Showing posts with label தொழிலாளர் போராட்டம். Show all posts
Showing posts with label தொழிலாளர் போராட்டம். Show all posts

Sunday, December 20, 2020

தமிழ்நாடு புரட்சிக்கு வித்திட்ட விசைத்தறி தொழிலாளர் போராட்டம்


தறியுடன் நாவல் விமர்சனம்...

இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் நடந்த மக்கள் புரட்சியை விலாவாரியாக விவரிக்கும் ஒரு நாவல் தமிழில் இதுவரை காலத்திலும் வரவில்லை எனலாம். இரா. பாரதிநாதன் எழுதிய தறியுடன் நாவல் அந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்துள்ளது. தமிழ்நாட்டின் வட மேல் மாவட்டங்களான திருப்பூர், சேலம், தருமபுரி ஆகிய இடங்களில் எண்பதுகளில் நக்சலைட் புரட்சியாளர்களின் ஆதரவுடன் நடந்த தொழிலாளர் போராட்டம் தான் இந்த நாவலின் கதைக்கரு. இதை எழுதிய இரா. பாரதிநாதன் ஒரு விசைத்தறி தொழிலாளியாக வேலை செய்தவர் என்பது மட்டுமல்லாது, அங்கு நடந்த போராட்டத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார். அதற்காக போலீசில் பிடிபட்டு சித்திரவதைப் பட்டு வருடக் கணக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார். இந்த நாவலில் வரும் சம்பவங்களும், கதாபாத்திரங்களும் முற்றிலும் கற்பனை அல்ல.

உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப் பட்டவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டு, சில புனைவுகளுடன் இந்த நாவல் எழுதப் பட்டுள்ளது. இதை வாசிக்கும் பொழுது தமிழ்நாட்டில் இப்படி எல்லாம் நடந்துள்ளதா என்ற பிரமிப்பு ஏற்பட்டுகிறது. சமூகப்புரட்சி சம்பந்தப்பட்ட நாவல் என்றால், அது ரஷ்யாவை, அல்லது வியட்நாமை கதைக் களனாக கொண்டிருக்கும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், இந்த நாவலை வாசிக்க வேண்டும். இதில் சாதி, மத பேதமின்றி, வர்க்க உணர்வுடன் போராட்டத்தில் பங்கெடுத்த அனைவரும் தமிழ் பேசும் தமிழ்நாட்டுக் காரர்கள். வர்க்கப் போராட்டத்தில் மொழி முரண்பாட்டுக்கும் இடமில்லை. தெலுங்கு மட்டுமே பேசத் தெரிந்த கத்தார், அங்கு சென்று புரட்சிகர இசை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார். இந்த சம்பவம் நாவலின் இறுதியில் வருகிறது.

திருப்பூர் பகுதிகளில் பரவலாகக் காணப்படும், விசைத்தறி இயந்திரங்கள் பாவித்து, நெசவு செய்யும் தொழிற்சாலைகள் தான் இந்த நாவலின் அச்சாணி. உள்நாட்டு ஆடைத் தேவைக்காக மட்டுமல்லாது, வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யும் சிறிதும் பெரிதுமான விசைத்தறி நிறுவனங்கள், தம்மிடம் வேலை செய்யும் தொழிலாளர்களின் நலன்களை பற்றி சிந்திப்பதில்லை. கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காமல், பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தொழிலாளர்களை சுரண்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கி வருகின்றன. இயந்திரங்களின் பேரிரைச்சல் காரணமாக காதுகள் செவிடாகலாம். ஆனால் எந்த முதலாளியும் காதுகளுக்கு கவசம் வாங்கிக் கொடுப்பதில்லை. இதைவிட பஞ்சுத் துகள்களை சுவாசித்து காலப்போக்கில் காச நோய் வந்து செத்தவர்கள் பலருண்டு. இருப்பினும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்புக் கவசங்களை வாங்கினால் தனது இலாபத்தில் ஒரு பகுதியை இழக்க வேண்டி வருமே என்பது தான் முதலாளிகளின் கவலை.

பெரும்பாலான விசைத்தறிகளை சொந்தமாக வைத்திருக்கும் சிறு முதலாளிகள், பெரும் மூலதன முதலாளிகளுக்கு கிட்டவும் நெருங்க முடியாது. காலப்போக்கில் அவர்களும் பெரும் மூலதன திமிங்கிலங்களால் விழுங்கப் படுவார்கள். அது குறித்து எந்த அரசியல் விழிப்புணர்வும் இல்லாத, குட்டி பூர்ஷுவா வர்க்கத்தை சேர்ந்த சிறு முதலாளிகள், ஈவிரக்கமின்றி தொழிலாளர்களை சுரண்டுவதன் மூலம் தாமும் ஒரு நாள் பெரிய முதலாளியாக வரலாம் எனக் கனவு காண்கிறார்கள். இந்த உண்மையும் நாவலில் ஓரிடத்தில் பேசப் படுகின்றது.

இருப்பினும் இந்த நாவலின் கதை சிறு முதலாளிகளுக்கு எதிரான போராட்டக் களமாக விரிகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், தொழிற்புரட்சிக்கு பின்னரான லண்டன், மான்செஸ்டர் நகரங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை அறியாதவர்கள் இந்த நாவலை வாசிக்கவும். அப்போதும் இதே மாதிரித் தான் சிறிதும், பெரிதுமான விசைத்தறி நிறுவனங்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தன. அன்றிருந்த லண்டன், மான்செஸ்டர் தொழிலகங்களில் இதே நிலைமை தான் காணப்பட்டது. அங்கும் அப்போது தொழிலாளர்களுக்கு எந்த பாதுகாப்பும் இருக்கவில்லை. இயந்திரங்களில் அகப்பட்டு கைகளை இழந்து முடமானவர்கள் பலருண்டு.

அவ்வாறு இயந்திரத்தில் சிக்கி கை துண்டிக்கப் பட்ட ஒரு பெண் தொழிலாளியின் துயரச் சம்பவத்தில் இருந்து தான் தறியுடன் நாவலின் கதை ஆரம்பமாகிறது. சம்பந்தப்பட்ட முதலாளி விபத்தில் சிக்கிய தொழிலாளியின் மருத்துவ செலவுகளை பொறுப்பேற்க மறுப்பதுடன், சிறு தொகையை கொடுத்து ஏமாற்ற முனைகிறான். இந்த அநீதிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தொழிலாளர்கள் ஒரு தொழிற்சங்கம் அமைத்து உரிமைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஒரு காலத்தில் மார்க்சிய நூல்களை கண்டாலே ஓட்டமெடுத்த ரங்கன் என்ற தொழிலாளி, தொழிற்சங்க நடவடிக்கை ஊடாக அரசியலுக்குள் இழுக்கப் படுகிறான். அன்றிலிருந்து ஒரு தீவிர இளம் புரட்சியானாக மாறுகிறான். அந்த ரங்கன் தான் இந்த நாவலின் கதாநாயகன்.

அரசியல் உணர்வற்ற சாதாரண மக்கள் எவ்வாறு அரசியல்மயப் படுகிறார்கள் என்பதை, இந்த நாவல் விரிவாகக் கூறுகின்றது. அதைக் கதாசிரியர் சாதாரண மனிதர்களின் பேச்சு மொழியில் எழுதிச் செல்கிறார். ஒரு தேர்ந்த எழுத்தாளராக அந்த மக்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை விபரிக்கிறார். உதாரணத்திற்கு ஒரு மரமேறும் தொழிலாளியின் உதவியை நாடிச் செல்லும் ரங்கனை, அரசியலை வெறுக்கும் அவனது மனைவி கண்டபடி திட்டி விரட்டும் காட்சி ஒன்று வருகின்றது. பிற்காலத்தில் அதே பெண் அரசியலை புரிந்து கொள்வதுடன் புரட்சிப் பாடல்கள் பாடும் பெண்கள் குழுவிலும் பங்கெடுக்கிறார்.

அன்றைய காலத்தில் தலைமறைவாக இயங்கி வந்த நக்சலைட் இயக்கம், விசைத்தறித் தொழிலாளர் சங்கம் அமைப்பதற்கு ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்குகின்றது. உண்மையில் ஒரு சமூகப் புரட்சியை முன்னெடுக்கும் இயக்கம் தலைமறைவாக மட்டுமல்லாது, இது போன்று வெளிப்படையாகவும் இயங்க வேண்டிய அவசியத்தை நாவல் உணர்த்துகிறது. தலைமறைவாக மட்டும் இயங்கும் கெரில்லா இயக்கம், சிலநேரம் மக்களிடம் இருந்து அன்னியப் பட்டுப் போகலாம். அதைத் தடுப்பதற்கு தொழிற்சங்கம் போன்ற வெகுஜன அமைப்புகள் ஊடாக செயற்படுவதும் அவசியமானது. 
 
மேலும் வெளிப்படையாக இயங்குவோர் அரசு வழங்கும் ஜனநாயக வெளியை பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. கைது செய்யப் பட்டவர்களை விடுவிப்பதற்காக வழக்காடுவது, நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வது, பிணையில் விடுவிப்பது என்பனவும் அரசியல் போராட்டத்தின் ஒரு பகுதி தான். சிறைச்சாலையில் கைதிகளாக அடைக்கப் பட்டிருந்த போதிலும், அதற்குள்ளும் அரசியல் போராட்டம் முன்னெடுக்கப் பட வேண்டும். நாவலின் சில அத்தியாயங்கள் சிறைச்சாலைக்குள் நடக்கும் உரிமைப் போராட்டங்களை விளக்குகின்றன.

தறியுடன் நாவலின் கதை, எண்பதுகளில் நக்சலைட்டுகள் தலைமறைவாக இயங்கிய காலத்தில் நடக்கிறது. நக்சலைட் இயக்கத்தின் முழுநேரப் பணியாளர்கள் தலைமறைவாக வாழ்ந்து கொண்டே, தொழிலாளர் போராட்டங்களுக்கு தத்துவார்த்த வழி காட்டுகின்றனர். அவர்களில் தகுதியான செயற்பாட்டாளர்களை தேர்ந்தெடுத்து அரசியல் வகுப்புகள் நடத்துகின்றனர். பொதுவாக எல்லா தலைமறைவு இயக்கங்களும், தமது உறுப்பினர்கள் ஒன்று கூடும் கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் பற்றிய விபரங்களை மிக இரகசியமாக வைத்திருப்பார்கள். உறுப்பினர்களின் உண்மைப் பெயர் மறைக்கப் பட்டு புனைபெயர் பாவிக்கப் படும். இது போன்ற இரகசிய நடவடிக்கைகள் பற்றி இந்த நாவல் விரிவாகப் பேசுகின்றது.

அதை வாசிக்கும் பொழுது, எனக்கு ஈழப் போராட்டம் தொடங்கிய காலகட்டம் நினைவுக்கு வந்தது. குறிப்பாக எண்பதுகளின் தொடக்கப் பகுதிகளில் ஈழ விடுதலை அமைப்புகளும் இதே மாதிரித் தான் இயங்கின. கூட்டம் நடக்கும் இடம் குறித்து சில மணிநேரங்களுக்கு முன்னர் தான் வாய் வழியாக அறிவிக்கப் படும். சிலநேரம் வேறொரு கிராமத்திற்கு சென்று தங்க வேண்டியும் இருக்கலாம். அனேகமாக ஊருக்கு வெளியே அடித்தட்டு மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதியாக இருக்கும். திடீரென ரோந்து சுற்றும் போலிஸ் வாகனம் வந்தால், எந்தப் பக்கத்தால் தப்பிக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு, அந்த மறைவிடம் தெரிவு செய்யப் பட்டிருக்கும். தமிழ்நாட்டில் நக்சலைட் புரட்சி இயக்கமும், ஈழத்தில் ஈழ விடுதலை இயக்கமும் வெவ்வேறு குறிக்கோள்களுக்காக போராடினாலும், இரகசிய நடவடிக்கை குறித்த செயற்பாடுகளில் பெருமளவு ஒற்றுமை காணப்படுகின்றது.

தறியுடன் நாவலை வாசிக்கும் பொழுது, கிளாசிக்கல் நாவலாக புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் மார்க்சிம் கோர்க்கி எழுதிய தாய் நாவலை வாசித்த உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதைகளை கொண்டவை. அதாவது அரசியல் என்னவென்றே அறியாத கதாபாத்திரங்கள், தொழிற்சாலைகளில் நடக்கும் சுரண்டலை எதிர்த்து தமது உரிமைகளுக்காக போராடுவதன் ஊடாக அரசியலை கற்றுக் கொள்கின்றன. எழுநூறு பக்கங்களுக்கு அதிகமாக விரியும் தறியுடன் நாவல், பிற நாவல்களைப் போன்று சாதாரண மக்களின் இன்பம், துன்பம், காதல், சோகம், கோபம் போன்ற உணர்வுகளை மட்டும் பேசவில்லை. இடையிடையே அரசியல் குறிப்புகளும் வருகின்றன. உதாரணத்திற்கு நாவலில் வரும் கதாபாத்திரங்கள் சந்திக்கும் பிரச்சினைகளான சாதிமறுப்புத் திருமணம், பெண்களின் சமத்துவம் போன்ற விடயங்களில் அரசியல் விளக்கவுரைகளும் சேர்க்கப் பட்டுள்ளன.

இந்த நாவலை வாசிக்கும் வாசகர்கள், வழமை போல வாசித்து முடிந்த பின், ஒரு மூலையில் போட்டு விட்டு சென்று விட முடியாது. இந்த நாவல் சொல்ல வரும் அரசியல் கருத்துக்கள் மூலம் தெளிவான உலகறிவைப் பெற்றுக் கொள்வார்கள். அதனால் எல்லா வகையான தரத்தை உடையவர்களுக்கும் புரியும் வகையில் இலகு தமிழில் எழுதப் பட்டுள்ளது. தொடக்கத்தில் இருந்து முடிவு வரை, கதை எந்த இடத்திலும் தொய்வின்றி விறுவிறுப்பாக நகர்ந்து செல்கிறது. இதுவரை தமிழில் வெளிவந்த நாவல்களில் தறியுடன் குறிப்பிடத் தக்க இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நாவல் ஒரு நடந்து முடிந்த கதையை பற்றி மட்டுமல்லாது, இனிமேல் நடக்கப் போகும் கதைகளை பற்றியும் கூறுகின்றது.

