Monday, August 01, 2011

இனப்படுகொலையால் புலம்பெயர்ந்த ஆர்மேனிய தேசியம்


தமிழ் நாட்டின் தலைநகர் சென்னையில் இருக்கும் தெரு ஒன்றுக்கு, "அரண்மனைக் காரர் தெரு" என்று பெயர். ஆங்கிலேயர் காலனி ஆட்சிக் காலத்தில் அங்கே ஆர்மேனிய மொழி பேசும் மக்கள் வாழ்ந்ததனர். ஆர்மேனியர் தெரு என்ற பெயர் காலப்போக்கில் மருவி அரண்மனைக்காரர் தெருவாகி விட்டதாக கருதப்படுகின்றது.

"புலம்பெயர்ந்த யூதர்கள், யூத இனப்படுகொலை" பற்றி அளவுக்கதிகமாகவே அறிந்து வைத்திருக்கும் எமக்கு, கிட்டத்தட்ட அதே மாதிரியான வரலாற்றைக் கொண்ட ஆர்மேனியர்களைப் பற்றித் தெரியாது. இப்போதும் வலதுசாரி- தேசியவாத தமிழர்கள் யூதர்களை உதாரணமாகக் காட்டி அரசியல் நடத்துகின்றனர்.

உலகில் இன்னும் பல இனங்கள் யூதர்களின் தலைவிதியை பகிர்ந்து கொண்டுள்ளன. போதுமான பொருளாதார வளங்கள் இல்லாததால், அந்த சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த அவலத்தை வெளியுலகம் அறியவில்லை.

ஆர்மேனியர்களின் நிலை வேறு. இலட்சக்கணக்கான ஆர்மேனியர்கள் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். அமெரிக்க அரச மட்டத்தில் ஆதரவாளர்களைக் கொண்டுள்ளனர். இருப்பினும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பத்து லட்சம் ஆர்மேனியர்களை இனப்படுகொலை செய்த துருக்கி மீது, குறிப்பிடத்தக்க அழுத்தத்தை கொடுக்க முடியாமல் திணறுகின்றனர்.

துருக்கி அரசோ, ஆர்மேனிய இனப்படுகொலை நடக்கவில்லை என்று, இன்று வரை சாதித்து வருகின்றது. அண்மையில், புலம்பெயர்ந்த ஆர்மேனியர்களின் எரிச்சலைக் கிளப்பும் வகையில், ஆர்மேனியா குடியரசு, துருக்கியுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது. இருபதாம் நூற்றாண்டு ஐரோப்பாவில், முதலாவது மிகப்பெரிய இனப்படுகொலையை சந்தித்த, ஆர்மேனிய இனத்தின் கதை இது.

ஆர்மேனிய இனம் பெருமளவு யூதர்களுடன் ஒப்பிடத் தக்க வரலாற்றைக் கொண்டுள்ளது. உலகின் முதலாவது கிறிஸ்தவ நாடு, என்று அவர்கள் தம்மை பெருமையாக அழைத்துக் கொள்கின்றனர். ஆர்மேனியர்களின் பாரம்பரியப் பிரதேசம், முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஒன்றான, ஆர்மேனியா மட்டுமன்று. அந்த நாட்டில் வாழும் மக்களை விட, இரு மடங்கு ஆர்மேனியர்கள் பல உலக நாடுகளில் வாழ்கின்றனர். இவர்கள் பெரும்பாலும், "துருக்கிய ஆர்மேனியரின்" வம்சாவளியினர்.

உண்மையில், இன்றைய துருக்கியின் வட- கிழக்குப் பகுதி, ஆர்மேனியரின் பாரம்பரியப் பிரதேசமாகும். "முதலாவது கிறிஸ்தவ ஆர்மேனியா", காலப்போக்கில் அந்நிய படையெடுப்புகளினால் மறைந்து விட்டது. மத்திய காலத்தில், மேற்கே இருந்து வந்த சிலுவைப் போர்வீரர்களின் உதவியுடன், இரண்டாவது ஆர்மேனிய இராச்சியம் அமைக்கப் பட்டது. துருக்கியின் கிழக்கு எல்லையோரம், சிரியாவுக்கு அருகில் அந்த இராச்சியம் அமைந்திருந்தது. பிற்காலத்தில் மொங்கோலியப் படையெடுப்புகளால், அந்த இராச்சியமும் பறி போனது.

