"தமிழ் மொழி உணர்வாளர்கள்"(?) சிலருக்கு இப்படியும் ஒரு பெருமை:
//இங்கிலீஷ்க்கு ("ஆங்கிலம்" என்று) பெயர் வைத்த ஒரே மொழி தமிழ்//
இதிலே பெருமைப் பட என்ன இருக்கிறது? அந்த வார்த்தையை, தமிழர்கள் அனேகமாக போர்த்துக்கேயரிடம் இருந்து கடன் வாங்கியுள்ளனர்.
16 ம் நூற்றாண்டிலேயே, போர்த்துக்கேயர்கள் கோவா, இலங்கையை பிடித்து ஆண்டனர். ஆகவே, ஆங்கிலம் என்ற தமிழ்ச் சொல்லின் மூலம் போர்த்துகேய மொழி. இன்றைக்கும் போர்த்துகீசு, பிரெஞ்சு போன்ற லத்தீன் மூலத்தை கொண்ட மொழிகளில் ஆங்கிலம் என்ற உச்சரிப்பு வரும் சொற்களை பயன்படுத்துகிறார்கள்.
ஆங்கிலேயர்கள் என்பது இங்கிலாந்தில் குடியேறிய பூர்வகுடி மக்களின் பெயர். பிரித்தானியா தீவை ரோமர்கள் ஆண்ட காலத்தில், ஆங்கிலேஸ், சாக்ஸன் ஆகிய இரண்டு இனங்கள், ஜெர்மனியில் இருந்து சென்று குடியேறின. அவர்கள் தான் இன்றைய இங்லீஷ்காரரின் மூதாதையர். அங்கிலேஸ் என்ற பெயர் மருவி பிற்காலத்தில் இங்லீஷ் ஆனது.
"இங்கிலீஸ் என்ற மொழியின் பெயர், தமிழ் இலக்கண விதிகளுக்கு அமைய ஆங்கிலம் என்று மாறியது" என்றும், "எனக்கு இலக்கணம் தெரியாது" என்றும், ஒரு "தமிழ் அறிஞர்"(?) வகுப்பெடுக்கிறார். அவர் சொல்வது போல எனக்குத் தமிழ் இலக்கணம் தெரியாதென்றே வைத்துக் கொள்வோம். எதற்காக பின்வரும் நாடுகளின் பெயர்கள், முற்றிலும் மாறுபட்ட பெயர்களில் அழைக்கப் படுகின்றன என்பதை விளக்குவாரா?
"மகியார்" என்ற நாட்டை ஏன் ஹங்கேரி என்று சொல்கிறோம்? "டொய்ச் லான்ட்" எவ்வாறு ஜெர்மனி ஆகியது? "சுவோமி" ஏன் பின்லாந்து என மாறியது? "எல்லாஸ்" எப்படி கிரீஸ் ஆனது? "ஷிபெரிசி" என்ற நாட்டை அல்பேனியா என்று சொல்வது ஏன்? பல தமிழர்கள், இப்போது தான் முதன் முதலாக, இந்த நாடுகளின் உண்மையான பெயர்களை கேள்விப் படுவார்கள் என்று நான் நினைக்கிறேன்.
தமிழ் - ஆங்கில சொற்களை ஒப்பிட்டுப் பார்த்து, "தமிழில் இருந்து ஆங்கிலம் வந்தது" என்று கண்டுபிடித்துள்ள "அறிஞர்களுக்கு", பூகோளவியல் மட்டுமல்லாது வரலாறும் தெரியாது என்பது ஆச்சரியத்திற்குரியது. குறைந்த பட்சம் காலனிய கால வரலாறு கூட தெரிந்திருக்கவில்லை. இப்படியான அரைவேக்காடுகள் தான் "மொழி ஆய்வு" செய்கின்றன.
ஆங்கிலேய காலனிய ஆட்சிக் காலத்தில், அவர்கள் எமக்கு சொல்லிக் கொடுத்த உலக நாடுகளின் பெயர்களை இன்றைக்கும் பயன்படுத்தி வருகிறோம். அவ்வாறு தான், ஜெர்மனி, பின்லாந்து, ஹங்கேரி, கிரீஸ் என்று, ஆங்கிலேயர்கள் அந்த நாடுகளுக்கு சூட்டிய பெயர்களை அப்படியே தமிழில் பாவிக்கிறோம்.
16 ம் நூற்றாண்டிலேயே, தமிழர்களுக்கு போர்த்துக்கேய மொழியுடன் பரிச்சயம் ஏற்பட்டது. அலுமாரி, அலவாங்கு போன்ற பல சொற்கள் தமிழில் கலந்தன. அப்போது ஆங்கிலேயர்கள் பற்றி தமிழர்கள் அறிந்திருக்கவில்லை. தெற்காசியாவில் காலனிகளை பிடிப்பதற்காக போட்டியிட்ட பிரித்தானியர்களை, போர்த்துக்கேயர்கள் "ஆங்கிலேயர்கள்" என்று அழைத்தனர். நாங்களும் அதைக் கற்றுக் கொண்டோம்.
நெதர்லாந்து நாட்டவர்கள், ஈழத் தமிழில் "ஒல்லாந்தர்" என்றும், தமிழ்நாட்டுத் தமிழில் "டச்சுக்காரர்" என்றும் அழைக்கப் படுகின்றனர். ஏனிந்த வித்தியாசம்? போர்த்துகேய மொழியில் "ஹ"(H) சத்தம் கிடையாது. அவர்கள் ஹோலன்ட் என்பதை ஒலாந்த் என்று தான் உச்சரிப்பார்கள்.
ஆகவே அது போர்த்துகேய மொழியின் செல்வாக்குக்கு உட்பட்ட ஈழத் தமிழில் "ஒல்லாந்தர்" ஆயிற்று. அதே மாதிரி, 19 ம் நூற்றாண்டில் ஆங்கிலேய மொழியின் செல்வாக்கினால், தமிழ்நாட்டு தமிழில் "டச்சுக் காரர்" என்று அழைக்கப் படுகின்றது.
உண்மையில், ஹொலன்ட் என்ற அந்த ஐரோப்பிய நாட்டின் பெயர்: "நெடர்லான்ட்". அவர்கள் பேசும் மொழியின் பெயர்: "நெடர்லான்ட்ஸ்". ஆனால், காலனியாதிக்க காலத்தில், ஹொலன்ட் என்ற மாகாணத்தை சேர்ந்தவர்களே கடலோடிகளாக சென்று நாடு பிடித்தார்கள். தேசியவாதக் கருத்தியல்கள் தோன்றியிராத 17 அல்லது 18 ம் நூற்றாண்டில், அவர்கள் தம்மை ஹொலன்ட் காரர் என்று, பிரதேசம் சார்ந்து அழைத்துக் கொண்டதில் வியப்பில்லை.
ஆங்கிலச் சொற்களுக்கும், தமிழ்ச் சொற்களுக்கும் இடையிலான ஒற்றுமைகளை கண்டுபிடித்து, தமிழில் இருந்து தான் ஆங்கிலம் வந்தது என்று நிறுவத் துடிக்கும் அறிஞர் பெருமக்களுக்கு, முதலில் நீங்கள் ஆங்கில மொழி பற்றி ஓரளவாவது அறிந்து வைத்திருப்பது நல்லது. நீங்கள் எப்போதும் நவீன ஆங்கிலத்தை மட்டுமே ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள்.
மத்திய கால ஆங்கிலத்தை நீங்கள் படித்ததில்லை. அது ஜெர்மன் மொழி போன்றிருக்கும். பண்டைய ஆங்கிலம் படித்தால் மண்டை பிளந்து விடும். ஏனென்றால் அது ஐஸ்லாண்டிக் மொழி போன்றிருக்கும். ஆங்கிலம் என்பது பல மொழிகள் கலந்து உருவான நவீன மொழி.
ஆங்கிலத்தை நீங்கள் தமிழுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமென்றால், ஆங்கிலம் உருவாகக் காரணமாக இருந்த பிரெஞ்சு, சாக்சன் (ஜெர்மன்), டேனிஷ், (பண்டைய) நார்வீஜியன், போன்ற பல மொழிகளையும் ஆராய வேண்டும்.
அதை விட்டு விட்டு, நவீன ஆங்கிலத்தையும், தமிழையும் ஒப்பிட்டுப் பார்த்து விட்டு, தமிழில் இருந்து ஆங்கிலம் வந்தது நிறுவுவது யாரை ஏமாற்றுவதற்காக?
இது தொடர்பாக இணையத்தில் ஒரு வீடியோ உலாவுகின்றது. (தமிழில்லாமல் ஆங்கிலமில்லை!; https://www.youtube.com/watch?v=Z9Ws-DG_HgA&feature=youtu.be) அதில் பல சொற்களை வேண்டுமென்றே திரித்து, தமிழில் இருந்து ஆங்கிலம் வந்தது என்ற மயக்கத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த வீடியோவை நானும் பார்த்தேன். அதில் எவ்வளவு பொய்கள் சொல்லப் பட்டிருக்கின்றன என்பதை இங்கே பட்டியலிடுகிறேன்:
வீடியோவில் அந்த "ஆய்வாளர்" Button என்ற சொல்லுடன் தொடங்குகிறார். அதற்கு ஆங்கில சொற்களின் வேற்று மொழி வேர்களை கண்டுபிடிக்கும் இணையத் தளமான Online Etymology Dictionary; http://www.etymonline.com/index.php ஐ ஆதாரமாக காட்டுகிறார்.
Button என்பது பொத்தான் என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றியது என்பதை அந்த இணையத்தளத்தில் குறிப்பிட்டு இருப்பதாக ஒரு பொய்யை கூறுகின்றார். அதில் அப்படி எதுவும் இல்லை. அதை நீங்களே பார்க்கலாம். (http://www.etymonline.com/index.php?allowed_in_frame=0&search=button&searchmode=none) அது பொத்தோ (boton) என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து வந்தாலும், அதன் மூலம் ஜெர்மன் சொல்லான பூட் (butt) என்பதே ஆகும்.
ஆங்கிலேய காலனிய ஆட்சிக் காலத்தில் அறிமுகமான பல சொற்கள், சாதாரண மக்கள் மத்தியில் தமிழ்ப் படுத்தப் பட்டு பாவிக்கப் பட்டன. Bottle என்ற ஆங்கிலச் சொல், தமிழில் போத்தல் ஆகியது. அதே மாதிரித் தான், Button பொத்தான் ஆனது. உண்மையில் காலனிய காலகட்டத்தை வசதியாக மறந்து விடும் "ஆய்வாளர்", பொத்து என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து பொத்தான் வந்தது என்று அடம் பிடிக்கிறார்.
வீடியோவில் அந்த "ஆய்வாளர்" உதாரணம் காட்டும் பிற சொற்களும், இவ்வாறே தமிழுடன் எந்த வித சம்பந்தமும் இல்லாதவை. மொட்டந் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதைப் போன்று, சம்பந்தா சம்பந்தம் இல்லாத சொற்களுக்கு இடையில் தொடர்பை உண்டாக்குகிறார். அவர் காட்டும் உதாரணங்களை, நீங்களாகவே பின்வரும் இணையத் தளத்தில் சரி பார்க்கலாம். (http://www.etymonline.com/index.php)
Architect என்ற ஆங்கிலச் சொல்லின் மூலம் "அரசு+தச்சர்" என்ற தமிழ்ச் சொல்லாம். முதலில் அது ஆங்கிலச் சொல்லே அல்ல. கிரேக்க மொழியில் கட்டிட வல்லுநர் என்ற அர்த்தம் வரும்.
Opera - "ஒப்பாரி" என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து வந்தது என்பது ஒரு பொய். ஐரோப்பாவில் Opera என்பது நம்மூர் நாட்டுக் கூத்து போன்றது. Opera என்பது ஆங்கிலச் சொல் அல்ல. லத்தீன் மொழியில் Operari என்றால் வேலை செய்வது என்று அர்த்தம். குறிப்பிட்ட ஒரு துறையில் திறமையாக வேலை செய்வதை குறிப்பிடலாம். Operation என்ற சொல் அதிலிருந்து பிறந்தது.