- கலையரசன் 
20-12-2020

 
நூலின் பெயர்: தறியுடன் 
ஆசிரியர்: இரா. பாரதிநாதன்

வெளியீடு: பொன்னுலகம் பதிப்பகம் 
4/413, 3வது வீதி பாரதி நகர், பிச்சம்பாளையம் 
திருப்பூர் 641 603 
94866 41586 
gunarpf@gmail.com 
விலை இந்திய ரூபா: 650.00

Thursday, April 02, 2020

COVID-19 பக்க விளைவுகள் : மீண்டும் சூடு பிடிக்கும் வர்க்கப் போராட்டம்

COVID-19 எனும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்களை வீடுகளில் தனிமைப் படுத்தும் திட்டம் கொண்டுவரப் பட்டாலும், எல்லா முதலாளிகளும் அதற்கு ஒத்துழைப்பதில்லை. பல நாடுகளில் தொழிலாளர்கள் கட்டாயம் வேலைக்கு வர வேண்டும் என நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றுகூடும் தொழிலகங்களில் தொற்று நோய் பரவும் வேகம் அதிகரிக்கும் என்ற போதிலும் முதலாளிகள் அதைப்பற்றிக் கவலைப் படவில்லை.

இதனால் தன்னெழுச்சியான வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன. சில வாரங்களுக்கு முன்னர் ஸ்பெயினில் மெர்செடெஸ் பென்ஸ் தொழிலக ஊழியர்கள் முதலாளியின் உத்தரவுக்கு அடிபணிய மறுத்து வேலைநிறுத்தம் செய்தனர். தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியின் பெர்கமா நகரில் அமெரிக்காவின் F- 35 போர் விமானம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை மூடப்படவில்லை. இது தொடர்பான விபரங்களை கீழே தருகிறேன்.

இத்தாலியில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தாலும் அங்குள்ள F-35 விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதிலும் கொரோனா தொற்று அதிகமாக உள்ள பெர்கமா (Bergama) எனும் இடத்தில் தான் இந்த தொழிற்சாலை அமைந்துள்ளது.

மேற்படி தொழிற்சாலை இரண்டு நாட்கள் மட்டும் பூட்டப் பட்டிருந்தாலும், அமெரிக்க தூதுவராலயமும், இத்தாலி முதலாளிகள் சங்கமும் (Confindustria) கொடுத்த அழுத்தம் காரணமாக தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்ட தொழிலாளர்கள், சமூக வலைத்தளைங்களில் தமது எதிர்ப்புணர்வை காட்டி வருகின்றனர். முதலாளிகள் சங்கத்தின் சின்னத்தின் கீழ் "உங்களது உடல் ஆரோக்கியத்தை விட எங்களது இலாபம் முக்கியம்" என்ற வாசகம் பொறித்த படம் பரவலாக பகிரப் பட்டது.

இத்தாலியை ஆளும் வலதுசாரிக் கட்சிகளின் கூட்டரசாங்கம் ஆரம்பத்தில் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்காமல் இழுத்தடித்தது. நோய்த் தொற்று அதிகரித்த பின்னர் தான் மக்களை தனிமைப்படுத்தும் முடிவு எடுத்தது. தொழிற்சங்கங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த பிற பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை மூடி விடுவதற்கு அரசு சம்மதித்தது.

ஒருவேளை F-35 விமானமும் பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்குள் அடங்குகிறது போலும்! மருத்துவ தேவைகளுக்கு ஒரு டாலர் கூட கொடுக்காத அமெரிக்க அரசு, போர் விமான உற்பத்திக்கு மட்டும் பில்லியன் டாலர் நிதி வழங்க முன்வந்துள்ளது. இத்தாலி நிறுவனமான Leonardo, அமெரிக்க நிறுவனமான Lockheed Martin இணைந்து இத்தாலியில் F-35 விமானங்களை உற்பத்தி செய்து வருகின்றன. இது இத்தாலியின் ஆயுத விற்பனைக்கு வருமானம் ஈட்டித் தரும் தொழிற்துறை ஆகும்.

தற்போது அமெரிக்காவிலும் வர்க்கப் போராட்டம் சூடுபிடித்துள்ளது. கொலராடோ மாநிலத்தில் உள்ள இறைச்சி அடைக்கும் JBS நிறுவனத்தில் வேலை செய்த பத்து தொழிலாளர்கள் COVID-19 தொற்றினால் பாதிக்கப் பட்டதாக அறிவிக்கப் பட்டது. இதை அடுத்து அங்கு வேலை செய்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்ய மறுத்து வெளிநடப்பு செய்தனர். 

அவர்கள் சுய தனிமைப் படுத்தல் காரணமாக வீடுகளில் இருந்தால் சம்பளம் வழங்கப் பட மாட்டாது என நிர்வாகம் அறிவித்திருந்தது. அந்த நிறுவனத்தில் சுகயீன கொடுப்பனவு திட்டம் என்றைக்குமே இருக்கவில்லை என காரணம் கூறப்பட்டது. COVID-19 பொசிட்டிவ் உள்ளவர்களுக்கு மட்டுமே சம்பளம் கொடுக்க முன்வந்தது.

அந்த தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக நின்று கொண்டு வேலை செய்ய வேண்டும். ஒரு மீட்டர் இடைவெளி அங்கே சாத்தியமாகாது. அத்துடன் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு கவசம் எதுவும் வழங்கப் படவில்லை.

JBS தொழிலாளர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் தொழிற்சங்கம் இறைச்சி பதனிடும் தொழிற்துறையும் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப் பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு சுகயீன கொடுப்பனவும், இலவச குழந்தை பராமரிப்பு வசதியும் வழங்கப் படுகின்றது.

Sunday, August 20, 2017

ஒரு முதலாளித்துவ நாட்டில் முற்றுப்பெறாத சோஷலிசத்திற்கான போராட்டம்


வேலைநிறுத்த‌ப் போராட்ட‌ங்க‌ள் மூல‌மே தொழிலாள‌ர்க‌ள் த‌ம‌து உரிமைக‌ளை பெற்றுக் கொள்ள‌ முடியும். நான் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக நெதர்லாந்தில் வசிப்பதாலும், அந்நாட்டின் வரலாறு படித்திருப்பதாலும், அங்கு நடந்த உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டம் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள முடிந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நெதர்லாந்து வரலாற்றில், முதன்முறையாக 1823 ம் ஆண்டு கால்வாய் வெட்டிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அது, வேலைநிறுத்தம், தொழிற்சங்கம் போன்றன தடைசெய்யப்பட்டிருந்த  காலகட்டம். அதனால் வேலைநிறுத்தம் செய்தவர்களுக்கு பகிரங்கமாக சவுக்கடி தண்டனை கொடுக்கப் பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வேலைநிறுத்தம் செய்வதால் தொழிலாளர்களுக்கு பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது. சம்பளம் கிடைக்காதது மட்டுமல்லாது, வேலை பறிபோகும் அபாயம் இருந்தது. அத்துடன் வேறெந்த முதலாளியும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப் போவதில்லை.அரச உதவி எதுவும் கிடைக்காத காலத்தில், குடும்பம் முழுவதும் பட்டினி கிடந்தது வாட வேண்டிய கட்டாயம் இருந்தது.

வைரக் கல் பட்டை தீட்டும் தொழில் செய்த கைவினைஞர்கள் மத்தியில் வலுவான தொழிற்சங்கம் இருந்தது. தொழிலாளர் நலன்களுக்காக உருவான (மார்க்சிய) சமூக ஜனநாயகக் கட்சி (SDP), அதனை முன்மாதிரியாகக் கொண்டு தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கம் அமைத்தது. அதனால், ஒரு தொழிலகத்தில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யும் பொழுது, அவர்களுக்கான வாழ்க்கை செலவுகளை ஈடுகட்ட முடிந்தது. 

ஐரோப்பாவில் தோன்றிய மார்க்சிய சமூக ஜனநாயகக் கட்சிகள், ஆரம்ப காலத்தில் பாட்டாளிவர்க்க சர்வதேசியத்தை உயர்த்திப் பிடித்தன. அதனால், பல்வேறு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர் மத்தியில் கருத்தொற்றுமை நிலவியது. சகோதர உணர்வு ஏற்பட்டிருந்தது. 

முதலாம் உலகப்போருக்கு முன்னர் பாட்டாளிவர்க்க சர்வதேசிய உணர்வு மிகவும் தீவிரமாக இருந்தது.அதனால், ஐரோப்பிய அரசுகள் தேசிய உணர்வை தூண்டி விட்டுக் கொண்டிருந்தன. அது பேரழிவு தந்த உலகப்போருக்கு இட்டுச் சென்றது.

1889 ம் ஆண்டு, ல‌ண்ட‌ன் துறைமுக‌த் தொழிலாள‌ர்க‌ள் வேலைநிறுத்த‌ப் போராட்ட‌த்தில் குதித்த‌ன‌ர். போராட்ட‌ முடிவில், துறைமுக‌ முத‌லாளிக‌ள் இற‌ங்கி வ‌ந்து கோரிக்கைக‌ளை ஏற்றுக் கொண்ட‌ன‌ர். வேலைநேர‌த்தை குறைக்க‌வும், ச‌ம்ப‌ள‌த்தை கூட்ட‌வும் ச‌ம்ம‌தித்த‌ன‌ர். முத‌லாளிக‌ள் தொழிலாள‌ர்க‌ளின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள‌ வேண்டிய‌ நிர்ப்ப‌ந்த‌ம் எவ்வாறு உருவான‌து?

ல‌ண்ட‌ன் துறைமுக‌த்தில் வேலைநிறுத்த‌ம் ந‌ட‌ந்து கொண்டிருந்த‌ நேர‌ம், இங்கிலாந்து முத‌லாளிக‌ள் த‌ம‌து க‌ப்ப‌ல்க‌ளை, ரொட்ட‌ர்டாம் துறைமுக‌த்திற்கு அனுப்பினார்க‌ள். ல‌ண்ட‌ன் வேலைநிறுத்த‌ம் ப‌ற்றிக் கேள்விப்ப‌ட்ட‌ ரொட்ட‌ர்டாம் தொழிலாள‌ர்க‌ள், பொருட்க‌ளை இற‌க்கி ஏற்ற‌ ம‌றுத்து விட்ட‌ன‌ர்.

இந்த‌ ச‌ர்வ‌தேச‌ ஒருமைப்பாடு அத்துட‌ன் நின்று விட‌வில்லை. ல‌ண்ட‌ன் தொழிற்ச‌ங்க‌த் த‌லைவ‌ர்க‌ள் ரொட்ட‌ர்டாம் துறைமுக‌த்திற்கு வ‌ந்த‌ன‌ர். எவ்வாறு போராட வேண்டும் என்று ட‌ச்சுத் தொழிலாள‌ர்க‌ளுக்கு சொல்லிக் கொடுத்த‌ன‌ர்.

இந்த‌த் த‌ட‌வை ரொட்ட‌ர்டாம் தொழிலாள‌ரின் முறை. அவ‌ர்க‌ளும் வேலைநிறுத்த‌ப் போராட்ட‌த்தில் குதித்த‌ன‌ர். வேலை நேர‌த்தை குறைக்குமாறும், ச‌ம்ப‌ள‌த்தை கூட்டுமாறும் கோரிக்கை வைத்த‌ன‌ர். அர‌சு பொலிஸ் அனுப்பி வேலைநிறுத்த‌த்தை த‌டுக்க‌ப் பார்த்த‌து. தொழிலாள‌ர்க‌ள் பாதுகாப்பு அர‌ண் அமைத்து எதிர்த்து நின்ற‌ன‌ர். அங்கு ந‌ட‌ந்த‌ மோத‌லில் சில‌ருக்கு காய‌ம் ஏற்ப‌ட்ட‌து.

இறுதியில் துறைமுக‌ முத‌லாளிக‌ள் இற‌ங்கி வ‌ந்த‌ன‌ர். தொழிலாள‌ரின் கோரிக்கைக‌ளை நிறைவேற்ற‌ ச‌ம்ம‌தித்த‌னர். இவ்வாறு க‌டுமையான‌ போராட்ட‌ங்க‌ளுக்குப் பின்ன‌ர் தான் ஐரோப்பிய‌ தொழிலாள‌ர்க‌ள் த‌ம‌து உரிமைக‌ளைப் பெற்றுக் கொண்ட‌ன‌ர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அதிலும் துருக்கிப் பெண்கள் வேலை நிறுத்தம் செய்த வரலாறு நெதர்லாந்தில் நடந்துள்ளது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் மேற்கு ஐரோப்பாவின் பொருளாதாரம் வளர்ந்தது. உள்நாட்டு தொழிலாளருக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால், துருக்கி, மொரோக்கோ ஆகிய நாடுகளில் இருந்து மலிவான ஒப்பந்தக் கூலிகளை இறக்குமதி செய்தனர்.

முதலாளிகள் அவர்களுக்கு குறைந்த கூலி கொடுத்து, உழைப்பை சுரண்டி வந்தனர். தற்போது வளைகுடா அரபு நாடுகளில், தெற்காசியத் தொழிலாளர்கள் சுரண்டப் படுவதை ஒப்பிட்டுப் பார்க்கலாம். அதே மாதிரித் அன்றைய ஐரோப்பாவிலும் நடந்து கொண்டிருந்தது.

அல்மேலோ நகரில் அமைந்திருந்த B.J.ten Dam என்ற தொழிற்சாலையின் உரிமையாளர் துருக்கிப் பெண் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி இருந்தார். கோழி இறைச்சி பதனிடும் தொழிற்சாலையில் வேலை செய்த பெண்கள் மிகவும் மோசமாக நடத்தப் பட்டனர்.

அந்தப் பெண் தொழிலாளர்கள் வாரத்திற்கு அறுபது மணித்தியாலம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டனர். நெதர்லாந்தின் அடிபப்டை சம்பளத்தை விடக் குறைவாக கொடுக்கப் பட்டது. அத்துடன், விடுமுறை இல்லை. சுகயீன விடுப்பு எடுத்தால் சம்பளம் கிடையாது.

அவர்கள் FNV என்ற தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ந்த பின்னர் தான் நிலைமை மாறியது. 1978 ம் ஆண்டு, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தொழிற்சங்க நடவடிக்கை ஊடாக நியாயமான ஊதியம், தொழிலாளர் பாதுகாப்பு போன்றவற்றை பெற்றுக் கொண்டனர். போராடாமல் எதுவும் கிடைக்காது.

