Showing posts with label மார்க்சியம். Show all posts
Showing posts with label மார்க்சியம். Show all posts

Thursday, December 31, 2020

மதம் ஒரு "போதைப்பொருள்" எனும் வறட்டு நாத்திகர்களின் பிரச்சாரம் குறித்து...

"மதம் மக்களின் அபின்" என்று கார்ல் மார்க்ஸ் சொன்ன கூற்று திரிபுபடுத்தப் பட்டு, பலரால் பிழையான முறையில் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. அந்தக் கூற்றில் கார்ல் மார்க்ஸ் மதத்தை போதைப்பொருளுடன் ஒப்பிட்டு சொன்னதாக வறட்டு நாத்திகர்களும் வாதாடுகிறார்கள். அது முழுக்க முழுக்க அயோக்கியத்தனமான பொய்ப் பிரச்சாரம்.

கார்ல் மார்க்ஸ் எழுதிய "ஹேகலின் வலது தத்துவம்" என்ற நூலுக்கான முன்னுரையில் தான் அந்தக் கூற்று இடம்பெறுகின்றது. அதற்கு முன்னுக்கும் பின்னுக்கும் என்ன எழுதி இருக்கிறது என்பதை வறட்டு நாத்திகர்கள் வாசிக்க விரும்புவதில்லை.

நூலில் இருந்து: (இலகுபடுத்தப் பட்ட மொழிபெயர்ப்பு)

//மதச்சார்பற்ற விமர்சனத்தின் அடிப்படையானது " மனிதர் மதத்தை உருவாக்குகிறார்கள். மதம் மனிதரை உருவாக்கவில்லை" என்கிறார்கள்.  குறிப்பாக, மதம் என்பது, மனிதர்கள் தாம் இன்னும் தம்மிடம் கண்டுகொள்ளாத அல்லது திரும்பவும் தொலைத்து விட்ட சுய உணர்வு அல்லது சுய மதிப்பீடு எனலாம். ஆனால் மனிதர்கள் என்போர் புலன்களால் அறிய முடியாத, உலகிற்கு வெளியே அலையும் ஜீவன்கள் அல்ல.

மனிதர்களின் உலகானது, அரசு, சமூகம், இவற்றின் அங்ககமாக மனிதர்கள் உள்ளனர். இந்த அரசும், இந்த சமூகமும் மதத்தை உற்பத்தி செய்கின்றன. (இன்று நாம் வாழும் உலகம்) ஒரு தலைகீழாக மாற்றப் பட்ட உலகாக இருப்பதால், அதுவும் உலகின் மறுவளமான சுய உணர்வாக உள்ளது.

மதம் என்பது, 

இந்த உலகின்... 

  •  பொதுவான கோட்பாடு. - பல்பொருள் களஞ்சியத்தின் சாராம்சம்.
  • அதன் வெகுஜன வடிவிலான தர்க்கீகம்.
  •  அதன் ஆத்மார்த்தமான கௌரவ உணர்வு.
  • அதன் பேரார்வம்.
  • அதன் அறம் சார்ந்த உறுதிப்படுத்தல்.
  • சம்பிரதாயபூர்வமான பூரணப் படுத்தல்
  • ஆற்றுப்படுத்தலுக்கும், நியாயப்படுத்தலுக்குமான உலகளாவிய அடிப்படை.

அது மனிதப்பிறவியின்  கற்பனையான மெய்யுணர்வு, ஏனென்றால் மனிதப்பிறவி உண்மையான மெய்யுணர்வை கண்டதில்லை. ஆகவே, மதத்திற்கு எதிரான போராட்டமானது, மறைமுகமாக அந்த உலகிற்கும் எதிரான போராட்டமாகும். மதம் அந்த உலகின் உணர்வுபூர்வமான வாசனைத் திரவியம் போன்றுள்ளது. மதரீதியான வருந்துதல் என்பது, நிஜமான வருந்துதலின் வெளிப்பாடாக இருக்கும் அதே நேரத்தில் அந்த நிஜமான வருந்துதலுக்கு எதிரான எதிர்வினையாகவும் உள்ளது. மதம் என்பது சபிக்கப் பட்ட படைப்புகளின் பெருமூச்சு.

மதம் என்பது இதயமற்ற உலகின் இதயத்துடிப்பு, அத்துடன் ஆன்மா இல்லாத நிலைமையில் ஆன்மாவாக உள்ளது. அது மக்களின் ஓப்பியம்(அபின்).// 

(கார்ல் மார்க்ஸ்)



சிலர் இங்கே கடைசியாக சொல்லப் பட்ட ஓப்பியம் என்ற சொல்லை மட்டும் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள். அதை மட்டும் வைத்துக் கொண்டு கார்ல் மார்க்ஸ் மதம் ஒரு போதைப்பொருள் என்று சொல்லி விட்டார் என்று திரிக்கிறார்கள். உண்மையில் ஓப்பியம் என்பது என்ன?

கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஓப்பியம் மருந்துக் கடைகளில் சட்டபூர்வமாக விற்பனை செய்யப் பட்டது. அது மருத்துவர்களால் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப் பட்டது. குறிப்பாக நோயின் கடுமை காரணமாக, அதிக வலியால் அவதிப்படும் நோயாளிகளுக்கு மருத்துவர்களே ஓப்பியம் கொடுத்து அமைதிப் படுத்துவார்கள்.

அன்றைய ஐரோப்பிய நாடுகளில் வறுமையில் வாழ்ந்த ஏழை மக்கள், பசியை மறப்பதற்கு சிறிதளவு ஓப்பியம் எடுப்பது வழமை. ஓப்பியம் உட்கொண்ட ஏழை உழைப்பாளிகள் பசியை மறந்து வேலை  செய்வதுடன், தாம் மகிழச்சியாக வாழ்வதாகவும் உணர்ந்தார்கள்.  பசியால் அழும் குழந்தைகளை தாய்மார் ஓப்பியம் கொடுத்து தூங்க வைத்தனர்.

இரக்கமற்ற உலகில் வாழும் மனிதர்கள்  தமது கவலைகளை மறப்பதற்காக, மதம் என்றார் ஒன்றை கருத்து நிலை சார்ந்த ஒப்பியமாக உருவாக்கிக் கொள்கின்றனர் என்பது தான் மார்க்ஸ் சொல்ல வந்தது. இங்கே மார்க்ஸ் மதத்தை ஓப்பியத்துடன் மட்டும் ஒப்பிடவில்லை. இதயம், வாசனைத்திரவியம், போன்றவற்றோடும் ஒப்பிடுகின்றார்.

அத்துடன் மதம் என்பது தலைகீழாக உள்ள உலகின் உள்ளுணர்வு, மனிதர்களின் கற்பனையான மெய்யுணர்வு, வருத்தத்தை தணிப்பதற்கான ஆற்றுப் படுத்தல்... என்றெல்லாம் விபரிக்கின்றார். ஆனால் அதையெல்லாம் விட்டு விட்டு ஓப்பியம் என்ற சொல்லை மட்டும் பிடித்துக் கொண்டு தொங்குவோர் உள்நோக்கம் கொண்டவர்கள். 


வறட்டு நாத்திகர்கள், மதம் ஒரு போதைப்பொருள்(அபின்) என்று மார்க்ஸ் சொன்னதாக ஒரு தீய நோக்கோடு பரப்புரை செய்து வருகின்றனர்.  இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் பறிக்க நினைக்கிறார்கள். ஒன்று, மத நம்பிக்கையாளர்களை மார்க்சியத்தில் இருந்து அந்நியப் படுத்தி விரிசலை உண்டாக்குவது. இரண்டு, சபல புத்தி கொண்ட மார்க்சியவாதிகளை தமது இனவாத நிகழ்ச்சிநிரலின் கீழ் கொண்டு வருவது.

மனிதர்கள் தாம் இன்னமும் அடிமைச் சங்கிலியால் பிணைக்கப் பட்டிருப்பதை அறிய முடியாமல் போடப்பட்டுள்ள திரையாக மதம் உள்ளது என்பது தான் மார்க்ஸ் சொல்ல வருவது. அதை நாம் இங்கே மார்க்சின் எழுத்துக்களில் இருந்து அறிந்து கொள்வோம்.

நூலில் இருந்து: 

//மாயத்தன்மை கொண்ட மகிழ்ச்சி தரும் மதத்தின் பங்களிப்பை இல்லாதொழிப்பதானது, அதே நேரத்தில் மக்களின் உண்மையான மகிழ்ச்சியை கொண்டு வருவதற்கான கோரிக்கையாகவும் உள்ளது. அந்த நிலைமையின் மாயையை இல்லாதொழிப்பது என்பது, அதே நேரத்தில் இந்த மாயைகள் தேவைப்படும் நிலைமையை இல்லாதொழிப்பது என்றும் அர்த்தம் ஆகும். மதத்தின் மீதான விமர்சனம் என்பது, துன்பக் கேணி பற்றிய விமர்சனத்தை கருவாகக் கொண்டுள்ளது. ஏனென்றால் மதம் (மனிதர்களின்) துன்பக் கேணியை மறைக்கும் ஒளிவட்டமாக உள்ளது. 

இந்த விமர்சனம் (அடிமைச்) சங்கிலியை சுற்றிப் படர்ந்திருந்த கற்பனைப் பூக்களை அகற்றியுள்ளது. அதன் அர்த்தம் மனிதர்கள் கற்பனையற்ற, ஆற்றுதல் அற்ற சங்கிலியை அணிந்திருக்க வேண்டும் என்பதல்ல. மாறாக, சங்கிலியை வீசியெறிந்து விட்டு உயிர்ப்புள்ள மலர்களைப் பறிக்க வேண்டும் என்பது தான். மதத்தின் மீதான விமர்சனம் மனிதனை மாயையில் இருந்து விடுவிக்கிறது. ஆகவே, அவன் தனது மாயையில் இருந்து விடுபட்டவனாக, உள்ளுணர்வை மீட்டெடுத்தவனாக சிந்தித்து, செயலாற்றி தனது உண்மைத்தன்மையை அமைத்துக் கொள்ள முடியும். ஆகவே, தானே உண்மையாக சூரியனாக தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருப்பான். அது வரைக்கும், மதம் ஒரு மாயச் சூரியனாக மனிதனையே சுற்றிக் கொண்டிருக்கும்.

அதனால் இன்னொரு உலகின் உண்மை மறைந்த பின்னர், இவ்வுலகின் உண்மையை நிலைநாட்டுவதற்கான கடமை வரலாற்றுக்கு உள்ளது. வரலாற்றுக்கு சேவை செய்ய வேண்டிய முதன்மையான கடமை தத்துவத்திற்கு உள்ளது. மனிதகுல சுய அந்நியப்படுத்தலான புனித உருக்கள்  எனும் முகமூடி கழற்றப் பட்ட பின்னர், புனிதமற்ற உருக்களை காவித்திரிந்த வரலாற்றின் சுய அந்நியப் படுத்தலும் அம்பலப் படுத்தப் படும். ஆகவே, சொர்க்கத்தின் மீதான விமர்சனம், பூமியின் மீதான விமர்சனமாக மாறுகிறது. மதத்தின் மீதான விமர்சனம் சட்டத்தின் மீதான விமர்சனமாக மாறுகிறது. இறையியல் மீதான விமர்சனம் அரசியல் மீதான விமர்சனமாக மாறுகிறது.// (கார்ல் மார்க்ஸ்)


கடைசிப் பந்தி கிறிஸ்தவ மதம் போதிக்கும் மறு உலகக் கோட்பாட்டை மறுதலிக்கிறது. கிறிஸ்தவ ஐரோப்பிய நாடுகளில் துன்பப்படும் ஏழைகள் கடவுளிடம் முறையிடும் போதெல்லாம், மத போதகர்கள் அவர்களுக்கு சொர்க்கத்தில் மகிழ்ச்சிகரமான நித்திய வாழ்வு காத்திருக்கிறது என்று ஆறுதல் சொல்வார்கள். இங்கே "இன்னொரு உலகம்" என்பது சொர்க்கத்தை குறிக்கும். மன்னர்களும், பிரபுக்களும், பணக்காரர்களும் செல்வத்தில் திளைக்கையில், பெரும்பாலான உழைக்கும் மக்கள் ஏழ்மையில் வாடினார்கள். இன்றைக்கும் அந்த நிலைமையில் பெரிய மாற்றம் வரவில்லை. ஏழை- பணக்காரர் என்ற வர்க்க வேற்றுமையை மறைக்கும் மாயத் திரையாக மதம் உள்ளது.

ஆகவே மதத்தின் மீதான விமர்சனமானது, கூடவே மதம் பாதுகாக்கும் பணக்கார வர்க்க அரசியல், சட்டங்கள் மீதான விமர்சனமாகவும் இருக்க வேண்டும். மதம் மட்டுமல்லாது, வரலாறும் இந்த வேற்றுமைகளை மூடி மறைத்து வந்துள்ளது. ஆகவே, வரலாற்றின் போர்வையை களைய வேண்டிய கடமைப்பாடு தத்துவத்திற்கு உள்ளது. அதையே மார்க்சிய தத்துவமும் ஆண்டாண்டு காலமாக செய்து வருகின்றது. அதாவது மனிதர்களின் துன்பங்களை ஆற்றுப் படுத்தும் வலி நிவாரணியாக இருந்து வரும் மதத்தின் இருப்பை இல்லாதொழிப்பதென்பது, எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வைக்கும் பொதுவுடைமைக் காலத்தில் தானாக நடக்கும்.  

இந்த இடத்தில் தான் வறட்டு நாத்திகர்கள், மார்க்சியத்துடன் முரண்படுகிறார்கள். அவர்கள் கண்மூடித்தனமாக மதத்தை மட்டும் குறிவைத்து தாக்கிக் கொண்டிருக்கிறார்களே அல்லாமல், மதம் எனும் மாயத்திரைக்கு பின்னால் உள்ள வர்க்க அரசியலை கண்டுகொள்வதில்லை. காரணம், வறட்டு நாத்திகர்களும் ஏற்றத்தாழ்வான வர்க்க சமூகத்தில் நன்மை அடைந்த குட்டி பூர்ஷுவா பிரிவினராக உள்ளனர். இந்த முதலாளித்துவ சமூகமானது மதங்களை மட்டுமல்லாது, வறட்டு நாத்திகத்தையும்  உணவூட்டி வளர்த்து வருகின்றது. உழைக்கும் மக்களை பிரித்தாளும் நோக்கில் ஆதிக்க சக்திகளால் அனுப்பப்படும் மதவாத, வறட்டு நாத்திக அயோக்கியர்களை இனங் கண்டு புறம் ஒதுக்குவதும் மார்க்சியர்களின் கடமையாக உள்ளது.

- கலையரசன்

 29. 12. 2020  

Wednesday, December 02, 2020

இலகு தமிழில் எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிசத்தின் கோட்பாடுகள், பகுதி - 1

கேள்வி 1: கம்யூனிசம் என்றால் என்ன?

பதில்: கம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான நிபந்தனைகள் பற்றிய படிப்பு.(எங்கெல்ஸ்)

விளக்கவுரை: இதை ஜேர்மன் மூல மொழியில் இருந்து நேரடியாக மொழிபெயர்த்திருக்கிறேன். (ஏற்கனவே தமிழில் உள்ள நூலில் "விமோசனத்திற்கான சூழ்நிலைகள் பற்றிய போதனை" என்றுள்ளது.) பாட்டாளி வர்க்கம் அல்லது உழைக்கும் வர்க்கம் (இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் 3வது கேள்வியில் உள்ளது) இன்றைய முதலாளித்துவ காலகட்டத்திலும் அடிமைப் பட்டே கிடக்கிறது. அதன் விடுதலையை நோக்கிய படிமுறைகள் பற்றிய படிப்பு கம்யூனிசம் எனப்படும். சுருக்கமாக: உழைக்கும் மக்களின் விடுதலைக்கான கோட்பாடு.

கேள்வி 2: பாட்டாளி வர்க்கம் என்றால் என்ன?

பதில்: பாட்டாளி வர்க்கம் என்பது தனது உழைப்பை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் மட்டுமே வாழ்க்கை நடாத்தும் ஒரு சமூகப் பிரிவாகும். இலாபத்தில் இருந்தோ அல்லது வேறெந்த மூலதனத்திலும் இருந்தோ அதற்கு எந்த வருமானமும் கிடைப்பதில்லை. அதன் இன்பமும் துன்பமும், பிறப்பும் இறப்பும், உழைப்புக்கான கேள்வியில் தங்கியுள்ளது. எனவே அது வியாபாரத்தின் நல்ல காலம், கெட்ட காலம், கடிவாளமற்ற போட்டியின் விளைவான ஏற்ற இறக்கங்கள் எல்லாவற்றிலும் தங்கியுள்ளது. பாட்டாளி வர்க்கம் அல்லது பாட்டாளிகளின் வர்க்கம் என்னவென்று ஒரே சொல்லில் சொன்னால், அது 19ம் நூற்றாண்டின் உழைக்கும் வர்க்கமாகும்.(எங்கெல்ஸ்)

எனது விளக்கவுரை: 

இன்று நாம் காணும் உழைப்பாளிகளின் வர்க்கமானது 19ம் நூற்றாண்டில் உருவான தோற்றப்பாடு ஆகும். (இது தொடர்பான வசனம் தமிழ் மொழிபெயர்ப்பில் இல்லை.) சொத்துடைமை வர்க்கமான முதலாளிகள் உற்பத்தி சாதனங்களை சொந்தமாக வைத்திருப்பதால், பாட்டாளிகள் தமது உழைப்பை விற்று வாழ வேண்டிய நிலைமை உள்ளது. தொழிற் சந்தையில் அவர்களது உழைப்புக்கு நிர்ணயிக்கப் பட்ட விலையானது வியாபாரத்தின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றவாறு கூடிக் குறையலாம். பாட்டாளிகளின் வாழ்வும் மரணமும், இன்பமும் துன்பமும் தொழிற் சந்தையில் தங்கியுள்ளன.

கேள்வி 3: பாட்டாளிகள் எல்லாக் காலங்களிலும் இருந்து வந்திருக்கிறார்கள் அல்லவா? 

 பதில்: இல்லை. ஏழைகளும் உழைக்கும் வர்க்கத்தினரும் எப்போதும் இருந்து வந்திருக்கின்றனர். உழைக்கும் வர்க்கத்தினர் பெரும்பாலும் ஏழைகளாக இருந்து வந்தனர். ஆனால் இப்போது குறிப்பிடப் பட்ட நிலைமைகளின் கீழ் முன்னொருபோதும் கட்டற்ற சுதந்திரமான போட்டி இருக்கவில்லை. அதே மாதிரி தொழிலாளர்கள், ஏழைகளான பாட்டாளிகளும் இதற்கு முன்பு வாழ்ந்திருக்கவில்லை.

