Showing posts with label தென்னிலங்கை. Show all posts
Showing posts with label தென்னிலங்கை. Show all posts

Monday, April 11, 2011

தென்னிலங்கை கிளர்ச்சியில் சிங்கள தலித்- படுகொலை


[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 13)

எல்லைப்புற நகரமான வவுனியா இரண்டாகப் பிரிந்து கிடந்தது. நகரின் வடக்குப் பகுதி தமிழர்களின் வாழ்விடமாகவும், தெற்குப் பகுதி சிங்களவர்களின் வாழ்விடமாகவும் இருந்தது. அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் வவுனியாவின் இன விகிதாசாரத்தை மாற்றியமைத்தது. நான் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பேரூந்து வண்டியில் சென்று கொண்டிருந்தேன். கொழும்பு போய்ச் சேரும் வரையில், ஏறத்தாள ஐந்து இடங்களில் இராணுவத்தினர் சோதனை செய்தார்கள். அனைவரும் வண்டியை விட்டிறங்கி வரிசையாகச் சென்று, அடையாள அட்டை காட்டி விட்டு, மீண்டும் ஏறிக் கொள்ள வேண்டும். காவலுக்கு நின்ற சிங்களப் படையினர், சிங்கள பயணிகளை அதிக நேரம் விசாரணை செய்தமை எமக்கு வியப்பாக இருந்தது. சிங்களப் பகுதிகள் எங்கும், ஜேவிபி கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்புப் படையினரை தாக்கி விட்டு ஓடினார்கள். இதனால் எல்லா இடங்களிலும் இராணுவம் குவிக்கப் பட்டிருந்தது. சோதனை கெடுபிடியும் அதிகமாக இருந்தது.

1971 ம் ஆண்டு, அரசுக்கு எதிரான ஜேவிபி புரட்சி, திட்டமிடல் கோளாறு காரணமாக தோல்வியுற்றது. குறிப்பிட்ட நேரத்தில் வானொலியில் மரண அறிவித்தல் ஒன்று ஒலிபரப்பாகும். அந்த இரகசிய தகவல் கிடைத்தவுடன் ஒவ்வொரு ஊரிலும் மறைந்திருக்கும் ஜேவிபி உறுப்பினர்கள், அங்குள்ள போலிஸ் நிலையத்தை தாக்க வேண்டும். இயக்கத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, திட்டமிட்ட நேரத்திற்கு முன்னரே சில இடங்களில் போலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டன. இதனால் சுதாகரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினர் உஷாரானார்கள். வேட்டைத்துப்பாக்கிகளையும், நாட்டு வெடிகுண்டுகளையும் மட்டுமே வைத்திருந்த, போரியல் அனுபவமற்ற ஜேவிபி கிளர்ச்சியை முறியடிப்பது, போலிசுக்கு சிரமமானதாக இருக்கவில்லை. ஆனால் அதைத் தொடர்ந்த படுகொலைகள் தான், அரசு ஒரு கொடூரமான அடக்குமுறை இயந்திரம் என்பதை நிரூபித்தது.

1971 , நாடு முழுவதும் நடந்த நர வேட்டையில் சுமார் பதினையாயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். 1987 - 1990 காலப் பகுதியில் நடந்த இரண்டாவது கிளர்ச்சியில் எழுபதாயிரம் பேர் கொல்லப்பட்டனர். சிறிலங்காவின் சிங்கள அரசு, தனது சொந்த இன மக்களையே ஈவிரக்கமின்றி கொன்று குவித்தது. ஏன் இந்தப் படுகொலைகள், சிங்கள மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான தார்மீக எழுச்சியை தோற்றுவிக்கவில்லை? இந்திய இனங்களில் ஒன்றான சிங்கள இனமும், சாதிப் பாகுபாடுகளால் பிளவுண்ட சமூகமாகும். அரசியல் ஆதிக்கம் உயர்சாதியினரான கொவிகம (தமிழில்: வெள்ளாளர்) கைகளிலேயே இருந்து வருகின்றது. ஆளும் வர்க்கத்தில் பெரும்பான்மையானோர் அந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள். பிற சாதிகள் யாவும் வாய்ப்பு மறுக்கப்பட்டு, அதிகாரமற்ற நிலையில் உள்ளன.

இலங்கை வரலாற்றில் முதன் முதலாக, ஜேவிபி என்ற கட்சியில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினர் பெருமளவில் அங்கம் வகித்தனர். தலைவர் ரோகன விஜேவீர, உட்பட பல ஜேவிபி தலைவர்கள் பிற்படுத்தப்பட்ட கரவா (தமிழில்: கரையார்) சாதியை சேர்ந்தவர்கள். அரச படையினர், ஜேவிபி உறுப்பினர்களை கருணை காட்டாமல் கொன்று குவித்தமைக்கு, கொவிகம சமூகத்தினரின் சாதிவெறி முக்கிய காரணம். ஒடுக்கப்பட்ட சிங்கள தலித் மக்களின் போராட்டம் எந்த வடிவில் வந்தாலும், சாதிவெறியர்களின் சிறிலங்கா அரசு ஈவிரக்கமின்றி நசுக்கி அழிக்கும். இலங்கை அரசு குறித்த இந்த உண்மை, இன்னமும் பெரும்பான்மை தமிழ் மக்களுக்கு தெரியாது. தமிழர்கள் மத்தியில் உள்ள ஆதிக்க சாதியினரும், தலித்திய விரோதிகளும் அத்தகைய செய்திகளை இருட்டடிப்பு செய்து வருகின்றனர்.

1971 திடீர் கிளர்ச்சியின் தோல்வியின் பின்னர், ஜேவிபி தனது தந்திரோபாயங்களை மாற்றிக் கொண்டது. தனது உறுப்பினர்கள் இராணுவத்தில் சேருவதை ஊக்குவித்தது. பின்னொரு காலத்தில் புரட்சி வெடித்தால், இராணுவத்தில் ஊடுருவியுள்ள ஜேவிபி உறுப்பினர்களை கலகத்தில் ஈடுபடுத்தும் திட்டம் இருந்திருக்கலாம். 1984 ம் ஆண்டு, யாழ்ப்பாணத்தில் ஒரு ஈழ விடுதலை இயக்கம் துண்டுப் பிரசுரமொன்றை வெளியிட்டது. "தமிழ் மக்களுக்கோர் நற்செய்தி! தமிழர் பிரதேசத்தை ஆக்கிரமித்துள்ள இராணுவம் குறித்து அஞ்ச வேண்டாம். ஆயிரக்கணக்கான ஜேவிபி உறுப்பினர்கள் இராணுவத்தில் ஊடுருவியுள்ளனர். சிறிலங்கா பேரினவாத அரசைக் கவிழ்ப்பதற்கு தருணம் பார்த்துக் காத்திருக்கின்றனர்." அன்றைய தமிழ் மக்கள் மனதில், அந்தச் செய்தி ஓரளவு நிம்மதியைத் தந்தது எனலாம்.

அறிவுஜீவித் தனமான வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பால், அன்றைய தமிழ் மக்களின் மன நிலையைப் புரிந்து கொள்வது அவசியம். ஈழப்போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில், நிச்சயமான எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்தார்கள். பெரும்பான்மை இனமான சிங்களவர்களின் அரசை, எண்ணிக்கையில் சிறுபான்மையான தமிழரின் இயக்கங்கள் எவ்வாறு வெல்ல முடியும்? இந்தியா வந்து காப்பாற்றும் என்பது பகற்கனவு. ஆகவே பெரும்பான்மை சிங்கள இனத்தை சேர்ந்த ஜேவிபியின் கிளர்ச்சி வெற்றி பெற்றால், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் போராளிக் குழுக்கள், ஈழப் பிரதேசத்தின் ஆட்சியைக் கைப்பற்றுவார்கள் என்று நம்பினார்கள். அதற்கான நடைமுறைச் சாத்தியம் இருந்ததையும் மறுக்க முடியாது. ஜேவிபி பிரிவினையை ஆதரிக்கவில்லை. அதே நேரம், ஈழ விடுதலை இயக்கங்கள் ஜேவிபியையும் பேரினவாதக் கட்சிகளின் பட்டியலில் வைத்துப் பார்த்தன. இருப்பினும் ஆளும் கட்சிகளின் நடைமுறை பேரினவாதத்தை விட, ஜேவிபியின் கோட்பாட்டு பேரினவாதம் தீமை பயப்பதாக தெரியவில்லை.