நெத‌ர்லாந்தில் இதுவ‌ரை கால‌மும் ந‌ட‌ந்த‌ வேலைநிறுத்த‌ப் போராட்ட‌ங்க‌ளை ஒருவ‌ர் ஆய்வு செய்துள்ளார். ஷாக் வ‌ன் டெர் வெல்ட‌ன் (Sjaak van der Velden) ஒரு முன்னாள்‌ ம‌ர‌வேலைத் தொழிலாளி. த‌ற்போது ம‌துபான‌சாலை ந‌ட‌த்துகிறார். அவ‌ரிட‌ம் எடுக்க‌ப் ப‌ட்ட‌ தொலைக்காட்சி பேட்டியில் இருந்து:

கேள்வி: க‌ட‌ந்த‌ 150 வ‌ருட‌ கால‌ங்க‌ளில் ந‌ட‌ந்த‌ வேலைநிறுத்த‌ப் போராட்ட‌ங்க‌ளால் கிடைத்த‌ ப‌ய‌ன்க‌ள் என்ன‌?

ப‌தில்: ஏராள‌ம் உள்ள‌ன‌. வேலைநிறுத்த‌ங்க‌ள் ந‌ட‌ந்திரா விட்டால், இன்றுள்ள‌ வாழ்க்கை வ‌ச‌திக‌ளை நாங்க‌ள் அனுப‌வித்திருக்க‌ முடியாது.

நெத‌ர்லாந்தில், க‌ட‌ந்த‌ 150 வ‌ருட‌ங்க‌ளில் 15000 வேலைநிறுத்த‌ங்க‌ள் இட‌ம்பெற்றுள்ள‌ன‌. அவ‌ற்றில் பெரும்பாலான‌வை 20ம் நூற்றாண்டில் ந‌ட‌ந்துள்ள‌ன‌.

4000 வேலைநிறுத்த‌ங்க‌ள் எதிர்பார்த்த‌ வெற்றிக‌ளை த‌ந்துள்ள‌ன‌. 3500 வேலைநிறுத்த‌ங்க‌ள் இறுதியில் முத‌லாளிக‌ளுட‌ன் ச‌ம‌ர‌ச‌ ஒப்ப‌ந்த‌ம் செய்ய‌ வைத்த‌ன‌.

வேலைநிறுத்த‌ம் செய்வதால் ந‌ன்மை உண்டாகின்ற‌து என்ப‌தை வ‌ர‌லாறு நிரூபித்துள்ள‌து. வேலையை இடை நிறுத்துவ‌து அல்ல‌ இங்கே முக்கிய‌ம். தொழிலாள‌ர்க‌ள் த‌ம‌து ச‌க்தியை உண‌ர்ந்து கொள்வ‌தும், ச‌ந்த‌ர்ப்ப‌ம் வ‌ரும் போது ப‌ல‌த்தைக் காட்டுவ‌துமே முக்கிய‌ம்.

மேற்கு ஐரோப்பாவில், இரண்டாம் உலகப்போருக்கு முன்னரும், பின்னருமான நிலைமை இவ்விடத்தில் ஒப்பு நோக்கத்தக்கது. போருக்கு முன்னர் வர்க்கப் போராட்டம் மூர்க்கமாக நடந்து கொண்டிருந்தது. சமூக ஜனநாயகக் கட்சியில் பல குறைபாடுகள் இருந்தாலும், அது தொழிலாளர்களுக்கு தலைமைத்துவம் கொடுப்பதாக காட்டிக் கொண்டது. அதன் தலைவர்கள், முதலாம் உலகப்போர் காலத்திலேயே விலைக்கு வாங்கப் பட்டு விட்டனர். இருப்பினும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்களை தடுக்கவில்லை.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. சமூக ஜனநாயகக் கட்சிகள் ஆட்சியதிகாரத்தில் அமர்ந்து கொண்டதுடன் மட்டுமல்லாது, முதலாளித்துவ அரச இயந்திரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டனர். நெதர்லாந்து நாட்டில் நடந்த சம்பவங்களை ஓர் உதாரணமாக எடுத்துப் பார்க்கவும். இப்படித் தான் ஏனைய மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் நடந்திருக்கும் என்று ஊகிக்கலாம்.

1940 ம் ஆண்டு, நெதர்லாந்து நாஸி ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப் பட்டது. நாஸி ஆக்கிரமிப்பாளர்கள் நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சியை (CPN) தடை செய்தனர். ஆனால், சமூக ஜனநாயகக் கட்சியை (SDAP) தம்முடன் சேர்ந்து வேலை செய்ய வருமாறு அழைத்தனர். தாங்கள் "இடதுசாரிகளும் அல்ல, வலதுசாரிகளும் அல்ல, தேசப் பற்றாளர்கள்..." என்று நாஸிகள் சொல்லிக் கொண்டனர். ஆனால், சமூக ஜனநாயகக் கட்சியினர் சேர்ந்து வேலை செய்ய மறுத்து விட்டனர். அதனால் அந்தக் கட்சியும் தடை செய்யப் பட்டது. அதற்கு முன்னரே SDAP இயங்குவதை நிறுத்திக் கொண்டது.

நாஸிகள் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்த யூதர்களை கைது செய்து தடுப்பு முகாம்களுக்கு அனுப்பும் வேலையை ஆரம்பித்தனர். அப்போது எதிர்பாராத இடத்தில் இருந்து எதிர்ப்புக் கிளம்பியது. ஒட்டுமொத்த ஆம்ஸ்டர்டாம் நகரமும் வேலைநிறுத்தம் செய்தது. அதற்குப் பின்னணியில் நின்றவர்கள் கம்யூனிஸ்டுகள்.

நாஸி ஆக்கிரமிப்புக்கு எதிராக ஐரோப்பிய நாடொன்றில் நடந்த முதலாவது வேலைநிறுத்தப் போராட்டம் அது தான். முதல் நாள் செய்வதறியாது திகைத்து நின்ற நாஸிகள், அடுத்தநாள் அடக்குமுறையை ஏவி விட்டனர். டச்சு தொழிற்சங்க தலைவர்கள், கம்யூனிஸ்டுகள் கைதுசெய்யப் பட்டு, ஆஸ்திரியாவில் இருந்த தடுப்பு முகாமுக்கு அனுப்பப் பட்டனர். குறைந்தது அரைவாசிப் பேராவது அங்கிருந்து மீளவில்லை.

இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், நெதர்லாந்து அமெரிக்க, பிரிட்டிஷ் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. நாஸி ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டம் நடத்திய கம்யூனிஸ்டுகளுக்கு பெருமளவு ஆதரவு இருந்தது. பெரும்பான்மையான நெதர்லாந்து பிரஜைகள் கம்யூனிஸ்டுகளை உண்மையான நாட்டுப் பற்றாளர்களாக பார்த்தனர். நாஸி ஆக்கிரமிப்புக் காலத்தில், அரச குடும்பமும், பிற கட்சிகளின் தலைவர்களும் பிரித்தானியாவுக்கு தப்பி ஓடி விட்டனர். ஆனால் விடுதலைக்குப் பின்னர் அவர்களது கையில் தான் ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது!

முன்னாள் SDAP கட்சியினரும், கிறிஸ்தவ கட்சி ஒன்றும் சேர்ந்து, புதிய சமூக ஜனநாயகக் கட்சியான தொழிற்கட்சி (PvdA) உருவானது. அதன் தலைவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மறுத்தனர். அதற்குப் பதிலாக லிபரல் கட்சிகளுடன் கூட்டு வைத்தனர்.  இந்த "இடது - வலது கூட்டரசாங்கம்" இன்று வரை தொடர்கின்றது.

1955 - 1959 காலப் பகுதியில், சமூக ஜனநாயகவாதிகளின் நீண்ட கால சோஷலிசக் கோரிக்கைகள், "நலன்புரி அரசு" என்ற பெயரில் அமுல்படுத்தப் பட்டன. உதாரணத்திற்கு, அனைவருக்கும் ஓய்வூதியம், மணமுறிவு பெற்ற தாய்மார், வேலையற்றோர், நிரந்தர நோயாளிகளுக்கான அரச கொடுப்பனவுகள் போன்றவற்றை குறிப்பிடலாம். பாராளுமன்றத்தில் இருந்த அனைத்துக் கட்சிகளும் இந்த மக்கள் நலத் திட்டங்களை ஆதரித்தன. கிறிஸ்தவ மத அடிப்படைவாதக் கட்சியான SGP மட்டும், "அபாயகரமான அரசு சோஷலிசம்" என்று கூறி எதிர்த்தது.

அதே காலகட்டத்தில் (1955), ஆம்ஸ்டர்டாம் நகரில் பொதுப் போக்குவரத்து ஊழியர்கள், சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். அரசால் அங்கீகரிக்கப் படாத கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம் அவர்களது போராட்டத்தை ஆதரித்தது. அந்தப் போராட்டத்தை பொது மக்களும் ஆதரித்தமை குறிப்பிடத் தக்கது. அரசு கருங்காலி சாரதிகளை கொண்டு சில டிராம் வண்டிகளை ஒட்டிய போதிலும், பொது மக்கள் அவற்றில் ஏற மறுத்தனர்.

ஆம்ஸ்டர்டாம் நகரின் பொதுப்போக்குவரத்து துறை ஓர் அரச நிறுவனம் ஆகும். அப்போது ஆட்சியில் இருந்த சமூக ஜனநாயகக் கட்சி, "வேலைநிறுத்தம் செய்வது சட்டவிரோதம்" என்றது! "தற்போதுள்ளது ஒரு புதிய சகாப்தம். முன்பிருந்த வர்க்கப் போராட்டம் மறைந்து, வர்க்க சமரசம் உருவாகி உள்ளது. அப்படியான நிலைமையில் வேலைநிறுத்தம் செய்வது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல..." என்று வாதிட்டது.

போருக்கு முன்னர் அடக்குமுறை அரசுக்கு எதிராக போராடிய அதே சமூக ஜனநாயகவாதிகள், தற்போது தாமே அடக்குமுறை அரசாக மாறி இருந்தனர். வேலைநிறுத்தப் போராட்டத்தை அடக்குவதற்காக பொலிஸ் படையை ஏவி விட்டனர். வேலைநிறுத்தம் செய்த குற்றத்திற்காக, ஆயிரக் கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தனர்.

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடியாது என்ற தடைச்சட்டம், முப்பதுகளில் இருந்த முதலாளித்துவ அடக்குமுறை அரசினால் கொண்டு வரப்பட்ட சட்டம் ஆகும். அப்போது அதற்கு எதிராகப் போராடிய சமூக ஜனநாயகவாதிகள், பின்னர் அதே சட்டத்தைக் காட்டி அரச ஊழியர்களை பணிநீக்கம் செய்தனர்! அதற்கு அவர்கள் கூறிய ஒரே காரணம்: "வர்க்கங்களுக்கு இடையில் நல்லிணக்கம் பேணப்பட வேண்டும்! நீங்கள் தொடர்ந்தும் வேலைநிறுத்தம் செய்தால், கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து தேசத்துரோகக் குற்றம் புரிகிறீர்கள்!! உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும், ஜனநாயகத்திற்கும் துரோகம் செய்கிறீர்கள்!!!" என்றது அன்றைய சமூகஜனநாயக அரசாங்கம்.

முன்னொரு காலத்தில் போராட்டக் குணாம்சம் கொண்டதாக இருந்த சோஷலிச தொழிற்சங்கமும் (NVV: தற்போது FNV) அரசுடன் ஒத்துழைக்கத் தொடங்கியது. நலன்புரி அரசு என்ற பெயரில் முதலாளிகளுடனும், அரசுடனும் சேர்ந்து கூட்டு ஒப்பந்தங்கள் போடுவதில் பங்கெடுத்தது. இதில் முக்கியமான விடயம் என்னவெனில், சம்பள உயர்வு கோரி போராட்டம் நடத்துவதில்லை என்ற நிபந்தனைக்கு தொழிற்சங்க தலைவர்கள் சம்மதித்தனர்.

அன்றிலிருந்து இன்றுவரை, இந்தத் துரோகம் தொடர்கதையாக உள்ளது. அண்மைக்காலமாக, அரசு கொண்டு வரும் சிக்கனப் பொருளாதார திட்டங்கள் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து வருகின்றன. ஆனால், சமூக ஜனநாயக் கட்சியினரும், தொழிற்சங்கமும் அதற்கு ஒப்புதல் வழங்கி வருகின்றனர்.

Tuesday, September 06, 2016

சர்வதேச ஊடகங்கள் இருட்டடிப்பு செய்த இந்திய வேலைநிறுத்தப் போராட்டம்

2 செப்டம்பர் 2016, இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலேயே முதல் தடவையாக பெருந்தொகையான உழைப்பாளிகள் கலந்து கொண்ட மிகப் பெரிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. 

இந்தியா முழுவதும் நடந்த வேலைநிறுத்தத்தில், தொழிற்சங்கங்களின் அழைப்பை ஏற்று கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பணிப் புறக்கணிப்பு செய்தனர். உலக சனத்தொகையில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள நாடென்பதால், பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்ட வேலைநிறுத்தம் இதுவாக இருக்க வேண்டும். (The Labour Story that Big Media is Not Telling You; http://thewire.in/63622/labour-trade-unions-strike/) 
நரேந்திர மோடியின் அரசு, வெளிநாட்டு முதலீடுகளை கவரும் நோக்கில் அரச நிறுவனங்களை தனியார்மயமாக்கும் திட்டத்தை கொண்டு வந்தது. அதனால் தமது வேலை பறிபோகும் என்று இந்தியத் தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர். சம்பள உயர்வு தொடர்பாக, அரசுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை முறிந்தது. அதற்குப் பிறகு தான், தொழிற்சங்கங்கள் கூட்டாக வேலைநிறுத்த அறிவிப்பு விடுத்தன. கடைசி நேரத்தில், வேலைநிறுத்தத்தை கைவிடச் செய்வதற்காக, அரசு மிகக் குறைந்த தொகை சம்பளம் கூட்டுவதற்கு முன்வந்தது. ஆனால், தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஒபாமாவின் நாய்க்குட்டி சுகவீனமுற்றாலும் தலைப்புச் செய்தியாக வெளியிடும் சர்வதேச ஊடகம் எதுவும், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வேலைநிறுத்தப் போராட்டம் பற்றி அறிவிக்கவில்லை. உலகில் சிறந்த ஜனநாயக நாடான அமெரிக்காவில், சொல்லி வைத்தால் போல் எல்லா ஊடகங்களும் மௌனம் சாதித்தன. CNN இன் சர்வதேச ஒளிபரப்பில் மட்டும் சில நிமிடங்கள் காட்டினார்கள். அமெரிக்காவில் யாரும் அதைப் பார்ப்பதில்லை. அதனால், இந்தியாவில் நடந்த வேலைநிறுத்தம் தெரியுமா? என்று யாரும் ஓர் அமெரிக்கரைப் பிடித்துக் கேட்டு விடாதீர்கள்.

