Saturday, December 25, 2010

இஸ்ரேலின் வாகரையும், இலங்கையின் காஸாவும்


["தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?"](பகுதி: ஆறு)

இஸ்ரேலின் காஸா பிரதேசமும், கிழக்கிலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வாகரை பிரதேசமும், பல ஒற்றுமைகளை கொண்டுள்ளன. இரண்டுமே ஒடுக்கமான நிலப்பரப்புகள். நீளத்தால் கூடியவை, அகலத்தால் குறுகியவை. இரண்டு பிரதேசங்களும் மூன்று பக்கமும் எதிரி தேசத்தால் சூழப்பட்டிருந்தன. ஒரு பக்கம் கடலைக் கொண்டிருந்தது. இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில், வாகரை ஒரு சிறிய நிலப்பரப்பு. ஆனால் செறிவான சனத்தொகையைக் கொண்டிருந்தது. மேலும் வன்னி பெரு நிலப்பரப்புடன் சேராமல் தனித்துக் காணப்பட்டது. காஸாவும் பாலஸ்தீன பெரு நிலப்பரப்பான மேற்குக்கரையுடன் சேராமல் தனித்துள்ளது. மிகவும் ஒடுக்கமான காஸா பிரதேசத்தினுள் அதிகளவு பாலஸ்தீனர்கள் வாழ்கின்றனர்.
வாகரையிலும் வாழ்ந்த தமிழர்களில் பலரும், காஸா வாழ் பாலஸ்தீனரில் பலரும் ஒரே மாதிரியான கடந்த காலத்தைக் கொண்டவர்கள். திருகோணமலை, மட்டக்களப்பு மாகாணங்களில் இடம்பெற்ற சிங்களக் குடியேற்றங்களால் பாதிக்கப்பட்டு வெளியேறிய மக்கள் வாகரையில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தனர். ஆயுதமேந்திய சிங்கள ஊர்காவல் படைகள் அந்த தமிழர்களை இருப்பிடங்களை விட்டு விரட்டினார்கள். காஸாவில் வாழும் பாலஸ்தீனர்கள் ஹைபா (வட இஸ்ரேல்), பெர்ஷேபா, அஷ்கெலோன் (தென் இஸ்ரேல்) ஆகிய நகரங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள். 1948 ம் ஆண்டின் பின்னர், அந்த நகரங்களில் யூத குடியேற்றங்கள் அதிகரித்தன. யூத ஆயுதக் குழுக்கள், அங்கு வாழ்ந்த பாலஸ்தீனர்களை காஸா வரை அடித்து விரட்டினர். தமிழர்களினதும், பாலஸ்தீனர்களினதும் எதிர்ப்பு நடவடிக்கையும் ஒரே மாதிரியாக இருந்தது. வாகரையில் நிலை கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் தாக்குதலால், ஒரு காலத்தில் தமிழ்க் கிராமங்களாக இருந்த சிங்களக் கிராமங்கள் பாதிக்கப்பட்டன. காஸாவில் நிலை கொண்டிருந்த ஹமாசின் ஷெல் தாக்குதலால் ஒரு காலத்தில் அரபு கிராமங்களாக இருந்த யூத கிராமங்கள் பாதிக்கப்பட்டன. சர்வதேச சமூகம் இரண்டையும் பயங்கரவாதமாக பார்த்தது.

இலங்கையில் சிங்களக் குடியேற்றங்கள், மகாவலி ஆற்றை திசைதிருப்பி அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழே இடம்பெற்றது. அதை சாட்டாக வைத்து கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம், பிரிட்டிஷ் கடற்படை முகாம் திருகோணமலையில் இருந்தது. இலங்கை சுதந்திரமடைந்த போதிலும், நாட்டின் தலைவியாக பிரிட்டிஷ் மகாராணி விளங்கினார். 1972 ம் ஆண்டு, குடியரசான பின்னரே பிரிட்டனுடனான தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப் பட்டன. ஆகவே இலங்கை சுதந்திரமடைந்த சில வருடங்களிலேயே இடம்பெற்ற சிங்களக் குடியேற்றங்கள் பிரிட்டனின் கண்ணுக்கு முன்னால் தான் நடந்து கொண்டிருந்தது. யூத குடியேற்றங்கள் இடம்பெற்ற காலங்களில், அன்றைய பாலஸ்தீனா பிரிட்டனின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. பிரிட்டன் யூத குடியேற்றங்களை கண்டும் காணாமல் இருந்தது. இஸ்ரேலியர்கள் "சுதந்திரத்திற்கான போர்" புரிந்த காலத்தில், பிரிட்டிஷ் ஆயுதங்களைக் கொண்ட யூத இராணுவம் பலமாக இருந்தது. 1948 ல், பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டு விலகிய பின்னர், இராணுவ பலத்தைக் கொண்டிருந்த யூதர்கள் இஸ்ரேலை பொறுப்பேற்றனர்.

