Monday, November 30, 2009

ஒரு நாள் மண உறவு: இஸ்லாமிய பாலியல் சுதந்திரம்

இஸ்லாமிய மதத்தில் பாலியல் சுதந்திரம் கிடையாது என்று கருதுவோர் இந்தக் கட்டுரையை அவசியம் படிக்க வேண்டும். லெபனானில் ஷியா பிரிவு முஸ்லிம்கள், சட்டப்படி பல வாழ்க்கைத் துணைகளை மாற்றும் பாக்கியசாலிகள். இளம் வயதினருக்கான ஒன்றுகூடலில் உங்கள் மனங்கவர்ந்த ஆணை/பெண்ணை தெரிவு செய்யுங்கள். மதகுரு ஒருவரின் முன்னிலையில் தற்காலிக திருமணம் செய்து கொள்ளுங்கள். அந்த திருமணம் பந்தம் குறைந்தது ஒரு மணி நேரம், கூடியது ஒரு வருடம் நீடிக்கலாம். அதற்குப் பிறகு மண விலக்கு பெற்று இன்னொரு துணையை மணம் முடிக்கலாம்.

லெபனானில் மத அடிப்படைவாத ஹிஸ்புல்லா தற்போது இளம் முஸ்லிம்களுக்கு துணை தேடிக் கொடுக்கும் வேலையில் இறங்கியுள்ளது. ஹிஸ்புல்லாவின் ஷியா இஸ்லாமிய மதகுருமார் தற்காலிக திருமணங்களை சட்டபூர்வமாக்கியுள்ளனர். லெபனானில் ஒவ்வொரு மதப் பிரிவினருக்கும் தனித்துவமான சட்டங்கள் உள்ளன. திருமண பந்தம் அந்தந்த மதப்பிரிவினருக்குள் மட்டுமே சாத்தியம். வேற்று மதத்தவர்களுடன் கலப்பு மணம் செய்து கொள்ள விரும்புவோர் கடல் கடந்து சைப்ரஸ் சென்று மணம் முடித்து திரும்புகின்றனர். ஷியா முஸ்லிம்களுக்கு அரசியல் தலைமை தாங்கும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் மதத்தலைவர்களும் கூட. இதனால் சட்டத் திருத்தங்களை செய்வதும் இலகுவாகின்றது.

2006 ம் ஆண்டு இஸ்ரேலிய படையெடுப்பு ஏற்படுத்திய உயிரிழப்புகள், சொத்தழிவுகள் என்பன லெபனானிய ஷியா சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தென் லெபனானில் பெருமளவு ஷியா முஸ்லிம்கள் வாழ்வதும், அவர்கள் ஹிஸ்புல்லாவுக்கு தார்மீக ஆதரவு அளிப்பதும் குறிப்பிடத்தக்கது. நீண்ட கால இடதுசாரி அமைப்புகளின் வேலைத்திட்டம் காரணமாக பொதுவாக லெபனானிய மக்கள் மதச்சார்பற்றவர்கள். மத நம்பிக்கை கொண்டவர்கள் ஹிஸ்புல்லாவின் உறுப்பினர்களாகவும், மற்றவர்கள் வெறும் ஆதரவாளர்களாக மட்டுமே இருந்துள்ளனர். இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளால் பொது மக்களுக்கு மட்டுமல்ல, ஹிஸ்புல்லாவுக்கும் பெரும் அழிவு ஏற்பட்டது. யுத்தத்தின் அகோரம் காரணமாக பலர் ஹிஸ்புல்லாவையும் குற்றஞ் சாட்டினார்கள். அதே நேரம் ஹிஸ்புல்லாவிற்கும் புதிய உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது.

ஹிஸ்புல்லா ஏற்கனவே சமூக நலன் திட்டங்கள் மூலம் மக்கள் ஆதரவை தக்க வைத்துக் கொண்டது. இலவச மருத்துவமனை, இலவச பாடசாலை போன்ற திட்டங்கள் மக்களின் மனங்களை வெல்ல உதவியது. தற்போது அந்த வரிசையில் துணை தேடிக் கொடுக்கும் திட்டமும் சேர்ந்துள்ளது. ஊர்கள் தோறும் இருக்கும் ஹிஸ்புல்லா அலுவலகங்கள் இதனை தாமாகவே முன்வந்தது அமுல்படுத்துகின்றன. ஊரில் இருக்கும் ஹிஸ்புல்லா உறுப்பினருக்கு சொந்தமான உணவு விடுதி கூட ஒன்றுகூடலை ஒழுங்குபடுத்துகின்றது. ஒன்றுகூடலுக்கு சமூகமளிக்கும் வாலிபர்களும், யுவதிகளும் விரும்பியவரை தெரிவு செய்யலாம். அங்கேயே இருக்கும் மதகுரு திருமண ஒப்பந்தத்தை நிறைவேற்றி வைப்பார். ஒப்பந்தம் மிக எளிது. "என்னை உனக்கு (குறிப்பிட்ட அளவு கால) மண வாழ்வுக்கு ஒப்புக் கொடுக்கிறேன்." "அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்." அவ்வளவு தான். திருமணம் முடிந்து விடும். அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மண ஒப்பந்தம் சட்டப்படி செல்லுபடியாகும்.

தற்காலிக திருமணங்கள் ஹிஸ்புல்லாவின் அரசியல் ஆதாயங்களுக்காகவும் நடத்தப் படுகின்றன. "மக்களின் பாலியல் தேவையை பூர்த்தி செய்ய உதவுவதன் மூலம் அரசியல் விசுவாசம் உறுதிப் படுத்தப்படுகின்றது." இவ்வாறு தெரிவித்தார் ஒரு ஹிஸ்புல்லா தலைவர். இது போன்ற தத்துவம் தான் மேலை நாடுகளிலும் பின்பற்றப் படுகின்றது. சாதாரண மக்களுக்கு பாலியல் சுதந்திரம் வழங்கியதன் மூலம், மேற்கத்திய அரசாங்கங்கள் மக்களின் அரசியல் ஆதரவை நிச்சயப்படுத்திக் கொண்டன. ஹிஸ்புல்லாவின் செயல்திட்டத்திற்கு அது மட்டும் காரணமல்ல. இன்னொரு ஷியா நாடான ஈரானில் தற்காலிக திருமண முறை தொன்று தொட்டு நிலவி வருகின்றது. அந்தக் கலாச்சாரத்தை ஹிஸ்புல்லா ஈரானில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.

சிலர் தற்காலிக திருமண முறை சமுதாய அக்கறையின் பாற்பட்டதாக கூறுகின்றனர். போரினால் கணவன்மாரை இழந்த விதவைகள் இந்த திட்டத்தின் மூலம் பலன்பெற்றுள்ளதை மறுக்க முடியாது. அதே போல இறுக்கமான கட்டுப்பாடுகளை கொண்ட முஸ்லிம் சமுகத்தில் பிறந்த இளைஞர்கள் ஏங்கும் சுதந்திரத்தை நிதர்சனமாக்குகிறது. ஆனால் பெரும்பாலான இளைஞர்களுக்கு பாலியல் கவர்ச்சியே முதன்மையானதாக உள்ளது. இரு வருடங்களுக்குள் நூற்றுக்கணக்கான துணைகளை மாற்றியதாக சிலர் தெரிவித்தனர். மறு பாலாரின் கவர்ச்சியால் ஈர்க்கப்படும் இளம் சமுதாயம், ஹிஸ்புல்லாவின் அரசியல் கூட்டங்களுக்கு அள்ளுப்பட்டு போகின்றது. முதலில் தனக்கென துணை தேடும் ஆர்வத்துடன் வருவோர், மெல்ல மெல்ல ஹிஸ்புல்லாவின் அரசியல் கருத்துகளை உள்வாங்கிக் கொள்கின்றனர். உறுப்பினர் தொகையை அதிகரிக்கவும், மத நம்பிக்கைகளை ஊட்டுவதற்கும் இது ஒரு குறுக்குவழி. இந்த நடைமுறை ஏற்கனவே நம்மூர் இந்துக் கோயில்களில்/கிறிஸ்தவ தேவாலயங்களில் இருப்பதாக சொல்கிறீர்களா? அதுவும் சரி தான்.

"திருமணம் ஒரு வகை சட்டபூர்வ விபச்சாரம்." என்று கூறினார் பெரியார். தற்காலிக திருமண பந்தத்தை சிலர் விபச்சாரத்திற்கான போர்வையாக பயன்படுத்துகின்றனர். சில கிரிமினல்கள் இதை பயன்படுத்தி பெண்களை விபச்சாரத்திற்கு தள்ளியமை கண்டுபிடிக்கப்பட்டது. இது போன்ற சமயங்களில் ஹிஸ்புல்லா தவிர்க்கவியலாது ரகசிய பொலிசின் உதவியை நாடியது. இருப்பினும், பாலியல் வேட்கை கொண்ட இளைஞர்கள், தற்காலிக திருமணங்களை பயன்படுத்தி தமது இச்சையை தீர்த்துக் கொள்வதை ஹிஸ்புல்லா தடுப்பதில்லை. ஹிஸ்புலாவின் தற்காலிக திருமண திட்டம் சமூகத்தில் விமர்சிக்கப்படாமல் இல்லை. ஈரானில் இருந்து வரும் பெருமளவு நிதி, ஹிஸ்புல்லா அமைப்பின் கீழ் மட்ட தலைவர்கள் மட்டத்தில் "அனுபவிக்கும் ஆசையை" தூண்டி விட்டுள்ளதாக சிலர் குசுகுசுக்கின்றனர்.

ஹிஸ்புல்லா தற்காலிக திருமணங்களை சாமானிய மத்தியில் மட்டுமே ஊக்கப்படுத்தி வருகின்றது. பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் தனது உறுப்பினர்கள் தற்காலிக திருமணம் செய்வதை தடைசெய்துள்ளது. ஹிஸ்புல்லா உறுப்பினர்களின் நிரந்தர திருமண பந்தம் கூட, அமைப்பின் அங்கீகாரம் கிடைத்த பின்னரே சாத்தியம். ஹிஸ்புல்லாவின் இராணுவ அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அதே சமயம், வெகுஜன அமைப்பு நெகிழ்ச்சியான போக்கை கொண்டுள்ளது. மேற்கத்திய நாகரீகத்தின் செல்வாக்குக்கு உட்பட்ட மக்களை வென்றெடுப்பதற்கு பொறுமையும், திட்டமிடலும் அவசியம் என்பதை உணர்ந்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு:
Hizballah and sex and bad journalism
Nikah mut‘ah (Temporary Marriage)

Sunday, November 29, 2009

11/26 அமெரிக்க இன அழிப்பு நினைவு தினம்

ஐரோப்பாவில் இருந்து சென்ற வெள்ளையின வந்தேறுகுடிகள் பூர்வீக அமெரிக்க மக்களை படுகொலை செய்து நிலங்களை ஆக்கிரமித்தனர். இன அழிப்பின் பின்னர் ஐரோப்பியமயமாக்கப்பட்ட அமெரிக்காவில் "நன்றி கூறும் தினம்" வருடந்தோறும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அதாவது ஐரோப்பிய வந்தேறுகுடிகளை தங்க அனுமதித்ததற்காக பூர்வீக அமெரிக்கர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்களாம். இனவழிப்பு செய்த கொலையாளிகள் வரலாற்றை திரிபுபடுத்திய அயோக்கியத்தனம் தான் "Thanksgiving day".


1970 லிருந்து நிறுவனமயப்பட்ட பூர்வீக அமெரிக்கர்கள், "நன்றி கூறும்" தினப் பண்டிகை நாளை, தேசிய இனவழிப்பு நினைவு தினமாக அனுஷ்டிக்கின்றனர். அன்றைய தினம் இனப்படுகொலை செய்யப்பட்ட தமது முன்னோரை நினைவுகூருகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு இங்கே கொடுக்கப்பட்ட சுட்டிகளையும், புகைப்படங்களையும், வீடியோவையும் பார்க்கவும்.

United American Indians


40th Native American Day Of Mourning 11-26-09

Saturday, November 28, 2009

இஸ்லாம் தோன்றிய வரலாறு - திரைப்படம்

மெக்கா என்ற ஒரு பாலைவன நகரில் முகமது நபிகளால் போதிக்கப்பட்ட புதிய சிந்தனைகள் பார் முழுவதும் பரவியது எப்படி? கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இஸ்லாம் என்ற புதிய மதம் தோன்றிய ஆரம்ப காலங்களை சித்தரிக்கும் திரைப்படம். அரபு, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு, 1976 ம் ஆண்டு திரையிடப்பட்டது.

போலந்து: கத்தோலிக்க பாதிரியார் எழுதிய காமசூத்ரா

போலந்தில் இன்று அமோகமாக விற்பனையாவது, கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் எழுதிய உடலுறவு செயல்முறை விளக்க கைநூல். கத்தோலிக்க கிறிஸ்தவம் நீண்ட காலமாக பாலியலை விலக்கப்பட்ட பேசுபொருளாக வைத்திருந்தது. அந்தக் கட்டுப்பாடுகளை தகர்த்துள்ளது "கத்தோலிக்க காமசூத்ரா" என அழைக்கப்படும் இந்த நூல். "இந்த நூலை எழுதுவதற்கு உதவிய தரவுகள் ஏற்கனவே பைபிளில் இருந்துள்ளன." இவ்வாறு பாதிரியார் Ksawery Knotz தெரிவித்தார்.

வீடியோ: விபச்சாரத்தில் ஈடுபடும் ஈரான் பெண்கள்

இஸ்லாமிய மத அடிப்படைவாத நாடான ஈரானில், திரைமறைவில் விபச்சாரம் நடக்கிறது. மேற்குலகை விட ஈரானில் போதைவஸ்துக்கு அடிமையானவர்கள் அதிகம். அதிர்ச்சி தரும் இந்த வீடியோ இரகசியமாக படமாக்கப்பட்டது. மத நம்பிக்கை மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து விடும் என்ற கட்டுக்கதை, வறுமையின் முன்னால் பொய்த்துப் போகின்றது.

Part 1


Part 2

Friday, November 27, 2009

மண்ணும் மக்களும்: இஸ்ரேல் தடை செய்த ஆவணப்படம்

இஸ்ரேலிய-பாலஸ்தீன பிரச்சினையை ஒரே தடவையில் முழுமையாக புரிந்து கொள்ள உதவும் ஆவணப்படம்.

Part 1


Part 2


Part 3


Part 4


Part 5

Thursday, November 26, 2009

1939 ல் ஹிட்லருடன் போருக்கு தயாரான ஸ்டாலின்

1939 ம் ஆண்டு, ஹிட்லரின் ஜெர்மனி மீது படையெடுக்க ஸ்டாலின் முன்வந்தார். கிரெம்ளினில் பிரிட்டிஷ்,பிரான்ஸ் பிரதிநிதிகளை அழைத்துப் பேசப்பட்டது. ஆனால் அவர்கள் ஸ்டாலினின் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. லட்சக்கணக்கான துருப்புகளை போலந்தின் எதிர்ப்பையும் மீறி ஜெர்மன் எல்லைக்கு அனுப்புவது ஸ்டாலினின் திட்டம். முன்கூட்டியே போலந்து, நாசி ஜெர்மனியுடன் ஒப்பந்தம் போட்டிருந்தது. ஸ்டாலினின் போர்த் திட்டத்திற்கு பிரிட்டனும், பிரான்சும் முன்வராத காரணத்தால் தான், சோவியத் யூனியனும் ஜெர்மனியுடன் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது. அப்போது தான், செக்கோஸ்லாவாக்கியவை ஹிட்லர் ஆக்கிரமிப்பதற்கு பிரிட்டன் அனுமதித்திருந்தது. அன்றைய நிலையில் பிரிட்டனோ, பிரான்சோ ஸ்டாலினுடன் சேர்ந்து ஜெர்மனி மீது போர் தொடுக்க முன்வரவில்லை. இந்த தகவல்கள் யாவும் அண்மையில் பகிரங்கப்படுத்தப் பட்ட சோவியத் ஆவணங்களில் இருந்து தெரியவந்துள்ளது. இதுவரை காலமும், எமக்கு திரிபுபடுத்தப்பட்ட வரலாறே போதிக்கப்பட்டு வந்துள்ளது.

திருடப்பட்ட இந்து சமுத்திரத் தீவு - ஆவணப்படம்

"டியாகோ கார்சியா", இந்தியாவிற்கும் ஆப்பிரிக்க கண்டத்திற்கும் நடுவில் உள்ள சின்னஞ்சிறிய தீவு. பிரிட்டிஷ் காலனியான தீவுவாசிகள் ஆப்பிரிக்கா, அல்லது இந்தியாவில் இருந்து சென்று குடியேறியவர்கள். ஒரு நாள் திடீரென வந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் தீவுவாசிகளை இரவோடிரவாக வெளியேறச் சொன்னார்கள். அனைவரையும் கப்பலில் ஏற்றி மொரிசியசில் இறக்கினார்கள். டியோகோ கார்சியா, தீவு மக்களின் ஒப்புதல் இல்லாமலே அமெரிக்காவுக்கு விற்கப்பட்டது. நாடுகடத்தப்பட்ட டியாகொகார்சியா மக்கள் பெயரளவில் பிரிட்டிஷ் பிரஜைகளாக அங்கீகரிக்கப்பட்டனர். இருப்பினும் மொரிசியசில் வறுமையில் உழன்று, தற்கொலை செய்து கொண்ட அபலைகளுக்கு பிரிட்டிஷ் பாஸ்போர்ட் சோறு போடவில்லை.
இன்று அது அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவ தளங்களில் ஒன்று. அமெரிக்க இராணுவவீரர்களும், அவர்களது குடும்பங்களும் மட்டுமே தீவில் வசிக்கின்றனர். ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்புக்கு டியாகோ கார்சியா தளம் அளப்பெரிய பங்காற்றியுள்ளது.

Wednesday, November 25, 2009

ஆப்பிரிக்காவில் தமிழரின் வேர்கள்

ஆப்பிரிக்க கண்டம் பற்றிய எமது அறிவு மிகக் குறுகியது. பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் கற்பிக்கும் வரை, இந்து சமுத்திரத்திற்கு அப்பால் இருந்த பாரிய நிலப்பரப்பு எமது கண்ணிற்குப் புலப்படவில்லை. இன்றும் கூட ஆப்பிரிக்காவிற்கும் தமிழருக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். வெள்ளையினத்தவர்களும், சீனர்களும் தனித்தனியே தோன்றிய இனங்களாக கருதிக் கொள்வதைப் போல, திராவிடர் வரலாறும் தனித்துவமாக காட்டிக் கொள்கின்றது. அண்மையில் தான், சமூக விஞ்ஞானிகள் நீண்ட ஆராய்ச்சிக்குப் பின்னர், உலகின் அனைத்து இனங்களும் ஆப்பிரிக்க மூதாதையரைக் கொண்டிருப்பதை நிரூபித்தனர்.

தமிழரின் மூதாதையரை ஆப்பிரிக்காவில் தேடுவதா? சிலருக்கு இது அபத்தமாகப் படலாம். ஐரோப்பாவின் பழமை வாய்ந்த மொழியை பேசும் பாஸ்க் (ஸ்பெயின்) இனத்திற்கும், தமிழருக்கும் தொடர்பிருப்பதாக ஒரு தமிழறிஞர் "கண்டுபிடித்து" கட்டுரை வரைந்திருந்தார். தமிழர்கள் தொலைந்து போன யூத இனக்குழுக்களில் ஒன்று என்று நிறுவத் துடிக்கும் மேதாவிகளும் இருக்கின்றனர். இவையெல்லாம் பலருக்கு அபத்தமாக தோன்றுவதில்லை. அதற்குக் காரணம், ஒவ்வொரு பின்தங்கிய இனமும் தம்மை விட முன்னேற்றமடைந்த இனத்துக்கு நிகராக வர விரும்புகின்றன. உலகில் ஐரோப்பியர் வகிக்கும் மேலாண்மை பலருக்கு கடவுள் கொடுத்த வரமாகத் தெரிகின்றது. மேலாண்மை பெற ஐரோப்பியர் செய்த இனப்படுகொலைகள், கொள்ளைகள், பித்தலாட்டங்கள் என்பன பற்றி அறிந்தவர்கள் குறைவு.

எமது நாடுகளில் காலனிய காலத்தில் ஆதாயம் பெற்ற வர்க்கம் ஒன்று, பரம்பரை பரம்பரையாக விசுவாசம் காட்டத் தவறுவதில்லை. அரசியல் சித்தாந்தமும், அவர்கள் சார்ந்த வர்க்க நலன்களில் இருந்தே பிறக்கின்றது. இதனால் வளர்ச்சியடைந்த ஐரோப்பியருக்கும், நாகரீகமடையாத ஆப்பிரிக்கர்களுக்கும் நடுவில் தாம் நிற்பதாக ஒரு கற்பிதத்தை உருவாக்கிக் கொள்கின்றனர். பஞ்சமும், பிணியும் சூழ்ந்த இருண்ட கண்டமான ஆப்பிரிக்காவுடன் தம்மை இனம் காண யார் தான் விரும்புவர்? அதற்கு மாறாக செல்வச் செழிப்பு மிக்க அமெரிக்காவுடன் தம்மை இணைத்துக் கொள்ள போட்டி போடுகின்றனர். இந்த தாழ்வுச் சிக்கல் தமிழரை மட்டும் பாதிக்கவில்லை. அமெரிக்க கண்ட நாடுகளில் வாழும் ஆப்பிரிக்க வம்சாவழி கருப்பினத்தவரும், பசுபிக் பிராந்திய ஆதிவாசிகளும் தமது வேர்களை ஆப்பிரிகாவில் தேட விரும்புவதில்லை.

தமிழ் நாட்டில் வாழும் இருளர்கள், இலங்கையில் வாழும் வேடுவர்கள் ஆகியோர், இன்றும் ஆப்பிரிக்க அடையாளங்களை காவித் திரியும் ஆதிவாசி இனங்கள். இந்திய உபகண்டத்தில், ஆப்பிரிக்க ஆதிவாசிகள் வந்தேறு குடிகளுடன் கலந்து புதிய இனங்கள் உருவாகின என்ற வரலாற்று உண்மையை பலர் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. ஆயிரம் ஆண்டுகளாக தாம் இனத் தூய்மை பேணி வருவதாக, தமக்கு ஏற்றவாறு வரலாற்றை திருத்தி எழுதிக் கொள்கின்றனர். ஒரு காலத்தில் நில ஆதிக்கத்திற்காக இனக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட சச்சரவுகள், நாகரீகமடைந்த காலத்திலும் தொடர்கின்றன. கால்நடை மேய்த்த காலத்தில் இருந்து, கணணி வேலை செய்யும் காலம் வரை, மனிதன் தனக்குள்ளே பிரிவினைகளை வளர்த்துக் கொண்டே போகிறான்.

சாதி வேற்றுமைகள் இந்தியாவின் வளர்ச்சியை தடைப்படுத்தும், என்று பெரியார் தீர்க்கதரிசனத்துடன் கூறிச் சென்றார். ஆப்பிரிக்கா இனக்குரோதங்களை தீர்த்துக் கொள்ளாவிட்டால், சமூகப் புரட்சி இன்னும் நூறு வருடங்களுக்கு பின்தள்ளப்படும் என்று குறிப்பு எழுதிவைத்தார் சே குவேரா. இந்திய உப கண்டத்திற்கும், ஆப்பிரிக்க கண்டத்திற்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. சாதி அமைப்பு முறை இந்திய உபகண்டத்திற்கு மட்டுமே உரியது என்று பலர் தவறாக நினைத்துக் கொள்கிறனர். வர்ணாச்சிரம காலம் என்பது வேறு, சாதிகளின் மூலம் வேறு. ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டிருந்த பண்டைய இனங்கள், வெற்றி பெற்ற இனத்தின் அதிகார வலையத்திற்குள் வந்த போது சாதிகளாக உருமாறின. ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் இந்த சமூக மாற்றம் நடப்பதற்குள் ஐரோப்பியர் காலனிப்படுத்த தொடங்கி விட்டனர்.

சோமாலியா, மொரிட்டானியா, போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் இன்றும் சாதி அமைப்பு உள்ளது. இந்திய உபகண்டத்தில் நிலவும் அதே சாதி வேற்றுமை, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் கட்டிக் காக்கப்படுவது வியப்புக்குரியதாக தோன்றலாம். இந்தியாவில் ஆரியரின் வருகையும், சுதேசி இனங்களின் மீதான ஆதிக்கமும் சாதியத்தை நிறுவனப் படுத்தியது. அதே போல, அரேபியரின் வருகையுடன் தான், மொரிட்டானியா, சோமாலியா ஆகிய நாடுகளில் ஸ்தாபன மயப்பட்ட சாதியம் தோன்றியது. அரேபியரின் தாயகபூமியில் உள்ள ஏமனிலும் சாதி அமைப்பு உள்ளமை குறிப்பிடத் தக்கது. புதிய சமுதாய மாற்றம் வரும் போது, இனக்குழுக்கள் சாதிகளாக தொடர்கின்றன. ஆதிக்க இனத்தின் மொழியை சுவீகரித்த பின்னர் அவர்களது பாரம்பரிய வேர்கள் அழிகின்றன.

இந்தியாவில் நிலவும் சாதிப் பாகுபாட்டைப் பற்றி நான் ஐரோப்பியருக்கு விளக்கிய போது, அவர்களால் அதனை சரியாக கிரகித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் பல்வேறு ஆப்பிரிக்க நாட்டினருடன் உரையாடிய போது, அதிசயத்தக்க விதத்தில் பல ஒற்றுமைகளை கண்டுகொண்டேன். கிணற்றில் தண்ணீர் அள்ள உரிமையில்லாதது முதல், அகமண முறை வரை ஆப்பிரிக்க சமூகங்கள் இந்தியாவின் பிம்பமாக இருக்கின்றன. இன்றும் சில ஆப்பிரிக்க பகுதிகளில், ஒரு இனத்திற்கு(சாதிக்கு) சொந்தமான கிணற்றில் வேற்றினம் தண்ணீர் அள்ளிய குற்றத்திற்காக கொலைகள் நடக்கின்றன. சூடானின் டார்பூரில் நடந்த யுத்தம் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். ஆப்பிரிக்காவில் உள்ளதை இனம் என்றோ, குலம் என்றோ அல்லது வேறு எந்தப் பெயரிட்டு அழைத்தாலும், உள்நாட்டுப் பிரிவினை பல யுத்தங்களுக்கு வழி கோலியுள்ளதை மறுக்கமுடியாது.

இந்தியர்களும், ஆப்பிரிக்கர்களும் ஒரு காலத்திலும் முன்னேற முடியாது என்பதில் ஐரோப்பியர்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். அதற்கு காரணம், அவர்களுக்கிடையே இருக்கும் தீர்க்க முடியாத பிரச்சினைகள். ஐரோப்பாவிலும் இனக்குரோதங்களும், சாதிப் பிரிவினைகளும் ஒரு காலத்தில் இருந்து வந்துள்ளன. இன்று அவையெல்லாம் சரித்திரமாகி விட்டன. ஆப்பிரிக்காவில் இனங்களை ஒன்றோடொன்று மோத விடுவதில், ஐரோப்பியர்களின் பங்கு குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல. இடது கையால் அரசுக்கு உதவுவார்கள், வலது கையால் கிளர்ச்சிக் குழுவிற்கு உதவுவார்கள். அரசு ஒரு இனம் சார்ந்ததாகவும், யுத்த பிரபுக்கள் (அல்லது கிளர்ச்சியாளர்கள்) இன்னொரு இனம் சார்ந்தும் இருப்பதால் தான், அவர்களால் தொடர்ந்து யுத்தம் செய்ய முடிகிறது. சியாரா லியோன், லைபீரியா போன்ற நாடுகளில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர்களில் ஐரோப்பிய ஆயுத வியாபாரிகள் கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள். இந்த இரகசியங்கள் வெளியே வரும் போது, ஒரு சில தனியார் கம்பெனிகள் மட்டும் தண்டிக்கப்பட்டன.

ஆப்பிரிக்காவை பற்றி சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றன. இருப்பினும் "ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா" என்ற கட்டுரைத் தொடர் இத்துடன் முடிவுறுகின்றது.



ஆப்பிரிக்க தொடர் கட்டுரைகள்:
12.அங்கோலாவின் அலங்கோலம் : பனிப்போரின் பதிலிப் போர்
11.நைல் நதி: ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு
10.லைபீரியா: ஐக்கிய அடிமைகளின் குடியரசு
9. சிம்பாப்வே: வெள்ளையனே வெளியேறு!
8. கறுப்பினப் பேரழகியின் கிறிஸ்தவ சாம்ராஜ்யம்
7. அகில ஆப்பிரிக்க ஆட்சிக்கவிழ்ப்பு நிறுவனம் (LTD)
6. ஐவரி கோஸ்ட்: சாக்லெட்டின் தாயகம் !
5. நைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் !
4. கறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள்
3. ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை
2. காங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம்
1. ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 1

Tuesday, November 24, 2009

லிதுவேனியாவில் இரகசிய சி.ஐ.ஏ. சித்திரவதை முகாம்

முன்னாள் சோவியத் குடியரசான லிதுவேனியாவில் சி.ஐ.ஏ. நிர்வகுக்கும் இரகசிய சித்திரவதை முகாம் இருப்பது ஊடகங்களின் கவனத்திற்கு வந்துள்ளது. லிதுவேனியா தலைநகர் வில்னியசில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு குதிரை ரேஸ் மைதானம். உள்ளது. அதனருகில் உயர்ந்த கொங்கிரீட் சுவர்களால் மூடப்பட்ட ரகசிய சிறைச்சாலை ஒன்றுள்ளது. அந்த சிறைமுகாமினுள் சி.ஐ.ஏ. அதிகாரிகளால் அல் கைதா சந்தேகநபர்கள் சித்திரவதை செய்யப்படுகின்றனர். 2004 ம் ஆண்டு ஜோர்ஜ் புஷ் லிதுவேனியாவிற்கு விஜயம் செய்த போது, ரகசிய சிறைமுகாமுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு பதில் உபகாரமாக லிதுவேனியா தன்னை நேட்டோ கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

அமெரிக்க தூதுவர் பதவி விற்பனைக்கு

கடந்த ஜனாதிபதி தேர்தலில், அமெரிக்க வரலாற்றிலேயே அதிகளவு பணம் தண்ணீராக இறைக்கப்பட்டது. ஒபாமாவின் தேர்தல் பிரச்சார செலவுகளுக்கு லட்சக்கணக்கான டாலர்களை அள்ளிக்கொடுத்த செல்வந்தர்கள் பலருக்கு தூதுவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருப்பது பணநாயகம் என்பதை நிரூபிக்கும் செய்தி அறிக்கை.

Monday, November 23, 2009

Exclusive video: இந்தியாவில் மாவோயிஸ்ட் அரசு நிர்வாகம்

இந்தியாவில் மாவோயிஸ்ட்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் அன்றாட அரசியல் வாழ்க்கையை காட்டும் ஆவணப்படம். மக்களுக்கான இலவச மருத்துவமனை, நூலக வசதிகள் கொண்ட "கம்யூன்" விடுதலைப் பிரதேசங்கள். முகாம்களில் போராளிகளின் அணிவகுப்பு, அரசியல்மயப்படுத்தப்படும் மக்கள், இன்ன பிற. இதுவரை வெளிவராத தகவல்கள்.

Rising Maoists Insurgency in India
Part 1


Part 2


Part 3


Part 4


Part 5


Part 6

Sunday, November 22, 2009

இந்திய-சீன எல்லைத் தகராறு வலுக்கிறது

இதுவரை தீர்மானிக்கப்படாத காஷ்மீர் மாநிலத்தின் சீன எல்லைக்கோடு கிளப்பும் பிரச்சினைகள். எல்லைப்புற லடாக் பிரதேசத்தில் இருந்து அல் ஜசீராவின் பிரத்தியேக செய்தியாளர் அனுப்பிய குறிப்புகள்.

"பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்" - ஆவணப்படம்

பெரு வை சேர்ந்த மாவோயிச புரட்சி அமைப்பான "ஒளிரும் பாதை" ஆதரவாளர்கள் தயாரித்த "பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்" ஆவணப்படத்திற்கான சுட்டிகள்:

பகுதி 1
பகுதி 2
பகுதி 3


சர்வதேச புரட்சிக்கு வழிகாட்டும் ஒளிரும் பாதை வீடியோ.

Saturday, November 21, 2009

வீடியோ: சிறுவர்களை அடிக்கும் பிரிட்டிஷ் காட்டுமிராண்டிப் படை

ஈராக் கைதிகளை சித்திரவதை செய்து கொடுமைப்படுத்துவதில், பிரிட்டிஷ் படையினரும் சளைத்தவர்களல்ல. ஈராக்கில் 2004 ம் ஆண்டுக்கு பின்னர் பிரிட்டிஷ் இராணுவத்தால் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வருகின்றன. ஈராக் மனித உரிமைகள் ஆர்வலர் மாசின் யூனிஸ், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசி, பல சம்பவங்களை தொகுத்துள்ளார். அவரது அறிக்கையிலிருந்து, பிரிட்டிஷ் இராணுவ வீரர்கள் பல காமக் கொடூரங்களை புரிந்துள்ளமை தெரியவந்துள்ளது. கைதிகள் பிரார்த்தனையில் இருக்கும் நேரம் பார்த்து, செக்ஸ் வீடியோக்களை சத்தமாகப் போடுதல். கைதிகளின் குளியலறைக்கு செல்லும் பெண் இராணுவவீரர்கள் உடைகளை அவிழ்த்துக் காட்டுதல். கைதிகளை நிர்வாணமாக்கி படம் பிடித்தல். இது போன்ற பல சம்பவங்கள் இன்னும் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றன. ஒரு பிரிட்டிஷ் வீராங்கனை, அப்போது தான் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் படுத்திருந்த கைதியுடன் உடலுறவு கொள்ள எத்தனித்தார். MOD examines Iraq abuse claims

இங்கே இணைக்கப்பட்ட வீடியோ பிரிட்டிஷ் இராணுவ முகாமில் எடுக்கப்பட்டது. முகாம் அருகில் ஓடும் சிறுவர்களை விரட்டிப் பிடிக்கும் படையினர், அவர்களை அடித்து துவைக்கின்றனர். நிராயுதபாணிகளான அப்பாவி சிறுவர்களை சித்திரவதை செய்வதை, பார்த்து ரசித்துக் கொண்டிருந்த இன்னொரு இராணுவவீரர் இந்த வீடியோவை எடுத்துள்ளார். அதிர்ச்சி தரும் இந்த காட்சியை படம் பிடித்த படைவீரனின் வசைபாடலும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

The horrifying scenes on these pages will shock the world and ignite a huge military scandal.

They were captured on a secret home video — apparently filmed for "fun" by a corporal—and show at least eight of his hulking comrades cruelly:

DRAGGING four weedy rioters—all apparently in their early teens—off the street and behind the high walls of a secluded army compound,

BEATING them senseless with vicious blows from batons, boots and fists,

IGNORING their pitiful pleas for mercy, until the incident climaxes with what appears to be an NCO delivering a sickening full-force kick in the genitals of a cringeing lad pinned to the ground.

All the while the callous cameraman delivers a stomach-churning commentary urging his mates on, cackling with laughter and screaming: "Oh yes! Oh yes! You're gonna get it. Yes, naughty little boys! You little f***ers, you little f***ers. DIE! Ha, ha!"

இந்த ஏழைகள் வாழ்வது அவுஸ்திரேலியாவில்

"வெறும் பாலைவனக் கட்டாந்தரையில் பாய் போட்டு படுக்கும் இடத்திற்காக அரசாங்கத்திற்கு வாடகை கொடுக்கிறோம்." Elise என்ற பெண்மணி தன்னைக் காண வந்த சர்வதேச மன்னிப்புசபை செயலதிபரிடம் கூறியவை. The unheard truth in the heart of Australia
முதலாம் உலகம் என்று அழைக்கப்படும் பணக்கார நாடான அவுஸ்திரேலியாவில், "Utopia" என்ற பெயரிலான பூர்வீக குடிகளுக்கான பிரதேசம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு வாழும் "அபோரிஜன்" என்றழைக்கப்படும் அவுஸ்திரேலிய குடிமக்கள் சேரிகளில் அவள் வாழ்க்கை வாழ்கின்றனர். "அவுஸ்திரேலியாவிலும் ஒரு மூன்றாம் உலகம்" இருப்பதை கண்டதாக அண்மையில் உதொப்பியாவிற்கு விஜயம் செய்த சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலதிபர் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவில் இன்றும் இனரீதியிலான பாகுபாடு காட்டப்படுகின்றது. பெரும்பான்மை அபோரிஜின் மக்கள் நிரந்தர வறுமைக்குள் வாழ்கின்றனர். இங்குள்ள புகைப்படங்களிலும், வீடியோவிலும் நீங்கள் பார்ப்பது சோமாலியாவோ, எத்தியோப்பியாவோ அல்ல. அவுஸ்திரேலியா என்ற சொர்க்கம்.

Friday, November 20, 2009

சரத் பொன்சேகாவும் ஜனாதிபதி தேர்தலும், சில பின்னணித் தகவல்கள்



தமிழகத் தமிழ் தேசிய அரசியல் தலைவர்களை கோமாளிகள் என்று இகழ்ந்தவர், இன்று தானே கோமாளியாகி நிற்கிறார். இலங்கையில் புலிகளை அழிக்கும் இறுதிப்போரை தொடங்கி, கூடவே கணிசமான தமிழ் மக்களை அழித்த, சரத் பொன்சேகா என்ற முன்னாள் இராணுவத் தளபதியை தான் சொல்கிறேன். உலகம் எப்படி கணித்திருந்தாலும், சிங்கள மக்கள் சரத் பொன்சேகாவை ஒரு மாபெரும் வீரனாக பார்த்தார்கள். யாரும் வெல்ல முடியாத போரில் தமிழரை அடக்கி வெற்றிவாகை சூடிய மகிந்த மகாராஜாவின், தானைப் படைத்தளபதியின் புகழ் பட்டிதொட்டியெங்கும் பரவி இருந்தது. நாடெங்கும் முக்கிய நகரங்களில் தென்னை மர உயர கட்-அவுட்களில் சரத், மகிந்தவுடன் சிரித்துக் கொண்டிருந்தார். ரஜனி ரசிகர்கள் போல பாலபிஷேகம் செய்யாதது மட்டுமே பாக்கி. அநேகமான கட்-அவுட்கள், போஸ்டர்களில் இவர்களுடன் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷவும் மும்மூர்த்திகளாக காணப்பட்டனர். சரத் பொன்சேகா தளபதி பதவியை ராஜினாமா செய்து விட்டு, ராஜபக்ஷ சகோதரர்களுக்கு எதிராக அரசியலில் குதிப்பதாக அறிவித்தார். உடனே நாடெங்கிலும் இருந்த போஸ்டர்களில் சரத் பொன்சேகாவின் படம் கிழித்தெறியப்பட்டது. கதாநாயகன் நகைச்சுவை நடிகராக மாறிய கதை இது.

புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலகியதைப் போல, ராஜபக்ஷ அரச இயந்திரத்தில் இருந்து சரத் பொன்சேகா ராஜினாமா செய்ததும் பலத்த அதிர்வலைகளை தோற்றுவித்தது. பலர் வெளிப்படையாகவே அவரை தேசத்துரோகியாக வசை பாட ஆரம்பித்தனர். சிங்கள தேசியத்தின் காவலர்களாக தம்மை கருதிக் கொள்ளும் பிக்குமார் சங்கம் ஒன்றும், சரத் தனது முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என நிர்ப்பந்தித்தது. போர் முடிந்த பின்னர் சில காலமாகவே ஜனாதிபதிக்கும், இராணுவ தளபதிக்கும் இடையில் பிரச்சினை என்று அரசல்புரசலாக கதைகள் வந்தன. அப்போது இருவரும் "வதந்திகளை நம்ப வேண்டாம்" என கேட்டுக்கொண்டனர். "கிரீன் கார்ட்" வைத்திருந்த சரத், அமெரிக்கா பயணமான போது விரிசல் வெளித்தெரிய ஆரம்பித்தது. சரத் பொன்சேகாவின் இரண்டு மகள்மார் அமெரிக்காவில் வசிப்பதும், கிரீன் கார்ட் புதுப்பிக்கப்பட வேண்டியிருந்ததும் அவரது தனிப்பட்ட விஷயங்கள் தான். இருப்பினும் இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் பற்றி துப்புத்துலக்கிக் கொண்டிருந்த அமெரிக்கா, சரத் பொன்சேகாவுடன் பேச வேண்டும் என கூட்டிச் சென்றது தேநீர் விருந்துக்காக என்று கருத முடியாது.

சரத் பொன்சேகாவுடன் என்ன பேசப்பட்டது என்பதைக் கூற அமெரிக்க அரசு மறுத்து விட்டது. கவனிக்கவும், போர்க்குற்றங்களில் நேரடியாக பங்கெடுத்த சரத் விசாரணைக்கு அழைத்து சென்றதாக தகவல் இல்லை. ஆனால் சரத் மீது நீதி விசாரணை வரும் என அஞ்சிய இலங்கை அரசு, இராஜ தந்திர அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தது. இலங்கை அரசிற்கு சரத் மீதான தனிப்பட்ட அக்கறை என்று இதனைக் கொள்ள முடியாது. போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையில், சரத் அப்ரூவராக மாறி, ராஜபக்ஷ சகோதரர்களுக்கு எதிராக சாட்சியம் சொல்லலாம் என ஊடகங்கள் ஊகங்களை கிளப்பின. அமெரிக்காவில் புலம்பெயர் தமிழர் அமைப்பொன்று சரத் பொன்சேகாவை நீதிமன்றத்திற்கு இழுக்க காத்திருந்தது. சரத் விஜயம் செய்வதற்கு சில தினங்களுக்கு முன்னர் தான், அமெரிக்க இராஜாங்க அமைச்சின் இலங்கை பற்றிய அறிக்கை வெளியானது. அதில் நடந்து முடிந்த போரில் தாரளமாக மனித உரிமைகளை மீறியதாக இலங்கை அரசை (கூடவே புலிகளையும் தான்) கடுமையாக குற்றம் சுமத்தியிருந்தது.

அமெரிக்க அரசு, இலங்கை அரசை நீதி மன்றத்திற்கு இழுக்கவோ, விசாரணையில் சரத் பொன்சேகாவை ஆஜர் படுத்தவோ எண்ணியிருக்கவில்லை. அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தான், ஐ.நா.சபையின் வருடாந்த கூட்டத் தொடரில் கலந்து கொள்ள கோத்தபாய ராஜபக்ஷ நியூ யார்க் சென்றிருந்தார். அமெரிக்க அரசு நினைத்திருந்தால் பாதுகாப்பு அமைச்சரை அப்போதே கைது செய்திருக்க முடியும். சரத் பொன்சேகாவை தூண்டிலில் மாட்டி, கோத்தபாயவை பிடிக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. இதற்கிடையே எந்த விசாரணையும் நடக்காமல் சரத் நாடு திரும்பினார். வந்தவுடன் முதல் வேலையாக ஜனாதிபதியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார். இராணுவ சீருடையை களைந்து, சிவில் உடையை மாட்டிக் கொண்டார். சரத் அரசியலுக்கு வருவது ஊர்ஜிதமான அந்தக் கணத்தில் இருந்து, ஊடகங்களுக்கு சரியான தீனி கிடைத்து விட்டது. வருங்கால ஜனாதிபதி சரத் பொன்சேகாவை வரவேற்கத் தொடங்கி விட்டன. ஆச்சரியப்படத் தக்கவாறு, சில தமிழ் ஊடகங்களும் இந்த கோரஸில் சேர்ந்து விட்டன. யு.என்.பி., மற்றும் பல சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவுடன் சரத் பொன்சேகா ஜனாதிபதியாவார் என விகடன் குழுமம் ஆரூடம் கூறியது. இலங்கைக்கு வெளியேயுள்ள "தமிழ் தேசிய" ஊடகங்களின் செய்தி கூறல், சரத் பொன்சேகாவின் வெற்றியை எதிர்பார்ப்பதாகவே அமைந்துள்ளது.

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தற்போது பொதுவான நிலைப்பாட்டில் உள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்ஷவும், சரத் பொன்சேகாவும் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் ஒன்று தான். எரியும் கொள்ளியில் எது நல்ல கொள்ளி என கேட்பது போல, இருவரையும் தமிழரை அழிக்கவும் தயங்காத பேரினவாதிகளாகவே பார்க்கின்றனர். வன்னிப் போரில் கொல்லப்பட்ட மக்களும், முகாம்களில் அகதிகளாக வாழும் எஞ்சிய மக்களும் வட-கிழக்கு மாகாணங்களில் உறவினர்களை கொண்டுள்ளனர். அன்புக்குரியவரின் இழப்பு, அதனால் ஏற்படும் அரசின் மேலான வெறுப்பு என்பன எதிர்பார்க்கக் கூடியதே. போர் ஏற்படுத்திய வடுக்களால் சிங்கள ஆட்சியாளர் மீது வன்மம் கொண்ட மக்கள் இனியும் இருப்பர். அதனால் தான் ராஜபக்ஷ, பொன்சேகாவிற்கு இடையிலான போட்டி, சிங்கள மக்களின் பிரச்சினையாக கருதப்படுகின்றது. இருப்பினும் வட-கிழக்கு நிலைமை கருப்பு-வெள்ளையாக பார்க்கக் கூடியவாறு இலகுவான ஒன்றல்ல. வடக்கில் ஈ.பி.டி.பி. ஆதரவாளர்கள், கிழக்கில் TVMP அல்லது கருணா ஆதரவாளர்கள், தேர்தலில் ராஜபக்ஷக்கு வாக்களிப்பார்கள். இதைவிட கணிசமான நடுநிலை வாக்காளர்கள் தேர்தலை பகிஷ்கரிக்கக் கூடும்.

ஆனால் சரத் பொன்சேகாவிற்கு தமிழர் வாக்குகள் விழுமா? சாத்தியமுண்டு. கொழும்பிலும், வடக்கிலும் வாழும் தமிழ் நடுத்தர வர்க்க வாக்காளர்கள், யு.என்.பி.யை "தமிழர் நண்பனாக" பார்க்கின்றனர். (யு.என்.பி.யும் அவ்வப்போது தமிழரை தாஜா பண்ண தயங்குவதில்லை.) அதே நேரம், தமிழ் தேசிய அரசியலை கொண்டவர்கள் இறுதிக்கட்டத்தில் யு.என்.பி.க்கு வாக்களிக்கலாம். சரத் பொன்சேகா அந்த வாக்கு வங்கியை பயன்படுத்தும் சாத்தியம் இருப்பதை சமீபத்திய மாற்றங்கள் எடுத்துக் காட்டுகின்றன. மனோ கணேசனின் மேல் மாகாண மக்கள் (கொழும்புத் தமிழர்) முன்னணி ஏற்கனவே யு.என்.பி.க்கு தனது ஆதரவை தெரிவித்து விட்டது. (உண்மையில் அந்தக் கட்சியின் கடந்த கால செயற்பாடுகள் யாவும், யு.என்.பி.யின் தமிழ் பிரிவு போன்றே அமைந்துள்ளது.) தென்னிலங்கை முஸ்லிம் வணிக சமூகத்தின் பிரதிநிதிகளான முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிப்பது உறுதியாகி விட்டது. தமிழ் தேசியக் கூட்டணியை, யு.என்.பி தலைமையிலான கூட்டணியில் சேர்ப்பதற்கு, முஸ்லிம் காங்கிரஸ் தூது போகின்றது. தமிழ் தேசியக் கூட்டணி மதில் மேல் பூனையாக காத்திருக்கிறது. கட்சிக்குள் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்றும், எதிர்ப்பது என்றும் இரண்டு பிரிவுகள் தோன்றி விட்டன. இத்தனைக்கும் மத்தியில் இனவழிப்புப் போரை தலமையேற்று நடத்திய சரத் பொன்சேகாவின் பாத்திரத்தை மறக்க விரும்புகிறார்கள். தமிழ் தேசிய கொள்கையை காற்றிலே பறக்க விட்டு, வர்க்க பாசத்துடன் யு.என்.பி.யை தழுவிக் கொள்கின்றனர். தமிழரசுக் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து, இது அடிக்கடி நடக்கும் கூத்து தான். "அரசியலில் நிரந்தர நண்பனோ, எதிரியோ கிடையாது" என மாக்கியவல்லி மீண்டும் விளக்கம் கொடுக்கலாம்.

இலங்கை இராணுவ வரலாற்றில், இராணுவ தளபதிகள் அரசியல் கருத்துக்களை கூறுவது மிக அரிது. பொதுவாக இராணுவம் பாராளுமன்ற அரசுக்கு கட்டுப்பட்ட, கீழ்ப்படிவான பாத்திரத்தையே ஏற்றிருந்தது. போரை தொடருவதா, முடிப்பதா என்பதை கூட பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுகளுக்கு அமைவாகவே செயற்படுத்தி வந்தது. ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவான நாளில் இருந்து, அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்களிடையே மாற்றம் காணப்பட்டது. பாகிஸ்தானில், அல்லது துருக்கியில் உள்ளதைப் போல இராணுவத்திற்கு கூடுதல் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்குப் பின்னர் நடந்தவைகள் அனைவருக்கும் தெரிந்த வரலாறு. தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க கூடிய அதிகாரம் பெற்ற இராணுவம், வாகரை தொடங்கி முள்ளிவாய்க்கால் துரித பாய்ச்சலில் முன்னேறியது. புஷ்ஷின் தத்துவமான "ஈடு செய்யப்படக் கூடிய இழப்பு" போன்ற வார்த்தை ஜாலங்களால், புலிகளோடு ஒரு பகுதி தமிழரையும் அழித்து முடித்தது. "யுத்தம் நீடிக்குமானால் இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மரணிப்பார்கள். அதற்காக பத்தாயிரம் பேரை பலி கொடுத்து யுத்தத்தை முடிப்பது தவறல்ல." இவ்வாறு ஒரு அமெரிக்க பத்தி எழுத்தாளர் ஹெரால்ட் ட்ரிபியூன் பத்திரிகையில் தத்துவ விளக்கம் அளித்தார்.

இதிலே கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், 35 வருட கால புலிகளின் ஆயுதப் போராட்டம் தீர்மானகரமான முடிவுக்கு வருகிறது என்பது அமெரிக்காவுக்கு தெரிந்திருந்தது. அமெரிக்க அரசு, ஈராக்கில் சதாம் ஹுசையின் ஆட்சியை அகற்றுவதற்கு ஆயிரக்கணக்கான மக்களை பலி கொண்டது. இலங்கையில் இறுதி யுத்தத்தில் இரத்தக்களரி ஏற்படும் என்றோ, அங்கே இனப்படுகொலைக்கான சாத்தியம் உள்ளது என்றோ, அறியாத அப்பாவிகள் அல்ல அமெரிக்க அதிகாரிகள். அமெரிக்கா, தமிழின அழிப்பு போரை முன்னெடுக்கும் இலங்கை இராணுவத்திற்கு தடையேதும் போடாது வாளாவிருந்தது. இலங்கை அரசுக்கு அமெரிக்க ஆசீர்வாதம் கிடைத்திருந்தது என்பது இதன் அர்த்தம் அல்ல. ஈராக்கில் சதாம் ஹுசையின் குர்து, ஷியா இன அழிப்பு, யூகோஸ்லேவியாவில் மிலோசோவிச்சின் போஸ்னியர், கொசொவர் இன அழிப்பு எல்லாமே அமெரிக்காவுக்கு தெரியாமல் நடக்கவில்லை. அப்படி ஏதாவது நடக்க வேண்டும் என்பது தான் அமெரிக்காவின் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த நாடுகளில் சர்வ வல்லமை படைத்த சர்வாதிகாரிகளை அகற்றவும், அதற்குப் பின்னர் முழுமையான காலனியாதிக்கத்திற்கும், "இனப்படுகொலை தொடர்பான நீதி விசாரணை" உதவியிருக்கிறது.

இந்த இடத்தில் தான் இனவழிப்பு செய்த போர்க்குற்றவாளியான சரத் பொன்சேகாவை யு.என்.பி. ஆதரிக்க காரணம் என்ன என்ற கேள்வி எழுகின்றது. "தமிழர்களின் நண்பன்" யு.என்.பி., சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் இறக்கவிருக்கிறது. அது தனது கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஒதுக்கி விட்டு, இந்த தெரிவை செய்துள்ளது. மகிந்த ராஜபக்ஷவாவது தன்னை ஒரு இலங்கை தேசியவாதி என வெளியுலகிற்கு காட்டிக் கொண்டார். அனால் சரத் பொன்சேகாவோ "இது சிங்களவர்களின் தேசம்" என்று அப்பட்டமான பேரினவாதியாக காட்டிக் கொண்டவர். இருப்பினும் யு.என்.பி.க்கு சரத் பொன்சேகாவை நன்றாக பிடித்து விட்டது.

மகிந்த பதவிக்கு வந்த உடனே, எதிர்க்கட்சியான யு.என்.பி.யை உடைத்து, கட்சி தாவியவர்களுக்கெல்லாம் அமைச்சர் பதவி கொடுத்தது வந்தார். அதே நேரம், சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில், "ரணிலின் அரசு புலிகள் விரும்பியதை கொடுத்துக் கொண்டிருந்தது" போன்ற தகவல்கள் பிரச்சாரப்படுத்தப்பட்டன. இத்தகைய இருமுனைத் தாக்குதல்களால் துவண்டு போன யு.என்.பி. ரணிலின் கையாலாகாத தலைமையை கேள்விக்குள்ளாக்கியது. போரில் வென்றால், மகிந்தவின் புகழ் வானுயர உயருமென்று ரணில் விசுவாசிகளுக்கும் தெரியும். இத்தகைய பின்னடைவுகளால், போர்க்கால கதாநாயகனான சரத் பொன்சேகாவை கண்டு ஆனந்தித்ததில் வியப்பில்லை. இன்று பலரையும் குடையும் கேள்வி; சரத் பொன்சேகா ரணிலை பயன்படுத்துகிறாரா? அல்லது ரணில் சரத் பொன்சேகாவை பயன்படுத்துகிறாரா? இருவரும் ஒருவரில் மற்றவர் தங்கியிருப்பதை மறுக்க முடியாது.

அரசியலில் குதிக்கும் போது, ஆதரிக்க தொண்டர்கள் இல்லாத சரத் பொன்சேகா, யு.என்.பி. ஆட்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் சிறுபான்மையினத்தவர் வாக்குகளை எடுத்து தரும் வேலையை யு.என்.பி. பார்த்துக் கொள்ளும். அது சரி. சரத் பொன்சேகாவால் ரணிலுக்கோ, அல்லது யு.என்.பி.க்கோ என்ன நன்மை? நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை அகற்றப் போவதாக யு.என்.பி. சூளுரைத்து வருகின்றது. ஜனாதிபதியாக தெரிவாகும் சரத் பொன்சேகா, ஆறு மாதங்கள் மட்டுமே ஜனாதிபதி பதவியில் இருப்பாராம். அதற்குப் பிறகு, நாட்டின் தலைவர் பிரதமர் என்று, யாப்பு திருத்தி எழுதப்படும். அதாவது ரணிலை பிரதமராகக் கொண்ட பாராளுமன்றத்தின் கைகளில் அதிகாரத்தை ஒப்படைத்து விட்டு, சரத் பொன்சேகா ஒதுங்கி விடுவாராம். நினைத்தபடி ஆட்டுவிக்க சரத் பொன்சேகா ஒரு பொம்மை என கருதி விட்டார்கள் போலும். 

இந்த களேபரங்களுக்கு நடுவில், பின்னணியில் இருந்து ஊக்குவிக்கும் சக்திகள் பலர் கண்களுக்கு தெரிவதில்லை. இந்தியாவைப் போல, இலங்கையிலும் சாதி, வர்க்க அரசியல் இன்றுவரை கோலோச்சுகின்றது. தென்-மேற்கு மாகாணங்களில் ஆதிக்கம் செலுத்தும் கரவ சாதியை சேர்ந்த சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் தற்செயலானதல்ல. கரவ சமூகம், பிரிட்டிஷ் காலத்தில் இருந்து, மேலை நாட்டு மோகம் கொண்ட முதலாளித்துவ நலன்விரும்பிகளாவர். அத்தகைய பின்புலத்தை கொண்ட ஒருவரை, மேற்குலக சார்பு லிபரல் யு.என்.பி. அணைத்துக் கொண்டதில் வியப்பில்லை. சிங்கள சாதிய சமூகத்தில் பெரும்பான்மையாகவும், மேல்நிலையிலும் உள்ள கொவிகம (தமிழரில்: வெள்ளாளர்கள்), கரவ (தமிழரில்: கரையார்) சாதியினரை சேர்ந்தவர்களே, இலங்கை அரசியலிலும், பொருளாதாரத்திலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். சரத் - யு.என்.பி. கூட்டு, இந்த ஆதிக்க அரசியலை நிலை நாட்ட எடுக்கும் முயற்சியாகும். அனேகமாக அத்தகைய சமூகப் பின்னணி, சர்வாதிகார ஆட்சியமைக்க உறுதுணையாக இருக்கும். அப்படி அமையின், சிங்கள ஆதிக்கம் தமிழர் மத்தியில் இன்னும் ஆழமாக ஊடுருவும். மலேசியாவில் இருப்பதைப் போல, "சிங்களவர்களே மண்ணின் மைந்தர்கள், அனைத்து துறைகளிலும் அவர்களுக்கே முன்னுரிமை" என்பது சட்டமாக்கப்படலாம்.

போர் முடிவடைந்து மாதக் கணக்கு கூட ஆகாத நிலையில், இராணுவத்தின் பலத்தை இரு மடங்காக்க வேண்டும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இராணுவம் என்ற மிருகத்திற்கு, இன்னுமின்னும் தீனி போட்டு வளர்ப்பதற்கான அந்த திட்டத்தை முன்மொழிந்தவர் சரத் பொன்சேகா. அதே நேரம், வட மாகாண இராணுவ முகாம்களில் கடமையாற்றும் (சிங்கள) படையினரின் குடும்பங்களை குடியேற்றும் யோசனையும் அவருடையது தான். துருக்கியில் ஏற்கனவே இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. குர்திய சிறுபான்மையின மக்கள் செறிவாக வாழும் பிரதேசத்தின் முக்கிய நகரங்களின் சனத்தொகையில், துருக்கியரின் விகிதாசாரம் அதிகம். துருக்கி இராணுவவீரர்களும், அவர்களது குடும்பத்தினருமே அங்கு சனத்தொகை பரம்பலை மாற்றியமைத்தவர்கள். துருக்கியில் நடந்ததைப் போல, கணிசமான வடக்கு தமிழர்கள் தென்னிலங்கையில் குடியேற்றப்படலாம். தென்னிலங்கையில் உள்ள அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வளிக்கும் முகாமில், ஆயிரக்கணக்கான முன்னாள் புலிப் போராளிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிங்கள மொழி, தொழிற்கல்வி என்பன கற்பிக்கப்படுகின்றன. இவர்கள் விடுதலை செய்யப்படும் நேரம், கொழும்பு அல்லது பிற தென்னிலங்கை நகரங்களில் குடும்பத்துடன் தங்கிவிடுமாறு ஊக்குவிக்கப் படுகின்றனர். பல இளைஞர்கள் கொரியா போன்ற நாடுகளில் தொழில் வாய்ப்பு பெற்று சென்றுள்ளனர். வட இலங்கை பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நிலையில், பலர் இந்த பொறிக்குள் மாட்டிக் கொள்ள இடமுண்டு. எதிர்பார்த்த படியே, மேற்குலக நாடுகள் புனர்வாழ்வுத் திட்டத்திற்கு ஆதரவாக உள்ளன. வருங்காலத்தில் சரத்பொன்சேகா-யு.என்.பி. சர்வாதிகாரம் நிலைநாட்டப்பட்டால், ஈழம் என்ற தாயகப் பிரதேசத்தில் தமிழர்கள் சிறுபான்மையாக்கப்படுவர். உலகமயமாக்கல் என்ற பெயரில், மேற்குலகின் நிபுணத்துவத்தோடு அது நடைபெறும்.

ராஜபக்ஷ சகோதரர்களுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான பனிப்போர், வன்னியில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே ஆரம்பமாகிவிட்டதாக கருதப்படுகின்றது. மகிந்தவின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சருமான கோத்தபாய ராஜபக்ஷவும், சரத் பொன்சேகாவும் ஒன்றாக இராணுவத்தில் பணியாற்றியவர்கள். 1987 ம் ஆண்டு, வடமராட்சி "ஒப்பரேஷன் லிபரேஷன்" இராணுவ நடவடிக்கையில் இருவரும் பங்குபற்றியவர்கள். இராணுவத்தில் சிரேஷ்ட அதிகாரியான சரத் பொன்சேகா கேணல் தரத்திலும், கோத்தபாய அதற்கு கீழான லெப்டினன்ட் கேணல் தரத்திலும் கடமையாற்றியுள்ளனர். மகிந்த ஜனாதிபதியான பிற்காலத்தில், கோத்தபாய பாதுகாப்பு அமைச்சராக்கப்பட்டார். சரத் இராணுவ தளபதியாக பதவி உயர்வு பெற்ற போதிலும், பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டிய நிலை உருவானது. இதனால் தாழ்வுச் சிக்கலுக்கு உள்ளான சரத், தனது மனஸ்தாபத்தை நண்பர்களுடன் பகிர்ந்திருக்கிறார். எப்படியோ நக்கல், நையாண்டி கதைகள் எல்லாம் கோத்தபாய காதுகளுக்கு எட்டின. கோத்தபாய போர் முடியும் வரை பொறுமையாக இருந்திருக்கலாம். இந்தக் காரணத்தோடு, இராணுவம் ஈட்டிய வெற்றிகளால் சரத், தனக்கு மேலே வளர்ந்து விடுவாரோ என்ற அச்சம், ஜனாதிபதி மகிந்தவிற்கு தோன்றியிருக்கலாம். போர் முடிந்த பின்னர், முக்கியமில்லாத அமைச்சர் பதவியை கொடுத்து சரத்தின் "செருக்கை" அடக்க நினைத்திருக்கலாம்.

போரின் இறுதி நாட்களில் நடந்த சம்பவம் ஒன்று எரியும் நெருப்பில் எண்ணை வார்த்தது. முள்ளிவாய்க்காலில் புலிகள் இயக்க தலைவர்கள் அனைவரும் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்ட தினங்களில், மகிந்த ஜோர்டானில் நடந்த மகாநாட்டிற்கு சென்றிருந்தார். மே 16 ம் திகதி, புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக மகிந்தவுக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் மகிந்த நாடு திரும்பிய பின்னர், மே 18 அல்லது 19 ம் திகதியே பிரபாகரன் கொல்லப்பட்டது உறுதியானது. இதனால் இந்த சம்பவத்தை ஜனாதிபதி அறிவிக்க முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டது. இறுதியில் அந்த வராலற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை அறிவித்தவர் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா. அதாவது ஒரேயொரு அறிவிப்பால் மகிந்தவை ஓரங்கட்டிய சரத், (சிங்களவர் மத்தியில்) தனது புகழை உயர்த்திக் கொண்டார். வெகுஜன தளத்தில், சரத் புகழ் பாடும் பாடல்கள், எல்லாளனை வென்ற துட்டகைமுனுவோடு ஒப்பிடும் ஓவியங்கள் என்பன சிங்கள மக்கள் மத்தியில் பிரபலமாகின. ராஜபக்ஷ சகோதரர்கள் இவற்றை எல்லாம் வயிற்றெரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம்.

சரத் பொன்சேகா இராணுவ கண்ணோட்டத்தில் மட்டுமே சிந்திக்க பழகியவர். கிழக்கு மாகாணத்தில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை கைப்பற்றிய வெற்றிச் செய்தியை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. தேர்தல்கள் போன்ற அரசியல் லாபங்களுக்காக இராணுவ செய்திகளை மட்டுப்படுத்தும் செயலை, சரத் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசியல்வாதிகள் "குறுகிய நலன் கருதிகள், நேர்மையற்றவர்கள், நாட்டை பாழாக்குபவர்கள்" போன்ற கருத்துகளையே சரத் கொண்டிருந்தார். யு.என்.பி. தொண்டர்கள், ஆதரவாளர்கள் மத்தியில், இராணுவ சர்வாதிகாரம் தேவை என்று கருதுபவர்கள் இருக்கின்றனர். இந்தியாவில் பி.ஜே.பி. ஆதரவு தளத்தில் நிலவும் கருத்தியலோடு ஒப்பிடத்தக்கது இது. இலங்கையில் சிலருக்கு, இராணுவ சர்வாதிகாரத்தை நிலைநாட்டி, ஜனநாயகத்தை இரத்து செய்யும் நோக்கம் இருக்கிறது. நாட்டின் பிரச்சனைகளை தீர்க்க அதுவே சிறந்த மருந்து என நினைக்கின்றனர். தற்போது மகிந்த ஒரு நீண்ட இனப்பிரச்சினை போரை வென்று விட்டாலும், வறுமைக்கு எதிரான போரில் தோற்றுப் போய் விட்டார். வேலைவாய்ப்பின்மை, வாழ்க்கை செலவு அதிகரிப்பு, உணவுப்பற்றாக்குறை, வறுமை என்பன அரசாங்கத்தை சூழ்ந்து கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் மகிந்தவின் சிம்மாசனத்திற்கு கீழே வைக்கப்பட்டுள்ள குண்டுகள். இவை வெடிக்கும் நேரம் மகிந்தவும் தூக்கிவீசப்படுவார். அந்த தருணத்திற்காக எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன.

அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியங்கள், இலங்கையை இன்னும் மறக்கவில்லை. போரில் வீழ்ந்த பிணங்களை சுற்றி வட்டமிடும் கழுகுகளாக வட்டமிடுகின்றன. இது வரை காலமும், வருடாந்த வெளிநாட்டுக் கடன்கள் மூலம் ஏகாதிபத்தியத்தின் பிடி தளராமல் தொடர்ந்திருந்தது. அண்மைக்காலமாக ஜப்பானை விட சீனா இலங்கைக்கு அதிக கடன் வழங்கியுள்ளது. போரின் போது பெருமளவு சீன, ஈரான் ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இந்துமாக்கடலில் ஆதிக்கம் செலுத்துவதற்காக அம்பாந்தோட்டையில் சீன துறைமுகம் கட்டப்பட்டு வருகின்றது. இதையெல்லாம் அமெரிக்கா சும்மா கையைக் கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கவில்லை. மகிந்த ராஜபக்ஷ, அமெரிக்கா - ஈரான், இந்திய - சீனா, என்று எதிரும் புதிருமான நாடுகளை எல்லாம் நண்பனாக வைத்திருக்கும் ராஜதந்திரம் நீண்ட நாட்களுக்கு எடுபடாது. இன்றைய இலங்கை அரசு, மேற்குலக நாடுகளுடன் முட்டி மோதிக் கொண்டு சீனாவுடன் நெருக்கமாகி வருவது கண்கூடு. அத்தகைய நிலையில், சரத் பொன்சேகா போன்ற ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நிற்பது அமெரிக்காவுக்கு உவப்பான விஷயம் தான். அமெரிக்கா சென்ற சரத் பொன்சேகாவை தனியாக அழைத்துப் பேசிய அரச அதிகாரிகள், அவரை விசாரணை செய்தார்களா, அல்லது ஆலோசனை வழங்கினார்களா?

Wednesday, November 18, 2009

இனியொரு சதி செய்வோம்


இனியொரு இணையத்தளத்தில், என்னைப் பற்றி வந்த பின்னூட்டம் ஒன்று, பல வாதப் பிரதிவாதங்களை கிளப்பிவிட்டுள்ளது. இதையிட்டு என் மேல் கரிசனை கொண்ட, பல நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, விளக்கங்களை கொடுக்க வேண்டியுள்ளது. INSD என்ற ஜெர்மனியை தளமாக கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனம், இனியொரு கட்டுரையின் மையப்பொருளாக இருந்துள்ளது. இந்த நிறுவனம் அண்மையில் (ஆகஸ்ட் 2009 ) இந்தியாவில் ஒழுங்கு செய்த கருத்தரங்கில் பங்குபற்றிய "குற்றத்திற்காக" எஸ்.வி. ராஜதுரை போன்ற பலர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தது. "NGO எனப்படும் அரசுசாரா நிறுவனங்கள் ஏகாதிபத்திய நிதியில் இயங்குகின்றன. அங்கே ராஜதுரை போன்ற மாரக்சியர்களுக்கு என்ன வேலை" என்பது கட்டுரையின் சாராம்சம். கட்டுரையை எழுதியவர் இனியொரு ஆசிரியர் குழுவில் ஒருவரான அசோக். தன்னை ஒரு "தூய்மைவாத மார்க்சியராக"(?) காட்டிக் கொள்ளும் அசோக், முற்றுமுழுதாக தன்னார்வ நிறுவன தொடர்பேதும் இல்லாதவரா? அசோக் என்ற தனி நபரை விட, அவரது கருத்துகளே எமக்கு முக்கியமானவை. முன்பொரு தடவை டிராஸ்கியை படித்து விட்டு, ஸ்டாலினை பற்றி அவதூறான கட்டுரைகள் எழுதினார். மார்க்ஸை படித்து விட்டு, "கார்ல் மார்க்ஸ் தனது மனைவி ஜென்னியை பட்டினி போட்டதாக" எழுதினார். பெரியாரை படித்து விட்டு, "பெரியார் ஒரு தலித் விரோதி" என்று தொடர் கட்டுரைகள் வரைந்தார்.

இனியொருவில் அசோக் எழுதிய எஸ்.வி.ராஜதுரை – பொய்கள், மறுபடி மறுபடி பொய்கள்!: கட்டுரைக்கு வந்த பின்னூட்டமொன்றில் ராஜேஸ்வரன் என்பவர் நான் ஐ.என்.எஸ்.டி.யின் முக்கிய உறுப்பினர் எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த அநாமதேயம் சுமத்திய குற்றச்சாட்டை இனியொரு அக்கறையுடன் பரிசீலித்துள்ளது. இனியொருவில் மட்டுமல்ல, வினவு தளத்திலும் ஓடிப்போய் பின்னூட்டமிட்ட ராஜேஸ்வரனுக்கு, "கலையகம்" இருப்பது கண்ணுக்கு தெரியவில்லை.
ராஜேஸ்வரன் பின்னூட்டமும், அதற்கு இனியொரு அளித்த பதிலும் பின்வருமாறு:
...........................................................................................................................................................
#
Rajaswaran
Posted on 11/14/2009 at 11:18 am

இனியொரு ஆசிரியர் குழுவிற்கு மற்றவர்கள் மீது குறை குற்றம் சுமத்த முன் உங்களை நீங்கள் சுயவிமர்சனம் செய்துகொள்ளுங்கள். ஐஎன்எஸ்டி என்ற ஏகாதிபத்திய நிதி நிறுவனத்தைப்பற்றி வாய்கிழிய எழுதுகிறீர்கள்.ஆனால் இந்த அமைப்பின் முக்கிய உறுப்பினரான உங்கள் நண்பர் கலையரசனைப்பற்றி வாய் திறக்கவே மாட்டீர்கள் அவரின் “புரட்சி” கட்டுரைகளை பிரசுரிப்பீர்கள். இது என்ன நியாயம். உங்களைப்போல் புரட்சி போராட்டம் என்று எழுதுகிற வினவு இணையத்தளம் இந்த ஏகாதிபத்திய தாசருக்கு இவரின் இணையத்தளத்திற்கு இணைப்பு கொடுத்துள்ளது. வினவு இனியொரு இணையத்தளங்கள் பேசுவதெல்லாம் ஊருக்கு உபதேசம்தான? எம் பெளசர் இதில் கலந்துகொள்கின்ற ஒருவரே தவிர ஐஎன்எஸ்டியில் அங்கத்தவர் அல்ல. அவரைப்பற்றி எழுதும் அசோக் யோகன் ஐஎன்எஸ்டியில் முக்கிய உறுப்பினர்களான நோர்வே- சரவணன் கொலன்ட் – கலையரசன் சுட்காட் -சிவராஐன் இவர்களைப்பற்றியெல்லாம் வாய்திறக்கமாட்டார். இதுதான் இவர்களின் மாற்று அரசியல்.முதலில் உங்களை திருத்திக்கொள்ளுங்கள் பிறகு ஊருக்கு உபதேசம் செய்யுங்கள். இனியொரு கலையரசனின் பத்துக் கடுரைகள் வரை பிரசுரித்திருக்கிறது. இதற்கு ஒருபடி மேலே போய் வினவு கலையரசனுக்கு ஒரு சிறப்புப் பகுதியையே ஒதுக்கி அவரைப் பெருமைப்படுத்தியிருக்கிறது. இனிமேல் சுசீந்திரன் பற்றிப் பேசுவதை யும் அமார்க்ஸ் ராஜதுரை போன்றோரை விமர்சிப்பதையும் நிறுத்துங்கள்.
Reply
#
இனியொரு
Posted on 11/14/2009 at 2:39 pm

ராஜேஸ்வரன், இனியொரு மீதான உங்கள் விமர்சனத்தை கவனம் கொள்கின்றோம். நீங்கள் குறிப்பிடும் கொலன்டைச் சேர்ந்த கலையரசன் அவர்கள், ஐஎன்எஸ்டி என்ற நிதி நிறுவனத்தோடு மிக நெருக்கம் கொண்ட அதன் அங்கத்தவர் என்பது எமக்கு தெரிந்த பின்னர் அவரின் கட்டுரைகளை பதிவிடுவதை நாம் தவிர்த்துள்ளோம். இறுதியாக அவரின் கட்டுரை 31 ஜனவரி 2009 திகதிக்கு பிற்பாடு பதிவிடப்படவில்லை என்பதை தயவு செய்து கவனம் கொள்ளவும். .
...............................................................................................................................................

இந்த ராஜேஸ்வரன் யார், அவரது அரசியல் பின்னணி என்ன, என்று எவருக்கும் தெரியாது. அப்படி ஒரு பின்னூட்டம் கிடைக்கபெற்ற இனியொரு என்னை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டிருக்க வேண்டும். (இனியொரு எனது கட்டுரைகளை பிரசுரித்ததன் மூலம் என்னோடு சிறந்த நட்புறவைப் பேணியது பின்னூட்டத்தில் இருந்து தெளிவாகின்றது.) ஆனால் அவர்கள் அப்படி செய்யாமல் யாரோ ஒரு அநாமதேயம் சொன்னதை ஆமோதித்து பதில் கூறியுள்ளனர். இனியொருவின் கூற்றுப்படி, நான் ஐ.என்.எஸ்.டி.யுடன் நெருக்கமானவன் என்பதை ஜனவரி 2009 ல் தான் அறிந்து கொண்டார்களாம். நன்று.

ஐ.என்.எஸ்.டி. என்ற புலம்பெயர்ந்த (சிங்கள/தமிழ்) இலங்கையரின் அமைப்பு இயங்கி வருவதை, முதன் முதலாக அசோக் வீட்டில் தான் தெரிந்து கொண்டேன். ஆமாம், "ஐ.என்.எஸ்.டி. பற்றியும், அதிலே கலந்து கொள்பவர்களையும் நார் நாராக கிழித்து தொங்கப் போட்ட" அதே அசோக் மூலமாக தான் ஐ.என்.எஸ்.டி. பற்றி தெரிந்து கொண்டேன். 2006 ம் ஆண்டு, அன்று பாரிசில் உள்ள அசோக் வீட்டிற்கு ஐ.என்.எஸ்.டி. உறுப்பினரான அவரது நண்பர் வந்திருந்தார். அவர் கொண்டுவந்த, ஐ.என்.எஸ்.டி. ஒன்றுகூடல் புகைப்படங்களில் இருந்த, நபர்களில் பாதிப் பேராவது அசோக்கிற்கு தெரிந்தவர்களாக இருந்தனர். (அசோக் முன்னிலையில்) அவரது நண்பர், அடுத்த ஐ.என்.எஸ்.டி. கருத்தரங்கிற்கு எனக்கு அழைப்பு விடுவதாக அறிவித்தார்.

அதற்குப் பிறகு, ஜெர்மனி ஸ்டுட்கார்ட் நகரில் ஐ.என்.எஸ்.டி. வருடம் தோறும் நடத்தும் seminar குறித்து மின்னஞ்சல்கள் வந்த போதிலும் நான் கலந்து கொள்ளவில்லை. இதற்கிடையே ஐ.என்,எஸ்.டி. செயற்பாடுகள் குறித்து பல தடவை அசோக்குடன் தொலைபேசியில் கதைத்துள்ளேன். அப்போதெல்லாம் அவரிடம் எதிர்மறையான கருத்துகள் இருக்கவில்லை. நான் முதன் முதலாக ஐ.என்.எஸ்.டி. கூட்டத்தில் கலந்து கொண்டது 2008 ம் ஆண்டு, பெப்ரவரி 1-3 திகதிகளில். அது கூட புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இலங்கையரின் ஒன்றுகூடலாக மட்டுமே இருந்தது. அங்கே நடந்த கருத்தரங்கில் இலங்கையில் சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதில் உள்ள சிரமங்களை குறித்து ஆராயப்பட்டது. அப்போது போர் ஆரம்பமாகி இருந்ததால், இலங்கையில் சமாதானம் பேசுபவர்கள் தேசத்துரோகிகளாக கருதப்பட்டனர். கருத்தரங்கில் பல தரப்பட்ட அரசியல் பின்னணி கொண்டவர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்கு செலவுகளுக்காக, அன்று அங்கு புதிதாக வந்தவர்களையும் அங்கத்தவர்களாக இணைத்ததன் மூலம் ஒரு தொகை பணம் சேகரித்தார்கள்.

அதே போன்ற கருத்தரங்கை நோர்வேயிலும் நடத்த விரும்பினர். மே மாதம் 2008, ஒஸ்லோ நகரில் இடம்பெற்ற கருத்தரங்கு மட்டுமே நான் கடைசியாக கலந்து கொண்டது. அந்தக் கருத்தரங்கில், ஐ.என்.எஸ்.டி. ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாக இயங்குவதையிட்டு எனது அதிருப்தியை தெரிவித்தேன். இலங்கையில் சமாதானத்திற்கான இயக்கம் ஒன்றிற்கு, ஐரோப்பிய யூனியன் நிதியுதவி, அதனால் விளையும் ஆபத்தையும் எடுத்தியம்பினேன். ஒரு என்.ஜி.ஒ. தனக்குரிய எல்லைகளுக்குள் மட்டுமே இயங்க முடியும். அது தான் ஐ.என்.எஸ்.டி.யின் நிலைப்பாடுமாக இருந்தது. ஒஸ்லோ கருத்தரங்கில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளுக்கு பிற்பாடு, நான் இதுவரை எந்தவொரு ஐ.என்.எஸ்.டி. கருத்தரங்கிலும் கலந்து கொள்ளவில்லை. ஒஸ்லோ கருத்தரங்கில், விமர்சித்து கூறிய கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இனியொரு ஆசிரியர் குழு இதயசுத்தியோடு என்னை அணுகியிருந்தால், மேற்படி விளக்கத்தை அப்போதே அளித்திருப்பேன்.

ஜனவரி 2009 க்குப் பின்னர் எனது கட்டுரைகளை பிரசுரிக்காமல் தவிர்த்ததாக, "இனியொரு" தெரிவிக்கின்றது. அதாவது நான் "ஐ.என்.எஸ்.டி. என்ற ஏகாதிபத்திய தன்னார்வு நிறுவனத்தின் முக்கிய உறுப்பினர்" என்று தெரிந்து கொண்ட பின்னர், அந்த முடிவை எடுத்தார்களாம். நான் ஐ.என்.எஸ்.டி. கருத்தரங்குகளில் கலந்து கொண்டது இரு தடவைகள் மட்டுமே. 2008 ம் ஆண்டு, பெப்ரவரி, மே ஆகிய மாதங்களில் அந்த கருத்தரங்குகள் இடம்பெற்றன. "இனியொரு" இணையத்தளத்தில் முதன்முதலாக, ஆகஸ்ட் 2008 ல் தான், எனது கட்டுரைகள் வெளிவரத் தொடங்கின. அதே மாதம், "இனியொரு" ஆசிரியர் குழுவில் என்னையும் இணைந்து பணியாற்ற வருமாறு அசோக், மற்றும் சபா நாவலன் கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து பல தடவைகள், என்னிடம் கட்டுரைகளை கேட்டு வாங்கினார்கள். அப்போதெல்லாம் என்னுடன் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். ஒரு தடவையேனும், ஐ.என்.எஸ்.டி.யுடனான தொடர்பு குறித்து என்னிடம் விளக்கம் கேட்கவில்லை. இனியொரு பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும்.

Tuesday, November 17, 2009

அமெரிக்க நிதியில் ஈரான் எதிர்ப்பு ஆயுதக்குழுக்கள்

சிலரைப் பொறுத்தவரை, அமெரிக்க-ஈரான் போர் ஏற்கனவே ஆரம்பமாகி விட்டது. இரு நாடுகளும் நேரடியாக மோதுவதை தவிர்த்து வந்த போதிலும், பதிலிப் போரில் ஈடுபட்டுள்ளன. ஈரான், ஈராக் நாடுகளின் வடபகுதி மலைகளில், குர்து இன மக்கள் வாழ்கின்றனர். ஈராக்கிய குர்தியர்கள், அமெரிக்க ஆதரவுடன் "குர்திஸ்தான்" சுயாட்சிப் பிரதேசத்தைக் கொண்டுள்ளனர். ஈரானிய குர்து மக்கள் எல்லை கடந்து வந்து, ஈராக்கிய-குர்திஸ்தானில் அடைக்கலம் தேடுகின்றனர். ஈராக்கிய மலைகளில் முகாமிட்டுள்ள (ஈரானிய) குர்து போராளிக் குழுக்கள், ஈரானுக்குள் ஊடுருவி தாக்கி வருகின்றனர். அனைத்து ஈரான் எதிர்ப்புக் குழுக்களுக்கும் அமெரிக்க நிதி உதவி கிடைப்பது ரகசியமல்ல. ஈராக்கில் தளமமைத்துள்ள PJAK போன்ற ஈரான் எதிர்ப்பு இயக்கங்களை ஆராயும் ஆவணப்படம்.

Monday, November 16, 2009

"பாக். குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரி ஒரு அமெரிக்க கம்பெனி!"- தாலிபான்

பாகிஸ்தானில் சமீப காலமாக பொது மக்கள் கூடுமிடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளுக்கு தாம் பொறுப்பல்ல என்று பாகிஸ்தானிய தாலிபான் அறிவித்துள்ளது. "இஸ்லாமாபாத் இஸ்லாமிய பல்கலைக் கழக மாணவர்களைக் கொன்ற குண்டுவெடிப்பு, மற்றும் பெஷாவர் பொது சந்தையில் நூறு பேர் இறக்க காரணமான குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு அந்நிய சக்திகளே காரணம். அமெரிக்காவின் கூலிப்படை நிறுவனமான "Black water ", பாகிஸ்தான் அரசுடன் சேர்ந்து, பொது மக்களை இலக்கு வைத்து குண்டுகளை வெடிக்க வைத்துள்ளது." இவ்வாறு தாரிக் எ-தாலிபான் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. பாகிஸ்தானிய தாலிபான் இயக்க பேச்சாளர் அசாம் தாரிக் தோன்றும் இந்த வீடியோ அல் கைதா சார்பான இணையத் தளமொன்றில் வெளியாகியுள்ளது.


வீடியோ: நக்சலைட் போராளிகளிடம் நவீன ஆயுதங்கள்

இந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு,மாவோயிஸ்ட்கள் நவீன ஆயுதங்களுடன் தயாராகி வருகின்றனர். களத்திலிருந்து News X செய்தியாளர் அனுப்பிய வீடியோ அறிக்கை.
Naxalites with sophisticated weapons


Naxal Threat in Jharkhand

நக்சல்பாரி எழுச்சியின் 40 ஆண்டு நிறைவு

Video: நக்சல்பாரி எழுச்சியின் 40 ஆண்டு நிறைவு


Video: இந்திய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலதிபர் கணபதி கூட்டமொன்றில் (ஹிந்தி மொழியில்) உரையாற்றும் வீடியோ. இந்திய தொலைக்காட்சி ஒன்றில் காண்பிக்கப்பட்டது.

Sunday, November 15, 2009

நேர்காணல்: ஒசாமா பின்லாடனின் குடும்ப இரகசியங்கள்

"சர்வதேச பயங்கரவாதி" ஒசாமா பின்லாடனின் முதலாவது மனைவியும், நான்காவது மகனும் முதன்முறையாக அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல்.


Part 1


Part 2

இலவச கல்விக்கு ஆதரவாக உலக மாணவர்கள் போராட்டம்

ஐரோப்பாவில் மிக அண்மைக்காலம் வரையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, போலந்து போன்ற நாடுகளில் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஐரோப்பிய யூனியன், நவ-லிபரலிச அடிப்படைவாத பொருளாதார சீர்திருத்தங்களை திணித்து வருகின்றது. நலன்புரி அரசு பெற்றுத் தந்த மக்களின் உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறித்து வருகின்றது. அதன் ஒரு கட்டமாக பல்கலைக்கழகங்கள் பெற்று வந்த அரச மானியம் குறைக்கப்பட்டு, தனியாரிடம் ஒப்படைக்கப்படுகின்றது. இதனால் ஒரு புறம் கல்விக்கட்டணம் உயர்ந்து வருவதுடன், மறு புறம் பல்கலைக் கழகங்களின் தரம் தாழ்ந்து வருகின்றது.

பல்கலைக்கழகங்களை தனியார்மயமாக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக ஜெர்மன்,ஆஸ்திரியா, போலந்து மாணவர்கள் போராடி வருகின்றனர். தாம் கல்வி கற்கும் கல்லூரி வளாகங்களில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜெர்மனியில் ஐம்பதுக்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளன. போலந்தில் லுப்ளின் பல்கலைக்கழகத்திலும் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
1. தொழில் சார் கல்விமுறையை, புலமை சார் கல்வியாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.
2. பல்கலைக் கழக நிர்வாகம் ஜனநாயகமயப்படுத்தப்பட வேண்டும்.
3. பல்கலைக் கழகங்களுக்கு முழுமையான அரச மானியம் வழங்கப்பட வேண்டும்.
4. அகதிகள், குடியேறிகள், நலிவடைந்தோர் ஆகியோருக்கும் பல்கலைக் கழக அனுமதி இலகுவாக்கப்பட வேண்டும்.

தனியார்மயமாக்கலுக்கு எதிராக பல நாடுகளில் மாணவர்கள் போராடி வருகின்றனர். அண்மையில் இலங்கையில் கூட, தனியார்மயமாக்கலுக்கு எதிராக கொழும்பு மாணவர்கள் கண்டனப் பேரணி நடத்தினர். ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் மனு கையளிக்கப் போன மாணவர்கள், ஜனாதிபதி வாசஸ்தலத்தை அணுகவிடாது பொலிஸ் தடுத்தது. மாணவர்களும், பொலிஸாரும் மோதும் தருவாயில் காணப்பட்டனர். சில தினங்களுக்கு முன்னர், தனியார்மயமாக்கலுக்கு எதிராக போராடிய மாணவர் தலைவன் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்த இயல்பான மாணவர் எழுச்சி அது. இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து இன்று வரை, இலவச கல்வியை அமுல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக கல்வி தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்று கடன் வழங்கும் ஐ.எம்.எப். அழுத்தம் கொடுத்து வருகின்றது.
மேலதிக விபரங்களுக்கு:
போலந்து மாணவர்களின் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

ஜெர்மன் மாணவர்களின் போராட்டம் குறித்து வந்த பத்திரிகைச் செய்தி

வீடியோ: இலங்கை மாணவர்களின் போராட்டம்:

Friday, November 13, 2009

நேபாளத்தில் "மாவோயிஸ்ட் சுயாட்சிப் பிரதேசம்" பிரகடனம்!


2009 நவம்பர் ஒன்பதாம் திகதி, நேபாளத்தின் சில மாவட்டங்களை இணைத்து "கிராட் சுயாட்சிப் பிரதேசம்" அறிவிக்கப் பட்டுள்ளது. ஐக்கிய மாவோயிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக தன்னை அறிவித்துக் கொண்ட கோபால் என்பவர், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேசிய எழுச்சிக் கமிட்டி அங்கத்தவர்கள் விரைவில் தெரிவு செய்யப்படுவர் என்றும், அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. நேபாளத்தின் ஒரு பகுதியில் சுதந்திரப் பிரகடனம் செய்தவர்களுக்கு, தலைநகர் காத்மாண்டுவில் உள்ள மாவோயிஸ்ட் கட்சியின் தலைமைப்பீடம் ஆதரவு வழங்கியுள்ளது. மேலும் சில மாவட்டங்கள் "தனி நாடு" பிரகடனம் செய்ய உத்தேசித்துள்ளன. இத்தகைய தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனம், சமாதான ஒப்பந்தத்தை முறிக்கும் செயலாகும் என, சில அரசியல் அவதானிகள் அஞ்சுகின்றனர்.

லட்சக்கணக்கான மாவோயிஸ்ட் ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகரில் அரசாங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். மக்கள் கைகளில் அரச அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று போராடி வருகின்றனர். அவர்களது போராட்டத்திற்கு எதிர்பாராத விதமாக, ஐ.நா. மன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது. அதாவது "நிலைமையை மோசமாக்காமல், சமரசமாக போகும்படி", ஐ.நா. செயலதிபர் பான் கி மூன் கூறியுள்ளார். ஐ.நா. செயலதிபரின் கூற்று, அமெரிக்காவுக்கும், இந்தியாவிற்கும் எரிச்சலை உண்டாக்கியுள்ளது. காத்மண்டு ஆர்ப்பாட்டம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெற்றிருந்த போதிலும், "தனி நாடு சுதந்திரப் பிரகடனம்" பற்றிய தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. நேபாளத்தில் தொடரும் அரசியல் கொந்தளிப்புகளுக்கு பின்னால் உள்ள, இந்திய-சீன ஆதிக்கப் போட்டி, வேண்டுமென்றே மறைக்கப்படுகின்றது. நேபாளத்தை பகடைக்காயாக்கி பனிப்போரில் ஈடுபட்டுள்ள இந்தியாவும், சீனாவும் தமக்கிடையிலான நேரடி மோதலை தவிர்க்கப்பார்க்கின்றன.

நேபாளத்தின் தற்போதைய நிலைமையை புரிந்து கொள்ள, நாம் சற்று வரலாற்றில் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். பிரிட்டிஷார் விட்டுச் சென்ற காலத்தில் இருந்து, நேபாளம் இந்திய காலனி போன்றே நிர்வகிக்கப்பட்டு வந்தது. நேபாளம் இந்தியாவுடன் பெருமளவு வர்த்தக தொடர்புகளை கொண்டிருந்தது. மறுபக்க எல்லையில் சீனா இருந்த போதிலும், சீனாவுடனான உறவு பெயரளவில் மட்டுமே இருந்தது. தசாப்த காலமாக மாவோயிஸ்டுகளுடன் வெல்ல முடியாத போரில் ஈடுபட்டிருந்த மன்னர் ஞானேந்திரா சீனாவிடம் ஆயுதங்கள் வாங்கினார். அதுவரை நேபாள இராணுவத்திற்கு ஆயுத விநியோகம் செய்து வந்த இந்தியாவிற்கு இது பிடிக்கவில்லை. 240 ஆண்டு காலம் பழமை வாய்ந்த முடியாட்சியை முடிவுக்கு கொண்டு வந்த மக்கள் எழுச்சிக்கு இந்தியாவும் ஆதரவு வழங்கியது. இந்தியா கை விட்டு விட்டதாலேயே, மன்னரும் சிம்மாசனத்தை விட்டு நகர வேண்டிய நிலை வந்தது.

இதற்கிடையே இந்தியாவில் "நாடு கடந்த நேபாள அரசை" நிறுவுவதில் இந்தியா முனைப்புடன் ஈடுபட்டது. மன்னரால் விரட்டப்பட்டு இந்தியாவில் அஞ்ஞாதவாசம் செய்த பாராளுமன்றக் கட்சிகளுடன், ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகளையும் சேர்த்து, ஜனநாயகத்திற்கான ஐக்கிய முன்னணியை கட்டி எழுப்பியது. முடியாட்சியை அகற்றி விட்டு, அந்த இடத்தில் இந்திய சார்பு அரசாங்கத்தை அமைப்பது தான் நோக்கம். இத்தகைய திட்டம் ஏற்கனவே சிக்கிம் என்ற தேசத்தில் (தற்போது இந்திய மாநிலங்களில் ஒன்று) முன்னோட்டம் பார்க்கப்பட்டது.

மக்கள் எழுச்சிக்கு அடிபணிந்த மன்னர், ஜனநாயகத் தேர்தல்கள் நடத்த ஒப்புக்கொண்டார். பாராளுமன்ற பொதுத்தேர்தலில் மாவோயிஸ்ட்களும் பங்கெடுக்க வேண்டும் என்றே இந்தியாவும் எதிர்பார்த்தது. தேர்தலில் எப்படியும் அதுவரை ஆட்சியில் இருந்த இந்திய சார்பு கட்சிகளே வெற்றி பெறும், மாவோயிஸ்ட் கட்சிக்கு பெரும்பான்மை வாக்குகள் விழாது என்று, இந்தியா தப்புக்கணக்கு போட்டது. ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக, 2008 ம் ஆண்டு தேர்தலில், மாவோயிஸ்ட் கட்சியினர் 38 % வீதமான வாக்குகளைப் பெற்று, பெரும்பான்மை பலத்துடன் பாராளுமன்றம் சென்றனர். அப்போதும் சில அவதானிகள், பதவி சுகம் கண்ட மாவோயிஸ்ட்கள் புரட்சியை கைவிட்டு விடுவார்கள், அல்லது முன்னைய ஆட்சியாளர்களைப் போல இந்தியாவின் தயவை நாடுவார்கள் என்று கணித்தார்கள்.

எதிர்பாராவிதமாக மாவோயிஸ்ட் அரசாங்கம், நேபாள வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. புதிய அரசாங்கத்தில் யார் பிரதமராவது என்ற நீண்ட இழுபறிக்கு பின்னர், மாவோயிஸ்ட் தலைவர் பிரசந்தா பிரதமரானார். அதுவரை நேபாளத்தில் புதிதாக பதவியேற்கும் பிரதமர்கள், முதலில் இந்தியா சென்று ஆசீர்வாதம் வாங்கிய பிறகு தான் மறு வேலை பார்ப்பார்கள். அதற்கு மாறாக பிரசந்தாவின் முதலாவது வெளிநாட்டு விஜயம் சீனாவை நோக்கியதாக இருந்தது. பிரசந்தா பதவியேற்ற அதே காலகட்டத்தில், இடம்பெற்ற ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை பார்வையிட செல்வது என்ற சாட்டில், அந்த விஜயம் அமைந்திருந்தது. அதே காலகட்டத்தில் நேபாளத்தில் இடம்பெற்ற திபெத்தியர்களின் போராட்டம் கொடூரமாக அடக்கப்பட்டது. இதன் மூலம் பிரசந்தா அரசு, சீனாவின் நன்மதிப்பை பெறத் தவறவில்லை.

இந்திய பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவில் பிரிவினையை தூண்டும் சக்திகளுக்கு நேபாளம் இடம்கொடுக்க கூடாது என்று சீனா உறுதி மொழி வாங்கிக் கொண்டது. அதற்கு மாறாக நேபாளத்திற்கு தேவையான பொருளாதார, இராணுவ உதவிகளை செய்வதாக வாக்குறுதி அளித்தது. எது எப்படி இருந்த போதிலும், அடுத்தடுத்து நடைபெற்ற நிகழ்வுகள் யாவும், நேபாளம் சீனாவுடன் நெருக்கமாகி வருவதை எடுத்துக் காட்டின. நேபாள அறிவுஜீவிகள் குழுவொன்றுக்கு சீனாவின் நிபுணத்துவ பயிற்சி வழங்கப்பட்டது. பெப்ரவரி மாதம், சீனா வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான தூதுக் குழுவொன்றும், சீன இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகளும் நேபாளம் வந்தனர். மாவோயிஸ்ட் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலைப் படை தலைமைக் கமாண்டர் நந்திகிஷோர் தற்போது சீனாவில் தங்கியிருப்பதாக நேபாள பத்திரிகை ஒன்று தெரிவிக்கின்றது.

நேபாள உள்விவகாரங்களில் மீண்டும் இந்தியா தலையிட்டது. மாவோயிஸ்ட் அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது. பசுபதிநாத் ஆலய மதகுரு சம்பந்தமான சர்ச்சை நிச்சயமாக இந்தியாவிற்கு எரிச்சலைக் கொடுத்திருக்கும். காலங்காலமாக தென்னிந்தியாவில் இருந்து சென்ற பிராமணர்களே, பசுபதிநாத் சிவன் கோயிலின் தலைமை மதகுருக்களாக வீற்றிருந்தனர். மாவோயிஸ்ட் அரசாங்கம் உள்நாட்டு நேபாள பிராமணரை பதவியில் அமர்த்தியது. ஒரு சுற்று இந்தியா சென்று வந்த சர்ச்சை உச்ச நீதிமன்ற படியேறியது. மாவோயிஸ்ட்கள் வேறு வழியின்றி விட்டுக் கொடுக்க வேண்டியேற்பட்டது.

ஐ.நா. சமாதானத் திட்டப்படி நேபாள அரச படைகளில், மாவோயிஸ்ட் போராளிகளை சேர்த்துக் கொள்வதாக ஒப்பந்தம் போடப்பட்டது. மே மாதம், மாவோயிஸ்ட் அரசாங்கம் அந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர விரும்பிய போது, இராணுவ தளபதி கத்தாவால் மறுத்துவிட்டார். (இந்தியா சார்பானவர் என கருதப்படும்) இராணுவத் தளபதியின் பிடிவாதம் காரணமாக, பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பிரதமர் பிரசந்தா பதவியில் இருந்து நீக்கிய தளபதியை, அன்று மாலையே ஜனாதிபதி மீண்டும் பதவியில் அமர்த்தினார். ஜனாதிபதியின் செயல் அரசியல் சட்டத்திற்கு முரணானது என்று ஆட்சேபித்த மாவோயிஸ்ட்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினர். எதிர்க்கட்சி ஆசனங்களில் சென்று அமர்ந்து கொண்டனர்.

சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட இரு தரப்பிலும் நிலவிய நம்பிக்கையின்மை. திரைமறைவில் இந்தியாவின் சதிவேலைகள். இந்திய எஜமானுக்கு சேவை செய்யக் காத்திருக்கும் அரசியல் கட்சிகள். இது போன்ற பல காரணங்கள், தற்போதைய அரசியல் நெருக்கடியை தோற்றுவித்துள்ளன. இதற்கிடையே சோஷலிச புரட்சிக்கான போராட்டம் தொடரவேண்டும் என்று மாவோயிஸ்ட் கட்சிக்குள்ளே அழுத்தம் எழுந்தது. குறிப்பாக இளைஞர் அணியினர் பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட அரசியலில் ஆர்வம் காட்டினர்.

மாவோயிஸ்ட்கள் சீனாவுடன் நெருக்கமான உறவுகளை பேணுவதற்கு காரணம், ஒத்த தன்மை கொண்ட அரசியல் கொள்கை அல்ல. போராட்டம் நடைபெற்ற காலங்களில், மாவோயிஸ்ட்கள் சீன அரசை கடுமையாக விமர்சித்து வந்தனர். இன்றைய சீன ஆட்சியாளர்கள் முதலாளித்துவ சிந்தனையுள்ள திரிபுவாதிகளாக கணிக்கப்பட்டனர். அதே நேரம் நேபாள மன்னருடன் இராஜதந்திர உறவு வைத்திருந்த சீனா, மாவோயிஸ்ட்களின் எழுச்சி தனது நாட்டையும் பாதிக்கும் என எண்ணியது. மாறி வரும் உலகின், பூகோள அரசியல் நேபாள மாவோயிஸ்ட் கட்சியையும், சீனாவையும் நண்பர்களாக்கியுள்ளது. அச்சுறுத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு புறம், அதன் பிராந்திய நலன் காக்கும் இந்திய வல்லரசு மறு புறம், இவற்றை எதிர்த்து நிற்க வேண்டுமானால் சீனாவின் நட்புறவு அவசியம். சீனாவைப் பொறுத்த வரை, நேபாளம் இந்தியா எல்லையோரமாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது. இன்றைய சூழ்நிலையில், மாவோயிஸ்ட்கள், சீனா இருவரினது நலன்களும் ஒத்துப் போகின்றன. இந்திய ஆக்கிரமிப்பு சவால்களை மாவோயிஸ்ட்கள் துணிச்சலாக எதிர்த்து நிற்பதற்கு, சீனாவின் பக்கபலம் காரணம் என தலைநகர் காத்மண்டுவில் பேச்சு அடிபடுகின்றது. Nepal Maoist’s Agitation Enjoys China Support: Prachanda Claims



இது தொடர்பான முன்னைய பதிவு:
இமய மலையில் செங்கொடி ஏற்றிய மாவோயிஸ்ட்கள்