Sunday, November 02, 2008

ஆங்கில மோகமும் தமிழின் தாகமும்

"ஆங்கிலம் பேசுவோர் அறிவாளிகள்! தமிழ் பேசுவோர் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள்!!” இவ்வாறு கூறிக்கொள்ளும், அல்லது நம்பிக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கப் பிரிவொன்று இன்றும் எம்மத்தியில் இருக்கின்றது. மக்களுக்குள் பல குழுக்கள் தத்தம் உலகங்களின் உள்ளே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சில நேரம், இப்படியான வெவ்வேறு உலகங்களுக்குள் நுளையக்கிடைக்கும் சந்தர்ப்பங்களில், கிடைக்கும் அனுபவங்கள் வேடிக்கையானவை. அந்த விசித்திர அனுபவங்களை அலசுவதன் மூலம் அவர்களின் உலகையும், அதனூடாக எம்மையும் புரிந்து கொள்ள முடியும்.

இலங்கை, 500 வருட காலமாக அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்ததன் விளைவு. இன்று இலங்கையின் மேல்தட்டு வர்க்கத்தினர் மட்டுமல்ல, அடித்தட்டு வர்க்கத்தினர் கூட காலனிய மனவுலகில் வாழ்கின்றனர். அல்லது அப்படி வளர்க்கப்படுகின்றனர். பண்டைய காலங்களில் எமது மூதாதையர் எம்மைப்போல சிந்திக்கவில்லை. நான் நாகரீக வளர்ச்சியை இங்கே குறிப்பிடவில்லை. தன்னிலையுணர்வை, சமூகத்தில் தனது பாத்திரம் பற்றிய வரையறை பற்றியே இங்கே பேசப்படுகின்றது.

தமிழர், சிங்களவர் என்ற மொழியை அடிப்படையாக கொண்ட தேசியம் உருவான 20 ம் நூற்றாண்டு வரையில், மக்கள் தமது குலத்தை, சாதியை, பிரதேசத்தை, அதற்கும் மேலால் மதத்தை கொண்டு மட்டுமே தம்மை அடையாளப்படுத்தினர். தாம் என்ன மொழி பேசுகிறோம் என்பது குறித்து யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. அதனால் வாழும் இடத்தை பொறுத்து தமிழர் சிங்களவராவதும், சிங்களவர் தமிழராவதும் தாராளமாகவே அனுமதிக்கப்பட்டிருந்த காலங்கள் அவை.

ஆங்கிலேயருக்கு முன்னர் இலங்கையை ஆண்ட போர்த்துகேயரும், டச்சுக் காரர்களும், அப்போது தமது தாயகத்தில் இருந்ததைப் போல, நிலப்பிரபுத்துவ ஆட்சி முறையையே பின்பற்றியதால், பெருமளவில் குடியேறியிருந்த அவர்களின் இனத்தை சேர்ந்த, அல்லது அவர்களுக்கு விசுவாசமான கலப்பின பறங்கியர் மட்டுமே ஆட்சியதிகாரத்தை நிர்வகிப்பவர்களாக இருந்ததால், உள்நாட்டு மக்களின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் மிகக் குறைவே எனலாம். ஆனால் ஆங்கிலேயர் வந்த காலத்தில், உலகில் முதலாளித்துவ பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருந்தது. அதற்கு ஒரு மத்திய தர வர்க்கம் தேவைப்பட்டது.

