Showing posts with label துபாய். Show all posts
Showing posts with label துபாய். Show all posts

Friday, February 20, 2009

துபாய் என்ற கனவுலகம் கானல்நீராகின்றது

துபாய், ஒரு காலத்தில் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், விண்ணைத் தொடும் கட்டிடங்களும், கடலுக்குள் செயற்கைத்தீவுகளும் கட்டிக் கொண்டிருந்தது. அந்த நாட்டின் வளர்ச்சிக்கு வானமே எல்லை, என்று உலகம் பார்த்து வியந்து கொண்டிருந்தது. கடந்த வருடம் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடி, துபாயின் பொருளாதாரத்தை வளரவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டது. வானத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருந்த அடுக்குமாடிக் கட்டடங்களின் கட்டுமானப்பணிகள் யாவும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஆடம்பர வீடுகளை தாங்கவிருந்த செயற்கைதீவுகள் பல கடலுக்குள் கிடக்கும் கட்டுமானக் குப்பைகளாகிப் போயின. பூமியில் கட்டப்பட்ட ஒரு கனவுலகம் ஒன்றைத் தான், இதுவரை துபாய்வாசிகள் கண்டுவந்தனர். இப்போது மாயை அகன்று வருகின்றது.

பாலைவன முகாம்களுக்குள் வாழும் தொழிலாளர்கள், நகரத்தில் அடுக்குமாடிக் கட்டடங்களில் தமது குடும்பங்களுடன் வசிக்கும் மத்தியதரவர்க்கத்தினர், கோடிகளை முதலீடு செய்த வர்த்தகர்கள்; இப்படிப் பலதரப்பட்டவர்களை கொண்ட வெளிநாட்டவர்களின் சமூகம், துபாயின் மொத்த சனத்தொகையில் 90 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. தொழிற்தேர்ச்சி பெற்ற அதிக சம்பளம் வாங்கும் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்களின் வாழ்க்கை வளமானதாகவே இருந்தது. இவர்களில் பலர் துபாயில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஆடம்பர வீடுகளை வங்கியில் கடன் எடுத்தாவது வாங்கிட முண்டியடித்தனர். துபாயில் வீடு வாங்குபவர்களுக்கு, நிரந்தர வதிவிட அனுமதிப்பத்திரம் கிடைக்கும் என்று அரசு ஆசை காட்டியது. இந்தக் காரணத்திற்காகவே வீடு வாங்கியவர்கள் நிறையப்பேர். அயல்நாடான ஈரானைச் சேர்ந்த வர்த்தகர்கள் பலருக்கு இது கிடைத்தற்கரிய வாய்ப்பாகப் பட்டது. சர்வதேச பொருளாதார தடைக்குள் மாட்டிக் கொண்டிருக்கும் ஈரானை விட, துபாயில் இருந்து கொண்டு வணிகம் செய்வது பாதுகாப்பானது எனக் கருதினர்.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வீட்டு மனைக்கான கேள்வி அதிகரிக்கவே, கட்டுமானக் கம்பெனிகளும் "பேரீச்சை மர வடிவில்", "உலக வரைபட வடிவில்" என்று செயற்கைத் தீவுகளை நிர்மாணித்து, அதிலே ஆடம்பர வீடுகளை கட்டிக்கொடுக்கும் திட்டங்களை அறிவித்தனர். இவையெல்லாம் கட்டப்படுவதற்கு முன்னரே, வீடுகளை விற்கும் திட்டம் ஆரம்பமாகி விட்டது. முன்கூட்டியே பணத்தை செலுத்த வேண்டும், ஆனால் குடியேறுவதற்கு வருடக் கணக்கேனும் காத்திருக்க வேண்டி வரலாம். "துபாய் முதலாளித்துவத்திற்கு ஆயுசு நூறு" என்று நம்பிய பலர், (Real Estate) புத்தகத்தில் மட்டுமே பார்க்கக்கூடிய கற்பனை வீடுகளை வாங்கிக் கொண்டிருந்தனர். கையில் பணமில்லாதவர்கள் வங்கிகளிடம் கடன் வாங்கிக் கட்டினர். "வீட்டின் விலை எப்போதும் கூடிக் கொண்டு தான் இருக்கும், ஒருபோதும் குறையாது" என்று பங்குச்சந்தை சித்தர் சொன்ன அருள்வாக்கு பொதுக்கருத்தாக இருந்த காலமது. அந்தக் காலத்தில் வாங்கிய வீட்டை சில நாட்களின் பின்னர் விற்று லாபம் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். வாங்கி ஒரு மணித்தியாலங் கழித்துக் கூட, சந்தையில் வீட்டின் விலை அதிகரித்திருக்கும் என்று சொல்லப்படுகின்றது.

நிதிநெருக்கடி கட்டுமான கம்பெனிகளையும் விட்டுவைக்கவில்லை. பல நூறு அடுக்குமாடிக் கட்டடங்கள், செயற்கைத்தீவுகள் கட்டிமுடிக்கப்படாமல் அரைகுறையாக இருக்கின்றன. இவையெல்லாம் தொடர்ந்து கட்டப்படுமா? எப்போது முடியும்? என்ற கேள்விகளுக்கு எவரிடமும் பதில் இல்லை. வீடுகள் கட்டப்படவில்லை என்பதற்காக, கடன் கொடுத்த வங்கிகள் சும்மா விடவில்லை. லட்சக்கணக்கான டாலர் கடனை மாதாந்த தவணையில் தொடர்ந்து கட்டி வர வேண்டும் என்று நச்சரிக்கின்றன. இதனால் இப்போது பலர் இல்லாத ஒரு வீட்டிற்காக பணம் கட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. அதுவும் அதிர்ஷ்டவசமாக தொடர்ந்து வேலை செய்பவர்கள், வீட்டுக்கடனை அடைத்து வரலாம். திடீரென வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்கள்?

துபாய் அரசாங்கம் தினசரி 1500 தொழில் விசாக்களை இரத்து செய்வதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று தெரிவித்தது. தொழில் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் அந்த செய்தியை மறுக்கவில்லை, அதேநேரம் ஆமோதிக்கவுமில்லை. அந்த தொகை பத்திரிகை தெரிவித்ததை விட அதிகமாகவே இருக்கும் என்று பரவலாக நம்பப்படுகின்றது. இதைவிட கம்பெனிகள் இதுவரை எத்தனை பேரை பணி நீக்கம் செய்துள்ளன என்ற சரியான விபரம் இல்லை. எப்படியும் ஆயிரக்கணக்கான, அல்லது லட்சக்கணக்கான பணியாளர்களுக்கு வேலை பறிபோயுள்ளது. இவர்களில் பலர் பணி நிரந்தரம் என்ற நம்பிக்கையில், வீடு அல்லது கார் வாங்குவதற்கு எடுத்த கடன் இப்போது தலைக்கு மேலே நிற்கிறது. இதுவரை வருமானம் இருந்ததால், மாதாமாதம் திருப்பிச் செலுத்திக் கொண்டிருந்தனர். இனிமேல் அது சாத்தியமா? துபாய் சட்டப்படி, வேலை இழந்தவர்களின் தொழில் விசா இரத்து செய்யப்படும். அதற்குப்பின் ஒரு மாதம் மட்டுமே தங்கி இருக்கலாம். அதற்குள் இன்னொரு வேலை தேடிக்கொண்டால் பரவாயில்லை. ஆனால் இதுவரை அதிக சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்த, எஞ்சினியர்களின் சம்பளத்தைக் கூட அரைவாசியாக குறைக்கும் அளவிற்கு வேலையில்லாப்பிரச்சினை அதிகரித்துள்ளது.

வேலை இழந்ததால், வீட்டுக்கடனை கட்டமுடியாத இக்கட்டிற்குள் மாட்டிக் கொண்டவர்களின் நிலை பரிதாபகரமானது. துபாயில் கடனை அடைக்க முடியாதவர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்படுகின்றனர். அப்படியே சிறைத்தண்டனை கிடைத்தாலும், வாழ்நாள் முழுவதும் அடிமையாக வேலை செய்து கடனை கட்டி முடிக்க வேண்டி வரும். இதனால் கடனை கட்டமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட பலர் நாட்டை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் போகும் போது கிரெடிட் கார்ட்டில் எஞ்சியிருக்கும் பணத்தையும் எடுத்துக் கொண்டு, தமது விலை உயர்ந்த கார்களை (எவருக்கும் விற்கமுடியாததால்) அங்கேயே போட்டு விட்டு ஓடுகின்றனர். துபாய் விமான நிலைய வாகன நிறுத்துமிடத்தில் இவ்வாறு ஆயிரக்கணக்கான வண்டிகள் கைவிடப்பட்டுள்ளன. வேலையிழப்புகள் அதிகரித்து வருவதால், வீடுகள் காலியாகின்றன, வீட்டுமனை விலை சரிகின்றது, தெருக்களில் வாகன நெரிசல் குறைகின்றது. மொத்தத்தில் துபாய் மாநகரின் சில பகுதிகள் யாருமே வசிக்காத இடங்களாக உருமாறுகின்றன.

நிலைமையை இன்னும் மோசமாக்கும் விதமாக, அரசாங்கம் புதிய ஊடக சட்டத்திருத்தம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. அதன் படி துபாயில் பொருளாதார பிரச்சினை இருப்பதாக, எந்த ஒரு ஊடகமும் மக்களுக்கு தெரிவிக்க முடியாது. அது குறித்த செய்திகளை பிரசுரிப்பவர்கள் அதிக பட்சம் ஒரு மில்லியன் டிர்ஹம் ($ 272000) குற்றப்பணம் கட்டவேண்டும். இதனால் ஊடகங்களும், செய்தியாளர்களும் "தேசப் பொருளாதாரம் என்றும் போல சிறப்பாக இருப்பதாக" பாசாங்கு செய்கின்றனர். இந்த சட்டம் காரணமாக பல வதந்திகள் பரவுகின்றன. இது பொருளாதாரத்தை மேலும் பாதிக்கின்றது.

துபாய், "ஐக்கிய அரபு அமீரகம்" என்ற சமஷ்டிக் கூட்டமைப்பிற்குள் உள்ள மாநிலம். அதன் அயலில் உள்ள அபுதாபி மட்டுமே, அனைத்து மாநிலங்களிலும் பணக்கார எமிரேட். அதன் அளவுக்கதிகமான எண்ணை வளம் காரணமாக பெருமளவு தொகை பணத்தை கையிருப்பில் வைத்துள்ளது. எனினும் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட துபாய்க்கு உதவ மறுத்து வருகின்றது. இது ஏன் என்ற கேள்வி பலருக்கு புரியாத புதிராக உள்ளது. பொருளாதார வீழ்ச்சி காரணமாக துபாய் திவாலாவதை அபுதாபி எதிர்பார்த்துக் காத்திருக்கலாம். அப்படி நடக்கும் பட்சத்தில், மேலைத்தேய நாடுகளில் உள்ளதைப்போல சுதந்திர கலாச்சாரம் கொண்ட துபாயில், கடும்போக்கு இஸ்லாமிய நெறிமுறைகளை கொண்டு வரும் நோக்கம் இருக்கலாம். அதே நேரம் அமீரகம் முழுவதையும் ஒரே நாடாக, அபுதாபியின் இரும்புக்கர ஆட்சியின் கீழ் கொண்டுவரும் திட்டமும் இருக்கலாம். அப்படி நடக்கும் பட்சத்தில், அங்கே வேலை செய்யும் வெளிநாட்டவர்களின் எதிர்காலம் இருண்டதாகவே இருக்கும்.

துபாய் தொடர்பான முன்னைய பதிவொன்று: துபாய், முதலாளிகளின் சொர்க்கபுரி

Wednesday, August 06, 2008

குவைத் தொழிலாளரின் குமுறும் எரிமலை


குவைத்தில் அடிமைத்தனத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த, தெற்காசிய தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. ஆயிரக்கணக்கானோர் நாடுகடத்தப் பட்டனர். சில மாதங்களுக்கு முன்னர் துபாயிலும் இது போன்றே தொழிலாளர், தம்மை அடக்க ஏவிவிடப்பட்ட போலீசாரை எதிர்த்து போரிட்டனர்.

பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு, அரை பாலைவன வளைகுடா நாடுகள், துரித அபிவிருத்திக்கு தெற்காசிய தொழிலாளரின் மலின உழைப்பை பயன்படுத்தி வருகின்றன. நவீன அடிமைகளாக நடத்தப்படும் இந்த தொழிலாளர்கள், ஒன்று சேர்ந்து கிளர்ந்தெழுவதை தடுக்கும் நோக்குடன், பல்வேறு தேசங்களை சேர்ந்த, பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களாக தெரிவுசெய்யப்பட்டனர். இருப்பினும் அடிமைவாழ்வு எல்லோருக்கும் பொதுவானது. இவர்களை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள், தொழிலாளரின் சம்பளங்களை குறைத்து கொடுத்து, அத்தியாவசிய தேவைகளை செலவினங்கள் என்று சொல்லி குறைத்து, அதிக லாபம் கோடி கோடியாக சம்பாதிக்கின்றன. இதைப்பார்த்து சில அமெரிக்க நிறுவனங்களே பொறாமை கொண்டதால், தொழிலாளரின் அடிப்படை வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அரசு நிர்ப்பந்தித்து வருகின்றது.

உலகின் பணக்கார நாடான குவைத்துக்கும், பிற எண்ணைவள வளைகுடா நாடுகளுக்கும், இருண்ட பக்கம் ஒன்றுண்டு. ஆடம்பர மாளிகைகள், வானுயர்ந்த கோபுரங்கள் யாவும் பல்லாயிரக்கணக்கான அடிமைத் தொழிலாளர்களின் உழைப்பில் உருவானவை. இவற்றை நிர்மாணிக்கும் நிறுவனங்கள் பல ஆளும் மன்னர்/ஷேக் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானவை. குவைத்தின் மூன்றில் இரண்டு பங்கு சனத்தொகை வெளிநாட்டவர்களை கொண்டிருக்கும் பட்சத்தில், தனியார் நிறுவனங்களின் 98% மனிதவளம் வெளிநாட்டு தொழிலாளரைக் கொண்டிருப்பது அதிசயமல்ல. இவர்களிலே படித்த, தொழில் தகமையுடைய சிறு பிரிவு மட்டுமே அதிக சம்பளம்(அதுவும் குவைத் பிரசையை விட குறைவு) பெறுகின்றனர்.

அதற்கு மாறாக பெரும்பான்மையான கட்டட நிர்மாண, துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள், மிக குறைந்த சம்பளத்தை (அதிகபட்சம் 100 டொலர்கள்) பெற்று, நகரத்திற்கு ஒதுக்குப்புறமான பாலைவனங்களில் அமைந்த வசதியற்ற தொழிலாளர் குடியிருப்புகளில், ஒரு அறைக்குள் குறைந்தது ஆறு பேர் வாழ வேண்டிய துர்பாக்கிய நிலை. சில கம்பனிகள் சம்பளத்தை மாதக்கணக்காக கொடுப்பதில்லை. குடியிருப்புகளில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில்லை. சில நேரம் அனலாக கொளுத்தும் கோடையில், குளிரூட்டிகள் இல்லாமல் படுக்க வேண்டியிருக்கும். இருப்பினும் வேலை மட்டும் ஒழுங்காக வாங்கப்படும். 40 அல்லது 50 பாகை என்று வெப்பம் கூடினாலும், உயர்ந்த கட்டடங்களில், அந்தரத்தில் நின்று கொண்டே வேலை செய்ய வேண்டும். ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் கடந்த வருடம் முதல்தடவையாக, வெப்பம் 50 பாகைக்கு போகுமானால், 12:30 மணிக்கும் 14:00 மணிக்கும் இடையில் வெளி வேலை செய்ய தடைச்சட்டம் போடப்பட்டது.

கடந்த ஜூலை மாத இறுதியில், குவைத்தில் உள்ள நிறுவனமொன்று தனது பங்களாதேஷ் தொழிலாளருக்கு மாதக்கணக்காக சம்பளம் கொடுக்காத பிரச்சினை, நாடளாவிய ஆசிய தொழிலாளர் எழுச்சிக்கும், மூன்று நாள் வேலைநிறுத்தத்திற்கும் வழிவகுத்தது. சர்வாதிகார ஆட்சி நடக்கும் குவைத்தில், வேலை நிறுத்தம் செய்வதோ, தொழிற்சங்கம் அமைப்பதோ, சம்பள உயர்வு கேட்பதோ சட்டவிரோதம். இருப்பினும் தன்னெழுச்சியாக தொடங்கிய பங்களாதேஷ் தொழிலாளர்களின் போராட்டம், போலிஸ் அடக்குமுறைக்குல்ளானது. நகரின் முக்கிய வீதிகளை ஆக்கிரமித்துக் கொண்ட வேலைநிறுத்தக்காரரை கலைந்து செல்ல வைக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகள் வீசி, தடியடிப்பிரயோகம் செய்ததால், தொழிலாளரும் எதிர் வன்முறையில் ஈடுபட்டனர். வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் எரியூட்டப்பட்டன. சம்பத்தப்பட்ட நிறுவனத்தின் முகவர்கள் சமாதானமாக போகும்படி கூறி, நிலைமையை கட்டுப்படுத்த முயன்றபோது தாக்கப்பட்டனர். கூட்டத்தை கலைத்த போலிசால், அந்த இடத்திலேயே 250 பேர் கைது செய்யப்படனர். தொடர்ந்த போலிஸ் தேடுதல் வேட்டையில் ஆயிரத்துக்கும் குறையாத பங்களாதேஷ் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக தனியான விமானத்தில் நாடுகடத்தப்பட்டனர்.

குவைத் போன்ற வளைகுடா நாடுகளில், தெற்காசிய தொளிலாளர்கள் ஈவிரக்கமற்று சுரண்டப்படுவதும், அவர்களின் அவல வாழ்வும் ஏற்கனவே உலகிற்கு தெரிந்த செய்திகள் தான். ஆனால் அடங்கிக்கிடந்த தொழிலாளர் மனங்களில் அநீதிக்கு எதிரான உணர்வு நீறுபூத்த நெருப்பாக இவ்வளவு காலமும் உறங்கிக் கிடந்தது. இதுவரை இல்லாதவாறு இப்போது மட்டும் தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டங்களில் இறங்குவதற்கு, சில உலக பொருளாதார மாற்றங்கள் முக்கிய காரணமாகும். அண்மைக்காலமாக சர்வதேச சந்தையில் உணவுப்பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், அரிசியின் விலையும் இரண்டு மடங்காகியுள்ளது. பங்களாதேஷ் மக்களுக்கு அரிசி ஒரு முக்கிய உணவு. மேலும் அமெரிக்க டாலரின் பெறுமதி இறங்கி வருவதால், அதனோடு தொடர்புடைய குவைத் டினாரின் பெறுமதியும் வீழ்ந்துள்ளது. இதனால் தமது அற்ப சம்பளம்(75 டாலர்) என்றுமில்லாதவாறு வயிற்றுப்பாட்டிற்கே போதாது என்ற நிலை ஏற்பட்ட போது தான் மேற்குறிப்பிட்ட தொழிலாளரின் தன்னெழுச்சி ஏற்பட்டது. இந்த போராட்டத்தின் விளைவாக குவைத் அரசாங்கம், குறைந்தபட்ச சம்பளம் 150 டாலர்களாக உயர்த்துவதாகவும், இந்த சட்டத்தை மீறும் நிறுவனங்கள் தண்டிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

வளைகுடா நாடுகளின் சட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. தொழில் ஒப்பந்தத்தை மீறும், அவை மோசமான வெளிப்படையான மீறல்களாக இருந்த போதிலும், நிறுவனங்களின் முதலாளிகள் எவரும்(இவர்கள் எப்போதும் அந்நாட்டு பிரசைகள்) இதுவரை தண்டிக்கப்பட்டதாக சரித்திரம் இல்லை. மாறாக உரிமை கோரும் தொழிலாளர்கள் மாத்திரம் கடுமையாக தண்டிக்கப்பட்டு வருகின்றனர். தொழிலமைச்சின் பரிசோதகர்கள் கூட தமது கடமையை திறம்பட செய்வதில்லை. சுமார் இரண்டு மில்லியன் வெளிநாட்டு தொழிலாளரை கொண்ட ஐக்கிய அரபு ராச்சியத்தில் 80 பரிசோதகர்கள் மாத்திரமே உள்ளனர் என்பது, அரசின் அக்கறையின்மையை எடுத்துக் காட்டுகின்றது.

குவைத்தில் தம்நாட்டு தொழிலாளரின் அவலநிலை குறித்து கருத்து வெளியிட்ட சில பங்களாதேஷ் தூதரக அதிகாரிகள், தொழிலாளர்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகின்றனர் என்று விவரித்தனர். தாயகத்தில் மாதம் 188 டாலர்கள் சம்பளமாக தருவதாக ஒப்பந்தம் போடும் நிறுவனங்கள், குவைத் வந்ததும் 75 டாலர் மட்டுமே கொடுக்கின்றன. தொழிலாளருக்கு புரியாத அரபு மொழியில் ஒப்பந்தம் போட்டு, கையெழுத்திட வைத்து ஏமாற்றுகின்றனர். சில அரச நிறுவனப் பணிகளை குத்தகைக்கு எடுக்கும் வேலை முகவர் நிலையங்கள், ஒரு தொழிலாளிக்கு 500 டாலர் படி பெற்றுக்கொண்டாலும், 75 டாலர் மட்டுமே தொழிலாளிக்கு சம்பளமாக கொடுக்கின்றன. ஒருவேளை தொழிலாளி சுகவீனமுற்றால், அந்த நாட்களுக்கு சம்பளம் கொடுப்பதில்லை.
சர்வாதிகார வளைகுடா நாடுகளில், கட்டாரில் மட்டுமே சில வருடங்களுக்கு முன்பு, தொழிற்சங்கம் அமைக்க சட்டம் ஆக்கப்பட்டுள்ளது. துபாயில் குறிப்பிட்ட அளவில் தொழிலாளரின் நிறுவனமயமாக்கல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பாலைவன தொழிலாளர் குடியிருப்புகளில், தற்போது கூட்டம் கூடி, தமது உரிமைகளுக்காக போராடுவது பற்றி விவாதிக்கப்படுகின்றது. துபாய்க்கு வரும் உல்லாசப் பயணிகளை கவர்ந்து, சர்வதேச ஊடக கவனத்தை பெறும் வகையில் ஆடம்பர வியாபார அங்காடிகள், கடற்கரைகள், நெடுஞ்சாலைகள் போன்ற இடங்களில் அமைதியான மறியல் போராட்டங்களை நடத்த திட்டமிடப்படுகின்றது. இவர்கள் ஏற்கனவே ஒருமுறை, துபாயின் உலகப் பிரசித்தி பெற்ற "பேஜ் அல் அரப்" என்ற ஆடம்பர ஹொட்டேலின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, அது உள்ளூர் பத்திரிகைகளின் கவனத்தை ஈர்த்தது.


மக்களின் எந்த உரிமையும் போராடாமல் கிடைக்கவில்லை, என்ற யதார்த்தத்தை குவைத், துபாயில் நடந்த சம்வங்கள் உணர்த்துகின்றன.

___________________________________________________

Wednesday, March 19, 2008

துபாய், முதலாளிகளின் சொர்க்கபுரி

வளைகுடா கடற்கரையோரம், துபாய் நகரை பார்த்த படி நிற்கிறது "பெர்ஜ் அல் அரப்" என்று அழைக்கப் படும், பாய்மரக்கப்பல் வடிவில் கட்டப்பட்ட, ஏழு நட்சத்திர ஹோட்டல். ஆமாம், எதையும் பெரிதாகவே சிந்தித்து கட்டப்பட்ட, ஐந்து நட்சத்திரத்தை விட வசதிகள் நிறைந்த ஏழு நட்சத்திர விடுதி அது. அதன் மிகக்குறைந்த அறையின் ஒரு நாள் வாடகை 800 டாலர்கள். துபாய் காரருக்கு எல்லாத்தையும் வித்தியாசமாக செய்ய ஆசை. அதனால், ஹோட்டல் விளம்பரத்துக்காக அமெரிக்காவின் டென்னிஸ் நட்சத்திரம் அன்ரே அகசியை அழைத்து வந்து, உச்சியில் இருக்கும் ஹெலி இறங்கு தளத்தில் டென்னிஸ் விளையாட வைத்தார்கள். துபாய் நாட்டின் சின்னமாகி விட்ட பெர்ஜ் அல் அரப்கட்டியதுடன் நின்று விடாது, நவீன உலக அதிசயங்கள் அமைக்க வேண்டுமென்ற ஆசையில், கடலுக்குள் பனை மர வடிவில், உலகப் பட வடிவில், என்று செயற்கை தீவுகளை வேறு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த செயற்கை தீவுகளில், நவீன வசதிகளை கொண்ட குடியிருப்புக்களை கட்டி ரியல் எஸ்டேட் இல் விற்க இருக்கிறார்கள். துபாய் முதலாளிகளுக்கு எண்ணை விற்று வந்த கோடிக்கணக்கான பணத்தை என்ன செய்வதென்ற கவலை. அதனால் இப்படி பிரமாண்டமான கட்டுமானப் பணிகளை கற்பனை பண்ணி கட்டி கொண்டிருக்கிறார்கள். பணம் உள்ளவர்களின் வாழ்கை வசதிகளை உயர்த்துவதை மட்டுமே குறிக் கோளாக கொண்டு செயற்படும் அரசாங்கம், சாதாரண மக்களுக்காக போக்குவரத்து துறையை விருத்தி செய்யவில்லை. அதை விட கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கும், நவீன உலக அதிசயங்களை கட்டிய, கட்டிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் மாத வருமானம் 160 டாலர்களுக்கு மேல் போவதில்லை. மேலும் குறைவான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, கட்டிடங்கள் விழுந்து மடிந்தவர்கள் பலர். இந்திய, பாகிஸ்தானிய கூலி தொழிலாளர்களன அவர்களை பற்றி யாரும் கவலைப் படுவதில்லை.. அவர்களின் பெறுமதி சில நூறு டாலர்கள் மட்டுமே. இருபதாம் நூற்றாண்டு நவீன அடிமைகள் அவர்கள்.

2005 ஜனவரி மாதம், ஹஜ் பெருநாள் தொடங்க சில நாட்களே இருந்த காலம். மெக்கா போகும் யாத்திரீகர்கள் எனது விமானத்திலும் நிறைந்திருந்தனர். அவர்கள் ஏன் துபாய் வரவேண்டும்? பேச்சு கொடுத்ததில் சில உண்மைகள் வெளி வந்தன. கனடாவில் இருந்து புறப்பட்ட அந்த யாத்திரீகர்கள், ஒரு சவூதி அராபிய பிரயான முகவர் மூலம் ஒழுங்கு செய்யப் பட்டவர்கள். ஒவ்வொரு பயணியிடமும் நிறைய பணம் வாங்கி கொண்டு, குறைந்த செலவில் டிக்கெட் எடுத்து நாடு நாடக சுற்றி போகும் படி வைத்திருந்தார்கள். பாவம் இந்த அப்பாவி யாத்திரீகர்கள், தாமாகவே பிரயாணம் ஒழுங்கு பண்ண அவர்களுக்கு உரிமையில்லை. சவூதி பிரயான முகவர்களின் ஏகபோக உரிமை மதம் சம்பந்தமான புனித பயணத்தில் கோடி கட்டிப் பறக்கிறது. துபாய் விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது, பாஸ்போர்டை வைத்து பிரயாணிகளை பிரித்து விசா குத்திக் கொண்டிருந்தார்கள். ஐக்கிய அரபு ராச்சியங்கள், மற்றும் பணக்கார வளைகுடா நாடுகளின் பிரசைகளுக்கு முன்னுரிமை, அதற்கு அடுத்ததாக அமெரிக்க அல்லது பிற பணக்கார நாடுகள், கடைசியாக வறிய நாடுகளை சேர்ந்த அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். இந்த பாகுபாடு துபாய் அங்கம் வகிக்கும் ஐக்கிய அரபு எமிறேடின் நிர்வாக அரசியல். அங்கே நீதி கூட இந்த பின்னணியை வைத்து தான் வழங்கப் படுகின்றது.

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த போது, அப்போது ஜனவரி மாதம் என்பதால் வெயில் கடுமையில்லை. சற்றே குளிரான காலநிலை. ஊர் சுற்றிகளுக்கு ஏற்ற காலநிலை. அங்கே பொது போக்குவரத்து அரிது. அதனால் டாக்ஸி, அல்லது தனியார் வாகனம் மட்டுமே தஞ்சம். நான் போய் நின்ற இடம் பழைய துபாய் நகரம். பஜார் நகரம் என்றும் சொல்லலாம். நகை கடைகள், பல சரக்கு கடைகள், மலிவான தங்குவிடுதிகள், எங்கு பார்த்தாலும் இந்தியர்கள் அல்லது பாகிஸ்தானியர்கள்.... இப்படி துபையின் அந்த பகுதி மட்டும் ஒரு சராசரி இந்திய நகரம் மாதிரி காட்சியத்தது. அங்கிருந்து ஒரு சில கி.மி. தூரம் போனால் தான் நவீன துபாய் நகரம் ஆரம்பிக்கிறது. அமாம், துபாய் நகரம் இன்னமும் புது புது குடியிருப்புகள் அமைக்கப் பட்டு பெருகிக் கொண்டே போகின்றது. பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய அல்லது (எமிரேட்) அரேபியர்கள் மட்டுமே வசிக்கும் நவீன வசதிகளை கொண்ட குடியிருப்புகள், அவற்றின் மத்தியில் பாடசாலைகள், பல்பொருள் அங்காடிகள், மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை கொண்ட நியூ யார்க் போன்ற நவீன நகரங்கள்அவை. நட்சத்திர ஹோட்டல்கள், உல்லாச பிரயாணிகள் இளைப்பாறும் கடற்கரை, இப்போது கட்டப் பட்டுகொண்டிருக்கும் உலக அதிசயங்கள் எல்லாமே அங்கே தான்.

இந்த நகரமயமாக்கப் பட்ட கட்டடக் காட்டுக்கு வெளியே, பாலைவனப் பகுதியில் அமைந்திருக்கிறது நவீன அடிமைகளின் முகாம்கள். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற தென் ஆசிய நாட்டு கூலி உழைப்பாளிகள், மிகக் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்கின்றனர். தொழில் ஒப்பந்தம் தொடங்கும் நாளன்றே அவர்களின் கடவுச்சீட்டு, சட்டத்திற்கு மாறாக, வாங்கி வைக்கப் படுகின்றது. குறைந்தளவு வசதிகளை கொண்ட முகாம்களில், ஒரு அறைக்குள் எட்டுபேர் என்று தங்க வைக்கப் படுகின்றனர். வேலை செய்யும் இடத்திற்கு தினம்தோறும் கம்பெனி பஸ், தொழிலாளரை ஏற்றி இறக்கும். ஒரு தொழிலாளிக்கு சம்பளம் உட்பட ஆகும் செலவு அதிக பட்சம் முன்னூறு டாலர்கள் மட்டுமே என்பதால், அவர்களின் உழைப்பை சுரண்டுவதன் மூலம், பல கம்பெனிகள் பெருமளவு லாபம் எடுக்கின்றன. மலிவான உழைப்பாளிகள் உருவாக்கும் உற்பத்தி பொருட்கள், அல்லது சேவைகள் ஆகியவற்றின் விலைகள் சர்வதேச தரத்திற்கு உயர்வாக இருப்பதால், இந்த கொள்ளை லாபம் சாத்தியமாகின்றது. உண்மையில் அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய முதலாளிகள், பொறாமைப்படும் அளவிற்கு துபாய் பொருளாதாரம் அடிமைகளால் கட்டப்பட்டு வருகின்றது. அங்கே தொழிலாளர் நல சட்டங்கள் எதுவும் கிடையாது. தொழிற்சங்கங்களுக்கு தடை. வேலை நிறுத்தம் சட்டவிரோதம். வர்த்தக நிறுவனங்கள் வருமான வரி கட்ட தேவையில்லை. மொத்தத்தில் அது ஒரு முதலாளிகளின் சொர்க்கம். மிக அரிதாக அண்மையில் நடந்த வேலை நிறுத்தம் ஒன்று, போலிஸ் தலையீட்டால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது கைது செய்யப் பட்ட பலர் நாடு கடத்தப் பட்டிருக்கலாம்.

கூலி தொழிலாளர்கள் மட்டுமல்ல, விற்பனையாளர்கள், எழுதுவினைஞர்கள், மானேஜர்கள், டாக்டர்கள், எஞ்சினியர்கள் போன்ற சேவைத்துறையில் இருப்போரும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து குறைந்த கூலிக்கு கூட்டி வரப்படுகின்றனர். இவர்களின் சம்பளம் சாதாரண வெளிநாட்டு தொழிலாளி எடுப்பதை விட பல மடங்கு அதிகம் என்றாலும், ஒரு சாதரண எமிரேட் தொழிலாளி எடுக்கும் சம்பளத்தை விட குறைவு. சில நேரம் அலுவலக பணியில் இருக்கும் ஐரோப்பியரை விட குறைவு எனலாம். அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் மேல்நிலை மனேஜர்களாக பதவியில் உள்ளனர். அவர்களின் ஊதியம், அவர்களின் தாயகத்தில் கிடைக்கும் அதே அளவு, அல்லது சற்று கூட. இதனால் சில தகுதி குறைந்த அமெரிக்க அல்லது ஐரோப்பியர்கள் கூட துபாயில் செல்வந்த வாழ்கை வாழ்கின்றனர்.

பண்டைய ரோம் நகரத்தில், விவசாய கூலிகள் முதல் ஆசிரியர்கள் வரை பிற நாடுகளில் இருந்து வந்த அடிமைகளே வேலை செய்தனராம். ரோம் மக்கள் அரசு துறைகளிலும், இராணுவத்திலும் மட்டுமே பணி புரிந்தனராம். இதே போன்ற சமூக கட்டுமானம் எமிரேட் முழுக்க உள்ளது. நாட்டின் பிரசைகள் அரசாங்கத்திலும், பாதுகாப்பு படை களிலும் அதிக ஊதியத்திற்கு வேலை செய்கின்றனர். மேலும் எல்லா வகையான வர்த்தக நிறுவனத்திலும் ஒரு எமிரேட் பிரசைக்கு அரைவாசி பங்கு இருக்க வேண்டும். இதனால் பல எமிரேட் பிரசைகள், சும்மா இருந்தே பணம் சம்பாதிக்கிறார்கள். மிகப் பெரும் முதலீட்டில் நடத்தப் படும் கம்பெனிகள் அமெரிக்கர்கள், அல்லது ஐரோப்பிய முதலளிகளுடயது. இடைதர மற்றும் சிறிய கம்பெனிகளை இந்தியர்கள் நடத்துகின்றனர். வெளிநாட்டினர் துபாயில் எந்த சொத்தும் வாங்க உரிமையில்லை. அவர்கள் வீடு வாங்க, வியாபார நோக்குடன் அனுமதித்தாலும், ஒரு சில கட்டுப்பாடுகளுடன், அவற்றை விற்கும் ரியல் எஸ்டேட் கம்பெனிகள் அல்லது எமிரேட் காரர்கள் லாபம் சம்பாதிக்கும் துறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எண்ணை இருப்பு குறைந்து வருவதால் இது போன்ற வர்த்தகத்தில் துபாய் நாட்டம் காட்டி வருகின்றது. ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்க கண்டங்களுக்கு நடுவில் அமைந்திருப்பதால், துபாயில் பல உலக வர்த்தக கழகங்கள் தமது விற்பனை சாலைகள், போன்றவற்றை திறந்து வைத்துள்ளன. மேலும் வரி சலுகை, சகல வசதிகளுடனான விமான நிலையம், துறைமுகம், குறைந்த கூலிக்கு பிடிக்க கூடிய தொழிலாளர்கள், ஆகிய விஷயங்கள் பல முதலாளிகள் துபாயை தெரிவு செய்ய காரணம்.

துபாய் இவ்வாறு முதலாளிகளின் சொர்க்கபுரி மட்டுமல்ல, உல்லாச பிரயாணிகளுக்கும் பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. துபாய் அருங்ககாட்சியகம் குறிப்பிடத்தக்கது. எண்ணை கண்டுபிடிக்கும் வரை துபாய் நகரம் எப்படி காட்சியளித்தது? அதன் மக்கள் எப்படி வாழ்ந்தனர்? போன்றவற்றை அறிய விரும்பினால் அது ஏற்ற இடம். மேலும் துபாய் வணிகர்கள் ஒரு காலத்தில் முத்துகளை உலகம் முழுக்க விற்று வந்தனர். முத்து குளிக்கும் முறை, பற்றி ஒரு பகுதி விளக்குகிறது. இன்னொரு பகுதி பாலை வன சோலையில் பேரீச்சை, பிற விவசாயம் பற்றி விளக்குகின்றது. இவை எல்லாம் நேரே பார்ப்பது போல பொம்மைகளை வைத்து காட்சிப் படுத்தப் பட்டுள்ளது.

அருங்காட்சியகத்தில் பார்ப்பதை விட்டு, பாலைவன கிராமம் ஒன்றினை அங்கிருந்த வீடுகள், கிணறுகள், தோட்டங்கள், ஒட்டகங்கள்இவ்வாறு அப்படியே இருந்த மாதிரி பார்க்க விரும்பினால், "ஹட்டா ஹெரிடேஜ் வில்லேஜ்" சிறந்த இடம். ஹட்டா துபாய் நகரில் இருந்து 115 கி.மி. கிழக்கு பக்கமாக இன்னொரு எமிரேட் புஜைரா நோக்கி போகும் பாதையில்,ஹசார் மலைகளுக்கு நடுவில் அமைந்திள்ளது. மலைகளின் பின்னணியில் அந்தக் கிராமத்தின் அமைவிடம் அதன் அழகை மெருகூட்டுகின்றது. ஹட்டாவில் தான் எமிரேட்டின் மிகப்பெரிய அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் பிற பாலைவன வளைகுடா நாடுகளை போலன்றி, எமிரேட்கிழக்கு பகுதியில் விவசாயம் நடக்கிறது. அதற்கு நீர்பாசன வசதி இந்த அணை மூலம் கிடைக்கிறது.

ஐக்கிய அரபு இராச்சியங்கள் ஏழு எமிரேட்களை சேர்த்து உருவானது. அந்த ஏழும் சில சுயநிர்ணய உரிமைகளுடன் ஒன்றிணைந்து ஒரே தேசமாக இயங்குகின்றன. ஒவ்வொரு எமிரேட்டுக்கும் ஒரு ஷேக் அரசியல்/நிர்வாக தலைவராக உள்ளார். ஷேக் என்பது மன்னரை குறிப்பதல்ல. பண்டைய இஸ்லாமிய அரசியல் அமைப்பின் படி ஒவ்வொரு பிரதேசத்திற்கும், ஷேக் என்ற ஒருவர் நிர்வாகத் தலைவராக தெரிவு செய்யப் பட்டு, அரசியல் நிர்வாக அதிகாரம் வழங்கப் பட்டது. ஐரோப்பியரின் வருகைக்கு பிறகு, அதுவும் எண்ணை வளம் கண்டுபிடிக்கப் பட்ட பிறகு தான் இந்த ஷேக்குகள் எல்லாம் கோடீஸ்வரர்களாக, குறுநில மன்னர்கள் போல மாறினார்கள். அபுதாபி, அதிக வருவாய் கொண்டதால், அது தலைநகரம் ஆகி விட்டது. அபுதாபி ஷேக், காலம் சென்ற சையிது, தேசத் தந்தை போலே ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளார். அவரது ஆளுயர உருவப் படங்கள் எமிரேட் எங்கும் காணலாம். அது மட்டுமல்ல, அவருக்கு சொந்தமான பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட ஆடம்பர மாளிகைகள், ஒவ்வொரு நகரிலும் உள்ளது. இராக்கில் சதாம் உருவப்படங்களை, மாளிகைகளை, கேலி செய்த சி.என்.என். போன்ற மேற்கத்தைய ஊடகங்கள் இதை கண்டு கொள்ளாதது வியப்புக்குரியது. அபுதாபி, துபாய் மட்டுமே எண்ணை வளம் காரணமாக, பணக்கார எமிரேட்களாக உள்ளன. அவை புஜைரா போன்ற எண்ணை இல்லாத "வறிய" எமிரேட்டுகளுக்கு நிதி உதவி செய்து முன்னேற்றி வருகின்றன. சட்டங்கள் கூட ஒவ்வொரு எமிரேட்டுக்கும் மாறுபடும். துபாய் மேலைத்தேய நாடுகளை போல தாராளவாத கொள்கையை கடைபிடிகின்றது. அங்கே இரவு களியாட்ட விடுதிகள், மதுபான சாலைகள், ஏன் விபசாரத்துக்கு கூட சுதந்திரம் வழங்கப் பட்டுள்ளது. துபாய் அருகிலேயே இருக்கும் ஷார்ஜா என்ற இன்னொரு எமிரேட் இதற்கு மாறாக, மத ஒழுக்க கட்டுபாடுகளை கடுமையாக கடைப் பிடிக்கின்றது. அங்கே மதுபானம் போன்றனவற்றிகு முற்றாக தடை. அபுதாபி ஓரளவு சுதந்திரமும், ஓரளவு கட்டுபாடுகளையும் கொண்டுள்ளது. இதனால் உல்லாச பிரயாணிகளையும், வர்த்தக நோக்கோடு வருபவர்களையும் துபாய் மட்டுமே கவர்வது வியப்புக்குரியதல்ல.


Travel Blogs - Blog Catalog Blog Directory

AddThis Feed Button
_______________________________________________________________
குவைத் தொழிலாளரின் குமுறும் எரிமலை
_______________________________________________________________

கலையகம்