எனது விளக்கவுரை: பாட்டாளி வர்க்கத்திற்கும், உழைக்கும் வர்க்கத்திற்கும் என்ன வித்தியாசம் என்பதை எங்கெல்ஸ் இங்கே விளக்குகிறார். தொழிலாளர்கள், உழைப்பாளிகள் வரலாறு முழுவதும் இருந்து வந்துள்ளனர். அவர்கள் எழைகளாகவும் இருந்தனர். அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் முதலாளித்துவ காலகட்டத்திற்குரிய கட்டற்ற சுதந்திரமும் போட்டியும் முன்னொருபோதும் இருக்கவில்லை. ஆகவே பாட்டாளிகளும் இருந்திருக்கவில்லை. முதலாளித்துவ அமைப்பில் உள்ள உழைக்கும் வர்க்கத்தினரின் சமூக அந்தஸ்து, முந்திய வரலாற்றுக் காலகட்டத்தில் இருந்து மாறுபட்டது. இந்த விசேட தன்மை காரணமாக பாட்டாளிகள் என அழைக்கப் படுகின்றனர்.

கேள்வி 4: பாட்டாளி வர்க்கம் எவ்வாறு உருவானது?

பதில்: 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்திலும், பிற வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் நடந்த தொழிற்புரட்சியின் விளைவாகவே பாட்டாளி வர்க்கம் உருவானது. நீராவி இயந்திரம், விசைத்தறி போன்ற கண்டுபிடிப்புகளின் பின்னர் தொழிற்புரட்சி ஏற்பட்டது. அதிக விலை கொண்ட இந்த இயந்திரங்களை பெரிய முதலாளிகள் மட்டுமே வாங்க முடிந்தது. இது இதற்கு முன்பிருந்த உற்பத்தி முறையை மாற்றி அமைத்தது.இயந்திரங்கள் தொழிலாளர்களை விட மலிவாகவும், சிறப்பாகவும் உற்பத்தி செய்த படியால் பெருமளவு தொழிலாளர்கள் வெளியேற்றப் பட்டனர். 

இந்த இயந்திரங்கள் தொழிற்துறை முழுவதையும் முதலாளிகளின் கைகளில் ஒப்படைத்து விட்டன. முன்பு தொழிலாளர்கள் சொந்தமாக தொழில் நடத்த உதவிய கருவிகள், கைத்தறிகள் பயனற்றவை ஆகின. இவ்வாறாக முதலாளிகளிடம் எல்லாம் இருந்தன. தொழிலாளர்களிடம் எதுவுமே இருக்கவில்லை. துணி நெய்வதில் ஆலை உற்பத்தி முறை புகுத்தப் பட்டதும். அது பின்னர் அச்சகம், மட்பாண்டத் தொழில், உலோகத் தொழில் என்று அனைத்தையும் இயந்திரமயமாக்கியது. தனித்தனியான தொழிலாளர்களுக்கு இடையில் தொழிற் பிரிவினை செய்யப் பட்டது. இதனால் முன்பு ஒரு பொருளை முழுமையாக உற்பத்தி செய்த தொழிலாளி இன்று அந்தப் பொருளின் ஒரு பகுதியை மட்டுமே உற்பத்தி செய்யும் நிலை உருவானது. இந்த வேலைப் பிரிவினையானது ஒரு பொருளை விரைவாக உற்பத்தி செய்யவும், மலிவாகக் கொடுக்கவும் உதவியது.

ஒவ்வொரு தொழிலாளியின் உழைப்பையும் மிக இலகுவான, திரும்பத் திரும்ப செய்யும் இயந்திரத்தனமான பணியாக மாற்றியது. இதை ஓர் இயந்திரம் மிகச் சிறப்பாக செய்ய முடியும். இந்த முறையில் நெசவு, நூற்பாலைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நீராவி இயந்திரத்தின் ஆதிக்கத்தின் கீழ் வந்தன. இவ்வாறு அனைத்தும் பெரிய முதலாளிகளின் கைகளில் வந்தன. இதனால் இங்கும் தொழிலாளர்கள் தமது எஞ்சியிருந்த சுதந்திரத்தையும் இழந்தனர். பட்டறைத் தொழில்கள், கைவினைப் பொருட்கள் உற்பத்தி யாவும் ஆலைத் தொழிற்துறையின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. இதன் மூலம் பெரிய முதலாளிகள் பெரிய பட்டறைகள் அமைத்து, உற்பத்தி செலவைக் குறைத்து, வேலைப் பிரிவினை செய்ய முடிந்தது. இதனால் சிறிய முதலாளிகள் அழிந்து போயினர்.

வளர்ச்சி அடைந்த நாடுகளில் அனைத்து சிறு கைத்தொழில் உற்பத்தியும் பெரிய ஆலைத் தொழிற்துறையின் கீழ் வந்தது. இதன் மூலம் இதுவரை காலமும் இருந்த நடுத்தர வர்க்கத்தினர், குறிப்பாக சொன்னால் சிறு கைத்தொழில் முதலாளிகள் மென்மேலும் அழிக்கப் பட்டனர்.

முன்பிருந்த தொழிலாளர்களின் நிலைமை முற்றாக மாற்றமடைந்து இரண்டு புதிய வர்க்கங்கள் தோன்றின. அவை ஏனைய வர்க்கங்களை உள்வாங்கின. அவையாவன:

1. பெரிய முதலாளிகளின் வர்க்கம். எல்லா வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் அனைத்து வாழ்வாதாரங்களையும், அவற்றை உற்பத்தி செய்யும் கருவிகளையும் தம் வசம் வைத்திருக்கிறார்கள். இந்த வர்க்கமானது மேட்டுக்குடியினர் வர்க்கம் அல்லது பூர்ஷுவா என்றும் அழைக்கப் படுகிறது.

2. எந்த சொத்தையும் வைத்திராத, அத்தியாவசிய வாழ்வதாரங்களை பெற்றுக் கொள்வதற்காக, முதலாளிகளுக்கு தமது உழைப்பை விற்று வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளவர்கள். இந்த வர்க்கமானது பாட்டாளிகளின் வர்க்கம் அல்லது பாட்டாளி வர்க்கம் என அழைக்கப் படுகின்றது.

கேள்வி 5: எந்த நிபந்தனைகளின் கீழ் முதலாளிகளுக்கான பாட்டாளிகளின் உழைப்பு விற்பனை இடம்பெறுகிறது?

பதில்: உழைப்பும் ஒரு பண்டம் தான். ஏனைய பண்டங்களின் விலை எந்த விதிகளின் படி தீர்மானிக்கப் படுகிறதோ, சரியாக அதே மாதிரித் தான் உழைப்பின் விலையும் தீர்மானிக்கப் படுகிறது. பெரிய தொழிற்துறை அல்லது சுதந்திரமான போட்டி என்பனவற்றின் மேலாதிக்கத்தின் கீழ், ஒரு பண்டத்தின் விலை சராசரியாக அதன் உற்பத்தி செலவுக்கு சமமாக இருக்கும். அதாவது உழைப்பின் உற்பத்தி செலவுக்கு சமமாகத் தான் அந்த உழைப்பின் விலையும் இருக்கும்.

உழைப்பின் உற்பத்தி செலவானது, அந்தத் தொழிலாளி உழைப்பதற்கு தேவையான உணவாதாரங்களை பெற்றுக் கொள்ளும் அளவிற்கும், தொழிலாளர் வர்க்கம் அழிந்து விடாமல் பார்த்துக் கொள்ளும் அளவிலும் தான் இருக்கும். அதாவது இந்த நோக்கத்தை நிறைவேற்ற தேவையான அளவை விட அதிகமாக ஒரு தொழிலாளியின் உழைப்புக்கு கிடைக்க மாட்டாது. ஆகவே உழைப்பின் விலை அல்லது கூலி என்பது, வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்டுவதற்கான மிகக் குறைந்த அளவு தொகையாகவே இருக்கும்.

வியாபாரம் சில நேரம் நன்றாகவும், சில நேரம் மோசமாகவும் நடக்கலாம். அப்படியான நிலையில் தொழிலதிபர் தனது பண்டத்திற்கு சில நேரம் அதிகமாகவும், சில நேரம் குறைவாகவும் பெறுவதைப் போன்று தான், தொழிலாளிக்கும் அதிகமாகவும் குறைவாகவும் கிடைக்கும். ஆனால் ஆலை முதலாளியின் பண்டத்திற்கு கூடவும் இல்லாமல், குறையவும் இல்லாமல் சராசரியாக கிடைத்து வந்தால், தொழிலாளிக்கும் அவரது அடிப்படை கூலிக்கு கூடாமல் குறையாமல் சராசரி தான் கிடைக்கும். பெருந் தொழிற்துறை அனைத்து தொழில்களையும் ஆதிக்கம் செலுத்தும் போது, கூலி தொடர்பான பொருளாதார விதியும் கடுமையாக அமுல்படுத்தப் படும்.



(பிற்குறிப்பு: ஏற்கனவே உள்ள தமிழ் மொழிபெயர்ப்பை ஜேர்மன் மொழி மூல நூலுடன் ஒப்பிட்டு இந்த விளக்கவுரையை எழுதி உள்ளேன். புரிதலுக்காக சில இடங்களில் எளிமைப் படுத்தி இருக்கிறேன்.)

Tuesday, September 01, 2020

வாழ்க்கைப் போராட்டம் ஒரு மார்க்சிய பால பாடம்

மார்க்சியம் தோற்றுப்போன சித்தாந்தம் என்று பேசுவோர் முதலில் அதில் தாக்கம் செலுத்தும் ஹெகலியம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். ஹெகல் என்ற ஜெர்மன் தத்துவ அறிஞர் உருவாகிய தத்துவார்த்த கோட்பாடுகள் ஹெகலியம் என்று அழைக்கப் படுகின்றன. கார்ல் மார்க்ஸ் இளைஞனாக இருந்த காலத்தில் அவரும் தம்மை ஒரு ஹெகலியன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் பட்டார். அந்தளவுக்கு ஹெகலின் தத்துவக் கூறுகள் மார்க்சியத்தில் தாக்கம் செலுத்துகின்றன.

 

 ஹேகல் 1807 ம் ஆண்டு வெளியிட்ட‌ "ஆன்மாவின் தோற்ற‌ப்பாடுக‌ள்" நூலின் மூன்று முக்கிய‌ க‌ருதுகோள்க‌ள்: 

  • 1. அன்னிய‌மாத‌ல் 
  • 2. ப‌ண்ட‌மாத‌ல் 
  • 3. த‌ன்னிலை அறித‌ல் 

- அன்னிய‌மாத‌ல் என்ப‌து ம‌னித‌ர்க‌ள் ஒருவ‌ரோடொருவ‌ர், த‌ம‌க்குள் கூட‌ முர‌ண்ப‌ட்டு மோதிக் கொள்கிறார்க‌ள். 

- அது ப‌ண்ட‌மாகுத‌லை நோக்கி இழுத்து செல்கிற‌து. அதாவ‌து ச‌மூக‌ம், ச‌ட்ட‌ம், ஒழுக்க‌ நெறி போன்ற‌வை ம‌னித‌ர்க‌ளால் உருவாக்க்ப் ப‌ட்ட‌ன‌. கால‌ப்போக்கில் இவ‌ற்றை தாமே உருவாக்கினோம் என்ப‌தை ம‌னித‌ர்க‌ள் ம‌ற‌ந்து விடுகின்ற‌ன‌ர். அது ம‌ட்டும‌ல்ல‌ அவை ப‌கைமை கொண்ட‌ ச‌க்திக‌ளாக‌ ம‌னித‌ர்க‌ளுக்கு எதிராக‌ திருப்பி விட‌ப் ப‌டுகின்ற‌ன. அவை ம‌னித‌ர்க‌ள் ப‌ண்ட‌ங்க‌ளாக‌ ந‌ட‌த்துகின்ற‌ன‌. 

 - ஒரு ம‌னித‌ன் தானே உருவாக்கிய‌ உல‌கில் தான் ஒரு அன்னிய‌னாக‌ மாறி விட்ட‌தை உண‌ர்வ‌து த‌ன்னிலை அறித‌ல் என‌ப்ப‌டும். அப்போது சுய‌ அறிவுக்கான‌ க‌த‌வு திற‌ந்து விட‌ப் ப‌டுகிற‌து. வ‌ர‌லாற்று இய‌ங்கிய‌ல், பிர‌தான‌மான‌ பாடம்:

- எஜ‌மான், அடிமைக‌ளுக்கு இடையிலான‌ உற‌வு.

- ச‌முக‌ம் எதேச்ச‌திகார‌ த‌ன்மை கொண்ட‌ ம‌னித‌ர்க‌ளால் ஆள‌ப் ப‌ட்டு வ‌ந்த‌து. கார‌ண‌ம் ஏனையோர் அடிமைக‌ளாக‌ இருந்த‌ன‌ர்.

- அடிமைக‌ள் த‌ம‌க்குள் ச‌ம‌மான‌வ‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர். அத்துட‌ன் அவ‌ர்க‌ள் எல்லோரும் எஜாமானில் த‌ங்கி இருந்த‌ன‌ர்.

- ஒரு எஜ‌மான் ஆதிக்க‌ம் செலுத்துவ‌த‌ற்கு அவ‌ருக்கு கீழ்ப்ப‌டிவான‌ ம‌க்க‌ள் தேவை. அத‌னால் அவ‌ர் கூட‌ அடிமைக‌ளில் த‌ங்கி இருந்தார். இத‌னால் அடிமைக‌ளை ந‌ன்றாக‌ ப‌ராம‌ரிக்க‌ வேண்டிய‌ தேவை உண்டாகிற‌து.

- இங்கு ஒரு இய‌ங்கிய‌ல் விதி உருவாகிற‌து. அன்னிய‌மாத‌லில் இருந்து பர‌ஸ்ப‌ர‌ அங்கீகார‌ம் என்ற‌ க‌ட்ட‌த்திற்கு செல்கிற‌து. அத‌னால் வ‌ரலாறு முழுவ‌தும் சுத‌ந்திர‌ வேட்கைக்கான‌ க‌தைக‌ளாக‌ உள்ள‌ன‌.

- அடிமைத்த‌ன‌ம் என்ற‌ க‌ருதுகோள், சுத‌ந்திர‌ம் என்ப‌த‌ன் எதிர்க் க‌ருதுகோளாக உள்ள‌து. இந்த‌ எதிர்வினை அடிமைத்தளைகளில் இருந்து விடுப‌ட்டு சுத‌ந்திர‌மான‌ ச‌முதாய‌த்தை உருவாக்குகிற‌து.

- இந்த‌ வ‌ர‌லாற்று ப‌ண்பாட்டுத் த‌ள‌மான‌து ஒரு வினையில் (thesis) இருந்து, அத‌ன் எதிர்வினையான‌ (antithesis) இன்னொரு ப‌ண்பாட்டு த‌ள‌த்திற்கு செல்கிற‌து. இந்த‌ இர‌ண்டும் இணைந்து மூன்றாவ‌தான‌தொரு ப‌ண்பாட்டுத் த‌ள‌ம் இத‌ன் விளைவாக‌ (synthesis) உண்டாகிற‌து.

- ஹேகலை பொறுத்த‌ வ‌ரையில் ஒவ்வொரு விளைவும் (synthesis) முற்போக்கான‌து. ஏனென்றால் அது க‌ட‌ந்த‌ கால‌த்தில் இருந்த‌ பிர‌ச்சினைக‌ளை ஏற்ப‌ட்ட‌ அழுத்த‌ங்களை க‌ளைந்து புதிய‌ அழுத்த‌ங்க‌ளை கொண்டு வ‌ருகின்ற‌து. இருப்பினும் இந்த‌ இய‌ங்கிய‌லான‌து எதிர்கால‌த்தில் உய‌ர்ந்த‌ ஸ்தான‌த்தை அடைவ‌த‌ற்கான‌ கூறுகளைக் கொண்டிருப்ப‌தால் பிர‌ச்சினைக‌ளும் புற‌க்கணிக்க‌த் த‌க்க‌து.

- ஹேகலின் Logica நூலில் த‌த்துவ‌ம் ஒரு முற்போக்கான‌ இய‌க்க‌த்தை வ‌ழிந‌ட‌த்தும் என்று கூறுகிறார். அவ‌ர‌து சொந்த‌ த‌த்துவ‌த்தை இத‌ன் விளைவாக‌ synthesis ஆக‌ காண்கிறார்.

ஹேக‌லின் த‌வ‌று என்ன?

- த‌த்துவ‌த்தின், சுத‌ந்திர‌த்தின் ப‌ரிணாம‌ வ‌ள‌ர்ச்சியை பிர‌திநிதித்துவ‌ப் ப‌டுத்திய‌, அப்போது அவ‌ர் வாழ்ந்து கொண்டிருந்த‌ பிர‌ஷிய‌- ஜேர்ம‌ன் தேச‌ம் நாக‌ரிக‌த்தின் இறுதிக் க‌ட்ட‌த்தில் நிற்ப‌தாக‌க் க‌ருதினார். இந்த‌க் கோட்பாட்டை கார்ல் மார்க்ஸ் மறுத‌லித்தார். அதை நிரூபிப்ப‌து போன்று ஜேர்மனியில் அடுத்து ந‌ட‌ந்த‌ வ‌ர‌லாற்று நிக‌ழ்வுக‌ள் ந‌ட‌ந்த‌ன‌.

- ஹேக‌ல் 1831 ல் இற‌ந்தார். கார்ல் மார்க்ஸ் 1818 ல் பிற‌ந்தார்.

- 1848 ம் ஆண்டு ஜேர்ம‌ன் புர‌ட்சி ந‌ட‌ந்த‌து. அது ஒரு லிப‌ர‌ல் புர‌ட்சி. அத‌ன் விளைவாக‌ ம‌க்க‌ள் சுய‌நிர்ண‌ய‌ உரிமையை பெற்றுக் கொண்ட‌ன‌ர். (அந்த‌க் கால‌த்தில் தனி ம‌னித‌ சுய‌நிர்ண‌ய‌ம் முக்கிய‌மாக‌ க‌ருத‌ப் ப‌ட்ட‌து.) மேலும் சோஷ‌லிஸ்டுக‌ள் தொழிற்ச‌ங்கம் அமைக்கும் உரிமை பெற்ற‌ன‌ர். மார்க்ஸ், எங்கெல்ஸ் இவ‌ற்றை வ‌ர்க்க‌ப் போராட்ட‌மாக‌ப் பார்த்த‌ன‌ர்.

- கார்ல் மார்க்ஸ் ஹேகலின் த‌த்துவ‌ங்க‌ளை நிராக‌ரிக்க‌வில்லை. ஆனால் அவ‌ற்றில் இருந்த‌ குறைபாடுக‌ளை, போதாமைக‌ளை த‌ன‌து த‌த்துவ‌த்தால் நிவ‌ர்த்தி செய்து கொண்டார்.

- "த‌த்துவ‌ அறிஞ‌ர்க‌ள் இந்த‌ உல‌கை ப‌ல‌ வ‌ழிகளிலும் விளங்க‌ப் ப‌டுத்தி உள்ள‌ன‌ர். இந்த‌ உல‌கை மாற்றுவ‌தே அத‌ன் நோக்க‌ம்." - கார்ல் மார்க்ஸ்

Friday, September 27, 2019

அரபு தத்துவஞானி இபுன் கல்டூன் - ஓர் "இஸ்லாமிய கார்ல் மார்க்ஸ்"?