உலகிற் சிறந்த ஜனநாயக நாட்டில் அப்படியொரு நிலைமை என்பதால், பிற உலக நாடுகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. தெரிந்தாலும் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்திருப்பார்கள். வெனிசுவேலா நாட்டின் Telesur தொலைக்காட்சி மட்டும் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பியது. அதைத் தவிர, ஐரோப்பாவிலும் எந்த ஊடகமும் கண்டுகொள்ளவில்லை. அப்படியே சொன்னாலும் போனால் போகிறதென்று முக்கியத்துவம் குறைந்த செய்தியாக தெரிவித்தார்கள்.

அயல்நாடான இலங்கையில், தமிழ் ஊடகங்கள் எதுவும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அரச ஊடகம், தனியார் ஊடகம் எதுவானாலும் இந்த விடயத்தில் ஒன்று தான். 

இலங்கையில் வீரகேசரி, உதயன் ஆகிய பத்திரிகைகள் தனியார் நிறுவனங்களால் வெளியிடப் படுவதால், பெரும்பான்மையான தமிழ் வாசகர்களை கொண்டுள்ளன. ஆனால்,  இந்திய சுதந்திர தினத்திற்கு விசேட பதிப்பு வெளியிடும் வீரகேசரியும், தமிழ்த் தேசியர்களின் இதயகீதமான உதயனும், இந்திய வேலைநிறுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவர்கள் தமது வலதுசாரி சுயரூபத்தையும், முதலாளிய விசுவாசத்தையும் இப்படியான தருணங்களில் வெளிப்படுத்த தயங்குவதில்லை. அது தானாம் நடுநிலைமை. 

இந்திய வேலைநிறுத்தம் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர், அதாவது ஆகஸ்ட் 30 அன்று, கொழும்பு நகரில் மாணவர்களின் போராட்டம் நடைபெற்றது. அதிலும் பெருந்தொகையான மாணவர்கள் கலந்து கொண்டதால், போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது. கூட்டத்தை கலைப்பதற்கு பொலிஸ் தண்ணீரை பீச்சியடித்து தடியடிப் பிரயோகம் செய்தது. தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராகவும், இலவசக் கல்விக்கு ஆதரவாகவும் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

அதே நேரம், யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? சொன்னால் வெட்கக்கேடு. நல்லூர்க் கந்தனின் தேர்த்திருவிழா கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். 

அதே நாளில், ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் யாழ் நகருக்கு விஜயம் செய்திருந்தார். அப்போது யுத்தகாலத்தில் காணாமல்போனவர்களின் தாய்மார் ஆர்ப்பாட்டம் செய்தனர். அன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நூறு பேரளவில் இருக்கும். அன்று பலரை வரச் சொல்லிக் கேட்டதாகவும், நல்லூர்த் தேர்த் திருவிழா நடப்பதால் வர மறுத்து விட்டதாகவும் சமூகசேவகி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவின் செப். 2 பொது வேலைநிறுத்த‌ம், காட்டிக்கொடுக்கும் தொழிலாள‌ர் வ‌ர்க்க‌த் துரோகிக‌ளை க‌ல‌ங்க‌ வைத்துள்ள‌து. அன்று ப‌ல‌ர் வ‌க்கிர‌ங்க‌ளை கொட்டித் தீர்த்து த‌ம‌து கைக்கூலித் த‌ன‌த்தை வெளிப்ப‌டுத்தினார்கள்.

அண்மைக் கால‌ உல‌க‌ வ‌ர‌லாற்றில், ப‌ல‌ கோடி உழைப்பாளிக‌ள் ப‌ங்குப‌ற்றிய‌ வேலை நிறுத்த‌ப் போராட்ட‌ம் இந்தியாவில் ந‌ட‌ந்துள்ள‌து. ச‌ர்வ‌தேச‌ ஊட‌க‌ங்க‌ளே அத‌ன் முக்கிய‌த்துவ‌த்தை குறிப்பிட்டு பேசியுள்ள‌ன‌.

நிலைமை இப்ப‌டியிருக்கையில், த‌மிழ்த் தொழிலாள‌ர்க‌ள் ம‌த்தியில் உள்ள‌, முத‌லாளிக‌ளுக்கு காட்டிக் கொடுக்கும் துரோகிக‌ள், வ‌ழ‌மை போல‌ எதிர்ப் பிர‌ச்சார‌ங்க‌ளை ந‌ட‌த்தின‌ர். உலகின் எந்த நாடாக இருந்தாலும்,வேலை நிறுத்தமானது தொழிற்சங்க நடவடிக்கையாகவே அறிவிக்கப் படுகின்றது. அந்த உண்மையை மறைத்த வலதுசாரிகள் வெறுப்புப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டனர். 

"இடதுசாரி கட்சிகள் நடத்தும் போராட்டம்...", "வேலைநிறுத்தம் தோல்வியடைந்தது...", "பொது மக்களுக்கு இடையூறு செய்யும் கம்யூனிஸ்டுகள்..." இது போன்ற வதந்திகளை பரப்பி விட்டனர். சமூக வலைத்தளங்களில் இந்து மதவெறியர்களும், வலதுசாரிகளும், அது போன்ற தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இதன் மூலம் உழைக்கும் மக்களின் எதிரிகள் தாங்களே என வெளிப்படுத்திக் கொண்டனர்.

அமெரிக்கா சிக்காக்கோ ந‌க‌ரில் தொட‌ங்கிய‌ தொழிலாளர்க‌ளின் உரிமைப் போராட்ட‌ம், 21ம் நூற்றாண்டிலும் தொட‌ர்கின்ற‌து. அமெரிக்கா, ர‌ஷ்யா, பிரித்தானியா, என்று தொழிலாள‌ர் போராட்ட‌ம் ந‌ட‌ந்த‌ நாடுக‌ளில் எல்லாம், அதை ந‌க்க‌ல் அடித்த‌, எதிர்ப் பிர‌ச்சார‌ம் செய்து வ‌ந்த‌ துரோகிக‌ள் இருந்திருக்கிறார்க‌ள். அவர்க‌ள‌து வ‌ர்க்க‌த் துவேஷ‌ ம‌ர‌ப‌ணு, க‌ண்ட‌ம் க‌ட‌ந்து சில த‌மிழ‌ர்க‌ளுக்கும் க‌ட‌த்த‌ப் ப‌ட்டிருக்க‌லாம்.

Wednesday, October 28, 2015

நெதர்லாந்து தொழிலாளர் உரிமைக்காக நடந்த தொழிற்சங்கப் போராட்டம்


மேற்கு ஐரோப்பிய நாடுகள் முதலாளித்துவ நாடுகள் தான். இருப்பினும், முன்னாள் சோஷலிச நாடுகளில் இருப்பதைப் போன்று மக்கள் நலத் திட்டங்களை, நலன்புரி அரசு என்ற பெயரில் நடைமுறைப் படுத்துகின்றன. அதற்காக, மேற்கு ஐரோப்பிய நாடுகள் "சோஷலிசப் பாதையில் பயணிக்கின்றன..." என்று சொல்ல வரவில்லை.

ஆனால், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் வைத்த பல கோரிக்கைகளை, முதலாளித்துவ அரசே ஏற்றுக் கொண்டு செயற்படுத்தி வருகின்றது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உள்ள அறிவுஜீவிகள் சிலர், "மேற்கத்திய பாணி முதலாளித்துவ - ஜனநாயகத்தை" ஆதரிக்கும் அதே நேரம், அங்கு நடந்த வர்க்கப் போராட்டத்தை வசதியாக மறந்து விடுகின்றனர்.

இப்படியான தகவல்களை, மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் வேண்டுமென்றே மறைக்கிறார்கள். தங்களது நாட்டில் உள்ள சாதாரண தொழிலாளர்கள், தங்களைப் போன்று வாழ்க்கை வசதிகளை அனுபவிக்கக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு காரணமாக இருக்கலாம்.

நெதர்லாந்தில் இருப்பதைப் போன்று, குப்பை அள்ளும் தொழிலாளியின் சம்பளம், அலுவலகப் பணியாளரின் சம்பளத்தை விட அதிகமாக இருந்தால்...? சென்னை, கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற நகரங்களில் குப்பை அள்ளும் தொழிலாளர்களும், வசதியாக வாழத் தொடங்கினால்...? ஐயகோ... அந்த நிலைமையை நினைக்க நெஞ்சு பதறுகின்றதே! இது தான் மத்தியதர வர்க்கத்தினரின் கெட்ட கனவு. அதற்காகத் தான் சோஷலிசத்தை வெறுக்கிறார்கள்.

உண்மையைச் சொன்னால், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகளின் போராட்டம் நடக்காத ஐரோப்பிய நாடு எதுவும் கிடையாது. நீங்கள் எந்த நாட்டின் பெயரைக் குறிப்பிட்டாலும், அந்த நாட்டில் எந்தக் கட்சி, எப்படியான போராட்டங்களை நடத்தியது என்ற விபரங்களை தருவதற்கு தயாராக இருக்கிறேன். சோஷலிசத்திற்கான மக்கள் போராட்டத்திற்கு எந்த ஐரோப்பிய நாடும் தப்பவில்லை.

இன்றைக்கு ஐரோப்பிய மக்கள் வசதியாக வாழ்கிறார்கள் என்றால், அதற்கு அங்கு நடந்த வர்க்கப் போராட்டம் தான் காரணம். நெதர்லாந்து நாட்டின் வர்க்கப் போராட்ட வரலாறு பற்றி அதிகமாக அறிந்திருப்பதால், அதைப் பற்றி தொடர்ந்து விரிவாக எழுத விரும்புகிறேன். இந்தியா, இலங்கையில் இன்றைக்கும் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு அந்தத் தகவல்கள் பிரயோசனமாக இருக்கும்.

இரண்டாம் உலகப்போர் காலம் வரையில், தொழிலாளர்கள் ஏழ்மையில் வாழ்ந்தார்கள். பதினாறு சதுர அடி கொண்ட சிறிய வீட்டுக்குள், ஒரு பெரிய குடும்பம் வசித்தது. படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிப்பறை, எல்லாம் ஒரே இடத்தில் தான் இருக்கும். அதற்குள், தந்தை, தாய், ஐந்து பிள்ளைகள் வாழ்வது சர்வ சாதாரணம்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். குழந்தைத் தொழிலாளர்கள் அந்தக் காலங்களில் சர்வ சாதாரணம். நெசவாலைகளில் தரையில் கொட்டும் நூல்களை பொறுக்குவது போன்ற வேலைகளில் சிறுவர்கள் ஈடுபடுத்தப் பட்டனர். அதனால், இயந்திரங்களுக்கு நடுவில் சிக்கி பல சிறுவர்கள் கைகளை இழந்துள்ளனர்.  

சிறார் தொழிலாளிகளுக்கு கொடுத்த சம்பளமும் மிகக் குறைவு என்பதை இங்கே குறிப்பிடத் தேவையில்லை. ஏன் அவர்களின் பெற்றோர்கள் பாடசாலைக்கு அனுப்பவில்லை என்று கேட்கலாம். வறுமையில் வாழ்ந்த பெற்றோருக்கு வேறு வழி இருக்கவில்லை. தமது பிள்ளைகளும் சேர்ந்து சம்பாதித்தால் தான் அன்றாட உணவு கிடைக்கும் என்ற நிலைமை.

தொழிலாளர்கள் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து வேலைக்கு செல்ல வேண்டும். சிறுவர்களும் தான். மதிய உணவு இடைவேளைக்கு மட்டும் ஒரு மணிநேரம் ஓய்வு கிடைக்கும். அதற்குப் பின்னர், இரவு ஏழு மணி வரையில் வேலை செய்ய வேண்டும். நாளொன்றுக்கு பதினான்கு அல்லது பதினாறு மணி நேர வேலை சர்வ சாதாரணம். வாரத்தில் ஆறு நாட்களும் வேலை இருக்கும். ஞாயிற்றுக் கிழமை மட்டுமே ஓய்வு நாள்.

தொழிலாளர்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப் பட்டிருந்த போதிலும், தொழிற்சங்கங்களில் சேர்ந்து கொண்டார்கள். பல இடங்களில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றன. வேலைக்குப் போனால் மட்டும் தான் சம்பளம் கிடைக்கும் என்றிருந்த காலத்தில், ஒரு நாள் வேலை நிறுத்தம் கூட, அவர்களின் வாழ்க்கையில் எந்தளவு பாதிப்பை உண்டாக்கியிருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. ஆயினும், உரிமைகளை பெறுவதற்காக மனம் தளராமல் போராடினார்கள். 

நெதர்லாந்தின் வர்க்கப் போராட்டம், 1906 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட NVV (Nederlands Verbond van Vakverenigingen - நெதர்லாந்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு) சோஷலிச தொழிற்சங்கத்துடன் தொடங்கியது. 

அதற்கு முன்னரே, 19 ம் நூற்றாண்டில் இருந்து அங்கே இயங்கிக் கொண்டிருந்த SDAP (Sociaal-Democratische Arbeiderspartij - சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி) அரசியல் போராட்டங்களை நடத்தியது. SDAP ஒரு மார்க்சிய சமூக - ஜனநாயகக் கட்சியாகும். நெதர்லாந்தில் சோஷலிசத்தை கொண்டு வரும் நோக்கில் உருவாக்கப் பட்டது.

NVV தொழிற்சங்க நடவடிக்கைகள் ஊடாக சோஷலிசத்தை கொண்டு வர விரும்பியது. சோஷலிசம் என்றால், குறிப்பாக மத்தியதர வர்க்க  இளைஞர்கள் பலருக்கு என்னவென்ற தெளிவில்லை என்பது தெரிகின்றது. ஓய்வூதியம், விடுமுறை, எட்டு மணி நேர வேலை, பல்வேறு காப்புறுதிகள், இவையெல்லாம் சோஷலிசம் தான்.


அது மட்டுமல்ல, அனைவருக்கும் கல்வி, மருத்துவ வசதி, வாக்குரிமை இவை கூட சோஷலிசத்திற்கான போராட்டம் மூலம் தான் சாத்தியமானது. அவை எதையும் அரசு சும்மா தூக்கிக் கொடுக்கவில்லை. தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக நீண்ட காலம் போராட வேண்டியிருந்தது.

