Showing posts with label தமிழர்கள். Show all posts
Showing posts with label தமிழர்கள். Show all posts

Saturday, January 20, 2018

பல்லவர்கள் ஈரானில் இருந்து வந்த வெள்ளையர்கள், தமிழர்கள் அல்ல!


"பல்லவன்" (Pahlavan) என்றால் பண்டைய ஈரானிய மொழியில் நாயகர்கள் என்று அர்த்தம். தமிழகத்தை ஆண்ட பல்லவர்கள், உண்மையில் ஈரானில் இருந்து வந்த வெள்ளையினத்தவரே! தமிழர் என்பது இனக்கலப்படைந்த சமுதாயம் என்பதற்கு மேலும் ஒரு சான்று.

கல்கி எழுதிய சிவகாமியின் சபதம் என்ற "சரித்திர" நாவலில் பல்லவ மன்னர்களை தமிழர்களாக சித்தரித்து எழுதி இருப்பார். இன்றைக்கும் பெருமளவில் விற்பனையாகும் கல்கியின் நாவல்கள், ஒரு வகையில் தமிழினவாத அரசியலை ஊக்குவிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. 

கல்கியின் எழுத்துக்கள் ஏற்படுத்திய தாக்கத்தால், "பல்லவர்கள் தமிழர்களே" என்று நம்புவோர் பலருண்டு. அவ்வாறான கற்பிதத்தை உருவாக்குவதில், ஒரு பிராமணரான கல்கிக்கு அரசியல் நோக்கங்கள் இருந்திருக்கலாம். இன்றைய தமிழகப் பிராமணர்களில் ஒரு பிரிவினர் ஈரானில் இருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கலாம். அந்த உண்மையை மூடி மறைத்து, பிராமணர்களும் தமிழர்களே என்று உறுதிப் படுத்துவதற்கு கல்கி போன்ற அறிவுஜீவிகள் பாடுபட்டுள்ளனர்.

பல்லவர்கள் தமிழ் நாட்டின் ஒரு பகுதியை ஆண்டாலும், அவர்களது ராஜ்ஜியத்தின் உத்தியோகபூர்வ மொழி சமஸ்கிருதமாக இருந்தது. பல்லவ மன்னர்கள் தமது பெயர்களுக்குப் பின்னால் சூட்டிக் கொண்ட "வர்மன்" என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். அதன் அர்த்தம் பாதுகாவலன். 

வர்மன் என்ற பெயரைக் கண்டதும், பலர் அறியாமை காரணமாக, "பல்லவர்கள் தமிழ் மன்னர்கள்" என்று நினைக்கிறார்கள். வர்மன் என்ற பெயர் கொண்டிருந்த படியால், கம்போடியாவை ஆண்ட மன்னர்களும் தமிழர்களே என்று தவறாக நினைப்பவர்கள் பலருண்டு. இது ஒரு தப்பெண்ணம். அதில் எந்த உண்மையும் இல்லை.  அந்த கம்போடிய அரச பரம்பரையினரும் பல்லவர்களில் இருந்து வந்தவர்களே. ஆனால், தமிழர்கள் அல்ல.

யார் இந்தப் பல்லவர்கள்? எவ்வாறு தமிழகத்திற்கு வந்தார்கள்? தமிழர் என்றால் யார்? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க வேண்டும். தமிழில் பல்லவர்கள் பற்றிய வரலாற்று நூல்களை எழுதிய சரித்திர ஆசியர்கள் "பல்லவர்களின் பூர்வீகம் பற்றி எதுவும் தெரியவில்லை" என்று எழுதியுள்ளனர். அது உண்மை அல்ல. அவர்களுக்கு பல்லவர்கள் யார் என்பது தெரியும். அவர்களது பூர்வீகம் ஈரான் என்பதும் தெரிந்த விடயம் தான்.ஆனால் சொல்லத் தயங்குகிறார்கள்.

அந்த உண்மையை சொல்ல விடாமல் சரித்திர ஆசிரியர்களை தடுப்பது எது? இருபதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் அறிமுகப் படுத்தப் பட்ட தமிழ்த் தேசியக் கோட்பாடு அதைக் கூற விடாமல் தடுக்கிறது. அதற்கு முன்னர் தமிழர் என்ற இன உணர்வு யாரிடமும் இருக்கவில்லை. "தமிழர்கள் ஒரே மாதிரியான, கலப்படையாத, தூய்மையான இனம்" என்பது ஒரு கற்பிதம். உலகில் உள்ள எல்லா தேசியவாதிகளும், இது போன்ற கற்பனையான வரலாற்றை உருவாக்கி வைத்திருப்பார்கள். 

பல்லவர்களின் வரலாறு என்ன?

பண்டைய ஈரானை ஆண்ட அரச வம்சங்களில் ஒன்று "பஹ்லவி". இந்தியாவில் அவர்களை பல்லவன் என்று அழைத்தனர். பஹ்லவி அரச வம்சத்தினர் பார்த்திய இனத்தை சேர்ந்தவர்கள். வட மேற்கு ஈரானில் வாழ்ந்த பார்த்தியர்கள், ஒரு காலத்தில் ஈரானில் பெரியதொரு சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பினார்கள். 

ஈரானில் இன்னொரு மூலையில் வாழ்ந்த பார்சியர்கள் என்பது வேறு இனம். ஆனால், இனக்கலப்பு காரணமாக காலப்போக்கில் பார்த்திய, பார்சிய மொழிகள் ஒன்றாகி, பின்னர் அது அரபிச் சொற்களை உள்வாங்கி நவீன பார்சி மொழி உருவானது. இருப்பினும் அது ஒரு ஆரிய மொழி என்பதால், சமஸ்கிருதத்துடன் நெருங்கிய தொடர்புடையது. இதனால், ஈரானிய பார்த்திய வம்சாவளியினரான பல்லவர்கள், தமிழ்நாட்டுக்கு வந்த பின்னர் சமஸ்கிருதம் பேசியதில் ஆச்சரியப் பட எதுவும் இல்லை.

ஈரானியர்களும், இந்திய ஆரியர்களும் பொதுவான மூதாதையரில் இருந்து பிரிந்து சென்ற கிளைகள் தான். இன்றைக்கும் ஈரான் என்ற பெயரின் பொருள் "ஆரியர்களின் நாடு" என்பது தான். இந்திய - ஈரானிய ஆரியர்களின் மூதாதையர் குறைந்தது பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் கவ்காசியா அல்லது சைபீரியாவில் (இன்று ரஷ்யாவுக்கு சொந்தமானது) இருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கலாம். 

காலப்போக்கில் அவர்களுக்குள் பல மொழிகள், இனங்கள் தோன்றியுள்ளன. இவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டாலும், அந்நிய படையெடுப்புகளால் புலம்பெயர்ந்து புதிய இனமாகவும் மாறியுள்ளன. ஈரானிலிருந்து தென்னிந்தியா வரையிலான தொடர்ச்சியான இடப்பெயர்ச்சி காரணமாக பல்லவர்கள் இந்தியத் தன்மை கொண்ட புதிய இனமாக உருமாறி இருந்தனர்.

உலகை வெல்ல நினைத்த கிரேக்க அலெக்சாண்டர் இந்தியா வரையில் வந்த வரலாறு அனைவரும் அறிந்ததே. ஆனால், அலெக்சாண்டர் மறைவுக்குப் பிறகு என்ன நடந்தது என்ற விபரம் வரலாற்று நூல்களில் காண்பதரிது. குறிப்பாக தமிழில் உள்ள சரித்திர நூல்களில் அதைப் பற்றி ஒரு குறிப்புக் கூட காணக் கிடைக்காது. சிலநேரம், வேண்டுமென்றே இப்படியான இருட்டடிப்புகள் செய்யப் படுவதாக தோன்றுகிறது.

சங்ககால தமிழ் இலக்கியத்தில் கிரேக்கர்களை யவனர்கள் என்று குறிப்பிடுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், யவனர்கள் கடலோடிகளாக கப்பலில் வந்த வணிகர்கள் என்று தான் பலர் கருதுகிறார்கள். அது ஒரு பக்கச் சார்பான உண்மை மட்டுமே. அவர்களுக்கு மறுபக்க வரலாறு தெரியாது. இன்றைய ஆப்கானிஸ்தானில் இருந்து தரைவழியாக வந்து தமிழ்நாட்டில் குடியேறிய யவனர்களும் இருந்தனர். அதைப் பற்றி இங்கே பார்ப்போம்.

அலெக்சாண்டர் மறைவுக்குப் பின்னர் அவர் கைப்பற்றி இருந்த அகண்ட நிலப்பரப்பு பல துண்டுகளாக பிரிக்கப் பட்டது. இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய பகுதிகள் ஒரு குடையின் கீழ் தனியான ராஜ்ஜியமானது. அதற்கு அலெக்சாண்டரின் முன்னாள் தளபதிகளில் ஒருவர் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். 

பக்டீரியா என அழைக்கப்பட்ட அந்த ராஜ்ஜியம், "சத்ரபதிகள்" என்ற கிரேக்க மொழி பேசும் ஆளுநர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அவர்கள் உள்நாட்டு (இந்திய) கலாச்சாரங்களை பின்பற்றினார்கள். பௌத்த மதத்தை தழுவிக் கொண்டனர். கிரேக்க, ஈரானிய, இந்திய கலாச்சாரங்கள் ஒன்று கலந்து, தனித்துவமான புதியதொரு கலாச்சாரம் உண்டானது. அது இன்று வரைக்கும் நாம் காணும் "இந்திய கலாச்சாரத்தின்" ஒரு பகுதியாக உள்ளது.

இதற்கிடையே அலெக்சாண்டரின் மறைவுக்குப் பின்னர் தலையெடுத்த ஈரானிய பார்த்தியர்களும் (பல்லவர்கள்), கிரேக்க சத்ரபதிகளும் போரிட்டுக் கொண்டனர். பண்டைய காலத்து யுத்தங்கள் எதுவுமே இனம், மொழி சார்ந்து நடக்கவில்லை. யாராவதொரு மன்னரின் ராஜ்ஜிய விஸ்தரிப்புக்காக போர்கள் நடந்திருக்கும். அந்த வகையில் நாம் இதை கிரேக்க - ஈரானிய போராக கருத முடியாது. அந்தக் காலத்தில் வாழ்ந்த யாருக்கும் மொழி, இன உணர்வுகள் இருக்கவில்லை.

கிரேக்க, பார்த்திய ராஜ்ஜியங்களுக்கு வடக்கில் இருந்து ஆபத்து வந்தது. ஷாகா என்ற இன்னொரு ஆரிய இனம், வடக்கே இருந்து படையெடுத்து வந்தது. இன்றைய உஸ்பெகிஸ்தான் பிராந்தியத்தில் இருந்து வந்த ஷாகா இனத்தவர்கள், ஈரானில் பெரும்பகுதியை ஆக்கிரமித்தனர். அதுவரை காலமும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வந்த பார்த்தியரும், கிரேக்கரும் பின்வாங்கி இந்தியாவுக்கு சென்றனர். இன்றைய இந்தியாவின் பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் புதிய ராசதானிகளை அமைத்துக் கொண்டனர்.

இதே நேரம், சீனாவில் சீனப் பெருஞ்சுவர் கட்டப் பட்டுக் கொண்டிருந்தது. அது மேற்கு நோக்கி விரிவாக்கப் பட்டது. அந்தப் பிரதேசத்தில் அரசாண்ட யுயே சி என்ற இனம், சீனர்களால் தெற்கு நோக்கி அடித்து விரட்டப் பட்டது. சீனர்களால் யுயே சி அல்லது இந்தியர்களால் குஷான் என அழைக்கப் பட்ட இனத்தவர்கள், இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பிராந்தியத்தில் புதிய ராஜ்ஜியத்தை அமைத்தனர். இதனால் அங்கு வாழ்ந்த ஷாகா இனத்தவர் தெற்கு நோக்கி புலம்பெயர்ந்தனர்.

கி. பி. முதலாம் நூற்றாண்டில், மேற்கு இந்தியாவில் உள்ள குஜராத் பகுதியில் உருவான பல்லவ ராஜ்ஜியத்தில், கிரேக்க, பார்த்திய, ஷாகா ஆகிய ஆரிய இனத்தவர்கள் ஒன்று கலந்து, புதியதொரு வெள்ளையினம் உருவாகி இருந்தது. அவர்களே தமிழகத்து பல்லவர்களின் மூதாதையர். குஜராத்தில் கால்பதித்திருந்த பல்லவர்கள்,  கி.பி. மூன்றாம் நூற்றாண்டளவில் தென்னிந்தியா நோக்கி படையெடுத்து சென்றனர். வட தமிழகத்தில் உள்ள தொண்டை மண்டலத்தை கைப்பற்றி, அங்கு மாமல்லபுரத்தை தலைநகராகக் கொண்ட பல்லவ ராஜ்ஜியத்தை அமைத்தனர்.

மாமல்லபுரத்தை தலைநகராகக் கொண்ட பல்லவ நாட்டை ஆண்ட மன்னர்களும், படையினரும் தமிழர்கள் அல்ல. அவர்கள் இனத்தால் வெள்ளையர்கள். அதாவது, பார்த்திய, ஷாகா, கிரேக்கர்களும் கலந்த வெள்ளையினம். அவர்கள் எப்படி தமிழர் ஆனார்கள்? பிற்காலத்தில், அந்நிய படையெடுப்புகள் காரணமாக பல்லவ ராஜ்ஜியம் அழிந்து போனாலும், பல்லவர்களின் வழித்தோன்றல்கள் தமிழ்நாட்டில் தங்கி விட்டிருப்பார்கள். அவர்கள் காலப்போக்கில் தமிழ் பேசி தமிழர்களாக மாறி விட்டனர்.

மேலே குறிப்பிடப் பட்ட வரலாற்று நிகழ்வுகளும், இனக்கலப்புகளும் நடப்பதற்கு ஐநூறு வருடங்கள் எடுத்திருக்கலாம். நமது கால அளவீட்டின் படி கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கும், கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கும் இடைபட்ட காலத்திற்குள் நடந்த மாற்றங்கள் இவை. அந்தக் காலங்களில் யார் என்ன மொழி பேசுகிறார்கள் என்றெல்லாம் யாரும் கவலைப் படவில்லை. "இனம்" என்ற கருதுகோள் அப்போது இருக்கவில்லை. அது காலனிய காலத்தில் உருவான நவீன அரசியல் கோட்பாடு.

குஜராத்தில் ராஜ்ஜியம் அமைத்த பல்லவர்களுக்கு, கிழக்கே இருந்து ஆபத்து வந்தது. அப்போது வட இந்தியாவில் குப்தர்களின் சாம்ராஜ்யம் விரிவடைந்து கொண்டிருந்தது. நீண்டதொரு போருக்குப் பின்னர், குப்தர்கள் குஜராத் பல்லவர்களின் ராஜ்ஜியத்தை கைப்பற்றினார்கள். கி.பி. 375 ம் ஆண்டு, குப்தர்களின் சாம்ராஜ்யம் தெற்கு நோக்கி விரிவடைந்தது. தொண்டை மண்டலத்தில் இருந்த பல்லவ நாடும் குப்தர்களிடம் வீழ்ந்தது. அப்போது பல்லவ அரச வம்சத்தினர் (மட்டும்) கப்பல்களில் தப்பிச் சென்று, தூர கிழக்காசிய நாடுகளை சென்றடைந்தனர். அவர்களே கம்போடியாவில் புதியதொரு அரச வம்சத்தை உருவாக்கினார்கள்.

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில், குப்த சாம்ராஜ்யம் பலவீனமடைந்த காலத்தில், பல்லவர்கள் மீண்டும் தலையெடுத்தனர். காஞ்சிபுரத்தில் மீண்டும் ஒரு பல்லவ நாடு தோன்றியது. த‌மிழ‌க‌ வ‌ர‌லாற்றில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து, ஏழாம் நூற்றாண்டு வரையில் "பல்லவர்களின் பொற்காலம்" எனலாம். அந்தக் காலத்தில், கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா போன்ற தூர கிழக்காசிய நாடுகளில் தோன்றிய பல்லவர்களின் ராஜ்ஜியங்களுக்கும், தமிழகத்து பல்லவ நாட்டிற்கும் இடையில் கப்பல் போக்குவரத்து இருந்தது. அதன் விளைவாக சர்வதேச வாணிபம் வளர்ச்சி கண்டது.

தமிழகத்து பல்லவ நாட்டின் ஆட்சியாளர்களில் சிலர் அப்போதும் கிரேக்க மொழி பேசுவோராக இருந்திருக்கலாம். ஆகையினால், ஐரோப்பிய கிரேக்கர்களுடனும் வணிகத் தொடர்பு ஏற்பட்டது. உண்மையில், இன்றைய சர்வதேச வணிகம் எப்படி நடக்கிறதோ, அப்படித் தான் அன்றைய வணிகப் போக்குவரத்தும் அமைந்திருந்தது. அதாவது, ஐரோப்பிய கிரேக்கர்களின் வணிகக் கப்பல்கள் தமிழ்நாட்டு சந்தையில் தமது பொருட்களை விற்றனர், அல்லது வாங்கினர்.

அதே மாதிரி தூர கிழக்காசிய வணிகர்ளும் தமிழகத்திற்கு வந்து சென்றனர். இந்த வணிகத் தொடர்பு பண வருமானத்தை மட்டும் கொண்டு வரவில்லை. அறிவியலும் வளர்ந்திருக்கும். அதே நேரம், அந்நிய நாடுகளை சேர்ந்தவர்கள் தமிழர்களுடன் ஒன்று கலந்திருப்பார்கள். உலகில் இனக் கலப்பில்லாத எந்த இனமும் நாகரிகம் அடைந்ததாக வரலாறு இல்லை. ஆகவே, தமிழர்களும் இனக்கலப்பு காரணமாகத் தான் நாகரிக வளர்ச்சி கண்டனர். அது இயற்கையானது.


பிற்குறிப்பு: 
- இந்தக் கட்டுரை எழுதுவதற்கான ஆதாரங்களை பின்வரும் நூலில் இருந்து எடுத்துள்ளேன்: Early Kingdoms of the Indonesian Archipelago and Malay Peninsula, Paul Michel Munoz

- மேலே உள்ள படமும் அந்த நூலில் இருந்து எடுக்கப் பட்டதே.



இதனுடன் தொடர்புடைய முனைய பதிவு:

Sunday, January 15, 2017

தமிழர்கள் ஆப்பிரிக்க இனம்! தைப் பொங்கலே அதற்கு ஆதாரம்!!


தமிழரின் இனம் எது? ஆப்பிரிக்க இனம்!

வருடந்தோறும் தமிழர்களால் கொண்டாடப் படும் தைப் பொங்கலும், மாட்டுப் பொங்கலும், அவர்கள் ஆப்பிரிக்க இனம் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களாக உள்ளன.

அது மட்டுமல்ல, தமிழர்கள் தமது கலாச்சார பாரம்பரியம் என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் ஏறு தழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டு கூட ஆப்பிரிக்க தொடர்பை நிரூபிக்கின்றது.  தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, சில ஆப்பிரிக்க நாடுகளிலும் ஜல்லிக்கட்டு எனும் வீர விளையாட்டு விளையாடப் படுகின்றது. (பார்க்க: ஆப்ரிக்காவில் எருது தழுவுதல்)

ஜல்லிக்கட்டு எனும் மாடு பிடிக்கும் விளையாட்டு, ஒரு காலத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு வடக்கே உள்ள மத்தியதரைக் கடல் நாடுகளில் பரவி இருந்தது. இன்று கிரேக்க நாட்டிற்கு சொந்தமான கிரேட்டா தீவில் அது சம்பந்தமான பண்டைய ஓவியங்கள் கண்டெடுக்கப் பட்டன.

இன்றைக்கும் ஸ்பெயின் நாட்டில் விளையாடப் படும் மாடு அடக்கும் விளையாட்டு, அனேகமாக பினீசிய குடியேறிகளால் அங்கு பரவி இருக்கலாம். இன்றைய லெபனான் நாட்டில் இருந்து புலம்பெயர்ந்த பினீசியர்கள், ஒருகாலத்தில் ஸ்பெயின் உட்பட பல மத்திய தரைக் கடல் நாடுகளில் பரவி வாழ்ந்தனர்.

விவிலிய நூலில், பழைய ஏற்பாட்டில், யூதப் பழங்குடிகள் மாட்டை தெய்வமாக வழிபட்டதாக கூறுகின்றது. ஆண்டவரின் தூதுவர் மோசேஸ், எகிப்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை கானான் நாட்டிற்கு அழைத்துச் சென்றார்.

மோசேஸ் தலைமையில், யூதர்கள் தமக்கு வாக்களிக்கப் பட்ட பூமிக்கு செல்லும் வழியில், ஒரு சிலர் ஓரிறைக் கொள்கையை மறுதலித்து, தங்கத்தால் செய்த காளை மாட்டுக் கடவுளை வணங்கினார்கள். அதனால் ஆத்திரமுற்ற மோசேஸ் அந்த தெய்வச் சிலையை அடித்துடைத்து விட்டு அதை வணங்கியவர்களுக்கு சாபமிட்டார். 

அது விவிலிய நூல் கூறும் புராண கால "மாட்டுக் கதை". உண்மையிலேயே மாட்டை வழிபடும் மதம் பண்டைய எகிப்தில் இருந்தது. அதற்கான வரலாற்றுத் தகவல்கள், அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகள் ஏராளம் உள்ளன.

இன்றைய வடக்கு சூடான், தென் எகிப்துப் பகுதி ஒரு காலத்தில் நுபியா என்று அழைக்கப் பட்டது. அது எகிப்திய நாகரிகத்திற்கு முந்திய நாகரிகத்தைக் கொண்டிருந்தது. தற்போதும் அங்கு வாழும் மக்கள் தனித்துவமான நுபிய மொழி பேசுகின்றனர்.

பண்டைய ஆப்பிரிக்க நாகரிக காலகட்டத்தில் வாழ்ந்த நுபியர்கள், எருது மாட்டையும், சூரியனையும் கடவுளாக வழிபட்டனர். எருது மாட்டின் கொம்புகளுக்கு நடுவில் சூரிய வட்டத் தகடு பொறிக்கப் பட்ட தெய்வச் சிலைகள், இன்றைக்கும் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப் படுகின்றன. கெய்ரோ நகரில் உள்ள எகிப்திய மியூசியத்தில் இன்றைக்கும் அந்தச் சிற்பங்களை நீங்கள் பார்வையிடலாம்.

தைப்பொங்கல் ஏன் கொண்டாடப் படுகின்றது என்பதற்கு, ஒவ்வொரு தமிழனும் பின்வரும் விளக்கத்தை சொல்லத் தெரிந்து வைத்திருப்பான். முதலாவதாக, முற்றத்தில் பொங்கலிட்டு சூரியனுக்கு படைப்பார்கள். அதாவது பண்டைய கால சூரிய வழிபாட்டின் தொடர்ச்சியாக பொங்கல் கொண்டாடப் படுகின்றது. இரண்டாவதாக, மாட்டுப் பொங்கல் அன்று மாட்டுக்கு படைப்பார்கள். அதாவது, பண்டைய தமிழர் மரபில், அவர்களது மத நம்பிக்கைகளில் சூரியனும், மாடும் முக்கிய பங்காற்றி உள்ளது.

பிற்காலத்தில் தோன்றிய எகிப்திய நாகரிகத்தில், அது ஹாதொர் என்ற தெய்வமாக வழிபடப் பட்டது. எருது மாட்டை தெய்வமாக வழிபடும் மதம் மேற்கே கிரேக்கம் வரையில் பரவியிருந்தது. கிரீஸ் நாட்டின் பகுதியான கிரேட்டா தீவில் அதற்கான ஆதாரங்கள் உள்ளன.

அரேபிய தீபகற்பத்திலும் எருது மாட்டை வழிபடும் மதம் பரவி இருந்தது. இஸ்லாத்திற்கு முந்திய காலகட்டத்தில், இன்றைய பாஹ்ரைன் நகரில் பிரமாண்டமான கோயில் ஒன்று இருந்தது. ஆண்டுதோறும் அங்கு நடக்கும் திருவிழாவிற்கு இன்றைய ஈரான், ஈராக், மற்றும் அரேபியாவில் இருந்து பெருமளவு பக்தர்கள் யாத்திரை சென்றனர்.

பாஹ்ரைன் தீவின் பழைய பெயர் "அவ்வல்" ஆகும். அது அந்த எருது மாட்டுக் கடவுளின் பெயர் ஆகும். இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ள, அரபு மொழியில் அவ்வல் என்ற சொல்லுக்கு சிறப்பிடம் உண்டு. அந்தச் சொல்லுக்கு முதன்மையானது, முந்தியது, பண்டைய சிறப்பு வாய்ந்தது என்று பல பொருள்கள் உண்டு.

தமிழ் மொழியில் அவ்வை என்று குறிப்பிடும் சொல், ஔவையார் என்ற புலவரை மட்டும் குறிக்கவில்லை. பண்டைய சிறப்பு வாய்ந்தது என்ற அர்த்ததிலும் பயன்படுத்தப் பட்டது. மேலும், இந்து மதக் கோயில்களில் இன்றைக்கும் எருது மாட்டு தெய்வமான நந்திக்கு முதல் வணக்கம் செலுத்த வேண்டும்.

நந்தி வழிபாடு பண்டைய ஆப்பிரிக்க மதத்தின் எச்சமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஆரியமயமாக்கப் பட்ட இந்து மதம் தான், நந்தியை சிவபெருமானின் வாகனம் ஆக்கியது. இந்து மதம் வருவதற்கு முன்னர், இந்தியாவில் நந்தி தனியான கடவுளாக வழிபடப் பட்டது. அதை நிரூபிக்கும் வகையில் நந்திக் கடவுளின் மகிமைகளை கூறும் தனியான புராணக் கதைகள் உள்ளன. மேலும், நந்தி என்பது ஒரு சமஸ்கிருதச் சொல் ஆகும். அதன் பூர்வீகப் பெயர் என்னவென்பது யாருக்கும் தெரியாது.

"தைப்பொங்கல் தமிழர் திருநாள்" என்று நாங்கள் பெருமையாக சொல்லிக் கொள்ளும் ஒவ்வொரு நிமிடமும், எமது இனம் ஆப்பிரிக்க இனம் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழ் மொழியை பேசுவதால் தமிழர்கள் தனியான இனம் என்ற கருதுகோள், பிற்காலத்தில், இருபதாம் நூற்றாண்டில் உருவான தேசியவாதக் கருத்தியல் ஆகும். ஒரு குறிப்பிட்ட மொழியை பேசுகிறவர்கள், தனியான இனம் என்ற கற்பிதம், ஆங்கிலேய காலகட்டத்தில் எம் மீது திணிக்கப் பட்டது. இன்றைக்கும் சிலர் அதை உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 

Tuesday, September 09, 2014

மதுரை முதல் மாத்தறை வரை : பாண்டியர்களின் சிங்கள உறவுகள்


தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தான், தமிழர், மலையாளிகள், சிங்களவர் என்று தெளிவாக வேறு பிரித்து அறியக் கூடிய மொழி அடிப்படையிலான இனங்கள் உருவாகி இருந்தன. அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட சாம்ராஜ்ய விஸ்தரிப்புகள், சர்வதேச வர்த்தகத் தொடர்புகள், மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளன. அதற்கு முன்னர் இருந்த சமுதாயங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி நாகரிகமடைந்து வந்துள்ளன.

மகாவம்சம் கூறும் இலங்கை வரலாறு, விஜயனின் வருகையுடன் ஆரம்பமாகின்றது. வட இந்தியாவில் இருந்து கப்பலில் வந்திறங்கிய விஜயனும், அவன் தோழர்களும் சிங்களவர்கள் அல்ல. அவர்கள் சிங்களம் பேசியதாக மகாவம்சமும் குறிப்பிடவில்லை. ஆனால், வங்காள தேசத்தில் இருந்து வந்தவர்கள் என்பது ஒரு தவறான தகவல். பௌத்த மத மறுமலர்ச்சிக் காலத்தில் வாழ்ந்த பிக்குகளால் மகாவம்சம் எழுதப் பட்டது. அதனால், பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக, விஜயனின் பூர்வீகம் வங்காள தேசம் என்று எழுதினார்கள். ஏனெனில், வங்காள தேசத்தில் இருந்து தான் இலங்கைக்கு பௌத்த மதம் கொண்டு வரப் பட்டது.

அப்படியானால், விஜயனின் தாயகம் எது? சரித்திர அறிஞர்கள், அகழ்வாராய்ச்சியாளர்களின் நீண்ட கால ஆய்வுக்குப் பின்னர், அது குஜராத் என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. கி.மு. 5௦௦ ஆண்டளவில் குஜராத் கடலோடிகள் தெற்காசியாவின் பல பாகங்களுக்கும் சென்றுள்ளனர். இலங்கைத் தீவுக்கு செல்லும் கடல் பாதையில் உள்ள மாலைதீவிலும் அவர்கள் குடியேறி இருக்கலாம். ஜாதக, புராணக் கதைகளில் அது தொடர்பான குறிப்புகள் உள்ளன. சிங்களவர், குஜராத்திகளின் படகு கட்டும் பாணியும் ஒரே மாதிரி உள்ளது. அது மட்டுமல்லாது, இலங்கையிலும், குஜராத்திலும் ஒரே மாதிரியான வெள்ளி நாணயங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. ஆகவே, சிங்களவர்களின் மூதாதையர் குஜராத்தில் இருந்து வந்திருக்கலாம்.

சிங்கள மொழி கி.பி.பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய புதிய மொழி. பாளி,சமஸ்கிருதம்,தமிழ் ஆகிய மொழிகள் ஒன்று கலந்து உருவானது. விஜயனின் கதை உண்மையா என்பது இன்னமும் நிரூபிக்கப் படவில்லை. அனேகமாக, குஜராத்தில் இருந்து அந்நிய நாடொன்றுக்கு வாணிபம் செய்வதற்கு சென்ற கடலோடிகளின் கப்பல் உடைந்து, இலங்கைக் கரையை வந்து சேர்ந்திருக்கலாம்.

எது எப்படி இருப்பினும், விஜயன் வந்த காலத்தில், தென்னிந்தியாவில் பாண்டியர்களின் நாடு இருந்திருக்கிறது. குவேனி உள்நாட்டு ஆதிவாசிப் பெண்ணை விட்டுப் பிரிந்து சென்ற விஜயன், பாண்டிய நாட்டு இளவரசியை மணம் முடித்திருக்கிறான். பாண்டிய மன்னனும் பல நூறு பெண்களை இலங்கைக்கு அனுப்பி, விஜயனின் தோழர்களுக்கு மணம் முடித்துக் கொடுத்திருக்கிறான்.

இதிலிருந்து ஓர் உண்மை தெரிய வருகின்றது. விஜயனும் அவன் தோழர்களும் ஆரம்பத்தில் குஜராத் மொழி பேசி இருக்கலாம். ஆனால், அவர்களின் வழித்தோன்றல்கள் ஒரு வகையில் பாண்டியர்களாக அல்லது தமிழர்களாக மாறி விட்டனர். இதற்குப் பல ஆதாரங்களைக் காட்டலாம். பாண்டிய நாட்டின் தலைநகராக மதுரை இருந்தது. தென்னிலங்கையில் உள்ள மாத்தறை நகரம், மதுர என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில், மாத்தறையிலும், அம்பாந்தோட்டையிலும் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். இன்று பாழடைந்து போயுள்ள இந்துக் கோயில்கள் அதற்கு சாட்சியமாக உள்ளன.

பாண்டிய நாட்டின் நாகரிகம் வளர்ந்த நதியின் பெயர் தாமிரபரணி ஆறு. விஜயனும் தோழர்களும், தம்பபண்ணி எனும் இடத்தில் வந்திறங்கியதாக மகாவம்சம் கூறுகின்றது. தம்பபண்ணி என்பது இலங்கையின் புராதன காலப் பெயர். அத்தோடு, இன்றைய புத்தளம் பகுதியில் இருந்த பழைய நகரம். கிரேக்கர்கள் தப்ரோபானே(Tabrobane) என்று அழைத்தார்கள்.

அனேகமாக, தப்ரபேன், தம்பபண்ணி ஆகிய சொற்கள் தாமிரபரணி என்ற பெயரின் திரிபாக இருக்கலாம். இலங்கையில் நடந்த சம்ஸ்கிருதமயமாக்கலை தொடர்ந்து, பௌத்த பிக்குகள் சிஹலம், சீலம் போன்ற சொற்களை விரும்பிப் பாவித்தனர். வெனிஸ் நாட்டு கடலோடியான மார்க்கோ போலோ, அதனை செய்லான் என்று குறிப்பிட்டார். அதனால் தான் போர்த்துக்கேயர்கள் செய்லோன் என்றும், ஆங்கிலேயர்கள் சிலோன் என்றும் அழைத்து வந்தனர்.

கிறிஸ்துவுக்கு முந்திய காலகட்டத்திலேயே, இலங்கை பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக இருந்துள்ளது. அதற்கு காரணம், நீரைத் தேக்கி வைக்க கட்டப்பட்ட அணைக் கட்டுகள், மற்றும் பல நாடளாவிய நீர்ப்பாசன திட்டங்கள். ஆங்கிலத்தில் "Anicut" என்றால், தமிழில் அணைக்கட்டு. ஆங்கிலம் கடன் வாங்கிய தமிழ்ச் சொற்களில் அதுவும் ஒன்று. இந்தியாவின் மிகப் பழைய அணைக்கட்டு, தாமிரபரணி ஆற்றை மறித்துக் கட்டப் பட்டது. அநேகமாக, அணைக்கட்டு கட்டும் தொழில்நுட்ப அறிவு, அன்றைய பாண்டிய நாட்டிற்கும், இலங்கைக்கும் இடையில் பரிமாறப் பட்டு வந்துள்ளது.

மகாவம்சம் குறிப்பிடும், விஜயனின் வம்சாவளியில் வந்த முக்கியமான அரசன் ஒருவனின் பெயர் "பண்டுகாபயன்." பண்டு என்பது பாண்டியர்களைக் குறிக்கும் சொல். உண்மையில், பண்டு அல்லது பண்டைய என்ற சொல் தான் பாண்டியர்கள் என்று மருவி வந்திருக்க வேண்டும். அனேகமாக, பாண்டியர்கள் தான் மிகவும் பழமையான தமிழ் அரச வம்சமாக, இன்னும் சொல்லப் போனால் புராதன தமிழ்க் குடியாக இருந்திருக்க வேண்டும்.

ஒரு காலத்தில், பாண்டிய மன்னர்களும், மக்களும் ஆதி கால வரலாற்றில் மறவர்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளனர். இன்றைக்கும் ராமேஸ்வரம் பகுதியில் பெரும்பான்மையாக உள்ள மறவர் சாதியினர் அந்த தொடர்பை நினைவுபடுத்தலாம். காலனிய காலத்திற்கு சற்று முந்திய நாயக்கர் ஆட்சிக் காலம் வரையில், மறவர்கள் போர்க்குணாம்சம் மிக்க தென்னிந்திய சத்திரியர்கள் போன்று கருதப் பட்டனர்.

பாண்டியர்கள் என்பது சம்ஸ்கிருதமயமாகிய பெயர்ச் சொல். ரோம சாம்ராஜ்யத்திற்கும் பாண்டிய நாட்டிற்கும் இடையில் வணிகத் தொடர்புகள் இருந்துள்ளன. ரோமர் காலத்தில் வாழ்ந்த கிரேக்க வரலாற்று ஆசிரியரான பிளினி, பாண்டிய நாட்டைப் பற்றிப் பல குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். பாண்டியர்களை "பாண்டியோனிஸ்" என்று கிரேக்க மயப் படுத்தி உள்ளார். மதுரை நகரம் "மெதூரா" என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

இன்றைய ராமேஸ்வரம் என்ற பெயர் பிற்காலத்தில் வந்திருக்கலாம். ஏனெனில், பிளினியின் வரலாற்று நூலில் அது பாம்பன் தீவு என்று எழுதப் பட்டுள்ளது. மேலும், பாண்டிய நாட்டின் வரலாற்றையும் பிளினி கிரேக்க கண்ணோட்டத்துடன் எழுதி உள்ளார். (இந்திய) ஹெர்குலஸ் தெய்வத்தின் ஒரே மகளான பாண்டியா அரசி ஆட்சி செய்த படியால், அதற்கு பாண்டிய நாடு என்று பெயர் வந்த கர்ண பரம்பரைக் கதையை கூட எழுதி இருக்கிறார்.

சேர, சோழ, பாண்டியர்கள் தமிழ் சமூகத்தில் மூவேந்தர்கள் என்று கொண்டாடப் படுகின்றனர். ஆனால், அன்றைய காலத்தில் அந்த மன்னர்களுக்கு இடையில், ஓர் "இன அடிப்படையிலான ஒற்றுமை உணர்வு" இருந்திருக்கவில்லை. உண்மையில் மொழி உணர்வு, தேசியவாதம் என்பன இருபதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களினால் அறிமுகப் படுத்தப் பட்ட அரசியல் கொள்கைகள் ஆகும். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்களிடம் அப்படி எந்த உணர்வும் இருக்கவில்லை. இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் எங்குமே இருக்கவில்லை. ஆகவே, பண்டைய சமூகங்களின் வரலாற்றை, மொழி அடிப்படையில் பார்ப்பது எமது தவறு.

சேர, சோழ, பாண்டியர்களின் ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளில் வாழ்ந்த மக்கள், கிட்டத்தட்ட தமிழ் போன்று ஒலிக்கும் பல வட்டார மொழிகளைப் பேசி இருப்பார்கள். அவை ஒன்றுக்கொன்று தொடர்புடைய மொழிகளாக இருக்கலாம். ஆனால், இன்றிருப்பதைப் போன்று, அன்றைய மக்கள் எல்லோரும் ஒரே பொது மொழியை பேசியதாக கூற முடியாது. தமிழ் நாட்டில் மட்டுமல்ல, உலகில் எந்த நாட்டிலும் அப்படியான நிலைமை இருக்கவில்லை.

சங்க காலத்தில் இலக்கியங்கள் புனைவதற்கும், செய்யுள்கள் இயற்றுவதற்கும் தமிழ் மொழி பயன்பட்டது. சமுதாயத்தில் மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த பிரபுக்களும், புலவர்களும் செம் மொழியான தமிழைப் பேச, எழுதத் தெரிந்து வைத்திருந்தார்கள். அதற்காக, பண்டைய காலங்களில் வாழ்ந்த "தமிழர்கள்" செந்தமிழ் பேசினார்கள் என்று நாம் நினைத்துக் கொள்வது அறியாமை.

சிங்களமும் பல நூறாண்டுகளாக பிரபுக்களாலும், பிக்குகளாலும் மட்டுமே பேசப் பட்டது. பண்டைய காலங்களில் வாழ்ந்த "சிங்களவர்கள்" எல்லோரும் சிங்களம் பேசினார்கள் என்று நினைத்துக் கொள்வது அவர்களது அறியாமை. சாதாரண மக்களும் சிங்களம் படிக்கும் உரிமை, சாதியின் பெயரால் மறுக்கப் பட்டது. இந்தியாவில் சமஸ்கிருதம் கோலோச்சிய காலங்களில் சூத்திரர்கள் அதனைப் படிப்பது தடுக்கப் பட்டது. அமெரிக்கக் கண்டங்களில், கருப்பின அடிமைகள் ஐரோப்பியரின் மொழிகளை கற்பது தடை செய்யப் பட்டிருந்தது.

உலகில் பல நாடுகளில், அரசர்களின் மொழியும், குடிமக்களின் மொழியும் வேறு வேறாக இருந்துள்ளன. அதற்குப் பல உதாரணங்களைக் காட்டலாம். இங்கிலாந்து அரச வம்சத்தினர் பிரெஞ்சு மொழி பேசினார்கள். நோர்வீஜிய பிரபுக்கள் டேனிஷ் மொழி பேசினார்கள். ஹங்கேரி நாட்டு மேட்டுக்குடியினர் ஜெர்மன் மொழி பேசினார்கள். இந்தியாவில் மொகலாயர்கள் பாரசீக மொழி பேசினார்கள். இவை எதுவும் அவர்களின் சொந்த மொழியும் அல்ல, அதே நேரத்தில் அந்த நாடுகளில் வாழ்ந்த மக்களாலும் பேசப் படவில்லை.

ஐரோப்பாவில்,19 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட, அரசியல் பொருளாதார மாற்றங்களின் காரணமாகத் தான், உலகம் முழுவதும் தேசிய மொழிகளின் அவசியம் உணரப் பட்டது. ஆனால் அந்த தேசிய மொழிக் கொள்கை, வட்டார மொழிகளின் அழிவின் மேல் நிலைநாட்டப் பட்டது.


இந்தக் கட்டுரை எழுத உதவிய உசாத்துணை நூல்கள்: 
1.The International Institute for Asian Studies (IIAS) 
2.A History of Tinnevelly, Bishop R. Caldwell 
3.The Hindus: An Alternative History, Wendy Doniger


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Wednesday, July 16, 2014

தமிழினப் படுகொலைக்கு கவலை தெரிவித்து ஓர் இஸ்ரேலியன் கூட அழவில்லை

பதினெட்டு வருடங்களுக்கு முன்னர், நான் நெதர்லாந்து வந்த புதிதில், ஆம்ஸ்டர்டாம் நகரின் மத்தியில் உள்ள தங்கு விடுதி (Hotel) ஒன்றில் சில மாதங்கள் வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த ஹோட்டலின் உரிமையாளர் ஓர் இஸ்ரேலிய யூதர். பணியாட்களில் பல தமிழர்களும் இருந்தனர். இஸ்ரேலில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தான், பெரும்பாலும் அந்த ஹோட்டலில் தங்குவார்கள். ஓய்வு நேரங்களில் அவர்களோடு உரையாடும் சந்தர்ப்பம் கிடைக்கும்.

இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளும் சாதாரணமான அப்பாவி மக்கள் தான். தங்களுடைய நாட்டில் நடக்கும் உள்நாட்டுப் போர் மாதிரி, உலகில் வேறெந்த நாட்டிலாவது நடக்கிறதா என்று கேட்குமளவிற்கு அப்பாவிகள். அவர்களுக்கு பாலஸ்தீனர்களின் பிரச்சினை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. பலர் பாலஸ்தீனர்களை தமது வாழ்நாளில் கண்டிருக்கவில்லை. இஸ்ரேலிய அரசு வழங்கும் ஒரு பக்கச் சார்பான தகவல்களை உண்மை என்று நம்புகிறவர்கள். தங்களது பக்க இழப்புகளை பற்றி மட்டுமே மிகைப் படுத்தி பேசத் தெரிந்தவர்கள்.

இஸ்ரேலியர்கள் எங்களைப் பற்றியும் விசாரிப்பார்கள். எங்கள் எல்லோரையும் இந்தியர்கள் என்று நினைத்துக் கொண்டு பேசுவார்கள். இந்தியாவில் உள்ளவர்கள் ஹிந்தி (மட்டும்) பேசுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். (இஸ்ரேலில் சில நேரம் ஹிந்தி திரைப் படங்கள் திரையிடுவார்களாம்.) ஆனால், உலகில் தமிழ் என்ற மொழி இருப்பதே அவர்களுக்கு தெரியாது. ஸ்ரீலங்கா என்றால், அது எங்கே இருக்கிறது என்பது கூடத் தெரியாது. உலகில் அப்படி ஒரு நாடு இருப்பதையே அப்போது தான் கேள்விப் பட்டிருப்பார்கள். உலக வரை படத்தில் இலங்கையை தொட்டுக் காட்டினால்; "ஒ அதுவா! இவ்வளவு காலமும் அது இந்தியாவின் ஒரு பகுதி என்று நினைத்துக் கொண்டிருந்தேன்...." என்று சொல்வார்கள்.

அந்தளவு விடய ஞானம் கொண்ட அப்பாவி இஸ்ரேலிய யூதர்களிடம்: 
"முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலை நடந்து கொண்டிருந்த நேரத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? 
- "எங்களுக்காக குரல் கொடுத்தீர்களா?" 
- "தமிழினப் படுகொலையை நிறுத்த வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் செய்தீர்களா?" 
-  "ஐ.நா. வில் கதைத்தீர்களா?" 
இது போன்ற கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தால், எம்மைப் போன்ற முட்டாள்கள் உலகில் வேறு யாரும் இருக்க முடியாது. துரதிர்ஷ்டவசமாக இன்றைக்கும் பல தமிழ் அரசியல் ஆர்வலர்கள் பலர், குறிப்பாக வலதுசாரி குறுந் தேசியவாதிகள், அவ்வாறு தான் மடத் தனமாக வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் உயர்கல்வி கற்ற அறிவுஜீவிகள் என்பதும் ஆச்சரியத்திற்குரியது.

"ஈழத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப் பட்ட நேரத்தில், பாலஸ்தீனர்கள் எதுவும் செய்யவில்லை" என்று கூச்சலிடுபவர்கள், எத்தனை வருட காலம் பாலஸ்தீனத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்? அவர்களுக்கு எத்தனை பாலஸ்தீனர்களை தெரியும்? பாலஸ்தீனர்கள் அப்படிச் செய்யவில்லை, இப்படிச் செய்யவில்லை என்று எதை ஆதாரமாக வைத்துக் கொண்டு கதைக்கிறார்கள்?

பாலஸ்தீனர்களை குறை கூறும் பெரும்பாலானோரின் மனதில் மறைந்திருப்பது, இந்து அல்லது கிறிஸ்தவ மதவெறியும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்மமும் தான். பாலஸ்தீனம், மட்டுமல்ல காஷ்மீரில் கொல்லப் படும் மக்களும் அவர்கள் கண்களுக்கு முஸ்லிம்களாக மட்டும் தான் தெரிகின்றனர். "முள்ளிவாய்க்காலுக்கு பிறகு தான் நாங்கள் இப்படி மாறினோம்" என்று சொல்வது ஒரு மிகப் பெரிய பொய். அது வெறும் நொண்டிச் சாட்டு மட்டுமே. முள்ளிவாய்க்காலுக்கு முன்னரும், அவர்கள் பாலஸ்தீனர்களுக்கு எதிராகத் தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இருபது வருடங்களுக்கு முன்னரும், பாலஸ்தீனத்தில் மக்கள் கொல்லப் படும் சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன. பாலஸ்தீன பிரச்சினை பற்றிய தகவல்களுக்கு, தொலைக்காட்சி செய்திகளில் எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இன்று ஈழத் தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் பலர், அப்போதும் பாலஸ்தீனர்களுக்காக கவலைப் படவில்லை.

ஒவ்வொரு தடவையும் இஸ்ரேலில் நடக்கும் யுத்தம் காரணமாக பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப் பட்டால், அதன் எதிரொலியாக ஐரோப்பிய நகரங்களில் இடதுசாரி அமைப்புகள் ஒழுங்கு படுத்தும் ஆர்ப்பாட்டங்கள்  நடைபெறும். அந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள வருமாறு, எத்தனையோ தடவைகள், எனக்குத் தெரிந்த (ஈழத்) தமிழ் நண்பர்களிடம் கேட்டுள்ளேன். இடதுசாரி சார்புள்ள ஒன்றிரண்டு தமிழர்கள் மட்டுமே வருவார்கள். மற்றவர்கள் ஏதாவது நொண்டிச் சாட்டு சொல்லி வர மறுப்பார்கள். சிலர் தங்களுக்கு பிற நாட்டு பிரச்சினைகளில் ஆர்வம் இல்லை என்று நேரடியாகவே கூறுவார்கள்.

தமிழர்கள் மட்டும் தான் அப்படி என்று சொல்ல முடியாது. அனேகமாக, வேற்றின மக்களும் அப்படித் தான். பாலஸ்தீனம் அல்லது ஈராக் போர் தொடர்பான ஆர்ப்பாட்டங்களில் பெருமளவு அரபு- முஸ்லிம்கள் கலந்து கொள்வார்கள். ஆனால், நேட்டோ படைகள் செர்பியா மீது குண்டு போட்டதற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களில், அவர்களில் ஒருவர் கூட வரவில்லை. செர்பியா மீதான குண்டுவீச்சுக்கு எதிராக பெருமளவில் வந்த செர்பியர்கள், பாலஸ்தீன ஆர்ப்பாட்டத்திற்கு வர மாட்டார்கள்.

அதே மாதிரித் தான், குர்திஷ் பிரச்சினைக்கு நடக்கும் ஆர்ப்பாட்டங்களில் குர்திஷ் மக்கள் மட்டும் கலந்து கொள்வார்கள். இலங்கையில் நடந்த போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் தமிழர்கள் மட்டுமே வந்திருப்பார்கள். இவ்வாறு தான், எல்லா தேசிய இனங்களும், தத்தமது தேசிய கிணறுகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

பல நாடுகளை சேர்ந்த இடதுசாரி அரசியல் ஆர்வலர்கள் மட்டுமே, எல்லா ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொள்வார்கள். ஈராக், ஈழம், குர்திஸ்தான், பாலஸ்தீனம் என்று எங்கெல்லாம் ஒடுக்கப் படும் மக்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடக்கின்றதோ, அங்கெல்லாம் இடதுசாரி ஆர்வலர்களை நீங்கள் காணலாம். ஐரோப்பிய இடதுசாரிகள் மட்டுமல்ல, ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க இடதுசாரிகளும் பாரபட்சமின்றி எல்லா ஊர்வலங்களிலும் கலந்து கொள்வார்கள். 

தமிழர்களான நாங்கள், உலகில் எந்த இனம் படுகொலை செய்யப் பட்டாலும் அதற்காக கவலைப் பட மாட்டோம். ஆனால், உலகம் முழுவதும் எங்களுக்காக அழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையான அரசியல் தார்மீகம் என்பது தெரியவில்லை. தமிழர்கள் இது வரை காலமும் அமெரிக்காவை நம்பி ஏமாந்தார்கள். இனிமேலாவது சர்வதேச மட்டத்தில் தமது நட்புச் சக்திகள் யார் என்பதைக் கண்டுணர வேண்டும்.

Saturday, October 12, 2013

தமிழரிடம் உள்ள ஒற்றுமை உணர்வு, தமிழ் தேசியவாதிகளிடம் கிடையாது!


"தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழ் தேசியத்தின் கீழ் ஒற்றுமையாக அணி திரள வேண்டும். ஒற்றுமையின்மையே தமிழர்களின் வீழ்ச்சிக்கு காரணம்...." 


தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைக்கும், தமிழ் இன ஒற்றுமையே தீர்வு என்று வலியுறுத்தும் தமிழ் தேசியவாதிகள், தமக்குள் ஒற்றுமையாக இருக்கின்றனரா? தமிழ் மக்கள், தமிழ் தேசியத்தை தவிர, வேறெந்த அரசியல் கொள்கையையும் பின்பற்றி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். தமிழர்களில் சிலர் இடதுசாரிகளாக இருப்பது கூட அவர்களுக்கு பிடிப்பதில்லை. (இதன் மூலம், தமிழ் தேசியவாதிகள் தம்மை வலதுசாரிகளாக காட்டிக் கொள்கின்றனர்.) கம்யூனிசம், சோஷலிசம், தலித்தியம், பெண்ணியம் என்பன எல்லாம் தமிழர்களின் ஒற்றுமையை குலைத்து விடும் என்று பதறித் துடிப்பார்கள். உண்மையில் ஒற்றுமையாக ஒன்று சேர வேண்டியவர்கள் தமிழ் தேசியவாதிகள் தான். அவர்கள் தமது தவறை மறைப்பதற்காகவே, தமிழ் மக்கள் மேல் பழியைப் போடுகின்றனர்.

தமிழ் தேசியம் என்றைக்காவது தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்திருக்கிறதா? உண்மையில், தமிழ் மக்கள் ஒற்றுமையாக சேர்ந்து நின்ற சந்தர்ப்பங்கள் வரலாற்றில் நிறைய உண்டு. ஆனால், அப்போதெல்லாம் தமிழ் தேசியவாதிகள் தமக்குள் மோதிக் கொண்டதன் மூலம், எதிரிக்கு தமது ஒற்றுமையின்மையை பறைசாற்றிக் கொண்டார்கள். ஈழப்போர் தொடங்கிய காலத்தில், நகைச்சுவைத் துணுக்கு ஒன்று ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. "ஸ்ரீலங்கா அரசு போராளிக் குழுக்களை அழிப்பதற்கு அதிக சிரமப் படத் தேவையில்லை. அவர்கள் கையில் தமிழீழத்தை கொடுத்து விட்டால் போதும். அதற்குப் பின்னர் தமக்குள் அடிபட்டு அழிந்து, தமிழீழத்தை மீண்டும் சிங்களவனிடம் கொடுத்து விடுவார்கள்."

தமிழ் நாட்டில், அண்ணாதுரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகமே தமிழ் தேசியக் கொள்கையை முதன் முதலாக வெகுஜன மயப்படுத்தியது. அவர்கள் தான் முதன்முதலாக தனித் தமிழ்நாடு கோரிக்கையை எழுப்பினார்கள். ஆனால், திமுக கூட, திராவிடர் கழகத்தின் ஒற்றுமையை சீர்குலைத்து வெளியே வந்த கட்சி தான். அதற்கு அவர்கள் பல கொள்கை முரண்பாடுகளை கூறிக் கொண்டார்கள். பிற்காலத்தில், கருணாநிதி, எம்ஜிஆருக்கு இடையிலான பிணக்கு காரணமாக, அதிமுக உருவானது. தமிழர்களின் ஒற்றுமை மேலும் சிதைந்தது. அதற்குப் பின்னர், வைகோ பிரிந்து சென்றார். இந்தப் பிரிவினைகளுக்கு எந்தக் கொள்கை முரண்பாடும் காரணம் அல்ல.

ஈழத்திலும் அது தான் நிலைமை. ஆரம்பத்தில் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் தமிழ்க் காங்கிரஸ் மட்டுமே இருந்தது. அன்றைய தமிழ்க் காங்கிரசின் அரசியலுக்கும், இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியலுக்கும் இடையில் எந்த ஒற்றுமையும் கிடையாது. அரசாங்கத்தில் பதவிகளை பெற்றுக் கொள்வதும், தமிழ் மேட்டுக்குடி வர்க்க நலன்களை பராமரிப்பதுமே அன்றைய தமிழ்க் காங்கிரசின் பிரதானமான செயற்பாடுகளாக இருந்துள்ளன.

செல்வநாயகம் தலைமையில் ஒரு குழுவினர், தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று தமிழரசுக் கட்சி உருவாக்கினார்கள். அப்போது சில கொள்கை முரண்பாடுகள் பற்றி பேசிக் கொண்டார்கள். செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சியே, இன்றைய தமிழ் தேசியக் கோட்பாட்டுக்கு அஸ்திவாரம் போட்டது எனலாம். அந்தக் கட்சியே, முதன் முதலாக தமிழ் மொழி பேசும் மக்கள் எல்லோரையும் ஒரே அரசியலின் கீழ் ஒன்று சேர்த்தது. சாதிய முரண்பாடுகள் கூர்மை அடைந்திருந்த அந்தக் காலங்களில், தாழ்த்தப்பட சாதியினர் பெருமளவில் இடதுசாரிக் கட்சிகளையே ஆதரித்து வந்தனர். இடதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கு வளர்வதை தடுப்பதும், தமிழரசுக் கட்சியின் முக்கியமான நோக்கமாக இருந்துள்ளது.

குறைந்தது ஒரு தசாப்த காலமாகவேனும், தமிழ்க் காங்கிரசும், தமிழரசுக் கட்சியும் ஒற்றுமை இல்லாமல், ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டார்கள். தேர்தல் காலங்களில் ஒருவரை மற்றவர் திட்டித் தீர்த்தார்கள். ஆனால், காலப்போக்கில் ஒருமையின் அவசியத்தை அவர்கள் புரிந்து கொண்டார்கள். எழுபதுகளில் இரண்டு கட்சிகளும் ஒன்று சேர்ந்து, தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய கட்சியை உருவாக்கினார்கள். அப்போது ஈழத் தமிழ் மக்கள் ஒற்றுமையாக கூட்டணியை ஆதரித்தார்கள். 1977 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், பெரும்பான்மை தமிழ் வாக்காளர்களின் பலத்தில் வென்றார்கள். சிங்களவர்களே பொறாமைப் படும் அளவிற்கு, வடக்கு கிழக்கு மாகாணத்தின் அனைத்து ஆசனங்களையும் கைப்பற்றி, பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியாக அமர்ந்தார்கள்.

அந்த ஒற்றுமை நீண்ட காலம் நிலைக்கவில்லை. யாரும் எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த சக்திகளினால், தமிழ் தேசியத்தின் ஒற்றுமை குலைக்கப் பட்டது. கொள்கை முரண்பாடு காரணமாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அணியினர் தீவிரவாதிகளாக மாறினார்கள். தமிழ் மாணவர் பேரவை, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற குழுக்கள் ஆயுதப் போராட்டத்தை விரும்பின. மிதவாத தமிழ் தேசியவாதிகளுக்கும், தீவிரவாத தமிழ் தேசியவாதிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றி, இரண்டு தரப்பினரும் பகைவர்கள் ஆனார்கள். இரண்டு தரப்பினரும், தாமே உண்மையான தமிழ் தேசியவாதிகள் என்று அறிவித்துக் கொண்டனர்.

தீவிர தமிழ் தேசியவாதிகள் கைகளில் ஆயுதங்கள் இருந்ததால், மிதவாத தமிழ் தேசிய தலைவர்களை துரோகிகள் என்றழைத்து சுட்டுக் கொன்றனர். அதனால், மிதவாத தமிழ் தேசியவாதிகள் தமது பாதுகாப்பிற்காக சிங்கள அரசை சார்ந்து வாழ நிர்ப்பந்திக்க்கப் பட்டனர். சில இடங்களில், கூட்டணித் தலைவர்கள், பிரமுகர்கள், தீவிரவாத இளைஞர்களை பொலிசிற்கு காட்டிக் கொடுத்த சம்பவங்களும் நடந்துள்ளன. மெல்ல மெல்ல ஆயுதமேந்திய குழுக்களின் ஆதிக்கம் மேலோங்கியதால், தமிழ் மக்களும் கூட்டணியை விட்டு விலகி, ஆயுதபாணிக் குழுக்களை ஆதரித்தனர்.

தமிழ் தேசிய ஆயுதபாணிக் குழுக்களுக்கு இடையில் கூட ஒற்றுமை இருக்கவில்லை. பிரபாகரன் சில வருட காலம் டெலோ வில் இருந்தார். பின்னர் பிரிந்து சென்று புலிகள் அமைப்பை ஸ்தாபித்தார். பதினைந்து வருடங்களுக்குப் பின்னர், பிரபாகரன் தலைமையிலான புலிகள், டெலோ இயக்கத்தை அழித்து விட்டனர். ஆரம்ப காலத்தில், புலிகள் இயக்க தலைவராக பதவி வகித்த உமா மகேஸ்வரன், பின்னர் பிரிந்து சென்று புளொட் என்ற இயக்கத்தை உருவாக்கினார். அதற்கு எந்தக் கொள்கை முரண்பாடும் காரணம் அல்ல. ஊர்மிளா என்ற பெண் போராளியின் மரணம் தொடர்பாக எழுந்த சர்ச்சையின் காரணமாகவே, உமா மகேஸ்வரன் தலைமையில் ஒரு குழு பிரிந்து சென்றது.

புளொட் இயக்கமும் ஒற்றுமையாக இயங்கவில்லை. உமா மகேஸ்வரனின் தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்த தீப்பொறி குழுவினர் பிரிந்து சென்றனர். இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச் சாத்திடப் பட்ட காலத்தில், புளொட்டில் இருந்து இன்னொரு குழுவினர் பிரிந்து சென்று, ஈ.என்.டி.எல்.எப். என்ற பெயரில், இந்திய இராணுவத்தின் கூலிப் படையாக இயங்கினார்கள். நீண்ட காலமாக, புலிகள் கட்டுக்கோப்பான அமைப்பாக, ஒற்றுமைக்கு பெயர் பெற்று விளங்கியது. ஆனால், இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்னர், புலிகளின் இரண்டாம் மட்ட தலைவர் மாத்தையா, RAW உளவாளி என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டார். அது ஒரு தனி மனிதனுக்கு எதிரான நடவடிக்கையாக இருக்கவில்லை. மாத்தையாவுக்கு விசுவாசமான போராளிகளும் கைது செய்யப் பட்டனர். சில நூறு பேரைக் கொண்ட மாத்தையா குழுவினர் தப்பிச் சென்று, சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து கொண்டார்கள்.

நோர்வே அனுசரணையாளராக செயற்பட்ட சமாதான பேச்சுவார்த்தை நடந்த காலத்தில், கிழக்கு மாகாண தளபதியான கருணா தலைமையில் ஒரு குழு பிரிந்து சென்றது. இரண்டு பிரிவுகளுக்கு இடையில் நடந்த ஆயுத மோதல்கள் காரணமாக, தோல்வியடைந்து பின்வாங்கிய கருணா குழுவினர் சிங்கள அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டனர். தீவிர தமிழ் தேசியவாதிகள் அரசாங்கத்துடன் சேர்வது என்பதுகளிலேயே தொடங்கி விட்டது. வடக்கு, கிழக்கில் புலிகளினால் தடை செய்யப் பட்ட, டெலோ, புளொட், ஈபிஆர்எல்ப் ஆகிய இயக்கங்கள், தமது பாதுகாப்பிற்காக சிங்கள இராணுவத்தின் தயவில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஸ்ரீலங்கா இராணுவம், புலிகளுக்கு எதிரான போரில் அவர்களை கூலிப் படைகளாக பயன்படுத்தியது.

ஈழத் தமிழ் தேசியவாதிகள் தமக்குள் ஒற்றுமை இல்லாமல், ஒருவரை ஒருவர் கொன்று குவித்த காலத்தில், தமிழ் தேசிய ஆதரவாளர்கள் "தமிழ் மக்களின் ஒற்றுமையின்மை" பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் போட்டியிட்ட காலத்தில், அவர்களை ஒற்றுமையாக ஆதரித்த தமிழ் மக்கள் தான், பின்னர் புலிகளின் ஆயுதப் போராட்டத்தையும் ஆதரித்தார்கள். 1995 ஆம் ஆண்டு, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ் குடாநாட்டை சிறிலங்காப் படைகள் கைப்பற்றின. "யாழ்ப்பாண தமிழரின் சனத்தொகையில் மிகக் குறைந்த சதவீதமானோரே புலி இயக்கப் போராளிகளாக இருந்ததாகவும், எல்லோரும் ஒன்று சேர்ந்து போராடி இருந்தால், சிங்களப் படைகளின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி இருக்கலாம் என்றும்" புலிகளின் பிரச்சாரகர்கள் தெரிவித்தனர்.

2009 ல் நடந்த இறுதிப்போரில் வன்னியில் இருந்த அனைத்து தமிழ் மக்களும், ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து போராடினார்கள். இறுதி யுத்தம் தொடங்குவதற்கு முன்னரே, வீட்டுக்கொரு பிள்ளை போராளியாக வேண்டும் என்று உத்தரவிட்ட புலிகள், கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டனர். பல குடும்பங்களில், பிள்ளைகள் பலவந்தமாக பிடித்துச் சென்று போராளிகளாக்கப் பட்டதை, இன்றைக்கும் புலி ஆதரவாளர்கள் மறுத்து வருகின்றனர். "வன்னியில் வாழ்ந்த தமிழ் மக்கள், உணர்வுபூர்வமாக, தாமாகவே விரும்பிச் சென்றனர்." என்றே சொல்லி வருகினறனர். அப்படியானால், தமிழ் மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக, ஒன்று சேர்ந்து தான் போராடி இருக்கிறார்கள்.

தமிழ் மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து போராடிய போதிலும், போரில் ஏற்பட்ட தோல்வி எங்கிருந்து வந்தது? அதற்கு, கருணா குழு, ஈபிடிபி போன்ற அரச அடிவருடிகளான தமிழ் கூலிப் படையினரை குற்றஞ் சாட்டுகின்றனர். அவர்கள் எல்லோரும், முன்னொரு காலத்தில் தமிழ் தேசியவாதிகளாக இருந்தவர்கள். அதாவது, தமிழ் மக்கள் என்றைக்கும் ஒற்றுமையாகத் தான் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்குள் பிரிவினைகள் இருக்கவில்லை. ஆனால், தமிழ் தேசியவாதிகளுக்கு இடையில் தான் ஒற்றுமை இல்லை. அது தான் முக்கியமான பிரச்சினை.

புலிகளுக்குப் பின்னர், தமிழ் தேசியவாதிகளின் ஒரேயொரு நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஒற்றுமை இல்லை என்பதை, இங்கே சொல்லத் தேவை இல்லை. கூட்டமைப்பு என்பது பல கட்சிகளின் சேர்க்கை. வட மாகாண சபைத் தேர்தலில் தமிழர் ஒற்றுமையின் முக்கியத்துவம் பற்றி பேசி வாக்குக் கேட்டார்கள். அறுதிப் பெரும்பான்மை தருமாறு கெஞ்சினார்கள். தமிழ் மக்களும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து கூட்டமைப்புக்கு தமது ஓட்டுக்களை அள்ளிக் கொடுத்தார்கள். அனால், தேர்தல் முடிந்த பின்னர், மாகாண சபை அரசாங்கம் அமைப்பது தொடர்பாக இழுபறிப் படுகிறார்கள். அமைச்சர் பதவிக்காக சண்டை போடுகிறார்கள். உண்மையில், தமிழ் தேசியவாதிகள் எமக்கு போதிப்பதற்கு மாறாகவே யதார்த்த நிலைமை உள்ளது. தமிழ் மக்கள் ஒற்றுமையாகத் தான் இருக்கின்றனர். ஆனால், தமிழ் தேசியவாதிகளுக்குள் தான் ஒற்றுமை இல்லை.

புலிகளின் அழிவுக்குப் பின்னர், அதே அரசியலை வேறொரு தளத்தில் முன்னெடுத்து வரும் தமிழ்நாட்டு தமிழ் தேசியவாதிகளும் ஒற்றுமை இல்லாமல் பிரிந்து நிற்கின்றனர். ஈழப்போர் நடந்த காலத்தில், தமிழ் தேசியம் தமது உயிர்மூச்சு என்று பேசிக் கொண்டிருந்த, வைகோ, ராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன் ஆகியோர், ஆளுக்கொரு கட்சிகளாக பிரிந்து நிற்கின்றனர். "அவர்கள் ஏன் இன்று வரையில் ஒரே கட்சிக் கொடியின் கீழ் ஒன்று சேரக் கூடாது?" என்ற கேள்வியை யாரும் கேட்கவில்லை.

தேர்தலில் போட்டியிடாத, தீவிர தமிழ் தேசிய அமைப்புக்களான, நாம் தமிழர், மே 17 போன்றன கூட, ஒரே பெயரில், ஒரே அமைப்பாக இயங்குவது பற்றி இன்று வரையில் ஆலோசிக்கவில்லை. ஆனால், எல்லோரும் ஒரே குரலில், ஒரே கோஷத்தை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். "தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை. அதுவே பிரச்சினைகளுக்கு காரணம்." தமிழ் மக்களை குற்றம், குறை கூறுபவர்கள், ஒரு தடவை தங்களைத் தாங்களே சுய விமர்சனம் செய்து கொள்வது நல்லது. 

Saturday, January 21, 2012

தமிழரின் பூர்வீகம் ஆப்பிரிக்கா! இந்துக்களின் பூர்வீகம் துருக்கிஸ்தான்!!

"இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது" என்ற கட்டுரைத் தொடரில், இந்துக்கள் (ஆரியர்கள்) மத்திய ஆசியாவில் இருந்து வந்து குடியேறிய துருக்கி இனத்தவர்கள் என்று பல விளக்கங்களுடன் எழுதி இருந்தேன். (இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!) அப்போது எனது கட்டுரைகளை நிராகரித்த நண்பர்கள், இந்த ஆவணப் படத்தை பார்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். தமிழர்கள், ஆபிரிக்காவில் இருந்து வந்து குடியேறிவர்கள் என்பதையும், முன்னர் ஒரு தடவை ஆப்பிரிக்கா தொடர்பான கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். (ஆப்பிரிக்காவில் தமிழரின் வேர்கள்) தமிழ் மொழியை, ஐரோப்பிய மொழிகளுடன் ஒப்பிட்டு மகிழும் தமிழினவாதிகள், எந்தவொரு ஆப்பிரிக்க மொழியுடனும் ஒப்பிட நினைத்துக் கூட பார்ப்பதில்லை. தமிழரின் ஆப்பிரிக்க தொடர்பை கண்டுகொள்ளாமல், "முன் தோன்றிய மூத்த குடி" என்று பெருமை பேசுவதால் பயனென்ன விளைந்திடப் போகின்றது? தமிழர்களின் ஆப்பிரிக்க பூர்வீகம் குறித்து ஆராய்வதற்கு, எந்தவொரு தமிழ் அறிஞரும் முன்வராதது ஆச்சரியத்தை அளிக்கின்றது. இந்த நிலைமை இனி வருங்காலத்தில் மாற வேண்டும். "நாம் தமிழ் பேசும் ஆப்பிரிக்க இனத்தவர்கள்" என்று பெருமையாக பேசிடும் காலம் வர வேண்டும்.

தமிழரின் முன்னோர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்பது மரபணு மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பழங்குடியினத்தை சேர்ந்த விருமாண்டி என்பவரின் மரபணு, முதலாவது ஆப்பிரிக்க குடியேறிகளின் டி.என்.ஏ. என்பது ஆராய்ச்சின் முடிவில் தெரிய வந்துள்ளது. சுமார் எண்பதாயிரம் வருடங்களுக்கு முன்பே, ஆதித் தமிழர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறி இருக்கலாம். அவர்கள் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து தமிழ் மொழியை பேசுபவர்களாக மாறியிருக்கலாம். இனம் என்பதும், மொழி என்பது இரண்டு வேறு பட்ட விடயங்கள். ஒரு இனத்தை சேர்ந்த மக்கள், தாம் பேசும் மொழியையும், மதத்தையும் பிற்காலத்தில் மாற்றிக் கொண்டிருப்பார்கள்.


இந்துக்களின் புனித நூலான ரிக்வேதம், அமிர்தம் என்று குறிப்பிடும் சோம பானம், இன்றும் ஆப்கானிஸ்தானில் கிடைக்கிறது! சோம பானம் தயாரிக்க பயன்படும் சோமா செடி, ஆப்கானிஸ்தானில் மட்டுமே வளர்கின்றது. வட இந்திய "இந்துக்களும்", ஆப்கானிய "முஸ்லிம்களும்" அடிப்படையில் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க பல ஆதாரங்கள் உள்ளன. மொழியல் ஆய்வின் பிரகாரம், சமஸ்கிருதம் பேசும் ஆரியர்களும், ஐரோப்பியரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள். சமஸ்கிருதம், கிரேக்கம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் காணப்படும் ஒரே மாதிரியான சொற்கள் அதனை நிரூபிக்கின்றன. உதாரணத்திற்கு, சமஸ்கிருதத்தில் குதிரையை குறிக்கும் "அஸ்வா" என்ற சொல், லிதுவேனியா மொழியிலும் ஒன்றாக உள்ளது.

துருக்மெனிஸ்தான், காரகோரம் பாலைவனத்தில் இந்து ஆரியர்களின் நாகரீகம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த மன்னரின் புதைகுழி பல தகவல்களை வழங்குகின்றது. இந்தியாவில், சிந்து வெளி நாகரிக காலத்தில் குதிரைகளின் பாவனை அறியப் படவில்லை. வந்தேறுகுடிகளான ஆரியராலேயே அவை அறிமுகப் படுத்தப் பட்டன. துருக்மேநிச்தானில் மன்னரின் புதைகுழியில் குதிரையின் எலும்புக்கூடும், ரிக் வேதம் விபரிப்பது போன்ற ரதங்களும் கண்டெடுக்கப் பட்டன. சோம பானம் தயாரிக்க பயன்படுத்தும் இடமும் அங்கே காணப்படுகின்றது. இந்தியாவின் இந்து ஆரியர்கள், துருக்கி மொழி பேசும் மக்கள் வாழும் மத்திய ஆசியப் பகுதிகளில் இருந்து ஈரானை நோக்கி நகர்ந்துள்ளனர். அங்கிருந்து வட இந்தியாவில் குடியேறி உள்ளனர்.





தமிழர், இந்துக்களின் பூர்வீகம் தொடர்பாக எழுதிய கட்டுரைகள்:
* ஆப்பிரிக்காவில் தமிழரின் வேர்கள்
* இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!

Thursday, November 17, 2011

ஈரான் நாட்டு பல்லவர்கள் தமிழரான வரலாறு

ஐரோப்பியர்கள் அறிமுகப் படுத்திய இனத் தேசியவாதம் என்ற கற்பிதம் செயற்கையானது. இது பல தடவை நிரூபிக்கப் பட்டு வந்துள்ளது. ஒவ்வொரு இனமும் பழம் பெருமை பேசத் தெரிவு செய்யும் சரித்திர நாயகர்கள், அந்தப் பெருமைக்கு தகுதியுடையவர் தானா, என்பது சந்தேகமே. இன்றைக்கு இருக்கும் மொழி சார்ந்த இனவுணர்வு, நூறாண்டுகளுக்கு முன்னர் காணப்படவில்லை. 

மதத்தை மாற்றுவது போல, மொழியை மாற்றிக் கொள்வதும் காலங்காலமாக நடைபெற்று வரும் மாற்றங்கள். சாதாரண குடிமக்கள் மட்டுமல்லாது, ஆட்சியாளர்கள் கூட அவ்வாறு தான் வாழ்ந்துள்ளனர். அதற்கு சிறந்த உதாரணம், இன்று "தமிழர்கள்" என அறியப்படும் பல்லவர்கள். 

சேர, சோழ, பாண்டியர்கள் என்ற மூவேந்தர்களுடன் பல்லவர்களையும் பண்டைய தமிழ் மன்னர்களாக உருவகித்துக் காட்டும் போக்கு, இனப்பெருமை பேசுவோரால் முன்னெடுக்கப் படுகின்றது. "தமிழ் மன்னர்கள்" எல்லாம், உண்மையிலேயே தமிழர்களா, அல்லது தமிழ் உணர்வுடன் ஆட்சி செய்தனரா, என்பது குறித்தெல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை.

பல்லவர்கள் என்றவுடன், சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரம் சிற்பங்கள் நினைவுக்கு வரும். பல்லவர் காலத்து கோயில்களும், சிற்பங்களும் இன்றைக்கும் அழியாமல் உள்ளன. கருங்கல்லில் வடிக்கப் பட்ட சிற்பங்கள், இந்து புராணக் கதைகளை நினைவூட்டுகின்றன. இவற்றை வைத்து பல்லவர்கள் நம்மவர்கள் என்று கருதிக் கொள்கிறோம். 


மாமல்லபுரம் கோயில்களை குடைந்தவர்களும், சிற்பங்களை செதுக்கிய சிற்பிகளும் தமிழ் பாட்டாளி மக்கள் தான். அதில் எந்த வித சந்தேகமுமில்லை. ஆனால், அவற்றை செதுக்குவதற்கு உத்தரவிட்ட மன்னர்கள் தமிழர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சோழர் காலத்து கல்வெட்டுகள் தமிழில் இருக்கையில், பல்லவர் காலத்து கல்வெட்டுகள் பிராமி எழுத்துக்களில் காணப் படுகின்றன. 

இந்தியாவின் கிழக்குப் பகுதியில், சமஸ்கிருதத்திற்கு முன்னர் பேசப்பட்ட பிராமி மொழி, அந்தக் காலத்தில் நாகரீகமடைந்த மொழியாக இருந்துள்ளது. அதுவே பல்லவர்களின் ஆட்சி மொழியாக இருந்திருக்கலாம். பல்லவர்களின் சிற்பங்கள் செதுக்கும் வழக்கம், மாமல்லபுரத்திற்கு மட்டுமே சிறப்பான ஒன்றல்ல.

முதலில் பல்லவரின் ஆட்சிக்குட்பட்ட பிரதேசம் எதுவெனப் பார்ப்போம். இன்றைய ஆந்திரா மாநிலத்தின் தென் பகுதியும், தமிழ் நாடு மாநிலத்தின் வட பகுதியும் பல்லவர்களின் நாடாக இருந்துள்ளது. தென் ஆந்திராவில் உள்ள குண்டூர், வட தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம் என்பன பல்லவர் காலத்தில் குறிப்பிடத் தக்க நகரங்களாக இருந்துள்ளன. 


ஒரு காலத்தில், மகாராஷ்டிரத்தில் இருந்து தெற்கு நோக்கி விரிந்திருந்த சாதுவாகனரின் சாம்ராஜ்யத்தின் மறைவில் தான் பல்லவர்கள் தலையெடுக்கத் தொடங்கினார்கள். பண்டைய இந்தியாவில், சாதுவாகனரின் சாம்ராஜ்யத்திற்குள், இன்றைய இந்திய மாநிலங்களான, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா ஆகியவற்றின் பகுதிகள் அடங்கியிருந்தன, சாதுவாகனரின் ஆட்சியில் பௌத்த மதம் அரச அந்தஸ்துப் பெற்றிருந்தது. 

இன்றைக்கும் ஆந்திராவில், குண்டூருக்கு அருகில் புத்தர் சிலைகளும், வேறு சில பௌத்த மத சின்னங்களும் கண்டெடுக்கப் படுகின்றன. மகாராஷ்டிராவில் தான் அஜந்தா குகை ஓவியங்களும், எல்லோரா சிற்பங்களும் காணப் படுகின்றன. இவை யாவும் பௌத்த மத துறவிகளால் செதுக்கப் பட்டவை. இதற்கெல்லாம் நீங்கள் சரித்திரப் புத்தகங்களை புரட்டிக் கொண்டிருக்கத் தேவையில்லை. சாதாரணமாக, அந்த இடங்களுக்கு சுற்றுலாப் பயணியாக செல்லும் ஒருவர், அறிந்து வைத்திருக்க கூடிய தகவல்கள் இவை.

இன்றைக்கும் புத்தகக் கடைகளில் சூடாக விற்பனையாகும், கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற "சரித்திர நாவல்கள்", வரலாற்றை திரித்து எழுதப் பட்டுள்ளன. கல்கியின் நாவல்களில் வரும் புலிகேசி என்ற "வில்லன்", உண்மையில் இந்தியர்கள் பெருமைப் படக் கூடிய சக்கரவர்த்தி ஆவார். ஆனால், அவர் காலத்தில் பௌத்த, சமண மதங்களுக்கு அரச அங்கீகாரம் கொடுக்கப் பட்டமை, அவரை வில்லனாக காட்டுவதற்கு காரணமாக இருக்கலாம். புலிகேசியின் சாம்ராஜ்யம் வீழ்ந்த பின்னர் தான், "இந்து மதம்" (இந்து என்ற சொல் சர்ச்சைக்குரியது. பொதுவான அர்த்தத்தில் கூறப் படுகின்றது.) தலையெடுத்தது.

பண்டைய காலங்களில், இந்து மதம் பிராமணர்களுக்கு மட்டுமே உரிய ஆதிக்க மதமாக இருந்தது. யாகம் வளர்த்து மிருகங்களை பலி கொடுக்கும் காட்டுமிராண்டித்தனத்தை, வழிபாடாகக் கொண்டிருந்தது. சாதுவாகனரின் ஆட்சிக் காலத்தில், அந்த வழக்கங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டது. 


புலிகேசி காலத்தில் அடங்கியிருந்த பிராமணர்கள், பல்லவர்கள் காலத்தில் தான் மறுபடியும் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. பல்லவர்களும் பிராமணர்கள் என்றொரு சரித்திரக் குறிப்பு தெரிவிக்கின்றது. இந்திய சாதி அமைப்பின் பிரகாரம், அரச பரம்பரையினர் சத்திரியர்களாக கருதப் பட வேண்டும். இருப்பினும், பிராமணர்களும், சத்திரியர்களும் ஆரிய வம்சாவழியை பூர்வீகமாக கொண்டுள்ளனர்.

வரலாற்றில் திராவிடர் என்றொரு இனம் இருந்ததில்லை. அது, ஐரோப்பிய சமூக-விஞ்ஞானிகள் தென்னிந்தியர்களுக்கு சூட்டிய பொதுப் பெயர். ஆனால், ஆரியர், அல்லது அவ்வாறு தம்மை அழைத்துக் கொள்ளும் இனம், இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. கி.பி. 200 க்குப் பின்னர், ஈரானிய சாம்ராஜ்யத்தை நிறுவிய சசானியர்கள் தம்மை ஆரிய இனத்தவர்கள் என அழைத்துக் கொண்டனர். அவர்கள் காலத்தில் தான் ஈரான் என்ற பெயர்ச் சொல்லும் பாவனைக்கு வந்தது. அதாவது, ஈரான் என்றால் "ஆரியர்களின் நாடு" என்று அர்த்தம்!

சசானியர்களுக்கு முன்னர், ஈரானை பார்த்தியர்கள் ஆண்டார்கள். சசானியர்களினதும், பார்த்தியர்களினதும் ஆட்சிப் பரப்பு, இன்றைய பாகிஸ்தான் வரையில் விரிந்திருந்தன. அதற்குமப்பால், இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் அவர்கள் படையெடுத்து சென்றுள்ளனர். இரண்டு அரச பரம்பரையினர் காலத்திலும், மாமல்லபுரத்தில் உள்ளது போன்று சிற்பங்கள் போன்று செதுக்கும் கலை வளர்ந்திருந்தது. மேலும் ஒரு தகவல், உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். 


சசானியர்களினதும், பார்த்தியர்களினதும் ஆட்சிக் காலத்தில், பெரும்பான்மை ஈரானிய குடிமக்கள் பேசிய மொழியின் பெயர், "பல்லவ மொழி"! அரேபியரின் இஸ்லாமியப் படையெடுப்பின் பின்னர், பல்லவ மொழி ஏறக்குறைய அழிந்து விட்டது. இன்றைய ஈரானியர்கள் பேசும் பார்சி மொழியில், நிறைய அரபுச் சொற்கள் கலந்துள்ளதால், புதிய மொழி போன்று தோற்றமளிக்கின்றது.

ஈரானியர்களுக்கும், வட-இந்தியர்களுக்கும் இடையில் மிக அதிகமான கலாச்சார ஒற்றுமைகள் காணப்படுகின்றன. பார்சி, சமஸ்கிருதம், உருது, ஹிந்தி எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள மொழிகள். இவற்றில் ஒரு மொழி தெரிந்தவர், இன்னொன்றை பயில்வது இலகு. மார்ச் 21 , அல்லது அதற்கு பிந்திய நாள், ஈரானில் புது வருடமாகவும், வட இந்தியாவில் ஹோலிப் பண்டிகையாகவும் கொண்டாடப் படுகின்றது. 


இஸ்லாத்தின் வருகைக்கு முந்திய ஈரானிய மதக் கதைகள், இந்து மதக் கதைகளை ஒத்துள்ளன. மித்ரா, வருணா, போன்ற கடவுளர்கள் ஒரே பெயரில் வந்தாலும், அவர்களைப் பற்றிய கதைகள் சிறிது மாறு படுகின்றன. இந்துக்களின் "ரிக் வேதம்", ஈரானியர்களின் "அவெஸ்தா கதா" இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர்களுக்கு இந்த உண்மை புரியும். 

சுருக்கமாக, இந்து மதமும், ஈரானிய மதமும் ஒரே மூலத்தில் இருந்து வந்திருக்க வேண்டும் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். இந்துக்களான பல்லவர்கள், ஈரானியர்களாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்பதை நிறுவுவதற்கு இது போதும்.

பண்டைய ஈரானிய மன்னர்கள் போரில் கைப்பற்றும் நாடுகளில், தமது மதத்தையோ, அல்லது மொழியையோ திணிக்கவில்லை. உள்நாட்டு மக்களின் மொழியை, மதத்தை அங்கீகரிப்பதன் மூலம், சிறந்த முறையில் அவர்களை ஆள முடியும் என்று நம்பினார்கள். இல்லாவிட்டால், கிரேக்கம் முதல் இந்தியா வரையிலான, ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை அவ்வளவு சுலபமாக நிர்வகித்திருக்க முடியாது. 


ஈரானிய ஆட்சியாளர்கள், "நெருப்பை வணங்கும், சரதூசரின் தத்துவங்களை பின்பற்றும்" மத நம்பிக்கையாளர்கள். ஆனால், அவர்கள் ஆக்கிரமித்த நாடுகளில், தமது மதத்தை தமக்குள்ளே மட்டும் வைத்துக் கொண்டார்கள். ஈரானிய மன்னர்கள் வெளியிட்ட இலச்சினைகளில் எப்படியும் நெருப்பின் படம் பொறிக்கப் பட்டிருக்கும். 

தென்னிந்தியாவில் பல்லவர்கள் ஆண்ட இடங்களிலும், அது போன்ற இலச்சினைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. ஆந்திராவில், குண்டூர் மாவட்டத்தில் பல்லவர்கள் ஆண்ட பகுதி "பல் நாடு" என்று அழைக்கப் படுகின்றது. பல் நாடு பற்றிய செவி வழிக் கதைகள், "பல் நாட்டி வீருள்ள கதா" என்ற நூலில் தொகுக்கப் பட்டுள்ளன. தெலுங்கு மொழியில் உள்ள, பண்டைய இலக்கியங்களில் அது முக்கிய இடத்தைப் பெறுகின்றது.

தமிழகத்தை ஆண்ட பல்லவ மன்னர்கள், தமிழ் பேசும் மக்களைக் கவர்வதற்காக தமது பெயர்களையும் தமிழ்ப் படுத்திக் கொண்டார்கள். "மாமல்லன்" என்பது, தமிழாக்கப் பட்ட ஈரானியப் பெயராக இருக்க வாய்ப்புண்டு. தமிழில் மல்யுத்தம் செய்யும் வீரர்களை மல்லர்கள் என்று அழைப்பார்கள். 


மல்யுத்தம் என்ற வீர விளையாட்டு, பல்லவர்களின் தாயகமான ஈரானில் இருந்து வந்திருக்க வேண்டும். பல்லவ மன்னர்கள், தம்மை சிறந்த மல்யுத்த வீரர்களாக காட்டிக் கொள்ளும் வழக்கம் இருந்தது. Varzesh-e Bastani என்பது ஈரானின் மரபு வழி மல்யுத்த விளையாட்டைக் குறிக்கும். 

இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக, இன்றைக்கும் பயிற்றப் படும் மல்யுத்தமானது, ஈரானியக் கலாச்சாரத்துடன் இரண்டறக் கலந்து விட்டது. ஈரானில் மல்யுத்த வீரர்களை "பஹ்லவன்" என்று அழைப்பார்கள்! ஈரானிய பஹ்லவன், தமிழில் பல்லவனாக மருவியிருக்கலாம். இன்றைக்கும் பல ஈரானியர்கள், பஹ்லவன் என்று பெயர் வைத்துக் கொள்வது வழமையானது.


இணைய சுட்டிகள்:

India's Parthian Colony On the origin of the Pallava Empire of Dravidia
Pallava dynasty
Pal Nadu
Varzesh-e Bastani
பல்லவர்
சாதவாகனர்

Saturday, December 18, 2010

தமிழீழம் இன்னொரு இஸ்ரேல் ஆகுமா?


[தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?](பகுதி : பதினொன்று)
"தமிழர்கள் கிறிஸ்தவர்கள் என்பதாலேயே சிங்களவன் அடிக்கிறான். புலம்பெயர்ந்த தமிழர்கள், பைபிளையும், சிலுவைகளையும் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி இருந்தால், மேற்குலகின் கவனத்தை ஈர்த்திருக்கலாம்." "இஸ்ரேலை சுற்றி கிறிஸ்தவ நாடுகள் போட்டுள்ள பாதுகாப்பு வலையம் தான் இஸ்ரேலின் பலம். ஈழத்தமிழர்களும் கிறிஸ்தவ நாடுகளை நண்பர்களாக்கிக் கொண்டால், அவர்களது இலட்சியத்தில் வெற்றி பெறலாம். முக்கியமாக சிறிலங்கா படைகள் குண்டு போட்டு அழித்த தேவாலயங்களின் படங்களை பிரச்சாரத்திற்குப் பயன்படுத்த வேண்டும். இலங்கையில் தமிழ் பேசும் கிறிஸ்தவர்களை, பௌத்த-சிங்கள அரசு படுகொலை செய்கின்றது என்ற பிரச்சாரம், மேலைத்தேய கிறிஸ்தவர்களின் அனுதாபத்தை தேடித்தரும்."- ஒரு புலம்பெயர்ந்த தமிழ் ஊடகவியலாளரின் ஆலோசனை.

மேலெழுந்தவாரியாக பார்க்கும் பொழுது, அந்தக் கருத்துக்கள் வேடிக்கையாகத் தோன்றலாம். தமிழர்களில் பெரும்பான்மையோரான இந்துக்களுக்கு ஜீரணிக்க கஷ்டமாக இருக்கலாம். சில முற்போக்கு தமிழ் தேசியவாதிகள், மதவாதம் தமிழ் தேசியத்தை உடைத்து விடும், என்று கவலைப்படலாம். தமிழீழத்தை இன்னொரு இஸ்ரேலாக்கும் கருத்தியல், எழுபதுகளில் தமிழ் தேசிய அரசியல்வாதிகளால் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக வலதுசாரி தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள், அதனை பகிரங்கமாக தேர்தல் மேடைகளில் பேசினார்கள். தமிழீழத்தை ஆசியாவின் இஸ்ரேலாக்குவோம், என்று பெருமையாக முழங்கினார்கள். அவர்கள் உதாரணம் காட்டிய இன்னொரு நாடு சிங்கப்பூர்.

சாமானியன் கூட தமிழீழம் என்றால், இன்னொரு இஸ்ரேலாக, இன்னொரு சிங்கப்பூராக கற்பனை செய்து பார்க்கத் தொடங்கினான். தமிழர்கள், யூதர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்ட காலமும் அது தான். இன்று வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பெருகி விட்டார்கள். அன்று, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமே சிறு தொகை படித்த ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். அதனால், மலேசியா, சிங்கப்பூர், பிஜி, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் வாழ்ந்த தமிழர்களை, புலம்பெயர்ந்த தமிழர்களாக காட்டினார்கள். "தமிழன் உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்றான். தமிழர்களுக்கு என்றொரு நாடில்லை." என்று அவர்களைத் தான் உதாரணமாக காட்டினார்கள். அன்று தமிழீழம் உருவானால், அது உலகத் தமிழர்களின் தாயகமாக இருக்கும் என்றார்கள். அதாவது இன்று இஸ்ரேல் உலக யூதர்களின் தாயகமாக இருப்பதைப் போல. (ஒரு யூதர் உலகின் எந்த மூலையில் இருந்து சென்றாலும் இஸ்ரேலிய பிரஜை ஆகலாம்.)

தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடுவதற்கு இன்னொரு காரணம் இருந்தது. "தமிழர்கள் உலகிலேயே புத்திசாலிகள்" என்ற இன மேலாண்மைக் கருத்தியல். அதற்காக எல்லா தமிழர்களும் புத்திசாலிகள் என்று தவறாக கருதி விடக்கூடாது. யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டுமே உலகிற் சிறந்த மூளைசாலிகள். "எலிசபெத் மகாராணிக்கு கணிதப் பாடம் படிப்பித்த தமிழன் கதை", யாழ்ப்பாண தமிழரின் அதி சிறந்த புத்திசாதுர்யத்திற்கு உதாரணமாக கூறப்படுகின்றது. இப்போதும் பல யாழ்ப்பாண தமிழர்கள், பிற மாவட்ட தமிழர்களை விட, சிங்களவர்களை விட, முஸ்லிம்களை விட, தாம் உயர்ந்தவர்கள் என்று நம்புகின்றார்கள். தற்போது யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றி பேசும் போது கூட:"ஒரு காலத்தில் ஆண்ட பரம்பரைக்கு இந்த நிலைமையா?" என்று தான் ஆதங்கப் படுகின்றனர். (அடிமைப் பரம்பரையாக இருந்த தலித் மக்களும் தமிழர்கள் தான்.) மேற்குறிப்பிட்ட சமூகப் பின்னணி அவர்களை, யூதர்களுடன் மட்டுமே தம்மை ஒப்பிடத் தூண்டியது. ஏனெனில் உலகில் யூதர்கள் மட்டுமே அதி புத்திசாலிகள், அவர்களுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் (யாழ்ப்பாண) தமிழர்கள் உலகிற் சிறந்த மூளைசாலிகள்.

"யூதர்களும் ஒரு காலத்தில் ஆண்ட பரம்பரையாக இருந்தவர்கள். உலகம் முழுக்க அகதியாக அலைந்தார்கள். இப்போது இஸ்ரேல் என்ற தேசத்தை ஆள்கிறார்கள். யூதரின் வரலாற்றுடன் ஒப்பிட்டு, ஆண்ட தமிழினத்தின் கதையை தமிழர்கள் வாழையடி வாழையாக தங்கள் சந்ததிகளுக்கு சொல்லிக் கொடுத்து வர வேண்டும்." வருங்காலத் தமிழீழமும் இஸ்ரேலைப் போன்று அமெரிக்க அடியாளாக செயற்பட வேண்டுமென்றால், அதையிட்டு அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. மாறாக அது ஒரு பெருமைக்குரிய விடயம். அமெரிக்காவின் ஆப்கான், ஈராக் படையெடுப்புகள், அல்கைதா எதிர்ப்பு போர், எல்லாவற்றையும் ஆதரிப்பார்கள். அமெரிக்கா முஸ்லிம் நாடுகளை குறிவைத்து தாக்குகிறது என்று இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவார்கள். வியட்னாம் போர் நடந்த காலத்தில், அமெரிக்கா கம்யூனிசத்தை அழிக்க வேண்டும் என்று அகமகிழ்ந்தார்கள். இஸ்ரேல்- அமெரிக்க ஆதரவை, யாழ்ப்பாண சமூகப் பின்னணியில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். சைவ-கிறிஸ்தவ வெள்ளாள ஆதிக்கவாதிகள், முஸ்லிம்களை எதிரி இனமாக கருதினார்கள். அதே நேரம், கம்யூனிஸ்ட்கள் நடத்திய சாதிய எதிர்ப்பு போராட்டத்தையும் சகித்துக் கொள்ள முடியவில்லை. தாழ்த்தப்பட்ட சாதிகள் சம உரிமை கேட்டால், ஆண்ட பரம்பரைக்கே ஆபத்தாகி விடும்.

யூதர்களுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும் தமிழர்கள், "உலகில் அதிகமான நோபல் பரிசுகளை வென்றவர்கள் யூதர்கள்." என்று விஞ்ஞானபூர்வமாக தர்க்கம் செய்வார்கள். மேலைத்தேய நாடுகளிலும், யூத ஆதரவு அரசியல்வாதிகளால் இத்தகைய பிரச்சாரம் பல வருடங்களாக முன்னெடுக்கப்படுகின்றது. கணிசமான யூதர்களும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். நூறு வருடங்களுக்கு மேலாக பலதரப்பட்ட சாதனையாளர்களுக்கு பரிசு வழங்கிக் கொண்டிருக்கிறது நோபல் நிறுவனம். இது வரை வழங்கப்பட்ட பரிசுகளில் 18 வீதமானவை, யூத இனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்களுக்கு போய்ச் சேர்ந்துள்ளன.

உலக சனத்தொகையில் ௦௦௦0.3% மாக உள்ள யூதர்களுடன் ஒப்பிடும் போது இது அதிகம் தான். ஆயினும் பரிசு வாங்கிய இஸ்ரேலிய யூதர்கள் மிக மிகக் குறைவு என்பது ஆர்வத்தை தூண்டும் விடயம். அநேகமாக நோபல் பரிசு பெற்ற யூத சாதனையாளர்கள், ஒன்றில் ஐரோப்பாவில் வாழ்ந்திருப்பார்கள், அல்லது சிறிது காலமாவது அமெரிக்காவில் படித்திருப்பார்கள். திறமைசாலிகளின் சுதந்திரத்தில் தலையிடாத, அவர்களை ஊக்குவிக்கும் மேற்கத்திய சமூகத்தில் வாழ்ந்த யூதர்கள் மட்டுமே சாதிக்க முடிந்துள்ளது. (சோவியத் யூனியன் போன்ற சோஷலிச நாடுகளிலும் அத்தைய சுதந்திரம் இருந்தது.) இலங்கை, இந்தியா போன்ற பழமைவாத கலாச்சாரம் பேணும் சமூகங்களில் தனி மனித சுதந்திரத்தை எதிர்பார்க்க முடியாது. பழமைவாத யூத குடும்பங்களிலும் இறுக்கமான கட்டுப்பாடுகள் நிலவுகின்றன. மேற்கொண்டு ஆராய விரும்புவோர், நோபல் பரிசு வென்ற யூதர்களின் சுயசரிதையை வாசித்துப் பார்க்கலாம். அவர்கள் எல்லோரும் பழமைவாத மதக் கட்டுப்பாடுகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டவர்கள். மதச்சார்பற்ற கல்வி கற்றவர்கள். நாசிஸ சர்வாதிகார ஆட்சியின் பயனாக பல ஐரோப்பிய யூத விஞ்ஞானிகள் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தனர். அங்கே கிடைத்த வரவேற்பு, வசதி, வாய்ப்புகளும் அவர்களுக்கு பக்கபலமாக இருந்துள்ளன.

நோபல் பரிசுகள் யாவும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்பதை பலரும் ஏற்றுக் கொள்கின்றார்கள். ஒவ்வொரு வருடமும் சமாதானத்திற்காக வழங்கப்படும் நோபல் பரிசு சர்வதேச அரசியலில் கலகத்தை தோற்றுவிக்கும். உண்மையிலேயே சமாதானத்திற்காக பாடுபட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர். எதிரிகளாலும் மதிக்கப்பட்ட மாமனிதர். அவருக்கு சேர வேண்டிய நோபல் பரிசு, நீண்ட காலமாக கொடுக்கப்படாமல் இழுபறிப்பட்டது. அதற்கு முன்பே போர்வெறியன் புஷ்ஷுக்கு சமாதான பரிசு கொடுத்து விட்டார்கள். இஸ்ரேலிய அரசியல் தலைவர்கள் மெனாகேம் பெகின், இட்சாக் ராபின், ஷிமோன் பெரேஸ் ஆகிய யூதர்களுக்கும் சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. யார் இவர்கள்? இஸ்ரேலை ஆண்ட காலங்களில் போர்க்குற்றம், மனித உரிமைகள் மீறல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள். மெனாகேம் பெகின் ஒரு பயங்கரவாதி என்று பிரிட்டிஷ் அரசே அறிவித்திருந்தது. மற்ற இருவரும் பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்த யுத்தத்திற்கு தலைமை தாங்கியவர்கள். ஒரு வேளை மகிந்த ராஜபக்சவுக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டால், தமிழர்கள் எந்தளவு கொதித்தெழுவார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள். நோபல் பரிசின் யோக்கியதை அந்தளவுக்கு தான் உள்ளது.

(தொடரும்)
முன்னைய பதிவுகளை வாசிக்க:
10.பாலஸ்தீனப் பாதையில் ஈழ விடுதலைப் போராட்டம்
9.தமிழீழ - பாலஸ்தீன சகோதரத்துவம் : ஒரு மீள் பார்வை
8. "தமிழர்கள்" ஒப்பிட விரும்பாத கம்யூனிச யூதர்கள்
7.பிரிட்டிஷ் பாலஸ்தீனம், யூத இஸ்ரேலான வரலாறு
6.இஸ்ரேலின் வாகரையும், இலங்கையின் காஸாவும்
5.
சியோனிஸம்: ஏகாதிபத்தியத்தின் நவ காலனிய முகம்
4.யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள்
3.அயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்
2.
இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்
1.
தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?

Tuesday, December 07, 2010

தமிழகத்தின் சிங்கள தொப்புள்கொடி உறவுகள்



(பகுதி : இரண்டு )


தமிழ், சிங்கள மொழிகளில் இனம் என்ற வார்த்தையே கிடையாது. பண்டைய சிங்களவர்களும், தமிழர்களும் மத, சாதிய வேறுபாடுகளை அறிந்திருந்தனர். ஆனால் வெவ்வேறு மொழி பேசுபவர்களை தனித்தனி இனங்களாக பார்க்கும் வழக்கம், ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னர் தான் ஆரம்பமாகியது. ஆங்கில மொழிச் சொல்லான "Race ", ஆங்கிலம் கற்ற தமிழர்களால் "இனம்" என்று மொழிபெயர்க்கப்பட்டது. அது எவ்வளவு தூரம் சரியான மொழிபெயர்ப்பு என்று அவர்கள் கவலைப்படவில்லை.

தமிழில் சாதி என்றும், சிங்களத்தில் ஜாதிய என்றும் இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக இலங்கை மக்கள் பாகுபடுத்தப் பட்டனர். இன்று ஒவ்வொரு இலங்கைப் பிரஜையினதும் பிறப்புச் சான்றிதழிலும் அவ்வாறே குறிப்பிடப் படுகின்றது. முன்பு அந்த இடத்தில் சாதிப் பெயரை பதிந்து வந்தார்கள். காலப்போக்கில் அது அநாகரீகம் என்று கருதியதால், சிங்களவர், இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், முஸ்லிம் என்றெல்லாம் பதிகிறார்கள். அந்தச் சொற்களைக் கூட சாதிக்கு மாற்றீடாக தான் பயன்படுத்துகிறார்களே ஒழிய, இனம் என்ற அர்த்தத்தில் அல்ல.

இனம் என்ற பாகுபாடு, பிற்காலத்தில் பல்லாயிரம் மக்கள் கொல்லப்படும் இரத்தக்களரிக்கு இட்டுச் செல்லப் போகின்றது என்பதை அன்று பலர் உணரவில்லை. ஒரு வேளை கடவுளுக்கு நிகரான சக்தி படைத்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் உணர்ந்திருப்பார்கள். சிங்கள இனவாதம், தமிழ் இனவாதம் இரண்டினதும் அடிப்படை, மக்களை இனங்களாக பிரித்துப் பார்ப்பதிலே தான் தங்கியுள்ளது.

ரஷ்யாவில் வெற்றியடைந்த போல்ஷெவிக் கம்யூனிஸ்ட் கட்சியின் தாக்கத்தால், உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தோன்றின. தொழிற்துறை அபிவிருத்தி காரணமாக பல்லினத் தொழிலாளர் வர்க்கம் கொழும்பை மையமாகக் கொண்டு தோன்றியிருந்தது. கம்யூனிச, சோஷலிசக் கட்சிகளின் தொழிற்சங்க நடவடிக்கைகள் அதிகரித்தன. தொழிலாளர் வர்க்கம் தனது உரிமைகளை, பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளருடன் போராடிப் பெற்றுக் கொண்டிருந்தனர்.

இலங்கையில் வேறெந்த கட்சிகளையும் விட கம்யூனிஸ்ட், சோஷலிசக் கட்சிகள் பெரும்பான்மைப் பலத்துடன் காணப்பட்டன. ரஷ்யாவை பின்பற்றி இலங்கையிலும் புரட்சி வெடிக்குமோ என அஞ்சிய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சிங்கள, தமிழ் மத்தியதர வர்க்கத்திற்கு இனவாதத்தை கற்றுக் கொடுத்தார்கள். அன்று பற்ற வைக்கப்பட்ட இனவாதத் தீ அறுபது ஆண்டுகளாக கொழுந்து விட்டு எரிகின்றது, என்பதை அறிந்து ஆங்கிலேயர்கள் அகமகிழ்ந்திருப்பார்கள்.

பிரிட்டிஷ் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் போய்க் கொண்டிருந்தது. அன்றைய மலேசியாவை விட வளர்ச்சி அடைந்த பொருளாதாரத்தைக் கொண்டிருந்ததால், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தொழில் வாய்ப்பு தேடி வந்தார்கள். (இவர்களை மலையக பெருந்தோட்டத் தொழிலாளரிடம் இருந்து வேறு படுத்திப் பார்க்க வேண்டும்.) அவர்களில் பெரும்பான்மையானோர் தமிழ் நாட்டுத் தமிழர்கள் என்ற போதிலும், கணிசமான அளவு மலையாளிகளும், தெலுங்கர்களும் புலம்பெயர்ந்து வந்தார்கள்.

ஆரம்பத்தில் மலையாள, தெலுங்கு சமூகங்கள் தமிழை தாய் மொழியாக பேசி வந்தனர். இனப்பிரச்சினை கூர்மையடைந்த பின்னர், பலர் சிங்களத்தை தாய்மொழியாக்கிக் கொண்டுள்ளனர். ஒரு பகுதி கொழும்பு வாழ் இந்தியத் தமிழர்களும், தமிழை விட சிங்களத்திற்கு முன்னுரிமை கொடுப்பதை நானே நேரில் பார்த்திருக்கிறேன். தமிழகத் தொப்புள்கொடி உறவுகள் சிங்களவர்களாக மாறியதை வரலாறு நெடுகிலும் காணலாம். மேலே குறிப்பிட்டது மிக அண்மைய உதாரணம் மட்டுமே.

சிங்களவர்கள் தாமே இலங்கையின் பூர்வீக மக்கள் என்றும், தமிழர்கள் வந்தேறு குடிகள் என்றும் நம்புகின்றனர். மறுபக்கத்தில் தமிழர்கள் தாமே இலங்கையின் பூர்வீக மக்கள் என்றும், சிங்களவர்கள் வந்தேறு குடிகள் என்றும் நம்புகின்றனர். இரண்டு பக்கமும் இருக்கும் இனவாதிகள் அத்தகைய பிரச்சாரங்களை இன்றும் முன்னெடுத்து வருகின்றனர். உண்மையில் பெரும்பான்மை சிங்களவர்களும், தமிழர்களும் இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய சான்றுகள் உள்ளன.

இன்றைக்கும் பூர்வீக மக்களாக இனங்காணப் படக் கூடியவர்கள் வேடுவர்கள் மட்டுமே. அவுஸ்திரேலிய அபோரிஜின் பழங்குடி போல, இன்றைக்கும் நாகரீகத்துக்கு முந்திய கலாச்சாரத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை விட இயக்கர், நாகர், ராட்சதர்கள் ஆகிய இனங்கள் பண்டைய இலங்கையில் வாழ்ந்துள்ளன. இன்றைக்கும் பல ஊர்ப் பெயர்கள் அதற்கு சான்று பகர்கின்றன.

இந்தியாவில் இருந்து வந்து குடியேறியவர்கள், ஒன்றில் பழங்குடியினரை அழித்து விட்டார்கள், அல்லது அவர்களுடன் ஒன்று கலந்து விட்டார்கள். இன்றுள்ள சிங்கள, தமிழ் மொழிகள் பேசும் மக்கள், அத்தகைய கலப்பினத்தை சேர்ந்தவர்கள். மரபுரிமையை ஆராய்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்த முடிவுகள் இவை. (Genetic affinities of Sri Lankan populations.)

"அனுராதபுரத்திலே கலிங்கவாசர் குலம் விஜயனில் இருந்து ஐந்து தலைமுறைக்குள் அற்றுப் போக, கலிங்கரும் நாகரும் கலந்த மிசிர குலத்தரசர்களே அதன் பின் அரசாண்டு வந்தார்கள். தமிழரசரும் பலமுறைகளில் அனுராதபுரத்தை வெற்றி கொண்டு அரசாண்டு வந்தார்கள். அதனால் தமிழ்க் குடிகளும் இலங்கையில் குடியேறின. நாகரும், இயக்கரும், கலிங்கரும் கலந்தே சிங்களர் ஆயினார்கள். இலங்கை குடிச்சனங்களை சிங்களர் எனும் பெயரால் வழங்கத் தொடங்கியது தொட்டு நாகர், இயக்கர், கலிங்கர் எனும் நாமங்கள் வழக்கிழந்தன." (யாழ்ப்பாண சரித்திரம், சே.இராசநாயகம் )

இலங்கையை ஆண்ட சிங்கள அரசர்கள், இந்தியாவில் பாண்டிய நாட்டுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்தனர். பாண்டியர்களுக்கும், சிங்கள அரசர்களுக்கும் இடையில் திருமண பந்தங்கள் கூட ஏற்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பாண்டிய மணப்பெண்கள், பரிவாரங்களுடன் அனுப்பப்பட்டதாக, இலங்கை வரலாற்றில் பலவிடங்களில் குறிப்பிடப் படுகின்றது. தமிழர்களான பாண்டியர்களின் வழித்தோன்றல்கள் சிங்களவர்களாக மாறி விட்டார்கள். சோழர்களின் படையெடுப்பை, சிங்கள-தமிழ் இன முரண்பாடுகளின் தோற்றமாக (சிங்கள) இனவாதிகள் காட்டுகின்றனர். எல்லாளன் - துட்ட கைமுனு போர் கூட அரசுரிமைப் போட்டியே தவிர, இன அடிப்படையிலான போர் அன்று.


உலகில் தேசிய இராணுவங்கள் 19 ம் நூற்றாண்டின் பின்னரே தோன்றின. பண்டைய காலத்தில் கூலிப் படைகளையே மன்னர்கள் போரில் ஈடுபடுத்தினார்கள். இலங்கையும் அதற்கு விதி விலக்கல்ல. சிங்கள மன்னர்கள் தமக்கிடையிலான போரில் தமிழகக் கூலிப் படைகளை பயன்படுத்தினார்கள். அந்தக் காலத்தில் சிங்கள அரசர்கள் போருக்கு தேவையான வீரர்களை தமிழ் நாட்டில் சென்று திரட்டுவது சர்வ சாதாரணம்.

உண்மையில் தென்னிந்தியாவில் நிலவிய பாண்டிய- சோழ மன்னர்களுக்கு இடையிலான பகைமையின் தொடர்ச்சியே இலங்கை மீதான படை நடவடிக்கைகள். சில நேரம், சிங்கள அரசர்கள் தென்னிந்தியா வரை படையெடுத்து சென்றிருக்கிறார்கள். அப்போதெல்லாம் பாண்டியர்கள் அவர்களது கூட்டாளிகளாக இருந்துள்ளனர்.
"... பராக்கிரமவாகு இலங்காபுரித் தண்டநாதனுடன் ஒரு சிங்களப் படையை அனுப்பி பராக்கிரம பாண்டியனுக்கு உதவி புரிந்தான்." (யாழ்ப்பாணச் சரித்திரம்)

இலங்கையில் சோழர்களின் ஆட்சியை ஒரு ஏகாதிபத்தியக் காலமாகவே கருத வேண்டும். ஏனெனில் சோழரின் ஆதிக்கத்தை எதிர்க்கத் துணிந்த சிங்கள சிற்றரசர்கள் மட்டுமல்ல, தமிழ் சிற்றரசர்களும் அடக்கப்பட்டார்கள். "இலங்கை முழுவதும் சோழர் ஆட்சிக்குள் அமைந்தும், சமாதானம் எப்போதும் இருந்ததில்லை. சிங்கை நகர் அரசருஞ் சிங்கள அரசருங் கூடி சோழருடன் சமர் விளைவிக்க நேருங் காலங்களில், சோழ அரசர் படையுடன் வந்து கலகம் விளைவித்தாரை கொன்றும் வென்றுஞ் செல்வர்." (யாழ்ப்பாண சரித்திரம்)

இங்கே சிங்கை நகர் என்பது நல்லூரை தலைநகராக கொண்ட (ஈழத்) தமிழரின் சிற்றரசு ஆகும். ராஜராஜ சோழன் ஈழத்தில் அடிமைகளாக பிடித்து வந்தவர்களைக் கொண்டு தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியதாக சோழர்களே எழுதி வைத்த குறிப்புகள் தெரிவிக்கின்றன.

1365 ல் தஞ்சை, மதுரையை சேர்ந்த, வெள்ளாளர் என்ற சாதியினரின் இலங்கை நோக்கிய புலம்பெயர்வு பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. தென்னிந்தியா அந்தக் காலத்தில் விஜய நகரத்தால் ஆளப்பட்டது. விஜயநகர சாம்ராஜ்யவாதிகள் தெலுங்கர்கள் என்பதால், தமிழ்நாட்டு நிர்வாகத்தில் தெலுங்கு பாளையக்காரர்களை நியமித்தார்கள்.

இதனால் அதிகாரம் இழந்த வெள்ளாளர்கள் இலங்கை சென்று குடியேற ஆரம்பித்தார்கள். அவர்கள் தமிழ்ப் பிரதேசங்களில் மட்டுமல்லாது, சிங்களப் பிரதேசங்களிலும் சென்று குடியேறினார்கள். சிங்களப் பிரதேசங்களில் குடியேறிய தமிழக வெள்ளாளர்கள், கொவிகம (அல்லது கொய்கம) என்ற சிங்கள சாதியினராக மாறி விட்டனர்.

".... இம் மாற்றங்களால் தம் பதவிகளை இழந்த தமிழ் வேளாண் தலைவர்கள், தங்கள் அடிமை, குடிமைகளுடன் பாண்டிய, சோழ, பல்லவ தேசங்களை நீங்கி, இலங்கைக்கு வந்தார்கள். ..... இப்போது சிங்கள வெள்ளாளராக மாறியிருக்கும் அவர்களை நீக்கி, யாழ்ப்பாணத்திலே வந்து குடியேறிய வெள்ளாளர்களைப் பற்றியே கயிலாய மாலை கூறும்: ....." (யாழ்ப்பாண சரித்திரம்)



சிங்களவர்கள், தமிழர்கள், இரண்டு சமூகங்களிலும் வெள்ளாளர்கள் 50 % அளவில் இருக்கலாம் எனக் கணக்கிடப் பட்டுள்ளது. பெரும்பான்மை சாதியாக இருப்பதால், அவர்களின் ஆதிக்கம் தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. சிங்கள அரசர்கள் பௌத்த மதத்தை பின்பற்றினாலும், அவர்களது கலாச்சாரம் பிராமணிய வர்ணாச்சிரம மரபைக் கொண்டிருந்தது. அதனால் சத்திரிய வம்சத்தவர்களான சிங்கள அரசர்கள், வெள்ளாளர்களை சூத்திரர்கள் என்று ஒதுக்கி வைத்தார்கள். தென்னிலங்கையை ஆண்ட விஜயவாகு என்ற மன்னன், சிவனொளிபாத மலைக்கு செல்லும் வழியில், ஒவ்வொரு சாதிக்கும் புறம்பான தங்குமடங்களை ஏற்படுத்தி இருந்தான்.

சிங்களவர்கள் அனைவரும் விஜயனின் வம்சாவழியினர் என்பது போல சிங்கள இனவாதிகள் பரப்புரை செய்கின்றனர். அது பிற்காலத்தில் சிங்கள இனம் என்ற ஒன்றை உருவாக்கும் நோக்கோடு புனையப்பட்ட கதைகளில் ஒன்று. (விஜயனின் வருகைக்கும், அப்படி ஒருவர் வாழ்ந்ததற்கும் சரித்திர ஆதாரங்கள் இல்லை.) மகாவம்சம் கூட விஜயனும் அவனது தோழர்களினதும் கதையைத் தான் கூறுகின்றதே தவிர, அவர்கள் தான் சிங்களவர்களின் முன்னோர்கள் என்று கூறவில்லை.

இருபதாம் நூற்றாண்டில் பாலஸ்தீனத்தில் குடியேறிய யூதர்கள் பைபிள் கதைகளை ஆதாரமாக காட்டி, இஸ்ரேலுக்கு உரிமை கொண்டாடினார்கள். சிங்கள தேசியவாதிகள், 19 ம் நூற்றாண்டிலிருந்து தான், விஜயனை தேசிய நாயகனாக்கினார்கள். யூதர்களுக்கு ஆப்பிரகாம் போல, சிங்களவர்களுக்கு விஜயன். சிங்களத் தேசியவாதிகள் விற்கும் வரலாற்றுப் புளுகுகளை, தமிழ் தேசியவாதிகளும் வாங்கி விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் "சிங்களவர்களின் வரலாறு" என்று பொதுமைப் படுத்தக் கூடிய வரலாறு கிடையாது. சிங்களவர்களின் மத்தியில் இன்றைக்கும் காணப்படும் ஒவ்வொரு சாதியும், தனக்கென தனியான வரலாற்றைக் கொண்டுள்ளன. சிங்கள சாதிகள் எல்லாமே தென்னிந்தியாவை பூர்வீகமாக கொண்டுள்ளன. அதனை நிரூபிக்கும் செவி வழிக் கதைகள் அந்தந்த சமூகத்தினர் மத்தியில் நிலவி வருகின்றன.

*******

இந்த தொடரின் முதலாவது பகுதியை வாசிக்க:
இலங்கை அரசியலில் "வெள்ளாள-கொவிகம" ஆதிக்கம்

Friday, November 05, 2010

தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?


இலங்கையின் தமிழ்-சிங்கள இனப்பிரச்சினையை, உலகில் வேறெந்த நாட்டின் பிரச்சினையுடனும் ஒப்பிடுவதற்கு பலர் விரும்புவதில்லை. ஈழத் தமிழர் பிரச்சினை உலகில் வேறெங்கும் காண முடியாத தனித்துவமான பிரச்சினை என்றே, குறிப்பாக தமிழ் தேசிய குழுமத்தை சேர்ந்தவர்கள் நம்புகின்றனர். அவ்வாறு கூறுகின்றவர்கள் கூட, தமிழரை யூதர்களுடன் ஒப்பிட்டு பேசுவதை நிராகரிப்பதில்லை. இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாடு ஒரு காலத்தில் கருத்தளவில் மட்டுமே இருந்து வந்துள்ளது. இன்று அது நிறுவனமயப்படுத்தப் பட்டு வருகின்றது.

இஸ்ரேலிய அரசு புரியும் மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல, பாலஸ்தீனர்களின் இனச்சுத்திகரிப்பையும், இனப்படுகொலையையும் கூட நியாயம் என்று வாதாடும் அளவிற்கு கண்மூடித்தனமான விசுவாசிகள் பெருகி வருகின்றனர். இஸ்ரேலுக்கு சார்பான தமிழ் சியோனிச கொள்கையை வளர்த்தெடுக்கும் நோக்கோடு சில தொடர் கட்டுரைகள் இணையத் தளங்களில் வலம் வருகின்றன. புலம் பெயர்ந்த தமிழ் ஊடகங்கள் அதற்கு களம் அமைத்துக் கொடுக்கின்றன. "தமிழர்களும், யூதர்களும் ஒரே தலைவிதியை பங்குபோடும் இனங்கள்," என்ற தத்துவார்த்த அடிப்படையில் இருந்தே அந்த சிந்தனைகள் யாவும் முகிழ்க்கின்றன. தமிழர் மத்தியில் சியோனிசத்திற்கு ஆதரவுத் தளம் உருவாக்க பாடுபடும் புத்திஜீவிகள், தவறான உதாரணங்கள் மூலம், அல்லது வரலாற்றை திரிப்பதன் மூலம் அத்தகைய முடிவை எட்டுகின்றனர்.

இலங்கை, இந்திய அரசியல் தலைமைகள், நீண்ட காலமாக இஸ்ரேலை நிராகரிக்கும் கொள்கையை பின்பற்றி வந்தன. இந்தியாவில் இந்து அடிப்படைவாத பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்த பின்னர் தான் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டன. பி.ஜே.பி. அரசு அணு குண்டு வெடிப்பு பரிசோதனை நிகழ்த்தியதன் பின்னணியில் இஸ்ரேலின் ஒத்துழைப்பு இருந்தமை ஒன்றும் இரகசியமல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியமானது மேற்கு-தெற்கு ஆசிய நாடுகளை கண்காணிக்கும் பொறுப்பை இஸ்ரேலிடம் ஒப்படைத்திருந்தது. அவற்றை கண்காணிப்பது மட்டுமல்ல, தேவை ஏற்படின் தலையீடு செய்து ஏகாதிபத்திய நலன்களை நிறைவேற்றுவதும் அவர்களது நோக்கமாக இருந்தது.

இந்த குறிப்பிட்ட பூகோள பிராந்தியத்தில் அமைந்திருந்தவை பெரும்பாலும் இஸ்லாமிய நாடுகள். அங்கெல்லாம் இஸ்ரேல் செல்வாக்கு செலுத்துவது இலகுவானதல்ல. பனிப்போர் காலகட்டத்தில் இந்தியா சோவியத் சார்பு நாடாக இருந்ததால், அங்கேயும் ஊடுருவ முடியாமல் இருந்தது. ஆனால் 1977 ம் ஆண்டு இலங்கையில் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் யு.ஏன்.பி. ஆட்சிக்கு வந்தமை, இஸ்ரேலுக்கு கிடைத்த வரப்பிரசாதம். மேற்குலக சார்பு நவ தாராளவாத கொள்கையை பின்பற்றிய ஜே.ஆர். அரசு, முதன்முறையாக இஸ்ரேலிய நலன் பேணும் அமைப்பை உருவாக்கியது. அதிலிருந்து இலங்கை அரசுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நெருக்கமடைய ஆரம்பித்தன. அப்போது தான் ஆரம்பாகியிருந்த ஈழப்போரை அடக்குவதற்கு இஸ்ரேலின் ஆலோசனையை பெற்றுக் கொள்ள முடிந்தது.

வடக்கு கிழக்கில் ஆயுதபாணி தமிழ் இளைஞர்கள் மக்களுடன் மக்களாக கலந்திருந்ததால், அவர்களை அடையாளம் கண்டு தாக்குவது அரச படைகளுக்கு இயலாத காரியமாக இருந்தது. அதனால் "கண்மூடித் தனமான விமானக் குண்டுவீச்சை நடத்துமாறும், பத்து பொது மக்கள் இறந்தால் அதில் ஒரு போராளி இருப்பான்," என்றும் இஸ்ரேலிய இராணுவ ஆலோசகர்கள் கூறியிருந்தனர். இன்னொரு விதமாக கூறினால், போர்க்காலத்தில் தமிழ் இனப்படுகொலை அத்தியாவசியமானது என்று இஸ்ரேல் எடுத்துக் கூறியிருந்தது. அரச மட்டத்தில் இருந்து கசிந்த தகவல்களைக் கொண்ட துண்டுப் பிரசுரங்கள், அன்று போராளிக் குழுக்களால் யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கப்பட்டன. 1984 காலப்பகுதியில் யாழ் குடாநாட்டில் அடுத்தடுத்து பல விமானக் குண்டுவீச்சுகள் இடம்பெறுவதும், அவற்றில் பல அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும் அதிகரித்தது.

மூன்றாவது ஈழப்போர் காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் பலம் பெருமளவு அதிகரித்திருந்தது. இரண்டாம் உலகப்போர் காலத்திய போர் விமானங்களை மட்டுமே வைத்திருந்த சிறி லங்கா விமானப் படையினால் சமாளிக்க முடியவில்லை. இப்படியே போனால், போராளிகளின் கை ஓங்குவதும், அரச படைகள் தோல்வியடைவதும் நிச்சயம் என்ற சூழல் காணப்பட்டது. விமான எதிர்ப்பு பீரங்கிகளால் எட்ட முடியாத, அதே நேரம் உயரத்தில் இருந்த படியே இலக்கை தாக்கக் கூடிய நவீன விமானங்கள் தேவைப்பட்டன. அமெரிக்க தயாரிப்பான F - 16 ரக விமானங்கள் உயர் தாக்குதிறன் கொண்டவை. ஆனால் விலை மிக அதிகம். அதற்கு ஒரு மாற்று கிடைத்தது. இஸ்ரேலில் தயாரிக்கப்படும் கிபீர் விமானங்கள் F-16 செய்யும் அதே வேலையை செய்யும், ஆனால் விலை குறைவு. இதில் இன்னொரு அனுகூலம் இருந்தது. மேற்குலகம் நவீன ஆயுதங்களை விற்பதானால், மனித உரிமை மீறாத நாட்டிற்கே விற்போம் என்று நிபந்தனை எல்லாம் போடுவார்கள். காசு கொடுத்தால் இஸ்ரேலியர்கள் விமானம் தருவார்கள்.
"Since the J79 turbojet engine as well as much of the technology inside the Kfir are produced in Israel under U.S. license, all export sales of the Kfir are subject to prior approval from the U.S. State Department, a fact that has limited the sale of the Kfir to foreign nations. As of 2006, the IAI Kfir has been exported to Colombia, Ecuador, and Sri Lanka." (http://en.wikipedia.org/wiki/IAI_Kfir )

உண்மையில் இஸ்ரேல் வழங்கிய கிபீர் விமானங்களும், ட்வோரா கடற்படைக் கலங்களும் இல்லா விட்டால், இலங்கை அரசு ஈழப் போரில் வென்றிருக்காது. அதே நேரம், இஸ்ரேலிய தயாரிப்புகள் ஈழத்தில் பெருமளவு உயிரிழப்புகளையும், சொத்தழிவுகளையும் ஏற்படுத்தி விட்டிருந்தன. இன்றைக்கும் ஈழத்தில் போரில் உடல் ஊனமுற்ற, உறவினர்களை இழந்த மக்கள், கிபீர்களையும், ட்வோராக்களையும் சபித்துக் கொண்டிருக்கிறார்கள். போரின் கொடுமையை உணராத புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் மட்டுமே, சியோனிசவாதிகளின் இஸ்ரேல் ஆதரவு பிரச்சாரம் எடுபடுகின்றது. இதை அவர்களது புலம்பெயர் அரசியலுக்கான தத்துவார்த்த அடிப்படையாகவே கருத வேண்டியுள்ளது. ஏனென்றால் அவர்கள் அடிக்கடி "யூத diaspora " வையும், "தமிழ் diaspora" வையும் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். அது சரியானதா?

புலம்பெயர்ந்த யூதர்கள் குறித்து இவர்கள் கொடுக்கும் தகவல்களை நம்பினால், நாம் பின்வரும் முடிவுகளுக்கு வருவோம்.

- சுமார் 1900 வருடங்களுக்கு முன்னர் யூதர்கள் அன்றைய இஸ்ரேலிய ராஜ்யத்தை இழந்து புலம்பெயர்ந்தார்கள்.

- 20 ம் நூற்றாண்டில் நவீன இஸ்ரேல் உருவாகும் வரை, பாலஸ்தீனத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய யூதர்கள் வாழ்ந்தார்கள்.

- ரோமர்கள், இஸ்லாமிய அரேபியர்கள் போன்ற அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் யூதர்களின் ஆலயங்களை அழித்தார்கள். அவர்களை அகதிகளாக அலைய வைத்தார்கள்.

- புலம்பெயர்ந்த யூதர்கள் (கிறிஸ்தவ) ஐரோப்பாவில் மட்டுமே அடைக்கலம் புகுந்தனர்.

- ஐரோப்பாவில் யூதர்கள் வறுமையான நிலையில் காணப்பட்டனர். யூதர்கள் மீதான கலவரங்களுக்கு காரணம் இனக்குரோதம்.

- 1900 ஆண்டுகளுக்கு முன்னர் புலம்பெயர்ந்த காலத்தில் இருந்து இஸ்ரேலிய தேசியம் யூதர்களின் லட்சியமாக இருந்தது.

மேற்குறிப்பிட்ட தகவல்களில் எத்தனை வீதம் உண்மை கலந்திருக்கிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

நமக்கு யூதர்களைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள், ரோம சாம்ராஜ்ய காலகட்டத்தில் இருந்தே கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் கிரேக்க மொழி வரலாற்று ஆசிரியர்களால் எழுதப் பட்டவை. அதற்கு முன்னர் நடந்த சம்பவங்களை பற்றி அறிய, விவிலிய நூலையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. (தற்போது அகழ்வாராய்ச்சி மூலம் அந்த தகவல்கள் சரி பார்க்கப் படுகின்றன.) யூதர்களின் மத நூலான தோரா (கிறிஸ்தவர்களுக்கு : பழைய ஏற்பாடு) அவர்களைப் பற்றிய பூர்வீக வரலாற்றுக் கதைகளையும் கூறுகின்றது. இன்றைய ஈராக்கில் உள்ள "ஊர்" என்ற நகரில் இருந்து ஆபிரஹாமின் தலைமையில் யூத பழங்குடியினர் கானான் வருகின்றனர். பொதுவான மூதாதையரைக் கொண்ட பன்னிரு இனங்கள் ஆதி கால யூதர்களாக இனங்காணப் படுகின்றன. அவர்கள் நாடோடிக் குழுக்களாகவே ஆண்டவரால் நிச்சயிக்கப்பட்ட கானான் தேசத்திற்கு வந்து சேர்கின்றனர். கானான் தேசத்தில் கானானிய மக்கள் வாழ்ந்து வந்த போதிலும், யூத குடிகளும் அருகாமையில் வாழ்ந்துள்ளன. ஒரு கட்டத்தில் பன்னிரு யூத குடிகளும் எகிப்தில் அடிமைகளாகின்றனர். மோசெஸ் அவர்களை விடுவித்து மீண்டும் கானான் என்ற நிச்சயிக்கப்பட்ட பூமிக்கு கூட்டி வருகிறார். மொசெசின் தம்பியின் தலைமையில் ஆயுதமேந்திய யூதர்கள், கானான் மக்களை இனப்படுகொலை செய்கின்றனர். கானானியர்களை இனச் சுத்திகரிப்பு செய்த பின்னரே, அவ்விடத்தில் யூதர்களின் ராஜ்ஜியம் உருவாகின்றது. இந்த தகவல்கள் யாவும் விவிலிய நூலில் எழுதப்பட்டுள்ளன.
தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடுவது எத்தனை அபத்தமானது என்பதை இப்போது பார்க்கலாம். விவிலிய நூலில் உள்ள ஆதி கால யூதர்களின் வரலாறும், தமிழர்களின் வரலாறும் எந்த இடத்தில் ஒத்துப் போகின்றது? தமிழகத்திலும், ஈழத்திலும் வாழும் தமிழர்கள் எங்கோ வட இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய இனம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. (தமிழ் தேசியவாதிகள் கூட அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.) சங்க கால தமிழ் இலக்கியங்களிலும் அது போன்ற தகவல் எதுவும் இல்லை. மகாவம்சம் (சிங்களவர்களின் "தோரா"?) வேண்டுமானால் இஸ்ரேலிய ஆதரவாளர்களுக்கு கைகொடுக்கலாம். அதில் வரும் கதைகள் பல யூதர்களின் வரலாற்றுக் கதைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தக்கன. யூதர்கள் ஜாஹ்வே என்ற ஓரிறைக் கோட்பாட்டில் உறுதியாக இருந்ததைப் போல, சிங்கள பௌத்தர்கள் புத்தர் என்ற ஓரிறைக் கோட்பாட்டை நம்புகின்றனர். தமிழர்களில் பெரும்பான்மையானோர் பல தெய்வ வழிபாட்டைக் கொண்ட இந்துக்கள். தமிழர்களில் இந்துக்களுக்கு அடுத்ததாக கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர்கள் அதிகம் காணப்படுகின்றனர். இவர்களும் சிலை வணக்கத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.

கடவுளரின் படங்களை, உருவச் சிலைகளை வைத்து வழிபடுவதை, யூத மதம் ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகின்றது. இந்த விடயத்தில் மட்டும் யூதர்கள் மத்தியில் சமரசத்திற்கு இடமில்லை. யூதர்களின் வரலாறு முழுவதும் மதம் முக்கிய பாத்திரம் வகித்துள்ளது. யூத மதம் மட்டுமே யூதர்கள் அனைவரையும் அன்றில் இருந்து இன்று வரை ஒரே சமூகமாக பிணைக்கின்றது. தமிழர்களிடம் அவ்வாறு தனித்துவமான மதம் ஒன்றுள்ளதா? தமிழ் என்ற மொழி மட்டுமே தமிழர்களை ஒன்றிணைக்கும் புள்ளி. பண்டைய காலத்தில் இருந்தே யூதர்கள் ஹீபுரு மட்டுமல்லாது, பல்வேறு மொழிகளை பேசுவோராக இருந்துள்ளனர். ஆபிரஹாம் குடும்பத்தினர் பாபிலோனிய மொழி பேசினார்கள். இயேசு கிறிஸ்துவின் குடும்பத்தினர் அரேமிய மொழி பேசும் யூதர்கள். பிற்காலத்தில் கிரேக்க மொழி பேசும் யூதர்களே பெருவாரியாக கிறிஸ்தவ மதத்தை தழுவினார்கள். ஆகவே யூதர்கள் என்பது, ஒரு மதத்தை சேர்ந்தவர்களைக் குறிக்கும் சொல் என்பதை விளக்க வேறு உதாரணம் தேவையில்லை.

யூத மதத்தின் அச்சாணியாக ஓரிறைக் கோட்பாடு உள்ளது. தோரா முழுவதும் யூதர்கள் எவ்வாறு அதில் உறுதியாக இருந்துள்ளனர் என எழுதப் பட்டுள்ளது. எகிப்தில் இருந்து மோசெஸ் அழைத்து வந்த யூதர்கள், புனிதப் பசு உருவிலான தெய்வங்களை (இன்றும் இந்துக்களின் வழிபாட்டுக்குரியது) வணங்கினார்கள். ஆண்டவரிடம் பத்துக் கட்டளைகளை பெற்றுக் கொண்டு வந்த மோசெஸ், அந்த சீரழிவுக் காட்சிகளைக் கண்டு சீற்றமுற்றார். பிற தெய்வங்களை வழிபட்ட யூதர்களை சபித்தார். இறைவன் ஒருவனே என்று நம்ப வேண்டுமென்பது பத்துக் கட்டளைகளில் ஒன்று. ("என்னைத் தவிர வேறொரு கடவுளை வணங்காதிருப்பீராக") பின்னர் யூதர்கள் தமது தவறை உணர்ந்து ஓரிறைக் கோட்பாட்டின் கீழ் ஒன்று சேருகின்றனர். அதன் பிறகே, (கவனிக்கவும்) சவுல், டேவிட், சொலமன் ஆகிய மன்னர்களின் ராஜ்ஜியம் உருவாகியது. யூத மன்னர்களை, பல தெய்வங்களை வழிபடும் சைவத்தை அரச மதமாக கொண்ட தமிழ் மன்னர்களுடன் எப்படி ஒப்பிட முடியும்?

வெறும் மதம் மட்டும் யூதர்களை ஒன்று சேர்க்கவில்லை. கடுமையான மதக் கட்டுப்பாடுகளும் யூதர்களை தனி இனம் என்ற என்ணத்தை தோற்றுவிக்க காரணமாக இருந்தது. பன்றியிறைச்சி யூதர்களுக்கு விலக்கப்பட்ட உணவு. யூதர்கள் பன்றியிறைச்சி சாப்பிடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால், உயிரை விட தயாரானவர்கள். கி.மு. 175 ம் ஆண்டு ரோமர்களின் ஆட்சிகுட்பட்ட ஜெருசலேமில் யூதர்களுக்கு எதிரான அடக்குமுறை கடுமையாக இருந்தது. அப்போது பலவந்தமாக பன்றியிறைச்சி சாப்பிடுமாறு சித்திரவதை செய்யப்பட்டதால் உயிர் விட்ட ஏழு சகோதரர்கள் கதை பிரபலமானது. முஸ்லிம்கள் ஹலால் என்று சொல்லும் உணவை, யூதர்கள் ஹோஷர் என்கின்றனர். முஸ்லிம்களைப் போலவே யூதர்களும் சுன்னத்து செய்து கொள்வது அவர்களது மதக்கடமை.

தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடும் அறிவுஜீவிகள், இது போன்ற ஒற்றுமைகள் ஏதாவது உண்டா என்றும் நிரூபிக்க வேண்டும். தமிழைத் தாய்மொழியாக கொண்ட முஸ்லிம்களை வேண்டுமானால் இந்த விடயத்தில் யூதர்களுடன் ஒப்பிடலாம். ஆனால் ஈழத் தமிழ் தேசியமானது, இஸ்லாம் தவிர்ந்த இந்து, கிறிஸ்தவ மதங்களை சேர்ந்தவர்களையே தமிழர்களாக கருதுவதை இங்கே குறிப்பிட வேண்டும். மேலும் இஸ்ரேலுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்குவோரின் பேச்சிலும், எழுத்திலும் இஸ்லாமியர் மீதான வெறுப்பு மறைந்திருக்கும். அந்த நிலைப்பாடு ஏகாதிபத்திய நலன் சார்ந்தது என்பதை விளக்கத் தேவையில்லை.

இலங்கையை ஆண்ட தமிழ், சிங்கள மன்னர்கள் முஸ்லிம்களுக்கு வணிகம் செய்யும் உரிமையை மட்டுமே வழங்கியிருந்தார்கள். அதற்கு காரணம் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் காணப்பட்ட சாதியம். அனைத்து சாதியினருக்கும் விதிக்கப்பட்ட வேலை இருந்தது. அந்தக் கட்டமைப்பில் முஸ்லிம்களுக்கு இடமில்லை. அதே போன்றே ஐரோப்பாவிலும் நடந்தது. நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்தை கொண்ட கிறிஸ்தவ ஐரோப்பாவில் யூதர்கள் செய்வதற்கு எந்த வேலையும் இருக்கவில்லை. நிலம் வாங்கி விவசாயம் செய்யவும் உரிமை இல்லை. அத்தகைய சூழ்நிலையில் அன்று பெரிதாக வளர்ச்சியடையாத வணிகம் மட்டுமே சாத்தியமானது. சில யூதர்கள் வாணிபம் செய்து பெருஞ் செல்வம் சேர்த்தனர். அதனால் பொறாமை கொண்ட பெரும்பான்மை கிறிஸ்தவ ஐரோப்பியர்கள், இனக்கலவரங்கள் மூலம் யூதர்களின் செல்வத்தை அபகரித்தார்கள்.
ஹிட்லருக்கு முன்னரே யூத இனப்படுகொலையை ஆரம்பித்து வைத்தவர்கள் வேறு யாருமல்ல. உலக கத்தோலிக்கர்களின் தலைவர் போப்பாண்டவரின் சிலுவைப்படை வீரர்கள். அதற்கு அவர்கள் கூறிய காரணம்: "சிலுவைப்போருக்கு தேவையான நிதியை அறவிடுவதற்காக, இயேசு கிறிஸ்துவை காட்டிக் கொடுத்த யூதர்களை கொல்வதில் தவறில்லை!" அத்தகைய நியாயப்படுத்தல்கள் தான் ஹிட்லரின் யூத இனவழிப்பின் தத்துவார்த்த அடிப்படை.

(தொடரும்)
***************************************************************