Showing posts with label பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம். Show all posts
Showing posts with label பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம். Show all posts

Saturday, August 26, 2017

தொழிலாளர், விவசாயிகளுக்கே கல்லூரிகளில் முன்னுரிமை - கம்யூனிசக் கல்வி அமைப்பு


ஒரு முதலாளித்துவ நாட்டில் கல்வி அமைப்பானது, உத்தியோகம் பார்க்கும் சிறிய அளவிலான மேட்டுக்குடி வர்க்கத்தை உருவாக்கும் நோக்கில் அமைக்கப் பட்டுள்ளது. மிகவும் புத்திசாலித்தனமான மாணவர்கள் மட்டுமே சித்தி அடையும் வகையில், பாடங்கள் கடினமான மொழி நடையில் எழுதப் படுகின்றன. ஒன்றை சுற்றி வளைத்து சொல்வதன் மூலம், தேவையில்லாத சொற்களை புகுத்துவதன் மூலம், பலருக்கும் புரிந்து கொள்ள முடியாதவாறு வேண்டுமென்றே கடினமாக்கப் பட்டுள்ளது.

இது பற்றி விமர்சித்தால் ஒரு பதில் தயார் நிலையில் இருக்கும்: "பாடங்களையும், சோதனைகளையும் இலகுவாக்கினால் எல்லோரும் பாஸ் பண்ணி விடுவார்களே!" அதாவது, முதலாளித்துவத்திற்கு சேவை செய்யும் அளவிற்கு தேவையான ஒரு சிறு தொகையினர் மட்டுமே போதும். எஞ்சியவர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. அவர்களைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை.

சோஷலிசப் புரட்சிக்கு முன்பிருந்த ரஷ்யாவிலும், சீனாவிலும் நிலைமை அப்படித் தான் இருந்தது. அப்போதிருந்த முதலாளித்துவ கல்வி அமைப்பானது, சமூகத்தில் உத்தியோகம் பார்க்கும் ஒரு அறிவுஜீவிக் குழாமை உருவாக்கிக் கொண்டிருந்தது. ரஷ்யாவில் அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் கிராமப்புறங்களுக்கு அனுப்பப் பட்டனர். அங்கு அவர்கள் விவசாயிகளுடன் தங்கியிருந்து, பண்ணைகளில், வயல்களில் வேலை செய்ய வேண்டும். அத்துடன் எழுத்தறிவற்ற கிராமிய மக்களுக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.

அறுபதுகளில் அமெரிக்க பொருளியல் பேராசிரியர் Granick, சோவியத் யூனியனில் நிறுவனங்கள் எப்படி இயங்குகின்றன என்று ஆராய்வதற்காக சென்று வந்தார். தாயகம் திரும்பிய பின்னர், "சிவப்பு நிர்வாகி" என்ற பெயரில் அவர் எழுதிய நூலில், சோவியத் பல்கலைக்கழக பரீட்சைகள் எப்படி நடக்கின்றன என்பதைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ஒரு பல்கலைக்கழக பரீட்சை மண்டபத்தில் அமர்ந்திருந்து மாணவர்கள் எப்படிப் பரீட்சிக்கப் படுகிறார்கள் என்பதைக் கண்டறிந்துள்ளார்.

அந்த நூலில் இருந்து: பரீட்சை மண்டபத்திற்குள் ஒவ்வொரு மாணவர்களாக அழைக்கப் பட்டனர். அங்கு கேள்வித்தாள்கள் கொண்ட மூன்று கடித உறைகள் இருந்தன. மாணவர் அதிலொன்றை தெரிவு செய்ய வேண்டும். கேள்விகளை வாசித்து குறிப்புகள் எழுதிக் கொள்வதற்கு சில நேரம் ஒதுக்கப் பட்டது. மாணவர் தயாரானவுடன், பரீட்சை நடத்தும் ஆசிரியர் கேள்வி கேட்பார். அவை திறந்த கேள்விகளாக இருந்தன. அதாவது, மாணவர் விரிவான பதில் கொடுக்க முடிந்தது. மேலும் பரீட்சைகள் பெரும்பாலும் வாய்மூலம் தான் நடக்கும். எழுதுவதற்கான அவசியம் இல்லை.

அமெரிக்காவுக்கு திரும்பிய பேராசிரியர் Granick, அமெரிக்க மாணவர்களினதும், ரஷ்ய மாணவர்களினதும் கல்வித் தகைமை சமமாக இருக்கிறதா என்பதையும் ஆராய்ந்துள்ளார். இரண்டு நாடுகளிலும் கல்வி போதிக்கும் முறையிலும், பரீட்சை நடத்தும் முறையிலும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. இருப்பினும் சித்தி அடைந்த மாணவர்களின் கல்வித் தகைமை கிட்டத்தட்ட ஒரே மட்டத்தில் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்.

கலாச்சார புரட்சிக்கு முந்திய சீனாவிலும், கல்வி முறை பெருமளவு மாற்றங்களுக்கு உள்ளாகவில்லை. அதிகாரத் தன்மை கொண்ட கல்வியாளர்கள், பாடத்திட்டங்களை வகுத்திருந்தார்கள்.

பல்கலைக்கழகம் என்பது உத்தியோகம் பார்க்கும் நோக்கில் சமூகத்தில் மேன் நிலைக்கு செல்ல விரும்புவோருக்கு வாய்ப்பளிக்கும் நிறுவனமாக இருந்தது. கலாச்சாரப் புரட்சிக்குப் பின்னர், அது தொழிலாளர், விவசாயிகளுக்கு சேவை செய்ய வேண்டியிருந்தது. அதற்காக பல்கலைக்கழகத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப் பட்டன. குறிப்பாக, தொழிலாளர்கள், விவசாயிகளை அனுமதிக்கும் வகையில், பல்கலைக்கழக அனுமதி இலகுவாக்கப் பட வேண்டும். அதற்காக, இரண்டு அல்லது மூன்று வருடங்கள் உற்பத்தியில் பங்கெடுத்த மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப் பட்டது.

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவன்/மாணவி, தான் வேலை செய்த தொழிற்சாலை அல்லது பண்ணையில் இருந்து சான்றிதழ் பெற்றுக் கொடுக்க வேண்டும். கூட வேலை செய்த சக தொழிலாளி ஒருவரும், புரட்சிகர கமிட்டியும் அந்த சான்றிதழில் கையொப்பமிட்டிருக்க வேண்டும். அது வரை காலமும் விவசாயிகள், தொழிலாளர்கள் பல்கலைக்கழகத்தில் சேரத் தடையாக இருந்த கடினமான அனுமதிப் பரீட்சைகள் அனைத்தும் இரத்து செய்யப் பட்டன.

படிக்கும் காலத்தில் பரீட்சைகளும் வேறு விதமாக நடத்தப் பட்டன. சிலநேரம் மாணவர்கள் ஒரு சிறு குழுவாக கூடியிருந்து கேள்விகளுக்கு விடை கூறினார்கள். பெரும்பாலானவை "திறந்த புத்தக" பரீட்சைகளாக இருந்தன. அதாவது பரீட்சை நடக்கும் இடத்திற்கு தான் படித்த பாடநூலையும் கொண்டு செல்லலாம். ஆனால், குறிப்பிட்ட நேர அளவிற்கும் பதில் எழுத வேண்டும். இது போன்ற பரீட்சைகள், சிலநேரம் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் நடக்கின்றன.

பாடநூல்கள், அனைவருக்கும் புரியும் வகையில் இலகுவான மொழி நடையில் எழுதப் பட்டிருந்தன. அது மிகவும் முக்கியமாக இருந்தது. ஏனென்றால், முன்பு நூல்களை எழுதிய பேராசிரியர்கள் வேண்டுமென்றே கடினமாக்கி வைத்திருந்தார்கள். 

Tsinghua பல்கலைக்கழகத்தில் கற்பித்த பேராசிரியர் ஒருவர் சுயவிமர்சனம் செய்து கொள்ளும் வகையில் பின்வரும் கருத்துக்களை கூறினார்:  
"நான் மக்களுக்கு சேவை செய்வதற்காக பாடநூல்களை எழுதி இருக்கவில்லை. மாறாக, எனது திறமைகளை காட்டுவதற்காக, கல்வியறிவை வெளிப்படுத்தும் வகையில் எழுதி இருந்தேன். என்னால் என்னவெல்லாம் முடியும் என்று காட்டுவதற்காக, பிரமிக்க வைக்கும் நோக்கில் பார்முலாக்களையும், வெளிநாட்டு மேற்கோள்களையும் பயன்படுத்தி இருந்தேன். சில தெரிவு செய்யப் பட்ட வாக்கியங்கள் மூலம் இலகுவாக விளக்கக் கூடிய பிரச்சனைகளை கடுமையாக்கி வைத்திருந்தேன். பல அருமையான கண்டுபிடிப்புகளை செய்திருந்த அனுபவம் மிக்க தொழிலாளி ஒருவர், எனது கடினமான விளக்கத்தை கேட்டு மனமுடைந்து போயிருந்தார். இதையெல்லாம் தான் என்றைக்குமே புரிந்து கொள்ள முடியாது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்."