உலகில் எல்லா நாடுகளிலும் நடப்பதைப் போன்று, நெதர்லாந்திலும் முதலாளிகள் தமக்கு சார்பான கருங்காலி தொழிற்சங்கத்தை உருவாக்கி இருந்தனர். CNV என்ற கிறிஸ்தவ தொழிலாளர் சங்கம், முதலாளிகளுடன் சமரசமாகப் போவதை விரும்பியது. (முதலாளியும் கிறிஸ்தவர். ஆகவே கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வாதிட்டார்கள்.)

1906 ம் ஆண்டு, NVV ஒரு சஞ்சிகையை வெளியிட்டு வந்தது. Het Volk (மக்கள்) என்ற சோஷலிச மாற்றத்திற்கான சஞ்சிகையின் அட்டைப் படத்தை இங்கே பார்க்கிறீர்கள். "வர்க்கப் போராட்டம்" என்ற தலைப்பின் கீழான கருத்துப் படம் வரையப் பட்டுள்ளது. கீழே, கிறிஸ்தவ தொழிலாளர் சொல்கிறார்: "நான் போராட்டத்தை விரும்பவில்லை. ஒத்துழைப்பதை விரும்புகிறேன்." அதற்கு முதலாளி கூறுகிறார்:"சரியாகச் சொன்னாய்... அது தான் எனது நோக்கமும்...பட்...பட்..."




மேலதிக தகவல்களுக்கு:
Naar groter eenheid, De geschiedenis van het Nederlands Verbond van Vakvereningen 1906 -1981

Friday, April 24, 2015

சம்பளம் கொடுக்காத முதலாளியை பிடித்து கூண்டுக்குள் அடைத்த தொழிலாளர்கள்


இது தான் முதலாளித்துவத்தின் கெட்ட கனவு. உண்மையில், உலகம் முழுவதும் தொழிலாளர்கள் பெரும்பான்மையினராக இருப்பதால், முதலாளிகளுக்கு தமது பாதுகாப்பு குறித்து அச்சமேற்படுவது இயல்பு.

2013 ம் ஆண்டு, சீனாவில் உள்ள ஒரு அமெரிக்க தொழிலதிபரின் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள், சில நாட்களாக தமது முதலாளியை பணயக் கைதியாக பிடித்து வைத்திருந்தார்கள்.

கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப் படாததால், கொதிப்புற்ற தொழிலாளர்கள் கம்பனி நிர்வாகியை பிடித்து அடைத்து வைத்தார்கள். பலர் பணி நீக்கம் செய்யப் படலாம் என்ற அச்சமும், அவர்களை இந்த நடவடிக்கையை எடுக்க வைத்துள்ளது.

ஒரு கூண்டுக்குள் அடைக்கப் பட்ட விலங்கு போன்ற நிலையில் உள்ள முதலாளிக்கு, படுப்பதற்கு ஒரு படுக்கை மட்டுமே கொடுத்திருந்தார்கள். அணைக்கப் படாத மின்குமிழ் வெளிச்சம், சுற்றியுள்ள தொழிலாளரின் கூச்சல் காரணமாக தன்னால் உறங்க முடியவில்லை என்று அந்த நிர்வாகி குறைப் பட்டார்.

அவர் தப்பியோட முடியாதவாறு, வெளியே 60 அல்லது 70 தொழிலாளர்கள் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆறு நாட்களாக, உடுத்த உடுப்புடன் காலம் கழிக்க வேண்டிய அவலம் நேர்ந்துள்ளது. ஆனால், தொழிலாளர்கள் அவருக்கு மூன்று வேளை உணவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

பணயக் கைதியாக அடைத்து வைக்கப் பட்டிருந்த முதலாளியை விடுவிப்பதற்கு, அமெரிக்க தூதுவராலயம் சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியில், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்த பின்னர் விடுதலை செய்யப் பட்டார். 

உலகம் முழுவதும் தொழிலாளர்களை சுரண்டிக் கொழுக்கும், இரக்கமற்ற முதலாளிகளுக்கு இது ஒரு பாடமாகவும், எச்சரிக்கையாகவும்  அமையும்.


மேலதிக விபரங்களுக்கு:
American boss held hostage by Chinese workers in Beijing - video 

Monday, April 16, 2012

நோர்வே சோஷலிச இயக்கத்தின் தோற்றம்

உழைக்கும் மக்களின் போராட்டம் நடைபெறாத, குறைந்தது நிறுவனமயமாக்கல் ஏற்படாத ஐரோப்பிய நாடுகள் எதுவும் கிடையாது. ஆனால், அதே போன்ற மக்கள் எழுச்சிகள், ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் தோன்றாததற்கு பலரும் பல வகையான காரணங்களை கூறுகின்றனர். பல சமூகப் புரட்சிகள் தோன்றிய 19 ம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள், தமது நாடுகளில் நடந்த சம்பவங்களைப் பற்றிய தகவல்கள், காலனிகளில் வாழ்ந்த மக்களைப் போய்ச் சேராதவாறு இருட்டடிப்புச் செய்து வந்துள்ளனர். பிரான்ஸில் ஏற்பட்ட பாட்டாளி வர்க்கப் புரட்சி தோல்வியடைந்த போதிலும், அது அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் புரட்சித் தீயை மூட்டி விட்டது. ஐரோப்பிய கண்டத்தின் வட முனையில் அமைந்துள்ள, நோர்வே நாட்டில் கூட பிரெஞ்சுப் புரட்சி தாக்கம் செலுத்தியுள்ளது. அந்த நாட்டில் முதன் முதலாக தொழிலாளர் அமைப்பை ஸ்தாபித்த மார்குஸ் திரானே (Marcus Thrane) பற்றிய பதிவு இது. 


இன்றைய நோர்வேயின் ஆளும் கட்சியும், சமூக ஜனநாயக கட்சியுமான, தொழிலாளர் கட்சி (Arbeiderspartiet), தன்னை "மார்குஸ் திரானே இயக்கத்தின்" நீட்சியாக கூறிக் கொள்கின்றது. இருப்பினும், 1880 முதல் 1890 வரையில், நோர்வேயின் தொழிலாளர் வர்க்கத்தை ஒன்று திரட்டி, அவர்களின் உரிமைகளுக்காக போராடிய அமைப்பு இன்று இல்லை. நோர்வேயின் சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, மாவோயிஸ்ட் கட்சி, எல்லாவற்றுக்கும் அதுவே முன்னோடி. 1849 ம் ஆண்டளவில், ஒரு மாணவனாகவிருந்த மார்குஸ் திரானே, நோர்வேயின் முதலாவது தொழிலாளர் அமைப்பை நிறுவினார். ஆரம்பத்தில் அந்த அமைப்பில் 160 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். அந்த அமைப்பின் புரட்சிகரமான கருத்துகளால் ஈர்க்கப்பட்ட மக்கள் ஆயிரக் கணக்கில் அணி திரண்டனர். 1850 ம் ஆண்டளவில், நோர்வே முழுவதும் 300 தொழிற்சங்கங்களும், அவற்றில் 30000 உறுப்பினர்களும் இருந்தனர். சாதாரண தொழிலாளர்கள் மட்டுமல்லாது, சிறு வணிகர்கள், கைவினைப் பொருள் தயாரிப்பாளர்கள், ஆகியோரும் உறுப்பினர்களாக சேர்ந்திருந்தனர். அன்று அவர்கள் எல்லோரும் "திரானியர்கள்" (Thranittere) என்று அழைக்கப் பட்டனர்.

திரானியர்கள், நோர்வீஜிய மக்கள் சகலருக்குமான சம உரிமைகளுக்காக குரல் கொடுத்தனர். அன்று பிரபுக்களும், வசதிபடைத்தோரும், நிலவுடைமை விவசாயிகளும் மட்டுமே தேர்தலில் வாக்களிக்கலாம் என்ற நிலைமை இருந்தது. அதனால், அனைத்துப் பிரஜைகளுக்குமான வாக்குரிமைக்காகவும் போராடினார்கள். அரசு, அனைவருக்கும் பொதுவான கல்வித் திட்டத்தில் முதலிட வேண்டுமெனவும், உணவுப் பொருட்களின் விலைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் எனவும் கோரி வந்தனர். மேலும், நிலமற்ற ஏழை மக்களுக்கு, அரசாங்கமே நிலம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தது. திரானியர்கள் நடைமுறைப் படுத்தக் கோரிய, பொருளாதார மாற்றங்களைத் தவிர, சமூக மாற்றங்களும், அதிகாரத்தை கையில் வைத்திருந்த வர்க்கத்தினர் மத்தியில் அதிர்வலைகளை தோற்றுவித்தது.

அன்றைய கால கட்டத்தில், சொந்தமாக, ஆயிரக்கணக்கான பரப்பளவில் நிலம் வைத்திருந்த விவசாயிகள் மட்டுமே இராணுவ சேவையிலும் ஈடுபடுத்தப் பட்டனர். மத்திய காலங்களில், போரில் அந்நிய நாட்டின் பகுதிகளை ஆக்கிரமிக்கும் இராணுவம், போர் முடிந்த பின்னர் ஆக்கிரமித்த நிலங்களை தமக்குள் பங்கிட்டுக் கொள்வது வழக்கம். ஒரு குறிப்பிட்ட வர்க்கம், அல்லது சாதியை சேர்ந்த மக்கள், விவசாயிகளாகவும், இராணுவ வீரர்களாகவும் இருப்பது, அன்றைய ஐரோப்பாவில் சர்வ சாதாரணம். ஒரு நாட்டின் வளங்கள் யாவும் அந்த வர்க்கத்தின்/சாதியின் ஆதிக்கத்திற்குள் அடங்கி விடும். இதனால், அனைத்து பிரஜைகளும் இராணுவ பயிற்சி பெற வேண்டும் என்ற கோரிக்கை, அந்த வர்க்கத்தின் இருப்புக்கு விடுக்கப் பட்ட அச்சுறுத்தலாக பார்க்கப் பட்டது.

நோர்வீஜிய நிலப்பிரப்புக்கள், அரச அதிகாரிகளின் கண்களுக்கு, மார்குஸ் திரானே ஒரு "பயங்கரவாதி" போன்று தோற்றமளித்தார். 1851 ம் ஆண்டு, திரானேயும், பிற தொழிற்சங்க தலைவர்களும் கைது செய்யப் பட்டனர். இறுதியில், அவர் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து செல்ல சம்மதித்தார். உண்மையில், அவர் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப் பட்டார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், திரானே இயக்கத்தின் நீட்சி என்று கூறிக் கொள்ளும் தொழிலாளர் கட்சியின் ஆட்சியிலும், புரட்சிகர அமைப்புகள் அடக்கப் பட்டன. அதற்கு காரணம், சமூக ஜனநாயக கட்சி, தனது அடித்தளமான தொழிலாளர் வர்க்கத்தை காட்டிக் கொடுத்து, ஆளும் வர்க்கத்துடன் சமரசம் செய்து கொண்டுள்ளது. இது நோர்வேயில் மட்டும் நடக்கவில்லலை, அநேகமான ஐரோப்பிய நாடுகளில் இது தான் நிலைமை. இதனால், அதிலிருந்து பிரிந்து சென்ற நோர்வீஜிய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிய-லெனினிச சித்தாந்தத்தை கட்சிக் கொள்கையாக வரித்துக் கொண்டது.

இரண்டாம் உலகப்போர் காலத்தில், நோர்வே ஜேர்மனிய நாஜிப் படையினரினால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. நாஜி ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திய கட்சி என்பதால், மக்கள் மத்தியில் பிரபலமடைந்திருந்தது. போர் முடிந்த பின்னர் நடந்த முதலாவது பொதுத் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சி அமோக வெற்றி பெற்றது. 12 சதவீத வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானது. ஆளும் வர்க்கத்திற்கு அதைக் கூட சகிக்க முடியவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் அரசால் அச்சுறுத்தப் பட்டனர். அவர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப் பட்டது. இதனால், நோர்வீஜிய கம்யூனிச கட்சி பலவீனமடைந்தது. நோர்வேயில் உழைக்கும் வர்க்க மக்களின் போராட்டத்தை ஒடுக்கி விட்டோம் என்று, ஆளும் வர்க்கம் நம்பியது. 1973 ம் ஆண்டு, புதியதொரு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி அவதரித்தது. வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்காவின் அட்டூழியங்களை கண்ட இளந் தலைமுறையினர், தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சி (Arbeidernes kommunistparti) என்ற புதிய மாவோயிச கட்சியை உருவாக்கினார்கள். ஆனால், காலப்போக்கில் அதுவும் சீரழிந்து, சின்னாபின்னமாகி விட்டது.


மார்குஸ் திரானே யின் வாழ்க்கைக் குறிப்புகளும், அவர் எழுதிய நூல்களும் (நோர்வீஜிய மொழியில்) :
Marcus Thrane


 *********************************************** 
 பிற்குறிப்பு: தமிழுலகம் அறிந்திராத ஐரோப்பிய இடதுசாரி சிந்தனையாளர்கள், அவர்களின் படைப்புகளைப் பற்றிய அறிமுகத் தொடர் இது. 

 இதோடு தொடர்பான முன்னைய பதிவுகள்: முதலாளித்துவ அமைப்பில் வேலை ஒரு சாபம்!

Friday, June 03, 2011

இலங்கையில் எழுந்துள்ள தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவு

மஹிந்த சிந்தனை அரசாங்கம் அடிப்படையில் மக்கள் விரோத தொழிலாளர் விரோத நிலைப்பாட்டை முன்னெடுத்துவரும் ஒரு முதலாளித்துவ ஒடுக்குமுறை அரசாங்கம் என்ற உண்மையை கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீதான திட்டமிட்ட கொடூரத் தாக்குதல் நன்கு வெளிச்சமிட்டுக் காட்டியூள்ளது. ஒரு இளம் ஊழியர் கொல்லப்படவும் நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் காயங்கள், படுகாயங்கள் படவும் காரணமாக அமைந்த மிருகத்தனமான பொலீஸ் தாக்குதலை புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. அதேவேளை தொழிலாளர்கள் ஊழியர்களின் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் பெற்றுள்ள தனியார் ஓய்வூதிய உத்தேச சட்ட மூலத்தை உடன் வாபஸ் வாங்க வேண்டும் எனவும் கட்சி வற்புறுத்துகின்றது.

