என்று தணியும் இந்த கியூப எதிர்ப்புக் காய்ச்சல்?
ஐ.நா.வில் இலங்கையை ஆதரித்த படியால் கியூபா தமிழரின் எதிரி என்றால், அதே ஐ.நா. தீர்மானத்தில் வாக்களித்த ஆப்பிரிக்க நாடுகள், ஆசிய நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள், இந்தியா, எல்லாம் தமிழர்களின் எதிரிகள் தான்.
அதே நேரம் இலங்கைக்கு ஆயுத விற்பனை செய்த அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஐரோப்பிய நாடுகள் எல்லாம் தமிழரின் எதிரிகள் தான். இப்படியே தமிழர்கள் உலகம் முழுவதும் பகைத்துக் கொண்டு வாழ முடியாது.
பிடல் காஸ்ட்ரோவை விமர்சிப்பவர்கள் தமிழ் மக்களுக்கு என்ன செய்து கிழித்தார்கள்?
1. எத்தனை எழுத்தறிவற்ற தமிழருக்கு இலவசமாக கல்வியறிவு புகட்டினார்கள்?
2. எத்தனை தமிழ் நோயாளிகளிக்கு இலவசமாக மருத்துவ சேவை செய்தார்கள்?
3. எத்தனை ஏழைத் தமிழ் விவசாயிகளுக்கு கூட்டுறவுப் பண்ணைகள் அமைத்துக் கொடுத்தார்கள்?
தமிழ் மக்களுக்காக (கவனிக்கவும்: "மக்களுக்காக") ஒரு துரும்பைத் தானும் தூக்கிப் போடாதவர்கள், தமிழினத்தின் பெயரால் பிழைப்பு அரசியல் நடத்துகிறார்கள்.
பிரபாகரன் சொன்னால் "இராஜதந்திரம்", அதையே பிடல்காஸ்ட்ரோவும் சொன்னால் "தமிழினத் துரோகம்"! என்பது தான் இங்கு பலரது நிலைப்பாடாக உள்ளது. அதாவது, மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்.
தமிழ் மக்களுக்காக (கவனிக்கவும்: "மக்களுக்காக") ஒரு துரும்பைத் தானும் தூக்கிப் போடாதவர்கள், தமிழினத்தின் பெயரால் பிழைப்பு அரசியல் நடத்துகிறார்கள்.
பிரபாகரன் சொன்னால் "இராஜதந்திரம்", அதையே பிடல்காஸ்ட்ரோவும் சொன்னால் "தமிழினத் துரோகம்"! என்பது தான் இங்கு பலரது நிலைப்பாடாக உள்ளது. அதாவது, மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்.
"தமிழ் நாடு தனிநாடாக பிரிவதை ஆதரிக்க மாட்டோம்" என்று, பிரபாகரனும், புலிகளும், இந்திய அரசுக்கு உறுதிமொழி அளித்திருந்தனர். அது ஒடுக்கப் படும் தமிழினத்திற்கு செய்த துரோகம் இல்லையா? ஹிந்தி பேரினவாத அரசை ஆதரிப்பது ஆகாதா?
அதே மாதிரி, மலையகத் தமிழருக்கான தீர்வு பற்றிக் கேட்ட பொழுதும், "சிறிலங்காவின் அதிகார கட்டமைப்புக்குள் தீர்வு காண வேண்டும்" என்றார்கள். அது மலையகத் தமிழரின் விடுதலையை மறுக்கும் செயல் அல்லவா? வடக்கு கிழக்கு தமிழரை ஒடுக்கும் அதே சிங்கள அரசு, மலையகத் தமிழருக்கு நல்லதொரு தீர்வைத் தந்து விடுமா?
இதற்கு காரணம் கேட்டால், அது "இராஜதந்திரம்", "பூகோள அரசியல்" என்று சொல்லி சமாளிப்பார்கள். ஆனால், உலகின் மறு கோடியில் அமெரிக்கக் கண்டத்தில் இருக்கும் கியூபாவும், பிடல் காஸ்ட்ரோவும் "தமிழினத்திற்கு துரோகம்" செய்து விட்டார்கள் என்று பரப்புரை செய்கின்றனர். இது என்ன வகை நியாயம்?
ஒடுக்கப்படும் தமிழ்நாட்டுத் தமிழர்கள், மலையகத் தமிழரின் விடுதலையை, புலிகள் ஆதரிக்காத செயல் அப்பட்டமான "தமிழினத் துரோகம்" ஆகாதா? அதெல்லாம் பூகோள அரசியல் இராஜத்திரத்திற்குள் அடங்கும் என்றால், பிடல் காஸ்ட்ரோ அல்லது கியூப அரசின் நிலைப்பாட்டிற்கான காரணமும் அது தான்.
எப்போது பார்த்தாலும் தமிழினம் என்று முழங்குவோர், உலகில் வேறெந்த இனத்தை பற்றியும் அக்கறைப்படாத சுயநலவாதிகளாக இருக்கின்றனர். கியூபாவின் அயல் நாடான ஹைத்தியில் இருந்து வெளியேறி தஞ்சம் கோரிய அகதிகளை கியூபா திருப்பி அனுப்பியது. அப்போது இந்த தமிழினக் காவலர்கள் எங்கே போயிருந்தார்கள்?
அதே மாதிரி, சோமாலி மொழி பேசும் ஒரோமோ சிறுபான்மை இனத்திற்கு எதிராக போரிட்டுக் கொண்டிருந்த எத்தியோப்பிய இராணுவத்திற்கு கியூபா உதவியிருந்தது. அப்போது சோமாலியர்களுக்கு ஆதரவாக நமது தமிழினப் பற்றாளர் யாரும் குரல் கொடுக்காத காரணம் என்ன? இப்போதும் அதைப் பற்றிப் பேசுவதில்லையே? "உலகில் எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? எனது இனத்தின் நன்மை, தீமைகள் மட்டுமே முக்கியம்" என்ற சுயநலம் தானே இதற்குக் காரணம்?
கொள்கை வேறு, பூகோள அரசியல் வேறு. இரண்டுக்கும் சம்பந்தம் இருக்க வேண்டிய அவசியல் இல்லை. விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசியக் கொள்கையை பின்பற்றும் காரணத்தால், தமிழ்நாட்டுத் தமிழர்களின் பிரிவினைக்கு உதவியிருக்கப் போவதில்லை. உண்மை நிலைமையும் அது தானே? தமிழ்நாடு தனியாகப் பிரிந்து சென்றாலும் அதற்கு உதவ மாட்டோம் என்று புலிகள் இந்தியாவிடம் உறுதிமொழி கொடுத்திருந்தனர். ஏனென்று கேட்டால், அது தான் இராஜதந்திரமாம். ஆனால், அதையே கியூபா செய்தால் தமிழினத் துரோகமாம். இரட்டைவேடத்திற்கு சிறந்த உதாரணம் இது தான்.
வலதுசாரி கியூப எதிர்ப்பாளர்களின் அரசியல் மொழியில் சொன்னால் : "உலகம் முழுவதும் ஒடுக்கப்படும் தமிழினத்திற்கு, பிரபாகரன் இழைத்த துரோகமானது, பிடல் காஸ்ட்ரோ செய்ததை விட பல மடங்கு அதிகமானது!"
இலங்கையில் மலையகம், இந்தியாவில் தமிழ் நாடு விடுதலைக்காக போராடிய இயக்கங்களை உதாசீனப் படுத்தியது மட்டுமல்லாது, அந்த மக்களின் போராட்டத்தை ஆதரித்து புலிகளின் பெயரில் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை.
கர்நாடகா, மும்பாய் (தாராவி சேரிகள்), போன்ற இந்திய மாநிலங்களிலும், மலேசியா போன்ற நாடுகளிலும் ஒடுக்கபடும் தமிழர்களுக்கு ஆதரவாக புலிகள் ஒரு அறிக்கை கூட விடவில்லை. அது மட்டுமல்ல, கனடாவிலும், மேற்கு ஐரோப்பாவிலும், அடித்தட்டு தொழிலாளர் வர்க்கமாக ஒடுக்கப்படும் ஈழத் தமிழருக்கு அனுதாபம் தெரிவித்து, புலிகள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.
கம்யூனிசத் தலைவர்களின் உரைகளில், பிற உலக நாடுகளில் நடக்கும் கம்யூனிச இயக்கங்களின் போராட்டங்கள் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப் படும். ஆனால், தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர் தின உரைகளில், மலையகத்தில், தென்னிலங்கையில், பிற நாடுகளில் ஒடுக்கப்படும் தமிழர்களின் போராட்டம் பற்றி ஒரு வரி கூட இருக்கவில்லை.
எழுபதுகளில் புலிகள் கியூபாவை தொடர்பு கொண்டார்கள். ஆனால் அவ்வளவு அக்கறை காட்டவில்லை. மேலும் கியூபா லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமே கவனம் செலுத்தியது. அது ஏன் ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்று கேட்பதில் அர்த்தம் இல்லை. அதற்கு முதலில் சோஷலிச ஈழத்திற்காக போராடுவதாக நிரூபித்திருக்க வேண்டும்.
கியூபா தமக்கு உதவ வேண்டுமானால், புலிகளும் கம்யூனிஸ்டுகளாக அல்லவா இருந்திருக்க வேண்டும்? பிரபாகரன் தன்னை ஒரு மார்க்ஸிஸ்ட் - லெனினிஸ்ட் என்று அறிவித்துக் கொண்டதற்கான ஆதாரம் எங்கே? முதலாளித்துவ - தமிழீழம் தான் வேண்டுமானால், அமெரிக்காவின் உதவியை தான் நாடி இருக்க வேண்டும். அது தான் நடந்தது. புலிகள் தமக்கு அமெரிக்கா உதவும் என்று நம்பிக் காத்திருந்து ஏமாந்தார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
புலிகளுக்காக அமெரிக்காவில் இயங்கியவர்கள், ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு வைத்திருந்தார்கள். அதற்காக அமெரிக்காவில் வாழும் தமிழர் மத்தியில் நிதி சேகரித்தார்கள். ஹிலாரி கிளின்டனின் தேர்தல் நிதியத்திற்கு, கோடிக்கணக்கான டாலர்கள் நிதி கொடுத்தார்கள்.
அதைவிட, தமிழீழம் திறந்த சந்தைப் பொருளாதாரத்தை கொண்டிருக்கும் என்று, மேற்குலகை திருப்திப் படுத்தும் நோக்கில், தலைவர் பிரபாகரனே பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி இருந்தார். இறுதிப்போரில் முள்ளிவாய்க்கால் கடற்கரைக்கு சென்றால், அமெரிக்கா கப்பல் அனுப்பி காப்பாற்றும் என்று நம்பிக் காத்திருந்தார்கள்.
"ஏன் கியூபா புலிகளை ஆதரிக்கவில்லை" என்ற கேள்வியை எதனை அடிப்படையாக வைத்துக் கேட்கிறார்கள்? ஒருவன் தனக்கு பிடித்த, தன் கொள்கையோடு ஒத்துப் போகிறவனுக்கு தானே உதவுவான்? அது தானே உலக வழக்கம்?
ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில், கியூபா உதவிய இயக்கங்கள் எல்லாம் கம்யூனிஸ்டுகள் தான். உதாரணத்திற்கு நிகராகுவா சான்டினிஸ்டா இயக்கம். அதன் தலைவர் ஒர்ட்டேகா ஒரு மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட். கியூபா எதற்கு புலிகளை ஆதரிக்க வேண்டும்? புலிகள் கம்யூனிஸ்டுகளா? என்றைக்காவது பிரபாகரன் தன்னை ஒரு மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் என்று அறிவித்திருக்கிறாரா? இல்லவே இல்லை.
ஒருவன் தனக்கு பிடித்த, தன் கொள்கையோடு ஒத்துப் போகிறவனுக்கு தானே உதவுவான்? அது தானே உலக வழக்கம்? புலிகளை ஆதரிப்பவர்கள், லாக்சர் இ தொய்பா, தாலிபான், ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஐ.எஸ். போன்ற இயக்கங்களுக்கு உதவி செய்வார்களா?
இங்கே ஒரு கேள்வியை எழுப்பலாம். "அப்படியானால் கியூபா ஆதரித்த சிறி லங்கா அரசு காஸ்றோவுக்குப் பிடித்த மார்சிஸ்ட் - லெனினிஸ்ட் கொள்கைகளின் அடிப்படையில்தான் ஆட்சி செய்தது என்கிறீர்களா?"
இதற்கான பதிலை நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். சர்வதேச மட்டத்தில் அரசுக்களின் இராஜதந்திர உறவுகள் வேறு.
கியூபாவை பிரபாகரன் ஆண்டாலும் இது தான் நடந்திருக்கும். தமிழீழம் இருந்திருந்தால் அது இந்தியாவிக்கு விரோதமாக நடந்து கொள்ளுமா? அல்லது நட்புறவு பேண விரும்புமா? புலிகளின் தமிழீழ அரசின் நிலைப்பாடு, காஷ்மீர், அசாம் விடுதலைக்காக போராடும் மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகாதா?
தமிழீழம் இருந்திருந்தால், பிரபாகரன் அதன் ஜனாதிபதியாக இருந்தால், அவர்கள் எந்த உலக நாட்டுடனும் இராஜதந்திர உறவு வைக்காமல் தனித்து நின்றிருப்பார்களா? எந்த இனத்தையும் ஒடுக்காத சுத்தமான நாடாகப் பார்த்து உறவுகளை ஏற்படுத்திக் கொள்வார்களா? அப்படியானால், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இந்தியா உட்பட நூற்றுக் கணக்கான நாடுகளுடன் தமிழீழம் பகைக்க வேண்டி இருக்கும். அது கடைசியில் வட கொரியா மாதிரி தனிமைப் படுத்த பட்ட நிலைக்கு தள்ளி விடும்.
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: