Tuesday, June 26, 2018

மெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி

முதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரைப்படத்தை பாருங்கள். ஓரளவு வசதியான மத்தியதர வர்க்க குடும்ப இளைஞர்கள் கூட, விலை உயர்ந்த ஆடம்பர நுகர் பொருட்களுக்கு ஆசைப்பட்டு திருடர்களாக மாறுகிறார்கள்.

இது வெறும் சினிமாக் கற்பனை அல்ல. அன்றாட வாழ்க்கையின் யதார்த்தம். அந்தப் படத்தில் வருவதைப் போன்று, விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் பவனி வர ஆசைப்பட்டு நச்சரிக்கும் யுவதிகளை, ஐபோன் வைத்திருக்க ஆசைப்படும் இளைஞர்களை, இன்று நாங்கள் கிராமங்களிலும் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, "வீரஞ் செறிந்த விடுதலைப் போராட்டம் நடந்த மண்" என்று போற்றப்படும் ஈழத்திலும் இது தான் நிலைமை. சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் Mahathevan Nadanathevan தனது பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட நிலைத் தகவல் இது. தமது பிள்ளைகளின் துர்நடத்தைகள் பற்றி போலீஸில் முறைப்பாடு செய்யும் பெற்றோர் பற்றிய பின்வருமாறு எழுதி உள்ளார்:
//உயர்தரம் படிக்கும்போதே விலை கூடின போன், விலை கூடின ஆடம்பர மோட்டார் சைக்கிள்களை வாங்கித்தருமாறு சண்டை பிடிப்பதாகவும், அவ்வாறு மறுக்கும் சந்தர்ப்பங்களில் தமக்கு அடிப்பதாகவும், கூடாத சினேகிதர்களுடன் சேர்ந்து ஊரைச்சுற்றிவிட்டு தாங்கள் நினைத்த நேரத்தில் வீடு வருவதாகவும் கூறுகின்றனராம்.//(26-6-18)

இது "தமிழர்களுக்கு மட்டுமே வரும் வியாதி" அல்ல. உலகம் முழுவதும் இது தான் நடக்கிறது. அத்துடன், வறிய நாடுகளில் மட்டுமே நடப்பதாகவும் சொல்ல முடியாது. பணக்கார நாடுகளும் விதிவிலக்கு அல்ல. "எல்லோரும் எல்லாமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வதாக" நினைத்துக் கொள்ளும் மேற்கத்திய நாடுகளில் கூட திருட்டுக்களும், வழிப்பறிகளும் பெருமளவில் நடக்கின்றன.

நியூ யோர்க், டொராண்டோ, லண்டன், பாரிஸ் என்று எந்தப் பெரு நகரத்திலும் குற்றங்கள் குறைந்த பாடில்லை. பதின்மூன்று வயதிலேயே திருடத் தொடங்கும் இளைஞர்கள் செல்வந்த நாடுகளிலும் உண்டு. பருவ வயதில் விபச்சாரம் செய்ய தொடங்கும் யுவதிகளும் உண்டு. இதற்கு என்ன காரணம் என்று கேட்டால், "விலை உயர்ந்த நுகர் பொருட்களின் மீதான மோகம்" என்று பதில் வரும். ஆடம்பர வசதி வாய்ப்புகளை பணக்கார குடும்பத்து பிள்ளைகள் மட்டும் அனுபவிக்க வேண்டுமா? ஏழைக் குடும்பத்து பிள்ளைகளுக்கு ஆசை இருக்காதா?

மேற்கத்திய நாடுகளில் கேங் (Gang) கலாச்சாரம் வேகமாக பரவி வருகின்றது. பதினைந்துக்கும், இருபத்தைந்துக்கும் இடைப்பட்ட வயதினர் ஒரு குழுவாக சேர்ந்து திருட்டுக்களில் ஈடுபடுகின்றனர். இளம் குற்றவாளிகளின் நடத்தைகளை ஆராய்ந்தால் பெரும்பாலும் கிடைக்கும் முடிவு இது தான். முதலாளித்துவ நுகர்பொருட்கள் மீதான வெறி குற்றங்களை செய்யத் தூண்டுகிறது.

சந்தையில் புதிதாக வரும் ஐபோன் போன்ற விலை உயர்ந்த பாவனைப் பொருட்களை வாங்கும் வசதியற்ற குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள், எங்காவது திருடியாவது வாங்க நினைக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில் திருட்டு ஒரு குற்றம் அல்ல. ஆனால், குறிப்பிட்ட ஒரு பிராண்ட் பொருள் தன்னிடம் இல்லை என்பதை ஒரு பெரும் குறையாகக் கருதுகிறார்கள். இது குறித்து பிராண்ட் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் "பெருமைப்" பட்டுக் கொள்ளலாம்.

