Wednesday, June 01, 2011

இடதுசாரிகளை இனவாதத்துடன் இணைக்கும் யமுனாவின் முடிச்சு


ஐரோப்பிய நாடொன்றில் இருந்து, இலங்கை சென்று திரும்பிய மனித உரிமை உரிமை ஆர்வலர் ஒருவர் பின்வருமாறு கூறினார். "இலங்கையில் இன முரண்பாடுகள் ஆழமாக வேரூன்றியுள்ளன. சிங்களவர்கள், தமிழர்கள் என்பது மொழி அடிப்படையில் பிரிந்த ஒரே இனம். ஆனால் இரண்டு தரப்பிலும் படித்தவர்கள் கூட இனவாதம் பேசுவது கவலைக்குரியது. பக்கச்சாற்பற்றவர்கள் என்று எதிர்பார்க்கப்படும் இடதுசாரி புத்திஜீவிகள் கூட, இன அடிப்படையில் பிரிந்திருக்கின்றனர்." (இதைக் கூறியவர், நெதர்லாந்தை சேர்ந்த Srilanka Werkgroup என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம் ஒன்றின் உறுப்பினர். அவர் தான் சார்ந்த நாட்டின் தேசியத்தை ஏற்றுக் கொள்ளாத தூய சமதர்மவாதி.) 


இலங்கையின் இன முரண்பாடுகள் இலகுவில் புரிந்து கொள்ளக் கூடியதல்ல. சுதந்திரத்திற்கு பின்னர் வளர்ச்சியடைந்த சிங்கள தேசியத்திற்கு எதிர்வினையாற்றவே தமிழ் தேசியம் பிறந்தது. இரண்டு தேசியங்களும் தமது அரசியல் இருப்பிற்கு ஒருவரை ஒருவர் தங்கியுள்ளனர். பண்டைய கால இந்து - பௌத்த மத முரண்பாடுகளை, இரு தரப்பு தேசியவாதிகளும் மொழி அடிப்படையிலான இன முரண்பாடுகளாக மாற்றுவதில் வெற்றி கண்டுள்ளனர். இவ்விரு மொழித் தேசியவாதிகளும், தம்மை இனவாதிகளாக ஏற்றுக் கொள்வதில்லை. நியாயமான கோரிக்கையை முன் வைத்து, இன விடுதலைக்காக போராடுவதாக கூறிக் கொள்வார்கள். 

சிங்கள தேசியவாதி என்றாலும், தமிழ் தேசியவாதி என்றாலும், ஒரு விடயத்தில் மட்டும் அவர்களுக்கு இடையில் பொதுத்தன்மை காணப்படும். மார்க்ஸியம், சோஷலிசம், கம்யூனிசம் என்று எத்தகைய இடதுசாரி கோட்பாடுகளையும் ஆக்ரோஷமாக எதிர்ப்பார்கள். இடதுசாரிகளின் வர்க்கக் கோட்பாடு, புனிதமான தேசியத்தை சிதைத்து விடும் என்ற அச்சம் மனதில் குடி கொண்டிருக்கும். சிங்களவர்கள், தமிழர்கள் மட்டுமே அவர்களுக்கு தெரிந்த வர்க்கப் பிரிவினை.

சிங்கள-தமிழ் தேசியவாதிகள், தமது இனத்திற்கு அப்பால் வேறு உலகம் இருப்பதாக சிந்திப்பதில்லை. உலகில் பிற நாடுகளில் ஒடுக்கப் படும் மக்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதுமில்லை. மாறாக அப்படிப் பேசுபவர்களை நையாண்டி செய்வார்கள். எழுபதுகளில் வியட்நாமில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்தன. யாழ்ப்பாணத்தில் அத்தகைய போராட்டங்களை கிண்டலடித்த தமிழ் தேசியவாதிகள் பின்வருமாறு கூறினார்கள். "மாஸ்கோவில் மழை பெய்தால், மானிப்பாயில் குடை பிடிக்கிறார்கள்." 

