Saturday, December 29, 2012

விமானப் பயணிகளின் உயிருடன் விளையாடும் "ரையன் எயர்"


மலிவு விலையில், மிகக் குறைந்த கட்டணத்தில் பறக்கும் விமான சேவைகள் அதிகரித்து வருகின்றன. அவர்கள் மிகக் குறைந்த கட்டணம் அறவிடுவதற்கு, மக்கள் பல வகை காரணங்களை நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், "அந்த விமான நிறுவனங்கள், பிரயாணம் செய்யும் பயணிகளின் உயிர்களுடன் விளையாடுவதாலும், மலிவு விலையில் பறக்க முடிகின்றது" என்று சொன்னால் நம்புவீர்களா? அதுவும், விபத்து நடைபெறக் கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதைப் பற்றியும் கவலைப்படாமல், பற்றாக்குறையான எரிபொருளுடன் விமானங்கள் பறந்து கொண்டிருக்கின்றன. ஐரோப்பாவின் மிகப் பிரபலமான மலிவு விலை விமான சேவையான, அயர்லாந்தில் தலைமையகத்தை கொண்டுள்ள, "ரையன் எயர்" (Ryan Air) நிறுவனத்தை சேர்ந்த நான்கு பைலட்கள், அந்த திடுக்கிடும் உண்மையை வெளிக் கொணர்ந்துள்ளனர். சர்வாதிகாரப் போக்கில் நடத்தப்படும் ரையன் எயர் நிர்வாகம், தேவைக்கும் குறைவான எரிபொருளுடன் பயணம் செய்யுமாறு நிர்ப்பந்திக்கின்றது, என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். காரணம்: இலாபவெறி! பயணிகளின் பாதுகாப்பை விட, இலாபம் முக்கியமானது. அது தான் முதலாளித்துவம்! மிகக் குறைந்த விலையில் டிக்கட் விற்கும் விமான சேவை, மில்லியன் கணக்கில் இலாபம் சம்பாதிப்பது எப்படி?

நெதர்லாந்து தொலைக்காட்சியில் KRO என்ற நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்ட தகவல், பார்வையாளர்கள் மத்தியில் அதிர்வலைகளை தோற்றுவித்தது. "Mayday Mayday"  என்ற தலைப்பின் கீழ் ஒளிபரப்பான நிகழ்ச்சியில், நான்கு ரையன் எயர் விமானிகள், தமது அடையாளத்தை மறைத்துக் கொண்டு பேசினார்கள். கடந்த 27 வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் ரையன் எயர் விமான சேவை, இதுவரையில் விபத்தில் சிக்கிக் கொள்ளவில்லை. ஆனால், ரையன் எயர் விமானங்கள், விபத்தை உருவாக்கக் கூடிய காரணிகளுடன் தினசரி பறந்து கொண்டிருக்கின்றன. இனிமேல் நடக்கப் போகும் விபத்தை தடுப்பதற்காக, தாம் இப்போதே எச்சரிக்கை மணி அடிப்பதாக அந்த விமானமோட்டிகள் தெரிவித்தனர். உண்மையைக் கூறுவதற்காக, தமது வேலை போய் விடும், அல்லது தண்டனை கிடைக்கலாம் என்ற அச்சத்தில், அவர்கள் தம்மை இனங்காட்டிக் கொள்ளாமல் பேசினார்கள். இதற்கு முன்னர் குறைபாடுகளை எடுத்துரைத்த ஊழியர்கள், வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் மாற்றம் செய்யப் பட்டதாக தெரிவித்தனர். எதையும் வெளிப்படையாக பேச முடியாத அளவுக்கு, ரையன் எயர் நிர்வாகம், சர்வாதிகாரத் தன்மையுடன் நடந்து கொள்கின்றது. பயமுறுத்தல்கள், தண்டனைகள் மூலம் ஊழியர்களை அடக்கி வைக்கின்றது. கார்ப்பரேட் நிறுவனங்களின் செயற்பாடுகள் யாவும், மாபியாக் குழுக்களின் செயற்பாடுகளுடன் ஒத்துப் போவது இதிலிருந்து தெளிவாகும். "கார்ப்பரேட் மாபியாக்கள்" சட்டத்தாலும், மக்களாலும் அங்கீகரிக்கப் பட்டுள்ளன என்பது மட்டுமே வித்தியாசம்.  

ரையன் எயர் விமானங்கள் பறக்கத் தொடங்குவதற்கு முன்னர், அந்தப் பிரயாணத்திற்கு தேவையான அளவை விட, குறைந்தளவு எரிபொருளை நிரப்ப வேண்டுமென, நிர்வாகம் உத்தரவிடுகின்றது. அதற்கு காரணம், மேலதிக எரிபொருளை எடுத்துச் சென்றால், அந்த விமானத்தின் பாரம் அதிகமாகும். பாரம் அதிகமானால், அந்த விமானம் பெருமளவு எரிபொருளை பாவிக்க வேண்டியிருக்கும். ஆகவே, எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம், செலவை குறைத்துக் கொள்கின்றது. ஏற்கனவே , பயணிகள் எடுத்துச் செல்ல வேண்டிய பொதிகளின் நிறை, குறிப்பிட்ட அளவை மிஞ்சினால், அதிக கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் இருப்பது, ரையன் எயரில் பயணம் செய்த அனைவருக்கும் தெரியும். இதனை ஒரு காரணத்தால் மட்டுமே நியாயப் படுத்த முடியும். இலாபம், இலாபம், இலாபம் மட்டுமே! மனிதர்களின் உயிரை விட இலாபம் பெரிது! இலாபம் சம்பாதிப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான விமான ஒழுங்கு சட்டங்களையும் மீறும் வகையில் நடந்து கொள்கின்றது. விமானத்தில் எரிபொருள் பற்றாக்குறை இருந்தால், விபத்து நேர்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். ஆகையினால், ஒவ்வொரு விமானமும்  ஒரு வழிப் பிரயாணத்திற்கு  தேவையான அளவை விட, சற்று அதிகமாகவே எடுத்துச் செல்லும். விமானம் தரையிறங்கவிருக்கும் விமான நிலையத்தில் நிறுத்துமிடத்திற்கு அனுமதி கிடைக்க தாமதமானால், காலநிலை மோசமாக இருந்தால், இன்ன பிற காரணங்களுக்காக மேலதிக எரிபொருள் எடுத்துச் செல்வது அவசியமாகின்றது. ஆனால், ஒரு பயணத்திற்கு தேவையான அளவை விட குறைந்த எரிபொருளுடன் ரையன் எயர் விமானங்கள் சமாளித்துக் கொள்கின்றன. அது எப்படிச் சாத்தியமாகின்றது?  

ஸ்பெயின், வலன்சியா விமான நிலையத்தில், ஒரு ரையன் எயர் விமானம் அவசரமாக தரையிறங்கியது. அபாய சமிக்ஞை கொடுக்கும் "மே டே, மே டே" என்று அலறிய படி, மாட்ரிட் செல்ல வேண்டிய விமானம் அவசரமாக இறக்கப் பட்டது. காரணம்? எரிபொருள் பற்றாக்குறை. சில மணிநேரத்தில், இன்னும் இரண்டு ரையன் எயர் விமானங்கள் அவசர அவசரமாக தரையிறங்கின. காரணம்? எரிபொருள் பற்றாக்குறை. ஒரே நாளில், மூன்று ரையன் எயர் விமானங்கள், "எரிபொருள் பற்றாக்குறை"  என்ற ஒரே காரணத்திற்காக தரையிறங்குவது தற்செயலாக இருக்க முடியாது. ஆனால், அதைப் பற்றி நிர்வாகம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. 

தினசரி, ஒவ்வொரு ரையன் எயர் விமானமும் எரிபொருள் பற்றாக்குறையுடன் பறந்து கொண்டிருக்கின்றன. இதனை யாராவது தடுத்து நிறுத்தா விட்டால், அது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். ஆகவே, விமானப் பயணிகளின் நன்மை கருதி, இந்தத் தகவல்களை ஊடகத்திற்கு அறிவிப்பதாக, சம்பந்தப் பட்ட பைலட்கள் தெரிவித்தனர். அவர்களின் பேட்டியையும், ரையன் எயர் நிறுவனத்தின் அடாவடித்தனம், இலாபவெறி பற்றிய விபரங்களுக்கு, இங்கேயுள்ள இணைப்பில் உள்ள வீடியோவை பார்க்கவும். Mayday Mayday    
Get Adobe Flash Player
Als het niet mogelijk is Flash te installeren kunt u de video bekijken via deze link.


Friday, December 28, 2012

21.12.12, சமதர்ம உலகின் தொடக்கம்! மெக்சிகோவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

"மாயன்களின் உலக அழிவு தினமான" 21 டிசம்பர் 2012 அன்று, மெக்சிகோ, சியாப்பாஸ் மாநிலத்தில் உள்ள ஐந்து நகரங்களில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 21 டிசம்பர், மாயன்களின் கலண்டரில், பக்தூன் எனப்படும், 5.125 வருடங்களைக் கொண்ட ஒரு யுகத்தின் முடிவாகும். அன்றைய தினம் புது யுகம் ஒன்று ஆரம்பமாகின்றது. தற்பொழுது மலர்ந்துள்ள புது யுகத்தில், உலகம் முழுவதும் சமதர்ம சமுதாயம் உருவாகும் என்பதை குறிக்கும் முகமாக அந்த மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒழுங்கு படுத்தப் பட்டது. "21.12.12 அன்று, உலகம் அழிந்து விடும்" என்று பிதற்றிக் கொண்டிருந்த பைத்தியங்களைப் பற்றி எல்லாம் முதன்மையான செய்திகளாக தெரிவித்துக் கொண்டிருந்த ஊடகங்கள், மெக்சிகோவில் நடந்த ஆர்ப்பாட்டம் பற்றிய செய்திகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்தன.

சியாப்பாஸ் மாநிலத்தில் வாழும் பூர்வகுடி செவ்விந்தியர்கள், "சப்பாத்திஸ்தா தேசிய விடுதலைப் படை" (EZLN) என்ற மார்க்சிய-லெனினிச அமைப்பின் அழைப்பை ஏற்று பெருமளவில் கலந்து கொண்டனர். சுமார் நாற்பதாயிரம் பேர், இந்த அமைதியான எதிர்ப்பு ஊர்வலத்தில் பங்குபற்றினார்கள். எல்லோரும் தமது முகத்தை மூடும், கருப்புநிற குல்லாய் அணிந்திருந்தனர். அந்தக் குல்லாயில் பொறிக்கப்பட்ட இலக்கமானது, அவர்கள் எந்த விடுதலை செய்யப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என்பதைக் குறித்தது. சியாப்பாஸ் மாநிலத்தில் பல பகுதிகள், இன்றைக்கும் EZLN கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றன.

21.12.12  மெக்சிகோவில் நடந்துள்ள ஆர்ப்பாட்டமானது,  பூர்வீக மக்களின் உரிமைப் போராட்டத்தை மட்டும் எதிரொலிக்கவில்லை. மார்க்சிய- லெனினிசம் மட்டுமே, உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பப்பட்ட மக்களின் விடுதலைக்கான ஒரேயொரு சித்தாந்தம் என்பதையும் உறுதிப்படுத்தியது. உலகம் முழுவதும் கம்யூனிச நாடுகள் வீழ்ந்து கொண்டிருந்த தொன்னூறுகளில், மெக்சிகோவில் ஒரு மார்க்சிய-லெனினிச இயக்கம் தோன்றியது என்று சொன்னால் பலருக்கு நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும். அந்த இயக்கம், கடந்த இரு தசாப்தங்களாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால், நம்புவதற்கு இன்னும் கஷ்டமாக இருக்கும். சில நேரம், கற்பனையை விட உண்மை அதிசயமாக இருக்கும். 

மேலதிக விபரங்களுக்கு, இந்த இணையத் தளத்தை பார்க்கவும்:
EL GRITO SILENCIOSO DE 40 MIL ZAPATISTAS 

மெக்சிகோவில் பூர்வீக செவ்விந்திய மக்கள் பெரும்பான்மையாக வாழும் சியாப்பாஸ் மாநிலத்தில்,  "சப்பாத்திஸ்தா தேசிய விடுதலைப் படை" (EZLN) கெரில்லா இயக்கம், ஒரு சில நாட்களுக்குள், பல நகரங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. 1 ஜனவரி 1994 ம் ஆண்டு, சுமார் 3000 போராளிகள், அந்த தாக்குதல்களில் பங்குபற்றியிருந்தனர். Ocosingo, Las Margaritas, Huixtán, Oxchuc, Rancho Nuevo, Altamirano, Chanal ஆகிய நகரங்கள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அரச அலுவலகங்களும், பொலிஸ் நிலையங்கள், இராணுவ முகாம்கள் நிர்மூலமாக்கப் பட்டன. சிறைகள் உடைக்கப் பட்டு, கைதிகள் விடுதலை செய்யப் பட்டனர். அரசு அவர்களுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டது. இதனால் கிராமப் புறங்களில் கணிசமான பல பகுதிகள் EZLN கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. பிற்காலத்தில், அரச படைகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய போதிலும், காடுகளும், மலைகளும் சேர்ந்த பகுதிகளில், இன்றைக்கும் EZLN நடமாட்டம் காணப் படுகின்றது.

மெக்சிகோவில் தலைமறைவாக இயங்கும், "Zapatista Army of National Liberation" புரட்சிகர அமைப்பின் தளபதி மார்கோஸ், ஊடகங்களுக்கு அனுப்பிய அறிக்கை:
 

நீங்கள் அதைக் கேட்டீர்களா? 
அது அவர்களுடைய உலகம் நொறுங்கி விழுவதன் சத்தம் 
எமது புது உலகம் எழுகின்றது 
பகல் என்றிருந்த நாள், இரவாக இருந்தது 
இரவு பகலாக மாறும், அதுவே நாளாகும். 
ஜனநாயகம்! 
சுதந்திரம்! 
நீதி! 

Communiqué of the Clandestine Revolutionary Indigenous Committee — General Command of the Zapatista Army of National Liberation. Mexico. 

 21 December 2012 

To whom it may concern 

 DID YOU HEAR? 
 It is the sound of their world collapsing. 
 It is that of ours rising anew. 
The day that was the day, used to be night. 
And night will be the day, that will be the day. 
Democracy! Freedom! Justice! 

From the Mountains of the Mexican Southeast. 

On behalf of the Clandestine Revolutionary Indigenous Committee — General Command of the EZLN Subcomandante Insurgente Marcos 
Mexico, 
December 2012

Friday, December 07, 2012

300 ஸ்பார்ட்டா வீரர்களின் நாட்டில் ஒரு நாள்

கிரேக்க நாட்டு பயணக் குறிப்புகள்  (பகுதி - 3)

"300"  என்ற ஹாலிவூட் திரைப்படம் வந்த பின்னர், ஸ்பார்ட்டாவின் பெயர், உலகம் முழுவதும் அறிமுகமானது. கிறீசின் பெலோப்பனோஸ் குடாநாடு, பண்டைய காலத்தில் ஸ்பார்ட்டா என்ற தனி நாடாக இருந்தது. ஒரு பக்கத்தில் ஏதன்ஸ், மறு பக்கத்தில் ஸ்பார்ட்டா, இரண்டு வல்லமை பொருந்திய சுதந்திர நாடுகளுக்கும் இடையில், வர்த்தகப் போட்டிகளும், இராணுவத் தகராறுகளும் இருந்தன. அப்பொழுது கிழக்கே (இன்றைய துருக்கி) இருந்த பாரசீக சாம்ராஜ்யம் அவர்களை மிரட்டிக் கொண்டிருந்தது. கிரேக்கத்தை ஆக்கிரமிக்கும் நோக்குடன் அடிக்கடி படையெடுத்தது. இதனால் ஏதென்ஸ் அடிக்கடி பாதிக்கப் பட்டது. ஆரம்பத்தில் ஒத்துழைக்கா விட்டாலும், பிற்காலத்தில் ஏதன்ஸ் தேசத்தின் போரில், ஸ்பார்ட்டாவும் சேர்ந்து கொண்டது. அதுவே கிரேக்கம் என்ற ஒரு புதிய தேசம் உருவாக அடிப்படையாக அமைந்தது. இதற்குப் பின்னர், நகரங்களை மையப் படுத்திய தனியரசுகள் மறைந்து, கிரேக்கப் பேரரசு உருவானது. 

இன்று ஸ்பார்டா நகரம் பெருமளவு அழிந்து விட்டது. அதனால் அங்கு பார்ப்பதற்கு எதுவும் இல்லை. சில கட்டிட இடிபாடுகளைத் தவிர. ஸ்பார்ட்டாவுக்கு அருகில், கிறிஸ்தவ கால புராதன நகரம் ஒன்றுள்ளது. மிஸ்த்ரா என்ற இடத்தில் ஆயிரம் வருடங்களுக்கு முந்திய நகரம் அழியாமல் உள்ளது. பிசாந்தின் என்ற, கிரேக்க மொழி பேசும் ரோம சாம்ராஜ்யத்தின் எச்சம் அது. பிசாந்தின் சாம்ராஜ்யத்தில், கிரேக்கம் அரச கரும மொழியாகவும், கிறிஸ்தவம் அரச மதமாகவும் இருந்தன. அந்த அரசாங்கத்தில், கிறிஸ்தவ தேவாலயங்கள், மடாலயங்களின் பங்களிப்பு அளவுக்கு அதிகமாகவே இருந்தது. பிற்காலத்தில் பிசாந்தின் சாம்ராஜ்யம் வீழ்ச்சியுற்று, அந்த இடத்தில் துருக்கியரின் ஓட்டோமான் சாம்ராஜ்யம் உருவானது. ஏதென்ஸ் வரையில் துருக்கியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த காலத்தில், பெலோப்பெனோஸ் குடா நாடு மட்டுமே சுதந்திரமாக இருந்துள்ளது. அந்தப் பிரதேசம், முழுக்க முழுக்க கிறிஸ்தவ தேவாலயங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் கட்டப்பட்ட நிர்வாகத் தலைநகரம் தான் மிஸ்த்ரா. அதே காலகட்டத்தில் தான், பிற்காலத்திய கிரேக்க தேசியவாதமும் தோன்றியது. பல அழகிய புராதன கட்டிடங்களை, மிஸ்த்ராவில் இன்றைக்கும் பார்த்து மகிழலாம். 

பெலோப்போனோஸ் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, மீண்டும் ஏதென்ஸ் திரும்பி வந்தேன். ஏதென்சில் நான் தங்கியிருந்த "யூத் ஹாஸ்டல்", பெயரளவில் மட்டுமே "இளையோரின் விடுதி" யாக இருந்தது. வயதுக் கட்டுப்பாடின்றி, எல்லோரையும் தங்க அனுமதித்தார்கள். செலவும் அதிகமில்லை. ஒரு நாள் கட்டணம் 12 யூரோக்கள் மட்டுமே. ஒரு அறையில், நான்கு பேர் தங்கி இருந்தார்கள். என்னுடன் ஒரு பிரிட்டிஷ் முதியவரும், அயர்லாந்து இளைஞனும் தங்கியிருந்தனர். பிரிட்டிஷ் முதியவர், சுமார் ஐம்பது  வருடங்களுக்கு முன்பு இலங்கையில் வசித்துள்ளார்! திருகோணமலையில் இருந்த பிரிட்டிஷ் கடற்படைத் தளத்தில் பணியாற்றியுள்ளார். (இலங்கை குடியரசான பின்னர், அந்த தளம் மூடப்பட்டது.)  அவர் தனது இலங்கை அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். பிரிட்டிஷ் கடற்படைத் தளம் அகற்றப் பட்ட பின்னர், இலங்கையுடனான பிரிட்டனின் காலனிய கால தொடர்பு துண்டிக்கப் பட்டது. அது வரையில், இலங்கையில் வசித்த பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு கிடைத்த சலுகைகளை விவரித்த பொழுது பிரமிப்பாக இருந்தது. அந்த முன்னாள் கடற்படை வீரருடன் தற்போதைய இலங்கை நிலவரம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். "திருகோணமலை கடற்படைத் தளம் மூடப்பட்டதற்கும், சில வருடங்களின் பின்னர், இனப்பிரச்சினை கூர்மை அடைந்ததற்கும் தொடர்பிருந்தது" என்பதை, அவருடன் உரையாடிய பொழுது புரிந்தது. 

என்னுடன் தங்கியிருந்த அயர்லாந்து இளைஞனுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, ஐரிஷ்காரர்கள் எந்தளவு தூரம் பிரிட்டனை வெறுக்கின்றனர் என்பது புரிந்தது. "ஆங்கிலேயர்கள்  இலங்கையையும், பிற உலக நாடுகளையும் காலனிப் படுத்துவதற்கு முன்பே, அருகில் இருந்த அயர்லாந்தை காலனியாக்கி வெள்ளோட்டம் பார்த்துள்ளனர். அந்த ஐரிஷ் இளைஞர், "சுதந்திரமடைந்த" அயர்லாந்தின் இன்றைய அரசியல் நிலவரம் பற்றி விலாவாரியாக எடுத்துரைத்தார். தான் மட்டுமல்ல, தனது தந்தை, தாத்தா காலத்திலிருந்தே ஆங்கில மொழியை, அதாவது ஆக்கிரமிப்பாளர்களின் மொழியை, தமது தாய்மொழியாக பேசி வருவதாக கூறினார். அதாவது, சொந்த மொழியான ஐரிஷ் மொழியை மூன்று தலைமுறையாக மறந்து விட்டார்கள். தனக்கு ஐரிஷ் ஒரு அந்நிய மொழியாக தெரிவதாகவும், தான் சிந்திப்பது கூட ஆங்கில மொழியில் தான் என்றும் தெரிவித்தார். ஐரிஷ் மொழி பாடசாலைகளில் கற்பிக்கப் பட்டாலும், பலருக்கு அதில் ஆர்வமில்லை என்றும், அரசியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும் மட்டுமே ஓரளவுக்காவது தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் கூறினார்.அதாவது பதவியேற்கும் பொழுது, ஐரிஷ் மொழியில் சத்தியப் பிரமாணம் செய்தால் போதுமானதாம். நான் ஈழத் தமிழரின் மொழிப் பிரச்சினை பற்றி அந்த நண்பருக்கு எடுத்துக் கூறினேன். "இன்னும் பத்து வருடங்களில், ஈழத்தில் வாழும் தமிழர்கள் எல்லோரும் சிங்களம் மட்டுமே பேசுவார்கள்," என்று பலர் ஆரூடம் கூறுகின்றனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிச்சுவட்டை பின்பற்றும் ஸ்ரீலங்கா அரசு வேறெப்படி நடந்து கொள்ளும்? தாயை சந்தையில் பார்த்தால், மகளை வீட்டில் பார்க்க வேண்டுமா?

கிறீஸை சுற்றி பல தீவுகள் உள்ளன. எல்லாத் தீவுகளுக்கும் ஏதென்சில் இருந்து அதி விரைவுப் படகுச் சேவை உள்ளது. மேற்கே உள்ள தீவுகளுக்கு, பாட்ரா துறைமுகத்தில் இருந்து கப்பல் சேவை நடக்கிறது.
ஏதென்ஸ் நகரத்திற்கு அருகில் உள்ள தீவுக்கு பெயர் ஏகினா. அதற்கு பிராயஸ் துறைமுகத்தில் இருந்து படகு செல்கின்றது. பிராயஸ் ஏதென்ஸ் நகரின் துறைமுகம் மட்டுமல்ல, அனைத்து சர்வதேச கப்பல்களும் அங்கே வருகின்றன. ஏகினா தீவில் வாழும் மக்கள், பெரும்பாலும் மீனவர்கள். உல்லாசப் பிரயாணத் துறையினால், மேலதிக வருமானம் கிடைக்கிறது. தலைநகரத்திற்கு அருகில், கடற்கரையில் ஏகாந்தமாக பொழுது போக்க விரும்புவோருக்கு ஏகினா சிறந்த இடம். அங்குள்ள மெல்லிய நீல நிறக் கடற்கரைகள் உலகப் பிரசித்தி பெற்றவை. பண்டைய கிரேக்க நாகரீகத்தின் தடயங்கள் ஏகினா தீவிலும் காணக் கிடைக்கின்றன. அவை இடிபாடுகளுடன் காட்சி தரும் ஆலயங்கள் தான். ஆதி கால கிறிஸ்தவ போதகர்களும், ஏகினாவில் தமது தடயங்களை பதித்து விட்டுச் சென்றுள்ளனர்.  

ஆதி கால கிறிஸ்தவ சபைகள் ஏகினா தீவு, ஏதென்ஸ், பெலோப்போனோஸ் குடா நாடு, மற்றும் துருக்கியிலும் நிறுவப் பட்டன. துருக்கி பிற்காலத்தில் ஓட்டோமான் சாம்ராஜ்யமாக மாறியது. துருக்கி கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களாக மாறினார்கள். இஸ்லாமிய துருக்கியர்கள் கிரேக்கம் முழுவதையும் கைப்பற்றி, தமது சாம்ராஜ்யத்தில் ஒரு பகுதியாக இணைத்தனர். அப்பொழுது அங்கு வாழ்ந்த கிறிஸ்தவ மதத் துறவிகள் பலர் தலைமறைவாக இயங்கினார்கள். ஓட்டோமான் சாம்ராஜ்யத்தில், கிறிஸ்தவ மதம் தடை செய்யப் படவில்லை. ஆனால், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை எதிர்த்து அரசியல் நடத்திய துறவிகள் மட்டுமே தலைமறைவாக வாழ்ந்தனர். அவர்கள் மறைந்து வாழ்வதற்கு ஏற்ற இடம் ஒன்று, மத்திய கிரேக்கத்தில் கிடைத்தது. இயற்கை அரண்களால் சூளப்பட்ட, எதிரிகளால் இலகுவில் கண்டறிய முடியாத இரகசிய இடம். அது ஒரு மலைப் பிரதேசம். ஆனால், ஒன்றுக்கொன்று தொடர்பற்ற உயரமான மலைப்பாறைகளை கொண்டது. அவற்றின் உச்சியில் மடாலயங்களை கட்டி, அங்கேயே தங்கி இருந்தார்கள். சிறுவர்களின் மாயாஜாலக் கதைகளில் மட்டுமே அப்படியான இடங்களை கற்பனையில் தரிசிக்கலாம். அந்த மர்ம மடாலயங்களின் கதை அடுத்து வரும்.

(தொடரும்)


கிரேக்க பயணக் கதையின் முன்னைய பதிவுகள்: 

1.கிரேக்க நாட்டு பயணக் குறிப்புகள்
2.ஒலிம்பிக்ஸின் தாயகம்

Tuesday, November 27, 2012

இந்திய மக்கள் யுத்தத்தை ஆதரிக்கும் சர்வதேச மகாநாடு, ஜெர்மனி

ES LEBE DER VOLKSKRIEG IN INDIEN! 
(இந்திய மக்கள் யுத்தம் வாழ்க!)


இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும், மாவோயிஸ்டுகளின்  மக்கள் யுத்தத்திற்கு, சர்வதேச ஆதரவை திரட்டும் நோக்குடன், 24.11.2012, ஜெர்மனி, ஹம்பூர்க் நகரில் ஒரு மகாநாடு நடைபெற்றது. பல உலக நாடுகளில் இருந்தும், 300 க்கும் அதிகமான பார்வையாளர்கள் மகாநாட்டில் கலந்து கொண்டனர். ஐரோப்பிய நாடுகளில் இருந்து மட்டுமல்லாது, பிரேசில், பேரு, அமெரிக்கா, கனடா, ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், எத்தியோப்பியா போன்ற பல நாடுகளில் இருந்தும் பேராளர்கள் வந்து கலந்து கொண்டு, மக்கள் யுத்தத்திற்கு தமது ஆதரவை தெரிவித்தனர். 

ஜெர்மனியில், ஹம்பூர்க் நகரில் பாட்டாளிவர்க்க கட்சிகள் பலமாக உள்ளன. வட ஐரோப்பாவில், மிகப் பெரிய துறைமுகத்தை கொண்டிருக்கும் ஹம்பூர்க் நகரம், முதலாம் உலகப்போரின் முடிவில் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியை சந்தித்திருந்தது. தொழிலாளர்கள் புரட்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்றி, அமைக்கப்பட்ட சோவியத் அரசு, குறைந்தது ஒரு மாதமாகிலும் இயங்கிக் கொண்டிருந்தது. இன்றைய ஹம்பூர்க் நகரிலும், இந்திய மக்கள் யுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்கள், நகரின் பல இடங்களில் சுவரோவியங்களாக தீட்டப் பட்டுள்ளன. நவம்பர் 2012 நடந்த மகாநாட்டை, ஜெர்மன், மற்றும் புலம்பெயர்ந்த துருக்கி மாவோயிஸ்டுகள் ஒழுங்கு படுத்தி இருந்தனர். 
  • மகாநாட்டை ஒருங்கிணைத்ததில், இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றும் முக்கிய பங்காற்றி உள்ளது. இத்தாலியில் இருந்து ஒரு பெரிய குழு மகாநாட்டில் கலந்து கொண்டிருந்தது.  இத்தாலியின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (PCM) பேராளர், மகாநாட்டை ஆரம்பித்து வைத்தார். இதுவரை காலமும் மக்கள் யுத்தத்தில் இறந்த போராளிகளுக்கும், மக்களுக்கும் வீர வணக்கம் செலுத்தப் பட்டது. மகாநாட்டில் கலந்து கொண்டவர்களின் உரைகள், உடனுக்குடன் மொழிபெயர்த்து வழங்கப் பட்டன. ஜெர்மன், ஆங்கிலம், ஸ்பானிஷ், இத்தாலி, துருக்கி மொழிபெயர்ப்பாளர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். அடுத்து உரையாற்றிய, துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) (TKP - M/L) உறுப்பினர், இந்தியாவில் நக்சலைட் இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, களப்பலியான தலைவர்கள், இந்திய அரச அடக்குமுறைகள் ஆகிய விபரங்களை கொண்ட வரலாற்றை தொகுத்து தந்தார். 
  • துருக்கி/வட-குர்திஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பேராளர், கம்யூனிஸ்ட் இயக்கங்களின் ஒற்றுமை குறித்தும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியம் குறித்தும் பேசினார். "இந்தியாவில் மக்கள் யுத்தம் பல குழுக்களால் நடத்தப் படுகின்றது. மக்களின் எஜமானர்களான உழைக்கும் வர்க்கம், பெண்கள் ஆகியோரின் பங்களிப்பு அதிகரித்துள்ளது.  மற்ற நாடுகளில் உள்ள கம்யூனிஸ்டுகள், இந்திய மக்கள் யுத்தத்தை, தமது போராக கருத வேண்டும். நடைமுறைச் சாத்தியமான அரசியல் வேலைத்திட்டம் குறித்து ஆராய வேண்டும்." என்று கூறினார். 
  • பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதியின் உரையில் இருந்து: "மக்கள் யுத்தத்தில் வீர மரணமடைந்த கிஷன்ஜியை நினைவுகூரும் அதே வேளை, ஆப்கானிஸ்தான், துருக்கி, பிரேசில் ஆகிய நாடுகளில் மக்களுக்காக போராடி மரித்த வீரர்களையும் நினைவுகூறுவோம். தியாயங்கள் இல்லாமல் போராட்டம் முன்செல்வதில்லை.  இந்திய மக்கள் யுத்தத்தை ஆதரிக்கும் ஆயிரக் கணக்கான சுவரொட்டிகளை பிரேசில் முழுவதும் ஒட்டினோம். அருந்ததிராயின் "தோழர்களுடன் நடைப்பயணம்"  நூலை போர்த்துகீசிய மொழியில் மொழிபெயர்த்து விநியோகித்தோம். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவது, அவர்களது உரிமை. நாடளாவிய பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபிக்கவும், மக்கள் யுத்தத்தை முன்னெடுக்கவும் இருக்கிறோம். மக்கள் யுத்தம் சாத்தியமில்லை என்று மறுப்பதானது, திரிபுவாதிகள் ஒளிந்து கொள்ள இடமளிப்பதாகும்." என்று தனது உரையில் தெரிவித்தார். பேரு நாட்டில் மக்கள் யுத்தத்தை நடத்தி, தற்பொழுது சிறையிலிருக்கும் ஒளிரும்பாதை ஸ்தாபகர் கொன்சலோவை நினைவு கூர்ந்த பொழுது, மண்டபம் நிறைந்த கரகோஷம் எழுந்தது. 
  • பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியான, NDF  சார்பில் பேசிய பேராளர், இந்தியாவின் அவல நிலை பற்றி புள்ளிவிபரங்களுடன் விளக்கினார். இந்தியாவில் வாழும் 90% மான மக்களுக்கு, அது ஒரு நரகமாகவே இருக்கின்றது. இரண்டு மில்லியன் குழந்தைகள் போஷாக்கின்றி இறக்கின்றன. இந்திய மக்கள், ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றனர், என்று அவர் தனது உரையில் தெரிவித்தார். அவரை அடுத்து பேசிய, ஆப்கானிஸ்தான் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர், இந்திய போலிஸ், இராணுவப் படைகளுக்கு இஸ்ரேலின் மொசாட் பயிற்சி அளிக்கின்றது. அடக்குமுறையாளர்கள் சர்வதேச ரீதியாக ஒன்றிணையும் பொழுது, சர்வதேச பாட்டாளி வர்க்கம் ஒன்று சேர வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (நக்சல்பாரி) அனுப்பிய அறிக்கை ஒன்றும், மகாநாட்டில் வாசிக்கப் பட்டது. 
  • கனடா புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரதிநிதி உரையாற்றும் பொழுது: "மக்கள் யுத்தம் இந்திய அரசை ஆட்டம் காண வைத்துள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் செங்கொடி ஏற்றப் பட்டுள்ளது. இந்திய அரசின் கொடூரமான அடக்குமுறைக்கு எதிர்ப்பு தோன்றவே செய்யும். சர்வதேச நாடுகளில், தோழமை உணர்வை காட்டும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. இந்திய அரசின் காட்டு வேட்டை இராணுவ நடவடிக்கையை நிறுத்தக் கோரும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படும்." என்று தெரிவித்தார். அவரை அடுத்து பேசிய பிரெஞ்சு மாவோயிஸ்ட் கட்சியொன்றின் பிரதிநிதி, பிரான்ஸ் நாட்டில் பல கலந்துரையாடல்களை நடத்தியதாகவும், ஒரு தடவை, தமிழ் நாட்டில் திறக்கவிருந்த பிரெஞ்சு பன்னாட்டு நிறுவனம் ஒன்றிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் தெரிவித்தார். 
  • ஆஸ்திரியா நாட்டில், "புரட்சிகர கட்டுமான இயக்க" பிரதிநிதியின் உரையில் இருந்து: "இவ்வருட செப்டம்பர் மாதம் வியனாவில் எமது இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கையின் ஓரங்கமாக, துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப் பட்டன. கையெழுத்து வேட்டை நடத்தப் பட்டது. இந்திய தூதுவராலயம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. இரண்டு ஆஸ்திரிய தினசரிகளில், இந்திய மாவோயிஸ்டுகளின் பிரகடனங்கள் பிரசுரமாகின. விடுதலைக்கான போராட்டம் சர்வதேச மயமாகியுள்ளது. கடந்த காலத்துடன் ஒப்பிடும் பொழுது, ஆஸ்திரிய மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது." 
  • பிரிட்டனில் இருந்து வந்து உரையாற்றிய பேராளர், தான் மட்டுமே இந்த மகாநாட்டிற்கு பிரிட்டனில் இருந்து வந்து கலந்து கொள்வதாகவும், அந்த நிலைமை மாற வேண்டும் எனவும் தெரிவித்தார். குறிப்பாக, இந்தியாவுடன்  200 வருட கால நெருங்கிய உறவைக் கொண்டுள்ள பிரிட்டனில் தான், மக்கள் யுத்தத்திற்கு ஆதரவான இயக்கம் முழுவீச்சுடன் செயற்பட்டிருக்க வேண்டும். கடந்த வருடம், லண்டனில் அருந்ததிராய் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதற்குப் பிறகு எந்த வித செயற்பாடும் இல்லை. ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமித்திருக்கும் பிரிட்டிஷ் படையினரை, பிரிட்டனில் வீரர்கள் என்று புகழ்கிறார்கள். ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்துப் போராடும் ஆப்கானிய விவசாயிகளே உண்மையான வீரர்கள். (பார்வையாளர்கள் மத்தியில் இருந்து பலத்த கைதட்டல்) ஒரு முறை, சீனா சென்று மாவோவை சந்தித்த மேற்கத்திய நாடொன்றின் உதவி நிறுவனத்தின் பிரதிநிதி கேட்டார்:"நாங்கள் உங்கள் நாட்டிற்கு என்ன உதவி செய்ய வேண்டும்?" அதற்கு பதிலளித்த மாவோ: "உங்களது தாயகத்திற்கு திரும்பிச் செல்லுங்கள். அங்கே ஒரு புரட்சியை ஏற்படுத்துங்கள். அதுவே நீங்கள் செய்யும் மிகப்பெரிய உதவி." என்றார். (மண்டபத்தில் எழுந்த கரகோஷம் அடங்க பல நிமிடங்கள் எடுத்தன.) 
  • ஸ்பெயின் நாட்டில் தன்னாட்சிப் பிராந்தியமான, கலீசியா வை சேர்ந்த மாவோயிஸ்ட் கட்சியின் பிரதிநிதி, பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட ஸ்பானிஷ் மக்களின் போராட்டத்திற்கு, இந்திய மக்கள் யுத்தம் உந்து சக்தியாக இருப்பதாக தெரிவித்தார்.  இந்திய ஆதரவுக் கழகத்தை சேர்ந்த சுவீடிஷ் தோழர்கள், "தண்டகாரண்யா" என்ற பாடலை சுவீடிஷ் மொழியில் பாடினார்கள். மகாநாட்டின் நடுவில் இடம்பெற்ற புரட்சிகர இசை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை உற்சாகப் படுத்தின. ஜேர்மனிய இளங்கலைஞர் ஒருவர், இந்தியப் புரட்சியில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், மகாநாட்டிற்கு வாழ்த்துக் கூறும் வகையிலும் ராப் இசையமைத்து பாடினார். துருக்கி இசைக் குழுவினர், துருக்கி மொழியில் அமைந்த புரட்சிகரப் பாடல்களைப் பாடினார்கள். இத்தாலியில் பாசிசத்தை எதிர்த்து போராடிய கம்யூனிசக் கெரில்லாக்களின் உலகப் புகழ் பெற்ற "பெல்லா ச்சாவ்" பாடலை, துருக்கி மொழியில் பாடினார்கள். அந்தப் பாடலை, பார்வையாளர்களும் கரவொலி எழுப்பி சேர்ந்து பாடினார்கள். 

  • "புரட்சி வெல்க!", "மக்கள் யுத்தம் ஓங்குக!", "சர்வதேச மக்களின் ஒன்றிணைந்த போராட்டம்!" என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப் பட்டன.









