Tuesday, April 29, 2014

சைவ- வேளாள அடிப்படைவாதி நாவலரை கௌரவிக்கும் சிங்களப் பேரினவாதம்



யாழ் நகரில், சைவ- வெள்ளாள அடிப்படைவாதி ஆறுமுக நாவலருக்கு சிலை வைப்பதற்கு, 3 மில்லியன் ரூபாய்களை ஒதுக்குவதற்கு, யாழ்ப்பாண ஆளுநர் சந்திரசிறி முன்வந்துள்ளார். யாழ் சிவில் சமூகம் என்ற பெயரில், அரசு சார்பான தமிழர்களின் குழு ஒன்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க, சிலை கட்டுவதற்கு ஆளுநர் சம்மதித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை புலிகள் ஆண்ட காலத்தில் கட்டிய சிலைகளை எல்லாம் உடைத்து நொறுக்கிய, மாவீரர் துயிலும் இல்லங்களை கூட தரைமட்டமாக்கிய, சிங்கள இராணுவத்தின் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர், ஆறுமுக நாவலருக்கு சிலை வைக்க முன் வந்துள்ளமை சந்தேகத்திற்குரியது. தென்னிலங்கையில் சிங்கள-பௌத்த அடிப்படைவாத சக்திகளை தூண்டி விடுவது போன்று, வட இலங்கையில் சைவ-வேளாள மேலாதிக்க சக்திகளை வளர்த்து விடும் நோக்கம், இதில் அடங்கி இருக்கலாம். சிங்கள-தமிழ் வெள்ளாள சாதி ஒற்றுமை நீண்ட கால நோக்கில், பேரினவாத அரசுக்கு நன்மை பயக்கும்.

ஒரு சைவ மத அடிப்படைவாதியான ஆறுமுக நாவலர், யாழ் சைவ-வெள்ளாள ஆதிக்க அரசியலை தோற்றுவித்த பிதாமகன் ஆக, சாதியவாதிகளால் போற்றப் படுகின்றார். சைவத்தையும், தமிழையும் வளர்த்ததோடு நில்லாது, சாதியத்தையும் உயர்த்திப் பிடித்த ஆறுமுக நாவலர்; சைவத் தமிழர்களின் கிறிஸ்தவ மத மாற்றத்திற்கு எதிராக, கடுமையாக போராடியவர் என்பது குறிப்பிடத் தக்கது. அவரது காலத்தில் வாழ்ந்த சிங்கள- பௌத்த அடிப்படைவாதியான அநகாரிக தர்மபால, இன்றைய பொதுபல சேனா வகையறாக்களும், இந்தப் புள்ளியில் ஒன்று சேர்கின்றனர்.

யாழ் நகரில், அரசு நிதியில் நாவலருக்கு சிலை அமைப்பதற்கு, "தமிழ் இன உணர்வாளர்", "தமிழ் தேசியவாதி" என்று அழைத்துக் கொள்ளும் யாரும், இன்று வரையில் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்களில், தமிழ் தேசிய ஆர்வலர்கள் கள்ள மௌனம் சாதிக்கின்றனர். இதிலிருந்தே, வலதுசாரி தமிழ்க் குறுந் தேசியவாதிகளின், உயர் சாதிப் பற்றை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

******


"சைவமும், தமிழும் வளர்த்தார்" என்று போற்றப்படும் ஆறுமுக நாவலர், தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் தமிழர்களாக ஏற்றுக் கொண்டவரா? அல்லது சைவ சமயத்தை பின்பற்றும் எல்லோரையும் சைவர்களாக ஏற்றுக் கொண்டிருந்தாரா? ஆறுமுக நாவலரைப் பொறுத்தவரையில், அவர் சைவத்தையும், தமிழையும், உயர் சாதியினரின் மேட்டுக்குடி கலாச்சாரமாக மட்டுமே கருதினார்.

நான் அப்போது, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். யாழ் சைவ சித்தாந்தக் கழகம், அரச பாடத் திட்டத்திற்குள் அடங்காமல், தனியாக ஒரு சைவ சமய பொதுப் பரீட்சை நடத்தி வந்தது. அந்தப் பரீட்சையில் போட்டியிட்டு தேறி, சான்றிதழ் பெற்றுக் கொண்டேன். பரீட்சைக்கு தயார் படுத்துவதற்காக, ஆறுமுக நாவலர் எழுதிய "சைவ சமயம் வினா- விடை" படிக்கத் தந்தார்கள். அந்த நூலில் ஓரிடத்தில் இருந்த நாவலரின் பதில் எனது கண்களுக்கு சாதிவெறி கொண்டதாக தென்பட்டது. அது இப்போதும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.

"திருநீறு பூசும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்" பற்றி நாவலர் எழுதி இருந்தார். அதில் ஒன்று, "திருநீறு பூசும் நேரம், எளிய சாதிகள் குறுக்கே வரக் கூடாது." என்றிருந்தது. தமிழ் தேசியமும், தமிழீழப் போராட்டமும் வீறு கொண்டெழுந்த காலகட்டம் அது. "நாம் தமிழர்கள்" என்ற கோணத்தில் இருந்து பார்க்கும் பொழுது, ஆறுமுக நாவலர் எனது கண்களுக்கு சாதிமானாக தென்பட்டார். அவரைப் பொறுத்தவரையில், "எளிய சாதிகள்" என்ற தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் தமிழர்களாகத் தெரியவில்லை. குறைந்த பட்சம், அவர்களை சைவர்களாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கூட, ஆறுமுக நாவலரிடம் இருக்கவில்லை. ஆனால், அவர் தான் "சைவத்தையும், தமிழையும் வளர்த்தார்" என்பது ஒரு வரலாற்று முரண் நகை.

ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா விடை நூலில் இருந்து ஒரு பகுதியை கீழே தருகிறேன். நாவலர் ஒரு தமிழ் தேசியவாதியா அல்லது சாதியவாதியா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்:

//சண்டாளருடைய நிழல் படினும், இழிந்த சாதியாரும் புறச்சமயிகளும், வியாதியாளரும், சனன மரணா செளசமுடையவரும், நாய், கழுதை, பன்றி, கழுகு, கோழி முதலியவைகளும் தீண்டினும், எலும்பு, சீலை முதலியவற்றை மிதிக்கினும், க்ஷெளரஞ் செய்து கொள்ளினும், சுற்றத்தார் இறக்கக் கேட்கினும், துச்சொப்பனங் காணினும், பிணப் புகை படினும், சுடுகாட்டிற் போகினும், சர்த்தி செய்யினும் உடுத்த வஸ்திரத்துடனே ஸ்நானஞ் செய்வது ஆவசியம்.//

//தீண்டலினாலே எவ்வெப்பொழுது குற்றமில்லை?

சிவதரிசனத்திலும், திருவிழாவிலும், யாகத்திலும், விவாகத்திலும், தீர்த்த யாத்திரையிலும், வீடு அக்கினி பற்றி எரியுங் காலத்திலும், தேச கலகத்திலும், சன நெருக்கத் தீண்டலினாலே குற்றமில்லை.// 
(ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை 2)

Saturday, April 26, 2014

கிரேக்க மத்திய வங்கி குண்டுவெடிப்பு : கம்யூனிச இயக்கம் உரிமைகோரல்



ஏதென்ஸ் நகரில், கிரேக்க மத்திய வங்கிக்கு முன்னால் ஒரு கார் குண்டு வெடித்துள்ளது. ஏப்ரல் 10 அன்று நடந்த இந்த சம்பவம், அன்று எந்த ஊடகத்திலும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப் படவில்லை. அதற்குக் காரணம், குண்டுவெடிப்புக்கு அடுத்த நாள், ஜெர்மன் அதிபர் அங்கெலா மார்கல் கிரீசுக்கு விஜயம் செய்திருந்தார்.

10 ஏப்ரல் 2014, அதிகாலை 5.55 மணிக்கு, 75kg நிறையுள்ள குண்டு வெடித்துள்ளது. குண்டு வைத்தவர்கள், முன்கூட்டியே 5.15 மணியளவில் அது பற்றி அறிவித்திருந்தனர். Efimerida ton Syntakton பத்திரிகை அலுவலகத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பில், "இன்னும் 40 நிமிடங்களில் குண்டு வெடிக்கும் என்றும், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக அப்புறப் படுத்த வேண்டுமென்றும்..." அனாமதேய குரல் ஒன்று எச்சரித்திருந்தது. உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய பொலிசார், அந்தப் பகுதியில் இருந்த மக்களை வெளியேற்றி, வாகனப் போக்குவரத்தை தடை செய்தனர்.

உலகில் உள்ள, வலதுசாரி தீவிரவாத இயக்கங்களுக்கும், இடதுசாரி தீவிரவாத இயக்கங்களுக்கும் இடையிலான வேறுபாடு இது தான். வலதுசாரி தீவிரவாத அமைப்புகள், குண்டுவெடிக்கும் இடத்தில் பொது மக்களும் கொல்லப் படுவதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. எந்தளவு அதிகமான மக்கள் பலியாகின்றனரோ, அந்தளவு வெற்றி கிடைத்து விட்டதாக நம்புவார்கள்.

அதற்கு மாறாக, இடதுசாரி அமைப்புகள், பொது மக்களின் உயிரிழப்புகளை முடிந்த அளவுக்கு தடுக்கப் பார்ப்பார்கள். பொது மக்கள் நடமாடாத நேரமாகப் பார்த்து தான், நேரக் கணிப்பு வெடிகுண்டு வைப்பார்கள். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில், குண்டுவெடிக்கப் போகின்றது என்பதை முன்கூட்டியே அறிவிப்பார்கள். ஏற்கனவே, IRA (பிரிட்டன்), ETA(ஸ்பெயின்) போன்ற இடதுசாரி தேசியவாத இயக்கங்கள், இந்த நடைமுறையை பல தசாப்தங்களாக பின்பற்றி வந்துள்ளன.

அன்றைய குண்டுவெடிப்பில், மத்திய வங்கிக் கட்டிடம் மட்டும் சேதமடைந்தது. யாரும் கொல்லப் படவுமில்லை, யாருக்கும் காயம் ஏற்படவில்லை. "புரட்சிகர போராட்டம்" என்ற இடதுசாரி ஆயுதபாணி இயக்கம், குண்டுவெடிப்புக்கு உரிமை கோரியுள்ளது.

உரிமை கோரல் துண்டுப் பிரசுரத்தில் இருந்து: 
"IMF நிரந்தரப் பிரதிநிதி Wes McGrew, மத்திய வங்கி கட்டிடத்தில் தங்கியிருக்கிறார். கிரீஸ் சர்வதேச நாணய சந்தைக்கு திரும்புவதை எதிர்ப்பதற்காகவும், 10 மார்ச் 2010 ம் ஆண்டு, பொலிசாருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட எமது உறுப்பினர் Lambros Foundas நினைவாகவும், இந்த வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. எமது இலட்சியம் லிபெர்ட்டேரியன் கம்யூனிசம்." 
 - Lambros Fountas கமாண்டோ அணி, 
   புரட்சிகர போராட்டம் 

"புரட்சிகர போராட்டம்" (Revolutionary Struggle) என்ற ஆயுதமேந்திய இயக்கம், Nikos Maziotis மற்றும் Panayiota (Paula) Roupa ஆகியோரால் தலைமை தாங்கப் படுகின்றது. இருவரும் 2012 ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சில மாதங்கள் தடுத்து வைக்கப் பட்டிருந்தனர். நிபந்தனையுடனான பெயிலில் விடுதலையாகி, வீட்டில் இருக்க அனுமதித்த பொழுது தலைமறைவாகி விட்டனர். இது போன்றே, சிறைத் தண்டனை அனுபவித்து வந்த, நவம்பர் 17 இயக்க உறுப்பினர் ஒருவரும் தலைமறைவாகி இருந்தார். 

மத்திய வங்கி குண்டுவெடிப்பில், நவம்பர் 17 இயக்கமும் சம்பந்தப் பட்டிருக்கலாம் என்று, பொலிஸ் சந்தேகிக்கின்றது. புரட்சிகர போராட்ட தலைவர்களை கைது செய்ய உதவுவோருக்கு, இரண்டு மில்லியன் யூரோக்கள் சன்மானமாக வழங்குவதாக, பொலிஸ் அறிவித்துள்ளது. புரட்சிகர போராட்டம், ஏற்கனவே பல குண்டுவெடிப்புகளை நடத்தியுள்ளது. ஏதென்ஸ் தலைமை நீதிமன்றம், சிட்டி வங்கி தலைமையகம், பங்குச் சந்தை கட்டிடம் என்பன கடந்த காலங்களில் வெடி குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகின.

 ********* 

கிரேக்க நாட்டில் இயங்கி வந்த, இடதுசாரி புரட்சி இயக்கமாகிய "நவம்பர் 17" மீண்டும் ஆயுதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. அந்த ஆயுதபாணி இயக்கத்தின் பெயரில் முன்பு நடந்த கொலைகள், குண்டுவெடிப்புகளுக்காக கைது செய்யப் பட்ட Christodoulos Xiros (55 வயது) ஏதென்ஸ் சிறைச்சாலையில் 25 வருட தண்டனை அனுபவித்து வந்தார். கடந்த ஜனவரி மாதம், ஒரு வார விடுப்பில் வீட்டுக்கு செல்ல அனுமதித்திருந்த நேரம், அவர் தப்பிச் சென்றுள்ளார். தற்போது தலைமறைவாக ஓரிடத்தில் இருந்து கொண்டு, ஒரு வீடியோவை அனுப்பி வைத்துள்ளார்.

"கிரேக்க நாட்டினை நாசமாக்கும் கொள்ளைக்காரர்கள், பாசிஸ்டுகளுக்கு எதிரான ஆயுதப்போராட்டம் முன்னெடுக்கப் படும்" என்று, Christodoulos Xiros அந்த வீடியோவில் கூறுகின்றார். பின்னணியில் சேகுவேரா, மற்றும் கிரேக்க விடுதலைப் போராட்ட வீரர்களின் படங்கள் காணப் படுகின்றன.

வீடியோ இணைப்பு: http://www.youtube.com/watch?v=yA-EVHfdhy0

நவம்பர் 17 இயக்கம் பற்றி, முன்னர் எழுதிய கட்டுரை:
தொட்டில் ஜனநாயகம் தொடர் புரட்சி வரை; 
http://kalaiy.blogspot.nl/2008/12/blog-post_13.html

*********


கிரேக்க புரட்சிகர ஆயுதப் போராட்டம் குறித்த முன்னைய பதிவுகள்: 

Friday, April 25, 2014

ஆப்கான் அகதிகள் - ஈரானில் இன்னலுறும் தீண்டத்தகாதவர்கள்

தமிழ்நாட்டு முகாம்களில் வாழும், ஈழத் தமிழ் அகதிகளின் துயரக் கதைகளை பலர் கேள்விப் பட்டிருப்பார்கள். ஈரானில் தஞ்சம் கோரியுள்ள, ஆப்கானிஸ்தான் அகதிகளின் நிலைமையும், அதற்கு சற்றும் குறைந்தது அல்ல. ஈரானில் கட்டிடத் தொழில் செய்யும் ஒரு இடத்தில் படுத்துறங்கும் இந்தக் குழந்தையின் படமே, அவர்கள் படும் இன்னல்களை புரிந்து கொள்ள போதுமானது.

ஈரானில் எங்கு பார்த்தாலும், அடி மட்டத் தொழிலாளிகள் ஆப்கானிய அகதிகளாகவே இருப்பார்கள். புதிய கட்டிடங்கள் கட்டப் படும் இடங்களில் அவர்களைக் காணலாம். அவை பெரும்பாலும், ஈரானியர்கள் செய்ய விரும்பாத, கடின உழைப்பைக் கோரும் வேலைகள். ஆப்கான் அகதிகள் மட்டுமே, கொதிக்கும் வெயிலில்,கடினமான வேலை செய்யத் தயாராக இருப்பார்கள். அவர்களுக்கு கிடைக்கும் கூலியும் குறைவு. அவர்களது உழைப்பை சுரண்டும் ஈரானிய முதலாளிகள், சில நேரம் மாதக் கணக்காக சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுவார்கள். அதற்கு எதிராக எங்கேயும் முறைப்பாடு செய்ய முடியாது. ஏழை சொல் அம்பலம் ஏறாது.

ஆப்கானிய அகதிகளும், ஈரானியர்கள் போன்று முஸ்லிம்கள் தான். ஈரான் அதிகார வர்க்கமான இஸ்லாமிய மதத் தலைவர்கள், அகதிகளின் துயரைத் துடைப்பதற்கு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை. இதே மதத் தலைவர்கள் தான், ஆப்கானிஸ்தானில் போராடிக் கொண்டிருந்த முஜாகிதீன் குழுக்களுக்கு கொடுப்பதற்காக, பள்ளிவாசல்களில் நிதி சேகரித்துக் கொடுத்தார்கள். அந்த நிதியில் பெரும்பகுதி ஆயுதங்கள் வாங்கப் பயன்பட்டது.

ஈரானிய "தொப்புள்கொடி உறவுகள்" அனுப்பிய நிதியும்,ஆயுதங்களும் ஆப்கான் போரினை தீவிரப் படுத்தியது. அதன் விளைவாக, அப்பாவிப் பொதுமக்கள் அகதிகளாக ஈரானுக்குள் நுளைந்தார்கள். ஆப்கான் போராளிகளுக்கு உதவுவதற்காக நிதி சேகரித்துக் கொடுத்த மதத் தலைவர்கள், தமது நாட்டிற்குள் புகலிடம் கோரிய அகதிகளை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கின்றனர்.

ஈரானில் வாழும் ஆப்கான் அகதிகளின் நிலைமை, இந்தியாவில் வாழும் தீண்டத்தகாத சாதியினருடன் ஒப்பிடத் தக்கது. அவர்களை யார் வேண்டுமானாலும், என்னவும் செய்யலாம். அரசாங்கமும், மதத் தலைவர்களும் ஏனென்று கேட்க மாட்டார்கள். ஆப்கான் அகதித் தொழிலாளர்கள், உழைப்புச் சுரண்டலுக்கு மட்டும் பலியாவதில்லை. பணக்கார ஈரானியர்களின் வீடுகளில் வேலைக்காரிகளாக பணியாற்றும் பெண்கள், பாலியல் சுரண்டலுக்கும் ஆளாகின்றனர்.

எண்பதுகளில், ஆப்கான் போர் தொடங்கிய காலத்தில் இருந்து, இலட்சக் கணக்கான ஆப்கான் அகதிகள் ஈரானில் தஞ்சம் கோரியுள்ளனர். பெரும்பாலும், ஈரானில் பேசப் படும் பார்சி (டாரி) மொழி பேசும் ஆப்கானியர்கள் தான், ஈரானுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். (பஷ்டூன் மொழி பேசும் ஆப்கானியர்கள் பெரும்பாலும் பாகிஸ்தான் பக்கமாக புலம்பெயர்ந்தனர்.) டாரி மொழி பேசும் மக்கள் ஈரான் எல்லையோரம் அமைந்துள்ள ஹெராட் நகரிலும், அதைச் சூழவும் வாழ்கின்றனர். ஆகையினால், ஈரானியர்களும், ஆப்கானிய அகதிகளும், இனத்தால், மொழியால், மதத்தால் ஒன்று பட்டவர்கள். அப்படி இருந்தும் ஏனிந்த பாரபட்சம்?

ஈரானில் தங்களுக்கு வரவேற்பு இல்லை என்பதும், பல இன்னல்களை சகித்துக் கொண்டு, அவல வாழ்க்கை வாழ வேண்டும் என்பதும், ஆப்கான் அகதிகளுக்கு தெரியும். இருந்தாலும், சமாதானம் நிலவும் ஒரு நாட்டில் வாழ்கிறோம் என்று திருப்திப் பட்டுக் கொள்கின்றனர். நிரந்தர யுத்த பூமியாகி விட்ட ஆப்கானிஸ்தானில், மரணம் எந்த நேரத்தில் வரும் என்று தெரியாது. ஈரானில் மரண பயம் இல்லை என்பதால், எல்லாக் கஷ்டங்களையும் சகித்துக் கொண்டு வாழ்கிறார்கள்.

ஈரானில் வாழும் ஆப்கான் அகதிகள் ஒரே மொழியை பேசுகின்றார்கள். ஒரே மதத்தை பின்பற்றுகிறார்கள். எதற்காக ஈரானிய முதலாளிகள் அவர்களை இரக்கமின்றி சுரண்ட வேண்டும்? எதற்காக ஈரானிய அரசு அவர்களை பாரபட்சமாக நடத்த வேண்டும்? இதே கேள்விகளை, தமிழகத்தில் வாழும் ஈழத் தமிழ் அகதிகள் விடயத்திலும் கேட்கலாம்.

இதற்கெல்லாம் விடை ஒன்று தான். மத உணர்வு, மொழி உணர்வு, இன உணர்வு, தேசிய உணர்வு, இவை எல்லாம் மக்களை மூளைச் சலவை செய்து, முட்டாள்களாக வைத்திருப்பதற்கு மட்டுமே உதவும். எல்லாவற்றையும் பணம் தான் தீர்மானிக்கின்றது. எந்த நாட்டில் வாழ்ந்தாலும், எந்த மொழி பேசினாலும், எந்த மதத்தை நம்பினாலும், முதலாளிகளின் குணம் ஒன்று தான். அவர்களால் சுரண்டப் படும் மக்களின் பிரச்சினைகளும் ஒன்று தான்.


Wednesday, April 23, 2014

நெதர்லாந்தில் ஓர் "இனவாதக் கிராமம்"


"சிங்கள, தமிழ் பாட்டாளி வர்க்க ஒற்றுமை எப்படி சாத்தியமாகும்? சிங்கள ஏழைகள், பாட்டாளிகள் தான், தீவிரமான இனவெறியர்களாக உள்ளனர்." தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் மேட்டுக்குடித் தமிழ் அரசியல் ஆர்வலர்கள் சிலர், இது போன்ற வாதங்களைக் கூறி, இடதுசாரியத்தை நிராகரிப்பதுண்டு. இது சிங்கள பாட்டாளிகளுக்கு மட்டுமே பொதுவான குணாம்சம் அல்ல. உலகம் முழுவதும் அப்படித் தான். "பணக்கார மேற்கத்திய நாடான" நெதர்லாந்தும் அதற்கு விதிவிலக்கல்ல.

அண்மைக்காலமாக, டய்ன்டோர்ப் (Duindorp) எனும் கிராம மக்கள், வெளிநாட்டவர்களுக்கு எதிரான இனவெறிச் செயல்களில் ஈடுபடுவதாக, டச்சு ஊடகங்களில் பரபரப்பாக பேசப் படுகின்றது. அரசாங்க மட்டத்திலும், டய்ன்டோர்ப் மக்களின் இனவெறிக்கு எதிராக கண்டனங்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன.

டய்ன்டோர்ப், நெதர்லாந்தின் அரசியல் தலைநகரமான டென் ஹாக் (The Hague) கிற்கு அருகில் உள்ள ஒரு மீன்பிடிக் கிராமம். அங்கு வாழும் பூர்வீக டச்சு மக்களில் பெரும்பாலானோர், குறைந்தளவு வருமானம் ஈட்டும் மீனவர்கள் அல்லது தொழிலாளர்கள். அதாவது பாட்டாளி வர்க்க மக்கள். அது ஒரு "மூடுண்ட சமுதாயம்". வெளியார் யாரும் அங்கு வந்து குடியேறுவதை, அவர்கள் அனுமதிப்பதில்லை.

டய்ன்டோர்ப் கிராமத்தில், பல குடியிருப்புகளை கட்டியுள்ள Vestia நிறுவனம், பல வெளிநாட்டவர்களையும் குடியமர்த்தி உள்ளது. அங்கு வாழும் வெளிநாட்டவர்கள், தினசரி இனத் துவேஷத்திற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. அவர்களின் வீட்டு ஜன்னல்கள் கல் வீசி உடைக்கப் பட்டுள்ளன. வீட்டுச் சுவர்களில், கதவுகளில், "நாஸி ஸ்வாஸ்திகா" சின்னம் வரையப் பட்டது. வீதியில் நடந்தால், இனவாதக் கூச்சல்களை சகித்துக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

அங்கு நடக்கும் சம்பவங்களை ஆவணப் படுத்தச் சென்ற உள்ளூர் தொலைக்காட்சி கமெராவுக்கு முன்னாலேயே இனவாதம் பேசுகின்றனர். வெளிநாட்டவர்கள் அங்கிருந்து வெளியேறி, தமது நாட்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று சொல்கின்றனர்.

டய்ன்டோர்ப் கிராமத்தில் தான், இனவாதக் கட்சியான PVV க்கு அதிக வாக்குகள் (35%) கிடைத்துள்ளன. டய்ன்டோர்ப் மக்கள் உண்மையிலேயே இனவாதிகள் தானா? இது குறித்து சில ஊடகங்கள் ஆராய்ந்த பொழுது, அந்த மக்களின் அடிப்படைப் பிரச்சினை பொருளாதாரம் என்பது தெரிய வந்துள்ளது.

எந்த நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை இருந்தாலும், அடித்தட்டு மக்கள் தான் அதிகமாகப் பாதிக்கப் படுவார்கள். டய்ன்டோர்ப்வாசிகளில் அதிகமானோர், வேலை வாய்ப்பின்மையால் அரச உதவித் தொகையில் வாழ்கின்றனர். முன்பு அவர்கள் செய்து வந்த மீன்பிடித் தொழிற்துறை நலிவடைந்து விட்டது. அதே நேரம், வாடகை வீடுகளை கட்டிக் கொடுக்கும் நிறுவனம், வீட்டுமனை சந்தையை கட்டுப்படுத்துவதற்காக, குறைந்தளவு வீடுகளையே குறைவான வாடகைக்கு விடுகின்றது. (நெதர்லாந்தில், வாடகை வீடுகளை வழமையாக பெரிய நிறுவனங்கள் தான் கட்டிக் கொடுக்கின்றன.)

வீட்டு மனை நிறுவனம், "பழைய கட்டிடங்கள்" என்று கூறி, ஏழைகளின் வீடுகளை உடைத்து, அங்கே புதிய கட்டிடங்களை கட்டி வருகின்றது. (இது வழமையாக நாடு முழுவதும் நடக்கின்றது.) நவீன வசதிகளுடன் கூடிய புதிய வீடுகளுக்கு, வாடகை கட்டி குடியேறும் அளவிற்கு, அங்குள்ள மக்களிடம் பண வசதி இல்லை. டய்ன்டோர்ப்வாசிகளின் வளர்ந்து விட்ட பிள்ளைகளுக்கு, வீடு கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது.

படிப்பறிவில்லாத பாமர மக்களுக்கு, பொருளாதாரப் பிரச்சனைகளை புரிந்து கொள்ளும் பக்குவம் கிடையாது. அவர்களின் கண்களுக்கு தெரிவதெல்லாம், தமது இடத்தில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்கள் தான். தங்களுக்கு வீடு கிடைக்காத பொழுது, எங்கிருந்தோ வரும் வெளிநாட்டவர்களுக்கு எப்படிக் கிடைக்கின்றது என்ற பொறாமை உணர்வும், இனவாதத்தை தூண்டி விடுகின்றது. உண்மையில், ஒரு சிறு தொகையினர் தான் இனவெறிச் செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால், அவர்கள் தான் உள்ளூர் அரசியலில் தாக்கம் செலுத்துகின்றனர்.

பொதுவாக, நெதர்லாந்து மக்களிடம் இனவாதம் கிடையாது என்று, பிற ஐரோப்பிய நாடுகளில் வாழும் வெளிநாட்டவர்கள் நினைக்கின்றனர். உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் நடப்பதைப் போன்று, நெதர்லாந்திலும் பொருளாதாரப் பிரச்சினைகள் வரும் நேரம், இனவாதம் அதிகரிக்கின்றது. நெதர்லாந்தில் மூன்று தலைமுறைகளாக வாழும், துருக்கி, மொரோக்கோ நாட்டவர்கள் அதை உணர்ந்துள்ளனர்.

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர், நெதர்லாந்தில் வேலை வாய்ப்புக் கிடைத்து வந்து குடியேறிய முதலாவது தலைமுறையினர், உள்ளூர் டச்சு மக்களினால் வரவேற்கப் பட்டனர். அன்று பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. அப்போது, இந்த நாட்டில் வாழும் அனைவருக்கும் வேலை கிடைத்து வந்த காலம் அது. இன்று காலம் மாறி விட்டது. பூர்வீக டச்சு சமுதாயத்திலும், வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வருகின்றது. கூடவே வறுமையும் அதிகரிக்கின்றது. கஷ்டமான காலத்தில், மக்கள் மத்தியில் ஏற்படும் மனக் கசப்புகள், அரசுக்கும், முதலாளித்துவத்திற்கும் எதிராக திரும்பி விடும் அபாயம் உள்ளது.

இனவாதக் கட்சிகள், அந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. ஏழை மக்களை இனவாதிகளாக மாற்றும் சதிவேலைகளில் ஈடுபடுகின்றன. இந்த இனவாதக் கட்சிகளுக்கு பின்புலத்தில், பெரும் முதலாளிகள் இருப்பது ஒன்றும் இரகசியம் அல்ல.

மேலதிக தகவல்களுக்கு : 
Duindorp: is Nederland racistischer geworden?; http://www.eenvandaag.nl/binnenland/50801/duindorp_is_nederland_racistischer_geworden_ Allochtonen weggepest in Duindorp; 
http://nos.nl/artikel/637119-allochtonen-weggepest-in-duindorp.html

Saturday, April 19, 2014

நொறுங்கிக் கொண்டிருக்கும் மேற்குலகத் திமிர்



மீண்டும் எழுந்து வரும் உக்ரைனிய கம்யூனிஸ்ட் கட்சி.
"விழ விழ எழுவோம், ஒன்று விழ நாம் ஒன்பதாய் எழுவோம்"
"பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதை" மாதிரி, உக்ரைனில் பாசிச சதிப்புரட்சிக் கும்பலுக்கு உதவச் சென்ற மேற்குலகிற்கு, அடி மேல் அடி விழுவதால் பின்வாங்கிக் கொண்டிருக்கிறது. உக்ரைனை வைத்து மணல் கோட்டை கட்டிய ஏகாதிபத்திய கனவுகள் நொறுங்கிக் கொண்டிருக்கின்றன. தனது தோல்வி கண்டு பொறுக்க முடியாத மேற்குலகம், பொய்களையும், கட்டுக்கதைகளையும் பிரச்சாரம் செய்து வருகின்றது.

கிழக்கு உக்ரைனில், பாசிச எதிர்ப்பு மக்கள் எழுச்சி காரணமாக, அந்த மாநிலம் தன்னிச்சையாக சுதந்திரப் பிரகடனம் செய்து கொண்டது. "தொனியேட்ஸ்க் மக்கள் குடியரசு" என்ற பெயரில் தனி நாடாக இயங்கப் போவதாக அறிவித்தது. அங்குள்ள அரசாங்க கட்டிடங்கள், தொலைக்காட்சி அஞ்சல் கோபுரம் போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

பாசிச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களின் செல்வாக்கு, மக்கள் மத்தியில் அதிகரிப்பதைக் கண்டு பொறுக்க முடியாத மேற்குலகமும், கீவில் உள்ள பாசிச அரசும் சேர்ந்து ஒரு சதித் திட்டம் தீட்டின. தொனியேட்ஸ்க் மக்கள் குடியரசின் பெயரில், யூதர்களுக்கு எதிராக, போலியான துண்டுப் பிரசுரம் ஒன்று விநியோகிக்கப் பட்டது. "தொனியேட்ஸ்க் மக்கள் குடியரசில் வாழும் யூதர்கள் அனைவரும், உடனடியாக பதிவு செய்ய வேண்டும். பதிவுத் தொகையாக முப்பது டாலர் கட்ட வேண்டும்..." என்று அதிலே எழுதப் பட்டிருந்தது. 

ஒரு யூத ஆலயத்தில் ஒட்டப் பட்டிருந்த துண்டுப்பிரசுரம், டிவிட்டர் இணையம் மூலம் பரவலாக்கப் பட்டது. குறிப்பாக, உக்ரைனிய பாசிச அரசை ஆதரிக்கும் அரசியல் ஆர்வலர்கள், அதனை பரப்புவதில் ஆர்வமாக இருந்துள்ளனர். மேற்கத்திய ஊடகங்களிலும் அந்தத் தகவல் வெளியானது. ஜெனீவாவில் ரஷ்ய வெளிநாட்டு அமைச்சர் லவ்ரோவுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்க வெளிநாட்டு அமைச்சர் ஜோன் கெரி, "யூத விரோத துண்டுப்பிரசுரம்" குறித்து தனது கண்டனங்களை தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை முடிந்த அடுத்த நாள், யூதர்களுக்கு எதிரான துண்டுப்பிரசுரம் போலியானது என்ற உண்மை, அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. கிழக்கு உக்ரைனிய மாநிலமான தொனியேட்ஸ்க்கில் வாழும் யூதர்களின் கருத்தும் அதுவாக உள்ளது. இது அநேகமாக, உக்ரைனிய அரச கைக்கூலிகளின் வேலையாக இருக்கலாம் என்று நம்புகின்றனர். (பார்க்க: Antisemitic flyer 'by Donetsk People's Republic' in Ukraine a hoax)

மேற்குலக கைக்கூலிகள் தாமாகவே ஒரு போலியான துண்டுப்பிரசுரம் அடித்து வெளியிட்டு விட்டு, உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பேச வைக்கும் அளவிற்கு நிலைமை உள்ளது. அதாவது, தோல்விக்கு மேலே தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கும் உக்ரைனிய பாசிஸ்டுகளும், அவர்களுக்கு முண்டு கொடுக்கும் மேற்குலகமும் செய்வதறியாது நிற்கின்றனர். அவர்களது தான்தோன்றித்தனமான செயல்கள் எல்லாம், கடைசியில் அவர்களுக்கு எதிராகவே திரும்பி விடுகின்றன.

ஜெனீவாவில் நடந்த, ரஷ்ய, அமெரிக்க, உக்ரைனிய, ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டு அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் முடிவில் எட்டப் பட்ட தீர்மானம், உக்ரைன் நெருக்கடியில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. கிழக்கு உக்ரைனில் அரசாங்க கட்டிடங்களை ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், அவற்றைக் காலி செய்து விட்டு, ஆயுதங்களையும் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெனீவாத் தீர்மானம் கூறுகின்றது.

ஆனால், கிழக்கு உக்ரைன் ஆர்ப்பாட்டக்காரர்கள், ஒரு அடி கூட நகரவில்லை. அவர்களைக் காரணம் கேட்டால், "ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட லாவ்ரோவ், ரஷ்யாவுக்கு மட்டுமே வெளிநாட்டு அமைச்சர். நாங்கள் உக்ரைனியர்கள்." என்று சொல்கின்றனர். அதே நேரம், "உக்ரைனிய தலைநகர் கீவில், அரசாங்க கட்டிடங்களை ஆக்கிரமித்துள்ள Euromaidan ஆர்ப்பாட்டக் காரர்கள் முதலில் வெளியேற வேண்டும்" என்று நிபந்தனை விதித்துள்ளனர்.

ரஷ்யா உக்ரைனிய அரசாங்கத்தை, சட்டபூர்வமான அரசாக ஏற்றுக் கொள்ள மறுத்து வருகின்றது. அவர்களை சதிப்புரட்சியாளர்கள் என்று கூறி, அனைத்துத் தொடர்புகளையும் முறித்துக் கொண்டுள்ளது. உக்ரைனிய ஆட்சியாளர்களும், ஆர்ப்பாட்டங்கள் செய்து, அரச கட்டிடங்களை ஆக்கிரமித்து தான், ஆட்சியை கைப்பற்றினார்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

அவர்கள் மீது அழுத்தம் பிரயோகிப்பதற்கு, அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் மறுத்து வருகின்றன. அதனால், கிழக்கு உக்ரைனிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மேல் செல்வாக்குப் பிரயோகிக்கும் அளவிற்கு, ரஷ்யாவும் நடந்து கொள்ளவில்லை. அது தன்னை ஒரு சர்வதேச சமூகத்தின் பிரதிநிதியாக காட்டிக் கொள்வதில் மட்டுமே அக்கறை காட்டுகின்றது.

இதற்கிடையே, ரஷ்யா மீது மென்மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறி வருகின்றது. அதற்கு எதிர்வினையாற்றிய ரஷ்ய அரசு, "அமெரிக்கா தன்னை வீட்டு வேலை செய்யாத பள்ளிக்கூட மாணவன் போன்று நடத்துவதாகவும், அது இராஜதந்திர பொறிமுறை ஆகாது" என்று கூறியுள்ளது.

அமெரிக்கா பயமுறுத்துவது போன்று, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள், எந்தளவு தூரம் சாத்தியமானது என்பது கேள்விக்குறி. ஏனென்றால், அமெரிக்க கார் கம்பனிகள், ரஷ்ய சந்தையில் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. டச்சு- ஆங்கிலேயே ஷெல் நிறுவனம், ரஷ்ய எரிவாயு துறையில் முதலிடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றது. இதற்கான ஒப்பந்தம் ஒன்றுக்காக, ஷெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். இவர்கள் யாரும், ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடை குறித்து கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

அண்மைக் காலமாக, ரஷ்ய பொருளாதாரம் வளர்ந்து வருகின்றமை, இங்கே கவனிக்கப் பட வேண்டிய முக்கியமான விஷயம். மேற்கத்திய முதலீட்டாளர்கள் ரஷ்யாவை புறக்கணிக்க முடியாத நிலையில் உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் நிறையப் பேசும் அளவிற்கு, உக்ரைனிற்கு எந்த உதவியும் செய்யவில்லை. ஏற்கனவே பலவீனமான உக்ரைனிய பொருளாதாரம், நெருக்கடி காரணமாக வீழ்ந்து கொண்டிருக்கிறது.

உக்ரைனிய நாணயமான ஹிர்வினியாவின்(hryvnya) பெறுமதி பாதியளவு குறைந்துள்ளது. கிழக்கு உக்ரைனிய தொழில்துறை, பெருமளவு ரஷ்ய சந்தையை நம்பி இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனால், அங்கு நடக்கும் "ரஷ்ய ஆதரவு ஆர்ப்பாட்டங்களுக்கு" பின்னணியில், பொருளாதாரக் காரணங்களும் உள்ளன. ரஷ்ய ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க முடியாத அளவிற்கு, பொருளாதாரப் பிரச்சினை உக்ரைனிய அரசின் கைகளை கட்டிப் போட்டுள்ளது.


உக்ரைனில், பாஸிசத்திற்கு எதிரான மக்கள் எழுச்சியை ஜீரணிக்க மூடியாத மேற்கத்திய ஊடகங்கள், உண்மையை மறைத்து, பிரச்சார யுத்தம் ஒன்றை முடுக்கி விட்டுள்ளன. கிழக்கு உக்ரைனில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியை நசுக்குவதற்காக, பாசிச ஆட்சியாளர்கள் அனுப்பிய படையினர், மக்கள் பக்கம் சேர்ந்து விட்டனர். போராடும் மக்களை நோக்கி சுட விரும்பாத படையினர், தாம் கொண்டு சென்ற ஆயுத தளபாடங்களை மக்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். இது வரையில், எட்டு அல்லது ஒன்பது யுத்த தாங்கிகள், பாசிச எதிர்ப்பு புரட்சியாளர்கள் வசம் வந்துள்ளன.

உக்ரைனிய படையினர் கீவில் இருந்து புறப்பட்ட பொழுது, தாங்கிகளில் பறந்து கொண்டிருந்த உக்ரைனிய தேசியக் கொடிகளை தாமே அகற்றி விட்டு, அவற்றில் ரஷ்யக் கொடிகளை பறக்க விட்டுள்ளனர். அதனை பொறுக்க முடியாத மேற்கத்திய ஊடகங்கள், "ரஷ்யா படையெடுத்து வந்து விட்டதாக" தமது மக்களுக்கு பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கின்றன. உக்ரைனில், கடந்த சில வாரங்களாக, தோல்விக்கு மேல் தோல்வியை தழுவிக் கொண்டிருக்கும் பாசிஸ்டுகள், கோயபல்ஸ் பாணியிலான பொய்ப் பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளனர்.

மேற்குலகம் ஆதரிக்கும் உக்ரைனிய அரசாங்கம் அனுப்பிய இராணுவம், "ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளையும், பயங்கரவாதிகளையும்" எதிர்த்து சண்டையிடும் கண்கொள்ளாக் காட்சி. கிழக்கு உக்ரைனில் "உக்கிரமான யுத்தம் நடந்து கொண்டிருப்பதால்," நேட்டோ இராணுவ உதவி கோரப் படுள்ளது.


முதலாளித்துவத்திற்கும், பாசிசத்திற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு பற்றிய கிரேக்க ஆவணப் படம்: 


FASCISM INC MULTILINGUAL from infowar on Vimeo.


உக்ரைன் தொடர்பான முன்னைய பதிவுகள்:

Tuesday, April 15, 2014

உக்ரைன் போர் ஆரம்பமாகி விட்டது!

உக்ரைன் போர் ஆரம்பமாகி விட்டது! 

கிழக்கு உக்ரைனில், பாசிச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி வைத்திருந்த, கிரமாட்டோர்ஸ்க் (Kramatorsk) விமான நிலையத்தின் மீது, உக்ரைனிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. விமான நிலையம், உக்ரைனிய படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. வலது அணி என்ற பாசிசக் கட்சி உறுப்பினர்கள் பலர், உக்ரைனிய இராணுவ சீருடை அணிந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது. சில வெளிநாட்டு பாசிஸ்டுகளும் தாக்குதலில் பங்குபற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்றது. அதனை உறுதிப் படுத்த முடியவில்லை.  


டானியேஸ்க் (Donetsk) நகரில், சோவியத் ஆதரவு ஆர்ப்பாட்டக் காரர்கள், பல பொலிஸ் நிலையங்களை கைப்பற்றி உள்ளனர். கடமையில் இருந்த உக்ரைனிய பொலிஸ்காரர்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள் பக்கம் சேர்ந்து விட்டனர். பொலிஸ் நிலையங்கள் மட்டுமல்லாது, நேற்று ஒரு சிறிய விமானத் தளமும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தது. அதைத் தான், தற்போது உக்ரைனிய படைகள் கைப்பற்றியுள்ளன. 

கிழக்கு உக்ரைனிய கிளர்ச்சியாளர்கள், "ரஷ்ய ஆதரவாளர்கள், பிரிவினைவாதிகள்" என்று உக்ரைனிய அரசும், மேற்கத்திய நாடுகளும் பிரச்சாரம் செய்து வருகின்றன. உண்மையில், கிளர்ச்சியாளர்கள் தம்மை உக்ரைனியர்கள் என்று கூறிக் கொள்கின்றனர்.

கிளர்ச்சியாளர்கள் எல்லோரும் ரஷ்ய மொழி பேசுவோர் அல்ல. ரஷ்யா மொழிக்கும், உக்ரைனிய மொழிக்கும் இடைப்பட்ட வட்டார வழக்கு மொழியை பேசும் மக்களும் அடங்குவார்கள். அவர்கள் தம்மை ரஷ்ய இனத்தவராக அடையாளம் காட்டவில்லை. உக்ரைனியர்கள் என்றே அழைத்துக் கொள்கின்றனர்.

ரஷ்யர்களையும், உக்ரைனியர்களையும் இணைக்கும் வகையில், "சோவியத் பிரஜை" என்ற அடையாளத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டங்களில் முன்னாள் சோவியத் யூனியனின் கொடிகள் பறப்பதில் இருந்தே, அதனைப் புரிந்து கொள்ளலாம். பாசிச எதிர்ப்புணர்வு, பல்லின கிளர்ச்சியாளர்களை ஒன்றிணைக்கிறது.

முன்பு ஆப்கானிஸ்தானில் போரிட்ட ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள், கிளர்ச்சிக்கு தலைமை தாங்குகின்றனர். பொலிஸ் நிலையங்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை, அவர்களே முன்னின்று தாக்கி உள்ளனர். பாசிச எதிர்ப்பு முன்னணி ஒன்றை அமைக்கும் நோக்குடன், ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கின்றனர்.

கிளர்ச்சியை அடக்குவதற்காக, கீவ் அனுப்பிய இராணுவ-பொலிஸ் படையினரும், கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து விட்டனர். கீவில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி உள்ள பாசிஸ்டுகள், இராணுவ ரீதியாக மிகவும் பலவீனமாக இருக்கின்றனர். ஆக்கிரமிக்கப் பட்ட அரசாங்க கட்டிடங்களை விட்டு, கிளர்ச்சியாளர்கள் வெளியேற வேண்டும் என்று, அவர்கள் விதித்த காலக்கெடு காலாவதியாகி விட்டது.

உக்ரைன் அரசு, மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறுகின்றது. அதனால், ஐ.நா. சமாதானப் படை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே, உக்ரைனின் பாசிச ஆட்சியாளர்களுக்கு ஆயுத தளபாடங்களை விநியோகம் செய்வதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது.

ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை பற்றி வாய் கிழியப் பேசும் தேசியவாதிகள், இன்னொரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை நசுக்குவது ஒரு முரண்நகை. உலக நாடுகள் முழுவதும் உள்ள தேசியவாதிகள், குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாக உள்ளனர். 

உக்ரைன், கீவ் நகரில் சுயநிர்ணய உரிமை கோரிப் போராடியவர்களின் அரசாங்கம், இன்று கிழக்கு உக்ரைனில் ஸ்லாவியான்ஸ்க் நகரில் சுயநிர்ணய உரிமை கோருவோரின் போராட்டத்தை நசுக்குவதற்காக ஹெலிகாப்டர்களையும், படையினரையும் அனுப்பியுள்ளது. 


********


உக்ரைன் விவகாரம் தொடர்பாக, அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் கருத்து முரண்பாடு நிலவுவதாக தெரிய வருகின்றது. ஐ.நா.மன்றத்தில் ரஷ்யாவை கண்டிக்கும் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விட்ட பொழுது, இஸ்ரேல் கலந்து கொள்ளாமல் வெளிநடப்புச் செய்தது. அதிலிருந்தே, ஒபாமா நிர்வாகத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது. 

பாசிஸ்டுகள் ஆட்சி செய்யும் உக்ரைனில், யூதர்களின் வழிபாட்டுஸ்தலங்கள் தாக்கப் படுவது அதிகரித்துள்ளது. யூதர்களின் சமாதிகள் மீது, நாஸி சின்னம் கீறி களங்கப் படுத்திய நிகழ்வுகளும் நடந்துள்ளன. உக்ரைனில் பாசிச சதிப்புரட்சிக்குப் பின்னர், ஆயிரக் கணக்கான யூதர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இது தொடர்பான தகவல்களுக்கு, இஸ்ரேலிய ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டன. இஸ்ரேல், அமெரிக்காவின் "உக்ரைனிய கொள்கையை" ஆதரிக்காமைக்கான காரணம் இது தான் என்று தெரிய வருகின்றது. ஆயினும், "உக்ரைனிய நாஸிகளின் யூத வெறுப்பு ஒரு கட்டுக்கதை(?)" என்று, ஒபாமா நிர்வாகம் மறுத்து வருகின்றது.

********

ஸ்லாவியான்ஸ்க் நகரில் அரசாங்க கட்டிடங்களையும், பொலிஸ் தலைமையகத்தையும் கைப்பற்றிய மக்கள், அவற்றை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றனர். உள்ளூர் பொலிஸ்காரர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பக்கம் சேர்ந்து விட்டனர். ஸ்லாவியான்ஸ்க் நகரில் மக்கள் மனிதச் சங்கிலி அமைத்து வருகின்றனர். 


ஸ்லோவியான்ஸ்க், உக்ரைனிய படைகளை எதிர்த்துப் போராடுவதற்கு தயாராக காத்திருக்கும் மக்கள்.

வீடியோ: ஸ்லோவியான்ஸ்க் நகருக்குள் நிலை கொண்டிருந்த உக்ரைனிய அரச படையினர், மக்களிடம் தமது ஆயுதங்களை ஒப்படைத்த காட்சி.

 

*******


இவை, மேற்குலக ஊடகங்கள் மக்களுக்கு காட்டாமல் மறைக்கும் காட்சிகள். உக்ரைன், லுகான்ஸ்க் நகரில் அரசாங்க கட்டிடங்களை ஆக்கிரமித்துள்ள மக்கள் மத்தியில், மேற்குலக எதிர்ப்பு தன்மை மிகவும் அதிகமாக உள்ளது. லுகான்ஸ்க் நகர ஆர்ப்பாட்டத்தில் காணப்பட்ட சில காட்சிகள்.


உக்ரைனை ஆளும் பாசிச அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் மக்களின் கட்டுப்பாட்டின் கீழ், லுகான்ஸ்க் (Luhansk) நகரமும் வந்துள்ளது. அங்குள்ள அரசாங்க கட்டிடம் ஒன்றில், முன்னாள் சோவியத் யூனியனின் கொடி பறக்கிறது.



*********

ஒடேசா (Odessa) நகரில் (10-4-2014), செம்படை வீரர்களின் சீருடை அணிந்த இளைஞர்கள், சோவியத் கொடிகளை ஏந்தியவாறு அணிவகுத்துச் செல்கின்றனர். 2 ம் உலகப் போரில், ஜெர்மன் நாஸிப் படைகளின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த ஒடேசா நகரம், சோவியத் செம் படையினரால் விடுதலை செய்யப்பட்ட எழுபதாண்டு நிறைவை கொண்டாடுவதற்காக, இந்த அணிவகுப்பு நடந்தது. 70 வருடங்களுக்கு முன்னர், வெற்றி விழாக் கொண்டாடிய செம்படை வீரர்கள், இதே தெருக்களில், இதே மாதிரித் தான் அணிவகுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.


ஒடேசா நகரில் நடந்த, பாசிச எதிர்ப்பு ஊர்வலத்தில் இருந்து ஒரு காட்சி. ஊர்வலத்தில் கலந்து கொண்ட, உக்ரைனில் வாழும் ஆப்பிரிக்கர்கள் இருவரை இந்தப் படத்தில் பார்க்கலாம். இந்தப் படமும், ஊர்வலம் பற்றிய தகவலும், "ஜனநாயகம் காக்கும்" மேலைத்தேய ஊடகம் எதிலும் வரவில்லை. அது தான் அவர்களது நடுநிலை தவறாத ஊடகத் தர்மம்.



உக்ரைன் நாட்டில், ஆயிரக் கணக்கான ஆப்பிரிக்கர்கள், இந்தியர்கள், தமிழர்கள் வாழ்கிறார்கள். முன்பு கீவ் நகரில் இடம்பெற்ற, ஐரோப்பிய ஒன்றிய ஆதரவாளர்களின் Euro Maidan ஆர்ப்பாட்டத்தில், ஒரு வெளிநாட்டவர் கூட தலை காட்டவில்லை. "வெளிநாட்டவர்களை வெறுக்கும் நவ நாஸிகளை ஆதரிக்கும் அளவிற்கு," அவர்கள் யாருக்கும் பைத்தியம் பிடிக்கவில்லை. ஆனால், இந்தியாவிலும், இலங்கையிலும், மேற்கத்திய நாடுகளிலும் வாழும், ஒரு சில மேட்டுக்குடித் தமிழர்கள் மட்டும், இன்னமும் உக்ரைனிய நாஸிகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.



 *******


உக்ரைன் தொடர்பான முன்னைய பதிவுகள்:

Thursday, April 10, 2014

உக்ரைன் இனப் பிரச்சினைக்கு சமஷ்டித் தீர்வை எதிர்க்கும் மேற்குலகம்


மேற்குலக நாடுகள், "உலகம் முழுவதும் ஜனநாயகம், சுயநிர்ணயம் போன்ற உயரிய இலட்சியங்களுக்காக பாடுபடுவதாக," இன்னமும் வெகுளித் தனமாக நம்பிக் கொண்டிருக்கும், அப்பாவிகள் யாராவது இருந்தால் கையை உயர்த்துங்கள். உக்ரைன் பிரச்சினையில், மேற்குலக நாடுகள், ஜனநாயகம் என்ற சொல்லையே வெறுக்கும் வகையில் நடந்து கொள்கின்றன. ஏற்கனவே, கொங்கோ, சிலி, ஈரான், போன்ற பல நாடுகளில், அமெரிக்கா ஜனநாயக அரசுகளை கவிழ்ப்பதற்கு சதி செய்துள்ள பல சம்பவங்கள், வரலாற்றில் பதியப் பட்டுள்ளன.  

உக்ரைன் நாட்டில், பெரும்பான்மை மக்களால், ஒரு ஜனநாயகத் தேர்தலில் தெரிவு செய்யப் பட்ட ஜனாதிபதியை, ஒரு சதிப்புரட்சி மூலம் பதவியை விட்டு அகற்றிய வன்முறைக் கும்பலுக்கு மேற்குலகம் உதவியது. கிரீமிய மக்கள், ஒரு பொது வாக்கெடுப்பு மூலம், தமது சுயநிர்ணய உரிமையை தீர்மானித்த பொழுது, அமெரிக்கா அந்த முடிவை எதிர்த்தது. தற்போது, உக்ரைனில் ஒற்றையாட்சி முறையை ஒழித்து, அந்த இடத்தில் சமஷ்டி தீர்வின் மூலம் அதிகாரப் பரவலாக்கல் கொண்டு வரும் திட்டத்தையும், அமெரிக்கா எதிர்த்து வருகின்றது. அமெரிக்காவோடு சேர்ந்து கொண்டு, மற்றைய "ஜனநாயகத் தூய்மைவாதிகளான" மேற்கு ஐரோப்பிய நாடுகளும் எதிர்க்கின்றன. 

பல மேற்கத்திய ஆதரவாளர்கள், உக்ரைனிய தேசியவாதிகளின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கின்றனர். அதே நேரம், ரஷ்ய சிறுபான்மையினத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுக்கின்றனர். உக்ரைனில் ரஷ்யர்கள் பிற்காலத்தில் குடியேற்றப் பட்டதாக, உக்ரைனிய பேரினவாதிகளின் பிரச்சாரங்களை கேட்டு விட்டு, வரலாற்றை திரிப்பவர்கள் பலர் உள்ளனர். உண்மையில், இன்று ரஷ்ய மொழி பேசும் மக்கள், பெரும்பான்மையாக வாழும் தென்- கிழக்கு உக்ரைனிய பகுதிகள், பல நூறாண்டுகளாக ரஷ்ய சாம்ராஜ்யத்தின் பகுதிகளாக இருந்து வந்துள்ளன. 

17 - 19 நூற்றாண்டுகளில் கூட, உக்ரைன் என்றொரு நாடு இருக்கவில்லை.
அது போலந்து, ரஷ்யா, துருக்கி ஆகிய மூன்று
பேரரசுகளின் அங்கமாக இருந்தது.
இன்று, உக்ரைனிய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும், மத்திய, மேற்கு உக்ரைனிய பகுதிகள், போலந்து-லிதுவேனியா சாம்ராஜ்யத்தின் பகுதிகளாக இருந்து வந்துள்ளன. 1917 ல் ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் புரட்சி நடக்கும் வரையில், அந்த வரைபடத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. ரஷ்யர்கள் உக்ரைனிய பிரதேசங்களை "குட்டி ரஷ்யா" என்று அழைத்தனர். அங்கே உக்ரைனிய மொழி என்ற, தனியான மொழி பேசும், மக்கள் இனம் எதுவும் அடையாளம் காணப் படவில்லை. 

நீண்ட காலமாக, உக்ரைனிய மொழி என்ற ஒன்றிருப்பதாக ரஷ்யர்கள் நம்ப மறுத்தார்கள். அவர்களைப் பொறுத்த வரையில், அது ஒரு ரஷ்ய மொழியின் வட்டார வழக்கு மொழி மட்டுமே. "எது தனித்துவமான மொழி? எது வட்டார வழக்கு மொழி?" என்பதை வரையறுப்பது, இன்றும் கூட மொழியியலாளர்களினால் முடியாமல் உள்ளது.  "இந்தியத் தமிழும், ஈழத் தமிழும், இரண்டு வேறு மொழிகளா?" இந்தக் கேள்வியைக் கேட்டால், (தமிழர்கள்) எல்லோரும், கேட்டவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று நினைப்பார்கள். ஆனால், ஈழத் தமிழானது ஒரு தனித்துவமான மொழியாக பரிணமிக்கக் கூடிய, அனைத்து அம்சங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. 

இப்படி ஒரு வரலாற்றை கற்பனை செய்து பாருங்கள். "நாம் பேசுவது தமிழ் அல்ல, அது தனித்துவமான ஈழ மொழி" என்றொரு அரசியல் இயக்கத்தை, ஈழத் தமிழர்கள் முன்னெடுக்கின்றனர். அப்போது, தமிழகத் தமிழ் தேசியவாதிகளின் எதிர்வினை எப்படி இருக்கும்? அவர்கள், ஈழத் தமிழ் தேசியவாதிகளின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பார்களா? நிச்சயமாக இல்லை. "ஈழ மொழி என்ற ஒன்று உலகில் இல்லை. அது பொதுவான தமிழ் மொழியின் வட்டார வழக்கு மொழி" என்று வாதாடுவார்கள். இந்த தர்க்கம் தான், உக்ரைனில் ரஷ்ய- உக்ரைனிய இனப் பிரச்சினையின் அடிப்படை. 

ரஷ்ய மொழியும், போலிஷ் மொழியும் ஒரே மாதிரி ஒலிக்கும், ஸ்லாவிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த சகோதர மொழிகள். ரஷ்யா, போலந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் வாழும் மக்கள், இரண்டுக்கும் இடைப்பட்ட மொழிகளைப் பேசுவதில் வியப்பில்லை. பெலாரஸ், மற்றும் உக்ரைனிய மொழிகள் குறிப்பிடத் தக்கவை. அவை சில நேரம் ரஷ்ய மொழி போன்றிருக்கும், சில நேரம் போலிஷ் மொழி போன்றிருக்கும். பெலாரஸ், உக்ரைனிய மொழிகளைப் பேசும் மக்கள், ரஷ்ய மொழியினை படிக்காமலே, ரஷ்யர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், ரஷ்யர்கள் அந்த மொழிகளைப் புரிந்து கொள்ள சிரமப் படுவார்கள். அதற்கு காரணம், நவீன காலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி. 

ரஷ்ய திரைப்படத் துறை, பதிப்பகங்கள் என்பன, வணிக ரீதியாக மிகவும் பலமானவை.  அவர்கள் தயாரித்து விநியோகம் செய்யும் திரைப்படங்கள், தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளின் தாக்கம் மிகவும் அதிகம். உதாரணத்திற்கு, தமிழகத்தின் திரைப்படத் துறை, வணிக ரீதியாக பலமாக இருப்பதால், ஈழத்திலும் இந்தியத் தமிழ் படங்களைத் தான் பார்க்கிறார்கள். அதனால், ஈழத் தமிழர்களுக்கு, இந்தியத் தமிழ் நன்றாகப் புரியும். அதே நேரம், இந்தியத் தமிழர்கள், ஈழத் தமிழைப் புரிந்து கொள்ள சிரமப் படுவார்கள். 

போலந்து, பின்னர் ஜெர்மனி, ஆஸ்திரியா ஆகிய நாடுகளை சேர்ந்த சக்கரவர்த்திகளினால் ஆளப் பட்ட உக்ரைனின் மேற்குப் பகுதிகள், தனித்துவமான கலாச்சாரத்தைக் கொண்டிருந்தன. 1917 ம் ஆண்டு, சோவியத் ஒன்றியம் உருவானது. உக்ரைனியர்களின் தனித்துவமான கலாச்சாரத்தை அங்கீகரித்த கம்யூனிஸ்டுகள், அதனை தனியான குடியரசாக்கினார்கள். ஆயினும், ரஷ்ய, உக்ரைனிய மொழித் தூய்மைவாதிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் தொடர்ந்தும் நிலவி வந்தன. ஒரு புறம், உக்ரைனிய தேசியவாதிகள், தமது மொழி தனித்துவமானது என்று நிரூபிப்பதற்காக, தங்களது சக்தியை செலவிட்டார்கள். மறு புறம், ரஷ்ய தேசியவாதிகள், உக்ரைன் ஒரு தனியான மொழி என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். 

மேற்கில் வாழ்ந்தவர்கள், அதி  தீவிர உக்ரைனிய தேசியவாதிகளாகவும், கிழக்கே வாழ்ந்தவர்கள், அதி தீவிர ரஷ்ய தேசியவாதிகளாகவும் இருந்தனர். இப்போதும் அந்த நிலைமையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், மத்திய பிரதேசங்களில், குறிப்பாக தலைநகரான கீவில் வாழ்ந்தவர்கள், மிக இலகுவாக தமது தாய்மொழியை மாற்றிக் கொண்டனர். உக்ரைனிய மொழி பேசும் நாட்டுப்புறங்களில் இருந்து வந்து கீவில் குடியேறியோர், பொருளாதார நலன்களுக்காக தம்மை ரஷ்யர்கள் என்று அழைத்துக் கொண்டனர். ரஷ்யர்களாக மாறிய உக்ரைனியர்களைப் போன்று, உக்ரைனியர்களாக மாறிய ரஷ்யர்களும் இருக்கின்றனர். அவர்கள் வாழும் பிரதேசம், எந்த அரசியல் சக்தியின் மேலாதிக்கத்தின் கீழ் இருக்கின்றது என்பதைப் பொறுத்து, அவர்களது "தாய்மொழி"யும் மாறுபட்டது.     

உக்ரைன், உலகிலேயே மிகப் பெரிய நாடுகளில் ஒன்று. அதனால், பொருளாதார வேறுபாடும் தெளிவாகத் தெரியக் கூடியதாக உள்ளது. வழமையாக, மக்கள் அடர்த்தி நிறைந்த தலைநகர் கீவ், பொருளாதாரத்தில் முன்னனியில் நிற்கிறது. அங்கே ஒருவரின் வருடாந்த தனி நபர் வருமானம்(bnp):7500 யூரோக்கள். உக்ரைனிய மொழி பேசும் மக்கள் வாழும் மேற்குப் பகுதி, பயிர் செய்கைக்கு ஏற்ற வளமான மண்ணைக் கொண்டது. அதனால், பெரும்பாலும் விவசாயப் பொருளாதாரத்தை மட்டுமே நம்பியுள்ளது. ஆயினும், உக்ரைனில், பொருளாதாரத்தில் பின்தங்கிய, வறுமையான பகுதியும் அது தான். அங்கே ஒருவரின் வருடாந்த தனி நபர் வருமானம் சராசரி 1500 யூரோக்கள். 

உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் வாழும், தென் கிழக்கு பிராந்தியம், தொழில்துறை வளர்ச்சி கண்ட பகுதியாகும். சுரங்கத் தொழிலும், பல்வேறு தொழிற்சாலைகளும் நிறைந்து காணப் படுகின்றன. அதனால், பொருளாதார வளர்ச்சியும் அதிகம். அங்கே ஒருவரின் வருடாந்த தனிநபர் வருமானம் 3000 யூரோக்கள். ஆகவே, உக்ரைன் மொழி பேசும் மேற்குப் பகுதிக்கும், ரஷ்ய மொழி பேசும் கிழக்குப் பகுதிக்கும் இடையில், பாரிய பொருளாதார ஏற்றத்தாழ்வு இருப்பதைக் காணலாம். உலகம் முழுவதும், தேசியவாத இயக்கங்களின் வளர்ச்சிக்குப் பின்னால், பொருளாதாரக் காரணிகள் உள்ளன. பலர் இதனை கவனத்தில் எடுக்கத் தவறி விடுகின்றனர். 

உக்ரைனின் இனப் பிரச்சினைக்கு தீர்வு என்ன?
அமெரிக்கா, ,அற்றும் மேற்குலக நாடுகளைப் பொறுத்த வரையில், உக்ரைன் ஒற்றையாட்சியின் கீழ் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றன. சில சோவியத் கால சட்டங்களை தவிர்த்துப் பார்த்தால், உக்ரைன் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து, சுதந்திர தேசமான காலத்தில் இருந்து, அங்கே ஒற்றையாட்சி முறைமை நிலவுகின்றது. உக்ரைனிய மாகாணங்களுக்கான அதிகாரம், இலங்கையில் உள்ள மாகாண சபை முறையை போன்றது. கீவ் தான் அனைத்தையும் தீர்மானிக்கும் அதிகாரம் வாய்ந்தது. விதிவிலக்காக, கிரீமியா, பிராந்திய முக்கியத்துவம் காரணமாக, தன்னாட்சி அதிகாரம் பெற்றிருந்து. 

கிரீமியா பொது வாக்கெடுப்பு நடந்த பொழுது, மேற்கத்திய ஜனநாயக நாடுகள் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தன. ரஷ்ய இராணுவம் நிலை கொண்டிருந்ததால், அது செல்லுபடியாகாது என்று வாதிட்டன. ஆனால், இங்கே தான் மேற்குலகின் இரட்டை வேடம் அம்பலமாகின்றது. கொசோவோ தனி நாடாவதற்கான பொது வாக்கெடுப்பு நடந்த பொழுது, அங்கே நேட்டோ படைகள் நிலை கொண்டிருந்தன. அதற்கு முதலே, செர்பியர்கள், மற்றும் பல சிறுபான்மை இன மக்கள், இனச் சுத்திகரிப்பு செய்து விரட்டப் பட்டிருந்தனர். கொசோவோவில் நடந்த பொது வாக்கெடுப்பை அங்கீகரித்த மேற்குலக நாடுகள், கிரீமியா வாக்கெடுப்பை நிராகரித்தன. மேற்குலகம் இந்த இரட்டை அளவுகோலை எல்லா இடங்களிலும் பிரயோகித்து வந்துள்ளது. உண்மையில், இந்த மேற்குலக நாடுகள், ஜனநாயகத்தை ஆதரிக்கின்றனவா அல்லது எதிர்க்கின்றனவா?

தற்போது நடக்கும் உக்ரைனிய பிரச்சினைக்கு, போரைத் தவிர்த்து, இராஜதந்திர ரீதியான முடிவு காணப்பட வேண்டும் என்றே பலரும் விரும்புவார்கள். "உலக மக்களே! மிகப் பெரிய ஆபத்து வரப் போன்றது... ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கப் போகின்றது..." என்று பயமுறுத்தி, நேட்டோவின் இராணுவ செலவினத்தை அதிகரிக்கும் மேற்குலக நாடுகள், இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் குறித்து சிறிதளவேனும் அக்கறை காட்டவில்லை. "ரஷ்யா 19 ம் நூற்றாண்டு மனோபாவத்தோடு நடந்து கொள்கிறது. நாம் அதற்கு 21 ம் நூற்றாண்டின் கருவிகளைக் கொண்டு பதிலடி கொடுப்போம்...."(- அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரி) இது போன்ற வாய்ச் சவடால்களுக்கு மட்டும் குறைவில்லை. 

உக்ரைன் பிரச்சினை தொடர்பான உண்மை நிலவரமோ, மேற்குலகின் பரப்புரைகளுக்கு மாறாக உள்ளது. உக்ரைன் பிரச்சினைக்கு, "21 ம் நூற்றாண்டுத் தீர்வு" ஒன்றை ரஷ்யா முன்மொழிந்தது. அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் அதனை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள மறுக்கின்றன. அந்த தீர்வு என்ன? உக்ரைன் ஒரு சமஷ்டிக் குடியரசாக மாற வேண்டும் என்று ரஷ்யா கூறி வருகின்றது. 

அதாவது, இன்றுள்ள உக்ரைனிய மாகாணங்கள் ஒவ்வொன்றிலும், சமஷ்டி அமைப்பு கொண்ட மாநில அரசுக்கள் ஸ்தாபிக்கப் பட  வேண்டும். அதற்கான அதிகாரங்களை, கீவில் உள்ள மத்திய அரசு பகிர்ந்தளிக்க வேண்டும். மாநில அரசுகள், கல்வி, பொருளாதாரம், கலாச்சாரம் போன்றவற்றில் முடிவெடுக்கும் அதிகாரங்களை மட்டும் கொண்டிருக்கப் போவதில்லை. அதற்கும் அப்பால், வரி அறவிடவும், வெளிநாட்டுத் தொடர்புகளைப் பேணவும் அதிகாரம் கொண்டிருக்கும். 

சமஷ்டி மாநிலங்களைக் கொண்ட உக்ரைன், மேற்குலக சார்பாகவும் இருக்காது, அதே நேரம் ரஷ்யா சார்பாகவும் இருக்காது. ஏனென்றால், எதிரெதிர் அரசியல் முரண்பாடுகளை கொண்ட மாநில அரசுகள், அந்தளவு இலகுவாக ஒத்துழைக்க மாட்டா. அதனால், உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியத்தில், அல்லது நேட்டோ இராணுவக் கூட்டமைப்பில் அங்கத்தவராக சேர முடியாது. அதே நேரம், ரஷ்யா தலைமையிலான கூட்டமைப்பிலும் சேர முடியாது. 

உண்மையில் இந்த சமஷ்டித் தீர்வுத் திட்டம், ஜனநாயகத் தன்மை வாய்ந்த அதிகாரப் பரவலாக்கல் மட்டுமல்ல. வல்லரசுப் போட்டிக்குள் சிக்கி சீரழியாமல், உக்ரைன் தனது சுதந்திரத்தை பாதுகாத்து நிமிர்ந்து நிற்க உதவும். ஆனாலும், மேற்குலக நாடுகள் சமஷ்டித் திட்டத்தை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள மறுத்து வருகின்றன. உக்ரைனில் தொடர்ந்தும் ஒற்றையாட்சி நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றன. மேற்குலக நாடுகள், "ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள், சுயநிர்ணய உரிமை..." என்றெல்லாம் வாய் கிழியப் பேசுவது வெறும் போலி வேஷம். இந்த ஜனநாயக வேடதாரிகளை கண்டு ஏமாந்து போகும், அப்பாவிகள் பலர் இன்றைக்கும் இருப்பது தான் அவர்களது பலம்.


உக்ரைன் தொடர்பான முன்னைய பதிவுகள்:

Tuesday, April 08, 2014

லெனினின் புரட்சிக்கு ஜெர்மனி நிதி வழங்கியதா?

"ஜெர்மனி வழங்கிய நிதியில் தான், ரஷ்யாவில் லெனின் தலைமையில் புரட்சி நடந்தது" என்ற வதந்தி, நீண்ட காலம் நிலவி வந்துள்ளது. அந்த வதந்தியில் உண்மை இருக்கிறதா? அன்றும் இன்றும், பல கம்யூனிச எதிர்ப்பாளர்கள், லெனின் மீது அந்தக் குற்றச்சாட்டை, அடிக்கடி சுமத்தி வந்துள்ளனர். அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கும் ஆதாரங்கள் ஏதாவது இருக்கின்றனவா? தனது சித்தாந்த எதிரிக்கு, ஜெர்மனி உதவ வேண்டிய காரணம் என்ன?

அண்மையில் கிடைத்த, பழைய ஜெர்மன், சுவிஸ், ரஷ்ய ஆவணங்களை ஆராய்ந்த ஆய்வாளர்கள், அந்தக் கேள்விக்கு விடை தேடியுள்ளனர்.  பல ஐரோப்பிய மொழிகளில் வெளியாகும் Historia சஞ்சிகை, அந்தத் தகவல்களின் அடிப்படையில் எழுதப் பட்ட கட்டுரை ஒன்றை பிரசுரித்திருந்தது. அதில் இருந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறேன்.

முதலாம் உலகப்போரின் முடிவில், போல்ஷெவிக்குகள் ஜெர்மனியிடம் தங்கியிருக்க வேண்டியிருந்தது. அதற்குக் காரணம், லெனின் உட்பட முக்கியமான போல்ஷெவிக் கட்சி உறுப்பினர்கள், சுவிட்சர்லாந்து நாட்டில் அரசியல் தஞ்சம் கோரி இருந்தனர். முதலாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், ரஷ்யாவில் சார் மன்னராட்சி, ஒரு புரட்சி மூலம் தூக்கியெறியப் படும் என்று சொன்னால், அன்று யாரும் எளிதில் நம்பியிருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு, சார் மன்னரின் அரசு மிகப் பலமாக இருந்தது. உள்நாட்டில் அரசுக்கு எதிரான சக்திகள் மூச்சு விடக் கூட அவகாசம் கொடுக்கவில்லை. இதனால், பல அரச எதிர்ப்பாளர்கள் பிற ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோரி இருந்தனர். 

ரஷ்யாவில், விளாடிமிர் இலியானோவிச்சின் (லெனின்) குடும்பம், ஒரு வசதியான மத்தியதர வர்க்க குடும்பம் தான். அவரது மூத்த சகோதரன் அலெக்சாண்டர் ஒரு அராஜகவாதி (அனார்க்கிஸ்ட்). சார் மன்னன் நிக்கொலாயினை கொலை செய்வதற்கு முயற்சி செய்தார். தோல்வியைத் தழுவிய கொலை முயற்சியில், அலெக்சாண்டர் கைது செய்யப் பட்டு மரண தண்டனை விதிக்கப் பட்டார். அந்தச் சம்பவம் காரணமாக, லெனினின் குடும்பம் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளானது. 

விளாடிமிர் வளர்ந்து பெரியவனாகி, தமையனின் வழியில் புரட்சிக்கான ஆயுதப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டான். லெனின் என்ற புனைப் பெயரை வைத்துக் கொண்டான். கார்ல் மார்க்ஸ் எழுதிய நூல்களை படித்த லெனின், சோஷலிசப் புரட்சிகர அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அன்று கார்ல் மார்க்ஸ் எழுதிய நூல்கள், பல ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப் பட்டிருந்தன. ஆனால், ரஷ்யாவில் அவை தடை செய்யப் படவில்லை. "அந்த நூல்கள், தனது இருப்பிற்கு ஆபத்தானவை அல்ல" என்ற எண்ணத்தில், சார் அரசு அவற்றை உதாசீனப் படுத்தி வந்தது. 

சார் மன்னராட்சிக்கு எதிராக, பல்வேறு எதிர்ப்பியக்கங்கள் இயங்கி வந்தாலும், அவை எல்லாம் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தன. 1905 ல் ஏற்பட்ட புரட்சிக்குப் பின்னர், மேற்கத்திய நாடுகளில் இருப்பதைப் போன்ற, லிபரல் அரசியல் கட்சிகளுக்கு சிறிதளவு அரசியல் சுதந்திரம் கிடைத்திருந்தது. ஆனால், சோஷலிசக் கட்சிகள் கடுமையான அடக்குமுறைகளை சந்தித்து வந்தன.

லெனின் போன்ற தலைவர்கள், சுவிட்சர்லாந்தில் அகதித் தஞ்சம் கோரி இருந்தனர். ரஷ்யாவுடன் கூட்டணி அமைத்திருந்த பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள், அந்த அரசியல் அகதிகளை ஏற்றுக் கொள்ள மறுத்தன. அதனால், தவிர்க்கவியலாது, ஜெர்மனியின் ஆதிக்கத்தின் கீழ் ஒரு நடுநிலை நாடாக இருந்த, சுவிட்சர்லாந்தில் அடைக்கலம் கோர வேண்டி இருந்தது. அந்த நிலைமையை, ஜெர்மனி தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள எண்ணியது. 

அன்றைய ரஷ்யாவை ஒரு சக்கரவர்த்தி ஆண்டது போல, அன்றைய ஜெர்மனியும் சக்கரவர்த்தியின் ஆட்சியின் கீழ் இருந்தது. ரஷ்ய சக்கரவர்த்தி நிக்கோலாஸ், ஜெர்மன் சக்கரவர்த்தி வில்லெம், இருவரும் நெருங்கிய உறவினர்கள்! இருவரும் மைத்துனர் முறையானவர்கள். என்ன தான் தாயும், பிள்ளையும் என்றாலும், வாயும் வயிறும் வேறு தானே? அதனால், பிராந்திய வல்லரசுப் போட்டி, இரண்டு மைத்துனர்களுக்கு இடையில் பகைமையை வளர்த்து விட்டிருந்தது. 

ரஷ்ய சாம்ராஜ்யம், நாற்திசைகளிலும் தன்னை விஸ்தரித்துக் கொண்டிருந்தது. மேற்குத் திசையில், இன்னொரு சாம்ராஜ்யமான ஜெர்மனியுடன் மோத வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அன்றைய ஜெர்மனி, பிருஷிய சாம்ராஜ்யம் என்று அழைக்கப் பட்டது. இன்றைய போலந்தின் வட பகுதியில், இன்றைய ரஷ்யாவின் மேற்குப் பகுதியில், அதன் தலைமையகம் அமைந்திருந்தது. ஆனால், ரஷ்ய சாம்ராஜ்யமானது அந்தப் பகுதிகளை விழுங்கி விட்டிருந்தது. 

ரஷ்யாவுடனான ஏகாதிபத்திய போர்களில், தனது புராதனப் பழைமை வாய்ந்த பகுதிகளை இழந்த ஜெர்மனி, அவற்றை மீட்பதற்கு கடுமையாக முயற்சித்தது. அன்றிருந்த ஐரோப்பிய வல்லரசு நாடுகளின், நாடு பிடிக்கும் போட்டி தான், முதலாம் உலகப் போருக்கு வித்திட்டது. முதலாம் உலகப்போரில், ஜெர்மனி தோற்கடிக்கப் பட்டது அனைவரும் அறிந்ததே. ஆனாலும், ஜெர்மனி தனது பிராந்தியத்திற்கான உரிமை கோரலை கை விடவில்லை. முதலாம் உலகப்போர் முடிந்த பின்னரும், கிழக்குத் திசையில் முன்னேறிய ஜெர்மன் படைகள், எஸ்தோனியா, லாட்வியா போன்ற பால்ட்டிக் கடலோர நாடுகளை ஆக்கிரமித்தன.

ரஷ்யாவில் சார் அரசு பலமாக இருந்தாலும், அது பல்வேறு அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டி இருந்தது. அரசு விரும்பினாலும், ஜெர்மனியுடனான போரை நிறுத்த முடியாத அளவுக்கு, ரஷ்ய பேரினவாதிகளின் கை ஓங்கி இருந்தது. மறுபக்கத்தில், நகரங்களில் தொழிலாளர்களும், கிராமங்களில் விவசாயிகளும் போர் காரணமாக கடுமையான விலை கொடுக்க வேண்டி இருந்தது. அதனால், ஆங்காங்கே கலவரங்கள் வெடித்தன. ரஷ்ய அரசு, ஒரு புறம் உள்நாட்டு கலகங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிக் கொண்டே, மறுபுறம் ஜெர்மனியுடன் போரிட்டுக் கொண்டிருந்தது. 

ஜெர்மனியும் அதே மாதிரியான நெருக்கடிக்குள் சிக்கி இருந்தது. மேலும் அதன் எதிரி ரஷ்யா மட்டுமல்ல. பிரிட்டன், பிரான்சை எதிர்த்தும் போரிட வேண்டி இருந்தது. இந்தக் கட்டத்தில் தான், எப்படியாவது சார் மன்னனின் ஆட்சி கவிழ்ந்தால் போதும், ரஷ்யாவுடனான யுத்தம் முடிந்து விடும் என்ற நிலைப்பாட்டிற்கு ஜெர்மனி வந்தது. 1915 ம் ஆண்டு, பார்வுஸ் என்ற ரஷ்ய வர்த்தகர் ஒருவர், ஜெர்மன் சக்கரவர்த்தியை சந்தித்துப் பேசினார். ரஷ்யாவில் சார் மன்னராட்சியை கவிழ்ப்பதற்கு, தன்னிடம் ஒரு திட்டம் இருப்பதாக கூறினார். அதற்குத் தேவையான ஆயுதங்கள், நிதியை வழங்கினால் போதும், மிச்சத்தை தான் பார்த்துக் கொள்வதாக கூறினார். 

அலெக்சாண்டர் ஹெல்ப்ஹான்ட் என்ற இயற்பெயர் கொண்ட பார்வுஸ், சட்டவிரோத ஆயுதக் கடத்தல்கள் மூலம் பிரபலமான வர்த்தகர் ஆவார். சார் மன்னருக்கு எதிரான கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆயுத விநியோகம் செய்து வந்தார். இவரது வீட்டில் இருந்த அச்சுக்கூடத்தில் தான், லெனின் எழுதிய நூல்கள், துண்டுப் பிரசுரங்கள் அச்சிடப் பட்டன. அதனால், லெனினுக்கும் பழக்கமானவர்.

லெனின் உட்பட பல சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள், பார்வுஸ் மீது நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கவில்லை. கடைசி வரைக்கும், பார்வுஸ் தனக்கு பழக்கமானவர் என்று லெனின் காட்டிக் கொள்ளவில்லை. பார்வுஸ் ஒரு சாதாரண வணிகர் மட்டுமல்ல, கள்ளக்கடத்தல்கள், டாம்பீகம், ஊதாரித்தனம், பெண் பித்து போன்ற கெட்ட பழக்கங்களையும் கொண்டிருந்தார். அவரைத் தெரிந்ததாக காட்டிக் கொண்டால், தங்களுக்கும் கெட்ட பெயர் வந்து விடும் என்று சோஷலிஸ்டுகள் அஞ்சினார்கள். 

என்ன இருந்தாலும், பார்வுஸ்ஸிடம் ஒரு நல்ல குணம் இருந்தது. அவர் முதலாளித்துவ நலன்களை பயன்படுத்தி செல்வந்தராக வாழ்ந்த ஒருவர் தான். ஆனாலும், அவருக்குள் ஒரு சோஷலிஸ்ட் இருந்தார். ஒரு பொருளாதாரப் பட்டதாரி. மார்க்சியத்தை ஆழ்ந்து கற்றவர். அவரது சொந்த வாழ்க்கைக்கும், அவரது அரசியல் சித்தாந்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இருக்கவில்லை. ஆனால், ரஷ்யாவின் எதிர்காலம் சோஷலிசப் புரட்சியில் தங்கியிருப்பதாக, உறுதியாக நம்பினார்.    

ரஷ்யாவில் சார் மன்னராட்சியை கவிழ்ப்பதற்கு, ஜெர்மனி ஆயுதங்களும், நிதியும் வழங்க காத்திருக்கிறது என்ற செய்தியுடன், பார்வுஸ் சுவிட்சர்லாந்துக்கு பயணமானார். பேர்ன் நகரில், லெனினை சந்தித்துப் பேசினார். ஆனால், அவரது திட்டத்திற்கு இணங்க லெனின் மறுத்து விட்டார். "பார்வுஸ் ஒரு ஜெர்மன் சோஷலிச- பேரினவாதி" என்று திட்டிய லெனின், கதவைத் திறந்து வெளியே அனுப்பி விட்டார். "கல்லடி பட்ட நாய் மாதிரி, பார்வுஸ் வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடியதாக..." பிற்காலத்தில் லெனின் அந்த சம்பவம் பற்றி விபரித்திருந்தார். 

ஜெர்மன் வெளிவிவகார அமைச்சின் இரகசிய ஆவணம் ஒன்றில், "பார்வுஸ் 20 மில்லியன் ரூபிள்கள் (இன்றைய பெறுமதி 25 மில்லியன் யூரோ) கேட்டிருந்ததாக..." எழுதப் பட்டுள்ளது. ஜெர்மன் அரசு வழங்கிய பணம், டென்மார்க்கின் தலைநகரம் கோபன்ஹெகன் ஊடாக ரஷ்யாவுக்கு சென்றுள்ளது. அன்றைய கோபன்ஹெகன் கள்ளக் கடத்தல்காரர்கள், பங்குச்சந்தை சூதாடிகள், ஆகியோரின் சொர்க்கமாக இருந்தது. ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யுத்தங்களை பயன்படுத்தி, சட்டவிரோத வியாபாரம் செய்து, கொள்ளை இலாபம் அடித்த வர்த்தகர்கள் எல்லோரும் அங்கே தான் பதுங்கி இருந்தார்கள். 

ஜெர்மன் அரசிடம் இருந்து நிதியுதவி பெற்ற பார்வுஸ், கோபன்ஹெகன் நகரை தளமாகப் பயன்படுத்திக் கொண்டார். ஏராளமான ஆயுதங்கள், வெடி குண்டுகளை ரஷ்யாவுக்கு கடத்திச் சென்றார். ரஷ்யாவில் தலைமறைவாக இருந்த சோஷலிசப் புரட்சியாளர்களுக்கு அவற்றை விநியோகம் செய்தார். உண்மையில், ஜெர்மனியின் நிதியுதவி, நேரடியாக லெனினின் ஆதரவாளர்களிடம் மட்டும் சென்றது என்று சொல்ல முடியாது. பல்வேறு போராளிக் குழுக்கள், அந்த உதவியைப் பயன்படுத்தி இருக்கலாம். அன்று ரஷ்யாவில் இருந்த எல்லா எதிர்ப்பியக்கங்களுக்கும், ஜெர்மன் சக்கரவர்த்தி நிதி வழங்கியுள்ளமை, ஆவணங்களில் இருந்து தெரிய வருகின்றது. அவற்றில் சில, லெனினின் போல்ஷெவிக் கட்சிக்கு எதிரான குழுக்கள் ஆகும். 

1917 ம் ஆண்டு, பெப்ரவரி மாதம் மீண்டும் ஒரு புரட்சி ஏற்பட்டது. இம்முறை சார் மன்னர், அதிகாரத்தை விட்டுக் கொடுக்க முன்வந்தார். மேற்கு ஐரோப்பாவில் இருப்பதைப் போன்ற, பாராளுமன்ற ஜனநாயக முறைக்கும், இடைக்கால அரசு அமைப்பதற்கும் ஒத்துக் கொண்டார். மென்ஷெவிக் போன்ற சமூக ஜனநாயகவாதிகளும், ரஷ்ய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடிந்தது. இந்தத் தருணத்தில், அவர்களுக்கும், லெனினின் போல்ஷெவிக் ஆதரவாளர்களுக்கும் இடையிலான முரண்பாடு விரிவடைந்தது. லெனின் இடைக்கால அரசாங்கத்தை ஆதரிக்கவில்லை. பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கு அறைகூவல் விடுத்தார். அதே நேரம், ஏகாதிபத்திய போர்களை நிறுத்தி, சமாதானம் நிலைநாட்டப் பட வேண்டும் என்றார். 

அன்று சார் மன்னரின் அதிகாரம் வெகுவாக குறைக்கப் பட்டிருந்தாலும், இடைக்கால அரசாங்கம், சக்கரவர்த்தி சாரின் ஏகாதிபத்திய போருக்கு ஆதரவாக இருந்தது. லெனின் தலைமையிலான குழுவினர், போருக்கு எதிராக இருந்ததைக் காரணமாகக் காட்டி, மக்கள் மத்தியில் அவர்களை தனிமைப் படுத்த எண்ணியது. போரை எதிர்த்த போல்ஷெவிக்குகள், தேசத் துரோகிகளாக சித்தரிக்கப் பட்டனர். லெனின் குழுவினருக்கு, ஜெர்மனியிடம் இருந்து நிதி கிடைப்பதாக பிரச்சாரம் செய்யப் பட்டது. அன்று, இடைக்கால அரசாங்கம் ஆரம்பித்து வைத்த, "ஜெர்மன் நிதி பற்றிய பிரச்சாரம்" இன்று வரையில் தொடர்கின்றது. "லெனினுக்கு ஜெர்மனி நிதி வழங்கியது" என இன்றைக்கும் பரப்பப்படும் தகவல்கள், பெரும்பாலும் அன்றைய இடைக்கால அரசின் பிரச்சாரத்தை ஆதாரமாக கொண்டுள்ளன. 

ஜெர்மன் நிதியுதவி பற்றி இடைக்கால அரசாங்கம் பிரச்சாரம் செய்து வந்த போதிலும், அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை. இதற்கிடையே, ரஷ்யா இன்னொரு புரட்சியை எதிர்நோக்கிக் காத்திருந்தது. அரசு மீது அதிருப்தியுற்ற மக்கள் பரவலாக கிளர்ச்சி செய்தனர். முதலாளிகள் மாதக் கணக்காக சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்த படியால், தொழிலாளர்கள் வீட்டு வாடகையை கூட கட்ட முடியாமல் கஷ்டப் பட்டனர். பல தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் நிர்வாகத்தை கைப்பற்றினார்கள். நாட்டுப்புறங்களில், விவசாயிகள் நிலங்களை தமது உடமையாக்கிக் கொண்டார்கள். இராணுவத்தினர், கடற்படை வீரர்கள் கூட கிளர்ச்சி செய்தனர். சில மாதங்களுக்கு முன்னர் கூட எண்ணிக்கையில் குறைவாக இருந்த போல்ஷெவிக் கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்தது.  

இந்தத் தருணத்தில், சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த லெனின் குழுவினர், தாயகம் திரும்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதற்கு ஜெர்மனியின் உதவி தேவைப் பட்டது. லெனின் குழுவினர் ரஷ்யாவின் ஆட்சியை கைப்பற்றினால், சமாதானம் ஏற்படும் என்று ஜெர்மன் அரசு நம்பியது. அதனால், லெனின் குழுவினரை ஒரு புகைவண்டியில் ஏற்றி அனுப்பி வைத்தது. ரயில் பயணத்திற்கான நிதியை, ஜெர்மன் அரசு வழங்கி இருந்தது. தங்களது கடவுச்சீட்டுகள், உடமைகளை சோதனையிடக் கூடாது என்று நிபந்தனை போட்ட பின்னர் தான், லெனின் அந்த ரயில் வண்டியில் செல்ல சம்மதித்தார். அந்த ரயில் வண்டியில், வேறெந்தப் பயணியும் அனுமதிக்கப் படவில்லை. போல்ஷெவிக் உறுப்பினர்களின் ரயில் பயணம் மிகவும் இரகசியமாக வைக்கப் பட்டிருந்தது. 

சுவிட்சர்லாந்தில் இருந்து ஜெர்மனி ஊடாக சென்று, பின்னர் கடல் தாண்டி, சுவீடன், பின்லாந்து வழியாக சென்ற ரயில், ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பெர்க் நகரை சென்றடைந்தது. லெனினை வரவேற்கவும், நேரில் பார்ப்பதற்குமாக, ஏராளமான மக்கள் ரயில் நிலையத்தில் ஒன்று கூடினார்கள். லெனின் சென் பீட்டர்பெர்க் நகருக்கு வந்து சேர்ந்த பின்னரும், நிம்மதியாக இருக்க முடியவில்லை. இடைக்கால அரசாங்கம் அவரைக் கைது செய்ய முயன்றது. அதனால், மீண்டும் தலைமறைவாகி பின்லாந்துக்கு சென்றார். இதற்கிடையே நவம்பர் 7 ம் தேதி, ஒக்டோபர் புரட்சி வெடித்தது. ஆயுதபாணிகளான போல்ஷெவிக் தொழிலாளர்கள், கடற்படை வீரர்கள், அரசு அலுவலகங்களை கைப்பற்றினார்கள். ரஷ்யாவின் புதிய தலைவராக லெனின் தேர்ந்தெடுக்கப் பட்டார். 

இப்போது ஒரு சோதனைக் காலம் தொடங்கியது. ஜெர்மனியுடன் சமாதான ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. உள்நாட்டுப் போரைக் காரணமாகக் காட்டி, லெனின் ஒரு வருடம் பின் போட்டார். ஆனால், புதிய சோவியத் ஒன்றியம் ஏகாதிபத்திய போரில் இருந்து விலகிக் கொள்ளும் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவில்லை. 3-3-1918 அன்று, ஜெர்மனிக்கும், ரஷ்யாவுக்கும் இடையில், பிரெஸ்ட்- லித்தொவ்ஸ்க் (Brest - Litovsk)  சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது. அதன் படி, ரஷ்யா முதலாம் உலகப் போரில் இருந்து உத்தியோகபூர்வமாக விலத்திக் கொண்டது.  

பிரெஸ்ட்- லித்தொவ்ஸ்க் ஒப்பந்தம் போடுவதற்கு முன்னர், புதிய சோவியத் அரசாங்கத்திற்கு, ஜெர்மன் அரசு மில்லியன் கணக்கான ரூபிள்களை நிதியாக வழங்கி இருந்தது. அந்தப் பணம் உண்மையில் ஒரு நஷ்டஈடாகத் தான் வழங்கப் பட்டது. ஏனெனில், அந்த ஒப்பந்தத்தினால், சோவியத் அரசு இழந்தது அதிகம். இன்றைய உக்ரைனின் மேற்குப் பகுதி பறிபோனது. எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா போன்ற பால்ட்டிக் நாடுகள், ஜெர்மனியின் பகுதிகளாகின. 

அன்று, சோவியத் யூனியன், வெறும் நிலப் பகுதிகளை மட்டும் பறிகொடுக்கவில்லை. நிலத்தோடு சேர்த்து, கோடிக்கணக்கான பெறுமதியான தொழிலகங்களும் பறி போயின. சமாதான ஒப்பந்தம் போட்டிருக்கா விட்டால், மீண்டும் ஜெர்மனியுடன் போர் வெடித்திருக்கும். ஜெர்மனியை எதிர்த்து நிற்கும் அளவிற்கு, சோவியத் அரசிடம் பலமில்லை, என்ற நிலைப்பாட்டில் தான் அந்த ஒப்பந்தம் போடப் பட்டது. லெனினின் புரட்சிக்கு ஜெர்மனி நிதி வழங்கியது என்று குற்றம் சாட்டுவோர், அதனால் லெனின் இழந்தது எவ்வளவு என்பது பற்றிப் பேசுவதில்லை. 

எதற்காக ஒரு முதலாளித்துவ நாடான ஜெர்மனி, தனது சித்தாந்த எதிரிகளுக்கு உதவி செய்ய வேண்டும்? அதனை ஒரு சித்தாந்தப் பிரச்சினையாக, அன்றைய ஜெர்மன் அரசு கருதவில்லை. உலகில் எந்த நாட்டிலும், ஒரு சோஷலிசப் புரட்சி சாத்தியம் என்று அது நம்பவில்லை. இன்றைய உலகில், சோஷலிசம், கம்யூனிசம், புரட்சி பற்றிப் பேசுவோரை மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? "இதெல்லாம் நடைமுறைச் சாத்தியமற்ற கொள்கைகள்." என்று சொல்வார்கள். அவற்றை நம்புவோரை பைத்தியக்காரர்கள் போன்று பார்ப்பார்கள். உலகில் எந்தவொரு அரசாங்கமும், அவர்களை தனது இருப்புக்கு ஆபத்தானவர்களாக கருதுவதில்லை. 

இப்போது, ரஷ்யப் புரட்சிக்கு முந்திய உலகத்தை மனக்கண்ணில் கொண்டு வாருங்கள். உலகில் எங்குமே சோஷலிசப் புரட்சி ஏற்பட்ட வரலாற்றைக் கண்டிராத காலகட்டத்தில், யாராவது லெனின் போன்றவர்களை பொருட்படுத்தி இருப்பார்களா? சோவியத் யூனியன் உருவாகி பத்து வருடங்கள் ஆகியும், அங்கே சோஷலிசப் பொருளாதாரம் கொண்டு வரப் படவில்லை. "புதிய பொருளாதாரத் திட்டம்" (NEP) என்ற பெயரில், பெருமளவு முதலாளித்துவ பொருளாதார அமைப்பு தொடர்ந்திருந்தது. 

உலக வரலாற்றில் பல தடவைகள் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. லெனின், ஜெர்மனியிடம் இருந்து நிதி பெற்று புரட்சி செய்ததாக குற்றம் சாட்டுவோரில் சிலர், புலிகளை ஆதரிக்கும் தமிழ் தேசியவாதிகள் ஆவர். ஈழப் போராட்டத்தின் தொடக்கத்தில், புலிகளுக்கு இந்தியா நிதி வழங்கியதை, அவர்கள் வசதியாக மறந்து விடுகின்றனர்.

ஈழப் போராட்டத்தின் ஆரம்பத்தில், இந்திய அரசு புலிகளுக்கு ஆயுதம், நிதி, பயிற்சி வழங்கியது தெரிந்ததே. இந்திய- இலங்கை ஒப்பந்தம் கைச் சாத்திடப் பட்ட பின்னரும், இந்திய மத்திய அரசு, கோடிக் கணக்கான ரூபாய்களை புலிகள் அமைப்பிற்கு கொடுத்திருந்தது. 2002 ம் ஆண்டு, ரணில் - பிரபா ஒப்பந்தம் மூலம் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்த காலத்திலும், ஜப்பான், நோர்வே ஆகிய மேற்குலக நாடுகள், புலிகளுக்கு பெருமளவு நிதி வழங்கி இருந்தன. 

கியூபப் புரட்சிக்கு முன்னரும், அதற்குப் பிறகு சில வருடங்களும், அமெரிக்கா காஸ்ட்ரோ குழுவினருக்கு உதவி வழங்கிக் கொண்டிருந்தது. சேகுவேரா என்ற ஆர்ஜெந்தீன கம்யூனிஸ்ட் காஸ்ட்ரோ குழுவில் இருந்த விடயம், அமெரிக்காவுக்கும் தெரியும். ஆனால், கியூபாவில் சோஷலிசப் புரட்சி ஏற்படுவது, ஒரு  நடைமுறைச் சாத்தியமான விடயம் என்று அமெரிக்கா நம்பவில்லை. காஸ்ட்ரோவின் இயக்கமும், அன்று எந்த சந்தர்ப்பத்திலும் கம்யூனிசம் பேசவில்லை. 

அநேகமாக, காஸ்ரோ- சேகுவேரா குழுவினர், கியூபாவில் ஒரு ஜனநாயக- முதலாளித்துவ ஆட்சியை கொண்டு வருவார்கள், என்று தான் அமெரிக்கா நம்பியது. காஸ்ரோ குழுவினரும், தாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை. அமெரிக்க நிறுவனங்களை தேசியமயப் படுத்திய பின்னர் தான், பிரச்சினை தொடங்கியது. அத்துடன் அமெரிக்காவுடனான தொடர்பு முற்றாகத் துண்டிக்கப் பட்டது. கியூபா சோஷலிசப் பொருளாதாரத்தை முழு வீச்சுடன் நடைமுறைப் படுத்தியது. 

ரஷ்ய போல்ஷெவிக் கட்சியினருக்கு, ஜெர்மனி வழங்கிய நிதி உள்நோக்கம் கொண்டது என்பதில் ஐயமில்லை. பிரெஸ்ட்- லித்தொவ்ஸ்க் கைச் சாத்திடப் பட்ட பொழுது, ஜெர்மனியின் நோக்கம் பகிரங்கமாக தெரிய வந்தது. ஆயினும், பிற்காலத்தில் ஸ்டாலின் ஆட்சியில், நாஸி ஜேர்மனியோடு நடந்த போரில், சோவியத் யூனியன் இழந்த பகுதிகள் யாவும் திரும்பப் பெறப் பட்டன. பால்ட்டிக் நாடுகள், உக்ரைனின் மேற்குப் பகுதி, பெலாரஸ் மேற்குப் பகுதி என்பன ஜெர்மனியிடம் இருந்து கைப்பற்றப் பட்டன. 

உண்மையில், இரண்டாம் உலகப்போரின் முடிவில், சோவியத் ஒன்றியம் இழந்ததை விட அதிகமாகவே எடுத்துக் கொண்டது. முன்னாள் புருஷிய சாம்ராஜ்யத்தின் பாரம்பரிய பிரதேசமான, கேனிக்ஸ்பேர்க் (Königsberg, இன்று: காலினின் கிராட்) பகுதியும், சோவியத் வசமானது. அங்கு வாழ்ந்த ஜெர்மன் மொழி பேசும் மக்கள் அனைவரும், இன்றைய ஜெர்மனிக்கு இடம்பெயர்ந்து சென்று விட்டனர். அந்த மாநிலம், இன்று முழுக்க முழுக்க ரஷ்ய மயமாகி உள்ளது. ஜெர்மனியைப் பொறுத்தவரையில், இது போன்ற தோல்விகளை ஜீரணிக்கும் நிலையில் இல்லை. ஜெர்மன் பேரினவாதிகள், இழந்த சொர்க்கத்தை நினைத்து இன்றைக்கும் ஏங்குகின்றனர். 


இதனுடன் தொடர்புடைய வேறு பதிவுகள்:

Sunday, April 06, 2014

நெதர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரிய ஜெர்மன் கம்யூனிச அகதிகள்


ஜெர்மனியின் எல்லையோரம் அமைந்துள்ள, நெதர்லாந்து நாட்டின் வட மாகாணமான குரோனிங்கன், கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக திகழ்ந்தது. நெதர்லாந்து நாஸிகளினால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்த காலத்தில், முதன்முதலாக நாஸி எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்கள் கம்யூனிஸ்டுகள் தான். முதன்முதலாக, யூதர்களின் உரிமை மறுப்புக்கு எதிராக, அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு எதிராக போராடியவர்களும், கம்யூனிஸ்டுகள் தான். அதற்காக அவர்கள் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டி இருந்தது. பல நூறு டச்சுக் கம்யூனிஸ்டுகள், யூதர்களைப் போன்று தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப் பட்டனர். பலர் அங்கிருந்து உயிருடன் திரும்பி வரவில்லை.

இந்த தகவல்கள் எல்லாம், இதனை வாசிக்கும் உங்களுக்கு புதிதாக இருப்பதைப் போன்று தான், பெரும்பான்மையான நெதர்லாந்து பிரஜைகளுக்கும் இந்த உண்மைகள் தெரியாது. எழுபதாண்டு காலமாக, இருட்டடிப்பு செய்யப்பட்ட கம்யூனிஸ்டுகளின் நாசிஸ எதிர்ப்பு போராட்டம் பற்றிய தகவல்களை தாங்கிய நூல் ஒன்று இந்த வாரம் வெளியாகியுள்ளது. நூல் பற்றிய விமர்சனங்கள், நெதர்லாந்து வானொலி, தொலைக்காட்சிகளில் இடம்பெற்று வருகின்றன.

"Het communistische verzet in Groningen" (குரோனிங்கனில் நடந்த கம்யூனிச கிளர்ச்சி) என்ற தலைப்பிலான நூல், இரண்டாம் உலகப்போர் காலத்தில் நாஸி ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து போராடிய கம்யூனிஸ்டுகள் பற்றிய விபரங்களை பதிவு செய்துள்ளது. போராட்டத்தில் பங்கெடுத்த பலரின் பேட்டிகள், ஆவணங்கள் அதில் தொகுக்கப் பட்டுள்ளன. நெதர்லாந்தில் கடந்த பல தசாப்த காலமாக ஜனநாயக ஆட்சி நடந்த போதிலும், யாராலும் இப்படி ஒரு ஆய்வு நூலை எழுத முடியவில்லை. ஒரு நூல் கூட எழுத முடியவில்லை என்றால், கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான நெதர்லாந்து ஜனநாயக அரசின் அடக்குமுறை, எந்தளவு நுணுக்கமாகவும், அழுத்தமாகவும் இருந்திருக்கும் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள முடியும்.

1933 ம் ஆண்டு, அயல் நாடான ஜெர்மனியில் நாஸிகள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார்கள். ஆட்சிக்கு வந்தவுடன், நாஸி அரசாங்கம் செய்த முதல் வேலை, ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (KPD) யை தடை செய்தது தான். அதனால், பல்லாயிரக் கணக்கான ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், எல்லை தாண்டி நெதர்லாந்திற்குள் நுழைந்து, அகதியாக அரசியல் தஞ்சம் கோரினார்கள். நெதர்லாந்து அரசு, அந்த அகதிகள் கம்யூனிஸ்டுகள் என்ற ஒரே காரணத்திற்காக, அவர்களை வரவேற்கவில்லை. அதற்கு மாறாக, வேண்டாத விருந்தாளிகளாக புறக்கணித்தது. "தேசப் பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிக்கக் கூடிய, ஆபத்தான பேர்வழிகளுக்கு, எமது நாட்டிற்குள் புகலிடம் அளிக்க முடியாது..." என்று நெதர்லாந்து அரசு வெளிப்படையாகவே அறிவித்தது.

நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி (CPN)யும், அதனோடு சேர்ந்த தொழிற்சங்கமும் இணைந்து, Roode Hulp (செம் உதவி)என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தன. அதன் பெயரில் டச்சு மக்களிடம் நிதி திரட்டி, ஜெர்மன் கம்யூனிச அகதிகளுக்கு உதவியது. அந்த உதவி சில வருடங்களே நீடித்தது. 1941 ம் ஆண்டு, நாஸி இராணுவம் நெதர்லாந்து மீது படையெடுத்து ஆக்கிரமித்தது. அதனால், டச்சு கம்யூனிஸ்டுகளும் நாஸி அடக்குமுறைக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது. டச்சு கம்யூனிஸ்டுகளின் முதலாவது எதிர்ப்பு நடவடிக்கையாக, ஒரு சட்டவிரோத பத்திரிகையை அச்சடித்து வெளியிட்டனர். "Noorderlicht" (வடக்கத்திய வெளிச்சம்) என்ற நாஸி எதிர்ப்பு பத்திரிகை, பொது மக்கள் மத்தியில் விரும்பி வாசிக்கப் பட்டது.

1941 ம் ஆண்டு, நாஜி ஆக்கிரமிப்புப் படையினர், ஆம்ஸ்டர்டாம் நகரை சுற்றி வளைத்து தேடி, நானூறு யூதர்களை கைது செய்து கொண்டு சென்றனர். யூதர்கள் கைது செய்யப் பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக, நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி பொது வேலை நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் அறைகூவலை ஏற்று, பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அன்று நடந்த வேலை நிறுத்தம், ஒவ்வொரு வருடமும் நினைவுகூரப் படுகின்றது.

1941 பெப்ரவரி வேலை நிறுத்தத்தின் நினைவாக கட்டப்பட்ட தொழிலாளியின் சிலை.
வேலைநிறுத்தப் போராட்டத்தினால், நாஜிகளின் யூத எதிர்ப்பு நடவடிக்கையை தடுக்க முடியா விட்டாலும், உழைக்கும் வர்க்க ஒற்றுமைக்கு சான்றாக விளங்கியது. நெதர்லாந்தை நாஜிகள் ஆக்கிரமித்த காலகட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப் பட்டிருந்தது. கட்சி தலைமறைவாக இயங்கிய போதிலும், பெருமளவு மக்கள் ஆதரவு இருந்ததால், நாஜி ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தது. தொழிற்சங்க நடவடிக்கை மட்டுமல்ல, ஆயுதப் போராட்டமும் கம்யூனிஸ்டுகளின் வழிநடத்தலின் கீழ் நடந்தது.

இரண்டாம் உலகப்போரில் நாஸி ஜெர்மனி தோற்கடிக்கப் பட்டாலும், சில வருடங்களுக்குப் பின்னர், பனிப்போர் ஆரம்பமாகியது. முன்பு ஜெர்மனியர்கள் மேலிருந்த வெறுப்பு, பின்னர் ரஷ்யர்களுக்கு எதிராக திரும்பியது. "(சோவியத்)ரஷ்யர்கள் படையெடுப்பார்கள்..." என்று நெதர்லாந்து அரசு, அடிக்கடி மக்களை பயமுறுத்திக் கொண்டிருந்தது. உள்நாட்டில் கம்யூனிஸ்டுகளை எதிரிகளாக காட்டியது. 

இரண்டாம் உலகப்போர் காலத்தில், நாஸி ஆட்சியில் பல்வேறு இன்னல்களை அனுபவித்த டச்சுக் கம்யூனிஸ்டுகள், ஜனநாயக ஆட்சியிலும் ஒடுக்கப் பட்டனர். நெதர்லாந்தின் புதிய ஜனநாயக ஆட்சியாளர்கள், கம்யூனிஸ்டுகளின் உயிரை வாங்கவில்லை. ஆனால், அவர்களை ஏறக்குறைய நடைப்பிணம் ஆக்கினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்ல, அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தொழில் வாய்ப்புக் கிடைப்பது கஷ்டமாக இருந்தது. பலருக்கு அரசின் சமூகநல கொடுப்பனவுகள் கூட மறுக்கப் பட்டன.



நெதர்லாந்து கம்யூனிஸ்டுகளின் போராட்டம் பற்றிய தகவல்கள் அடங்கிய Het communistische verzet in Groningen நூலை வாங்குவதற்கு: 

கம்யூனிஸ்டுகளின் போராட்டத்தை அங்கீகரிப்பது பற்றி, உள்ளூர் தொலைக்காட்சி தயாரித்தளித்த நிகழ்ச்சி: 

Friday, April 04, 2014

இனப் படுகொலை விசாரணை: தோற்றவர்களுக்கு எதிரான வென்றவர்களின் நீதி!


இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றங்கள் பல இயங்கி வந்துள்ளன. வரலாறு எப்போதும் வென்றவர்களால் எழுதப்படுகின்றது என்று சொல்வார்கள். அதே மாதிரி, இனப்படுகொலை, போர்க்குற்ற விசாரணைகளும் வென்றவர்களால் மட்டுமே நடத்தப் படுகின்றன. எங்கேயும், எப்போதும், தோற்றவர்கள் மட்டுமே குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தண்டிக்கப் பட்டுள்ளனர். வென்றவர்கள் நீதிபதி ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு தீர்ப்புக் கூறி உள்ளனர். 

உள்நாட்டுப் போர்களில் வென்ற பிரிவினர், போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் சம்பந்தமாக எந்தவிதமான தண்டனையையும் அனுபவிப்பதில்லை. உலகம் முழுவதும் இதுவே பொதுவான நடைமுறையாக இருந்து வந்துள்ளது. பத்து வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும், நீதியானது அல்ல. கம்போடியா, ருவாண்டா, சியாரா லியோன், யூகோஸ்லேவியா ஆகிய நாடுகளில் நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களை விசாரித்த சிறப்பு நீதிமன்றங்கள், வென்றவர்களுக்கு சாதகமாகவே நடந்து கொண்டுள்ளன. 

இந்த உண்மையை, சர்வதேச போர்க்குற்ற நீதிமன்ற வழக்குகளில் பங்கெடுத்த Geert Jan Knoops என்ற வழக்கறிஞர் ஒரு புத்தகமாக எழுதி இருக்கிறார். சர்வதேச நீதிமன்றத்தின் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் அந்த நூலில் எழுதப்பட்டுள்ள தகவல்கள், தமிழர்களுக்கும் பிரயோசனப் படும். அந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.

இலங்கையில் நடந்த ஈழப்போரின் இறுதியில் இனப்படுகொலை நடந்துள்ளது என்றும், அதனை சர்வதேச சமூகம் விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்கும் என்றும் பல தமிழர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, மேற்கத்திய ஆதரவு வலதுசாரித் தமிழ் தேசியவாதிகள் அதனை ஒரு அரசியல் பிரச்சாரமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். போர்க்குற்றங்கள் என்ற சொற்பதத்தை பாவிப்பதைக் கூட அவர்கள் விரும்புவதில்லை.

"இனப்படுகொலை விசாரணை நடத்து!" என்று, உலகத் தமிழர்கள் எல்லோரும் ஒன்றாக ஒரே குரலில் உரத்துச் சொன்னால் போதும். சர்வதேச சமூகம் செவி கொடுக்கும். யூகோஸ்லேவியா, ருவாண்டா, சியரா லியோன் ஆகிய நாடுகளில் நடந்த இனப்படுகொலைகளை விசாரிப்பதற்காக, விசேட சர்வதேச நீதிமன்றங்கள் அமைக்கப் பட்டன. அதே மாதிரி, இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளை விசாரிப்பதற்கும், எதிர்காலத்தில் ஒரு சர்வதேச நீதிமன்றம் அமைக்கப் படும் என்று உறுதியாக நம்புகின்றனர். இவ்வாறு நம்புவோர் மத்தியில், மெத்தப் படித்த அறிவுஜீவிகளும், சட்டத் துறை நிபுணர்களும் அடங்குவார்கள்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான நவீன உலகம், முன்னரை விட நாகரிகமடைந்து விட்டதாகவும், மேற்கத்திய நாடுகள் மனித உரிமைகளை பாதுகாப்பதில் குறிப்பிடத் தக்க வெற்றி பெற்றுள்ளதாகவும் பலர் நம்புகின்றனர். ஆனால், உண்மை நிலைமையோ, அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக உள்ளது. அண்மைக் கால உலக வரலாற்றில், சிறிதும் பெரிதுமாக முப்பதுக்கும் மேற்பட்ட போர்கள் நடந்துள்ளன, சில இப்போதும் தொடர்கின்றன.

யுத்தத்தில் ஈடுபடும் அரச படைகளோ, அல்லது ஆயுதக் குழுக்களோ மனித உரிமைகளை மதிப்பதில்லை. உலகில் எந்தவொரு இராணுவமும், ஆயுதக் குழுவும் ஐ.நா. போர் விதிகளை மதித்து யுத்தம் செய்ததாக சரித்திரமே கிடையாது. ஆகவே, ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச நீதிமன்றம், சர்வதேச சட்டங்கள் இவற்றை சரியாக நடைமுறை படுத்தி விட்டால் போதும், உலகம் முழுவதும் பாதுகாப்பானதாக மாறிவிடும் என்று நம்புவதற்கு இடமில்லை. இன்றைய உலகில், அது ஒரு கற்பனாவாதமாகவே இருக்கும்.

உலகில் சர்வதேச சட்டம் என்ற ஒன்று இருக்கிறதா? அதாவது ஒரு நாட்டிற்குள் எல்லா இடங்களிலும் செல்லுபடியாகும் சட்டம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். அதே மாதிரி, உலகம் முழுவதும் எல்லா நாடுகளையும் கட்டுப்படுத்தும் பொதுவான சட்டம் இருக்கிறதா? சட்ட வல்லுனர்கள் மத்தியில் அது தொடர்பாக மிகுந்த குழப்பம் நிலவுகின்றது. ஏனென்றால், புரிந்துணர்வின் அடிப்படையில் நாடுகள் தமக்குள் சில உடன்படிக்கைகளை செய்துள்ளன. பெரும்பாலான தருணங்களில், அதையே நாம் சர்வதேச சட்டம் என்று புரிந்து கொள்கிறோம்.

சூடான் நாட்டு ஜனாதிபதி பஷீர், டாபூர் இனப்படுகொலை குற்றச்சாட்டில் தேடப்படுகிறார் என்று, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்தது. அந்த உத்தரவானது, ஆரம்பித்த நாளில் இருந்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் குறிப்பிடத் தக்க சாதனையாக கருதப் பட்டது. ஆனால், அதில் ஏற்பட்ட சிக்கல்களை பலர் அவதானிக்கவில்லை.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கான ஒப்பந்தத்தில் சூடான் கைச்சாத்திடவில்லை. அந்த வகையில், பஷீரை கைது செய்ய வேண்டுமென்றால், ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஒத்துழைப்பு அவசியம். இதிலே வேடிக்கை என்னவென்றால், ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும், மூன்று வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா கூட, அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை.

பஷீருக்கு எதிரான பிடிவிறாந்து அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக கொடுக்கப் பட்டது என்பது இரகசியம் அல்ல. இந்த விடயத்தில் அமெரிக்காவின் அரசியல் இலாபம் இருப்பதை உணர்ந்து கொண்ட ஆப்பிரிக்க ஒன்றிய நாடுகள் ஒத்துழைக்க மறுத்தன. ஏற்கனவே, சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றங்கள், ஆப்பிரிக்கர்களை மட்டுமே தண்டிப்பதில் குறியாக இருப்பதாக பலத்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால், பஷீரை கைது செய்யும் பொறுப்பை, சூடான் அரசிடம் ஒப்படைக்குமாறு, ஆப்பிரிக்க ஒன்றியம் சர்வதேச நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது.

இதற்கிடையே, அமெரிக்காவின் "பஷீர் எதிர்ப்புக் கொள்கை" ஒரு முடிவுக்கு வந்தது. அதாவது, எண்ணை வளம் நிறைந்த தெற்கு சூடானை பிரிப்பதே, அமெரிக்காவின் நோக்கமாக இருந்துள்ளது. டாபூர் இனப்படுகொலை விவகாரம், பஷீருக்கு அழுத்தம் கொடுக்கவே பயன்பட்டது. தற்போது, தெற்கு சூடான் தனி நாடாகி விட்டதால், பஷீரை கைது செய்வதற்கான பிடிவிறாந்து கிடப்பில் போடப் பட்டு விட்டது.

இனப்படுகொலைகளை விசாரிக்கும் சர்வதேச விசேட நீதிமன்றங்கள், மேற்கத்திய நாடுகளின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே நிறுவப் படுகின்றன. அதனால், நீதிமன்றங்கள் அரசியல் மன்றங்களாகி விடுகின்றன. அங்கே நீதிக்குப் பதிலாக, அரசியல் கருத்துக்களே தீர்ப்புக்களாக கூறப் படுகின்றன. போர்க்குற்ற, இனப்படுகொலை விசாரணை நீதிமன்றம் ஒவ்வொன்றையும் விரிவாக ஆராய்ந்தால், இந்த உண்மை புலப்படும். 

கம்போடியாவில் நடந்த இனப்படுகொலையை விசாரிப்பதற்கு, கம்போடிய விசேட நீதிமன்றம் அமைக்கப் பட்டது. 15000 பேர் கொன்று குவிக்கப் பட்ட, சித்திரவதைக் கூடம் ஒன்றிற்கு பொறுப்பாக இருந்த ஒருவருக்கு, இருபது வருட தண்டனை வழங்கப் பட்டது. பலியானவர்களின் குடும்பத்தினர் திருப்தியடையா விட்டாலும், அது அன்று பெரிதாக சிலாகித்துப் பேசப் பட்டது. ஆனால், பல முக்கிய புள்ளிகள் தண்டனையில் இருந்து தப்பி விட்டனர்.

கம்போடியாவில் நடந்த இனப்படுகொலைக்கு, இறுதியில் நீதி வழங்கப் பட்டு விட்டது என்று பலர் கூறலாம். ஆனால், இதிலே ஒரு முக்கியமான விடயத்தை கவனிக்கத் தவறி விடுகிறோம். கம்போடியாவில் நடந்த உள்நாட்டுப் போரில் தோல்வியடைந்த பொல்பொட் ஆதரவு கமர் ரூஜ் இயக்கத்தவர் மட்டுமே தண்டிக்கப் பட்டனர். அவர்களுடன் கூடவிருந்த, இனப்படுகொலையில் பங்கெடுத்த ஒரு பிரிவினர், இன்றைய கம்போடிய அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகளில் உள்ளனர். அந்தப் பிரிவினரை, சிலர் எதிரிக்கு காட்டிக் கொடுத்த துரோகக் கும்பல் என்று தூற்றலாம். ஆனால், சர்வதேச சமூகம் அத்தகைய துரோகக் கும்பல்களுடன் ஒத்துழைப்பதில் திருப்தி அடைகின்றது.

கமர் ரூஜில் இருந்து பிரிந்து சென்ற ஹூன் சென் தலைமையிலான குழுவினர், வியட்நாம் படைகளுடன் சேர்ந்து ஆட்சியை கைப்பற்றினார்கள். அவர்களின் ஆட்சியதிகாரம் இன்று வரை நிலைத்திருக்கிறது. ஒரு நாள், தங்களையும் இனப்படுகொலை குற்றச்சாட்டில் தண்டிப்பார்கள் என்று, கம்போடியாவின் இன்றைய ஆட்சியாளர்கள் அஞ்சுவார்களா? அதற்கான சாத்தியமே கிடையாது. ஏனென்றால், இன்றைய ஆட்சியாளர்கள் தான் கம்போடிய சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கு துணை நின்றுள்ளனர். அதாவது, இது தோற்றவர்களுக்கு எதிரான வென்றவர்களின் நீதி.

சியாரா லியோன் போர்க்குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், லிபியாவின் ஆதரவைப் பெற்ற சாங்கோவின் படையினரை மட்டுமே தண்டித்தது. ஏனென்றால் அவர்கள் தான் சியாரா லியோன் போரில் தோல்வி அடைந்தவர்கள். அவர்களுக்கு உதவியாக இருந்த அயல் நாட்டு லைபீரியாவின் ஜனாதிபதியாக இருந்த சார்ல்ஸ் டெயிலர் பதவியில் இருந்து அகற்றப் பட்டார். பின்னர் சர்வதேச நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப் பட்டார்.

சியாரா லியோன் போர்க்குற்ற விசாரணையின் முடிவில், டெயிலர் இறுதி வாக்குமூலம் கொடுக்கும் நேரம், நீதிபதிகள் அதை பதிவு செய்ய மறுத்தனர். அதற்கு காரணம், விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதரகத்தின் இரகசிய ஆவணங்களை, டெயிலர் தனது வாக்குமூலத்தில் மேற்கோள் காட்டி இருந்தார். "டெயிலர் விடுதலை செய்யப் பட்டால், புதியதொரு போர் வெடிக்கும்" என்று அமெரிக்க தூதரகம் எச்சரித்திருந்தது. விசாரணை முழுமையடையாமலே, நீதிபதிகள் தனக்கு எதிரான குற்றப்பத்திரிகை வாசிப்பதைக் கண்ட டெயிலர் வெளிநடப்புச் செய்தார்.  

ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலை உலகம் முழுவதையும் உலுக்கியது. அந்த நாட்டில் இனப்படுகொலை தொடங்குவதற்கு முன்பே, அங்கே ஒரு ஐ.நா. சமாதானப் படை நிலை கொண்டிருந்தது. "இன்னும் இரண்டாயிரம் போர்வீரர்களை உடனடியாக அனுப்பினால், பேரழிவு ஏற்படுவதில் இருந்து தடுத்து நிறுத்த முடியும்" என்று, சமாதானப் படை தளபதி Romeo Dallaire கேட்டிருந்தார். ஐ.நா. தலைமையகம் அதற்கு எந்தப் பதிலும் கூறவில்லை. மேலதிக நிதி கொடுப்பதற்கு அமெரிக்கா மறுத்து விட்டது. அதனால், ஏற்கனவே ருவாண்டாவில் இருந்த அமைதிப் படையினரின் எண்ணிக்கை குறைக்கப் பட்டது. அதற்குப் பிறகு தான், அந்த நாட்டில் பல இலட்சம் மக்கள் இனப்படுகொலைக்கு பலியானார்கள்.

2004 ம் ஆண்டு, அன்றைய ஐ.நா. செயலதிபர் கோபி அனன், ருவாண்டாவில் நடந்த தவறுக்காக வருத்தம் தெரிவித்தார். இனிமேல், "அது போன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வதாக" கூறினார். "உலகில் எந்த நாட்டில் இனப்படுகொலை நடந்தாலும், ஐ.நா. அங்கே உடனடியாக தலையிடும்" என்று உறுதி மொழி அளித்தார். "குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு", என்றொரு தமிழ்ப் பழமொழி உண்டு. 2009 ம் ஆண்டு, ஈழத்தில் இனப்படுகொலை நடந்த நேரம், ஐ.நா.வின் உறுதிமொழி காற்றோடு பறக்க விடப் பட்டது. 

"எது எப்படி இருந்தாலும், ருவாண்டா இனப்படுகொலை விடயத்தில், இறுதியில் நீதி நிலைநாட்டப் பட்டு விட்டது தானே?" என்று சிலர் கேட்கலாம். அதுவும்,  தோற்றவர்களை தண்டிக்கும், வென்றவர்களின் நீதி தான். ருவாண்டாவில் முன்பிருந்த ஹூட்டு இனத்தவரின் அரசை தூக்கியெறிந்து  விட்டு, அந்த இடத்தில் துட்சி இனத்தவரின் அரசு அமைந்துள்ளது. அங்கு நடந்த உள்நாட்டுப் போரில், முன்பு ஆட்சியதிகாரத்தை வைத்திருந்த ஹூட்டு இராணுவம் தோல்வியடைந்தது. துட்சிகளின் கிளர்ச்சிப் படை வென்றது.

ருவாண்டா இனப்படுகொலையினை விசாரிக்கும், சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டவர்களில் பெரும்பாலானோர், போரில் தோற்ற ஹூட்டு இனத்தை சேர்ந்த குற்றவாளிகள் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய துட்சி இன குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப் பட்டனர். (அவர்களும் முக்கியமான புள்ளிகள் அல்ல.) அது ஒரு சர்வதேச நீதிமன்றத்தின் நடுநிலைமை நாடகம். கடந்த இருபதாண்டுகளாக ஆட்சியில் அமர்ந்திருக்கும், துட்சி அரசு அமெரிக்காவின் செல்லப் பிள்ளை. இன்றைய ருவாண்டா அரசாங்கத்தில் பதவி வகிக்கும் சிலர், ருவாண்டா ஜனாதிபதி போல் ககாமே உட்பட, நடந்த போரில் இனப்படுகொலை தொடர்பான குற்றங்களை புரிந்திருந்தாலும், அவர்கள் யாரும் தண்டிக்கப் படவில்லை. இனிமேலும் தண்டிக்கப் படுவார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை.

"யூகோஸ்லேவியா நீதிமன்றம் வித்தியாசமானது, அது போரில் வென்றவர்களை தானே தண்டித்தது?" என்று யாராவது வாதாடலாம். யூகோஸ்லேவிய குடியரசுகளில் நடந்த போர்களில், ஆரம்பம் முதலே அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் தலையிட்டு வந்தன. அனைத்துப் போர்களிலும் செர்பிய பெரும்பான்மை இனம் வென்று கொண்டிருந்ததாக, மேற்கத்திய ஊடகங்கள் எம்மை நம்ப வைத்தன. ஒரு கட்டம் வரையில் மட்டுமே அந்தக் கருதுகோள் சரியாகும்.

இறுதியாக நடந்த கொசோவோ போரிலும், நேட்டோ படைகள் விமானக் குண்டுகள் போட்டு தான் போரை முடித்து வைத்தன.  நேட்டோ நாடுகள் தான், செர்பியரின் மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தன. சேர்பியப் படைகள் கொசோவோவை விட்டு பின்வாங்கிச் சென்றன. நேட்டோ படைகளும், அல்பேனிய கிளர்ச்சிக் குழுவும், வெற்றி வீரர்களாக கொசோவோவுக்குள் பிரவேசித்தனர். 

ஆகவே, யூகோஸ்லேவியப் போர்கள் அனைத்திலும் தோற்றவர்கள்: செர்பியர்கள். வென்றவர்கள்: மேற்கத்திய நேட்டோ நாடுகள். போரில் வென்ற நேட்டோ நாடுகள் தான், யூகோஸ்லேவியாவுக்கான சர்வதேச நீதிமன்றத்தை உருவாக்கினார்கள். அவர்களே அதற்கு நிதி வழங்கினார்கள். அந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, தண்டிக்கப் பட்டவர்கள் எல்லோரும் செர்பிய குற்றவாளிகள் தான். கண்துடைப்புக்காக, விரல் விட்டு எண்ணக் கூடிய குரோவாசிய குற்றவாளிகளும் தண்டிக்கப் பட்டனர். யூகோஸ்லேவியாவுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைகள் அரசியல் முலாம் பூசப் பட்டிருந்தன. வேண்டுமென்றே ஊடகங்களின் கவனத்தை கவரும் வகையில் வழக்குகள் நடத்தப் பட்டன.

யூகோஸ்லேவியாவுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றது. அரசதரப்பு சட்டத்தரணிகள் சாட்சிகளை மிரட்டி சாட்சியம் பெற்றனர். அவர்கள் விரும்பியவாறு சாட்சி சொல்ல வேண்டுமென நிர்ப்பந்திக்கப் பட்டனர், மிரட்டப் பட்டனர், அல்லது சலுகைகள் தருவதாக ஆசை காட்டினார்கள். ஒரு சாட்சிக்கு, அமெரிக்காவில் நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாக கூறியிருந்தனர்.

யூகோஸ்லேவியா நீதிமன்றம் மூலம் உலகப் புகழ் பெற்ற, அரச தரப்பு சட்டத்தரணி கார்லா டெல் போந்தே, இன்னும் இரண்டு பேர் மீது, சாட்சிகளை மிரட்டியதாக குற்றஞ் சாட்டப் பட்டது. இறுதியாக, சர்வதேச நீதிமன்றம் அரச தரப்பு சட்டத்தரணிகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஒவ்வொரு உலக நாட்டிலும் நடந்த, போர்க்குற்றங்கள், இனப் படுகொலைகள், சர்வதேச நீதிமன்றத்தினால் ஒழுங்காக விசாரிக்கப் பட்டு, நீதி வழங்கப் பட்டால், உலகம் திருந்தி விடும் என்று நினைப்பது வெகுளித்தனமானது. உலக நாடுகளின் பிரச்சினைகளும், சட்டங்களும் அந்தளவு இலகுவானது அல்ல. மேலும், அரசியல் தலையீடு இன்றி, நீதித்துறை செயற்பட முடியாத நிலைமை உள்ளது.

கடந்த கால வரலாறு முழுவதும், சர்வதேச நீதியானது, "வென்றவர்களின் நீதியாக" இருந்து வந்ததை, கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இனி வருங்காலத்திலும், போர்க்குற்றம், இனப்படுகொலை பற்றி விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றம், வென்றவர்களுக்கு சாதகமாகவும், தோற்றவர்களுக்கு பாதகமாகவும் தான் நடந்து கொள்ளப் போகின்றது.

ஈழப் போரின் இறுதியில், வென்றவர்கள் அமைக்கப் போகும் சர்வதேச நீதிமன்றம், எவ்வாறு தோற்றுப் போன தமிழர்களுக்கு ஆதரவாக நீதி வழங்கப் போகிறது? தமிழ் மக்கள் இந்த உண்மையை புரிந்து கொள்ளாத வரையில், தொடர்ந்தும் இலவு காத்த கிளியாக ஏமாற்றப் படுவார்கள் என்பது மட்டும் உறுதி.


(பிற்குறிப்பு: Geert Jan Knoops, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பணியாற்றிய வழக்கறிஞர். அவர் எழுதிய "Bluf Poker, De Duistere Wereld van het Internationaal Recht" என்ற நூல், இந்தக் கட்டுரை எழுதுவதற்கு பெரிதும் உதவியுள்ளது. அவருக்கு எனது நன்றிகள்.)  



இது தொடர்பான முன்னைய பதிவுகள்: