ஜெர்மன் தொலைக்காட்சி "Arte " யில், ஒளிபரப்பான "Sklaverei auf Italienisch " என்ற ஆவணப்படம், "இத்தாலியின் நவீன அடிமைகள்" பற்றிய தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.
"செல்வந்த நாடாக வளர்ந்த", "அதி உன்னத நாகரீகமடைந்த", "ஜனநாயக, மனித விழுமியங்களை மதிக்கும்" மேற்கு ஐரோப்பிய நாடான இத்தாலியின் தக்காளி தோட்டங்கள் அடிமைகளின் உழைப்பால் செழிக்கின்றன. தெற்கு இத்தாலியில் உள்ள Cerignola, Candela , San Sever என்ற கிராமங்களை சூழவுள்ள பகுதிகள், "அடிமைகளின் முக்கோணம்" என அழைக்கப்படுகின்றன. இக்கிராமங்களில் உள்ள தக்காளி தோட்டங்களில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களுக்கு, முதலில் மணித்தியாலம் ஐந்து யூரோ வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்படுகிறது. ஆனால் இவர்களை பணிக்கமர்த்தும் முதலாளிகள், சம்பளத்தில் பெரும்பகுதியை போக்குவரத்து செலவுக்கென கழித்துக் கொள்கின்றனர். மேலும் பரிதாபகரமான நிலையில் உள்ள கூடார முகாம்களுக்குள் வாழும்படி நிர்ப்பந்திக்கப்படும், இந்த அடிமைத் தொழிலாளர்கள் வெளியேறா வண்ணம், காவல்காரர்கள் வேட்டை நாய்களுடன் ரோந்து சுற்றுகின்றனர்.
முகவர்களால் ஏமாற்றி அழைத்து வரப்படும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்களும், அகதிகளாக வரும் ஆப்பிரிக்கர்களும் இவ்வாறு அடிமைகளாக சுரண்டப்படுகின்றனர். இத்தாலியின் தக்காளித் தோட்டங்கள், உலகமயமாக்கப்பட்ட ஐரோப்பியரின் சுரண்டலுக்கு ஒரு சிறந்த உதாரணம். குறிப்பாக கானா நாட்டில் இருந்து வரும் அகதிகளின் அடிமை உழைப்பில் அறுவடை செய்யப்படும் தக்காளிகள், கானாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கானா சந்தைகளில் குறைந்த விலைக்கு விற்பனையாகும் இத்தாலி தக்காளிகள், கானாவின் உள்நாட்டு தக்காளி உற்பத்தியை பாதிக்கின்றன. வாழ்வாதாரத்தை இழந்த கானா விவசாயிகள், உயிரை மட்டும் காப்பாற்றிக் கொண்டு அகதிகளாக இத்தாலிக்குள் நுழைகின்றனர். (இந்தியா, இலங்கையிலும் இதே கதை தான் நடக்கிறது.)
தென் இத்தாலியில் சுரண்டப்படும் நவீன அடிமைகளின் அவல வாழ்வை சித்தரிக்கும் இரண்டு வீடியோக்களை இத்துடன் இணைத்துள்ளேன். இந்த வீடியோ எங்கோ ஒரு ஆப்பிரிக்க, அல்லது ஆசிய நாட்டில் படமாக்கப்படவில்லை. இத்தாலி என்ற வளர்ந்த நாட்டின் இருட்டான மறுபக்கங்கள் இவை.
3 comments:
குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்
இது போன்ற மக்களாட்சி/மனிதநேய விரும்பிகளிடம் தான் கடும் குளிரிலும், கொட்டும் மழையிலும் நின்று மனுக் கொடுக்க மன்றாடிக் கொண்டிருந்தோம் என எண்ணும் போது மிகக் கேவலமாக உணர்கின்றேன்...
உள்ளூரில் பிழைக்க தெரியாத முட்டாள்களே வெளிநாடு சென்று வதை படுவர்... இது இலங்கை மக்களுக்கும் பொருந்தும்...
Post a Comment