Opera - "ஒப்பாரி" என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து வந்தது என்பது ஒரு பொய். ஐரோப்பாவில் Opera என்பது நம்மூர் நாட்டுக் கூத்து போன்றது. Opera என்பது ஆங்கிலச் சொல் அல்ல. லத்தீன் மொழியில் Operari என்றால் வேலை செய்வது என்று அர்த்தம். குறிப்பிட்ட ஒரு துறையில் திறமையாக வேலை செய்வதை குறிப்பிடலாம். Operation என்ற சொல் அதிலிருந்து பிறந்தது.
கடலைக் குறிக்கும் Sea என்ற ஆங்கிலச் சொல், "சேய்+மெய்= சீமை" என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து வந்ததாக பொய்யுரைக்கின்றனர். தமிழில் சீமை என்பது தொலைவில் உள்ள வெளி நாட்டைக் குறிக்கும். ஆனால், ஆங்கில Sea என்ற சொல், "See" என்ற டச்சு சொல்லில் இருந்து வந்தது. "ea" என்பது இரண்டு வேறு எழுத்துக்கள் அல்ல! பழைய ஆங்கிலத்தில் அவை ஒரே எழுத்தாக, "æ" என்றிருந்தது. தற்போதும் நோர்வீஜிய, டேனிஷ் மொழிகளில் பயன்படுத்தப் படுகின்றது.
"æ" என்ற எழுத்தின் உச்சரிப்பு கிட்டத் தட்ட ஆங்கில "A"(ஏ) மாதிரி இருக்கும். ஆகவே ஆங்கில Sea, தற்போதும் டச்சு மொழியில் பயன்படுத்தப் படும் See (உச்சரிப்பு: சே) என்பதில் இருந்து வந்தது என்பது நிரூபணமாகின்றது. அதன் அர்த்தம் என்ன? நான்கு பக்கமும் நிலத்தால் சூழப் பட்ட ஏரி! (ஐரோப்பாவில் கடல் என்பது நிலத்தால் சூழப் பட்டது. மற்றையது சமுத்திரம், இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது.) அதாவது, ஒரே நாட்டிற்குள் உள்ள மிகப் பெரிய குளம். அது எப்படி சீமை ஆகும்?
இவ்வாறு ஒவ்வொரு சொல்லுக்கும் நான் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், கட்டுரையின் விரிவஞ்சி இத்தோடு முடித்துக் கொள்கிறேன். இறுதியாக இது தொடர்பாக முகநூலில் சிலருடன் நடந்த உரையாடலை குறிப்பிட விரும்புகிறேன்.
Cry என்ற ஆங்கிலச் சொல், "கரை" என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து வந்தது என்று கூறுகிறார்கள். தமிழ் எழுத்து மொழியில் Cry என்றால், அழுவது என்று அர்த்தம். ஆனால், இவர்கள் "கரைதல்" என்ற வட்டார மொழியை எடுத்துக் காட்டுகிறார்கள். மலையாளத்தில் அழுவதற்கு, கரைவது என்று சொல்வார்கள். அதனால், தமிழ் நாட்டின் சில பகுதிகளில் கரைவது என்று சொல்லப் படலாம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். உண்மையில் Cry என்ற சொல், Crier என்ற பிரெஞ்சுச் சொல்லில் இருந்து வந்தது. (ஆதாரம்: http://www.etymonline.com/index.php?allowed_in_frame=0&search=cry&searchmode=none)
Cry என்ற ஆங்கிலச் சொல், "கரை" என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து வந்தது என்று கூறுகிறார்கள். தமிழ் எழுத்து மொழியில் Cry என்றால், அழுவது என்று அர்த்தம். ஆனால், இவர்கள் "கரைதல்" என்ற வட்டார மொழியை எடுத்துக் காட்டுகிறார்கள். மலையாளத்தில் அழுவதற்கு, கரைவது என்று சொல்வார்கள். அதனால், தமிழ் நாட்டின் சில பகுதிகளில் கரைவது என்று சொல்லப் படலாம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். உண்மையில் Cry என்ற சொல், Crier என்ற பிரெஞ்சுச் சொல்லில் இருந்து வந்தது. (ஆதாரம்: http://www.etymonline.com/index.php?allowed_in_frame=0&search=cry&searchmode=none)
ஆனால், இந்தப் பித்தலாட்டக்காரர்கள், அப்பாவித் தமிழர்களை எவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். தமிழ் எழுத்து நடையில் இல்லாத, குறிப்பிட்ட பிரதேசத்தில் புழங்கும் பேச்சு மொழிச் சொற்களை "ஆதாரம்" காட்டுகிறார்கள். அதை எதனுடன் ஒப்பிடுகிறார்கள்? ஆங்கில எழுத்து மொழியுடன் ஒப்பிடுகிறார்கள். எவ்வாறு தமிழில் பல விதமான வட்டார வழக்கு மொழிகள் உள்ளனவோ, அதே மாதிரி ஆங்கிலத்திலும் இருக்கலாம் என்ற உண்மையை உணர மறுக்கிறார்கள்.