ஒரு சாம்ராஜ்யம் நிலைத்து நிற்க வேண்டுமானால், உள்ளூரில் ஒரு அடிவருடிக் கும்பல் உருவாக வேண்டும். அந்தக் குழுவை சேர்ந்த பிள்ளைகளை சாம்ராஜ்ய தலைநகருக்கு கல்வி கற்க அனுப்பி வைக்க வேண்டும். ஏகாதிபத்திய கல்வியால் மூளைச் சலவை செய்யப்பட்டு ஊர்திரும்பும் புதிய தலைமுறை, சாம்ராஜ்யத்தின் உள்ளூர் முகவர்களாக ஆட்சியை நிர்வகிப்பார்கள்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் மாபெரும் சாம்ராஜ்யங்களை கட்டி ஆண்ட எகிப்தியர்களும், ரோமர்களும் அறிமுகப்படுத்திய “ஒரு சாம்ராஜ்யத்தை நிர்வகிப்பது எப்படி?” என்ற பாடத்தை ஆங்கிலேயர்கள் கச்சிதமாக கடைப்பிடித்தனர். உள்நாட்டு நிலச்சுவாந்தர்கள் பலர் தமது பிள்ளைகளை லண்டனுக்கு அனுப்பி படிக்க வைக்குமளவு பணவசதி படைத்தவர்களாக இருந்தனர். ஆங்கிலேயர் ஆட்சியில் கிறிஸ்தவர்களாக இருந்தால் சலுகைகள் கிடைத்தன. ஆட்சியாளரின் ஆங்கிலேய கல்வியை கற்றவர்கள் அரச நிர்வாகத்தில் பங்குபற்றுவது எளிதாக இருந்தது.

இன்று ஆங்கில மோகம் கொண்ட தலைமுறைக்கு மேற்குறிப்பிட்ட சரித்திர சான்றுகள் எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை. அவர்களைப் பொறுத்த வரை சரித்திரம் என்ற ஒன்றே கிடையாது. உலகம் இப்போது உள்ளதைப்போல, அப்போது இருந்தது, அது எப்போதும் இப்படித்தான் இருக்கும். ஆங்கிலம் உலக மொழியானது ஒரு தற்செயல் நிகழ்ச்சி என்று வாதிப்பார்கள், அல்லது மதப்பற்றாளர்கள் என்றால் அதுவே கடவுளின் விருப்பம் என்பர்.

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த, உயர்கல்வி கற்று பட்டம் பெற்றோரும் கூட, "ஆங்கிலமே உலகம் முழுவதும் பேசப்படுவதாக" நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களது உலகமானது, கடல் கடந்த தொழில் வாய்ப்பை எதிர்நோக்கும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அப்பால், எதுவுமே இல்லை. தப்பித்தவறி பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குள் புகுந்து விட்டால், "இந்த மக்கள் ஏன் ஆங்கிலம் பேசுகிறார்கள் இல்லை" என்று நொந்து கொள்வார்கள். அதே நேரம், "ஆங்கிலேயர்கள், தமது தாய்நாட்டில், வேறொரு தொடர்பாடல் மொழி பேச மறுப்பதேன்?" என்ற கேள்வியை கேட்க மாட்டார்கள். சுருக்கமாக சொன்னால், வான் கோழிகளான  “கறுப்பு-ஆங்கிலேயர்கள்”,  மயில்களான “வெள்ளை- ஆங்கிலேயரை” பார்த்து, அது போன்று ஆடுகின்றனர்.

நடுத்தர வர்க்க மக்களில் பலருக்கு தம்மைப் போன்றோர் மட்டுமே உலகில் இருப்பதாக எண்ணம் இருக்கும். அதற்கு காரணம் கலாச்சாரம் அவர்கள் சார்ந்ததாக இருப்பது தான். திரைப்பட கதா மாந்தர்கள் நடுத்தர வர்க்க பிம்பமாக காட்சிதருவர். இலக்கியங்கள் யாவும் எழுதப்படிக்கத் தெரிந்த பிரிவையே சந்தையாக கொண்டிருக்கும். பல படி முறைப்பட்ட சமூகத்தில், அந்தஸ்து என்பது பொருளாதாரம் சார்ந்ததாக இருக்கும்.