முப்பது அல்லது நாற்பது வருடங்களுக்கு முன்னர் இந்தப் பிரச்சினை இருக்கவில்லை. அப்போது உலகமயமாக்கல் இருக்கவில்லை. இலங்கை, இந்தியா மட்டுமல்லாது, பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் சந்தை பெரும்பாலும் உள்ளூர் உற்பத்தியை நம்பி இருந்தது. மேலைத்தேய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் விலை உயர்ந்த ஆடம்பரப் பொருட்கள், பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்தன. அவற்றை வாங்குவதற்கான கடை குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டுமே இருக்கும். அப்படி ஒரு கடை இருப்பதே பலருக்கும் தெரியாது.

அந்தக் காலங்களில், பணக்காரர்கள் மொத்த சனத்தொகையில் எண்ணிக்கையில் குறைவாக இருந்த படியால் சற்று அடக்கமாக இருந்தனர். விலை உயர்ந்த   ஆடம்பர பொருட்களை பகிரங்கப் படுத்தாமல் தமக்குள்ளே வைத்துக் கொண்டார்கள். ஆனால், இன்று நிலைமை மாறி விட்டது. பண வசதி படைத்த உயர் மத்திய தர வர்க்கத்தின் பெருக்கம், ஆடம்பரப் பொருட்களுக்கான சந்தையை விஸ்தரிக்க வைத்துள்ளது. அது கிராமங்களை கூட விட்டு வைக்காமல் எங்கும் வியாபித்துள்ளது.

உலகமயமாக்கல் காரணமாக, இன்று அமெரிக்காவில் அறிமுகப் படுத்தப் படும் ஒரு பொருள், நாளைக்கே உலகம் முழுவதும் விற்பனைக்கு வந்து விடும். ஒவ்வொரு நாட்டிலும் பெரிய நகரங்கள் மட்டுமல்லாது, சிறிய நகரங்களிலும் உள்ள இலட்சக் கணக்கான கடைகளுக்கு விநியோகிக்கப் பட்டிருக்கும். ஒரு பொருள் சந்தைக்கு வரும் முன்னரே, அது தொடர்பான ஆரவாரமான விளம்பரங்கள் அறைகூவல் விடுக்கும். அது போதாதென்று, "சராசரி" இளைஞர்களின் "சாதாரணமான" உரையாடல்களில் அது பற்றிய தகவல்கள் பரிமாறப் படும்.

எமக்கு அவசியமான பாவனைப் பொருள் சந்தையில் மலிவான விலையில் கிடைத்தாலும் வாங்க மாட்டோம். ஏனென்றால் அது "பெயர் தெரியாத", "யாராலும் விரும்பப் படாத" பொருள். எல்லோராலும் விரும்பி வாங்கப் படும் பிராண்ட் பொருட்களையே வாங்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப் படுகிறோம்.

"அனைவராலும் விரும்பப் படும்" நுகர் பொருட்கள்,  அவற்றின் பிராண்ட் பெயருக்காக மட்டும் செயற்கையாக விலை கூட்டி விற்கப் படும். ஒரு ஐபோனின் உற்பத்திச் செலவு ஐம்பது டாலர்களாக இருக்கலாம். ஆனால், அது ஐநூறு டாலர்களுக்கு விற்கப் படும். அதை விட அதிக விலை வைத்தாலும் வாங்குவதற்கு ஏராளமானோர் போட்டி போடுவார்கள். 

இவ்வாறு முதலாளித்துவம் மனிதர்கள் எல்லோரையும் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமையாக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பிராண்ட் பொருளை வாங்க முடியாத அளவுக்கு வருமானம் குறைந்தவர்களின் நிலைமை தான் சங்கடமானது. பலர் அது பற்றிய ஏக்கத்துடனே பொழுதைக் கழிப்பார்கள். நண்பர்கள், உறவினர்களுடன் பழகுவதற்கு கூட வெட்கப் படுவார்கள். இதைவிட இளம் பிராய நண்பர்களுக்கு இடையிலான ஏளனப் பேச்சுக்கள், சீண்டல்கள் மன உளைச்சல் உண்டாக்கும் அளவிற்கு மோசமாக இருக்கும்.

