Friday, July 29, 2011

ஏழை யூதரின் எழுச்சி! இஸ்ரேலில் வர்க்கப் புரட்சி!!

"தேனும்,பாலும் ஆறாக ஓடும் நாடாக, ஆண்டவரால் வாக்களிக்கப்பட்ட" இஸ்ரேலில் வர்க்கப் போராட்டம். மூன்று லட்சம் இஸ்ரேலியர்கள் சமூக நீதி கோரி வீதியில் ஆர்ப்பாட்டம். சர்வதேச ஊடகங்கள் இருட்டடிப்பு. இஸ்ரேலில் ஆரம்பித்துள்ள மக்கள் எழுச்சியை காட்டும் வீடியோ ஆதாரம்.

விலைவாசி, வீட்டு வாடகை என்பன உயர்ந்து கொண்டே போகின்றன. அதற்கு ஈடுகட்டுமளவு ஊதியம் இல்லை. சம்பளத்தை அதிகரிக்காதது மட்டுமல்ல, பல முதலாளிகள் மாதக் கணக்காக சம்பளப் பாக்கியை கொடுக்காமல் இழுத்தடிக்கின்றனர். பொருளாதார சுமையால் பாதிக்கப்பட்ட சுமார் நாற்பதாயிரம் ஏழை யூதர்கள், கடந்த வாரம் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக, டெல் அவிவ் நகரின் மத்தியில் கூடாரங்களை அமைத்து போராடி வருகின்றனர். துனிசியாவில், எகிப்தில் இடம்பெற்ற அரபுலக மக்கள் எழுச்சி போன்று, இஸ்ரேலிலும் முகப்புத்தகம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம், மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கின்றனர். இஸ்ரேலிய தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. கடைசியாக நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் சுமார் ஒரு லட்சம் மக்கள் பங்கு பற்றியுள்ளனர். இஸ்ரேலிய பிரதமர் நேத்தன்யாஹு, போலந்துக்கு செல்லவிருந்த விஜயத்தை இரத்து செய்துள்ளார். தேசிய பத்திரிகை (Haaretz ) ஒன்றின் கருத்து கணிப்பில், 87 % இஸ்ரேலியர்கள் போராட்டத்தை ஆதரிப்பது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே மருத்துவத் துறை ஊழியர்கள், தாதிகள், வைத்தியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

(மேலதிக செய்திகள் தொடரும்....)




Thursday, July 28, 2011

வலதுசாரி- தேசியவெறிக்கு எதிரான போர்

22 ஜூலை, நோர்வேயின் வரலாற்றில் ஒரு கறுப்பு நாளாக பிரகடனப் படுத்தப் படலாம். உலகச் செய்திகளில் அரிதாக இடம்பிடிக்கும் "அமைதிப்பூங்காவில்" குண்டு வெடித்தது. அதைத் தொடர்ந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் என்பது பதின்ம வயது நோர்வீஜிய இளைஞர்கள் கொல்லப்பட்டனர். படுகொலைக்கு காரணமான அண்டெர்ஸ் பிறேவிக் (Anders Breivik) என்ற வெள்ளையின நோர்வீஜிய வாலிபன் கைது செய்யப்பட்டான்.

அன்று நடந்த பயங்கரவாத செயலை விட, கொலைகாரனின் கொள்கையை விளக்கும் அறிக்கை உலகம் முழுவதும் சலசலப்பை தோற்றுவித்தது. மேற்குலகில் வளர்ந்து வரும் வலதுசாரித் தீவிரவாதிகளை கவனத்தில் எடுக்காததால் வந்த வினைப்பயன் இது. நோர்வீஜிய பயங்கரவாதியின் அறிக்கையில் இருந்து பின்வரும் உண்மைகள் தெரிய வந்துள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் தேசியவாதிகள் தமது போரை ஆரம்பித்துள்ளனர். வெள்ளையரல்லாத குடிவரவாளர்கள், முஸ்லிம்கள், கம்யூனிஸ்டுகள், இடதுசாரிக் கொள்கை கொண்டோர், இவர்கள் எல்லோரும் எதிரிகளாக பிரகடனப் படுத்தப் பட்டுள்ளனர்.

வெள்ளையின இனவெறி கொண்ட அண்டெர்ஸ் பிறேவிக் நினைத்திருந்தால், நோர்வேயில் வாழும் வெளிநாட்டவர்களை குறி வைத்து தாக்கி இருக்கலாம். ஆனால், அவன் தனது சொந்த இன மக்களைத் தான் கொன்று குவித்துள்ளான். இது குடிவரவாளர்களுக்கு வழங்கப் பட்ட எச்சரிக்கை. "உங்களை இந்த நாட்டிற்குள் தங்க அனுமதித்தவர்கள் எமது இனத்தை சேர்ந்தவர் ஆயினும் கொலை செய்யத் தயங்க மாட்டோம். ஆகவே உங்களது நிலைமையை சற்று யோசித்துப் பாருங்கள்." நினைக்கவே குலைநடுங்கும் எச்சரிக்கை, எதிர்கால ஐரோப்பாவில் வெளிநாட்டு குடிவரவாளர்கள் சந்திக்கவிருக்கும் மிகப்பெரிய சவால்.

உலகம் முழுவதும் சமாதானத்திற்கு நோபல் பரிசு கொடுத்த நாடு இன்று தலை குனிந்து நிற்கின்றது. எம்மவர் மத்தியில் மட்டுமல்ல, பொதுவாக உலகம் முழுவதும் நோர்வேக்கு நல்ல பெயர் உண்டு. "அமைதியை விரும்பும் மக்களைக் கொண்ட நாட்டின்" பிரஜைகள் மாறி வருகின்றனர். அவர்கள் ஓரிரவில் மாறவில்லை. மக்கட்தொகையால் சிறிய நாடான நோர்வேயில் (மொத்த சனத்தொகை ஐந்து மில்லியனும் இல்லை), வெளிநாட்டு குடிவரவாளர்கள் மீதான வெறுப்பு அதிகரித்து வருகின்றது.

வெளிநாட்டவர் மீது துவேஷத்தை கக்கும் வலதுசாரிக் கட்சியான Frp (Fremskrittspartiet) யின் ஆதரவாளர்கள் அதிகரித்து வருகின்றனர். 90 உயிர்களைப் பலி கொண்ட கொலைகாரன் அண்டெர்ஸ் கூட அந்தக் கட்சியின் உறுப்பினராக இருந்துள்ளான். இன்று அந்தக் கட்சி படுகொலைகளை கண்டித்து, தனக்கு சம்பந்தம் இல்லாதது போலக் காட்டிக் கொள்கின்றது. இருப்பினும், உலகம் முழுவதும் பிரபலமான பயங்கரவாதியான அண்டெர்ஸ் பிறேவிக்கை ஆதர்ச நாயகனாகப் பார்க்கும் அடிமட்ட உறுப்பினர்கள் இல்லாமலில்லை.

நெதர்லாந்தின் "இஸ்லாமிய விரோத" அரசியல்வாதி கெர்ட் வில்டர்ஸ் (Gert Wilders), அண்டெர்ஸ் இனால் போற்றப்பட்டுள்ளார். ஆனால் வில்டர்ஸ் "ஒரு மனநோயாளியின் செயல்" என்று இணையத்தில் மட்டும் (டிவிட்டரில்) பதில் சொல்கிறார். நோர்வீஜிய கொலைகாரன் மட்டுமா ஒரேயொரு வில்டர்ஸ் இரசிகன்? ஒஸ்லோ படுகொலைகளுக்கு சில மாதங்களுக்கு முன்னர் தான், நெதர்லாந்தில் ஒரு ஆயுததாரி பொதுமக்களை சுட்டுக் கொன்றான். அவன் கூட வில்டர்சின் இஸ்லாமிய விரோத கருத்துகளால் கவரப்பட்ட "மனநோயாளி" தான். (கொலையாளியின் அரசியல் கருத்துகளை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தன. ஏனென்றால் "இடதுசாரி" முத்திரை குத்தி விடுவார்கள் என்ற அச்சம்!)

சமாதானத் தலைநகரமான ஒஸ்லோவில் என்பது பேரைக் கொன்று குவித்த அன்டெர்ஸ் பிறேவிக் ஒரு மனநோயாளியாக இருக்க சாத்தியமில்லை. இதனை பல மனநல மருத்துவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். 1500 பக்கம் கொண்ட அறிக்கையை தயாரித்த புத்திஜீவி எவ்வாறு மனநலம் குன்றியவராக இருக்க முடியும்? அன்டெர்ஸ் பிறேவிக் கொள்கை ரீதியாகவும், தாக்குதலுக்கான இலக்கை தேர்வு செய்வதிலும் பற்றுறுதியுடன் நடந்துள்ளான். அவனை மனநோயாளியாக சித்தரிப்பதன் மூலம், எதிர்கால அபாயத்தை மூடி மறைக்கப் பார்க்கின்றனர்.

பத்து வருடங்களுக்கு முன்னர், பின்லாடனை மனநோயாளியாக சித்தரித்திருந்தால், பொது மக்களும் "அல்கைதா பயங்கரவாதம்" குறித்து விழிப்புடன் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால், "அல்கைதா வகையறாக்கள் நம்மினத்தவர்கள் அல்ல. எங்கோ மத்திய ஆசியாவில் வாழும் காட்டுமிராண்டி சமூகத்தை சேர்ந்தவர்கள். நம்மவர்கள் நாகரீகத்தில் சிறந்தவர்கள். அதனால் தான் எம்மை வெறுக்கிறார்கள்...." இவ்வாறு தான் மேற்குலக அரசுகள் தமது மக்களுக்கு பிரச்சாரம் செய்து வந்தன. நாகரீகமடைந்த வெள்ளையினத்தவர்கள் மத்தியிலும் ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் இருக்கின்றது என்ற உண்மையை எப்படி ஒத்துக் கொள்ள முடியும்?

மேற்குலகம் எவ்வாறு உலகிலேயே நாகரீகமடைந்த சமூகமாக கருதப்படுகின்றது? நிச்சயமாக அவர்களது ஜனநாயகமோ, மனித உரிமைகளோ, அல்லது மனிதாபிமான கொள்கையோ காரணமல்ல. இனப்படுகொலை, பயங்கரவாதம், கொள்ளை, நில ஆக்கிரமிப்பு, இவை போன்ற மனித குலத்திற்கு விரோதமான செயல்களை செய்து தான் "நாகரீகமடைந்தார்கள்". நோர்வே உட்பட ஸ்கண்டிநேவிய நாடுகளும் 20 நூற்றாண்டில் தான் நிரந்தர அமைதியைக் கண்டன. அது வரையும் போரினால் அல்லல் பட்டுக் கொண்டிருந்த தேசங்கள் அவை. நோர்வே, சுவீடன், டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு பொதுவான கலாச்சாரம் உண்டு. பொதுவான மொழி உண்டு. (மூன்று மொழிகளும் சிறிதளவே வேறுபடுகின்றன.) சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தான், மத்திய கால நிலப்பிரபுத்துவ ஆட்சிமுறை நிலைநாட்டப்பட்டது. அந்தக் காலத்தில் நிலப்பிரபுத்துவ சமுதாயம் முற்போக்கானதாக கருதப்பட்டது.

கிறிஸ்தவ மதத்தின் வருகையும், மன்னர்கள் புதிய மதத்தை தழுவியதும், ஸ்கண்டிநேவிய மக்களை நாகரீகமடைய வைத்தது. அதற்கு முன்னர், "வைகிங் கொள்ளையர்களாக" பிற ஐரோப்பிய நாடுகள் மீது படையெடுத்து நாசம் விளைவிப்பது, "காட்டுமிராண்டி சமூகத்தினரின்" தொழிலாக இருந்தது. ஸ்கண்டிநேவிய மக்களின் கிறிஸ்தவ மதத்தின் மீதான பற்றுறுதிக்கு காரணம், அவர்களின் கடந்த கால வரலாற்றில் தேட வேண்டும். இன்றும் கூட இந்நாடுகளின் தேசியக் கொடிகளில் சிலுவை பொறிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. முழு ஐரோப்பியக் கண்டத்திலும் பரவிய கிறிஸ்தவ மதம், மிகத் தாமதமாகத் தான் ஸ்கண்டிநேவிய நாடுகளை வந்தடைந்தது. எப்போதும் சமீப காலத்தில் மதம் மாறியவர்கள் தான், அதிகளவு மதப்பற்று உள்ளவர்களாக காட்டிக் கொள்வார்கள்.

நோர்வேயில் பயங்கரவாத கொலைகளை செய்த அன்டெர்ஸ் பிறேவிக் கூட ஒரு கிறிஸ்தவ மத அடிப்படைவாதி தான். அதனை அவனது அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளான். மத்திய காலத்தில் வத்திகானின் கத்தோலிக்க திருச்சபை தலைமையில் நடந்த சிலுவைப்போர் மீண்டும் வர வேண்டும் என்று விரும்புகின்றான். அதற்கான திட்டத்தை செயற்படுத்துவதற்காக, ஒரு இரகசிய குழுவை அமைத்துள்ளார்கள். அந்தக் குழுவின் நோர்வேக் கிளையின் செயலாகவே நடந்து முடிந்த பயங்கரவாத வன்முறை பார்க்கப்பட வேண்டும். ஐரோப்பாவில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றுவது அவர்களின் குறிக்கோளாக உள்ளது.

"முஸ்லிம்கள்" என்பது வெள்ளையரல்லாத வெளிநாட்டு குடிவரவாளர்களையும் குறிக்கும். ஆசிய, ஆபிரிக்க நாடுகளை சேர்ந்தோர் கிறிஸ்தவர்கள், இந்துக்கள், பௌத்தர்களாக இருந்தாலும் அவர்கள் பார்வையில் முஸ்லிம்கள் தான். 

இறுதியில் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் வெள்ளயினத்தவர்களை மட்டுமே கொண்ட ஐரோப்பாவை உருவாக்குவது தான் அவர்களது இலட்சியம். அவர்களது இலட்சியத்திற்கு தடையாகவிருப்பது, "கடவுள் நம்பிக்கையற்ற கம்யூனிஸ்டுகள்", மற்றும் பல இடதுசாரி சிந்தனை கொண்டோர். அதனால் தான், நோர்வேயை ஆளும் சமூக ஜனநாயக கட்சியான தொழிற்கட்சியின் இளைஞர் முகாமிற்கு சென்றோர் படுகொலை செய்யப்படனர்.

இன்று எழுந்துள்ள வலதுசாரித் தீவிரவாதம், நவ-நாஜிகளிடம் இருந்து வேறுபடுகின்றது. மிகச் சிறிய எண்ணிக்கையில் உள்ள நவ- நாஜிகள் ஹிட்லர் காலத்து இனவெறிக் கொள்கைகளை இன்றும் பின்பற்றுகின்றனர். குறிப்பாக ஹிட்லரின் "யூத வெறுப்பு", "பாசிசக் கட்டுப்பாடுகள்", "தலைமை மீதான விசுவாசம்" போன்ற கொள்கைகளை மாற்றமேதுமின்றி பின்பற்றும் "பழமைவாத பாசிஸ்டுகள்". ஆனால் நமது காலத்தில் தோன்றியுள்ள நவீன பாஸிசம் ஜனநாயக முகமூடியை பயன்படுத்திக் கொள்கின்றது. அவர்கள் தமது இனவெறிக் கருத்துகளை, கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நியாயப் படுத்துகின்றனர். "வெளிநாட்டுக் கிரிமினல்கள்", "மசூதி கட்டும் முஸ்லிம்கள்", இவ்வாறு ஜனரஞ்சகமான விடயங்களை வைத்து அரசியலை கொண்டு செல்கின்றனர்.

அதிர்ஷ்டவசமாக, அமெரிக்காவின் அல்கைதா பயங்கரவாதத்திற்கு எதிரான போர், அவர்களுக்கு பெருமளவு உதவியுள்ளது. அமெரிக்காவை போன்றே, நவீன பாசிஸ்டுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில், "இஸ்ரேல் ஐரோப்பா சார்பில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது." அதாவது "முஸ்லிம் படையெடுப்பை தடுக்கும் எல்லைப்புறக் காவல் அரண் போன்று" இஸ்ரேல் செயற்படுகின்றது. தமிழர்கள் மத்தியில் உள்ள "இஸ்ரேலிய ஆதரவாளர்களும்" தெரிந்தோ தெரியாமலோ, வெள்ளையின பேரினவாதிகளினால் மூளைச் சலவை செய்யப் பட்டுள்ளனர்.

தேசியவாதத்தின் தோற்றத்தை எடுத்துப் பார்த்தால், அது என்றென்றும் பேரினவாதமாகவே செயற்பட்டு வந்துள்ளமை புலனாகும். ஐரோப்பாவில் தேசியவாத வெறியூட்டப்பட்ட மக்களின் ஆதரவு, ஹிட்லரின் பேரழிவு விளைவித்த இரண்டாம் உலகப்போர் வரை இட்டுச் சென்றது. அதற்குப் பிந்திய காலங்களில், லிபரல்களும், "கலாச்சார மார்க்சியர்களும்" ஐரோப்பாவை சீரழித்து விட்டதாக நவீன பாசிஸ்டுகள் கவலைப் படுகின்றார்கள். அதனால் அவர்கள், வெள்ளயினத்தை சேர்ந்த "கலாச்சார மார்க்சியர்கள்" மீதும் போர்ப் பிரகடனம் செய்துள்ளனர்.

"வலதுசாரி- தேசியவாத சக்திகள்" ஐரோப்பிய சமூகத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக வளர்ந்துள்ள. ஐரோப்பிய அரசுகள் இவர்களை இனங்கண்டு அடக்க வேண்டும். ஐரோப்பிய சமுதாயம் வர்க்க அடிப்படையில் இரண்டாகப் பிரிவதை எவராலும் தடுக்க முடியாது. பிற்போக்கான தேசியவாதக் கொள்கைகளால் வசீகரிக்கபப்டும் புலம்பெயர்ந்த மக்களுக்கும் இது சோதனைக் காலம். வெள்ளையின- தேசியவாதிகள் அவர்களை அழித்தொழிக்க கிளம்புவார்கள். அந்த நேரத்தில், புலம்பெயர்ந்த தமிழர்களும் இடதுசாரி சக்திகளுடன் வர்க்க அடிப்படையில் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்.


நோர்வே தொடர்பான முன்னைய பதிவுகள்:
2083: கம்யூனிஸ்டுகள், முஸ்லிம்களுக்கு எதிரான சிலுவைப்போர்!
நோர்வே குண்டு வெடிப்பும், வெள்ளையின பயங்கரவாதமும்

Sunday, July 24, 2011

2083: கம்யூனிஸ்டுகள், முஸ்லிம்களுக்கு எதிரான சிலுவைப்போர்!


"எமக்குத் தெரிந்ததெல்லாம், Anders Breivik ஒரு தீவிர வலதுசாரி, கிறிஸ்தவ மத அடிப்படைவாதி."- Roger Andresen , ஒஸ்லோ பொலிஸ் நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில்.

வலதுசாரித் தேசியவாதிகள், கம்யூனிச எதிர்ப்பாளர்கள், முஸ்லிம் விரோதிகள், கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள், இது போன்ற கொள்கைகளைக் கொண்டவர்கள் எந்தளவு ஆபத்தானவர்கள் என்பதை ஒஸ்லோ படுகொலைகள் நிரூபிக்கின்றன. நோர்வேயின் முதலாவது பயங்கரவாத குண்டுவெடிப்பை நிகழ்த்தி விட்டு, 90 பேரை படுகொலை செய்து விட்டு, போலீசிடம் சரணடைந்த Anders Breivik என்ற கொலைகாரனின் அரசியல் பின்னணி அது தான். மேற்கத்திய நாடுகளில், இன்னமும் இத்தகைய கொள்கைகளைக் கொண்ட வெள்ளையின பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர்.

மேற்குலக அரசுகள் இதுவரை காலமும், கம்யூனிஸ்டுகளையும், முஸ்லிம்களையும், தம் மக்களுக்கு எதிரிகளாகக் காட்டி வந்தன. ஆனால், மிகவும் கொடிய பயங்கரவாதிகள் வெள்ளையின சமூகத்தினுள் மறைந்திருப்பதை புறக்கணித்து வந்துள்ளன. சாதாரணமாக, விமான நிலையைப் பரிசோதனையின் போது, ஆசிய, ஆப்பிரிக்க தோற்றம் கொண்டவர்களை மணித்தியாலக் கணக்காக சோதிப்பார்கள். அதே நேரம், வெள்ளை தோலைக் கண்டால், எந்த வித சோதனையுமின்றி போக அனுமதிப்பார்கள்.

"வெள்ளையினத்தவர்கள் பயங்கரவாதியாகவோ, அல்லது குற்றவாளியாகவோ இருக்க வாய்ப்பில்லை," என்று கருதும் அதிகார வர்க்கத்தின் அலட்சியப் போக்கை வெள்ளையின- பயங்கரவாதிகள் தமக்கு சாதகமாக்கிக் கொள்கின்றனர். 1995 ம் ஆண்டு, அமெரிக்காவில் ஒக்லஹோமா நகரில் குண்டு வைத்தது ஒரு வலதுசாரி, கிறிஸ்தவ மத அடிப்படைவாதி என்பது தெரிந்த பிறகும், மேற்குலகம் இன்னும் விழிப்படையவில்லை.

நோர்வேயில், கடந்த பத்தாண்டுகளாக, முஸ்லிம் குடியேற்றவாசிகளை உளவறிந்த அளவிற்கு, வெள்ளையினத் தேசியவெறியர்களை கண்காணிக்கவில்லை. அந்த மாபெரும் தவறுக்காக நோர்வே கொடுத்த விலை மிகப் பெரியது. இனிமேல் உலகம் முழுவதும், தீவிர வலதுசாரித் தேசியவாதிகளும், கம்யூனிச எதிர்ப்பாளர்களும், மக்கள் விரோதிகளாக கருதப்பட வேண்டிய காலம் வந்து விட்டது.

Anders Breivik என்ற கொலைகாரன், ஒஸ்லோ படுகொலைக்கு முன்னர், தனது கொள்கைகளை விளக்கும் பிரகடனம் ஒன்றை தயாரித்து பின்லாந்தின் வலதுசாரிக் கட்சியின் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளான். அதனை சுருக்கமாக வீடியோ பிரதியாக பதிவு செய்து Youtube பில் வெளியிட்டுள்ளான். மார்க்சியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக புனிதப்போரை நடத்தக் கிளம்பியிருக்கும் இரகசிய அமைப்பொன்றின் விபரம் கொடுக்கப் பட்டுள்ளது.

2002 ல், லண்டனில் நிறுவப்பட்ட Knights Templar அமைப்பில், ஐரோப்பா முழுவதும் இருந்து 12 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். "பேச்சுவார்த்தைக்கான காலம் முடிந்து விட்டது. இனிமேல் ஆயுதப்போராட்டமே ஒரே வழி. உலகம் என்னை இப்போது ஒரு பயங்கரவாதியாக கணிக்கலாம். ஆனால், சில காலத்தின் பின்னர், மக்கள் என்னை நியாயத்திற்காக போராடிய தியாகியாக மதிப்பார்கள்." - இவ்வாறு அந்தக் கொலைகாரனின் வாக்குமூலம் அமைந்துள்ளது. பன்முகக் கலாச்சாரம் என்ற பெயரில் நாட்டை சீரழிக்கும் ஐரோப்பிய அரசுகளை கவிழ்ப்பதும், அந்த இரகசிய அமைப்பின் நோக்கமாக இருந்துள்ளது. இஸ்ரேலுக்கு உதவுவதும், முஸ்லிம்களை ஐரோப்பாவை விட்டு விரட்டுவதும் அதன் குறிக்கோளாக உள்ளன. (நவீன கிறிஸ்தவ சிலுவைப் போராளிகள், வெள்ளயினத்தவர்களை மட்டுமே கிறிஸ்தவர்கள் என்று நம்புகிறார்கள். ஆசிய, ஆப்பிரிக்க நாட்டவர்களை, அவர்கள் கிறிஸ்தவர்களாக இருப்பினும், "முஸ்லிம்கள்" என்று தான் குறிப்பிடுவார்கள்.)

"2083 , ஐரோப்பாவின் சுதந்திரப் பிரகடனம்" (2083: A European Declaration of Independence)என்று தலைப்பிடப் பட்டுள்ள அறிக்கை, இரகசிய இயக்கத்தின் திட்டங்களை விபரிக்கின்றது. மார்க்சியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக புனிதப்போரை அறிவித்துள்ள இந்த அமைப்பு, "கலாச்சார மார்க்சியம்" ஐரோப்பாவை இஸ்லாமிய மயப் படுத்தி வருவதாக அச்சுறுத்துகின்றது. மத்திய கால வத்திகானின் சிலுவைப்போரை மீண்டும் கொண்டு வர விரும்புகின்றது. சக ஐரோப்பிய குடிமக்களை, நவீன சிலுவைப்போரில் பங்குபற்ற வருமாறு அறைகூவல் விடுக்கின்றது. அறிக்கை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது பகுதியில், உலகில் "கம்யூனிஸ்டுகளால் விளைந்த தீமைகளை" எடுத்துக் காட்டுகின்றது. 

இரண்டாவது பகுதி, "ஐரோப்பியரை அழிக்கும் நோக்கில் வந்து கொண்டிருக்கும் முஸ்லிம் குடியேறிகளைப்" பற்றி எச்சரிக்கை செய்கின்றது. மூன்றாவது பகுதி, மீண்டும் ஒரு சிலுவைப்போரின் அவசியத்தை வலியுறுத்துகின்றது. பண்டைய கால சிலுவைப்போரின் வீர புருஷர்களை, ஆதர்ச நாயகர்களாக போற்றுகின்றது. இங்கே இணைக்கப் பட்டுள்ள வீடியோவைப் பார்க்கும் பொழுது, இந்த கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள், எந்தளவு கம்யூனிஸ்டுகளையும், முஸ்லிம்களையும் வெறுக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

நோர்வேயை ஆளும் சமூக ஜனநாயக பாரம்பரியத்தைக் கொண்ட தொழிற்கட்சியை, இன்று ஒரு இடதுசாரிக் கட்சியாக கருத முடியாது. ஆயினும், ஆசிய,ஆப்பிரிக்க குடியேற்றவாசிகள் அந்தக் கட்சிக்கே அதிகளவு வாக்களித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடந்த இளைஞர் முகாமில் கூட, பன்னாட்டு இளைஞர்கள் கட்சி உறுப்பினர்களாக கலந்து கொண்டுள்ளனர். "வெளிநாட்டவர்களுக்கு சம உரிமை வழங்குவது, நாட்டை சீரழிக்க விரும்பும் இடதுசாரிகளின் சூழ்ச்சி..." என்று தான், வலதுசாரிக் கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றன. 90 பேரைக் கொன்ற வெள்ளையின பயங்கரவாதி அன்டெர்ஸ் ப்ரேவிக் கூட, வெளிநாட்டவரை வெறுக்கும் Frp கட்சியின் உறுப்பினராக இருந்துள்ளான்.

"வலதுசாரித் தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டம் தான் எமது எதிர்காலம்..." என்று தெரிவித்தார் ஒரு நோர்வீஜிய மூதாட்டி. வலதுசாரிப் பாதையில் போய்க் கொண்டிருக்கும் முன்னாள் "இடதுசாரிக் கட்சிகள்" என்ன செய்யப் போகின்றன? மீண்டும் சமூக- ஜனநாயகப் பாதைக்கு திரும்பப் போகின்றனவா? அல்லது வெள்ளையினப் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணியப் போகின்றனவா? மேலைத்தேய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும், பிற வெளிநாட்டவர்களும் என்ன செய்யப் போகின்றனர்? இனிமேலும் பிற்போக்கு வலதுசாரிகளுக்கு பின்னால் அணிதிரள்வார்களா? அல்லது நவ- நாஜிசப் பயங்கரவாதத்தை எதிர்த்து ஐரோப்பிய வர்க்கப் போராட்டக் களத்தில் இறங்கப் போகிறார்களா? தீவிர வலதுசாரிகள் தங்கள் எதிரிகள் யார் என்று, பிரகடனப் படுத்தி விட்டார்கள். உங்கள் நண்பர்கள் யார் என்பதை, நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

நோர்வே குண்டு வெடிப்பு பற்றிய விரிவான கட்டுரை:நோர்வே குண்டு வெடிப்பும், வெள்ளையின பயங்கரவாதமும்

நிறவெறியர்களின் சிலுவைப்போர் திட்டங்கள் குறித்த முழுமையான ஆவணத்தை இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம்:2083: A European Declaration of Independence

வெள்ளையின நிறவெறிப் பயங்கரவாதிகளின் கொள்கைப் பிரகடனம், வீடியோ வடிவில்:


மேலதிக தகவல்களுக்கு:
1.Oslo Suspect Wrote of Fear of Islam and Plan for War
2.Drapsmannen la ut detaljert «terrordagbok»
3.Breivik Called on Conservatives to 'Embrace Martyrdom'

Saturday, July 23, 2011

நோர்வே குண்டு வெடிப்பும், வெள்ளையின பயங்கரவாதமும்

22 ஜூலை 2011, நோர்வே நாட்டின் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் உலகை உலுக்கி விட்டது. வெள்ளிக்கிழமை பிற்பகல், நகர மத்தியில் அமைந்துள்ள அரச கட்டிடங்களை இலக்கு வைத்து கார்க் குண்டு வெடித்துள்ளது. பிரதமர் அலுவலகமும், சில அமைச்சு அலுவலகங்களும், குண்டுவெடிப்பால் சேதமடைந்துள்ளன. கட்டிடங்கள் தகர்ந்துள்ள போதிலும், இரு வழிப்போக்கர்கள் மட்டுமே அகால மரணமடைந்துள்ளனர். அரச ஊழியர்களின் இழப்பு குறித்த தகவல்கள் தெரியவில்லை. பிரதமர் இரகசியமான இடத்தில் பத்திரமாக இருப்பதாக அறிக்கைகள் விடப்பட்டன. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், நோர்வேயில் இடம்பெற்ற முதலாவது குண்டுவெடிப்புச் சம்பவம் இதுவாகும். சமாதான விரும்பிகளின் நாடு என்ற விம்பத்தை தகர்த்த, குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகள் யார், என்ற ஊகங்கள் நாலாபக்கமும் இருந்து கிளம்பின. ஊடகங்கள் வழமை போல அல்கைதாவை குற்றம் சுமத்தின. "நோர்வே ஆப்கானிஸ்தான் போரில் ஈடுபட்டிருப்பதால் பழிவாங்கத் துடித்த அல்கைதா..." "ஈராக்கிய இஸ்லாமிய மதத் தீவிரவாதி முல்லா நாடுகடத்தப்படவிருந்ததால், நோர்வே அரசியல்வாதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார்..." "லிபியா மீதான நேட்டோ குண்டுவீச்சில் நோர்வே பங்கெடுப்பதால், எச்சரிக்கை விடுத்த கடாபியின் கைக்கூலிகள்..." இவ்வாறு அனைவரின் கவனமும் மத்திய கிழக்கு, அல்கைதா அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பக்கமே குவிந்திருந்தது. "உள்ளூர் பயங்கரவாதிகள்" என்று பல தசாப்தங்களாக நோர்வேயில் வாழும் பாகிஸ்தானிய சமூகமும் குற்றம் சாட்டப்பட்டது.

பி.பி.சி. உலகச் சேவையில் தோன்றிய, நிபுணர் என்று அழைத்துக் கொள்ளும் ஒருவர், "சந்தேகத்திற்கிடமின்றி இது அல்கைதாவின் செயல் தான்." என்று பிதற்றினார். உலகில் இதற்கு முன்னர் இடம்பெற்ற "அல்கைதா குண்டுவெடிப்புகள்" அதிகளவு பொதுமக்களின் இழப்புகளை ஏற்படுத்திய "மென்மையான இலக்குகள்" என்ற உண்மை அந்த நிபுணருக்கு தெரியவில்லை. ஓரிரு மணிநேரத்தின் பின்னர், நோர்வேயில் இருந்து இன்னொரு தகவல் வந்தது. குண்டுவெடிப்பை தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது. ஆளும்கட்சியின் கூட்டம் ஒன்றில், சரமாரியாக சுட்டுத்தள்ளிய நபர், போலிஸ் உடையில் வந்த நோர்வீஜிய தோற்றம் கொண்ட வெள்ளையினத்தவர். பிபி.சி. அந்த செய்தியை அறிவித்ததும், மீண்டும் "பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்" என்ற பைத்தியம் உளற ஆரம்பித்து விட்டது. "அல்கைதா இப்போதெல்லாம் வெள்ளை இனத்தவர்களை சேர்த்து வருகின்றனர். பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாக, அத்தகைய நபர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துகின்றனர்."

ஆனால், அடுத்த நாள் பொழுது புலர்ந்த வேளை, உண்மை என்னவென்று உலகம் அறிந்து கொண்டது. கடந்த பத்து வருடங்களாக, சர்வதேச ஊடகங்கள் செய்து வரும் இனவாதப் பிரச்சாரம், இம்முறை ஆதாரங்களுடன் அம்பலமாகியது. ஆயினும் என்ன? தாக்குதல்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வேலை இல்லை என்று நிரூபிக்கப் பட்டவுடன், அடக்கி வாசிக்க ஆரம்பித்து விட்டன. 90 பேர்களின் மரணத்திற்கு காரணமான கொலைகாரன் ஒரு வெள்ளையின நோர்வேஜியன் என்பதால், அவன் ஒரு புத்தி பிறழ்ந்தவன் என்று கதையை முடித்து விட்டார்கள். ஒரு வேளை, தாக்குதலை நடத்தியது ஒரு முஸ்லிம் என்றால், "பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் அவசியம்" குறித்து ஒபாமா விரிவுரை ஆற்றியிருப்பார். வெளிநாட்டுக் குடியேறிகளை கட்டுப்படுத்துமாறு, வலதுசாரிகள் நோர்வே அரசுக்கு அழுத்தம் கொடுத்திருப்பார்கள். தற்போது உள்நாட்டை சேர்ந்த தீவிர வலதுசாரி அரசியல் சக்திகள் தான் இந்த பயங்கரவாத செயலை புரிந்துள்ளமை நிரூபிக்கப் பட்டுள்ளது. இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

தாக்குதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கும், நேரமும் முன்கூட்டியே நன்கு திட்டமிடப் பட்டுள்ளன. அரச அலுவலகங்களில் பணிபுரிவோர், மற்றும் பிரதமரை கொலை செய்யும் நோக்கில் குண்டு வெடிக்கப் பட்டிருக்கலாம்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் என்பதால் மட்டுமல்ல, நோர்வேயில் தற்போது கோடை கால விடுமுறைக் காலம் என்பதாலும், தெருவில் சன நடமாட்டம் குறைவு.
ஆகையினால், தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் சாதாரண பொதுமக்களின் இழப்பை குறைக்க விரும்பியுள்ளனர். அல்கைதா பாணி தீவிரவாதிகள் என்றால், "மத நம்பிக்கையற்ற எல்லோரும் பரலோகம் போக வேண்டும்..." என்று விரும்பியிருப்பார்கள். பிற்காலத்தில் மக்கள் ஆதரவை இழக்க விரும்பாத உள்நாட்டு அரசியல் சக்தி ஒன்று தான் இந்த தாக்குதலை திட்டமிட்டிருக்கும். உள்நாட்டில் வளர்ந்து வரும் நவ-நாஜிச அல்லது தீவிர வலதுசாரிக் குழுக்கள் மீது தான் இயல்பான சந்தேகம் திரும்புகின்றது.

நோர்வேயில் நவ நாசிச கொள்கை கொண்ட குழுக்கள் தடை செய்யப் பட்டிருந்த போதிலும், "வெகுஜன அரசியல்" செய்யும் Fremskrittspartiet போன்ற கட்சிகள் வளர்ந்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர், "நோர்வேயின் பிற நகரங்களும் ஒஸ்லோ போன்று மாறி வருகின்றன... வெளிநாட்டவர் தொல்லை அதிகரிக்கின்றது... கிரிமினல்கள், விபச்சாரிகள், பிச்சைக்காரர்கள், அகதிகள் பெருகி வருகின்றனர்." என்று உள்ளூர் நாளிதழ் ஒன்றில் ஒப்பாரி வைத்தது. அவர்களைப் பொறுத்த வரையில், இந்த தீமைகளுக்கெல்லாம் ஆளும் தொழிலாளர் கட்சியின் (Arbeiderpartiet) தவறான கொள்கை காரணமாகும். குறிப்பாக "முஸ்லிம் குடியேற்றவாசிகள் பெருகி வருவதால், நோர்வேயில் குண்டு வெடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை..." என்று இனவாதக் கருத்துகளை பரப்பி வருகின்றது.