முதலாளித்துவ கல்விமுறை தமக்கு சேவகம் செய்பவர்களை உருவாகுவதை நோக்கமாக கொண்டது. அதிலும் திறமை கொண்டவர்க்கு அள்ளி வழங்கும் தன்மை கொண்டது. இதனால் ஒப்பீட்டளவில் உழைக்கும் வர்க்கத்தை விட மேல்நிலையில் இருக்கும் வசதி கருதி, அதை அடையும் வழி கருதி, கல்வியை ஒரு ஊக்கியாக நடுத்தரவர்க்கம் கண்டு கொண்டதில் வியப்பில்லை. அதிலும் ஆங்கில வழிக் கல்விக்கு என்று ஒரு சிறப்பம்சம் உண்டு. சர்வதேச மூலதனத்திற்கு சேவகம் செய்ய ஆங்கிலம் கற்றவர்கள் அவசியம். இன்று அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மூலதனம் குவிந்து கிடப்பதால், ஆங்கில வழிக் கல்வியின் மதிப்பு அதிகம்.

இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்னரும் ஆங்கிலமே பாடசாலைகளில் போதனா மொழியாக இருந்தது. ஐம்பதுகளில் தேசியவாத சுதந்திரக்கட்சியை ஸ்தாபித்து பிரதமரான பண்டாரநாயக்க வந்த பின்னரே மாபெரும் சமூக-கலாச்சார மாற்றம் ஏற்பட்டது. சிங்களப்பகுதிகளில் சிங்களமும், தமிழ் பகுதிகளில் தமிழும் போதனாமொழியாகியது.

பண்டரநாயக்கவை ஒரு சிங்கள இனவாதியாக பார்க்கும் தமிழர்கள், தமது பிள்ளைகள் தமிழ் கற்க காரணம் யார் என்று சொல்வதில்லை. அதேநேரம் அவரை ஒரு முற்போக்குவாதியாக பார்க்கும் சிங்களவர்கள் இன முரண்பாடுகளின் தோற்றத்தை கண்டுகொள்வதில்லை. அதேநேரம் ஏகாதிபத்தியமும் தனது நலன்களை பற்றி மட்டுமே அக்கறைப்பட்டது. கல்வியை தேசிய மொழியாக்குவதும், பொருளாதாரத்தை பொருளாதாரத்தை தேசியமயமாக்குவதும், ஏகாதிபத்திய எதிர்ப்பாக புரிந்து கொண்ட சி.ஐ.ஏ. ஒரு புத்த பிக்குவிடம் துப்பாக்கியை கொடுத்து கொலை செய்ய வைத்தது.

பண்டாரநாயக்க காலத்தில் ஏற்பட்ட திருப்புமுனையின் பின்னர் தான், ஆங்கிலம் பேசுவோர் “சர்வதேசவாதிகள்”(ஏகாதிபத்திய விசுவாசிகள் என்பதன் நாகரீக வடிவம்) ஆனார்கள். அதேநேரம் தமிழ் பேசுவோர் “இனவாதிகள்” (ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என்பதன் புராதன வடிவம்) என வகைப்படுத்தப்பட்டனர். சிங்களவரும், தமிழரும் ஒருவரை ஒருவர் இனவாதிகள் என்று குற்றம் சாட்டுவது வேறு விடயம். நான் இங்கே ஏகாதிபத்திய மேற்பார்வை பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.

இப்போது கூட உள்நாட்டு அரசியல்வாதிகளைப் பரிகசித்துக் கொண்டிருக்கும் இந்த “கறுப்பு-ஆங்கிலேயர்கள்”, ஐரோப்பிய வெள்ளையின “தேவர்களின் வருகைக்காக” காத்திருக்கின்றனர். உலகமயமாக்கலும், மறுகாலனியாதிக்க அலையும், அவர்களுக்கு பொன்னான வாய்ப்பை வழங்கியது. புதிது புதிதாக கடை விரித்த பன்னாட்டு கம்பனிகளில் தமது ஆங்கிலப் புலமையை காட்டி ஒட்டிக் கொண்டனர். சர்வதேச மூலதனம் அள்ளி வழங்கிய, பணத்தை கண்டு மயங்கினர். இதனால் அவர்களது ஆங்கில மோகமும், அது தந்த செருக்கும் கூடியதே தவிரக் குறையவில்லை. அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவும், அதைத் தொடர்ந்த பொருளாதார தேக்கமும், கறுப்பு-ஆங்கிலேயரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.

சர்வதேச மூலதனமானது, உலகின் ஒவ்வொரு சிறு பகுதியையும் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் உள்ளூர் முதலாளிகளை வளர்த்து விடுகின்றது. உள்ளூர் முதலாளிகளைப் பொறுத்தவரை, கடல்கடந்த கனவுகள் இருந்தபோதும், முதலில் உள்ளூரிலேயே வியாபாரம் செய்ய வேண்டியுள்ளது. அதனால் தவிர்க்கவியலாமல் உள்ளூர் மக்கள் பேசும் தமிழ் மொழி வளர்ச்சியடைகின்றது.

ஒரு சரக்கின் விற்பனை மொழியாக ஆங்கிலத்தை பயன்படுத்த முடியாது. அது நகரம் தவிர்ந்த நாட்டுப்புறங்களில் பலருக்குப் புரியாது. அதனால் தான் மூலதனத்தின் வளர்ச்சியினால், தமிழ் மொழியின் வளர்ச்சி(பிற மொழிகளைப் போன்றே) தவிர்க்க முடியாத ஒன்று. இது உலகமயமாக்கலின் நல்ல விளைவுகளில் ஒன்று.

இருப்பினும் ஊடகங்களின் பெருக்கமானது தமிழ் மொழி வளர்ச்சிக்கு துணை போனாலும், அதன் மூலமாக ஆங்கிலம் மறைமுகமாக திணிக்கப்படுகின்றது. தொலைக்காட்சியில் பேட்டியளிக்கும், திரையுலக பிரபலங்கள் போன்றோர், தமிழுடன் ஆங்கிலத்தையும் சமவிகிதத்தில் கலந்து பேசுவதை, இந்த தொலைக்காட்சிகள் அனுமதிக்கின்றன. மேலை நாடுகளில் அப்படி ஒருவர் பேட்டியளித்தால், (உதாரணத்திற்கு பிரெஞ்சு டி.வி.யில் ஒருவர் பிரெஞ்சும் ஆங்கிலமும் கலந்து பேசினால்) அதனை உப தலைப்புகளுடன் தான் ஒளிபரப்புவார்கள். அதே போன்று எமது தமிழ்த் தொலைக்காட்சிகள் செய்யாத காரணம் என்ன? தமிழ் மட்டுமே தெரிந்த பாமரனும் ஆங்கிலம் கற்பதற்கான ஏக்கத்தை உருவாக்குவதை தவிர வேறு நோக்கம் இருப்பதாக தெரியவில்லை.

நவீன தமிழின் நிலைமையை, நவீன அரபு மொழியுடன் ஒப்பிட்டு பார்ப்போம். அரபு மொழி, தமிழ் மொழி போல இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த செம்மொழி தான். நவீன அரபு மொழியானது நிறைய ஆங்கில அல்லது பிரெஞ்சு சொற்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அனைத்து அரபு நாடுகளிலும் காலனித்துவ ஆட்சியாளர் அறிமுகப்படுத்திய கல்விமுறையே இன்றுவரையில் போதிக்கப்படுகின்றது. ஆனால் அவ்வவ் நாடுகளின் அரசியல்- பொருளாதார ஆதிக்கத்திற்கு உட்பட்டு, கல்வியின் போதனா மொழி மாறுபடுகின்றது. இரண்டு மாறுபட்ட உதாரணங்களைப் பார்ப்போம்.

மொரோக்கோவில் உயர்கல்வி முழுக்க முழுக்க பிரெஞ்சு மொழியில் போதிக்கப்படுகின்றது. இதனால் சிறுவயதில் இருந்தே பிரெஞ்சு மொழி வழிக் கல்வியை பெற்றுவரும் நடுத்தர வர்க்க மாணவர்கள் இலகுவாக உயர்கல்வி கற்க வாய்ப்பாகின்றது. அதற்கு மாறாக நாட்டுப்புறங்களில் வாழும் உழைக்கும் வர்க்க பிள்ளைகள், தாய்மொழியான அரபு மொழியில் கல்வி கற்பதால், உயர்கல்விக்கான வாய்ப்பு தடைப்படுகின்றது.