வியட்நாமியர்கள் வேற்றினத்தவர்கள் என்பதால் மட்டும் தமிழ் தேசியவாதிகள் அவ்வாறு கூறவில்லை. சொந்த தமிழினத்திற்குள் ஒடுக்கப்பட்ட மக்கள் போராடும் போதும் அப்படித் தான் கிண்டலடித்தார்கள். யாழ்ப்பாணத்தில் சங்கானை என்ற ஊரில் சாதியொழிப்பு போராட்டம் நடந்த காலத்தில், தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர் பேசிய வாசகம் குறிப்பிடத் தக்கது. "சங்கானை ஷாங்காய் ஆக மாறுகின்றது." என்று கம்யூனிச வெறுப்புக் கொண்ட சிங்களவர்களையும் கவரும் வண்ணம் பேசினார். 

மேற்குறிப்பிட்ட வரலாற்றுத் தகவல்கள், நவீன தலைமுறையை சேர்ந்த தமிழ் தேசியவாதிகளுக்கு தெரியாதது மட்டுமல்ல, தேவைப்படாததும் கூட. தற்போது ஐ.நா. நிபுணர்குழு அறிக்கையை சாட்டாக வைத்து, கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சார நெடி வீசும் கட்டுரையை எழுதியுள்ள யமுனா ராஜேந்திரனுக்கும் அது குறித்த அக்கறை இல்லை.

புலம்பெயர் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட தமிழர்களுக்கு, யமுனா ராஜேந்திரன் என்ற "தூய மார்க்சியவாதியை" நன்றாகத் தெரியும். இலக்கிய ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து செலவை பங்கிட்டு இலக்கியக் கூட்டம் நடத்துவார்கள். அதிலே கலந்து கொள்பவர்கள் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து தமது சொந்தக் காசில் பிரயாணம் செய்து வருவார்கள். ஜமுனா ராஜேந்திரன் மட்டும் பயணச் செலவுக்கு பணம் கொடுக்கா விட்டால் கலந்து கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிப்பார். 

விரல்விட்டு எண்ணக் கூடிய இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் மட்டுமே வாசிக்கப்படும் சிறு பத்திரிகைகள், கடினமான பொருளாதார நெருக்கடிக்குள் வெளிவரும். அவற்றில் பிரசுரமாகும் கட்டுரைகளுக்கும் ஜமுனா ராஜேந்திரன் கறாராக பணம் வாங்கி விடுவார். விளம்பரப் பணத்தில் வெளியாகும், இலாப நோக்கில் நடத்தப்படும் வணிக சஞ்சிகைகளில் எழுதுவதற்கு பணம் கேட்பதில் எந்த தவறும் இல்லை. கொடுக்க வேண்டியதும் அவர்களது கடமை தான். ஆனால், விளம்பரமே கூடாது என்ற பிடிவாதத்துடன் வெளிவரும் சிறு சஞ்சிகைகள் நஷ்டத்தில் நடத்தப்படுகின்றன. யமுனா ராஜேந்திரனுக்கு அது குறித்த சமூகப் பார்வை எதுவும் கிடையாது. காசு கொடுத்தால் கட்டுரை கிடைக்கும்.

கடந்த இரு தசாப்தங்களாக தன்னை தூய மார்க்சியராக அடையாளம் காட்டிக் கொள்ளும் யமுனா, தமிழ் இனவாத சேற்றுக்குள் நின்று கொண்டு, இடதுசாரிகள் மீது சேறள்ளிப் பூசுகிறார். அவர் குளோபல் தமிழ் நெட்வேர்க் இணையத்தளத்திற்கு எழுதிய, "இந்திய இலங்கை இடதுசாரிகளும், நிபுணர் குழு அறிக்கையும்" என்ற கட்டுரை கீற்று இணையத் தளத்திலும் மறுபிரசுரமானது. 