தற்போது நடந்துள்ள குண்டுவெடிப்புக்கு தீவிர வலதுசாரி கொள்கை கொண்டோரே காரணம் என்பதால், நோர்வே மக்கள் மத்தியில் அவர்களுக்கான ஆதரவு குறையலாம். ஆனால், நீண்ட கால நோக்கில், தீவிரவாத எண்ணம் கொண்டோருக்கு மக்கள் ஆதரவு அதிகரிக்கலாம். எப்படியும் "வீர சாகசங்களைப் புரியும் செயல்வீரர்கள்" மீது மக்கள் மதிப்பு வைக்கலாமல்லவா? பொலிசாரினால் கைது செய்யப்பட்ட, தாக்குதலில் ஈடுபட்ட Anders Behring Brevik என்ற 32 வயது இளைஞனின் கொள்கையும் அதுவாக இருந்துள்ளது. அந்த நபரின் பேஸ்புக், டிவிட்டர் போன்ற தளங்களில் காணப்பட்ட வாசகங்கள் பகிரங்கப் படுத்தப் பட்டுள்ளன. "ஒரு மத நம்பிக்கையாளன், வெறும் நலன்களை மட்டுமே பேணும் ஒரு இலட்சம் படைவீரருக்கு சமமானவன்." என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரேயொரு வாசகம் மட்டுமே டிவிட்டரில் காணப்பட்டது. இதை விட, இணைய விவாதங்களில் கலந்து கொண்டு, கிறிஸ்தவ மத அடிப்படைவாதக் கருத்துகளை உதிர்த்துள்ளார். நெதர்லாந்தின் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல்வாதி கெர்ட் வில்டர்ஸ், மறைந்த பிரித்தானிய பிரதமர் சேர்ச்சில் ஆகியோரின் அபிமானியாக இருந்துள்ளார். முகநூலில் சிறந்த நூலுக்கான இவரது தெரிவாக ஆர்வேல் எழுதிய "1984" காணப்படுகின்றது. இவர் தன்னை ஒரு நோர்வீஜிய தேசியவாதியாக இனங்காட்டியுள்ளார். தற்காலத்தில் நடப்பது முதலாளித்துவத்திற்கு எதிரான போர் இல்லை. மாறாக, சர்வதேசியத்திற்கு எதிரான தேசியவாத சக்திகளின் போர்." என்று அந்த வெள்ளையின பயங்கரவாதி தத்துவ முத்துகளை உதிர்த்துள்ளார்.

ஒஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பை அடுத்து, அங்கிருந்து 40 கி.மி. தூரத்தில் உள்ள "உத்தேயா" (Utøya) என்னும் தீவில் தான் அதிகளவு மரணங்கள் சம்பவித்துள்ளன. ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் இளைஞர் அணியின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வுகள் அந்தத் தீவில் நடந்து கொண்டிருந்தன. நாடு முழுவதிலும் இருந்து, இளம் வயது கட்சி உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர். தொழிலாளர் கட்சி இன்று ஒரு வலதுசாரி சந்தர்ப்பவாதக் கட்சியாக மாறி விட்டாலும், வெளிநாட்டவர் மத்தியில் மத்திய-இடதுசாரிக் கட்சியாக பார்க்கப்பட்டது. இதனால் பல அந்நிய குடியேறிகளின் சமூகங்களை சேர்ந்த இளைஞர்களும் கலந்து கொண்டுள்ளனர். தொழிலாளர் கட்சியின் கோடைகால முகாம் நடைபெற்ற இடத்திற்கு, கொலைகாரன் பொலிஸ் உடையில் சென்றுள்ளான். "ஒஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பந்தமாக, பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க அனுப்பப் பட்டதாக..." கூறியுள்ளான். தொடர்ந்து, கண்மூடித் தனமாக சுட்டதில் 90 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் அந்த இடத்திற்கு விரைந்த பொலிஸ் படையினர், Anders Brevik என்ற கொலைகாரனை மடக்கிப் பிடித்துள்ளனர். இருப்பினும், ஒரேயொரு நபர், ஒரு தானியங்கி துப்பாக்கி மூலம், 90 பேரை சுட்டுக் கொன்றமை நம்புவதற்கு கடினமானது. துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இன்னொரு நபரும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், பிறிதொரு இடத்தில் கைது செய்ததாகவும் அறிவித்தார்கள். ஆரம்பத்தில், தாக்குதல்கள் "ஒரு மனநோயாளியின்" செயல் என்று தெரிவித்தார்கள். போலிசிடம் அகப்பட்ட பயங்கரவாதி ஒரு "வெள்ளையின, கிறிஸ்தவ மத அடிப்படைவாதி" என்பதால், ஊடகங்களும் அதிகம் ஆராயவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் வெறும் கருவிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது. இவர்களுக்குப் பின்னால், ஒரு இயக்கம், அல்லது அரசியல் சக்தி இருக்கக் கூடும்.

தாக்குதல்கள் யாவும், ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியை குறி வைத்தே இடம்பெற்றுள்ளன. இதனால், இந்த சம்பவம் காரணமாக தொழிலாளர் கட்சிக்கு வருங்கால தேர்தல்களில் அனுதாப வாக்குகளை பெற்றுத் தரலாம். இருப்பினும், இளைஞர் அணியை சேர்ந்த 90 உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் அந்தக் கட்சிக்கு பின்னடைவை தோற்றுவிக்கலாம். இன்றைய இளைஞர்கள், நாளைய தலைவர்கள். இதனால், தூர நோக்கில் தொழிலாளர் கட்சியை நோர்வேயில் இல்லாதொழிக்கும் நோக்கம் தெரிகின்றது. தொழிலாளர் கட்சியின் மீது யாருக்கு அவ்வளவு கோபம்? தொழிலாளர் கட்சி வலதுசாரி சந்தர்ப்பவாதப் பாதையில் சென்ற போதிலும், இளைஞர் அணியினர் மத்தியில் இடதுசாரிப் போக்கும் காணப்படுகின்றது. சமீப காலமாக,"பாலஸ்தீன சுதந்திரத்தை அங்கீகரிக்க வேண்டும். இஸ்ரேலிய பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டும்." என்பன போன்ற குரல்கள் கேட்கின்றன. மேலும், துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்த தினத்தன்று, முன்னாள் நோர்வே பிரதமர் வருகை தருவதாக ஏற்பாடாகியிருந்தது. இன்றைய பிரதமர் அப்பட்டமான வலதுசாரி என்பதும், முன்னை நாள் பிரதமர் ஓரளவு இடதுசாரி பக்கம் சாய்பவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இதற்கு முன்னர் குறிப்பிட்ட தீவிர வலதுசாரியினர், நவநாஜிகள் மட்டுமல்லாது, வேறு சக்திகள் சம்பந்தப் பட்டுள்ளனவா? நோர்வே வட அட்லாண்டிக் இராணுவக் கூட்டில் (நேட்டோ) அங்கம் வகிக்கின்றது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து, நோர்வே விமானங்கள் லிபியா மீது குண்டுகளை வீசி வந்துள்ளன. நேட்டோ இராணுவ நடவடிக்கையின் ஓரங்கமாக நோர்வே செயற்பட்டு வந்தாலும், இந்த வாரம் குண்டுவீச்சை நிறுத்திக் கொள்வதென்று தன்னிச்சையாக அறிவித்தது. அதாவது, வருகிற ஆகஸ்ட் முதலாம் தேதியில் இருந்து, நோர்வே விமானங்கள் போர் நடவடிக்கையில் ஈடுபட மாட்டா. இதனால், நோர்வே அரசுக்கும், பிற நேட்டோ உறுப்பினர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் தாக்குதல் நடந்திருக்கலாம். நேட்டோ, அல்லது நோர்வே அரச மட்டத்தை சேர்ந்த ஏகாதிபத்திய ஆதரவாளர்கள், தாக்குதலில் சம்பந்தப் பட்டிருக்கலாம். நேட்டோ ஐரோப்பாவில் இரகசியமாக ஒரு பயங்கரவாத அமைப்பை (Gladio) உருவாக்கி வைத்துள்ளது. அந்த இரகசிய அமைப்பு இத்தாலி போன்ற நாடுகளில் குண்டுவெடிப்புகளை நடத்தியுள்ளது. இதுவரை குண்டுகளை வைத்தவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. அதே போல, ஒஸ்லோ குண்டுவெடிப்பை நடத்திய சூத்திரதாரிகள், அவர்களின் நோக்கங்கள் என்பன இனி ஒரு காலமும் வெளிவராமல் போகலாம்.


மேலதிக விபரங்களுக்கு:
Olso Attacks Suspect Is 'Conservative Christian'
Pågrepet 32-åring kalte seg selv nasjonalistisk
Anders Behring Breiviks kommentarer hos Document.no
Terrorsiktet kjøpte seks tonn kunstgjødsel
TERRORAKSJON I OSLO

Wednesday, July 20, 2011

யூதரை சிறை மீட்ட முஸ்லிம் மக்களின் எழுச்சி

பொஸ்னியாவில் நடந்த உண்மைச் சம்பவம் (1819). வரலாற்று உண்மைகளை மறைத்து, மக்களை மூடராக்கும் இனவெறியர்களின் முகமூடியைக் கிழிக்கும் கதை இது.


ஆயிரமாயிரம் ஆண்டுகளாக யூதர்களும், முஸ்லிம்களும் வன்மம் கொண்ட எதிரிகளாக காட்டும் பரப்புரைகள் மலிந்து விட்ட காலமிது. தமிழ் இலக்கிய அறிவுஜீவிகளும், மேலைத்தேய காலனிய ஆக்கிரமிப்பாளர்களின் விஷமப் பிரச்சாரத்தை உண்மையென்று நம்புகின்றனர். ஆனால், கிறிஸ்தவ நாடுகளில் வாழ்ந்த யூதர்கள் அடிக்கடி மதக்கலவரங்களால் பாதிக்கப்பட்டனர். அதற்கு மாறாக, முஸ்லிம் நாடுகளில் யூதர்களுக்கு பாதுகாப்புக் கிடைத்தது. ஸ்பெயின் கிறிஸ்தவ மன்னர்களால் கைப்பற்றப் பட்ட வேளை, மதச்சுத்திகரிப்புக்கு அஞ்சி ஓடிய யூதர்கள் பொஸ்னியாவில் தஞ்சம் அடைந்திருந்தனர். 20 ம் நூற்றாண்டு வரையில், அதாவது நாசிகளின் இனப்படுகொலைக் காலம் வரையில், சாராஜெவோ நகரில் ஸ்பானிய மொழி பேசும் யூத சமூகம் வாழ்ந்து வந்தது.

மாபெரும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆண்ட "ஓட்டோமான் துருக்கியர்கள்", இன்றைய பொஸ்னியா வரை தமது ஆட்சிப்பரப்பை விஸ்தரித்திருந்தார்கள். செர்போ- குரோவாசிய மொழி பேசும் மக்கள் பலர் இஸ்லாமிய மதத்தை தழுவியிருந்தனர். ஓட்டோமான் சாம்ராஜ்யத்திற்குட்பட்ட, பொஸ்னிய மாநிலத்தில் அவர்களின் விகிதாசாரம் அரைவாசிக்கும் அதிகமாகவிருந்தது. ஓட்டோமான் இஸ்லாமிய சாம்ராஜ்யம், அன்றைய ஐரோப்பாக் கண்டத்தில் வளர்ச்சியடைந்த நாகரீகத்தைக் கொண்டிருந்தது. இதன் காரணமாகவும், அரச பதவிகளுக்காகவும் பலர் முஸ்லிம்களாக மாறியிருந்தனர். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், பல உள்ளூர் மக்கள் கிறிஸ்தவர்களாக மாறியதை இங்கே ஒப்பிடலாம்.

19 ம் நூற்றாண்டு பொஸ்னியாவில், யூதர்களும், முஸ்லிம்களும் சமாதானமாக வாழ்ந்து வந்தனர். ஆனால், இஸ்லாமிய மதத்திற்கு மாறிய யூத இளைஞன் ஒருவன், மதக்கலவரத்திற்கு காரணகர்த்தா ஆகினான். பெரும்பாலும், புதிதாக மதம் மாறியவர்கள், தமது விசுவாசத்தைக் காட்டுவதற்காக மதத் தீவிரவாதிகளாக நடந்து கொள்வார்கள். Travnik என்ற நகரில், Moses Chavijo என்ற யூதன் இஸ்லாமிய மதத்திற்கு மாறியிருந்தான். டெர்விஷ் அஹ்மத் என்று தனது பெயரையும் மாற்றிக் கொண்டு, முஸ்லிம்களை யூதர்களுக்கு எதிராக தூண்டி விட்டான். யூத எதிர்ப்பு மட்டுமல்ல, இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும் பிரச்சாரம் செய்த அஹ்மத்தின் பின்னால், சில முஸ்லிம் இளைஞர்கள் அணி திரண்டார்கள். இந்த தீவிரவாதக் கும்பல், யூதர்களை இலக்கு வைத்து தாக்கி வந்தது. யூதர்களும் அதற்குப் பதிலடி கொடுப்பதற்காக, தீவிரவாத தலைவனான அஹ்மத்தை பிடித்து கொலை செய்து விட்டார்கள். சாராஜெவோ நகர் யூதர்களின் தலைமை மதகுருவான Moshe Danon உம் அந்தப் படுகொலையில் சம்பந்தப் பட்டிருந்தார்.

தலைவனை இழந்ததால் ஆத்திரமுற்ற முஸ்லிம் தீவிரவாத கும்பலை சேர்ந்தோர், துருக்கி ஆளுநரிடம் இது குறித்து முறையிட்டனர். ஊழல்வாதியான ஆளுநரும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பக்கம் சாய்ந்து விட்டார். யூதர்கள் ஐந்து இலட்சம் தங்கக் காசுகளை, படுகொலைக்கான குற்றப்பணமாக கட்ட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். குற்றப் பணம் செலுத்தப் படும் வரையில், யூத மதகுருவும், பத்து யூத பிரமுகர்களும் பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். மூன்று நாட்களுக்குள் பணம் வராவிட்டால், யூத பணயக்கைதிகள் கொலை செய்யப் படுவார்கள் என்று எச்சரிக்கை விடப்பட்டது. மரண தண்டனை நிறைவேற்றப் படுவதற்கு முதல் நாள், யூதர்கள் முஸ்லிம் சகோதரர்களிடம் உதவி கோரினார்கள். சாராஜெவோ நகர முஸ்லிம் மக்களுக்கும், அந்தத் தீர்ப்பு அநீதியாகப் பட்டது. ஊழல்மய ஆளுனரை முஸ்லிம்களும் வெறுத்தார்கள். மேலும், தீவிரவாதக் கும்பல்களின் வன்முறைகளையும் அங்கீகரிக்கவில்லை.

அடுத்து நடந்த சம்பவங்கள், மக்கள் சக்தியின் மகத்துவத்தை பறைசாற்றியது. ஆயுதமேந்திய மூவாயிரம் முஸ்லிம்கள், ஆளுநர் மாளிகையை சுற்றி வளைத்தனர். பணயக்கைதிகளாக வைக்கப் பட்டிருக்கும் யூதர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரினார்கள். முஸ்லிம் மக்களின் எழுச்சிக்கு ஆளுநரும், மதத் தீவிரவாதிகளும் அடிபணிந்தார்கள். பிடித்து வைத்திருந்த யூதர்களை உடனடியாக விடுவித்தார்கள். தன்னை விடுவித்த முஸ்லிம் சகோதரர்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக, யூத மதகுரு மோஷே டானன் மெக்காவுக்கு புனிதப் பயணம் செல்ல விரும்பினார். ஆனால், அவரது குறிக்கோள் நிறைவேறும் முன்னரே மண்ணை விட்டு மறைந்து விட்டார். யூத- முஸ்லிம் நல்லுறவுக்காக இதயசுத்தியுடன் வாழ்ந்து மறைந்த மகானின் கல்லறை, இரு மதத்தவரும் வழிபடும் புனிதஸ்தலமாகியது. 1940 ல் நாஜிகளின் படையெடுப்பு அந்த வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

19 ம் நூற்றாண்டு பொஸ்னியாவில் நடந்த கதை, 21 ம் நூற்றாண்டின் இன/மதப் பூசல்களுக்கான தீர்வை சுட்டிக் காட்டுகின்றது. இன/மத/மொழித் தீவிரவாதத்தை வளர்க்கும் நபர்கள், அந்தந்த சமூகத்தினரால் ஒதுக்கப் பட வேண்டும். சிறுபான்மையினரின் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு, பெரும்பான்மை இனத்தை/மதத்தை சேர்ந்தவர்களின் ஆதரவு அவசியம். இனங்களுக்கு/மதங்களுக்கு இடையிலான சகோதரத்துவம் வலுவடைந்தால், எதேச்சாதிகார ஆட்சியாளரின் அதிகாரம் செல்லாக்காசாகி விடும். ஈழத்தமிழரின் விடுதலைக்கு அவசியமான பாடத்தையும், இந்தக் கதையில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளாதவர்கள், தவறை திருப்பிச் செய்யும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர்.


உசாத்துணை:
1.Die Sephardim in Bosnien(Moritz Levy)(ஜெர்மன் மொழி)
2.Sarajevo Rose: A Balkan Jewish Notebook
3.Moshe Danon

Friday, July 15, 2011

முகப்புத்தகத்தில் வேவு பார்க்கும் இஸ்ரேலிய அரசு


இஸ்ரேலிய அரசுக்கு எதிரான சர்வதேச ஆர்வலர்களின் நடவடிக்கைகள் பெருகி வருகின்றன. இஸ்ரேலிய அரசு அவர்களை நாட்டிற்குள் வர விடாது தடுத்து வருகின்றது. பாலஸ்தீன ஆதரவாளர்களை இனங் காண்பதற்காக, முகப்புத்தகம் (Facebook) போன்ற சமூக வலைப் பின்னல்களை பயன்படுத்தி வருகின்றது.

முகநூலில், இஸ்ரேலிய அரச உளவாளிகள், போலி அடையாளத்துடன் பாலஸ்தீன ஆதரவாளர்கள் போன்று உலா வருகின்றனர். சர்வதேச மட்டத்தில் பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவான நபர்களை இனங்காண்பதும், விபரங்களை தொகுப்பதும் அவர்களது வேலை. ஏற்கனவே இலங்கை, இந்திய அரசுகளும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக சில "தீவிர தமிழ் உணர்வாளர்களின்" குழுமங்கள் அரச கண்காணிப்பில் உள்ளன.

அண்மையில் பாலஸ்தீன பிரதேசத்தில் இஸ்ரேலிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு, முகநூலில் குழுமங்கள் உருவாக்கப்பட்டன. பல உலகநாடுகளில் இருந்து, பல ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்திருந்தனர். அவர்களது பெயர் விபரங்கள் யாவும் இஸ்ரேலிய அரசின் வசம் சென்றுள்ளன. ஏற்கனவே இஸ்ரேலிய அரசிடம் உள்ள, "விரும்பத் தகாத நபர்களின்" பட்டியலில் அந்த விபரங்கள் சேர்க்கப்பட்டன. இவ்வாறு 300 க்கும் அதிகமான சர்வதேச ஆர்வலர்களின் பெயர்கள், "கறுப்புப் பட்டியலில்" உள்ளன.