அதை விடக் கொடுமை, சமூகத்தில் இந்தப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வு இல்லாமை தான். மேற்குறிப்பிட்ட விடயங்கள் பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் கூட, அதற்குக் காரணம் முதலாளித்துவம் என்று வாய் திறந்து சொல்ல மாட்டார்கள். மெத்தப் படித்தவர்களிடம் கூட இது குறித்த அறியாமை உள்ளது. அதனால் தான் பல்கலைக்கழக மாணவர்கள் கூட நுகர்பொருள் கலாச்சாரத்திற்கு அடிமையாகிறார்கள். குற்றச் செயல்களில் கூட ஈடுபடுகிறார்கள்.

மெட்ரோ திரைப்படத்தில், நுகர்பொருள் கலாச்சாரத்தால் சமூகத்தில் விளையும் தீமைகள்  மிகவும் தெளிவாக காட்டப் படுகின்றன. ஒரு அப்பாவி கல்லூரி மாணவன், விலை உயர்ந்த நுகர்பொருள்களுக்கு ஆசைப் பட்டு, தெருவில் பெண்களின் தங்கச் சங்கிலி அறுக்கும் திருடனாக மாறுகிறான். முதலாளித்துவ நுகர்வு வெறி ஒரு மனிதனை மிருகமாக்குகிறது. ஒரு கட்டத்தில் பெற்ற தாயையே கொலை செய்யும் அளவிற்கு இரக்கமற்ற ஜடமாக மாற்றுகிறது.

திரைப்படத்தில் வரும் உணர்ச்சிகரமான காட்சிகளை பார்த்து கண்ணீர் விட்டவர்கள் பலரிருப்பார்கள். ஆனால், அவர்களது கோபம் எப்போதும் தனி மனிதர்களின் மீது மட்டுமே இருக்கும். எந்தக் கட்டத்திலும், இந்த முதலாளித்துவ சமூக அமைப்பிற்கு எதிராகத் திரும்பாது. அந்த விடயத்தில் திரைப்படமும் மௌனம் சாதிக்கிறது. ஆனால், படம் வெளியிட அனுமதிக்க முடியாமல் தணிக்கை சபைக்கு மட்டும் ஏதோ நெருடி இருக்கிறது. வயது வந்தோர் மட்டும் பார்க்கலாம் என A சேர்ட்டிபிகேட் கொடுப்பதற்கும் தயங்கி இழுத்தடித்ததாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். என்ன செய்வது? முதலாளித்துவ அரக்கனின் அடிமடியில் கை வைத்தால் சும்மா விடுவார்களா?

Friday, June 22, 2018

NGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை

NGO Sector, The Trojan horse of capitalism - ஒரு துண்டுப்பிரசுரம்
------------------

"அரசு சாரா நிறுவனங்கள்" (NGO) என்றால் என்ன? எதற்காக மேற்கத்திய நாடுகளின் அரசுகளும், முதலாளிகளும் அந்த அமைப்புகளுக்கு நிதி கொடுத்து வளர்க்கிறார்கள்?

நூலில் உள்ள விபரங்கள் சுருக்கமாக:

தேர்தல்களால் மாற்றம் வரும் என்றால் தேர்தல் நடத்துவதை தடை செய்து விடுவார்கள் என்று சொல்லப் படுவதுண்டு. அந்தக் கூற்று NGO க்களுக்கும் பொருந்தும். உலக நாடுகள் ஒவ்வொன்றிலும், இந்த "அரசு சாரா" நிறுவனங்களை, நடைமுறையில் உள்ள அரசுகள் சகித்துக் கொள்வதன் காரணம் என்ன?

NGO என்பது, அரசு, நீதித்துறைக்கு அடுத்ததாக, ஜனநாயகத்தின் மூன்றாவது அமைப்பாக கருதப் படுகின்றது. அதிகாரம், அடக்குமுறை, வறுமை போன்றவற்றுக்கு எதிராக NGO க்கள் போராடுவதாக காட்டப் படுகின்றது. உண்மையில், இது முதலாளித்துவத்தின் இன்னொரு ஏமாற்று வேலை. தேர்தல்கள் மூலம் மக்களுக்கு தெரிவு செய்யும் சுதந்திரம் இருப்பது போன்ற மாயை உருவாக்கப் பட்டுள்ளது. அதே மாதிரி, NGO க்கள் சமூகத்தை ஜனநாயக மயப் படுத்துவது போன்ற மாயை உண்டாக்கப் படுகின்றது.