அந்தக் கட்டுரையில் அவர் என்ன சொல்ல வருகிறார்? "இந்திய, இலங்கை இடதுசாரிக் கட்சிகள் தமிழர் விரோத நிலைப்பாட்டில் இருந்து, ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை எதிர்க்கின்றன. இலங்கை, இந்திய அரசுகளுக்கு ஆதரவளிக்கும் போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகள் முதல், புரட்சிகர பாதையை கைவிடாத கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வரை, நிபுணர் குழு அறிக்கையை ஏகாதிபத்திய சதியாக பார்க்கின்றனர். அவர்கள் தமிழர்களுக்கு என்ன தீர்வை முன்வைக்கிறார்கள்?" இது போன்ற விமர்சனங்களுடன் எழுதப் பட்டுள்ளது. 

அது சரி, இந்தியாவில், இலங்கையில் இருக்கும் அத்தனை இடதுசாரிக் கட்சிகளையும் விமர்சிக்கும் யமுனா ராஜேந்திரன் முன் வைக்கும் தீர்வு என்ன? தமிழர்கள் அனைவரும் இனவாத சக்திகளுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு வழங்க வேண்டும், என்பதைத் தானே? தமிழகத்தில் வினவு போன்றவர்கள், "தமிழினவாதக் கட்சிகள்" என்று கூறுவதையிட்டு விசனப் படுகிறார். "தமிழினவாதக் கட்சிகள்" இனவாதம் பேசவில்லை என்று, யமுனா ராஜேந்திரன் எங்காவது நிரூபித்திருக்கிறா என்று தேடிப் பார்த்தேன். "ஐயோ, எங்களை இனவாதிகள் என்கிறார்களே!" என்ற ஆதங்கத்தை தவிர வேறெதையும் காணவில்லை.

ஒரு நாட்டில் இன முரண்பாடுகள் கூர்மையடையும் காலத்தில், "பெரும்பான்மையினர் விருப்பத்தை ஆதரிப்பது" என்ற சாட்டில், இடதுசாரிக் கட்சிகளும் "தேசிய நீரோட்டத்தில்" இழுபட்டுச் செல்லும். இந்தப் போக்கு, சிங்கள இடதுசாரிகள் மத்தியில் மட்டும் காணப்படும் குறைபாடல்ல. சிங்கள இனவாதிகள், பெரும்பான்மை சிங்கள மக்களை கவர்ந்த காலத்தில், மக்களின் ஆதரவை தக்க வைப்பதற்காக சிங்கள இடதுசாரிகளும் அவர்களைப் போல பேசக் கற்றுக் கொண்டனர். ஆனால், அது இறுதியில் சிங்கள இனவாதிகளுக்கு சாதகமாக அமைந்தது மட்டுமல்ல, இடதுசாரிக் கட்சிகள் பலவீனமடையவும் காரணமாக அமைந்தது. தமிழ் இடதுசாரிகள் அதிலிருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை. 

ஈழத்தில் தமிழ் இனவாதக் கருத்துக்கள் மேலோங்கியிருந்த கடந்த முப்பதாண்டு காலத்தில், ஈழத் தமிழ் இடதுசாரிகளில் பலர் அதற்குள் உள்வாங்கப் பட்டனர். தற்போது ஈழத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய இடதுசாரிகளே எஞ்சியுள்ளனர். தற்போது இதே மாதிரியான போக்கு தமிழகத்தில் காணப் படுகின்றது. தமிழ் தேசியத்தை ஏற்றுக் கொண்டு, அவர்களைப் போல பேசுவதால் மக்கள் ஆதரவை திரட்ட முடியும் என்று நம்பும் தமிழக இடதுசாரிகள் பெருகி வருகின்றனர். அவர்களை முற்று முழுதாக, இனவாதத்தினுள் இரண்டறக் கலக்க வைக்கும் இரசாயண மாற்றத்தை, யமுனாவின் கட்டுரை வேண்டி நிற்கின்றது.

