மியான்மரில் (ஆங்கிலேயர் இட்ட பெயர்: பர்மா) அடித்த புயல் ஓய்ந்தாலும், அதன் பிறகான சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை. நான்கு வாரங்களுக்கு முன்பு நர்கீஸ் சூறாவளி பர்மாவின் நெல்விளையும் ஐராவதி ஆற்றுமுகப் பகுதியை தாக்கியதில் பல லட்சம் மக்கள் இறந்து, லட்சக்கணக்கானோர் வீடிழந்து அகதிகளான துயரச்சம்பவம் நடந்து முடிந்த அடுத்த நாளே, உதவி நிறுவனங்களின் நிவாரணப்பணிகள் ஆரம்பமாகி விட்டன. அள்ளிக்கொடுக்கும் ஐரோப்பியரின் நாடுகளில், மீண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி சேர்க்கும் பணி தீவிரமடைந்தது. சில நாட்களின் பின்னர், உதவி நிறுவனங்களும், அவை சார்ந்த நாடுகளும், அரசியல் சிக்கல்களில் மாட்டிக்கொண்டனர். மியான்மரை ஆளும் இராணுவ அரசு, வெளிநாடுகளில் இருந்து வரும் உதவிகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும், தன்னார்வ தொண்டர்களை நாட்டினுள் பிரவேசிக்க விடாது தடுப்பதாகவும், பல்வேறு குற்றச் சாட்டுகள் எழுந்தன. இவை ஆரம்பத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களாலும், பின்னர் ஐரோப்பிய, அமெரிக்க அரசியல் தலைவர்களாலும் முன் வைக்கப்பட்டன, பிரிட்டிஷ் பிரதமர் கோல்டன் பிரௌன், பர்மிய அரசு உதவிப்பொருட்கள் மக்களை போய் சேர விடாது தடுப்பதன் மூலம், பல ஆயிரம் உயிர்களை காவு கொள்கின்றது என்றும், இயற்கை அழித்தது போக, இப்போது மனிதனால் அழிவு உண்டாகிறது என்று பொருமினார். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரோ, அதற்கும் மேலே போய், பர்மிய அரசு உதவிப்பொருட்களை ஏற்க மறுத்ததால், இதுவரை பத்தாயிரம் பேர் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேற்குலக சார்பு ஊடகங்களின் செய்திகளை பார்த்து வரும் ஒருவர் பின்வரும் முடிவுகளுக்கு வருவார். மியான்மரில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கடந்த நான்கு வாரங்களாக இதுவரை எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை. மக்கள் விரோத பர்மிய அரசு, அவசர தேவை இருந்த போதும், உதவிப்பொருட்களை வேண்டாம் என்று தடுத்து வருகின்றது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள், இயற்கையால் பாதிக்கப்பட்டது போக, தற்போது அரசினால் பாதிப்புக்குள்ளாகின்றனர். அப்படியே இருக்கட்டும். அத்தகைய செய்திகள் எல்லாம் உண்மையா? இதிலே ஓரளவு தான் உண்மை. பர்மிய இராணுவ அரசு நிவாரணப்பொருட்களை ஏற்க மறுப்பதும், பன்னாட்டு தொண்டர்களுக்கு விசா கொடுக்க மறுப்பதும் உண்மை தான். ஆனால் இந்த கெடுபிடி மேற்கு-ஐரோப்பா, மற்றும் அமெரிக்க தொண்டர் நிறுவனங்களுக்கு மட்டும் தான். சீனா, இந்தியா, மற்றைய ஆசிய நாடுகளில் இருந்து வரும் நிவராணப்பொருட்களுக்கும், தொண்டர்களுக்கும் எந்த தடையும் இல்லை. ஆனால் இது பற்றி மேற்குலகை சேர்ந்த எந்த ஊடகமும் கூறவில்லை. பல நாட்கள் நெருக்கடி கொடுத்த பின்னர், அமெரிக்க இராணுவ விமானங்கள் மட்டும் நிவாரணப்பொருட்களை இறக்கி விட்டு செல்ல அனுமதித்தார்கள். அதே நேரம், எந்தவொரு அமெரிக்க தொண்டரையும் இதுவரை அனுமதிக்கவில்லை. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரின் கோபம் அதையிட்டு வந்தது தான்.
மேற்குலக தொண்டர்களை நாட்டினும் அனுமதிப்பதற்கு மியன்மார் அரசிற்கு என்ன பிரச்சினை? பல ஆண்டுகளாக மேற்குலகத்துடன் மிகக்குறைந்த அளவு உறவு வைத்திருந்த பர்மிய அரசு, "உதவி நிறுவன தொண்டர்கள்" என்ற போர்வையில் உளவாளிகள் வரலாம் என்று அஞ்சுகின்றது. தொண்டு நிறுவனங்கள் உள்நாட்டு அரசியலில் தலையிடுவது, பிற நாடுகளில் ஏற்கனவே நடந்துள்ளது. மேலும் கடந்த வருடம் தான், பெற்றோலின் விலை உயர்வை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டத்திற்கு, சக்தி வாய்ந்த பௌத்த பிக்குகள் தலைமை தாங்கியதை, பர்மிய அரசுக்கு எதிரான மதகுருக்களின் எழுச்சி என்று மேற்குலக ஊடகங்களும், அரசுகளும் சித்தரித்து வந்தன. ஏற்கனவே நூலிழையில் இருந்த மேற்குலக உறவு மிக மோசமான கட்டத்தை அடைந்தது. அப்போதெல்லாம் வெளிநாட்டு ஊடகங்களுக்கு செய்தி சேகரிக்க தடை இருந்தது. ஆனால் தற்போது சூறாவளி ஏற்படுத்திய இயற்கை அழிவு அளவு கடந்ததாக உள்ளதால், சமாளிக்க முடியாத அரசு, வேறு வழியின்றி வெளியுலக தொடர்பினால் கிடைக்கும் உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம்.
ஏற்கனவே தமது நாட்டின் மீது அமெரிக்கா படையெடுக்கலாம், தம்மை பதவியில் இருந்து அகற்றலாம் என்ற அச்சம் காரணமாகத் தான், மியன்மாரின் இராணுவ அரசு நாட்டின் தலைநகரை கடலை அண்டிய ரங்கூனில் இருந்து, அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் புதிதாக கட்டப்பட்ட "நய்பிடவ்" என்ற இடத்திற்கு மாற்றினார்கள். புதிய தலைநகரத்தில் யுத்தகாலத்தில் பாதுகாப்பாக இருக்க நிலக்கீழ் சுரங்க அறைகள் கட்டப்பட்டுள்ளன. வெளிநாட்டவர் நுழைய முடியாத மர்ம நகரான நியபிடவின் நிர்மாணம் ஓரிரு நம்பகமான ஆசிய கட்டுமான நிறுவனங்களிடமே ஒப்படைக்கப்பட்டது. மியன்மார் இராணுவ அரசு ஜோதிடத்திலும், எண் சாஸ்திரத்திலும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளது. இலக்கம் 9 அவர்களுடைய அதிர்ஷ்ட எண்ணாம். அதனால் தலைநகரின் பெயர் 9 ல் வரக்கூடியதாக வைத்திருக்கிறார்கள்.
சீனாவுடனான பொருளாதார உறவுகள், பர்மிய இராணுவ அரசின் நிலையான இருப்பிற்கு வழிவகுப்பது இரகசியமல்ல. கணிசமான மனிதஉரிமை மீறல்களை புரியும் இராணுவ சர்வாதிகாரத்திற்கு சீனா வழங்கும் ஆதரவு நிறுத்தப்பட வேண்டும் என்று மேற்குலகம் கோரி வருகின்றது, அல்லது அவ்வாறு பிரச்சாரம் செய்கின்றது. உண்மையில் எல்லாமே பொருளாதாரத்தை நோக்கி தான் நகர்கின்றன. மியன்மார் இதுவரை அளவிடப்படாத, இயற்கை வளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆங்கிலேய காலனிய காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்ட "ரங்கூன் பெற்றோலிய நிறுவனம்" தற்போது இராணுவ அரசின் கையில். அந்நாட்டின் எண்ணை தற்போது சீனாவிற்கு ஏற்றுமதியாகின்றது. பர்மாவின் எண்ணை மட்டுமல்ல, நிலகீழ் வாயுவின் இருப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
உலகின் எரிபொருள் வளங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்கம் கொண்ட அமெரிக்கா, பர்மா மீது கண் வைப்பதும் அதனால் தான். ஆனால் ஆசிய வல்லரசான சீனா, பர்மாவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வருவதன் காரணமாக, அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறுவது எளிதன்று. இதனால் மனித உரிமை மீறல்களை காட்டி பிரச்சாரம் செய்து சர்வதேச ஆதரவை திரட்டி வருகின்றது. அதைபோலத்தான் மியான்மரில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி, புதிய வாய்ப்புகளை வழங்கும் வரப்பிரசாதமாக பார்க்கப்பட்டது. உண்மையில் அமெரிக்காவிற்கு பர்மிய மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை. பர்மிய பொருளாதாரம் மீது உள்ள அக்கறை வேறு வடிவத்தில் வெளிப்படுகின்றது. தனது வீட்டை பார்க்காதவன், ஊருக்கு தொண்டு செய்வது போலத்தான் அமெரிக்க அரசின் நிலைப்பாடு. இரு வருடங்களுக்கு முன்னர் தான், அமெரிக்க மாநிலமான நியூ ஒர்லின்சை சூறாவளி தாக்கிய பின்னர் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பல்லாயிரம் மக்கள் பாதிக்கப்பட்ட போது, பாராமுகமாக இருந்த அரசின் செயல் பலரது கண்டனத்திற்குள்ளானது. அப்போதும் கியூபா, வெனிசுவேலா போன்ற நாடுகள் அனுப்பிய நிவாரணப் பொருட்களையும், தொண்டர்களையும் (அரசியல் காரணங்களுக்காக) ஏற்க மறுத்தது அமெரிக்க அரசு.
_________________________________________