அதே வருடம் பிரிட்டன் இலங்கையை விட்டு வெளியேறியது. பிரிட்டன் அதற்கு முன்னர், சிங்களவர்களை மட்டுமே இராணுவமயமாக்கியது. சில பரங்கி அதிகாரிகளும், மிகக் குறைந்தளவு தமிழர்களும் அன்று சிறிலங்கா இராணுவத்தில் இருந்தனர்.
எண்ணிக்கையில் குறைந்த சிறிய இஸ்ரேலிய இராணுவம், பெருந்திரளான அரபு படைகளுடன் மோதி வென்றதாக பரப்புரை செய்யப்படுகின்றது. அன்றைய நிலையை தெரிந்த ஒருவருக்கு அந்தக் கதையை நம்புவது கடினமாக இருக்கும். இஸ்ரேலை சூழ இருந்த அரபு நாடுகள் அன்று இராணுவ பலத்துடன் இருக்கவில்லை. லெபனான், சிரியா ஆகியன 1946 ம் ஆண்டு பிரான்சிடம் இருந்து விடுதலையடைந்தன. ஜோர்டான் பிரிட்டனின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. எகிப்தில் மன்னர் பிரிட்டிஷாரின் தலையாட்டும் பொம்மையாக இருந்தார். அன்றைய போரில் ஈடுபட்ட படைகளின் விபரம் பின்வருமாறு. யூத ஆயுதக் குழுக்கள் கிஷ், கிம், இர்குன், பல்மாச், மொத்தம்: 97000. அரபு படையணிகள், மொத்தம்: 20000. இவை அமெரிக்க அரசு எடுத்திருந்த கணக்கெடுப்பு. (From Haven to Conquest , by W .Khalidi )

இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் சிங்களப் பகுதிகளான கொழும்பு, காலி போன்ற நகரங்களில் பெருமளவு தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். சிங்களவர்கள் திட்டமிட்ட இனப்படுகொலை மூலம், தமிழர்களை இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்குள் சென்று முடங்க வைத்தார்கள். இனக்கலவரங்களின் பின்னர், தமிழர்களின் வாழிடங்கள்
சிங்களவர் வசமாகின. இஸ்ரேலிலும் அதே போன்ற காட்சிகள் அரங்கேறின. தலைநகரான கொழும்பில் நடந்த படுகொலைகள் அதிகமாக உலகின் கவனத்தை பெற்றன. சிங்களப் பேரினவாத வெறியை உலகம் அறிந்து கொண்டது. அதே போல ஜெருசலேம் அருகில் நடந்த டெய்ர் யாசின் படுகொலைகள், யூத பேரினவாத வெறிக்கு எடுத்துக்காட்டு. ஜெருசலேம் அருகில் யூத குடியிருப்புகளால் சூழப் பட்டிருந்த, டெய்ர் யாசின் என்ற ஊரில் 610 அரேபியர்கள் வாழ்ந்தனர். கிட்டத்தட்ட 50 பேர் மட்டுமே அங்கிருந்து உயிரோடு தப்பினார்கள். மிகுதி ஊர்வாசிகள் அனைவரும் இர்குன் என்ற யூத ஆயுதக் குழுவால் படுகொலை செய்யப்பட்டனர். சியோனிஸ்ட்கள் அந்த சம்பவத்தை மறைக்கவில்லை. படுகொலைச் செய்தியை உளவியல் யுத்தத்திற்கு சார்பாக பயன்படுத்தினார்கள்.(Deir Yassin Massacre) அன்று இனப்படுகொலையை நடத்திய இர்குன் ஆயுதக் குழுவின் தலைவர் மெனகம் பெகின் பின்னர் இஸ்ரேலின் பிரதமராக தெரிவானார். "டெய்ர் யாசின் படுகொலை இடம்பெற்றிரா விட்டால், இஸ்ரேல் தோன்றியிருக்காது." இவ்வாறு தனது சுயசரிதையில் எழுதியுள்ளார் மெனகம் பெகின்.

இஸ்ரேலின் உருவாக்கத்தின் பின்னர், யார் இஸ்ரேலியப் பிரஜை என்பதை வரையறை செய்தார்கள். உலகில் உள்ள யூதர்களுக்கு எல்லாம் இஸ்ரேல் தாயகம் என்று பிரகடனம் செய்தார்கள். அதே காலப்பகுதியில், சிறிலங்கா சிங்கள பௌத்த மக்களின் தாயகம் என்று பிரகடனம் செய்யப்பட்டது. இஸ்ரேலில் பாலஸ்தீனர்களுக்கு தனியான சட்டம் இயற்றினார்கள். அவர்கள் இஸ்ரேலிய குடியுரிமை பெற்றிருக்கலாம், ஆனால் இஸ்ரேலிய தேசியத்தைக் கொண்டிருக்க முடியாது. அதற்கும் பல நிபந்தனைகள் உள்ளன:
- 1948 ம் ஆண்டுக்கு முன்னர், (பிரிட்டிஷ்) பாலஸ்தீன பிரஜையாக இருந்தவர்.
- குடிசன பதிவுப் புத்தகத்தில் பெயரிருக்க வேண்டும்.
- இஸ்ரேல் சுதந்திரம் அடைந்த காலத்தில், குறிப்பிட்ட இடத்தில் நீண்ட காலம் வசித்திருக்க வேண்டும்.

யூத ஆயுதக்குழுக்களின் வன்முறைக்கு இலக்காகாத சில அரபுக் கிராமங்களை சேர்ந்த பாலஸ்தீனர்கள் மட்டுமே மேற்படி நிபந்தனைகளை பூர்த்தி செய்திருந்தனர். அதாவது கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பாலஸ்தீனர்களுக்கு மட்டுமே இஸ்ரேலிய குடியுரிமை கிடைத்தது. இடம்பெயர்ந்தவர்கள், அகதிகளாக வெளியேறியோர் அந்த சட்டத்திற்குள் அடங்க மாட்டார்கள். மேற்குறிப்பிட்ட பிரஜாவுரிமைச் சட்டம் மேற்குக்கரை, காஸா ஆகிய பகுதிகளில் வாழ்ந்த பாலஸ்தீன மக்களை கணக்கெடுக்கவில்லை. அவர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர். சிறிலங்காவின் பேரினவாத அரசும், சுதந்திரத்தின் பின்னர் இஸ்ரேலிய பாணி குடியுரிமைச் சட்டத்தை அமுல்படுத்தியது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த தமிழர்கள் மட்டுமே புதிய குடியுரிமைச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப் பட்டனர். இந்தியாவில் இருந்து பெருந்தோட்டத் தொழிலாளிகளாக கொண்டு வரப்பட்ட, மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப் படவில்லை. அவர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டார்கள்.

சிறிலங்காவும், இஸ்ரேலும் ஒரே காலத்தில் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றன. சிறிலங்காவில் பௌத்த மதமும், இஸ்ரேலில் யூத மதமும் அரசியல் நிர்ணயச் சட்டத்தில் முக்கிய இடம் பிடித்தன. சிறிலங்காவின் சிங்கள பேரினவாதம், தனக்கடுத்த சிறுபான்மை இனமான தமிழர்களை ஒடுக்கி வருகின்றது. அதற்காக முஸ்லிம்கள், பறங்கியர், மலேய் போன்ற பிற சிறுபான்மை இனங்களுக்கு சலுகைகள் கொடுத்து ஆதரவை பெற்றுக் கொண்டது. இஸ்ரேலிலும் அதே கதை தான். யூதர்களுக்கு அடுத்த பெரிய சிறுபான்மை இனமான பாலஸ்தீனர்களை ஒடுக்குவதே இஸ்ரேலிய பேரினவாதத்தின் கொள்கை. அதற்காக டுரூசியர்கள், பெதூயின்கள் போன்ற பிற சிறுபான்மை இனங்களுக்கு சலுகைகளை வழங்கி, ஆதரவை வாங்கியது. தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் சிறிலங்கா அரசுக்கு ஆதரவானவர்களாக சந்தேகின்றனர். பாலஸ்தீனர்கள், பெதூயின்கள் அனைவரும் இஸ்ரேலிய அரசுக்கு ஆதரவானவர்களாக சந்தேகிக்கின்றனர். சிறுபான்மை இனங்களை பிரித்து வைத்து, சிறிலங்காவும், இஸ்ரேலும் தமது பேரினவாத நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கின்றன.


(தொடரும்)

1 comment:

sivakumar said...

நல்ல ஒப்பீடு. ஆங்கிலேயர்கள் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன்தான் (எதிர்காலத்தில் போர் ஏற்படுவதற்கு தோதாக) திறமையான ஏற்பாடுகளுடன் எல்லா குடியேற்ற நாடுகளுக்கும் "விடுதலை" தந்திருக்கிறார்கள் போல.