சர்வதேச நிலைமைகளை அலசி ஆராய்ந்து, தமிழ் தேசியத்திற்கு சரியான வழியைக் காட்டும் வேலையை யமுனாவின் கட்டுரை செய்யவில்லை. ஏகாதிபத்திய நலன்களுக்கு சார்பாக நடந்து கொண்டால், தமிழ் தேசியம் தப்பிப் பிழைக்கும் என்ற முன் அனுமானத்துடன் எழுதப் பட்டுள்ளது. ஏகாதிபத்திய நாடொன்றினால் மேற்கொள்ளப்படும் "மனிதாபிமானத் தலையீடு", தமிழ் மக்களுக்கு நீதி வழங்கும், என்று நம்பச் சொல்கிறார். 

இதற்கு முன்னர், ஈராக்கில், ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற மனிதாபிமானத் தலையீடுகளை கண்டித்து கட்டுரைகள் எழுதித் தள்ளிய யமுனா ராஜேந்திரன் தான் இப்படி எழுதுகிறார். கடந்த அறுபதாண்டுகளாக, இஸ்ரேலை கண்டித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகமும், பாதுகாப்புச் சபையும் கொண்டு வந்த கண்டனத் தீர்மானங்கள், ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு நீதி வழங்கவில்லை. 

அதையும் யமுனா ராஜேந்திரன் தான், ஒரு காலத்தில் எழுதினார்! தற்போது, ஐ.நா. மீது ஒட்டு மொத்த தமிழர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும், அப்போது தான் ஒடுக்கப்பட்ட தமிழினத்திற்கு நீதி கிடைக்கும் என்று உடுக்கடிக்கிறார். "ஐ.நா. தீர்மானங்களால் பாலஸ்தீனர்களுக்கு கிடைக்காத நீதி, தமிழர்களுக்கு எப்படிக் கிடைக்கும்?" என்பதை யமுனா ராஜேந்திரன் விளக்க வேண்டும். ஏகாதிபத்தியத்தின் மனிதாபிமானத் தலையீட்டுக்குப் பின்னர், ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும், மக்கள் எந்தளவு சுபீட்சமாக வாழ்கின்றனர் என்பதையும் யமுனா விளக்குவாரா? ஒரு வேளை, அந்த மக்களுக்கு நேர்ந்த அவலம், தமிழ் மக்களுக்கும் நேரிட வேண்டும் என்பது யமுனாவின் உள்நோக்கமாக இருக்கலாம்.

மார்க்சியர்கள் மனித உரிமை மீறல்களை, இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசுக்கு ஆதரவாக நடந்து கொள்கின்றனர் என்பது, யமுனா முன் வைக்கும் குற்றச்சாட்டு. எப்போதும் தமக்கு சாதகமான பதில்களை பெற விரும்புவோர், உண்மைகளை ஆராய்வதில்லை. இலங்கையில் மனித உரிமைகள் நிறுவனங்களை ஸ்தாபித்ததும், அதனை அரசியல் நடவடிக்கையாக முன்னெடுத்ததும் மார்க்சியர்கள் தான். 

தென்னிலங்கையில் 1971 ஜேவிபி கிளர்ச்சி நடந்த காலத்தில் இருந்தே அந்த அமைப்புகள் இயங்கி வருகின்றன. வட இலங்கையில் சாதியொழிப்பு போராட்டம் நடந்த காலத்தில், முதல் தமிழ் மனித உரிமைகள் அமைப்பு தோற்றுவிக்கப் பட்டது. பரவலாக தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட எண்பதுகளில், அந்த வலைப்பின்னல் விரிவடைந்தது. சிங்கள இடதுசாரிகளும், தமிழ் இடதுசாரிகளும் ஆற்றிய பங்கை இங்கே குறிப்பிட இடம் போதாது.

புலம்பெயர்ந்த நாடுகளிலும், அந்தந்த நாடுகளின் இடதுசாரிகள் ஆதிக்கம் செலுத்திய அமைப்புகளால், சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் கண்டிக்கப் பட்டன. இந்தக் காலத்தில் தமிழ் தேசியவாதிகள் என்ன செய்து கொண்டிருந்தனர்? ஆரம்பத்தில் மனித உரிமை மீறல்கள் பிரச்சினை குறித்து அவர்கள் அதிக அக்கறை காட்டவில்லை. சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற அமைப்புகள், போரில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் குற்றம் சாட்டி வந்தன. 