இத்தகைய கல்விமுறை நாட்டில் இரு வர்க்கங்களினதும் முரண்பாடுகளை கூர்மைப்படுத்துகின்றது. பிரெஞ்சு வழிக் கல்வி கற்ற “புத்திசாலிகள்” வசதிபடைத்தோராயும், அரபு வழிக் கல்வி கற்ற “முட்டாள்கள்” வசதியற்ற ஏழைகளாகவும், சமூகத்தில் பார்க்கப்படுவதற்கு பாரபட்சமான கல்விமுறை ஏதுவாகின்றது. அதேநேரம் அசாத் தலைமையில் சோஷலிச மாற்றங்கள் ஏற்பட்ட சிரியாவில், அனைத்துப் பாடங்களும், மருத்துவம் உட்பட, அரபு மொழியிலேயே போதிக்கப்படுகின்றன. இதனால் அனைவரும் கல்விகற்கும் வாய்ப்பு ஏற்பட்டதால், அரபுலகில் அதிகம் படித்தவர்களைக் கொண்ட நாடாக சிரியா திகழ்கின்றது.

நம்மவர்கள் அதிகம் மெச்சிக் கொள்ளும் ஐரோப்பிய உதாரணங்களைப் பார்ப்போம். இங்கிலாந்தில் ஒரு காலத்தில் அரச குடும்பத்தினரும், பிரபுக்களும் பிரெஞ்சில் கல்வி கற்று பிரெஞ்சு மொழியிலேயே தமக்குள் உரையாடினர். ரஷ்யாவிலும் அது தான் நிலைமையாக இருந்தது. ஆளும் வர்க்கத்தால் கீழ்த்தரமாக பார்க்கப்பட்ட ஆங்கில, ரஷ்ய மொழிகள் கல்வியறிவற்ற சாதாரண குடிமக்களால் மட்டுமே பேசப்பட்டு வந்தது. என்றைக்கு இங்கிலாந்தில் ஆங்கில மொழியும், ரஷ்யாவில் ரஷ்ய மொழியும், போதனா மொழியாகியதோ, அப்போதிருந்து தான் கல்வி கற்றோர் எண்ணிக்கை பெருகியது. இன்று அந்நாடுகளில் மொத்த சனத்தொகையும் எழுத, வாசிக்க தெரிந்து வைத்திருக்கின்றது என்றால், அதற்கு தாய்மொழிக் கல்வியே காரணம்.

நமது நாடுகளில், அந்நிய மொழியை புறக்கணித்து, தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கப் படாததன் காரணம், வெளிநாட்டு மூலதனத்தின் கவர்ச்சிக்கு மயங்கும் மக்களும், நவகாலனிய முகவர்களாக செயற்படும் அரசியல்வாதிகளும் தான். இரண்டாவது வகையினர் அந்நிய கடனுக்கு அடிமையானது கவனிக்கத்தக்கது. தமிழ் நாடு என்று மொழிவாரி மாநில அதிகாரம் கொண்டிருந்தாலும், உலகவங்கி, ஐ.எம்.எப்., போன்றவை தரும் கடனுக்கு கட்டுப்படுவதால், தனியார்மயம் என்ற பதாகையின் கீழ் முளைக்கும் ஆங்கிலவழிப் பாடசாலைகளை தடுக்க முடியாத நிலை. இதுவே நாளைக்கு தமிழ் ஈழம் வந்தாலும் ஏற்படப்போகின்றது.

ஒருவகையில் உள்ளூர் ஆட்சியாளர்கள் ஊழல் செய்வது கூட, காலனிய எஜமானர்களுக்கும், உலகவங்கிக்கும் விரும்பத்தக்க பலன்களையே தருகின்றது. ஏனெனில் பொதுமக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி, தாய்மொழிக் கல்விக்கு செலவிடவும், அதேநேரம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு சந்தையை உருவாக்கவும் முடியும். மேற்குலக நாடுகள் எல்லாம் அவ்வாறு தான் அபிவிருத்தியடைந்தன. மேற்குலக சீரழிவுகளை இறக்குமதி செய்பவர்கள், அந்நாடுகளில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை புறக்கணிக்கின்றனர். அரசியல்வாதிகள் எவ்வழியோ, குடிமக்களும் அவ்வழியே மேற்குலக மோகத்திற்குள் மயங்கிக் கிடக்கின்றனர்.


தமிழ் செம்மொழி என்று பழம் பெருமை பேசுவதாலோ, தமிழ்க் கலாச்சாரத்தை பாதுகாப்பதாலோ, அல்லது தமிழ் தேசியம் கோலோச்சுவதாலோ, பாரிய மாற்றங்களை கொண்டுவர முடியாது. இங்கிலாந்து கண்ட தொழிற்புரட்சி, ரஷ்யா கண்ட போல்ஷெவிக் புரட்சி, சிரியா கண்ட (முற்போக்கு) இராணுவப்புரட்சி; இவையெல்லாம் பொருளாதார சுதந்திரத்தை முதலில் உறுதிப்படுத்திக் கொண்டதால் தான் தமது தாய்மொழியை அரியணையில் அமர்த்த முடிந்தது.

வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்வோம்.

16 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நல்ல கட்டுரை. உங்களைப் போல் தொடர்ந்து தரமாக எழுதுவோர் மிகக் குறைவு. மகிழ்ச்சி.

Kalaiyarasan said...

மனமார்ந்த நன்றிகள் பல, ரவி.

என்னை எழுதத் தூண்டுவதே உங்களைப் போன்றவர்களது ஆதரவு தான்.

Anonymous said...

தமிழ்நாட்டில் அரசு தமிழ்வழியில் கற்பிக்க பள்ளிகள் திறக்கக்கூடாதென்று உலக வங்கியும் தடுக்கவில்லை, வேறு யாரும் தடுக்கவில்லை.
உங்கள் கட்டுரைகள் இடதுசாரி
முட்டாள்த்தனத்தின்,வெறுப்பின்
வெளிப்பாடுகளாக உள்ளன.
ஜிகாதிகளுக்கு ஆதரவாக
நீங்கள் எழுதினாலும் அதில்
வியப்பதற்கொன்றுமில்லை.

Kalaiyarasan said...

அனாமதேய நண்பரே, இலங்கையில் தமிழ் அரச கரும மொழியாக இருப்பதைக் காட்டி, அங்கே தமிழருக்கு என்ன பிரச்சினை என்று கேட்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அவ்வளவு முட்டாள்தனமானது உங்களது அப்பாவித்தனமான கருத்து. தமிழ் நாட்டில் தமிழ் மொழி வழி பாடசாலைகள் இருப்பது உண்மை தான். அதை யாரும் தடுக்கவில்லை என்பதும் உண்மை தான். ஆனால் அவை எவ்வளவு தூரம் அரசால், சமூகத்தால் புறக்கணிக்கப்படுகின்றன என்பதை அங்கே படிப்பவர்களை கேட்டால் புரியும். அவை நன்றாக இயங்கினால், எதற்காக பெரும்பான்மை மக்கள் ஆங்கிலத்தில் போதிக்கும் தனியார் கல்விநிலையங்களை நாடிப் போகின்றனர்?

Anonymous said...

தரமான பள்ளிகளை அரசு நடத்தினாலும் அரசுப் பள்ளி என்பதால்
பிள்ளைகளை அனுப்பமாட்டோம்
என்று பெற்றோர் எங்காவது கூறினார்களா?.தமிழ்நாட்டில் அரசு நடத்தும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிப்போர் எண்ணிக்கைதான் அதிகம். இதை மொழிப் பிரச்சினையாக நோக்காமல் கல்விப் பிரச்சினையாக நோக்க வேண்டும்.

Kalaiyarasan said...

