Thursday, February 15, 2024

யாழ்ப்பாணத்தில் தீண்டாமை மதில் சுவர்!

"பிரபாகரன் மண்" என அழைக்கப்படும் தமிழீழத்தில் தொடரும் தீண்டாமைக் கொடுமைகள்!!

*****

யாழ் குடாநாட்டில் வட மேற்கு முனையில் உள்ள கீரிமலையை  அண்டிய நிலப் பகுதிகள், போர் முடிந்த பின்னர் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப் பட்டன. அவ்வாறு விடுவிக்கப்பட்ட  பகுதி ஒன்றில் உருவான "நல்லிணக்கபுரம்" என்ற பெயரிலான புதிய கிராமத்தை சுற்றி, ஆதிக்க சாதியினர் 15 அடி உயரத்தில் தீண்டாமை மதில் சுவர் கட்டி எழுப்பி உள்ளனர். காரணம்: அங்கு வாழ்பவர்கள் ஒடுக்கப்பட்ட தலித் சாதியை சேர்ந்த மக்கள். 

மயிலிட்டி போன்ற காரையோர பிரதேசங்களில் இருந்து போர் காரணமாக 30 வருடங்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த தலித் மக்கள், அந்த புதிய கிராமத்தில் மைத்திரிபால ஆட்சிக் காலத்தில் மீள் குடியேற்றம் செய்யப் பட்டனர். அந்த இடத்தில் ஏற்கனவே ஒரு சைவக் கோயில் இருந்துள்ளது. ஆனால் அங்கு இந்த ம‌க்களை வழிபட அனுமதிப்பதில்லை. அது மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட சாதியினரின் வாடை கூட படக் கூடாது என்பதற்காக கோவிலுக்கும், கிராமத்திற்கும் நடுவில் 15 அடி உயரத்தில் மதில் சுவர் கட்டியுள்ளனர். 

நல்லிணக்கபுரத்தில் குடியேறிய ஒடுக்கப்பட்ட தலித் மக்களில் கணிசமான அளவில் கிறிஸ்தவர்களும் உள்ளனர். ஆகவே அவர்கள் கட்டிய கிறிஸ்தவ தேவாலயத்தில் சைவ சமயத்தவர்கள் ஒற்றுமையாக வழிபட்டு வருகின்றனர். இது சிவ சேனை போன்ற இந்துத்துவா சங்கிகளின் கண்களை உறுத்தியது.  கீரிமலையை அண்டிய பகுதி என்பதால், "இந்துக்களின் புனித பூமிக்குள் கிறிஸ்தவ மதவாதிகளை அனுமதிக்காதீர்கள்" என்று போஸ்டர் அடித்து ஒட்டி பிரச்சாரம் செய்தனர். அவர்களுக்கு பிரதேச சபையிலும் செல்வாக்கு இருப்பதால் அவர்களிடம் முறையிட்டு, "சட்டவிரோதமாகக் கட்டிய" தேவாலயம் உடைக்கப்பட வேண்டும் என அச்சுறுத்தி  வருகின்றனர். இதற்குள் சைவமும் சாதியமும் கைகோர்த்து செயற்படுகின்றன. 

இதை விட தலித் சமூகத்தில் இறந்தவர்களை அருகில் உள்ள மயானத்தில் தகனம் செய்யும் அனுமதியும் மறுக்கப் பட்டு வருகின்றது. குடியிருப்புக்கு மிக அருகில், 50 மீட்டர் தூரத்தில் உள்ள மயானத்தை ஆதிக்க சாதி பிணங்களை எரிக்க பயன்படுத்துவதால், தலித் மக்கள் உள்நுழைய அனுமதிப்பதில்லை. ஆகவே அவர்கள் பிணத்தை காவிக் கொண்டு ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மயானத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. இது குறித்து உள்ளூராட்சி சபையில் முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை. இதற்குள் சாதிப் பிரச்சினை இருப்பதாக அவர்களே வெளிப்படையாக சொல்கின்றனர். தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள் தான் உள்ளூராட்சி சபையில் உள்ளனர். அவர்களே பகிரங்கமாக ஒத்துக் கொண்டாலும், இந்த விஷயம் குறித்து எந்தவொரு தமிழ் ஊடகமும் தெரிவிக்காமல் இருட்டடிப்பு செய்து வருகின்றன. 


யாழ் தீண்டாமை மதில் சுவர் தொடர்பாக அங்கு வாழும் மக்கள் வழங்கிய வாக்குமூலம்:

https://youtu.be/3BQJ8eg0sIc?si=5rDfYm80AWmk0nfh