பாடநூல்கள் இலகுவாக்கப் பட்டது மட்டுமல்லாது, கல்வி அமைப்பு முழுவதும் நடைமுறையுடன் ஒன்றிணைக்கப் பட்டது. ஒவ்வொரு கற்கையும் நடைமுறையுடன் கூடியதாக இருக்க வேண்டும். சில பல்கலைக்கழகங்கள் தமக்கென தொழிற்சாலைகள், விவசாயப் பண்ணைகளை கொண்டிருந்தன. ஆசிரியர்களும், மாணவர்களும் தொழிற்சாலைகள், பண்ணைகளுக்கு சென்று நடைமுறையில் எப்படி இருக்கிறதென்று படித்தார்கள்.

அதே மாதிரி, தொழிலாளர்கள், விவசாயிகள் பல்கலைக் கழகங்களுக்கு சென்று "வருகை தரும் பேராசிரியர்களாக" விரிவுரை ஆற்றினார்கள். மேலும், மாணவர்கள் தமது துறை சார்ந்த பாடங்களை மட்டும் படிக்கவில்லை. அரசியல் பாடம் அனைவரும் படிக்க வேண்டிய கட்டாய பாடமாக இருந்தது. அதில் தகைமை பெற்றிருந்த தொழிலாளர்கள் வந்து வகுப்பெடுத்தார்கள்.

நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையிலான மிகப்பெரும் இடைவெளியும் நிரப்பப் பட்டது. உதாரணத்திற்கு, மருத்துவ மாணவர்கள் கிராமப்புறங்களுக்கு சென்று மருத்துவமனை கட்டுவதற்கு உதவினார்கள். அதே மாதிரி, கிராமிய மக்கள் மருத்துவக் கல்லூரிக்கு வந்து பாரம்பரிய மருத்துவ முறைகள் பற்றியும், மூலிகைகள் பற்றியும் விளக்கினார்கள். 

உசாத்துணை:
De Rode Directeur, David Granick
Sociaslisme en Herstel van het Kapitalisme, Niek Scheerder

Thursday, May 11, 2017

முதலாளிகளை அகற்றி விட்டு தொழிலாளர்களே நிர்வகிக்க முடியமா?


தொழிலாளர்களே நிறுவனங்களை நிர்வகிக்க முடியமா? இந்தக் கேள்வியை பிரபல வலதுசாரி  எழுத்தாளர் ஜெயமோகனும் எழுப்பி இருக்கிறார். அரசிடம் வாங்கிய கோடிக்கணக்கான கடனைக் கட்ட மறுத்து, நாட்டை விட்டோடிய கிரிமினல் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு வக்காலத்து வாங்கும் கட்டுரையில் இதைக் கேட்டுள்ளார்.

அவரது கூற்றின் படி, அவர்கள் முதலாளிகள் அல்ல, தொழில்முனைவோர். அதுவும் ஒரு கலை தான். அதற்கென்று தனித் திறமை வேண்டும் என்று சொல்லிக் கொண்டு போகிறார். இடதுசாரிகள், அல்லது மார்க்சிஸ்டுகள் எதிர்பார்ப்பது போல தொழிலாளர்கள் நிர்வாகத்தை பொறுப்பெடுப்பது சாத்தியமில்லை என்று வாதாடுகிறார்.

ஜெயமோகனின் கட்டுரையில் இருந்து ஒரு பகுதி:
//மார்க்சியச் செவ்வியல் பார்வையில் மூலப்பொருட்கள், உழைப்பு, மூலதனம், நிர்வாகம் என்பதில் நிர்வாகத்திற்கான இடம் எவ்வகையிலும் முக்கியமானதல்ல. அதை உழைப்பாளிகள் தாங்களே செய்து கொள்ள முடியும் என்ற எண்ணத்திலிருந்துதான் மார்க்சியம் தொடங்குகிறது. நிர்வாகிகளான முதலாளிகளை முழுமையாக அகற்றி மூலப்பொருட்களையும் முதலீட்டையும் கைப்பற்றி தொழிலாளர்சமூகம் தாங்களே நிர்வாகத்தை நடத்தி உற்பத்தி வினியோகம் அரசமைப்பு ஆகியவற்றை ஆற்றுவவதற்குப்பெயர்தான் மார்க்ஸியப்பொருளியல்.
ஆனால் நடைமுறை அப்படி அல்ல. எப்படி அறிவியலாளர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள், அரசியல் நிபுணர்கள் தன்னியல்பான திறமைகளால் உருவாகி எழுந்து வருகிறார்களோ அதே போல உருவாகிவருபவர்கள்தான் முதலாளிகள். அவர்கள் குன்றாத தன்னம்பிக்கையும் புதுப்புது வாய்ப்புகளாகத் தேடும் கற்பனைவளமும் ஆளுமைத் திறனும் கொண்டவர்கள். அவர்களுடைய ஆளுமைத்திறன்தான் மூலப்பொருட்களையும் உழைப்பையும் மூலதனத்தையும் ஒருங்கிணைத்து உற்பத்தி சக்தியாக மாற்றுகிறது. ஓர் அறிவியலாளரும் சிந்தனையாளரும் எப்படி மாற்றீடு செய்யப்பட முடியாதவர்களோ அப்படித்தான் முதலாளிகளும். அவர்களைத் தொழில்முனைவோர், பெருநிர்வாகிகள் என்ற சொற்களால் குறிப்பிட விரும்புகிறேன்.//

மார்க்சியம் நடைமுறைச் சாத்தியமா என்று சந்தேகம் எழுப்புவோர் முதலில் முதலாளித்துவம் பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும். வருங்கால சோஷலிச சமுதாயத்திற்கான மையக்கரு இன்றைய முதலாளித்துவ சமுதாயத்தில் இருந்து தான் தோன்றுகிறது.

