Showing posts with label தமிழீழம். Show all posts
Showing posts with label தமிழீழம். Show all posts

Monday, July 03, 2023

தமிழீழத்தில் உள்ள சாதிப் பெயர் கொண்ட ஊர்களின் விபரம்

 "ஈழத்தில் சாதி இல்லை" என்று பூசி மெழுகிய பாசிச பன்னாடைகள் அனைவரும் வரிசையில் வரவும். 

இது என்ன? 

வவுனியா மாவட்டத்தில் உள்ள இரண்டு ஊர்களின் பெயர்கள்: 

1. பறையனாலங் குளம் 

2. முதலியார் குளம் 

இன்றைக்கும் அதே சாதிப் பெயர்களுடன் புழக்கத்தில் உள்ளன. இவை முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் இருந்த காலத்தில் அவர்களும் கண்டுகொள்ளவில்லை. புலிகளின் ஊடகங்களில் எந்த விதக் கூச்சமும் இல்லாமல் இந்த இடப்பெயர்கள் உச்சரிக்கப் பட்டன. அது சரி, சாதியம் குறித்த அடிப்படை புரிதல் கூட இல்லாதவர்களிடம் இதை எதிர்பார்க்க முடியுமா? 

 

தமிழீழ அரசு ஆட்சியதிகாரம் செலுத்திய வன்னிப் பிரதேசத்தில் உள்ள சாதிப் பெயர் கொண்ட ஊர்களின் விபரம்: 

  • 1. "குருக்கள்" புதுக்குளம் 
  • 2. "செட்டி"குளம் 
  • 3. "பண்டாரி" குளம் 
  • 4. "வெள்ளாம்"குளம் 
  • 5. "செட்டியார்" குளம் 
  • 6. காசி "உடையார்" கட்டைக்காடு 
  • 7. "பள்ளன்" கோட்டை 
  • 8. "நளவன்" குளம் 
  • 9. "தச்சன்" மருதமடு 
  • 10. "உடையார்"கட்டு 
  • 11. "விஸ்வ"மடு 
  • 12. "பள்ள"மடு 
  • 13. "கரையாம்"முள்ளிவாய்க்கால் 
  • 14. "வெள்ளாம்"முள்ளிவாய்க்கால் 

 (இவற்றை விட இன்னும் நிறைய உள்ளன....) 

உலகப் புகழ் பெற்ற உருட்டுகள்: 

"ஈழத்தில் சாதிகள் இல்லை... யாரும் சாதி பார்ப்பதும் இல்லை..." "புலிகள் எப்போதோ சாதியத்தை அழித்து விட்டார்கள்...." 

"ஐயயோ... புதிதாக சாதியத்தை புகுத்த சிங்கள அரசு சூழ்ச்சி செய்கிறது..." 

ஆகவே ஆண்டவரே இந்த பிசாசு தமிழர்களை பிடிக்காமல் பார்த்துக் கொள்வீராக... 

அல்லேலூயா! 

ஆமென்!

Saturday, October 17, 2020

முரளியை மிரட்டும் தாமரையின் அரைவேக்காட்டு ஈழ அரசியல்

"அன்று தலைவர் நினைத்திருந்தால் அன்றே முரளிதரனின் விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கும்...!" என்று கவிஞர் தாமரை விஜய் சேதுபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது வெளிப்படையாக வன்முறையை ஆதரிக்கும் கூற்று மட்டுமல்ல. கவிஞர் தாமரை தனக்கு புலிகளின், ஈழத்து அரசியல் பற்றி ஒரு மண்ணும் தெரியாது என்பதை வெளிப்படுத்தி விடுகிறார். 

ஈழப்போர் முடிவுக்கு வரும் வரையில் வடக்கு, கிழக்கு பிரதேசத்திற்கு அப்பால் புலிகளுக்கு எந்த அக்கறையும் இருக்கவில்லை என்பது தான் யதார்த்தம். அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமே ஏக பிரதிநிதிகளாக இருக்க விரும்பினார்கள். அதனால் தமக்கு எதிராக மட்டுமல்லாது, போட்டியாக இருந்த தமிழ்த்தேசியவாதிகளைக் கூட கொன்றொழித்தார்கள். ஆனால், வட- கிழக்கு முஸ்லீம்கள், மலையகத் தமிழர்கள் என்ன அரசியல் பேசுகிறார்கள் என்பது பற்றி அக்கறைப் படவில்லை. அவர்கள் எல்லோரும் தமக்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாகவும் இருந்தாலும் புலிகளைப் பொறுத்த வரையில் "Never mind" கொள்கை தான். 

இந்தப் பின்னணியில் பார்த்தால், முரளிதரனின் அரசியல் நிலைப்பாட்டை புலிகள் அன்றே கணக்கெடுத்திருக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல, அன்று கிரிக்கெட் வீரர்கள் அரசியலை தாண்டி அனைத்து மக்களாலும் ஆராதிக்கப் பட்டார்கள். சிங்களவர்கள், தமிழர்கள் யாராக இருந்தாலும் கிரிக்கெட் பைத்தியமாக இருந்தார்கள். இதற்கு புலிகள் இயக்க போராளிகளும் விதிவிலக்கல்ல. முக்கியமான கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் நாட்களில் எந்தத் தாக்குதலும் நடக்காது. அன்றைய தினங்களில் மட்டும் இராணுவத்தினரும், புலிகளும் "இலங்கையராக" ஒன்றிணைந்து கிரிக்கெட் போட்டிகளை பார்த்து இரசிப்பார்கள். 

சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் முத்தையா முரளிதரனை புலிகளே நேரில் அழைத்து வரவேற்று உபசரித்தார்கள். அவரது நட்சத்திர அந்தஸ்து புலிகளையும் மயக்கி இருந்தது. சில நாட்கள் வன்னியில் இளைஞர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுக்க ஒழுங்கு படுத்தினார்கள். வன்னியில் புலிகளோடு சம்பந்தப் படாத ஒருவருக்கு கட் அவுட் வைத்திருந்தால், அது முரளிதரனுக்கு மட்டும் தான்! அத்துடன் கொக்க கோலா விளம்பரங்களும் சேர்ந்து கொண்டமை வேறு கதை. 

மீண்டும் அரசியலுக்கு வருவோம். அன்று மட்டுமல்ல, இன்றும் கூட முரளிதரனுக்கு அரசியல் அறிவு பூஜ்ஜியம் என்று தான் சொல்ல வேண்டும். அவரது அபத்தமான பேச்சுகள் யாவும் மேட்டுக்குடி மனப்பான்மையில் இருந்தும், ஒரு சாமானியனின் உலகப் பார்வையில் இருந்தும் பிறக்கின்றன. இந்த உண்மை அன்று புலிகளுக்கும் புரிந்திருக்கும். உண்மையில் புலிகள் இருந்த காலத்தில், தென்னிலங்கையில் வெளிப்படையாக அரசை ஆதரித்த கொழும்பு/மலையகத் தமிழ் அரசியல்வாதிகள் நிறையப் பேர் இருந்தனர். அவர்கள் தெரிந்து கொண்டே பேசிய நச்சுக் கருத்துகளுடன் ஒப்பிட்டால், முரளிதரன் பேசியது ஒன்றுமேயில்லை. Wait... இனித் தான் கிளைமாக்ஸ். அதே அரசியல்வாதிகள் சிலருடன் புலிகளும் நட்பு பாராட்டினார்கள்! எந்தளவுக்கு என்றால், கொழும்பில் தாக்குதல் நடத்த வந்த புலிப் போராளிகளுக்கு மறைவிடம் ஒழுங்கு படுத்தியதும் அவர்கள் தான்! 

சுருக்கமாக: கொழும்பு, மலையகத் தமிழர்களில் சிலர் அரசுக்கு ஆதரவாக இருப்பதை புலிகள் கண்டிக்கவுமில்லை, கண்டுகொள்ளவுமில்லை. இன்னும் சொன்னால், புலிகள் அதை அங்கீகரிக்கும் நிலையில் தான் இருந்தனர். இதற்கு தேசியத் தலைவர் பிரபாகரனே மிகச் சிறந்த உதாரணம். 

கிளிநொச்சியில் நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் ஒருவர் கேள்வி கேட்டார்: 

"மலையகத் தமிழர்கள் பற்றி உங்களுடைய நிலைப்பாடு என்ன?" 

தலைவர் பிரபாகரன்: 

"அவர்கள் சிறிலங்கா அரசுடன் சேர்ந்தியங்கி தமக்கான உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்!" 

 

மேலதிக தகவல்களுக்கு எனது காணொளியை பார்க்கவும்: 

 

Friday, May 22, 2020

கிழக்கு தீமோரும், தமிழீழமும் ஒன்றல்ல! இரண்டையும் ஒப்பிட முடியாது!!


முள்ளிவாய்க்கால் நினைவு நாள் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசு, முன்னாள் கிழக்கு தீமோர் ஜனாதிபதி ஜோசே ரமோஸ் ஹோர்த்தாவின் உரையின் காணொளியை வெளியிட்டுள்ளது. அதில் அவர் இலங்கையில் தமிழ் மக்கள் சமஷ்டி உரிமைகளுக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார். அதாவது தமிழீழம் சாத்தியம் இல்லை என்பதையும் மறைமுகமாக குறிப்பிட்டு பேசி இருக்கிறார். அத்துடன் பெரும்பான்மை சிங்கள மக்களுடன் பகைமை கொள்ளாமல் நட்புணர்வுடன் நடந்து கொள்வதே சிறுபான்மைத் தமிழருக்கும் பயன்தரத்தக்கது என்று கூறி இருக்கிறார்.(வீடியோ லிங்க் கீழே உள்ளது.)

இது பல தமிழீழவாதிகளின் கோபத்தை தூண்டி விட்டிருக்கிறது. கவனிக்கவும்: நான் இங்கே அவர்களை தமிழ்த்தேசியவாதிகள் என்று குறிப்பிடவில்லை. காரணம், எல்லா தமிழ்த்தேசியவாதிகளும் தமிழீழம் கோருவதில்லை. ஈழப்போருக்கு முன்னரும் பின்னரும் சமஷ்டித் தீர்வை எதிர்பார்க்கும் தமிழ்த்தேசியவாதிகளும் இருந்து வருகின்றனர். ஆகவே இது இன்றைக்கும் தமிழீழம் சாத்தியம் என்று தீவிரமாக நம்பும் அரசியல் பிரிவினருக்கானது. அவர்களது பிடிவாதக் குணம், தமிழீழத்திற்கு குறைவான எந்தத் தீர்வையும் ஏற்றுக் கொள்ளாது. "கிழக்கு தீமோர் தனிநாடு காணலாம், நாங்கள் தமிழீழம் கோரினால் தவறா?" என்று துள்ளிக் குதிக்கின்றனர். இதில் என்ன வேடிக்கை என்றால், இதே தமிழீழவாதிகளும், நாடுகடந்த தமிழீழ அரசும் தான் முன்பு ஒரு காலத்தில் கிழக்கு தீமோர் சுதந்திர நாடானதை பற்றி சொல்லிப் புளுகிக் கொண்டிருந்தார்கள்.

இங்கு சில விடயங்களை தெளிவு படுத்த வேண்டி உள்ளது. இதில் எதுவும் தமிழீழத்திற்கு பொருந்தாது: 
  • 1. காலனிய நீக்கம் 
  • 2. கம்யூனிச எதிர்ப்பு 
  • 3. பன்மொழிக் கலாச்சாரம்

இவற்றை தனித்தனியாக பார்ப்போம்:

1. கிழக்கு தீமோர் ஏற்கனவே சுமார் ஒரு வருட காலம் (1975-1976) தனியான சுதந்திர நாடாக இருந்தது. அதற்குக் காரணம் அது ஒரு போர்த்துகேய காலனி. 1974 ம் ஆண்டு போர்த்துக்கலில் ஒரு கம்யூனிச புரட்சி நடந்ததன் விளைவாக, ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் இருந்த போர்த்துக்கேய காலனிகள் சுதந்திரம் பெற்றன. கிழக்கு தீமோரும் அவற்றில் ஒன்று. மேலும் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஐ.நா. சபை காலனிய நீக்கம் தொடர்பான தீர்மானம் கொண்டு வந்தது. அதுவரை காலமும் ஐரோப்பிய காலனிகளாக இருந்த இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் விடுதலை பெற வேண்டும் என்பதே அந்தத் தீர்மானம். அந்த நாடுகளின் பட்டியலில் கிழக்கு தீமோர் இருந்தது. ஆனால் தமிழீழம் இருக்கவில்லை.

2. இந்தோனேசியா கிழக்கு தீமோர் மீது படையெடுத்து ஆக்கிரமிப்பதற்கு மூன்று காரணங்கள் இருந்தன:

ஒன்று: காலனிய காலகட்டத்திற்கு பின்னர், அந்தப் பிரதேசத்தில் இருந்த தீவுகள் அனைத்தும் தனக்கே சொந்தம் என ஜகார்த்தா உரிமை கோரியது. காளிமந்தான் தீவின் வட பகுதி மலேசியாவாக உள்ளது. அது கூட தனக்கே சொந்தம் என்று இந்தோனேசியா உரிமை கோருகின்றது. ஆனால் அங்கு படையெடுப்பை நடத்தினால் மலேசியாவுடன் போர் மூளும் என்பதால் பேசாமல் இருக்கிறது.

இரண்டு: கிழக்கு தீமோரில் நிறைய எண்ணை வளம் உள்ளது. அவற்றை இந்தோனேசியா தானே கைப்பற்றி சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற பொருளாதாரக் காரணம். பிற்காலத்தில் அதே காரணத்திற்காக தான் சர்வதேச சமூகம் கிழக்கு தீமோர் சுதந்திரத்தை ஆதரித்தது என்பது வேடிக்கையானது. இன்று கிழக்கு தீமோர் எண்ணை வளத்தை அவுஸ்திரேலியா மேற்பார்வை செய்து வருகின்றது.

மூன்று: கிழக்கு தீமோர் போர்த்துகேய காலனியாதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற்றதும் அங்கு அதிகாரப் போட்டி நடைபெற்றது. ஆயுதமேந்திய Fretilin (The Revolutionary Front for an Independent East Timor) இயக்கம் அரசைக் கைப்பற்றும் அளவிற்கு செல்வாக்காக இருந்தது. அதிலென்ன பிரச்சினை? Fretilin கிழக்கு தீமோரை ஒரு சோஷலிச நாடாக மாற்ற விரும்பியது. அது மார்க்சிய லெனினிச சித்தாந்தத்தை பின்பற்றியது. இதைக் காரணமாகக் காட்டி, அதாவது கம்யூனிச அபாயத்தை தடுப்பதாக சொல்லித் தான் இந்தோனேசியா படையெடுத்து ஆக்கிரமித்தது. அதற்கு அமெரிக்கா ஆசீர்வாதம் வழங்கியது. எங்கெல்லாம் கம்யூனிசம் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் இராணுவத் தலையீடு செய்வது தானே அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கை?

3. கிழக்கு தீமோர் தனியொரு மொழியை பேசும் மக்களின் தேசியம் அல்ல. அது ஒரு பன்மொழித் தேசியம். அங்கே பதினைந்து வெவ்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் ஒன்றிணைப்பது போர்த்துக்கேய காலனிய வரலாறு மட்டும் தான். நாங்கள் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக அல்லது பொது மொழியாக பேசுவது மாதிரி, கிழக்கு தீமோர் பிரஜைகள் போர்த்துக்கேய மொழியை பொது மொழியாக கொண்டுள்ளனர். இதிலே வேடிக்கை என்னவென்றால், மேற்கு தீமோர் இன்றைக்கும் இந்தோனேசியாவின் ஒரு பகுதியாக தொடர்கின்றது. அங்கேயும் கிழக்கு தீமோரில் உள்ள அதே மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கிறார்கள்.

கிழக்கு தீமோர் சுதந்திரம் பெறக் காரணமாக இருந்ததாக இங்கு குறிப்பிட்ட விடயங்களில் ஏதாவதொன்று தமிழீழத்திற்கு பொருந்துகிறதா? அது சரி, நாடு கடந்த தமிழீழ அரசு ஏன் அந்த வீடியோவை வெளியிட வேண்டும் என்று கேட்கலாம். என்ன தான் தமிழீழம், தமிழ்த் தேசியம் பேசினாலும், மேற்கத்திய ஏகாதிபத்திய நலன்களை பாதுகாப்பது தான் அவர்களது பிரதானமான அரசியல் கொள்கை ஆகும்.

அதே தான் முன்னாள் கிழக்கு தீமோர் ஜனாதிபதியான, நோபல் பரிசு பெற்ற ஜோசே ரமோஸ் ஹோர்த்தாவின் கொள்கையும். அவர் முன்னொரு காலத்தில் மார்க்சிய Fretilin இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றவர். வெளிப்படையாகவே மேற்குலக நலன் சார்ந்த அரசியலுக்கு தன்னை மாற்றிக் கொண்டவர். அதனால் தான் நோபல் பரிசையும் வென்றார். ஆகவே, ஓரினப் பறவைகள் ஒன்றாகப் பறக்கும் என்பதைப் போல, நாடுகடந்த தமிழீழ அரசும், ஜோசே ரமோஸ் ஹோர்த்தாவும் ஒரே புள்ளியில் சந்தித்துக் கொண்டனர்.

https://www.youtube.com/watch?v=pk1yJxfJECg&fbclid=IwAR2DA1hfxh-yUHzvTOKJeiomYTNFulLLFgf1pswwwIgCDhl_dYjxDVZ3J_M

Sunday, June 02, 2019

தமிழீழம் உருவானால் அது இன்னொரு எரித்திரியாவாக இருக்கலாம்


ஒரு வேளை, புலிக‌ளின் த‌லைமையில் த‌மிழீழ‌ம் என்ற‌ தேச‌ம் உருவாகி இரு த‌சாப்த‌ கால‌மாகி விட்ட‌து என்று வைத்துக் கொள்வோம். த‌ற்போது புலி ஆத‌ர‌வாள‌ர்க‌ள் அர‌ச‌ ஒத்தோடிக‌ள் என்று அழைக்க‌ப் ப‌டுவார்க‌ள். புலி எதிர்ப்பாள‌ர்க‌ள் அர‌ச‌ எதிர்ப்பாள‌ராக‌ க‌ருத‌ப் ப‌டுவார்க‌ள். ஏனென்றால், இறுதியில் புலிக‌ளின் நோக்க‌மும் த‌மிழீழ‌ "அர‌சு" அமைப்ப‌து தான் இல்லையா?

இப்போது க‌ண் முன்னால் காண‌க்கூடிய‌ ஆதார‌த்திற்கு வ‌ருவோம். இரு த‌சாப்த‌ கால‌த்திற்கு முன்ன‌ர், எத்தியோப்பியாவில் இருந்து எரித்திரியாவை விடுத‌லை செய்வ‌த‌ற்காக‌ EPLF இய‌க்க‌ம் போராடிய‌து. EPLF என்ப‌து ந‌ம‌க்குப் புலிக‌ள் மாதிரி. அத‌ன் த‌லைவ‌ர் இசையாஸ் அபெவெர்கி ந‌ம‌க்கு பிர‌பாக‌ர‌ன் மாதிரி.

எரித்திரியா சுத‌ந்திர‌மான‌ த‌னி நாடான‌ பின்ன‌ர், முன்பு விடுத‌லை இய‌க்க‌மாக‌ இருந்த‌ EPLF ஆட்சி அமைத்த‌து. அத‌ன் த‌லைவ‌ர் ஜ‌னாதிப‌தி ஆனார். எத்தியோப்பியாவில் இருந்து பிரிந்த‌ பின்ன‌ர் சில‌ வ‌ருட‌ங்க‌ள் எல்லைப் போர் ந‌ட‌ந்த‌து. எரித்திரிய‌ அர‌சு அதைக் கார‌ண‌மாக‌க் காட்டி, ஜ‌ன‌நாய‌க‌த்தை ம‌றுத்து வ‌ருகின்ற‌து. தேர்த‌ல்க‌ள் ந‌ட‌த்துவ‌தில்லை.

