Thursday, July 23, 2020

"தமிழ்-பாகிஸ்தான்-நாடு" அரசின் கறுப்பர் கூட்டம் மீதான அடக்குமுறை குறித்து...


கறுப்பர் கூட்டத்தின் கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பது எமது தார்மீகக் கடமை. கறுப்பர் கூட்டம் யூடியுப் சேனல் நடத்தியவர்களை கைது செய்தமை போன்ற சம்பவங்கள் பாகிஸ்தானில் மட்டுமே நடக்கும் என்று பலர் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அந்நாட்டின் மத நிந்தனை சட்டமானது, கறுப்பர் கூட்டம் வெளியிட்ட கந்த சஷ்டி வீடியோ போன்றவற்றை குற்றமாக கருதுகிறது. அதனால் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க முடியும். ஆனால் போலி "மதச்சார்பற்ற" நாடான இந்தியாவிலும் அது நடக்கும் என்பதை தமிழ் நாடு பொலிஸ் நமக்கு உணர்த்தியுள்ளது.

மதச்சார்பின்மை என்றால் கறுப்பர் கூட்டம் போன்று நாத்திக பிரச்சாரம் செய்பவர்களுக்கும் கருத்து சுதந்திர உரிமை இருக்கிறது என்று அர்த்தம். அதாவது ஒரு மதத்தை பிரச்சாரம் செய்பவருக்கும், அதே மதத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்பவருக்கும் சம உரிமை உள்ளது. அரசமைப்பு சட்டமானது இவ்விரண்டையும் தனி மனித கருத்து வெளிப்பாட்டு சுதந்திரமாக அங்கீகரிக்கிறது. பாகிஸ்தான் போன்ற மதச்சார்பான நாடுகளில் மட்டுமே பிரஜைகளுக்கு அந்த உரிமை மறுக்கப் பட்டுள்ளது.

ஒரு தடவை டென் மார்க்கில் முகமது கார்ட்டூன் வெளியிட்ட பத்திரிகை நிறுவனத்திற்கு மதவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் வந்த நேரம் அவர்களுக்கு டேனிஷ் அரசு பொலிஸ் பாதுகாப்பு கொடுத்திருந்தது. அதைத் தான் இங்கே தமிழ் நாடு அரசு செய்திருக்க வேண்டும். கறுப்பர் கூட்ட செயற்பாட்டாளர்களுக்கு மதவாதிகள் அச்சுறுத்தல் விடுத்த நேரம், அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டியது தமிழ் நாடு பொலிசின் கடமை. அதற்கு மாறாக அவர்களை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்திருப்பதுடன், அடாவடித்தனமாக யூடியுப் வீடியோக்களையும் அழித்துள்ளமை அப்பட்டமான மனித உரிமை மீறல். இது ஒரு அரச பயங்கரவாதம். இந்த நீதிக்கு புறம்பான செயலை கண்டிப்பதற்கு ஒவ்வொரு மனிதநேயவாதியும் முன்வர வேண்டும்.

இறுதியாக தமிழ் நாடு முதல்வருக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் இது போன்ற மனித உரிமை மீறல்களை தொடர்ந்தும் செய்வீர்களானால் தயவுசெய்து மாநிலத்தின் பெயரை "தமிழ்- பாகிஸ்தான் நாடு" என்று சட்ட சபையில் தீர்மானம் போட்டு மாற்றி விடுங்கள். உங்களது மத அடிப்படைவாத அரசு பற்றி மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். இந்த விடயத்தில் தமிழ்நாடு அரசுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் இடையிலான ஒற்றுமை என்ன? பாகிஸ்தானில் நடைமுறையில் உள்ள மத நிந்தனை சட்டம் எவ்வாறு அடக்குமுறை அரசினால் தவறாகப் பயன்படுத்தப் படுகின்றது? சில தெளிவுபடுத்தல்களுக்காக அது குறித்தும் விரிவாக ஆராய்வது அவசியமாகிறது.

பாகிஸ்தானில் நடைமுறையில் உள்ள மத நிந்தனை சட்டத்திற்கும் இஸ்லாமிய மதத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. இஸ்லாமியரின் இறைதூதர் நபிகள் நாயகம் கூட சகிப்புத்தன்மையை மட்டுமே வலியுறுத்தி உள்ளார். மத நிந்தனை ஒரு குற்றம் என்று புனித நூலான குர்ஆனில் எங்குமே எழுதப் படவுமில்லை. இஸ்ரேல் போன்று, பாகிஸ்தானும் ஒரு மதத்தின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட தேசியம் ஆகும். இஸ்லாம் என்ற மதம் மட்டும் இல்லையென்றால், பல்வேறு பட்ட மொழிகளைப் பேசும் மக்களையும், பழங்குடி இனத்தவரையும் ஒரே குடையின் கீழ் வைத்திருக்க முடியாது. ஆகவே மத நிந்தனைச் சட்டம் கூட மக்களை ஒடுக்குவதற்கான அரசின் கருவியாகவே பயன்படுத்தப் படுகின்றது. இது அரசியல், மதம் அல்ல.

தமிழ் பேசும் முஸ்லிம்கள் மட்டுமல்லாது, பாகிஸ்தான் முஸ்லிம்களிலும் பெரும்பான்மையினருக்கு அரபு மொழி தெரியாது. அவர்களால் அரபு மொழியில் எழுதப்பட்ட குரான் மூல நூலை வாசிக்க முடியாது. பாகிஸ்தான் சனத்தொகையில் அரைவாசிப் பேர் சொந்த மொழியில் மொழிபெயர்க்கப் பட்ட புனித நூலை கூட வாசித்தறிய முடியாத அளவுக்கு கல்வியறிவில் குறைந்தவர்கள். இந்த நிலைமையை சில மத அடிப்படைவாத முல்லாக்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். மக்களின் அறியாமையை பயன்படுத்தி, தாம் விரும்பியவாறு பொழிப்புரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். குர்ஆனில் இல்லாததை எல்லாம் சொல்லி அப்பாவி மத நம்பிக்கையாளர்களை ஏமாற்றுகிறார்கள்.

பாகிஸ்தானில் எங்காவதொரு கிறிஸ்தவர், இந்து மத நிந்தனை சட்டத்தால் பாதிக்கப் பட்டால் மட்டுமே அது செய்தியாக வெளியுலகத்திற்கு தெரிய வருகின்றது. அங்கே பெருமளவில் பாதிக்கப்படும் முஸ்லிம்களை யாரும் கண்டுகொள்வதில்லை. அவர்கள் சிலநேரம் உயர்பதவி வகித்தால் மட்டுமே செய்தியாகிறது. சொந்த மெய்ப்பாதுகாவலரால் தெருவில் சுட்டுக்கொல்லப் பட்ட பஞ்சாப் மாநில கவர்னர் சல்மான் தசீர் விவகாரம் ஒரு சிறந்த உதாரணம். தசீர் உடலில் இருபது துப்பாக்கி தோட்டாக்களை செலுத்திய கொலையாளி, இஸ்லாமிய மதவாதிகளால் நாயகனாக போற்றப் பட்டான். இந்த சம்பவத்தின் பின்னர் மத நிந்தனை சட்டம் அநீதியானது என்று யாரும் சொல்லத் துணியவில்லை.

சல்மான் தசீர் செய்த "குற்றம்" சர்ச்சைக்குரிய மத நிந்தனை சட்டத்தை நீக்குமாறு குரல் கொடுத்தது தான். பலர் தமது தனிப்பட்ட குரோதத்தை தீர்த்துக் கொள்வதற்கு மத நிந்தனை சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். இதை அவர் ஊடகவியலாளர்களை கூட்டி அறிவித்தார். அந்தக் காலத்தில் உலகச் செய்தியாக வலம் வந்த ஆசியா பீபி வழக்கு தொடர்பாக அவ்வாறு பேசி இருந்தார். ஆசியா பீபி என்ற ஒரு எழுத்தறிவற்ற ஏழை கிறிஸ்தவ பெண், தாகத்தை தணிப்பதற்காக ஒரு முஸ்லிம் பெண்ணின் குவளையில் இருந்த தண்ணீரை குடித்த ஒரு அற்பக் காரணத்திற்காக அவர் மீது மத நிந்தனை குற்றம் சுமத்தி சிறையில் அடைத்தார்கள். அவர் மீது மரண தண்டனை விதிக்கப் பட்டிருந்தது.

ஒரு கிறிஸ்தவப் பெண் தண்ணீரை தொட்டு விட்டதால் தீட்டுப் பட்டு விட்டது என்பது தான் அவர்களது பிரச்சினை. சமுதாயத்தில் கிறிஸ்தவர்கள் தாழ்த்தப் பட்ட சாதியினராக இருப்பதால் அவர்கள் அசுத்தமானவர்கள், எதைத் தொட்டாலும் தீட்டாகி விடும் என்பது, கிராமப் புறங்களில் உயர்த்தப்பட்ட சாதியினராக உள்ள முஸ்லிம்கள் பலரின் நம்பிக்கை. அதாவது இது இந்தியாவில் நிலவும் தீண்டாமைக் கொடுமை போன்றது. பாகிஸ்தானிலும் அதே சாதிப் பிரச்சினை தான். எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் அங்கே ஆதிக்க சாதியினர் இஸ்லாமிய மதம் சார்ந்த சட்டத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது என்பது மட்டுமே வித்தியாசம். நண்பர்களே, இது வெறுமனே மதம் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. சாதிய, வர்க்க முரண்பாடுகளும் இதற்குள் மறைந்துள்ளன.

இந்தியாவில் பார்ப்பனர்கள் தமது சாதியை மறைத்துக் கொண்டு இந்துக்கள் என்ற பெயரில் அதிகார வர்க்கமாக வலம் வருகிறார்கள். பாகிஸ்தானிலும் அதே போன்ற உயர் சாதிய பெருமிதம் கொண்டவர்கள் தான் இஸ்லாமிய பாதுகாவலர்கள் வேடம் போடுகிறார்கள். (பாகிஸ்தானில் இன்றைக்கும் பலருக்கு பிராமண சாதிப்பெயர்கள் உள்ளன.) பெரும் நிலவுடைமையாளர்களாக, செல்வந்தர்களாக உள்ள உயர் சாதிய அதிகார வர்க்கம் மதத்தின் பெயரால் ஆதிக்கம் செலுத்துகிறது. அது திரைமறைவில் பாகிஸ்தான் அரசை ஆட்டிப் படைக்கிறது. இதிலே வேடிக்கை என்னவென்றால், இந்தியாவில் இந்துத்துவா பாஜக ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய மாதிரி, பாகிஸ்தானில் இன்றைக்கும் ஒரு "இஸ்லாமிய- பாஜக" ஆட்சிக்கு வர முடியாமல் உள்ளது. பொதுத் தேர்தலில் அத்தகைய கட்சிகள் ஐந்து சதவீத வாக்குகளை கூட பெறுவதில்லை. அவர்கள் தேர்தலில் வெல்கிறார்களோ இல்லையோ, நடைமுறை அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறார்கள்.

மத நிந்தனை சட்டம் கிறிஸ்தவ நாடுகளில் இல்லையா என்று கேட்கலாம். ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் மத நிந்தனை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப் பட்டது. அப்போதும் சில அடிப்படைவாத கிறிஸ்தவ மதகுருக்கள் சொல்வதெல்லாம் சட்டமாக இருந்தது. பைபிளை எழுதியது ஒரு மனிதன் என்று யாராவது சொன்னாலே அது ஒரு மத நிந்தனைக் குற்றமாக கருதப் பட்டது. அதாவது மக்களை கேள்வி கேட்க விடாமல் அடிமைகளாக வைத்திருப்பதற்கு மத நிந்தனைச் சட்டம் ஆட்சியாளர்களுக்கு உதவுகிறது. இதை நாங்கள் ஒரு கலாச்சார புரட்சி ஊடாகத் தான் மாற்றியமைக்க முடியும்.

Thursday, July 16, 2020

ஆனந்தசங்கரி என்ற சாதிவெறிப் பூனை வெளியே வந்து விட்டது!


யாழ் ஊடக மையத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் ஆனந்த சங்கரி உரையாற்றிய பொழுது அவரிடம், யாழ் நூலகத் திறப்புவிழா சர்ச்சை தொடர்பாக கேள்வி கேட்கப் பட்டது. அதற்குப் பதிலளித்த ஆனந்தசங்கரி "சாதி எப்போதோ ஒழிக்கப் பட்டு விட்டது, அதுவும் அறுபதுகளில் தான் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலே ஒழிந்து விட்டது..." என்று பேசினார். ஆகவே நூலக திறப்புவிழா பிரச்சினையில் சாதி ஒரு விடயமாக இருக்கவில்லை என்பது அவரது வாதம்.

 அவர் மேலும் பேசுகையில் "நான் தான் கந்தையனை மேயர் ஆக்கினேன்..." என்றும் சுயதம்பட்டம் அடித்துக் கொண்டார். இலங்கையில் எந்த நகரசபையிலும் மேயர் பதவி மேலிருந்து தீர்மானிக்கப் படும் விடயம் அல்ல. மக்களால் தெரிவு செய்யப் பட்ட நகரசபை உறுப்பினர்கள் ஒன்று கூடி தம்மில் ஒருவரை மேயராக தெரிவு செய்வார்கள். இந்த ஜனநாயக அடிப்படை ஆனந்தசங்கரிக்கு தெரியாமல் இல்லை. அந்தக் காலகட்டத்தில் மேயராக பதவி வகித்தவர்கள் புலிகளால் கொலை செய்யப் பட்டனர். ஆகவே உயர்த்தப்பட்ட சாதியினர் யாரும் உயிரை துச்சமாகக் கருதி மேயர் பதவி வகிக்க முன்வராத நிலையில், தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த செல்லன் கந்தையாவை ஒரு பலியாடாக நியமித்தனர். ஆனந்தசங்கரி தன்னையறியாமலே இந்த உண்மையை வெளிப்படுத்தி விடுகிறார்.

அறுபதுகளில் தமது கூட்டணிக் கட்சி தான் "சமபந்தி போஜனம் நடத்தி சாதியை ஒழித்தது" என்று ஆனந்த சங்கரியை அடுத்து பேசிய அவரது கட்சிக்காரர் ஒருவர் பெருமையாகக் குறிப்பிட்டார். அன்று அது கட்சிக்கு விளம்பரம் தேட பயன்பட்டதே தவிர அதனால் சாதி ஒழிந்து விட்டது என்று பிதற்றுவது நகைப்புக்குரியது. இன்றைக்கும் பல யாழ் கிராமங்களில் நடக்கும் கோயில் திருவிழாக்களில் சமமாக அமர்ந்து உணவருந்த மறுக்கிறார்கள். திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாதியினர் சமைத்துப் பரிமாற ஒழுங்கு படுத்தப் பட்டுள்ளது. தாழ்த்தப் பட்ட சாதியினர் சமைத்து உணவுபரிமாறும் நாளில் ஆதிக்க சாதியை சேர்ந்த ஒருவர் கூட சாப்பிட வர மாட்டார்! ஆனந்தசங்கரி ஐயாவை நேரில் வரச் சொல்லுங்கள். எனது சொந்த ஊரை சுற்றியுள்ள தென்மராட்சிப் பிரதேசத்தில் எந்தெந்த கோயில்களில் இன்னமும் இந்த பாகுபாடு நடக்கிறது என்ற விபரங்களை தருவதற்கு தயாராக இருக்கிறேன்.

ஆனந்தசங்கரி யாழ் ஊடக மையத்தில் ஆற்றிய உரையின் தொடக்கத்தில் (மாவை)சேனாதிராசா பற்றி சில (தனிப்பட்ட) தகவல்களை கூறினார். இன்று அவர்கள் இருவரும் அரசியல் எதிரிகள். இரு வேறுபட்ட கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அப்படி இருந்தும் ஆனந்தசங்கரி சேனாதிராசாவை "வந்தார்... போனார்..." என்று மரியாதையாக பேசினார். இரண்டு நிமிடங்களுக்குப் பின்னர் செல்லன் கந்தையாவை பற்றி குறிப்பிடும் பொழுது மட்டும் "அவன்... இவன்.." என்று மரியாதைக் குறைவாக பேசினார். இதற்குக் காரணம் சாதிவெறி அன்றி வேறென்ன?

"கந்தையன் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு கூப்பிடுவான். நான் சென்று ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம்." என்று ஆனந்தசங்கரி பேசினார். உங்களோடு கூடப் படிக்கும், அல்லது வேலை செய்யும் ஒருவர், தனது வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு அழைத்து, அங்கு சென்று சாப்பிட்டதை இப்படி கூட்டம் போட்டு சொல்வீர்களா? அப்படி யாராவது செய்தால் அற்பத்தனமான, சிறுபிள்ளைத்தனமான செயலாக தோன்றாதா? ஆனால் ஆனந்தசங்கரி அதையே பெருமையாக சொல்கிறார் என்றால் என்ன அர்த்தம்?

அதாவது தான் இன்னமும் சாதியால் உயர்ந்தவன், கந்தையன் சாதியால் தாழ்ந்தவன் என்ற எண்ணம் ஆனந்தசங்கரியின் மனதில் இருக்கிறது. "இப்ப யார் சாதி பார்க்கிறார்கள்?" என்று கேட்பது மாதிரி, "நாங்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம்." என்று சொல்வதற்குப் பின்னாலும் ஆதிக்க சாதிப் பெருமிதம் தான் மறைந்திருக்கிறது. அதன் மூலம், நாங்கள் இன்னமும் சாதியால் பிரிந்து தான் வாழ்கிறோம் என்ற உண்மையையும் ஒத்துக் கொள்கின்றனர். இதைத் தான் நிறுவனமயப் படுத்தப் பட்ட சாதியம் என்கிறோம். அது அவர்களை அறியாமலே வெளிப்படும்.

யாழ் ஊடக மையத்தில் ஆனந்தசங்கரியின் உரை:
 https://www.facebook.com/mayurapriyan104/videos/3779258802089449

Monday, July 13, 2020

முதலாளித்துவத்திற்கு முட்டுக் கொடுக்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள்

அயோக்கியர்களின் இறுதிப் புகலிடம் முதலாளித்துவம் என்பது பல தடவை நிரூபிக்கப் பட்ட விடயம். இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் அதற்கு விதிவிலக்கு அல்ல. சொந்த வீடு, கார் என்று வசதிகளை ஏற்படுத்தி தந்த சீரழிந்த முதலாளித்துவத்தின் நன்மைகளை அனுபவித்த படியே, அப்பாவி உழைக்கும் வர்க்க முஸ்லிம்களுக்கு மேற்குலக கலாச்சார சீரழிவு பற்றி வகுப்பு எடுப்பார்கள்.

ஒரு முகநூல் நண்பர், தீவிர இஸ்லாமிய மதப் பற்றாளர், (அல்லது தன்னைத்தானே அப்படி கருதிக் கொள்பவர்), நேற்று முதலாளித்துவத்தை புகழ்ந்து மூன்று நான்கு தரம் பதிவுகள் இட்டுள்ளார். "பங்குச் சந்தை வர்த்தகம் பற்றித் தெரியுமா...ஹா...ஹா...?" என்று தானே கேள்வி கேட்டு தானே சிரிக்கிறார். (அவரது நிலைத்தகவல் இணைக்கப்பட்டுள்ளது.)

இன்று பலருக்குத் தெரியாத தகவல், வரலாற்றில் இஸ்லாம் தான் முதலாளித்துவத்தை வளர்த்தது. உண்மையில் மத்திய கிழக்கில் இருந்து தான் ஐரோப்பியர்கள் முதலாளித்துவம் பற்றி அறிந்து கொண்டார்கள். உதாரணத்திற்கு, 'ஷெக்' (cheque) என்பது ஒரு அரபிச் சொல்.

இருப்பினும், இஸ்லாம் எனும் மதம் தோன்றிய காலத்தில் பங்குச் சந்தை வணிகம் இருக்கவில்லை. அது ஐரோப்பாவில் தோன்றிய பிற்கால முதலாளித்துவத்திற்கு உரியது. ஆம்ஸ்டர்டாம் நகரில் இயங்கிய கிழக்கிந்திய கம்பனி தான் முதலாவது பங்குப் பரிமாற்ற வணிகத்தை தொடக்கி வைத்தது. எதற்காக இஸ்லாமிய சாம்ராஜ்யம் இருந்த காலத்தில் பங்குச் சந்தை வணிகத்தை யாரும் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை? காரணம் மிக எளிது. இஸ்லாம் சூதாடுவது பாவம் என்று தடை செய்துள்ளது.

பங்குச்சந்தை வர்த்தகம் என்பது அடிப்படையில் ஒரு சூதாட்டம் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. The Big Short திரைப்படத்தில் இந்த உண்மையை அப்படியே தோலுரித்துக் காட்டுகிறார்கள். இருபது வருடங்களுக்கு முன்னர் ஒன்றுக்கும் உதவாத பங்குகளை ஊதிப் பெருக்கி கோடி கோடியாக பணம் சம்பாதித்த "டொட் கொம் மோசடி" காரணமாக உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பெரும்பாலும் தூர கிழக்காசிய நாடுகள் அதிகமாக பாதிக்கப் பட்டன. தென் கொரியாவில் நூற்றுக் கணக்கானவர்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார்கள்.

இப்படியான பாவ காரியங்களில் முதலீடு செய்வதை பெருமையாகக் கருதும் ஒருவர், இஸ்லாமிய போர்வைக்குள் மறைந்து கொள்வது அந்த மதத்திற்கே இழுக்கானது. முஸ்லிம் நண்பர்கள் இதை கவனத்தில் எடுக்கவும். லண்டனில் வசிக்கும் இவர், "டெஸ்கோ பங்கு விலை அதிகரித்துள்ளது... புரிகிறதா?" என்று என்னிடம் கேள்வி கேட்கிறார். இப்படியான மாயைக்குள் வாழும் ஒருவருடன் உரையாடிப் பயனில்லை என்பதால், கனவு காணுங்கள் என்று சொல்லி விட்டு வந்து விட்டேன். இந்த இடத்திலும் தான் நம்பும் இஸ்லாமிய மதத்திற்கு களங்கம் கற்பிக்கும் அவரது செயற்பாடுகளை விமர்சிக்க வேண்டி உள்ளது.

