- (யார் இந்த கார்ல் மார்க்ஸ்? - மார்க்சியம் பற்றிய அறிமுகக் கட்டுரைத் தொடர் )
- மார்க்சியத்தின் வேர்கள் எங்கே இருந்து ஆரம்பிக்கின்றன?
அதைப் பற்றி அறிந்து கொள்வதற்கு நாம் கற்காலத்தை நோக்கி பயணம் செய்ய வேண்டும்.
- கற்கால மனிதர்கள் தமது உணர்வுகளை எழுத்தில் பதிவு செய்திரா விட்டாலும், அவர்கள் என்ன நினைத்திருப்பார்கள் என்பதை யூகித்து அறியலாம்.
- கற்கால மனிதன், இடி, மின்னல், மழை, எரிமலை, நிலநடுக்கம் எல்லாவற்றையும் கண்டு அஞ்சினான். அறியாமை காரணமாக தனக்கு மேலே ஒரு சக்தி இருப்பதாக நினைத்தான். அதையே கடவுள் என்று பெயரிட்டான். அவ்வாறு தான், சூரியன், பூமி, மழை, ஒவ்வொன்றுக்கும் ஒரு கடவுளை உருவாக்கினான்.
- கற்கால மனிதன் : “ஹா...ஹா… என்னுடைய கடவுள், டைனோசரின் கடவுளை விட சக்தி வாய்ந்தது. அதனால் தான் டைனோசர் இனமே அழிந்து விட்டது…”
- அறியாமை நிறைந்த சமுதாயத்தில் மந்திரவாதிகளும், சூனியக்காரர்களும் தோன்றினார்கள். தெய்வீக சக்தி எனும் கோட்பாட்டை தமது சுயநலனுக்காக பயன்படுத்திக் கொண்டார்கள். சில தந்திர வித்தைகளை செய்து காட்டி, தம்மை கடவுளின் பிரதிநிதிகளாக காட்டிக் கொண்டார்கள்.
- இவ்வாறு தான் ஒரு மேட்டுக்குடி வர்க்கம் உருவானது. அதுவே ஆளும் வர்க்கமானது. அறியாமையில் உழன்ற மக்களை சுரண்டி வாழ்ந்தது.
- அந்தக் காலத்திலும், சிலர் இயற்கையின் மர்மங்களை புரிந்து கொள்ள விரும்பினார்கள். காரணங்களை தேடி மண்டையை குடைந்தார்கள். அவர்கள் தான் “சிந்தனையாளர்கள்”. பிற்காலத்தில் தத்துவஞானிகளானார்கள். அந்த சிந்தனையாளர்கள் நீங்களோ, நானோ யாராகவும் இருக்கலாம்.
- கற்கால தந்தை: “டேய்… உதவாக்கரைப் பயலே! அங்கே என்னடா யோசனை? போய் வேலையைப் பார்.”
- கற்கால மகன்: "ஒரு நிமிஷம், அப்பா. நான் ஒரு தத்துவத்தை கண்டுபிடித்திருக்கிறேன்."
- மத நம்பிக்கைகளின் மேலான விமர்சனமாக தத்துவவியல் எழுந்தது. இயற்கையில் இருப்பனவற்றிற்கு காரண, காரியங்களை கண்டுபிடிக்க முயன்றது. மனித இனம் தத்துவ விஞ்ஞானம் என்ற ஒன்றை உருவாக்கியது. Philosophy என்ற கிரேக்க சொல்லில், சொபோஸ் (Sophos) என்றால் விஞ்ஞானம், பீலோஸ் (Philos) என்றால் நேசிப்பது என்று அர்த்தம்.
- அன்றிலிருந்து உலகம் இரண்டாகப் பிரிந்தது. அந்த இரண்டு பிரிவுகளும் இன்னமும் உள்ளன. ஒன்று: மதத்தை நம்புகிறவர்கள். மற்றது: விஞ்ஞானத்தை நம்புகிறவர்கள்.
- கிரேக்கத்தில் வாழ்ந்த செனொபாநெஸ் (Xenophanes) கடவுட் சிலைகளை வணங்க மறுத்து, அவற்றை கேள்விக்குள்ளாக்கினார். “மாடுகளுக்கும், குதிரைகளுக்கும் கை இருந்திருந்தால், அவை உருவாக்கும் கடவுளின் உருவம் மாடாகவும், குதிரையாகவும் இருக்கும்.”
- செனோபாநெஸ் சொன்ன கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரவின. கடவுளின் இருப்பை கேலி செய்யும் கோட்பாடு எதையும் ஆட்சியாளர்கள் விரும்பவில்லை. ஏனென்றால், அது அதிகாரத்தின் மீதான அவர்களது “புனிதமான ஆளுமையை” சந்தேகப் பட வைத்தது.
