Showing posts with label மாவோயிஸ்ட்கள். Show all posts
Showing posts with label மாவோயிஸ்ட்கள். Show all posts

Friday, April 09, 2010

இந்திய இராணுவத்தை நிலைகுலைய வைத்த நக்சலைட்கள்

இந்திய துணைப் படையினருக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்திய சட்டிஸ்கார் தாக்குதலின் பின்னர் வெளியான அல்ஜசீரா விசேட அறிக்கை. மாவோயிஸ்ட் தலைவர்களில் ஒருவரான கிஷான்ஜியின் நேர்காணல் இடம்பெற்றிருப்பது சிறப்பம்சம்.
"இந்திய சனத்தொகையில் தொண்ணூறு சதவீத மக்கள் சர்வாதிகார ஆட்சியின் கீழ் வாழ்கின்றனர். மக்களுக்கெதிரான அரச பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடும் எவர் மீதும் தாக்குதல் தொடுப்போம்." - கிஷான்ஜி.


Friday, December 18, 2009

இந்திய அரச அதிகாரம் நக்சலைட்கள் வசம் வருமா?

இந்தியாவில் காணப்படும் ஏற்றத்தாழ்வான பொருளாதாரம். மேற்கத்திய வாழ்க்கைத்தரத்தை எட்டிப்பிடிக்கும் நடுத்தர வர்க்கம். வறுமையில் இருந்து மீள முடியாத உழைக்கும் வர்க்கம். அதிகரிக்கும் வர்க்க முரண்பாடுகள், நக்சலைட் இயக்க எழுச்சியின் ஆதாரம். ஒரு சில வருடங்கள் பழமையான ஆவணப்படம் என்றாலும், காலத்திற்கேற்ற மீள்பதிவு.


Wednesday, December 09, 2009

நேபாள தேசிய இனங்களின் சமஷ்டிக் குடியரசுகள்

வருகிற டிசம்பர் 11 ம் திகதி, "நேபாள தேசிய இனங்களின் சமஷ்டிக் குடியரசு" பிரகடனம் செய்யவிருப்பதாக மாவோயிஸ்ட்கள் அறிவித்துள்ளனர். புதிய குடியரசு 13 சமஷ்டி அடிப்படையிலான சுயாட்சிப் பிரதேசங்களைக் கொண்டிருக்கும். இவற்றில் 11 தேசிய இனங்களின் பெயர்களைக் கொண்ட "நாடு"களாக இருக்கும். தற்போதுள்ள அரசு நிர்வாகத்திற்கு சமாந்தரமாக, போட்டி அரசு ஒன்று ஸ்தாபிக்கும் எண்ணம் தமக்கில்லை என்று, மாவோயிஸ்ட்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மாவோயிஸ்ட்களின் குடியரசு பிரகடனம், மீண்டும் ஒரு போரின் அறிவிப்பாக கருதப்படும் என அரசு சார்பான அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே நவம்பரில் சில நாட்கள் அரசுக்கு சவாலாக விளங்கிய மக்கள் எழுச்சியை, மீண்டும் கொண்டு வருவதற்காக மாவோயிச ஆதரவாளர்கள் திரட்டப்படுகின்றனர். டிசம்பர் மாதம் நாடளாவிய வேலை நிறுத்தங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாவோயிஸ்ட்களை ஓரங்கட்டிய நேபாள அரசு புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கி வருகின்றது. அதன்படி 22 மே 2010 ல் நேபாளம் புதிய அரசியல் நிர்ணய சட்டத்தின் கீழ் ஆளப்படும். இந்த புதிய யாப்பின் பிரகாரமும் நேபாளம் சமஷ்டிக் குடியரசாவது நிச்சயம். அரசாங்கத்திற்கும், மாவோயிஸ்ட்களுக்கும் இடையிலான முரண்பாடு அரசியல் கொள்கை வேறுபாட்டில் இருந்து எழுந்துள்ளது. அரசாங்கம் முன்மொழியும் சமஷ்டி அலகுகளுக்கான அதிகாரப் பரவலாக்கல், வெறும் நிர்வாகப் பிரிவுகள் தாம். அமெரிக்காவும், இந்தியாவும், தன்னார்வ நிறுவனங்கள் ஊடாக மேற்குறிப்பிட்ட சட்டவாக்கத்திற்கு உதவி புரிந்துள்ளன. ஆனால் மாவோயிஸ்ட்கள் முன்மொழியும் சமஷ்டி குடியரசு, தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமையை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

மாவோயிஸ்ட் கொள்கை வகுப்பாளர்கள், தமது "நேபாள சோஷலிச குடியரசு" எப்படி இருக்கும் என்பதை ஏற்கனவே எழுதி வைத்துள்ளனர். மாவோயிஸ்ட் போராட்டத்திற்கு முந்திய நேபாளம் "உலகின் ஒரேயொரு இந்து நாடாக" இருந்தது. அங்கே பல்வேறு மொழிகள் பேசும் இனங்களின் தனித்துவம் மறுக்கப்பட்டு, நேபாள மொழியின் மேலாதிக்கம் நிலவியது. ஆட்சி மொழியான நேபாள மொழியை பேசுவோர் 50 வீதமானோர் மட்டுமே.(The World Factbook - Nepal) நெவர், மகர், தரு, மைதலி, தமாங் போன்ற மொழிச் சிறுபான்மையினரின் உரிமைகள் இதுவரை காலமும் புறக்கணிக்கப்பட்டு வந்தன. இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய நேபாள மொழி பேசும் பிராமணர்களும், சத்திரியர்களும் அரசியலிலும், பொருளாதாரத்திலும் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர். சீனர்களைப் போல தோற்றமளிக்கும், பல்வேறு இனங்களை சேர்ந்த பூர்வீக குடிகளின் பிரதேசங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளன. எந்தவொரு அபிவிருத்திப் பணிகளும் இன்றி புறக்கணிக்கப்பட்ட பிரதேச மக்கள் நிரந்தர வறுமைக்குள் வாழ்கின்றனர்.

மாவோயிஸ்ட் போராட்டத்திற்கு ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து ஆதரவு கிடைத்ததில் வியப்பொன்றுமில்லை. உலகின் மிகவும் வறுமையான நாடு, சாதி அடிமைத்தளைகளில் இருந்து விடுதலை பெற விரும்பிய மக்கள், மாவோயிஸ்ட்களின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தனர். தாழ்த்தப்பட்ட சாதிகள், ஒடுக்கப்பட்ட இனங்கள், மாவோயிஸ்ட் போராளிகளாக அணிதிரண்டனர். புதிய சமதர்ம நேபாளம், ஒவ்வொரு மொழி பேசும் இனமும் தன்னைதானே ஆளும் அதிகாரம் கொண்ட மாநிலங்களின் கூட்டமைப்பாக இருக்கும், என்று கட்சி பிரச்சாரம் செய்தது. தற்போது அமைதிப் பேச்சுவார்த்தைகள் காலத்தில், போராளிகள் தமக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு தலைமைப் பீடத்தை நெருக்குகின்றனர். பதவி சுகம் கண்ட மாவோயிஸ்ட் தலைவர்கள் கொள்கைகளை மறந்து விடாமல் இருப்பதற்காக, கீழ்மட்ட உறுப்பினர்கள் புரட்சியை வலியுறுத்தி வருகின்றனர். தமது உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் அபிலாஷைகளை தீர்ப்பதற்காக மாவோயிஸ்ட்கள் "நேபாள சமஷ்டிக் குடியரசு" பிரகடனத்தை கையில் எடுத்துள்ளனர்.

மாவோயிஸ்ட்களின் மக்கள் புரட்சியை துரிதப்படுத்தும் திட்டத்திற்கு வேறொரு காரணமும் உண்டு. "சிறி லங்கா நிலைமை" நேபாளத்திலும் தோன்றலாம் என்ற வதந்திகள் பரவி வருகின்றன. இந்தியாவின் பக்க பலத்துடன், இலங்கை அரச படைகள், "புலி அழிப்பு யுத்தத்தை" நடத்தி முடித்த பின்னர் உருவான அதிர்வலைகள் நேபாளத்தை எட்டியுள்ளது. இந்திய அரசு அறிவித்துள்ள, தனது நாட்டு மாவோயிஸ்ட்களுக்கு எதிரான போரானது, நேபாளத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக பார்க்கப்படுகின்றது. இந்திய மாவோயிஸ்ட்களுக்கும், நேபாள மாவோயிஸ்ட்களுக்கும் இடையில் நெருங்கிய உறவு இருப்பது அனைவருக்கும் தெரிந்த இரகசியம். இந்தியாவின் மறைமுக ஆதரவுடன் நேபாள இராணுவமும் "மாவோயிஸ்ட் அழிப்பு போரை" தொடங்க சாத்தியக்கூறுகள் உள்ளன. தற்போது கிடைத்து வரும் இது போன்ற தகவல்கள் யாவும், நேபாளத்தில் மீண்டும் ஒரு போர் தோன்றும் வாய்ப்பு இருப்பதைக் காட்டுகின்றன. மாவோயிஸ்ட்களின் மக்கள் புரட்சிக்கான அறைகூவலும், சமதர்ம சமஷ்டிக் குடியரசு பிரகடனமும், அவர்களும் போருக்கு தயாராகி வருவதை எடுத்துக் காட்டுகின்றன.

மேலதிக விபரங்களுக்கு:
Maoists to go on warpath again
-----------------------------------------------------------------------------------------------

முன்னைய பதிவு:
நேபாளத்தில் "மாவோயிஸ்ட் சுயாட்சிப் பிரதேசம்" பிரகடனம்!

Monday, November 23, 2009

Exclusive video: இந்தியாவில் மாவோயிஸ்ட் அரசு நிர்வாகம்

இந்தியாவில் மாவோயிஸ்ட்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் அன்றாட அரசியல் வாழ்க்கையை காட்டும் ஆவணப்படம். மக்களுக்கான இலவச மருத்துவமனை, நூலக வசதிகள் கொண்ட "கம்யூன்" விடுதலைப் பிரதேசங்கள். முகாம்களில் போராளிகளின் அணிவகுப்பு, அரசியல்மயப்படுத்தப்படும் மக்கள், இன்ன பிற. இதுவரை வெளிவராத தகவல்கள்.

Rising Maoists Insurgency in India
Part 1


Part 2


Part 3


Part 4


Part 5


Part 6

Monday, November 16, 2009

வீடியோ: நக்சலைட் போராளிகளிடம் நவீன ஆயுதங்கள்

இந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு,மாவோயிஸ்ட்கள் நவீன ஆயுதங்களுடன் தயாராகி வருகின்றனர். களத்திலிருந்து News X செய்தியாளர் அனுப்பிய வீடியோ அறிக்கை.
Naxalites with sophisticated weapons


Naxal Threat in Jharkhand

Friday, November 13, 2009

நேபாளத்தில் "மாவோயிஸ்ட் சுயாட்சிப் பிரதேசம்" பிரகடனம்!


2009 நவம்பர் ஒன்பதாம் திகதி, நேபாளத்தின் சில மாவட்டங்களை இணைத்து "கிராட் சுயாட்சிப் பிரதேசம்" அறிவிக்கப் பட்டுள்ளது. ஐக்கிய மாவோயிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக தன்னை அறிவித்துக் கொண்ட கோபால் என்பவர், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேசிய எழுச்சிக் கமிட்டி அங்கத்தவர்கள் விரைவில் தெரிவு செய்யப்படுவர் என்றும், அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. நேபாளத்தின் ஒரு பகுதியில் சுதந்திரப் பிரகடனம் செய்தவர்களுக்கு, தலைநகர் காத்மாண்டுவில் உள்ள மாவோயிஸ்ட் கட்சியின் தலைமைப்பீடம் ஆதரவு வழங்கியுள்ளது. மேலும் சில மாவட்டங்கள் "தனி நாடு" பிரகடனம் செய்ய உத்தேசித்துள்ளன. இத்தகைய தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனம், சமாதான ஒப்பந்தத்தை முறிக்கும் செயலாகும் என, சில அரசியல் அவதானிகள் அஞ்சுகின்றனர்.

லட்சக்கணக்கான மாவோயிஸ்ட் ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகரில் அரசாங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். மக்கள் கைகளில் அரச அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று போராடி வருகின்றனர். அவர்களது போராட்டத்திற்கு எதிர்பாராத விதமாக, ஐ.நா. மன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது. அதாவது "நிலைமையை மோசமாக்காமல், சமரசமாக போகும்படி", ஐ.நா. செயலதிபர் பான் கி மூன் கூறியுள்ளார். ஐ.நா. செயலதிபரின் கூற்று, அமெரிக்காவுக்கும், இந்தியாவிற்கும் எரிச்சலை உண்டாக்கியுள்ளது. காத்மண்டு ஆர்ப்பாட்டம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெற்றிருந்த போதிலும், "தனி நாடு சுதந்திரப் பிரகடனம்" பற்றிய தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. நேபாளத்தில் தொடரும் அரசியல் கொந்தளிப்புகளுக்கு பின்னால் உள்ள, இந்திய-சீன ஆதிக்கப் போட்டி, வேண்டுமென்றே மறைக்கப்படுகின்றது. நேபாளத்தை பகடைக்காயாக்கி பனிப்போரில் ஈடுபட்டுள்ள இந்தியாவும், சீனாவும் தமக்கிடையிலான நேரடி மோதலை தவிர்க்கப்பார்க்கின்றன.

நேபாளத்தின் தற்போதைய நிலைமையை புரிந்து கொள்ள, நாம் சற்று வரலாற்றில் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். பிரிட்டிஷார் விட்டுச் சென்ற காலத்தில் இருந்து, நேபாளம் இந்திய காலனி போன்றே நிர்வகிக்கப்பட்டு வந்தது. நேபாளம் இந்தியாவுடன் பெருமளவு வர்த்தக தொடர்புகளை கொண்டிருந்தது. மறுபக்க எல்லையில் சீனா இருந்த போதிலும், சீனாவுடனான உறவு பெயரளவில் மட்டுமே இருந்தது. தசாப்த காலமாக மாவோயிஸ்டுகளுடன் வெல்ல முடியாத போரில் ஈடுபட்டிருந்த மன்னர் ஞானேந்திரா சீனாவிடம் ஆயுதங்கள் வாங்கினார். அதுவரை நேபாள இராணுவத்திற்கு ஆயுத விநியோகம் செய்து வந்த இந்தியாவிற்கு இது பிடிக்கவில்லை. 240 ஆண்டு காலம் பழமை வாய்ந்த முடியாட்சியை முடிவுக்கு கொண்டு வந்த மக்கள் எழுச்சிக்கு இந்தியாவும் ஆதரவு வழங்கியது. இந்தியா கை விட்டு விட்டதாலேயே, மன்னரும் சிம்மாசனத்தை விட்டு நகர வேண்டிய நிலை வந்தது.

இதற்கிடையே இந்தியாவில் "நாடு கடந்த நேபாள அரசை" நிறுவுவதில் இந்தியா முனைப்புடன் ஈடுபட்டது. மன்னரால் விரட்டப்பட்டு இந்தியாவில் அஞ்ஞாதவாசம் செய்த பாராளுமன்றக் கட்சிகளுடன், ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகளையும் சேர்த்து, ஜனநாயகத்திற்கான ஐக்கிய முன்னணியை கட்டி எழுப்பியது. முடியாட்சியை அகற்றி விட்டு, அந்த இடத்தில் இந்திய சார்பு அரசாங்கத்தை அமைப்பது தான் நோக்கம். இத்தகைய திட்டம் ஏற்கனவே சிக்கிம் என்ற தேசத்தில் (தற்போது இந்திய மாநிலங்களில் ஒன்று) முன்னோட்டம் பார்க்கப்பட்டது.

மக்கள் எழுச்சிக்கு அடிபணிந்த மன்னர், ஜனநாயகத் தேர்தல்கள் நடத்த ஒப்புக்கொண்டார். பாராளுமன்ற பொதுத்தேர்தலில் மாவோயிஸ்ட்களும் பங்கெடுக்க வேண்டும் என்றே இந்தியாவும் எதிர்பார்த்தது. தேர்தலில் எப்படியும் அதுவரை ஆட்சியில் இருந்த இந்திய சார்பு கட்சிகளே வெற்றி பெறும், மாவோயிஸ்ட் கட்சிக்கு பெரும்பான்மை வாக்குகள் விழாது என்று, இந்தியா தப்புக்கணக்கு போட்டது. ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக, 2008 ம் ஆண்டு தேர்தலில், மாவோயிஸ்ட் கட்சியினர் 38 % வீதமான வாக்குகளைப் பெற்று, பெரும்பான்மை பலத்துடன் பாராளுமன்றம் சென்றனர். அப்போதும் சில அவதானிகள், பதவி சுகம் கண்ட மாவோயிஸ்ட்கள் புரட்சியை கைவிட்டு விடுவார்கள், அல்லது முன்னைய ஆட்சியாளர்களைப் போல இந்தியாவின் தயவை நாடுவார்கள் என்று கணித்தார்கள்.

எதிர்பாராவிதமாக மாவோயிஸ்ட் அரசாங்கம், நேபாள வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. புதிய அரசாங்கத்தில் யார் பிரதமராவது என்ற நீண்ட இழுபறிக்கு பின்னர், மாவோயிஸ்ட் தலைவர் பிரசந்தா பிரதமரானார். அதுவரை நேபாளத்தில் புதிதாக பதவியேற்கும் பிரதமர்கள், முதலில் இந்தியா சென்று ஆசீர்வாதம் வாங்கிய பிறகு தான் மறு வேலை பார்ப்பார்கள். அதற்கு மாறாக பிரசந்தாவின் முதலாவது வெளிநாட்டு விஜயம் சீனாவை நோக்கியதாக இருந்தது. பிரசந்தா பதவியேற்ற அதே காலகட்டத்தில், இடம்பெற்ற ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை பார்வையிட செல்வது என்ற சாட்டில், அந்த விஜயம் அமைந்திருந்தது. அதே காலகட்டத்தில் நேபாளத்தில் இடம்பெற்ற திபெத்தியர்களின் போராட்டம் கொடூரமாக அடக்கப்பட்டது. இதன் மூலம் பிரசந்தா அரசு, சீனாவின் நன்மதிப்பை பெறத் தவறவில்லை.