சமீபத்தில் இந்தப் பட்டியலில் உள்ள 65 நபர்கள் டெல் அவிவ் விமான நிலையத்தில் வந்திறங்கிய பொழுது, திருப்பி அனுப்பப் பட்டனர். பிற "சந்தேக நபர்கள்" பற்றிய விபரங்கள், இஸ்ரேலுக்கு வரும் விமான நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. அந்த நபர்களை கொண்டு வரும் விமானங்களுக்கு தண்டப் பணம் அறவிடப்படும் என எச்சரிக்கப் பட்டுள்ளது. பல ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களில், இஸ்ரேலுக்கு செல்லவிருந்த பயணிகள் பலர் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளனர். இஸ்ரேலிய அரசின் வற்புறுத்தல் காரணமாகவே, தாம் அந்த நடவடிக்கை எடுத்தாக விமான நிறுவன முகாமையாளர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, முற்றுகைக்குள்ளாகியுள்ள (பாலஸ்தீன) காசா பகுதிக்கு, நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்லும் கப்பல்களுக்கு தடங்கல்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. கடந்த வருடம் காசாக் கரையை நோக்கிச் சென்ற துருக்கி நிவாரணக் கப்பல் மீது, கமாண்டோ தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலில் ஒன்பது துருக்கி சமூக ஆர்வலர்கள் கொல்லப்பட்டனர். இவ்வருடமும் பன்னாட்டு நிவாரணக் கப்பல்கள், காசா நோக்கி பயணமாகியுள்ளன. ஆனால், அவை யாவும் கிரேக்க கடற்பரப்பில் வைத்து வழிமறிக்கப் பட்டன. இஸ்ரேலிடம் விலை போன கிரேக்க அரசு, அந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கிரேக்க துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த சுவீடிஷ், ஐரிஷ் கப்பல்கள் சேதப்படுத்தப் பட்டுள்ளன.

இஸ்ரேலிய அரசின் கடும்போக்குக் காரணமாக, மேற்கத்திய நாடுகளில் அதிருப்தியாளர்கள் பெருகி வருகின்றனர். சர்வதேச மட்டத்தில் இஸ்ரேலிய உற்பத்திப் பொருட்களை பகிஷ்கரிக்கும் போராட்டம் நடந்து வருகின்றது. இதனால் கலக்கமடைந்த இஸ்ரேலிய அரசு, "பகிஸ்கரிப்பு எதிர்ப்பு சட்டத்தை" கொண்டுவந்துள்ளது. இஸ்ரேலிய இடதுசாரிகளால் "பாசிசமயமாக்கல்" என்று விமர்சிக்கப்பட்ட சட்டம், இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் (கினேசெட்), பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தின் பிரகாரம், பகிஷ்கரிப்பால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலிய நிறுவனம் நஷ்டஈடு கோரலாம். வெளிநாடுகளில் பகிஷ்கரிப்பில் ஈடுபடும் அமைப்பிடமோ, அல்லது தனிநபரிடமோ நஷ்டஈட்டை அறவிடலாம். இஸ்ரேலின் பாசிச சட்டத்திற்கு, சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. ஜனநாயக உலகில், அடிப்படை கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயல் என்று விமர்சித்துள்ளன.


மேலதிக தகவல்களுக்கு:Israel blocks airborne protest, questions dozens
'Boycott law – huge step toward fascism'

Tuesday, July 12, 2011

சோதனையை எதிர்நோக்கும் தெற்கு சூடான் விடுதலை



(புதிதாக சுதந்திரமடைந்த தெற்கு சூடான் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த விசேட அறிக்கை)

9 ஜூலை 2011, தெற்கு சூடான் என்ற புதிய தேசம் உதயமாகியது. அன்று முதல் ஆப்பிரிக்க கண்டத்தின் 54 வது நாடாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் 193 வது நாடாகவும் இணைந்துள்ளது. இந்தப் புதிய தேசத்தை அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் அங்கீகரித்துள்ளன. தெற்கு சூடானின் எண்ணை வளத்தை நுகரும் சீனாவும் இராஜதந்திர உறவுகளைப் பேண முன்வந்துள்ளது. இதற்கிடையே, தமிழ்த் தேசியவாதிகள் வழமை போலவே தெற்கு சூடானுடன், தமிழீழத்தை தொடர்பு படுத்தி பேச ஆரம்பித்து விட்டனர். இவ்விரண்டு தேசியப் பிரச்சினைகளுக்கு இடையில் சில ஒற்றுமைகள் காணப்பட்டாலும், இறுதிக் கட்ட தீர்மானம் தொடர்பாக பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. சூடான் நாட்டின் மொத்த எண்ணெய் வளத்தில் மூன்றில் இரண்டு பங்கு தெற்கு சூடானில் உள்ளது. ஒரு துளி எண்ணெய் கூட தமிழீழத்தில் கிடையாது என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. தெற்கு சூடான் சுதந்திர நாடாகிய போதிலும், அங்குள்ள வறுமை போன்ற பிரச்சினைகள் தீர்வதற்கு நீண்ட காலம் எடுக்கும். கடன் வழங்கும் நாடுகளும், இந்த நிலைமையைப் பயன்படுத்தி தெற்கு சூடானை அடிமைப் படுத்த முனையலாம். சுதந்திரமடைந்த தெற்கு சூடானின் இன்றைய நிலைமையை இங்கு ஆராய்வோம்.

ஈழப்போர் போன்று தான், தெற்கு சூடான் போரும் நீண்ட காலம் (1983 - 2005 ) இழுபட்டது. சூடான் இராணுவமும், பிரிவினை கோரிய தென் சூடான் மக்கள் விடுதலைப் படையும் (SPLA ), பல்லாயிரம் மக்களின் உயிரிழப்புகளுக்கும், சொத்தழிவுக்கும் காரணகர்த்தாக்கள். சுமார் இரண்டு மில்லியன் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தார்கள். பெருமளவு இடம்பெயர்ந்தோர், சூடான் தலைநகரமான கார்ட்டூமில் தங்கிவிட, சிறு தொகை அகதிகள் அங்கிருந்து மேற்கு நாடுகளை நோக்கி புலம்பெயர்ந்தார்கள். இலங்கையிலும் இதே போன்ற நிலைமை காணப்பட்டதை, நான் இங்கே குறிப்பிட வேண்டியதில்லை. 2005 ம் ஆண்டு, இரண்டு பரம்பரை எதிரிகளும் ஒன்று சேர்ந்து பேச்சுவார்த்தையில் தீர்வு காண முன்வந்தார்கள். கார்ட்டூமின் "அரபு பேரினவாதி" பஷீரும், தெற்கு சூடானின் "தேசியத் தலைவர்" ஜோன் காரெங்கும் சந்தித்து சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். அந்த ஒப்பந்தப்படி, 2011 ஜனவரி மாதம், தெற்கு சூடான் விடுதலை குறித்து சர்வசன வாக்கெடுப்பு நடத்துவதென தீர்மானிக்கப் பட்டது.

இலங்கையிலும் 2002 ம் ஆண்டு, சிங்கள அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் ஏற்பட்டது. நோர்வே மத்தியஸ்தத்துடன் சமாதான தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளும் நடந்தன. ஆனால், தெற்கு சூடான் சுதந்திரத்திற்கு வழிவகுத்த திருப்புமுனையான நிகழ்வை தமிழ்த் தேசியவாதிகள் புறக்கணிக்கின்றனர். இலங்கை, சூடான் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மேலைத்தேய மத்தியஸ்தம் ஒரே மாதிரியாக அமைந்திருந்தது. ஆனால், சூடானில் எழுதப்பட்ட ஒப்பந்தத்தில், ஐந்து வருடங்களுக்குப் பின்னர் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற ஷரத்து சேர்க்கப்பட்டது. ஆனால் இது போன்றதொரு கோரிக்கையை, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட புலிகள் ஏனோ முன்வைக்கவில்லை. அத்தகைய கோரிக்கையை சிறிலங்கா அரசோ, அல்லது சர்வதேசமோ ஏற்றிருக்குமா என்பது வேறு விடயம். மத்தியஸ்தம் வகித்த நோர்வே கூட ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு காணுமாறு வலியுறுத்தி வந்தது. இருப்பினும், பேச்சுவார்த்தையின் முடிவில் சமாதான ஒப்பந்தம் எட்டப்பட்டது என்பதையும், அதன் பெறுபேறாகக் கிடைத்த சர்வசன வாக்கெடுப்பு, தெற்கு சூடானின் சுதந்திரத்திற்கு வழி சமைத்தது என்பதை மறந்து விடலாகாது.

ஜனவரி 2011 ல் இடம்பெற்ற சர்வசன வாக்கெடுப்பில், 98 .3 சதவீத மக்கள் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தனர். சர்வதேச கண்காணிப்பாளர்கள் பொறுப்பில், அமைதியாக அந்தத் தேர்தல் நடைபெற்றது. தெற்கு சூடான் விடுதலைக்காக போராடிய SPLA தான், புதிய தேசத்தின் அரசுப் பொறுப்பையும் ஏற்றுள்ளது. SPLA என்பது இராணுவப் பிரிவின் பெயர். SPLM என்பது கட்சியின் பெயர். கட்சிக்கும், இராணுவத்திற்கும் இடையிலான வித்தியாசம் மிகக்குறைவு. அது போலத்தான், தெற்கு சூடான் அரசு முழுவதையும் SPLM உறுப்பினர்கள் ஆக்கிரமித்துள்ளனர். தெற்கு சூடானின் தேசியத் தலைவர் ஜோன் காரெங் எதிர்பாராவிதமாக ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணமடைந்து விட்டார். தற்போது முன்னாள் தலைவரின் வலதுகரமான Salva Kiir தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். 2005 ம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் வந்த நாளில் இருந்து, தெற்கு சூடானில் SPLM ஆட்சி தான் நடந்து வருகிறது. பிற அரசியல் அமைப்புகள் SPLM ஆதிக்கத்தை எதிர்க்க முடியாமல் ஒதுங்கி விட்டன. புதிய தேசம் உதயமான அடுத்த நாள் பலரை ஆச்சரியப்பட வைத்த மாற்றம் ஒன்று இடம்பெற்றது. கார்ட்டூமில் ஆளும் கட்சியான, பஷீரின் "சூடான் தேசிய காங்கிரஸ்", தெற்கு சூடான் பாராளுமன்றத்திலும் ஒரு ஆசனத்தை வைத்திருக்கிறது. பெரும்பாலும் தெற்கு சூடானை சேர்ந்தவர்களே அங்கம் வகிக்கும் கட்சியின் மாநிலப் பிரிவு கார்ட்டூமுடனான தொடர்புகளைத் துண்டித்து விட்டு SPLM முடன் சேர்ந்துள்ளது.

புதிய தேசத்தின் பதவிகள் யாவும் SPLM செல்வாக்கு உள்ளவர்களுக்கே வழங்கப் படுகின்றது. சுதந்திர தேசத்தில் வாய்ப்புக் கிடைக்கும், என்று நம்பியிருந்த புலம்பெயர்ந்தோருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தெற்கு சூடானில் முப்பது வருடங்கள் இடையறாது யுத்தம் நடந்து கொண்டிருந்த வேளை, அகதிகளாக புலம்பெயர்ந்த பலர் தாயகம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக சூடானின் தலைநகர் கார்ட்டூமில் வாழ்ந்தவர்கள் பெருமளவில் திரும்பி வருகின்றனர். அவர்களில் பலர் தாயகத்தை கண்டிராத இளந்தலைமுறையை சேர்ந்தவர்கள். முப்பதாண்டு கால யுத்தம் ஒரு தலைமுறை இடைவெளியை ஏற்படுத்தி விட்டிருந்தது. புலம்பெயர்ந்த தெற்கு சூடானியர்கள் எதிர்காலம் குறித்த கனாக்களுடன் திரும்பி வந்தாலும், தாயகத்தில் அவர்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. "புலம்பெயர்ந்தவர்கள் அரபு பேரினவாதிகளுடன் ஒத்துழைத்த துரோகிகள்" என்று கூறுகின்றனர். கார்ட்டூமில் SPLA யின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இராணுவத் தாக்குதல்களுக்கு தகவல்களை வழங்கிய விசுவாசிகளுக்கும், அது தான் நிலைமை. "எமது தாயகத்தை விட்டோடியவர்கள் துரோகிகள்" என்று SPLM தெற்கு சூடானில் பிரச்சாரம் செய்து வந்ததை மறுக்க முடியாது. (மறுபக்கம் புலம்பெயர்ந்தோர் அனுப்பிய நிதியில் இயக்கம் வளர்ந்தது.) இருப்பினும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் அந்த நிலைமைக்கு காரணம். தெற்கு சூடான் அபிவிருத்தியால் பின்தங்கிய பகுதி. அங்கே தொழில் வாய்ப்புக் குறைவு காரணமாக ஏழ்மை நிலைமையில் இருந்து மீள்வது கடினம். அதற்கு மாறாக, கார்ட்டூமில் குடியேறியோர் தொழிற்துறை வளர்ச்சியடைந்த நகரத்தின் பலாபலன்களைப் பெற்றுக் கொண்டவர்கள். கடின உழைப்பால் வசதியான வாழ்வைப் பெற்றுக் கொண்டவர்கள். இந்த பொருளாதார வேறுபாடு, தெற்கு சூடானில் சமூகப் பிரச்சினையாக பரிணமித்துள்ளது.

கடந்த காலங்களில், புலம்பெயர்ந்தோர் மத்தியில் SPLM மின் பரப்புரைகள் பல எதிர்பார்ப்புகளை தோற்றுவித்திருந்தன. "தெற்கு சூடான் விடுதலை கிடைத்து விட்டால் போதும், நாடு சுபீட்சமடையும். சுதந்திரமடைந்த பின்னர், வறுமையும், சமுதாய வேற்றுமைகளும் மறைந்து விடும்." என்று பிரச்சாரம் செய்து புலம்பெயர்ந்தோர் ஆதரவைத் திரட்டினார்கள். "விடுதலையடைந்த தெற்கு சூடானில் பாலும், தேனும் ஆறாக ஓடும்," என்று சொல்லாத குறை. புலம்பெயர்ந்த மண்ணில் தெற்கு சூடான் தேசியத்தை தீவிரமாக ஆதரித்தவர்கள், தாயகம் திரும்பிய பின்னர் உண்மையை உணருகின்றனர். "இங்குள்ள குழந்தைகள் வாய்க்காலில் ஓடும் அசுத்த நீரை பருகுவதைக் கண்டேன். வறுமை காரணமாக வெறும் உப்புக்கட்டியைக் கூட ஆகாரமாக உண்கின்றனர். எனது பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி கலங்கி நிற்கிறேன்..." இவ்வாறு கூறினார், கார்ட்டூமில் கணித ஆசிரியராக பணியாற்றிய ஒருவர். தெற்கு சூடானின் தலைநகரமாக மாறியுள்ள "ஜூபா"(Juba) வின் சனத்தொகை இரு மடங்காக உயர்ந்துள்ளது. நகரத்தில் குடியேறும் புதியவர்கள், காட்டுப்புறமாக உள்ள Güdel என்ற இடத்தில் வசிக்கின்றனர். தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவும் வறண்ட பிரதேசம் அது. "குடிநீர்க் குழாய் ஒன்று கூட இல்லை. பவுசரில் எடுத்து வரும் தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும்." என்று அங்கலாய்த்தனர் புதிய நகர்வாசிகள்.

தெற்கு சூடான், சுதந்திரமடைந்த பின்னரும், வடக்கு சூடானில் தங்கியிருக்க வேண்டும். குறிப்பாக அதிக வருமானத்தை ஈட்டித் தரப் போகும் எண்ணை ஏற்றுமதிக்கு வடக்கு சூடானின் ஒத்துழைப்பு அவசியம். ஏற்றுமதிக்கு தேவையான குழாய்ப் பாதைகளும், துறைமுகங்களும் வடக்கு சூடானில் அமைந்துள்ளன. எண்ணெய் ஏற்றுமதியினால் கிடைக்கும் வருமானத்தில் கணிசமான பங்கு, வடக்கு சூடானுக்கு கிடைக்கும் வண்ணம் ஒப்பந்தம் போடப்பட்டது. மேலும், அமெரிக்கா போன்ற நாடுகளின் பொருளாதாரத் தடை விலக்கிக் கொள்ளப்படும். இத்தகைய காரணங்களால் தான்,கார்ட்டூம் அரசு தெற்கு சூடான் பிரிவினைக்கு சம்மதித்தது. எரிபொருள் விநியோகத்தை பொறுப்பேற்ற சீனா, வடக்கு சூடான் அரசுடனும், தெற்கு சூடான் அரசுடனும் புதிய ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது. யுத்தம் நடைபெற்ற காலத்தில், சீனா வடக்கு சூடான் அரசுக்கு ஆயுத விநியோகம் செய்துள்ளமை அனைவருக்கும் தெரியும். இருந்த போதிலும், மேலைத்தேய ஆதரவு கிட்டுமென்பதற்காக, SPLM ஒருபோதும் சீன எதிர்ப்பு பிரச்சாரம் செய்யவில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளின் நேரடி ஆதரவு இருந்த போதிலும், சுதந்திர தெற்கு சூடான் சீனாவை நட்பு நாடாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை SPLM அரசு உணர்ந்திருந்தது. இனி வரும் காலங்களிலும், தெற்கு சூடான் எண்ணையை சீனாவே வாங்கப் போகின்றது. சந்தையில் எண்ணை விலை நிர்ணயிப்பதன் மூலமும், வட்டிக்கு கடன் வழங்குவதன் மூலமும் தான், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் இலாபம் சம்பாதிக்கப் போகின்றன. தெற்கு சூடானை நிரந்தர கடனாளியாக்குவதன் மூலம், தமது காலனியாக வைத்திருப்பதே அவர்களின் நோக்கம்.

தெற்கு சூடான் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.
தெற்கு சூடான்: ஒரு புதிய தேசத்தின் ஜாதகம்
2. சூடான்: இஸ்லாமிய வடக்கும், கிறிஸ்தவ தெற்கும்

Friday, July 08, 2011

இலங்கை என்ற இழந்த சொர்க்கம்

(பகுதி : ஒன்று)
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு. கோடை கால வருகையை பறை சாற்றும் ஜூலை மாதம். விமான நிலைய குடிவரவு அதிகாரிகளுக்கு முன்னால் பயணிகளின் நெரிசல். உட்புகும் விசா குத்தி அனுப்புவதில் அவ்வளவு தாமதம். என்னை சுற்றி நின்ற பயணிகளில் புகலிடத் தமிழர்களே அதிகம் காணப்பட்டனர். சுவிஸ், பிரான்ஸ், கனடா என்று பல திசைகளில் இருந்தும் பிள்ளை, குட்டிகளுடன் வந்திறங்கியிருந்தார்கள். ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் மேற்கு நாடுகளில் பாடசாலைகளுக்கு கோடை விடுமுறை விட்டிருப்பார்கள். அதனால் விடுமுறையை தாயகத்தில் கழிக்க குடும்பத்துடன் வந்திருப்பார்கள். ஒரு மீட்டருக்கும் குறையாத பயணிகளின் வரிசை குடிவரவு சுங்க எல்லையைக் கடக்க ஒரு மணி நேரம் எடுத்தது. சுவிட்சர்லாந்து, பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் அதிக நேரம் காக்க வைக்கப் பட்டனர். வெள்ளயினத்தவர்களின் கடவுச்சீட்டுகள் கூட நேரமெடுத்து சோதிக்கப்பட்டதை அங்கே தான் பார்த்தேன்.

சரியாக ஒன்பது வருடங்களுக்கு முன்னர், இதே ஜூலை மாதம் கொழும்பு விமான நிலையம் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானது. விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானங்கள் பல தற்கொலைக் குண்டுதாரிகளால் தாக்கி அழிக்கப்பட்டன. இலங்கை மட்டுமல்ல முழு உலகமும் அதிர்ச்சியில் உறைந்து போனது. நவீன உலக வரலாற்றில் நடந்த இதே மாதிரியான விமான நிலைய கெரில்லா தாக்குதலில் இது இரண்டாவது. முன்னர் எத்தியோப்பிய விமான நிலையத்தை தாக்கிய எரித்திரிய கெரில்லாக்கள் அங்கே இருந்த மிக் ரக போர் விமானங்களை அழித்திருந்தனர். கொழும்பு விமான நிலைய தாக்குதலுக்கு புலிகள் இயக்கம் உரிமை கோரியிருந்தது. அதற்குப் பின்னர் இலங்கையில் எந்தவொரு குறிப்பிடத் தக்க தாக்குதலும் நடக்கவில்லை. மாறாக நோர்வேயின் அனுசரணையில் பேச்சுவார்த்தை நடந்தது. அந்த தாக்குதல் நடந்து இரண்டு மாதங்கள் ஆகவில்லை. நான்கு விமானங்கள் அமெரிக்க இலக்குகளை தாக்கின. உலகின் ஒரேயொரு மேன் நிலை வல்லரசான அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிரான போரை அறிவித்தது.

காலம் மாறுகிறது. காட்சிகள் மாறுகின்றன. இன்றைய இலங்கை ஆட்சியாளர்கள் 30 வருட போரை முடிவுக்கு கொண்டு வந்தததற்காக நன்றி தெரிவிக்க கோருகின்றனர். அமெரிக்கா இன்றும் பயங்கரவாதத்துடன் மல்லுக் கட்டும் வேளை, தாம் அந்த தொற்று நோயை அடியோடு ஒழித்து விட்டதாக பெருமிதம் கொள்கின்றனர். நான் கொழும்பில் தங்கி நின்ற காலங்களில் அரசு டெங்கு என்ற நுளம்பால் தொற்றும் நோய்க்கு எதிரான போரை அறிவித்து விட்டிருந்தது. வீட்டுக்கருகில் அசுத்த நீர் தேங்கி நிற்கும் குட்டைகளை சுத்தப் படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்திக் கொண்டிருந்தது. நல்லது. பயங்கரவாதமும் ஒரு கொடிய சமூகத் தொற்று நோய் எனில், அது உற்பத்தியாகும் குட்டைகளும் சுத்தப் படுத்தப் பட வேண்டும். யுத்தத்திற்குப் பின்னர் சமுதாய அசுத்தங்கள் தேங்கும் குட்டைகள் சுத்தப் படுத்தப் படுகின்றனவா? என்று யாரும் கேட்டதாக தெரியவில்லை.

2010 ஜூலை மாதம். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஜூலை மாதத்தில் இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர், இப்போது தான் தாயக பூமியை தரிசிக்கிறேன். ஒரு மனிதனின் வரலாற்றில் இருபது வருடங்கள் என்பது ஒரு தலைமுறை இடைவெளியைக் குறிக்கும். அன்றைய நிலையை, இலகுவாக இன்றுள்ள இலங்கையோடு ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது. இது என்னைப் போல புலம்பெயர்ந்து விட்டு கூடு திரும்பும் பறவைகளுக்கு மட்டுமே கிடைக்கும் அரிய வரப்பிரசாதம். என்னைப் பொறுத்த வரையில், இலங்கை ஒன்றும் பெரிதாக மாறி விடவில்லை. நடுத்தர வர்க்கம் மட்டுமே அனுபவிக்கும் உலகத்தரம் வாய்ந்த வாழ்க்கை வசதிகளைத் தவிர, வேறெதுவும் புதிதாக இல்லை. இனங்களின் முரண்பாடுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பழகிய ஒரு தேசத்தில், வர்க்க இடைவெளி முன்னர் என்றுமில்லாதவாறு விரிவடைந்துள்ளது.
"இலங்கை வழமைக்கு திரும்பி விட்டது." சாமானியன் நம்பும் வழமை நிலை, ஆயுதமேந்திய கரங்களினால் நிலை நாட்டப் படுகின்றது. வீதியோர சோதனைச் சாவடிகள் இன்னும் அகலவில்லை. அங்கே கடமையில் ஈடுபடுத்தப்பட்ட பாதுகாப்புப் படையினர் சோதனைகளை நிறுத்தி விட்டார்கள். இருப்பினும் உயர் பாதுகாப்பு வலையங்களை அண்டிய பகுதிகளில் இப்போதும் அடையாள அட்டை வாங்கிப் பார்க்கிறார்கள். சில இடங்களில் பார ஊர்திகளை மறித்து சோதனை போடுவதைக் காணக் கூடியதாகவிருந்தது. யுத்த காலங்களில் இருந்த நிலைமையை விட இது பரவாயில்லைத் தான். இருப்பினும் நாட்டில் பாதுகாப்புக் கெடுபிடிகள் முற்றாக நீங்கி விடவில்லை. ஒரு வருடத்திற்கு முன்னர் அரசு போரில் புலிகளை வென்று விட்டதாக அறிவித்த பின்னர், நாட்டில் ஒரு துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கூட கேட்கவில்லை. அப்படியான சூழலில் இறுக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதற்காக?

தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் "நாடு கடந்த தமிழீழ அரசு" குறித்து அரசு அஞ்சுவதாக தெரிவித்தனர். (இன்னொரு பகுதி அதனை நம்பவில்லை.) வெளிநாடுகளில் புலிகளின் அமைப்புகள் இயங்குவதாக அரசு அடிக்கடி அறிக்கை விடுக்கின்றது. என்றோ ஒரு நாள், மேற்குலக நாடுகளும், ஐ.நா. சபையும் வெளிநாட்டுப் புலிகளை கொண்டு வந்து இறக்கி விட காத்திருப்பதைப் போல சிங்கள மக்களில் ஒரு பகுதியினர் நம்புகின்றனர். அப்படியான ஒரு பிரச்சாரமும் திட்டமிட்டு பரப்பப் படுகின்றது. குறிப்பாக கொழும்பில் ஐ.நா. தலைமையகத்திற்கு முன்னால் விமல் வீரவம்ச உண்ணாவிரதம் இருந்த பொழுது அப்படியான கருத்துக்கள் மேலோங்கியிருந்தன. ஐ.நா. மன்றமும், செயலாளர் பான் கி மூனும் புலிகளுக்கு உதவுவதாக சிங்கள மக்கள் பேசிக் கொண்டனர்.

ஐ.நா. செயலாளர் நாயகம் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை விசாரிக்க நிபுணர் குழுவமைத்த செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. கொழும்பில் ஐ.நா. அலுவலகம் சுற்றி வளைக்கப்பட்டு ஊழியர்கள் பணயக் கைதிகளாக வைக்கப்படும் அபாயம் நிலவியது. இருப்பினும் போலிஸ் தலையீட்டால் அவர்கள் வெளியேற முடிந்தது. அப்போது தொடங்கியது தான் தேசிய விடுதலை முன்னணி தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்சவின் உண்ணாவிரதப் போராட்டம். நான் அங்கே சென்ற சமயம், பெருந்தொகை மக்கள் குழுமியிருந்தனர். பிரதான வீதியாக இருந்த போதிலும், வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. உண்ணாவிரதம் இருந்த இடத்தில் தேசபக்திப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. வீரவன்ச ஆதரவாளர்கள் உணர்வு பூர்வமாக போராட்டம் தொடரும் என நம்பியிருக்கலாம். ஆனால் எதிர்க்கட்சிகள் கூறிய ஜோசியமே பலித்தது. முடிவை மாற்றிக் கொள்ளாத ஐ.நா. மன்றம், மேற்குலகின் கண்டனம், இவற்றிற்கு மத்தியில் இரண்டு நாட்களில் வீரவன்சவின் உண்ணாவிரதம் முற்றுப் பெற்றது.

இலங்கை அரசுக்கும் ஐ.நா. மன்றத்திற்கும் இடையிலான உறவு பல தடவை சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரமடைந்த இலங்கையை ஐ.நா. மன்றத்தில் சேர்த்துக் கொள்ள அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் ஆர்வம் காட்டின. அன்று இலங்கையின் உறுப்புரிமையை சோவியத் யூனியன் (இன்று ரஷ்யா) வீட்டோ அதிகாரத்தை பாவித்து ரத்து செய்தது. இன்றோ நிலமை தலைகீழாகி விட்டது. மேற்குலக நாடுகள் ஐ.நா.மன்றத்தை பயன்படுத்தி இலங்கை மீது ராஜதந்திர அழுத்தங்களை பிரயோகிக்கின்றன. அதே நேரம் ரஷ்யா இலங்கை அரசு சார்பாக நிற்கின்றது. கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூட ரஷ்ய தூதுவராலயத்திற்கு சென்று நன்றி தெரிவித்தார்கள். இதனால் திரை மறைவில் வல்லரசுகளுக்கு இடையிலான பனிப்போர் நடப்பது தெளிவாகின்றது. பத்தாண்டுகளுக்கு முன்னராகவிருந்தால் கதை வேறாக இருந்திருக்கும். மேற்குலகின் நோக்கங்களுக்கு தடையாக வருவதற்கு எவருக்கும் துணிவிருந்திருக்காது.

தமிழர் தரப்பை பொறுத்த வரை, ஐ.நா. நிபுணர் குழுவானது விசாரணையின் முடிவில் இலங்கையின் அரசுத் தலைவரை குற்றவாளியாக அறிவிக்கும் என எதிர்பார்க்கின்றனர். தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்பது போலத் தான் அந்த எதிர்பார்ப்பு உள்ளது. மேற்குலக நிகழ்ச்சி நிரலின் கீழ் ஐ.நா. சபை இயங்குவது புதிய விடயமல்ல. ஐ.நா. மன்றம் இப்பொழுது தான் போர்க் குற்றங்களை அறிந்து கொண்டது போல நடிக்கின்றது. 30 வருட காலமாக போர் நடந்த பொழுதும், இடையில் யாரும் ஐ.நா. மன்றத்திற்கு அறியத் தரவில்லையாம். இலங்கை ஜனாதிபதி ஐ.நா. சபையில் உரையாற்றலாம். போர்க்குற்றங்கள் தொடர்பான அமைச்சர்களும், அதிகாரிகளும் அமெரிக்கா சென்று வரலாம். அப்பொழுது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. அதே போன்றது தான் ஜி.பி.எஸ். வரிச்சலுகை நிறுத்துவது குறித்த அமெரிக்க அரசின் கரிசனை. இலங்கையில் தொழிலாளர் நலன் மீறப்படுவதாக அமெரிக்க அரசு சார்பு தொழிற்சங்கம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் முன்னர் அலட்சியப் படுத்தப்பட்டன. அமெரிக்க அரசின் அலட்சியத்திற்கு காரணம், இலங்கையில் அப்பொழுது யுத்தம் இறுதிக் கட்டத்தை அடைந்திருந்தமை தான். அதாவது இலங்கை அரசின் மீதான எந்தவொரு சட்ட நடவடிக்கையும் போரை பாதிக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள்.

மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்த வரை மேற்குலகின் அணுகுமுறை அன்றில் இருந்து இன்று வரை மாறவில்லை. ஒரு பக்கம் கிளர்ச்சியாளர்களையும், மறு பக்கம் அரசையும் ஆதரிப்பது. கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கும் பொழுது அரசுக்கு பக்கபலமாக நின்று அடக்குவது. பின்னர் அதே அரசின் மீது, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில், சர்வதேச சட்டங்களை பிரயோகித்து ஆட்சியை மாற்றுவது. இதையெல்லாம் கோர்வையாக புரிந்து கொள்ளுமளவிற்கு, மக்களுக்கு நினைவாற்றல் கிடையாது. போர்க்குற்றம் தொடர்பான விசாரணை தமிழர் நலன் சார்ந்தது என தமிழ் தேசியவாதிகள் நம்புகிறார்கள். அதை சிங்கள தேசியவாதிகள், ஐ.நா. மன்றம் புலி சார்பானதாக புரிந்து கொள்கின்றனர். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலே மேற்குலக நலன்கள் இருப்பதை யாரும் கவனிப்பதில்லை. நாளைக்கே மேற்குலகு விதிக்கும் நிபந்தனைகளுக்கு இலங்கை அரசு கட்டுப்பட்டால், போர்க்குற்ற விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டு விடும்.

இலங்கையில் இப்பொழுது தேசப் பற்றாளர்களின் காலம் நடக்கிறது. தேசப்பற்றுக்கும், தேசியவாதத்திற்கும் இடையில் என்ன வித்தியாசம் என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் அவர்களைப் பொறுத்தவரை அது இயற்கையான மனித குணாம்சம் என்று நம்புகின்றனர். ஒருவர் தமிழர் என்றால், அவர் தமிழ்த் தேசியத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சிங்களத் தேசியமும் அதையே எதிர்பார்க்கின்றது. மேற்குலக நாடுகள் இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டால், நாட்டுப்பற்று கோஷங்கள் மேலெழுகின்றன. அரசுத் தலைவர்கள் மேற்குலகிற்கு சவால் விடும் பேச்சுகளை நிகழ்த்துகின்றனர். இது ஒரு வகையில் இலங்கையில் முன்னொருபோதும் காணப்படாத தோற்றப்பாடு தான். இருப்பினும் இன்றைய இலங்கை அரசு உண்மையிலேயே மேற்குல விரோத நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதா? பல தடவை அது வெறும் மேடைப் பேச்சு என்பது நிரூபணமாகின்றது.


இலங்கையர் சமூகம் முன்னரை விட அதிகமாக மேற்குலக மயப்படுத்தப் பட்டுள்ளது. உலகமயமாக்கல், நுகர்பொருள் கலாச்சாரம் என்பன அடித்தட்டு இலங்கைப் பிரஜையையும் பாதிக்கின்றது. மேற்குலகில் அறிமுகமாகும் புதிய நாகரீகம் அடுத்த நாளே இலங்கையின் இளையோரால் பின்பற்றப்படுகின்றது. இலங்கையின் கல்வி முறை இன்றும் கூட ஐரோப்பிய மையவாதக் கருத்துகளில் இருந்து விடுபடவில்லை. பிரபல தினசரிகள் மாணவர்களுக்கு பொது அறிவைப் போதிக்கும் விசேட பதிப்புகளை வெளியிடுகின்றன. அதில் கூட விஞ்ஞான கண்டுபிடிப்புகள் யாவும் ஐரோப்பியரின் மூளையில் உதித்ததாகவே எழுதப்பட்டுள்ளது. இதனால் இளம் தலைமுறையினரிடையே, மேற்குலக மோகம் அதிகமாக காணப்படுகின்றது. ஆங்கில மொழியைக் கூட மேற்குலக வாழ்க்கை முறைக்கான கருவியாக கருதுகின்றனர். மேற்குலக செல்வாக்கை அரசு எதிர்க்கவில்லை. பல்கலைக்கழக கல்வியை தனியாரிடம் ஒப்படைக்க அரசே உத்தேசித்து வருகின்றது. வெகு விரைவில் அமெரிக்க, பிரிட்டிஷ் கல்லூரிகள் தமது கிளைகளை இலங்கையில் திறக்கவிருக்கின்றன.

ஒரு காலத்தில் இலங்கையின் மேல்தட்டு வர்க்கத்தினர் மட்டுமே ஆங்கிலம் பேசி வந்த காலம் மலையேறி விட்டது. உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த பலர் ஆங்கில மொழிப் புலமை கொண்டோராக காணப்படுகின்றனர். கொழும்பு போன்ற பெரு நகரங்களில் அந்த விகிதாசாரம் அதிகம். இருப்பினும் யாழ்ப்பாணம் போன்ற போரினால் பின்தங்கியிருந்த மாவட்டங்களை சேர்ந்த மக்களும் பின்தொடர்கின்றனர். இலங்கையில் மொழிப்பிரச்சினை யுத்தத்திற்கு காரணம் என்றும் பேசப்பட்டது. தமிழ் மொழி மீது சிங்கள மொழி ஆதிக்கம் செலுத்துகின்றது. அவை இரண்டின் மீதும் ஆங்கில மொழி ஆதிக்கம் செலுத்துகின்றது. இன்றைய இலங்கையின் சோகம் என்னவெனில், மொழிப்பிரச்சினை குறித்து பலரும் பாராமுகமாக இருப்பது தான். சிங்களவரும், தமிழரும் ஒருவரின் மொழியை மற்றவர் படிப்பதே இனப்பிரச்சினைக்கு தீர்வாக கருதப்பட்டது. ஆனால் இது காலம் பிந்தி வந்த ஞானம் போலத் தெரிகின்றது.