//தரமான பள்ளிகளை அரசு நடத்தினாலும் அரசுப் பள்ளி என்பதால்
பிள்ளைகளை அனுப்பமாட்டோம்
என்று பெற்றோர் எங்காவது கூறினார்களா?//

இங்கே மறைந்திருக்கும் பொருளாதாரக் காரணியை பார்க்க மறுக்கின்றீர்கள். உங்கள் நண்பர்கள், உறவினர்கள் எத்தனை பேர் இங்கிலாந்து, அமெரிக்கா என்று ஓடுகிறார்கள்? எத்தனை பேர் ஐ.டி. துறையில் பணியாற்றுகின்றனர்? அல்லது அதற்காக படித்துக் கொண்டிருக்கின்றனர்? இவர்கள் எல்லாம் ஆங்கில மொழியில் கல்வி கற்றவர்கள் என்பதும் அதிகம் சம்பாதிக்க ஆசைப்படுபவர்கள் என்பதையும் உங்களால் மறுக்க முடியுமா? தமிழ் மொழிக் கல்வி கற்றவர்களை விட ஆங்கில மொழிக் கல்வி கற்றவர்கள் அதிகம் சம்பாதிக்கின்றனர் என்றால் எந்தப் பெற்றோர் தான், தன் பிள்ளைகளை தமிழ் பாடசாலைகளுக்கு அனுப்ப விரும்புவர்? தமிழ் மொழி மூலம் படித்தவர்களும், தமிழில் வேலை செய்பவர்களும் அதிகமாக சம்பாதிக்கலாம் என்ற காலம் வரும் போது இந்த மொழிப் பிரச்சினை தீரும்.

//தமிழ்நாட்டில் அரசு நடத்தும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிப்போர் எண்ணிக்கைதான் அதிகம்.//

உண்மை தான் நண்பரே, இந்தியாவில், அல்லது தமிழ்நாட்டில் என்பது வீதமான மக்கள், காசு கொடுத்து கல்வி கற்க வசதியற்ற ஏழைகள் என்பது உண்மை. அவர்கள் அதிக கட்டணம் கட்டி ஆங்கில மொழி வழி பாடசாலையில் தமது பிள்ளைகளை சேர்க்க முடியுமா? அவர்களுக்கு அரச பாடசாலைகளை தவிர வேறு கதி என்ன சொல்லுங்கள் நண்பரே? உங்கள் அயலில் வாழும் கூலிக்காரன் கூட கஷ்டப்பட்டு பணத்தை சேமித்து, தனது பிள்ளையை ஆங்கில மொழியில் கற்பிக்கும் தனியார் பாடசாலையில் சேர்த்து விடுவதைப் பற்றி கேள்விப்படவில்லையா?

//இதை மொழிப் பிரச்சினையாக நோக்காமல் கல்விப் பிரச்சினையாக நோக்க வேண்டும்.//

நீங்கள் என்ன பெயரிட்டு அழைத்தாலும், பொருளாதார காரணி எல்லாவற்றையும் மேவி நிற்கின்றது. தமிழக அரசு தனது செலவினத்தை ஈடுகட்ட உலக வங்கியிடம் கையேந்துகின்றது. உலக வங்கியோ கடனைக் கொடுப்பதானால், கல்வி தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறது. இதனால் தமிழில் கற்பிக்கும் அரச பாடசாலைகள் புறக்கணிக்கப்பட்டு, ஆங்கிலத்தில் கற்பிக்கும் தனியார் பாடசாலைகள் புற்றீசல் போல கிளம்புகின்றன. இவர்களின் ஆங்கில மொழி வழிக் கல்வி தேசங்கடந்த நிறுவனங்களுக்கு சேவை செய்யும் ஊழியர்களை உருவாக்கிக் கொடுக்கின்றது. பெருமளவு முதலீட்டில் நடக்கும் இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக சம்பளம் கொடுத்து கவர்ந்திழுக்கின்றன. இதனால் தான் பிறந்த தமிழ்நாட்டிற்கு உழைக்க வேண்டிய படித்த இளைஞர்கள், பணத்திற்கு ஆசைப்பட்டு பிரித்தானியா, அமெரிக்கா என்று ஓடிக் கொண்டிருக்கின்றனர். இது தான் யதார்த்தம்.