ரஷ்ய சாம்ராஜ்யத்தை ஆண்ட சார் மன்னனின் இறுதிக் காலம் வரையில், ஆர்மேனியர்களுக்கு தனியான நாடு இருக்கவில்லை. அநேகமாக, ஆர்மேனியரின் புலம்பெயர் படலம் அப்போதே ஆரம்பித்து விட்டது. யூதர்களைப் போன்று, ஆர்மேனியர்களும் சர்வதேச வணிகத்தில் நாட்டம் காட்டினார்கள்.

ஓட்டோமான் துருக்கிய அரச பரம்பரையினரின் இஸ்லாமிய சாம்ராஜ்ய காலத்தில், கிறிஸ்தவ ஆர்மேனியர்களுக்கு பாகுபாடு காட்டப்படவில்லை. மாறாக, ஆர்மேனிய கைவினைஞர்களும்,தொழிலதிபர்களும், வணிகர்களும், சுல்த்தானின் நன்மதிப்பைப் பெற்றிருந்தனர். சாம்ராஜ்ய விஸ்தரிப்பு போர்களில் ஈடுபட்ட, ஓட்டோமான் படையினருக்கு தேவையான வெடிமருந்துகளை தயாரிக்கும் முக்கிய பொறுப்பில் ஆர்மேனியர்கள் இருந்துள்ளனர். ஆர்மேனிய கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு சிறப்பு சலுகைகளும் கிடைத்து வந்தன.

முதலாம் உலகப்போருக்கு முந்திய நிலைமை, ஐரோப்பிய தேசிய இனங்களின் தலைவிதியை தீர்மானித்தது. புதிய தேசிய அரசுகள் தோன்றின. வேறு சில தேசிய இனங்கள் அடக்கியாளப் பட்டன. இதற்கிடையே ஓட்டோமான் துருக்கி சாம்ராஜ்யம் பலமிழந்து கொண்டிருந்தது. பிற ஐரோப்பிய வல்லரசுகள் அதனை "ஐரோப்பாவின் நோயாளி" என்று அழைத்தன. வடக்கே ரஷ்யப் படைகளும், மேற்கே ஆஸ்திரிய-ஹங்கேரியப் படைகளும், ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் பகுதிகளை கைப்பற்றி விட்டன. அங்கே வாழ்ந்த முஸ்லிம் மக்கள், துருக்கிக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் துருக்கியரல்லாத வேற்று மொழிக்காரர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அதாவது பொஸ்னியர்கள், செச்னியர்கள் போன்றோர். இந்த முஸ்லிம் அகதிகள், கிழக்கு துருக்கியில் தான் குடியேற்றப்பட்டனர்.

இன்றைய ஐரோப்பிய நாடுகள், துருக்கியை ஐரோப்பிய நாடாக ஏற்க விரும்புவதில்லை. ஆனால், அவர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ, ஐரோப்பிய மாற்றங்கள் துருக்கியையும் பாதிக்கின்றன. முதலாம் உலகப்போரில் துருக்கி ஜெர்மனியுடன் கூட்டுச் சேர்ந்து போரிட்டு தோற்றது. அன்றைய காலகட்டத்தில் ஐரோப்பாவெங்கும் பரவிய தேசியவாத கருத்தியல்கள் துருக்கியரையும் ஈர்த்தன.

துருக்கிய அரசில் அமைச்சர்களாக, இராணுவத் தளபதிகளாக பதவி வகித்தவர்கள் சுல்த்தானை அரசியல் அரங்கில் இருந்து வெளியேற்றினார்கள். துருக்கி இன மக்களுக்கான தேசிய அரசை ஸ்தாபித்தார்கள். அதன் அர்த்தம், துருக்கியினுள் வாழ்ந்த சிறுபான்மையின மக்கள் துருக்கிமயப் படுத்தப் பட வேண்டும், அல்லது வெளியேற்றப்பட வேண்டும். அவர்களது முதலாவது இலக்கு ஆர்மேனியர்கள்.

மொழியால், மதத்தால் வேறுபட்டவர்கள் என்பது மட்டுமே காரணமாக இருக்கவில்லை. துருக்கி பேரினவாதிகள், கிழக்கே உள்ள அசர்பைஜான் போன்ற துருக்கி மொழி பேசும் நாடுகளை இணைக்க விரும்பினார்கள். அதற்கான போர் நடவடிக்கைகள், ரஷ்ய- ஆர்மேனிய கூட்டுப் படைகளால் முறியடிக்கப் பட்டன. அந்தத் தோல்விக்கு பழி தீர்ப்பதற்காக, துருக்கிய ஆர்மேனியர்கள் இனவழிப்புச் செய்யப்பட்டனர்.