முதலாளிகளைப் பற்றிப் பேசினால், சினிமாவில் வருவது போன்று, தனி ஒரு நபர் முதல் போட்டு கம்பனி நடத்துவதாக நினைத்துக் கொள்கிறார்கள். அந்த எண்ணத்தில் தான், ஜெயமோகனும் விஜய் மல்லையாவை "தொழில் முனைவோர்" என்று எழுதி இருக்கிறார். சுமார் நூறாண்டுகளுக்கு முன்பே, பெரிய நிறுவனங்களின் கட்டமைப்பு மாறி விட்டது. ஒரு தொழிலதிபர் நிர்வாகியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.  

குறிப்பாக, கார்பரேட் நிறுவனங்களில், பெரிய வரையறுக்கப் பட்ட வர்த்தக நிறுவனத்தில் கூட, தனி ஒருவரை முதலாளியாகக் காண முடியாது. அதை ஒரு நிர்வாகிகள் குழு தான் நடத்துகின்றது. அந்த நிறுவனங்களில் பெருமளவு பங்குகளை வைத்திருப்போர் ஒரு குழுவாக ஒன்று கூடி நிர்வகிப்பார்கள்.

அது பெரும்பாலும் முக்கிய முடிவுகளை எடுக்கும் பங்குதாரர் கூட்டமாக இருக்கும். அவர்களில் பலர் முதல் போட்டு விட்டு, இலாபத்தை எதிர்பார்க்கும் உரிமையாளர்களாக மட்டுமே இருப்பார்கள். சிலர் தமக்கு இலாபத்தில் பங்கான டிவிடன்ட் பணம் கிடைத்தால் போதும் என்று வீட்டில் இருப்பதுமுண்டு.

அதே நேரம், சில முதலாளித்துவ ஆதரவாளர்கள் கற்பனை செய்வது போன்று, பங்கு வைத்திருக்கும் எல்லோருக்கும் முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். அதாவது, ஒரு சில பங்குகளை வாங்குவதால் மட்டும் ஒரு சாமானியன் முதலாளியாக முடியாது. ஒரு பங்கு வாங்கி வைத்திருப்பவரை விட, ஆயிரம் பங்குகள் வைத்திருப்பவருக்கு மட்டுமே பங்குதாரர் கூட்டத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கும். சுருக்கமாக சொன்னால், பெருமளவு பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு மட்டுமே கம்பனியில் உரிமை உண்டு. அவர்களைத் தான் முதலாளிகள் என்று அழைக்கிறோம். 

உண்மையில் பெரும் மூலதனத்தை செலுத்தியோர், அதாவது முதலாளிகள், கம்பனியை நிர்வகிக்கும் வேலை செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது. பொதுவாக அவர்கள் எந்த வேலையும் செய்வதில்லை.  சிலநேரம், தலைமை நிர்வாகிக்கு பங்குகளில் ஒரு பகுதியை கொடுத்து, அவரையும் பங்குதாரர் ஆக்கி இருப்பார்கள். (அதை விட போனஸ் தனியாகக் கிடைக்கும்.) ஏனையோர் சம்பளம் வாங்கிக் கொண்டு நிர்வாக வேலை செய்கிறார்கள். அதாவது, அதிகம் சம்பாதிக்கும் மூளை உழைப்பாளிகள். அவர்கள் வணிக முகாமைத்துவம், அல்லது அது போன்ற ஏதாவதொரு துறையில் பாண்டித்தியம் பெற்ற அறிவுஜீவிக் குழுவாக இருப்பார்கள்.

ஆகவே, வணிகம் பற்றியோ, நிர்வாகம் பற்றியோ எந்த அறிவுமற்ற, சிலநேரம் கல்வியறிவு எதுவுமற்றவர்கள் கூட, பங்குதாரர் என்ற பெயரில் கம்பனியின் நிர்வாகக் குழுவில் இருக்கலாம். இருந்தாலும், அவர்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்களாக இருப்பார்கள்.