Anonymous said...

'உலக வங்கியோ கடனைக் கொடுப்பதானால், கல்வி தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறது'

What is the evidence for this.Show me one policy document or agreement with world bank that says
TN govt. should privatise all education.

Kalaiyarasan said...

//What is the evidence for this.Show me one policy document or agreement with world bank that says
TN govt. should privatise all education.//

நண்பரே, உங்களைப் போல பலர் விதண்டாவாதம் செய்வதற்கென்றே இருக்கிறார்கள். எத்தனையோ தடவை ஊடகங்களில் தமிழ்நாடு அமைச்சர்கள், அரச அதிகாரிகள் பகிரங்கமாக தெரிவித்த கருத்துகளை நீங்கள் காணாவிட்டால், அது என் தப்பல்ல.

Anonymous said...

beautiful argument and good writing style.iam a tamilian and i can read fast and easy in tamil and i can understand the thing written in one go.but if its in english though iam pretty good at it i will loose the structure some where and has to read for second or third time or else i will get only the synopsis.it will happen to everybody who are reading in a language other than his own.thats the reason there are only fewer inventions in countries like india where they are learning their education in a foreign language.they are not understanding the subject well and they are rote learning.

Kalaiyarasan said...

Thank you for sharing your views.

ஜோதிஜி said...

ரவிசங்கர் சொன்னது முற்றிலும் சரி

Foods4Smart said...

உங்களைப்போல் எழுதுவோர் மிகக்குறைவு. நல்ல கட்டுரைகள்.

நன்றி

Anonymous said...

தொழில் வாய்ப்புக்காகவும், ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு உயர் கல்வி கற்பதற்கு ஆங்கிலம் ஒரு அத்தியாவசியக் கல்வியாகவே இன்றைய உலக ஒழுங்குகள் அமைந்திருப்பதால் ஆங்கில மொழிக் கல்வி பலரை ஈர்த்துள்ளதாகக் கொள்ளலாம். ஆனால் அரைக் குறை ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டு கக்கூஸிலும் ஆங்கிலம் பேசுனும்கிற மோகம் நமது இந்தியர்களிடம் மட்டுமே உள்ளது என்பது தான் சோகம்.

Anonymous said...

//சி.ஐ.ஏ. ஒரு புத்த பிக்குவிடம் துப்பாக்கியை கொடுத்து கொலை செய்ய வைத்தது.//

Was CIA behind this assassination?

எச்.பீர்முஹம்மது said...

தமிழ்நாட்டில் அரசின் மோசமான கல்விக்கொள்கையினால் பல அரசு பள்ளிகள் மூடப்படுகின்றன என்பது தான் உண்மை. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. பல அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்து காணப்படுகிறது. இதற்காகவே மாணவர் சேர்க்கை இயக்கங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் மட்டுமே தரமானவை என்ற முரட்டு பிம்பம் மத்திய தரவர்க்கத்திடம் திணிக்கப்படுகிறது. இதனை பயன்படுத்தியே பல தனியார் பள்ளிகள் லட்சக்கணக்கில் கறந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சில வருடங்களில் அரசு பள்ளிகள் காணாமல் போகும் அபாயம் இருக்கிறது. பட்ஜெட்டில் கல்விக்கான அரசின் மானியம் மிகவும் குறைக்கப்பட்டிருக்கிறது. இதற்கான காரணமே உலக வங்கி அரசியல் தான். மேலும் அரசு பள்ளி ஆசிரியர்களே தனியார் பள்ளியில் தான் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கின்றனர். மேலும் மேலும் அரசு பள்ளிகளை சீரழிக்கவே அரசுகளும், அவை சார்ந்த அமைப்புகளும் முயற்சித்துக்கொண்டிருக்கின்றன. இவற்றை மறைத்து விட்டு கருத்து என்ற பெயரில் பெயர் கூட குறிப்பிடாமல் உளறிக்கொட்டுவது வேடிக்கையாக இருக்கிறது.

Annogen said...

தரமான கட்டுரை, அடிப்படை புரிந்தது