இன்றுள்ள அரசு சிங்களவர்கள் தமிழ் மொழி படிக்க ஊக்குவிக்கின்றது. ஆனால் அது கூட, மேற்குலக கலாச்சார ஆதிக்கத்தில் இருந்து தப்பும் தந்திரமாகவும் இருக்கலாம். ஏனெனில் உலகமயமாக்கலின் பயனாக தவிர்க்கவியலாது ஆங்கிலத்தின் ஆதிக்கம் பரவி வருகின்றது. ஐரோப்பிய நாடுகள் கூட ஒரு காலத்தில் அடக்கிய சிறுபான்மையின மொழிகளை ஊக்குவிக்கின்றன. தனியார் நிறுவனமொன்றில் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் எடுப்பது, சரளமாக ஆங்கிலம் பேசுபவர்களுக்கு மட்டுமே கிட்டும் பாக்கியம். சிங்களம் அல்லது தமிழ் மட்டுமே தெரிந்த பட்டதாரிகள், பல வருட சேவையின் பின்னரே நாற்பதாயிரம் ரூபாய் எடுக்கிறார்கள். அத்தகைய சூழலில் தமிழ் மட்டுமல்ல, பெரும்பான்மை மொழியான சிங்களம் கூட தனது இருப்புக்காக போராட வேண்டும்.

இருபது வருடங்களுக்கு முன்பு இருந்ததைப் போலவே, சிங்களம், தமிழ் மொழிகளில் கல்வி கற்றவர்கள் அரசாங்க உத்தியோகத்தை நம்பியிருக்க வேண்டிய நிலை. இலங்கையில் இன்றைக்கும் அரசாங்க தொழில் துறை இளம் பட்டதாரிகளை ஈர்க்கின்றது. பணி நிரந்தரம், வருடாந்த ஊதிய உயர்வு, நிச்சயிக்கப்பட்ட போனஸ், ஒழுங்கான ஓய்வூதியம், வேறு பல தொழிலாளர் நலன் பேணும் காப்புறுதிகள். அரசாங்க ஊழியருக்கு மட்டுமே கிட்டும் அதிர்ஷ்டம் அவை. இதையெல்லாம் தனியார் துறையில் எதிர்பார்க்க முடியாது. அரசு இன்றைக்கும் இலங்கையில் மிகப் பெரிய தொழில் வழங்குனர். இருப்பினும் இனப்பிரச்சினைக்கு மூல காரணமான "சிங்களவருக்கு முன்னுரிமை" கொடுக்கும் கொள்கை இன்றைக்கும் தொடர்கின்றது. அதன் அர்த்தம் தமிழர்களுக்கு அரசாங்க உத்தியோகம் கிடையாது என்பதல்ல. கொழும்பில் அரச திணைக்கள தலைமைக் காரியாலயங்களில் கூட தமிழ் மேலதிகாரிகள் பணி புரிகின்றனர். அதே பதவிக்கு பெரும்பான்மை இனத்தவருடன் போட்டி போடும் தமிழர் அதிக தகைமை கொண்டவராக இருப்பார். சில நேரம் பதவியை தக்க வைத்துக் கொள்வதே ஒரு போராட்டமாக இருக்கும். அதே நேரம் ஒரு சிங்கள அதிகாரி இலகுவாக அந்தப் பதவிக்கு வந்திருப்பார்.
முன்னொரு காலத்தில் அரசாங்க உத்தியோகத்திற்கு சிங்களம் படிக்க வேண்டிய கட்டாய சட்டம் வந்த பொழுது, தமிழர்கள் எதிர்த்தார்கள். குறிப்பாக நடுத்தர வர்க்க தமிழர்கள் இந்த சட்டத்தால் தமது உத்தியோகம் பறிபோவதை உணர்ந்தார்கள். ஐம்பதுகளில் மறைந்த பிரதமர் பண்டாரநாயக்க கொண்டு வந்த "சிங்களம் மட்டும்" சட்டம் இனப்பிரச்சினையின் மூலவேர் என்று பலர் கருதுகின்றனர். அன்று உத்தியோகம் பார்த்த தமிழர்கள் யாரும் தமிழ் மொழியை அரச கரும மொழியாக பயன்படுத்தவில்லை. அதற்கான கோரிக்கையையும் அவர்கள் முன்வைக்கவில்லை. மாறாக காலனியாதிக்க பிரிட்டிஷாரின் ஆங்கிலம் மட்டுமே அரச கரும மொழியாக இருந்தது. சிங்களம் மட்டும் சட்டம் பின்னர் வட கிழக்கு மாகாணங்களில் தமிழில் அரச கருமமாற்ற வழிவகுத்தது. அன்று சிங்களம் படிக்க மாட்டோம் என்று அடம் பிடித்த கொழும்பு வாழ் உத்தியோகத்தர்கள் பலர், அவுஸ்திரேலியா, அமெரிக்கா என்று புலம் பெயர்ந்து விட்டார்கள். இன்று கொழும்பில் மேலதிகாரிகளாக பணியாற்றும் தமிழர்கள் அனைவரும் மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே நேரம் தீவிரமாக தமிழ் தேசியம் பேசுவதையும் காணக் கூடியதாக உள்ளது.

ஒரு காலத்தில் சிங்களவர்கள் தமிழ் பேசப் பழகுவதும், தமிழர்கள் சிங்களம் கற்பதும் அரிதாக இருந்தது. அன்றிருந்த சிங்கள இனவாதிகள் தமிழை இரண்டாவது மொழியாக கற்பதை கற்பனை செய்து கூடப் பார்க்கவில்லை. தமிழ் இனவாதிகளும் இரண்டாவது மொழியாக ஆங்கிலம் இருக்கும் பொழுது எதற்கு சிங்களம் எனக் கருதினார்கள். இன்று நிலைமை சிறிது மாறியுள்ளது. தமிழருடன் வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ள, அல்லது எல்லையோர கிராமங்களை சேர்ந்த சிங்களவர்கள் பலர் சரளமாக தமிழ் பேசுகின்றனர். நூறு வீத தமிழ் மாவட்டமான யாழ்ப்பாணத்திலும் சிங்களம் படிக்கிறார்கள். பிற தமிழ் மாவட்டங்களை சேர்ந்த தமிழர்கள் பலர் ஓரளவுக்கேனும் சிங்களம் பேசுகின்றனர். கொழும்பு வாழ் தமிழர்கள் பலர் சிங்களத்தை முதன் மொழியாக கொண்டு கல்வி கற்கின்றனர். அனேகமாக தொழில் வாய்ப்புகளுக்காக அப்படிச் செய்கின்றனர். அவர்களில் பலர் சிங்களத்தை தாய்மொழியாக கொண்டவர்களைப் போல சரளமாக பேசுகின்றனர். இருப்பினும் சிங்களவருக்கே முன்னுரிமை கொடுக்கும் அரசின் பாரபட்சமான நடவடிக்கை காரணமாக பாதிக்கப்படுகின்றனர். இன்று கொழும்பு வாழ் தமிழர்கள் மத்தியில் தமிழ் தேசியத்திற்கு ஆதரவான போக்கு காணப்படுகின்றது.

இலங்கையில் இனப்பிரச்சினை இன்னும் தீரவில்லை. அது முன்னரைப் போலவே துடிப்புடன் இருக்கிறது. பெரும்பான்மை சிங்கள இனத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல்வாதிகள் அப்படி எதுவும் இல்லை என்று மறுக்கின்றனர். சிறுபான்மை தமிழ் இனத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல்வாதிகள் அதிகாரப் பகிர்வு பற்றி மட்டுமே பேசுகின்றனர். இனப்பிரச்சினை குறித்து நாடளாவிய ரீதியாக ஒருமித்த கருத்தை காண்பது அரிது. வட, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த மக்கள் யுத்தம் சம்பந்தமான பாதுகாப்புப் பிரச்சினைகளை முக்கியமாக கருதுகின்றனர். சிங்களக் குடியேற்றங்களால் தமிழரின் தாயகப் பிரதேசம் பறிபோவதாக கருதுகின்றனர். அதனோடு ஒப்பிட்டுப் பார்க்கும் சிங்களப் பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களும், தமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்கிறார்கள். ஆனால் தமிழர், முஸ்லிம்கள் என்ற அனைத்து சிறுபான்மை இனங்களும், இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப் படுகின்றனர்.

இலங்கையின் பொருளாதார வளங்கள் யாவும் கொழும்பில் மையப்படுத்தப் பட்டுள்ளது. இதனால் தமிழீழப் பிரிவினையானது பிரதேச வளங்கள் மீதான உரிமையை கோருகின்றது. அதனையொட்டி அதிகாரப் பரவலாக்கல் குறித்த தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப் படுகின்றன. அப்படியே தமிழீழம் என்ற ஒன்று சாத்தியமாகி இருந்தாலும், முஸ்லிம்களினதும், சிங்களப் பிரதேசங்களில் வாழும் தமிழரின் பிரச்சினை தீர்ந்திருக்காது. தேயிலை, ரப்பர் போன்ற மூலப் பொருட்களுக்காக இலங்கையை சுரண்டும் மேலை நாடுகள். இயற்கை வளங்களுக்கு சொந்தம் கொண்டாடும் முதலாளிகள், மற்றும் நிலப்பிரபுக்கள். அரசியலுக்கு வருவதன் மூலம் சொத்து சேர்ப்பவர்கள். இவர்கள் எல்லாம் அள்ளியது போக எஞ்சிய சொற்ப வளங்களுக்காக உழைக்கும் மக்கள் போட்டி போடுகின்றனர். அதிலும் சிங்கள இனத்தை சேர்ந்தவர்களுக்கே பெரும் பங்கு சேரும் வண்ணம் அரசு பார்த்துக் கொள்கின்றது. இதன் மூலம் அரசுக்கு இரண்டு நன்மைகள் உண்டாகின்றன. ஒன்று, உழைக்கும் மக்களை இனரீதியாக இரண்டாக பிரிக்க முடிகின்றது. இரண்டு, தேர்தல்களில் பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குப் பலம் ஒன்றே ஆட்சியை கைப்பற்ற போதுமாக உள்ளது.

(தொடரும்)

(ஐரோப்பாவில் இருந்து வெளிவரும் சமூக- அரசியல் சஞ்சிகையான "முன்னணி" க்காக எழுதப்பட்ட கட்டுரை)

Thursday, July 07, 2011

கிரேக்க நாட்டு பயணக் குறிப்புகள்


"களிமேரா" (காலை வணக்கம்)
நகர மத்தியில் அமைந்திருந்த தேநீர்க் கடையில் சூடான கோப்பியை (Coffee) எதிர்பார்த்துக் காத்திருந்தேன். எனக்கு கிடைத்ததோ குளிர்பானமாக தயாரிக்கப்பட்ட கோப்பி. கிரேக்கர்கள் பொதுவாக குளிர் கோப்பியே அருந்துவார்கள் என்பதும், சூடான கோப்பி எனக் குறிப்பிட்டு கேட்டு தான் வாங்க வேண்டும். ஏதென்ஸ் கிரீஸின் தலைநகரம். அசுத்தமான வளி மண்டலத்தைக் கொண்ட ஐரோப்பிய நகரம். புகை படிந்தது போன்ற கட்டங்கள், நகரத்தை அசிங்கப்படுத்தின. ஹாரன் அடிக்கும் வாகனங்கள், மோட்டார் வண்டி இரைச்சல்களுக்கு மத்தியிலும் கிரேக்கர்கள் அவசர அவசரமாக வேலைக்கு சென்று கொண்டிருந்தார்கள்.
ஒமொனியா என அழைக்கப்படும் ஏதென்ஸ் நகர் மையப் பகுதியில் நடைபாதை வியாபாரிகள் வீதியோரமாக தமது கடைகளை விரித்தனர். ( இவர்கள் பற்றி பின்னர் விரிவாக...)

நான் கிரேக்க நாட்டுக்கு பயணம் போகப் புறப்பட்ட போது, எனது நண்பர்கள் "உனக்கு அங்கே என்ன வேலை?" என்று மேலும் கீழுமாகப் பார்த்தார்கள். கிரேக்கத்தைப் பற்றி தமிழர்கள் அறிய வேண்டியவை பல உள்ளன. சங்க காலத் தமிழர்கள், பண்டைய கிரேக்கர்களுடன் (தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் யவனர்கள்) வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். தற்காலக் கிரீஸின் வட பகுதியில் இருக்கும் மசிடோனியா (மக்கெடோனியா) விலிருந்து தான் அலெக்சாண்டர் வட இந்தியா வரை படையெடுத்து வந்தான். இதை விட, உலகக் கிறிஸ்தவர்களுக்கு கிறீஸ் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம். பாலஸ்தீனத்தில் தோன்றிய கிறிஸ்தவ மதம் கிரேக்கத்தில் உருப்பெற்றது. விவிலிய நூலில் (புதிய ஏற்பாடு) கூறப்பட்டுள்ள பல இடங்கள் தற்போதும் கிரீசில் உள்ளன. அன்று ரோம சாம்ராஜ்யப் பகுதிகளான கிறீஸ், துருக்கி, ஆகிய நாடுகளில் இருந்து தான் பெருமளவு மக்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றினார்கள். கிரேக்கம் இஸ்லாமிய மதத்திற்கும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளது. மசூதிகளின் கட்டிடக் கலை, கிரேக்க தேவாலயங்களை பின்பற்றி வடிவமைக்கப் பட்டன.

ஐரோப்பியர்கள் தமது நாகரீகம் கிரீசில் தோன்றியது என சொந்தம் கொண்டாடுவார்கள். மேற்குலக ஜனநாயகவாதிகள், கிரேக்கம் ஜனநாயகத்தின் தொட்டில் என மார் தட்டிக் கொள்வார்கள். பல்கலைக் கழகங்களில் தத்துவ விஞ்ஞானம் கற்பவர்கள், கிரேக்க தத்துவ ஞானிகளான பிளேட்டோவையும், சோக்ரடீசையும் தவிர்க்க முடியாது. மொழியியல் ரீதியாக, ஆங்கிலம் மற்றும் பல ஐரோப்பிய மொழிகள், கிரேக்க சொற்களை கடன் வாங்கியுள்ளன. மேற்குறிப்பட்ட தகவல்கள் யாவும் கிரேக்கத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள போதுமானவை.

முதலில் ஏதென்சில் அமைந்திருக்கும் அக்ரோபோலிஸ் என்ற புராதன நகரில் இருந்து ஆரம்பிப்போம். 2000 ஆண்டு பழமை வாய்ந்த நகரம், இன்றைக்கும் ஏதென்ஸ் நகருக்கு அருகில் உள்ள குன்றின் மீது கம்பீரமாக காட்சியளிக்கின்றது. கிரேக்க மொழியில் உயர்ந்த இடத்தில் அமைந்த நகரம் எனப் பொருள் படும். 2000 ஆண்டுகளுக்கு முன்னர், ஏதென்ஸ் நகர நிர்வாகம் அங்கே அமைந்திருந்தது. அன்றைய கிரேக்கம் ஒரே தேசமாக இருக்கவில்லை. சுயாதீனமான பெரிய நகரங்களின் நாடுகளாக இருந்தது. கிரேக்க மொழியில் அதினா (ஏதென்ஸ்) என்றழைக்கப் படும் நகரம், பெண் தெய்வம் ஒன்றின் பெயரால் உருவானது. (சரியான கிரேக்க உச்சரிப்பு "அஸ்தினா" என்று வரும். இதற்கும் இந்தியாவின் அஸ்தினாபுரிக்கும் ஏதாவது தொடர்பிருக்குமா தெரியவில்லை.)
அக்ரோபோலிசை பார்வையிட செலுத்த வேண்டிய கட்டணம் 12 யூரோக்கள். திறந்த வெளி அருங்காட்சியகமாக காணப்படும் பல புராதனக் கட்டிடங்கள் இடிந்து விழுந்து காணப்படுகின்றன. மீள் புனரமைப்பு பணிகள் தொடர்கின்றன. "பான்தெயோன்" என அழைக்கப் படும் பிரமாண்டமான கோவில் கூரையற்ற கட்டிடமாக காணப்படுகின்றது. கிறிஸ்தவ மதம் தோன்றுவதற்கு முன்பிருந்த கிரேக்க மதத்தில் செயுஸ் அதியுயர் ஸ்தானத்தில் இருந்தது. தலைமைக் கடவுள் செயுசுக்காக கட்டப்பட்ட ஆலயங்கள், கிரேக்கப் பகுதிகள் முழுவதும் (துருக்கியில் கூட) காணப்படுகின்றன. அக்ரோபோலிஸ் நகரில், "அகோரா" என அழைக்கப்படும் சந்தைக் கட்டிடம், இன்றும் உருக்குலையாமல் அப்படியே உள்ளது. அந்தக் கட்டிடத்தில் அகழ்வாராய்ச்சிப் பொருட்கள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன.


(தொடரும்)

Wednesday, July 06, 2011

வாகனக் குண்டு தாக்குதல் தொடர்பான சுவையான தகவல்கள்

கார்க் குண்டுவெடிப்புகள் சம்பந்தமான ஆவணப்படம். உலகின் முதலாவது வாகனக் குண்டுத்தாக்குதல் 1920 ம் ஆண்டு அமெரிக்காவில் இடம்பெற்றது. அந்த தாக்குதல் முதலாளித்துவத்தின் அதிகார மையத்திற்கு எதிராக நடத்தப் பட்டது. நியூயோர்க்கில் பங்குச்சந்தை அமைந்திருக்கும் Wallstreet பகுதியில், தீவிர இடதுசாரிகளால் அந்த குண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அதற்கு அடுத்ததாக, பிரிட்டிஷ் பாலஸ்தீனாவில், யூத தீவிரவாதக் குழுவொன்று கார்க்குண்டு வைத்து பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது. உலகில் மிக அதிகமான கார்க்குண்டு தாக்குதல்கள் லெபனானில் இடம்பெற்றுள்ளன.


Monday, July 04, 2011

அடிமைகள் அரசாண்டால் மிரளும் ஏகாதிபத்தியம்

(இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா - 5)

அடிமைகளின் புரட்சி எந்த நாட்டில் வென்றது?
அமெரிக்க கண்டங்களில் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்த இரண்டாவது நாடு எது?
உலகில் தோன்றிய முதலாவது கறுப்பினக் குடியரசு எது?
"ஹைத்தி" என்பதே அனைத்துக் கேள்விகளுக்குமான விடை.
அமெரிக்கப் புரட்சி பற்றி உலக நாடுகளின் பாடப்புத்தகங்கள் யாவும் போதிக்கின்றன. ஆனால் அதற்குப் பிறகு வரலாற்றில் இடம்பெற்ற முக்கியமான புரட்சியை கண்டுகொள்ளாமல் மறைக்கப் பார்க்கின்றன. பாட நூல்கள் மட்டுமல்ல, எந்தவொரு சரித்திர ஆசிரியரும், ஊடகமும் அதை நினைவு படுத்துவதில்லை. அதற்குக் காரணம், ஒரு நாட்டில் வெற்றி பெற்ற அடிமைகளின் புரட்சி, பிற நாடுகளுக்கு பரவக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். ஹைத்தியின் சுதந்திரத்தை அடக்குவதற்காக படை அனுப்பிய நெப்போலியன் பின்வருமாறு கூறினான். "நான் ஹைத்தியின் செல்வத்தை பாதுகாப்பதற்காக படையனுப்பவில்லை. கறுப்பின அடிமைகளின் வெற்றி, உலக கறுப்பினத்தவர்களின் விடுதலைக்கு தூண்டுகோலாக இருக்கக் கூடாது." ஹைத்தி விடுதலையடைந்த நேரம் ஆங்கிலேயர்கள் இந்தியாவை காலனி அடிமையாக்கிக் கொண்டிருந்தார்கள். அன்று உலகம் முழுவதையும் ஆண்ட ஐரோப்பிய காலனியாதிக்க நாடுகள், ஹைத்தி புரட்சி பற்றி இருட்டடிப்புச் செய்தனர். வேறு சில மத்திய அமெரிக்க, கரீபியன் நாடுகளில் அடிமைகள் கிளர்ச்சி செய்த பொழுது முளையிலேயே அழித்தார்கள்.