இஸ்லாம் வட்டி வாங்குவது ஹராம்(பாவம்) என்று கூறி தடை செய்துள்ளது. அதனால் இஸ்லாமிய வங்கிகள் என சொல்லிக் கொள்ளும் வங்கிகள் கொடுக்கும் கடனுக்கு வட்டி அறவிடுவதில்லை. ஆனால் அதே வங்கிகள் பங்கு மார்க்கெட்டில் முதலிடுகின்றன. அதனால் கிடைக்கும் இலாபத்தை அனுபவிக்கின்றன. இதற்கு காரணம் கேட்டால் இஸ்லாத்தில் பங்குச் சந்தை பற்றி எதுவும் சொல்லப் படவில்லை என்று "புத்திசாலித்தானமாக" பதில் கூறுவார்கள்.

வட்டி வாங்குவது பாவம் என்று இஸ்லாம் மட்டும் சொல்லவில்லை. யூத, கிறிஸ்தவ மதங்களும் அதையே கூறுகின்றன. அதற்குக் காரணம் வட்டி என்பது ஒருவனின் திருடப்பட்ட உழைப்பு. கடன் கொடுத்தவர் அதற்கு உரித்துடையவர் அல்ல. ஆகவே இது ஒரு பகற்கொள்ளை. ஆனால், இந்த மூன்று மதங்களும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் மீது கட்டியெழுப்ப பட்டன. அதனால் புனித நூல்கள் பாவம் என்று சொன்னதை, நடைமுறை வாழ்வில் பின்பற்றுவதில்லை.

ஐரோப்பாவில் பல யூதர்கள் வட்டிக் கடைக்காரர்களாக தொழில் செய்துள்ளனர். புனித நூலின் மதக் கட்டளைகளை மீறுகிறோமே என்று அவர்களது மனச்சாட்சி உறுத்தவில்லை. பல ஐரோப்பிய நாடுகளில் மன்னர்களே யூதர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கி ஆட்சி நடத்தி உள்ளனர். பின்னர் கிறிஸ்தவ மதத்தின் பெயரால் வட்டிக்கு கடன் கொடுத்த பாவிகளை தண்டிப்பதாகக் கூறி யூத இனப்படுகொலை புரிந்தனர். இந்தக் கொடுமை இருபதாம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. வேடிக்கை என்னவென்றால், கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக, ஐரோப்பிய கிறிஸ்தவ முதலாளிகள் தான் வட்டித் தொழிலில் கொடி கட்டிப் பறக்கின்றனர். IMF, உலகவங்கி பெயரில் எல்லா உலக நாடுகளுக்கும் வட்டிக்கு கடன் கொடுக்கிறார்கள்.

பங்குச்சந்தையில் எல்லோரும் முதலிடலாம் என்று முதலாளித்துவம் சொன்னாலும், பெருமளவு பங்குகளை வைத்திருப்பவர்கள் கைகளில் தான் அதிகாரம் இருக்கும். அவர்கள் தான் "சிங்கத்தின் பங்கு" என்று சொல்லத்தக்க பெருமளவு இலாபத்தை சம்பாதிக்கிறார்கள். பங்குகளில் கிடைக்கும் இலாபத்தை டிவிடன்ட் என்று வேறொரு பெயரால் அழைக்கிறார்கள். ஆனால் அதுவும் வட்டி தான்.

ஒரு நிறுவனம் சம்பாதிக்கும் இலாபத்தில் இருந்து ஒரு பகுதி பங்குதாரர்கள் முதலிட்ட பணத் தொகைக்கு ஏற்றவாறு வட்டியாக பகிர்ந்து கொடுக்கப் படுகிறது. இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுத்து திருடப்பட்ட உழைப்பு ஒரு புறம். சந்தையில் பொருளை அதிக விலைக்கு விற்பதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் திருடப்படும் உழைப்பு மறுபுறம். இவ்வாறு கிடைத்த திருட்டுப் பணத்தை, முதலீட்டாளர்கள் எனப்படும் பெரிய கொள்ளையர்கள் தமக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

தயவுசெய்து, பகற்கொள்ளை, திருட்டுக்கு துணை போகிறவர்களும், அதை ஆதரிக்கிறவர்களும் மதத்தை போர்வையாக போர்த்திக் கொள்ளாதீர்கள். துரதிர்ஷ்டவசமாக இப்படியான பேர்வழிகள் தான் மதப்பாற்றாளர் வேஷம் போடுகிறார்கள். "இஸ்லாம் பற்றி உனக்கென்ன தெரியும்?" என்று கேள்வி கேட்டுக் கொண்டு வராதீர்கள். பங்குச்சந்தையில் சூதாடி உழைப்பாளிகளின் வயிற்றில் அடித்து பாவத்தை தேடுவதை விட, எந்த மதத்தையும் பற்றி தெரியாமல் இருப்பது பெரிய குற்றம் அல்ல.

குர்ஆனில் இருந்து சில வசனங்கள்:

  • 2:278. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். 
  • 2:275. யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்;  அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான். 
  • 2:219. (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது”.

Sunday, July 12, 2020

"நாத்திக- கம்யூனிசம்" குறித்து ஒரு "செக்யூலரிஸ்ட்" கூறிய அவதூறுகள்!

"ஆத்திகர்களை விட கம்யூனிச நாத்திகர்கள் ஆபத்தானவர்கள்" என்று Facebook இல் Sridhar Subramaniam என்பவர் எழுதிய இந்தப் பதிவை முதலில் பார்த்த நேரம் இதை ஒரு காமெடியாக எடுத்து கடந்து சென்று விட்டேன். பின்னர் அவர் ஒரு எழுத்தாளர், அதிலும் "ஒரு செக்யுலரிஸ்டின் வாக்குமூலம்" என்ற நூல் எழுதியவர் என்று கேள்விப் பட்டேன். (https://www.youtube.com/watch?v=RQex174LcXM) நம்பவே முடியவில்லை. ஒருவேளை அவர் தன்னைத்தானே கலாய்க்கும் நோக்கில் இந்தக் காமெடிப் பதிவை எழுதி இருக்கலாம்.


"நாத்திகர்கள் இடையிலும் அடிப்படைவாதிகள் உள்ளனர்..." என்று ஆரம்பிக்கிறார். நாத்திகம் என்பது கடவுள் இருப்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கும் தத்துவம். ஒவ்வொரு மதத்தவரும் ஏனைய மதத்தவரை நாத்திகராக கருதுகின்றனர். பண்டைய கிரேக்கத்தில் வாழ்ந்த மக்கள் கிறிஸ்தவர்களை நாத்திகர்கள் என அழைத்தனர்.

பிற்காலத்தில் ஐரோப்பாவில் கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வந்ததும் முன்பிருந்த மதங்களின் தெய்வச் சிலைகளை உடைத்து நொறுக்கினார்கள். ஜெர்மனியில் வாழ்ந்த மக்கள் இயற்கை வழிபாடு நடத்திய புனிதமான ஆல மரம் ஒன்றை தறித்து விழுத்தினார்கள். அப்போது கிளர்ந்தெழுந்து எதிர்த்த மக்களை "கிறிஸ்துவின் அடியாட்கள்" கொன்று குவித்தார்கள். அன்று கோடிக் கணக்கான மக்களின் சாவுக்கு காரணமாக இருந்த கிறிஸ்தவம் ஒரு நாத்திக சிந்தனை என்று நாமும் சொல்லிக் கொள்ளலாம்.