இப்போது புல‌ம்பெய‌ர்ந்த‌ நாடுக‌ளுக்கு வ‌ருவோம். இரு த‌சாப்த‌ கால‌த்திற்கு முன்ன‌ர், அதாவ‌து எரித்திரிய‌ விடுத‌லைப் போராட்ட‌ம் ந‌ட‌ந்த‌ கால‌த்தில் பெருந்தொகை அக‌திக‌ள் ஐரோப்பா சென்று குடியேறி விட்ட‌ன‌ர்.

புல‌ம்பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ளில் பெரும்ப‌குதியின‌ர் புலிக‌ளை ஆத‌ரிப்ப‌து மாதிரி, அன்று வ‌ந்த‌ எரித்திரிய‌ர்க‌ளில் பெரும்ப‌குதியின‌ர் EPLF ஆத‌ர‌வாள‌ர்க‌ள். அதாவ‌து இன்றைய‌ நிலையில்‌ எரித்திரிய‌ அர‌ச‌ ஆத‌ர‌வாள‌ர்கள்.

2017 ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், எரித்திரிய‌ அதிப‌ரின் வ‌ல‌துக‌ர‌மாக‌ ப‌த‌வியில் இருக்கும் ஒருவ‌ர் நெத‌ர்லாந்திற்கு வ‌ருகை த‌ந்திருந்தார். ந‌ம‌க்கு அன்ட‌ன் பால‌சிங்க‌ம் மாதிரி ஒருவ‌ர் என்று நினைத்துக் கொள்ளுங்க‌ள். அவ‌ர் அங்கு ஒரு ம‌காநாட்டில் பேசுவ‌த‌ற்கு ஏற்பாடாகி இருந்த‌து. ஆனால், க‌டைசி நேர‌த்தில் ம‌காநாடு ந‌ட‌த்த‌ அனும‌தி ம‌றுக்க‌ப் ப‌ட்ட‌து. அந்த‌ இட‌த்தில் ஒரு சிறிய‌ க‌ல‌வ‌ர‌ம் ந‌ட‌ந்து ஓய்ந்துள்ள‌து. உண்மையில் என்ன‌ ந‌ட‌ந்த‌து?

ம‌காநாட்டை ஒழுங்கு ப‌டுத்திய‌வ‌ர்க‌ள், நெத‌ர்லாந்தில் வாழும் இர‌ண்டாந்த‌லைமுறை எரித்திரிய‌ இளைஞ‌ர்க‌ள். அவ‌ர்க‌ள‌து பெற்றோர் இருப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌ர் வ‌ந்து குடியேறிய‌வ‌ர்க‌ள். த‌ம‌து பெற்றோர் மாதிரியே, இந்த‌ இளையோரும் EPLF ஆத‌ர‌வாள‌ர்க‌ள். ஐரோப்பாவில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌ இர‌ண்டாந் த‌லைமுறையை சேர்ந்த‌ புலி ஆத‌ர‌வு த‌மிழ் இளையோருட‌ன் ஒப்பிட்டுப் பார்த்தால் இல‌குவாக‌ப் புரியும்.

அதே நேர‌ம், எரித்திரியா த‌னி நாடாக சுத‌ந்திர‌ம் அடைந்த பின்ன‌ர், பெரும‌ள‌வு அக‌திகள் ஐரோப்பா வ‌ந்துள்ள‌ன‌ர். அண்மைக் கால‌ அக‌திக‌ள், ஒன்றில் எல்லைப் போரை எதிர்த்து வெளியேறி இருப்பார்க‌ள். இல்லாவிட்டால் அபெவெர்கி அர‌சை எதிர்ப்ப‌வ‌ர்க‌ளாக‌ இருப்பார்க‌ள்.

நெத‌ர்லாந்தில் ம‌காநாடு ந‌ட‌க்க‌விருந்த‌ இட‌த்தில், அபெவெர்கி அர‌ச‌ எதிர்ப்பாள‌ர்க‌ள் (ந‌ம‌க்கு புலி எதிர்ப்பாள‌ர்க‌ள் மாதிரி) ஒன்று கூடி விட்ட‌ன‌ர். ம‌காநாட்டை ந‌ட‌த்த‌ விடுவ‌தில்லை என்று க‌ல‌க‌ம் செய்த‌ன‌ர். நிலைமை எல்லை மீறிச் செல்வ‌தைக் க‌ண்ட‌ உள்ளூராட்சி ச‌பை ம‌காநாட்டை த‌டை செய்து விட்ட‌து.

அங்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள், எவ்வாறு புல‌ம்பெய‌ர்ந்த‌ நாடுக‌ளிலும் எரித்திரிய‌ ம‌க்க‌ள் பிள‌வு ப‌ட்டுள்ள‌ன‌ர் என்ற‌ உண்மையை உண‌ர்த்திய‌து.

அண்மைக் கால‌த்தில் வ‌ந்த‌ அக‌திக‌ள், த‌ம‌க்கு தாய‌க‌த்தின் உண்மை நிலைமை தெரியும் என்று கூறுகின்ற‌ன‌ர். அத‌ற்கு மாறாக‌ புல‌ம்பெய‌ர் சூழ‌லில் வ‌ள‌ர்ந்த‌ இர‌ண்டாந் த‌லைமுறையின‌ருக்கு அங்குள்ள‌ உண்மை நில‌வ‌ர‌ம் தெரியாது என்று வாதிடுகின்ற‌ன‌ர்.

Tuesday, April 18, 2017

தனி நாடு கண்டால் தேசியவாதம் காணாமல் போய்விடும்


க‌ன‌டாவில் கியூபெக் மாநில‌ம் பிரிவ‌த‌ற்காக‌ ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌ வாக்கெடுப்பு ப‌ற்றி சிலாகித்துப் பேசும் த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் ப‌ல‌ரைக் க‌ண்டிருப்போம். ஆனால், அவ‌ர்க‌ளில் யாராவ‌து க‌ன‌டிய‌ பூர்வ‌ குடி ம‌க்க‌ளுக்கான‌ த‌னிநாடு ப‌ற்றிப் பேசுகிறார்க‌ளா?

கியூபெக் பிரிவினைக் கோரிக்கை, கால‌னிய‌ கால‌த்திய‌ ஏகாதிப‌த்திய‌ முர‌ண்பாடுக‌ளின் விளைவு என்ற‌ உண்மையை ப‌ல‌ர் உண‌ர்வ‌தில்லை. க‌ன‌டாவை கால‌னிப் ப‌டுத்திய‌ ஆங்கிலேய‌, பிரெஞ்சு ஏகாதிப‌த்திய‌ங்க‌ள், த‌ம‌க்குள் ச‌ண்டையிட்டுக் கொண்ட‌ கால‌ம் ஒன்றிருந்த‌து. இது எஜ‌மான‌ர்க‌ளுக்கு இடையிலான‌ ஆதிக்க‌ப் போட்டி. அதை தேசிய‌ இன‌ங்க‌ளின் சுய‌நிர்ண‌ய‌ப் போராட்ட‌மாக‌ நினைத்துக் குழ‌ப்பிக் கொள்வ‌து அறிவிலித் த‌ன‌ம்.

இதிலே இன்னொரு வேடிக்கையை‌யும் குறிப்பிட‌ வேண்டும். கியூபெக் மாநில‌த்தில் ஆயிர‌க் க‌ண‌க்கான‌ ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள் வாக்குரிமையுட‌ன் வாழ்கிறார்க‌ள். அவ‌ர்களில் பெரும்பான்மையானோர் த‌மிழீழ‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ள். இருப்பினும் கியூபெக் வாக்கெடுப்பில் பிரிவினைக்கு எதிராக‌ வாக்க‌ளித்த‌ன‌ர். "குடியேறிக‌ளின் எதிர்ப்பு வாக்குக‌ளால் தோற்ற‌தாக‌" கியூபெக் தேசிய‌வாதிக‌ளும் அறிவித்திருந்த‌ன‌ர்.

எத‌ற்காக க‌ன‌டா வாழ்‌ த‌மிழீழ‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளும் கியூபெக் பிரிவினைக்கு எதிராக‌ வாக்க‌ளிக்க‌ வேண்டும்? ஏனென்றால் தேசிய‌வாத‌ம் அடிப்ப‌டையில் ஒரு த‌ன்ன‌ல‌வாத‌ம். த‌ன‌து சொந்த‌ தேசிய‌ இன‌த்தின் ந‌ன்மைக‌ளுக்க‌ப்பால் வேறெதையும் சிந்திப்ப‌தில்லை. அத‌னால் தான், க‌ன‌டாவில், கியூபெக் தேசிய‌வாதிக‌ளுக்கும், த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளுக்கும் இடையில் ப‌ர‌ஸ்ப‌ர‌ புரிந்துண‌ர்வு இருக்க‌வில்லை. இருக்க‌வும் முடியாது.

கியூபெக் த‌னி நாடானால் த‌ன‌து நிலைமை என்னாகுமோ என்ற‌ அச்ச‌ம் அங்கிருக்கும் த‌மிழ‌ர் ம‌ன‌தில் எழுவ‌து இய‌ல்பு. ஏனைய‌ இன‌த்த‌வ‌ரின் ந‌ல‌ன்க‌ளை க‌ண‌க்கில் எடுக்காத‌ (கியூபெக்) தேசிய‌வாத‌த்தை த‌மிழ‌ர்க‌ள் ஏற்றுக் கொள்ளாத‌தில் த‌ப்பில்லை.

தேசிய‌வாத‌ம் பெரும்பாலும் அதிகார‌த்தில் இருக்கும் ஆட்சியாள‌ர்க‌ளுக்கு பெரிதும் உத‌வுகின்ற‌து. இந்த‌ உண்மையை ப‌ல‌ர் உணர்வ‌தில்லை. ஒரு ப‌க்க‌ம் கியூபெக் தேசிய‌வாதிக‌ளின் பிரிவினைக் கோரிக்கையை அங்கீக‌ரித்த‌ அதே க‌ன‌டிய‌ அர‌சு தான் ப‌ன்னாட்டுக் குடியேறிக‌ளை அங்கே குடிய‌ம‌ர்த்திய‌து.

தேசிய‌வாத‌ம் எப்போதும் குறுகிய‌ ம‌ன‌ப்பான்மை கொண்ட‌து. அத‌னால் ப‌ல்வேறு இன‌ங்க‌ளை ஒரே கொள்கையின் கீழ் ஒன்று சேர்க்க‌ முடியாது. ஒருநாளும் ந‌ட‌க்காது. அத‌னால் இறுதியில் ஆட்சியாள‌ருக்கே ஆதாய‌ம். இதைப் பிரித்தாளும் சூழ்ச்சி என்றும் சொல்ல‌லாம்.

தேசியவாதிகளின் அரசியல் செல்வாக்கை குறைக்க வேண்டுமானால், அவர்கள் கேட்கும் தனி நாட்டை பிரித்துக் கொடுத்து விடுவது சிறந்த வழி. இருபது வருடங்களுக்கு முன்னர், தமிழீழம் கிடைத்திருந்தால், இன்று தமிழ் தேசியவாதிகள் காணாமல் போயிருப்பார்கள்.

உலகில் பல நாடுகளில் நடந்த தேசிய இன விடுதலைப் போராட்டங்கள், அதனை உறுதிப் படுத்துகின்றன. உதாரணத்திற்கு, செக்கோஸ்லோவாக்கியா என்ற நாடு, செக் மற்றும் ஸ்லோவாக்கியா குடியரசுகள் என்று பிரிந்த வரலாற்றை எடுத்துப் பார்ப்போம்.

செக் மொழிக்கும், ஸ்லோவாக்கிய மொழிக்கும் இடையில் என்ன வேறுபாடு? ஒன்றுமேயில்லை. சில நூறு சொற்களைத் தவிர, வேறெந்த வித்தியாசமும் இல்லை. வீம்புக்கு ஒரே மாதிரியான சொற்களை, வேறு எழுத்தை பாவித்து எழுதுகிறார்கள். (வேறு மொழி என்று காட்ட வேண்டுமாம்.)

அதே மாதிரி, ஈழத் தமிழையும் வித்தியாசமாக எழுதலாம். ஏற்கனவே அப்படித் தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். "T" என்ற ஒலிக்கு, ஈழத் தமிழில் "ரி" என்று எழுதுவார்கள். இந்தியத் தமிழில் "டி" என்று எழுதுவார்கள். அது போதும், ஈழத் தமிழ் மொழி தனித்துவமானது, ஈழத் தமிழர்கள் தனியான தேசிய இனம் என்று ஒரு இயக்கம் ஆரம்பித்து விடலாம். அதே தான், ஸ்லோவாக்கியாவில் நடந்தது. (மசிடோனியா, குரோவாசியா போன்ற பல தேசியவாத இயக்கங்கள் அப்படித் தான் ஆரம்பமாகின.)

செக்கோஸ்லோவாக்கியாவில் கம்யூனிச ஆட்சி முடிவுக்கு வந்ததும், செக், ஸ்லோவாக்கிய தேசியவாதிகளின் செல்வாக்கு உயர்ந்தது. செக்கியர்களின் தேசியத் தலைவர் Václav Klaus, ஸ்லோவாக்கியர்களின் தேசியத் தலைவர் Vladimír Mečiar, இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு தான், செக்கோஸ்லோவாக்கிய பிரிவினை. (ஒரு காலத்தில், இருவரையும் கம்யூனிஸ்டுகள் போட்டு உதைத்ததால், கடுப்பில் இருந்திருப்பார்கள் போலும்.)

உண்மையில் பெருமளவு மக்கள் அதனை ஆதரிக்கவில்லை. இரண்டு பக்கமும் முப்பத்தைந்து சதவீதமானோர் மட்டுமே ஆதரித்தார்கள். நீண்ட காலம் குடும்பம் நடத்திய கணவனும், மனைவியும் விவாகரத்து செய்வதைப் போல நாட்டை பிரித்தார்கள். அரசு உடைமைகள், இராணுவ உபகரணங்கள், ரயில் பாதைகள் எல்லாம் மூன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் பிரிக்கப் பட்டன. ஏனென்றால், செக் மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையாகவும், ஸ்லோவாக்கிய மக்கள், மூன்றில் ஒரு சிறுபான்மையாகவும் இருந்தனர்.

இரண்டு தேசியங்களும், தங்களுக்கென்று தனியான கொடிகள், தேசிய கீதங்கள், கடவுச்சீட்டு, நாணயம் என்றெல்லாம் உருவாக்கினார்கள். இதற்காக கோடிக் கணக்கில் செலவிட்டார்கள். இரண்டு நாடுகளுக்கு நடுவில், எல்லை போட்டு காவலர்களை நிறுத்தி வைத்தார்கள். செக்கியர்களும், ஸ்லோவாக்கியர்களும், "இனிமேல் ஒருவரோடு ஒருவர் சேர்ந்து வாழ முடியாது," என்று சொல்லி பிரிந்து சென்றார்கள்.

பிரிந்து வாழ்ந்து சில வருடங்கள் ஆகவில்லை. நேட்டோ கூட்டமைப்பில் இரண்டு நாடுகளும் சேர்ந்து கொண்டன. அதனால், பிரிந்த இராணுவம் மீண்டும் ஒன்றாக சேர்ந்தது. இன்னொரு பக்கத்தில், ஐரோப்பிய ஒன்றியமும் ஆள் சேர்த்துக் கொண்டிருந்தது. அதிலே இரண்டு நாடுகளும் சமர்த்துப் பிள்ளைகளாக சேர்ந்து விட்டன. ஐரோப்பிய ஒன்றியம் கேட்ட படி, செங்கன் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார்கள்.

அதற்குப் பின் என்ன நடந்தது? இரண்டு நாடுகளுக்கு நடுவில் இருந்த எல்லைக் கட்டுப்பாடுகள் நீக்கப் பட்டன. இப்போது இரண்டு நாட்டு பிரஜைகளும் பாஸ்போர்ட் இல்லாமல், சுதந்திரமாக போய் வரலாம். ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை நாடுகள் என்பதால், ஒரு நாட்டின் பிரஜை மற்ற நாட்டில் வாழவும், வேலை செய்யவும், வர்த்தகம் செய்யவும் பூரண சுதந்திரம் பெற்றவராகிறார்.

வருங்காலத்தில் யூரோ வந்தால், ஒரே நாணயம் புழக்கத்தில் இருக்கும். (ஏற்கனவே ஸ்லோவாக்கியா யூரோ பயன்படுத்துகிறது.) தற்போது, செக் குடியரசும், ஸ்லோவாக்கிய குடியரசும், நடைமுறையில் ஒரே நாடாக உள்ளன. ஆனால், பெயருக்கு இரண்டு அரசாங்கங்கள் இருக்கின்றன. இது எப்படி இருக்கிறது என்றால், விவாகரத்து பெற்று சென்ற கணவனும், மனைவியும் பின்னர் ஒரே வீட்டில் வாழ்வதைப் போன்றுள்ளது.

உலகில் உள்ள எல்லா நாட்டு மக்களையும் போலத் தான், செக்கோஸ்வாக்கிய மக்களுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. பெரும்பான்மை மக்களுக்கு, அவர்களது குடும்பப் பொறுப்புகள், வேலை, பணம், இவை மட்டுமே முக்கியமானவை. அவர்களிடம் சென்று, "எதற்காக ஸ்லோவாக்கியா பிரிந்தது?" என்று கேட்டு விடாதீர்கள். பெரும்பான்மை மக்களுக்கு அதற்குப் பதில் தெரியாது.

தேசிய‌ விடுத‌லைப் போராட்ட‌ம் ந‌ட‌க்கும் நேர‌த்தில் அமோகமாக இருந்த ம‌க்க‌ள் ஆத‌ர‌வு, சுத‌ந்திர‌ம் அடைந்த‌ பின்ன‌ரும் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்க‌ முடியாது. உதாரணத்திற்கு, இந்திய‌ சுதந்திரப் போராட்டத்தை எடுத்துக் காட்டலாம். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெறப் போராடிய காலத்தில் இருந்த மக்கள் ஆதரவு இப்போது இல்லை. குறிப்பிட்ட ஒரு பிரிவினர் மட்டுமே இந்திய தேசியத்தை ஆதரிக்கிறார்கள். அதே மாதிரி, தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய ANC க்கு முன்பிருந்த‌ ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இப்போது இல்லை.அது அரசு அதிகாரத்திற்கு வந்த பின்ன‌ர், அதன் ஆத‌ர‌வாளர்க‌ள் ம‌த்தியில் இருந்தே வெறுப்பை ச‌ம்பாதித்த‌து.

இது இயற்கையான அரசியல் மாற்றம். ஈழத்தில் விடுதலைப் புலிக‌ளின் விட‌ய‌த்திலும் இதை நாங்க‌ள் எதிர்பார்க்க‌ வேண்டும். புலிக‌ள் வைத்திருந்த‌ "ந‌டைமுறை அர‌சு" உண்மையில் அவ‌ர்க‌ள‌து க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌ நிர்வாக‌ம் ஆகும். அப்போது அங்கே மும்முரமாக போர் நடந்து கொண்டிருந்தது. போர் தொட‌ர்ந்த‌ ப‌டியால் அதைக் காட்டியே ந‌டைமுறை அர‌சின் குறைபாடுகளுக்கு நியாய‌ம் க‌ற்பித்தார்க‌ள். ஆக‌வே அத‌னை உண்மையான‌ த‌மிழீழ‌ம் என்று க‌ருத‌ முடியாது.