இவ்வாறு புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; மகிந்த சிந்தனை அரசாங்கம், எவ்வளவிற்கு தொழிலாளர் ஆதரவு அரசாங்கம் என வேடமிட்டுக் கொண்டாலும், அதற்கு பாராளுமன்ற இடதுசாரிகள் பதவிகளுக்காகப் பக்கவாத்தியங்கள் வாசித்தாலும், அதன் மக்கள் விரோத தொழிலாளர் விரோத அடக்கு முறை ஆட்சி அதிகாரப் போக்கை மறைத்து விடமுடியாது, என்பதையே கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீதான பொலீஸ் தாக்குதல் வெளிக் காட்டியுள்ளன. இன்றைய ஜனாதிபதி அன்று தொழில் அமைச்சராக இருந்த வேளை, நிறைவேற்ற முற்பட்ட தொழிலாளர்களுக்கு ஓரளவு தானும் சாதகமானதாக இருந்த தொழிலாளர் சாசனம், உள்நாட்டு வெளிநாட்டு முதலாளித்துவப் பெரு நிறுவனங்களினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் கடும் அழுத்தங்களால் கைவிடப்பட்டது. இன்று நிறைவேற்று அதிகாரத்தின் உச்சத்தில் இருந்து வரும் ஜனாதிபதியால், அது பற்றி எதுவுமே பேச முடியவில்லை. அதே வேளை சர்வதேச நாணய நிதியத்தினது ஆலோசனையின் கீழ் உள்நாட்டு வெளிநாட்டு முதலாளித்துவ நிறுவனங்களின் சுரண்டலுக்கும், தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறித்து அவர்களது சேமிப்பை கொள்ளையிடவும் வழி வகுக்கும்.

தனியார் துறையினருக்கான ஓய்வூதியச் சட்டத்தைக் கொண்டுவர முன் நிற்பது அதன் தொழிலாளர் விரோத நிலைப்பாட்டையும், அந்நிய ஏகாதிபத்திய சார்பையும் தான் வெளிப்படுத்துகிறது. பொருட்களின் மீதான விலை அதிகரிப்பையும் வாழ்க்கைச் செலவு உயர்வையும் திசை திருப்புவதற்கு, அரசாங்கம் தேசிய இனப் பிரச்சினையைப் பயங்கரவாதமாகக் காட்டியதுடன், வடக்கு கிழக்கு மக்கள் மீதான ஒடுக்குமுறையை சிங்கள் உழைக்கும் மக்கள் மத்தியில் நியாயப்படுத்தியும் வந்தது. ஆனால் அதே ஒடுக்குமுறைச் சட்டங்களைக் கொண்டும், ஆயுதப்படைகளைப் பயன்படுத்தியும், சிங்கள உழைக்கும் மக்களையும், அவர்களது நியாயமான கோரிக்கைகளையும், அப்பட்டமாகவே மறுத்து அடக்கும் போக்கு இன்று வெளிப்பாடடைந்து வேகம் பெற்று வருவதையே கட்டுநாயக்க தாக்குதல் சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. கட்டுநாயக்க சுதந்திர வலைய ஊழியர்களும் ஏனைய தனியார் துறைத் தொழிலாளர்களும் காட்டிவரும் எதிர்ப்பையும் உறுதியான போராட்ட நிலைப்பாட்டையும் எமது கட்சி முழுமையாக ஆதரித்து நிற்கிறது.

எவ்வளவிற்கு பௌத்த தர்மம் பற்றிப் பேசினாலும், சிங்கள இனமொழி மேன்மை பற்றி எடுத்துரைத்தாலும் ஆளும் வர்க்க அரசாங்கங்கள் வர்க்க நிலையில் முதலாளித்துவ அடிப்படையையும் ஏகாதிபத்திய அரவணைப்பையும் கொண்டதேயாகும். இதனை பெரும்பான்மையான சிங்கள உழைக்கும் மக்கள் நடைமுறை அனுபவங்கள் மூலம் உணர்ந்து, நாட்டின் தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் மக்களோடும் தொழிலாளர்களோடும் ஐக்கியப்பட்டு, பரஸ்பரம் உரிமைகளை வென்றெடுக்க முன்வரல் வேண்டும் என்பது அவசியமானதாகும் என அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

சி.கா. செந்திவேல்
பொதுச் செயலாளர்
புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி


(ஊடகங்களுக்கான அறிக்கை, 2.06.2011)

Friday, February 25, 2011

எகிப்திய தொழிலாளர் போராட்டம் தொடர்கிறது...

எகிப்தை இரும்புப்பிடிக்குள் வைத்திருந்த சர்வாதிகாரி முபாரக் பதவி விலகிய உடனேயே, தொலைக்காட்சி கமெராக்கள் எகிப்தை விட்டு அகன்று விட்டன. அவர்களைப் பொறுத்த வரையில், எகிப்தின் பிரச்சினைகள் எல்லாம் முபாரக்குடன் ஓடிப்போய் விட்டன. ஆட்சிப்பொறுப்பை ஏற்ற இராணுவத் தலைமை, கெய்ரோ நகர தாகிர் சதுக்கத்தில் குழுமியிருந்த ஆர்ப்பாட்டக்க்காரர்களை அப்புறப்படுத்தியது. ஆனால் இன்றைக்கும் நாடளாவிய தொழிலாளர் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. ஊடகங்கள் அவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. கெய்ரோ நகரில் கல்வி அமைச்சு அருகில் சென்றால், அங்கே ஆசிரியர்கள் போராடுவதைப் பார்க்கலாம். இன்னும் சிறிது தூரம் கடந்து சென்றால், நைல் பருத்தி ஆலை தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம். இந்தப் போராட்டங்கள் யாவும் நாடு முழுவதும் முன் வைக்கும் அடிப்படை கோரிக்கை ஒன்றாகவுள்ளது. "அனைத்து தொழிலாளருக்கும் குறைந்த பட்ச ஊதியம் இவ்வளவு என்று தீர்மானிக்கப்பட வேண்டும். தகுதி வாய்ந்த தொழிலாளருக்கு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்." முகாமைத்துவம், அரசு சார்பு தொழிற்சங்கம், அமைச்சகம் போன்றவற்றில் நிலவும் ஊழலை ஒழிப்பதும் இன்னொரு முக்கியமான கோரிக்கை.

எகிப்திய தொழிலாளரின் போராட்டம், புரட்சியை முன்னெடுத்த இளைஞர்களையும் பிளவுபடுத்தியுள்ளது. மார்க்சிய, அல்லது பிற இடதுசாரி கொள்கைகளைக் கொண்ட இளைஞர்கள் தொழிலாளர் போராட்டத்தை ஆதரிக்கின்றனர். அதே நேரம், மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த இளைஞர்கள், "புதிய அரசுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்." என்று கூறி வருகின்றனர். நிச்சயமாக, புதிய இராணுவ ஆட்சியாளர்களுக்கு இத்தகைய போராட்டங்கள் உவப்பானதாக இருக்கவில்லை. "தொழிலாளரின் போராட்டம், புரட்சியையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்கின்றது." என்று அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். முன்னாள் சர்வாதிகாரி முபாரக்கினால் நியமிக்கப்பட்ட, சக்தி வாய்ந்த தொழிற்சங்கமான "எகிப்திய தொழிற்சங்கங்களின் சம்மேளனம்" கூட போராட்டத்தை நிராகரிக்கின்றது. "இந்தப் போராட்டங்கள் தேவையற்றவை. அதிக ஊதியம் கோருவது, நிர்வாகியை மாற்றக் கோருவது, இவை எல்லாம் அதி தீவிரமானவை." இவ்வாறு சம்மேளனத்தின் தலைவர் இப்ராஹீம் அல் அஸாரி தெரிவித்தார்.

ஆயினும் எகிப்திய தொழிலாளர்கள், யாருடைய "அறிவுரைகளையும்" கேட்பதாயில்லை. போராடினால் தான் தமது உரிமைகளை வெல்ல முடியும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். சில இடங்களில் அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, எகிப்தின் மாபெரும் ஆடை தயாரிப்பு நிறுவனமான Ghazl El-Mahalla வில் நடந்த போராட்டம். மூன்று நாட்கள் மட்டுமே தொடர்ந்த வேலை நிறுத்தப் போராட்டம், நிர்வாகத்தை அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ள வைத்தது. அந்தப் பிரதேசத்தை சேர்ந்த பிற உழைப்பாளர்களும், ஆர்வலர்களும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். வெற்றிக் களிப்பில் மிதந்த தொழிலாளர்கள், புதிதாக சுயாதீனமான தொழிற்சங்கம் ஒன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். Ghazl El-Mahalla போராட்ட வெற்றி குறித்து கேள்விப்பட்ட வேறு நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களும் தமக்கென தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். தபால் துறை, மற்றும் பொதுப் போக்குவரத்து துறைகளை சேர்ந்த ஊழியர்கள் ஏற்கனவே தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

எகிப்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் எந்தவொரு தொழிற்சங்கத்திலும் அங்கம் வகிக்கவில்லை. குறிப்பாக, தனியார் துறைகளில் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையும் முதலாளிகளினால் முடக்கப்பட்டன. அரசுத் துறைகளை, அரசு சார்பான "தொழிற்சங்கங்களின் சம்மேளனம்" ஆக்கிரமித்திருந்தது. ஆனால் அதற்கான தேர்தல்களில் முறைகேடுகள் பல நடந்துள்ளன. அதற்கெதிரான பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. கடந்த மாதம், கெய்ரோ தாஹிர் சதுக்கத்தில் இடம்பெற்ற மக்கள் எழுச்சியை அடக்கும் நடவடிக்கையிலும், அரசு சார்பு தொழிற்சங்கம் இறங்கியது. குறிப்பாக தொழிலாளர்களின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட இடங்களில் புகுந்து வன்முறை பிரயோகித்துள்ளனர். புரட்சிக்குப் பின்னான எகிப்தில், தொழிலாளர்கள் கிடைத்த சுதந்திரத்தை சரியாக பயன்படுத்த விரும்புகின்றனர். சர்வதேச தொழிலாளர் சட்டத்தில் எகிப்தும் கையெழுத்திட்டுள்ளது. அதனால், சுயாதீனமான தொழிற்சங்கங்களை அமைப்பதற்கும் எகிப்திய தொழிலாளருக்கு உரிமை உண்டு. எகிப்தில் 1952 ல் முதலாவது தொழிற்சங்கம் அமைக்கப்பட்டது. எகிப்திய தொழிலாளர்களின் போராட்டத்திற்கு நீண்டதொரு வரலாறுண்டு. மேற்கத்திய அரசுகளும், ஊடகங்களும் இத்தகைய உண்மைகளை வெளியுலகிற்கு மறைத்து வருகின்றன. "முஸ்லிம் சகோதரத்துவம்" என்ற மத அடிப்படைவாத கட்சியை சுட்டிக்காட்டி, "இஸ்லாமியப் பூச்சாண்டி" காட்டிக் கொண்டிருக்கின்றன. "மதம் சோறு போடாது," என்ற உண்மையை எகிப்திய உழைக்கும் வர்க்கம் எப்போதோ உணர்ந்து கொண்டு விட்டது.
*************************


Wednesday, December 29, 2010

ஏதென்ஸ் நகரில் போலிஸ்- தொழிலாளர் மோதல்

டிசம்பர் 15, ஏதென்ஸ் நகரை ஸ்தம்பிக்க வைத்த மாபெரும் வேலைநிறுத்தத்தின் போது, அரச ஒடுக்குமுறை இயந்திரமான போலிசை எதிர்த்து போராடும் தொழிலாளர்கள். பெருமளவு உல்லாசப்பயணிகளை கவரும் ஏதென்ஸ் நகரம் அன்று போர்க்களமாக காட்சி அளித்தது.

Wednesday, July 15, 2009

வேலையில்லை எனில் தொழிலகம் தகர்த்திடுவோம்

பிரான்ஸ், Nortel தொலைத் தொடர்பு நிறுவனத்தின் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், நஷ்டஈட்டுத் தொகை வழங்காவிட்டால் தொழிற்சாலையை தகர்க்கப் போவதாக அறிவித்துள்ளனர். Nortel நிறுவனத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட 480 தொழிலாளர்கள், தொழிற்சாலையை ஆக்கிரமித்திருந்தாலும், அவர்கள் வைத்திருக்கும் சிலின்டர்களில் இன்னும் 'காஸ்' நிரப்பப்படவில்லை, என்று Le Parisien நாளேடு தெரிவித்துள்ளது. கனடிய வர்த்தக நிறுவனமான Nortel நிதி நெருக்கடிக்கு உள்ளானதால், கடன்களை அடைக்கும் காலக்கெடுவை ஒத்தி வைக்குமாறு வழக்கு தாக்கல் செய்துள்ளது.

New Fabris என்ற வாகன உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று பொருளாதார நெருக்கடி காரணமாக தொழிலாளரை நஷ்ட ஈடு வழங்காமல் பணி நீக்கம் செய்தது. இதனால் ஆத்திரமுற்ற தொழிலாளிகள், தாம் வேலை செய்த தொழிற்சாலையை ஆக்கிரமித்ததுடன் மட்டும் நில்லாது, எரிவாயு சிலிண்டர்கள் மூலம் தகர்க்கப் போவதாக எச்சரித்துள்ளனர். இம்மாத இறுதியில் ஆளுக்கு 30000 யூரோ நஷ்டஈடு வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வாகன உதிரிப்பாக தொழிலகம் கடந்த ஜூன் 16 ம் திகதி திவாலானதாக அறிவிக்கப்பட்டது. தொழிற்சாலை இயந்திரங்களின் மொத்த பெறுமதி இரண்டு மில்லியன் யூரோ என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடன் வழங்கிய பிரெஞ்சு அரசு இயந்திரங்களை விற்று, தொழிலாளிகளின் பணத்தை கொடுக்குமாறு, தொழிற்சாலை நிர்வாகம் கையை விரித்துள்ளது. பிரான்ஸில் ஏற்கனவே இது போன்ற போர்க்குணம் மிக்க தொழிற்சங்க நடவடிக்கை மூலம் தொழிலாளர்கள் தமது உரிமைகளைப் பெற்றுள்ளனர். மேலதிக விபரங்கள் தொடரும்.

ஏப்ரல் மாதம், பிரான்ஸ், கிரனோபில் நகரில் அமைந்துள்ள Caterpillar தொழிற்சாலையில் 733 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து கம்யூனிச தொழிற்சங்கத்தின் தலைமையில் அணி திரண்ட தொழிலாளர்கள், நான்கு உயர்மட்ட நிர்வாகிகளை பணயக்கைதிகளாக பிடித்து வைத்தனர். நிர்வாகிகள் நாட்கணக்காக தமது அலுவலகத்தினுள் கைதிகளைப் போல அடைந்து கிடந்தனர். இருதய சுகயீனமுற்ற ஐந்தாவது நிர்வாகி ஒருவரை மட்டும் வீடு செல்ல அனுமதித்தனர். அதுவும் "முரட்டு முதலாளி" என்ற வசவுகளுக்கு மத்தியில் தான் வெளியேற வேண்டியிருந்தது. பிரான்ஸில் பணயமாக தடுத்து வைப்பது ஐந்து வருட தண்டனை வாங்கித் தரும் குற்றமாக கருதப்படுகின்றது. இருப்பினும் பிரெஞ்சு அரசு தொழிலாளரை தண்டிக்க முன்வரவில்லை. ஒரு சில வாரங்களுக்குள், பிரான்ஸில் இது போன்ற நான்கு சம்பவங்கள் நடந்து விட்டன.

பிரான்ஸில் 'பிதிவியேர்' என்ற சிறிய நகரில் உள்ள 3M தொழிலகத்தில் 110 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படப்போகிறார்கள், என்ற முடிவை கேள்வியுற்ற அந்தக் கணமே, நிர்வாகி தனது அலுவலகத்தில் 24 மணிநேரம் கைதியாக அடைத்து வைக்கப்பட்டார். பணி நீக்கம் செய்யும் முடிவை வாபஸ் வாங்கிய பின்னரே வீடு திரும்ப முடிந்தது. ஒக்செர் என்னும் நகரில் தொழிற்சாலையை மூடுவதற்கு எதிராக தொழிலாளர்கள் நடத்திய ஊர்வலத்தில் சம்பந்தப்பட்ட முதலாளியும் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. அதாவது அந்த முதலாளி தன்னையே எதிர்த்து கோஷம் போட நிர்ப்பந்திக்கப்பட்டார்.

இதுவரை நடந்த போர்க்குணாம்சம் மிக்க தொழிற்சங்க போராட்டங்கள் பல வெற்றியடைந்துள்ளன. பிரெஞ்சு அரசாங்கம் ஒன்றில் தொழிலாளர் பக்கம் நிற்கின்றது, அல்லது நடப்பதை வேடிக்கை பார்க்கின்றது. இதே நேரம், தொழிற்சாலைகளில் பல்வேறு இடதுசாரி அமைப்புகள், தொழிற்சங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. யாருடைய போராட்ட அணுகுமுறை சிறந்தது, என்பதில் அவர்களிடையே ஒரு போட்டியே நடக்கின்றது.


மேலதிக தகவல்களுக்கு:
French workers take boss hostage
French auto workers threaten to blow up factory

Wednesday, April 08, 2009

பிரிட்டிஷ் தொழிற்சாலையை கைப்பற்றிய தொழிலாளர்கள்

பிரிட்டனில் மூன்று கார் உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றிய தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து விட்டு, தொழிற்சாலையை மூடிவிட நிர்வாகம் முயன்ற வேளை, தொழிலாளர்கள் தொழிற்சாலையை கைப்பற்றியுள்ளனர். அது தொடர்பான காணொளி கீழே:
Hundreds of workers occupy three Visteon car manufacturing factories in Britain after the management closed them down, laying off the entire workforce with no notice, violating their contracts. This is reminiscent of the factory occupations of the 1970s.



On Monday 6th April 2009, seven days after occupying their factory in Basildon, Essex, the Visteon car plant workers decide to give their former boss, Steve Gawne, a visit at his country manor to hand-deliver a letter demanding justice be served.

Wednesday, December 10, 2008

சிக்காகோ தொழிற்சாலை தொழிலாளர் உடமையாகியது


அமெரிக்க சரித்திரத்தில் முதல்தடவையாக தொழிலாளர்கள் ஒரு தொழிற்சாலையை தமது உடமையாக்கியுள்ளனர். அமெரிக்காவின் சிக்காகோ நகரத்தில் இயங்கி வந்த, "Republic Windows" என்ற தொழிலகம் அண்மைய நிதிநெருக்கடி காரணமாக, நஷ்டத்தில் நடத்த முடியாமல் இழுத்து மூடிவிட்டது. தொழிற்சாலை நிர்வாகம் கடந்த டிசம்பர் 5 ம் திகதியன்று, அதாவது கடைசி வேலை நாளன்று, வேலை செய்த அனைத்து தொழிலாளருக்கும் 3 நாள் நோட்டீஸ் கொடுத்து பணி நீக்கம் செய்தது. சட்டத்திற்கு மாறான இந்த திடீர் பணி நீக்கத்தை எதிர்த்த தொழிலாளர்கள், தொழிற்சாலையை விட்டு விலக மறுத்து, அங்கேயே தங்கி விட்டனர். நிர்வாகத்தை வீட்டிற்கு அனுப்பி விட்டு, தொழிலாளர்கள் தொழிற்சாலையை தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். கடந்த காலங்களில் ஜெர்மனியில் நடந்தது போல தொழிலாளர்கள் தொழிற்சாலையை எடுத்து நடத்துவார்களா? என்பது தெரியவில்லை. ஆனால் இன்று வரை தொழிலகத்தை ஆக்கிரமித்து மறியல் செய்யும் தொழிலாளருக்கு, அவர்கள் அங்கம் வகிக்கும் United Electrical, Radio and Machine Workers of America (UE)என்ற தொழிற்சங்கம் பக்கபலமாக இருக்கின்றது. தொழிற்சங்க உறுப்பினர்கள் பலர் லத்தீன் அமெரிக்க கண்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டு புஷ் வழங்கிய 700 பில்லியன் உதவித் திட்டத்தின் கீழ் லாபமடைந்த "Bank of America" வங்கி தான், இந்த நிறுவனத்திற்கு இவ்வளவு காலமும் கடன் வழங்கி வந்தது. ஆனால் தன்னை காப்பாற்றிக் கொண்ட வங்கி, சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனத்திற்கு கடன் கொடுக்க மறுத்து விட்டதாகவும், அதனாலேயே தொழிற்சாலையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. அதை நம்பிய தொழிலாளர்கள் டிசம்பர் 3 ம் திகதி, சிக்காக்கோ நகரில் உள்ள வங்கி காரியாலயத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களது குறைகளை கேட்டறிந்த வங்கி, தொழிற்சாலை நிர்வாகத்தை பேச வருமாறு அழைத்து. ஆனால் நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் அங்கே சமூகமளிக்க மறுத்து விட்டனர். அதற்கு எதிர்வினையாகவே, தொழிலாளர்கள் தொழிற்சாலையை தமது உடமையாக்கியுள்ளனர். நிர்வாகம் பல கோடி டாலர் பணத்தை திருடியிருக்கலாம் என்று வதந்தி ஒன்று பரவியதால், தொழிலாளர்கள் தொழிற்சாலை கணக்கு புத்தகங்களை பரிசோதித்துள்ளனர். சிக்காகோ தொழிலாளர் போராட்டம் இன்றுவரை(நான்காவது நாளாக) தொடர்கின்றது. நிதிநெருக்கடி காரணமாக அமெரிக்கா முழுவதும் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். தமது உரிமைக்காக எப்படி போராடுவது என்பதைக் காட்டிய சிக்காகோ தொழிலாளர்கள், அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்திற்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு:
Workers, facing shutdown, take over Chicago factory building

Video: Angry Workers Occupy Factory in Chicago



Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

Wednesday, August 06, 2008

குவைத் தொழிலாளரின் குமுறும் எரிமலை


குவைத்தில் அடிமைத்தனத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த, தெற்காசிய தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. ஆயிரக்கணக்கானோர் நாடுகடத்தப் பட்டனர். சில மாதங்களுக்கு முன்னர் துபாயிலும் இது போன்றே தொழிலாளர், தம்மை அடக்க ஏவிவிடப்பட்ட போலீசாரை எதிர்த்து போரிட்டனர்.

பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு, அரை பாலைவன வளைகுடா நாடுகள், துரித அபிவிருத்திக்கு தெற்காசிய தொழிலாளரின் மலின உழைப்பை பயன்படுத்தி வருகின்றன. நவீன அடிமைகளாக நடத்தப்படும் இந்த தொழிலாளர்கள், ஒன்று சேர்ந்து கிளர்ந்தெழுவதை தடுக்கும் நோக்குடன், பல்வேறு தேசங்களை சேர்ந்த, பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களாக தெரிவுசெய்யப்பட்டனர். இருப்பினும் அடிமைவாழ்வு எல்லோருக்கும் பொதுவானது. இவர்களை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள், தொழிலாளரின் சம்பளங்களை குறைத்து கொடுத்து, அத்தியாவசிய தேவைகளை செலவினங்கள் என்று சொல்லி குறைத்து, அதிக லாபம் கோடி கோடியாக சம்பாதிக்கின்றன. இதைப்பார்த்து சில அமெரிக்க நிறுவனங்களே பொறாமை கொண்டதால், தொழிலாளரின் அடிப்படை வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அரசு நிர்ப்பந்தித்து வருகின்றது.

உலகின் பணக்கார நாடான குவைத்துக்கும், பிற எண்ணைவள வளைகுடா நாடுகளுக்கும், இருண்ட பக்கம் ஒன்றுண்டு. ஆடம்பர மாளிகைகள், வானுயர்ந்த கோபுரங்கள் யாவும் பல்லாயிரக்கணக்கான அடிமைத் தொழிலாளர்களின் உழைப்பில் உருவானவை. இவற்றை நிர்மாணிக்கும் நிறுவனங்கள் பல ஆளும் மன்னர்/ஷேக் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானவை. குவைத்தின் மூன்றில் இரண்டு பங்கு சனத்தொகை வெளிநாட்டவர்களை கொண்டிருக்கும் பட்சத்தில், தனியார் நிறுவனங்களின் 98% மனிதவளம் வெளிநாட்டு தொழிலாளரைக் கொண்டிருப்பது அதிசயமல்ல. இவர்களிலே படித்த, தொழில் தகமையுடைய சிறு பிரிவு மட்டுமே அதிக சம்பளம்(அதுவும் குவைத் பிரசையை விட குறைவு) பெறுகின்றனர்.

அதற்கு மாறாக பெரும்பான்மையான கட்டட நிர்மாண, துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள், மிக குறைந்த சம்பளத்தை (அதிகபட்சம் 100 டொலர்கள்) பெற்று, நகரத்திற்கு ஒதுக்குப்புறமான பாலைவனங்களில் அமைந்த வசதியற்ற தொழிலாளர் குடியிருப்புகளில், ஒரு அறைக்குள் குறைந்தது ஆறு பேர் வாழ வேண்டிய துர்பாக்கிய நிலை. சில கம்பனிகள் சம்பளத்தை மாதக்கணக்காக கொடுப்பதில்லை. குடியிருப்புகளில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில்லை. சில நேரம் அனலாக கொளுத்தும் கோடையில், குளிரூட்டிகள் இல்லாமல் படுக்க வேண்டியிருக்கும். இருப்பினும் வேலை மட்டும் ஒழுங்காக வாங்கப்படும். 40 அல்லது 50 பாகை என்று வெப்பம் கூடினாலும், உயர்ந்த கட்டடங்களில், அந்தரத்தில் நின்று கொண்டே வேலை செய்ய வேண்டும். ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் கடந்த வருடம் முதல்தடவையாக, வெப்பம் 50 பாகைக்கு போகுமானால், 12:30 மணிக்கும் 14:00 மணிக்கும் இடையில் வெளி வேலை செய்ய தடைச்சட்டம் போடப்பட்டது.

கடந்த ஜூலை மாத இறுதியில், குவைத்தில் உள்ள நிறுவனமொன்று தனது பங்களாதேஷ் தொழிலாளருக்கு மாதக்கணக்காக சம்பளம் கொடுக்காத பிரச்சினை, நாடளாவிய ஆசிய தொழிலாளர் எழுச்சிக்கும், மூன்று நாள் வேலைநிறுத்தத்திற்கும் வழிவகுத்தது. சர்வாதிகார ஆட்சி நடக்கும் குவைத்தில், வேலை நிறுத்தம் செய்வதோ, தொழிற்சங்கம் அமைப்பதோ, சம்பள உயர்வு கேட்பதோ சட்டவிரோதம். இருப்பினும் தன்னெழுச்சியாக தொடங்கிய பங்களாதேஷ் தொழிலாளர்களின் போராட்டம், போலிஸ் அடக்குமுறைக்குல்ளானது. நகரின் முக்கிய வீதிகளை ஆக்கிரமித்துக் கொண்ட வேலைநிறுத்தக்காரரை கலைந்து செல்ல வைக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகள் வீசி, தடியடிப்பிரயோகம் செய்ததால், தொழிலாளரும் எதிர் வன்முறையில் ஈடுபட்டனர். வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் எரியூட்டப்பட்டன. சம்பத்தப்பட்ட நிறுவனத்தின் முகவர்கள் சமாதானமாக போகும்படி கூறி, நிலைமையை கட்டுப்படுத்த முயன்றபோது தாக்கப்பட்டனர். கூட்டத்தை கலைத்த போலிசால், அந்த இடத்திலேயே 250 பேர் கைது செய்யப்படனர். தொடர்ந்த போலிஸ் தேடுதல் வேட்டையில் ஆயிரத்துக்கும் குறையாத பங்களாதேஷ் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக தனியான விமானத்தில் நாடுகடத்தப்பட்டனர்.