NGO என்ன செய்கிறது? அரசுக்கும் மக்களுக்கும் நடுவில் மத்தியஸ்தம் வகிப்பதாக காட்டிக் கொள்கிறது. இதன் மூலம் அரசுக்கு எதிரான மக்களின் கோபங்களை தணிக்க உதவுகிறது. அரச எதிர்ப்பு சக்திகளை சட்டபூர்வமான, அமைதியான, கட்டுக்கோப்பான அமைப்பாக மாற்றுகின்றது. 

இதன் மூலம், மக்களை முதலாளித்துவ ஆதரவாளர்களாக மாற்றுவதுடன், ஆளும் வர்க்க கருத்தியல்களை ஏற்றுக் கொள்ளவும் வைக்கிறது. மேற்கத்திய நாடுகளில் NGO க்களின் தாக்கம் மிகக் குறைவாக இருந்த போதிலும், பிற உலக நாடுகளில் அவற்றின் ஆதிக்கம் அளவிட முடியாதது.

அரசு சாரா நிறுவனங்கள் என்று சொல்லிக் கொண்டாலும், அவற்றிற்கு கிடைக்கும் நிதியில் ஒரு பகுதி அரசிடம் இருந்து வருகின்றது. பல வகையான NGO க்கள் உள்ளன. தொண்டு நிறுவனங்கள் மட்டுமல்லாது, அதிகாரத்தை கட்டமைப்பவை, உள்நாட்டு, சர்வதேச NGO க்கள் என்று பல வகையானவை. 

NGO என்றால் என்ன என்ற கேள்விக்கு, "ஒரு தனியார் தொண்டு நிறுவனம்" என USAID கூறும் வரைவிலக்கணம் சர்ச்சைக்குரியது. அதை ஏற்றுக்கொள்ள முடியாத காரணம், அரசுகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் அவற்றிற்கு உதவுவதால் மட்டும் அல்ல. ஒரு NGO அமைப்பு, மனேஜர்கள் போன்ற சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்களையும், இலவச தொண்டு வேலை செய்யும் களப் பணியாளர்களையும் கொண்டுள்ளது.

1945 ஆம் ஆண்டு எழுதப் பட்ட ஐ.நா. சாசனத்தில் தான் NGO பற்றிய குறிப்புகள் வருகின்றன. இருப்பினும், உலகில் மிகப் பழமையான NGO, 19 ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உருவாக்கப் பட்ட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகும்.

இந்த NGO க்களுக்கான நிதி எங்கிருந்து வருகின்றது? உலகளவில் கார்ப்பரேட் நிறுவனங்களும், அரசுகளும் நிதி கொடுக்கின்றன. அதே நேரம், கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூத மத அமைப்புகளும் சிறியளவில் நிதி வழங்குகின்றன. முதலாளிகளையும், அரசையும் பின்பற்றி, மத நிறுவனங்களும் தமது செல்வாக்கை பயன்படுத்த விரும்புகின்றன.

சர்வதேச மட்டத்தில், அநேகமாக நீங்கள் கேள்விப் பட்ட எல்லா பெரிய நிறுவனங்களும், NGO க்களுக்கு நிதி வழங்கும் அமைப்புகளை கொண்டுள்ளன. Microsoft, Monsanto, Nike, Ford, Starbucks... இது போன்ற பெரும் முதலாளிய நிறுவனங்கள் மட்டுமல்லாது, தனிப்பட்ட செல்வந்தர்களும் நிதி வழங்குகின்றனர். பில் கேட்ஸ், ஜோர்ஜ் சோரோஸ், ரொக்கபெல்லர் என்று பலரைக் குறிப்பிடலாம்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏழைகள், சிறுவர்கள், நோயாளிகள் போன்றோருக்கு உதவும் திட்டங்களை செயற்படுத்துவதன் நோக்கம் என்ன?  சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு உதவும் பொறுப்புள்ள நிறுவனங்கள் என்று காட்டிக் கொள்கின்றன. இந்த நற்பெயர், மக்கள் அவர்களது உற்பத்திப் பொருட்களை பெருமளவில் வாங்க வைக்கும். அதனால் அதிக இலாபம் கிடைக்கும்.

ஆப்பிள் நிறுவனம் ஆசிய நாடுகளில் இலட்சக் கணக்கான தொழிலாளர்களை சுரண்டுகின்றது. அவர்களை நாளொன்றுக்கு பதினான்கு மணித்தியாலம் வேலை செய்ய வைத்து கசக்கிப் பிழிகிறது. ஒரு ஐபோனின் விலை தான், அதைச் செய்யும் தொழிலாளியின் ஒரு வருடச் சம்பளமாக இருக்கும். ஆப்பிள் நிறுவனம் மலேரியா தடுப்பு மருந்துக்கு கொஞ்சப் பணத்தை நன்கொடை வழங்குவதால், இந்தக் கொடுமைகள் மறைக்கப் படுகின்றன.

வளர்ந்து வரும் நாடுகளுக்கு, கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் குறுகிய கால உதவிகள் மூலம், அந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி அடைய விடாமல் பார்த்துக் கொள்கின்றன. இதனால் அவை என்றென்றும் மேற்கத்திய நாடுகளில் தங்கியிருக்கும். கார்ப்பரேட் நிறுவனங்கள், அந்த நாடுகளின் வளங்களை இரக்கமற்று சுரண்டிக் கொண்டிருக்கின்றன. இதனால் அபிவிருத்தி தடைப் படுவதுடன், NGO நிறுவனங்களின் கருணையில் தங்கியிருக்க நிர்ப்பந்திக்கப் படுகின்றன. இதனால்,வறுமை, பட்டினி, நோய்கள், எழுத்தறிவின்மை போன்றவற்றை ஒழிப்பதற்கான மக்களின் போராட்டத்தை தகர்க்கின்றன.

எதற்காக முதலாளிகள் NGO நிறுவனங்களுக்கு நிதி வழங்குகிறார்கள்? முதலாளித்துவ பொருளாதார விதியின் படி பார்த்தால் இது ஒரு "மீளப் பெறப் படாத செலவு". அதாவது, ஒரு வணிக நிறுவனத்தின் ஒரு பகுதி உற்பத்தி செலவுக்கும், இன்னொரு பகுதி மீள் முதலீட்டுக்கும் செலவாகிறது. இதில் இலாபம் தனியாக ஒதுக்கப் படுகின்றது. அப்படியானால், எதற்காக முதலாளிகள் தமது இலாபத்தின் ஒரு பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு செலவிடுகிறார்கள்?

தொண்டு நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுக்கும் முதலாளிகள் கொடை வள்ளல்கள் என்று சமூகத்தில் படம் காட்டப் படுகின்றது. ஆனால், இது ஒரு கொடை அல்ல. அவர்களது வர்த்தகத்தை உறுதிப் படுத்தவும், எதிர்கால இலாபத்தை நிச்சயப் படுத்துவதற்குமான முதலீடாக அந்தப் பணம் செலவிடப் படுகின்றது. இதனால் கிடைக்கும் இலாபம் நீண்ட கால நோக்கிலானது.

NGO நிறுவனங்கள், முதலாளித்துவ சமுதாயத்தின் மீதான நன்மதிப்பை உருவாக்கி, முதலாளித்துவத்தை நிலைநிறுத்துகின்றன. ஜனநாயகமயப் படுத்தலுக்காக, பொருளாதார சுதந்திரத்திற்காக பாடுபடும் NGO க்களுக்கு கார்பரேட் முதலாளிகள் அள்ளிக் கொடுப்பதும் காரணத்தோடு தான். பொருளாதாரத்தை மறு கட்டமைப்பு செய்வதன் அர்த்தம், உற்பத்தி, தொழிலாளர் உரிமைகள், ஏகபோகம் போன்ற விடயங்களில் மிகக் குறைந்தளவு கட்டுப்பாடுகளை கொண்டு வருவது தான். இதனால், பெரும் முதலாளிகளுக்கு மிகப் பெரும் செல்வம் செல்வம் சேர்வதுடன், உழைக்கும் வர்க்கத்திற்கு அவலங்களும் உண்டாகும்.

அரசு எதற்காக NGO க்களுக்கு உதவுகின்றது? நடைமுறையில் உள்ள அரசு, பணக்காரர்களை பாதுகாப்பதையும் அவர்களது நலன்களை உறுதிப் படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசானது, வன்முறை மீது ஏகபோக உரிமை பாராட்டுவதுடன் அடக்குமுறையையும் ஏவி விடுகின்றது. இன்றுள்ள முதலாளித்துவ சமூக அமைப்பை பாதுகாக்கும் நோக்கில் அரசு NGO க்களுக்கு நிதி வழங்குகின்றது. அரசு உறுதியாக இருந்தால் தான், அது பணக்காரர்களுக்கு சேவை செய்ய முடியும்.

NGO க்கள் முன்னெடுக்கும் "போராட்டம்" என்றைக்குமே அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கப் போவதில்லை. அவர்கள் வீதியில் இறங்கிப் போராடுவதில்லை. வன்முறை பிரயோகிப்பதில்லை. அத்துடன், மையப் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதில்லை. பாராளுமன்றத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு கோபத்துடன் இருப்பவர்களை, NGO க்கள் தம்முடன் சேர்த்துக் கொண்டு அஹிம்சா வழியில் போராடுமாறு சொல்லிக் கொடுக்கின்றன. அவர்களை கோட்டு சூட்டு போட்ட அலுவலகப் பணியாளர்களாக, அறிக்கைகள் எழுத வைக்கின்றன.

எந்த NGO வும் புரட்சிகரமாக செயற்பட முடியாது. அது தனது கணக்கு அறிக்கைகளை தயாரிப்பதிலும், அடுத்த வருடத்திற்கான நிதியை பெற்றுக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்துகின்றது. நிதியின்றி எந்த NGO வும் இயங்க முடியாது. அரசும், கார்பரேட் முதலாளிகளும் புரட்சிகர NGO வுக்கு நிதி வழங்க மாட்டார்கள். சுருக்கமாக, ஒரு NGO வின் செயற்பாடுகளும், போராட்டங்களும், அந்த நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும்.

சட்டங்களுக்குள் அனுமதிக்கப் பட்ட போராட்டம் வெற்றி காண முடியாது. அது எப்போதும் அதிகார வர்க்கத்துடனான சமரசப் பேச்சுவார்த்தைகளில் தான் முடியும். அரசாங்கத்தையும், அதன் சட்டங்களையும் எதிர்க்கும் NGO போராட்டம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே அனுமதிக்கப்படும். ஆனால், அது அதிகாரத்தை முழுமையாக கேள்விக்குட்படுத்த மாட்டாது. அரசைக் கவிழ்க்க நினைக்கும் NGO சட்டப் படி பதிவு செய்ய முடியாது. சமூகத்தில் NGO எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்ற நம்பிக்கையில் அரசாங்கம் அமைதியாக ஆட்சி செய்கின்றது.

பிற்குறிப்பு: 
துண்டுப்பிரசுரம் போன்ற இந்த சிறு நூல், (முன்னாள் யூகோஸ்லேவிய குடியரசான) மசிடோனியாவில் உள்ள Crn Blok என்ற இடதுசாரி (Anarchist) அமைப்பால் வெளியிடப் பட்டுள்ளது.

Wednesday, June 20, 2018

இரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே!

முதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் மாதிரி, இதுவும் குற்றச் செயல்களில் ஈடுபடும் தனிநபர்களே பிரச்சினைக்கு காரணம் என்பது போல சித்தரித்து திசைதிருப்பி விடுகின்றது. எந்த இடத்திலும் முதலாளித்துவம் மீதான விமர்சனம் கிடையாது.

பேஸ்புக் "இலவசமாக" கிடைப்பதற்குக் காரணம் தகவல் திருட்டு என்பது ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட விடயம். இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க், அமெரிக்க காங்கிரஸ் விசாரணைக்கும் முகம் கொடுக்க வேண்டி இருந்தது. கூகிள் கூட தகவல் திருட்டில் ஈடுபடும் நிறுவனம் தான். இவ்வாறு பல பன்னாட்டு IT நிறுவனங்கள் சட்டபூர்வமான தகவல் திருட்டில் ஈடுபட்டிருக்கின்றன.

இந்தத் தகவல் திருட்டு, சட்டபூர்வமான வழிகளில் நடக்கிறது. உதாரணத்திற்கு நாம் புதிதாக பேஸ்புக் கணக்கு திறக்கும் பொழுது, அவர்களது நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாக சம்மதம் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் பாவிக்க முடியும். பேஸ்புக் நிறுவனம் நமது தகவல்களை மூன்றாம் நபருக்கு விற்பதற்கு அனுமதிப்பதும் நிபந்தனைகளில் ஒன்று.

நமது தகவல்களை திருடி விற்காமல், மார்க் சுக்கர்பெர்க் உலகில் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராக வந்திருக்க முடியுமா? அமெரிக்க பங்குச் சந்தையில் குறிப்பிடும் அளவிற்கு பேஸ்புக் நிறுவனம் கோடிக் கணக்கான இலாபம் சம்பாதிக்க முடியுமா? சுருக்கமாக, இரும்புத்திரை திரைப்படத்தில் வரும் வில்லன் பாத்திரமான சத்தியமூர்த்தியின் (அர்ஜுன்) இடத்தில் மார்க் சுக்கர்பெர்க்கை வைத்துப் பார்த்தால் தவறேதும் இல்லை.