உல‌க‌ம் முழுவ‌தும் தேசிய‌ இன‌ங்க‌ளின் போராட்ட‌ம் ஒரே நோக்க‌த்திற்காக‌ ந‌ட‌க்கின்ற‌ன‌. எத்தியோப்பியாவில் பேசப்படும் அதே மொழிகள் (அம்ஹாரி, திக்ரிஞ்ஞா) எரித்திரியாவிலும் பேசப் படுகின்றன. அவர்கள் ஒரே மொழி பேசினாலும் எத்தியோப்பியாவை பேரின‌வாத‌ அர‌சாக‌ க‌ருதினார்க‌ள். (விரும்பினால் அதை பிர‌தேச‌வாத‌ம் என்று அழைக்கலாம்.)காலனியாதிக்க காலத்தில் எரித்திரியா இத்தாலியின் காலனியாக இருந்தது. அதனால் அங்கு பண்பாட்டு மாற்றம் ஏற்பட்டிருந்தது. அது மட்டுமே எரித்திரியர்களை ஒன்று சேர்த்தது.

ஈழ‌த்தில் புலிக‌ள் சிங்க‌ள‌ மொழி மேலாண்மையை எதிர்த்து, ஒடுக்கப்பட்ட தமிழரின் பெயரால் போராடினார்க‌ள். ஆனால் எத்தியோப்பியாவிலும், இல‌ங்கையிலும் ஒடுக்கும் அர‌சு ஒரே மாதிரி செய‌ற்ப‌ட்ட‌து. அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம் இர‌ண்டு நாடுக‌ளிலும் ஒரே மாதிரி இருந்த‌து. எரித்திரியா, ஈழ‌த்திற்கான‌ விடுத‌லைப் போராட்ட‌ங்களும் ஒரே மாதிரி ந‌ட‌ந்த‌து. சிலநேரம், யுத்த தந்திரங்களும், வியூகங்களும் ஒரே மாதிரி இருந்தன. உதாரணத்திற்கு, கட்டுநாயக்க விமானநிலைய தாக்குதல் மாதிரியான சம்பவம், ஏற்கனவே எரித்திரிய விடுதலைப் போரில் நடந்துள்ளது.

புலிகளால் ஒரு தேசிய‌ விடுத‌லைப் போராட்ட‌ம் ந‌ட‌த்த‌ப் ப‌ட்டாலும் அத‌ன் இறுதி இல‌ட்சிய‌ம் ஒரு தேசிய‌ அர‌சு அமைப்ப‌து தான். அது எப்ப‌டி இருக்கும் என்ப‌து தான் கேள்வி. அடிப்படையில், தமிழ் அரசும் சிங்க‌ள‌ அர‌சு க‌ட்ட‌மைப்பை பின்ப‌ற்றிய‌தாக‌ இருக்கும். நிர்வாக அமைப்பில் எந்த வித்தியாசமும் இருக்காது. அந்த‌ உண்மையை புலிக‌ளும் ம‌றுக்க‌வில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் முன்பிருந்த ந‌டைமுறை அர‌சு அதை நிரூபிக்கிறது. உதாரணத்திற்கு, சிறிலங்கா அரசு நியமித்த அரச அதிபர்கள், கிராம சேவகர்கள் அப்படியே இருந்தனர். அதே நேரம், சமாந்தரமாக புலிகளின் நிழல் அரசும் இயங்கியது. அதாவது, புலிகள் நியமித்த அரச அதிகார்கள், கிராம சேவகர்களும் இருந்தனர்.

ஒரு வேளை, புலிக‌ளின் த‌லைமையில் த‌மிழீழ‌ம் என்ற‌ தேச‌ம் உருவாகி இரு த‌சாப்த‌ கால‌மாகி விட்ட‌து என்று வைத்துக் கொள்வோம். த‌ற்போது புலி ஆத‌ர‌வாள‌ர்க‌ள் அர‌ச‌ ஒத்தோடிக‌ள் என்று அழைக்க‌ப் ப‌டுவார்க‌ள். புலி எதிர்ப்பாள‌ர்க‌ள் அர‌ச‌ எதிர்ப்பாள‌ராக‌ க‌ருத‌ப் ப‌டுவார்க‌ள். ஏனென்றால், இறுதியில் புலிக‌ளின் நோக்க‌மும் த‌மிழீழ‌ "அர‌சு" அமைப்ப‌து தான் இல்லையா?

இப்போது க‌ண் முன்னால் காண‌க்கூடிய‌ ஆதார‌த்திற்கு வ‌ருவோம். இரு த‌சாப்த‌ கால‌த்திற்கு முன்ன‌ர், எத்தியோப்பியாவில் இருந்து எரித்திரியாவை விடுத‌லை செய்வ‌த‌ற்காக‌ EPLF இய‌க்க‌ம் போராடிய‌து. EPLF என்ப‌து ந‌ம‌க்குப் புலிக‌ள் மாதிரி. அத‌ன் த‌லைவ‌ர் இசையாஸ் அபெவெர்கி ந‌ம‌க்கு பிர‌பாக‌ர‌ன் மாதிரி.

எரித்திரியா சுத‌ந்திர‌மான‌ த‌னி நாடான‌ பின்ன‌ர், முன்பு விடுத‌லை இய‌க்க‌மாக‌ இருந்த‌ EPLF ஆட்சி அமைத்த‌து. அத‌ன் த‌லைவ‌ர் ஜ‌னாதிப‌தி ஆனார். எத்தியோப்பியாவில் இருந்து பிரிந்த‌ பின்ன‌ர் சில‌ வ‌ருட‌ங்க‌ள் எல்லைப் போர் ந‌ட‌ந்த‌து. எரித்திரிய‌ அர‌சு அதைக் கார‌ண‌மாக‌க் காட்டி, ஜ‌ன‌நாய‌க‌த்தை ம‌றுத்து வ‌ருகின்ற‌து. தேர்த‌ல்க‌ள் ந‌ட‌த்துவ‌தில்லை.

இப்போது புல‌ம்பெய‌ர்ந்த‌ நாடுக‌ளுக்கு வ‌ருவோம். இரு த‌சாப்த‌ கால‌த்திற்கு முன்ன‌ர், அதாவ‌து எரித்திரிய‌ விடுத‌லைப் போராட்ட‌ம் ந‌ட‌ந்த‌ கால‌த்தில் பெருந்தொகை அக‌திக‌ள் ஐரோப்பா சென்று குடியேறி விட்ட‌ன‌ர்.

புல‌ம்பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ளில் பெரும்ப‌குதியின‌ர் புலிக‌ளை ஆத‌ரிப்ப‌து மாதிரி, அன்று வ‌ந்த‌ எரித்திரிய‌ர்க‌ளில் பெரும்ப‌குதியின‌ர் EPLF ஆத‌ர‌வாள‌ர்க‌ள். அதாவ‌து இன்றைய‌ நிலையில்‌ எரித்திரிய‌ அர‌ச‌ ஆத‌ர‌வாள‌ர்கள்.

சில‌ தின‌ங்க‌ளுக்கு முன்ன‌ர் எரித்திரிய‌ அதிப‌ரின் வ‌ல‌துக‌ர‌மாக‌ ப‌த‌வியில் இருக்கும் ஒருவ‌ர் நெத‌ர்லாந்திற்கு வ‌ருகை த‌ந்திருந்தார். ந‌ம‌க்கு அன்ட‌ன் பால‌சிங்க‌ம் மாதிரி ஒருவ‌ர் என்று நினைத்துக் கொள்ளுங்க‌ள். அவ‌ர் அங்கு ஒரு ம‌காநாட்டில் பேசுவ‌த‌ற்கு ஏற்பாடாகி இருந்த‌து. ஆனால், க‌டைசி நேர‌த்தில் ம‌காநாடு ந‌ட‌த்த‌ அனும‌தி ம‌றுக்க‌ப் ப‌ட்ட‌து. அந்த‌ இட‌த்தில் ஒரு சிறிய‌ க‌ல‌வ‌ர‌ம் ந‌ட‌ந்து ஓய்ந்துள்ள‌து. உண்மையில் என்ன‌ ந‌ட‌ந்த‌து?

ம‌காநாட்டை ஒழுங்கு ப‌டுத்திய‌வ‌ர்க‌ள், நெத‌ர்லாந்தில் வாழும் இர‌ண்டாந்த‌லைமுறை எரித்திரிய‌ இளைஞ‌ர்க‌ள். அவ‌ர்க‌ள‌து பெற்றோர் இருப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌ர் வ‌ந்து குடியேறிய‌வ‌ர்க‌ள். த‌ம‌து பெற்றோர் மாதிரியே, இந்த‌ இளையோரும் EPLF ஆத‌ர‌வாள‌ர்க‌ள். ஐரோப்பாவில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌ இர‌ண்டாந் த‌லைமுறையை சேர்ந்த‌ புலி ஆத‌ர‌வு த‌மிழ் இளையோருட‌ன் ஒப்பிட்டுப் பார்த்தால் இல‌குவாக‌ப் புரியும்.

அதே நேர‌ம், எரித்திரியா த‌னி நாடாக சுத‌ந்திர‌ம் அடைந்த பின்ன‌ர், பெரும‌ள‌வு அக‌திகள் ஐரோப்பா வ‌ந்துள்ள‌ன‌ர். அண்மைக் கால‌ அக‌திக‌ள், ஒன்றில் எல்லைப் போரை எதிர்த்து வெளியேறி இருப்பார்க‌ள். இல்லாவிட்டால் அபெவெர்கி அர‌சை எதிர்ப்ப‌வ‌ர்க‌ளாக‌ இருப்பார்க‌ள்.

நெத‌ர்லாந்தில் ம‌காநாடு ந‌ட‌க்க‌விருந்த‌ இட‌த்தில், அபெவெர்கி அர‌ச‌ எதிர்ப்பாள‌ர்க‌ள் (ந‌ம‌க்கு புலி எதிர்ப்பாள‌ர்க‌ள் மாதிரி) ஒன்று கூடி விட்ட‌ன‌ர். ம‌காநாட்டை ந‌ட‌த்த‌ விடுவ‌தில்லை என்று க‌ல‌க‌ம் செய்த‌ன‌ர். நிலைமை எல்லை மீறிச் செல்வ‌தைக் க‌ண்ட‌ உள்ளூராட்சி ச‌பை ம‌காநாட்டை த‌டை செய்து விட்ட‌து.

அங்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள், எவ்வாறு புல‌ம்பெய‌ர்ந்த‌ நாடுக‌ளிலும் எரித்திரிய‌ ம‌க்க‌ள் பிள‌வு ப‌ட்டுள்ள‌ன‌ர் என்ற‌ உண்மையை உண‌ர்த்திய‌து.

அண்மைக் கால‌த்தில் வ‌ந்த‌ அக‌திக‌ள், த‌ம‌க்கு தாய‌க‌த்தின் உண்மை நிலைமை தெரியும் என்று கூறுகின்ற‌ன‌ர். அத‌ற்கு மாறாக‌ புல‌ம்பெய‌ர் சூழ‌லில் வ‌ள‌ர்ந்த‌ இர‌ண்டாந் த‌லைமுறையின‌ருக்கு அங்குள்ள‌ உண்மை நில‌வ‌ர‌ம் தெரியாது என்று வாதிடுகின்ற‌ன‌ர்.

Monday, February 08, 2016

புலம்பெயர்ந்த புலி விசுவாசிகளின் கதையைக் கூறும் "கொலம்பஸின் வரைபடங்கள்"


புலிகளின் de facto தமிழீழ ஆட்சி நடந்த வட இலங்கையில் இருந்து, பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தென்னிலங்கையில் கொழும்பு நகரிலும், இந்தியாவிலும், மேற்கத்திய நாடுகளிலும் தமது புதிய வசிப்பிடங்களை தேடிக் கொண்டனர். இதனை அடிப்படையாகக் கொண்டு யோ.கர்ணன் எழுதியுள்ள "கொலம்பஸின் வரைபடங்கள்" என்ற நூல் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது.

யோ.கர்ணன் புலிகள் இயக்கத்தில் போராளியாக அல்லது உறுப்பினராக இருந்தவர். அவர் தான் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து வெளியேற எத்தனித்து, அது கைகூடாமல் திரும்பி வந்த அனுபவத்தை எழுதி உள்ளார். அது மட்டுமல்லாது, இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் வரை நடந்த சம்பவங்களை விலாவாரியாக எழுதியுள்ளார்.

உண்மையில், இந்த நூலானது ஒரு மேற்கத்திய நாட்டவரான கோர்டன் வைஸ் எழுதிய "கூண்டு" நூலை ஒத்திருக்கிறது. இரண்டிலும் ஒரே மாதிரியான சம்பவங்கள் வருகின்றன. ஆனால், கூண்டு நூலை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய தீவிர புலி ஆதரவாளர்கள், கொலம்பஸின் வரைபடங்கள் நூலை தூற்றிக் கொண்டிருந்தனர். இந்த இரட்டை வேடத்திற்கு காரணம், கோர்டன் வைஸ் ஒரு மேற்கத்திய நாட்டு வெள்ளையர், யோ.கர்ணன் ஒரு தமிழீழத்து கறுப்பர் என்பது மட்டும் தான்.

ஈழத் தமிழருக்கு வாக்களிக்கப் பட்ட புனித பூமியான தமிழீழத்தில் இருந்து பணக்காரர்கள் மெல்ல மெல்ல வெளியேறிக் கொண்டிருந்தார்கள். இது இறுதிப் போர்க் காலத்தில் மட்டும் நடக்கவில்லை. அதற்கு முன்னரே, காலங்காலமாக நடந்து கொண்டிருந்தது. அந்த உண்மையை யோ.கர்ணன் கூட காலந் தாமதித்து தான் அறிந்து கொண்டார். (அவர் வயதால் இளையவர், கொள்கைப் பற்றுடன் புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருந்தார் என்பது ஒரு முக்கிய காரணம்)

இங்கே இன்னொரு வேடிக்கையையும் அவதானிக்கலாம். யோ. கர்ணனையும் அவரது இந்த நூலையும் தூற்றிக் கொண்டிருக்கும் "புலி விசுவாசிகளில்" பெரும்பான்மையானோர், ஒரு காலத்தில் இதே மாதிரியான நிலைமையில் வாழ்ந்தவர்கள் தான். ஒரு வேளை, யோ. கர்ணனின் வெளியேறும் முயற்சியும் வெற்றியடைந்து, அவர் இன்றைக்கு ஒரு மேற்கத்திய நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தால், அவரும் புலம்பெயர்ந்த புலி விசுவாசிகளில் ஒருவராக இருந்திருக்கக் கூடும். யார் கண்டது?

1986 ம் ஆண்டுக்குப் பின்னர் தான், வட இலங்கையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் உருவாகியது. அப்போதே இளம் வயதினர், அதாவது 16 க்கும் 40 வயதிற்கும் இடைப்பட்டோர் வெளியேற தடை விதித்திருந்தனர். அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த குடும்பங்களுக்கும் வெளியேற அனுமதி அளிக்கவில்லை. பலருக்கு அடிக்கடி கொழும்பு செல்ல வேண்டிய தேவை இருந்தது. அரசாங்க உத்தியோகஸ்தர்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டுப் பணம் பெறுபவர்களும், கொழும்புக்கு செல்ல வேண்டி இருந்தது. அப்போதெல்லாம் ஒரு குடும்ப உறுப்பினரை பணயம் வைத்து விட்டு செல்ல வேண்டும். திரும்பி வராவிட்டால் அவருக்கு நெருக்கடி கொடுப்பார்கள்.

இத்தனை தடைகளையும் தாண்டி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு வெளியேறி, மேற்கத்திய நாடுகளில் குடியேறியவர்கள் யாராக இருக்கும்? பணக்காரர்கள் மற்றும் வசதி படைத்த மத்திய தர வர்க்கத்தினர். புலிகளின் உத்தியோகபூர்வ பிரச்சார சாதனங்கள், இவர்களை துரோகிகள் என்று தூற்றிக் கொண்டிருந்தன.

உண்மையிலேயே, அன்றிருந்த மேட்டுக்குடியினரில் பெரும்பான்மையானோர், புலிகளை அல்லது தமிழீழத்தை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. யுத்தத்திற்குள் அகப்படாமல் தங்களது உயிரையும், வர்க்க நலன்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, "கொலம்பஸின் வரைபடங்களுடன்" உலகம் முழுவதும் அகதிகளாக சென்றார்கள். 

தஞ்சம் கோருவதற்கு வசதியாக புதிய புதிய நாடுகளை கண்டுபிடித்தார்கள். அங்கே தமது வாழ்க்கையை உறுதிப் படுத்திக் கொண்டதும் என்ன செய்தார்கள்? அப்படியே 360 பாகையில் சுழன்று கரணம் அடித்து, தீவிர புலி ஆதரவாளர்களாக காட்டிக் கொண்டார்கள். இது அவர்களது கதை.

யோ. கர்ணன் தனது நூலுக்கு கொலம்பஸின் வரைபடங்கள் என்று தலைப்பிட்டதற்கு ஒரு காரணம் இருந்தது. ஈழப்போர் நடந்து கொண்ட இடங்களில் இருந்து வெளியேறிய தமிழர்கள், உலகம் முழுவதும் அடைக்கலம் கோரியதை அது உவமைப் படுத்துகின்றது. தானும் ஒரு வரைபடம் தயாரித்து, அது கைகூடாமல் போன அனுபவத்தை இந்த நூலில் எழுதி உள்ளார். சரித்திர கால கொலம்பஸின் கப்பல் பயணத்திற்கு பெருமளவு பணம் செலவானது. அதே போன்று, "தமிழ்க் கொலம்பஸ்கள்" ஒழுங்கு படுத்தும் பயணத்திற்கும் பெருமளவு பணம் செலவாகின்றது. அண்மைக் காலத்தில் இருபதாயிரம் டாலர் அல்லது யூரோ கட்டிக் கூட வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள்.

பணக்கார மேற்கத்திய நாடுகளில் வாழும் சாதாரண மக்களிடம், ஆயிரம் டாலர்/யூரோ கூட சேமிப்பில் இல்லை. அப்படி இருக்கையில், வறிய நாடான இலங்கையில் இருந்து, பெருமளவு பணம் செலவழித்து வெளிநாடு செல்வதற்கு யாரால் முடியும்? வசதி படைத்தவர்களால் மட்டுமே அது முடிந்த காரியம். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், தமது காணிகளை புலிகளிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறியோர் ஏராளம் பேருண்டு. 

வெளிநாடுகளுக்கு சென்றவர்களின் வசதியான வீடுகளில் புலிகளின் அலுவலகங்கள் இயங்கின. இதை எல்லாம் ஆண்டு அனுபவித்து வந்த பணக்கார வர்க்கம், விருப்பத்துடன் கொடுத்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? சொத்துக்கு ஆசைப்பட்டு யுத்தத்திற்குள் அகப்பட்டு சாவதை விட, மேற்கத்திய நாடொன்றுக்கு சென்றால் இதை விட அதிகமான சொத்து சேர்க்கலாம் என்று கணக்குப் போட்டார்கள். உண்மையிலேயே வெறுங்கையுடன் வெளிநாடு சென்று பணக்காரர்களாக திரும்பி வந்தவர்கள் ஆயிரம் உண்டு.

இறுதிப்போர் வரையில், புலிகளின் de facto தமிழீழத்தில் இருந்து, வசதி படைத்தோர் வெளியேறுவதற்கு புலிகள் அனுமதித்துக் கொண்டிருந்தார்கள். "பணம் கொடுத்தால் எல்லா வழிகளும் திறந்தன" என்று யோ.கர்ணன் இந்த நூலில் எழுதி இருக்கிறார்.

புலிகள் இயக்கத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள், இலட்சக் கணக்கான பணத்தை (லஞ்சமாக) வாங்கிக் கொண்டு, குடும்பத்துடன் வெளியேறிச் செல்ல அனுமதித்தார்கள். சிலநேரம் அந்தப் பணம் இயக்க நிதி என்ற பெயரில் "விரும்பிக்" கொடுக்கப் பட்டது.

இறுதிப் போரில் இராணுவம் சுற்றி வளைத்ததும், கட்டுப்பாட்டுப் பகுதிகள் சுருங்கியதும், போரை நடத்துவதற்கு போதுமான போராளிகள் இருக்காமையும் வெளியேற்றத்தை முற்றாகத் துண்டித்தது. குடும்பத்திற்கு ஒரு பிள்ளை கட்டாய இராணுவப் பயிற்சிக்கு வர வேண்டும் என்று புலிகள் அறிவித்தனர். அது ஏழை, பணக்காரர் எல்லோரையும் பாதித்தது. அப்போதும் சில பணக்காரர்கள் புலிகளுக்கு பணம் கொடுத்து தமது பிள்ளைகளை மீட்டு வந்தனர்.

கொள்கை எல்லாம் குறிப்பிட்ட எல்லை வரைக்கும் தான். கட்டாய இராணுவ பயிற்சியை ஊக்குவித்த புலிகளின் முக்கியஸ்தர்கள் கூட, தமது பிள்ளைகளை சேவையில் ஈடுபடுத்த விரும்பி இருக்கவில்லை. தனது பிள்ளையும் படையில் இணைக்கப் பட்டதை அறிந்து கொண்ட கவிஞர் புதுவை இரத்தினதுரை (முக்கிய தலைவர்களில் ஒருவர்), சம்பந்தப் பட்ட பொறுப்பாளரின் சட்டையை பிடித்து உலுக்கி, பிள்ளையை மீட்டு வந்தார். இந்தச் சம்பவத்தை யோ. கர்ணன் தனது நூலில் பதிவு செய்துள்ளார். 

யோ. கர்ணன் தனது நூலுக்கு கொலம்பஸின் வரைபடங்கள் என்று பெயரிட்டாலும், அதை எவ்வாறு சரித்திர கால கொலம்பஸ் உடன் ஒப்பிடுவது என்பதில் தடுமாறி உள்ளார். கொலம்பஸ் ஸ்பானிஸ் சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்கும் நோக்கில் புதிய நாடுகளை கண்டுபிடித்தார். ஆனால், ஈழத் தமிழர்களோ மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத்தை வளம் படுத்த அகதிகளாக சென்றனர். இரண்டையும் ஒப்பிட முடியாது.

இருப்பினும், யோ. கர்ணன் எதிர்பாராத ஒற்றுமை ஒன்றை இங்கே குறிப்பிட வேண்டும். கொலம்பஸ் வாழ்ந்த காலத்தில், ஸ்பெயின் நாட்டில் நூறாண்டுகளாக இருந்த, அரபு பேசும் இஸ்லாமிய மூர்களின் இராச்சியம் சுருங்கிக் கொண்டிருந்தது. அதன் மீது கத்தோலிக்க ஸ்பானிஷ் படைகள் ஆக்கிரமிப்பு போரை நடத்திக் கொண்டிருந்தன. மூர்களின் இராச்சியத்தை புலிகளின் de facto தமிழீழத்துடன் ஒப்பிடலாம். அதே மாதிரி, கத்தோலிக்க ஸ்பானிஷ் படைகளை, பௌத்த சிங்கள படைகளுடன் ஒப்பிடலாம்.

அரேபியர் மட்டுமல்லாது, ஸ்பானிஷ் மொழி பேசும் முஸ்லிம்கள், மற்றும் யூதர்கள், என்று பெருந்தொகையான அகதிகள், அன்று மூர்களின் இழந்து கொண்டிருந்த இராச்சியத்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தார்கள். பிற்காலத்தில் அவர்கள் எல்லோரும் மூர்கள் என்று பொதுப் பெயரில் அழைக்கப் படவிருந்தனர். 1492 ம் ஆண்டு நடந்த இறுதிப் போரின் முடிவில், ஸ்பெயின் நாடு முழுவதும் கத்தோலிக்க மன்னராட்சி நிறுவப் பட்டது. அத்துடன் ஸ்பெயினில் இருந்த "மூர் தேசியம்" அழிந்து விட்டது என்று கருத முடியாது.

புலம்பெயர்ந்த ஸ்பானிஷ் மூர்கள், அல்ஜீரியாவில் "நாடு கடந்த மூர் இராச்சியம்" அமைத்துக் கொண்டனர். அங்கிருந்த படியே, தமது தாயகத்தை ஆக்கிரமித்த "கத்தோலிக்க- ஸ்பானிஷ் பேரினவாத அரசுக்கு" எதிராக போர் தொடுத்தார்கள். இறுதிப்போரில் ஸ்பெயினில் நடந்த "மூர் இனப்படுகொலை", அவர்களது அரசியல் பிரச்சாரங்களில் முக்கியத்துவம் பெற்றது. அந்தக் காலங்களில் ஐ.நா. மன்றம் எதுவும் இருக்கவில்லை. இருந்திருந்தால் ஜெனீவா சென்று ஸ்பெயினில் நடந்த மூர் இனப்படுகொலைக்கு நீதி கேட்டிருப்பார்கள்.

கிட்டத்தட்ட அதே மாதிரியான வரலாறு, 2009 ம் ஆண்டுக்குப் பின்னரான தமிழ் தேசிய அரசியல் அரங்கில் உருவானது. அந்த வருடம், அது வரை காலமும் புலிகளின் ஆட்சியில் இருந்த de facto தமிழீழமான வன்னிப் பிரதேசம், சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப் பட்டது. அதற்குப் பின்னர், அமெரிக்காவில் "நாடு கடந்த தமிழீழம்" உருவானது. மேற்கத்திய நாடுகளில் இயங்கிய புலி ஆதரவு அமைப்புகள், வன்னியில் நடந்த தமிழ் இனப்படுகொலையை தமது முக்கியமான அரசியல் கோரிக்கையாக வரித்துக் கொண்டன. இஸ்லாமிய மூர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி, அதே பாணியில் புலம்பெயர் தமிழ் தேசிய அரசியலை மீளுருவாக்கம் செய்தனர்.

முன்னாள் புலிப் போராளியான யோ. கர்ணன் எழுதியுள்ள கொலம்பஸின் வரைபடங்கள் நூலானது, "புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களின்" கதைகளை கூறுகின்றது. இது அவர்களது சொந்தக் கதை. அதனால் தான், அதை மற்றவர்கள் அறிந்து கொள்வதை விரும்பவில்லை. கொலம்பஸின் வரைபடங்கள் இருப்பதை அறிந்து கொண்டவர்களும், அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர்களும் அவர்கள் தான். கொலம்பஸ் கண்டுபிடித்த அமெரிக்காவில் நாடு கடந்த தமிழீழம் உருவானது ஒரு தற்செயல் நிகழ்வாக இருக்க முடியாது.


கொலம்பஸின் வரைபடங்கள் நூலை வாங்குவதற்கு:

Monday, May 18, 2015

தமிழ் நாடு, ஈழத் தேசிய விடுதலைப் போராட்டங்கள் - ஒரு மீளாய்வு


ஈழ விடுதலைப் போராட்டம் நடந்த அதே கால கட்டத்தில், தமிழ் நாடு விடுதலைப் போராட்டமும் நடந்தது என்ற தகவல், இன்றைக்கும் பலரால் நம்ப முடியாமல் இருக்கலாம். அதற்கு முக்கியமாக இரண்டு காரணங்களை குறிப்பிடலாம்.


  1. ஆரம்பத்தில் இருந்தே, இந்திய அரசு ஈழத் தமிழரின் பிரச்சினையை, தனது வெளிவிவகார கொள்கையின் ஒரு பகுதியாக கொண்டிருந்தது. அது தனது நாட்டிற்குள் எந்த இடத்திலும் இனப் பிரச்சினை கிடையாது என்று உலகை ஏமாற்றிக் கொண்டிருந்தது. 
  2. ஈழத்தில் தமிழ் பூர்ஷுவா வர்க்கம், சிங்கள பூர்ஷுவா வர்க்கத்துடன் ஏற்பட்ட முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்காக தனி நாட்டுக் கோரிக்கையை முன் வைத்திருந்தது. இனப் பிரச்சினையில் வட மாகாண குட்டி முதலாளிய இளைஞர்களும் பாதிக்கப் பட்ட பின்னர் தான், அது முப்பதாண்டு கால ஈழப் போராக பரிணமித்தது.


தமிழகத்தில் அண்ணாத்துரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் தான் முதன் முதலாக தமிழ் தேசியத்தை நிறுவன மயப் படுத்தியது. அதன் தாக்கம் ஈழத்தில் பல இடங்களிலும் எதிரொலித்தது. இலங்கையில் வாழும் தமிழர்களும், தமிழக சினிமாப் படங்களின் இரசிகர்களாக, தமிழக சஞ்சிகைகளின் வாசகர்களாக இருந்து வந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் பற்றிய தகவல்கள், உடனுக்குடன் ஈழத்திற்கும் கடத்தப் பட்டன. ஈழத் தமிழர்கள், திமுக தலைவர் கருணாநிதியை தமிழினத் தலைவராக ஏற்றுக் கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. முதன்முதலாக தமிழீழக் கோரிக்கை வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சி, திமுக வின் உதயசூரியன் சின்னத்தை சுவீகரித்து இருந்தது.

தமிழகத்து பூர்ஷுவா வர்க்க நலன் சார்ந்த திமுக, தனித் தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டதும், அதற்கு பதிலாக உடனடியாக ஒரு மாற்று இயக்கம் தோன்றவில்லை. இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர், நக்சல்பாரி இயக்கத்தில் இருந்து பிரிந்த தமிழரசன் குழுவினர் தமிழ்நாடு விடுதலையை தமிழ் பாட்டாளி வர்க்கக் கோரிக்கை ஆக்கினார்கள். எழுபதுகளுக்குப் பின்னர் ஈழத்தில் எழுந்த குட்டி முதலாளிய வர்க்கத்தின் எழுச்சியின் தீவிரத்திற்கு, த.வி.கூ. வினால் முகம் கொடுக்க முடியவில்லை. அதனால், விரைவிலேயே அரசியல் அரங்கில் இருந்து ஒதுக்கப் பட்டது. ஆனால், ஈழத்தில் எழுந்த மாற்று அரசியல் அமைப்புகள், பிராந்திய வல்லரசான இந்தியாவின் பிடிக்குள் சிக்கிக் கொண்டு தவித்தன.

எழுபதுகளில் சிங்கள இளைஞர்களை திருப்திப் படுத்தும் நோக்கில், இலங்கை அரசு கொண்டு வந்த தரப்படுத்தல் சட்டம், வட இலங்கையை சேர்ந்த குட்டி முதலாளிய வர்க்க இளைஞர்களின் எழுச்சிக்கு வழிவகுத்தது. தமிழகத்திலும், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் அது போன்ற எழுச்சியை உண்டாக்கி இருந்தாலும், அதன் பலன்களை ஏற்கனவே திமுக அறுவடை செய்து விட்டிருந்தது. ஈழத்தில் நடந்த இளைஞர்களின் எழுச்சி, மிதவாத தமிழ் அரசியல் தலைமையை கேள்விக்குள்ளாக்கியது. பாராளுமன்ற பாதையை நிராகரித்து, ஆயுதப் போராட்டத்தை தேர்ந்தெடுத்தது. ஆரம்பத்தில், த.வி.கூ. தீவிரவாத இளைஞர்களை தனது அடியாட்படையாக வைத்திருக்க விரும்பியது. ஆயினும், தீவிரவாத இளைஞர்கள் மத்தியில் பரவிய இடதுசாரிக் கருத்துக்கள் தான், மிதவாத அரசியல்வாதிகளின் பித்தலாட்டங்களை அவர்களுக்கு அடையாளம் காட்டியது எனலாம்.

அறுபதுகளில் யாழ்ப்பாணத்தில் நடந்த தீண்டாமை ஒழிப்புப் போராட்டமும், எழுபதுகளின் தொடக்கத்தில் தென்னிலங்கையில் நடந்த ஜேவிபி கிளர்ச்சியும், ஆயுதப் போராட்டம் சாத்தியமே என்ற எண்ணத்தை இளைஞர்கள் மனதில் விதைத்தது. அதே மாதிரி, ஈழப் போராட்ட இயக்கங்களின் துணிச்சல் மிக்க நடவடிக்கைகள் தமிழகத்தில் எதிரொலிகளை உண்டாக்கிய நேரம், தமிழ் நாடு விடுதலைப் படை தோன்றியது. ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பௌதிகவியல் விதிகளுக்கு அமைய அனைத்தும் நடந்துள்ளன. அந்த உண்மையை மக்கள் தெரிந்து கொள்வதற்கு முன்னர், அரசுகள் புரிந்து கொள்கின்றன. அதனால் தான், முப்பதாண்டு கால போருக்குப் பின்னர், மிகக் கொடூரமாக புலிகளை அழித்து, தெற்காசிய பிராந்திய விடுதலை இயக்கங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

கடந்த கால அனுபவங்களில் இருந்து படிப்பினைகளை பெறுவதும், அதன் அடிப்படையில் ஒரு விடுதலை இயக்கத்தை கட்டமைப்பதும் ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவையாக உள்ளன. ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில், ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் நாடு விடுதலை பற்றிய விழிப்புணர்வும் ஏற்பட்டிருந்தது. பல்வேறு விடுதலை இயக்கங்களின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் சிலர் தமது தனிப்பட்ட கருத்தாக அதனை முன்மொழிந்துள்ளனர். இருப்பினும் தலைமை அது குறித்து எந்தக் கருத்தும் கூறாமல் மௌனமாக இருந்தது. 

இடதுசாரி இயக்கங்கள் கூட, இந்திரா காந்தி மறைவுக்கு அஞ்சலி செலுத்துமளவிற்கு, இந்தியாவின் கைப் பொம்மைகளாக இயங்கினார்கள். ஆயுதங்கள், நிதிகளை வழங்கி, ஈழ விடுதலை அமைப்புகளை இந்தியா தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. அது இறுதியில், இந்தியா விரும்பிய நேரம் அந்த இயக்கங்களை அழிப்பதற்கு வழி வகுத்தது.

ஈழத்தின் விடுதலைப் போராட்டம், தமிழ் பேசும் பூர்ஷுவா வர்க்க கோரிக்கையாக தொடங்கினாலும், அது குட்டி முதலாளிய இளைஞர்களினால் வழிநடாத்தப் பட்டு, பாட்டாளி வர்க்க மக்களின் கைகளில் வந்து சேர்ந்தது. பெரும்பான்மை தமிழ் மக்களின் ஆதரவின்றி, முப்பதாண்டுகள் வெற்றிகரமாக போராட முடிந்திருக்காது என்று வெளிநாட்டு ஆய்வாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், அந்தப் "பெரும்பான்மை மக்கள்" யார்? ஈழத்தின் தமிழ் உழைக்கும் மக்கள் அல்லவா? 

உயிரை அர்ப்பணிக்கத் தயாராக இருந்த போராளிகள் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து தான் உருவானார்கள். சாதி ஒடுக்குமுறைக்கு பலியான, வறுமையினால் பாதிக்கப் பட்டவர்கள், அதாவது இழப்பதற்கு எதுவுமற்ற மக்கள் தான் போராடினார்கள். அந்த மக்களை நிறுவன மயப் படுத்துவதும், ஓர் இனத்தின் விடுதலைக்கு தலைமை தாங்க வைப்பதும், ஈழத்தில் மட்டுமே சாத்தியமான ஒன்றல்ல. ஆனால், ஒரு தேசிய இனத்தின் சுதந்திரமும், சுய நிர்ணய உரிமையும், அதற்கு அயலில் வாழும் பாட்டாளி வர்க்க மக்களின் ஒற்றுமையினால் மட்டுமே சாத்தியமாகும்.

Tuesday, September 23, 2014

வாக்கெடுப்பின் முடிவுகளை முதலாளிகளே தீர்மானிக்கிறார்கள்!


ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு, தமிழீழத்தில் சாத்தியமா?

ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு, சில தமிழீழவாதிகளின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் இணக்க அரசியல் செய்யும் மே 17 இயக்கம் அதிக அக்கறை காட்டியுள்ளது. எனது பார்வைக்கு எட்டிய வரையில், மே 17 அனுதாபி ஒருவர் எழுதிய ஆய்வுக் கட்டுரை மிகவும் ஆக்கபூர்வமாக அமைந்துள்ளது. (https://www.facebook.com/photo.php?fbid=858459330831945&set=a.254018564609361.72820.100000036593373&type=1) அதில், பின்னடைவுக்கு காரணமாக சில குறிப்புகளை எழுதியுள்ளார். அதிலிருந்து படிப்பினைகளை பெற்றால், தமிழீழம் கிடைப்பது சாத்தியமே என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முதலில், மே 17 இயக்கத்தின் "சுதந்திர வேட்கை" எந்தளவு நேர்மையானது என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. அது தமிழ்நாடு பிரிவினையை ஆதரிக்கவில்லை. இந்தியாவில் இணக்க அரசியல் செய்யும் கொள்கை கொண்டது.

முதலாளித்துவ நாகரிகம் நிலவும் ஒற்றைத் துருவ உலகில், இப்படியான வலதுசாரி தேசியவாதிகளின் வெகுளித்தனம் பல உண்மைகளை காண மறுக்கிறது. ஸ்காட்லாந்திலும் அது தான் நடந்தது. ஸ்காட்லாந்து பிரிவினைக்கான இயக்கம் எப்படி ஆரம்பமாகியது?

ஸ்காட்லாந்து, ஐக்கிய இராச்சியத்தில் பொருளாதார வளர்ச்சி கண்டுள்ள மாநிலம் ஆகும். வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய பிற பகுதிகளுடன் ஒப்பிடும் பொழுது, ஸ்காட்லாந்து பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. பிரிட்டனில் எடுக்கப் படும் 90% எண்ணை, ஸ்காட்லாந்து கடல் எல்லைக்குள் உள்ளது. ஸ்காட்டிஷ் எண்ணையில் பெரும்பகுதி இங்கிலாந்திற்கு செல்கிறது. மேலும் உல்லாசப் பிரயாணத் தொழில் போன்ற சேவைத் துறையில் வேலை செய்வோர் தான் அங்கு அதிகம்.

இது போன்ற பொருளாதாரப் பின்புலத்தில் இருந்து தான் பிரிவினைக் கோரிக்கை தொடங்கியது. அதாவது, வசதியான ஸ்காட்டிஷ் மத்தியதர வர்க்கம், ஸ்காட்லாந்து சுதந்திர நாடனால், தாம் விரும்பிய படி அரசமைக்கலாம் என்று கனவு கண்டது. அது உண்மையில் ஒரு படித்த மத்தியதர வர்க்கத்தின் வெகுளித்தனம்.

வட அயர்லாந்து, தன்னை அயர்லாந்து குடியரசுடன் இணைக்குமாறு, அல்லது தனி நாடாக்குமாறு பல தசாப்த காலமாக போராடி வந்தது. வட அயர்லாந்து, மிக நீண்ட ஆயுதப்போராட்டம் நடந்த வரலாற்றைக் கொண்டது. அநீதியான முறையில் சிறையில் அடைக்கப் பட்டிருந்த பொபி சான்ட்ஸ், காந்தீய வழியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து தியாக மரணத்தை தழுவிக் கொண்டார்.

ஆயிரக் கணக்கானோர் உயிர்ப்பலி கொடுத்து, பல இன்னல்களை அனுபவித்த போதிலும், வட அயர்லாந்தினால் ஒரு பொது வாக்கெடுப்பின் மூலம் தனது தலைவிதியை தீர்மானிக்க முடியவில்லை. பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்திடம் அப்படி ஒரு யோசனை கூடக் கிடையாது.

வட அயர்லாந்து விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலத்தில், ஸ்காட்லாந்து ஒடுக்குமுறையாளர்களுடன் சேர்ந்து ஒத்துழைத்து வந்தது. இத்தனைக்கும், ஸ்காட்லாந்தின் கெயலிக் மொழியும், ஐரிஷ் மொழியும், ஒரே மாதிரியான கெல்டிக் மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. இரண்டுமே ஆங்கிலத்தில் இருந்து முற்றிலும் வேறு பட்ட அந்நிய மொழிகள். அப்படி இருந்தும், ஸ்காட்லாந்து, அயர்லாந்துக்கு இடையில், மொழி அடிப்படையிலான சகோதரத்துவ உணர்வு எந்தக் காலத்திலும் இருக்கவில்லை. அதற்குக் காரணம், இனம் அல்ல, வர்க்கம் தான் அரசியலை தீர்மானிக்கிறது.

ஐரிஷ் மக்களுடன் ஒப்பிடும் பொழுது, ஸ்காட்டிஷ் மக்கள் பொருளாதாரத்தில் முன்னேறி இருந்தனர். ஸ்காட்டிஷ் மேட்டுக்குடியினர், பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். ஸ்காட்லாந்து எப்போதும் தன்னை இங்கிலாந்தின் சம பங்காளியாக கருதி வந்தது. பல ஸ்காட்டிஷ்காரர்கள், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் காலனிய கால போர்களில் பங்கெடுத்துள்ளனர். காலனிய நிர்வாகத்தில் உயர் பதவி வகித்தனர். "நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து முதலாம், இரண்டாம் உலகப் போர்களில் பங்கெடுத்தோம்..." என்று, ஸ்காட்லாந்து பிரிவினைக்கு எதிரான அரசியல்வாதிகள் புலம்பியமை இங்கே குறிப்பிடத் தக்கது.

அதற்காக, ஸ்காட்டிஷ் மக்கள் எல்லோரும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை தாங்கிப் பிடித்தார்கள் என்று சொல்ல வரவில்லை. குறிப்பாக, ஸ்காட்டிஷ் மேட்டுக்குடி / மத்திய தர வர்க்கம் பிரிட்டிஷ் ஆதரவாளர்களாக இருந்தார்கள் என்று கூறலாம். தற்போது நடந்து முடிந்துள்ள பொது வாக்கெடுப்பில், எடின்பேர்க் போன்ற மத்தியதர வர்க்க பகுதிகளில் அதிகளவு பிரிவினைக்கு எதிரான ஓட்டுகள் விழுந்துள்ளமை இங்கே குறிப்பிடத் தக்கது. கிளாஸ்கவ் போன்ற ஏழை உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில், பிரிவினைக்கு ஆதரவான ஓட்டுகள் விழுந்துள்ளன.

தமிழீழமும் ஆரம்பத்தில் ஈழத் தமிழ் மத்திய தர வர்க்கத்தின் கோரிக்கையாகத் தான் எழுந்தது. (அது தவிர்க்க முடியாதது. உலகில் பெரும்பாலான தேசிய இன எழுச்சிகள், குறிப்பிட்ட இனத்தின் மத்தியதர வர்க்க நலன் சார்ந்ததாகவே இருக்கும்.) ஸ்காட்டிஷ் மேட்டுக்குடியினர், அரசியல் விழிப்புணர்வு பெற்ற பின்னர், ஆங்கிலேய அரசுடன் முரண்பட்டனர். தமது பகுதியில் தாமே ஆள முடியும் என்ற நம்பிக்கை பிறந்தவுடன் தனி நாடு கோரிக்கையை முன் வைத்தனர். ஈழத் தமிழ் மேட்டுக்குடியினரும், சிங்கள ஆளும்வர்க்கத்துடன் முரண்பட்ட பின்னர் தான், தமிழீழம் கேட்கத் தொடங்கினார்கள். ஆயினும், அதை நடைமுறைப் படுத்துவதற்கு உழைக்கும் வர்க்க மக்களின் ஆதரவு தேவை.

1976 ஆம் ஆண்டு எடுக்கப் பட்ட வட்டுக்கோட்டை தீர்மானமும், தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து கிடைத்த 1977 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றியும், உழைக்கும் வர்க்க தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்கான அரசியல் நகர்வுகள் ஆகும். மேலும், அடுத்த முப்பதாண்டுகளாக நடந்த ஈழப் போர், கணிசமான அளவு உழைக்கும் வர்க்க மக்களின் ஆதரவை திரட்டிக் கொடுத்துள்ளது. (உண்மையில், அடித்தட்டு மக்கள் தான் போரினால் அதிகளவில் பாதிக்கப் பட்டனர்.)

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பின்னர், அதன் அடிப்படையில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்துவது தமிழர் விடுதலைக் கூட்டணியின் நோக்கமாக இருந்துள்ளது. வடக்கு, கிழக்கில் ஒன்றைத் தவிர எல்லாத் தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அது வாக்கெடுப்பிற்கான எதிர்பார்ப்பை மேலும் தூண்டி விட்டது.

உண்மையிலேயே, அன்று தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடந்திருந்தால், ஈழம் பிரிந்திருக்குமா? இந்த விஷயத்தில், கூட்டணியினரின் சந்தரப்பவாத அரசியலை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்ப்போம். அன்று, பெரும்பான்மை முஸ்லிம் மக்களும் தமிழீழத்திற்கு ஆதரவாக இருந்தனர்.

சிங்கள குடியேற்றங்களில் வாழ்ந்த மக்கள் பிரிவினையை எதிர்த்திருக்கலாம். ஆயினும், தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் தமிழீழ சுதந்திரத்திற்கு ஆதரவாக வாக்களித்து இருப்பார்கள். அந்தப் பொன்னான வாய்ப்பு, இனிமேல் எந்தக் காலத்திலும் திரும்பி வராது என்பது தான் யதார்த்தம். ஈழப்போரில் நடந்த ஆயிரக் கணக்கான உயிரிழப்புகள், சொத்து அழிவுகள், இடப்பெயர்வுகள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிப் போட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள், மூன்று திசைகளில் பிரிந்து சென்று விட்டனர். மேலும், தமிழ் மக்கள் மத்தியிலும், ஈழப் போரானது ஒற்றுமையை குலைத்துள்ளது. "புலி ஆதரவாளர்கள்", "புலி எதிர்ப்பாளர்கள்" என்று இரண்டு பிரிவுகள், போர்க் காலத்தில் நடந்த கொலைகள், பழிவாங்கல்களினால் இரண்டு துருவங்களாக உள்ளன. எல்லாவற்றிற்கும் பின்னால் ஏதாவது ஒரு சூழ்ச்சி பின்னப் பட்டிருக்கலாம்.

ஆயினும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், அதன் வாரிசான சிறிலங்கா அரசும் சிந்திக்கும் அளவிற்கு, நாங்கள் யாரும் சிந்திப்பது இல்லை என்பதும் உண்மை தான். முதலில், ஏகாதிபத்தியத்தின் தன்மை பற்றி அறிந்து கொண்டால் தானே, அதற்கு ஏற்றவாறு எமது அரசியலை தீர்மானிக்க முடியும்? "உலகில் ஏகாதிபத்தியம் என்ற ஒன்று இல்லை" என்று சாதிப்பவர்களினால், என்றைக்குமே தமிழ் மக்களை வழிநடத்த முடியாது.

தமிழீழத்தையும், ஸ்காட்லாந்தையும் ஒப்பிட முடியுமா? நாங்கள் சில ஒற்றுமைகளை சுட்டிக் காட்டி, ஒப்பிட்டு மகிழலாம். ஆனால், "ஸ்காட்லாந்தில் சாத்தியமான ஒன்று, ஏன் தமிழீழத்திற்கு பொருந்தாது?" என்று வாதிட முடியாது. ஏனென்றால், ஸ்காட்லாந்து முதலாம் உலகத்தை சேர்ந்தது. அது காலனியாதிக்க நாடாக இருந்தது.

தமிழீழம் மூன்றாமுலகத்தை சேர்ந்தது. அது காலனிய அடிமை நாடாக இருந்தது. அது ஒரு முக்கியமான வேறுபாடு தான். இரண்டாம் உலகப்போரில், ஜெர்மனியிடம் இருந்து விடுதலை பெற்ற நெதர்லாந்து, தனது ஆசியக் காலனியான இந்தோனேசியாவுக்கு சுதந்திரம் கொடுக்க மறுத்து வந்தது.

ஒரு பேச்சுக்கு, ஸ்காட்லாந்து சுதந்திரம் அடைந்திருந்தால், அது நாளைக்கு தமிழீழ சுதந்திரத்தை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அந்தத் தருணத்தில், அது பிரிட்டனின் அதே நிலைப்பாட்டை எடுக்கலாம். இது ஒரு வகையில், தேசியவாதத்தின் குறுகிய மனப்பான்மை என்றும் கூறலாம். தேசியவாத சித்தாந்தம், எப்போதும் உள்நோக்கிப் பார்க்கும் தன்மை கொண்டது. தனது பிரதேசத்தை தவிர, உலகின் பிற பகுதிகளில் என்ன பிரச்சினை இருக்கிறது என்று அறிவதில் அக்கறை காட்டுவதுமில்லை.

"ஸ்காட்லாந்து வாக்கெடுப்பின் பின்னடைவால், அதன் விடுதலை தற்காலிகமாக தள்ளிப்போயுள்ளது..." என்பது மே 17 காரர்களின் வாதம். அதாவது, சில தவறுகளை திருத்திக் கொண்டால், அடுத்த தடவை நடக்கவிருக்கும் பொது வாக்கெடுப்பில் எப்படியும் விடுதலை கிடைத்து விடுமாம். மேற்குலக நாடொன்றில், தனி நாடு பிரிவினைக்கான பொது வாக்கெடுப்பு நடப்பது இதுவே முதல் தடவை அல்ல.

1995 ஆம் ஆண்டு, கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் கெபெக் (ஆங்கிலத்தில் : கியூபெக்) மாநிலம் பிரிவதற்கான பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதிலேயும், பிரிவினைக்கு எதிரான வாக்குகள் அதிகளவில் விழுந்தன. (மிகச் சிறிய வித்தியாசம் தான். ஆம் 49.42%, இல்லை 50.58%) தற்போது, 14 வருடங்களுக்குப் பின்னரும், மீண்டும் ஒரு வாக்கெடுப்பு நடத்துவது பற்றிய கதையே இல்லை.

ஸ்காட்லாந்திலும், கெபெக்கிலும் பெருமளவு வெளிநாட்டுக் குடியேறிகள் சுதந்திரத்திற்கு எதிராக ஓட்டுப் போட்டதாக குற்றஞ்சாட்டப் பட்டது. மே 17 ஆய்வாளர், அந்தக் குறைபாட்டை தனது கட்டுரையில் குறிப்பிடாமல் விட்டது தற்செயலாக நடந்தது அல்ல. ஸ்காட்லாந்து, கெபெக் விடுதலைக்கு எதிராக ஓட்டுப் போட்டவர்களில், கணிசமான அளவு தமிழகத் தமிழர்கள், ஈழத் தமிழர்களும் அடங்குவார்கள். அந்த உண்மையை ஒத்துக் கொண்டால், தனது பிழைப்பில் தானே மண்ணள்ளிப் போட்டதாக முடிந்து விடும்.

வளர்ச்சி அடைந்த முதலாம் உலக நாடென்பதால், பிரிட்டனுக்கு சென்ற வந்த பன்னாட்டுக் குடியேறிகளும் ஸ்காட்லாந்திலும் வசிப்பது எதிர்பார்க்கத் தக்கதே. பவுன் பவுனாக அள்ளலாம் என்ற கனவில், பிரிட்டனில் குடியேறுவதற்கு அல்லது வேலை செய்வதற்கு விரும்புவோர் பலருண்டு. டாலர், யூரோவை விட, பவுனின் பெறுமதி அதிகம் என்பதால், பிரிட்டனில் வேலை செய்து பணம் அனுப்புவருக்கு இந்தியாவில் அதிக மதிப்புக் கிடைக்கிறது. பவுனின் மகாத்மியம் பற்றி இங்கே விபரிக்கத் தேவையில்லை. சாதாரண மக்கள் எல்லோருக்கும் தெரிந்த உண்மை இது.

ஸ்காட்லாந்து தனி நாடானால், அது பவுனை நாணயமாக பயன்படுத்த முடியாது என்று, பிரிட்டிஷ் அரசு திட்டவட்டமாக அறிவித்து விட்டது. சுதந்திரம் அடைந்த பின்னரும் பவுனை தொடர்ந்தும் பயன்படுத்த விரும்புவதாக ஸ்காட்டிஷ் தேசியவாதக் கட்சி அறிவித்திருந்தது. ஆயினும், பவுனை பயன்படுத்துவதற்கு பிரிட்டன் மறுக்கும் பட்சத்தில் அடுத்த ஏற்பாடு என்ன? ஸ்காட்லாந்து தனக்கென தனியான நாணயத்தை அறிமுகப் படுத்துமா? அதன் பெறுமதி என்னவாக இருக்கும்? இதை யாராலும் அறுதியிட்டுக் கூற முடியவில்லை.

பவுனை இழந்து விடுவோம் என்ற பயத்தில், ஸ்காட்லாந்தில் வாழும் தெற்காசிய நாட்டவர்கள், விடுதலையை எதிர்த்து ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். பவுன் பற்றிய அச்சத்தை, பல தமிழ் மக்கள் நேரடியாகவே தெரிவித்து இருக்கிறார்கள். சாதாரண தமிழ் மக்களுக்கு தெரிந்த காரணம், மே 17 ஆய்வாளரின் கண்களுக்கு மட்டும் தெரியவில்லை. அவர் ஸ்காட்லாந்தில் வாழும் "இங்கிலாந்துக்காரர்களை" பற்றி மட்டும் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

இங்கிலாந்துகாரர்களின் வாக்குரிமையை தடுத்திருந்தால், ஸ்காட்லாந்து சுதந்திரம் அடைந்திருக்கும் என்று அடித்துக் கூறுகிறார். கொஞ்சம் பொது அறிவை பயன்படுத்தி சிந்திக்கக் கூடாதா? ஸ்காட்லாந்தில் இங்கிலாந்துக்காரர்கள் மட்டுமா குடியேறி இருப்பார்கள்? எத்தனை இலட்சம் வேல்ஸ் அல்லது ஐரிஷ்காரர்கள் வசிக்கிறார்கள்? வெறும் இனவாதக் கண்ணோட்டத்துடன் எழுதப் படும் ஆய்வுக் கட்டுரைகளினால் தமிழீழத்திற்கு எந்தப் படிப்பினையும் கிடைக்கப் போவதில்லை.

அது சரி, ஸ்காட்டிஷ் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பிரிவினைக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டார்களா? எத்தனை சதவீத ஸ்காட்டிஷ் வாக்காளர்கள் ஐக்கிய இராச்சியத்தோடு சேர்ந்திருக்க விரும்புகிறார்கள்? பொது வாக்கெடுப்பினால், ஸ்காட்லாந்தில் எத்தனை குடும்பங்கள், உறவினர்கள், நண்பர்கள் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தார்கள் என்பது தெரியுமா? ஆமாம், அவர்கள் எல்லாம் ஸ்காட்டிஷ் இனத்தவர்கள் தான். ஆனால், ஸ்காட்லாந்து பிரிவினை தொடர்பான அரசியல் கருத்து முரண்பாடு அவர்களைப் பிரித்துள்ளது.

அது போகட்டும். எத்தனை ஸ்காட்டிஷ் முதலாளிகள் சுதந்திரத்தை ஆதரித்தார்கள்? எதற்காக ஸ்காட்டிஷ் மேட்டுக்குடியினர் சுதந்திரத்திற்கு எதிராக ஓட்டுப் போட்டனர்? ஸ்காட்டிஷ் மேட்டுக்குடியினர் பெரும்பான்மையாக வாழும், எடின்பேர்க் போன்ற நகரங்களில் தான் பெருமளவு "இல்லை" ஓட்டுகள் கிடைத்துள்ளன. தேர்தல் முடிவுகள் தொடர்பான புள்ளிவிபரம் அதைக் காட்டுகின்றது.

ஸ்காட்டிஷ் ஊடகங்களின் நிலைப்பாடு என்னவாக இருந்தது? அரச ஊடகமான, பிபிசி யை மறந்து விடுவோம். ஸ்காட்லாந்தில் வெளியாகும் தினசரிப் பத்திரிகைகளில், ஒன்று மட்டும் தான் சுதந்திரத்தை ஆதரித்திருந்தது. மற்ற எல்லா பத்திரிகைகளும், பிரிட்டனுடன் சேர்ந்திருக்க விரும்பி, "இல்லை" ஓட்டுப் போடுமாறு, வாக்காளர்களுக்கு அறிவுறுத்தின. மேற்குலக நாடுகளில், பத்திரிகைகள், வெகுஜன ஊடகங்கள் பெரிய நிறுவனங்களின் கைகளில் உள்ளன.

ஸ்காட்லாந்து சுதந்திர நாடானால், அதன் தேசிய வங்கியாக வரும் வாய்ப்புப் பெற்ற Bank of Scotland, எதற்காக பிரிவினையை ஆதரிக்கவில்லை? உலகம் முழுவதும் ஸ்கொச் விஸ்கி ஏற்றுமதி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள், ஸ்காட்லாந்து சுதந்திரத்தை எதிர்த்த மர்மம் என்ன? விஸ்கி ஸ்காட்லாந்தின் பிரதானமான பொருளாதாரம் அல்லவா?

இதற்கெல்லாம் விடை ஒன்று தான். பெரும் மூலதனத்திற்கு தேசியம் கிடையாது. சர்வதேச சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதற்கு, ஸ்காட்லாந்தை விட பிரிட்டன் தான் சிறந்த நாடு. பிரிட்டன் தான் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கிறது, ஸ்காட்லாந்து அல்ல. அதனால் தான் ஸ்காட்டிஷ் முதலாளிகளும், மேட்டுக்குடியினரும் பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசமாக இருந்தார்கள்.

இதை அப்படியே, தமிழீழத்திற்குப் பொருத்திப் பாருங்கள். ஸ்காட்லாந்து விடுதலைக்கு எதிராக நின்ற பெரும் மூலதனம், தமிழீழ விடுதலையை ஆதரிக்குமா? அதனால் அதற்கு என்ன இலாபம்? ஐ.நா. கண்காணிப்பின் கீழ் பொது வாக்கெடுப்பு நடத்தி, கிழக்கு தீமோரை பிரித்தார்கள். எதற்காக? கிழக்கு தீமோர் மக்கள் மேல் பரிதாபப் பட்டு செய்தார்களா? இல்லை. அந்த நாட்டில் எண்ணை வளம் உள்ளது. அவற்றை மேற்குலக எண்ணை நிறுவனங்கள் ஆளுவது மட்டுமே ஏகாதிபத்தியத்தின் குறிக்கோளாக இருந்தது.

தமிழீழத்தில் எண்ணை வளம் இல்லை என்பதால், கிழக்கு தீமோரை பிரிக்க விரும்பிய பெரும் மூலதனம் தமிழீழ விடுதலையை ஆதரிக்காது. மே 17 ஆய்வாளரின் ஆலோசனைகளின் படி, தமிழீழத்தில் பொது வாக்கெடுப்பு நடந்தால், முதலில் எதிர்ப்பவர்கள் மிகப் பெரிய தமிழ் முதலாளிகளாக இருப்பார்கள். ஏனென்றால், கொழும்பு தான் சர்வதேச மூலதனத்துடன் தொடர்பு வைத்துள்ளது. யாழ்ப்பாணம் அல்ல. மேலும், ஸ்காட்லாந்து வாக்கெடுப்பில், பவுன் தொடர்பாக எழுந்த பிரச்சினை தமிழீழத்திலும் வரலாம். தமிழீழத்தின் நாணயம் எது? சிறிலங்கா ரூபாய் தொடர்ந்தும் பயன்படுத்தப் படுமா? அதற்கு சிறிலங்கா அரசு அனுமதிக்குமா?

தமிழீழம் சுதந்திர நாடானால், தமிழீழ ரூபாய் என்ற புதிய நாணயம் கொண்டு வருவார்களா? அதன் பெறுமதி என்னவாக இருக்கும்? புலிகள் இருந்த காலத்திலேயே, தமிழீழ ரூபாய் நோட்டுகளை பாவனைக்கு கொண்டு வருவதற்கு முயற்சி செய்தார்கள். ஆனால், மக்களின் ஆதரவு இல்லாத காரணத்தினால் கைவிடப் பட்டது. (100 சிறிலங்கா ரூபாய்கள்  = 120 தமிழீழ ரூபாய்கள் என்று பெறுமதி தீர்மானிக்கப் பட்டது. தமிழ்ப் பொது மக்கள், சந்தையினால் நிர்ணயிக்கப் படாத நாணயப் பெறுமதியை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள்.)

தமிழ் பேசும் பாமர மக்களுக்கும் ஓரளவு பொருளாதாரம் தெரியும். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இயங்கிய தமிழீழ வங்கிகளில் கூட, பெருமளவு மக்கள் தங்கள் பணத்தை வைப்பிலிடவில்லை. அதற்குப் பதிலாக சிறிலங்கா அரச வங்கிகளிலேயே தொடர்ந்தும் வைப்பிலிட்டு வந்தார்கள். (சிறிலங்கா வங்கி நிறுவனங்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருந்தன. அரசு ஊழியர்களின் சம்பளங்களும், வர்த்தகத் தொடர்புகளும் சிறிலங்கா வங்கிகள் மூலமே பரிவர்த்தனை செய்யப் பட்டன.) 

உலகம் முழுவதும் வாழும் பெரும்பான்மையான மக்கள், தமது பொருளாதார நலன்களை மட்டுமே முக்கியமாகக் கருதுகின்றனர். தமிழ் மக்களும் அதற்கு விதிவிலக்கு அல்ல. பொது வாக்கெடுப்பு விஷயத்தில், ஏகாதிபத்தியமும், பெரும் மூலதனமும் எந்தப் பக்கம் நிற்கின்றதோ, அதற்கு சார்பாக முடிவுகள் எழுதப்படும்.

இந்த உண்மைகளைப் புரிந்து கொள்ளாத ஒரு தேசியவாத இயக்கம், அந்த இனத்தை சேர்ந்த நடுத்தர வர்க்கத்தின் வெகுளித்தனத்தை மட்டுமே பிரதிபலிக்கும். ஏகாதிபத்தியத்தையும், பெரும் மூலதனத்தையும் எதிர்த்துப் போராடாத தேசியவாத இயக்கத்தினால், தனது மக்களின் விடுதலையை வாங்கித் தர முடியாது.


  • பொது வாக்கெடுப்பின் முடிவுகளை முதலாளிகளே தீர்மானிக்கிறார்கள்!





ஸ்காட்லாந்து தொடர்பான முன்னைய பதிவுகள்:

Tuesday, August 05, 2014

தமிழீழ விடுதலைப் போராட்டமும், இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைத் தமிழர்களும்


இழப்பதற்கு எதுவுமற்ற ஏழை மக்கள் தான் போராட முன்வருவார்கள்." என்ற மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படையில் தான், தமிழீழத்திற்கான விடுதலைப் போராட்டமும் நடந்து முடிந்துள்ளது. "மார்க்சியம் ஒரு வரட்டு சூத்திரம்" என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், அந்த உண்மையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. தமது நடுத்தர வர்க்க நிலைப்பாட்டில் இருந்தே உலகைப் பார்க்கும், வலதுசாரி தமிழ் தேசியவாதிகள், பல்வேறு கருதுகோள்களை வைத்து தவறென நிறுவ முயற்சிக்கின்றனர். அவர்கள் யாரும், தமிழ் பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள் அல்ல.

வலதுசாரி தமிழ் தேசியவாதிகள், வசதியான நடுத்தர வர்க்க பின்னணி கொண்டவர்கள் என்பது ஒரு தற்செயல் அல்ல. வெளிநாடுகளில் வசதியாக வாழ்வோர், தமக்குத் தெரிந்த குடும்ப உறுப்பினர்கள் பலர், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளிகளாக இருந்த உதாரணங்களை கொண்டு வந்து காட்டுகிறார்கள். மேற்கத்திய நாடுகளில் வாழுவோர் எல்லோரும், "நடுத்தர வர்க்கம்" என்று எப்படி உறுதியாகக் கூற முடிகின்றது? இதே நிலைமை தான், பணக்கார வளைகுடா நாடுகளிலும் உள்ளது.

ஒரு நாட்டில் அனைவரினதும் வாழ்க்கை வசதி உயர்ந்திருக்கிறது என்பதாலேயே அவர்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களாக மாறி விடுவார்களா? "பணக்கார" நாடுகளில் நிலவும், பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றிய போதுமான அறிவு எம்மிடம் இருக்கிறதா? அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, சவூதி அரேபியாவில் எத்தனை இலட்சம் ஏழைகள் வாழ்கின்றனர் என்பதை அறிந்து வைத்திருக்கிறோமா?

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்த, வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்ந்த மக்கள் எத்தனை பேர் என்ற விபரம், அங்கு பணியாற்றிய அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடம் (NGO) உள்ளது. ஐ.நா.வின் நிறுவனங்கள், செஞ்சிலுவை சங்கம் ஆகியனவும் அந்த விபரங்களை வைத்திருந்தன.

மேலும், நிவாரணப் பொருட்கள் யாவும் புலிகளின் மேற்பார்வையின் கீழ் தான் வழங்கப் பட்டன. மாவீரர் குடும்பங்கள், போராளிக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கப் பட்டது. புலிகளின் கட்டுபபாட்டுப் பகுதியில் வாழ்ந்த பெரும்பான்மை தமிழ் மக்கள் இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைகள் என்பது ஒரு "வரட்டு சூத்திரம்" அல்ல. அது யதார்த்தம்.

வெளிநாடுகளில் வசதியாக வாழும் பலரின் உறவினர்களும், போராளிகளாக இருந்திருக்கிறார்கள் என்பது உண்மை தான். ஆனால், ஈழத்தில் வாழும் மொத்த தமிழ் சனத் தொகையில் வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அதிலும் மிகக் குறைந்தளவு சதவீதம் தான் போராளிக் குடும்பங்களாக இருந்துள்ளன. அனேகமாக, பெருமளவு வசதியான தமிழர்கள் வாழ்ந்த, யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து தான் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தார்கள்.

வன்னி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் வாழ்ந்த, தமிழ் மாவட்டங்களில் இருந்து, வெளிநாடுகளுக்கு சென்றோர் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. ஆனால், புலிகள் அமைப்பின் போராளிகளில் பெரும்பான்மையானோர், மேற்குறிப்பிட்ட பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

இந்த உண்மையை தெரிந்து கொள்வதற்கு, நாங்கள் அதிக சிரமப் படத் தேவையில்லை. புலிகளுக்காக வேலை செய்த சர்வதேசப் பொறுப்பாளர்களிடம், மாவீரரான போராளிகளின் பட்டியல் நிச்சயமாக இருக்கும். அதை எடுத்து ஆய்வு செய்தாலே தெரிந்து விடும்.

முன்பு ஆப்கானிஸ்தானிலும், இன்று சிரியாவிலும் நடக்கும் ஜிகாதிப் போராட்டங்களில், மேற்கத்திய நாடுகளில் வாழும் முஸ்லிம் இளைஞர்கள் பலர் ஈடுபடுகின்றனர். அதற்காக, அவர்கள் எல்லோரும் தமது வசதியான வாழ்க்கையை உதறித் தள்ளி விட்டு, உணர்வுபூர்வமாக போராளிகள் ஆனார்கள் என்று கருத முடியாது. அந்த இளைஞர்களின் இஸ்லாமிய மதப் பற்று மட்டுமே எங்கள் கண்களுக்கு தெரிகின்றது. ஆனால், அவர்களின் பொருளாதாரப் பின்னணி பற்றி நாங்கள் ஆராய்வதில்லை.

மேற்கத்திய நாடொன்றில், அல்லது வளைகுடா அரபு நாடொன்றில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பதாலேயே, அவர்கள் எல்லோரும் மத்திய தர வர்க்கத்தினர் என்று நினைத்துக் கொள்வது தவறு. அந்த நாடுகளில் உள்ள பொருளாதார பிரச்சினைகள் வெளியே பேசப் படுவதில்லை. பணக்கார நாடுகளில் வாழுவோர் எல்லோரும் நடுத்தர வர்க்கத்தினர் அல்ல.

அமெரிக்காவில் மட்டும் இருபது மில்லியன் ஏழைகள் வாழ்கிறார்கள். மேற்கு ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால், அங்கேயும் இருபது மில்லியனுக்கும் குறையாத ஏழைகள் இருப்பார்கள். மேலைத்தேய நாடுகளில் வாழும், அரபு - இஸ்லாமிய சமூகப் பின்னணி கொண்ட மக்கள் பலர், பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளனர்.

அதற்காக, போராடச் சென்றவர்கள் "எல்லோரும்" ஏழைக் குடும்பங்களை சேர்ந்தவர்கள், வசதி வாய்ப்பற்றவர்கள் என்று கூறவில்லை. உயர்கல்வி கற்றவர்கள், நல்ல சம்பாத்தியம் தரும் வேலையில் இருந்தவர்கள் கூட போராடச் சென்றார்கள். ஆனால், அவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படியானவர்கள், அதிக பட்சம் ஒரு சதவீதம் கூட இல்லை. பெரும்பாலும் 0,01% ஆக இருக்கலாம்.

உலகில் உள்ள அத்தனை இயக்கங்களுக்கும் தலைமை தாங்குவது நடுத்தர வர்க்கமாக உள்ளது. இது தற்செயல் அல்ல. பல நூறு வருடங்களாக ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினர் தான் வசதி வாய்ப்புகளை அனுபவித்து வந்துள்ளனர். ஆகையினால், எத்தகைய சமூக மாற்றமும் அவர்கள் மத்தியில் இருந்து தான் உருவாகும். மார்க்சிய இயக்கமாக இருந்தாலும் அது தான் நிலைமை.

கார்ல்மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ, ஹோசிமின், பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா போன்று, அனேகமாக எல்லா மார்க்சிய தலைவர்களும் நடுத்தர வர்க்கத்தினர் தான். இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைகள் மட்டுமே போராடுவார்கள் என்று அவர்களும் தான் நம்பினார்கள். அவர்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான். அதற்காக, தமது வர்க்கத்தின் நலன்களை பற்றி மட்டும் சிந்திக்கவில்லை. அதனால் தான், ஏழை உழைக்கும் மக்களின் தலைவர்களாக போற்றப் பட்டார்கள்.

நடுத்தர வர்க்க இளைஞர்கள் மட்டுமே போராடிய நாடுகளில், அந்தப் போராட்டம் இலகுவில் தோற்கடிக்கப் பட்டது. உதாரணத்திற்கு, உருகுவேயில் நடந்த கெரில்லாப் போராட்டம். 90% போராளிகள் நடுத்தர வர்க்க மாணவர்கள். பொலிவியாவில் போராடிய சேகுவேராவின் இயக்கத்தை சேர்ந்தவர்கள், நடுத்தர வர்க்க பிரதிநிதிகள்.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஆயுதப் போராட்டம் நடத்தியவர்கள், நடுத்தர வர்க்க மாணவர்கள். அவர்கள் எல்லோரும் மார்க்சியக் கொள்கைகளை பின்பற்றியவர்கள் தான். ஆனால், அவர்களது ஆயுதப் போராட்டங்கள் முளையிலேயே கிள்ளி எறியப் பட்டன. என்ன காரணம்? ஏனென்றால், அந்த இயக்கங்களினால், கடைசி வரையிலும் பெரும்பான்மை ஏழை உழைக்கும் மக்களை அணிதிரட்ட முடியவில்லை.

தேசியவாத, மதவாத இயக்கங்கள், வெகுஜன தளத்தில் பிரபலமான கருத்துக்களை பிரச்சாரம் செய்கின்றன. வளர்ந்து வரும் நாடுகளில், பெரும்பான்மையான ஏழை மக்கள் மத நம்பிக்கையாளர்களாக இருக்கின்றனர். அதற்குக் காரணம் அவர்களிடம் எதுவும் இல்லை. "பணம் இல்லை. படிப்பு இல்லை. வேலை இல்லை..." இவ்வாறு அவர்கள் வாழ்க்கை முழுவதும் குறை கூறுவதற்கு நிறைய "இல்லைகள்" உள்ளன. ஓர் இயக்கம் அவர்களிடம் சென்று, "நாங்கள் மதத்திற்காக போராடுகின்றோம்" என்றால் ஆதரிக்காமல் விடுவார்களா?

தேசியவாதமும் அப்படித் தான். "உங்களுடைய பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம், எமது இனத்திற்கு தனியான நாடு இல்லாதது தான்" என்று சொல்வார்கள். தனி நாடு கிடைத்து விட்டால், எமது வாழ்வு வளம் பெறும் என்று தான் சாதாரண ஏழை மக்கள் நம்புவார்கள். அந்த எதிர்பார்ப்பில் எந்தத் தவறும் இல்லை.

உண்மையில், ஈழத் தமிழ் நடுத்தர வர்க்கத்தை மட்டுமே நம்பி போராடத் தொடங்கி இருந்தால், விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப் பட்ட ஒரு சில வருடங்களிலேயே காணாமல் போயிருக்கும். எழுபதுகளில் அடித்தட்டு ஏழை மக்களையும் கவர வேண்டும் என்பதற்காக, புலிகளும் மார்க்சியம் பேசினார்கள். சோஷலிசத் தமிழீழத்திற்காக போராடுகிறோம் என்று சொல்லிக் கொண்டார்கள்.

எழுபதுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஸ்தாபிக்கப் பட்ட காலத்தில், நாட்டில் கடுமையான வரட்சி நிலவியது. மழை வீழ்ச்சி குறைவாக இருந்தது. வட மாகாணத்தில், மழையை நம்பி நடக்கும் பெரும்போக நெற் செய்கை தான் அந்தப் பிராந்தியத்தின் பொருளாதார முதுகெலும்பு. பரம்பரை பரம்பரையாக விவசாயப் பொருளாதாரத்தை நம்பியிருந்த மக்கள், பல வருடங்களாக தொடர்ந்த வரட்சி காரணமாக கடுமையாக பாதிக்கப் பட்டனர்.

ஒரு நாட்டின் விவசாயப் பொருளாதாரம் நலிவடைந்தால், அது விவசாயிகளை மட்டும் பாதிப்பதில்லை. அதை நம்பியிருக்கும் கூலித் தொழிலாளர்கள், வணிகர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் என்று ஏராளமானோர் பாதிக்கப் படுகின்றனர். வசதியானவர்களுக்கு வெளிநாடு சென்று பிழைக்கும் வாய்ப்புக் கிட்டியது. அது கூட முடியாதவர்களுக்கு?

எண்பதுகளில் போர் தீவிரமடைந்த காலத்தில், அதிகமாகப் பாதிக்கப் பட்டவர்கள் அடித்தட்டு ஈழத் தமிழர்கள் தான். போர் நடக்கும் நாடுகளில் எல்லாம், ஏழைகள் தான் அதிக விலை கொடுக்கிறார்கள். பாதுகாப்பான இடத்திற்கு, இடம்பெயர்ந்து செல்லும் அளவிற்கு கூட வசதி இல்லாதவர்கள். அப்படியானவர்கள் போராடுவதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது?

மார்க்சியம் என்பது இயங்கியல் தத்துவ அடிப்படை கொண்டது. அது ஒரு வரட்டு சூத்திரம் அல்ல. ஏற்கனவே, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மெய்ப்பிக்கப் பட்ட சமூக விஞ்ஞானம்.



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Saturday, October 12, 2013

தமிழரிடம் உள்ள ஒற்றுமை உணர்வு, தமிழ் தேசியவாதிகளிடம் கிடையாது!


"தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழ் தேசியத்தின் கீழ் ஒற்றுமையாக அணி திரள வேண்டும். ஒற்றுமையின்மையே தமிழர்களின் வீழ்ச்சிக்கு காரணம்...." 


தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைக்கும், தமிழ் இன ஒற்றுமையே தீர்வு என்று வலியுறுத்தும் தமிழ் தேசியவாதிகள், தமக்குள் ஒற்றுமையாக இருக்கின்றனரா? தமிழ் மக்கள், தமிழ் தேசியத்தை தவிர, வேறெந்த அரசியல் கொள்கையையும் பின்பற்றி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். தமிழர்களில் சிலர் இடதுசாரிகளாக இருப்பது கூட அவர்களுக்கு பிடிப்பதில்லை. (இதன் மூலம், தமிழ் தேசியவாதிகள் தம்மை வலதுசாரிகளாக காட்டிக் கொள்கின்றனர்.) கம்யூனிசம், சோஷலிசம், தலித்தியம், பெண்ணியம் என்பன எல்லாம் தமிழர்களின் ஒற்றுமையை குலைத்து விடும் என்று பதறித் துடிப்பார்கள். உண்மையில் ஒற்றுமையாக ஒன்று சேர வேண்டியவர்கள் தமிழ் தேசியவாதிகள் தான். அவர்கள் தமது தவறை மறைப்பதற்காகவே, தமிழ் மக்கள் மேல் பழியைப் போடுகின்றனர்.

தமிழ் தேசியம் என்றைக்காவது தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்திருக்கிறதா? உண்மையில், தமிழ் மக்கள் ஒற்றுமையாக சேர்ந்து நின்ற சந்தர்ப்பங்கள் வரலாற்றில் நிறைய உண்டு. ஆனால், அப்போதெல்லாம் தமிழ் தேசியவாதிகள் தமக்குள் மோதிக் கொண்டதன் மூலம், எதிரிக்கு தமது ஒற்றுமையின்மையை பறைசாற்றிக் கொண்டார்கள். ஈழப்போர் தொடங்கிய காலத்தில், நகைச்சுவைத் துணுக்கு ஒன்று ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. "ஸ்ரீலங்கா அரசு போராளிக் குழுக்களை அழிப்பதற்கு அதிக சிரமப் படத் தேவையில்லை. அவர்கள் கையில் தமிழீழத்தை கொடுத்து விட்டால் போதும். அதற்குப் பின்னர் தமக்குள் அடிபட்டு அழிந்து, தமிழீழத்தை மீண்டும் சிங்களவனிடம் கொடுத்து விடுவார்கள்."

தமிழ் நாட்டில், அண்ணாதுரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகமே தமிழ் தேசியக் கொள்கையை முதன் முதலாக வெகுஜன மயப்படுத்தியது. அவர்கள் தான் முதன்முதலாக தனித் தமிழ்நாடு கோரிக்கையை எழுப்பினார்கள். ஆனால், திமுக கூட, திராவிடர் கழகத்தின் ஒற்றுமையை சீர்குலைத்து வெளியே வந்த கட்சி தான். அதற்கு அவர்கள் பல கொள்கை முரண்பாடுகளை கூறிக் கொண்டார்கள். பிற்காலத்தில், கருணாநிதி, எம்ஜிஆருக்கு இடையிலான பிணக்கு காரணமாக, அதிமுக உருவானது. தமிழர்களின் ஒற்றுமை மேலும் சிதைந்தது. அதற்குப் பின்னர், வைகோ பிரிந்து சென்றார். இந்தப் பிரிவினைகளுக்கு எந்தக் கொள்கை முரண்பாடும் காரணம் அல்ல.

ஈழத்திலும் அது தான் நிலைமை. ஆரம்பத்தில் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் தமிழ்க் காங்கிரஸ் மட்டுமே இருந்தது. அன்றைய தமிழ்க் காங்கிரசின் அரசியலுக்கும், இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியலுக்கும் இடையில் எந்த ஒற்றுமையும் கிடையாது. அரசாங்கத்தில் பதவிகளை பெற்றுக் கொள்வதும், தமிழ் மேட்டுக்குடி வர்க்க நலன்களை பராமரிப்பதுமே அன்றைய தமிழ்க் காங்கிரசின் பிரதானமான செயற்பாடுகளாக இருந்துள்ளன.

செல்வநாயகம் தலைமையில் ஒரு குழுவினர், தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று தமிழரசுக் கட்சி உருவாக்கினார்கள். அப்போது சில கொள்கை முரண்பாடுகள் பற்றி பேசிக் கொண்டார்கள். செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சியே, இன்றைய தமிழ் தேசியக் கோட்பாட்டுக்கு அஸ்திவாரம் போட்டது எனலாம். அந்தக் கட்சியே, முதன் முதலாக தமிழ் மொழி பேசும் மக்கள் எல்லோரையும் ஒரே அரசியலின் கீழ் ஒன்று சேர்த்தது. சாதிய முரண்பாடுகள் கூர்மை அடைந்திருந்த அந்தக் காலங்களில், தாழ்த்தப்பட சாதியினர் பெருமளவில் இடதுசாரிக் கட்சிகளையே ஆதரித்து வந்தனர். இடதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கு வளர்வதை தடுப்பதும், தமிழரசுக் கட்சியின் முக்கியமான நோக்கமாக இருந்துள்ளது.

குறைந்தது ஒரு தசாப்த காலமாகவேனும், தமிழ்க் காங்கிரசும், தமிழரசுக் கட்சியும் ஒற்றுமை இல்லாமல், ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டார்கள். தேர்தல் காலங்களில் ஒருவரை மற்றவர் திட்டித் தீர்த்தார்கள். ஆனால், காலப்போக்கில் ஒருமையின் அவசியத்தை அவர்கள் புரிந்து கொண்டார்கள். எழுபதுகளில் இரண்டு கட்சிகளும் ஒன்று சேர்ந்து, தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய கட்சியை உருவாக்கினார்கள். அப்போது ஈழத் தமிழ் மக்கள் ஒற்றுமையாக கூட்டணியை ஆதரித்தார்கள். 1977 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், பெரும்பான்மை தமிழ் வாக்காளர்களின் பலத்தில் வென்றார்கள். சிங்களவர்களே பொறாமைப் படும் அளவிற்கு, வடக்கு கிழக்கு மாகாணத்தின் அனைத்து ஆசனங்களையும் கைப்பற்றி, பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியாக அமர்ந்தார்கள்.

அந்த ஒற்றுமை நீண்ட காலம் நிலைக்கவில்லை. யாரும் எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த சக்திகளினால், தமிழ் தேசியத்தின் ஒற்றுமை குலைக்கப் பட்டது. கொள்கை முரண்பாடு காரணமாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அணியினர் தீவிரவாதிகளாக மாறினார்கள். தமிழ் மாணவர் பேரவை, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற குழுக்கள் ஆயுதப் போராட்டத்தை விரும்பின. மிதவாத தமிழ் தேசியவாதிகளுக்கும், தீவிரவாத தமிழ் தேசியவாதிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றி, இரண்டு தரப்பினரும் பகைவர்கள் ஆனார்கள். இரண்டு தரப்பினரும், தாமே உண்மையான தமிழ் தேசியவாதிகள் என்று அறிவித்துக் கொண்டனர்.

தீவிர தமிழ் தேசியவாதிகள் கைகளில் ஆயுதங்கள் இருந்ததால், மிதவாத தமிழ் தேசிய தலைவர்களை துரோகிகள் என்றழைத்து சுட்டுக் கொன்றனர். அதனால், மிதவாத தமிழ் தேசியவாதிகள் தமது பாதுகாப்பிற்காக சிங்கள அரசை சார்ந்து வாழ நிர்ப்பந்திக்க்கப் பட்டனர். சில இடங்களில், கூட்டணித் தலைவர்கள், பிரமுகர்கள், தீவிரவாத இளைஞர்களை பொலிசிற்கு காட்டிக் கொடுத்த சம்பவங்களும் நடந்துள்ளன. மெல்ல மெல்ல ஆயுதமேந்திய குழுக்களின் ஆதிக்கம் மேலோங்கியதால், தமிழ் மக்களும் கூட்டணியை விட்டு விலகி, ஆயுதபாணிக் குழுக்களை ஆதரித்தனர்.

தமிழ் தேசிய ஆயுதபாணிக் குழுக்களுக்கு இடையில் கூட ஒற்றுமை இருக்கவில்லை. பிரபாகரன் சில வருட காலம் டெலோ வில் இருந்தார். பின்னர் பிரிந்து சென்று புலிகள் அமைப்பை ஸ்தாபித்தார். பதினைந்து வருடங்களுக்குப் பின்னர், பிரபாகரன் தலைமையிலான புலிகள், டெலோ இயக்கத்தை அழித்து விட்டனர். ஆரம்ப காலத்தில், புலிகள் இயக்க தலைவராக பதவி வகித்த உமா மகேஸ்வரன், பின்னர் பிரிந்து சென்று புளொட் என்ற இயக்கத்தை உருவாக்கினார். அதற்கு எந்தக் கொள்கை முரண்பாடும் காரணம் அல்ல. ஊர்மிளா என்ற பெண் போராளியின் மரணம் தொடர்பாக எழுந்த சர்ச்சையின் காரணமாகவே, உமா மகேஸ்வரன் தலைமையில் ஒரு குழு பிரிந்து சென்றது.

புளொட் இயக்கமும் ஒற்றுமையாக இயங்கவில்லை. உமா மகேஸ்வரனின் தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்த தீப்பொறி குழுவினர் பிரிந்து சென்றனர். இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச் சாத்திடப் பட்ட காலத்தில், புளொட்டில் இருந்து இன்னொரு குழுவினர் பிரிந்து சென்று, ஈ.என்.டி.எல்.எப். என்ற பெயரில், இந்திய இராணுவத்தின் கூலிப் படையாக இயங்கினார்கள். நீண்ட காலமாக, புலிகள் கட்டுக்கோப்பான அமைப்பாக, ஒற்றுமைக்கு பெயர் பெற்று விளங்கியது. ஆனால், இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்னர், புலிகளின் இரண்டாம் மட்ட தலைவர் மாத்தையா, RAW உளவாளி என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டார். அது ஒரு தனி மனிதனுக்கு எதிரான நடவடிக்கையாக இருக்கவில்லை. மாத்தையாவுக்கு விசுவாசமான போராளிகளும் கைது செய்யப் பட்டனர். சில நூறு பேரைக் கொண்ட மாத்தையா குழுவினர் தப்பிச் சென்று, சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து கொண்டார்கள்.

நோர்வே அனுசரணையாளராக செயற்பட்ட சமாதான பேச்சுவார்த்தை நடந்த காலத்தில், கிழக்கு மாகாண தளபதியான கருணா தலைமையில் ஒரு குழு பிரிந்து சென்றது. இரண்டு பிரிவுகளுக்கு இடையில் நடந்த ஆயுத மோதல்கள் காரணமாக, தோல்வியடைந்து பின்வாங்கிய கருணா குழுவினர் சிங்கள அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டனர். தீவிர தமிழ் தேசியவாதிகள் அரசாங்கத்துடன் சேர்வது என்பதுகளிலேயே தொடங்கி விட்டது. வடக்கு, கிழக்கில் புலிகளினால் தடை செய்யப் பட்ட, டெலோ, புளொட், ஈபிஆர்எல்ப் ஆகிய இயக்கங்கள், தமது பாதுகாப்பிற்காக சிங்கள இராணுவத்தின் தயவில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஸ்ரீலங்கா இராணுவம், புலிகளுக்கு எதிரான போரில் அவர்களை கூலிப் படைகளாக பயன்படுத்தியது.

ஈழத் தமிழ் தேசியவாதிகள் தமக்குள் ஒற்றுமை இல்லாமல், ஒருவரை ஒருவர் கொன்று குவித்த காலத்தில், தமிழ் தேசிய ஆதரவாளர்கள் "தமிழ் மக்களின் ஒற்றுமையின்மை" பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் போட்டியிட்ட காலத்தில், அவர்களை ஒற்றுமையாக ஆதரித்த தமிழ் மக்கள் தான், பின்னர் புலிகளின் ஆயுதப் போராட்டத்தையும் ஆதரித்தார்கள். 1995 ஆம் ஆண்டு, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ் குடாநாட்டை சிறிலங்காப் படைகள் கைப்பற்றின. "யாழ்ப்பாண தமிழரின் சனத்தொகையில் மிகக் குறைந்த சதவீதமானோரே புலி இயக்கப் போராளிகளாக இருந்ததாகவும், எல்லோரும் ஒன்று சேர்ந்து போராடி இருந்தால், சிங்களப் படைகளின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி இருக்கலாம் என்றும்" புலிகளின் பிரச்சாரகர்கள் தெரிவித்தனர்.

2009 ல் நடந்த இறுதிப்போரில் வன்னியில் இருந்த அனைத்து தமிழ் மக்களும், ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து போராடினார்கள். இறுதி யுத்தம் தொடங்குவதற்கு முன்னரே, வீட்டுக்கொரு பிள்ளை போராளியாக வேண்டும் என்று உத்தரவிட்ட புலிகள், கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டனர். பல குடும்பங்களில், பிள்ளைகள் பலவந்தமாக பிடித்துச் சென்று போராளிகளாக்கப் பட்டதை, இன்றைக்கும் புலி ஆதரவாளர்கள் மறுத்து வருகின்றனர். "வன்னியில் வாழ்ந்த தமிழ் மக்கள், உணர்வுபூர்வமாக, தாமாகவே விரும்பிச் சென்றனர்." என்றே சொல்லி வருகினறனர். அப்படியானால், தமிழ் மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக, ஒன்று சேர்ந்து தான் போராடி இருக்கிறார்கள்.

தமிழ் மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து போராடிய போதிலும், போரில் ஏற்பட்ட தோல்வி எங்கிருந்து வந்தது? அதற்கு, கருணா குழு, ஈபிடிபி போன்ற அரச அடிவருடிகளான தமிழ் கூலிப் படையினரை குற்றஞ் சாட்டுகின்றனர். அவர்கள் எல்லோரும், முன்னொரு காலத்தில் தமிழ் தேசியவாதிகளாக இருந்தவர்கள். அதாவது, தமிழ் மக்கள் என்றைக்கும் ஒற்றுமையாகத் தான் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்குள் பிரிவினைகள் இருக்கவில்லை. ஆனால், தமிழ் தேசியவாதிகளுக்கு இடையில் தான் ஒற்றுமை இல்லை. அது தான் முக்கியமான பிரச்சினை.

புலிகளுக்குப் பின்னர், தமிழ் தேசியவாதிகளின் ஒரேயொரு நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஒற்றுமை இல்லை என்பதை, இங்கே சொல்லத் தேவை இல்லை. கூட்டமைப்பு என்பது பல கட்சிகளின் சேர்க்கை. வட மாகாண சபைத் தேர்தலில் தமிழர் ஒற்றுமையின் முக்கியத்துவம் பற்றி பேசி வாக்குக் கேட்டார்கள். அறுதிப் பெரும்பான்மை தருமாறு கெஞ்சினார்கள். தமிழ் மக்களும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து கூட்டமைப்புக்கு தமது ஓட்டுக்களை அள்ளிக் கொடுத்தார்கள். அனால், தேர்தல் முடிந்த பின்னர், மாகாண சபை அரசாங்கம் அமைப்பது தொடர்பாக இழுபறிப் படுகிறார்கள். அமைச்சர் பதவிக்காக சண்டை போடுகிறார்கள். உண்மையில், தமிழ் தேசியவாதிகள் எமக்கு போதிப்பதற்கு மாறாகவே யதார்த்த நிலைமை உள்ளது. தமிழ் மக்கள் ஒற்றுமையாகத் தான் இருக்கின்றனர். ஆனால், தமிழ் தேசியவாதிகளுக்குள் தான் ஒற்றுமை இல்லை.

புலிகளின் அழிவுக்குப் பின்னர், அதே அரசியலை வேறொரு தளத்தில் முன்னெடுத்து வரும் தமிழ்நாட்டு தமிழ் தேசியவாதிகளும் ஒற்றுமை இல்லாமல் பிரிந்து நிற்கின்றனர். ஈழப்போர் நடந்த காலத்தில், தமிழ் தேசியம் தமது உயிர்மூச்சு என்று பேசிக் கொண்டிருந்த, வைகோ, ராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன் ஆகியோர், ஆளுக்கொரு கட்சிகளாக பிரிந்து நிற்கின்றனர். "அவர்கள் ஏன் இன்று வரையில் ஒரே கட்சிக் கொடியின் கீழ் ஒன்று சேரக் கூடாது?" என்ற கேள்வியை யாரும் கேட்கவில்லை.

தேர்தலில் போட்டியிடாத, தீவிர தமிழ் தேசிய அமைப்புக்களான, நாம் தமிழர், மே 17 போன்றன கூட, ஒரே பெயரில், ஒரே அமைப்பாக இயங்குவது பற்றி இன்று வரையில் ஆலோசிக்கவில்லை. ஆனால், எல்லோரும் ஒரே குரலில், ஒரே கோஷத்தை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். "தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை. அதுவே பிரச்சினைகளுக்கு காரணம்." தமிழ் மக்களை குற்றம், குறை கூறுபவர்கள், ஒரு தடவை தங்களைத் தாங்களே சுய விமர்சனம் செய்து கொள்வது நல்லது. 

Thursday, October 03, 2013

தமிழீழத்திற்கான தமிழக மாணவர்களின் போராட்டம் - ஒரு மீளாய்வு


ஜெனீவா மனித உரிமைகள் ஆணையகத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்த நேரம், அந்த செய்தி காட்டுத்தீ போல தமிழ் கூறு நல்லுலகு எங்கும் பரவியது. சென்னையில், லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம், ஊடகங்களின் கவனத்தை பெற்றது. அது பற்ற வைத்த நெருப்பு தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் பரவியது. தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த மாணவர் போராட்டம், மீண்டும் அரசியல் அரங்கில் அதிர்வலைகளை தோற்றுவித்தது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியமை, மாணவர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதப் பட்டது. 

2009 ம் ஆண்டு, ஈழப்போரின் இறுதியில், "இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடக்கிறது, அதனால் பதவி விலக வேண்டும்" என்ற கோரிக்கையை, அன்று ஆட்சியில் இருந்த கருணாநிதி அரசு நிராகரித்து விட்டது. இதனால், ஒரு காலத்தில் "தமிழினத் தலைவராக" புகழப்பட்ட கருணாநிதி, புதிய தலைமுறை தமிழ் இன உணர்வாளர்களின் எதிர்ப்புக்கு ஆளாகினார். 

மாணவர் போராட்டத்தின் காரணமாக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகினாலும், அந்தக் கட்சிக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்க முடியவில்லை. இதைத் தவிர, மாணவர் போராட்டம் தமிழக அரசியலில் ஏற்படுத்திய விளைவுகள் மிகக் குறைவு. ஆளும் கட்சியான, ஜெயலலிதாவின் ஆதிமுக, "தமிழீழத்தை ஆதரித்து" சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதுடன் தனது கடமையை முடித்துக் கொண்டது. 

"இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க கூடாது..." என்ற கோரிக்கையுடன் லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம் ஆரம்பமாகியது. லயோலா கல்லூரி, சென்னை மாநகரில் மட்டுமல்லாது, மாநில அளவில் சிறந்த கல்லூரியாக கருதப் படுகின்றது. ஒவ்வொரு நாட்டிலும், வருங்கால மத்தியதர வர்க்க ஊழியர்களை உருவாக்கும் கல்லூரிகள் இருக்கும். 

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்தே, லயோலா கல்லூரிக்கு ஒரு சமூக அந்தஸ்து இருந்தது. சினிமா தொழிற்துறையும், வணிக சஞ்சிகைகளும் அந்தக் கல்லூரியின் பெயரை சாமானியனின் மனங்களிலும் பதிய வைத்தன. அப்படியான கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், போராட்டம் நடத்துகிறார்கள், அதுவும் தமிழீழத்திற்கு ஆதரவாக போராடுகிறார்கள் என்பது, நிச்சயமாக ஊடகங்களின் கவனத்தை கவர்ந்திழுக்கும். வெகுஜன ஊடகங்கள், தங்களை புறக்கணிப்பதாக, மனம் குமுறிக் கொண்டிருந்த தமிழ் இன உணர்வாளர்கள், இதனால் புதிய உத்வேகம் பெற்றனர். 

தமிழகத்திற்கு, அதிலும் தமிழ் தேசிய இயக்கத்திற்கு, மாணவர் போராட்டம் ஒன்றும் புதுமையல்ல. திராவிடர் இயக்கம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே மாணவர்களை அணிதிரட்டி போராட ஆரம்பித்தார்கள். குறிப்பாக, அண்ணாதுரை தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் உருப்பெற்ற காலத்தில், அந்தக் கட்சியின் இளைஞர் அணி போராடிய வரலாறு, தனியே எழுதப் பட வேண்டியது. அன்று அவர்களது கோஷம் "தனித் தமிழ்நாடு" என்பதாக இருந்தது. உண்ணாவிரதம், கறுப்புக் கொடி காட்டுவது, ரயில் மறியல் செய்வது போன்ற, வன்முறையற்ற அனைத்து வழிகளிலும் போராட்டம் நடந்தது. 

இறுதியில், மத்திய அரசின் மிரட்டலுக்கு பயந்து தனித் தமிழ்நாடு கோரிக்கை கைவிடப் பட்டாலும், மொழிவாரி மாநிலங்களின் பிரிப்பு, அவர்களது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதப் படுகின்றது. அதைத் தவிர, ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிராக நடந்த மாணவர் போராட்டத்தின் விளைவாக, இன்று முழு இந்தியாவிலும், தமிழ் நாட்டில் மட்டுமே ஹிந்தி மொழி பாடசாலைகளில் போதனா மொழியாக இருக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 

தமிழீழ விடுதலைப் போராட்டமும், யாழ்ப்பாணத்தில் நடந்த மாணவர் போராட்டத்தின் விளைவு என்று நம்பப் படுகின்றது. எழுபதுகளில் கொண்டு வரப் பட்ட தரப்படுத்தல் சட்டம், பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் வட மாகாண தமிழர்களின் எண்ணிக்கையை கணிசமான அளவு குறைத்தது. அதை எதிர்த்து நடந்த மாணவர் போராட்டம் என்ற குழம்பிய குட்டையில், தமிழர் விடுதலைக் கூட்டணி மீன் பிடிக்க தொடங்கியது. 

தமிழ் இளைஞர்களை போர்க்குணாம்சம் கொண்டவர்களாக மாற்றியதில், கூட்டணியின் பங்கு அளப்பெரியது. இருப்பினும், தமிழ் இன உணர்வு ஊட்டி வளர்க்கப் பட்ட, எதற்கும் துணிந்த இளைஞர் அணி, இறுதியில் தனது ஆசான்களையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது. "பாராளுமன்ற தேர்தலின் மூலம் தமிழீழம் வாங்கித் தருவதாக" சூளுரைத்த மிதவாத கூட்டணி தலைவர்களை புறந் தள்ளி விட்டு, இளைய தலைமுறை ஆயுதமேந்தியது. அஹிம்சா வழியில் பிறந்த மாணவர் போராட்டம், ஆயுதமேந்திய வன்முறைப் போராட்டமாக மாறியது. அதற்குப் பிறகு நடந்தது எல்லாம் வரலாறு. 

மேற்குறிப்பிட்ட மாணவர் போராட்டங்கள் வகித்த வரலாற்றுப் பாத்திரத்தை அல்லது அதற்கொப்பான தாக்கங்களை, அண்மைய மாணவர் போராட்டங்கள் ஏற்படுத்தாத காரணம் என்ன? முதலில், மாணவர்கள் எப்படி தாமாகவே முன்வந்து போராடினார்கள் என்று பார்ப்போம். தமிழகத்தில் பல காலமாகவே, மாணவர் சமுதாயத்தின் மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப் பட்டது. 

மாணவர்களுக்கு அரசியலில் நாட்டம் கிடையாது, சமூக அக்கறை கிடையாது... இது போன்ற குற்றச்சாட்டுகள் தங்களை நோக்கி செலுத்தப் படுவதை, மாணவர்களும் உணராமல் இல்லை. ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத் தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே, இலங்கை அரசின் போக்குற்றங்கள் பற்றிய ஆவணப்படத்தை, பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது. 

சனல் 4 இந்த வருடம் வெளியிட்ட ஆவணப்படத்தில், புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் கொலை தொடர்பான தகவல்கள் வந்தன. போர் முடிந்தவுடனேயே, சில இணையத் தளங்கள் பாலச்சந்திரன் கொலையான படத்தை வெளியிட்டன. ஆனால், அப்போது உதாசீனப் படுத்திய புலி ஆதரவாளர்கள், பிரித்தானிய சனல் 4 வெளியிட்ட பின்னர், வேறு வழியின்றி அதனை மக்கள் மய அரசியலாக்கினார்கள். அனேகமாக, பாலச்சந்திரன் வீடியோ ஏற்படுத்திய தாக்கம், மாணவர் போராட்டத்தில் எதிரொலித்தது. அண்மைக்கால தொழில்நுட்ப வளர்ச்சியான, இணையம், சமூக வலைத் தளங்கள் என்பன இதில் குறிப்பிடத் தக்க பங்காற்றியுள்ளன. முந்திய தலைமுறைகளை சேர்ந்த மாணவர்களுக்கு அந்த வசதிகள் எதுவும் இருக்கவில்லை. 

2009 க்குப் பின்னர், அதாவது ஈழப்போரின் முடிவில் தோன்றிய தமிழினவாத அமைப்புகளான, மே 17, நாம் தமிழர், சேவ் தமில்ஸ், போன்றவற்றின் அரசியல் நிலைப்பாடு, குறிப்பாக லயோலா கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகளில் காணப்பட்டன. "தமிழீழத்தை முடிந்த முடிவாக ஏற்றுக் கொள்ளல். புலிகளை நிபந்தனையற்று ஆதரித்தல். இலங்கை அரசை, குறிப்பாக மகிந்த ராஜபக்சவை இனப்படுகொலை குற்றச்சாட்டில் தண்டித்தல்..." போன்ற அடிப்படைக் கொள்கைகள் ஏற்றுக் கொள்ளப் பட்டன. இன்றைய இளைய தலைமுறை, அவற்றை கேள்விக்கிடமின்றி ஏற்றுக் கொள்கின்றது என்று வைத்துக் கொள்வோம். ஆனால், அதற்கான திட்டங்களை வகுப்பது குறித்து யாரும் பேசத் தயாராக இருக்கவில்லை. 

ஐ.நா. தீர்மானம் இலங்கை அரசின் மேல் பொருளாதாரத் தடை கொண்டு வந்து விடும் என்று அப்பாவித் தனமாக நம்பினார்கள். அதனால், அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து, இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார்கள். இன்று வரையில், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் முதல், தேர்தலில் போட்டியிடாத அமைப்புக்கள் வரை, அதே மாதிரியான கொள்கைகளை கொண்டுள்ளன. அதிலே முக்கியமானது, அவற்றில் ஒன்று கூட, இந்திய அரசுக்கு எதிராக சுட்டு விரலை கூட அசைக்கவில்லை. இந்திய இறையாண்மைக்கு உட்பட்ட நல்ல பிள்ளைகளாய், அயல் நாட்டு விவகாரங்களுக்காக போராடுவதை, இந்திய அரசும் வேடிக்கை பார்த்தது. 

இலங்கை அரசுத் தலைவர்கள், ஒரு முக்கியமான விடயத்தை பல தடவைகள் கூறி விட்டார்கள். "இந்திய அரசு தான் இந்தப் போரை நடத்தியது," என்று பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டார்கள். இதனால், வன்னியில் கொல்லப்பட்ட நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ப் பொதுமக்களின் படுகொலைக்கு, இந்தியாவும் உடந்தையாக இருந்துள்ளது. போர்க்களத்தில் இந்திய இராணுவ அதிகாரிகளும், இலங்கை இராணுவ அதிகாரிகளுடன் கூடி நின்ற படங்களும், ஊடகங்களில் வெளி வந்துள்ளன. 

நந்திக் கடலுக்கும், இந்து சமுத்திரத்திற்கும் இடைப்பட்ட ஒடுங்கிய நிலப்பரப்பில் சிக்கிக் கொண்ட தமிழ் மக்களின் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தப் பட்டன. மருத்துவ மனைகள் கூட சேதமடைந்தன. எங்கெங்கே மக்களுக்கு மத்தியில் புலி உறுப்பினர்கள் காணப்படுகிறார்கள், என்பன போன்ற தகவல்களை செய்மதிப் படங்களாக தொகுத்து வழங்கியது இந்தியா தான். 

அந்த இடங்களில் எல்லாம் அகோரமான ஷெல் வீச்சுகள் நடத்தப் பட்டன. புது மாத்தளன் முதல், முள்ளிவாய்க்கால் வரையில், ஆயிரக் கணக்கான சடலங்கள் கிடைந்தன. இந்தப் போர்க்குற்றங்களுக்கு இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும். சந்தேகமேயில்லை. ஆனால், இலங்கையை தண்டிக்க வேண்டுமென்று, இந்திய அரசிடம் கோரிக்கை வைக்கும் அரசியல் வியூகத்தை தான் புரிந்து கொள்ள முடியவில்லை. 

ஐ.நா. அவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கும், இந்தியா கொண்டு வரப் போகும் பிரேரனைக்கும் இடையில் ஒரேயொரு வித்தியாசம் மட்டுமே உண்டு. அமெரிக்க தீர்மானமானது, இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தக் கோருகின்றது. 

"நல்லிணக்க ஆணைக்குழு என்பது, போர்க்குற்றவாளியான இலங்கை அரசே தனது போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டுமென கூறுவதாகும். அதில் எமக்கு நம்பிக்கை இல்லை...." என்று பல தமிழ் இன உணர்வாளர்கள் கூறி விட்டார்கள். இருப்பினும் இதே தமிழ் இன உணர்வாளர்களால் பெரிதும் மதிக்கப்படும் அமெரிக்கா, அவர்களின் எண்ணத்தை  பிரதிபலிக்கவில்லை. நான்கு வருடங்களாக, அமெரிக்கா நல்லிண ஆணைக்குழுவின் முக்கியத்துவம் குறித்து மட்டுமே, திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருப்பதன் காரணம் என்ன? 

இந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் உருவாக்கமே அமெரிக்க ஆலோசனையின் பெறுபேறாக தோன்றியது தான். ஐ.நா. வில் இந்தியா தீர்மானம் கொண்டு வந்தாலும், அதே மாதிரியான கூத்து தான் அரங்கேறும். இந்திய-இலங்கை ஒப்பந்தம், குறிப்பாக 13 ம் திருத்தச் சட்டம் நடைமுறைப் படுத்தப் பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கும். இது மீண்டும் 1987 ம் ஆண்டுக்கே திரும்பிச் செல்லும் கதை தான். இவை எல்லாம், "தமிழீழமே முடிந்த முடிவு" என்று கோரிப் போராடும் மாணவர் இயக்கத்திற்கு உவப்பானதாக இருக்கப் போவதில்லை. 

நல்லிணக்க ஆணைக்குழுவுக்கும், 13 ம் திருத்தச் சட்டத்திற்கும், அவர்கள் மனதில் அறவே இடமில்லை என்பது தெரிந்த விடயம். இதனை இன்னொரு விதமாக கூறினால், அமெரிக்க தீர்மானமாக இருந்தாலும், இந்திய தீர்மானமாக இருந்தாலும், அது மாணவர்களின் அடிப்படைக் கொள்கைக்கு முற்றிலும் முரணானதாக இருக்கும். இதனால், மாணவர்களின் போராட்டமானது, வெறுமனே இலங்கை அரசுக்கு எதிராக மட்டுமல்லாது, இந்திய, அமெரிக்க அரசுகளையும் எதிர்த்து நடத்தப் பட வேண்டியது அவசியம். 

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் கொண்டுவரப் படும் தீர்மானம், தமிழ் இனப்படுகொலையை விசாரித்து தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் சட்ட அடிப்படையில், மனித உரிமைகள் தொடர்பான உயர்மட்ட அமைப்பின் சக்திக்கு அப்பாற்பட்ட விடயம் அது. அப்படியே அது அங்கே ஆராயப் பட்டாலும், இலங்கை மீதான பொருளாதராத் தடை கொண்டு வருவதை, ஐ.நா. பாதுகாப்புச் சபை மட்டுமே நிறைவேற்ற முடியும். 

அந்தச் சந்தர்ப்பத்திலும், இலங்கையின் "நண்பர்களான" ரஷ்யாவும், சீனாவும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுக்கலாம். தமிழக மாணவர் போராட்டத்தில், சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கு ஐ.நா. வின் சட்ட அமைப்பு பற்றிய புரிதல் இருந்திருந்தால், பிற மாணவர்களையும் சரியான அரசியல் பாதையில் வழிநடாத்தி இருக்க முடியும். 

அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளும், "வழமையான இலங்கையின் நண்பர்கள்" என்பதற்கு அப்பால், தமிழினப் படுகொலையில் பெருமளவு பங்களிப்பை வழங்கியுள்ளன. அந்த நாடுகள் வழங்கிய ஆயுத தளபாடங்கள், சிறிலங்கா படைகளை நவீன மயப் படுத்தியது மட்டுமல்லாது, தமிழர்களை கொன்று குவிக்கவும் உதவியது. (உலக சந்தையில் விலை மலிவு என்ற ஒரே காரணத்தினால் மட்டுமே, ரஷ்யா, சீனாவிடம் ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.) இந்த உண்மைகள் யாவும், தமிழகத்தில் போராடிய மாணவர்களுக்கு தெரியாது என்று கூற முடியாது. 

ஆனால், அமெரிக்கா, பிரிட்டன் போன்றன உலக வல்லரசுகள் என்ற காரணத்திற்காக மட்டும் அவற்றின் மீதான விமர்சனத்தை தவிர்க்கின்றனர். அதே நேரம், ரஷ்யா, சீனாவை கடுமையாக சாடுவதால், மேற்கத்திய நாடுகள் தமிழர்களுக்காக இரங்கப் போவதில்லை. இந்த இடத்தில் ஒரு தந்திரோபாய மாற்றம் அவசியம். எதிர் நிலை வல்லரசுகளான ரஷ்யா, சீனாவையும் கூட, தமிழர்களுக்கு ஆதரவான சக்திகளாக மாற்றுவது அவசியம். அதை நோக்கிய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டிருந்தாலே, போராட்டத்தில் அரைவாசி வெற்றி கிடைத்து விடும்.  

இதனை எழுதிக் கொண்டிருக்கும் நேரம், தமிழக மாணவர்கள் போராட்டம் ஓய்ந்து விட்டது. அதன் தொடர்ச்சியான இயக்கம் என்று குறிப்பிடத் தக்கதாக எதுவும் இல்லை. "தமிழீழத்திற்கான மாணவர் அமைப்பு" என்ற நிறுவனமயமாக்கல் உருவானதை மறுக்க முடியாது. ஆனால், தமிழக அரசியல் அதிகார அமைப்பில், தாக்குப் பிடிக்க முடியாமல் காணாமல் போய்விட்டார்கள். 

ஏற்கனவே இருக்கும் "தமிழீழ ஆதரவு அமைப்புகளான" மே 17, நாம் தமிழர், சேவ் தமில்ஸ், இளைஞர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று விளங்குகின்றன. குறிப்பாக ஐ.டி. துறையில் பணியாற்றும் இளைஞர்கள், படித்த கீழ் மத்திய தர வர்க்க இளைஞர்கள் மட்டுமல்ல, கல்லூரி மாணவர்களும் ஏற்கனவே இந்த அமைப்புகளுக்கு ஆதரவளிக்கின்றனர். 

முதலாவது தலைமுறை தமிழ் தேசியவாத கட்சிகளான தி.மு.க., ம.தி.மு.க. வுக்கு மாற்றாக எழுந்த, இரண்டாவது தலைமுறையை சேர்ந்த தமிழ் தேசியவாத இயக்கங்கள் அவை.  வாரிசு அரசியலால், வணிக நலன்களால் சீரழிந்த முன்னாள் தமிழ்தேசிய இயக்கமான திமுக வுக்கு எதிரான விமர்சனங்கள் நியாயமானவை. அவர்கள் செய்ததெல்லாம் துரோகம் தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், இரண்டாவது தலைமுறை தமிழ் தேசியவாத அமைப்புகளையும் விமர்சிக்காமல், மாணவர்களின் போராட்டம் ஒரு புதிய அரசியல் மாற்றத்தை கொண்டு வரப் போவதில்லை. 

தமிழக மாணவர்கள், 1968 ல் ஐரோப்பாவில் தோன்றிய மாணவர் எழுச்சியில் இருந்து படிப்பினைகளை பெறுவது அவசியமானது. உலகில் நடந்த வெற்றிகரமான மாணவர்கள் போராட்டங்களில் அது முக்கியமானது. வரலாற்றில் குறிப்பிடத் தக்க மாற்றங்களை ஏற்படுத்தியது. தமிழகத்தில் போராட்டம் நடத்திய மாணவர்களில், கலைப்பீடத்தில் வரலாற்றுக் கல்வி பயிலும் மாணவர்களும் பங்குபற்றினார்கள். அவர்களது பாடத்திட்டத்தில், ஐரோப்பிய வரலாறு பற்றிய பகுதியில் குறிப்பிடப் பட்டிருக்கும். அப்படி எந்த நூலிலும் எழுதியிருக்கவில்லையெனில், அந்தப் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தெரிந்திருக்கலாம். 

இலங்கையில் நடந்த ஈழப்போரில் நடந்த கொடுமைகளை கண்டு கிளர்ந்தெழுந்த மாணவர் சமுதாயம் தான் போராட்டத்தில் குதித்தது. அவர்கள் கடல் கடந்து, இந்தியா என்ற அயல்நாட்டில் வாழ்ந்த போதிலும், 2009 தமிழினப் படுகொலைக் காட்சிகளை, போரில் ஈழத் தமிழர்கள் பட்ட துன்பங்களை தொலைக்காட்சியில் பார்த்து வெகுண்டெழுந்தனர். கிட்டத் தட்ட இதே மாதிரியான நிலைமையில் தான், ஐரோப்பிய மாணவர்களின் எழுச்சியும் இடம்பெற்றது. 

1968 ம் ஆண்டு, வியட்நாம் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. சுதந்திரத்திற்காக போராடிய தென் வியட்நாம் மக்களை, அமெரிக்க படையினர் கொன்று குவித்து கொண்டிருந்தார்கள். நேபாம் குண்டுகளை வீசி குழந்தைகளையும், பெண்களையும் கொன்ற காட்சிகள், ஐரோப்பிய தொலைக்காட்சிகளின் காண்பிக்கப் பட்டன. அந்தக் காட்சிகளை கண்டு வெகுண்டெழுந்த மாணவர் சமுதாயம், அமெரிக்க ஆக்கிரமிப்பு போருக்கு எதிராக போராடினார்கள். வியட்நாம் விடுதலை பெற வேண்டும் என்று கோரிப் போராடினார்கள். 

அவர்கள் எந்த ஐ.நா. அமைப்பையும் நம்பி இருக்கவில்லை. தமது நாட்டு அரசாங்கம், ஐ.நா. வில் அமெரிக்காவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கவில்லை. ஏனென்றால், அவர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் ஐரோப்பிய அரசுகளும், அமெரிக்கப் போர்க்குற்றவாளிகளின் கூட்டாளிகள், வியட்நாமிய இனப்படுகொலையின் பங்குதாரர்கள் என்ற உண்மை அவர்களுக்கு தெரிந்திருந்தது. அதனால், ஐரோப்பிய மாணவர்களின் போராட்டம், ஐரோப்பிய அரசுகளுக்கு எதிராக திரும்பியது.  

தமிழக மாணவர்கள், தமது போராட்டத்தில் அரசியல் கட்சிகள் தலையிட விடவில்லை என்று கூறப் படுகின்றது. தமிழ் தேசிய ஆதரவு அரசியல் கட்சிகள், மாணவர் போராட்டத்திற்குள் நுளைந்து, அவர்களை தம் பக்கம் இழுக்க முயன்றனர். ஆனால், எந்த சந்தர்ப்பத்திலும், எந்தக் கட்சியும் ஆதிக்கம் செலுத்துவதற்கு மாணவர்கள் விடவில்லை. இது பலரால் வரவேற்கப் பட்டது. போராட்டத்திற்குள் அரசியல் கட்சிகள் தலையிடக் கூடாது என்பது நியாயமான நிபந்தனை தான். ஆனால், எந்தவொரு அரசியல் கொள்கையும் தலையிடக் கூடாது என்று யாரும் தடைவிதிக்கவில்லையே? மாணவர்கள் தமது போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்கு அவசியமான அரசியல் கொள்கை எதையும் கண்டுபிடிக்கவில்லை. 

இந்த விடயத்தில், ஐரோப்பிய மாணவர்கள் எமக்கு சிறந்த உதாரண புருஷர்களாக திகழ்கின்றனர். அன்று போராடிய மாணவர்களில் பலர், பழைமைவாத கிறிஸ்தவ குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். அவர்களுக்கும் இடதுசாரிக் கொள்கைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. "கம்யூனிஸ்டுகள் என்போர் கடவுள் மறுப்பாளர்கள். கிறிஸ்தவ விரோதிகள்..." போன்ற கருத்துக்களை தான் அவர்களின் பெற்றோர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறார்கள். 

அப்படிப் பட்ட குடும்பப் பின்னணியை கொண்ட மாணவர்கள், கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரின் நூல்களை தேடிப்  படித்தார்கள். ஐரோப்பிய மாணவர்களும், தமது போராட்டத்திற்குள் எந்த அரசியல் கட்சியையும் தலையிட விடவில்லை. அன்றிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட, மாணவர்கள் பார்வையில் பிற்போக்கான திரிபுவாதிகளாக தென்பட்டார்கள். 

ஐரோப்பிய மாணவர்கள், தமது கல்லூரி வளாகங்களிற்குள் மட்டும் போராடிக் கொண்டிருக்கவில்லை. மாவோயிச கற்கை மையங்களை உருவாக்கினார்கள். அவை பின்னர் ஐரோப்பிய மாவோயிச கட்சிகளாக உருமாறின. மாணவர்கள் மக்கள் மத்தியில் இறங்கி வேலை செய்தார்கள். தொழிற்சாலைகளுக்கு சென்று, தொழிலாளர்களுக்கு அரசியல் கற்பித்தார்கள். பாடசாலைகளுக்கு சென்று, பாடசாலை மாணவர்களையும் அணி திரட்டினார்கள். 

இவ்வாறு, மாணவர்கள், தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்த வெகுஜன அமைப்பு தோன்றியது. தெருக்களில் அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மாணவர்களுக்கு ஆதரவாக தொழிற்சாலைகளில் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடந்தன.  ஒரு கட்டத்தில், பிரான்ஸ் நாட்டில் ஒரு சோஷலிசப் புரட்சி வெடித்து விடும் என்றளவுக்கு நிலைமை இருந்தது. 

அன்றைய ஐரோப்பா, அந்தளவுக்கு மாறா விட்டாலும், மாணவர்களின் போராட்டம் தனது குறிக்கோளை நிறைவேற்றிக் கொண்டது எனலாம். அவமானகரமான தோல்வியை சந்தித்த அமெரிக்கப் படைகள், வியட்நாமில் இருந்து வெளியேறின. 

தென் வியட்நாம் விடுதலை பெற்றது. அது வட வியட்நாமுடன் இணைந்து, வியட்நாம் என்ற புதிய சுதந்திர நாடு உருவாகியது. இதனை எந்தவொரு ஐ.நா. தீர்மானமும் சாதிக்கவில்லை. ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்லாது, அமெரிக்காவிலும் இடையறாது போராடிய மாணவர்கள் சாதித்துக் காட்டினார்கள். அந்த மாணவர்களில் யாருமே, வியட்நாமிய இனத்தவர் அல்ல என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.