அப்படியானால், ஏன் தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்தை நிர்வகிக்க முடியாது? அதாவது, பணம் படைத்த முதலாளிகளை மட்டுமே கொண்ட, பங்குதாரர்களின் நிர்வாகக் குழுவிற்குப் பதிலாக, தொழிலாளர்களின் பிரதிநிதிகளை கொண்ட நிர்வாகக் குழு அமைக்க முடியாதா? எது எப்படியோ, அவர்களுக்கு கீழே நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றவர்கள் சம்பளத்திற்கு தானே வேலை செய்கிறார்கள்?

முதலாளித்துவ நிறுவனங்களில், தலைமை நிர்வாகிக்கு சில பங்குகள் கொடுப்பதன் மூலம், அவரையும் பங்குதாரர் குழுவில் உறுப்பினர் ஆக்குகிறார்கள். அது ஏன் ஒரு சோஷலிச பொருளாதார நிர்வாகத்தில் சாத்தியப் படாது? அதாவது, ஒரு முதலாளித்துவ நிறுவனத்தில் ஒரு நிர்வாகி முதலாளிகளில் ஒருவர் ஆகிறார். ஆனால், சோஷலிச நிறுவனத்தில் ஒரு நிர்வாகி தொழிலாளிகளில் ஒருவர் ஆகிறார். அது மட்டும் தானே வித்தியாசம்? அவரது கடமையும், வேலையும் ஒன்று தானே?

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதை, பலர் தவறாக நினைத்துக் கொள்வதுண்டு. உண்மை நிலவரம் வேறு. இன்றைய முதலாளித்துவ கட்டமைப்பில், முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரம் நிலவுகின்றது. அதாவது, இங்கே ஒரு நிறுவனத்தை கட்டுப்படுத்தும் சர்வாதிகாரம் பங்குதாரர் எனப்படும் முதலாளிகள் குழுவிடம் உள்ளது. அதற்கு மாறாக, அதே நிறுவனத்தை கட்டுப்படுத்தும் சர்வாதிகாரம் தொழிலாளர் குழுவிடம் இருந்தால் அது தவறா?

மேலும், பங்குதாரர்களான முதலாளிகளுக்கு, அந்தத் தொழில்துறை சார்ந்த அடிப்படை அறிவிருக்குமா என்பது சந்தேகமே. அதற்குப் பதிலாக, தொழிற்சாலையும், அதன் உற்பத்தி பற்றியும் அனுபவ அறிவு கைவரப் பெற்ற தொழிலாளர்கள் நிறுவனத்தை மேற்பார்வை செய்கிறார்கள்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அடிப்படையில் ஜனநாயகத் தன்மை கொண்டது. ஏனென்றால், ஒரு தொழிலகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களால், ஒரு பொதுத் தேர்தலில் வாக்களித்து தெரிவான பிரதிநிதிகள் தான் தொழிலாளர் நிர்வாகத்தில் இடம்பெறுகிறார்கள்.  இன்றைய நிறுவனங்களின் முதலாளிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களா? இல்லையே! நாம் அன்றாடம் சந்திக்கும் சர்வாதிகாரத்தை, சாதாரணமாக எடுத்துக் கொள்வது எப்படி?  

இன்றைய காலத்தில், "ஜனநாயகம்" இருப்பதாக சொல்லப்படும் நாடுகளில், தனியார் நிறுவனங்கள் வளர்ந்து, பொருளாதாரத்தில் பெரும் பகுதியை கட்டுப்படுத்துகின்றன. அது எப்படி ஜனநாயகம் ஆகும்? அதிகாரமற்ற அரசியல்வாதிகளை பாராளுமன்றத்திற்கு தெரிந்தெடுப்பதால் மட்டுமே, அந்த நாட்டில் ஜனநாயகம் இருப்பதாக சொல்ல முடியுமா?

மேலதிக விபரங்களுக்கு,
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:


Sunday, May 03, 2015

மார்க்சியமும் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் எதேச்சாதிகாரம் அல்லவா? (கேள்வி - பதில்)


முகநூலில், யதார்த்தன் என்ற இளம் நண்பருக்கும் எனக்கும் இடையில் நடந்த அரசியல் தத்துவார்த்த உரையாடல். மார்க்சியம் பற்றி புதிதாக அறிந்து கொள்ளும் இளையோர் எழுப்பும் சந்தேகங்களுக்கு பதில் கூறுவதாக அமைந்துள்ள உரையாடல், மேலும் பலருக்கு பயன் தரும் என்பதால், அதை இங்கே பதிவிடுகின்றேன்.
-----------------------------------------------------------------



கேள்வி: ஒரு வகையில் மாக்சியமும் குறிப்பிட்ட வர்கமொன்றின் எதேச்சாதிகாரம் தான். அதிகாரம் யாரிலிருந்து பிறக்கிறதோ, அவர்களிடம் அதை கையாள கொடுப்பது பற்றி எத்தனை மாக்சிஸ்டுக்கள் சிந்தித்து இருக்கிறார்கள் ?

பதில்: அதற்கு முதலில் நீங்கள் உலக வரலாற்றை எடுத்துப் பாருங்கள். பிரெஞ்சுப் புரட்சியின் போது நடந்தது என்ன? மன்னராட்சி அல்லது பிரபுக்கள் வர்க்கத்திற்கு எதிரான, மத்தியதர வர்க்கத்தின் (பிரெஞ்சு மொழியில்: பூர்ஷுவா) "எதேச்சாதிகாரம்". அதற்குப் பிறகு நடந்த நெப்போலியன் போர்களையும் அதனுடன் சேர்த்துப் பார்க்க வேண்டும். அன்று ஐரோப்பாவில், பூர்ஷுவாக்களின் தாராளவாத(லிபரல்) கொள்கையின் பெயரால், மில்லியன் கணக்கானோர் படுகொலை செய்யப் பட்டனர்.

பிரான்சில் தேவாலயங்கள் இடிக்கப் பட்டன. பாதிரிகள் பூண்டோடு அழிக்கப் பட்டார்கள். கன்னியாஸ்திரிகள் "ஏசுவின் விபச்சாரிகள்" என்று தூற்றப் பட்டார்கள். புரட்சியாளர்கள் அவர்களை வன்புணர்ச்சி செய்து கொன்றார்கள். அது மட்டுமல்ல, புரட்சியை முன்னெடுத்த அரசிலே ஒருவரை ஒருவர் கொன்று குவித்தார்கள். தங்களது கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாற்றுக் கருத்தாளர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்தார்கள். "குறித்த வர்க்கமொன்றின் எதேச்சாதிகாரம்" இப்படித் தான் இருந்தது.

சோவியத் என்ற ரஷ்ய சொல்இன்று உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது. சோவியத் என்பது மக்கள் சபை. அதாவது, மக்கள் அனைவரும் பங்குபற்றும் நேரடி ஜனநாயகம். ஒவ்வொரு திட்டமும் விவாதிக்கப் பட்டு, பெரும்பான்மை வாக்குகளால் முடிவெடுக்கப் படும். கிராமிய மட்டத்தில் இருந்து, தேசியமட்டம் வரையில் சோவியத் கட்டமைப்பு ஒரே மாதிரித் தான் இருக்கும். அது ஏற்கனவே பிரான்சில் உருவான கம்யூன் அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. உலகில் அதைவிட சிறந்தவொரு ஜனநாயக அமைப்பை யாராலும் காட்ட முடியாது.

கேள்வி: சோவியத் என்ற சொல் இருக்கிறது ஆனால், சோவியத் யூனியன் எங்கே இருக்கிறது? பனியில் உருகி உடைந்த பெருங்கனவு எங்கே ?

பதில்: பாரிஸ் கம்யூன் என்ற சொல் இருக்கிறது. கம்யூனிச பாரிஸ் இப்போது எங்கே இருக்கிறது? ஆயிரம் வருட உலக வரலாற்றில், புதிய தேசங்கள் தோன்றுவதும், மறைவதும் வழமை. தேசங்கள் நிலைப்பதில்லை. ஆனால், ஒரு பூலோக சொர்க்கத்திற்கான மக்களின் கனவு மட்டுமே நிரந்தரமாக இருக்கும்.

கேள்வி: ஒரு சட்டகபடுத்தப்பட்ட கோட்பாட்டின் உறுதியின்மை. அது தேசத்தை உடைத்தது வரலாற்றபூர்வம் அல்லவா?

பதில்: தனக்கு எதிரான கோட்பாடு அரசாளுவதற்கு, வல்லமை பொருந்திய மூலதனம் அனுமதிக்கப் போவதில்லை. கையூட்டு, சூழ்ச்சி, எதிர்ப் பிரச்சாரம், குழி பறிப்பு, நாசவேலைகள், அனைத்தையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும். அதை முறியடிப்பதற்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அவசியம்.

கேள்வி: அதிகாரத்தை தோற்கடிக்கும் கூறு அவ்வெற்றியின் பின் தானும் அதிகாரமாகி விடுகின்றது. பாட்டாளிகளின் அதிகாரம் நிரந்தரமாகி விட்டால், வர்கமற்ற இயற்கை நிலை சுவர்க்கம் பற்றிய கனவு கனவு மட்டும் தானே?

பதில்: இதற்கு ஒரே வரியில் பதில் கூற முடியாது. விரிவான விளக்கம் அவசியம். வரலாற்றின் கடந்த காலங்களில், பல தடவைகள் இது போன்ற புரட்சிகள் நடந்துள்ளன. மார்க்ஸ்ஸுக்கு பிறகு தான் பாட்டாளி வர்க்கம் என்ற சொல் வழக்கத்திற்கு வந்தது. முதலாளித்துவசமுதாயத்தில் உழைப்பை விற்றுப் பிழைக்கும் பிரிவினர் என்ற வரைவிலக்கணம்கொடுத்து, கார்ல்மார்க்ஸ் அவர்களுக்கு அப்படி ஒரு பெயர் சூட்டினார். அனார்க்கிஸ்ட் சோஷலிஸ்டுகள் பாட்டாளிவர்க்கம் என்பதற்கு பதிலாக உழைக்கும் வர்க்கம் என்று அழைக்கின்றனர். இரண்டும் ஒன்று தான். 

நாங்கள் இப்போது முதலாளித்துவத்திற்கு முந்திய சமுதாயத்தை எடுத்துப் பார்ப்போம். அப்போதும் பாட்டாளிகள் இருந்தனரா? அன்று அவர்களுக்குவேறு பெயர் இருந்தது. அடிமைகள் என்றால் தெரியும். இந்திய சமுதாயத்தில் இருந்த தாழ்த்தப் பட்ட சாதியினரும் அந்த வகைக்குள் அடங்குவார்கள். ஆகையினால், உலக வரலாற்றில், எந்த நாட்டிலாவது அடிமைகள் அதிகாரத்தை கைப்பற்றினார்களா என்று பார்க்கவேண்டும்.

அடிமைகள் அதிகாரத்தை கைப்பற்றிய சம்பவங்கள்பலநடந்துள்ளன. ரோமர்கள் காலத்தில் நடந்த ஸ்பார்ட்டகஸ் எழுச்சி பண்டைய வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த எழுச்சி தோற்கடிக்கப்பட்டமையினால் அடிமைகள் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் என்ன செய்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. 

விவிலியநூலில் கூறப்படும் பாபிலோனிய யூத அடிமைகள் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் தமக்கென ஒரு மன்னராட்சியை ஸ்தாபித்தார்கள். வரலாற்றில் ஒரு குறிப்பிடத் தக்கதொரு மாற்றத்தை  கிறிஸ்தவ மதம் உண்டாக்கியது. ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதமும், ஆரம்பத்தில் அடிமைகளின் எழுச்சியாக இருந்துள்ளது. பிற்காலத்தில், ரோம அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தாமும் கிறிஸ்தவர்களாக மதம் மாறினார்கள். அதனால் ஒரு புரட்சிகர மாற்றம் நடந்தது. ஐரோப்பாவில் பாரம்பரிய அடிமைகள் முறை ஒழிக்கப்பட்டு, நிலப்பிரபுதத்துவ பண்ணையடிமை முறை வந்தது. 

வரலாற்றில் பதியப்பட்டுள்ள அண்மைய உதாரணம், ஹைத்தி அடிமைகளின் எழுச்சி. கருப்பின அடிமைகள் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர், புரட்சியை முன்னெடுத்த தலைவர்கள், தாமும் வெள்ளையின எஜமானர்கள் போன்று தான் நடந்து கொண்டனர். சுதந்திரமடைந்த அடிமைகள் முன்பு தாம் செய்த அதே வேலைகளைத் தான் தொடர்ந்தும் செய்ய வேண்டி இருந்தது.

மேற்குறிப்பிட்ட வரலாற்று சம்பவங்களில் இருந்து நாம் படிப்பினைகளை பெற வேண்டும். பாட்டாளிவர்க்கம் புரட்சி செய்து அதிகாரத்தை கைப்பற்றினால், அவர்களும் முதலாளிகள் போன்று நடந்து கொள்ள மாட்டார்களா? அது சாத்தியமானது தான். ஆகவே, பாட்டாளி வர்க்கத்தினரின் புரட்சியானது ஒரு சித்தாந்த அடிப்படையில் நடத்தப்பட வேண்டும். 

ஒருகட்சி அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். அந்தக் கட்சியின் கொள்கைகள் இயங்கியல் தத்துவ அடிப்படையில் இருக்க வேண்டும். அதற்காகத் தான் எத்தனையோ கோட்பாடுகள், அதைப்பற்றிய விவாதங்கள் நடக்கின்றன. கோட்பாடு இல்லாத புரட்சி நடந்தால், அது பழைய குருடி கதவைத் திறடி கதையாகத் தான் இருக்கும். அண்மைய உதாரணம்: துனீசியா, எகிப்து.


-----------------------------------------------------------------------------------------------------------------------

முகநூலில் நட்சத்திரன் செவ்விந்தியன் எனும் நண்பர் ஒருவருடன் நடந்த உரையாடல் இது: 

கேள்வி: நீங்கள் மார்க்சிய கோட்பாடுகளுக்கு அப்பால் செல்ல மாட்டீர்கள். அது ஒரு 19 ம் நூற்றாண்டுக் கோட்பாடு, நீங்கள் இன்னமும் 19 ம் நூற்றாண்டில் தான் வாழ்கிறீர்கள். 

பதில்: முதலாளித்துவம் ஒரு 18 ம் நூற்றாண்டு கோட்பாடு என்றால், மார்க்சியம் அதை விட நவீனமானது. முதலாளித்துவத்தின் குழந்தையாகத் தான் மார்க்சியம் பிறந்தது. 

கேள்வி: இன்றைய மேற்கத்திய உலகில் இயங்குவது 18 ம் நூற்றாண்டு முதலாளித்துவம் அல்ல. அது மாறி விட்டது.ஸ்கண்டிநேவிய நாடுகளில் கல்வி இலவசம். அநேகமாக எல்லா ஐரோப்பிய நாடுகளும் இலவச மருத்துவ வசதி செய்து கொடுத்துள்ளன. ஆனால்,நீங்கள் பழைய சிவப்புக் கோட்பாட்டை கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். 

பதில்: அனைவருக்குமான கல்வியும், மருத்துவமும் மார்க்சியத்திற்குப் பின்னரே நடைமுறைக்கு வந்தன என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள். பல மேற்கத்திய நாடுகளில், கல்வி, மருத்துவம் இலவசம் அல்ல. காப்புறுதி, அரசு மானியங்கள் மூலம் அனைத்துப் பிரஜைகளுக்கும் கிடைக்கும் வகையில் செய்து கொடுக்கப் பட்டுள்ளது. மார்க்சியர்கள் தான் அதனை ஒரு அரசியல் கொள்கை ஆக்கினார்கள். 

மார்க்சியர்களான சமூக- ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மை வாக்குகளால் வென்று அரசு அதிகாரத்தை கைப்பற்றினார்கள். அதற்குப் பிறகு தான் அரசு மாறியது. அரசு தான் மக்களுக்கு கல்வி, மருத்துவ வசதிகளை செய்து கொடுக்கின்றது. முதலாளிகள் அல்ல. அவர்கள் அதற்கு உடன்பட வேண்டிய கட்டாயம் இருந்தது. இல்லாவிட்டால் ஒரு புரட்சியை எதிர்நோக்க வேண்டியிருந்திருக்கும். ரஷ்யா,ஜெர்மனி, ஹங்கேரி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஏற்கனவே புரட்சிகள் நடந்திருந்தன. பிற ஐரோப்பிய நாடுகளும் அவற்றைத் தொடர்ந்திருக்கும். 

--------------------------------------------------------------------------------------------------------------------------


Monday, May 17, 2010

விரைவில்: "கிரேக்க மக்கள் சோஷலிச குடியரசு"?


(Athens, 15-5-2010)"கிரீசில் புதிய அரசியல் நிர்ணயச் சட்டம். நீதிபதிகள் மக்களால் தெரிவு செய்யப் படுவர். தொழிலகங்களும், அலுவலகங்களும் தொழிலாளர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் தலைமை தாங்கப்படும். கல்வியும், மருத்துவமும் அனைவருக்கும் இலவசம். பாடசாலைகளிலும், தொழிலகங்களிலும் இலவச மதிய உணவு வழங்கப்படும். வேறு பல திட்டங்கள் பின்னர் அறிவிக்கப்படும்." - கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் நாயகம் திருமதி பபாரிகாவின் உரையில் இருந்து சில பகுதிகள். KKE அணிவகுப்பும், பபாரிகாவின் உரையும் அடங்கிய வீடியோ இது:

50000 தொடக்கம் 70000 வரையிலான KKE என்ற கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஏதென்ஸ் நகரின் மையப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்ற வளாகத்தை கூட சுற்றி வளைத்திருந்தனர். கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி செயலாளரின் உரையானது, லெனின் தலைமையிலான போல்ஷெவிக் கட்சி முன்மொழிந்த ஏப்ரல் தீர்மானத்தை ஒத்திருந்ததாக பார்வையாளர்கள் கூறினார்கள். போல்ஷெவிக் கட்சியினர், 1917 ம் ஆண்டு, இடைக்கால அரசாங்கத்தை தூக்கியெறிந்து விட்டு "பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை" நிலைநிறுத்த விரும்பினர். லெனினின் "என்ன செய்ய வேண்டும்?" கோட்பாடு கிரீசில் நடைமுறைப் படுத்தப்படுமா?

Sunday, November 22, 2009

"பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்" - ஆவணப்படம்

பெரு வை சேர்ந்த மாவோயிச புரட்சி அமைப்பான "ஒளிரும் பாதை" ஆதரவாளர்கள் தயாரித்த "பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்" ஆவணப்படத்திற்கான சுட்டிகள்:

பகுதி 1
பகுதி 2
பகுதி 3


சர்வதேச புரட்சிக்கு வழிகாட்டும் ஒளிரும் பாதை வீடியோ.