ஐநூறு வருடங்களுக்கு முன்னர், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியில் வாழ்ந்த இபுன் கல்டூன் என்ற இஸ்லாமிய தத்துவ ஞானி எழுதி வைத்த குறிப்புகள் அதிசயப் படத்தக்கவாறு கார்ல் மார்க்ஸின் கோட்பாடுகளுடன் ஒத்துப் போகின்றன. அது பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.


இபுன் கல்டூன் ஒரு வட ஆப்பிரிக்க தத்துவ அறிஞர். கார்ல் மார்க்ஸ் ஒரு மேற்கு ஐரோப்பிய தத்துவ அறிஞர். இருவரும் ஐநூறு வருட கால இடைவெளியில், இரண்டு வேறுபட்ட கலாச்சாரக் கூறுகளை கொண்ட கண்டங்களில் வாழ்ந்துள்ளனர். இருப்பினும், அதிசயப் படத் தக்கவாறு இருவரது எழுத்துக்களும் ஒரே மாதிரியான சமூகவியல் பார்வையைக் கொண்டுள்ளன.

வரலாற்றுக் கண்ணோட்டத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதிலும், பொருளாதாரமே சமூகத்தின் உந்துசக்தி என்பதிலும் இரண்டு தத்துவ அறிஞர்களும் உடன்படுகின்றனர். ஆனால், ஒரு வித்தியாசம். "ஒவ்வொரு தடவையும் அதே வரலாறு திரும்புகிறது" என்ற வாதத்துடன் இபுன் கல்டூன் நின்று விடுகிறார். ஆனால், "அவ்வாறு திரும்பி வரும் வரலாறு தன்னகத்தே முற்போக்கான கூறுகளை கொண்டிருக்கும்" என்பது கார்ல் மார்க்ஸின் வாதம்.

யேமனில் பிறந்த இபுன் கல்டூன், மொரோக்கோவில் கல்வி கற்றதுடன், தனது வாழ்க்கையில் பெரும்பகுதியை துனீசியாவில் கழித்துள்ளார். ஆரம்பத்தில் அவரும் இஸ்லாமிய மார்க்கம், ஷரியா சட்டங்கள் போன்ற மதம் சார்ந்த கல்வியை கற்றிருந்தாலும், மதத்திற்கு அப்பால் உள்ள பொருளியல் உலகைப் பற்றி சிந்தித்துள்ளார். இபுன் கல்டூனின் சமூகப் பொருளாதார தத்துவ ஞானம், அவரை பிற அரபு தத்துவ அறிஞர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

கிரேக்க வரலாற்று ஆசிரியர்களும், பல்வேறு காலகட்டங்களில் நடந்த சம்பவங்களின் தொகுப்பாக தான் வரலாறு எழுதியுள்ளனர். அதற்கு மாறாக, ஆண்டுகள், சாட்சிகள், போன்ற ஆதாரத் தகவல்களுடன் எழுதும் நவீன வரலாற்று ஆவணப் படுத்தலை ஆரம்பித்து வைத்தவர் இபுன் கல்டூன் தான். அது மட்டுமல்ல, நவீன கால சமூக விஞ்ஞானத்தின் தந்தையாகவும் அவர் இன்று வரை போற்றப் படுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வாழ்ந்த சமூகவியல் அறிஞர்களின் முன்னோடியாக திகழ்ந்துள்ளார்.

ஒரு சமூகத்தில் பொருளாதாரம் எந்தளவு தனி மனிதர்களிலும் தாக்கம் செலுத்துகிறது என்பதை, மார்க்ஸ் எழுதுவதற்கு ஐநூறு வருடங்களுக்கு முன்னரே இபுன் கல்டூன் எழுதி இருக்கிறார். அதாவது நமது ஒவ்வொரு செயலுக்கும், விளைவுக்கும் பின்னணியில் ஏதாவதொரு பொருளாதாரக் காரணி இருக்கலாம் எனும் தத்துவம். இன்றைக்கும் பலர், "படித்தவர்கள்" கூட, பொருளாதார மாற்றங்களுக்கும், அதனால் ஏற்படும் தாக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

"மனிதன் ஒரு அரசியல் மிருகம்" என்று கார்ல் மார்க்ஸ் சொன்னார். அதையே தான் இபுன் கல்டூனும் சொல்லி இருக்கிறார். அதாவது, மனிதன் தனது தேவைகளை தனியாக பூர்த்தி செய்து கொள்ள முடியாது. அவன் மற்றவர்களுடன் ஒரு சமூகமாக ஒன்று சேர்ந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. ஒருவன் சமூகத்தில் உள்ள எல்லோருக்குமாகவும் வேலை செய்ய வேண்டும். அதே மாதிரி எல்லோரும் ஒருவனுக்காக வேலை செய்ய வேண்டும். இந்தக் கூட்டுறவில் தான் உலகம் இயங்குகிறது. இதையே மார்க்சியமும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இபுன் கல்டூன் தனது சமூக- பொருளாதார தத்துவத்தை விளக்குவதற்காக, நாம் அன்றாடம் உண்ணும் ரொட்டியை உதாரணமாகக் காட்டுகிறார். தானியத்தை அரைப்பது, மாவு பிசைவது, அடுப்பில் சுடுவது போன்ற மூன்று செயல்களை செய்வதற்கு வித்தியாசமான உபகரணங்கள் தேவை. இதை எல்லாம் ஒரு தனி மனிதன் தானே தயாரிக்க முடியாது. ஒருவேளை தானியம் கிடைத்தாலும் அதைப் பயிரிட்டு வளர்ப்பதற்கு மற்றவர்களின் உதவி தேவை. ஒரு தனி மனிதன் வாழ்வதற்கும் ஒட்டுமொத்த சமூகத்தினதும் கூட்டு உழைப்பு அவசியம். இதையே கார்ல் மார்க்ஸ் தனது மூலதனம் நூலில் எழுதி இருக்கிறார்.

இருப்பினும் கார்ல் மார்க்ஸ் முக்கியமாகக் கருதிய சில விடயங்களை இபுன் கல்டூன் அலட்சியப் படுத்தி உள்ளார். உதாரணத்திற்கு, இபுன் கல்டூன் பொருளாதார உற்பத்தியில் உருவாகும் உபரிமதிப்பு பற்றி தெரிந்து வைத்திருந்தாலும் அதை சமூக அசைவியக்கமாக கருதுகிறார். அதாவது நாகரிக வளர்ச்சிக்கு மட்டுமே அது பயன்படுகிறது என்கிறார். அதற்கு மாறாக, கார்ல் மார்க்ஸ் உபரி மதிப்பு தான் முதலாளிகளால் திரட்டப் படும் மூலதனம் என்று வாதிடுகிறார்.

ஐநூறு வருடங்களுக்கு முன்னர், இபுன் கல்டூன் வாழ்ந்த காலத்தில் முதலாளித்துவம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கவில்லை. அப்போதிருந்த "முதலாளிகள்", பெரும்பாலும் வணிகர்களாக இருந்தனர். நிலப்பிரபுத்துவம் ஆட்சியதிகாரத்தில் இருந்த காலத்தில் அவர்களது செல்வாக்கும் மிகக் குறைவாக இருந்தது. ஆகவே, நிலப்பிரபுத்துவ பின்னணியில் வாழ்ந்த இபுன் கல்டூன், உபரிமதிப்பின் வளர்ச்சிக் கட்டத்தை உயர்ந்த நாகரிக சமுதாயம் எனக் குறிப்பிடுகிறார். இது பற்றி இன்னும் விரிவாகப் பார்ப்போம்.

"அசாபியா" (Asabiyyah) என்ற அரபுச் சொல் இஸ்லாத்திற்கு முன்பிருந்த இனக்குழு சமூக கட்டமைப்பை குறிக்கிறது. ஆனால், இபுன் கல்டூன் அதை விரிவான அர்த்தத்தில் பயன்படுத்தி உள்ளார். ஒரு பொதுவான கலாச்சாரத்தை பின்பற்றும் மனிதர்களுக்கு இடையிலான ஒருங்கிணைவை கொண்ட சமூகம் எனலாம். அனேகமாக, நமது காலத்தில் "தேசியம்" அல்லது "தேசிய இனம்" எனப் புரிந்து கொள்ளப் படும் விடயத்தை தான் இபுன் கல்டூன் குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன்.

இபுன் கல்டூனின் கோட்பாடுகளின் படி, மனிதர்களின் நாகரிகக் காலகட்டம் மூன்று படிநிலைகளை கொண்டது. அவற்றில் அசாபியா என்பது ஓர் உயர்ந்த அறிவியல் பயன்பாட்டைக் கொண்ட நாகரிகமடைந்த சமுதாயம். மார்க்சியம் கூறும் கம்யூனிச நாகரிகம் போன்றதொரு சமுதாயம் என்றும் புரிந்து கொள்ளலாம். ஆனால், இதை அவர் கருத்து முதல்வாதக் கண்ணோட்டத்துடன் அணுகுகிறார். இந்த இடத்தில் கார்ல் மார்க்சுக்கும், இபுன் கல்டூனுக்கும் இடையிலான தத்துவார்த்த முரண்பாடுகள் ஆரம்பமாகின்றன.

மனிதர்களினால் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளிலும் மனித உழைப்பு இருக்கிறது. உழைப்புச் சக்தியை செலுத்தும் தொழிலாளர்கள் ஒரு வர்க்கமாக உருவாகிறார்கள் என்பது கார்ல் மார்க்ஸின் இயங்கியல் பொருள்முதல்வாதக் கோட்பாடு. இபுன் கல்டூன் இயங்கியல் பார்வை கொண்டிருந்தாலும், உழைப்பு என்ற செல்வத்தை அடையாளம் காணத் தவறிவிட்டார். இது அவரது கருத்துமுதல்வாதப் பார்வையால் ஏற்பட்ட விளைவு எனலாம். திரும்பவும், ஐநூறு வருடங்களுக்கு முன்பிருந்த உலகம் முற்றிலும் வேறுவிதமாக இருந்தது என்பதையும் நினைவுபடுத்த வேண்டி உள்ளது.

இந்தக் கட்டுரையை வாசிக்கும் பொழுது, கார்ல் மார்க்சிற்கும், இபுன் கல்டூனுக்கும் இடையிலான ஒற்றுமைகள் நம்மை எல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தலாம். மார்க்சியம் தனது சொந்தக் கண்டுபிடிப்பு அல்ல என்று கார்ல்மார்க்ஸ் மறுத்திருக்கிறார். அவரே தனது கோட்பாடுகளுக்கு ஆதாரமாக சோக்கிரடீஸ் முதல் ஹெகல் வரையிலான தத்துவஞானிகளை மேற்கோள் காட்டி இருக்கிறார்.

இஸ்லாமிய சாம்ராஜ்யம் இருந்த காலத்தில் ஏராளமான கிரேக்க தத்துவ அறிஞர்கள் எழுதிய நூல்கள், அரபு மொழிக்கு மொழிபெயர்க்கப் பட்டன. அவற்றை எல்லாம் இபுன் கல்டூனும் கற்றிருப்பார். தான் கண்டறிந்த அறிவியல் உண்மைகளை மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைப்பது தான் ஒரு தத்துவ ஞானியின் வரலாற்றுக் கடமை. அதைத் தான் இபுன் கல்டூனும், கார்ல் மார்க்சும் செய்திருக்கிறார்கள்.

Wednesday, April 11, 2018

பொதுவுடைமை : கிரேக்க மெய்யியல் முதல் மார்க்ஸிய பொருளியல் வரை

அரசியல் என்பது எமது சக்திக்கு அப்பாற்பட்ட நாடளாவிய சித்தாந்தம் என்ற எண்ணம் பலர் மத்தியில் உள்ளது. பலர் அதனை மேடை போட்டு பேசும் அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். 

இது நாங்கள் எந்தளவுக்கு அரசியல் நீக்கம் செய்யப்பட்ட மலட்டு சமுதாயமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்துகின்றது. மார்க்சியம் அடைய விரும்பும் இலக்கான கம்யூனிச சமுதாயம் என்றால் என்னவென்று அறிவதற்கு முன்னர், பண்டைய அரசியல் அமைப்பை ஆய்வுக்குட்படுத்துவது அவசியமானது.

எமக்கு தெரிந்த ஆங்கிலச் சொல்லான "Politics" என்பது உண்மையில் ஒரு கிரேக்கச் சொல். மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு, ஐரோப்பாக் கண்டத்தில் நாகரீகமடைந்த சமுதாயமான கிரேக்கர்களின் நாடுகள் "Polis" என்று அழைக்கப் பட்டன. போலிஸ் என்றால், தமிழில் ஊர் அல்லது நகரம் என்று அர்த்தம் வரும்.

ஒரு கோயில் அதை சுற்றிய குடியிருப்புகள், அதை சுற்றிய வயல்கள், எல்லையோர காடுகள், மலைகள் என்பனவற்றை உள்ளடக்கியது தான் கிரேக்கர்களின் போலிஸ். ஒரு நகரமயமாக்கப்பட்ட சமூகத்தின் உறுப்பினர்கள் ஒன்றுகூடி முடிவுகளை எடுக்கும் செயலுக்குப் பெயர் பொலிட்டிக்ஸ். அதாவது அரசியல் என்ற சொல்லை, நாம் "நகரியல்" என்று இன்னொரு பெயரில் அழைக்கலாம்.

கிறிஸ்தவர்களின் வழிபாட்டுஸ்தலத்தை, தமிழில் "தேவாலயம்" என்று மொழிபெயர்த்தவர் யார் என்று தெரியவில்லை. அது ஆங்கிலத்தில் "Church" என்ற சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பாகும். ஆங்கில சொல்லான சர்ச், ஜெர்மன் சொல்லான Kirche என்பதில் இருந்து வந்தது. அதன் மூலம் "Kuriake" என்ற கிரேக்க சொல். அதன் அர்த்தம் ஆண்டவரின் இருப்பிடம். (தமிழில்: ஆலயம் அல்லது கோயில்) ஆனால், ஆதி கிறிஸ்தவர்கள் அந்தச் சொல்லை பயன்படுத்தவில்லை! அவர்கள் "Ekklesia" என்ற சொல்லை பாவித்தார்கள். இன்றைக்கும் கிரேக்க கிறிஸ்தவர்கள் அந்தச் சொல்லை பாவிக்கிறார்கள்.

எக்லேசியா என்றால் சபை என்று அர்த்தம் வரும். அதாவது முன்னர் குறிப்பிட்ட போலிஸ் சமூக உறுப்பினர்கள், பொலிட்டிக்ஸ் செய்யுமிடத்தின் பெயர் தான் எக்லேசியா. "பொது மக்கள் கூடுமிடம்" என்ற ஜனநாயகத் தன்மை வாய்ந்த சொல், ஆண்டவனின் சந்நிதானமாகி, இன்று அரசு என்ற கட்டமைப்பாகி உள்ளது.

அரசு என்ற ஸ்தாபனத்திடம் இருந்து அரசியலை மீட்டெடுப்பதே, இன்றுள்ள மக்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும். எங்கோ ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் மேட்டுக்குடி அரசியலை, மக்கள் அரசியலாக்க வேண்டும். பண்டைய கிரேக்கர்கள் எந்த அர்த்தத்தில் அரசியலை பயன்படுத்தி வந்தார்கள் என்பதை இன்றுள்ள மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். 

கம்யூனிச நாடு ஒன்றை உருவாக்குவதற்கான கோட்பாடு, கார்ல் மார்க்ஸ், லெனினிடம் இருந்து தொடங்கியதாக, இன்றைக்கும் பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மார்க்ஸ் பிறப்பதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னரே, 1516 ம் ஆண்டு, Sir Thomas More என்ற ஆங்கிலேயர், "Utopia" என்ற நூலை எழுதி வெளியிட்டிருந்தார். அந்த நூல், நவீன கம்யூனிச சமுதாயத்திற்கு அடித்தளமாக அமைந்தது. பல மனிதநேயவாதிகள் அந்த நூலில் வர்ணிக்கப் பட்டதைப் போன்ற நாடொன்றை உருவாக்க வேண்டுமென கனவு கண்டனர்.

கிரேக்க மொழியில் "இல்லாத ஓர் இடம்" என்ற அர்த்தம் வரும் உத்தொபியா என்ற கனவு தேசமான ஒரு தீவு, எல்லோருக்கும் நீதி, சமத்துவம், செல்வச் செழிப்பு என்பனவற்றைக் கொண்டிருக்கும். அனைவருக்கும் தேவையான அளவு உணவு, உறையுள் கிடைக்கும். எவருக்கும் தனிப்பட்ட சலுகையோ, அல்லது அந்தஸ்தோ வழங்கப் பட மாட்டாது.

தனி உடைமை இருக்காது. ஆண்களும், பெண்களும் சமமாக வேலை செய்வார்கள். ஏதாவது தொழிலில் பாண்டித்தியம் பெற்றிருப்பார்கள். தங்கம் போன்ற பெறுமதி மிக்க பொருட்களை சேர்த்து வைக்க வேண்டிய அவசியமிராது. ஒவ்வொருவரும் அவரவர் மதங்களை பின்பற்றுவதற்கு சுதந்திரம் இருக்கும். மக்கள் சமாதானமாக வாழ்வார்கள். அவர்கள் என்ன செய்ய வேண்டுமென உத்தரவிடுவதற்கு யாரும் கிடையாது.

தாமஸ் மூர் வாழ்ந்த காலத்தில், இவ்வாறான சிந்தனை வெறும் கனவு மட்டுமே. அத்தோடு, அவர் ஒரு கத்தோலிக்க மத நம்பிக்கையாளர் என்பதால், சில கிறிஸ்தவ நற்பண்புகளையும் குறிப்பிட்டிருந்தார். 19 ம் நூற்றாண்டு தத்துவ அறிஞர்கள் சிலர், உத்தொப்பியா போன்றொதொரு நீதியான, சமத்துவமான சமுதாயத்தை, நிஜ உலகில் உருவாக்கும் சாத்தியம் பற்றி சிந்தித்தார்கள். கார்ல் மார்க்ஸ் அந்த சிந்தனையாளர்களில் ஒருவர். 


கம்யூனிசம் என்பது "கார்ல் மார்க்ஸ், லெனினுக்கு பிறகு உருவான கொள்கை" என்று சில "படித்தவர்கள்" கூட தவறாக நினைக்கிறார்கள். 17 ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நடந்த பாராளுமன்றப் புரட்சிக் காலத்திலேயே பொதுவுடைமை சிந்தனை, ஒரு அரசியல் இயக்கமாக பரிணமித்திருந்தது.

இங்கிலாந்து மன்னராட்சிக்கு எதிராக, குரொம்வெல் தலைமையில் பாராளுமன்றம் புரட்சி செய்தது. அது இங்கிலாந்து குடியரசாவதற்கான பாராளுமன்றவாதிகளின் புரட்சி மட்டுமல்ல. கத்தோலிக்க மத மேலாதிக்கத்திற்கு எதிரான, புரட்டஸ்தாந்து அடிப்படைவாதிகளின் புரட்சியாகவும் இருந்தது.

அந்தப் புரட்சிகர காலகட்டத்தில், Diggers என்று அறியப்பட்ட அமைப்பினர், நிலங்களை பொதுவுடமையாக்கி, சமத்துவமான சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டிருந்தனர். அவர்கள் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்களாகவும் இருந்தனர். அதனால் விவிலிய நூலில் உள்ள சமநீதிப் போதனைகளை மேற்கோள் காட்டி, துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு வெளியிட்டு வந்தனர்.

*******

//கேள்வி: கம்யூனிச முறையிலான சமுதாய அமைப்பு, குடும்பத்தின் மீது என்ன செல்வாக்குச் செலுத்தும்?

பதில்: ஆடவர், மகளிர் இருபாலினருக்கும் இடையிலான உறவு, அதிலே ஈடுபட்ட இரு நபர்கள் சம்பந்தப் பட்டதும், சமுதாயத்தின் தலையீடுக்கு அவசியமில்லாத, முற்றிலும் தனிப்பட்ட விவகாரமாக ஆக்கும்.

அவ்வாறு செய்ய முடிந்ததற்கு காரணம், அது தனியார் சொத்துடைமையை ஒழித்துக் கட்டுகிறது. குழந்தைகளுக்கு சமுதாய முறையில் கல்வி போதிக்கிறது. தனியார் சொத்துடைமையால் நெறியாக்கம் செய்யப்பட்டு வந்த, மனைவி அவளது கணவனை சார்ந்திருப்பது, குழந்தைகள் பெற்றோரை சார்ந்திருப்பது எனும் அடிக்கல்களை தகர்த்தழிக்கிறது.

கம்யூனிசத்தின் கீழ் மனைவிகள் பொதுவாக்கிக் கொள்ளப் படுவதாக, ஒழுக்க நெறி பசப்பும் அற்பவாதிகள் எழுப்பும் கூக்குரலுக்கு அளிக்கப்படும் பதிலாகும் இது. மனைவிகளைப் பொதுவாக்கிக் கொள்ளும் உறவு முற்றிலும் முதலாளித்துவ சமுதாய அமைப்புக்கு உரியது. அது இன்றும் விபச்சாரம் என்ற வடிவில் நிலவி வருகின்றது.

விபச்சாரம் தனியார் சொத்துடமையுடன் சம்பந்தப்பட்டது. கம்யூனிச முறையிலான அமைப்பு, மகளிரை பொதுவாக்கிக் கொள்வதை நிலைநாட்டுவதற்கு மாறாக, அதற்கு முடிவு கட்டுகிறது.//

- பி. எங்கெல்ஸ் (கம்யூனிசத்தின் கோட்பாடுகள்)

Tuesday, April 10, 2018

ஈழப்போர் கூட மார்க்ஸிய பார்வையில் ஒரு வர்க்கப் போராட்டம் தான்

ஆப்கான் மக்கள் குறித்து எங்கெல்ஸ் எழுதிய குறிப்புகள், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த  ஈழத் தமிழ் மக்களுக்கும் வெகுவாகப் பொருந்துகின்றது. "ஆப்கான் மக்கள் துணிவு மிக்க, சுதந்திரமான இனத்தவர்கள். அவர்கள் கிராமிய மயமான அல்லது விவசாய தொழில்களில் மட்டுமே ஈடுபடுகின்றனர்... போரானது கிளர்ச்சியூட்டுவதாகவும், சலிப்பூட்டும் முதலாளித்துவ தொழில் பொறிமுறையின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை அளிப்பதாகவும் இருந்தது." (Engels, On Afghanistan (1857))

முப்பதாண்டு கால ஈழப்போராட்டம், மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு சவாலாக விளங்கியதை பலர் உணர்வதில்லை. ஸ்ரீலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்கள், உலகமயமாக்கல் என்ற மேலைத்தேய கலாச்சார ஆக்கிரமிப்பின் கீழ் வந்து கொண்டிருந்தது. அதே நேரம், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த "De Facto தமிழீழம்" அதற்கு எதிர்த் திசையில் பயணித்துக் கொண்டிருந்தது. மேலைத்தேய ஆடம்பர நுகர்பொருட்கள் எதுவும் அங்கே நுளைய முடியவில்லை.

உலகம் முழுவதும் அமெரிக்க கலாச்சார நோய்க் கிருமிகள் வேகமாக பரவிக் கொண்டிருந்த காலத்தில், ஈழம் ஒரு அமெரிக்க கலாச்சாரத் தடுப்பு காப்பு முகாமாக இருந்தது. "மின்சாரம் இன்றி வாழ்வில்லை" என்று நம்பிக் கொண்டிருக்கும் உலகில், ஈழத் தமிழ்மக்கள் தசாப்த காலமாக மின்சாரம் இன்றி வாழ்ந்து காட்டினார்கள். வெறும் நூறு கிலோ மீட்டர் பரப்பளவு மண்ணில் வாழ்ந்த இலட்சக் கணக்கான மக்கள், உலகமயமாக்கலை ஒதுக்கித் தள்ளி விட்டு, முப்பதாண்டுகள் வாழ முடிந்திருக்கிறது.

சாதாரண ஈழத் தமிழ் மக்கள் எந்தவொரு மார்க்சிய நூலையும் படிக்கவில்லை. ஆனால், வர்க்கப் போராட்டம் என்றால் என்னவென்று தமது வாழ்வியல் அனுபவங்கள் ஊடாக அறிந்து வைத்திருந்தார்கள். முதலாளிகளின் கால்களை நக்கிப் பிழைக்கும் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் சிலர் இந்த உண்மையை மறைக்கப் பார்ப்பார்கள்.

ஒரு சில உதாரணங்களை இங்கே தருகிறேன். யாழ் குடாநாட்டில், நன்னீர்க் கிணறுகள் எல்லாம் ஒன்றில் உயர்சாதியினரின் அல்லது அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் காணிகளுக்குள் இருக்கும். தாழ்த்தப்பட்ட சாதியினர் அருகிலேயே குடியிருந்தாலும், அவர்களின் கிணறுகளில் உவர் நீர் தான் கிடைக்கும். ஈழப்போர் தொடங்கியதும், சில கிராமங்களில் இருந்த கோயில் கிணறுகளை தலித் மக்கள் கைப்பற்றிக் கொண்டனர்.

அதே போன்று, பல தசாப்த காலமாக, ஊரில் உள்ள வசதியான, உயர்சாதியினரின் வீடுகளுக்கு தான் மின்சார இணைப்புக் கிடைத்தது. அருகிலேயே வாழ்ந்த, தாழ்த்தப்பட்ட சாதியினரான ஏழைத் தமிழர்களின் குடிசை வீடுகளில், மின்சாரம் அதிக செலவு பிடிக்கும் ஆடம்பரமாகவே இருந்து வந்தது. 

ஈழப்போர் தொடங்கிய ஆரம்ப காலத்தில், அரசு இயந்திரம் செயலற்றுப் போனது. அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்ட குடிசைவாசிகள், தெருவோர மின்கம்பிகளில் இருந்து திருட்டு மின்சாரம் எடுக்கத் தொடங்கி விட்டனர். சில தொழில்நுட்ப அறிவு பெற்ற குடிசை வாழ் இளைஞர்கள், எமது ஊரில் இருந்த அனைத்து குடிசைகளுக்கும் மின் இணைப்பு ஏற்படுத்திக் கொடுத்தனர்.

அதுவரை காலமும் குப்பி விளக்கு எரிந்து கொண்டிருந்த குடிசைகளில், அன்று முதல் மின்விளக்குகள் ஒளிர்ந்தன. சிலநேரம், மின்சார சபை ஊழியர்கள் வந்து இணைப்பை அறுத்து விட்டுச் செல்வார்கள். இலங்கை அரச நிறுவனமான மின்சார சபைக்கு தகவல் கொடுப்பது (அல்லது காட்டிக் கொடுப்பது), ஆண்டாண்டு காலமாக மின்சாரத்தை அனுபவித்து வரும் வசதி படைத்த மேல் சாதியினர் என்பது குறிப்பிடத் தக்கது. 

இறுதியில், ஸ்ரீலங்கா அரசு, முழு யாழ் குடாநாட்டிற்குமான மின் விநியோகத்தை தடை செய்து விட்டது. அதற்குப் பிறகு, எல்லோரும் சரி சமமாக எண்ணை விளக்குகளை பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. போர் தீவிரமடைந்த காலங்களில், புலிகளே பல மின்மாற்றிகளை குண்டு வைத்து தகர்த்திருந்தனர்.

ஈழப் போர் நடந்த காலங்களில், வர்க்கப் போராட்டமும் மட்டுப் படுத்தப் பட்ட அளவில் நடந்து கொண்டிருந்தது. ஆரம்ப காலங்களில், போரில் இருந்து தப்புவதற்காக வெளிநாடுகளுக்கு சென்ற பணக்கார தமிழர்களின், வெறுமையாகக் கிடந்த வீடுகள் உடைக்கப் பட்டன. குடிசைகளில் வாழ்ந்த ஏழைத் தமிழர்கள் அங்கு சென்று குடியேறினார்கள். ஊரில் இல்லாத பணக்கார விவசாயிகளின் நிலங்களை ஆக்கிரமித்த நிலமற்ற விவசாயிகள், அங்கு பயிர் செய்கைகளில் ஈடுபட்டனர்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் ஏற்படுத்தப் பட்ட பின்னர், பொருளாதார வளங்களும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அவர்களும் வெளிநாடு சென்ற பணக்காரத் தமிழர்களின் வீடுகளை, காணிகளை பறிமுதல் செய்து, தமது இயக்க உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்தனர். "போராளிக் குடும்பங்கள்" அல்லது "மாவீரர் குடும்பங்கள்" என்று, புலிகள் அமைப்புடன் சம்பந்தப் பட்ட குடும்பங்கள் பல, மார்க்சியம் வரையறுத்த பாட்டாளி வர்க்கத்திற்குள் அடங்குவன. குடிசைகளில் வாழ்ந்தவர்களுக்கு கல்வீடுகள் கிடைத்தன. நிலமற்ற விவசாயிகளுக்கு பயிர் செய்ய சிறுதுண்டு நிலமாவது கிடைத்தது.

புலிகள் மார்க்சிய புரட்சியாளர்கள் அல்லர். ஆரம்ப காலங்களில், போலி இடதுசாரிகளாக காட்டிக் கொண்டனர். ஆனால், ஒரு விடுதலைப் போராட்டம் அடிப்படையில் இடதுசாரிய தன்மை கொண்டது. அதாவது, மக்கள் மயப் பட்டது. ஈழத்திற்கான சுதந்திரப் போரை தமது தோள்களில் சுமந்த, பாட்டாளி வர்க்க தமிழர்களின் வர்க்கப் போராட்ட அபிலாஷைகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இல்லாவிட்டால், தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு அடி கூட முன்னோக்கி நகர்ந்திருக்காது.

பிரபாகரனோ, புலிகளோ மார்க்சியம் பேசவில்லை. அது பற்றி அறிந்திருக்கவும் மாட்டார்கள். ஆனால், அவர்களது போராட்ட நடைமுறையானது, மார்க்சிய தத்துவார்த்த அடிப்படையின்றி சாத்தியப் படவில்லை. ஒரு போராட்டம் நடத்த வேண்டுமானால், உயிரை துச்சமென மத்தித்து போராடும் துணிவுடைய போராளிகளை சேர்க்க வேண்டும். யார் போராளிகளாக இணைந்து கொள்ள முன்வருவார்கள்? தமிழ் மேட்டுக்குடியை சேர்ந்த பிள்ளைகள் போராட முன்வருவார்களா?

ஒரு சிறிய ஆய்வை செய்து பாருங்கள். புலிகள் அமைப்பில் இருந்த போராளிகளில், மேட்டுக்குடியினர் எத்தனை சதவிகிதம்? வசதிபடைத்த தமிழ்க் குடும்பத்தை சேர்ந்த ஒரு பிள்ளை கூட, "கரும்புலி" ஆகவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. நடுத்தர வர்க்க பெற்றோர்கள், தமது பிள்ளைகளை பல்கலைக்கழகம் வரையில் படிக்க வைத்து, கைநிறைய சம்பளம் வாங்கும் உத்தியோகத்திற்கு வழிகாட்டினார்கள்.

ஓரளவு வசதி படைத்த தமிழர்கள், தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார்கள். வசதி படைத்த தமிழனின் பிள்ளை, வெளிநாடு சென்று சம்பாதித்து அனுப்பினான். அவன் குடும்பம் ஊரில் புதுப் பணக்காரர் அந்தஸ்தை பெற்றது. அதே நேரம், ஏழைத் தமிழனின் பிள்ளை புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராடி மாண்டான். அவனது குடும்பம் வறுமையில் வாடியது. வசதிபடைத்த தமிழனின் பிள்ளை, பல்கலைக்கழகம் சென்று பட்டம் வாங்கி விட்டு உத்தியோகம் பார்க்கிறான்.

ஏழைத் தமிழனின் பிள்ளை, எட்டாம் வகுப்பையும் முடிக்காமல் புலிப் போராளியாக மாறி, விடுதலைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தான். "தமிழர்கள் மத்தியில் வர்க்கப் பிரச்சினை இல்லை, மார்க்சியவாதிகள் மட்டுமே வர்க்க வேறுபாட்டை வளர்த்து, சமூகத்தை கூறுபோடுகின்றார்கள்." என்று நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் வர்க்கப் போராட்டத்தை மறுதலிக்கின்றனர். கனவான்களே! மேலே நான் எழுதிய யதார்த்தம், ஈழத்தில் நிலவும் வர்க்க முரண்பாட்டை எடுத்துக் காட்டவில்லையா?

புலிகள் இயக்கத்தில் சேர்ந்த போராளிகளில் பெரும்பான்மையானோர், குறைந்தது 80% மாகிலும், மார்க்சியம் கூறுவது போல, இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளிவர்க்க தமிழர்கள். இந்த உண்மையை உங்களால் மறுக்க முடியுமா? வசதி படைத்த நடுத்தர வர்க்க இளைஞர்கள் சிலரும் போராளிகளாக இருந்தனர். ஆனால், அவர்களது எண்ணிக்கை மிகக் குறைவு. 10% இருந்தால் கூட மிக அதிகம். 

நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளின் பரப்புரைகளுக்கு மாறாகத் தான், ஈழத்தின் யதார்த்தம் இருந்தது. மார்க்சியம் சரியானது என்பதை, புலிகள் தமது போராட்டம் மூலம் மெய்ப்பித்திருந்தனர். மார்க்சியம் எதிர்வு கூறிய, பாட்டாளி மக்களின் பங்களிப்பின்றி புலிகளின் போராட்டம் சாத்தியப் பட்டிருக்குமா?

புலிப் போராளிகள் ஒன்றில் வறிய குடும்பப் பின்னணி கொண்டவர்கள், அல்லது தாழ்த்தப் பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள். இவர்களை விட, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களான மட்டக்களப்பு, அம்பாறை, வன்னி, மலையகத்தை சேர்ந்த இளைஞர்கள் தான் பெருமளவில் சேர்ந்திருந்தனர். 

சுருக்கமாக, மார்க்சியம் கூறுவது போல, "இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளி வர்க்க மக்கள்" தான் போராடினார்கள். தமிழ் சமுதாயம் எந்தளவு மோசமாக வர்க்க ரீதியாக பிளவுபட்டுள்ளது என்பது இதிலிருந்து தெளிவாகும். இதற்குப் பிறகும், "தமிழர்கள் மத்தியில் வர்க்க வேறுபாடு கிடையாது... மார்க்சியம் தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவில்லை..." என்றெல்லாம் பிதற்றினால், நீங்கள் தமிழ் மக்களிடம் இருந்து அன்னியப் பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும்.

Thursday, December 28, 2017

"கம்யூனிஸ்டுகள் மதத்தை தடை செய்வர்" எனும் பொய்ப் பிரச்சாரம் குறித்து...


இன்று வ‌ரை ப‌ல‌ரால் ந‌ம்ப‌ப் ப‌டும் பொய் ஒன்றுள்ள‌து. கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்த நாடுகளில் மதம் தடைசெய்யப் பட்டதாகவும், ஆலயங்கள் மூடப் பட்டதாகவும் இன்னமும் பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாட்டில் புரட்சி நடக்கும் காலத்தில், மக்கள் அதிகார மையங்களை நொறுக்கும் பொழுது, மத நிறுவனங்களும் தாக்கப்படுவது வழமை. 

மதத்திற்கு எதிரான கிளர்ச்சி பிரெஞ்சுப் புரட்சியுடன் ஆரம்பமானது. அதன் விளைவாக மதச்சார்பற்ற அரசுகள் தோன்றின. இன்று பல மேற்கத்திய நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கையற்றவர்களாக உள்ளனர். இது போன்ற சமூக மாற்றத்தை தான் கம்யூனிஸ்டுகள் ஆண்ட நாடுகளில் கொண்டு வர விரும்பினார்கள். 

ஆனால், முதலாளித்துவ எதிரிகளால் வேண்டுமென்றே தவறான தகவல்கள் பிரச்சாரம் செய்யப் படுகின்றன. "கம்யூனிஸ்டுகள் மதத்திற்கும், கடவுளுக்கும் எதிரானவர்கள்" என்று கூறி, மத நம்பிக்கை கொண்ட பாமர மக்களை மூளைச்சலவை செய்து வந்துள்ளானர்.

இந்த விடயத்தில், மதம் தொடர்பான கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி லெனின் எழுதிய கட்டுரையை வாசித்தால் தெளிவு பிறக்கும். 13 மே 1909, புரெலேடார்ட் பத்திரிகையில் லெனின் எழுதியது. லெனின் நூல் திரட்டில் இருந்து எடுத்த கட்டுரையின் சில பகுதிகளை இங்கே தருகிறேன். தமிழ் வாசகர்களுக்கு தெளிவு ஏற்படுவதற்காக நான் சில இடங்களில் மேலதிக விளக்கம் கொடுத்திருந்தாலும், லெனினின் மூலப்பிரதியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

பிரான்ஸ், ஜெர்மனியில் மதத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்றுள்ளதையும், ரஷ்யாவில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதையும் லெனின் குறிப்பிடுகிறார். அந்த நாடுகளில் இருந்த பூர்ஷுவா வர்க்கத்தினரின் மத எதிர்ப்பு பாரம்பரியம், சோஷலிச இயக்கம் தோன்றுவதற்கு முன்பே இருந்துள்ளது. 

பிரான்ஸில் என்சீக்லோபீடியர்கள் (Encyclopedists) எனும் தத்துவ அறிஞர்களின் குழு, தீவிர கடவுள் மறுப்புக் கொள்கையை கொண்டிருந்தது. தமிழகத்தில் உள்ள திராவிடர் க‌ழ‌க‌ம் முன்னெடுக்கும் நாஸ்திக இயக்கத்துடன் அதை ஒப்பிடலாம். அதே மாதிரி, ஜெர்மன் தத்துவஞானி போயர்பாக் (Feuerbach) கூட தீவிர மத எதிர்ப்பாளராக இருந்துள்ளார்.

பிரான்ஸ், ஜெர்மனியுடன் ஒப்பிடுகையில் ரஷ்யாவில் தோன்றிய பூர்ஷுவா வர்க்கத்தினர் எந்தவொரு மத எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. லெனினின் கூற்றுப் படி, "அந்தப் பொறுப்பு முழுவதும் பாட்டாளி வர்க்கத்தின் தலையில் சுமத்தப் பட்டது." அந்தக் காலகட்டத்தில் (19 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி) ரஷ்ய விவசாயிகள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த இடதுசாரி அமைப்பான நரோட்னிக்குகள் (லெனின் அவர்களை "குட்டி முதலாளிய ஜனநாயகவாதிகள்" என்று குறிப்பிடுகிறார்.) கூட பெரிதாக எதுவும் செய்து விடவில்லை. 

ஆகவே, கம்யூனிஸ்டுகள் முன்னெடுத்த "மத எதிர்ப்பு இயக்கம்", அந்தக் கால கட்டத்தில் (முதலாளித்துவ) மேற்கு ஐரோப்பாவில் நடந்த சமூக- அரசியல்  மாற்றங்களின் தொடர்ச்சியாகவே கருதப் பட வேண்டும். சுருக்கமாக சொன்னால், பிரான்ஸில் நடந்த முதலாளித்துவ புரட்சியின் தொடர்ச்சியாகத் தான், ரஷ்யாவில் நடந்த சோஷலிசப் புரட்சியும் மத நிறுவனங்களின் அரசியல் மேலாதிக்கத்தை இல்லாதொழித்தது.

லெனின் கூறியதாவது: 
//மார்க்சியத்தின் தத்துவார்த்த அடிப்படையானது இயங்கியல் பொருள்முதல்வாதமே. அதையே மார்க்ஸ், எங்கெல்சும் பிரகடனம் செய்தனர். அது 18 ம் நூற்றாண்டில் பிரான்ஸில் தோன்றிய பொருள் முதல்வாத தத்துவத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொண்டுள்ளது. 19 ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் ஜெர்மன் தத்துவஞானி போயர்பாக் அதை முழுவதுமாக ஏற்றுக் கொண்டிருந்தார். பொருள்முதல்வாதமானது முற்றுமுழுதாக நாஸ்திக வாதமே என்பதுடன், அது மதத்துடன் பகைமை கொண்டுள்ளது.//

பொருள்முதல்வாத தத்துவம் நாஸ்திகமே என்பதைக் கூறும் லெனின், எங்கெல்ஸ் எழுதிய "டூரிங்கிற்கு மறுப்பு" நூலையும் வாசிக்கக் கோருகின்றார். டூரிங் (Düring) என்பவர் ஜெர்மனியில் வாழ்ந்த ஒரு சோஷலிச தத்துவ அறிஞர். ஆனால் மார்க்சியவாதி அல்ல. (அதாவது மார்க்சுடன் கொள்கை முரண்பாடு கொண்டவர்). அப்போது கார்ல் மார்க்ஸ் மூலதனம் நூல் எழுதுவதில் மும்முரமாக இருந்த படியால், டூரிங்கின் வாதங்களை மறுக்கும் பொறுப்பை எங்கெல்ஸ் ஏற்றிருக்கிறார். "டூரிங்கிற்கு மறுப்பு"(இந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை இப்போதும் வாங்கலாம்.) நூலில் தீவிர நாஸ்திகம் எதிர்மறையான விளைவுகளை தரும் என்பதை எங்கெல்ஸ் சுட்டிக் காட்டியுள்ளார். அதை லெனின் மேற்கோள் காட்டியுள்ளார்.

மேற்கொண்டு லெனின் எழுதியதை நான் இங்கு இலகுபடுத்தி தருகிறேன். மதத்திற்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்வதன் மூலம், அதை தொழிலாளர் கட்சியின் முக்கிய செயற்பாடாகுவதன் ஊடாக, "இடதுசாரிகளாக", "புரட்சியாளர்களாக" காட்டிக் கொள்வோரை எங்கெல்ஸ் கண்டித்துள்ளார். 1874 ம் ஆண்டு, பிரான்ஸில் பிளாங் என்ற சோஷலிச அறிஞர் வழிகாட்டலில் நடந்த பாரிஸ் கம்யூன் புரட்சி தோற்கடிக்கப் பட்டது. அப்போது பலர் லண்டனில் அகதிகளாக தஞ்சம் கோரி இருந்தனர். அந்த "பிலாங்கிஸ்ட் அகதிகள்" வெளியிட்ட அறிக்கையை எங்கெல்ஸ் விமர்சித்திருந்தார். இது போன்ற மதத்திற்கு எதிரான போர்ப் பிரகடனம் மதத்திற்கு புத்துயிர் கொடுப்பதுடன், அது தானாகவே அழிந்து போவதைத் தடுத்து விடும் என்று கண்டித்துள்ளார்.

உழைக்கும் மக்களின் பெரும்பகுதியை புரட்சிகரமாக்கும் வர்க்கப் போராட்டம் மட்டுமே, ஒடுக்கப் பட்ட மக்களை மதத்தின் நுகத்தடியில் இருந்து விடுதலை செய்யும். மதம் ஒரு கருத்துமுதல்வாதம் என்பதைக் கூறிய தத்துவ அறிஞர் டூரிங்கை பாராட்டிய அதே எங்கெல்ஸ், டூரிங்கின் "சோஷலிச நாட்டில் மதத்தை தடை செய்யும் புரட்சிகர கொள்கையை" கடுமையாக கண்டிக்கத் தயங்கவில்லை. எங்கெல்ஸ் அதை "பிஸ்மார்க் செய்தது போன்று முட்டாள்தனமான எதிர்விளைவுகளை தரும்" என்று குறிப்பிடுகிறார். "கலாச்சாரப் போராட்டம்"(Kulturkampf) என்ற பெயரில் அன்றைய ஜெர்மன் அதிபர் பிஸ்மார்க் கத்தோலிக்க மத நிறுவனத்திற்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள், அதைப் பலப்படுத்துவதில் முடிந்தது என்பதை லெனின் தனது கட்டுரையில் சுட்டிக் காட்டி உள்ளார்.

பிஸ்மார்க் மதத்திற்கு எதிராக தடுப்புச் சுவர் எழுப்பியமை, பாட்டாளி வர்க்கத்தின் ஒரு பகுதியின் கவனத்தை திசை திருப்பியதுடன், பூர்சுவா வர்க்கத்தின் "மத எதிர்ப்பு போலித்தனத்தையும்" வெளிப்படுத்தியது. பிஸ்மார்க் செய்தது போன்று, டூரிங் வேறு வடிவில் செய்ய நினைக்கிறார் என எங்கெல்ஸ் குற்றம் சாட்டினார். பாட்டாளிவர்க்கம் அதற்காக தயார்படுத்தப் பட வேண்டும் என விரும்பினார். பாட்டாளிவர்க்கத்தை பொறுமையாக ஒழுங்குமுறைப் படுத்தி, தெளிவுபடுத்துவதன் மூலம் மதத்தை தானாக அழிய வைக்கலாம். ஆனால், அது மதத்திற்கு எதிரான அரசியல் போராக மாற்றப் படக் கூடாது.

மார்க்சியம் என்பது பொருள்முதல்வாதம் தான். அது மதத்துடன் எந்த விட்டுக்கொடுப்பும் இல்லாமல் பகைமை கொண்டுள்ளது. என்சீக்லோபீடியர்கள், போயர்பாக் போன்றோரின் நிலைப்பாடும் அது தான். ஆனால், மார்க்ஸ், எங்கெல்சின் இயங்கியல் பொருள்முதல்வாதம் அதற்கும் அப்பால் செல்கிறது. அது பொருள்முதல்வாத தத்துவத்தை சரித்திர தளத்துடனும், சமூகவியல் தளத்துடனும் இணைக்கிறது. நாங்கள் மதத்தை எதிர்த்துப் போராட வேண்டும். அது பொருள்முதல்வாதத்தினதும், மார்க்சியத்தினதும் தொடக்கமாக உள்ளது.

ஆனால், மார்க்சியம் பொருள்முதல்வாதத்துடன் மட்டும் நின்று விடவில்லை. அதற்கும் மேலே செல்கிறது. அதாவது நாங்கள் மதத்தை எதிர்த்துப் போராட வேண்டும். அதற்கும் முதல், மக்களினதும், நம்பிக்கையினதும் மூலமாக உள்ள பொருள் வாதமாக வெளிப்படுத்தப் பட வேண்டும். மதத்திற்கு எதிரான போராட்டத்தை ஒரு சித்தாந்தப் பிரச்சாரமாக குறுக்கக் கூடாது. ஆனால், மதத்தின் சமூக வேர்களைக் களைவதை நோக்கமாகக் கொண்டுள்ள வர்க்கப் போராட்டத்தின் தீர்க்கமான நடைமுறையாக பிணைக்கப் பட வேண்டும்.

எதற்காக நகர்ப்புற பாட்டாளிகள், விவசாயிகள் மத்தியில் மதம் நிலைத்திருக்கிறது? "அதற்குக் காரணம் மக்களின் அறியாமை" என்று ஒரு முதலாளிய பொருள்முதல்வாதி கூறுவார். "மதம் ஒழிக, நாஸ்திகம் வாழ்க, எமது முக்கிய கடமை நாஸ்திகத்தை பரப்புவது தான்" என்று ஒரு முதலாளித்துவ முற்போக்குவாதி மேலும் கூறுவார். ஆனால், மார்க்சியர்கள் அதைத் தவறு என்கிறார்கள். ஏனென்றால், இது போன்ற கருத்தானது, மேலோட்டமான, முதலாளிய கலாச்சாரத்திற்கு உட்பட்ட பரப்புகை ஆகும்.

அது போன்றதொரு கருத்து மதத்தின் வேர்களை போதுமான அளவு வெளிப்படுத்துவதில்லை. அதாவது, கருத்தியல் பூர்வமானதே தவிர பொருள்முதல்வாதம் அல்ல. நவீன முதலாளிய நாடுகளில் இந்த வேர்கள் சமூக அடித்தளத்தைக் கொண்டுள்ளன:
  • முதலாளித்துவத்தின் உழைக்கும் மக்கள் மீதான அடக்குமுறை. 
  • மிகப் பலமான முதலாளித்துவத்திற்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாத உழைக்கும் மக்களின் கையாலாகத்தனம். 
  • ஒவ்வொரு நாளும் பல தடவைகள் வருத்தி,காயப்படுத்தும் மனிதாபிமற்ற செயல்கள். 
  • அசாதாரணமான நிகழ்வுகளான யுத்தம், நிலநடுக்கம் போன்றன.

பயம் தான் கடவுளரை முன்னுக்கு கொண்டு வந்தது. கண்ணுக்கு புலப்படாத மூலதனத்தின் செயற்பாடுகள் குறித்த அச்சம் காரணமாக இருந்தது. "கண்ணுக்கு புலப்படாத" என்று சொல்வதற்கு காரணம், மனிதர்களின் வாழ்வில் ஒரு கட்டத்தில், அவர்களை ஏழைகளாக, பிச்சைக்காரர்களாக, பாலியல் தொழிலாளிகளாக மாற்றும் மூலதனத்தின் சக்தி பற்றிய புரிதல் சாதாரண மக்களிடம் இல்லை. இது தான் தற்காலத்தில் ஒரு மதத்தின் வேர். ஒரு பொருள்முதல்வாதி அதைக் கவனத்தில் எடுக்க வேண்டும். கண்ணுக்குப் புலப்படாத, நாசமாக்கும் சக்தி படைத்த முதலாளித்துவத்தில் தங்கியுள்ள மதத்தின் வேரைக் கண்டறியாமல், நாஸ்திக பிரச்சாரம் செய்வதன் மூலம் மக்களிடம் இருந்து மதத்தை அகற்ற முடியாது.

(பிற்குறிப்பு: "மதம் குறித்து தொழிலாளர் கட்சியின் தொடர்பு பற்றி" என்ற தலைப்பில் லெனின் எழுதிய மூலப்பிரதியை ஆதாரமாகக் கொண்டு எழுதப் பட்டது.)

Friday, August 18, 2017

யாருக்கு மார்க்சியம் தேவையில்லை?


"எங்க‌ளுக்கு மார்க்சிய‌ம் தேவையில்லை... மார்க்சிய‌ம் பேசுவ‌து ஒரு இள‌ம்ப‌ருவ‌க் கோளாறு..." என்று பூர்ஷுவா ம‌ன‌ப்பான்மையுட‌ன் பேசும் ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு,

மார்க்சியம் என்பது ஏழைக‌ளின், ஒடுக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் அரசியல். அது உங்க‌ளுக்கு த‌னிப்ப‌ட்ட‌ முறையில் தேவையில்லாம‌ல் இருக்க‌லாம். அதாவ‌து உங்க‌ள‌து ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌ ந‌ல‌ன்க‌ளுக்கு அது தேவையில்லை. முத‌லாளித்துவ‌ம் தாராள‌மாக‌ வ‌ழ‌ங்கும் வாழ்க்கை வ‌ச‌திக‌ளை அனுப‌விப்ப‌வ‌ர்க‌ளுக்கு அது தேவையில்லை.

மார்க்சிய‌த்தால் உங்களுக்கு எந்த நன்மையையும் இல்லாமல் இருக்கலாம். ஏனென்றால், முத‌லாளித்துவ‌ம் உங்களுக்கு போதுமான அளவு வருமானம் கொடுக்கிற‌து. வசதியான வாழ்க்கையை ஏற்ப‌டுத்திக் கொடுத்துள்ள‌து. அத‌னால் உங்க‌ளுக்கு மார்க்சிய‌ம் தேவையில்லை. இதைத் தான் வர்க்கக் குணாம்சம் என்று சொல்வார்கள்.

ஏழைகள் சார்பாகப் பேசுவதற்கு உங்களுக்கு தகுதி இல்லை. ஏனென்றால் அப்பாவி ம‌னித‌ர்க‌ளை சுர‌ண்டி ப‌ண‌ம் சேர்க்கும் குறுக்கு வ‌ழிக‌ளை, நுணுக்க‌மான‌ திருட்டுக்க‌ளை, ஏமாற்றிப் ப‌ண‌ம் ப‌றிப்ப‌தை, முத‌லாளிக‌ளுக்கு சொல்லிக் கொடுப்ப‌தே நீங்க‌ள் தானே? அத‌ற்காக‌த் தானே நீங்க‌ள் க‌ற்ற‌ க‌ல்வி ப‌ய‌ன்ப‌டுகிற‌து?

முத‌லாளி தான் கொள்ளைய‌டிக்கும் கோடிக் க‌ண‌க்கான‌ ப‌ண‌த்தில், உங்க‌ளுக்கு சில‌ ஆயிர‌ங்க‌ளை கிள்ளிக் கொடுக்கிறான். அந்த‌ பிச்சைக் காசுக்காக‌ விசுவாச‌மாக‌ வாலாட்டுகிறீர்க‌ள். அந்த‌ நாய்க் குண‌த்தை பெருமையாக‌ க‌ருதிக் கொள்கிறீர்க‌ள்.

உங்கள் அளவிற்கு பெரிய படிப்பு படித்திராத‌, சாதாரண அடித்தட்டு மக்களுக்கு மார்க்சியத்தை சொல்லிப் புரிய வைக்க படித்தவர்கள் தான் முன்வர வேண்டும். அத‌ற்கு நீங்க‌ள் உதவி செய்யா விட்டாலும், உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும். உங்களால் முடியாத ஒரு விடயத்தை, இன்னொருவன் செய்யும் பொழுது அதற்கு வழிவிட வேண்டும்.

உங்களைப் போன்ற மெத்தப் படித்தவர்கள், எந்த‌க் கால‌த்திலும் உண்மை பேசுவதில்லை. முதலாளித்துவ சுரண்டல் பற்றிப் பேசுவதில்லை. க‌ட‌ன் சுமைக‌ளை க‌ண்டுகொள்வ‌தில்லை.

யுத்த‌ங்க‌ள், பேர‌ழிவுக‌ளை பார்க்கும் போதெல்லாம், அத‌ற்கு "இன‌ப் பிர‌ச்சினை, ம‌த‌ப் பிர‌ச்சினை" என்று கார‌ண‌ம் சொல்லிக் கொள்வீர்க‌ள். ம‌னித‌ அழிவில் இலாப‌ம் ச‌ம்பாதிக்கும் ஆயுத‌ வியாபாரிக‌ள் உங்க‌ள் க‌ண்க‌ளுக்கு தெரிய‌ப் போவ‌தில்லை.

நீங்க‌ள் யாரும் வ‌றுமையைக் க‌ண்டு கொள்வ‌தில்லை. ஒவ்வொருநாளும் ப‌ட்டினியால் இற‌ந்து கொண்டிருக்கும் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ குழ‌ந்தைக‌ளை ப‌ற்றிக் கேள்விப் ப‌ட்டாலும் பாராமுக‌மாக‌ இருக்கிறீர்க‌ள். ஏனென்றால் அது எதுவும் உங்க‌ள் குழ‌ந்தை அல்ல‌.

அதைப் ப‌ற்றி எல்லாம் நீங்க‌ள் பேசுவ‌தில்லை. கேள்விப் ப‌ட்டாலும் பேச‌ மாட்டீர்க‌ள். உங்க‌ள் வாயை திற‌க்க‌ விடாம‌ல் எதுவோ த‌டுக்கிற‌து. ஆனால், அதைப் ப‌ற்றி எல்லாம் மார்க்ஸிஸ்டுக‌ள் பேசுகிறார்கள். அத‌னால் உங்க‌ளுக்கு என்ன‌ பிர‌ச்சினை? குற்ற‌முள்ள‌ நெஞ்சு குறுகுறுக்கிற‌தா?

நாய்களுக்கும், மாடுகளுக்கும் வித்தியாசம் உள்ளது. முதலாளிகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்குவோர் நாய்கள் போன்றவர்கள். முதலாளிகளுக்கு கீழே வேலை செய்பவர்கள் மாடுகள் போன்றவர்கள்.

நாய்கள் உடல் உழைப்பில் ஈடுபடுவதில்லை. முதலாளிகளின் சொத்துக்களுக்கு காவல் காப்பது மட்டுமே அவற்றின் வேலை. முதலாளிகள் வீசும் எலும்புத்துண்டுகளுக்காக வாலாட்டும். முதலாளியை எதிர்ப்பவர்களை பார்த்துக் குரைக்கும். கடிக்கச் சொன்னால் கடிக்கும்.

மாடுகள் வாழ்க்கை முழுவதும் உழைத்துக் கொண்டே இருக்கும். மாடுகளின் உழைப்பால் உருவான நெல் முதலாளிகளால் நுகரப் படுவதுடன், சந்தையில் விற்று பணமாக்கிக் கொள்வார்கள். நெல்லைப் பிரித்த பின்னர் கழிவாக அகற்றப்படும் வைக்கோல் மட்டுமே மாடுகளுக்கு உணவாகும்.

இன்றைய முதலாளித்துவ உற்பத்தி அமைப்பும் அப்படித் தான் இயங்குகிறது. தொழிலாளர்கள் மாடுகள் போன்று உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். மத்தியதர வர்க்க புத்திஜீவிகள், நாய்கள் மாதிரி முதலாளிகளுக்கு சேவை செய்வதில் பெருமை அடைகிறார்கள்.

பாட்டாளிவர்க்க அரசியலுக்கும், பூர்ஷுவா (மத்தியதர வர்க்க) அரசியலுக்கும் வித்தியாசம் உள்ளது. முதலாவது யதார்த்த வாழ்வை பிரதிபலிக்கிறது. இரண்டாவது கற்பனாவாத உலகை சிருஷ்டிக்கிறது.

பகல் முழுவதும் அலுவலகத்தில் குந்தியிருந்து, முதலாளிகளின் இலாபத்தை அதிகரிக்கும் வழிவகைகளை செய்து கொடுத்து விட்டு, மாலை நேரப் பொழுதுபோக்காக தேசியவாதம், மதவாதம், இனவாதம் என்று பேசித் திரிவது பூர்ஷுவா அரசியல்.

அதற்கு மாறாக, வேலை செய்யும் இடங்களிலும் அரசியல் பேசி சக ஊழியர்களின் உரிமைகளை உணர வைப்பது பாட்டாளிவர்க்க அரசியல். ஐரோப்பாவில் எனக்குத் தெரிந்த பல அரசியல் செயற்பாட்டாளர்கள் வேண்டுமென்றே தொழிற்சாலைகளில் சேர்ந்து வேலை செய்துள்ளனர்.

நெதர்லாந்தில் எனக்குத் தெரிந்த ஒரு ஆசிரியர், கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றின் செயற்பாட்டாளர். பொருளாதார நெருக்கடி காலத்தில் வேலையிழந்து இருந்த நேரம், தபால்கள் தரம் பிரிக்கும் வேலையில் சேர்ந்தார். ஏற்கனவே பல தபால் ஊழியர்கள் அவரது கட்சி உறுப்பினர்களாக உள்ளனர்.

அந்த ஆசிரியர், தபால் தரம் பிரிக்கும் தொழிலகத்தில், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டார். தொழிலாளர் தற்காலிக தீர்வுகளுக்காக அல்லாமல், நிரந்தரமான சோஷலிசப் புரட்சிக்காக போராட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். அந்தத் தொழிலகத்தை சேர்ந்த பலர் தற்போது கட்சி ஆர்வலர்களாக உள்ளானர்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது மாதிரி, இது ஓர் உதாரணம் மட்டுமே. முதலாளித்துவ சுரண்டலைப் பற்றி அறிந்து கொள்வதற்கு அனுபவமும் அவசியம். ஒரு அரசியல் ஆர்வலர், தானும் ஒரு தொழிலாளியாக வேலை செய்வதன் மூலம் தேவையான அனுபவ அறிவைப் பெற்றுக் கொள்கிறார். அத்துடன் சக தொழிலாளர்களையும் ஒன்றிணைக்கிறார்.

Friday, January 06, 2017

தமிழின விவசாய - முதலாளிகளை புரிந்து கொள்வதற்கான லெனினின் நூல்


லெனின் எழுதிய "குட்டி முதலாளித்துவ சோஷலிசமும் பாட்டாளி வர்க்க சோஷலிசமும்" நூலை வாசித்தல்.

சோஷலிசம் பேசுவோர் எல்லாம் மார்க்சியவாதிகளோ அல்லது பொதுவுடைமைவாதிகளோ அல்ல! படித்தவர்கள் பலருக்கும் இந்த உண்மை தெரிவதில்லை. மேற்கு ஐரோப்பாவில் உள்ள சமூக ஜனநாயகக் கட்சிகளும் சோஷலிசம் பேசின. ஆனால் அது முதலாளித்துவத்திற்கு கீழ் அடங்கியது. அதனால், அன்று சோஷலிசம் பேசிய இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சிகள், காலப்போக்கில் வலதுசாரி சந்தர்ப்பவாதக் கட்சிகளாக மாறிவிட்டன.

ஐரோப்பாவில் மார்க்சியவாதிகள் அல்லாத, சமூக ஜனநாயகவாதிகளும் இல்லாத சோஷலிஸ்டுகள் இருக்கின்றனர். பொதுவாக அனார்க்கிஸ்டுகள் என்றழைக்கப் படுகின்றனர். அதற்குள் பல தத்துவ ஆசிரியர்களை பின்பற்றும் சிறு குழுக்கள் உள்ளன. மார்க்சியத்தின் மூலவர்களாக கருதப்படும் கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் வாழ்ந்த காலத்தில், அவர்களுடன் முரண்பட்ட வேறு சில தத்துவ அறிஞர்களும் இருந்தனர்.

பிரான்ஸில் புருதோன், பிளாங்கி போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். பாரிஸ் கம்யூன் புரட்சியில் முக்கிய பங்காற்றியவர்கள். பிற ஐரோப்பிய நாடுகளிலும் அவர்களது ஆதரவாளர்கள் இருந்தனர். ரஷ்யாவை சேர்ந்த பகுனின் என்ற அனார்க்கிச தத்துவ அறிஞர், கார்ல் மார்சுடன் அடிக்கடி முரண்பட்டு வந்தார். அவருக்கும் பெருமளவு ஆதரவாளர்கள் இருந்தனர். நெதர்லாந்தை சேர்ந்த டொமேலா நியூவன்ஹைஸ் போன்றோர் தத்தம் நாட்டுக்குள் பிரபலமாக இருந்தனர்.

அராஜகம் என்ற சொல் அன்றாட மொழிப் பாவனையில் தவறான அர்த்தத்துடன் பிரயோகிக்கப் படுகின்றது. கிரேக்க மொழியில் "அனார்க்கி" என்றால் அரசு இன்மை என்று அர்த்தம் வரும். தமிழில் "அராஜகம்" (ராஜ்ஜியம் இல்லை) என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஆகையினால், அரசு என்ற அமைப்பை ஏற்றுக் கொள்ளாதவர்கள் "அராஜகவாதிகள்". (அந்த அர்த்தத்துடன் தான் மார்க்சிய நூல்களில் குறிப்பிடப் படுகின்றனர்.) பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் "அனார்க்கிஸ்டுகள்" என்று அழைக்கப் படுகின்றனர்.

ரஷ்யாவில் கம்யூனிஸ்டுகளின் புரட்சி நடப்பதற்கு பல வருடங்களுக்கு முன்னரே, அந்நாட்டில் அராஜகவாதிகள் செயற்பட்டு வந்தனர். "நரோட்னிக்குகள்" என்ற பெயரில் அமைப்பு வடிவம் பெற்றிருந்தனர். ரஷ்ய மொழியில் "நரோட்னி" என்றால் மக்கள் என்று அர்த்தம். 1880 ம் ஆண்டளவில் நரோட்னிக்குகளின் செயற்பாடுகள் உச்சத்தில் இருந்தன. ரஷ்ய சக்கரவர்த்தி சார் அலெக்சாண்டர் நரோட்னிக்குகளின் குண்டுவெடிப்பில் கொல்லப் பட்டார். அந்த சம்பவம் தொடர்பாக லெனினின் அண்ணனும் (ஒரு நரோட்னிக்) கைதாகி, சிறை வைக்கப் பட்டிருந்தார்.

நரோட்னிக்குகள் மார்க்சியவாதிகள் அல்லர். அவர்கள் அனார்க்கிஸ்டுகள். சார் மன்னனின் இரகசியப் பொலிஸ் அடக்குமுறை காரணமாக பலவீனப் பட்டிருந்தனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அதாவது 1901 ம் ஆண்டு, சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள் என்ற கட்சி தோன்றியது. ரஷ்யா முழுவதும் பரவியிருந்த சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள் கட்சி, பழைய நரோட்னிக்குகளின் கொள்கைகளை பெருமளவில் பின்பற்றி வந்தது.

சோஷலிஸ்ட் புரட்சியாளர் கட்சி, ஓரளவு மார்க்சிய சார்பானதாகவும் காட்டிக் கொண்டது. ஆனால், மார்க்சியத்தை திரிபு படுத்தி வந்தது. அதாவது, மார்க்ஸ் சொன்ன தொழிற்துறை பாட்டாளிவர்க்கத்தை புறக்கணித்தது. அதற்குப் பதிலாக விவசாயிகள் மத்தியில் வேலை செய்து, அவர்களை அணிதிரட்டியது. அவர்கள் ரஷ்யாவில் விவசாயிகளின் புரட்சியை உண்டாக்குவதை குறிக்கோளாக கொண்டிருந்தனர்.

இந்த வரலாற்றுப் பின்னனியில் தான், லெனின் எழுதிய "குட்டி முதலாளித்துவ சோஷலிசமும் பாட்டாளி வர்க்க சோஷலிசமும்" என்ற நூலை வாசித்து அறிய வேண்டும். ஆரம்ப கால மார்க்சிய மாணவர்கள் வாசிப்பதற்கு இலகுவான நூல் அது. இருபது பக்கங்கள் மட்டுமே. மேற்படி பின்னணி அறிவிருந்தால் இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.

//நரோடியவாதம் ஓரளவுக்கு ஒருங்கிணைப்பான, முரணில்லாத தத்துவமாகும். அது ரஷ்யாவில் முதலாளித்துவம் ஆதிக்கம் செலுத்தும் என்பதை மறுத்தது. மொத்த பாட்டாளி வர்க்கத்தின் முன்வரிசைப் போர்வீரர்களாக தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிலாளர்கள் வகிக்கும் பாத்திரத்தை அது மறுத்தது. அரசியல் புரட்சி மற்றும் முதலாளித்துவ  அரசியல் சுதந்திரம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அது மறுத்தது. விவசாயக் கம்யூன், அதன் வேளாண்மையின் அற்பமான வடிவங்களிலிருந்து உடனடியான சோஷலிஸ்ட் புரட்சி ஏற்பட வேண்டும் என்று அது போதித்தது.// - லெனின், (குட்டி முதலாளித்துவ சோஷலிசமும் பாட்டாளி வர்க்க சோஷலிசமும் நூலில் இருந்து.)

இன்றைக்கும் மேற்கு ஐரோப்பாவில் வாழும் அனார்க்கிஸ்டுகள் அப்படித் தான் இருக்கிறார்கள். அதாவது, முதலாளித்துவ கட்டமைப்பை முழுவதுமாக நிராகரிக்கிறார்கள். சோஷலிச அரசு என்ற அமைப்பையும் எதிர்க்கிறார்கள். நேரடியாக கம்யூனிச காலகட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள். மக்கள் எல்லோரும் சிறு சிறு குழுக்களாக, விவசாயக் கம்யூன் அமைப்பில் சேர்ந்திருக்க வேண்டும். அன்றைய ரஷ்யாவில் விவசாயப் பொருளாதாரம் முக்கியமாக இருந்தது. அதனால், நரோட்னிக்குகள், அதற்குப் பின்னர் சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள் கட்சியும், விவசாயிகள் மத்தியில் ஆதரவை தேடிக் கொண்டதில் வியப்பில்லை.

இருப்பினும், மேற்கு ஐரோப்பாவில் உள்ள அனார்க்கிஸ்டுகள் தொழிலாளர் மத்தியில் வேலை செய்வதை, நாம் இந்த இடத்தில் மறுக்க முடியாது. ரஷ்யாவிலும் அந்த வேறுபாடு இறந்தது. ரஷ்யப் புரட்சியின் தொடக்கக் காலத்தில், சில சோவியத்துகள் அனார்க்கிச தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துள்ளன. லெனினின் இந்த நூலானது, அனார்க்கிஸ்டுகள் என்று பொத்தாம்பொதுவாக குறிப்பிடவில்லை. நரோட்னிக் அமைப்பு, மற்றும் சோஷலிஸ்ட் புரட்சியாளர் கட்சியை மட்டும் தனியாக விமர்சிக்கிறது.

அது சரி. லெனின் தலைமையிலான மார்க்சிஸ்டுகளுக்கும், நரோட்னிகளுக்கும் (அல்லது சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள்)என்ன வித்தியாசம்? 
//நரோட்னிக்குகள் விவசாயியை ரஷ்யாவின் எதிர்காலத்தை படைக்கப் போகும் மனிதனாக கருதினார்கள்.... மார்க்சியவாதிகள் தொழிலாளியை ரஷ்யாவின் எதிர்காலத்தை படைக்கப் போகும் மனிதனாக கருதினார்கள்....// - லெனின் (மேற்படி நூலில்)

அதாவது, தொழிலாளர் வர்க்கமே புரட்சியின் முன்னிலை போர்வீரர்கள் என்பது மார்க்சியம். கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில், ரஷ்யா ஒரு பின்தங்கிய விவசாய நாடாக இருந்தது. மேற்குடன் ஒப்பிடும் பொழுது, அங்கு முதலாளித்துவத்தின் வளர்ச்சி குறைவாக இருந்தது. அதனால், இப்போதைக்கு அந்த நாட்டில் புரட்சி நடக்காது என்று கார்ல் மார்க்ஸ் சொல்லி இருக்கிறார். ரஷ்யாவில் மார்க்சியத்தை விரிவு படுத்திய லெனின், விவசாயிகளின் போராட்டத்தையும் அத்துடன் இணைத்திருந்தார். (பிற்காலத்தில் லெனினிசம் என்ற கோட்பாடு உருவாக அதுவும் ஒரு காரணம்.) அது அனேகமாக லெனின் நரோட்னிக்குகளிடம் இருந்து கற்றுக் கொண்ட பாடமாக இருக்கலாம் என்று மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

விவசாயிகளின் பிரச்சினைக்கு தாம் முக்கியத்துவம் கொடுப்பதை, லெனினும் இந்த நூலில் உறுதிப் படுத்துகின்றார். மார்க்சிய நூல்களை ரஷ்யாவுக்கு அறிமுகப் படுத்திய பிலேக்கனோவ் (பிற்காலத்தில் லெனினுக்கு எதிராக மென்ஷெவிக் சமூக ஜனநாயக கட்சியில் இருந்தார்.) காலத்திய பிரசுரம் ஒன்றை லெனின் மேற்கோள் காட்டுகிறார். 

//பழைய முரணில்லாத நரோடியவாதக் கருத்துக்களை எடுத்துக் கூறி, நமக்கிடையே உள்ள உண்மையான வேறுபாடு, விவசாயப் பிரச்சினையை கணக்கிலெடுத்துக் கொள்வதில் விருப்பம் காட்டுவதிலோ, அல்லது விருப்பம் காட்டாதிருப்பதிலோ, அதை அங்கீகரிப்பதிலோ அல்லது அங்கீகரிக்கத் தவறுவதிலோ அடங்கியிருக்கவில்லை. ரஷ்யாவில் இன்றைய விவசாய இயக்கம் மற்றும் இன்றைய விவசாயப் பிரச்சினை பற்றிய வேறுபட்ட மதிப்பீடுகளில் தான் இருக்கிறது.... பிளேஹானவ் எழுதிய நமது வேறுபாடுகள் என்ற பிரசுரத்தில் இருந்து தொடங்கி ருஷ்ய மார்க்சியவாதிகளின் முக்கியமான எழுத்துக்கள் அனைத்துமே பிரதானமான ருஷ்ய விவசாயப் பிரச்சினையில் நரோடியவாதக் கருத்துக்களின் தவறுகளை விளக்குவதற்காகவே எழுதப் பட்டிருக்கின்றன.// - லெனின் (மேற்படி நூலில்)

அன்றிருந்த சோஷலிஸ்ட் புரட்சியாளர் கட்சி, விவசாய இயக்கத்தை முன்னெடுப்பதால் தாம் மட்டுமே உண்மையான சோஷலிஸ்டுகள் என்று சொல்லிக் கொண்டனர். ஆனால், லெனின் அது சோஷலிஸ்ட் இயக்கம் அல்ல, மாறாக ஒரு "ஜனநாயக - முதலாளித்துவ இயக்கம்" என்கிறார். அதற்கான காரணங்களை அடுக்குகிறார். 
//இன்றைய விவசாய இயக்கத்தை ஜனநாயக முதலாளித்துவ இயக்கம் என்று ஏன் சொல்கிறோம்? ஏனென்றால் அதிகார வர்க்கம் மற்றும் நிலப்பிரபுக்களின் ஆட்சியை ஒழித்த பிறகு அது சமூகத்தில் ஜனநாயக அமைப்பை ஏற்படுத்தும். ஆனால் அந்த ஜனநாயக சமூகத்தின் முதலாளித்துவ அடிப்படையை மாற்றாது. மூலதனத்தின் ஆதிக்கத்தை ஒழிக்காது.// - லெனின் (மேற்படி நூலில்)

இந்தக் கருதுகோள் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கும் முக்கியமானது. அவை இன்றைக்கும் விவசாய பொருளாதாரத்தை முக்கியமாகக் கொண்ட நாடுகளாக உள்ளன. பழைய நிலப்பிரபுத்துவத்தின் எச்சங்கள் இன்னமும் அங்கே காணப்படுகின்றன. அதே நேரம், பணக்கார விவசாயிகள் அல்லது விவசாய முதலாளிகள் என்ற புதிய வர்க்கமும் உருவாகி உள்ளது. அது நிலப்பிரபுத்துவத்தை அல்ல, முதலாளித்துவ பொருள் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டது. மேலும் பழைய நிலப்பிரபுக்களுக்கும், புதிய பணக்கார விவசாயிகளுக்கும் சம்பந்தம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

//ருஷ்யாவின் இன்றைய நிலப்பிரபுத்துவப் பொருளாதாரம் முதலாளித்துவம், பண்ணையடிமை முறை ஆகிய இரண்டின் கூறுகளையும் இணைத்துக் கொண்டிருக்கிறது.// - லெனின்

லெனினின் கூற்றை மெய்ப்பிப்பது போன்று, ஈழத்தமிழ் விவசாயிகளும் அவர்களது பிள்ளைகளும் இன்று தீவிர முதலாளித்துவ ஆதரவு சக்திகளாக வளர்ந்துள்ளதை கண்கூடாகக் காணலாம். எழுபதுகளில் கூட, நிலப்பிரபுத்துவத்தின் எச்சங்களை தன்னகத்தே கொண்டிருந்த யாழ்ப்பாண விவசாய சமூகத்தில், லெனின் கூறுவது போன்ற விவசாய - முதலாளிகள் பெருமளவில் தோன்றினார்கள். முதலாளித்துவ பொருளாதாரத்தால் நன்மை அடைந்த அவர்களது பிள்ளைகள், வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொண்ட பின்னர், கம்யூனிசத்தை வெறுப்பவர்களாக, இடதுசாரி எதிர்ப்பாளர்களாக காட்சியளிக்கின்றனர். இதனை நான் எனது சொந்த அனுபவத்தில் பல தடவைகள் கண்டிருக்கிறேன். கம்யூனிசத்தை எதிர்த்து என்னுடன் வாதம் செய்தவர்களின் சமூகப் பின்னணி, எப்போதும் விவசாய - முதலாளி வர்க்க குடும்பமாக இருப்பது ஒரு தற்செயல் அல்ல.

இந்தியா, மேற்கு வங்காளத்தில் நடந்த நக்சல்பாரி கிராம விவசாயிகளின் எழுச்சி பற்றி பலரும் அறிந்திருப்பார்கள். அங்கிருந்த நிலவுடையாளர்கள், பண்ணையார்களுக்கு எதிராக விவசாயிகள் கிளர்ந்தெழுந்து அவர்களை விரட்டி அடித்தார்கள். அந்த எழுச்சியானது பிற்காலத்தில் நக்சலைட் இயக்கம் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது. 

நாற்பது வருடங்களுக்குப் பின்னர் அங்கு சென்ற ஊடகவியலாளர் ஒருவர், நக்சல்பாரி கிராம மக்கள் இன்று முதலலாளித்துவ நுகர்பொருள் கலாச்சாரத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள் என்று எழுதி இருந்தார். நக்சல்பாரி இயக்கம் வெறுமனே விவசாயிகள் இயக்கம் அல்ல என்ற உண்மையை பலர் கவனிக்கத் தவறி விடுகின்றனர். நக்சலைட்டுகள் இன்று, இந்திய முதலாளித்துவத்திற்கு எதிராக, விவசாயிகளுடன், கிராமப் புற பாட்டாளி வர்க்கத்தையும் அணிதிரட்டி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

//அதிகார வர்க்கத்தினருக்கும் நிலப்பிரபுக்களுக்கும் எதிரான போராட்டத்தை, எல்லா விவசாயிகளையும் வசதியுள்ளவர்கள் மற்றும் நடுத்தர விவசாயிகளையும் கூடச் சேர்ந்து நடத்த முடியும், அவ்வாறு தான் நடத்த வேண்டும். மறு பக்கத்தில் முதலாளி வர்க்கத்திற்கு எதிரான, ஆகவே வசதியுள்ள விவசாயிகளுக்கும் எதிரான போராட்டத்தைக் கிராமப்புற பாட்டாளி வர்க்கத்தின் துணையோடு மட்டுமே சரிவர நடத்த முடியும்.// - லெனின் (மேற்படி நூலில்)

ஆகவே, விவசாயிகளின் போராட்டத்தையும், பாட்டாளிகளின் போராட்டத்தையும் ஒன்றிணைக்க வேண்டிய அவசியத்தை லெனின் வலியுறுத்துகிறார். தொழிற்சாலைகளில் வேலை செய்யும் நகர்ப்புற பாட்டாளிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, விவசாய பண்ணைகளில் வேலை செய்யும் கிராமப்புற பாட்டாளிகளுக்கும் கொடுக்க வேண்டும். அவர்களை ஒரே வர்க்கமாக நிறுவன மயப் படுத்த வேண்டும்.

நிலப்பிரபுக்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் ஒரு புரட்சிகரமான போராட்டம் தான். ஆனால், அது ஒரு ஜனநாயகப் (வெகுஜன) போராட்டம் மட்டுமே. அதுவே ஒரு வர்க்கப் போராட்டம் ஆகி விடாது. 


மார்க்சிய நூல்கள் பற்றிய அறிமுகக் கட்டுரைகள்: 

Tuesday, January 03, 2017

டார்வினின் பரிணாமக் கோட்பாடு பற்றிய மார்க்சிய கண்ணோட்டம்


மார்க்சியம் என்பது ஒரு விஞ்ஞானம். அது வழமையாக பாடசாலைகளில் கற்பிக்கப் படும் அதே விஞ்ஞான பாடம் என்ற உண்மையை பலர் உணர்வதில்லை. பிரிட்டனின் உயிரியல் விஞ்ஞானி சார்ல்ஸ்   டார்வின் எழுதிய மனிதனின்  பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு, எவ்வாறு மார்க்சியத்தின் அடிப்படைகளில் ஒன்றாக   அமைந்தது என்பதை இந்தக் கட்டுரையில்  பார்க்கலாம்.

குறைந்தது பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள், குரங்கில் இருந்து மனிதன் தோன்றியது பற்றிய கூர்ப்புக் கொள்கையை அறிவியல் பாடத்தில் கற்றிருப்பார்கள். மார்க்சிய ஆசான்களில் ஒருவரான பிரெடெரிக் எங்கெல்ஸ், பரிணாமக் கொள்கை தொடர்பாக மேலும் ஆய்வு செய்து, மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைக் காலத்தில், உழைப்பு வகித்த பாத்திரம் விடுபட்டிருப்பதைக் கண்டறிந்தார்.

பிரெடெரிக் எங்கெல்ஸ் அது பற்றிய நூலொன்றை எழுத விரும்பியிருந்தார். ஆயினும் அந்த முயற்சி கைகூடவில்லை. அதற்கென எழுதிய முன்னுரையை பின்னர் தனியாக வெளியிட்டார். அதுவே "மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்" என்ற சிறு பிரசுரம் ஆகும். மார்க்சியம் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் ஆரம்ப கட்ட மாணவர்களுக்கு மிகவும் பிரயோசனமானது. இலகுவான மொழிநடையில் எழுதப் பட்டுள்ள மிகச் சிறிய நூல்.

1859 ம் ஆண்டு, பிரிட்டிஷ் உயிரியல் விஞ்ஞானி சார்ல்ஸ் டார்வின் "இயற்கைத் தேர்வின் மூலம் வகையினங்களின் தோற்றம்" என்ற நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூலை வாசித்த எங்கெல்ஸ், தனது நண்பன் கார்ல் மார்க்சுக்கு எழுதிய கடிதத்தில் "இந்நூல் நமது கண்ணோட்டங்களுக்கு இயற்கை வரலாற்று அடிப்படையை தரும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

டார்வின் எழுதிய இன்னொரு நூலான "மனிதனின் தோற்றமும் பால் தேர்வும்" என்ற நூல், 1871 ம் ஆண்டு லண்டனில் வெளியானது. அது அன்றைய பழமைவாத பிரிட்டனில் அதிர்வலைகளை உண்டாக்கி இருந்தது. மேட்டுக்குடியினரும், கத்தோலிக்க திருச்சபையினரும் காழ்ப்புணர்வுடன் கடுமையான விமர்சனங்களை வைத்தனர். "மனித இனம் இயற்கையாக தோன்றியது. அது கடவுளால் படைக்கப் படவில்லை." என்பதை டார்வினின் விஞ்ஞான நூல்கள் ஆதாரத்துடன் நிறுவி இருந்தன. அது தான் கிறிஸ்தவ திருச் சபையினரின் எதிர்ப்புக்கு காரணம். மிக சமீபத்தில், 2016 ம் ஆண்டு தான், வத்திக்கான் திருச்சபை டார்வினின் பரிணாமக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்திருந்தது.

காலநிலையில் பெரிய மாற்றம் இல்லாத, வெப்ப வலையத்திற்குள் அடங்கிய இந்து சமுத்திர பிராந்தியம் ஒன்றில் மனிதக் குரங்குகள் மனிதனாக மாறிய பரிணாம வளர்ச்சி நிகழ்ந்திருக்கலாம். உரோமங்களால் மூடப்பட்ட, மரங்களின் மீது கூட்டங்களாக வாழ்ந்த நமது மூதாதையர் பற்றிய டார்வினின் வர்ணனை அவ்வாறு ஆரம்பிக்கிறது. இந்த இடத்தில் தனது அவதானிப்பை செலுத்திய எங்கெல்ஸ் "மரமேறுதல் என்பது கை,கால்களுக்கு வித்தியாசப் பட்ட தொழில்களை பகிர்ந்து விடுகிறது..." என்று குறிப்பிடுகின்றார். மேலும், அந்த மனிதக் குரங்குகள் தட்டையான நிலத்தில் இடம்பெயர்ந்து செல்லும் பொழுது படிப்படியாக கைகளை பயன்படுத்தும் பழக்கத்தை கைவிட்டு நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தன.

//உரோமம் படர்ந்த நமது மூதாதையரிடையே நிமிர்ந்த நடை என்பது முதலில் ஒரு விதியாகவும் பின்னர் கால அடைவில் அவசியமாகவும் ஆயிற்று. இதற்குள்ளாக, கைகளுக்கு பல்வேறு வகையான இதர வேலைகளின் பொறுப்பும் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது புரியும்.// - எங்கெல்ஸ், "மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்" நூலில்.

"கை உழைப்பிற்கான உறுப்பு என்பது மட்டுமல்ல, உழைப்பின் விளைபயனும் அதுவே." என்கிறார் எங்கெல்ஸ். காட்டுமிராண்டி கால ஆதி மனிதன் கூட கற்களையும், தடிகளையும் ஆயுதமாக பயன்படுத்தத் தெரிந்திருந்தான். கை சுதந்திரமடைந்ததன் மூலம் அது மேலும் மேலும் நுண் திறனை பெற்றது. அதற்கான தசைகளும், எலும்புகளும் பரிணாம வளர்ச்சி கண்டன.

இந்த மாற்றங்கள் பல இலட்சம் வருடங்களாக நடந்திருக்கலாம். மரமேறிகளான குரங்குகளின் கூட்டத்திலிருந்து மனித சமூகம் தோன்றுவதற்குள் இலட்சக் கணக்கான ஆண்டுகள் கடந்திருந்தன. முதலில் உழைப்பு, அதன் பிறகு அத்துடன் சேர்ந்த பேச்சு,முக்கியமாக இரண்டு கைகளின் செயற்பாடுகள் காரணமாக, மனிதக் குரங்கின் மூளை மனிதனின் மூளையாக மாறியது.

மிருகங்கள் தமது சுற்றாடலில் கிடைக்கும் உணவை மட்டும் தேடிக் கொள்வதுடன் நில்லாது, அவற்றை உணவை விரயம் செய்கின்றன. உதாரணத்திற்கு, பெண் மானை பிடித்து உண்ணும் ஓநாய், அதை விட்டு வைத்தால் அதன் குட்டிகள் தனக்கு உணவாகும் என்று நினைப்பதில்லை. புற்கள் முளைக்கும் போதே சாப்பிட்டு விடும் வெள்ளாடுகள், அந்தப் பிரதேசத்தை பசுமையின்றி வெறிச்சோட வைக்கின்றன. மிருகங்களின் இந்த "சூறையாடும் பொருளாதாரம்" காரணமாக பல இனங்கள் அழிந்து விட்டன.

மனிதக் குரங்கில் இருந்து மனிதனாக மாறிய எமது மூதாதையர், சூறையாடும் பொருளாதாரம் காரணமாக உணவு தேடி இடம்பெயர்ந்து சென்றதுடன், உணவுக்கான செடிகளை விட்டு வைக்கவும் அறிந்து கொண்டனர். ஆனால், இவை அத்தனையும் நடந்திருந்தும் அது உழைப்பு என்ற சொல்லுக்கான பொருளைப் பெற்று விடவில்லை. ஆதி மனிதன் தனக்குத் தேவையான உழைப்புக் கருவிகளை செய்யத் தொடங்கியதில் இருந்தே உழைப்பு ஆரம்பமாகின்றது.

மனிதன் சில கருவிகளைக் கொண்டு வேட்டையாடவும், மீன் பிடிக்கவும் அறிந்து கொண்டான். அதாவது, வேட்டையாடுதல், மீன்பிடித்தல் என்றால், மனிதன் தாவர உணவை உட்கொள்வதில் இருந்து விலகி இறைச்சியை உண்ணத் தொடங்கி இருந்தான் என்று பொருளாகும். இறைச்சி உணவு முக்கியமான இரண்டு புதிய முன்னேற்றங்களுக்கு இட்டுச் சென்றது. அதனால் தான் மனிதன் நெருப்பை பயன்படுத்தவும், மிருகங்களை பழக்கவும் கற்றுக் கொண்டான். மேலும் ஊட்டச் சத்து மிக்க பாலும் மனிதனின் முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தது.

ஒரு மிருகம் தனது சுற்றாடலில் உள்ள இயற்கையை பயன்படுத்த மட்டுமே செய்கின்றது. ஆனால், மனிதன் அதற்கு எஜமான் ஆகிறான். இயற்கையை தனது குறிக்கோள்களுக்காக ஊழியம் செய்ய வைக்கிறான். சாராம்சத்தில், இதர மிருகங்களுக்கும், மனிதனுக்கும் இடையிலான வித்தியாசம் இதுவே. இந்த வித்தியாசத்தை நிகழ்த்துவது உழைப்பு என்பதை மீண்டும் ஒரு தடவை குறிப்பிட வேண்டும்.

இயற்கையை மனிதன் வெற்றி கொண்டாலும், ஒரு கட்டத்தில் இயற்கை மனிதனை பழிவாங்கி விடுகின்றது. காடுகளை அழிக்கும் மனிதன் அதனால் ஏற்படும் வரட்சி போன்ற தீய விளைவுகளை எண்ணிப் பார்ப்பதில்லை. கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த பின்னர் தான், உருளைக் கிழங்கு ஐரோப்பாவுக்கு அறிமுகமாகியது. அன்றில் இருந்து உருளைக்கிழங்கு ஐரோப்பியரின் முக்கியமான உணவுப் பொருளாகியது.

ஐரோப்பாவில் உருளைக் கிழங்கை பரவ வைத்தவர்கள் கண்டமாலை என்ற நோய் பரவவும் காரணமாக இருந்தனர். அயர்லாந்து மக்கள் உருளைக்கிழங்கை மட்டுமே அன்றாட உணவாக நம்பி இருந்தனர். அந்த நாட்டில் பஞ்சம் ஏற்படுவதற்கு உருளைக்கிழங்கு பயிரில் ஏற்பட்ட தொற்றுநோய் காரணமாக இருந்தது. அதன் விளைவாக, பத்து இலட்சம் பேரை புதைகுழிக்கு அனுப்பவும், இருபது இலட்சம் பேரை அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து செல்லவும் வைத்தது.

"இயற்கையில் எதுவும் தனிமைப் பட்ட நிலையில் நிகழ்வதில்லை. ஒவ்வொன்றும் மற்ற ஒவ்வொன்றையும் பாதிக்கிறது, பாதிக்கப் படவும் செய்கிறது." இவ்வாறு எங்கெல்ஸ் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் எழுதி இருக்கிறார். (மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம், பக்கம் 16) ஆனால், இன்றும் அதன் தாக்கம் பல இடங்களில் எதிரொலிக்கிறது. ஆப்பிரிக்காவில் வரட்சி நிலவினால், இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் வெள்ளம் வரக் காரணமாக அமைகின்றது.

இன்று உலக நாடுகள் ஒன்று கூடி சுற்றுச் சூழல் மாசடைதல் பற்றி விவாதிக்கின்றன. புவி வெப்பமடைதல், கரியமில வாயு (CO2) குறைப்பு பற்றி உச்சி மகாநாடுகள் நடக்கின்றன. இதையெல்லாம் நேரில் கண்ட பின்னரும், சில அரைவேக்காட்டு "அறிவுஜீவிகள்" மார்க்சிய "நமது காலத்திற்கு ஒத்து வராத வறட்டுவாதம்" என்று நிராகரிப்பதானது, அவர்களது அறியாமையை காட்டுகின்றது. அவர்கள் தமது வாழ்க்கையில் எதையும் கற்றிருக்கவில்லை, இனியும் படிக்கப் போவதுமில்லை.


எங்கெல்ஸ் எழுதிய பிற நூல்கள் பற்றிய அறிமுகம்:

Monday, November 21, 2016

மார்க்சியம் என்றால் என்ன?


மார்க்சியம் என்றால் என்ன?

19 ம் நூற்றாண்டில் வாழ்ந்த கார்ல் மார்க்ஸ், தனது நண்பர் பிரெடெரிக் எங்கெல்ஸ் உடன் சேர்ந்து, உலகத்தையும், மனித சமூகத்தையும் ஆய்வு செய்து எழுதிய கோட்பாடுகள் மார்க்சியம் என்று அழைக்கப் படுகின்றன. மனித இனமானது மாற்றங்களை கண்டு வருவதையும், அந்த மாற்றங்கள் சில விதிகளுக்கு ஏற்றவாறு நடப்பதையும் கண்டறிந்தனர்.

சமூக விஞ்ஞான பாரவையுடன் மானிடவியல், மதங்கள், வரலாறு ஆகிய அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். இதன் காரணமாக மார்க்சியமும் ஒரு விஞ்ஞானம் ஆகும். அது ஒரு சித்தாந்தம் அல்ல. அதாவது முடிந்த முடிவு அல்ல.

விஞ்ஞானம் என்பது முழுமை பெறாத கோட்பாடுகளை கொண்டது. அதே மாதிரி மார்க்சியமும் முழுமை பெற்றதாக கருதப் பட முடியாதது. பிற்காலத்தில் வந்த அறிஞர்கள் தமது அனுபவங்களையும், ஆய்வுகளையும் சேர்த்துக் கொண்டனர். உதாரணத்திற்கு, லெனின், மாவோ ஆகியோர், மார்க்ஸ் சொல்லியிராத பல விடயங்களையும் இணைத்துக் கொண்டனர்.

மார்க்ஸ் தான் வாழ்ந்த காலத்தில் ஆதிக்கம் செலுத்திய, முதலாளித்துவத்தை பற்றி தீவிரமாக ஆய்வு செய்திருந்தார். இலாபம், கூலி போன்ற பல விடயங்களை வெறுமனே பொருளியல் ரீதியாக பார்க்காமல், அதில் வரலாறு, சமுதாயம் என்பன ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதை ஆராய்ந்தார். அதன் விளைவாக தொழில் வழங்குனர்களும், தொழிலாளர்களும் பற்றிய தெளிவு கிடைத்தது.

மார்க்சியம் என்பது எந்த வித அங்கீகாரத்தையும், மதம் போன்றதொரு நம்பிக்கையையும் கோரவில்லை. அது உண்மைகளை நிறுவுவதை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞானம் ஆகும். இன்றைக்கும் மனித இனத்தை பாதிக்கும் தீங்குகள், அவலங்களில் இருந்து மனிதர்களை விடுவித்து, சமுதாயத்தின் நாகரிக வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதை நோக்கமாகக் கொண்டது.

மன்னராட்சிக்கு எதிரான முதலாளிய வர்க்கத்தின் எழுச்சி

உலக வரலாறு முழுவதும் யுத்தங்கள் நடந்துள்ளன. அவற்றைப் பற்றிப் பாடிய புலவர்கள், மன்னர்களின் மகிமையையும், தளபதிகளின் வீரத்தையும் புகழ்ந்து எழுதியுள்ளனர். இவ்வாறான வரலாற்றுப் பார்வை குறித்து மார்க்சியம் திருப்திப் படவில்லை.

மார்க்சியம் மக்களின் கோணத்தில் இருந்து வரலாற்றைப் பார்க்கிறது. உண்மையான வரலாறு தனி நபர்களை விட்டு, மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்ட மன்னர்கள் போன்ற தனிநபர்களும், ஏதோ ஒரு வகையில் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலித்துள்ளனர்.

ஆகையினால், மார்க்சியமானது மனித வரலாறு நெடுகிலும் காணப்படும் இயற்கையின் விதிகளை ஆராய்கின்றது. இந்த நோக்கிற்காக அது தனிநபர்களை தவிர்த்து மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. அந்த வகையில் மக்களின் குறிப்பிட்ட பிரிவினர் வரலாற்றின் உந்துசக்தியாக இருந்ததை கண்டறிகின்றது. அத்தகைய மக்கட் பிரிவுகள் வர்க்கங்கள் என்று அழைக்கப் படுகின்றன.

வர்க்கம் என்றால் என்ன? ஒரே மாதிரியான வாழ்க்கைத்தரம் கொண்ட மக்கட் குழுவினர் என்பது சாமானியர்களின் புரிதல். நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில், ஒரு நாட்டின் நிலம் முழுவதும் மன்னர் அல்லது நிலப்பிரபுக்களுக்கு சொந்தமாக இருந்தது. அந்த நிலங்களை உழுது பயிரிட்ட பண்ணையடிமைகள் செலுத்திய கப்பத்தில் வாழ்ந்து வந்தனர்.

மேலதிக வளங்கள், செல்வத்தை பெருக்கிக் கொள்ளும் நோக்கில் மன்னர்கள் பிற நாடுகள் மீது படையெடுத்து நிலங்களை விஸ்தரித்தார்கள். அதே நேரம் நிலங்களில் வேலை செய்த பண்ணையடிமைகள், விளைச்சலில் திறை செலுத்துவது போக, தமக்கான பங்கை அதிகரிப்பது பற்றிக் கவலைப் பட்டனர். இத்தகைய சமுதாயத்தில், நிலப்பிரபுக்கள் (மன்னர் உட்பட) ஒரு வர்க்கமாகவும், பண்ணையடிமைகள் இன்னொரு வர்க்கமாகவும் காணப்பட்டனர். அவர்களது நலன் சார்ந்து வர்க்க முரண்பாடும் வளர்ந்து வந்தது.

நிலப்பிரபுக்களுக்கும், பண்ணையடிமைகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் சிலநேரம் மோதல்களாக வெடித்துள்ளன. தனிநபர்கள் மட்டுமல்ல, குழுக்களாகவும் கலகம் செய்தனர். தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக, பெருமளவில் நடந்த பண்ணையடிமைகளின் எழுச்சிகள் வரலாற்றில் பதிவாகியுள்ளன. உதாரணத்திற்கு, இங்கிலாந்தில், 1381 ம் ஆண்டு, Jon Ball, Wat Tyler ஆகிய இருவரின் தலைமையில் ஒரு கிளர்ச்சி நடந்தது. இது பற்றி H. Fagan எழுதிய Nine Days that Shook England எனும் நூலில் வாசிக்கலாம்.

நிலவுடைமையாளர்களின் நிலங்களில் வேலை செய்தவர்களில் தொழில்நுட்ப அறிவு பெற்ற கைவினைஞர்களும் இருந்தனர். அதே நேரம் வியாபாரத்தில் ஈடுபட்டோரும் இருந்தனர். தூர தேசத்திற்கு சென்று பொருட்களை விற்று வந்த வியாபாரிகளுக்கு, பண்ணையடிமைகள் மேலதிகமாக உற்பத்தி செய்யும் விளைபொருட்கள் அதிகமாக தேவைப்பட்டன. அந்த வகையில் சந்தையில் விற்பதை நோக்கமாகக் கொண்ட தொழில் பட்டறைகள் தொடங்கப் பட்டன.

சிற்பக் கலைஞர்கள், தச்சர்கள், கொல்லர்கள் போன்ற தொழிற்துறை நிபுணர்கள் பலர், ஏற்கனவே விடுதலைப் பத்திரம் வாங்கிக் கொண்ட பண்ணையடிமைகள் ஆவர். காலவோட்டத்தில் நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பினுள் சுதந்திரமாக இயங்கிய கைவினைஞர்களின் எண்ணிக்கை பெருகியது.

மத்திய கால இங்கிலாந்தில் "ஜெர்னிமன்" (Journeyman) என்ற பிரிவினர் இருந்தனர். அவர்கள் நாள் சம்பளத்திற்கு வேலை செய்யும் தொழில் பயிலுனர்கள். உண்மையில் அது Journee என்ற பிரெஞ்சு சொல்லின் திரிபடைந்த ஆங்கில வடிவம்.

ஜெர்னிமன் என்பதை தமிழில் நாட்கூலிகள் என்று சொல்லலாம். ஜெர்னிமன் கைவினைஞர்களில் பாண்டித்தியம் பெற்ற திறமைசாலிகள் தொழில் வழங்குனர்கள் ஆனார்கள். அவர்களுக்கு கீழே இருந்த தொழில் பெறுநர்கள் சம்பளத்திற்கு வேலை செய்தனர்.

இவ்வாறு தான் நவீன கால முதலாளி, தொழிலாளிகளின் முன்னோடிகள் உருவானார்கள். 16 ம் நூற்றாண்டுக்குப் பிறகு உருவான தொழிற்துறை முதலாளிகளின் வர்க்கமானது, தம்முடன் நிழல் போல தொடர்ந்த உழைக்கும் வர்க்கத்தையும் கொண்டிருந்தது.

நகரங்களில் மட்டுமல்லாது, கிராமங்களிலும் உருவான முதலாளிய வர்க்கமானது, வந்தவுடனே மன்னராட்சியை ஒழித்து விடவில்லை. அதற்கு மாறாக, மன்னர்களின் ஆளுகையின் கீழ் முதலாளித்துவம் மன்னர்களுக்கு சேவை செய்யும் தொழிற்துறையாக இயங்கியது.

விடுதலைப் பத்திரம் வாங்கிய பண்ணையடிமைகளின் வம்சாவழியினர் கைவினைஞர்களாகி பணக்காரர்களாக மாறியிருந்தனர். இருப்பினும் தாங்கள் உண்மையிலேயே சுதந்திரமானவர்கள் அல்ல என்பதை உணர்ந்து கொண்டனர். அவர்களது வர்த்தக முயற்சிகளுக்கு பல்வேறு தடைகள் போடப் பட்டிருந்தன. வர்த்தகத்தை விரும்பிய வடிவில் வளர்க்க முடியவில்லை. மேலும் அவர்கள் மீது பல வகையான வரிகள் சுமத்தப் பட்டன.

நாடு முழுவதும் மன்னரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த படியால், அவர் சொன்னதே சட்டமாக இருந்தது. இராணுவம், நீதிபதிகள், சிறைச்சாலைகள் எல்லாம் மன்னரின் கீழ் இயங்கின. ஆதி கால முதலாளிய வர்க்கம், நிலப்பிரபுத்துவ வர்க்கத்திற்கு எதிராக போராட வேண்டியிருந்தது. இந்தப் போராட்டமானது பல நூறாண்டுகளாக தொடர்ந்தது.

பிரித்தானியாவில் இருந்த முதலாளிய வர்க்கம் ஆயுதமேந்திய புரட்சி மூலம் மன்னராட்சியை தூக்கியெறிந்தது. 17 ம் நூற்றாண்டில் குரொம்வெல் தலைமையில் அந்தப் புரட்சி நடந்தது.

குரொம்வெல் ஒரு கிறிஸ்தவ மத அடிப்படைவாதியாக இருந்த படியால், அன்று நடந்த போரானது புரட்டஸ்தாந்து பிரிவினரின் எழுச்சியாக வரலாற்றில் பதிவு செய்யப் பட்டது. கத்தோலிக்க மன்னருக்கு எதிராக புரட்டஸ்தாந்து படையினர் தொடுத்த போராக குறிப்பிடப் படுகின்றது.

இருப்பினும், அன்றைய பிரித்தானியாவில் முதலாளிய வர்க்கம் கடும் வரிச் சுமைகளால் பாதிக்கப் பட்டிருந்தது. 17ம் நூற்றாண்டில் சுமத்தப்பட்ட வரிகளின் அளவு பல மடங்கு அதிகரித்திருந்தது. வர்த்தகம் விரிவடைய முடியாதவாறு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன. இந்தக் கட்டுப்பாடுகளை நீக்குமாறு முதலாளிகள் அரசனிடம் தயவாக கேட்டுக் கொண்டனர். மனுக்களை அனுப்பினார்கள். வரி கட்ட மாட்டோம் என்று மிரட்டினார்கள்.

முதலாளிகளின் கோரிக்கைகள் யாவும் மன்னரால் உதாசீனம் செய்யப்பட்டன. பலமான அரசு இயந்திரத்தை எதிர்த்து சமாதானமாக போராட முடியாது என்பதை அறிந்து கொண்டு, மக்களை அணிதிரட்டி ஆயுதமேந்திய புரட்சியை நடத்தினார்கள்.

கண்மூடித்தனமான வரிகள் மக்களையும் கிளர்ந்தெழச் செய்திருந்தன. அன்று நடந்த ஆயுதமேந்திய புரட்சியின் பின்னர் தான், முதலாளிய வர்க்கம் ஆட்சியுரிமையை கைப்பற்றியது. அதன் பிரகாரம் தனது நலன்களுக்கேற்ற சட்டங்களை பிறப்பித்தது.

பிரித்தானியாவில், மீண்டும் மன்னராட்சி ஏற்பட்டு புரட்சியாளர்கள் சிறைப்பிடிக்கப் பட்டிருந்தனர். இருப்பினும், அந்த நாட்டில் 1689 ம் ஆண்டு நடந்த புரட்சியின் பின்னர் முதலாளிய வர்க்கம் ஆட்சியதிகாரத்தில் பங்கெடுத்துக் கொண்டது.

பிரான்ஸ் நாட்டில், நூறு வருடங்களுக்குப் பின்னர், அதாவது 1789 ம் ஆண்டில் தான் முதலாளிய வர்க்கம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியது. இந்தப் புரட்சிகளின் விளைவாக பழைய நிலப்பிரபுத்துவ சமூகக் கட்டுமானம் பெருமளவில் அழித்தொழிக்கப் பட்டது. இருப்பினும் புரட்சியில் தப்பிப் பிழைத்த நிலப்பிரபுக்கள், முதலாளித்துவ நிலவுடைமையாளர்களாக மாற்றமடைந்தனர்.

பொருளியல் சார்ந்த உறவுமுறை மனிதர்களின் கருத்துக்களை தீர்மானிக்கிறது

வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டமே மனித குலத்தின் நாகரிக வளர்ச்சிக்கு உந்துசக்தியாக உள்ளது என்பது வரலாறு பற்றிய மார்க்சிய அணுகுமுறை. விஞ்ஞானத்தின் வளர்ச்சியுடன் வர்க்கப் போராட்டம் சமாந்தரமாக சென்று கொண்டிருக்கும். வாழ்க்கைக்கு அவசியமானவற்றை உற்பத்தி செய்யும் மனிதனின் வல்லமையும், இயற்கையின் மீதான் ஆளுமையும் கூடவே இருக்கும்.

அது மட்டுமல்லாது, மிகப் பெரும் சக்தி படைத்த இயந்திரங்களின் உருவாக்கம், அதனுடன் போட்டியிட முடியாத சிறுதொழில் துறையையும் அழித்து விடும். உதாரணத்திற்கு, பெருமளவில் துணிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், நெசவுத் தறிப் பட்டறைகளை இல்லாதொழித்து விட்டன. இதனால் சிறு கைத்தொழில் முனைவோர் இருந்த இடத்தில், இரண்டு பெரும் சமூகப் பிரிவுகள் தோன்றின. இயந்திரங்களின் உரிமையாளர்கான முதலாளிகள், அவர்களுக்காக சம்பளத்திற்கு வேலை செய்யும் தொழிலாளிகள் ஆகியோரே அந்தப் பிரிவுகள்.

இந்த மாற்றமானது எவராலும் திட்டமிடப் படாமல் நடந்துள்ளது. ஒரு சிலரது அறிவு அவர்களது நலன் சார்ந்த உற்பத்திக்கு பயன்படுத்தப் பட்டதால் உண்டான நேரடி விளைவு. சமூகத்திற்கு அதனால் ஏற்படப் போகும் பாதிப்புகள் பற்றி அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.

சித்தாந்தங்களும், அவற்றை முன்னெடுக்கும் நிறுவனங்களும் எவ்வாறு உருவாகின்றன? ஆதி கால இனக்குழு முறை, முன்னைய நிலப்பிரபுத்துவ முறை, நவீன கால முதலாளித்துவ அமைப்பு எதுவாக இருந்தாலும், சமுதாயத்தின் உறுப்பினர்கள் அனைவரும் பொருள் உற்பத்தியில் தங்கியுள்ளனர்.

சமூக நிறுவனங்கள், சட்டங்கள், ஒழுங்கு விதிகள், பழக்க வழக்கங்கள் எல்லாம் உற்பத்தி சார்ந்தே உருவாகின்றன. ஆகையினால், பொருள் உற்பத்தி மாற்றமடையும் பொழுது, சமூக மாற்றங்களும் உண்டாகின்றன. உதாரணத்திற்கு, நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் இருந்து முதலாளித்துவத்திற்கு மாறியதும், சமூக நிறுவனங்கள், சமூகப் பழக்க வழக்கங்களும் மாறின. ஒரு காலகட்டத்தில் ஒழுக்கமாக கருதப் படுவது, இன்னொரு காலகட்டத்தில் ஒழுக்க சீர்கேடாக கருதப் படலாம்.

முதலாளித்துவ பொருள் உற்பத்தி முன்னுக்கு வருவதற்காக, நிலப்பிரபுத்துவத்துடன் முரண்பட்டு மோதிக் கொண்டது. அதன் விளைவாக கடவுளின் பெயரால் கோரப் பட்ட உரிமைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி கட்டுவதில்லை என்ற முடிவு. சுதந்திரமாக வர்த்தகம் செய்வதற்கான உரிமை. இது போன்று பல மாற்றங்கள், நிலப்பிரபுத்துவம், முதலளைத்துவம் இரண்டுக்கும் இடையில் நடந்த போராட்டத்தின் விளைவாக ஏற்பட்டன.

நடைமுறையில் உள்ள கருத்து, கொள்கை, கோட்பாடு எல்லாம், குறிப்பிட்ட ஒரு இடத்தில், குறிப்பிட்ட ஒரு நேரத்தில் தோன்றிய நிறுவனங்களின் பிரதிபலிப்புகள் தான். அவை எப்போதும், எந்தக் காலத்திற்கும் பொருந்துவதும் இல்லை. அதாவது, "இன்று எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பட்ட கருத்து" என்பது, உலகம் முழுவதும் எல்லாக் காலத்திலும் இருந்ததில்லை.

உதாரணத்திற்கு, பண்டைய கிரேக்க நாகரிகத்தில், ஜனநாயக அமைப்பு, மனிதர்களுக்கு சம உரிமை போன்ற விடயங்கள் இருந்தன என்று சொல்வார்கள். ஆனால், பண்டைய கிரேக்க நாடுகளில், அந்த "சம உரிமை", "ஜனநாயகம்" என்பன அடிமைகளுக்கு இருக்கவில்லை.

அதே மாதிரி, "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" போதித்த பிரெஞ்சுப் புரட்சி பற்றியும் பலர் புகழ்வதுண்டு. ஆனால், உண்மை நிலைமையோ வேறு. முதலாளித்துவ வர்க்கத்திற்கு சுதந்திரம் கொடுப்பது பற்றியே பிரெஞ்சுப் புரட்சி பேசியது. பிரெஞ்சுக் காலனிகளில் வாழ்ந்த (கறுப்பின) அடிமைகளுக்கு சுதந்திரம், சமத்துவம் எதுவும் கிடைக்கவில்லை. அதே போன்று, அடித்தட்டு பிரெஞ்சு மக்களும் புறக்கணிக்கப் பட்டனர்.

ஆகையினால், பெரும்பாலான சமூகம் சார்ந்த கருத்துக்கள் யாவும் வர்க்கக் கருத்துக்கள் என்று நாம் சொல்ல முடியும். சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கமானது, தன்னிடமுள்ள பிரச்சார இயந்திரங்கள் மூலம் மக்கள் மீது திணிக்கப் படுகின்றன. அது கல்வி மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றது. எதிர்க் கருத்துக்களை அடக்குவதற்காக நீதிமன்று போன்ற நிறுவனங்களையும் கொண்டிருக்கிறது.

அதன் அர்த்தம், அந்தக் கருத்துக்கள் எல்லாம் மாயைகள் என்பதல்ல. நிஜ வாழ்வில் இருந்து தான் கருத்துக்கள் உருவாகின்றன. ஒரு மன்னர் அல்லது தொழிற்துறை முதலாளி, தங்களை உயர்வாக காட்டிக் கொள்வதற்கு ஏற்ற பொருளாதார வளங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

ஒருவர் "மேன்மை பொருந்தியவர்" என்று கூறும் பொழுது, அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆதிக்க வர்க்கம் எதிர்பார்க்கிறது. அதை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் அதிகாரத்தை மீறியவர்களாக கருதப் படுவர். ஆதிக்க வர்க்கமானது, "அபாயகரமான சிந்தனைகளை" தடுப்பதற்கு முயற்சி செய்யும்.

இங்கே ஒரு கேள்வி எழலாம். பொருளியல் உற்பத்தியால் ஏற்படும் மாற்றங்கள் முதன்மையானவை. கருத்துக்கள் இரண்டாம்பட்சமானவை என்றால், அபாயகரமான சிந்தனைகள் எவ்வாறு தோன்ற முடியும்? இதற்கான பதிலானது, ஒரு குறிப்பிட்ட பொருளியல் உற்பத்தி நடைமுறைக்கு வந்த பின்னர், அது தொடர்பான கருத்துக்களும் தோன்றிக் கொண்டிருக்கும்.

உதாரணத்திற்கு, கூலி உழைப்பாளிகளால் வளர்ந்து வந்த தொழிற்துறை, மேலதிக இலாபத்திற்காக பெருமளவு விளை பொருட்களை விற்க வேண்டியிருந்ததால், நிலப்பிரபுத்துவத்துடன் மோதல் ஏற்பட்டது. அதனால், கட்டுப்பாடுகளை மீறும் சுதந்திரம், வரியை ஸ்திரப் படுத்தல் போன்ற கருத்துக்களும் தோன்றின. அந்தக் காலத்தில் முதலாளித்துவ சமுதாயம் தோன்றியிருக்கவில்லை. ஆனால், அதற்கான சூழ்நிலை எழுந்தது. அதிலிருந்து முதலாளித்துவ கருத்துக்கள் தோன்றின.

இதே விதிகள் சோஷலிசத்திற்கும் பொருந்தும். முதலாளித்துவம் பெருமளவில் பொருட்களை உற்பத்தி செய்து குவிக்கும். அளவுக்கு மிஞ்சிய உற்பத்தி காரணமாக தேக்கம் ஏற்பட்டு பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். அப்போது முதலாளித்துவம் சமூக வளர்ச்சியை தடுத்து நிற்கும். அதற்கான சூழ்நிலைகள் சோஷலிசத்திற்கான நிபந்தனைகளை தோற்றுவிக்கும். அப்போது, சோஷலிச கருத்துக்களும் மக்களை பற்றிக் கொள்ளும். 

(பிற்குறிப்பு: Emile Burns எழுதிய What is Marxism? நூலில் இருந்து எடுத்த குறிப்புகளுக்கு, சில இடங்களில் நான் மேலதிக விளக்கம் கொடுத்துள்ளேன். மொழிபெயர்த்த பகுதிகளுக்கான மூலப் பிரதிகளை இத்துடன் இணைத்துள்ளேன். விரும்பியவர்கள் தரவிறக்கிக் கொள்ளவும்.)