இந்திய பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவில் பிரிவினையை தூண்டும் சக்திகளுக்கு நேபாளம் இடம்கொடுக்க கூடாது என்று சீனா உறுதி மொழி வாங்கிக் கொண்டது. அதற்கு மாறாக நேபாளத்திற்கு தேவையான பொருளாதார, இராணுவ உதவிகளை செய்வதாக வாக்குறுதி அளித்தது. எது எப்படி இருந்த போதிலும், அடுத்தடுத்து நடைபெற்ற நிகழ்வுகள் யாவும், நேபாளம் சீனாவுடன் நெருக்கமாகி வருவதை எடுத்துக் காட்டின. நேபாள அறிவுஜீவிகள் குழுவொன்றுக்கு சீனாவின் நிபுணத்துவ பயிற்சி வழங்கப்பட்டது. பெப்ரவரி மாதம், சீனா வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான தூதுக் குழுவொன்றும், சீன இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகளும் நேபாளம் வந்தனர். மாவோயிஸ்ட் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலைப் படை தலைமைக் கமாண்டர் நந்திகிஷோர் தற்போது சீனாவில் தங்கியிருப்பதாக நேபாள பத்திரிகை ஒன்று தெரிவிக்கின்றது.

நேபாள உள்விவகாரங்களில் மீண்டும் இந்தியா தலையிட்டது. மாவோயிஸ்ட் அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது. பசுபதிநாத் ஆலய மதகுரு சம்பந்தமான சர்ச்சை நிச்சயமாக இந்தியாவிற்கு எரிச்சலைக் கொடுத்திருக்கும். காலங்காலமாக தென்னிந்தியாவில் இருந்து சென்ற பிராமணர்களே, பசுபதிநாத் சிவன் கோயிலின் தலைமை மதகுருக்களாக வீற்றிருந்தனர். மாவோயிஸ்ட் அரசாங்கம் உள்நாட்டு நேபாள பிராமணரை பதவியில் அமர்த்தியது. ஒரு சுற்று இந்தியா சென்று வந்த சர்ச்சை உச்ச நீதிமன்ற படியேறியது. மாவோயிஸ்ட்கள் வேறு வழியின்றி விட்டுக் கொடுக்க வேண்டியேற்பட்டது.

ஐ.நா. சமாதானத் திட்டப்படி நேபாள அரச படைகளில், மாவோயிஸ்ட் போராளிகளை சேர்த்துக் கொள்வதாக ஒப்பந்தம் போடப்பட்டது. மே மாதம், மாவோயிஸ்ட் அரசாங்கம் அந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர விரும்பிய போது, இராணுவ தளபதி கத்தாவால் மறுத்துவிட்டார். (இந்தியா சார்பானவர் என கருதப்படும்) இராணுவத் தளபதியின் பிடிவாதம் காரணமாக, பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பிரதமர் பிரசந்தா பதவியில் இருந்து நீக்கிய தளபதியை, அன்று மாலையே ஜனாதிபதி மீண்டும் பதவியில் அமர்த்தினார். ஜனாதிபதியின் செயல் அரசியல் சட்டத்திற்கு முரணானது என்று ஆட்சேபித்த மாவோயிஸ்ட்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினர். எதிர்க்கட்சி ஆசனங்களில் சென்று அமர்ந்து கொண்டனர்.

சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட இரு தரப்பிலும் நிலவிய நம்பிக்கையின்மை. திரைமறைவில் இந்தியாவின் சதிவேலைகள். இந்திய எஜமானுக்கு சேவை செய்யக் காத்திருக்கும் அரசியல் கட்சிகள். இது போன்ற பல காரணங்கள், தற்போதைய அரசியல் நெருக்கடியை தோற்றுவித்துள்ளன. இதற்கிடையே சோஷலிச புரட்சிக்கான போராட்டம் தொடரவேண்டும் என்று மாவோயிஸ்ட் கட்சிக்குள்ளே அழுத்தம் எழுந்தது. குறிப்பாக இளைஞர் அணியினர் பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட அரசியலில் ஆர்வம் காட்டினர்.

மாவோயிஸ்ட்கள் சீனாவுடன் நெருக்கமான உறவுகளை பேணுவதற்கு காரணம், ஒத்த தன்மை கொண்ட அரசியல் கொள்கை அல்ல. போராட்டம் நடைபெற்ற காலங்களில், மாவோயிஸ்ட்கள் சீன அரசை கடுமையாக விமர்சித்து வந்தனர். இன்றைய சீன ஆட்சியாளர்கள் முதலாளித்துவ சிந்தனையுள்ள திரிபுவாதிகளாக கணிக்கப்பட்டனர். அதே நேரம் நேபாள மன்னருடன் இராஜதந்திர உறவு வைத்திருந்த சீனா, மாவோயிஸ்ட்களின் எழுச்சி தனது நாட்டையும் பாதிக்கும் என எண்ணியது. மாறி வரும் உலகின், பூகோள அரசியல் நேபாள மாவோயிஸ்ட் கட்சியையும், சீனாவையும் நண்பர்களாக்கியுள்ளது. அச்சுறுத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு புறம், அதன் பிராந்திய நலன் காக்கும் இந்திய வல்லரசு மறு புறம், இவற்றை எதிர்த்து நிற்க வேண்டுமானால் சீனாவின் நட்புறவு அவசியம். சீனாவைப் பொறுத்த வரை, நேபாளம் இந்தியா எல்லையோரமாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது. இன்றைய சூழ்நிலையில், மாவோயிஸ்ட்கள், சீனா இருவரினது நலன்களும் ஒத்துப் போகின்றன. இந்திய ஆக்கிரமிப்பு சவால்களை மாவோயிஸ்ட்கள் துணிச்சலாக எதிர்த்து நிற்பதற்கு, சீனாவின் பக்கபலம் காரணம் என தலைநகர் காத்மண்டுவில் பேச்சு அடிபடுகின்றது. Nepal Maoist’s Agitation Enjoys China Support: Prachanda Claims



இது தொடர்பான முன்னைய பதிவு:
இமய மலையில் செங்கொடி ஏற்றிய மாவோயிஸ்ட்கள்

Saturday, October 24, 2009

ஆதிவாசிகள், ஏழைகள் மீதான போரை நிறுத்துக! - இந்திய அரசுக்கு கடிதம்

சர்வதேச அறிவுஜீவிகள், மனித உரிமையாளர்களின் அறைகூவல்!
இந்தியப் பிரதமருக்கு அனுப்பப் பட்ட வெளிப்படையான கடிதம்

ஆதிவாசி மக்கள் (மரபின மக்கள்) தொகை நிறைந்துள்ள ஆந்திர மாநிலம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராட்டிரம், ஒரிசா மற்றும் மேற்கு வங்களாத்தில் முன்னெப்போதும் காண இயலாத வகையில் ராணுவ படையும், துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டு, பெரும் ராணுவ தாக்குதல் நடத்த இந்திய அரசாங்கம் திட்டமிட்டிருப்பதை அறிந்து நாங்கள் பெரிதும் கவலை கொண்டுள்ளோம்.

மாவோயிஸ கலகக்காரர்களின் தாக்கத்திருந்து இப்பகுதியை விடுதலை செய்வது என்பதுதான் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள முன்தாக்குதலுக்கான முக்கிய காரணமாகும். இத்தகைய ராணுவ நடவடிக்கை அங்கு வாழும் இலட்சக்கணக்கான ஏழை மக்களின் வாழ்க்கையையும், வாழ்நிலை தேவைகளையும் பாதிப்புக்குள்ளாக்கி சாதாரண குடிமக்களின் பெருமளவிலான இடம்பெயர்தல், அவலநிலை, மனிதஉரிமை மீறல்களுக்கு வழிவகை செய்யும்.
உள்நாட்டு கலகத்தை ஒடுக்குகிற போர்வையில் மிகவும் ஏழ்மையான இந்திய குடிமக்களை துரத்தி சிக்கல் ஆழ்த்துவது என்பது ஒரு எதிர்மறை விளைவுகளையும், கேடு பயக்கத்தக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதாகவே அமையும். கலகக்காரர்களுக்கு எதிராக அரசாங்க முகவர்களால் நிதியுதவி அளிக்கப்பட்டு அணிதிரட்டப்பட்ட கூட்டுப்படைகளின் ஆதரவோடு துணை ராணுவ படையின் முன்னடத்திச் செல்லும் நடவடிக்கைகளினால் நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து ஏற்கனவே அப்பகுதியில் உள்நாட்டு போர் என்ற நிலைக்கு சமானமான சூழல் சட்டீஸ்கரில் சில பகுதிகளிலும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும் உருவாக்கியுள்ளது.

உழலும், ஏழ்மை மிகவும் மோசமான வாழ்நிலை போன்றவைதான் இந்தியாவின் ஆதிவாசி மக்கள் தொகையினர் எதிர்கொள்ளும் நிலைமையாகும். 1990களுக்குப் பின்னர் இந்திய அரசின் கொள்கை திட்டங்களில் ஏற்பட்ட புதிய தாராளவாத திருப்பங்களின் பின்னர், அதிகரித்து வரும் அரசு வன்முறையையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டி வந்தது, காடுகள், நிலங்கள், நதிகள், பொது மேய்ச்சல் நிலங்கள், கிராம ஏரிகள் மற்றும் பிற பொது மூலாதாரங்கள் போன்ற ஏழைகளின் பயன்பாட்டிற்கு எஞ்சியிருந்த பலவும். சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் சுரங்க வேலை, தொழிற்சாலை வளர்ச்சி, தகவல் தொழில்நுட்ப பூங்கா போன்ற‘ வளர்ச்சி திட்டம் என்ற போர்வையில் இந்திய அரசின் தீவிர தாக்குதலுக்கு உட்பட்டது.

இந்திய அரசாங்கம் ராணுவ தாக்குதல்நடத்த திட்டமிட்டுள்ள பகுதியின் பூகோள வடிவியல் கனிம வளங்களும், காட்டுச்செல்வங்களும், நீரும் நிறைந்த பகுதியாக இருப்பது மட்டுமின்றி, பல பெரும்நிறுவனங்களின் பெரிய அளவு சுரண்டலுக்கு இலக்காகவும் மாறிவிட்டுள்ளது.

வேறு வழியின்றி எதிர்ப்பு நடவடிக்கைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த மரபின மக்கள் இடம்பெயர்தலுக்கும் தனது பகுதிகள் அபகரிக்கப்படுவதற்கும் எதிராக நடத்தும் செயல்பாடுகளால் அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற பெரு நிறுவனங்கள் இப்பகுதியில் மேலும் நுழைய இயலாமல் தடுக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் ராணுவ தாக்குதல் என்பதே இம்மக்களின் வெகுஜன எதிர்ப்பை ஒடுக்கி பெரும் நிறுவனங்கள் நுழைவதற்கு வசதி செய்து கொடுக்கவும், அதன்மூலம் அப்பகுதியின் கனிம வளங்களையும் மக்களையும் தங்குதடையின்றி சுரண்டவும் வழிவகை செய்யவே என நாங்கள் அஞ்சுகிறோம்.

விரிந்துவரும் ஏற்றத்தாழ்வும். சமூக அளவிலான உரிமை மறுப்பும், ஏழை மக்களும் விளிம்பு நிலையில் உள்ளவர்களும் தமது சொத்துக்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக நடத்தும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு எதிரான அரசு வன்முறையும் போன்றவைகளே சமூக எரிச்சலும் கொந்தளிப்பும் உருவாக காரணமாகி ஏழை மக்களின் அரசியல் வன்முறை என்ற
வடிவத்தை பெறுகிறது.

பிரச்சினையின் மூல காரணத்தை சரியாக அணுகாமல் இந்திய அரசு ராணுவ தாக்குதல் மூலம் அதனை எதிர்கொள்ள முயல்கின்றது, அதாவது ”ஏழையைக் கொல்வோம், ஏழ்மையை அல்ல" என்பதுதான் இந்திய அரசாங்கம் மறைமுகமாக முன்வைக்கும் கோஷமாகத் தெரிகிறது.

இந்திய அரசாங்கம் தனது ஏழை குடிமக்களின் துயரங்களுக்கான காரணத்தை அணுக முயற்சிக்காமல் ராணுவ ரீதியாக அவர்களை ஒடுக்க முயன்றால். அது இந்திய ஜனநாயகத்திற்கு பலத்த அடியை ஏற்படுத்தும். இத்தகைய முயற்சியில்
குறுகிய கால வெற்றியும்கூட சந்தேகத்திற்குரியதாயினும் ,சாதாரண மக்களின் துயரங்கள் மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமேதுமில்லை. ஏனெனில் உலகம் முழுவதும் உள்நாட்டு எதிர்ப்பாளர்கள் மீது நடத்தப்படும் பல அனுபவங்களிருந்து இதனை காணமுடியும்.

இந்திய அரசாங்கம் ராணுவபடைகளை உடனே வாபஸ் வாங்கி, ஏழை மக்களின் துயரங்களை அதிகரிக்கச் செய்யும் உள்நாட்டு யுத்தத்தை தூண்டி விடக்கூடிய, அதன்மூலம்பெரும் நிறுவனங்கள் மூலவளங்களை சுரண்டுவதற்கு வகைசெய்யக்கூடியதிறன்படைத்த ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதைஉடனே கைவிட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். அனைத்துஜனநாயக உணர்வு கொண்ட மக்களையும் இந்த கோரிக்கையில் அணிதிரளுமாறு கோருகிறோம்.

இவண்.
அருந்ததிராய், அமித்பாதுரி, சந்திப்பாண்டே, கான் கொன்சால்வஸ், திபாங்கர் பட்டாச்சாரியா, சுமந்தா பானர்ஜி, மஹ்மூது மண்டானி, மீரா நாயர், ஆபாசுர், கியானேந்திரா பாண்டே, நோம் சோம்ஸ்கி, டேவிட் ஹார்வி, மைக்கேல் லெபோவிட்ஸ், பெல்லாமி ஃபாஸ்டர், ஜேம்ஸ் சி ஸ்காட் மற்றும் பிறர்.

(நன்றி: எக்கனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்கு)

குடியுரிமை பாதுகாப்பு நடுவம்.
99432 16762, 99433 11889, 94434 39869


Statement against Government of India’s planned military offensive in adivasi-populated regions: National and international signatories

Thursday, June 25, 2009

இந்தியாவில் கொந்தளிக்கும் உள்நாட்டுப் போர்


"சுதந்திரத்திற்குப் பின்னர், எமது தேசத்தின் பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் மாவோயிஸ்ட்களிடம் இருந்து வந்துள்ளது." - இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங்

கல்கத்தா நகரில் இருந்து, 170 கி.மி. தொலைவில் உள்ள லால்கர் பிரதேசத்தை, மாவோயிஸ்ட்கள் தமது கட்டுப்பாட்டில் உள்ள, விடுதலைப் பிரதேசமாக பிரகடனம் செய்திருந்திருந்தனர். இந்த அறிவிப்பும் அதைத் தொடர்ந்த இராணுவ நடவடிக்கையும், இந்திய தேசிய ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் பெற்றன. தாலிபான்களின் மீது போர் தொடுத்து பாகிஸ்தான் மீட்டெடுத்த ஸ்வாட் பள்ளத்தாக்கை ஒப்பிட்டு, "இந்தியாவின் ஸ்வாட் உருவாகின்றது" என தலையங்கம் தீட்டியது ஒரு பத்திரிகை. மேற்கு வங்காள மாநிலத்தில் மாவோயிஸ்ட்களின் கட்டுப்பாட்டு பிரதேசத்தை இராணுவ நடவடிக்கை முடிந்த கையோடு, அரசு மாவோயிஸ்ட்களை பயங்கரவாத அமைப்பாக தடை செய்தது.

மாவோயிஸ்ட்கள் மீதான தடை வெறும் அரசியல் தந்திரோபாயம் என்று சில அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். "இதுவரை அரசு மாவோயிஸ்ட்களை அடக்க என்ன செய்தது?" என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பலாம் என்பதற்காக பயங்கரவாத தடை வந்துள்ளதாக அவர்கள் ஆற்றுப்படுத்துகின்றனர். இந்திய அரசு முன்பு என்றுமில்லாதவாறு மாவோயிஸ்ட் இயக்கம் மாபெரும் அச்சுறுத்தல் என்று அறிவிப்பதும், பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தி தடை செய்வதும், எந்த வித உள் நோக்கமுமற்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவுகளல்ல. சுருக்கமாக சொன்னால், இது இந்தியாவின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்". 2001 ம் ஆண்டில், அன்றைய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷினால் நியூ யார்க்கில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்", தெற்காசியாவை வந்து சேர்ந்துள்ளது. வன்னி பெருநிலப்பரப்பில் இலங்கை அரசு முன்னெடுத்த மூர்க்கத்தனமான போர். அதேயளவு மூர்க்கத்துடன் ஸ்வாட் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் அரசு நடத்திய போர். இவையெல்லாம் பயங்கரவாத எதிர்ப்பு பதாகையின் கீழ், அமெரிக்க ஆசியுடன் நடந்த பதிலிப் போர்கள் தாம்.

"இந்தியாவின் 28 மாநிலங்களில், கிட்டத்தட்ட அரைவாசி மாநிலங்களில் மாவோயிஸ்ட்களின் பிரசன்னம் உணரப்படுகின்றது. மொத்த உறுப்பினர்கள் தொகை 20000 - 30000 அளவில் இருக்கலாம். காலாவதியான ஆயுதங்களை வைத்திருக்கும் பொலிஸ் படையால், நவீன ஆயுதங்களைப் பாவிக்கும் பெரும் எண்ணிக்கையிலான மாவோயிட்களை சமாளிக்க முடியவில்லை." முதலாளித்துவ ஊடகங்களே அத்தகைய தகவல்களை தெரிவித்து வருகின்றன. இவர்களின் கவலையெல்லாம், பொலிஸ் படைகள் நக்சலைட்களை எதிர்த்து போராடும் திறனைக் கொண்டிருக்கவில்லை. காலந் தாமதிக்காமல் இராணுவத்திடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்பது தான்.

மாவோயிஸ்ட்கள் ஏற்கனவே ஆந்திரா, சட்டிஸ்கர், பிஹார், ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களில் விடுதலைப் பிரதேசங்களை அமைத்துள்ளனர். இவை மாவோயிஸ்ட் கட்சியினரின் முழுமையான ஆதிக்கத்தின் கீழ் வந்துள்ள பிரதேசங்கள். இதைவிட கெரில்லாப் பிரதேசம் என அறிவிக்கப்பட்ட சில இடங்களில், தலைமறைவாக இயங்கும் மாவோயிஸ்ட்களின் உத்தரவுகள் செல்லுபடியாகின்றன. உதாரணத்திற்கு கெரில்லாப் பிரதேச முதலாளிகள் அதிகளவு சம்பளம் வழங்க வேண்டுமெனவும், கட்சிக்கு வரி செலுத்த வேண்டுமெனவும் பல உத்தரவுகள் நடைமுறைபடுத்தப் படுகின்றன. பெரும்பாலும் நாட்டுப்புற சிறிய நகரங்களையும், ஆதிவாசிகளின் காட்டுப்பகுதிகளையும் மாவோயிஸ்ட்கள் தமது கட்டுப்பாட்டு பிரதேசம் என அறிவித்துள்ளனர். இந்தியாவின் கீழ்த்திசை மாநிலங்களில் உள்ள அத்தனை கட்டுப்பாட்டுப் பிரதேசங்களின் மொத்தப் பரப்பளவு, இலங்கை அளவு இருக்கும்.

மேற்கூறப்பட்ட தரவுகள் எல்லாம் இந்திய அரசுக்கு, அல்லது ஊடகங்களுக்கு தெரியாதவை அல்ல. 1967 ம் ஆண்டு, மேற்கு வங்காளத்தில் நக்சல்பாரிக் கிராமத்தில் எழுந்த விவசாயிகளின் புரட்சி அடக்கப்பட்டு விட்டது என்றே பலரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். எழுபதுகளில் இந்திய அரசுக்கு சவாலாக விளங்கிய நக்சலைட்களின் போராட்டம் ஓய்ந்து விட்டது என்று தான் எல்லோரும் நம்பினார்கள். முன்னாள் போராளிகள் ஆயுதங்களைக் கைவிட்டு, "மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்" கட்சிகளாக பாராளுமன்ற அரசியல் வழியில் ஜனநாயகமயப்பட்டதும் அரசாங்கம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது. இருப்பினும் சிறு குழுக்கள் ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்த வண்ணம் இருந்தன. ஆந்திராவில் இயங்கிய மக்கள் யுத்தப் பிரிவும், பீகாரில் இயங்கிய MCC பிரிவும், சில சமயம் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இந்த சகோதர சண்டையும் இந்திய அரசை ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்க்க வைத்தது. நேபாளத்தில் மாவோயிஸ்ட் வெற்றி, இந்திய நக்சலைட்களுக்கு புத்துணர்ச்சி அளித்தது. மக்கள் யுத்தப் பிரிவு, MCC, மற்றும் சில உதிரிக் குழுக்கள் இணைந்து மாவோயிஸ்ட் கட்சியாக மறுவார்ப்புச் செய்து கொண்டனர்.

நக்சலைட் கிளர்ச்சியை அடக்குவதற்கு இராணுவப் பிரிவுகளை அனுப்பாததற்கு காரணம் இருக்கிறது. இந்திய தேசிய ஊடகங்கள் காஷ்மீர் அல்லது இஸ்லாமிய வன்முறை நடவடிக்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தன. காஷ்மீர் பிரிவினைக்கு எதிராக பிற மாநிலங்களையும், முஸ்லிம் சிறுபான்மைக்கு எதிராக இந்து பெரும்பான்மையினரையும் திசை திருப்பி விடுவதில் ஊடகங்கள் ஓரளவு வெற்றி பெற்றுள்ளன. சுருங்கக் கூறின், இனவாதம், மதவாதம் போன்றன இந்தியர்களைப் பிரித்து வைக்க உதவின. மாவோயிஸ்ட் கிளர்ச்சி பற்றிய செய்திகள் இந்தியர்களை ஏழை-பணக்காரன் என்ற வர்க்க அடிப்படையில் பிரித்து விடும். அமெரிக்காவை எட்டிப்பிடிக்க துடிக்கும் மத்திய தர வர்க்கம் ஒரு பக்கம் வளர்ந்து வருகையில், மறு பக்கம் பெரும்பான்மை இந்தியர்கள் வசதியற்ற ஏழைகள் என்ற உண்மையையும் மறைக்க முடியாது. ஏழைப் பாதுகாவலர்களான நக்சலைட் இயக்கம், ஒரு நிகழ்கால தோற்றப்பாடு என்பதை இந்தியர்கள் அறியக்கூடாது என்பதில் ஊடகங்கள் அவதானமாக இருந்துள்ளன. இது ஊடகங்களின் வர்க்கப்பாசத்தை இனங்காட்டுகின்றது.

அப்போது இந்திய அரசுக்கு தலைக்கு மேல் வேறு பிரச்சினைகள் இருந்தன. பரம வைரியான பாகிஸ்தான் காஷ்மீரில் எல்லைதாண்டி வந்து விடும் என்ற அச்சம் அலைக்கழித்தது. "உலகிலேயே அதிகளவு இராணுவக் குவிப்பை கொண்ட எல்லை" என வர்ணிக்கப்படும் காஷ்மீர் பிரதேசம், இந்திய அரசின் பாதுகாப்பு திட்டமிடலில் முதலிடத்தைப் பெற்றிருந்தது. தற்போதும் இடையிடையே நடக்கும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் காரணம் என்று குற்றம் சாட்டுவது, இந்திய வெளி விவகார கொள்கையின் தவிர்க்க முடியாத அம்சம் தான். இருப்பினும் திரை மறைவில் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான், ஒரு காலத்தில் தான் ஆதரவளித்த காஷ்மீர் தீவிரவாத அமைப்புகளை, தற்போது அடக்கி வைக்கின்றது. காஷ்மீர் கிளர்ச்சியை அடக்கும் கடமையை பாகிஸ்தான் பொறுப்பெடுத்து விட்டதால், இந்திய இராணுவம் இனிமேல் "மாவோயிஸ்ட் எதிர்ப்பு போரில்" ஈடுபடுத்தப்படும்.