இஸ்தான்புல் நகரில் ஆர்மேனியப் புத்திஜீவிகள் கைது செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டனர். கிழக்கு துருக்கியில் இருந்த அனைத்து ஆர்மேனியக் கிராமங்களும் சுற்றிவளைக்கப் பட்டன. சொத்துக்கள் சூறையாடப் பட்டன. வீடுகள் எரிக்கப்பட்டன. கண்ணில் பட்டோர் கொலை செய்யப் பட்டனர். குறிப்பிட்ட அளவு பெண்களும், குழந்தைகளும், பலவந்தமாக முஸ்லிம்களாக மாற்றப்பட்டதனால் மட்டுமே தப்பிப் பிழைக்க முடிந்தது. மிகுதி மக்கள் அனைவரும் வெளியேறி, சிரியாவை நோக்கி செல்லுமாறு பணிக்கப் பட்டனர். அகதிகள் சென்ற பாதையிலும் பாதுகாப்பில்லை.

குர்திய கொள்ளையர்கள், அகதிகளைக் கொன்று, அவர்களிடமிருந்த பொருட்களை எல்லாம் கொள்ளையடித்தார்கள். அந்த சோதனையையும் தாண்டி வந்தவர்கள், சிரியா நாட்டு எல்லையோரம் தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப் பட்டனர். அந்த முகாம்கள் கூட, வதை முகாம்களாக காணப்பட்டன. குறைந்தது பத்தாயிரம் பேராவது முகாமில் மட்டும் இறந்துள்ளனர். இனவழிப்பில் தப்பிய ஆர்மேனியர்கள் மத்திய கிழக்கு அரபு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். அங்கிருந்து, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். இந்தப் பிரிவினருக்கு மட்டுமே நிம்மதியான வாழ்வு கிடைத்தது.

இன்னொரு பிரிவினர், ரஷ்யாவிடம் இருந்து புதிதாக சுதந்திரமடைந்த ஆர்மேனியக் குடியரசுக்கு இடம்பெயர்ந்தார்கள். ஆனால் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட ஆர்மேனியாவில், அகதிகளை வரவேற்க யாரும் இருக்கவில்லை. வசதியற்ற முகாம்களில், பட்டினி கிடந்தது மாண்டனர் பலர். குறைந்தது பத்தாயிரம் பேராவது "ஆர்மேனியரின் தாயகத்தில்" மரணத்தை எதிர்கொண்டனர்.


1915 ம் ஆண்டு நடந்த ஆர்மேனிய இனப்படுகொலையில், "ஒன்றரை மில்லியன் பேர் இறந்ததாக ஆர்மேனிய தரப்பில் தெரிவிக்கப் படுகின்றது. இது குறித்து ஆராய்ந்த ஐரோப்பிய நிபுணர்கள், குறைந்தது எட்டு இலட்சம் பேராவது இறந்திருக்கலாம் என்று கணக்கிட்டுள்ளனர். இனவழிப்பை நேரில் கண்ட, கேள்விப்பட்ட வெளிநாட்டு இராஜதந்திரிகளினது வாக்குமூலமும் பெறப்பட்டது. இருப்பினும், துருக்கி அரசும், பெரும்பான்மை துருக்கியரும், அங்கே அப்படி ஒரு இனப்படுகொலையும் நடக்கவில்லை என்று மறுத்து வருகின்றனர். அதே நேரம், ஆர்மேனியத் தேசியவாதிகள், இன்றும் "ஆர்மேனிய இனப்படுகொலையை" நினைவுகூருகின்றனர்.

அன்று இனப்படுகொலை புரிந்த குற்றவாளிகள் எல்லோரும் தண்டிக்கப்படாமலே, இயற்கை மரணம் அடைந்து விட்டனர். இருப்பினும், குறைந்த பட்சம், துருக்கியை மன்னிப்புக் கேட்க வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், புலம்பெயர்ந்த ஆர்மேனியர்கள் சளைக்காமல் போராடுகின்றனர். ஒரு சில சமயங்களில், அமெரிக்க, பிரெஞ்சு அரசுகள் கண்டனம் தெரிவித்தன. இருந்தாலும், துருக்கி அரசை பகைக்க விரும்பாத வெளிவிவகார கொள்கை காரணமாக, வெறும் கண்டனத்திற்கு அப்பால் எதுவும் நடப்பதில்லை.

அட்டா துர்க் ("துருக்கியின் தந்தை") அறிமுகப்படுத்திய, துருக்கி இன மேலாண்மை பெரும்பான்மை துருக்கியரின் அரசியல் நிலைப்பாடாகவுள்ளது. சைப்பிரசில் துருக்கிய சிறுபான்மையினம் அடக்கப்பட்ட பொழுது நியாயமான எதிர்ப்பைக் காட்டியவர்கள், துருக்கியில் ஆர்மேனிய, குர்திய சிறுபான்மை இனங்கள் ஒடுக்கப் படுவதை நியாயப்படுத்துவார்கள்.

உலகில் உள்ள அத்தனை தேசியவாதிகளிடமும் காணப்படும் முக்கிய குறைபாடு இது. தமது இனம் அடக்கப்படும் பொழுது உலகம் முழுவதும் ஆதரவை எதிர்பார்ப்பார்கள். அதே நேரம், தாம் இன்னொரு இனத்தை அடக்குவதை உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள். துருக்கியர்கள், நூறு வருடங்கள் கடந்த பின்னரும், ஆர்மேனிய இனப்படுகொலை நடந்ததை ஏற்றுக் கொள்ள மறுப்பதற்கு, அவர்கள் மனதில் வேரோடியுள்ள தேசியவெறி காரணம்.

அண்மையில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற துருக்கிய எழுத்தாளர், ஒர்ஹன் பாமுக்கு கொலைப் பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. அவர் செய்த ஒரேயொரு தவறு, ஆர்மேனிய இனப்படுகொலை நடந்ததென்ற உண்மையை அங்கீகரித்தது. "ஆர்மேனிய இனப்படுகொலை நடக்கவில்லை" என்று வாதாடும் வலதுசாரி- தேசியவாத துருக்கியர்கள், ஆர்மேனியர்கள் துருக்கி முஸ்லிம்களை படுகொலை செய்ததை எதிர்வாதமாக முன்வைக்கின்றனர்.

வடக்கே இருந்து படையெடுத்து வந்த ரஷ்ய இராணுவத்துடன் ஆர்மேனியர்கள் சேர்ந்து கொண்டு, துருக்கிய முஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மை தான். ஆனால், ஆர்மேனிய இனச்சுத்திகரிப்புக்கு பின்னர் நடந்த ரஷ்யப் படையெடுப்பின் பொழுது தான் பெருமளவு துருக்கி- முஸ்லிம் படுகொலைகள் நடந்துள்ளன. ஆர்மேனிய இனப்படுகொலைக்கு எதிர்வினையாக அந்தப் படுகொலைகள் நடந்திருக்கலாம். ஆர்மேனியர்கள் எப்போதும் ஒடுக்கப்படும் இனமாக, உலகின் அனுதாபத்தைப் பெறுவதற்காக பேசுவது வழமை. ஆனால், அவர்களும் பிற இனங்களை ஒடுக்கி வந்துள்ளனர்.

முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளான கிறிஸ்தவ ஆர்மேனியாவும், இஸ்லாமிய அசர்பைஜானும் அயலவர்கள். ஆனால் தீராப் பகையாளிகள். கடந்த நூறு வருடங்களாக, அவர்களுக்கிடையில் இனக்கலவரங்களும், ஆயுதமேந்திய மோதல்களும் சகஜம். சோவியத் யூனியனின் உடைவுக்கு அதுவும் ஒரு காரணம்.

சோவியத் யூனியன் வீழ்வதற்கு முன்னரே, "ஆர்மேனியா-அசர்பைஜான் யுத்தம்" ஆரம்பமாகி விட்டது. "கிறிஸ்தவ சகோதரனான" ரஷ்யாவின் உதவியால், சிறந்த இராணுவ வளங்களைக் கொண்டிருந்த ஆர்மேனியா போரில் வென்றது. அசர்பைஜானில் ஆர்மேனிய சிறுபான்மையினர் வாழும் நாகார்னோ- கரபாக் பகுதியை இணைத்துக் கொண்டனர். அந்தப் பகுதியில் வாழ்ந்த அசர்பைஜான் துருக்கியரை இனச்சுத்திகரிப்பு செய்து வெளியேற்றினார்கள்.

உலக வரலாற்றை எடுத்துப் பார்த்தோமானால், இனப்படுகொலையை மையப்படுத்திய அரசியல் கொள்கைகள் அமைதிக்கும், சமாதானத்திற்கும் இட்டுச் செல்வதில்லை. நவீன அரசியல்வாதிகள் யாரும், "அசோகச் சக்கரவர்த்தி போன்று, இனப்படுகொலையால் விரக்தியடைந்து" உலக சமாதானத்தை போதிப்பதில்லை. யூதர்களும், ஆர்மேனியர்களும் தமது இனத்திற்கு ஏற்பட்ட பேரழிவை நினைவுகூருவதை, புனிதக் கடமையாகக் கொண்டுள்ளனர். அது மீண்டும் அந்த இனத்தின் தேசியவெறியை வலுப்படுத்தவே உதவுகின்றது. தம்மினத்திற்கு நேர்ந்த அதே அவலத்தை, இன்னொரு வலிமை குன்றிய இனத்திற்கு கொடுப்பதற்கு தயங்குவதில்லை.

இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட இனம் என்பதற்காக, யூதர்கள் பாலஸ்தீனரை ஒடுக்குவதோ, அல்லது ஆர்மேனியர் அசர்பைஜான்- துருக்கியரை ஒடுக்குவதோ சரியாகி விடாது. துருக்கியில் நடந்த ஆர்மேனிய இனப்படுகொலை கண்டிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல, துருக்கியர் அதற்காக மனம் வருந்துவதும், அவர்களின் அரசு மன்னிப்பு கேட்பதும் அவசியம். ஆனால், அத்தகைய நிலைமைக்கு இறங்கி வரக் கூடியவர்கள் இடதுசாரி துருக்கியர் மட்டுமே. வலதுசாரி துருக்கியர் பிடிவாதமாக தொடர்ந்தும் நியாயப் படுத்துவார்கள். இஸ்தான்புல் நகரில் வாழ்ந்த ஆர்மேனிய பத்திரிகையாளர் Hrant Dink, இந்த உண்மையைப் புரிந்து கொண்டார்.

இன்னமும் துருக்கியில் (பெரும்பாலும் இஸ்தான்புல் நகர்) வாழும் சிறு தொகை ஆர்மேனியருக்கும், முற்போக்கு எண்ணம் கொண்ட துருக்கியருக்கும் இடையில், Hrant Dink நல்லுறவுப் பாலத்தை கட்டினார். அவரது நல்லெண்ணம் கொண்ட நடவடிக்கைகள், பெரும்பான்மை துருக்கியரின் எதிர்ப்புக்குள்ளாகின. நிச்சயமாக, புலம்பெயர்ந்த ஆர்மேனிய தேசியவாதிகளும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்கள். இறுதியில் அந்த பத்திரிகையாளர், துருக்கி பாசிஸ்ட் ஒருவனின் துப்பாக்கிக் குண்டுக்கு இரையானார்.

Hrant Dink இன் மரணச் சடங்கில், பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்டனர். ஆர்மேனியர்கள் மட்டுமல்லாது, பெருமளவு துருக்கியரும் இறுதி ஊர்வலத்தில் பங்குபற்றி கொலைக்கு எதிரான எதிர்ப்பை பதிவு செய்தனர். ஒரு ஊடகவியலாளரின் மரணமானது, துருக்கி அரசியலில் பேசாப் பொருளான ஆர்மேனிய இனப்படுகொலை குறித்த விவாதங்களை தூண்டி விட்டன. பல தசாப்தங்களாக, புலம்பெயர்ந்த ஆர்மேனிய தேசியவாதிகளால் நிறைவேற்ற முடியாத காரியத்தை, ஒரு எழுத்தாளரின் பேனா சாதித்துக் காட்டியது. "1915 ல் துருக்கிய- ஆர்மேனியர்களுக்கு ஏற்பட்ட பேரழிவை மறுப்பதற்கு எனது மனச்சாட்சி இடம் கொடுக்கவில்லை." என்ற மனுவில் முப்பதாயிரத்திற்கும் அதிகமான துருக்கியர்கள் கையெழுத்திட்டனர்.

2 comments:

saarvaakan said...

வணக்கம் நண்பரே,
வரலாற்றில் ஒவோரு தேசியமுமே ,இன்னொரு தேசியத்திற்கு எதிராகவே பல் வன்முறைகளை நிகழ்த்தி உள்ளது.ஒவ்வொரு தேசிய இனமும் சுய பெருமிதம்,தேர்தெடுக்கப் பட்டவர்கள் என்ற கருதுகோள்களே இதற்கு வித்திடுகின்ற்னவா,இல்லை இயற்கை வளங்களை பயன் படுத்துவதில் ஏற்படும் போட்டியா என்பதும் ஆய்வுக்குறியது. பல தேசிய இனங்கள் பரஸ்பர சுதந்திர,மரியாதையோடு வாழும் அரசியலமைப்பு என்பது சாத்தியமா என்ற கேள்வியே எழுகிறது.
நன்றி

aotspr said...

வருத்தமான செய்தி :(
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com