ஹைத்தி 200 வருடங்களுக்கு முன்னர், ஐரோப்பிய வல்லரசுகளுக்கு எதிராக கெரில்லாப் போராட்டம் நடத்தி விடுதலை பெற்றது. ஹைத்தி மக்கள் தமது விடுதலைக்கு இன்று வரை விலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். "சுதந்திரம் சமத்துவம், சகோதரத்துவம்" என்று முழங்கிய பிரெஞ்சு புரட்சியாளர்கள், கறுப்பர்களுக்கு அது பொருந்தாது என்றார்கள். வட-அமெரிக்க புரட்சியாளர்கள் 50 வருடங்களுக்கு பின்னர் தான் ஹைத்தியின் சுதந்திரத்தை அங்கீகரித்தார்கள். நஷ்டஈடு வழங்க ஒப்புக் கொண்ட பின்னர் தான், ஹைத்தியின் இறையாண்மையை பிரான்ஸ் ஏற்றுக் கொண்டது. வரலாற்றில் இன்னொரு தடவை அடிமைகளின் புரட்சி வெல்லக் கூடாது, என்பதில் எல்லோரும் கவனமாக இருக்கிறார்கள். விதிகளை மீறுவோர் ஹைத்தி போன்று நிரந்தர வறுமைக்குள் வருந்துமாறு சபிக்கப்படுவார்கள்.

ஐநூறு வருடங்களுக்கு முன்னர் கொலம்பஸ் ஹைத்தியை "கண்டுபிடித்த பொழுது", அதனை "ஹிஸ்பானியோலா" என்று பெயரிட்டார். அங்கே நிலைநிறுத்தப் பட்ட நாற்பது ஸ்பானிய வீரர்களும், ஒரு வருடத்தின் பின்னர் கொலம்பஸ் திரும்பிய பொழுது உயிரோடு இருக்கவில்லை. அவர்கள் கட்டிய கோட்டையும் எரிந்து சாம்பராகிக் கிடந்தது. உள்ளூர் செவ்விந்திய பெண்களை கடத்திச் சென்று பாலியம் பலாத்காரம் செய்ததற்கான பழிவாங்கல் நடவடிக்கை அது. தன்மானம் சீண்டப்பட்டதாக உணர்ந்த ஸ்பானியர்கள் செவ்விந்தியர்களை கொன்று குவித்தார்கள், அல்லது சாகும் வரை வேலை வாங்கினார்கள். பழங்குடியின தீவுவாசிகள் ஒருவர் விடாது அனைவரையும் அழித்தார்கள். அமெரிக்க கண்டத்தில் ஐரோப்பியரின் இனவழிப்புக்கு பலியான Taino இன மக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனார்கள்.

அதற்குப் பிறகு ஸ்பானியர்கள், தீவின் கிழக்குப் பகுதியில் மட்டும் (இன்று டொமினிக் குடியரசு) குடியேற்றங்களை நிறுவினார்கள். ஹைத்தி பிரெஞ்சு, ஆங்கிலேய கடற்கொள்ளையரின் புகலிடமாக இருந்தது. சில வருடங்களின் பின்னர் பிரெஞ்சு முதலாளிகள் குடும்பத்தோடு வந்து குடியேறினார்கள். பெரும் முதலிட்டு பெருந்தோட்ட பயிர்ச்செய்கை ஆரம்பித்தார்கள். கரும்பு, கோப்பி, பருத்தி, எதை விளைவித்தாலும் பணம் கொட்டியது. அப்பொழுது அந்தப் பகுதி "சென் டொமிங்" (Saint Domingue) என அழைக்கப்பட்டது. பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆப்பிரிக்க அடிமைகளை இறக்குமதி செய்தார்கள். பிரெஞ்சுக் காலனிகளில் ஹைத்தியில் மட்டுமே அதிக லாபம் கிடைத்தது. பிரான்சின் மூன்றில் ஒரு அந்நிய இறக்குமதி அங்கிருந்து வந்தது. அன்று பொருளாதார வளர்ச்சிப் படியில் முன்னேறிக் கொண்டிருந்த பணக்கார காலனியாக திகழ்ந்தது. ஹைத்தியில் குடியேறிய நாற்பதாயிரம் பிரெஞ்சு மக்கள் மட்டுமே செல்வத்தின் பெரும் பங்கை அனுபவித்தார்கள். ஆப்பிரிக்க அடிமைகளுக்கு எதுவும் கிடைக்காது. லாபத்தை அதிகரிப்பதற்காக இன்னும் அதிகமாக சுரண்டப்பட்டார்கள்.

1791 ம் ஆண்டு, அதாவது புரட்சி வெடித்த காலத்தில், ஹைத்தியில் அரை மில்லியன் கறுப்பின அடிமைகள் இருந்தனர். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆப்பிரிக்காவில் பிறந்தவர்கள். அநேகமாமானோர் பெருந்தோட்டங்களின் விரிவாக்கல் காரணமாக பிடித்து வரப்பட்டவர்கள். ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் இருந்து வந்த பல மொழிகளைப் பேசும் மக்கள். பெருந்தோட்டங்களில் அடிமை தொழிலும், ஒன்றிணைந்த போராட்ட வாழ்வும் அவர்களிடையே சகோதரத்துவத்தை தோற்றுவித்திருந்தது. ஹைத்தியின் மொத்த சனத்தொகையில் பத்து கறுப்பர்களுக்கு ஒரு வெள்ளையர் இருந்தார். இதனால் பெரும்பான்மையினரான அடிமைகள் விரைவிலேயே தமது பலத்தை அறிந்து கொண்டனர். இதை விட, அடிமைகளின் பூர்வீகமும் புரட்சிக்கு வழிகோலியது. புதிதாக வந்த ஆப்பிரிக்க அடிமைகள் தாயகத்தில் சுதந்திர மனிதர்களாக வாழ்ந்தவர்கள். பலர் அங்கோலா, கொங்கோ ராஜ்ஜியங்களின் மறவர் குலப் படைவீரர்களாக பணியாற்றியவர்கள். தமது மன்னனுக்கு மட்டுமே விசுவாசமானவர்கள். அப்படிப்பட்ட பின்னணியை கொண்டவர்கள் அடிமையாக வேலை செய்ய மறுத்ததில் வியப்பில்லை. பெருந்தோட்ட முதலாளிகளை எதிர்த்து கலகம் செய்தார்கள். கலகக்காரர்கள் விரைவிலேயே கெரில்லாப் போராளிகளாக நிறுவனமயப் பட்டனர்.

ஹைத்தியில் அடிமைகளை இறக்குமதி செய்த காலத்தில் இருந்தே, அடிமைகளின் கிளர்ச்சியும் இடம்பெற்று வந்துள்ளது. சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் அடிமைகள் காலில் கட்டிய சங்கிலிகளை உடைந்தெறிந்து விட்டு தப்பியோடினார்கள். யாரும் ஊடுருவ முடியாத மலைகளில் புகலிடம் தேடிக் கொண்டனர். அங்கிருந்த படியே உணவுக்காக பெருந்தோட்டங்களை கொள்ளையடிப்பார்கள். அப்படி வரும் சந்தர்ப்பங்களில் பிற அடிமைகளை தப்பியோடுமாறு தூண்டி விடுவார்கள். ஆனால் இவையெல்லாம் ஒரு புரட்சிக்கு போதுமானதாக இருக்கவில்லை. கறுப்பின அடிமைகள் ஒரு தலைவனுக்காக காத்திருந்தார்கள். "துசா லூவேதியூர்" (Toussaint L'ouverture) ஹைத்தியின் வடக்கேயுள்ள பிறேடா பெருந்தோட்டத்தில் அடிமையாகப் பிறந்தவர். ஒரு பிரபுவின் வீட்டு அடிமையாகும் பாக்கியம் பெற்றதால், எழுதப் படிக்க கற்றிருந்தார். அதனால் பிரான்சில் வெடித்த புரட்சி பற்றிய செய்திகளையும் அறிந்து வைத்திருந்தார். சரியான தருணத்தில் கலகக்காரர்களுடன் இணைந்து கொண்டார்.

துசா விடுதலையடைந்த அடிமைகளைக் கொண்டு கெரில்லாக் குழுக்களை அமைத்தார். அவர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கினார். யுத்த தந்திரங்களை கற்றுக் கொடுத்தார். இதற்காக அவர் எந்தவொரு இராணுவக் கல்லூரியிலும் பயிலவில்லை. சிறந்த தலைமைப் பண்புகளைக் கொண்ட துசா இராணுவத் தளபதியாக மட்டும் இருக்கவில்லை. புத்தி கூர்மை மிக்க ராஜதந்திரி. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை சரியாக பயன்படுத்திக் கொண்டார். ஹைத்தி முழுவதும் அடிமைகளின் கிளர்ச்சி பரவிய பொழுது, அதை அடக்குவதற்காக மூன்று ஐரோப்பிய நாடுகள் படைகளை அனுப்பின. பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய ஏகாதிபத்திய நாடுகள், தமக்கிடையிலான வல்லரசுப் போட்டியை இதற்காக ஒத்தி வைத்தன. ஆயினும் வலிமை பொருந்திய ஆயுதங்களை வைத்திருந்த ஐரோப்பியப் படைகளால், ஒரு சிறு கெரில்லாக் குழுவை வெல்ல முடியவில்லை. கறுப்பினப் போராளிகள் கெரில்லாப் போருக்கு சாதகமான மலைகளிலும், காடுகளிலும் மறைந்திருந்து தாக்கினார்கள். இயற்கையும் ஐரோப்பியருக்கு ஒத்துழைக்க மறுத்தது. வெப்ப வலைய நெருப்புக் காய்ச்சல் தாக்கி பல படைவீரர்கள் மடிந்தார்கள்.

ஹைத்தியின் வடக்கேயுள்ள பகுதிகள் கறுப்பினப் படையணிகளால் விடுவிக்கப்பட்டன. தெற்கேயுள்ள பகுதிகளை கலப்பின முலாட்டோ படையினர் விடுதலை செய்தனர். பிரெஞ்சு பிரபுக்களுக்கும், கறுப்பின அடிமைப் பெண்களுக்கும் பிறந்த பிள்ளைகளே முலாட்டோ என அழைக்கப்படுகின்றனர். அவர்களின் தலைமைத் தளபதி பெத்தியோன் (Alexander Petion) கூட ஒரு தலைமைப் பண்பு புரட்சியாளர். லத்தீன் அமெரிக்க நாடுகளை ஸ்பானிய காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை செய்த பொலிவார் சுதந்திர ஹைத்தியில் தஞ்சம் கோரியிருந்தார். அப்பொழுது அவருக்கு அடைக்கலம் கொடுத்த முலட்டோ தலைவர் பெத்தியோன், பணமும், ஆயுதங்களும் கொடுத்து அனுப்பி வைத்தார். அந்த உதவிக்கு கைமாறாக என்ன செய்ய வேண்டுமென்று கேட்டார் பொலிவார். லத்தீன் அமெரிக்கா முழுவதும் அடிமைகளுக்கு சுதந்திரம் வழங்கினாலே போதும், என்று பதிலளித்தார் பெத்தியோன்.

பெருந்தோட்ட முதலாளிகள் அடிமைகளை ஈவிரக்கமற்று கொடுமைப் படுத்தி வந்தார்கள். கிளர்ச்சிக்கு அதுவும் ஒரு காரணம். புரட்சியின் போது பெருந்தோட்டப் பயிர்கள் எரித்து நாசமாக்கப்பட்டன. பெருந்தோட்ட முதலாளிகளை சொந்த அடிமைகளே நஞ்சூட்டி, அல்லது வெட்டிக் கொன்றனர். கறுப்பின அடிமைகளின் தார்மீக ஆவேசம் அனைத்து வெள்ளையருக்கும் எதிராக திரும்பியது. கண்ணில் பட்ட வெள்ளையர்கள் எல்லோரும் கொன்று குவிக்கப்பட்டனர். படுகொலைக்கு தப்பியவர்கள் அகதியாக பிரான்சு நோக்கி கப்பலேறினார்கள். புரட்சி வெற்றிவாகை சூடிய பொழுது ஹைத்தியில் ஒரு பிரெஞ்சுக்காரர் கூட இருக்கவில்லை. அன்று அங்கிருந்த வெள்ளையர்கள் அனைவரும் போலந்து கூலிப்படையை சேர்ந்தவர்கள். பிரெஞ்சு இராணுவத்தால் அனுப்பபட்ட அவர்கள் தக்க தருணம் பார்த்து புரட்சிப்படைகளுடன் சேர்ந்து கொண்டார்கள். அதனால் அவர்கள் மட்டுமே சுதந்திர ஹைத்தியில் தங்க அனுமதிக்கப்பட்டார்கள்.

சுதந்திர ஹைத்தி பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியது. முன்னாள் அடிமைகள் யாரும் பெருந்தோட்டத்தில் வேலை செய்ய விரும்பவில்லை. இதனால் நிலம் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. அநேகமாக அனைத்து கறுப்பினத்தவர்களும் விவசாயத்தில் ஈடுபட்டார்கள். முலாட்டோக்கள் விவசாய உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் இறங்கினார்கள். இதனால் சமூகத்தில் புதிய வர்க்க வேறுபாடுகள் தோன்றின. நாட்டுப்புறங்களில் ஏழை விவசாயிகளாக வாழும், கிரயோல் (ஆப்பிரிக்க கலப்பு) மொழி பேசும் கறுப்பினத்தவர்கள். நகர்ப்புறங்களில் பணக்கார மேட்டுக்குடிகளாக வாழும், பிரெஞ்சு மொழி பேசும் முலாட்டோக்கள். பிற்காலத்தில் படித்த கறுப்பின மத்தியதர வர்க்கம் உருவான போதிலும், இந்த சமூகப் பிரிவினை இன்று வரை தொடர்கின்றது.

ஹைத்தி புரட்சி சர்வதேச மட்டங்களில் பல மாற்றங்களை உருவாக்கியது. முன்னாள் காலனிய எஜமானான பிரான்ஸ், ஹைத்தியை கைப்பற்ற பெரும் பிரயத்தனம் எடுத்தது. தன்னிடம் இருந்த அனைத்து வளங்களையும் பயன்படுத்தி போரைத் தொடர எண்ணியது. இதற்காக அமெரிக்காவில் இருந்த பிரெஞ்சுக் காலனியான லூசியானாவை 15 மில்லியன் டாலர்களுக்கு விற்றது. ஹைத்தியில் புரட்சி வெடிக்காதிருந்தால், இந் நேரம் வட அமெரிக்காவில் ஒரு பிரெஞ்சு - அமெரிக்க தேசம் இருந்திருக்கும். ஹைத்தி சுதந்திர நாடாகிய பொழுதிலும், சர்வதேச உறவுகளைப் பேணுவதில் தடை ஏற்பட்டது. சர்வதேச வர்த்தகம் முழுவதும் ஐரோப்பிய வல்லரசுகளின் கைகளில் இருந்தது. இதனால் ஏற்றுமதிக்கு அந்நிய சந்தையை தேடுவதில் சிரமமேற்பட்டது. வேறு வழியின்றி ஹைத்தி, பிரான்சின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டது. காலனிய இழப்பீடுகளுக்காக, ஹைத்தி பிரான்சுக்கு 150 மில்லியன் பிராங் நஷ்டஈடு வழங்க ஒப்புக் கொண்டது. பதிலுக்கு பிரான்ஸ் ஹைத்தியின் சுதந்திரத்தை அங்கீகரித்தது.

பிரான்ஸ் 150 மில்லியன் பிராங் பணம் வாங்கிக் கொண்டு, 1825 ல் ஹைத்தியின் சுதந்திரத்தை அங்கீகரித்தது. அமெரிக்கா 1862 ல் அங்கீகாரம் வழங்கியது. அதற்கும் சுயநலம் தான் காரணம். உள்நாட்டுப் போரில் சிக்கியிருந்த அமெரிக்காவுக்கு ஹைத்தியின் பருத்தி அத்தியாவசியமாக தேவைப்பட்டது. முதலாம் உலகப்போரின் பொழுது, பனாமாக் கால்வாயை பாதுகாப்பதற்காக, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹைத்தி மீது அமெரிக்க இராணுவம் படையெடுத்தது. அன்று தொடங்கிய அமெரிக்க ஆக்கிரமிப்பு 19 ஆண்டுகள் நீடித்தது. "ஹைத்தி மக்களின் நன்மை கருதி" நடவடிக்கை எடுத்ததாக அறிவித்த அமெரிக்கா, அதற்குப் பிறகு பல தடவைகள் படையெடுத்து விட்டது. ஜனநாயகத்தை மீட்பதற்கு, தேர்தலில் தெரிந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு, என்று பல சாட்டுகளைக் கூறிக் கொண்டு அமெரிக்கப் படையினர் வந்து "சும்மா, சுகம் விசாரித்து விட்டு" செல்வார்கள். 2009 ல் நிலநடுக்கம் ஏற்பட்ட போது கூட "நிவாரணப் பணிகளை ஒழுங்கு படுத்த" வந்தார்கள். சின்னச்சிறு ஹைத்தி மீது அமெரிக்காவுக்கு என்ன அவ்வளவு கரிசனை?