அவற்றை மேற்கோள் காட்டும் சர்வதேச சமூகம், இலங்கை அரசுக்கு மட்டுமல்லாது, புலிகளுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி வந்தது. இதனால், மனித உரிமைகள் விவகாரம் என்றால் தமிழ் தேசியவாதிகளுக்கு வேப்பங்காயாக கசத்தது. பிற்காலத்தில், அமெரிக்காவில் உள்ள "லாபி குரூப்" பாணியில், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை ஆவணப் படுத்தி சமர்ப்பிக்கத் தொடங்கினார்கள். இந்த அறிக்கைகளை பெற்றுக் கொள்ளும் ஐ.நா. மனித உரிமை ஆணையகமும், மேற்கத்திய அரசுகளும், அந்த அமைப்புகளை ஒரு குறிப்பிட்ட அரசியல் அல்லது சமூகம் சார்ந்ததாக மட்டுமே கருதி வந்தன.

தமிழர்கள் மனதில், சர்வதேச சமூகம் பற்றிய மாயையை உருவாக்கும் வேலையை ஜமுனா கச்சிதமாக செய்திருக்கிறார். குவைத், ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா என்று எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப் படுகிறார்களோ, அங்கெல்லாம் "மனிதாபிமான ஏகாதிபத்தியம்" தலையிட்டு வருகின்றது. ஆகவே, அமெரிக்க ஏகாதிபத்தியம் தமிழர்களுக்கும் நன்மையே செய்யும் என்பது முன்னாள் மார்க்சியரான யமுனாவின் வாதம். இன்னலுற்ற ஈழத் தமிழர்களுக்கு நீதி வாங்கிக் கொடுக்கத் துடிக்கும் யமுனா ராஜேந்திரன், அதற்காக முன் வைக்கும் வாதங்களையும் அடுத்துப் பார்ப்போம்.

Part 2:"சிங்கள- தமிழ் தொழிலாளர் வேற்றுமை ஓங்குக!" - யமுனா

(தொடரும்)

3 comments:

pithan said...

யமுனா வின் இடது சாரிகள் பற்றிய பகுப்பே ஐயோக்கியதனமானது.

அதி

Rajaguru said...

யமுனா இப்போது குளேபல் தமிழ் நியுசுக்கு எழுதுவதும் அவர்களின் ரேடியோவில் பேசுவதும் சுளையாக காசு கறந்த பின்புதான் என்பதை பலர் கவனிக்க தவறிவிடுகின்றனர். குளேபல் தமிழ் நியுஸ் குருபரன் ஏசுப்பட்ட ஆளில்லை. அவரும் பெருந்தொகை பணத்தை எஜிஓக்களிடம் இருந்து வறுகிக்கொள்கிறார். லண்டன் வந்து ஒரு வேலை வெட்டிக்கு போகாமல் இணையம், ரேடியோ, அடுத்து ரிவி எனத் தூள்பறந்தும் குருபரனின் பகைப்புலமும் ஆய்வுக்குரியது.

Tsri1 said...

சரியாகவே விடயங்கள் கட்டுரையில் சொல்லபட்டுள்ளது.
-சிங்கள இனவாதிகள் பெரும்பான்மை சிங்கள மக்களை கவர்ந்த காலத்தில் மக்களின் ஆதரவை தக்க வைப்பதற்காக சிங்கள இடதுசாரிகளும் அவர்களைப் போல பேசக் கற்றுக் கொண்டனர்.-
இதையே தான் தமிழகத்தில் உள்ள வினவு (மகஇக)சீமான், வைகோ வழியை பின் பற்றி இனவாதமாக இலங்கை விடயத்தில் செயல்படுகிறது.