_______________________________________________________________________

Press release from the Conference


Internationalist gathers in Hamburg in Support of the People’s War in India
On the 24th of November the International Conference in Support of the People`s War in India took place in the city of Hamburg, Germany. Following the joint Call of the International Committee to Support of the People`s War in India and the Hamburg based League against Imperialist Aggression, internationalists form different parts of the world came together to exchange views on who to develop the international work in support of the struggle of the Indian people against imperialism, semi-feudalism and bureaucratic capitalism. Delegations, organizations and individuals from Afghanistan, Austria, Brazil, Canada, Columbia, France, Germany, Holland, Iran, Italy, Kurdistan, Norway, Palestine, Peru, Philippines, Spain, Sri Lanka, Sweden, Switzerland, Turkey, the United Kingdom and many other countries participated in the Conference. Some 300 hundred persons attended the event.
Communist Parties, revolutionary mass-organizations, revolutionary youth organizations and solidarity and anti-imperialist organizations from all corners of the world made statements of support to the Indian comrades. From many countries from where comrades and friends of the Indian Maoists were not able to attend with a delegation sent messages of support. A list of the participating Parties and Organizations and all the speeches and messages will be published in the upcoming days on the website of the Conference: www.indienkonferenz.tk
On the same webpage pictures from the Conference as well as information of the preparatory campaign – including the official video of mobilization, the graffiti paintings, posters and so forth – can be seen.
The Conference also contained a cultural program with music groups preformed Swedish folk music, German Rap and Revolutionary songs in Turkish, all in a profound anti-imperialist spirit.
An important statement was made by a Palestinian comrade, who pointed out who the struggle of the Indian people are linked to the resistance against the murderous Zionist Occupiers and their Yankee-imperialist masters. At the end of the speak slogans in support of the heroic Palestinian people resounded the hall. The organizers of the Conference stated a strong condemnation of the barbaric attacks on the population of Gaza.
Another important feature of the Conference was the great number of youth who participated, not only as participants but also as part of the organizing structures. This aspect, together with the truly internationalist character of the event, gave it a very vivid and dynamic character.
After the official part of the program delegates and participants continued to celebrate and long into the night revolutionary songs in many different languages and anti-imperialist, militant antifascist and communist slogans made the tune of a rejoicing feast of internationalism.
As a result of the Conference concrete steps have been made in the Coordination of the forces who support the People`s War in India. This without a doubt will have very real impact on the international work and lead to a stronger international campaign.
When we wrote the Call to the Conference we stated that we wanted it to be a vivid expression of proletarian internationalism. It was. Form the Hamburg Conference sounds a cry that says:
We stand with our comrades in India!
Victory to the People`s War!
International Committee to Support the People`s War in India
League against Imperialist Aggression (Hamburg, Germany)
26th November 2012

Friday, November 23, 2012

சியோனிசத்தின் கதை : இஸ்ரேலின் வரலாறு பற்றிய ஆவணப்படம்

பாலஸ்தீனம், துருக்கி ஓட்டோமான் சாம்ராஜ்யத்தில் இருந்து கைப்பற்றப் பட்டு, பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளினால் பாதுகாக்கப் பட்ட பிரதேசமான பின்னர் தான், நவீன இஸ்ரேலின் வரலாறு ஆரம்பமாகின்றது. அதற்கு முன்னர், பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூதர்களும், முஸ்லிம்களும் எந்த வித பகையுணர்ச்சியும் இன்றி,  அன்னியோன்னியமாக அருகருகே வாழ்ந்து வந்தனர். ஐரோப்பாவில் ஸ்தாபிக்கப் பட்ட சியோனிச இயக்கம், பாலஸ்தீனத்தில் நிலம் வாங்கி யூத குடியேற்றங்களை அமைத்தது. யூத குடியேற்றங்களில் இரகசிய ஆயுதக்குழுக்கள் இயங்குவதை பொறுத்துக் கொண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள். யூத பயங்கரவாத குழுக்களினால் நடத்தப்பட்ட, பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களுக்கும், அரபு மக்களுக்கும் எதிரான பயங்கரவாத தாக்குதல்கள். யூதர்கள் சிறுபான்மையினராக இருந்த போதிலும், இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரு தேசங்களை உருவாக்க ஒப்புதல் வழங்கிய ஐ.நா. மன்றம். ஆயுத பலம் மிக்க யூத படைகளினால் முறியடிக்கப்பட்ட, ஒருங்கிணைப்பில்லாத அரபு நாடுகளின் படையெடுப்பு. பாலஸ்தீன நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக நடத்தப்பட்ட இனச் சுத்திகரிப்பு. பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களின் அடக்குமுறை தந்திரங்களை பிரயோகிக்கும் இஸ்ரேலிய இராணுவம். இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிரான, பாலஸ்தீன மக்களின் எழுச்சி. இவை போன்ற வரலாற்றுத் தகவல்களை காட்சிப்படுத்த, பழைய படச் சுருள்களை தொகுத்து ஒரு முழுமையான ஆவணப் படத்தை தயாரித்துள்ளார் Ronen Berelovich .

 "I have recently finished an independent documentary, The Zionist Story, in which I aim to present not just the history of the Israeli/Palestinian conflict, but also the core reason for it: the Zionist ideology, its goals (past and present) and its firm grip not only on Israeli society, but also, increasingly, on the perception of Middle East issues in Western democracies. These concepts have already been demonstrated in the excellent 'Occupation 101′ documentary made by Abdallah Omeish and Sufyan Omeish, but in my documentary I approach the subject from the perspective of an Israeli, ex-reserve soldier and someone who has spent his entire life in the shadow of Zionism. I hope you can find a moment to watch The Zionist Story and, if you like it, please feel free to share it with others. (As both the documentary and the archived footage used are for educational purposes only, the film can be freely distributed). I have made this documentary entirely by myself, with virtually no budget, although doing my best to achieve high professional standard, and I hope that this 'home-spun' production will be of interest to viewers." - Ronen Berelovich.   

சியோனிசம், இஸ்ரேல் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.  இஸ்ரேல் : பயங்கரவாதிகள் உருவாக்கிய தேசம்
2.போர்க்களமான புனித பூமி
3.சியோனிசத்திற்கு எதிராக போராடும் யூத மதகுருவின் கதை

Monday, November 19, 2012

சியோனிசத்திற்கு எதிராக போராடும் யூத மதகுருவின் கதை

இஸ்ரேல் என்பது, "யூதர்களின் தாயகம்" என்றும், அது பாலஸ்தீனர்களை மட்டுமே அடக்குவதாக பலர் நினைக்கிறார்கள். ஆனால், உலகில் எத்தனையோ யூதர்கள், இஸ்ரேல் என்ற தேசத்தையும், சியோனிசக் கொள்கையையும் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் இஸ்ரேலில் வாழ்ந்தால், அரசு சிறையில் போட்டு சித்திரவதை செய்கின்றது. வெளிநாடுகளில் வாழ்ந்தால், வாயை அடைக்க வைக்க பல்வேறு வழிகளில் முயல்கின்றது. மாறுபட்ட அரசியல் கொள்கை காரணமாக, இஸ்ரேலிய அரசினால் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட யூத மதகுரு ஒருவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். அவர் இறுதியில் விடுதலை செய்யப்பட்டு, நெதர்லாந்து வந்து சேர்ந்து, தற்பொழுது ஆம்ஸ்டர்டாம் நகரில் வசிக்கின்றார். ஆனால்,  அவரின் மனைவியையும், மகனையும் இஸ்ரேலிய அரசு தடுத்து வைத்திருப்பதால், அவர்களை பிரிந்து வர வேண்டிய அவலம் நேர்ந்தது. இன்று வரையில், தனது மனைவியும், மகனும் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியாமல் தவிக்கிறார். 

Josef Antebi  என்ற யூத மதகுரு (Rabbi), ஆம்ஸ்டர்டாம் நகரில் நடந்த, "காஸா  போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்"  கலந்து கொண்டார். அப்போது தான் முதன்முதலாக அவரைப் பற்றி நான் கேள்விப் பட்டேன். ஆர்ப்பாட்டத்தில் முன்வரிசையில் நின்ற அவரை படம் எடுத்து, அதனை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன். அந்தப் படம், பலரைக் கவர்ந்திருந்தது. (அந்தப் புகைப்படத்தை இங்கே இணைத்துள்ளேன்.) காஸா போர் எதிர்ப்பு பேரணி என்றால், அரேபியர்கள், அல்லது முஸ்லிம்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்திருப்பார்கள் என்பது பலரின் எதிர்பார்ப்பு. ஆனால், ஆம்ஸ்டர்டாமில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பல்லின மக்கள் பங்களித்திருந்தனர். பெருமளவு (இடதுசாரி) டச்சுக் காரர்களும் வந்திருந்தனர். ஆனால், யூதர்கள் அதிலும் மதகுருக்கள் கலந்து கொள்வார்கள் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இங்கேயுள்ள படத்தில் காணப்படும், ஜோசெப் என்ற யூத மதகுரு, வருகிற திங்கட்கிழமை காஸா போகப் போவதாக அறிவித்துள்ளார். அதன் பிறகு தான், அவரைப் பற்றிய தகவல்கள் பல எனக்குத் தெரிய வந்தன. 

இன்றைய இஸ்ரேலில் வாழும், 90 சதவீதமான யூதர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தேறிய குடிகள் ஆவர். அன்றைய பிரிட்டிஷ் காலனியான பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூதர்கள், இன்று சொந்த நாட்டில் சிறுபான்மையினராக உள்ளனர். ஐரோப்பிய யூதர்கள் குடியேறும் வரையில், பாலஸ்தீனத்தில் யூதர்களும், அரேபியர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கிடையில் இனப்பகை சிறு துளியேனும் இருக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சியோனிசம் என்ற கொள்கை வழி நடந்த தேசியவாத யூதர்கள், பாலஸ்தீனத்தில் வந்து குடியேறினார்கள். இரண்டாம் உலகப்போருக்கு முன்னும், பின்னும் ஆயிரக்கணக்கான ஐரோப்பிய யூதர்கள் வந்து குடியேறியதால், அவர்களுக்கான வசிப்பிடங்களை உருவாக்குவதற்கான தேவை ஏற்பட்டது. அதுவே பிற்காலத்தில், "இஸ்ரேல் என்ற தேசத்திற்கான சுதந்திரப் போர்"  என்று அழைக்கப் படலாயிற்று. வந்தேறுகுடிகளான ஐரோப்பிய யூதர்கள், பாலஸ்தீனத்தில் வாழ்ந்த அரேபியரின் நிலங்களை அபகரித்து, குடியேற்றங்களை உருவாக்கினார்கள். நில அபகரிப்பை எதிர்த்த அரேபியரை தாக்கினார்கள். அப்போது அங்கு வாழ்ந்த "பாலஸ்தீன யூதர்கள்", அரேபிய அயலவரின் பக்கம் நின்று போராடினார்கள். 

தற்பொழுது ஆம்ஸ்டர்டாமில் வசிக்கும் யூத மதகுருவான ஜோசெப், ஒரு பாலஸ்தீன யூதராக, பாலஸ்தீனத்தில் பிறந்து வளர்ந்தவர். அவர் தனது வாழ்க்கை கதையை, சுருக்கமாக கூறினார்:
"நான் ஒரு பாலஸ்தீன யூத குடும்பத்தை சேர்ந்தவன். பாலஸ்தீன விவசாயிகளுடன் சமாதானமாக வாழ்ந்து வந்தோம். யூதர்கள் அல்லாத பாலஸ்தீனியர்கள் மீதான சியோனிச தாக்குதல்களை ஒன்று சேர்ந்து எதிர்த்து வந்தோம். அதற்காக நான் பெரியதொரு விலை கொடுக்க வேண்டியிருந்தது. என்னைப் போன்ற, பாலஸ்தீனத்தில் பிறந்த யூதர்கள், சியோனிசத்தை எதிர்த்து போராடுவதை இஸ்ரேலிய அரசினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என்னை கடத்திச் சென்று, சிறையில் அடைத்து வைத்தார்கள். சித்திரவதை செய்தார்கள். கடைசியில் நாட்டை விட்டு வெளியேறினேன். நான் எனது மனைவியை இழந்தேன். எனது மகனை பதினெட்டு வருடங்களாக பார்க்கவில்லை. அதனால் இப்போதும் வருந்திக் கொண்டிருக்கிறேன்.  பிறந்த இடத்தை விட்டு வெளியேறுவது எத்தனை வேதனையானது என்பது எனக்குத் தெரியும். பிள்ளையை இழப்பது எந்தளவு வலி எடுக்கும் என்பது எனக்குப் புரியும். அதனால் தான், காஸாவில்  அல்லலுறும் பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக, நான் அங்கே செல்லவிருக்கிறேன்." 

வருகிற திங்கட்கிழமை, ஆம்ஸ்டர்டாமில் இருந்து செல்லும் குழுவில் ஜோசேப்பும்  இடம்பெருகிறார். அந்தக் குழுவினர் முதலில் எகிப்து சென்று, எல்லை கடந்து காஸாவினுள்ளே நுழைய இருக்கின்றனர். இஸ்ரேலியப் படைகளின் முற்றுகைக்குள் சிக்கியுள்ள காசாவில், அவர்கள் பாலஸ்தீன மக்களுக்கு மனிதக் கவசமாக தங்கியிருப்பார்கள்.


கீழேயுள்ள வீடியோவில், யூத மதகுருவான ஜோசெப் சியோனிசத்திற்கு எதிராக போராடுவதற்கான காரணங்களை முன்வைக்கின்றார்: 

Rabbi Josef Antebi exposing Zionists, even after being tortured by them!

இஸ்ரேலில் தடுத்து வைக்கப் பட்டுள்ள மனைவியையும், பிள்ளையையும் இழந்து தவிக்கும் யூத மதகுரு ஜோசெப் பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி:

 இதனுடன் தொடர்புடைய வேறு பதிவுகள்:
 இஸ்ரேலை நிராகரிக்கும் யூதர்கள் (வீடியோ)

Wednesday, November 14, 2012

கொலம்பிய புரட்சி இயக்கத்தில் ஒரு ஐரோப்பிய பெண் போராளி


கொலம்பியாவில் ஒரு ஆயுதப் புரட்சி மூலம் மார்க்சிய-லெனினிச அரசை அமைப்பதற்காக, கடந்த பல தசாப்தங்களாக போராடிக் கொண்டிருக்கும் FARC இயக்கம், தற்பொழுது அரசுடன் சமாதான பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றுகின்றது. நோர்வே, கியூபாவின் மத்தியஸ்தத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் ஒரு நெதர்லாந்து பெண்மணியும் கலந்து கொள்கிறார்.

தான்யா நைமையர் (Tanja Nijmeijer), பல்கலைக்கழக பட்டப் படிப்பை முடித்த பின்னர், கொலம்பியா சென்று FARC  இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இயக்கத்தில் அவரது பெயர் அலெக்சான்ட்ரா. ஒரு தடவை, கொலம்பிய இராணுவ நடவடிக்கையின் பின்னர், கைப்பற்றப்பட்ட FARC முகாமில் இருந்து, தான்யாவின் தினக்குறிப்பேடு கண்டுபிடிக்கப் பட்டது. அது ஊடகங்களுக்கு பகிரங்கப் படுத்தப் பட்ட பின்னரே, நெதர்லாந்து பெண் போராளி பற்றி உலகம் அறிந்து கொண்டது. கொலம்பியா தலைநகர் பகொட்டாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்றில் சம்பந்தப் பட்டதற்காக, கொலம்பிய அரசினாலும், அமெரிக்க அரசினாலும் தேசப்படும் பயங்கரவாத சந்தேகநபரான தான்யா, ஒஸ்லோவில் நடந்த முதலாம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்குபற்ற தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், இந்த வாரம் கியூபாவில் நடைபெறும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள அனுமதிக்கப் பட்டார். கியூபா வந்த தான்யாவை, நெதர்லாந்து பத்திரிகையாளர்கள் சந்தித்து பேட்டி கண்டனர். அந்தப் பேட்டியில் பேசப்பட்ட விடயங்களை இங்கே மொழிபெயர்த்து தருகிறேன். 
----------------------------------------------------------------------------------------------------------

(நெதர்லாந்து நாட்டை சேர்ந்த FARC பெண் போராளி தான்யா நைமையர், முதல் தடவையாக நெதர்லாந்து ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல்)

FARC இயக்கத்தில், அலெக்சான்ட்ரா என்று அழைக்கப் படுபவர், அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க தயாராக இருக்கிறார். தான்யா நைமையர் (34 வயது), ஒரு வாரம் கியூபாவில் தங்கியிருக்கும் வேளை, இணையம் ஊடாக அவரைப் பற்றியும், கொலம்பிய நிலைமை, FARC  இயக்கம் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.

FARC  இயக்கம் குறித்து, ஊடகங்கள் எதிர்மறையான கருத்துக்களை கொண்டிருப்பதையிட்டு அவர் அறிந்திருக்கிறார். "பல வருடங்களாக, ஊடகங்கள் FARC  எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. நாங்கள் ஏன் போராடுகின்றோம் என்று, எமது பக்க நியாயம் குறித்து பேசுவதற்கு, எமக்கு சந்தர்ப்பம் வழங்கப் படவில்லை." குண்டுத் தாக்குதல்கள், கடத்தல்கள் இவற்றை சுற்றித் தான் அந்த உருவகம் கட்டமைக்கப் படுகின்றது, என்று அவர் கருதுகிறார். "எவராவது அரசுக்கு வரி செலுத்தா விட்டால், சிறைக்கு செல்ல வேண்டும். எவராவது எமது இயக்கத்திற்கு புரட்சிகர வரி கட்டா விட்டால், எங்களது சிறையில் அடைத்து வைப்போம். நாம் அப்படிச் செய்தால், அதனை ஆட் கடத்தல் என்று கூறுகின்றனர்." தான்யா இங்கே புரட்சிகர வரி என்று குறிப்பிடுவது, வணிக நிறுவனங்கள் FARC  இயக்கத்திற்கு மாதாமாதம் கட்ட வேண்டிய தொகையை ஆகும். 

"(குண்டுத்) தாக்குதல்கள் பற்றிய எமது நிலைப்பாடு இது: நாங்கள் ஒரு இராணுவம். உயிர்களைக் கொல்லும்  ஆயுதங்களுக்கு எதிராக நாங்களும் ஆயுதங்களை பாவிக்கிறோம். நாங்கள் இராணுவம், துணைப்படை, பொலிஸ் ஆகிய அரச படைகளை எதிர்த்து போராடி வருகின்றோம். அந்தப் போராட்டத்தில் மரணங்கள் சம்பவிக்கின்றன. ஏனென்றால் இது ஒரு யுத்தம். அவர்கள் எங்களை தாக்குகிறார்கள். நாங்கள் அவர்களை தாக்குகின்றோம்." ஆயுதப் போராட்டம் பின்னடைவை அடையவில்லை என்று அந்த நெதர்லாந்து பெண்மணி கருதுகின்றார். கொலம்பியாவில் அமைதியான வழியில் அரசியல் நடத்துவதற்கு இடமில்லை. எண்பதுகளில் எமது அரசியல் கட்சி, முற்று முழுதாக அழித்தொழிக்கப் பட்டது. இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் கொன்றொழிக்க பட்டனர். அது நியாயமானது அல்ல. மக்களுக்கு எதிராக அளவுக்கதிகமான அடக்குமுறையை பிரயோகிக்கும் நாட்டில் ஜனநாயகம் பற்றி பேச முடியாது. ஒரு வேளை உணவுக்காக, தமது ஓட்டுக்களை விற்குமளவிற்கு வறுமை அங்கே தாண்டவாடுகின்றது. இப்படியான நிலைமையில், அந்த நாட்டில் ஜனநாயக அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் இருப்பதாக கூற முடியாது. 

தான் சமாதான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வது, சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக என்ற கூற்றை தான்யா மறுக்கின்றார்.  "பத்து வருடங்களாக FARC  இயக்கத்தில் போராளியாக இருப்பதாலும், ஆங்கிலம் பேசுவதாலும், ஆவணங்களை மொழிபெயர்க்க முடியுமென்பதாலும்...." கலந்து கொள்வதாக அவர் தெரிவித்தார். ஒரு வசதியான செல்வந்த நாட்டில் வாழ்ந்த, பட்டதாரியான தான்யா, தான் ஒரு கெரில்லா போராளியாக கொலம்பிய நாட்டிற்கு வேண்டிய உதவிகளை செய்யலாம் என நம்புகின்றார். "எல்லா வகையான போராட்டங்களும் முக்கியமானவை. ஒரு கெரில்லா போராளியாவதை நானாகவே தெரிவு செய்து கொண்டேன். பிற போராளிகளுடன் உணர்வுத் தோழமையை வகுத்துக் கொண்ட மன நிறைவை அளிக்கின்றது. நான் ஒரு ஊடகவியலாளர் ஆக இருந்திருந்தால், சிலநேரம் நடுநிலையான செய்திகளை பகிர்ந்திருக்கலாம். ஆனால், அதனால் நான் அடையப் போவது என்ன?" 

கொலம்பியாவில் நடந்த தாக்குதல்களுக்காக குற்றம் சாட்டப் பட்டுள்ளதால் தனது எதிர்கால வாழ்வுக்கு எந்தவித இடையூறும் வராது என்று தான்யா நம்புகின்றார். "பேரூந்து ஒன்றில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில், எவருமே கொல்லப்படவோ, காயப்படவோ இல்லை. வரி செலுத்த மறுக்கும் வணிக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களும், நாடு இரவில் தான் இடம்பெறுகின்றன. அந்த தாக்குதல்களில் ஒரு பொதுமகனும் கொல்லப் படவில்லை என்பதை, நான் நூறு சதவீதம் உறுதியாக கூற முடியும்." சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப் பட்டாலும், தான்யா கொலம்பியாவில் தங்கி விடவே விரும்புகின்றார். "FARC  ஒரு புரட்சிகர இராணுவம் என்பதற்கு அப்பால், ஒரு அரசியல் கட்சி ஆயுதமேந்தியுள்ளது என்றும் கூறலாம். சமாதானம் வந்தால், ஒரே இலக்கை நோக்கி அமைதியான வழியில் போராடுவோம். நான் எனது வாழ்நாள் முழுவதும் அந்த நாட்டிலேயே தங்கியிருப்பேன். எனது கனவு நனவாகும் வரையில், நான் அதற்காக போராட விரும்புகின்றேன்." 

(நன்றி: Het Parool, 12 november 2012)

(மொழிபெயர்ப்பு: கலையரசன்) 


கொலம்பியா பற்றிய முன்னைய பதிவுகள்:
1.கொலம்பியா: தென் அமெரிக்காவின் வியட்நாம்
2.FARC கெரில்லாக்களுடன் 10 நாட்கள்


Tuesday, November 13, 2012

ஒலிம்பிக்ஸின் தாயகம்

கிரேக்க நாட்டு பயணக் குறிப்புகள்  (பகுதி - 2)

பண்டைய கிரேக்கம் பற்றிய சில குறிப்புகள்: நாகரீகத்தின் தொட்டில் என ஐரோப்பியர்கள் சொந்தம் கொண்டாடினாலும், இந்த நாகரீகமடைந்த கிரேக்கம் ஆசியாவுடனும் (மெசப்பத்தோமியா), ஆப்பிரிக்காவுடனும் (எகிப்து) தொடர்புகளைப் பேணி வந்தது. அந்தக் காலத்தில், அதாவது 2000 வருடங்களுக்கு முன்பு, மேற்கு ஐரோப்பியர்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தனர். ரோமர்கள் கிரேக்க நாகரீகத்தை பின்பற்றியதுடன், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் அதனைப் பரப்பினார்கள். ரோமர்கள், தமக்கு நாகரீகம் கற்பித்த கிரேக்கர்களையே, தமது சாம்ராஜ்யத்திற்குள் அடக்கினார்கள். மேற்கு ஐரோப்பாவில் ரோம சாம்ராஜ்யம் வீழ்ந்த பொழுது, கிழக்கு ஐரோப்பாவில் அது நிலைத்து நின்றது. "பிசாந்தின்"  என்றழைக்கப் பட்ட கிழக்கைரோப்பிய சாம்ராஜ்யத் தலைநகரம், கொன்ஸ்தாந்திநோபிலாக இருந்தது. அதுவே இன்றைய இஸ்தான்புல் நகரம் ஆகும். அப்போது அங்கே கிரேக்க மொழி ஆட்சிமொழியாக இருந்தது. பிசாந்தின் சக்கரவர்த்தி கொன்ஸ்டான்டின் கிறிஸ்தவ மதத்தை தழுவிக் கொண்டான். மன்னரின் வழியை பின்பற்றி மக்களும் கிறிஸ்தவர்களானார்கள்.

இவர்கள் தற்போதும் ஆதிக் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப் படுகின்றனர். பிசாந்தின் ஆட்சியின் கீழிருந்த துருக்கி இனத்தவர்கள், இஸ்லாமிய மதத்தை தழுவியிருந்தனர். அவர்களை வழிநடாத்திய ஒஸ்மானிய குலத்தவர்கள், தமது படை வலிமையால் பிசாந்தின் இராஜ்ஜியத்தை கைப்பற்றி, தமது ஆட்சிப் பரப்பின் கீழ் கொண்டு வந்தனர். கிரேக்கமும் அவ்வாறு தான் துருக்கிவசமானது. முதலாம் உலகப்போர் வரை, கிரேக்கம் துருக்கியரால் ஆளப்பட்டு வந்தது. முதலாம் உலகப்போரின் முடிவில் பலவீனமுற்றிருந்த ஒஸ்மானிய சாம்ராஜ்யத்திற்கு எதிராக, நவீன கிரேக்க தேசியவாதிகள் கிளர்ச்சி செய்தனர். பிரிட்டனின் உதவியுடன், நவீன கிரேக்க தேசிய அரசு ஸ்தாபிக்கப் பட்டது. 

நவீன கிரேக்கம் என்று குறிப்பிடுவதற்கு பல காரணங்கள் உண்டு. பண்டைய கிரேக்கம் ரோம சாம்ராஜ்யத்தால் சீர்குலைக்கப் பட்டது. பின்னர் வந்த கிறிஸ்தவ மதம், கிரேக்கத்தை தனது சித்தாந்ததிற்குள் இழுத்து விட்டது.  துருக்கியர்கள் தமது கலாச்சாரத்தை அங்கு பரப்பி இருந்தனர். கிரேக்கர்களும், துருக்கியர்களும் பரம்பரைப் பகைவர்கள். அவர்களது பகைமை, கிறிஸ்தவ-இஸ்லாமிய மதப் பிரிவினையில் இருந்து வளர்ந்து வந்துள்ளது. இருப்பினும் இவ்விரு சமூகத்தவர்கள் இடையிலும், கலாச்சார ரீதியாகவும், உணவு முறையிலும், இசையிலும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இன்று என்ன தான் மேற்கத்திய கலாச்சாரம் (அல்லது அமெரிக்க கலாச்சாரம்) செல்வாக்குச் செலுத்தினாலும், கிரேக்க மக்களின் கீழைத்தேய மனப்பான்மை இன்னமும் நிலைத்திருக்கிறது. 


முன்னொரு காலத்தில் வாழ்ந்த, "கிரெகி" என்ற பழங்குடி இனத்தின் பெயரே, "கிரீஸ்", "கிரேக்கம்"  என்ற பெயர்களுக்கு அடிப்படையாகும். ஆனால், கிரேக்கர்கள் தமது நாட்டை "எல்லாஸ்"  என்ற பெயரிட்டு அழைக்கின்றனர். இது எலேனியர்கள் என்ற பல்வேறு பழங்குடி இனாகளை குறிக்கும் பெயர்ச் சொல் ஆகும். இன்று கிரேக்க நாட்டின் உத்தியோகபூர்வ பெயர்: எல்லாஸ். 2004 ம் ஆண்டு, ஏதன்ஸ் நகரில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. உலகிற்கே ஒலிம்பிக் போட்டியை அறிமுகப் படுத்தியதும் கிரேக்கம் தான். உலகப் புகழ் பெற்ற பண்டைய ஒலிம்பிக் நகரம், அகழ்வாராய்ச்சியாளர்களால் புனரமைக்கப் பட்டு வருகின்றது. 

கிரீஸ், வருடம் முழுவதும் உல்லாசப் பயணிகளை கவரும் நாடு. உல்லாசப் பயணிகளை, புராதன பண்பாட்டுச் சின்னங்கள் இருக்குமிடத்திற்கு கூட்டிச் செல்வதற்கான பஸ் வண்டிகளில் கட்டணம் சற்று அதிகம். அதை விட, சாதாரண பொது மக்கள் பயணம் செய்யும், போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தலாம். ரயில் பயணத்திற்கான சீட்டு, மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது குறைவு தான். ஏதென்ஸ் நகரில் இரண்டு மத்திய ரயில் நிலையங்கள் உள்ளன. வடக்கே போக ஒன்று. கிழக்கே போக ஒன்று. 

தெருவில் ஆங்கிலம் பேசுவோரை சந்திப்பதற்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஆங்கிலம் பேசுகின்றனர். ஆனால், அடக்கமாக பதிலளிக்கும் சேவையாளர்களை கிரீஸ் முழுவதும் தேடினாலும் காண முடியாது. பண்டைய ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடந்த இடமான, பெலோப்பெனோஸ் பிரதேசத்திற்கு செல்லும் ரயிலைப் பிடித்து, ஏறி அமர்ந்து கொண்டேன். ரயில் வண்டியில் நிறைய வெளிநாட்டவர்கள் காணப்பட்டனர். அவர்களில் பெரும்பான்மையானோர், பாட்ரா துறைமுகத்தில் வேலைக்காக சென்று கொண்டிருந்த தொழிலாளர்கள். 


தெற்கே போகும் ரயில், கடற்கரையோரமாக சென்று கொண்டிருந்தது. ஏதென்ஸ் நகரில் இருந்து, 200 கி.மி. தூரத்தில் கொறிந்த் கால்வாய் வருகின்றது.  சுயெஸ் கால்வாய் போன்று, இதுவும் மனிதனால் செயற்கையாக தோண்டப்பட்டது.  இதன் மூலம், பெலோப்பனோசுஸ் குடாநாடு, பிரதான நிலத்தில் இருந்து துண்டிக்கபட்டு தீவாக மாறியது. நடுவில் உள்ள கால்வாயின் ஊடாக கப்பற்போக்குவரத்து நடக்கின்றது. பெலோப்பெனோசுஸ் குடா நாட்டில் உள்ள பல இடங்களின் பெயர்கள், பைபிளில் (புதிய ஏற்பாடு) குறிப்பிடப் பட்டுள்ளன. (உதாரணத்திற்கு: கொறிந்த், பாட்ரா) முதன்முதலாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற இடமும் அங்கு தான் உள்ளது. 


ஒலிம்பிக்ஸ் நுழைவாயில் 
"ஒலிம்பியா"  மலைகளின் மத்தியில் காணப்படும் ஒரு கிராமம். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு, இந்த ஒலிம்பிக் கிராமத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப் பட்டன. விளையாட்டு வீரர்கள் சுற்றியுள்ள நகரங்களிலிருந்து வந்து கலந்து கொண்டனர். அன்று இந்த விளையாட்டுப் போட்டிகள், தெய்வ சன்னிதானத்தின் முன்னே (கடவுளரை கௌரவிக்கும் முகமாக) நடாத்தப்பட்டன. ஒலிம்பிக் விளையாட்டுகளில், ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். பெண்கள், பார்வையாளர்களாக கூட கலந்து கொள்ள முடியாது. 


பண்டைய ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்ற இடம் 
கி.மு. 776 ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள், கிறிஸ்தவ மதத்தின் வருகையுடன் நிறுத்தப்பட்டது. போட்டிகளில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்கள் நிர்வாணமாக இருந்ததால், ஒலிம்பிக் விளையாட்டுகள் கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகளால் தடை செய்யப்பட்டன. (20 ம் நூற்றாண்டில், ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளான தாலிபான்களும் விளையாட்டுப் போட்டிகளை தடைசெய்திருந்தமை இங்கே குறிப்பிடத் தக்கது.)  தற்காலத்தில் பெருமளவு உல்லாசப்பிரயாணிகளை கவரும் இடமாக ஒலிம்பியா இருந்தாலும், அங்கே பார்ப்பதற்கு எதுவும் எஞ்சியிருக்கவில்லை. கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாமல், இடிபாடுகளுடன் அழிவுற்ற நிலையில் காணப்படுகின்றன. செயுஸ் கடவுளுக்கு கட்டப்பட்ட ஆலயம் மட்டுமே, ஓரளவு முழுமையாக உள்ளது. 

(தொடரும்)


கிரேக்க பயணக் கதையின் முன்னைய பதிவுகள்:

Thursday, November 08, 2012

பயணச் சீட்டு வாங்காமல் பயணம் செய்வோர் சங்கம்

உழைக்கும் வர்க்க மக்களை சுரண்டும் முதலாளித்துவத்திற்கு எதிரான மக்கள் போராட்டம், சமூகத்தின் பல மட்டங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. பேரூந்து வண்டிகளில், ரயிலில் டிக்கட் வாங்காமல் பயணம் செய்வதும் ஒரு வகைப் போராட்டம் தான். பெரும்பான்மையான மக்கள், போக்குவரத்து கட்டண உயர்வை எதிர்த்து வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வதில்லை.  ஆனால்,தமக்குத் தெரிந்த வழியில்,  அரசுக்கும், முதலாளிகளுக்கும் புரியும் மொழியில் தமது எதிர்ப்பை பதிவு செய்கின்றனர்.  நாளாந்தம் விலைவாசி ஏறிக் கொண்டேயிருந்தால், கிடைக்கும் சொற்ப வருமானம் வயிற்றுப்பாட்டுக்கே போதாது என்றால், மக்கள் என்ன செய்வார்கள்? ஐரோப்பாவிலும், பல தீவிர இடதுசாரி இயக்கங்கள், இத்தகைய "நூதனமான" போராட்டத்தை ஊக்குவித்து வருகின்றன. சுவீடனில் பயணச்சீட்டு இன்றி பிரயாணம் செய்பவர்களுக்காக  ஒரு சங்கம் அமைக்கப் பட்டுள்ளது. 

ஐரோப்பிய நகரங்களில், விசா எதுவுமின்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு உதவிக் கொண்டிருந்த இடதுசாரி ஆர்வலர்கள் தான் அந்தப் போராட்டத்தை நிறுவனமயப் படுத்தினார்கள். சட்டபூர்வ அனுமதி இல்லாத காரணத்தினால், சட்டப்படி வேலை செய்ய முடியாதவர்கள், வறுமை காரணமாக பயணச்சீட்டு இன்றி பயணம் செய்வது வழக்கம். அப்படிப் பயணம் செய்யும் பொழுது பிடிபட்டால், அதையே சாட்டாக வைத்து நாடுகடத்தி விடுவார்கள். அதனால், சுவீடிஷ் இடதுசாரிகள், சட்டபூர்வ ஆவணங்கள் இன்றி தங்கி இருப்போருக்கு, பயணச் சீட்டுகளை வாங்கிக் கொடுத்து வந்தனர். 2001 ம் ஆண்டு, சுவீடிஷ் அரசு போக்குவரத்து கட்டணங்களை உயர்த்தியது. இதனால், சாதாரண சுவீடிஷ் உழைக்கும் வர்க்க மக்களும் பாதிக்கப் பட்டனர். மக்களின் அத்தியாவசிய துறையான, பொதுப் போக்குவரத்து துறை, அநியாய கட்டணம் வசூலிக்கின்றது என்று பலர் அதிருப்தியுற்றனர். 

planka.nu  என்ற அமைப்பு, பொதுப் போக்குவரத்தில் டிக்கட் வாங்காமல் பிரயாணம் செய்வோரின் சங்கமாக உருவாக்கப்பட்டது. அந்த சங்கத்தில் யாரும் உறுப்பினராக சேரலாம். ஒவ்வொருவரும் மாதாந்தம் 100 சுவீடிஷ் குரோனர் (அண்ணளவாக 10 யூரோ) சந்தா கட்டி வர வேண்டும். நீங்கள் ஆறு மாத சந்தாவை ஒரே தடவையிலும் செலுத்த விரும்பினால் 500 Kr . (100 குரோனர் கழிவு). தற்காலிகமாக சுவீடனுக்கு வந்திருக்கும் சுற்றுலாப் பயணிகள் என்றால், வாரத்திற்கு 50 குரோனர். நீங்கள் பஸ்ஸில், ரயிலில் பரிசோதகர் பயணச் சீட்டு இன்றி பிரயாணம் செய்து, பரிசோதகரிடம் பிடிபட்டு அபராதம் கட்டினால், அந்தத் தொகையை சங்கம் பொறுப்பெடுத்து கட்டி விடும். சுவீடனில் அபராதத் தொகை 1200 குரோணர்கள் (120 யூரோ) ஆகும். 

சுவீடனில் பயணச் சீட்டு இல்லாமல் பிரயாணம் செய்வது ஒரு கிரிமினல் குற்றமல்ல. அதனால், பொலிஸ் பிரச்சினை வருவதற்கு வாய்ப்பில்லை. பொதுப் போக்குவரத்து சட்டம் நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றது. அதனால், சில நாடுகளில் "பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்வோர் சங்கம்" கட்டுவது, சாத்தியமிலாமல் போகலாம். இருப்பினும், பிற நாடுகளிலும் இது போன்ற சங்கம் கட்டுவது எப்படி என்ற தகவல் இணையத்தில் கிடைக்கிறது. பல நகரங்களில் மெட்ரோ, ரயில் நிலையங்கள் இலத்திரனியல் கதவுகளால் பூட்டப் பட்டிருந்தாலும், அதற்கூடாக நுழைவது எப்படி என்பதை ஒரு வீடியோ மூலம் காட்டியிருக்கிறார்கள். 

நிச்சயமாக, "பயணச் சீட்டு வாங்காமல் பயணம் செய்வோர் சங்கம்" அரசாங்கத்திற்கு  உவப்பானதல்ல. பல தடவைகள், அரச அதிகாரிகள் மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். ஆனால், இது வரையிலும், அந்த சங்கத்தை சேர்ந்த எவரும் கைது செய்யப் பட்டு, வழக்குத் தொடுக்கப் படவில்லை. போராட்டத்தில் மறைந்திருக்கும் நியாயத் தன்மை காரணமாக,  அவர்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசு அஞ்சுகின்றது. இங்கே எழுதப்பட்ட தகவல்கள், சுவீடனில் கூட நிறையப் பேருக்குத் தெரியாது. அதனால், விஷயம் பெரிதாகி ஊடகங்களின் கவனத்தைப் பெற்று, நாட்டில் எல்லோருக்கும் தெரிய வைப்பதை  விட, கண்டுகொள்ளாமல் பேசாமல் இருப்பது நல்லது என்றே அரசு நினைக்கின்றது. "சுவீடனில், தனியார் வாகனப் பாவனையை குறைக்க வேண்டும். நாட்டில் கார்கள் அதிகமாகி விட்டதால், சுற்றுச் சூழல் மாசடைகின்றது. அதற்குப் பதிலாக, பொதுப் போக்குவரத்தை இலவசமாக்கினால்  இந்தப் பிரச்சினையை தீர்க்கலாம்." இவ்வாறு அந்த இடதுசாரி ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். "பொது மக்களுக்கான போக்குவரத்து இலவசமாக்கப் பட வேண்டும்" என்ற கோரிக்கையை, பெரும்பாலான மக்கள் வரவேற்கவே செய்வர். 

ஏற்கனவே, சோவியத் யூனியனிலும், முன்னாள் சோஷலிச நாடுகளிலும், பொதுப் போக்குவரத்து ஒன்றில் இலவசமாக, அல்லது மிகவும் குறைந்த கட்டணத்தில் நடத்தப் பட்டு வந்தது. பல தசாப்தங்களாக, அந்த நாடுகளில் போக்குவரத்து கட்டணம் உயரவில்லை. சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், நான் வெள்ளை ரஷ்யா (சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த குடியரசு) வுக்கு சுற்றுலா சென்றிருந்தேன். அப்போது கூட, தலைநகரான மின்ஸ்க் நகரில், சுரங்கரயில் போக்குவரத்து கட்டணம் மிகவும் குறைவாக இருந்தது. 0 .10 டாலர் சதத்திற்கு,  நகரின் ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு பயணம் செய்யக் கூடியதாக இருந்தது. மின்ஸ்க் நகரின் சுற்றளவு 30 கி.மி. இருக்கலாம். இன்றைய உலகமயமாக்கப்பட்ட பொருளாதார காலத்திலேயே இப்படி என்றால், சோவியத் யூனியன் சோஷலிச நாடாக இருந்த காலத்தில், வாழ்க்கை எந்தளவு இலகுவாக இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். இதை எல்லாம் நமது நாடுகளில் கற்பனை பண்ணக் கூட முடியாது. ஐரோப்பாவிலேயே, சுவீடன், நோர்வே போன்ற ஸ்கண்டிநேவிய நாடுகளில், பயணச் சீட்டின் விலை அதிகம். மிகவும் குறைந்தளவு பஸ் கட்டணம் 30 குரோணர்கள். 


மேலதிக தகவல்களுக்கு:
1.Planka.nu இணையத்தளம்: Free public transport  http://planka.nu/eng/ 
2.உங்கள் நாட்டிலும் "பயணச்சீட்டு வாங்காமல் பயணம் செய்வோர் சங்கம்"  அமைப்பது எப்படி? கைநூலை இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம்:
3.பயணச்சீட்டு இன்றி பயணம் செய்வது எப்படி என விளக்கும் வீடியோ: 

Friday, October 26, 2012

மலாலா மீதான தாக்குதல், தாலிபானின் வீழ்ச்சிக்கு வித்திடுமா?

பாகிஸ்தானில், மலாலா என்ற சிறுமியை சுட்டுக் கொலை செய்ய  முயன்ற தாலிபானின் வன்முறை, பலரின் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. பாகிஸ்தானில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்ட கண்டன ஊர்வலங்கள் இடம்பெற்றன. அவற்றை நமக்கு காண்பித்த சர்வதேச ஊடகங்கள், "தாலிபானுக்கு எதிரான மக்கள் எழுச்சி" நடந்ததைப் போன்று அறிவித்துக் கொண்டிருந்தன. ஆனால், பாகிஸ்தானில் உண்மையான நிலவரத்தை ஊடகங்கள் படம்பிடித்துக் காட்டுவதில்லை. ஊடகங்கள் நமக்குத் தெரிவிக்காத பாகிஸ்தானின் மறுபக்கத்தை, நாம் இங்கு ஆராய்வோம்.

பாகிஸ்தானுக்கும், நவீன இஸ்ரேலுக்கும் இடையில் சில ஒற்றுமைகள் உள்ளன. இரண்டுமே ஒரே காலகட்டத்தில் மதத்தின் பெயரால் உருவான தேசங்கள். இஸ்ரேல், தன்னை ஒரு உலக யூதர்களின் தாயகமாக காட்டுவதைப் போன்று, பாகிஸ்தான் குறிப்பாக தெற்காசிய முஸ்லிம்களின் தாயகமாக காட்டிக் கொண்டது. பாகிஸ்தான் தன்னை ஒரு இஸ்லாமிய நாடு என்று அறிவித்துக் கொண்டாலும், உண்மையில் அது ஒரு மேற்கத்திய சார்புடைய, தாராளவாத கொள்கை கொண்ட  நாடாகவே இருந்தது. இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய, ஸியா உல் ஹக் காலத்தில் எல்லாமே தலைகீழாக மாறின. சியா, பாகிஸ்தானை ஷரியா சட்டத்தினால் ஆளப்படும், ஒரு கடும்போக்கு இஸ்லாமியவாத நாடாக்க விரும்பினார். அதற்காக ஆர்வமுடைய மாணவர்களை தெரிவு செய்து, இஸ்லாமியக் கல்வி கற்க சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்தார். 

முல்லா, மௌலவி போன்ற இஸ்லாமிய மதகுரு ஆவதற்கான, இடைநிலை, உயர்தர கற்கைகளை சவூதி அரேபியா இலவசமாகவே வழங்கியது. சவூதி அரசு, வாஹபிசம் என்ற இஸ்லாமியப் பிரிவை பின்பற்றி வருகின்றது. தமது பிரிவினரே, இஸ்லாமிய மதத்தை தூய்மையாக கடைப்பிடிப்பதாக அவர்கள் நம்புகின்றனர். பாகிஸ்தானிய மாணவர்களின் மூளைகளையும்  அதற்கேற்ப தயார்படுத்தினார்கள். பாரம்பரிய பாகிஸ்தானிய இஸ்லாம் (சூபிசம்), தாராளவாதக் கொள்கை கொண்டது. அத்தகைய சமூகத்தில், கடும்போக்கு சவூதி இஸ்லாம் இறக்குமதி செய்யப்பட்டது மட்டுமல்ல, மக்களின் பேராதரவுடன் நடைமுறைப் படுத்தப் பட்டது. பாகிஸ்தானிய மக்கள் அத்தனை இலகுவாக மாறி இருக்க  மாட்டார்கள். அதற்கான சமூக அரசியல் தளம் அங்கே இருந்திருக்க வேண்டும்.

இந்தியா தன்னை ஒரு ஜனநாயக நாடாக காட்டிக் கொள்வதைப் போன்று, பாகிஸ்தான் தன்னை ஒரு இஸ்லாமிய நாடாக காட்டிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் மக்களை எவ்வாறு கட்டியாள்வது என்பது தான் ஆட்சியாளர்களின் பிரச்சினை. பாகிஸ்தானில் ஐந்து மொழிகளைப் பேசும், நாகரிக வளர்ச்சி அடைந்த இனங்களும், அதைத் தவிர பத்துக்கும் குறையாத தனித்துவமான மொழிகளைப் பேசும் பழங்குடி இனங்களும் இருக்கின்றன. இவர்களை எல்லாம் இஸ்லாம் என்ற மதம் மட்டும் தான் ஒன்றிணைக்கின்றது. அப்படி இருந்தாலும், கிறிஸ்தவ, இந்து மதங்களைப் பின்பற்றுவோரும் பாகிஸ்தானில் வாழ்கின்றனர். இந்த சிறுபான்மை மதங்களைப் பின்பற்றுவோர் பெரும்பாலும், தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்கள் ஆவர். அது மட்டுமல்ல, அவர்கள் பாகிஸ்தானின் பூர்வீக மக்களுமாவார். இந்தியாவும், பாகிஸ்தானும் பிரிந்த காலத்தில், இந்தியாவில் இருந்து அகதிகளாக புலம்பெயர்ந்து வந்தவர்கள் இன்றைக்கு ஆளும் வர்க்கமாக இருக்கின்றனர். ஆனால், இன்று கிறிஸ்தவ, இந்து மதங்களை பின்பற்றும் தலித் மக்களின் மூதாதையர் ஆயிரமாயிரம் வருடங்களாக அந்த மண்ணிலேயே வாழ்ந்தவர்கள்.

மதவாதிகள் முதலில், பலவீனமான சமூகங்களை குறிவைத்து தாக்கினார்கள். கிறிஸ்தவர்கள், இந்துக்கள் மதத்தால் மட்டும் வேறுபட்டவர்கள் அல்ல. சாதியமைப்பிலும் தாழ்ந்தவர்கள். அதனால், அவர்களை தாக்கினால் கேட்பதற்கு யாரும் இருக்கப் போவதில்லை. ஸியா அரசு கொண்டு வந்த, மத நிந்தனைச் சட்டம் அவர்களை ஊக்குவித்தது. அண்மையில் ஒரு மூளை வளர்ச்சி குறைந்த கிறிஸ்தவ சிறுமி, "குரான் நூலை எரித்ததாக" குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அந்த செய்தி சர்வதேச ஊடகங்களிலும் வந்தது. சில நாட்களின் பின்னர் அந்த இளம்பெண் குற்றமற்றவர் என்று நிரூபணமானது. அந்த கிராமத்து பள்ளிவாசலின் முல்லா, எரிந்த குரான் தாள்களை, அந்த சிறுமியின் பையில் ஒளித்து வைத்திருக்கிறார். அந்த உண்மையை கூறியவர், பள்ளி வாசலில் தொழுகையை அறிவிக்கும் மூசேன். இருப்பினும், அந்த கிறிஸ்தவ சிறுமி, மத நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது. குற்றமிழைத்த முல்லாவின் ஈனச் செயலுக்குப் பின்னால், அந்த ஊரில் வாழும் கிறிஸ்தவர்களை விரட்டும் சதித் திட்டம் மறைந்திருக்கலாம்.

பாகிஸ்தான் கிராமங்களில் பாதிக்கப்படும், எல்லா கிறிஸ்தவர்களுக்கும், இந்துக்களுக்கும், சர்வதேச கவனம் கிடைப்பதில்லை. ஒரு தடவை, விவசாய கூலிப் பெண்களுக்கு இடையில் நடந்த சண்டை ஒன்று, நீதிமன்றம் வரை சென்றது. அதில் குற்றஞ் சாட்டப்பட்ட கிறிஸ்தவப் பெண்ணுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப் பட்டது. அந்தப் பெண் செய்த குற்றம், வாய்த் தர்க்கத்தின் போது, மற்றவரின் (இஸ்லாமிய) மதம் பற்றி தரக் குறைவாக பேசியது. அங்கு நடந்த சச்சரவுக்கான காரணம் எதுவாக இருப்பினும், மத நிந்தனையானது நீதிபதியினால் கடுமையான குற்றமாக கருதப் பட்டது. உண்மையில் அன்று அங்கே நடந்தது என்ன? வயல் வேலையின் நடுவில், கிணற்றில் தண்ணீர் அள்ளிக் கொண்டு வந்து கொடுத்த கிறிஸ்தவப் பெண்ணிடம், நீர் வாங்கிப் பருக சில பெண்கள் மறுத்துள்ளனர். அதற்குக் காரணம், அந்த கிறிஸ்தவப் பெண் ஒரு தீண்டத்தகாத சாதியை சேர்ந்தவர். இந்தியாவில், இலங்கையில் இருப்பதைப் போல, பாகிஸ்தானிலும் தாழ்த்தப்பட்ட சாதியினரிடம் தண்ணீர் வாங்கிக் குடிப்பது கூட தீட்டு என்று கருதப் படுகின்றது. இதனால் ஏற்பட்ட வாய்த் தர்க்கம், மத முரண்பாடாக வளர்ந்தது. வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றாலும், நீதிபதி உயர்சாதியை சேர்ந்தவர் என்பதால், ஒரு சிறிய குற்றத்திற்கு கடுமையான தண்டனை வழங்கி உள்ளார். இது தெற்காசிய நாடுகளுக்குரிய பொதுவான குணம். இன்றைக்கு யாரும் சாதி ஆதிக்க அரசியலை வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார்கள். மதப் பிரச்சினை, இனப்பிரச்சினைகளுக்கு பின்னால் முகத்தை புதைத்துக் கொள்வார்கள்.

ஆப்கானிஸ்தான் பிரச்சினையில் தலையிட்ட பாகிஸ்தான் அரசு, அங்கே தாலிபான் என்ற அமைப்பை உருவாக்கியமை எல்லோருக்கும் தெரியும். கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே, அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து வருகின்றது. அந்த ஆயுதங்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது? ஆப்கானிய ஆயுதக்குழுக்களுக்கு கொடுத்து யுத்தம் செய்ய விட்டு, ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்க்கலாம். அமெரிக்காவும், பாகிஸ்தானும் கடந்த முப்பதாண்டுகளாக அதைத் தான் செய்து கொண்டிருக்கின்றன. உண்மையில் இவர்கள் ஆயுதங்களுக்கு செலவிட்ட பணத்தை, நாட்டை அபிவிருத்தி செய்வதில் செலவிட்டிருந்தால், பாகிஸ்தானிலும் தாலிபான் உருவாவதை தடுத்திருக்கலாம். பாகிஸ்தான் அரசு, அயல்நாடான ஆப்கானிஸ்தானில் தாலிபான் இயக்கத்தை உருவாக்கி விட்டது. அவர்களின் அசுர வளர்ச்சியைக் கண்டு பிரமித்த பாகிஸ்தானிய இளைஞர்கள், தாங்களும் ஒரு தாலிபான் இயக்கத்தை உருவாக்கிக் கொண்டனர். அதற்கு Tehrik-e-Taliban of Pakistan (TTP) என்று பெயரிட்டார்கள்.  2007 இலிருந்து, 2009 வரையில், ஆப்கான் எல்லையோரம் அமைந்துள்ள மேல் மாகாணத்தின் பல பகுதிகள் தாலிபான் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.

2009 ம் ஆண்டு, ஈழப்போரின் இறுதியில் புலிகளை அழிக்கும் நோக்குடன், ஸ்ரீலங்கா அரசு இராணுவ நடவடிக்கை எடுத்திருந்தமை அனைவருக்கும் தெரியும். அதே வருடம், அதே காலத்தில், பாகிஸ்தான் இராணுவம் தாலிபான் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் மீது போர் தொடுத்திருந்தது. ஸ்ரீலங்கா அரசுக்கு பக்கபலமாக நின்று ஆதரித்த சர்வதேச நாடுகள், பாகிஸ்தான் அரசையும் ஆதரித்தன. போரின் முடிவும் ஒரே மாதிரியாக அமைந்திருந்தது. முற்றுகைக்குள் சிக்கிய தாலிபான்கள், இலட்சக் கணக்கான பொது மக்களை வெளியேற விடாது தம்மோடு வைத்திருந்தனர். பாகிஸ்தான் இராணுவம் கண்மூடித் தனமாக எறிகணைகளை வீசி, ஆயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்தது. அந்த வருடம் நடந்த போரின் இறுதியில், தாலிபான் பிரதேசங்களை முழுமையாக கைப்பற்றிய பாகிஸ்தானிய அரசு வெற்றி பெற்றதாக அறிவித்தது. இருப்பினும், தாலிபான் முற்றாக அழிக்கப் படவில்லை. ஆங்காங்கே சிறு சிறு தாக்குதல்கள் தொடர்ந்தன. சமீபத்தில் நடந்த, மலாலா மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவம், தாலிபான் இன்னமும் அங்கே இயங்கி வருவதை எடுத்துக் காட்டுகின்றது.

பாகிஸ்தானில் மீண்டும் தாலிபான் தலையெடுப்பதற்கு காரணம் என்ன? பாகிஸ்தான் அரசின், மக்கள் நலனை புறக்கணிக்கும் ஊழல் மய  அரசியல் ஒரு முக்கிய காரணம். 2010, 2011 ல் பாகிஸ்தானின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.  வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உடனடி நிவாரணப் பொருட்களை வழங்குவதில், வழக்கம் போல அரசு அசமந்தப் போக்கை காட்டியது. இத்தனைக்கும், சர்வதேச நாடுகளின் உதவிகள் வந்து குவிந்து கொண்டிருந்தன. வெள்ள நிவாரணப் பணிகள் துரிதகதியில் நடைபெறவில்லை. அந்த தருணத்தில், தாலிபான் களத்தில் இறங்கி மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தது. பாகிஸ்தானிய அரசினால் புறக்கணிக்கப்பட்ட மக்களின் மனங்களை தாலிபான் வென்றது. அத்தகைய சூழ்நிலையில் மக்கள் யாரை ஆதரிப்பார்கள்?

பாகிஸ்தானில் அபிவிருத்தியால் பின்தங்கிய மாநிலங்களில் வாழும் மக்கள், மிகவும் வறுமை நிலையிலும், எழுத்தறிவின்றியும் வாழ்கின்றனர். அத்தகைய சமூகத்தில், தாலிபான் ஒரு மக்கள் ஆதரவு பெற்ற இயக்கமாக வளர்ந்ததில் வியப்பில்லை. அந்தப் பகுதியில், அரச பாடசாலைகளின் செலவினத்திற்காக, அரசு செலவிடும் தொகை மிகவும் சொற்பம். அந்த இடங்களில், சவூதி நிதியில் தாலிபான் கட்டிய குரான் பாடசாலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அங்கே கல்வி இலவசம். அத்துடன், பிள்ளைகளுக்கு உணவும், ஆடைகளும் தருகிறார்கள். பணம் செலவழித்து பட்டணத்திற்கு அனுப்பி, தனியார் பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்க்கும் வசதியற்ற ஏழைப் பெற்றோர், தாலிபான் நடத்தும் மதராசாக்களால் ஈர்க்கப் படுவதில் வியப்பில்லை. ஆனால், அந்தப் பாடசாலைகளில், குரான் படிப்பு, கணிதம், அரபு மொழி மட்டுமே சொல்லிக் கொடுப்பார்கள். சமூகத்தில் படித்து முன்னேற வேண்டுமானால் அரசுப் பாடசாலைகளுக்கு செல்ல வேண்டும். அதனை தடுக்கும் நோக்குடன், தாலிபான் அரசுப் பாடசாலைகளை குண்டு வைத்து தகர்த்தது. மேலும், மேற்கத்திய கல்வியமைப்பு, பெண் கல்வி ஆகியவற்றிற்கு எதிரான நடவடிக்கையாகவும் அது நடந்தது. தாலிபான்களின் கல்வி மறுப்பை எதிர்த்து போராடி பிரபலமானவர் தான், தாலிபானால் சுடப்பட்ட சிறுமி மலாலா.

தாலிபான் உறுப்பினர்கள் மத்தியிலும், அவர்களை நம்பியிருக்கும் மக்கள் மனதிலும், மதவெறி, சகிப்புத் தன்மை இன்மை,போன்றன விதைக்கப் படுகின்றன. அவர்களுக்கு எதிராக பேசும் நிராயுதபாணிகளான மக்களையும் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். அதெல்லாம் உண்மை தான். அதை மட்டுமே அறிந்து வைத்துக் கொண்டு, மலாலா துப்பாக்கிச்சூடு விடயத்தில், தாலிபானின் வீழ்ச்சி ஆரம்பமாகி விட்டது என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்து போவீர்கள். நீங்கள் தொலைக்காட்சி திரையில் பார்த்தது எல்லாம் வெறும் காட்சிப் படிமங்கள் மட்டுமே. நிஜத்தில், இன்றைக்கும் மக்கள் தாலிபானை விமர்சிக்க அஞ்சுகின்றார்கள். நேர்மையான அரசியல்வாதியாக காட்டிக் கொள்ள விரும்பும் இம்ரான் கான் போன்ற பிரபலங்கள் கூட தாலிபானை எதிர்த்து பேசுவதில்லை. அமெரிக்க ட்ரோன் தாக்குதல்களுக்கு எதிரான, இம்ரான்கானின் அமைதிவழியிலான ஊர்வலம் ஒன்றை தாலிபான் தடை செய்தது. அப்படி இருந்தும், மலாலா மீதான துப்பாக்கிச் சூட்டை பயங்கரவாத செயலாக கண்டித்த இம்ரான்கான், தாலிபானை நேரடியாக கண்டிக்க தயங்குகின்றார். அதற்கு என்ன காரணம்? 

இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் யாராவது புலிகளை விமர்சித்துப் பேசினால் என்ன விதமான எதிர்வினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்? அந்த நிலைமை தான் பாகிஸ்தானிலும் காணப்படுகின்றது. தாலிபானின் செயற்பாடுகளுடன் எல்லோரும் உடன்படுவதில்லை. அவற்றை விமர்சனத்துடன் அணுகும் மக்களும் இருக்கின்றனர். ஆனால், அதை எல்லாம் வெளியில் பேசத் தயங்குவார்கள். அப்படிப் பேசினால், அரச ஆதரவாளர் முத்திரை குத்தப்பட்டு விடும் என்ற அச்சம் மட்டும் காரணம் அல்ல. உண்மையில், பாகிஸ்தானிய இராணுவம் பிரயோகிக்கும் வன்முறை, தாலிபான் வன்முறையை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. அதனால், எந்தக் குறை இருந்தாலும், மக்கள் தாலிபானை ஆதரிக்க வேண்டிய நிலை. இதே போன்ற நிலைமையில் தான், பெரும்பாலான தமிழர்கள் புலிகளை ஆதரித்தார்கள் என்பதை, இங்கே நான் குறிப்பிட வேண்டியதில்லை. 

பாகிஸ்தானில் இன்னமும் தொடரும், அமெரிக்க ஆளில்லா வேவுவிமானங்களின் (ட்ரோன்) தாக்குதல்களால் பல நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். ஓரிரு தடவைகள், விமானக் குண்டு வீச்சில் சில பாகிஸ்தானிய படையினரும் கொல்லப்பட்டனர். அப்படி இருந்த போதிலும், பாகிஸ்தானிய அரசினால், அமெரிக்க விமானக் குண்டுவீச்சை தடுக்க முடியவில்லை. அத்தகைய கையாலாகாத அரசின் பக்கம் இனங் காட்டிக் கொள்வதற்கு யார் விரும்புவார்கள்? மலாலா விவகாரத்தில், பாகிஸ்தானிய மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளதாகவும், இனிமேல் தாலிபானின் கதை முடிந்து விடும் என்றும் நினைப்பது வெறும் கனவு. அப்படி ஒன்று நடக்க வேண்டுமென்று, பாகிஸ்தானிய, அமெரிக்க அரசுகள் மனப்பூர்வமாக விரும்பினால், முதலில் ட்ரோன் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.


பாகிஸ்தான் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.பாகிஸ்தானில் எல்லை கடந்த ஏகாதிபத்தியவாதம்
2.இஸ்லாமாபாத்தின் இயலாமையும், இஸ்லாமிய இயக்கவியலும்
3.பாகிஸ்தானில் மதவாத அரசியல் கட்சிகளின் வளர்ச்சி
4.காந்தாரம் முதல் காஷ்மீரம் வரை


Monday, October 08, 2012

சாவேசின் சாதனைகள் : மறைக்கப்பட்ட உண்மைகள்


வெனிசுவேலாவின் சோஷலிச ஜனாதிபதியான சாவேஸ், மூன்றாவது தடவையாக பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவேசின் வெற்றியின் இரகசியம் என்ன? அவரது கடந்த கால சாதனைகள் என்ன?



1. எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடான வெனிசுவேலாவில், எண்ணை  விற்பனையில் கிடைக்கும் வருமானத்தில் பெரும் பகுதி மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவிடப் பட்டுள்ளது. சாவேஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் செலவிட்ட அளவை விட, சாவேசின் பதவிக் காலத்தில் நானூறு மடங்கு அதிகமாக, அதாவது அரசாங்க பட்ஜெட்டில் 43 % சமூக நலத் திட்டங்களுக்காக செலவிடப் பட்டுள்ளது.
(ஆதாரம்: Financial Timeshttp://www.ft.com/)

2.  வெனிசுவேலாவின்  பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் தேசியமயமாக்கப் பட்டன. நானூறுக்கும் அதிகமான நிறுவனங்கள் அரசாங்கத்தினால் நடத்தப் படுகின்றன.
(Venezuela's economy Towards state socialism, http://www.economist.com/node/17527250)  

3. சாவேசின் சோஷலிச அரசியலுக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. அவரது பதவிக் காலமான 1996 க்கும் 2010 க்கும் இடைப்பட்ட காலத்தில், வறுமை பெருமளவு ஒழிக்கப் பட்டுள்ளது. 71 % இலிருந்து 27 % மாக குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சாவேசின் ஆட்சிக் காலத்தில், குழந்தைகளின் இறப்பு விகிதம் அரைவாசியாக குறைந்துள்ளது. எழுத்தறிவின்மை விகிதாசாரம் பெருமளவு குறைக்கப் பட்டுள்ளது.
(POBREZA Y DESARROLLO SOCIAL EN VENEZUELA: Balance 2011 y perspectivas para el 2012 por Jesse Chacón (GISXXI), http://www.gisxxi.org/noticias/pobreza-y-desarrollo-social-en-venezuela-balance-2011-y-perspectivas-para-el-2012-por-jesse-chacon-gisxxi/#.UHNeV5hg8fU)
( Pourquoi Chavez ?, http://www.legrandsoir.info/pourquoi-chavez.html)

4. உங்களுக்குத் தெரியுமா? உலகிலேயே திருப்திகரமான வாழ்க்கை வாழும் மக்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக வெனிசுவேலா தெரிவு செய்யப் பட்டுள்ளது. பணக்கார நாடுகளான கனடா, மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளுக்கு அடுத்ததாக, வெனிசுவேலா ஆறாவது இடத்தில் இருக்கிறது. (High Wellbeing Eludes the Masses in Most Countries Worldwide, http://www.gallup.com/poll/147167/High-Wellbeing-Eludes-Masses-Countries-Worldwide.aspx#2)

5. மேற்கத்திய ஊடகங்கள் சாவேஸ் ஒரு சர்வாதிகாரி என்றும், அவரது ஆட்சியில் ஜனநாயகத் தன்மை கிடையாது என்றும் கூறி வருகின்றன. ஆனால், 13 வருட ஆட்சிக் காலத்தில், 14 தேர்தல்கள் அல்லது கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகள்  நடைபெற்றுள்ளன. அனைத்திலும் சாவேசும், அவரது கட்சியும் வெற்றி பெற்றுள்ளனர். அனைத்து தேர்தல்களையும் கண்காணித்து வந்த  Carter Centrum   ஐ  சேர்ந்த  Jennifer McCoy , தேர்தல்கள் யாவும் ஜனநாயக முறைப்படி நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
(Venezuelan Electoral System one of the Most Automated in the World, http://venezuelanalysis.com/analysis/7177)

6. வெனிசுவேலா நாட்டு ஊடகங்கள் எல்லாம் சாவேசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதனால் அவருக்கு ஆதரவான பிரச்சாரம் மூலம் மக்களை மூளைச் சலவை செய்வதாக, மேற்கத்திய நாடுகள் குற்றஞ் சாட்டுகின்றன. உங்களுக்குத் தெரியுமா? வெனிசுவேலாவின் 116 தொலைக்காட்சி நிறுவனங்களில், 61 தனியார் நிறுவனங்கள். தனியார் தொலைக்காட்சிகள் தொடர்ந்தும் சாவேசுக்கு எதிராகத் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. வெறும் 13 தொலைக்காட்சி நிறுவனங்களை மட்டுமே அரசு நடத்துகின்றது. மீதியுள்ள 37 ம், ஒன்றில் பிரதேச அரசாங்கத்தினால், அல்லது மக்களின் கூட்டுறவு நிறுவனமாக  நடத்தப் படுகின்றன. ஆனால்.... ஆனால்... தனியார் தொலைக்காட்சி சேவைகள், மொத்த சனத்தொகையில் 61 % மான பார்வையாளர்களை சென்றடைகின்றன. தினசரி பத்திரிகைகளில் 80 % தனியார் கைகளில் இருக்கின்றன. நாட்டில் அதிகமாக விற்பனையாகும், பிரபலமான முன்னணி பத்திரிகைகள் எப்போதும் சாவேசுக்கு எதிராகவே எழுதிக் கொண்டிருக்கின்றன.
(Television in Venezuela: Who Dominates the Media?, http://www.cepr.net/documents/publications/2010_12_venezuela_media.pdf)

7. உலக நாடுகளின் ஜனநாயக செயற்பாடுகளை கணிப்பிட்டு வரும் கனடிய நிறுவனமான   Foundation for Democratic Advancement (http://www.slideshare.net/FDAdvancement/2011-fda-electoral-fairness-report-on-venezuela)(FDA), நேர்மையான முறையில் ஜனநாயக தேர்வு நடக்கும் நாடுகளில் ஒன்றாக வெனிசுவேலாவை தெரிவு செய்துள்ளது.  அவர்களின் கணிப்பின் படி, வெனிசுவேலாவில்  83 % நேர்மையான ஜனநாயக தெரிவு இடம்பெறுகின்றது. மற்ற நாடுகளையும் ஒரு தடவை பார்ப்போமா? பின்லாந்து 30 %, அமெரிக்க 30 %, எகிப்து 0 %. 

8. இந்த தடவை, சாவேசை எதிர்த்து தேர்தலில் குதித்த வேட்பாளர்  Henrique Capriles பற்றி மேற்கத்திய ஊடகங்கள் புகழ்ந்து பேசின. மாபெரும் ஜனநாயகவாதி என்றெல்லாம் பாராட்டின. அந்த வேட்பாளரின் கடந்த கால ஜனநாயக சாதனைகளை பார்ப்போமா? 2002 ம் ஆண்டு, வெனிசுவேலாவில் சதிப்புரட்சி நடந்தது. மியாமியில் (அமெரிக்கா) இருந்து வந்த ஆயுதக் குழுவொன்று கியூப தூதுவராலயத்தை முற்றுகையிட்டது. அப்பொழுது அந்தப் பிரதேச ஆளுநராக இருந்த  Henrique Capriles அந்த ஆயுதக் குழுவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது மட்டுமல்ல, சர்வதேச சட்டங்களுக்கு முரணாக, தூதுவராலயத்திற்கு சென்று கொண்டிருந்த மின்சார, நீர் விநியோகத்தையும் துண்டித்திருந்தார். 
(Ex embajador de Cuba en Venezuela: Capriles violó leyes internacionales, http://www.telesurtv.net/articulos/2012/04/12/ex-embajador-de-cuba-en-venezuela-capriles-violo-leyes-internacionales)  

இந்த தேர்தலில் ஊகோ சாவேஸ் 54 % வாக்குகளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட  Henrique Capriles 45 % வாக்குகளையும் பெற்றுள்ளனர். 

வெனிசுவேலா பற்றிய முன்னைய பதிவுகள்:
1.ஏழைகளின் எழுச்சி ஒளிபரப்பப்படுவதில்லை
2.வெனிசுவேலா: சோஷலிச குழந்தைகள் உருவாகிறார்கள்
3.அமெரிக்காவுடன் போருக்கு தயாராகிறது வெனிசுவேலா
4.வெனிசுவேலாவில் தொழிலாளர் நிர்வகிக்கும் தொழிற்சாலை ( வீடியோ)
5."சோஷலிசம் இன்றேல் காட்டுமிராண்டியிசம்" - 5 வது சர்வதேசியம்