ஹைத்தியில் அடிமை முறை ஒழிக்கப்பட்ட போதிலும், உற்பத்தி உறவுகளில் மாற்றம் ஏற்படவில்லை. வெள்ளையின பெருந்தோட்ட முதலாளிகளை விரட்டி விட்டு, அந்த இடத்தில் கறுப்பின/கலப்பின மேட்டுக்குடி வர்க்கம் அமர்ந்து கொண்டது. அவர்கள் உழைக்கும் மக்களை கட்டாய வேலை வாங்கியதன் மூலம் தமது
செல்வந்த வாழ்வை நிச்சயப்படுத்திக் கொண்டனர். முன்னாள் அடிமைகள் குடிமைகளானார்கள், ஏழை தொழிலாளர்களானார்கள். வெள்ளையின எஜமானர்களின் இடத்தில் கறுப்பின எஜமானர்கள் அமர்ந்து கொண்டார்கள். இந்த நிலைமை இன்று வரை தொடர்கின்றது. அதிகார வர்க்கத்திற்கு எதிராக மக்கள் எழுச்சிகள் ஏற்படாமல் இல்லை. ஆனால் மக்கள் தமது இயலாமையை அறிந்து வைத்துள்ளனர். அமெரிக்க ஆக்கிரமிப்பின் போது ஏற்பட்ட விவசாயிகளின் எழுச்சி ஒன்று அடக்கப்பட்டது. 1919 ல் அவர்களை ஒழுங்குபடுத்தி போராடிய முன்னாள் இராணுவ அதிகாரி காட்டிக் கொடுக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு நீண்ட காலமாக யாரும் புரட்சியை நினைத்தும் பார்க்கவில்லை. ஆக்கிரமிப்பாளர்களான அமெரிக்க மரைன் படையினர், ஹைத்தி இராணுவத்தை கலைத்து விட்டிருந்தனர். அந்த இடத்தில் உள்நாட்டுக் கலகங்களை அடக்கும் சிறப்புப் போலிஸ் பிரிவினை உருவாக்கினர். பிற்காலத்தில் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்களுக்கு அமெரிக்காவில் பயிற்சி பெற்ற பொலிசாரே காரணமாக இருந்தனர்.

அமெரிக்க படையினர் வெளியேறிய பிறகு, ஹைத்தி டுவாலியர் என்ற சர்வாதிகாரியின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அல்லலுற்றது. 1986 வரை பல தசாப்தங்களாக தொடர்ந்த டுவாலியர் குடும்ப ஆட்சியின் கீழ் ஹைத்தி மக்கள் சொல்லொணா துயரங்களுக்கு உள்ளாகினர். எதிர்க்கட்சிகள் தடை செய்யப்பட்டன. கருத்துச் சுதந்திரம் இறுதி மூச்சை விட்டது. சர்வாதிகாரத்தை எதிர்த்தவர்கள் இரவோடு இரவாக காணாமல் போனார்கள். கொலைபாதகச் செயல்களுக்கு அஞ்சாத குண்டர் படைகள், அப்பாவிகளை கண்ட இடத்தில் சுட்டுக் கொண்டனர். சந்தேகநபர்களால் சிறைச்சாலைகள் நிரம்பின. சித்திரவதை, கொட்டடிக் கொலைகள் சாதாரண நிகழ்வுகளாகின. டுவாலியர் ஆரம்பத்தில் பொதுத்தேர்தலில் மக்கள் ஆதரவுடன் தெரிவான ஜனாதிபதி தான். அதிலும் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து வைத்தியரானவர். ஆனால் பதவி சுகமும், சி.ஐ.ஏ. ஆதரவும் ஒரு சர்வாதிகாரியை உருவாக்கியது. தேசநலனை மறந்து தனது செல்வத்தை பெருக்கிக் கொள்வதிலேயே முனைப்புக் காட்டினார். டுவாலியர் காலத்தில் ஏழைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியது. 90 வீதமான ஹைத்தி மக்கள், படிப்பறிவற்றவர்களாக வறுமையில் வாடும் பொழுது, ஜனாதிபதியின் குடும்பம் சுவிஸ் வங்கிகளில் பணத்தை பதுக்கிக் கொண்டிருந்தது. 1986 ல் ஏற்பட்ட மக்கள் எழுச்சி டுவாலியர் குடும்ப கொடுங்கோன்மைக்கு முடிவு கட்டியது. இருந்தாலும் அப்போது பதவியில் இருந்த டுவாலியரின் மகன் அரச கருவூலத்தை கொள்ளையடித்துக் கொண்டு பிரான்சுக்கு தப்பியோடினான்.

டுவாலியர் காலத்தில் ஹைத்தியில் வாழ்ந்த மக்களுக்கு இரண்டு தெரிவுகளே இருந்தன. ஒன்று, கூலிப்படையின் கொலைக் கரங்களுக்குள் அகப்பட்டு சித்திரவதைப் பட்டு சாவது. இரண்டு, நாட்டையும் உறவுகளையும் விட்டு விட்டு அயல் நாடுகளுக்கு தப்பியோடுவது. தினசரி ஆயிரக்கணக்கான ஹைத்தி அகதிகள் படகுகள் மூலம் நாற்திசைகளில் உயிர் காக்க ஓடிக் கொண்டிருந்தார்கள். இதில் வேதனை என்னவென்றால், சுற்ற வரவுள்ள எந்தவொரு நாடும் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. பெருமளவு ஹைத்தியர்கள் அமெரிக்கா, புளோரிடா கரையில் தஞ்சம் கோரினார்கள். ஆனால் அந்த அகதிகளுக்கு தற்காலிக புகலிடம் அளிப்பதற்கு கூட அமெரிக்க அரசு மறுத்தது. அதே நேரம் அமெரிக்க கம்பனிகள் ஹைத்தியில் சுரண்டிய உழைப்பை, டாலர்களாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தன.

"நாளொன்றுக்கு ஒரு டாலர் சம்பாதிக்கும் ஹைத்தியர்கள், எதற்காக 500 டாலர் கட்டி ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொண்டு அமெரிக்கா வருகிறார்கள்?" என்று அமெரிக்க அரசு இரங்கவில்லை. அடைக்கலம் கேட்டு வந்தவர்களை பிடித்து திருப்பி அனுப்பினார்கள். கொடுங்கோல் சர்வாதிகாரியின் கைகளில் நேரில் கொண்டு சென்று ஒப்படைத்தார்கள். விமான நிலையத்தில் காத்திருந்த கொலைஞர்கள், திரும்பி வந்த அகதிகளை கதறக் கதற தரையில் இழுத்து சென்றனர். இதெயெல்லாம் தனி மனித சுதந்திரத்தை உயிரென மதிக்கும் அமெரிக்கா பொறுத்துக் கொண்டிருந்ததா? என்று யாரும் கேட்கக் கூடாது. அவர்களுக்கு கியூபாவின் மனித உரிமைகளைக் கண்காணிக்கவே நேரம் போதவில்லை. படகுகளில் வந்த ஹைத்தியர்கள் அகதிகள் இல்லை என்று கூறிய அதே அமெரிக்கா, ஏக காலத்தில் படகுகளில் வந்த கியூபர்களுக்கு அகதி தஞ்சம் வழங்கியது. "கியூபர்கள் மட்டுமே உண்மையான அரசியல் அகதிகள்" என்று, ஊடகங்கள் தலையில் வைத்து கூத்தாடின. ஆகவே இதிலிருந்து கற்றுக் கொள்ளப்பட வேண்டிய பாடம்: "அமெரிக்காவில் அகதித் தஞ்சம் கோர விரும்பும் ஒருவர், கம்யூனிச நாட்டில் இருந்து வந்த கம்யூனிச எதிர்ப்பாளராக இருக்க வேண்டும்."

டுவாலியரின் ஆட்சி இரண்டு வலிமை பொருந்திய அரசியல் சக்திகளின் ஆதரவால் மட்டுமே நீடிக்க முடிந்தது. ஒன்று, அமெரிக்க அரசு. இரண்டு, பாதுகாப்புப் படைகள். சர்வாதிகாரிக்கு முகஸ்துதி செய்து பதவியில் அமர்ந்திருந்த ஒரு சிறு கும்பலை தவிர, பெரும்பான்மை மக்கள் வெறுப்புடன் இருந்தனர். எதிர்க்கட்சிகள் யாவும் தடைசெய்யப்பட்ட சூழலில், கத்தோலிக்க தேவாலயம் மட்டுமே மிச்சமிருந்தது. அன்று தென் அமெரிக்காவில் பிரபலமடைந்த "விடுதலை இறையியல்" தத்துவத்திற்கு பல பாதிரிகள் ஈர்க்கப்பட்டனர். தேவாலயங்களை அடக்கப்பட்ட மக்களின் புரட்சிக்கான பயில்நிலங்களாக மாற்றினார்கள். அவர்களில் குறிப்பிடத் தக்கவர் அரிஸ்தீத். தலைநகர் போர்ட் ஒ பிரின்சில் உள்ள பிரபல தேவாலயத்தில் அவரது அரசியல் உரையைக் கேட்க பல்லாயிரம் மக்கள் கூடினார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பூஜைக்கு பின்னர் ஆரம்பிக்கும் மதப் பிரசங்கம், அரசியல் பிரச்சாரமாக மாறும். டுவாலியரின் கொடுங்கோலாட்சிக்கு எதிராக, சமூகவிரோத கூலிப்படைகளின் வன்செயல்களுக்கு எதிராக, கடுமையான எதிர்ப்பை தெரிவிப்பார். கூலிப்படையினர் அரிஸ்தீட்டை கொலை செய்வதற்கு பல தடவை முயன்றனர். ஆனால் பாதுகாப்புச் சுவராக நின்ற மக்களின் ஆதரவால் உயிர் பிழைத்தார்.

பாதிரியார் அரிஸ்தீட்டுக்கு என்பது வீதமான ஹைத்தி மக்கள் ஆதரவளித்த போதிலும், வத்திகான் அவரை பிஷப் பதவியில் இருந்து நீக்கியது. அதற்கு காரணம் அரிஸ்தீத் ஒரு மார்க்சிஸ்ட்! "சோஷலிசம் மட்டுமே ஏழைகளுக்கு விடிவைத் தேடித் தரும் மார்க்கம்" என்று போதித்தார். அது மட்டும் தான் அவர் செய்த குற்றம். "ஆறு மில்லியன் ஏழை ஹைத்தியர்களுக்கு உணவளிக்க, உறைவிடம் வழங்க, வளமான வாழ்வுக்கு சோஷலிசம் மட்டுமே தீர்வு." பாட்டாளிகளின் தோழன் அரிஸ்தீத் கத்தோலிக்க அதிகார பீடத்தை எரிச்சலடைய வைத்ததில் வியப்பில்லை. ஆனால் "ஏழைகளின் அன்னை" தெரேசா, ஹைத்தி ஏழைகளிடம் இருந்து சுரண்டிய டுவாலியரின் நிதியை ஏற்றுக் கொண்டார். ஹைத்தி ஏழைகளின் இரத்தக்கறை படிந்த டுவாலியரின் மனைவியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அக்கிரமக்காரருடன் கைகோர்த்த அன்னை தெரேசாவின் செயல், வத்திகானில் அதிர்வலைகளை ஏற்படுத்தவில்லை. "தெரேசா புனிதர், அரிஸ்தீத் துரோகி." இது தான் வத்திகானின் (அ)நீதி.

அடுத்து வந்த பொதுத் தேர்தல்களில், அரிஸ்தீத் மக்கள் ஆதரவுடன் வென்றதால் அமெரிக்கா வேறு வழியின்றி ஆதரவளிக்க வேண்டியிருந்தது. என்பது வீதமான மக்கள் அரிஸ்தீத் பக்கம் நின்றனர். ஆயினும் அரிஸ்தீத் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், வாக்களித்த சோஷலிசத்தை கொண்டு வர முடியவில்லை. அதனால் மக்களிடம் ஏற்பட்ட அதிருப்தியை பயன்படுத்தி அடிக்கடி ஆட்சிக் கவிழ்ப்புகள் இடம்பெற்றன. அதன் பின்னணியில் அமெரிக்க்க அரசு இருந்தது. சில வருடங்களுக்கு முன்னர் கூட ஹைத்தியை ஆக்கிரமித்த அமெரிக்க படைகள், இனிமேல் திரும்பி வராதபடிக்கு அரிஸ்தீட்டை தென் ஆப்பிரிக்காவுக்கு நாடு கடத்தின. அரிஸ்தீத் ஆட்சி செய்த காலத்திலும், அமெரிக்கா, ஐ.எம்.எப்., உலகவங்கி என்பன கழுத்தை நெருக்கிக் கொண்டிருந்தன. தமது நிபந்தனைகளுக்கு உட்படா விட்டால் கடன் தர மாட்டோம் என பயமுறுத்தின.

கடன் வழங்கும் நிறுவனங்களின் பொருளாதார சீர்திருத்தங்கள், சில நேரம் சிறுபிள்ளைத் தனமாக இருக்கும். உதாரணத்திற்கு சில. தேசிய தொலைத்தொடர்பு சேவையை தனியார்மயப்படுத்துமாறு கூறினார்கள். ஹைத்தியில் சில ஆயிரம் பேர்கள் மட்டுமே தொலைபேசி பாவனையாளர்கள். லாபம் தராத தொழிற்துறையை தனியாரிடம் ஒப்படைத்ததால் யாருக்கும் பிரயோசனமில்லாமல் போனது. அதே போலத் தான் பொதுக்கல்வி. கல்விக்கு அரசு மிக மிகக் குறைந்த நிதி மட்டுமே ஒதுக்க வேண்டுமென்பது ஐ.எம்.எப். உத்தரவு. இதனால் பாடசாலைகள் எல்லாம் தனியார்வசம் உள்ளன. பணம் படைத்தவர்களின் பிள்ளைகள் மட்டுமே படிக்கிறார்கள். ஏழைகளின் பிள்ளைகள் படிப்புச் செலவை ஏற்க முடியாமல் வேலைக்கு போகின்றனர். ஏற்கனவே 90% வீதமான ஹைத்தியர்கள் கல்வியறிவற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நமது நாட்டு கிராமங்களில் வீட்டுக்கொரு ஆடு வளர்ப்பது போல, ஹைத்தியில் பன்றி வளர்ப்பார்கள். ஐநூறு வருடங்களுக்கு முன்னர் காலனிய ஐரோப்பியர் கொண்டு வந்த பன்றிகள் ஹைத்தி சூழலுக்கு ஏற்ப பழக்கப்படுத்திக் கொண்டவை. அண்மையில் ஒரு தடவை பன்றிக் காய்ச்சல் தொற்றுநோய் பரவிய பொழுது, ஐ.எம்.எப். உத்தரவுப்படி ஹைத்தி பன்றிகள் எல்லாம் அழிக்கப்பட்டன. அதற்கு நஷ்டஈடாக அமெரிக்கா வழங்கிய பன்றிகள், ஹைத்தி காலநிலையை தாக்குப் பிடிக்க முடியாமல் இறந்து விட்டன. ஏழைக் குடும்பங்களுக்கு கஷ்டப்படும் நேரத்தில் உணவளித்து வந்த பன்றிகள் இல்லாததால் அந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹைத்தியில் ஒவ்வொரு தடவையும் புதிய அரசாங்கம் பதவியில் அமரும் பொழுது, அமெரிக்கா அவர்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும். ஹைத்தியின் வறுமையை பயன்படுத்தி அமெரிக்க நிறுவனங்களுக்கு சாதகமாக சட்டங்கள் மாற்றப்படும். ஹைத்தியில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு வரிச்சலுகை கிடைப்பது மட்டுமல்ல, நிகர லாபத்தை அப்படியே அமெரிக்காவுக்கு கொண்டு செல்ல முடியும். Raynolds என்ற நிறுவனம் அலுமினியத்தின் மூலப்பொருளான பொக்ஸ்சீட் அகழ்ந்து கொண்டிருந்தது. இப்போது அதுவும் மூட்டை கட்டி விட்டது. என்பதுகளிலேயே ஹைத்தியின் கனிம வளங்கள் யாவும் ஓட்ட உறிஞ்சப்பட்டு விட்டன. இப்போது வீடு கட்ட கல்லும், மண்ணும் மட்டுமே மிச்சமிருக்கின்றன. உலகமயமாக்கல் காலத்தில் ஆடை ஏற்றுமதி தொழிற்துறை வந்தது. அமெரிக்காவில் பேஸ்பால் விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் பந்து ஹைத்தியில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஹைத்தியின் "ஒரு டாலர் தொழிலாளரின்" உழைப்பை பயன்படுத்தி ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களை அமெரிக்காவில் வால் மார்ட் போன்ற அங்காடிகள் விற்பனை செய்தன. வால்ட் டிஸ்னி, க்மார்ட் போன்றன ஹைத்தியின் உழைப்பை உறிஞ்சும் பிரபல நிறுவனங்கள். தொழிலாளர்களின் நாளாந்த கூலியை இரண்டு டாலராக உயர்த்துவதற்கு அரிஸ்தீத் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. தொழிற்சங்க உரிமை மறுக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க இடதுசாரி அமைப்புகள் மட்டுமே அவர்களின் உரிமைக்காக போராடின.

ஹைத்தியின் பொருளாதார பின்னடைவுக்கு, அந்நாடு வெளிநாட்டு உதவியில் தங்கியிருப்பதும் முக்கிய காரணம். ஹைத்தி எப்போதும் ஒன்றில் இயற்கை அழிவால் பாதிக்கப்படும் அல்லது சர்வாதிகாரிகளின் செயற்கை அழிவால் அல்லல் படும். இதனால் மில்லியன் கணக்கான மக்கள், வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் வழங்கும் உணவுப் பொருட்களில் தங்கியுள்ளனர். தொண்டு நிறுவனங்கள் மலிவான அமெரிக்க கோதுமையை உதவி என்ற பெயரில் கொண்டு வந்து கொட்டுகின்றன. இதனால் உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். ஹைத்திக்கு அமெரிக்கா வழங்கும் கடனால் அமெரிக்கர்களே நன்மையடைகின்றனர். ஆனால் முழு கடன் தொகையையும் வட்டியுடன் ஹைத்தி அரசு கறாராக திருப்பிச் செலுத்த வேண்டும். அமெரிக்க அரசு ஒரு டாலர் கொடுத்தால், அதில் ௦0.85 டாலர்சதம் தொண்டு நிறுவன ஊழியர்களின் ஊதியமாகவோ, அல்லது வேறு செலவினமாகவோ அமெரிக்காவுக்கே திரும்பி வருகின்றது. இந்த தகவலை தெரிவித்தது வேறு யாருமல்ல. அமெரிக்க அரச சார்பு தொண்டு நிறுவனமான USAID !

**********************************
தொடரின் முன்னைய பதிவுகள்:

1.
இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா
2.அமெரிக்காவின் புராதன பொதுவுடைமை சமுதாயம்
3.பிரேசில்: வர்க்கங்களின் கால்பந்து மைதானம்
4.அமெரிக்காவில் தோன்றிய அடிமைகளின் சுதந்திர தேசம்