டன. ஆனால், அந்த ஆயுதங்களை பாலஸ்தீனம் வரையில் கடத்திக் கொண்டு செல்ல முடியவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக இருந்தது. அதனால், சுவீடனில் செய்ததைப் போன்று, நோர்வே இராணுவத்தின் களஞ்சிய அறையை உடைக்கும் திட்டம் ஒன்று பின்போடப் பட்டது.

டேனிஷ் புரட்சிக் குழுவினர் கொள்ளையடிக்க செல்லும் பொழுது, முகமூடி அணிந்து இருப்பார்கள். ஆயுதந் தரித்திருப்பார்கள். ஆனால், முடிந்த அளவுக்கு யாரையும் சுட்டுக் காயப் படுத்தாமல் கச்சிதமாக வேலையை முடிக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தார்கள். 1988 ம் ஆண்டு, கோப்பென்ஹேகன் மத்திய தபால் நிலையம் கொள்ளையடிக்கப் பட்டது. அதுவே கடைசிக் கொள்ளையும், முதலாவது பொலிசாருடனான மோதல் சம்பவமுமாகும். அன்று மில்லியன் கணக்கான குரோணர்கள் கொள்ளையடிக்கப் பட்டது. ஆயினும், எதிர்பாராவிதமாக கொள்ளையடிக்கப் பட்ட உடனேயே பொலிஸ் ஸ்தலத்திற்கு வந்து விட்டது. அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஒரு பொலிஸ்காரர் கொல்லப் பட்டார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பொலிஸ் தேடுதல் நடவடிக்கைகள் அதிகரித்தன.

பொலிசாரின் தேடுதல் வேட்டையில், சில KAK உறுப்பினர்கள் கைது செய்யப் பட்டனர். ஆனால், இயக்கத் தலைமயைகம் எங்கே இருக்கின்றது என்பதையும், முக்கிய உறுப்பினர்களையும், சாட்சியங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. 1989 ம் ஆண்டு, முற்றிலும் எதிர்பாராத ஓர் இடத்தில் இருந்து, பொலிசாருக்கு முக்கியமான தகவல் ஒன்று கிடைத்தது. கோபென்ஹெகன் நகரில், ஒரு கார் விபத்து நடந்ததாக பொலிசாருக்கு தகவல் வந்தது. விபத்தில் சிக்கி, மயக்கமுற்ற நிலையில் இருந்த நபரை மருத்துவமனையில் சேர்ப்பித்த போலீசார், காரை சோதனை இட்டார்கள். பணம் கட்டிய சீட்டு ஒன்றை கண்டெடுத்த பொலிசார், அதிலிருந்த முகவரிக்கு சென்றார்கள். அந்த முகவரியின் பெயர்: Blekinge gade (பிளெக்கிங்கே வீதி).

விபத்தில் சிக்கிய நபரின் பெயர் Carsten Nielsen. பிளெக்கிங்கே வீதியில் இருந்த வீடு, இரகசிய கூட்டங்களுக்கும், ஆயுதங்களை பதுக்கி வைப்பதற்கும் மட்டுமே பயன்படுத்தப் பட்டது. அந்த வீட்டின் செலவுகளை, வங்கி மூலம் கட்டுவதில்லை. நேரடியாக பணத் தாள்களை எண்ணிக் கொடுப்பார்கள். அந்தளவு முன்னெச்சரிக்கையாக நடந்தும், ஒரு விபத்து காட்டிக் கொடுத்து விட்டது.

பிளெக்கிங்கே வீதி வீட்டிற்குள், இரகசிய அறைக்குள் இருந்து பல ஆயுதங்கள் கண்டெடுக்கப் பட்டன. அவை யாவும் பாலஸ்த்தீனத்திற்கு அனுப்பப்பட இருந்தவை. 2 மே 1989, நடந்த அந்த சம்பவம், டென்மார்க் ஊடகங்களின் தகவல் பசிக்கு தீனி போட்டது. அந்த நாளில் இருந்து, இரகசிய புரட்சிக் குழுவினர், ஊடகங்களின் பார்வையில் "Blekingegadebanden" (பிளெக்கிங்கே வீதி கோஷ்டி) என்று அழைக்கப் பட்டனர்.

பொலிசிடம் அகப்பட்ட KAK உறுப்பினர்கள் பலர், நீதிமன்றத்தினால் பத்து வருடத்திற்கும் குறையாத சிறைத் தண்டனை விதிக்கப் பட்டனர். எப்போதும் அமைதியாக இருக்கும் டென்மார்க் நாட்டில், Blekingegadebanden பற்றிய கிளர்ச்சியூட்டும் பரபரப்பு செய்திகள், மக்கள் மத்தியில் வருடக் கணக்காக பேசப் பட்டன. டென்மார்க்கிற்கு வெளியே, ஸ்கன்டிநேவிய நாடுகளில் மட்டுமே அதைப் பற்றி அறிவதில் ஆர்வம் கொண்டிருந்தார்கள். பிற உலக நாடுகளில், டென்மார்க்கில் இப்படி ஒரு ஆயுதக்குழு இயங்கியதை பற்றிக் கேள்விப் பட்டிருப்பார்கள் என்பது சந்தேகமே. 

டென்மார்க்கில் இயங்கிய இரகசியமான கம்யூனிஸ்ட் ஆயுதக்குழு பற்றி, தமிழ் மொழியில் எழுதப்பட்ட முதலாவது கட்டுரை இதுவாகத் தான் இருக்கும். இன்றைக்கும், Blekingegadebanden பற்றிய நூல்கள், ஆவணப் படங்கள் யாவும் ஸ்கன்டிநேவிய மொழிகளில் மட்டுமே உள்ளன. டேனிஷ் எழுத்தாளரான Peter Øvig Knudsen இரண்டு நூல்கள் எழுதியுள்ளார். 1.Blekingegadebanden – Den danske celle 2."Blekingegadebanden - Den hårde kerne" ஆகிய நூல்கள், இந்தக் கட்டுரை எழுதுவதற்கு பெரிதும் உதவியுள்ளது. நான் அவற்றை நோர்வீஜிய மொழிபெயர்ப்பில் வாசித்தறிந்தேன். எங்காவது ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்திருக்கிறதா என்ற தேடலை, வாசகர்களான உங்களிடமே விட்டு விடுகிறேன்.

*******************

டென்மார்க் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.டென்மார்க்கினுள் ஒரு பொதுவுடைமை சமுதாயம்
2.டென் மார்க், கோபென்ஹெகன் நகரம் தீப்பிடித்தது
3.அகதிகளை அடித்து வதைக்கும் டென்மார்க் போலிஸ் குண்டர்கள்

2 comments:

Anonymous said...

அருமையான கட்டுரை தோழரே.

தோழர் கலை,
அண்மையில் அல்பேனியக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவரின்(Enver Hoxha) மாவோ தொடர்பான எழுத்துக்களைப் படிக்க நேர்ந்தது. அவர் மாவோவின் மூன்றுலகக் கோட்பாட்டையும், மாவோ சிந்தனையயும் திரிபுவாதம் என்கிறார். இதைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?

Kasthuri Rengan said...

யாவற்றிலும் முதல்வன் ...

வாழ்த்துக்கள் தங்கள் பதிவுகளை விரும்பி வாசிப்பது என் வழக்கம்.