ஒரு வேளை, புலிகளின் தலைமையில் தமிழீழம் என்ற தேசம் உருவாகி இரு தசாப்த காலமாகி விட்டது என்று வைத்துக் கொள்வோம். தற்போது புலி ஆதரவாளர்கள் அரச ஒத்தோடிகள் என்று அழைக்கப் படுவார்கள். புலி எதிர்ப்பாளர்கள் அரச எதிர்ப்பாளராக கருதப் படுவார்கள். ஏனென்றால், இறுதியில் புலிகளின் நோக்கமும் தமிழீழ "அரசு" அமைப்பது தான் இல்லையா?
இப்போது கண் முன்னால் காணக்கூடிய ஆதாரத்திற்கு வருவோம். இரு தசாப்த காலத்திற்கு முன்னர், எத்தியோப்பியாவில் இருந்து எரித்திரியாவை விடுதலை செய்வதற்காக EPLF இயக்கம் போராடியது. EPLF என்பது நமக்குப் புலிகள் மாதிரி. அதன் தலைவர் இசையாஸ் அபெவெர்கி நமக்கு பிரபாகரன் மாதிரி.
எரித்திரியா சுதந்திரமான தனி நாடான பின்னர், முன்பு விடுதலை இயக்கமாக இருந்த EPLF ஆட்சி அமைத்தது. அதன் தலைவர் ஜனாதிபதி ஆனார். எத்தியோப்பியாவில் இருந்து பிரிந்த பின்னர் சில வருடங்கள் எல்லைப் போர் நடந்தது. எரித்திரிய அரசு அதைக் காரணமாகக் காட்டி, ஜனநாயகத்தை மறுத்து வருகின்றது. தேர்தல்கள் நடத்துவதில்லை.
இப்போது புலம்பெயர்ந்த நாடுகளுக்கு வருவோம். இரு தசாப்த காலத்திற்கு முன்னர், அதாவது எரித்திரிய விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில் பெருந்தொகை அகதிகள் ஐரோப்பா சென்று குடியேறி விட்டனர்.
புலம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பகுதியினர் புலிகளை ஆதரிப்பது மாதிரி, அன்று வந்த எரித்திரியர்களில் பெரும்பகுதியினர் EPLF ஆதரவாளர்கள். அதாவது இன்றைய நிலையில் எரித்திரிய அரச ஆதரவாளர்கள்.
2017 ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், எரித்திரிய அதிபரின் வலதுகரமாக பதவியில் இருக்கும் ஒருவர் நெதர்லாந்திற்கு வருகை தந்திருந்தார். நமக்கு அன்டன் பாலசிங்கம் மாதிரி ஒருவர் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அவர் அங்கு ஒரு மகாநாட்டில் பேசுவதற்கு ஏற்பாடாகி இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் மகாநாடு நடத்த அனுமதி மறுக்கப் பட்டது. அந்த இடத்தில் ஒரு சிறிய கலவரம் நடந்து ஓய்ந்துள்ளது. உண்மையில் என்ன நடந்தது?
மகாநாட்டை ஒழுங்கு படுத்தியவர்கள், நெதர்லாந்தில் வாழும் இரண்டாந்தலைமுறை எரித்திரிய இளைஞர்கள். அவர்களது பெற்றோர் இருபது வருடங்களுக்கு முன்னர் வந்து குடியேறியவர்கள். தமது பெற்றோர் மாதிரியே, இந்த இளையோரும் EPLF ஆதரவாளர்கள். ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்த இரண்டாந் தலைமுறையை சேர்ந்த புலி ஆதரவு தமிழ் இளையோருடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இலகுவாகப் புரியும்.
அதே நேரம், எரித்திரியா தனி நாடாக சுதந்திரம் அடைந்த பின்னர், பெருமளவு அகதிகள் ஐரோப்பா வந்துள்ளனர். அண்மைக் கால அகதிகள், ஒன்றில் எல்லைப் போரை எதிர்த்து வெளியேறி இருப்பார்கள். இல்லாவிட்டால் அபெவெர்கி அரசை எதிர்ப்பவர்களாக இருப்பார்கள்.
நெதர்லாந்தில் மகாநாடு நடக்கவிருந்த இடத்தில், அபெவெர்கி அரச எதிர்ப்பாளர்கள் (நமக்கு புலி எதிர்ப்பாளர்கள் மாதிரி) ஒன்று கூடி விட்டனர். மகாநாட்டை நடத்த விடுவதில்லை என்று கலகம் செய்தனர். நிலைமை எல்லை மீறிச் செல்வதைக் கண்ட உள்ளூராட்சி சபை மகாநாட்டை தடை செய்து விட்டது.
அங்கு நடந்த சம்பவங்கள், எவ்வாறு புலம்பெயர்ந்த நாடுகளிலும் எரித்திரிய மக்கள் பிளவு பட்டுள்ளனர் என்ற உண்மையை உணர்த்தியது.
அண்மைக் காலத்தில் வந்த அகதிகள், தமக்கு தாயகத்தின் உண்மை நிலைமை தெரியும் என்று கூறுகின்றனர். அதற்கு மாறாக புலம்பெயர் சூழலில் வளர்ந்த இரண்டாந் தலைமுறையினருக்கு அங்குள்ள உண்மை நிலவரம் தெரியாது என்று வாதிடுகின்றனர்.
No comments:
Post a Comment