கீழ்த்திசை மாநிலங்களில் மாவோயிஸ்ட்களை எதிர்த்துப் போரிட இந்திய இராணுவத்தை அனுப்புவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, சீனாவுடனான பூகோள அரசியல் முரண்பாடு. இரண்டாவது, பொருளாதார முதலீடுகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு. இது பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம். மாவோயிஸ்ட் போராட்டம், சீனாவுக்கு அருகில் அமைந்திருக்கும், இரும்புத் தாது வளம் மிக்க மேற்கு வங்காளம் வரை வந்த பிறகு தான் இந்திய அரசு விழித்துக் கொண்டது. ஒரு புதிய உள்நாட்டுப் போருக்கான ஆயத்தங்கள் வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாக பேசிய கௌர் சக்கரவர்த்தி என்பவர், கைது செய்யப்பட்ட நிகழ்வானது, வரப்போகும் கருத்துச் சுதந்திர அடக்குமுறைக்கு முன்னறிவித்தல் ஆகும். எப்போதும் போர் வருவதற்கு முன்னர், கருத்துச் சுதந்திர அடக்குமுறை வந்து விடும். இலங்கையிலும் அது தான் நடந்தது. துரதிர்ஷ்டவசமாக, எல்லா அரசாங்கங்களும் மனித உரிமைகளுக்கு மதிப்புக் கொடுத்தால், போரை நடத்த முடியாது என்ற கருத்தைக் கொண்டுள்ளன.

மாவோயிஸ்ட்களுக்கு சீனா உதவுவதாக இந்திய அரசு குற்றஞ் சாட்டி வருகின்றது. சீனா இதை மறுத்து வருகின்றது. சீனாவில் புரட்சிக்கு எதிரான (முதலாளித்துவ) கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருக்கின்றது. இருப்பினும் இன்றைய உலகமயமாக்கப்பட்ட சூழலில், சிந்தாந்த நட்புறவு சாத்தியமில்லை என்பது இந்திய அரசுக்கும் தெரியும். அவர்களது கவலை முழுக்க பூகோள அரசியல் சார்ந்தது. நேபாளத்தில் ஆட்சியில் இருந்த மாவோயிஸ்ட் அரசு, இந்தியாவை புறக்கணித்து சீனாவுடன் வர்த்தக உறவுகளை ஏற்படுத்தியது. அதனால் தான் அங்கே மாவோயிஸ்ட் அரசு கவிழ்க்கப்பட்டது என்று கருதப்படுகின்றது. இலங்கையில் இந்தியா வழங்கி வந்த ஆயுத உதவியை நிறுத்தியதும், சீனா வந்து புகுந்து கொண்டது. இலங்கை அரசுக்கு வேண்டிய அளவு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து போரை முடிக்க உதவியது. பிரதிபலனாக அம்பாந்தோட்டை துறைமுகத்தை பெற்றுக் கொண்டது. மாறிவரும் சர்வதேச அரங்கில் சீனா பலம் பெற்று வருவது, இந்தியாவுக்கும், அதற்குப் பின்னால் நிற்கும் அமெரிக்காவுக்கும் உவப்பானதாக இல்லை.

சீன எல்லையில் உள்ள அருணாச்சலப் பிரதேச மாநிலத்திற்கான உரிமை கோரலை சீனா இன்னும் கைவிடவில்லை. இந்த நிலையில் வட-கிழக்கு மாநிலங்களில் இந்திய இராணுவம் குவிக்கப்பட்டு வருகின்றது. தனது எல்லையில் நிறுத்தப்படும் இந்திய படைகள் பல மடங்காக பெருப்பதை, சீனா கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கவில்லை. சீனா தனது செல்வாக்கை பயன்படுத்தி, ஆசிய அபிவிருத்தி வங்கி இந்தியாவிற்கு வழங்கவிருந்த கடனை முடக்கியது. பின்னர் அமெரிக்காவின் தலையீட்டினால் தான் கடன் அனுமதிக்கப்பட்டது. மேலெழுந்தவாரியாக இரு நாடுகளுக்கும் இடையில் நட்புறவு நிலவி வந்த போதிலும், அமெரிக்க-இந்திய அணு சக்தி உடன்படிக்கையின் போது சீனா தனது அதிருப்தியை வெளிக்காட்டியது.

கடந்த வருடம் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இந்தியாவையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்த நிலையில், பெறுமதியான கனிம வளங்கள் அதிகமாக காணப்படும் ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் மாவோயிச போராளிகள் பலம் பெற்று வருகின்றனர். ஏற்கனவே ஒரிசாவில் அலுமினிய தொழிற்துறை மாவோயிஸ்டுகளின் தாக்குதல்களால் பின்னடைவை சந்தித்துள்ளது. மாவோயிஸ்ட்கள் அலுமினிய உற்பத்தியை முடக்குவதுடன், டைனமைட்களையும் கொள்ளையிட்டுச் செல்கின்றனர். தேசிய அலுமினிய நிறுவனமான NALCO, ஏப்ரலில் தனது சுரங்கங்கள் புரட்சியாளர்களால் தாக்கப்பட்டதில் இருந்து, 20 வீத வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சுரங்கங்கள் மட்டுமல்ல, அலுமினிய, இரும்பு மூலப்பொருட்களை ஏற்றிச் செல்லும் ரயில் விநியோகப் பாதைகளும் மாவோயிஸ்ட் போராளிகளினால் தாக்கப்படுகின்றன. ரயில்பாதையை குண்டு வைத்து தகர்ப்பது கூட விநியோகத்தை தற்காலிகமாக முடக்க போதுமானதாக உள்ளது. இதனால் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப் படுவதுடன், பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை தோற்றுவிக்கும் என தொழிலதிபர்கள் கவலைப்படுகின்றனர். மேற்கு வங்காளத்தில் லால்கர் பிரதேசம் மாவோயிஸ்ட் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததும், தொழிலதிபர்களின் இரத்தக் கொதிப்பு இரட்டிப்பாகியது. இந்தியாவில் மிகப் பெரிய இரும்பு உற்பத்தி நிறுவனமான JSW Steel, லால்கருக்கு அருகில் 10 பில்லியன் டாலர் செலவில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டிருந்தது. முதலீட்டாளர்கள் மனதில் "மாவோயிஸ்ட் பிரச்சினை" திகிலை ஏற்படுத்தியுள்ளமையை, JSW Steel அதிபர் குப்தா ஊடகத்திற்கு வழங்கிய செவ்வி எடுத்துக் காட்டுகின்றது. பொதுவாக தொழிலதிபர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதர்களாக வேஷம் போடுவது வழக்கம். ஆனால் ஒவ்வொரு போருக்குப் பின்னும் பொருளாதார நலன்கள் மறைந்து கிடக்கின்றன.


***********************************************************************
இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
தமிழ்நாட்டில் நக்சலைட்களின் மீள்வருகை