எனக்கும் ஜேவிபி குறித்து அரசியல், கருத்தியல் விமர்சனங்கள் உண்டு. இருப்பினும், சிங்கள அடித்தட்டு மக்களும், தலித் சாதிகளும் பாராளுமன்ற அரசியலில் நம்பிக்கை இழந்திருந்த காலத்தில் ஜேவிபி தோன்றியது. ஜேவிபி எத்தகைய மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தியது? 1971 புரட்சி எந்த இலக்கை அடைவதற்காக நடத்தப்பட்டது? அவர்களைப் பின்பற்றும் மக்கள் எதற்காக ஆதரித்தார்கள்? இது போன்ற விடயங்களை தமிழ் ஊடகங்களும், தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் மக்கள் அறியா வண்ணம் தடுக்கின்றனர். அவர்களின் வர்க்க அரசியலை வெறுக்கும், வலதுசாரிய கண்ணோட்டமே அதற்கு காரணம். Anil's Ghost (by Michael Ondaatje) நாவலில் அன்று நடந்த சம்பவங்கள் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிங்கள மக்களும் மோசமான அரச அடக்குமுறைகளுக்கு முகம் கொடுத்தனர். ஒப்பீட்டளவில் தமிழ்ப் பகுதிகளில் உள்ளதை விட, அதிகளவு சிங்களவர்கள் வறுமைக் கோட்டுக்குள் கீழே வாழ்கின்றனர். கடந்த நாற்பதாண்டுகளாக தமிழ் தேசியம் பேசும் இனவாத அரசியல்வாதிகள், இது போன்ற உண்மைகளை தமிழ் மக்களுக்கு மறைத்து வந்துள்ளனர். அவர்களின் பிரச்சாரங்களை கேட்கும் தமிழ்ப் பாமரன், சிங்களப் பகுதிகளில் பாலும் தேனும் ஆறாக ஓடுவதாக நினைத்துக் கொள்கிறான்.

முன்னொரு காலத்தில், தமிழ் மக்களால் "சேகுவேரா காரர்கள்" என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஜேவிபி, இந்திய-இலங்கை ஒப்பந்தத்துடன் முற்றாக மாறிப் போனது. இந்தியா தமிழர்களுக்கு ஈழம் பிரித்துக் கொடுக்க வந்திருக்கிறது, என்ற தொனிப்பட சிங்கள மக்களை இலக்கு வைத்து இனவெறிப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு ஆதரவாக இருந்த, மக்கள் ஆதரவைப் பெற்ற அரசியல்வாதி விஜயகுமாரதுங்க சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னாளில் ஜனாதிபதியான சந்திரிகாவின் கணவரான விஜயகுமாரதுங்க, தமிழர்களின் உரிமைகளுக்கு ஆதரவான இடதுசாரி அரசியல் தலைவர். கொலைக்கு யாரும் உரிமை கோராது விடினும், ஜேவிபி சம்பந்தப் பட்டுள்ளதாக பலர் நம்பினார்கள். விஜயகுமாரதுங்கவை ஜேவிபி கொலை செய்வதற்கு முக்கிய காரணம், அவர் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்ற இடதுசாரித் தலைவர் என்பது தான். அதாவது இலங்கையின் இடதுசாரி அரசியலைப் பொறுத்த வரையில், தங்களுக்கு போட்டியாக யாரும் இருக்கக் கூடாது என்று ஜேவிபி எண்ணியிருக்கலாம். தென்னிலங்கையில் அடுத்தடுத்து நடந்த கொலைகளில், மத்திய- இடதுசாரி சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் இலக்கு வைக்கப் பட்டனர்.

பிற்காலத்தில் ஜேவிபி இலிருந்து பிரிந்து வந்து வெளிநாட்டில் தஞ்சம் கோரிய முன்னாள் பொறுப்பாளர் ஒருவர் அந்தக் காலத்தை நினைவு கூர்ந்தார். "வடக்கில் புலிகள் அமைப்பு எப்படி இயங்கியதோ, அதே வழியில் தெற்கில் ஜேவிபி இயங்கிக் கொண்டிருந்தது. கொள்கைகள், கோஷங்கள், செயற்பாடுகள் எல்லாவற்றிலும் எமக்கிடையே நிறைய ஒற்றுமைகள் காணப்பட்டன. அரசுக்கு ஆதரவானவர்கள், ஜேவிபியுடன் முரண்படுபவர்கள், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஆதரித்தவர்கள்.... அனைவரும் துரோகிகள். துரோகிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவது நியாயம் என்றோம்." இறுதிக் காலத்தில் அவரும், வேறு சில தோழர்களும் ஜேவிபியில் இருந்து பிரிந்து சென்ற பொழுது, அவர்களும் துரோகிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

கொழும்பில் நான் நின்ற காலத்தில், ஈழப்போராட்டத்தின் ஆரம்பகால யாழ் நகரில் நிற்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஈழ விடுதலை இயக்கங்கள் செய்ததைப் போல, ஜேவிபி ஊரில் உள்ள சமூகவிரோதிகளை எல்லாம் தீர்த்துக் கட்டியது. ஒரு காலத்தில் அட்டகாசம் பண்ணிய ரவுடிகள், தாதாக்கள், திருடர்கள் எல்லோருக்கும் மரண தண்டனை விதித்தார்கள். அவர்களது சடலங்கள் தந்திக் கம்பத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். "இந்த காரணத்திற்காக இந்த சமூகவிரோதிக்கு தண்டனை வழங்கப்பட்டது..." போன்ற வாசகங்கள் காணப்பட்டன. ஜேவிபியின் இராணுவ அமைப்பான "தேசபக்த மக்கள் முன்னணி" உரிமை கோரியிருக்கும். நாட்டில் இருந்த கிரிமினல்கள் எல்லோரும் ஜேவிபிக்கு பயந்து பதுங்கிக் கொண்டார்கள். இதனால், கிரிமினல் குற்றங்கள் வெகுவாகக் குறைந்தன. மறுபக்கத்தில் அரசியல் படுகொலைகள் அதிகரித்துக் கொண்டிருந்தன.

பொது இடங்களில், பஸ் நிலையங்கள், தந்திக் கம்பங்கள் எங்கும் ஜேவிபியின் தாக்குதல்களுக்கு உரிமை கோரும், அல்லது பொது மக்களுக்கான அறிவிப்புகளைக் கொண்ட சுவரொட்டிகள் காணப்பட்டன. குறைந்தது மாதம் ஒரு முறை ஏதாவதொரு காரணத்திற்காக ஹர்த்தால் அறிவிப்பார்கள். அன்றைய தினம் கடைகள் பூட்டப்பட்டிருக்க வேண்டும். எங்காவது ஒரு கடை திறந்து வியாபாரம் நடந்தால், ஜேவிபி உறுப்பினர்கள் கிரனேட் வீசி விட்டுச் செல்வார்கள். தனியார் நிறுவனங்கள் யாவும் ஜேவிபி உத்தரவுக்கு அடிபணிந்தன. அரச நிறுவன ஊழியர்கள் மட்டும், கட்டாயம் வேலைக்கு செல்ல வேண்டிய நிலைமை.

ஹர்த்தால் தினத்தன்று வேலைக்கு புறப்பட்ட, ஒரு அரச திணைக்கள ஊழியரிடம் வினவிய பொழுது; "எனக்கு ஜேவிபி சம்பளம் தருவதில்லை. அதனால் அவர்கள் பேச்சை கேட்க வேண்டியதில்லை. ஒரு நாள் ஹர்த்தால் அனுஷ்டிப்பதால் என்ன சாதித்து விடப் போகிறார்கள்?" என்று காட்டமாக பதிலளித்தார். கொழும்பு அன்றிருந்த நிலைமையில், ஜேவிபிக்கு எதிராக விமர்சிப்பது கூட ஆபத்தை விலைக்கு வாங்குவதாகலாம். நான் ஒரு தமிழர் என்பதால் தான், அந்த சிங்கள ஊழியர் என்னை நம்பி கதைத்தார். இன்னொரு சிங்களவராக இருந்திருந்தால், எச்சரிக்கையுணர்வுடன் ஜேவிபி குறித்து எந்தக் கருத்தும் கூறியிருக்க மாட்டார். அன்று மக்கள் அரசியல் பேசவே பயந்தார்கள். ஜேவிபியை அல்லது அரசை எதிர்ப்பதோ, ஆதரிப்பதோ, இரண்டுமே ஆபத்தானவை. மக்கள் துப்பாக்கி நிழலின் கீழ் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

(தொடரும்...)


தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
12.ஈழ அகதிகளுக்கு தஞ்சம் அளித்த சிங்கள அரசு!
11.யாழ் குடாநாடெங்கும் ஆயுதப் புதையல்கள்
10.ஈழத் தமிழருக்கு இந்தியர்களும் அடக்குமுறையாளர்கள்
9.அந்நிய இராணுவத்தின் முற்றுகைக்குள் யாழ் குடாநாடு
8.ஆக்கிரமிப்புப் படையாக மாறிய அமைதிப் படை
7.ஆயுதக் குழுக்களுடன் அமைதி காத்த இந்திய இராணுவம்
6.இந்தியத் தலையீடுகளும், ஜேவிபி யின் ஐயப்பாடுகளும்
5.யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய இந்தியப் படைகள்
4.சென்னையில் அடைக்கலமான அகதிகளும், போராளிகளும்
3.தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை
2.ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா
1.இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்