Showing posts with label ஊழல். Show all posts
Showing posts with label ஊழல். Show all posts

Saturday, July 13, 2024

சாவகச்சேரி மருத்துவமனை ஊழலுக்கு எதிரான மக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்த ஊழலை அம்பலப் படுத்திய டாக்டர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக மக்கள் போராட்டம். சாவகச்சேரியில் முன் ஒருபோதும் இல்லாத மக்கள் எழுச்சி. 

அரச நிதியில் மக்களுக்கு இலவச மருத்துவம் வழங்குவதற்காக நடத்தப்படும் ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் நோயாளிகளை கவனிப்பதில்லை என்றும், வேண்டுமென்றே தனியார் மருத்துவமனைக்கு செல்லுமாறு ஊக்குவிக்கிறார்கள் என்றும் டாக்டர் அர்ச்சுனா சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டி இருந்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட வைத்திய அதிகாரியும், தனியார் மருத்துவமனை நிர்வாகிகளும் அவரை வெளியேற்ற முயற்சித்து வருகின்றனர். போலிஸ் அனுப்பி கைது செய்து வெளியேற்ற எடுத்த முயற்சி மக்கள் போராட்டம் காரணமாக தோல்வி அடைந்தது. 

சாவகச்சேரி பகுதியில் பூரண கடையடைப்பு அறிவிக்கப்படடது. இதே நேரம் "சிங்களப் பொலிஸ் எதற்கு வந்தது?" என்று கேட்டு அரசியல் செய்ய சென்ற "தீவிர தமிழ்த் தேசியவாதி" சுகாஸ் @Sugashkanu மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அங்கிருந்து வாலை சுருட்டிக் கொண்டு ஓடினார். எல்லா இடங்களிலும் இவர்களது தமிழ்த் தேசிய நாடக அரசியல் எடுபடாது என்பதை மக்கள் உணர்த்தி உள்ளனர். தமிழ் மக்கள் இனியும் இந்த கபடவேடதாரிகளை நம்பி ஏமாறத் தயாராக இல்லை. 

இன்று இலங்கை முழுவதும் ஒரு Whitsle blower ஆக அறியப்படும் அர்ச்சுனா, மருத்துவ ஊழல் தொடர்பாக மேலும் பல தகவல்களை தெரிவித்து உள்ளார். குறிப்பாக தனியார்மயத்தை ஊக்குவிக்கும் இலங்கை அரசுக்கு "நல்ல பிள்ளை" பெயர் எடுப்பதில் யாழ் மருத்துவமனை நிர்வாகம் முதல் இடத்தில் இருக்கிறதாம். அரசு ஒதுக்கும் நிதியை செலவிடாமல் பெரும் பகுதியை திருப்பி அனுப்புகின்றனர். அத்துடன் நிர்வாகத்தில் பிரதேசவாதம், சாதியவாதம் தலை தூக்கி உள்ளமை மருத்துவ துறை சீர்கேடுகளுக்கு காரணமாக உள்ளது. 

சமூக வலைத்தளங்களில் இயங்கும் தீவிர தமிழ்த் தேசியவாதிகள், புலி விசுவாசிகள் யாரும் இதைப் பற்றி பேசாமல் மௌனமாக இருப்பதை அவதானிக்கலாம். இதை வைத்து இனவாத பிழைப்பு அரசியல் செய்ய முடியாது என்பது மட்டுமல்ல, உண்மையில் அவர்கள் சிங்கள அரச கைக்கூலிகள் தான் என்பதையும் நிரூபித்து வருகின்றனர்.

தமிழ்த் தேசியம் ஒரு குட்டி முதலாளிய வர்க்க அரசியல் என்பது மறுபடியும் நிரூபிக்க பட்டிருக்கிறது. யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை ஊழல் தொடர்பாக தமிழ் உழைக்கும் வர்க்க மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நேரம், அவர்களது வர்க்க கோபாவேசத்தை மழுங்கடிக்கும் வகையில் so called தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் நடந்து கொள்கிறார்கள். பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழரசு கட்சி தலைவர் ஸ்ரீதரன் "இது ஒரு இன அழிப்பு!" என்றார். இவர்களுக்கு இனத்தை தவிர வேறெந்த மண்ணாங்கட்டியும் தெரியாது. சும்மா எதையாவது உளற வேண்டியது. 

இன்னொரு எம்.பி. கஜேந்திரன் ஊழல் செய்த டாக்டர்கள் தண்டிக்க பட வேண்டும் என்றார். ஆனால் தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறவில்லை. ஆனால், வேண்டுமென்றே அரச மருத்துவமனைகளில் நடக்கும் ஊழல்களை கண்டுகொள்ள மறுக்கும் அரசை கண்டிக்கவில்லை! என்னே அதிசயம்! இந்த விஷயத்தில் அரசுக்கு முட்டுக் கொடுப்பது தவறாக தெரியவில்லை. இவர்கள் யாரும் போராட்டம் நடத்திய மக்களை சென்று சந்திக்கவில்லை. 

இவர்களை விட, புலிகளின் பெயரால் ஜிகாத் (புனிதப் போர்) நடத்தும் ஏக இறைவனின் போராளிகள் சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக வாயே திறக்கவில்லை. தானடா விட்டாலும் சதை ஆடும். சிங்கள அரசுக்கு நெருக்கடி வந்தால் புலி அரசியலை கையில் எடுப்பார்கள். இந்த விஷயத்திலும் "புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?" என்று புறநானூறு பாடினார்கள். அதாவது சாவகச்சேரி மருத்துவமனை ஊழலை வெளிக் கொணர்ந்த டாக்டர் அர்ச்சுனாவின் தந்தை முன்பு புலிகளின் காவல்துறையில் இருந்தாராம். அந்த பெருமை மட்டும் அவர்களுக்கு போதும். தமிழ் மக்கள் எக்கேடு கெட்டால் இவர்களுக்கு என்ன வந்தது? 

சரி, தனியார் மருத்துவமனை தொடர்பாக இவர்களது நிலைப்பாடு என்ன? முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அவர்களது நிர்வாகத்தில் இயங்கியது மருத்துவமனையில் பணியாற்றிய so called "தமிழ்த் தேசிய மருத்துவர்கள்", தற்போது தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்கிறார்கள். தமிழ்த்தேசியர்கள் நோக்கம் பணக்காரர்களுக்கு சேவை செய்வது என்பதாக மாறி விட்டது. இது தான் குட்டி முதலாளிய அரசியல் சிந்தனை. "காசு இருந்தால் மருத்துவம். இல்லை என்றால் வருத்துவோம்!" - இது தானே மருத்துவ மாபியாவின் கொள்கை? இதற்கு சிங்கள பேரினவாத அரசும் உடந்தை. தமிழ்த் தேசியவாதிகள் கூட்டுக் களவாணிகள். 

Friday, April 17, 2015

ஊழல் மலிந்த ஹிட்லரின் ஆட்சி



ஹிட்லர் அனுதாபிகளான அனைத்து பாசிஸ்டுகளுக்கும்: 
"உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள். ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள். நடக்கவும் முடியாவிட்டால் தவழுங்கள். தவழவும் முடியா விட்டால் தற்கொலை செய்து கொள்ளுங்கள். அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியமானது."


ஜெர்மன் நாஸிகள் "ஊழலற்ற ஆட்சி" நடத்தியதாக புளுகித் திரியும், தமிழ் பேசும் நாஸி அபிமானிகள் பலர் இருக்கின்றனர். "வெள்ளை ஐரோப்பியர்கள் ஊழல் செய்வதில்லை" என்று அப்பாவித்தனமாக நினைத்துக் கொண்டிருக்கும் பாமர மக்கள் அதை நம்பலாம்.

ஜெர்மன் வரலாற்றிலேயே நாஸிகளின் ஆட்சிக் காலம் தான் ஊழல் மலிந்திருந்த காலகட்டம். ஹிட்லர் முதல் அடிமட்ட அதிகாரி வரையில் மிகப்பெரிய ஊழல் பெருச்சாளிகளாக இருந்தனர்.

 ஹிட்லர், 1933 ம் ஆண்டு, ஆட்சியைக் கைப்பற்றும் நேரம், ஜெர்மன் அரசுக்கு பல இலட்சம் வரி இன்னும் கட்டப்படாமல் நிலுவையில் இருந்தது. அவரது "மைன் கம்ப்" நூலுக்கான வரியே கட்டப் படாமல் இருந்தது. பதவிக்கு வந்த ஹிட்லர், வருமான வரித் திணைக்கள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அந்த வரியை இல்லாதாக்கினார். அது மட்டுமல்ல, அடுத்து வந்த வருடங்களில் விற்கப் பட்ட மைன் கம்ப் நூல் பிரதிகளுக்கும் வரிச் சலுகை அளிக்கப் பட்டது. அந்தப் பணத்தை எல்லாம் ஹிட்லர் தனது சட்டைப் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார்.

ஐரோப்பாவில் போர் நடந்து கொண்டிருந்த காலங்களிலும், நாஸி அதிகாரிகள் ஊழலில் திளைத்தார்கள். போர்முனையில் நின்ற ஜெர்மன் படையினருக்கு அனுப்ப வேண்டிய பெட்ரோல், உணவுப் பொருட்களை திருடி கறுப்புச் சந்தையில் விற்றார்கள். 1944 ஆம் ஆண்டு, நார்மாண்டி கடற்கரையில் நின்ற யுத்த தாங்கிகளுக்கு பெட்ரோல் இல்லாத காரணத்தால், படையினர் பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள். அதே நேரத்தில், பாரிஸ் கள்ளச் சந்தையில் பெட்ரோல் விற்கப் பட்டுக் கொண்டிருந்தது.

யூதர்கள் அவர்கள் வசித்த வீடுகளில் இருந்து தடுப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப் பட்ட நேரம், யூதர்களின் சொத்துக்களை திருடுவதில் ஜெர்மன் அதிகாரிகள் மும்முரம் காட்டினார்கள். தமது வாழ்நாளில் இது போன்ற தளபாடங்களை காணவில்லை என்று, அவற்றை தமது வீடுகளுக்கு திருடிச் சென்ற அதிகாரிகள் சிலர் கூறியுள்ளனர்.

ஹிட்லரின் வலதுகரமாக விளங்கிய இராணுவத் தளபதி ஹெர்மன் கெரிங், ஒரே நேரத்தில் பல பதவிகளை வகித்து வந்தார். பிரைசன் மாநில முதலமைச்சர், பொருளாதார அமைச்சர், பாராளுமன்றத் தலைவர்... இப்படிப் பல பதவிகள் காகிதத்தில் மட்டும் இருந்துள்ளன. அதற்கெல்லாம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். 

அது மட்டுமல்ல, உலகப் புகழ் பெற்ற ஜெர்மன் வாகன தயாரிப்பாளர்களான BMW, Benz நிறுவனங்களின் பங்குகளையும் வாங்கி வைத்திருந்தார். கெரிங்கின் அன்றைய வருட வருமானம் 1250000 மார்க்குகள். அதே நேரம், ஜெர்மனியில் ஒரு தொழிலாளரின் வருடாந்த வருமானம் 5000 மார்க்குகளுக்கு மேலே கூடவில்லை.

ஜெர்மன் அரசாங்கத்தின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு, நாஸிகளின் ஆட்சிக் காலத்தில் தான் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடியது. பெரும்பாலும் அதிகாரத்தில் இருந்தவர்களின் நண்பர்கள், உறவினர்களுக்குத் தான் அரசுப் பதவிகள் கொடுக்கப் பட்டன. ஜெர்மனி முழுவதும் வேலை வாய்ப்புக் கிடைக்க வேண்டுமானால் மேலிடத்தில் உள்ளவரைத் தெரிந்திருக்க வேண்டுமென்ற கட்டாயம் இருந்தது.

(நன்றி : Historia, Nr.1/2015)



கம்யூனிசத்தை வெறுப்பவர்கள் எப்படியானவர்கள்? 
- பாசிஸ்டுகள் 
 - நாஸிகள் 
 - இனவெறியர்கள் 
 - மதவெறியர்கள் 
 - இனப்படுகொலையாளிகள் 
 - போர்க்குற்றவாளிகள் 
அல்லது அப்படியானவர்களை ஆதரிக்கும் மேட்டுக்குடி அறிவுஜீவிகள்.

Tuesday, May 06, 2014

அகதிகளை வெளியேற்ற போலி விசா தயாரித்த மேற்கத்திய அரசாங்கம்


ஒரு அகதி, போலி பாஸ்போர்ட், போலி விசாவில் பயணம் செய்வது குற்றமாகக் கருதப் படுகின்றது. ஆனால், ஒரு மேற்கத்திய நாட்டு அரசாங்கம், அதே போலி ஆவணங்களை தயாரித்து, ஒரு அகதியை நாடுகடத்துவது குற்றமாகாதா?

மேற்கத்திய நாடுகளில் ஊழல் கிடையாது என்று பெரும்பாலும் நம்பப்படுகின்றது. ஆனால், அவர்கள் மூன்றாமுலக நாடுகளில் நிலவும் ஊழல்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அண்மையில், நெதர்லாந்தில் அகதித் தஞ்சம் மறுக்கப் பட்டு நாடுகடத்தப் படும் அகதிகள் விஷயத்தில் ஊழல் நடப்பதாக, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காட்டினார்கள். (http://tvblik.nl/zembla/omkopen-en-uitzetten) நெதர்லாந்து தொலைக்காட்சியில், ZEMBLA எனும் நிகழ்ச்சியை நடத்தும் ஊடகவியலாளர்கள், திருப்பி அனுப்பப்பட்ட அகதிகளின் நாட்டிற்கு சென்று, தகவல்களை சேகரித்துள்ளனர்.

நீண்ட காலமாகவே, தஞ்சம் மறுக்கப்பட்ட அகதிகளை திருப்பி அனுப்புவது, நெதர்லாந்து அரசுக்கு தலையிடியை கொடுக்கும் வேலையாக உள்ளது. ஏனெனில், அகதிகள் தாமாகவே விரும்பி, தாயகம் திரும்பிச் செல்ல சம்மதித்தாலும், அவர்களிடம் தேவையான ஆவணங்கள் இருப்பதில்லை. பாஸ்போர்ட், அடையாள அட்டை எதுவும் இல்லாதபடியால், சம்பந்தப் பட்ட தூதுவராலயத்தில் நாடு திரும்பும் விசா எடுக்க முடியாமல் உள்ளது. உடனடியாக ஒரு புதிய கடவுச்சீட்டை கொடுப்பதற்கு முன்னர், "தம்மிடம் ஒப்படைக்கப் பட்ட அகதி, தமது நாட்டுப் பிரஜை என்பதற்கு என்ன ஆதாரம் ?" என்று கேட்கின்றன. அதற்குப் பின்னரே, தாயகம் திரும்புவதற்கான விசா கொடுத்து ஏற்றுக் கொள்கின்றன. இது வழமையான நடைமுறை. உண்மை நிலவரம் என்னவெனில், திருப்பி அனுப்பும் விசா கொடுப்பதற்கு, பல சமயங்களில், தூதுவரலாயங்கள் ஒத்துழைப்பதில்லை.

ஆப்பிரிக்காவில் உள்ள கினே (Guinee) நாடு, உலகில் மிகவும் வறுமையான நாடுகளில் ஒன்று. அதனால், ஊழலும் மலிந்த நாடு. நெதர்லாந்து அரசு, அகதிகளை திருப்பி அனுப்புவதற்காக, கினே அரசுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருகின்றது. அவர்களுக்கு நிறையப் பணம் கொடுத்து, அகதிகளை திருப்பி அனுப்பத் தேவையான விசாக்களை பெற்றுக் கொள்கின்றது. ஆனால், அதிலும் பல முறைகேடுகள் நடக்கின்றன. கணனியில் வடிவமைத்து, அல்லது போட்டோகொப்பி எடுத்து, உண்மை போன்று தோன்றும் போலிப் பத்திரங்கள் தயாரிக்கப் பட்டுள்ளன. 

கினே தூதுவராலயம், ஒரு அகதியின் விபரங்களை ஆராயாமலே கேட்டவுடன் விசா வழங்குகின்றது. அதாவது, முழுக்க முழுக்க அது ஒரு போலி விசா. நெதர்லாந்து அரசு, கினே தூதுவராலயத்தில் யாரை கொண்டு போய் நிறுத்துகின்றதோ, அவருக்கு உடனே கினே செல்லும் விசா வழங்கப் படுகின்றது. அந்த அகதி, உண்மையில் வேறொரு ஆப்பிரிக்க நாட்டவராக இருந்தாலும், கினே யுக்கு நாடுகடத்தப் படும் அபாயமும் உள்ளது. நெதர்லாந்து, பெல்ஜியத்தில் உள்ள, கினே தூதுவராலயம், எதையும் ஆராயாமல் விசா வழங்குவதாக கிடைத்த முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக, ZEMBLA ஊடகவியலாளர்கள் கினே சென்றனர்.

ZEMBLA,  தீர விசாரித்து ஆராயும் ஊடகவியலை கடைப்பிடிக்கின்றது. அதன் ஊடகவியலாளர்கள், ஒரு விடயத்தை தேடி, துப்புத் துலக்கி, உண்மையை ஆராய்ந்து, அதனை உலகிற்கு அறிவித்து வருகின்றனர். ஏற்கனவே, ZEMBLA தான், அயான் ஹிர்சி அலி என்ற சோமாலிய இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல்வாதியின் வண்டவாளங்களை வெளிக் கொணர்ந்தது.

கினே தலைநகர் கொனாகிரிக்கு சென்ற ZEMBLA குழுவினர், விசா வழங்கிய "உள்துறை அமைச்சு" அதிகாரிகளை, அமைச்சரை சந்தித்துப் பேச விரும்பினார்கள். என்ன ஆச்சரியம், கினேயில் தற்போது "உள்துறை அமைச்சு" என்ற பெயரில் எந்தவொரு அமைச்சும் கிடையாது! அது வேறு பெயரில் இயங்குகின்றது. அனேகமாக, இருபது வருடங்களுக்கு முன்பிருந்த அமைச்சு ஒன்றின் பெயரில், யாரோ போலி ஆவணங்களை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அது சட்டவிரோதமானது. ஆனால், நெதர்லாந்து அரசுக்கு அதைப் பற்றிய கவலை எதுவும் கிடையாது. விசா ஆவணம் உண்மையா, போலியா என்று ஆராய வேண்டிய அவசியம் அதற்குக் கிடையாது. தனது நாட்டை விட்டு ஒரு அகதியை வெளியேற்றி விட்டால் போதுமானது என்று, நெதர்லாந்து அரசாங்கம் நிம்மதிப் பெருமூச்சு விடும்.

தாயகம் திரும்பும்/ திருப்பி அனுப்பப் படும் அகதிகளுக்கு, இல்லாத ஒரு அமைச்சின் பெயரால் போலி கடவுச்சீட்டு, போலி விசா வழங்கப் படுகின்றது.   நெதர்லாந்தில் இருந்து திருப்பி அனுப்பப் படும் அகதிகளின் விசா ஆவணத்தில் காணப்பட்ட, அமைச்சு சீல் போலியானது. விசா பத்திரத்தில் கையொப்பமிட்ட அதிகாரியை பற்றி விசாரித்த பொழுது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அந்த அதிகாரி, நெதர்லாந்து அரசுடனான தொடர்பாடலுக்காக நியமிக்கப் பட்டதாக, அமைச்சர் கூறினார்.

விசா பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ள அதிகாரிக்கு, அதற்கான அதிகாரம் கிடையாது. "ஆவணத்தில் உள்ள அமைச்சின் பெயர், சீல், அனைத்தும் போலியானது என்று உறுதிப் படுத்துவதாகவும், சம்பந்தப் பட்ட அதிகாரியை நெதர்லாந்து அரசு பயன்படுத்திக் கொள்வதாகவும்..." அமைச்சர் தெரிவித்தார். ஆயினும், இந்த மோசடியில் அனைவருக்கும் பங்கிருக்கலாம், அந்த அமைச்சருக்கு எல்லாம் தெரிந்திருக்கலாம். இந்த வீடியோ ஒளிபரப்பப் பட்ட பின்னர், "அதிலே கூறப்பட்ட தகவல்கள் உண்மைக்கு மாறானவை..." என்று நெதர்லாந்து அரசு ஒரு அறிக்கை விட்டிருக்கிறது. (Uitzending Zembla over terugkerende Guineeërs) 

நெதர்லாந்தில் இருந்து திருப்பி அனுப்பப் பட்ட கோனே எனும் முன்னாள் அகதியை, ஊடகவியலாளர்கள் தேடிச் சென்று சந்தித்தனர். அந்த அகதியின் மனைவியும், நான்கு வயது மகனும் இன்னமும் நெதர்லாந்தில் வசிக்கின்றனர். நான்கு வயது குழந்தை, தந்தையை காணாமல் எல்லா இடங்களிலும் தேடிக் கொண்டிருப்பதாக, தாய் கூறி வருத்தப் பட்டார். அதை விட, திருப்பி அனுப்பப் பட்ட அகதி, கண் பார்வைக் குறைபாடு கொண்டவர். அவரது சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் கினேயில் கிடைப்பதில்லை. அவரிடம் கையில் பணமும் இல்லை. தற்போது வசிக்கும், கினே தலைநகர் கொனாகிரியில் தெரிந்தவர் யாரும் இல்லை.

தனக்குத் தந்த விசா போலியானது என்பதை, திருப்பி அனுப்பப் பட்ட கோனே எனும் அகதியும் உறுதிப் படுத்துகின்றார். நெதர்லாந்தில் இருந்து, கினே விமான நிலையத்தில் வந்திறங்கிய பொழுதே, பிரச்சினைகள் ஆரம்பமாகி விட்டன. அவரது கையில் இருந்த விசா, பெல்ஜியத்தில் உள்ள கினே தூதுவராலயத்தால் வழங்கப் பட்டிருந்தது. (ZEMBLA தொடர்பு கொண்ட பொழுது, தாங்கள் அப்படி ஒரு விசா கொடுக்கவில்லை என்று தூதரக அதிகாரிகள் மறுத்திருந்தனர்.)

நெதர்லாந்தில் இருந்து திருப்பி அனுப்பப் பட்ட கோனே என்ற அகதியுடன், ஒரு டச்சு இராணுவ- பொலிஸ் வீரர் பயணம் முழுவதும் கூடவே சென்றுள்ளார். கொனாகிரி விமான நிலையத்தில் இறக்கி விட்டு திரும்பியுள்ளார். இவ்வளவும் இருந்த போதிலும், விமான நிலையத்தில் இருந்த குடிவரவு அதிகாரிகள், அந்த அகதியை நாட்டிற்குள் விட மறுத்தனர். போலி விசாவில் வந்திறங்கியதாக காரணத்தைக் கூறி, அவரை அங்கேயே தடுத்து வைக்க முயன்றுள்ளனர். இறுதியில், நூறு யூரோ லஞ்சமாக வாங்கிக் கொண்டு தான் வெளியே விட்டுள்ளனர். (கினே நாட்டில், அது ஒருவரின் ஒரு மாத சம்பளம்.)

சாதாரண அகதிகள், போலி விசாவில் ஒரு நாட்டிற்குள் நுழைய முயன்றால், அதனை குற்றமாகக் கருதி தண்டனை கொடுக்கிறார்கள். போலி விசா தயாரித்துக் கொடுக்கும் கிரிமினல்களுக்கு கடுமையான சிறைத் தண்டனை வழங்குகிறார்கள். ஆனால், அதே போலி விசாவை ஒரு அரசாங்கம் தயாரித்தால், அது குற்றமாகாதா? அதற்குப் பொறுப்பானவர்கள் யாரும் தண்டிக்கப் படுவதில்லை.

ZEMBLA நிகழ்ச்சியின் வீடியோவை கீழே உள்ள இணைப்புகளில் முழுமையாகப் பார்வையிடலாம்:



Omkopen en uitzetten

http://tvblik.nl/zembla/omkopen-en-uitzetten



Thursday, January 15, 2009

வளர்ந்த நாட்டில் ஊழல் இல்லையா? (சைப்ரஸ் தொடர்-3)

பொதுத் தேர்தல் ஒன்றில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவது, இன்றைய உலகில் அபூர்வமாக நடக்கும் விடயம் தான். சைப்ரசில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கும் அளவிற்கு, அந்நாட்டில் ஊழல், வேலையில்லாப்பிரச்சினை என்பன அதிகரித்து வருகின்றன.

நான் அங்கு தங்கியிருந்த, கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தின் போது, கடைத்தெருக்கள் எல்லாம் அந்தந்த நகரசபைகளின் செலவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இந்த வர்ணஜால வேடிக்கைக்கு குறிப்பிட்ட நகரசபை இரண்டு லட்சம் யூரோக்களுக்கு மேல் செலவிடுகின்றது. அதே நேரம் நகரவாசிகளுக்கு அத்தியாவசிய தேவையான பொதுப்போக்குவரத்து துறைக்கு செலவிட பணமில்லை என்று கைவிரிக்கும் அரசாங்கத்தை, ஒரு நாளிதழ் சாடியிருந்தது. உலகில் பொதுப் போக்குவரத்து துறை வளர்ச்சியடையாத நாடுகளில் சைப்ரசும் ஒன்று. லட்சக்கணக்கான மக்கள் வாழும் பெரு நகரங்களில் கூட ஒரு சில பேரூந்துவண்டிகள் குறிப்பிட்ட ஓரிரு வழித்தடங்களில் மட்டும் ஓடுகின்றன. அதுவும் கிழமைநாட்களில், பகல் வேளை மட்டும் தான். இரவில் அரிது. ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் சேவை அறவே இல்லை. டாக்ஸி வாடகை ஒன்றும் மலிவானதல்ல. வசதியுள்ளவர்கள் தனியாக கார் வைத்திருக்கிறார்கள். வசதிகுறைந்தவர்கள் ஸ்கூட்டர், சைக்கிள் அல்லது கால்களை நம்பி வாழவேண்டியது தான். கார்கள் விற்பனையாக வேண்டும் என்பதற்காக, அரசும் பொதுப் போக்குவரத்து துறையை அபிவிருத்தி செய்யாது, பாராமுகமாக விட்டுவிடுகின்றது. அந்நாட்டில் வருடம் 24000 யூரோக்களுக்கு குறைவாக சம்பாதிப்பவர்கள், வருமான வரி கட்டத் தேவையில்லை. அதனால் வரி காட்டாதவர்களுக்கு, வசதி செய்து கொடுக்க முடியாது என்று அரசாங்கம் சிந்திக்கின்றது போலும்.

சைப்ரசில் குறைந்தது 1500 யூரோவுக்கு பாவிக்கப்பட்ட கார் வாங்கலாம். அது மட்டுமல்ல சாரதி அனுமதிப்பத்திரம் எடுப்பதும் இலகு. சாரதி பயிற்சியாளர்களை சோதிக்கும் பரிசோதகர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொடுப்பதாக உள்ளூர் வர்த்தக தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியது. சில சைப்ரஸ்கார பணக்காரர்கள் தமது வயதுவந்த பிள்ளைகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக, பரிசோதகரை அழைத்து, ஆடம்பர உணவுவிடுதியில் விருந்து கொடுப்பதாக தெரிய வந்துள்ளது. அழகான இளம்பெண்கள் பரிசோதகருடன் ஓரிரவு படுக்கையை பகிர்ந்து கொண்டால், இலகுவாக அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளலாம்.(Cyprus Mail) வீதிகளில் தறிகெட்டு ஓடும் சாரதிகளால், அந்நாட்டில் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கின்றன என்பதை நான் இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

நான் சைப்ரசில் இருந்த நாட்களில், சிறையில் இருந்து தப்பியோடிய ஒரு கிரிமினலின் கதை, உள்ளூர் ஊடகங்களில் பேசுபொருளாகி இருந்தது. உள்நாட்டில் "அல்கபோனே" என அழைக்கப்படும் உள்ளூர் மாபியா தலைவன், கொடூரமான இரட்டைக்கொலைகளுக்காக சிறையில் ஆயுள்தண்டனை அனுபவித்து வந்தான். ஆறுமாதங்களுக்கு முன்பு வயிற்றுவலி என்று கூறி ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான். அந்த பிரபல கிரிமினல் வைத்தியசாலை செலவுகளை தனது சொந்தப்பணத்தில் கட்டி வந்தது மட்டுமல்ல, அங்கிருந்த படியே தனது கூட்டாளிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு குற்றச் செயல்களிலும் ஈடுபட்டுள்ளான். கிறிஸ்துமஸ் தினத்திற்கு சில நாட்கள் இருக்கும் நேரம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாயிருந்த மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி விட்டான். இந்திய சினிமாவில் வருவது போல நடந்துள்ள இந்த சம்பவம், பாதுகாப்புத்துறையில் நிலவும் ஊழலுக்கு மிகச் சிறந்த உதாரணம். இதன் காரணமாக நீதி அமைச்சர் பதவி விலக நேர்ந்தது.

அந்த காலகட்டத்தில் தான் சைப்ரசின் முதலாவது மோசமான நிறவெறித் தாக்குதல் நடந்தது. 13 வயது ஆப்பிரிக்க சிறுமி(சைப்ரஸ் பிரசை) ஒருத்தி, அவள் படித்த பாடசாலை மாணவர்களால் மிருகத்தனமாக தாக்கப்பட்டாள். "கருப்பர்களே! உங்கள் நாடுகளுக்கு திரும்பிச் செல்லுங்கள்." என்று கத்திய படியே அந்த மாணவர்கள் தாக்கியதால், இது ஒரு நிறவெறித் தாக்குதல் ஆகும். மிகத் தாமதமாக அவ்விடத்திற்கு வந்த காவல்துறை, தாக்கப்பட்ட மாணவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாது, அவளது தந்தை வந்து கூட்டிச் செல்லும் வரை பாடசாலையில் வைத்திருந்தது. இவ்வளவு நடந்தும், தாக்கிய மாணவர்கள் அவ்விடத்தில் நின்றிருந்த போதும், பொலிஸ் அவர்களை கைது செய்யவில்லை. அரசாங்கமும், தினசரிப் பத்திரிக்கைகளும் இந்த இனவெறி சம்பவத்தை வன்மையாக கண்டித்த போதும், சமூகம் பெரிதாக மாறிவிடவில்லை. சைப்ரசில் வாழும் வெளிநாட்டவர்கள் செய்யும் குற்றச் செயல்களை முதன்மைச் செய்திகளாக தெரிவிக்கும் ஊடகங்கள் அந்நாட்டு மக்கள் மனதில் இனவெறி நஞ்சை ஊட்டுகின்றன. வழக்கமாக எங்காவது ஒரு இடத்தில் திருட்டு நடந்தால், பொலிஸ் வெளிநாட்டவர்களை மட்டும் தான் சந்தேகப்பட்டு விசாரிக்கும்.


வருடந்தோறும் இலங்கை, இந்தியாவில் இருந்து பெருமளவு இளைஞர், யுவதிகள் உயர்கல்வி கற்க என சைப்ரஸ் வருகின்றனர். ஹோட்டல் முகாமைத்துவம், வர்த்தகம் போன்ற கற்கைகள் ஆங்கில மொழியில் வழங்கும் தனியார் கல்லூரிகள், ஐக்கிய இராச்சியத்துடன் ஒப்பிடும் போது பாதியளவு குறைவான கட்டணம் அறவிடுவது மட்டுமல்ல, விசா இலகுவாக கிடைப்பதும் இதற்கு காரணம். அப்படி வரும் (அனேகமாக கீழ் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த) இளைஞர்கள், பெரும்பாலும் ஏதாவது வேலை செய்து சம்பாதிப்பதற்காக வருகின்றனர். தாயகத்தில் இருந்து கிளம்பும் போது, தாம் போகுமிடம் ஐரோப்பிய நாடென்பதால், பலவித கனவுகளுடன் வருபவர்கள், சைப்ரஸ் வந்த ஓரிரு மாதங்களிலேயே மாயை அகன்று நாடு திரும்ப விரும்புகின்றனர். தணலாய் தகிக்கும் வெயிலுக்குள் கட்டிடம் கட்டும் சித்தாள் வேலை போன்ற, சைப்ரஸ்காரர்கள் செய்ய விரும்பாத கடினமான வேலைகளையே இவர்கள் செய்கின்றனர். கிடைக்கும் சம்பளமும் சொற்பம். அதிக பட்சம் மணித்தியாலத்திற்கு 5 யூரோ கிடைப்பது அரிது. இவ்வாறு கஷ்டப்படும் இளைஞர்கள் சிலர் சொந்த நாட்டில் உயர்கல்வி கற்றவர்கள். வெளிநாட்டு கனவால் தமது வாழ்க்கையை பாழாக்கியதாக உணர்கின்றனர்.

சைப்ரசிற்கு மாணவர்களாக வருபவர்கள் படிக்காமல், வேலை செய்கின்றனர் என்ற விடயம் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு நன்கு தெரியும். இன்னும் சொல்லப்போனால், அவ்வளவு மாணவர்களும் ஒழுங்காக கல்லூரிக்கு சமூகமளித்தால், அதற்கென வகுப்புகளையும், ஆசிரியர்களையும் ஒழுங்கு படுத்த வேண்டி இருக்கும். அந்த செலவு தமக்கு மிச்சம் என்று நினைக்கின்றது, கல்லூரி நிர்வாகம். மாணவர்களாக வரும் இளைஞர்கள் வருடாவருடம் குடிவரவு திணைக்களத்தில் தமது விசாவை புதிப்பிப்பதற்காக, கல்லூரிக் கட்டணத்தை ஒழுங்காக கட்டி வருகின்றனர். இதனால் மகிழ்ச்சியுறும் கல்லூரி நிர்வாகம், தேவைப்பட்டால் பரீட்சை வினாத்தாள்களை கொடுத்து, சித்தி பெற்றதாக புள்ளிகளும் போட்டுத் தருவார்கள். கொஞ்சம் கூடுதலாக பணம் கொடுத்தால் டிப்ளோமாவும் கிடைக்கும். காசே தான் கல்வியடா!

பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெறும் வரை, சைப்ரஸ் வளர்ச்சி குன்றிய மூன்றாம் உலக நாட்டைப் போல காட்சியளித்தது.
துருக்கி படையெடுப்பிற்குப் பின்னர் பிரிக்கப்பட்ட "சைப்ரஸ் குடியரசு" ஆச்சரியப்படத்தக்க அளவிற்கு முன்னேறியது. அதற்கு முக்கிய காரணம், உல்லாசப் பயணிகளாகவும், (மலிவுவிலை) வீடு வாங்கும் ஓய்வூதியக்காரராகவும் வருகை தரும் பிரிட்டிஷ்காரர்கள். சைப்ரஸ் பொருளாதாரம் அவர்கள் கொட்டிய பவுன்களால் வளர்ந்த போது, விலைவாசியும் அதிகரித்தது. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, மற்றும் பவுணின் பெறுமதி இறக்கம், என்பன காரணமாக, பிரிட்டிஷாரின் வருகை வருங்காலத்தில் குறைய வாய்ப்புண்டு. இதனால் வேலையில்லாப்பிரச்சினை அதிகரிப்பதால், வெளிநாட்டவர்கள் வேண்டாவிருந்தாளிகளாக நடத்தப்பட வாய்ப்புண்டு.

ஐரோப்பிய யூனியன் என்ற கோட்டையின் கிழக்கு வாயிலாக கருதப்படும் சைப்ரசிற்கு அகதிகளாக வருபவர்களின் தொகை அதிகரித்து வருகின்றது. அந்நாட்டிற்குள் இலகுவாக நுழையக்கூடியதாக இருந்தாலும், அங்கிருந்து வேறு நாடுகளுக்கு போவது ( பெரும்பாலான அகதிகளின் விருப்பம்) கடினமானது. பெரும்பாலான அகதிகள் துருக்கி வந்து, பின்னர் அங்கிருந்து (துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள) வடக்கு சைப்ரசிற்குள் பிரவேசித்து, நிலக்கண்ணிகள் நிறைந்த எல்லைக்கோட்டை கடந்து தெற்கு சைப்பிரசினுள் நுழைகின்றனர். இவ்வாறு வரும் போது, மிதிவெடியில் அகப்பட்டு காலை இழந்தவர்கள் சிலர். அகதிகளாக வருபவர்கள், முன்பெல்லாம் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தில் பதிய வேண்டி இருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்த பின்னர், சைப்ரஸ் அரசு அகதிகளை பொறுப்பெடுத்து வருகின்றது. இருப்பினும் விசாரணைகளின் பின்னர் தொண்ணூறு வீதமான அகதிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படுகின்றன. மேலும் தஞ்சக் கோரிக்கை பரிசீலிக்கப்படும் காலங்களில், அகதிகளுக்கான இருப்பிடமோ, அல்லது உணவோ வழங்கப்படுவதில்லை. இதனால் சட்டவிரோத வேலை செய்து பிழைக்க வேண்டிய நிலை.

சைப்ரசின் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அண்மையிலான அமைவிடம் காரணமாக, பாலஸ்தீன, லெபனானிய அகதிகளுக்கே இதுவரை காலமும் தஞ்சம் வழங்கப்பட்டு வந்தது. முன்பு ஒருமுறை பாலஸ்தீன இன்டிபதா போராட்டத்தின் போது, பெத்லஹெம் தேவாலயத்தினுள் சரண்புகுந்த ஆயுதபாணிகளை, சைப்ரஸ் வரவேற்று புகலிடம் கொடுத்து உலகப் புகழ் தேடிக்கொண்டது. அதேநேரம் அரசியல் ஆதாயமற்ற பிறநாட்டு அகதிகள், நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிலர் சிறைகளில் அடைக்கப்பட்டு, நாடுகடத்தப்படுவது வழக்கமாக நடந்து வருகின்றது.
சைப்ரஸ் என்னதான் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றாலும், இன்றும் கூட மூடப்பட்ட சமுதாயமாகவே இருக்க விரும்புகின்றது. என்னதான் வெளி அழுத்தங்கள் இருந்த போதிலும், அந்நியரை தம்மில் ஒருவராக ஏற்றுக்கொள்ளும் "பன்முக கலாச்சார சைப்ரஸ்" என்பது இன்றுவரை ஒரு கனவு மட்டுமே.
(முற்றும்)
(இந்தக் கட்டுரையை தயாரிக்க உதவிய சைப்ரஸ் வாழ் நண்பர்களுக்கும், ஆங்கில மொழி நாளேடுகளுக்கும் எனது நன்றிகள்.)
_______________________________________________
கடந்தவை:
1. இனப்பிரச்சினையின் பரிமாணங்கள் - ஒரு சைப்ரஸ் அனுபவம்
2. ஒரு தீவு, மூன்று தேசங்கள் (சைப்ரஸ் தொடர்-2)

Friday, April 18, 2008

எகிப்து: மத அடிப்படைவாதம் சோறு போடுமா?

பண்டைய எகிப்து, ரோமர்கள் காலத்தில், ஐரோப்பாவின் உணவுக்களஞ்சியம் என்று பேர் எடுத்தது. உலகப்பேரழகி கிளியோபேட்ரா ஆட்சிக்காலத்தில் ஒருமுறை பஞ்சம் ஏற்பட்ட போது, அரச தாணியக்கிடங்கை திறந்து பொதுமக்களுக்கு உணவளித்ததாக சரித்திரம் கூறுகின்றது. இன்று உலகமயமாகிய பொருளாதரத்தில் அங்கம் வகிக்கும் காலத்தில், உணவுப்பொருள் விலையேற்றம் காரணமாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய போதும், 26 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் ஹொஸ்னி முபாரக், தாணியக்கிடங்கை திறந்து விடவில்லை. அதற்கு பதிலாக போலிஸ் அடக்குமுறையை ஏவி விட்டுள்ளார்.

கடந்த ஒரு வருடமாகவே எகிப்து கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. பருத்தி ஆலைதொழிளார்கள் வேலை நிறுத்தம், தற்போது அரசாங்க ஊழியர்கள் வேலை நிறுத்தம்....இப்படியே தொடர்ந்தால் போலீஸ்காரர்கள் வேலை நிறுத்தம் செய்யாதது தான் மிச்சம். பலதரப்பட்ட பொருளாதர நிலைகளில் வேலைநிறுத்தங்கள் நாட்டையே ஸ்தம்பிக்க வைத்தாலும், அது முபாரக்கின் சர்வாதிகார ஆட்சியை அசைக்கப்போவதில்லை. அதற்கு காரணம், காவல்துறை , இந்த அரசை பாதுகாக்கவே அமைக்கப்பட்டுள்ளது. உயர் மட்ட அதிகாரிகளுக்கு கிடைக்கும் சலுகைகள், செல்வந்த வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தியுள்ளதென்றால், நடுத்தர அதிகாரிகள் லஞ்சப்பணம் பெற்று பிழைத்துக்கொள்கின்றனர்.

கடந்த வருடம் எகிப்திய பொருளாதாரம் ஏழு வீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. இருப்பினும் ஒரு நாளைக்கு இரண்டு டாலர்கள் மட்டுமே சம்பாதிக்கும் மொத்த சனத்தொகையில் நாற்பது வீத எகிப்தியர்களின் சம்பளம் மட்டும் உயரவில்லை. "Kefaya"(போதும்) என்ற பெயரில் ஒரு புதிய மதச்சார்பற்ற மக்கள் இயக்கம், பிற சமூக ஆர்வலர்களுடன் இணைந்து நாடளாவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. விலை வாசி உயர்வு, மாதக்கணக்காக வழங்கப்படாத சம்பளப்பணம், ஊழல், போலிஸ் அடக்குமுறை, அரச பயங்கரவாதம் இவற்றிற்கெதிராக பொது மக்கள் எதிர்ப்பைக்காட்ட வருமாறு அவர்களின் பிரசுரங்கள் அழைப்பு விடுத்தன. தலைநகர் கய்ரோவில் பலத்த போலிஸ் கெடுபிடி காரணமாக வேலை நிறுத்தம் வெற்றியளிக்கவில்லை. ஆனால் தலைநகரில் இருந்து 150 கி.மி. தூரத்தில் உள்ள, பருத்தி தொழிற்சாலைகள் அமைந்துள்ள அல்-குப்ரா என்ற இடத்தில், தொழிலாளர் ஒற்றுமையாக வேலைநிறுத்தத்தில் குதித்ததுடன், அடக்க வந்த போலிஸ் படைகளை எதிர்த்து போராடிய போது, போலிஸ் துப்பாக்கி சூட்டில் ஒரு சிறுவன் கொல்லப்பட்டான். நூற்றுக்கனக்கனோர் கைது செய்யப்பட்டனர். பத்திரிகை நிருபர்கள் எவரும் சம்பவம் நடந்த இடத்திற்கு செல்ல அனுமதிக்கவில்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு அரசாங்கம், வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத தொழிலாளர்களுக்கு போனஸ் என்ற பெயரில் லஞ்சம் கொடுப்பதாக அர்ரிவித்தது. பரந்துபட்ட தொழிலாளர் போராட்டம், அரசாங்கம் ஆட்டம் காணுவதன் அறிகுறி. ஆனால் அதேநேரம், அந்தப்போராட்டம் ஈவிரக்கமின்றி அடக்கப்படலாம். அப்படி நடக்கும் பட்சத்தில் , பல எகிப்தியர்கள் நாட்டை விட்டு தப்பியோடி, ஐரோப்பாவில் புகலிடம் கோரலாம். என்ன அதிசயம், எந்தவொரு ஐரோப்பிய ஊடகமும் இப்போது எகிப்தில் நடக்கும் பிரச்சினைகள் பற்றி கண்டு கொள்ளவில்லை. பின்னர் அகதிகள் வரும் போது, அங்கே என்ன பிரச்சினை என்று, ஒன்றும் தெரியாதது மாதிரி கேட்பார்கள்.

எகிப்தில் நிலவும் சர்வாதிகாரம் காரணமாக, அநேகமான மக்கள் மாற்று வழியை தேடுகிறார்கள். அதனாலே தான் இஸ்லாமிய அடிப்படை வாத கட்சியான "முஸ்லீம் சகோதரத்துவம்", தேர்தலில் போட்டியிடும் போது பெரும்பான்மையான மக்கள் அதற்கு வாக்கு போடுகின்றனர். 2005 ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், அந்தக்கட்சி இருபது வீதமான வாக்குகளை பெற்றதை தொடர்ந்து, கடைசியாக நடந்த உள்ளூராட்சி தேர்தலில் நிற்க தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் முஸ்லீம் சகோதரர்கள், தற்போது நாடளாவிய ரீதியாக வேலைநிறுத்தங்களுக்கு ஆதரவு வழங்கவில்லை. தொழிலாளர் போராட்டம் மத அடிப்படை கொண்டதல்ல என்பதால், "புரட்சி ஆபத்தானது" என்று போதித்து வருகின்றனர். அவர்களக்கு உலகத்தில் மதத்தை விட்டால் வேறெதுவும் தெரியாது. இருப்பினும், அரச அடக்குமுறை அவர்கள் மீதும் ஏவி விடப்படுகின்றது. அந்தக்கட்சியின் நிதி வழங்குனறன, ஸ்விட்ஸர்லாந்தில் வசித்த எகிப்து வங்கியாளர், மேலும் இரண்டு வர்த்தகர்கள் சர்வதேச போலிஸ் உதவியுடன் கைது செய்யப்பட்டு, கடுமையான சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனால் முஸ்லீம் சகோதரத்துவ கட்சி வருங்காலத்தில் பலவீனப்படும் வாய்ப்புகள் உள்ளன.

முபாரக்கின் சர்வாதிகாரம் எகிப்திற்கு புதிதல்ல. அதற்கு, இராணுவ உதவிகளை வாரிவழங்கும் அமெரிக்காவின் நிபந்தனையற்ற ஆதரவும் புதிதல்ல. தொழிலாளரின் அன்றாட உணவிற்கே போதாத ஊதியம், ஏழ்மை நிலை, ஊழல் இவை எதுவுமே எகிப்திற்கு புதிதல்ல. ஆனால் இந்த சமூக குறைபாடுகளை எல்லாம், மக்கள் பொறுத்துக்கொள்வது, மதவாதிகளின் பிரச்சாரத்தினால் தான். இருபதாம் நூற்றாண்டு இஸ்லாமிய நாடுகளில், எகிப்து தான் மத அடிப்படைவாத கொள்கையை கண்டுபிடித்தது. குறிப்பாக "முஸ்லீம் சகோதரத்துவம்" கட்சி தான், நமது காலத்திய கொமெய்னி (ஈரான்), பின் லாடன் (சவூதி) வகையறாக்களின் சித்தாந்த பாசறை. அவர்களின் பார்வையில், மக்களின் அவலநிலமைக்கு காரணம், சாதாரண மக்களின் மத நம்பிக்கை குறைபாடு தான். எல்லோரும் மதத்தை சரியாக கடைப்பிடித்தால், எல்லா சமூக குறைபாடுகளும் விலகிவிடுமாம். ஒரு காலத்தில், மதச்சார்பற்ற லிபரல் கலாச்சாரத்தை பின்பற்றிய எகிப்திய மக்கள், இந்த பிரச்சாரத்தின் பின்னர், மதப்பற்றாளர்களாக மாறினர். மதவடிப்படைவாத சக்திகளின் வேகமான வளர்ச்சிக்கு அதுவே காரணம்.

தற்போது எகிப்தின் தொழிலாளர் போராட்டங்கள், மத அடிப்படைவாதம் சோறு போடாது என்று கண்ட அனுபவத்தின் விளைவு. முதலாளித்துவ பொருளாதாரத்தின் இருண்ட மறுபக்கமான சமுதாய சீர்கேடுகள் நிலைத்து நிற்பதற்கு மத நம்பிக்கை குறைவு காரணமல்ல. மக்கள் நலன்களை விட லாபத்தை மட்டுமே முதன்மையாக கருதும் முதலாளிகள், அவர்களுக்கு தேவையான வசதி செய்து கொடுக்கும் அரசாங்கம், அரசாங்கத்தை மக்களிடமிருந்து காப்பாற்ற உள்ள பாதுகாப்புபடைகள், ஊழல் ஆட்சிக்கு முண்டு கொடுக்கும் சர்வதேச ஆதரவு... இப்படி நீள்கிறது பட்டியல். இந்தக் காரணங்களை மக்களிடம் இருந்து மறைக்கும், உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் சக்திகளின் இரட்டை வேஷங்களை கண்ட மக்கள் தான் தெருவில் இறங்கி போராடுகின்றனர்.

_____________________________________________________