வடக்கு இங்கிலாந்தில், லிவர்பூலில் பேசப்படும் ஆங்கிலமும், நியூகாசிலில் (New Castle) பேசப்படும் ஆங்கிலமும் பெருமளவு வித்தியாசம் கொண்டவை. பல சொற்கள் அந்தப் பிரதேசத்திற்கு உரியவை. உண்மையில் லண்டன் ஆங்கிலம் தான், பிற்காலத்தில் தரப் படுத்தப் பட்டது. அதையே நாம் எல்லோரும் கற்றுக் கொள்கிறோம்.
லண்டன் ஆங்கிலத்தில், பெருமளவு பிரெஞ்சுச் சொற்கள் கலந்துள்ளன. அது ஒன்றும் தற்செயல் அல்ல. ஆங்கிலேய அரச வம்சத்தினரின் பூர்வீகம் பிரான்ஸ்! 17 ம் நூற்றாண்டு வரையில், அரச குடும்பத்தினரும், பிரபுக்கள் குடும்பத்தினரும் பிரெஞ்சு மொழி பேசினார்கள்! அவர்கள் பேசியதும் தரப் படுத்தப் பட்ட பிரெஞ்சு மொழி தான். அதாவது "பாரிஸ் பிரெஞ்சு".
பிரான்சிலும் நிறைய வட்டார மொழிகள் உள்ளன. அதையெல்லாம் நாங்கள் கவனத்தில் எடுப்பதில்லை. இங்கிலாந்தில், பிரான்சில் உள்ள அனைத்து வட்டார வழக்கு மொழிகளையும் படித்து தெரிந்து கொள்வது சாத்தியமில்லை. இருப்பினும், "ஆங்கிலம் தமிழில் இருந்து வந்தது" என்று நிறுவ முனையும் "ஆய்வாளர்கள்", வட்டார மொழிகளையும் ஆராய வேண்டும். குறைந்த பட்சம், அவர்கள் எடுத்துக் காட்டும் சொற்களையாவது தேட வேண்டும்.
அப்படி எதுவும் செய்யாமல், தரப் படுத்தப் பட்ட ஆங்கில எழுத்து மொழியையும், குறிப்பிட்ட பிரதேசத்தில் மட்டும் பேசப் படும் தமிழ் பேச்சு மொழியையும் ஒப்பிடுவது எப்படி சரியாகும்? ஏனென்றால், எல்லா உலக நாடுகளிலும், தரப்படுத்தப் பட்ட எழுத்து மொழி, அந்தந்த நாடுகளில் இருந்த வட்டார மொழிகளை கலந்து தான் உருவானது.
ஆகவே, முதலில் நாங்கள் ஆங்கிலத்தையும், தமிழையும் தனித் தனியாக ஆராய வேண்டும். அந்தளவு தூரம், எந்த "ஆய்வாளரும்" செல்லப் போவதில்லை. அவர்களது நோக்கம், தமிழர்களில் சிலரை மூளைச் சலவை செய்து, தமது அரசியல் குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்வது மட்டுமே.