Saturday, September 26, 2020
சிவ புராணமும் பௌத்த மத சம்சார தத்துவமும்
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Wednesday, September 16, 2020
பூர்ஷுவாசி - முதலாளிகளின் பட்டப் பெயர் வந்தது எப்படி?
- ஐரோப்பிய வணிகர்கள் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியாக் கண்டங்களில் வணிக மையங்களை நிறுவி, அங்கிருந்த மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் கொள்ளை இலாபம் சம்பாதித்தனர். உதாரணத்திற்கு இலங்கை, இந்தியாவில் கேரளா, இந்தோனேசியாவில் மொலுக்கு தீவுகள் ஆகிய இடங்களில் கிடைத்த கடுகு, கராம்பு, போன்ற வாசனைத் திரவியங்களுக்கு ஐரோப்பாவில் அதிக கேள்வி இருந்தது. அதனால் அந்தப் பொருட்களை பத்து மடங்கு இலாபம் வைத்தும் விற்க முடிந்தது. அத்துடன் அடிமை வாணிபத்தில் கிடைத்த இலாபப் பணத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- காலனிகளில் தங்கியிருந்து தேசங்கடந்த வர்த்தம் செய்ததன் மூலம் கிடைத்த அளவுகடந்த இலாபப் பணமானது மூலதனத்தை திரட்ட உதவியது. அவர்கள் அந்தப் பணத்தை தமது ஐரோப்பிய தாய்நாட்டில் பெரும் தொழிற்துறைகளில் முதலீடு செய்தனர். அதன் மூலம் மென்மேலும் இலாபம் சம்பாதித்தார்கள்.
இந்த காலனிய வணிகர்கள் தமது தாயகத்தில் பெருமளவு பணம் படைத்த கோடீஸ்வரர்களாக இருந்தனர். இந்தப் புதுப் பணக்காரர்கள் பிரபுக்கள் குடும்பங்களில் திருமண சம்பந்தம் செய்து கொண்டதன் மூலம் நாட்டில் சக்திவாய்ந்த மனிதர்களாக உருவானார்கள். அரசியலில் அவர்களது செல்வாக்கு அதிகரித்தது. இதைப் பயன்படுத்தி வணிக முதலாளித்துவம் வளர்வதற்கான திட்டங்கள் தீட்ட முடிந்தது.
ஒரு காலத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ சபைகளால் ஐரோப்பாவில் வட்டி அறவிடுவது பாவ காரியமாக தடைசெய்யப் பட்டிருந்தது. அதனை இந்த முதலாளிகள் தமது அரசியல் செல்வாக்கின் மூலம் மாற்றி அமைத்தனர். இதனால் வங்கிகள் வட்டிக்கு கடன் கொடுக்க முடிந்தது. முதலாளிகளின் நலன்கருதி ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது. சமாதானம் கொண்டு வரப் பட்டது. சர்வதேச கடற்பரப்பில் வணிகக் கப்பல்களை பாதுகாப்பதற்கான ஏற்பட்டுகள் முன்னெடுக்கப் பட்டன.
முதலாளித்துவம் வளர்வதற்கு இன்னொரு காரணியும் இருந்தது. காலனிய வணிகர்களில் ஒரு சிலர் வங்கிகளை அமைத்து, பிற நிறுவனங்களுக்கு கடன் கொடுத்து வந்தனர். இதன் மூலம் புதிய வர்த்தக முயற்சிகளுக்கும், தொழிலகங்களுக்கும் நிதி வழங்கப் பட்டது. இந்த நடைமுறையானது இன்றுள்ளது போன்ற நவீன முதலாளித்துவத்திற்கு வித்திட்டது.
ஆரம்பத்தில் இத்தாலி, ஜெர்மனியில் சிறிய அளவில் தோன்றிய வங்கித்துறையானது இங்கிலாந்தில் சிறப்பாக வளர்த்தெடுக்கப் பட்டது. 1800 ம் ஆண்டளவில் லண்டனை மையமாகக் கொண்டு இயங்கிய வங்கிகள் மாவட்டங்கள் தோறும் கிளைகளை திறந்தன. அவை வணிகர்கள், தொழிலதிபர்களுக்கு குறுகிய கால கடன் வழங்கின. இருப்பினும் வெளிநாட்டு வர்த்தகத்தில் முதலிடுவது தான் அவர்களுக்கு முக்கியமாகப் பட்டது. அதற்குக் காரணம், காலனிய நாடுகளை சுரண்டியதால் கிடைத்த இலாபப் பணம், உள்நாட்டு உற்பத்தியில் கிடைத்த இலாபத்தை விட பல மடங்கு அதிகமாக இருந்தது. இன்றைக்கும் இந்த நிலைமையில் பெருமளவு மாற்றம் எதுவும் வந்து விடவில்லை.
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அளவுகடந்த தங்கமும், வெள்ளியும் வந்து குவிந்த படியால், அது நாட்டின் சமூக பொருளாதாரத்திலும் மாற்றத்தை கொண்டு வந்தது. குறிப்பாக நிலத்தின் விலை வீழ்ச்சி அடைந்தது. அதனால் பெரும் நிலவுடமையாளர்கள் வருமான இழப்பு காரணமாக தமது காணிகளை, புதுப் பணக்காரர்களான முதலாளிகளுக்கு விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நிலங்களை வாங்கிய முதலாளிகள் அவற்றை தமது தொழிற்துறைக்கு பயன்படுத்தினார்கள். அதே நேரம் பண வீக்கம் காரணமாக உழைப்பாளிகளின் கூலியும் குறைந்து விட்ட படியால், முதலாளிகளுக்கு இரட்டிப்பு இலாபம் கிடைத்தது.
ஐரோப்பிய நாட்டவருக்கு யுத்தம் ஒரு புதிய விடயம் அல்ல. பல நூறு ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகள் தமக்குள்ள ஒற்றுமை இன்றி போரிட்டுக் கொண்டிருந்தன. இதனால் மனிதப் பேரவலம் மட்டுமல்லாது பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டு வந்தன. ஆனால், முதலாளித்துவம் நடைமுறைக்கு வந்த பின்னர், பேரழிவு தரும் போர்களுக்குப் பின்னரும் இலாபம் சம்பாதிக்கலாம் என்ற நிலைமை உருவானது.
குறிப்பாக நெப்போலியனின் ஐரோப்பியப் படையெடுப்புகளினால் ஏற்பட்ட அழிவுகளுக்குப் பின்னர், புதிய நகரக் கட்டுமானப் பணிகள் முதலாளிகள் விரும்பிய படி நடந்தன.
அது மட்டுமல்ல, நெப்போலியன் படையெடுத்து ஆக்கிரமித்த நாடுகளில் எல்லாம் புதிதாக அரசமைப்பு சட்டங்கள் உருவாக்கப் பட்டன. அதற்கு முன்னர் எந்தவொரு ஐரோப்பிய நாட்டிலும் அனைவருக்கும் பொதுவான சட்டங்கள் எழுதப் படவில்லை. உண்மையில் நெப்போலியனால் தான் சட்ட நூல்கள் அறிமுகப் படுத்தப் பட்டன. இந்த சட்டங்கள் தனியுடைமையை பாதுகாப்பதாகவும், முதலாளித்துவத்திற்கு ஆதரவாகவும் எழுதப் பட்டன. சுருக்கமாக, நெப்போலியன் வாட்டர்லூ போரில் தோற்கடிக்கப் பட்டாலும் அவன் கொண்டு வந்த சட்டங்கள் இன்னமும் உயிர் வாழ்கின்றன!
மத்திய காலத்தில் தனி நாடாக இருந்த வெனிஸ் வணிகர்களால் ஆளப்பட்டது. சில நூறாண்டுகளுக்கு பின்னர் நடந்த பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர், பிரான்ஸ் முழுவதும் வணிகர்கள் அல்லது முதலாளிகளின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. குறிப்ப்பிட்ட காலம் மன்னராட்சி, குறிப்பிட்ட காலம் குடியரசு என்று ஆட்சிகள் மாறினாலும், முதலாளித்துவ வர்க்கத்தினரின் நலன்கள் பாதுகாக்கப் பட்டன. அதே மாதிரி இங்கிலாந்தில் மன்னராட்சிக்கு எதிராக குரோம்வெல் நடத்திய புரட்சியின் போது மேலெழுந்து வந்த வணிகர்கள், பின்னர் வந்த மன்னராட்சிக் காலத்திலும் தமது ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொண்டனர். குறிப்பாக லண்டன் நகரில் வணிகர்கள், முதலாளிகளின் செல்வாக்கு அதிகரித்தது.
இந்த இடத்தில், முதலாளித்துவ வர்க்கம் என்ன? அது எப்படித் தோன்றியது? என்பதையும் பார்க்க வேண்டும்.
தொழிலதிபர்கள், வங்கியாளர்கள், சிறிய அல்லது பெரிய வணிகர்கள், மற்றும் பணக்கார விவசாயிகளும் இந்த வர்க்கத்தில் சேர்ந்து கொண்டனர். முன்பு அவர்களுக்கு எதிரானவர்களாக இருந்து வந்த நிலவுடைமை வர்க்கத்தினர், தற்போது திருமண உறவுகள் மூலம் முதலாளித்துவ வர்க்கத்தில் சேர்ந்து கொண்டனர்.
இந்தப் புதிய வர்க்கத்தினர் வணிகம் செய்வது மூலம் பணம் சம்பாதித்து வந்தனர். வணிகம் செய்வது என்றால், பொருட்களை விற்பது, வாங்குவது என்று புரிந்து கொள்ளலாம். இருப்பினும் ஆரம்ப காலங்களில் வணிகம் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கும் கலை தான், முதலாளித்துவ வர்க்கத்தினரை நிலவுடைமை வர்க்கத்தில் இருந்து தனியாக பிரித்துக் காட்டியது. அதே நேரம் முதலாளித்துவ வர்க்கத்தினர் மூலதனத்தின் சொந்தக்காரர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு கீழே வேலை செய்த தொழிலாளர்கள் தமது உடல் உழைப்பை மட்டுமே செலுத்த வேண்டும். அவர்கள் மூலதனத்திற்கு உரிமை கோர முடியாது. இன்று வரையில் இந்த சமுதாய அமைப்பில் எந்த மாற்றமும் வரவில்லை.
முதலாளித்துவ வர்க்கத்தினர் பெரும்பாலும் தலைநகரத்தில் வாழ்ந்து வந்தனர். ஏனென்றால் அங்கிருந்து வணிகத்தை நடத்துவதும், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதும் இலகுவாக இருந்தது. பிரான்சில் இவர்கள் மக்களால் “பூர்ஷுவாசி” என அழைக்கப் பட்டனர். அதன் அர்த்தம் “நகரத்தில் ஆதிக்கம் செலுத்துவோர்”! அன்றைய ஜெர்மனியில் நகர மாந்தர் குறித்து சொல்லப்பட்ட பூர்கர் என்ற சொல் பிரான்சில் பூர்ஷுவாசி என்று திரிபடைந்தது. எது எப்படியோ சமூகத்தில் அந்தச் சொல் நிலைத்து விட்டது. இன்று உலகம் முழுவதும் முதலாளிய வர்த்தினர் பூர்ஷுவாசி என்று அழைக்கப் படுகின்றனர். பல ஐரோப்பிய மொழிகள் அந்தச் சொல்லை தமது அகராதிகளில் உள்வாங்கி விட்டன.
(பிற்குறிப்பு: இந்தக் கட்டுரை காணொளிப் பதிவாக YouTube இல் உள்ளது.)
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Tuesday, September 15, 2020
முதலாளித்துவ இந்தியா ஏழ்மையான இங்கிலாந்தை வளப்படுத்தியது எப்படி?
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், 1900 ம் ஆண்டளவில் உலகம் முழுவதும் முதலாளித்துவம் நிலைநிறுத்தப் பட்டு விட்டது. அதற்குக் காரணம், அந்தக் காலகட்டத்தில் மேற்கு ஐரோப்பியர்களே உலகம் முழுவதும் மேலாதிக்கம் செலுத்தினார்கள். ஐரோப்பியர்களின் சாம்ராஜ்யம் விரிந்த இடம் எல்லாம் முதலாளித்துவம் நிலை கொண்டது. உலகில் ஒவ்வொரு நாட்டிலும் ஐரோப்பிய வம்சாவளியினர் ஆட்சி செய்தனர். அன்றைய மேற்கு ஐரோப்பியரின் மேலாண்மை காரணமாகத் தான் இன்று உலகம் முழுவதும் முதலாளித்துவ பொருளாதாரம் காணப்படுகின்றது.
ஐரோப்பா எவ்வாறு உலகம் முழுவதும் படையெடுத்து அடக்கி ஆள முடிந்தது? வணிக மேலாதிக்கம் மட்டுமல்ல, இனப்படுகொலைகளும், சூறையாடலும் இதற்குக் காரணம். போர்த்துக்கீசியர்கள், ஸ்பானிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், ஹோலன்ட்காரர்கள் உலகம் முழுவதும் தமது வர்த்தக மையங்களை அமைத்துக் கொண்டனர்.
இந்த வணிக மையங்களில் அந்தந்த நாடுகளில் இருந்த வணிகப் பெறுமதி வாய்ந்த பொருட்கள் சேகரிக்கப் பட்டு வியாபாரம் செய்யப்பட்டன. அது மட்டுமல்ல, ஐரோப்பிய வணிகர்களின் தாய்நாட்டில் இருந்த துறைமுகங்களும் வணிகப் பொருட்களை களஞ்சியப் படுத்தும் இடங்களாக பயன்படுத்தப் பட்டன. சிலநேரம் இந்த வணிக மையங்கள் குடியேற்ற நோக்கிலும் பயன்படுத்தப் பட்டது. தென் ஆப்பிரிக்காவின் நன்நம்பிக்கை முனையை உதாரணம் காட்டலாம்.
வெள்ளையர்கள் குடியேறிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள், ஒன்றில் படிப்படியாக இனப்படுகொலை செய்யப் பட்டனர், அல்லது வனாந்திரப் பகுதிகளை நோக்கி விரட்டப் பட்டனர். எஞ்சியவர்கள் ஐரோப்பியர் போன்று நடை, உடை, பாவனையை பின்பற்ற வேண்டும் என கட்டாயப் படுத்தப் பட்டனர். மேற்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த மக்கள் அடிமைகளாக்கப் பட்டு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டனர்.
லத்தீன் அமெரிக்க கண்டம் தவிர்ந்த பிற உலக நாடுகள் பன்னாட்டு நிறுவனங்களால் காலனிப் படுத்தப் பட்டன. குறிப்பாக பதினெட்டம் நூற்றாண்டில் தோன்றிய கிழக்கிந்தியக் கம்பனி, ஹட்சன்பே (Hudson Bay) ஆகியன சாகசங்களில் நாட்டம் கொண்ட வணிகர்களால் உருவாக்கப் பட்டன.
இனப்படுகொலைக் குற்றவாளிகளை அவர்களது தாய்நாட்டை சேர்ந்த அரசாங்கமும் ஆதரவளித்தது. அத்துடன் அங்கு நடந்த மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு ஐ.நா. மன்றம் மாதிரி எந்த அமைப்பும் இருக்கவில்லை. மேற்கைரோப்பிய நாடுகளின் அரச நிதி உதவியில் இயங்கிய பன்னாட்டு நிறுவனங்கள், காலனிகளில் சுரண்டிய செல்வத்தில் பெரும் பகுதியை தமக்கே சொந்தமாக்கிக் கொண்டன.
அதாவது காலனிகளில் வர்த்தகம் செய்வதன் மூலம் கிடைத்த இலாபப் பணமானது வணிகர்களின் பைகளை நிரப்பினவே அன்றி, அரச கஜானாவுக்கு செல்லவில்லை. ஏன் ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகிய நாடுகளும் காலனிய சுரண்டலில் ஈடுபட்டாலும், அங்கு முதலாளித்துவம் வளரவில்லை? ஏனெனில் ஸ்பானிஷ், போர்த்துகீய காலனிகளில் கொள்ளையடிக்கப் பட்ட செல்வங்களில் பெரும் பகுதி மன்னர் குடும்பங்களுக்கே சென்றன. மன்னர்கள் தம்மையும், கடவுளையும் மகிமைப் படுத்துவதற்காக அவற்றை செலவளித்தனர்.
உலகின் பிற பாகங்களில் இருந்த நாகரிக சமுதாயங்களை சீர்குலைத்து, அல்லது அழித்ததன் மூலம் தான் ஐரோப்பியரின் செல்வம் திரட்டப் பட்டது. அமெரிக்கக் கண்டத்தில் இருந்த அஸ்தேக், மாயா நாகரிகங்கள் எவ்வாறு அழித்தொழிக்கப் பட்டன என்பது யாவரும் அறிந்ததே. அதே நேரம், இந்தியா, சீனா, ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்த நாகரிகங்கள் நொறுக்கப்பட்டு, அழிவின் விளிம்பில் விடப்பட்டன. இதனாலும் பெருமளவு செல்வத்தை திரட்ட முடிந்தது.
உதாரணத்திற்கு இந்தியாவை காலனிப் படுத்திய ஆங்கிலேயர்கள், அமெரிக்காவில் நடந்ததைப் போன்று, அங்கு வாழ்ந்த மக்களை இனப்படுகொலை செய்து நிலங்களை அபகரிக்கவில்லை. அப்படி செய்திருந்தால் இன்று தமிழ் நாடு நியூ இங்கிலாந்து என்று அழைக்கப் பட்டிருக்கும். அங்குள்ள பெரும்பான்மை இனம் ஆங்கிலேயர்களாக இருந்திருக்கும். தமிழர்கள் ஐம்பதாயிரம் பேரளவில் சில குறிப்பிட்ட இடங்களில் பழங்குடி இன மக்களாக வாழ்ந்திருப்பர்.
லத்தீன் அமெரிக்க கண்டத்தை கத்தோலிக்க கிறிஸ்தவ நாடுகளாக மாற்றிய மாதிரி, இந்தியாவை புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ நாடாக மாற்றியமைக்கவில்லை. அவ்வாறு நடக்காத காரணம், ஆங்கிலேயர்கள் கேட்கும் பொழுதெல்லாம் இந்தியா எனும் காராம் பசு வேண்டிய அளவு பாலை கொடுத்து வந்தது. அத்துடன் இந்தியர்களை ஐரோப்பியமயமாக்கும் பண்பாட்டு மாற்றமும் இலகுவாக நடந்து கொண்டிருந்தது. இதற்குப் பின்னால் நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ இந்தியர்களின் செல்வம் சுரண்டப் பட்டுக் கொண்டிருந்தது.
இந்தியாவில் கல்கத்தா, மும்பை ஆகிய நகரங்கள் தான் முதன்முதலாக முதலாளித்துவத்திற்கு மாறின. எஞ்சிய பிரதேசங்களில் நிலப்பிரபுத்துவ கட்டமைப்பில் பெரிய மாற்றங்கள் நடக்கவில்லை. ஆயினும் இந்தியா முழுவதிலும் இருந்து வாசனைத் திரவியங்கள், தங்கம், அரிசி, பருத்தி ஆகிய வணிகப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப் பட்டன. ஆரம்ப காலங்களில் வியாபாரங்களில் மட்டுமே ஈடுபட்ட ஐரோப்பிய வணிகர்கள், காலப்போக்கில் தாம் காலனிப் படுத்திய நாடுகளில் கிடைத்த மூலப்பொருட்களை ஐரோப்பிய தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கினார்கள். இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட பருத்தி என்ற மூலப்பொருள் இங்கிலாந்து தொழிற்சாலைகளில் ஆடைகளாக உற்பத்தி செய்யப்பட்டு, அவை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பப் பட்டன.
சீனாவும், ஜப்பானும் ஐரோப்பியர்களால் நேரடியாக காலனிப் படுத்தப் படவில்லை. சீனாவின் பிரதானமான துறைமுக நகரங்களான ஹாங்காங், பீகிங் போன்றன ஐரோப்பிய வணிகர்களின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப் பட்டன. சீன மன்னர் ஐரோப்பியரின் பொம்மையாக ஆட்சி செய்தார். இதன் மூலம் சீனாவின் நாகரிகம், பொருளாதாரம் ஆகியன சீர்குலைக்கப் பட்டன. ஜப்பான் வேறொரு விதமாக மாற்றமடைந்தது. ஜப்பானியர்கள் ஐரோப்பிய கலாச்சாரத்தை உள்வாங்கிக் கொண்டனர். ஐரோப்பியர்களை விட தீவிரமான முதலாளித்துவவாதிகளாக மாறினார்கள். இந்த சமூக- பொருளாதார மாற்றங்களின் விளைவாக ஜப்பான் ஆசியாவின் காலனியாதிக்கவாத நாடாகியது.
(இந்தக் கட்டுரை காணொளிப் பதிவாக YouTube இல் பதிவேற்றப் பட்டுள்ளது.)
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Tuesday, September 01, 2020
வாழ்க்கைப் போராட்டம் ஒரு மார்க்சிய பால பாடம்
மார்க்சியம் தோற்றுப்போன சித்தாந்தம் என்று பேசுவோர் முதலில் அதில் தாக்கம் செலுத்தும் ஹெகலியம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். ஹெகல் என்ற ஜெர்மன் தத்துவ அறிஞர் உருவாகிய தத்துவார்த்த கோட்பாடுகள் ஹெகலியம் என்று அழைக்கப் படுகின்றன. கார்ல் மார்க்ஸ் இளைஞனாக இருந்த காலத்தில் அவரும் தம்மை ஒரு ஹெகலியன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் பட்டார். அந்தளவுக்கு ஹெகலின் தத்துவக் கூறுகள் மார்க்சியத்தில் தாக்கம் செலுத்துகின்றன.
ஹேகல் 1807 ம் ஆண்டு வெளியிட்ட "ஆன்மாவின் தோற்றப்பாடுகள்" நூலின் மூன்று முக்கிய கருதுகோள்கள்:
- 1. அன்னியமாதல்
- 2. பண்டமாதல்
- 3. தன்னிலை அறிதல்
- அன்னியமாதல் என்பது மனிதர்கள் ஒருவரோடொருவர், தமக்குள் கூட முரண்பட்டு மோதிக் கொள்கிறார்கள்.
- அது பண்டமாகுதலை நோக்கி இழுத்து செல்கிறது. அதாவது சமூகம், சட்டம், ஒழுக்க நெறி போன்றவை மனிதர்களால் உருவாக்க்ப் பட்டன. காலப்போக்கில் இவற்றை தாமே உருவாக்கினோம் என்பதை மனிதர்கள் மறந்து விடுகின்றனர். அது மட்டுமல்ல அவை பகைமை கொண்ட சக்திகளாக மனிதர்களுக்கு எதிராக திருப்பி விடப் படுகின்றன. அவை மனிதர்கள் பண்டங்களாக நடத்துகின்றன.
- ஒரு மனிதன் தானே உருவாக்கிய உலகில் தான் ஒரு அன்னியனாக மாறி விட்டதை உணர்வது தன்னிலை அறிதல் எனப்படும். அப்போது சுய அறிவுக்கான கதவு திறந்து விடப் படுகிறது. வரலாற்று இயங்கியல், பிரதானமான பாடம்:
- எஜமான், அடிமைகளுக்கு இடையிலான உறவு.
- சமுகம் எதேச்சதிகார தன்மை கொண்ட மனிதர்களால் ஆளப் பட்டு வந்தது. காரணம் ஏனையோர் அடிமைகளாக இருந்தனர்.
- அடிமைகள் தமக்குள் சமமானவர்களாக இருந்தனர். அத்துடன் அவர்கள் எல்லோரும் எஜாமானில் தங்கி இருந்தனர்.
- ஒரு எஜமான் ஆதிக்கம் செலுத்துவதற்கு அவருக்கு கீழ்ப்படிவான மக்கள் தேவை. அதனால் அவர் கூட அடிமைகளில் தங்கி இருந்தார். இதனால் அடிமைகளை நன்றாக பராமரிக்க வேண்டிய தேவை உண்டாகிறது.
- இங்கு ஒரு இயங்கியல் விதி உருவாகிறது. அன்னியமாதலில் இருந்து பரஸ்பர அங்கீகாரம் என்ற கட்டத்திற்கு செல்கிறது. அதனால் வரலாறு முழுவதும் சுதந்திர வேட்கைக்கான கதைகளாக உள்ளன.
- அடிமைத்தனம் என்ற கருதுகோள், சுதந்திரம் என்பதன் எதிர்க் கருதுகோளாக உள்ளது. இந்த எதிர்வினை அடிமைத்தளைகளில் இருந்து விடுபட்டு சுதந்திரமான சமுதாயத்தை உருவாக்குகிறது.
- இந்த வரலாற்று பண்பாட்டுத் தளமானது ஒரு வினையில் (thesis) இருந்து, அதன் எதிர்வினையான (antithesis) இன்னொரு பண்பாட்டு தளத்திற்கு செல்கிறது. இந்த இரண்டும் இணைந்து மூன்றாவதானதொரு பண்பாட்டுத் தளம் இதன் விளைவாக (synthesis) உண்டாகிறது.
- ஹேகலை பொறுத்த வரையில் ஒவ்வொரு விளைவும் (synthesis) முற்போக்கானது. ஏனென்றால் அது கடந்த காலத்தில் இருந்த பிரச்சினைகளை ஏற்பட்ட அழுத்தங்களை களைந்து புதிய அழுத்தங்களை கொண்டு வருகின்றது. இருப்பினும் இந்த இயங்கியலானது எதிர்காலத்தில் உயர்ந்த ஸ்தானத்தை அடைவதற்கான கூறுகளைக் கொண்டிருப்பதால் பிரச்சினைகளும் புறக்கணிக்கத் தக்கது.
- ஹேகலின் Logica நூலில் தத்துவம் ஒரு முற்போக்கான இயக்கத்தை வழிநடத்தும் என்று கூறுகிறார். அவரது சொந்த தத்துவத்தை இதன் விளைவாக synthesis ஆக காண்கிறார்.
ஹேகலின் தவறு என்ன?
- தத்துவத்தின், சுதந்திரத்தின் பரிணாம வளர்ச்சியை பிரதிநிதித்துவப் படுத்திய, அப்போது அவர் வாழ்ந்து கொண்டிருந்த பிரஷிய- ஜேர்மன் தேசம் நாகரிகத்தின் இறுதிக் கட்டத்தில் நிற்பதாகக் கருதினார். இந்தக் கோட்பாட்டை கார்ல் மார்க்ஸ் மறுதலித்தார். அதை நிரூபிப்பது போன்று ஜேர்மனியில் அடுத்து நடந்த வரலாற்று நிகழ்வுகள் நடந்தன.
- ஹேகல் 1831 ல் இறந்தார். கார்ல் மார்க்ஸ் 1818 ல் பிறந்தார்.
- 1848 ம் ஆண்டு ஜேர்மன் புரட்சி நடந்தது. அது ஒரு லிபரல் புரட்சி. அதன் விளைவாக மக்கள் சுயநிர்ணய உரிமையை பெற்றுக் கொண்டனர். (அந்தக் காலத்தில் தனி மனித சுயநிர்ணயம் முக்கியமாக கருதப் பட்டது.) மேலும் சோஷலிஸ்டுகள் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை பெற்றனர். மார்க்ஸ், எங்கெல்ஸ் இவற்றை வர்க்கப் போராட்டமாகப் பார்த்தனர்.
- கார்ல் மார்க்ஸ் ஹேகலின் தத்துவங்களை நிராகரிக்கவில்லை. ஆனால் அவற்றில் இருந்த குறைபாடுகளை, போதாமைகளை தனது தத்துவத்தால் நிவர்த்தி செய்து கொண்டார்.
- "தத்துவ அறிஞர்கள் இந்த உலகை பல வழிகளிலும் விளங்கப் படுத்தி உள்ளனர். இந்த உலகை மாற்றுவதே அதன் நோக்கம்." - கார்ல் மார்க்ஸ்
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.