- காலம் உருண்டோடியது. ஆட்சியாளர்களின் வருமானம் அதிகரித்தது. ஆளும் வர்க்கம் மதத்தை நிருவனமயமாக்கியது. மேலதிக கடவுள்கள், மேலதிக புராணக் கதைகள், இன்னும் பல சடங்குகள் உருவாக்கப் பட்டன. மக்கள் தெய்வங்களை வழிபடுவதற்காக கோயில்கள் கட்டப் பட்டன. கடவுளின் திருவருள் வேண்டுமென்றால், பக்தர்கள் காணிக்கையாக ஒரு தொகைப் பணத்தை செலுத்த வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப் பட்டனர்.
- அதே நேரத்தில், “தெய்வீக அம்சம் பொருந்திய உயர் சாதி” ஒன்று, சமூகத்தில் இருந்து தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டது. அரசர்களும், பூசாரிகளும் ஒன்று சேர்ந்து, விசுவாசமான அடிமைகளின் உழைப்பில், சாம்ராஜ்யங்களை சிருஷ்டித்தார்கள். “எல்லா மகிமையும் அந்த ஆண்டவருக்கே உரித்தாகுக. அவரது சித்தம் எதுவோ அப்படியே நடக்கட்டும்...” என்று மக்களை ஏமாற்றினார்கள்.
- மதம் கூட, தனக்கென ஒரு விஞ்ஞானத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. அதுவே “இறையியல்” (தெய்வீக மெய்ஞானம்)
- மரணத்திற்குப் பிறகும் ஒரு வாழ்க்கை இருப்பதாக, மதம் ஒரு தத்துவத்தை கண்டுபிடித்தது. எகிப்தியர்கள் அதனை மிகவும் இலகுவாகக் கையாண்டார்கள். அவர்களது படைத்தல் கடவுளான ஒசிரிஸ், பாதாள லோகத்திற்கும் அதிபதியாக வீற்றிருக்கிறார். அதனால் இறந்த பிறகு, ஒசிரிசிடம் திரும்பிச் செல்வதாக ஒரு நம்பிக்கையை வளர்த்தார்கள். அடிமைகளும் அதனை நம்ப வைத்தார்கள். பூலோக வாழ்வில் "நன்றாக" நடந்து கொள்ளும் அடிமைகள், மரணத்திற்குப் பின்னர் மறு உலகத்தில் நித்திய வாழ்வை அனுபவிப்பார்கள். (இந்து மதத்தில் “முக்தி அடைவது” என்று சொல்வார்கள்?)
- இருந்த போதிலும், கண்மூடித்தனமான நம்பிக்கையை நிராகரித்து, விஞ்ஞானத்தை முன்மொழிந்த சிந்தனையாளர்களுக்கும் குறைவிருக்கவில்லை. உதாரணத்திற்கு : தாலெஸ் (Thales) எனும் தத்துவஞானி
- கி.மு. நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தாலெஸ், தத்துவவியலின் தந்தை என அழைக்கப்படுகின்றார். வான சாஸ்திரம், இயற்கை விஞ்ஞானம் போன்றவற்றில் கவனம் செலுத்தினார். (விஞ்ஞானம் வளராத காலகட்டம் அது. தத்துவஞானிகள் மட்டுமே எல்லாவற்றையும் பற்றி சிந்தித்தார்கள்.)
- பிதாகரஸ் (Pythagoras) எனும் ஒரு கணித மேதை இருந்தார். உலகில் எல்லாப் பொருட்களும், கணித சூத்திரத்தின் அடிப்படையில் உருவாகி இருப்பதாக நம்பினார்.
- பிதாகரஸ் ஆதரவாளர்கள் ஒரு மதக் குழு மாதிரி இயங்கினார்கள். அவரை விதைகளை உண்பதில்லை போன்ற விசித்திரமான பழக்க வழக்கங்களை பின்பற்றினார்கள். ஆனால், “பூமி அண்டவெளியின் மையப் பகுதியில் அமைந்திருக்கவில்லை” என்ற உண்மையை உறுதியாக நம்பினார்கள். அந்தக் காலத்தில், அது ஒரு மத நிந்தனையாக கருதப் பட்டது. அதனால், அரசு அவர்களை வேட்டையாடி அழித்தொழித்தது.
- "ஒருவேளை, நமது காலத்தில் எண் சோதிடத்தை நம்பும் மக்கள், பிதாகரஸின் மதக் குழுவை சேர்ந்தவர்களாக இருப்பார்களோ?"