ஆனால், இரும்புத்திரை திரைப்படம் அதைப் பற்றிப் பேசாமால், ஸ்மார்ட் போன்களை ஹேக் செய்யும் கிரிமினல் கும்பல்கள் பற்றி மட்டுமே பேசுகின்றது. இது படத் தயாரிப்பாளர், இயக்குனரை பொறுத்தவரையில் "பாதுகாப்பான அரசியல்". இப்படித் தான், இது போன்ற பல அரசியல் படங்கள், மக்களை அரசியல் மயப் படுத்தாமல், பொழுதுபோக்கு அம்சங்களுடன் திருப்திப் பட வைக்கின்றன.

ஜோர்ஜ் ஓர்வெல் எழுதிய 1984 நாவலில், மக்கள் அனைவரையும் கண்காணித்து, அவர்களது சிந்திக்கும் திறனையும் மாற்றும் சக்திவாய்ந்த அரசு பற்றி எழுதி இருந்தார். இன்று அந்த நாவலில் கற்பனை செய்ததை விட பல மடங்கு அதிகமாக கண்காணிக்கப் படுகிறோம். "பெரியண்ணன் கண்காணிக்கிறான்" (Big brother is watching) என்று நாவலில் ஜோர்ஜ் ஓர்வெல் எழுதிய வாசகம் உண்மையாகி உள்ளது.

ஒரு வீட்டிற்குள், நான்கு சுவருக்குள் என்ன நடக்கிறது என்பதை மொபைல் போன், தொலைக்காட்சி பெட்டி என்பன மூலம் இலகுவாக உளவறிய முடியும். இதற்காகவே எல்லா ஸ்மார்ட் போன்களிலும் அமெரிக்கா ஒரு மென்பொருளை பொருத்தி விட்டுள்ளது. அண்மையில் ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்கல் கூட அமெரிக்காவினால் ஒட்டுக் கேட்ட விவகாரம் வெளியாகியது.

தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து மக்களின் வாழ்க்கையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தாலும்,அது மக்களை நுகர்வோர் எனும் விலங்குகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது. எமது விருப்பங்களை துல்லியமாக அறிந்து கொண்டு, அதற்கு ஏற்றவாறு பொருட்களை விளம்பரம் செய்கிறார்கள்.

நூறு வருடங்களுக்கு முன்பிருந்த முதலாளிகளுக்கு, வாடிக்கையாளர்களின் விருப்பங்களை அறிவது மிகப் பெரிய சவாலாக இருந்தது. மக்களின் விருப்பங்கள் மாறும் பொழுது, அல்லது குறையும் பொழுது நட்டம் ஏற்பட்டு, மூடப் பட்ட வணிக நிறுவனங்கள் பலவுண்டு. இனிமேல் அந்தப் பிரச்சினை இல்லை. 

தகவல் தொழில்நுட்பம் உலக மக்கள் அனைவரதும் மூளைகளை கட்டுப்படுத்துகின்றது. உலகில் மிகவும் சக்திவாய்ந்த பன்னாட்டு நிறுவனங்களே இந்தக் குற்றங்களில் பகிரங்கமாக ஈடுபடுகின்றன. அதை அமெரிக்கா உட்பட உலகில் எந்த அரசும் கட்டுப்படுத்துவதில்லை. தாராளமாக திருடலாம் என வசதி ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டுள்ளது.

இரும்புத்திரை திரைப்படத்தில் கடன் எனும் அடிமை விலங்கு, அதனால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றியும் விரிவாக காட்டப் படுகின்றது. இன்றைய காலத்தில் முதலாளித்துவ பொருளாதாரம் முழுவதும் கடனை நம்பியே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு நாட்டு நாணயத்தின் மதிப்பை தீர்மானிப்பது தங்கம் அல்ல, கடன் என்பது பலர் அறியாத தகவல். 

"பணக்கார நாடுகள்" என்று கருதப்படும் மேற்கத்திய நாடுகளில் பெரும்பான்மை மக்கள், கடந்த பல தசாப்த காலமாக கடனில் தான் வாழ்கிறார்கள். வெளிநாட்டு மோகத்தில் மேற்குலகு செல்லும் நம்மவர்கள், இந்த உண்மையை அங்கு சென்ற பின்னர் தான் அறிந்து கொண்டனர்.

கடன் விடயத்தில் வங்கிகள் நேர்மையாக நடந்து கொள்வது போலவும், இடைத் தரகர்களான கிரிமினல்கள் ஏமாற்றுவது போலவும், இரும்புத்திரை திரைப்படத்தில் காட்டுவது மாதிரி எல்லா இடங்களிலும் நடப்பதில்லை. பத்திரங்களை பார்க்காமல் இலகு கடன் கொடுக்கும் விடயத்தில் வங்கிகளிலும் ஊழல் நடக்கிறது. 

இதற்கு சிறந்த உதாரணம், அமெரிக்காவில் 2008 ம் ஆண்டு ஏற்பட்ட சப் பிரைம் மோசடியும், அதனால் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடியும் ஆகும். தகுதி இல்லாதவர்களுக்கு கடன் கொடுத்த மோசடி காரணமாக, Lehman Brothers போன்ற அமெரிக்காவின் மிகப் பழமையான வங்கிகள் கூட திவாலாகின. இதே பிரச்சினை காரணமாக, ஒரு குட்டி ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் வங்கிகள் திவாலான படியால், அந்த நாட்டுப் பொருளாதாரமே ஸ்தம்பிதம் அடைந்தது.

தற்போது வரும் பல தமிழ்த் திரைப்படங்கள், மக்கள் எதிர்நோக்கும் அரசியல், பொருளாதார பிரச்சினைகள் பற்றிப் பேசுகின்றன. அந்தளவுக்கு ஒரு குறைந்த பட்ச விழிப்புணர்வு உருவாகி உள்ளது. இருப்பினும், பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாலும், தனி நபர்களை வில்லன்களாக காட்டுவதாலும், திரைப்படம் சொல்ல வரும் செய்திகளை மக்கள் கவனத்தில் எடுக்காமல் விடுகின்றனர்.

இறுதியாக, இந்தத் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து அல்லது வாங்கி வெளியிட்டுள்ளமை ஒரு வேடிக்கையான முரண்நகை. மொபைல் போன் வாடிக்கையாளர்களின் பணத்தை திருடுவது முதல், கிரிமினல்களின் குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருந்தது வரையில், லைக்கா நிறுவனம் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன.

இதிலே வேடிக்கை என்னவென்றால், இரும்புத்திரை படத்தில் காட்டப்படும் தகவல் திருட்டை லைக்கா நிறுவனமே செய்து கொண்டிருக்கிறது. ஐரோப்பாவில் லைக்கா சிம் கார்ட் "இலவசமாக" கொடுக்கும் பொழுது, அதில் ஒரு கவர்ச்சியான விளம்பரம் இருக்கும். லைக்காவின் இணையப் பக்கத்தில், மொபைல் போன் இலக்கத்துடன், எமது பெயர், முகவரி போன்ற விபரங்களை பதிவு செய்தால் 5-10 யூரோ/பவுன்ஸ் "இலவசமாக" கொடுக்கிறார்கள்.

இந்த "இலவச" சலுகைக்கு ஆசைப்பட்டு, பல பாவனையாளர்கள் தமது பெயர் விபரங்களை பதிவு செய்வார்கள். லைக்கா நிறுவனம் அவற்றை ஏதாவதொரு கால் சென்டருக்கு நல்ல விலைக்கு விற்று விடும். லைக்கா விற்பனை செய்யும் ஒரு தகவலின் விலை நூறு யூரோ/பவுன் என்று வைத்துக் கொண்டாலும், நமக்கு "இலவசமாக" தரும் பணம் அதில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லை. இந்த விபரங்களை லைக்காவில் வேலை செய்த ஒருவரே என்னிடம் தெரிவித்திருந்தார்.

சுருக்கமாக, இரும்புத்திரை படத்தில் சொல்லப்படும் குற்றச் செயலை, அதைத் தயாரித்த லைக்கா நிறுவனமே செய்கிறது. அந்தத் திரைப்படத்தின் கதை தனது நிறுவனத்தின் மோசடிகளை அமபலப் படுத்துகிறது என்று தெரிந்து கொண்டே, லைக்கா நிறுவனம் திரைப்படத்தை வெளியிட்டுள்ளது.

தனிப்பட்ட வாழ்வில் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள் கூட, இந்த முதலாளித்துவ எதிர்ப்புத் திரைப் படத்தை இரசித்து பார்த்து விட்டு பாராட்டுகிறார்கள்! இதிலிருந்தே, தமிழ் மக்களின் அரசியல் அறிவு எந்தளவு மந்தமாக இருக்கிறது என்பது புரியும். மக்களின் அறியாமை தான் அரசியல்வாதிகளின் முதலீடு என்று சொல்வார்கள். லைக்கா வெளியிட்ட  இரும்புத்திரையும் அந்த ரகம் தான்.