அது போகட்டும். பிரெஞ்சுப் புரட்சியை நடத்தியவர்கள் தமது நாத்திக அடிப்படைவாத கொள்கை காரணமாக பிரான்ஸ் முழுவதும் இடித்துத் தள்ளிய தேவாலயங்கள் எத்தனை? அவர்கள் உடைத்து நொறுக்கிய இயேசு, மாதா சிலைகள் எண்ணிலடங்காது. ஆயிரக்கணக்கான கத்தோலிக்க பாதிரிகள் கொல்லப் பட்டனர். கன்னியாஸ்திரிகள் வன்புணர்ச்சிக்கு பின்னர் ஆற்றில் வீசியெறியப் பட்டனர். இந்தக் கொடுமைகளின் விளைவாக தான் மேற்கு ஐரோப்பாவில் மதச் சார்பற்ற நாடுகள் உருவாகின. அதனால் தான் ஸ்ரீதர் சுப்பிரமணியம் என்ற நபர் ஒரு செக்யுலரிஸ்டின் வாக்குமூலம் என்ற நூல் எழுதி வெளியிட முடிந்தது.

பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக தோன்றிய நாத்திக இயக்கத்தின் 300 ஆண்டு கால வரலாறு பற்றி அறிந்திராத "secularist"(?) ஸ்ரீதர் சுப்ரமணியம், திடீரென மாவோ காலத்து சீனாவுக்குள் ஊடுருவிப் பார்க்கிறார். "சீனாவில் மாவோவின் அடியாட்கள் ஆயிரக்கணக்கான புத்த விகாரங்கள், தாவோ கோயில்களை உடைத்தெறிந்தனர். 3,5 முதல் 4 கோடி மக்களின் சாவுக்கு காரணமாக இருந்தனர்." என்று கணக்கு காட்டுகிறார். இந்தப் புள்ளிவிபரம் எங்கே யாரால் எடுக்கப் பட்டது என்று கேட்டு விடாதீர்கள். அது அவருக்கே தெரியாது. கூகிளில் கலாச்சாரப் புரட்சி என்று தேடிய போது கிடைத்ததாம். கூகிளாண்டவருக்கு நன்றி!

முதலில் இவர் கலாச்சாரப் புரட்சி என்றால் என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்? 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் தோன்றிய புதிய ஜெர்மன் குடியரசின் அதிபர் பிஸ்மார்க் "கலாச்சார யுத்தம்" என்ற பெயரில் மத நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தார். அதற்கு முன்னர் 18ம் நூற்றாண்டில் பிரான்ஸின் சக்கரவர்த்தியாக முடி சூட்டிக் கொண்ட நெப்போலியன் போரில் வென்ற இடமெல்லாம் நாத்திகத்தை பரப்பினான். ஐரோப்பிய நாடுகளில் ஆயிரக் கணக்கான தேவாலயங்களை உடைத்தெறிந்து கலாச்சாரப் புரட்சி நடத்தினான்.

நமது "செக்யூலரிஸ்ட்" ஸ்ரீதரின் மனதிலும் சீனா குறித்து இப்படியான எண்ணம் ஓடியுள்ளது. ஆனால் சீனாவில் நடந்தது "மதத்திற்கு எதிரான நாத்திக புரட்சி" அல்ல. இது அவரது தப்பெண்ணம். உண்மையில் அது அதிகார மையத்திற்கு எதிராக மாணவர்கள் நடத்திய வர்க்கப் புரட்சி. பழைய அதிகார வர்க்க சிந்தனை கொண்டவர்கள் குறி வைக்கப் பட்டனர். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களும் அதற்கு தப்பவில்லை. பலர் மாணவர்களால் வர்க்க எதிரி எனக் குற்றம் சாட்டப் பட்டு பதவி இறக்கப் பட்டனர். மக்கள் முன்னிலையில் குற்றம் சாட்டப் பட்டு தலை குனிய வைக்கப் பட்டனர். பின்னாளில் அதிபரான டெங்சியாபிங் அவர்களில் ஒருவர்.

மாணவர் எழுச்சியை மாவோ தடுக்கவில்லை. ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்று கூறினார். அது தான் உண்மையான ஜனநாயகம். இன்றைக்கும் இப்படி ஒரு நிலைமையை இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. அத்துடன் இன்னொரு உண்மையையும் நினைத்துப் பார்க்க வேண்டும். முன்பு ஐரோப்பாவில் பிஸ்மார்க், நெப்போலியன் நடத்தியது போன்ற மத நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை, சீனாவில் கலாச்சாரப் புரட்சிக் காலத்தில் தான் நடந்துள்ளது. ஏன் மத நிறுவனங்களை தாக்க வேண்டும்? அரசியல் அதிகாரம் அவர்கள் கைகளிலும் உள்ளது. பழமைவாதிகளின் கோட்டையை தகர்க்காமல் மக்கள் விடுதலை பெற்று விட முடியாது.

எழுத்தாளர் ஸ்ரீதர் "கம்யூனிசம் என்றால் நாத்திகம்" என்று மட்டும் படித்திருக்கிறார் போலிருக்கிறது. அதனால் "சென்ற நூற்றாண்டின் மாபெரும் கொலைகாரர் மாசேதுங் ஒரு புடம் போட்ட நாத்திகர்" என்று மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறார். கம்யூனிசம் என்பது பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறது. அதன் அர்த்தம் மதத்தை என்ன செய்வது என்ற எந்தத் திட்டமும் அதனிடம் இல்லை. மக்கள் மத்தியில் விஞ்ஞான அறிவு வளர்ச்சி ஏற்பட்டு, பொருளாதார பலன்களை அனுபவிக்கும் காலத்தில் மதத்தின் தேவை மறைந்து விடும். இதைப் புரிந்து கொள்ள எங்கெல்ஸ் எழுதிய "டூரிங்கிற்கு மறுப்பு" என்ற நூலை வாசிக்கவும். 

- கலையரசன் 
11-7-2020

முகநூலில் எனது இந்தப் பதிவுக்கு எழுத்தாளர் ஸ்ரீதர் சுப்ரமணியம் இட்ட பின்னூட்டம் இது:

Sridhar Subramaniam: கலாச்சாரப் புரட்சி பற்றி நான் கூகுளில் படிக்கவில்லை. ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு கூகுள் செய்து பாருங்கள் என்று சொன்னேன். அவ்வளவுதான். சென்ற நூற்றாண்டின் மாபெரும் கொடூரக் கொலைகாரன் மாவோ என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

Saturday, July 11, 2020

குடிமைகள் - ஈழத்தில் நிலவிய குடிமைச் சாதிய ஒடுக்குமுறை பற்றிய நாவல்

ஈழத்தில் நிலவிய சாதிய ஒடுக்குமுறை பற்றியும், குடிமைத் தொழில் பற்றியும் அறிந்து கொள்ள தெணியான் எழுதிய "குடிமைகள்" நாவலை வாசிக்கவும். இதனை கருப்புப் பிரதிகள் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சமீபத்திலும் குடிமைத் தொழில் சம்பந்தமாக முகநூலில் வாக்குவாதம் இடம்பெற்றது. இன்றைக்கும் பலர் மனதில் குடிமைத் தொழில் குறித்து சரியான தெளிவு இல்லை. அதற்காக இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு சில புரிதல்களை ஏற்படுத்த விரும்புகிறேன்.

ஈழத்தில் என்றால், குறிப்பாக யாழ் குடாநாட்டில் அல்லது வட மாகாணத்தில் நிலவிய சாதி அமைப்பை தான் நாம் இங்கே கவனத்தில் எடுக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தில் இருந்த சாதி அமைப்பு முற்றிலும் மாறுபட்டது. யாழ்ப்பாண சாதி அமைப்பானது முந்திய நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பின் எச்சமாக இருந்துள்ளது. அது டச்சு, ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகளால் மாற்றப் படவில்லை. (முன்பு போர்த்துக்கேயர்கள் காலத்தில் ஏறத்தாள அழிவு நிலையில் இருந்து பின்னர் மீளுருவாக்கம் செய்யப் பட்டது.)

யாழ் சமூகத்தில் குடிமை எனப்படுவது, ஏறக்குறைய ஐரோப்பிய சமூகத்தில் நிலவிய பண்ணையடிமை முறையை ஒத்தது. யாழ்ப்பாணத்தில் நிலவுடைமைச் சாதியாக இருந்த வெள்ளாளர்கள், பஞ்சமர்கள் எனப்படும் தாழ்த்தப் பட்ட சாதியினரை தமது குடிமைகளாக வைத்திருந்தனர். யாராவதொரு வெள்ளாள நிலவுடைமையாளர் தனது காணிக்குள் குடிமைகளை குடியேற்றி இருப்பார். அவர்கள் ஒரு துண்டு நிலத்தில் குடிசை வீடு கட்டி, அதைச் சுற்றி சிறு தோட்டமும் செய்யலாம். ஆனால், அந்த நிலம் அவர்களுக்கு சொந்தமானது அல்ல.

குடிமைச் சாதியினர் வெள்ளாளர்களுக்கு குடிமைத் தொழில் செய்து வாழ வேண்டும். முடி வெட்டும் வேலை செய்யும் அம்பட்டர்கள், துணிகளை சலவை செய்யும் வண்ணார்கள், போன்று பல குடிமைத் தொழில் செய்யும் சாதிகள் இருந்தனர். இதனால் தான் இன்றைக்கு சில வெள்ளாள பரம்பரையில் வந்த அறிவுஜீவிகளும் சாதி என்பது தொழில் சார்ந்த பிரிவினை என்று தவறாக நினைக்கிறார்கள். அது வேறு விடயம். குடிமைகள் நாவலில் முடி வெட்டும் அம்பட்டர் சாதியை சேர்ந்த ஒரு குடும்பத்தின் கதை பற்றிக் கூறப் படுகின்றது. இது ஒரு புனைவு என்றாலும் உண்மைச் சம்பவங்களை வைத்து எழுதப்பட்டது. அநேகமாக ஐம்பதுகளில் அல்லது அறுபதுகளில் கதை நடக்கிறது. அப்போது நகரங்களில் சலூன் கடைகள் போடுவது சர்வசாதாரணமாகி விட்டது. இருப்பினும் கிராமங்களில் வாழ்ந்தவர்கள் குடிமைத் தொழில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது.

வெள்ளாளர்களின் வீடுகளில், யாராவது இறந்தாலும் பிணத்திற்கு முடி வழிப்பதற்கு குடிமைத் தொழில் செய்யும் அம்பட்டனை வரச் சொல்லி அனுப்புவார்கள். அவ்வாறு அடக்கமாக தொழில் செய்து வந்த முத்தன், இன்னொரு ஆதிக்க சாதியான கரையாரிடமும் பணம் வாங்கிக் கொண்டு வேலை செய்யும் பொழுது பிரச்சினை உருவாகிறது. கரையாருக்கு அல்லது பிற சாதியினருக்கு குடிமைத் தொழில் செய்வதற்கு வேறு அம்பட்டர்கள் இருக்கிறார்கள். ஆனால் வழமையாக வெள்ளாளருக்கு குடிமைத் தொழில் செய்பவருக்கு அது அனுமதிக்கப் படுவதில்லை.

இந்த இடத்தில் தான் எவ்வாறு சாதி அமைப்பு, ஒரு நிலப்பிரபுத்துவ அமைப்பாகவும் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். அதாவது குடிமைத் தொழில் செய்பவருக்கான கூலியை பொருளாகவும், சொற்ப தொகை பணமாகவும் கொடுக்கிறார்கள். இதனால் அவர்கள் ஏழ்மையில் இருந்து மீள முடியாது. காலங்காலமாக வெள்ளாள நிலப்பிரபுக்களில் தங்கியிருக்க வேண்டும். திருமணம் போன்ற குடிமைகள் வீட்டு செலவுகளையும் வெள்ளாள நிலப்பிரபுவே பொறுப்பெடுப்பார். இது ஓரளவு மேற்கு ஆப்பிரிக்காவில் நிலவிய சாதிய அமைப்பை ஒத்துள்ளது.

ஏன் ஒரே குடிமைத் தொழிலை வேறு சாதியினருக்கும் செய்ய அனுமதிக்கவில்லை? இங்கே பணம் சார்ந்த முதலாளித்துவப் பொருளாதாரத்தால் ஏற்பட்ட சமூக மாற்றம் தென்படுகின்றது. அதாவது அவர்கள் பணம் வாங்கிக் கொண்டு குடிமைத் தொழில் செய்தால் வறுமையில் இருந்து மீளக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. சலூன் கடை போடுவதும் அப்படித் தான். அதை ஒடுக்கும் சாதியினரான வெள்ளாளர்கள் விரும்பப் போவதில்லை. அதாவது இது சொத்துடமை சார்ந்த பிரச்சினை. ஒடுக்கப்படும் சாதியினர் பணக்காரர்களாக வருவதை ஒடுக்கும் சாதியினர் எதிர்த்துக் கொண்டிருப்பார்கள். அது இப்போதும் தொடர்கிறது.

முத்தன் பருத்தித்துறை நகரத்தில் சலூன் கடை போடவிருந்த திட்டம் தெரிய வந்ததும் வெள்ளாளர்கள் நிலப்பிரபுக்கள் பல வழிகளிலும் தடுக்கப் பார்க்கிறார்கள். அவ்வாறு கடை போடுவதென்றாலும் கிராமத்தில் செய்யுமாறும், அதனால் வழமையான குடிமைத் தொழில் பார்க்க முடியும் என்றும் தமது சுயநலத்தின் நிமித்தம் பேசுகின்றனர். குடிமைத் தொழில் உண்மையில் அடிமைத் தொழில் என்பதை புரிந்து கொண்ட முத்தன் அதற்கு சம்மதிக்க மறுக்கிறான்.

சாதிவெறியர்கள் தம்மால் சமாளிக்க முடியாத படியால், முதலியார், விதானையார் (இவர் சிறிலங்கா அரசின் பிரதிநிதி என்பது குறிப்பிடத் தக்கது) ஆகியோர் மூலம் மிரட்டிப் பார்க்கின்றனர். அரசாங்கம் நியமித்த கிராம சேவகர் (விதானை) என்றாலும் சாதி அபிமானம் காரணமாக சாதி வெறியர்களுடன் கூட்டுச் சேர்ந்து ஒடுக்குமுறைக்கு துணை போகின்றார். எவ்வாறு அதிகார வர்க்கம் முழுவதும் வெள்ளாள சாதிவெறிக்கு துணைபோனது என்பதை விளக்க இது ஒரு சிறந்த உதாரணம். இந்த நிலைமை ஈழப்போர் தொடங்கும் வரையில் காணப்பட்டது.

முத்தனின் தம்பி மணியன் கொழும்பில் வேலை செய்து அனுப்பிய பணத்தில் பருத்தித்துறையில் சலூன் திறந்து வியாபாரமும் அமோகமாக நடக்கிறது. இதைக் கண்டு பொறாமை கொண்ட வெள்ளாள சாதிவெறியர்கள் அவனைக் கொல்வதற்கு திட்டம் தீட்டுகிறார்கள். ஏற்கனவே சதி செய்து இரண்டு தம்பிமாரை கொன்று விடுகின்றனர். இதற்கிடையே முத்தனின் மனைவி மீது ஆசை கொண்ட குமாரசாமி என்ற சாதிவெறியனை முத்தனின் நண்பர்கள் மறைந்திருந்து தாக்கி விட்டனர். இந்தத் தகவலும் வெள்ளாள சாதிவெறியை கொழுந்து விட்டு எரியச் செய்கிறது. தம் மீது கைவைக்கத் துணிந்த குடிமைச் சாதியினரை சும்மா விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றனர். அதனால் முத்தனும் மனைவியும் கொழும்புக்கு ரயிலேற, ஊரில் அவனது சலூனும், குடிசை வீடும் எரிக்கப் படுகின்றன.

ஈழத்தில் நிலவுடைமை வெள்ளாளரின் சாதிவெறி எந்தளவு கொடூரமாக இருந்தது என்பது நூலில் பல இடங்களில் குறிப்பிடப் படுகின்றது. "கஞ்சா, அபினுக்கு இல்லாத சாதிவெறி. அது ஒரு விசர் மாதிரி. அந்த சாதி வெறியிலே ஒரு குடலுக்குள்ளே இருந்து வந்த சகோதரம் என்றும் பாரான்கள்.... ஆளை முடிச்சுப் போடுவாங்கள். (ஆணவக் கொலை)"

ஈழத்தில் ஒரு காலத்தில் மிகக் கொடூரமான ஒடுக்குமுறையாக இருந்த சாதியத்தை எவ்வாறு சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடிகிறது? புலிகளின் காலத்தில் குடிமைத் தொழில் ஒழிக்கப் பட்டது என்று ஒரு நண்பர் முகநூலில் பதிவிட்டிருந்தார். அவர் அறியாத இரண்டு உண்மைகள் உள்ளன.

  1. ஐம்பதுகள், அறுபதுகளில் குடிமைச் சாதியினர் கிளர்ந்தெழுந்து குடிமை முறைக்கு எதிராக போராடினார்கள். அந்த போர்க்குணாம்சம் எவ்வாறு ஏற்பட்டது என்பதை குடிமைகள் நாவல் பதிவு செய்துள்ளது. 
  2. குடிமைச் சாதியினர் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு (இங்கே: வெள்ளாளர்) மட்டும் தொழில் செய்து அவர்களால் பொருளாதார ரீதியாக ஒடுக்கப் பட்டனர். பிற்காலத்தில் அந்த நிலைமை மாறி விட்டது. பணம் கொடுத்தால் எந்த சாதியினருக்கும் தொழில் செய்ய முன்வந்தனர். அந்தக் காலத்தில் இதுவே ஒரு சமூகப் புரட்சி தான்.

இந்த நூலானது சாதி ஒடுக்குமுறை பற்றி மட்டுமல்லாது, ஒரே சாதிக்குள் நடக்கும் வர்க்க ஒடுக்குமுறை பற்றியும் பேசுகின்றது. குறிப்பாக முத்தனின் தம்பி மணியத்தை தென்னிலங்கையில் பதுளையில் உள்ள தனது சலூனில் வேலை பழக்க அழைத்துச் செல்லும் முதலாளி, அவனை எடுபிடி வேலையாளாக கொடுமையாக நடத்துவது பற்றி பல அத்தியாயங்களில் விவரிக்கப் படுகின்றது. ஈழத்து சாதிப்பிரச்சினையை பற்றி ஆழமாக புரிந்து கொள்ள நீங்கள் வாசிக்க வேண்டிய நூல்களில் ஒன்று குடிமைகள்.

Friday, July 10, 2020

ஈழத் தமிழ்த் தேசியம் என்றால் என்ன? - ஒரு விவாதம்


ஈழத் தமிழ் அரசியலை ஆழமாக ஆராயும் இணையக் கலந்துரையாடல் (5 July 2020) பேஸ்புக்கில் பார்க்கக் கிடைத்தது. (https://www.facebook.com/tamildebaterscouncil/videos/574320763283712) இதுபோன்ற விவாதத்தை இதுவரையில் இலங்கையில் எந்த ஊடகமும் செய்யவில்லை. ஒரு மகத்தான பணியை இணையத்தில் நிறைவேற்றிய இலங்கை வாழ் தமிழ் விவாதிகள் கழகத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் முதலில் உரையாடிய அஷோக்பரன், குருபரன் இருவரும் சட்ட வல்லுனர்கள். ஆகவே ஆரம்பத்தில் தமிழர்களின் சுயநிர்ணயம் தொடர்பாக சட்டரீதியான நிலைப்பாடுகளை ஆராய்ந்து விட்டு, இறுதியில் அரசியல் தீர்வு முக்கியம் என்று ஒருமித்த கருத்து நிலைப்பாட்டுக்கு வந்தனர்.

ஒரு பேச்சுவார்த்தைக்கு செல்லும் பொழுது விட்டுக்கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும் என்பதை ஒத்துக் கொள்ளும் குருபரன், முஸ்லிம்களின் தனித்துவத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும், சிங்களவர்களும் தமிழர் தாயகத்தில் வாழ விட வேண்டும் என்ற யதார்த்த நோக்கில் பேசினார். அத்துடன் சாதி ஒழிப்பு, பெண் உரிமை தொடர்பாக பெரியாரின் திராவிடர் கழக கொள்கைகளை பின்பற்றுவது சிறந்தது என்பதையும் ஏற்றுக் கொண்டார். அத்துடன் ஈழத்தமிழரின் தொன்மையான வரலாறு என்ற அடிப்படையில் சுயநிர்ணய உரிமை கோரவில்லை என்றும், சமீபத்திய அரசியல் வரலாற்று விளைவுகளின் ஊடாக சுயநிர்ணய உரிமை கோரிக்கையை முன்வைப்பதாகவும் சொன்னார்.

குருபரன் இந்தளவு தூரம் முற்போக்காக பேசினாலும், இது குறித்து எத்தனை தமிழ்த்தேசியவாதிகள் அறிந்து வைத்திருக்கிறார்கள், அல்லது ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது கேள்விக்குறி. குருபரன் தான் ஒரு உறுப்பினர் அல்ல என்று அடிக்கடி மறுத்து வந்தாலும், அவர் எப்போதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF) சார்பாகவே பேசி வந்துள்ளார். அந்தக் கட்சியில் தான் குறுகிய மனப்பான்மை கொண்ட இனவாதிகளும், மதவாதிகளும், சாதியவாதிகளும் நிறைந்து காணப்படுகின்றனர். ஆகவே மேற்படி முற்போக்கான கருத்துக்களை தெரிவிப்பதற்கு, குருபரன் தவிர வேறெந்த தமிழ்த்தேசியவாதியாவது முன்வருவாரா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

இலங்கை என்ற ஒற்றையாட்சியை மையப் படுத்திய சட்டத்தில், குருபரன் எதிர்பார்க்கும் "தமிழர் தாயகம்" என்பதை குறிக்கோளாக கொண்ட "புறவய" அல்லது "அகவய" சுயநிர்ணய உரிமை சாத்தியமில்லை என்பது உண்மை தான். அஷோக்பரன் சுட்டிக் காட்டியது போன்று இதனை மேலிருந்து திணிக்க முடியாது. அடிமட்டத்தில் அரசியல் மாற்றங்கள் ஊடாக எட்டப் பட வேண்டும்.

பிரித்தானியாவில் உள்ளது போன்று ஒற்றையாட்சி அலகின் கீழான சமஷ்டி அமைப்பு குறித்து அஷோக்பரனும், குருபரனும் நீண்ட நேரமாக உரையாடினார்கள். அவ்வாறான ஒரு தீர்வு இலங்கைக்கு பொருத்தமாக இருக்கும் என்பது அஷோக்பரனின் எதிர்பார்ப்பு. ஆனால், அது இலங்கையில் சாத்தியமல்ல என்று கூறிய குருபரன், அதற்குக் காரணம் சிங்கள- பௌத்த பேரினவாத கருத்தியல் என்றும் பதிலளித்தார்.

நான் இந்த இடத்தில் ஸ்கொட்லாந்து சுயநிர்ணயம் தொடர்பாக குருபரனுக்கு விளக்கம் கொடுக்கலாம் என நினைக்கிறேன். பிரித்தானியா என்ற பொதுப் பெயரின் கீழ், இங்கிலாந்து மன்னராட்சியானது ஸ்கொட்லாந்து மன்னராட்சியை பெயரளவில் தனக்கு சமமான அரசாக இணைத்துக் கொண்டது. இருப்பினும் ஸ்கொட்லாந்தில் கடந்த முன்னூறு வருட காலமாக இங்கிலாந்தின் மேலாதிக்கம் இருந்து வந்துள்ளது. இங்கிலாந்தின் ஆங்கிலேய- புரட்டஸ்தாந்து பேரினவாதம், ஸ்கொட்டிஷ் கத்தோலிக்க மக்கள் மீது அதிகாரம் செலுத்தியது. இன்றைக்கும் ஸ்கொட்லாந்தில் மட்டுமல்லாது வேல்சிலும் ஆங்கிலம் தான் பிரதானமான மொழியாக பேசப் படுகின்றது.

இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரையில் ஸ்கொட்டிஷ் தேசியவாத இயக்கம் அடக்கப் பட்டு வந்தது. தன்னாட்சி, தனியான பாராளுமன்றம் இருந்தாலும் பிரித்தானியா முழுவதையும் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகளின் செல்வாக்கு அதிகம். அதைவிட ஸ்கொட்லாந்தில் கணிசமான அளவில் குடியேறியுள்ள ஆங்கிலேய இனத்தவரையும் கணக்கில் எடுக்க வேண்டும். வெளிவிவகாரம் மட்டுமல்லாது, பொருளாதார ரீதியாகவும் ஸ்கொட்லாந்து இங்கிலாந்துக்கு கீழே கட்டுப்பட்டுள்ளது. இருப்பினும் பிரிட்டன் உலகை காலனிப் படுத்திய காலத்தில் ஸ்கொட்டிஷ்காரர்களின் பங்களிப்பு காரணமாக தமக்கென தன்னாட்சிப் பிரதேசத்தை பெற்றுக் கொண்டனர். ஆகவே ஒரு காலனியாதிக்க நாட்டில் இருந்த நிலைமையை, முன்பு காலனியாக இருந்த இலங்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

விவாதத்தில் கலந்து கொண்ட இன்னொரு சட்ட வல்லுனரான அம்பாறையை சேர்ந்த சிவகுமார் நவரத்தினம், ஈழத்தமிழ்த் தேசிய அரசியலில் புறக்கணிக்கப் பட்டு வந்த ஒரு விடயத்தை தொட்டுக் காட்டினார். அம்பாறை என்பது கிழக்கு மாகாணதின் தென் கோடியில் தமிழர் வாழுமிடம் என்பது பலருக்கு தெரியாமல் இருப்பதை சுட்டிக் காட்டினார். மட்டக்களப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட அம்பாறைக்கு கொடுக்கப் படுவதில்லை. மேலும் அவர் மலையகத் தமிழரின் தனித்துவத்தை அங்கீகரிக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துக் கூறினார்.

இந்த இடத்தில் அஷோக்பரன் கூறிய சில கருத்துக்களை விமர்சிக்க வேண்டி உள்ளது. அவர் ஒரு தமிழ்த்தேசியவாதி அல்ல. இலங்கையின் ஒற்றையாட்சியின் கீழ் தீர்வைக் காண விரும்பும் தாராளவாதி. முஸ்லிம்களும், மலையகத் தமிழர்களும் தமக்கென தனியான தேசியத்தை கட்டமைத்துக் கொண்டது அவர்களது தெரிவு என்றும், வடக்குத் தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் அவர்களை ஒதுக்கவில்லை என்றும் வாதாடினார். இதில் பாதியளவு மட்டுமே உண்மை உள்ளது.

ஆரம்பத்தில் தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சியும், தொண்டமானின் இந்திய தொழிலாளர் காங்கிரஸ் கட்சியும் ஒற்றுமையாக செயற்பட்டு வந்தன. இருப்பினும் எழுபதுகளின் இறுதிப் பகுதியில் தொண்டமான் தன்வழி தனிவழி என்று சென்று விட்டார். அதனை வடக்குத் தமிழ்த்தேசியவாதிகள் முழுமனதாக ஏற்றுக் கொள்ளவில்லை. "தொண்டமான் ஒரு துரோகி" என்று வசைபாடிக் கொண்டிருந்தார்கள். இதில் யார் சரி, பிழை என்று நான் சொல்ல வரவில்லை. மலையக அரசியல் தனியாக பிரிந்தமைக்கு, வடக்குத் தமிழ்த்தேசிய அரசியல் தலைவர்களின் புறக்கணிப்பும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அதுவே முஸ்லிம்கள் குறித்த நிலைப்பாடாகவும் இருந்தது. கூட்டணி முதல் புலிகள் வரை முஸ்லிம் காங்கிரசின் இருப்பை ஜீரணிக்க முடியாதவர்களாக இருந்துள்ளனர்.

கடைசியாக பேச வந்த விரிவுரையாளர் மீநிலங்கோ அன்றும் இன்றும் பேசப்பட்டு வரும் தமிழ்த் தேசிய அரசியலானது மேட்டுக்குடி (பூர்ஷுவா) தன்மை கொண்டது என்பதையும், அது அடித்தட்டு மக்களின் அபிலாஷைகளை கவனத்தில் எடுக்கவில்லை என்றும் வாதாடினார். அதற்கு உதாரணமாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் யாழ்ப்பாணத்தில் நடந்த சுருட்டுத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் போன்ற தகவல்கள் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப் படுகின்றன. அது மட்டுமல்ல, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயங்கி யாழ்ப்பாண வாலிபர் சங்கத்தின் முற்போக்கான அரசியல் கோரிக்கைகளும் புறக்கணிக்கப் பட்டு வந்துள்ளன.

மீநிலங்கோ தனது உரையில் சுயநிர்ணய உரிமை குறித்து சரியான நிலைப்பாடு இருக்க வேண்டும் என்றும், "ஆகவயம்", "புறவயம்" என்று, நாமாகவே உலகில் இல்லாத ஒரு விடயத்தை உருவாக்கி விட்டு வாதிடக் கூடாது என்றார். இது தொடர்பாக லெனின் கூறிய வரைவிலக்கணத்தை எடுத்துக் காட்டி விளங்கப் படுத்தினார். ஒவ்வொருவருக்கும் விவாகரத்து உரிமை இருக்கிறது என்பதற்காக மணம் முடிக்கும் பொழுதே அதைப் பற்றிப் பேசுவதில்லை. அந்த உரிமையை வைத்துக் கொண்டு சேர்ந்து வாழ முயற்சிக்கிறார்கள். இங்கு சேர்ந்து வாழ்வது எப்படி என்பது தான் முக்கியமே தவிர பிரிந்து செல்வதல்ல. மேலும் இதற்கு முன்னர் அஷோக்பரனும், குருபரனும் நடத்திய வாதாட்டத்தில் சிலாகித்துப் பேசப் பட்ட பிரான்ஸ் நாட்டின் மறுபக்கம் பற்றி எடுத்துக் கூறினார். பிரான்சில் பேசப்பட்டு வந்த சிறுபான்மை மொழிகளை அடக்கி ஒடுக்கி பிரெஞ்சு மொழி திணிக்கப் பட்டது வரலாறு. அத்தகைய பேரினவாத பிரான்ஸ் நாட்டை ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு உதாரணம் கற்பிப்பது ஒரு நகைப்புக்குரிய விடயம்.