குவைத் போன்ற வளைகுடா நாடுகளில், தெற்காசிய தொளிலாளர்கள் ஈவிரக்கமற்று சுரண்டப்படுவதும், அவர்களின் அவல வாழ்வும் ஏற்கனவே உலகிற்கு தெரிந்த செய்திகள் தான். ஆனால் அடங்கிக்கிடந்த தொழிலாளர் மனங்களில் அநீதிக்கு எதிரான உணர்வு நீறுபூத்த நெருப்பாக இவ்வளவு காலமும் உறங்கிக் கிடந்தது. இதுவரை இல்லாதவாறு இப்போது மட்டும் தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டங்களில் இறங்குவதற்கு, சில உலக பொருளாதார மாற்றங்கள் முக்கிய காரணமாகும். அண்மைக்காலமாக சர்வதேச சந்தையில் உணவுப்பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், அரிசியின் விலையும் இரண்டு மடங்காகியுள்ளது. பங்களாதேஷ் மக்களுக்கு அரிசி ஒரு முக்கிய உணவு. மேலும் அமெரிக்க டாலரின் பெறுமதி இறங்கி வருவதால், அதனோடு தொடர்புடைய குவைத் டினாரின் பெறுமதியும் வீழ்ந்துள்ளது. இதனால் தமது அற்ப சம்பளம்(75 டாலர்) என்றுமில்லாதவாறு வயிற்றுப்பாட்டிற்கே போதாது என்ற நிலை ஏற்பட்ட போது தான் மேற்குறிப்பிட்ட தொழிலாளரின் தன்னெழுச்சி ஏற்பட்டது. இந்த போராட்டத்தின் விளைவாக குவைத் அரசாங்கம், குறைந்தபட்ச சம்பளம் 150 டாலர்களாக உயர்த்துவதாகவும், இந்த சட்டத்தை மீறும் நிறுவனங்கள் தண்டிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

வளைகுடா நாடுகளின் சட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. தொழில் ஒப்பந்தத்தை மீறும், அவை மோசமான வெளிப்படையான மீறல்களாக இருந்த போதிலும், நிறுவனங்களின் முதலாளிகள் எவரும்(இவர்கள் எப்போதும் அந்நாட்டு பிரசைகள்) இதுவரை தண்டிக்கப்பட்டதாக சரித்திரம் இல்லை. மாறாக உரிமை கோரும் தொழிலாளர்கள் மாத்திரம் கடுமையாக தண்டிக்கப்பட்டு வருகின்றனர். தொழிலமைச்சின் பரிசோதகர்கள் கூட தமது கடமையை திறம்பட செய்வதில்லை. சுமார் இரண்டு மில்லியன் வெளிநாட்டு தொழிலாளரை கொண்ட ஐக்கிய அரபு ராச்சியத்தில் 80 பரிசோதகர்கள் மாத்திரமே உள்ளனர் என்பது, அரசின் அக்கறையின்மையை எடுத்துக் காட்டுகின்றது.

குவைத்தில் தம்நாட்டு தொழிலாளரின் அவலநிலை குறித்து கருத்து வெளியிட்ட சில பங்களாதேஷ் தூதரக அதிகாரிகள், தொழிலாளர்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகின்றனர் என்று விவரித்தனர். தாயகத்தில் மாதம் 188 டாலர்கள் சம்பளமாக தருவதாக ஒப்பந்தம் போடும் நிறுவனங்கள், குவைத் வந்ததும் 75 டாலர் மட்டுமே கொடுக்கின்றன. தொழிலாளருக்கு புரியாத அரபு மொழியில் ஒப்பந்தம் போட்டு, கையெழுத்திட வைத்து ஏமாற்றுகின்றனர். சில அரச நிறுவனப் பணிகளை குத்தகைக்கு எடுக்கும் வேலை முகவர் நிலையங்கள், ஒரு தொழிலாளிக்கு 500 டாலர் படி பெற்றுக்கொண்டாலும், 75 டாலர் மட்டுமே தொழிலாளிக்கு சம்பளமாக கொடுக்கின்றன. ஒருவேளை தொழிலாளி சுகவீனமுற்றால், அந்த நாட்களுக்கு சம்பளம் கொடுப்பதில்லை.
சர்வாதிகார வளைகுடா நாடுகளில், கட்டாரில் மட்டுமே சில வருடங்களுக்கு முன்பு, தொழிற்சங்கம் அமைக்க சட்டம் ஆக்கப்பட்டுள்ளது. துபாயில் குறிப்பிட்ட அளவில் தொழிலாளரின் நிறுவனமயமாக்கல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பாலைவன தொழிலாளர் குடியிருப்புகளில், தற்போது கூட்டம் கூடி, தமது உரிமைகளுக்காக போராடுவது பற்றி விவாதிக்கப்படுகின்றது. துபாய்க்கு வரும் உல்லாசப் பயணிகளை கவர்ந்து, சர்வதேச ஊடக கவனத்தை பெறும் வகையில் ஆடம்பர வியாபார அங்காடிகள், கடற்கரைகள், நெடுஞ்சாலைகள் போன்ற இடங்களில் அமைதியான மறியல் போராட்டங்களை நடத்த திட்டமிடப்படுகின்றது. இவர்கள் ஏற்கனவே ஒருமுறை, துபாயின் உலகப் பிரசித்தி பெற்ற "பேஜ் அல் அரப்" என்ற ஆடம்பர ஹொட்டேலின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, அது உள்ளூர் பத்திரிகைகளின் கவனத்தை ஈர்த்தது.


மக்களின் எந்த உரிமையும் போராடாமல் கிடைக்கவில்லை, என்ற யதார்த்தத்தை குவைத், துபாயில் நடந்த சம்வங்கள் உணர்த்துகின்றன.

___________________________________________________

Friday, April 18, 2008

எகிப்து: மத அடிப்படைவாதம் சோறு போடுமா?

பண்டைய எகிப்து, ரோமர்கள் காலத்தில், ஐரோப்பாவின் உணவுக்களஞ்சியம் என்று பேர் எடுத்தது. உலகப்பேரழகி கிளியோபேட்ரா ஆட்சிக்காலத்தில் ஒருமுறை பஞ்சம் ஏற்பட்ட போது, அரச தாணியக்கிடங்கை திறந்து பொதுமக்களுக்கு உணவளித்ததாக சரித்திரம் கூறுகின்றது. இன்று உலகமயமாகிய பொருளாதரத்தில் அங்கம் வகிக்கும் காலத்தில், உணவுப்பொருள் விலையேற்றம் காரணமாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய போதும், 26 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் ஹொஸ்னி முபாரக், தாணியக்கிடங்கை திறந்து விடவில்லை. அதற்கு பதிலாக போலிஸ் அடக்குமுறையை ஏவி விட்டுள்ளார்.

கடந்த ஒரு வருடமாகவே எகிப்து கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. பருத்தி ஆலைதொழிளார்கள் வேலை நிறுத்தம், தற்போது அரசாங்க ஊழியர்கள் வேலை நிறுத்தம்....இப்படியே தொடர்ந்தால் போலீஸ்காரர்கள் வேலை நிறுத்தம் செய்யாதது தான் மிச்சம். பலதரப்பட்ட பொருளாதர நிலைகளில் வேலைநிறுத்தங்கள் நாட்டையே ஸ்தம்பிக்க வைத்தாலும், அது முபாரக்கின் சர்வாதிகார ஆட்சியை அசைக்கப்போவதில்லை. அதற்கு காரணம், காவல்துறை , இந்த அரசை பாதுகாக்கவே அமைக்கப்பட்டுள்ளது. உயர் மட்ட அதிகாரிகளுக்கு கிடைக்கும் சலுகைகள், செல்வந்த வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தியுள்ளதென்றால், நடுத்தர அதிகாரிகள் லஞ்சப்பணம் பெற்று பிழைத்துக்கொள்கின்றனர்.

கடந்த வருடம் எகிப்திய பொருளாதாரம் ஏழு வீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. இருப்பினும் ஒரு நாளைக்கு இரண்டு டாலர்கள் மட்டுமே சம்பாதிக்கும் மொத்த சனத்தொகையில் நாற்பது வீத எகிப்தியர்களின் சம்பளம் மட்டும் உயரவில்லை. "Kefaya"(போதும்) என்ற பெயரில் ஒரு புதிய மதச்சார்பற்ற மக்கள் இயக்கம், பிற சமூக ஆர்வலர்களுடன் இணைந்து நாடளாவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. விலை வாசி உயர்வு, மாதக்கணக்காக வழங்கப்படாத சம்பளப்பணம், ஊழல், போலிஸ் அடக்குமுறை, அரச பயங்கரவாதம் இவற்றிற்கெதிராக பொது மக்கள் எதிர்ப்பைக்காட்ட வருமாறு அவர்களின் பிரசுரங்கள் அழைப்பு விடுத்தன. தலைநகர் கய்ரோவில் பலத்த போலிஸ் கெடுபிடி காரணமாக வேலை நிறுத்தம் வெற்றியளிக்கவில்லை. ஆனால் தலைநகரில் இருந்து 150 கி.மி. தூரத்தில் உள்ள, பருத்தி தொழிற்சாலைகள் அமைந்துள்ள அல்-குப்ரா என்ற இடத்தில், தொழிலாளர் ஒற்றுமையாக வேலைநிறுத்தத்தில் குதித்ததுடன், அடக்க வந்த போலிஸ் படைகளை எதிர்த்து போராடிய போது, போலிஸ் துப்பாக்கி சூட்டில் ஒரு சிறுவன் கொல்லப்பட்டான். நூற்றுக்கனக்கனோர் கைது செய்யப்பட்டனர். பத்திரிகை நிருபர்கள் எவரும் சம்பவம் நடந்த இடத்திற்கு செல்ல அனுமதிக்கவில்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு அரசாங்கம், வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத தொழிலாளர்களுக்கு போனஸ் என்ற பெயரில் லஞ்சம் கொடுப்பதாக அர்ரிவித்தது. பரந்துபட்ட தொழிலாளர் போராட்டம், அரசாங்கம் ஆட்டம் காணுவதன் அறிகுறி. ஆனால் அதேநேரம், அந்தப்போராட்டம் ஈவிரக்கமின்றி அடக்கப்படலாம். அப்படி நடக்கும் பட்சத்தில் , பல எகிப்தியர்கள் நாட்டை விட்டு தப்பியோடி, ஐரோப்பாவில் புகலிடம் கோரலாம். என்ன அதிசயம், எந்தவொரு ஐரோப்பிய ஊடகமும் இப்போது எகிப்தில் நடக்கும் பிரச்சினைகள் பற்றி கண்டு கொள்ளவில்லை. பின்னர் அகதிகள் வரும் போது, அங்கே என்ன பிரச்சினை என்று, ஒன்றும் தெரியாதது மாதிரி கேட்பார்கள்.

எகிப்தில் நிலவும் சர்வாதிகாரம் காரணமாக, அநேகமான மக்கள் மாற்று வழியை தேடுகிறார்கள். அதனாலே தான் இஸ்லாமிய அடிப்படை வாத கட்சியான "முஸ்லீம் சகோதரத்துவம்", தேர்தலில் போட்டியிடும் போது பெரும்பான்மையான மக்கள் அதற்கு வாக்கு போடுகின்றனர். 2005 ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், அந்தக்கட்சி இருபது வீதமான வாக்குகளை பெற்றதை தொடர்ந்து, கடைசியாக நடந்த உள்ளூராட்சி தேர்தலில் நிற்க தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் முஸ்லீம் சகோதரர்கள், தற்போது நாடளாவிய ரீதியாக வேலைநிறுத்தங்களுக்கு ஆதரவு வழங்கவில்லை. தொழிலாளர் போராட்டம் மத அடிப்படை கொண்டதல்ல என்பதால், "புரட்சி ஆபத்தானது" என்று போதித்து வருகின்றனர். அவர்களக்கு உலகத்தில் மதத்தை விட்டால் வேறெதுவும் தெரியாது. இருப்பினும், அரச அடக்குமுறை அவர்கள் மீதும் ஏவி விடப்படுகின்றது. அந்தக்கட்சியின் நிதி வழங்குனறன, ஸ்விட்ஸர்லாந்தில் வசித்த எகிப்து வங்கியாளர், மேலும் இரண்டு வர்த்தகர்கள் சர்வதேச போலிஸ் உதவியுடன் கைது செய்யப்பட்டு, கடுமையான சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனால் முஸ்லீம் சகோதரத்துவ கட்சி வருங்காலத்தில் பலவீனப்படும் வாய்ப்புகள் உள்ளன.

முபாரக்கின் சர்வாதிகாரம் எகிப்திற்கு புதிதல்ல. அதற்கு, இராணுவ உதவிகளை வாரிவழங்கும் அமெரிக்காவின் நிபந்தனையற்ற ஆதரவும் புதிதல்ல. தொழிலாளரின் அன்றாட உணவிற்கே போதாத ஊதியம், ஏழ்மை நிலை, ஊழல் இவை எதுவுமே எகிப்திற்கு புதிதல்ல. ஆனால் இந்த சமூக குறைபாடுகளை எல்லாம், மக்கள் பொறுத்துக்கொள்வது, மதவாதிகளின் பிரச்சாரத்தினால் தான். இருபதாம் நூற்றாண்டு இஸ்லாமிய நாடுகளில், எகிப்து தான் மத அடிப்படைவாத கொள்கையை கண்டுபிடித்தது. குறிப்பாக "முஸ்லீம் சகோதரத்துவம்" கட்சி தான், நமது காலத்திய கொமெய்னி (ஈரான்), பின் லாடன் (சவூதி) வகையறாக்களின் சித்தாந்த பாசறை. அவர்களின் பார்வையில், மக்களின் அவலநிலமைக்கு காரணம், சாதாரண மக்களின் மத நம்பிக்கை குறைபாடு தான். எல்லோரும் மதத்தை சரியாக கடைப்பிடித்தால், எல்லா சமூக குறைபாடுகளும் விலகிவிடுமாம். ஒரு காலத்தில், மதச்சார்பற்ற லிபரல் கலாச்சாரத்தை பின்பற்றிய எகிப்திய மக்கள், இந்த பிரச்சாரத்தின் பின்னர், மதப்பற்றாளர்களாக மாறினர். மதவடிப்படைவாத சக்திகளின் வேகமான வளர்ச்சிக்கு அதுவே காரணம்.

தற்போது எகிப்தின் தொழிலாளர் போராட்டங்கள், மத அடிப்படைவாதம் சோறு போடாது என்று கண்ட அனுபவத்தின் விளைவு. முதலாளித்துவ பொருளாதாரத்தின் இருண்ட மறுபக்கமான சமுதாய சீர்கேடுகள் நிலைத்து நிற்பதற்கு மத நம்பிக்கை குறைவு காரணமல்ல. மக்கள் நலன்களை விட லாபத்தை மட்டுமே முதன்மையாக கருதும் முதலாளிகள், அவர்களுக்கு தேவையான வசதி செய்து கொடுக்கும் அரசாங்கம், அரசாங்கத்தை மக்களிடமிருந்து காப்பாற்ற உள்ள பாதுகாப்புபடைகள், ஊழல் ஆட்சிக்கு முண்டு கொடுக்கும் சர்வதேச ஆதரவு... இப்படி நீள்கிறது பட்டியல். இந்தக் காரணங்களை மக்களிடம் இருந்து மறைக்கும், உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் சக்திகளின் இரட்டை வேஷங்களை கண்ட மக்கள் தான் தெருவில் இறங்கி போராடுகின்றனர்.

_____________________________________________________