- ஹெராக்லிட்டுஸ் (Heraclitus) என்றொரு நாத்திக தத்துவஞானி இருந்தார். அவரது பிரதானமான கோட்பாடுகள்: “எது இருக்கிறதோ, அது இல்லாமலும் இருக்கிறது. எல்லாப் பொருட்களும் அசைந்து கொண்டிருக்கின்றன. தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருக்கின்றன.”
- ஹெராக்லிட்டுஸ், விவாதக் கலைக்கு அடிப்படையான “தர்க்கவியலின்” தந்தை எனப் போற்றப் படுகின்றார்.
- அன்றைய மத நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்கிய பகுத்தறிவுவாதிகள், ஆளும் வர்க்கத்தினால் அழித்தொழிக்கப் பட்டனர். அவர்கள் செய்த ஒரே குற்றம், இன்று நாங்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் அறிவியல் கண்டுபிடிப்புகளை பற்றி எடுத்துக் கூறியது. அந்தப் பட்டியலில் ஒருவர் : அனாகாகொராஸ் (Anaxagoras). “சூரியன், ஒரு பிரமாண்டமான கல்லால் உருவான நெருப்புக் கோள்.” என்ற உண்மையை கூறியதற்காக கொலை செய்யப் பட்டார்.
- “அது தானே! சூரியன் ஏழு குதிரைகள் பூட்டப் பட்ட இரதம் ஒன்றில் பவனி வருவதாக நம்பிக் கொண்டிருந்த காலத்தில், சூரியன் ஒரு கோள் என்பதை எவன் ஏற்றுக் கொள்வான்? சும்மா காமடி பண்ணாதிங்க, சார்!”
- அடுத்து வருபவர், உலகப் புகழ் பெற்ற சோக்ரடீஸ் (Socrates). எல்லாவற்றையும் கேலியாகப் பார்த்தார். கடவுள், மதம், அரசு, தத்துவஞானிகள், ஏன் தன்னைப் பற்றிக் கூட, கேலியும், கிண்டலுமாக விமர்சித்துக் கொண்டிருந்தார்.
- சோக்ரடீஸ், ஒழுக்கத்திற்கும், மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று வாதிட்டார்.
“ஒரு மனிதன் கடவுளை நம்பாமலே ஒழுக்கத்துடன் வாழலாம்.” “அனைத்தையும் பற்றி கேள்வி கேட்டல் உண்மையின் தாய் ஆகும். அதிலிருந்தே வாழ்க்கை ஆரம்பமாகின்றது…”
“ஒரு மனிதன் கடவுளை நம்பாமலே ஒழுக்கத்துடன் வாழலாம்.” “அனைத்தையும் பற்றி கேள்வி கேட்டல் உண்மையின் தாய் ஆகும். அதிலிருந்தே வாழ்க்கை ஆரம்பமாகின்றது…”
- இறுதியில், "இளைஞர்களை கெடுக்கிறார், ஒழுக்கச் சீர்கேட்டை ஊக்குவிக்கிறார், நாத்திகத்தை வளர்க்கிறார்…" இது போன்ற பல குற்றச்சாட்டுகளை சுமத்தி, ஏதென்ஸ் அரசு சோக்ரடீஸ்சுக்கு மரண தண்டனை விதித்தது. அவர் தனது சீடர்களுடன் உரையாடிக் கொண்டே, நஞ்சைக் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
- கிரேக்க தத்துவஞானத்தில் பிளேட்டோ(Plato) வின் பங்களிப்பு முக்கியமானது. உரையாடல் வடிவில் காரண காரியங்களை அறிய முயன்றார். உலகில் உள்ள எல்லாப் பொருட்களையும் கருத்துக்களின் நிழல்களாக கருதினார். அதாவது கருத்துக்கள் மட்டுமே நிரந்தரமானவை. உதாரணத்திற்கு: "குதிரைகளைப் பற்றிய நமது கருத்து மட்டுமே உள்ளது. குதிரை என்ற ஒன்று நிஜத்தில் இல்லை!"
- பிளேட்டோவை பொறுத்தவரையில், உண்மையான அறிவை காரணங்களின் மூலம் விளக்க முடியாது. கடவுளின் வழிகாட்டல் இன்றி, மனிதனால் பொருட்களின் தன்மையை உய்த்துணர முடியாது. சுருக்கமாக, இன்று ஆன்மீகவாதிகள் கூறும் அதே தர்க்க நியாயங்களைத் தான், அன்று பிளேட்டோவும் கூறினார். அதனால், ஆட்சியாளர்களுக்கு பிரயோசனமாக இருந்தார். அவரைக் கொல்ல வேண்டுமென்று யாரும் நினைக்கவில்லை.
- பிளேட்டோவை பாதுகாத்த ஆளும் வர்க்கம், டெமொக்ரிட்டுஸ் (Democritus) என்ற தத்துவஞானியை விரட்டிப் பிடித்து ஜெயிலுக்குள் போடத் துடித்தது. காரணம்? அவர் ஒரு பொருள் முதல்வாதி.
“உலகில் உள்ள எல்லாப் பொருட்களும், பிரித்தறிய முடியாத, மிகச் சிறிய துணிக்கைகளினால் ஆக்கப் பட்டுள்ளன….” என்று கூறினார்.
- கி.மு. நானூறு வருடங்களுக்கு முன்னர், ஐன்ஸ்டீன் பிறப்பதற்கு இருபத்துநான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர், டெமொக்ரிட்டுஸ் “அணு” பற்றிப் பேசியுள்ளார்!
- அரிஸ்டோட்டில் (Aristotle), மகா அலெக்சாண்டரின் ஆசிரியர். அனைத்து துறைகளிலும் ஆராய்ந்து எழுதிய மேதை. பௌதிகவியல், அரசியல், மெய்யியல், உயிரியல்…. ஒன்று விடாமல் எழுதித் தள்ளி இருக்கிறார். 18 ம் நூற்றாண்டில், பொருள்முதல்வாதக் கருத்துக்கள் முதன்மை பெறும் காலம் வரையில், அவரது கோட்பாடுகள் செல்வாக்குச் செலுத்தின.
- அரிஸ்டோட்டிலின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று நமது ஆர்வத்தை தூண்டுகின்றது.
“பொருளாதார, சமூக காரணிகளில் இருந்தும், சமுதாய ஏற்றத்தாழ்வில் இருந்தும், சமூகப் பிரச்சினைகள் தொடங்குகின்றன. சிலர் செல்வந்தர்களாகவும், சிலர் ஏழைகளாகவும் வாழ்வதற்கும், கடவுள்களுக்கும் சம்பந்தம் இல்லை.”
- ஒரு நாட்டின் அரசியல் அதிகாரம் பற்றிய அரிஸ்டோட்டிலின் கோட்பாடு : “சிறு தொகை பணக்காரர்கள் ஆளும் பொழுது, அந்த ஆட்சியை “ஒளிகார்கி” (Oligarchy) என்று அழைக்கிறோம். அதிகாரம் மக்கள் கையில் இருந்தால், அது “டெமொக்கிராசி” (Democracy).
- பொருளாதார கட்டமைப்பு சமூக ஏற்றத் தாழ்வுக்கு காரணம் என்று அரிஸ்டோட்டில் நம்பினாலும், அடிமை முறையை வரவேற்றார். சமூகத்தின் “தேவை” காரணமாக, அடிமைகளை வைத்திருப்பது ஏற்கத் தக்கது என்றார்.
- அரிஸ்டோட்டில், பிளேட்டோவின் கோட்பாடுகளை நகைப்பிற்கிடமானவை என்று நிராகரித்தார். உணர்வே உண்மையின் தோற்றுவாய் என்றார். அதாவது, நாம் ஒன்றை நேரில் பார்த்தால் தான் நம்ப முடியும்.
- பல்கலைக்கழகத்தில் பயின்று கொண்டிருந்த கார்ல் மார்க்ஸ், டெமொக்ரிட்டுஸ், அரிஸ்டோட்டில் ஆகியோரின் தத்துவங்களை ஆராய்ச்சி செய்து பி.எச்.டி. பட்டம் வாங்கினார்.
- “இன்று, மார்க்சியத்தை குறை கூறத் தெரிந்த, நமது தமிழ் வலதுசாரி அறிவுஜீவிகள், மேற்குறிப்பிட்ட தத்துவஞானிகளின் நூல்களை எல்லாம் படித்துக் கரைத்துக் குடித்திருப்பார்கள் என்று நம்புவோமாக.”
(இந்தக் கட்டுரைத் தொடர், Marx for Beginners என்ற நூலின் மொழிபெயர்ப்பு ஆகும். இருந்த போதிலும், ஆங்காங்கே தமிழ்ச் சூழலுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை செய்துள்ளேன். இடைச்செருகலாக சில நகைச்சுவை துணுக்குகள் தலை நீட்டும். இன்றைய இளைய தலைமுறையினருக்கு மார்க்சியத்தை இலகுவாக புரிய வைப்பதே இந்தக் கட்டுரைத் தொடரின் நோக்கம்.)
முன்னைய பதிவுகள்: