ஈராக்கில், அரேபியருக்கும், குர்தியருக்கும் இடையில் சமீபத்தில் புதிய போர் மூண்டுள்ளது. சுதந்திர குர்திஸ்தான் கோரி பொது வாக்கெடுப்பு நடந்து சில தினங்களில் மோதல்கள் வெடித்துள்ளன.
தனி நாடு கோரும் குர்திஸ்தானின் எல்லைப் பகுதியான கிர்குக் பற்றிய சர்ச்சை நீண்ட காலமாக தொடர்ந்திருந்தது.
தொடக்கத்தில் குர்திய பெஷ்மேர்கா படையினருக்கும், துருக்மேன் ஆயுதக்குழுவுக்கும் இடையில் மோதல் நடந்திருந்தது. கிர்குக் பிரதேசத்தில் வாழும் துருக்கி மொழி பேசும் துருக்மேன் சிறுபான்மை இனமும், அயல்நாடான துருக்கியும் குர்திஸ்தான் பிரிவினையை எதிர்த்து வந்தன.
அது மட்டுமல்லாது, குர்திஸ்தான் பிரிவினைக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப் பட்ட மறுநாளே அது செல்லாது என்று ஈராக் அறிவித்திருந்தது. விமான நிலையங்களையும், சர்வதேச எல்லைகளையும் ஈராக் படையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டிருந்தது. அப்படி நடக்காவிட்டால் போர் மூளும் என்றும் பயமுறுத்தி இருந்தது.
குர்திஸ் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த, எண்ணை வளம் நிறைந்த கிர்குக் நகரையும், அதை அண்டிய பிரதேசங்களையும் ஈராக்கிய படைகள் கைப்பற்றியுள்ளன.
ஈராக் அரசின் ஆதரவு பெற்ற ஷியா துணைப் படையினர், ஒரே ஒரு நாள் நடந்த சண்டையில், கிர்குக் பகுதியை கைப்பற்றியுள்ளமை பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஈராக் எண்ணையில் கணிசமான அளவு பங்கு கிர்குக் பகுதியில் இருந்து கிடைக்கிறது. அதனாலேயே அது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக உள்ளது. அதனால் எல்லோரும் அதற்கு உரிமை கோருகிறார்கள்.
கிர்குக் ஒரு காலத்தில் துருக்மேன் (துருக்கி மொழி பேசும் மக்கள்) இனத்தவர் பெரும்பான்மையாக வாழ்ந்த சிறிய நகரம். 1927ம் ஆண்டு, அங்கு எண்ணை கண்டுபிடிக்கப் பட்டது. அந்தக் காலத்தில் கிர்குக், துருக்கியின் மொசூல் மாகாணத்திற்குள் இருந்தது. இந்தக் காரணங்களினால், துருக்கியும் கிர்குக் தனக்கு சொந்தம் என்று உரிமை கோருகின்றது.
குர்தியர்கள் அதனை தமது குர்திஸ்தான் தாயகப் பகுதி என்று உரிமை கோருகின்றனர். குர்திஸ் தேசியவாத இயக்கம் தொடங்கிய காலத்தில் இருந்து, வருங்கால குர்திஸ்தானின் தலைநகராக கிர்குக் இருக்கும் என்று அறிவிக்கப் பட்டது.
இது இலங்கையில் தமிழ்த் தேசியவாதிகள் திருகோணமலையை வருங்கால தமிழீழத் தலைநகரமாக உரிமை கோரியது போன்றது. கிர்குக், திருகோணமலை இரண்டும் பொருளாதாரக் காரணங்களுக்காக மட்டுமே தலைநகரமாக ஏற்றுக் கொள்ளப் பட்டன.
எண்ணை உற்பத்தி காரணமாக கிர்குக் நகரம் பெரிதாக வளர்ந்தது. வடக்கில் இருந்து குர்தியரும், தெற்கில் இருந்து அரேபியரும் வேலை தேடி வந்து குடியேறினார்கள். 1957 கணக்கெடுப்பின் படி, கிர்குக் நகர சனத்தொகையில் 38% துருக்மேன், 33% குர்தியர், எஞ்சியோர் அரேபியர்கள். (இதில் கணிசமான அளவு கிறிஸ்தவ அஸிரியர்கள்.)
சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில் கிர்குக் அரேபியமயமாக்கப் பட்டது. பெருமளவு குர்தியர்கள் பலவந்தமாக வெளியேற்றப் பட்டனர். அதே நேரம் அரேபியர்கள் பெருமளவில் குடியேற்றப் பட்டனர். கணிசமான அளவு குர்தியர்கள், அரபு மொழியை தாய்மொழியாக்கி தாமும் அரேபியராகி விட்டனர். சதாம் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர், முன்பு வெளியேற்றப் பட்ட குர்தியர்கள் திரும்பி வந்தனர்.
இன்றைய கிர்குக் தொடர்பான பிரச்சினை 2014 ம் ஆண்டு தொடங்கியது. அது வரையும் கிர்குக் ஈராக் அரசின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்தது. ஆனால், மேற்கில் இருந்து வந்த ஐ.எஸ். (ISIS) படையெடுப்பை சமாளிக்க முடியாமல், ஈராக்கிய இராணுவம் பின்வாங்கியது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குர்திய படைகள் கிர்குக்கை கைப்பற்றின. அப்போது பிரதானமான எதிரி ஐ.எஸ். என்பதால், ஈராக்கிய அரசும் விட்டுக் கொடுத்தது.
ஐ.எஸ். தோற்கடிக்கப் பட்ட பின்னர் கிர்குக் தொடர்பான பிரச்சினை எழுந்தது. குர்திஸ்தான் அரசு கிர்குக் எண்ணையை திருடி விற்கிறது என்று ஈராக் அரசு குற்றம் சாட்டியது. அதே நேரம், "எமது தலைநகரான கிர்குக்கை விட்டுக் கொடுக்க மாட்டோம்..." என்ற தேசியவாத கோரிக்கையை முன் வைத்து தான், குர்திஸ்தான் பிரிவினைக்கான பொது வாக்கெடுப்பும் நடத்தப் பட்டது.
"தனிநாடு காண்பது என்பது ஒரு நடைமுறைச் சாத்தியமற்ற கற்பனாவாதம்!" ஈராக்கில் இருந்து குர்திஸ்தான் பிரிவினைக்காக பொதுவாக்கெடுப்பின் பின்னர், பெரும்பான்மை குர்தியர்கள் இப்போது தான் யதார்த்தம் என்னவென உணர்கிறார்கள். இவ்வாறு, குர்திஸ்தான் போர்க்களத்தில் இருந்து செய்தியாளர்கள் அனுப்பிய தகவல்களை வைத்து, டச்சு செய்தி நிறுவனம் NOS தனது செய்தி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ('Het ziet er treurig uit voor de Koerden in Irak'; https://nos.nl/artikel/2199001-het-ziet-er-treurig-uit-voor-de-koerden-in-irak.html)
கடைசியாக நடந்த சண்டையில், குர்திஸ் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கிர்குக் மாகாணத்தின் எஞ்சிய பகுதிகளையும் ஈராக்கிய இராணுவம் கைப்பற்றி விட்டது. குர்திஸ் படைகள் பின்வாங்கி ஒரு அவமானகரமான தோல்வியை சந்தித்ததின் பின்னணியில் ஈரான் இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகின்றது.
அதாவது, ஈரானின் மறைமுக நெருக்குவாரம் காரணமாகத் தான் குர்திஷ் படையணிகள் பின்வாங்கியுள்ளன. குர்திஸ்தானில் வட பகுதி KDP இயக்கத்தின் கட்டுப்பாட்டிலும், தென் பகுதி PUK கட்டுப்பாட்டிலும் உள்ளது. கிர்குக் பகுதி PUK கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அடங்குகிறது.
PUK இதற்கு முன்னரும் சுதந்திர குர்திஸ்தான் பொது வாக்கெடுப்பை முழு மனதுடன் ஆதரிக்கவில்லை. ஏனெனில் அதனது போட்டி இயக்கமான KDP தான் பொது வாக்கெடுப்பை அறிவித்திருந்தது. இது அங்கு இரு தேசியவாதக் கட்சிகளுக்கு இடையில் நடக்கும் அரசியல் விளையாட்டு.
பொது வாக்கெடுப்புக்கு வரையும், KDP இன் பிரச்சாரம் முழுவதும் "ஹலாப்ஜா இனப்படுகொலை" பற்றியே இருந்தது. இந்த உணர்ச்சிகர அரசியலுக்கு பின்னால் இரண்டு கட்சிகளினதும் போட்டி அரசியல் மறைந்து விட்டது, அல்லது மறைக்கப் பட்டது. அதாவது, ஹலாப்ஜா என்ற கிராமம், ஈரான் எல்லைக்கருகில், PUK கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உள்ளது.
தனது பிரதேசத்திற்குள் KDP பின்கதவால் நுழையப் பார்க்கிறது என நினைத்து PUK எச்சரிக்கையானது. ஆனால், சுதந்திர குர்திஸ்தான் கோரிக்கையை எதிர்த்தால் அதை சுட்டிக் காட்டியே தேசிய அரசியலில் இருந்து ஓரங்கட்டப் படலாம். இந்தப் பயத்தால் PUK உம் பொது வாக்கெடுப்பை ஆதரித்தது.
இந்த இடத்தில் இன்னொரு உண்மையை மறந்து விடக் கூடாது. PUK நீண்ட காலமாக, ஆரம்பத்தில் இருந்தே ஈரானின் ஆதரவுடன் இயங்கி வந்தது. தற்போது கிர்குக் பிரதேசத்தில் இருந்து பின்வாங்கியதும் PUK படையணிகள் தான். அதற்கு ஈரானின் அழுத்தம் காரணமாக இருக்கலாம்.
"பார்த்தீர்களா, தமிழருக்குள் ஒற்றுமை இல்லாதது தான் எல்லாப் பிரச்சினைக்கும் காரணம்" என்று சொல்வது மாதிரி கிளம்பி வராதீர்கள். புலிகள் கிழக்கு மாகாணத்தில் கருணா குழுவை அகற்றிய மாதிரி, "PUK துரோகிகள்" என்று சொல்லி விட்டு KDP அங்கு வர முடியாது. குர்திஸ்தானில், வடக்கு, தெற்கு பிராந்திய மொழிகளுக்கு இடையிலான கலாச்சார வித்தியாசம் மிகவும் அதிகம்.
தற்போது அங்கு நடக்கும் சம்பவங்களில் இருந்து குர்திஸ் மக்கள் ஒரு படிப்பினையை பெற்றுள்ளனர். தனி நாடு கிடைக்கும் என்பதெல்லாம் பகற் கனவு. குர்திஸ் தேசியவாதிகள் சொல்வது போல எதுவும் நடக்கப் போவதில்லை.
பூகோள அரசியல் எமக்கு சாதகமாக அமையப் போவதில்லை. அமெரிக்கா மட்டுமல்லாது, எந்தவொரு அயல்நாடும், குர்திஸ்தான் என்ற தனிநாடு உருவாக சம்மதிக்கப் போவதில்லை. மொத்தத்தில் எல்லாம் ஒரு மாயை.
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: