Showing posts with label தமிழக மாணவர் போராட்டம். Show all posts
Showing posts with label தமிழக மாணவர் போராட்டம். Show all posts

Thursday, October 03, 2013

தமிழீழத்திற்கான தமிழக மாணவர்களின் போராட்டம் - ஒரு மீளாய்வு


ஜெனீவா மனித உரிமைகள் ஆணையகத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்த நேரம், அந்த செய்தி காட்டுத்தீ போல தமிழ் கூறு நல்லுலகு எங்கும் பரவியது. சென்னையில், லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம், ஊடகங்களின் கவனத்தை பெற்றது. அது பற்ற வைத்த நெருப்பு தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் பரவியது. தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த மாணவர் போராட்டம், மீண்டும் அரசியல் அரங்கில் அதிர்வலைகளை தோற்றுவித்தது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியமை, மாணவர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதப் பட்டது. 

2009 ம் ஆண்டு, ஈழப்போரின் இறுதியில், "இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடக்கிறது, அதனால் பதவி விலக வேண்டும்" என்ற கோரிக்கையை, அன்று ஆட்சியில் இருந்த கருணாநிதி அரசு நிராகரித்து விட்டது. இதனால், ஒரு காலத்தில் "தமிழினத் தலைவராக" புகழப்பட்ட கருணாநிதி, புதிய தலைமுறை தமிழ் இன உணர்வாளர்களின் எதிர்ப்புக்கு ஆளாகினார். 

மாணவர் போராட்டத்தின் காரணமாக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகினாலும், அந்தக் கட்சிக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்க முடியவில்லை. இதைத் தவிர, மாணவர் போராட்டம் தமிழக அரசியலில் ஏற்படுத்திய விளைவுகள் மிகக் குறைவு. ஆளும் கட்சியான, ஜெயலலிதாவின் ஆதிமுக, "தமிழீழத்தை ஆதரித்து" சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதுடன் தனது கடமையை முடித்துக் கொண்டது. 

"இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க கூடாது..." என்ற கோரிக்கையுடன் லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம் ஆரம்பமாகியது. லயோலா கல்லூரி, சென்னை மாநகரில் மட்டுமல்லாது, மாநில அளவில் சிறந்த கல்லூரியாக கருதப் படுகின்றது. ஒவ்வொரு நாட்டிலும், வருங்கால மத்தியதர வர்க்க ஊழியர்களை உருவாக்கும் கல்லூரிகள் இருக்கும். 

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்தே, லயோலா கல்லூரிக்கு ஒரு சமூக அந்தஸ்து இருந்தது. சினிமா தொழிற்துறையும், வணிக சஞ்சிகைகளும் அந்தக் கல்லூரியின் பெயரை சாமானியனின் மனங்களிலும் பதிய வைத்தன. அப்படியான கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், போராட்டம் நடத்துகிறார்கள், அதுவும் தமிழீழத்திற்கு ஆதரவாக போராடுகிறார்கள் என்பது, நிச்சயமாக ஊடகங்களின் கவனத்தை கவர்ந்திழுக்கும். வெகுஜன ஊடகங்கள், தங்களை புறக்கணிப்பதாக, மனம் குமுறிக் கொண்டிருந்த தமிழ் இன உணர்வாளர்கள், இதனால் புதிய உத்வேகம் பெற்றனர். 

தமிழகத்திற்கு, அதிலும் தமிழ் தேசிய இயக்கத்திற்கு, மாணவர் போராட்டம் ஒன்றும் புதுமையல்ல. திராவிடர் இயக்கம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே மாணவர்களை அணிதிரட்டி போராட ஆரம்பித்தார்கள். குறிப்பாக, அண்ணாதுரை தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் உருப்பெற்ற காலத்தில், அந்தக் கட்சியின் இளைஞர் அணி போராடிய வரலாறு, தனியே எழுதப் பட வேண்டியது. அன்று அவர்களது கோஷம் "தனித் தமிழ்நாடு" என்பதாக இருந்தது. உண்ணாவிரதம், கறுப்புக் கொடி காட்டுவது, ரயில் மறியல் செய்வது போன்ற, வன்முறையற்ற அனைத்து வழிகளிலும் போராட்டம் நடந்தது. 

இறுதியில், மத்திய அரசின் மிரட்டலுக்கு பயந்து தனித் தமிழ்நாடு கோரிக்கை கைவிடப் பட்டாலும், மொழிவாரி மாநிலங்களின் பிரிப்பு, அவர்களது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதப் படுகின்றது. அதைத் தவிர, ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிராக நடந்த மாணவர் போராட்டத்தின் விளைவாக, இன்று முழு இந்தியாவிலும், தமிழ் நாட்டில் மட்டுமே ஹிந்தி மொழி பாடசாலைகளில் போதனா மொழியாக இருக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 

தமிழீழ விடுதலைப் போராட்டமும், யாழ்ப்பாணத்தில் நடந்த மாணவர் போராட்டத்தின் விளைவு என்று நம்பப் படுகின்றது. எழுபதுகளில் கொண்டு வரப் பட்ட தரப்படுத்தல் சட்டம், பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் வட மாகாண தமிழர்களின் எண்ணிக்கையை கணிசமான அளவு குறைத்தது. அதை எதிர்த்து நடந்த மாணவர் போராட்டம் என்ற குழம்பிய குட்டையில், தமிழர் விடுதலைக் கூட்டணி மீன் பிடிக்க தொடங்கியது. 

தமிழ் இளைஞர்களை போர்க்குணாம்சம் கொண்டவர்களாக மாற்றியதில், கூட்டணியின் பங்கு அளப்பெரியது. இருப்பினும், தமிழ் இன உணர்வு ஊட்டி வளர்க்கப் பட்ட, எதற்கும் துணிந்த இளைஞர் அணி, இறுதியில் தனது ஆசான்களையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது. "பாராளுமன்ற தேர்தலின் மூலம் தமிழீழம் வாங்கித் தருவதாக" சூளுரைத்த மிதவாத கூட்டணி தலைவர்களை புறந் தள்ளி விட்டு, இளைய தலைமுறை ஆயுதமேந்தியது. அஹிம்சா வழியில் பிறந்த மாணவர் போராட்டம், ஆயுதமேந்திய வன்முறைப் போராட்டமாக மாறியது. அதற்குப் பிறகு நடந்தது எல்லாம் வரலாறு. 

மேற்குறிப்பிட்ட மாணவர் போராட்டங்கள் வகித்த வரலாற்றுப் பாத்திரத்தை அல்லது அதற்கொப்பான தாக்கங்களை, அண்மைய மாணவர் போராட்டங்கள் ஏற்படுத்தாத காரணம் என்ன? முதலில், மாணவர்கள் எப்படி தாமாகவே முன்வந்து போராடினார்கள் என்று பார்ப்போம். தமிழகத்தில் பல காலமாகவே, மாணவர் சமுதாயத்தின் மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப் பட்டது. 

மாணவர்களுக்கு அரசியலில் நாட்டம் கிடையாது, சமூக அக்கறை கிடையாது... இது போன்ற குற்றச்சாட்டுகள் தங்களை நோக்கி செலுத்தப் படுவதை, மாணவர்களும் உணராமல் இல்லை. ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத் தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே, இலங்கை அரசின் போக்குற்றங்கள் பற்றிய ஆவணப்படத்தை, பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது. 

சனல் 4 இந்த வருடம் வெளியிட்ட ஆவணப்படத்தில், புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் கொலை தொடர்பான தகவல்கள் வந்தன. போர் முடிந்தவுடனேயே, சில இணையத் தளங்கள் பாலச்சந்திரன் கொலையான படத்தை வெளியிட்டன. ஆனால், அப்போது உதாசீனப் படுத்திய புலி ஆதரவாளர்கள், பிரித்தானிய சனல் 4 வெளியிட்ட பின்னர், வேறு வழியின்றி அதனை மக்கள் மய அரசியலாக்கினார்கள். அனேகமாக, பாலச்சந்திரன் வீடியோ ஏற்படுத்திய தாக்கம், மாணவர் போராட்டத்தில் எதிரொலித்தது. அண்மைக்கால தொழில்நுட்ப வளர்ச்சியான, இணையம், சமூக வலைத் தளங்கள் என்பன இதில் குறிப்பிடத் தக்க பங்காற்றியுள்ளன. முந்திய தலைமுறைகளை சேர்ந்த மாணவர்களுக்கு அந்த வசதிகள் எதுவும் இருக்கவில்லை. 

2009 க்குப் பின்னர், அதாவது ஈழப்போரின் முடிவில் தோன்றிய தமிழினவாத அமைப்புகளான, மே 17, நாம் தமிழர், சேவ் தமில்ஸ், போன்றவற்றின் அரசியல் நிலைப்பாடு, குறிப்பாக லயோலா கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகளில் காணப்பட்டன. "தமிழீழத்தை முடிந்த முடிவாக ஏற்றுக் கொள்ளல். புலிகளை நிபந்தனையற்று ஆதரித்தல். இலங்கை அரசை, குறிப்பாக மகிந்த ராஜபக்சவை இனப்படுகொலை குற்றச்சாட்டில் தண்டித்தல்..." போன்ற அடிப்படைக் கொள்கைகள் ஏற்றுக் கொள்ளப் பட்டன. இன்றைய இளைய தலைமுறை, அவற்றை கேள்விக்கிடமின்றி ஏற்றுக் கொள்கின்றது என்று வைத்துக் கொள்வோம். ஆனால், அதற்கான திட்டங்களை வகுப்பது குறித்து யாரும் பேசத் தயாராக இருக்கவில்லை. 

ஐ.நா. தீர்மானம் இலங்கை அரசின் மேல் பொருளாதாரத் தடை கொண்டு வந்து விடும் என்று அப்பாவித் தனமாக நம்பினார்கள். அதனால், அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து, இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார்கள். இன்று வரையில், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் முதல், தேர்தலில் போட்டியிடாத அமைப்புக்கள் வரை, அதே மாதிரியான கொள்கைகளை கொண்டுள்ளன. அதிலே முக்கியமானது, அவற்றில் ஒன்று கூட, இந்திய அரசுக்கு எதிராக சுட்டு விரலை கூட அசைக்கவில்லை. இந்திய இறையாண்மைக்கு உட்பட்ட நல்ல பிள்ளைகளாய், அயல் நாட்டு விவகாரங்களுக்காக போராடுவதை, இந்திய அரசும் வேடிக்கை பார்த்தது. 

இலங்கை அரசுத் தலைவர்கள், ஒரு முக்கியமான விடயத்தை பல தடவைகள் கூறி விட்டார்கள். "இந்திய அரசு தான் இந்தப் போரை நடத்தியது," என்று பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டார்கள். இதனால், வன்னியில் கொல்லப்பட்ட நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ப் பொதுமக்களின் படுகொலைக்கு, இந்தியாவும் உடந்தையாக இருந்துள்ளது. போர்க்களத்தில் இந்திய இராணுவ அதிகாரிகளும், இலங்கை இராணுவ அதிகாரிகளுடன் கூடி நின்ற படங்களும், ஊடகங்களில் வெளி வந்துள்ளன. 

நந்திக் கடலுக்கும், இந்து சமுத்திரத்திற்கும் இடைப்பட்ட ஒடுங்கிய நிலப்பரப்பில் சிக்கிக் கொண்ட தமிழ் மக்களின் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தப் பட்டன. மருத்துவ மனைகள் கூட சேதமடைந்தன. எங்கெங்கே மக்களுக்கு மத்தியில் புலி உறுப்பினர்கள் காணப்படுகிறார்கள், என்பன போன்ற தகவல்களை செய்மதிப் படங்களாக தொகுத்து வழங்கியது இந்தியா தான். 

அந்த இடங்களில் எல்லாம் அகோரமான ஷெல் வீச்சுகள் நடத்தப் பட்டன. புது மாத்தளன் முதல், முள்ளிவாய்க்கால் வரையில், ஆயிரக் கணக்கான சடலங்கள் கிடைந்தன. இந்தப் போர்க்குற்றங்களுக்கு இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும். சந்தேகமேயில்லை. ஆனால், இலங்கையை தண்டிக்க வேண்டுமென்று, இந்திய அரசிடம் கோரிக்கை வைக்கும் அரசியல் வியூகத்தை தான் புரிந்து கொள்ள முடியவில்லை. 

ஐ.நா. அவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கும், இந்தியா கொண்டு வரப் போகும் பிரேரனைக்கும் இடையில் ஒரேயொரு வித்தியாசம் மட்டுமே உண்டு. அமெரிக்க தீர்மானமானது, இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தக் கோருகின்றது. 

"நல்லிணக்க ஆணைக்குழு என்பது, போர்க்குற்றவாளியான இலங்கை அரசே தனது போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டுமென கூறுவதாகும். அதில் எமக்கு நம்பிக்கை இல்லை...." என்று பல தமிழ் இன உணர்வாளர்கள் கூறி விட்டார்கள். இருப்பினும் இதே தமிழ் இன உணர்வாளர்களால் பெரிதும் மதிக்கப்படும் அமெரிக்கா, அவர்களின் எண்ணத்தை  பிரதிபலிக்கவில்லை. நான்கு வருடங்களாக, அமெரிக்கா நல்லிண ஆணைக்குழுவின் முக்கியத்துவம் குறித்து மட்டுமே, திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருப்பதன் காரணம் என்ன? 

இந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் உருவாக்கமே அமெரிக்க ஆலோசனையின் பெறுபேறாக தோன்றியது தான். ஐ.நா. வில் இந்தியா தீர்மானம் கொண்டு வந்தாலும், அதே மாதிரியான கூத்து தான் அரங்கேறும். இந்திய-இலங்கை ஒப்பந்தம், குறிப்பாக 13 ம் திருத்தச் சட்டம் நடைமுறைப் படுத்தப் பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கும். இது மீண்டும் 1987 ம் ஆண்டுக்கே திரும்பிச் செல்லும் கதை தான். இவை எல்லாம், "தமிழீழமே முடிந்த முடிவு" என்று கோரிப் போராடும் மாணவர் இயக்கத்திற்கு உவப்பானதாக இருக்கப் போவதில்லை. 

நல்லிணக்க ஆணைக்குழுவுக்கும், 13 ம் திருத்தச் சட்டத்திற்கும், அவர்கள் மனதில் அறவே இடமில்லை என்பது தெரிந்த விடயம். இதனை இன்னொரு விதமாக கூறினால், அமெரிக்க தீர்மானமாக இருந்தாலும், இந்திய தீர்மானமாக இருந்தாலும், அது மாணவர்களின் அடிப்படைக் கொள்கைக்கு முற்றிலும் முரணானதாக இருக்கும். இதனால், மாணவர்களின் போராட்டமானது, வெறுமனே இலங்கை அரசுக்கு எதிராக மட்டுமல்லாது, இந்திய, அமெரிக்க அரசுகளையும் எதிர்த்து நடத்தப் பட வேண்டியது அவசியம். 

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் கொண்டுவரப் படும் தீர்மானம், தமிழ் இனப்படுகொலையை விசாரித்து தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் சட்ட அடிப்படையில், மனித உரிமைகள் தொடர்பான உயர்மட்ட அமைப்பின் சக்திக்கு அப்பாற்பட்ட விடயம் அது. அப்படியே அது அங்கே ஆராயப் பட்டாலும், இலங்கை மீதான பொருளாதராத் தடை கொண்டு வருவதை, ஐ.நா. பாதுகாப்புச் சபை மட்டுமே நிறைவேற்ற முடியும். 

அந்தச் சந்தர்ப்பத்திலும், இலங்கையின் "நண்பர்களான" ரஷ்யாவும், சீனாவும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுக்கலாம். தமிழக மாணவர் போராட்டத்தில், சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கு ஐ.நா. வின் சட்ட அமைப்பு பற்றிய புரிதல் இருந்திருந்தால், பிற மாணவர்களையும் சரியான அரசியல் பாதையில் வழிநடாத்தி இருக்க முடியும். 

அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளும், "வழமையான இலங்கையின் நண்பர்கள்" என்பதற்கு அப்பால், தமிழினப் படுகொலையில் பெருமளவு பங்களிப்பை வழங்கியுள்ளன. அந்த நாடுகள் வழங்கிய ஆயுத தளபாடங்கள், சிறிலங்கா படைகளை நவீன மயப் படுத்தியது மட்டுமல்லாது, தமிழர்களை கொன்று குவிக்கவும் உதவியது. (உலக சந்தையில் விலை மலிவு என்ற ஒரே காரணத்தினால் மட்டுமே, ரஷ்யா, சீனாவிடம் ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.) இந்த உண்மைகள் யாவும், தமிழகத்தில் போராடிய மாணவர்களுக்கு தெரியாது என்று கூற முடியாது. 

ஆனால், அமெரிக்கா, பிரிட்டன் போன்றன உலக வல்லரசுகள் என்ற காரணத்திற்காக மட்டும் அவற்றின் மீதான விமர்சனத்தை தவிர்க்கின்றனர். அதே நேரம், ரஷ்யா, சீனாவை கடுமையாக சாடுவதால், மேற்கத்திய நாடுகள் தமிழர்களுக்காக இரங்கப் போவதில்லை. இந்த இடத்தில் ஒரு தந்திரோபாய மாற்றம் அவசியம். எதிர் நிலை வல்லரசுகளான ரஷ்யா, சீனாவையும் கூட, தமிழர்களுக்கு ஆதரவான சக்திகளாக மாற்றுவது அவசியம். அதை நோக்கிய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டிருந்தாலே, போராட்டத்தில் அரைவாசி வெற்றி கிடைத்து விடும்.  

இதனை எழுதிக் கொண்டிருக்கும் நேரம், தமிழக மாணவர்கள் போராட்டம் ஓய்ந்து விட்டது. அதன் தொடர்ச்சியான இயக்கம் என்று குறிப்பிடத் தக்கதாக எதுவும் இல்லை. "தமிழீழத்திற்கான மாணவர் அமைப்பு" என்ற நிறுவனமயமாக்கல் உருவானதை மறுக்க முடியாது. ஆனால், தமிழக அரசியல் அதிகார அமைப்பில், தாக்குப் பிடிக்க முடியாமல் காணாமல் போய்விட்டார்கள். 

ஏற்கனவே இருக்கும் "தமிழீழ ஆதரவு அமைப்புகளான" மே 17, நாம் தமிழர், சேவ் தமில்ஸ், இளைஞர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று விளங்குகின்றன. குறிப்பாக ஐ.டி. துறையில் பணியாற்றும் இளைஞர்கள், படித்த கீழ் மத்திய தர வர்க்க இளைஞர்கள் மட்டுமல்ல, கல்லூரி மாணவர்களும் ஏற்கனவே இந்த அமைப்புகளுக்கு ஆதரவளிக்கின்றனர். 

முதலாவது தலைமுறை தமிழ் தேசியவாத கட்சிகளான தி.மு.க., ம.தி.மு.க. வுக்கு மாற்றாக எழுந்த, இரண்டாவது தலைமுறையை சேர்ந்த தமிழ் தேசியவாத இயக்கங்கள் அவை.  வாரிசு அரசியலால், வணிக நலன்களால் சீரழிந்த முன்னாள் தமிழ்தேசிய இயக்கமான திமுக வுக்கு எதிரான விமர்சனங்கள் நியாயமானவை. அவர்கள் செய்ததெல்லாம் துரோகம் தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், இரண்டாவது தலைமுறை தமிழ் தேசியவாத அமைப்புகளையும் விமர்சிக்காமல், மாணவர்களின் போராட்டம் ஒரு புதிய அரசியல் மாற்றத்தை கொண்டு வரப் போவதில்லை. 

தமிழக மாணவர்கள், 1968 ல் ஐரோப்பாவில் தோன்றிய மாணவர் எழுச்சியில் இருந்து படிப்பினைகளை பெறுவது அவசியமானது. உலகில் நடந்த வெற்றிகரமான மாணவர்கள் போராட்டங்களில் அது முக்கியமானது. வரலாற்றில் குறிப்பிடத் தக்க மாற்றங்களை ஏற்படுத்தியது. தமிழகத்தில் போராட்டம் நடத்திய மாணவர்களில், கலைப்பீடத்தில் வரலாற்றுக் கல்வி பயிலும் மாணவர்களும் பங்குபற்றினார்கள். அவர்களது பாடத்திட்டத்தில், ஐரோப்பிய வரலாறு பற்றிய பகுதியில் குறிப்பிடப் பட்டிருக்கும். அப்படி எந்த நூலிலும் எழுதியிருக்கவில்லையெனில், அந்தப் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தெரிந்திருக்கலாம். 

இலங்கையில் நடந்த ஈழப்போரில் நடந்த கொடுமைகளை கண்டு கிளர்ந்தெழுந்த மாணவர் சமுதாயம் தான் போராட்டத்தில் குதித்தது. அவர்கள் கடல் கடந்து, இந்தியா என்ற அயல்நாட்டில் வாழ்ந்த போதிலும், 2009 தமிழினப் படுகொலைக் காட்சிகளை, போரில் ஈழத் தமிழர்கள் பட்ட துன்பங்களை தொலைக்காட்சியில் பார்த்து வெகுண்டெழுந்தனர். கிட்டத் தட்ட இதே மாதிரியான நிலைமையில் தான், ஐரோப்பிய மாணவர்களின் எழுச்சியும் இடம்பெற்றது. 

1968 ம் ஆண்டு, வியட்நாம் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. சுதந்திரத்திற்காக போராடிய தென் வியட்நாம் மக்களை, அமெரிக்க படையினர் கொன்று குவித்து கொண்டிருந்தார்கள். நேபாம் குண்டுகளை வீசி குழந்தைகளையும், பெண்களையும் கொன்ற காட்சிகள், ஐரோப்பிய தொலைக்காட்சிகளின் காண்பிக்கப் பட்டன. அந்தக் காட்சிகளை கண்டு வெகுண்டெழுந்த மாணவர் சமுதாயம், அமெரிக்க ஆக்கிரமிப்பு போருக்கு எதிராக போராடினார்கள். வியட்நாம் விடுதலை பெற வேண்டும் என்று கோரிப் போராடினார்கள். 

அவர்கள் எந்த ஐ.நா. அமைப்பையும் நம்பி இருக்கவில்லை. தமது நாட்டு அரசாங்கம், ஐ.நா. வில் அமெரிக்காவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கவில்லை. ஏனென்றால், அவர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் ஐரோப்பிய அரசுகளும், அமெரிக்கப் போர்க்குற்றவாளிகளின் கூட்டாளிகள், வியட்நாமிய இனப்படுகொலையின் பங்குதாரர்கள் என்ற உண்மை அவர்களுக்கு தெரிந்திருந்தது. அதனால், ஐரோப்பிய மாணவர்களின் போராட்டம், ஐரோப்பிய அரசுகளுக்கு எதிராக திரும்பியது.  

தமிழக மாணவர்கள், தமது போராட்டத்தில் அரசியல் கட்சிகள் தலையிட விடவில்லை என்று கூறப் படுகின்றது. தமிழ் தேசிய ஆதரவு அரசியல் கட்சிகள், மாணவர் போராட்டத்திற்குள் நுளைந்து, அவர்களை தம் பக்கம் இழுக்க முயன்றனர். ஆனால், எந்த சந்தர்ப்பத்திலும், எந்தக் கட்சியும் ஆதிக்கம் செலுத்துவதற்கு மாணவர்கள் விடவில்லை. இது பலரால் வரவேற்கப் பட்டது. போராட்டத்திற்குள் அரசியல் கட்சிகள் தலையிடக் கூடாது என்பது நியாயமான நிபந்தனை தான். ஆனால், எந்தவொரு அரசியல் கொள்கையும் தலையிடக் கூடாது என்று யாரும் தடைவிதிக்கவில்லையே? மாணவர்கள் தமது போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்கு அவசியமான அரசியல் கொள்கை எதையும் கண்டுபிடிக்கவில்லை. 

இந்த விடயத்தில், ஐரோப்பிய மாணவர்கள் எமக்கு சிறந்த உதாரண புருஷர்களாக திகழ்கின்றனர். அன்று போராடிய மாணவர்களில் பலர், பழைமைவாத கிறிஸ்தவ குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். அவர்களுக்கும் இடதுசாரிக் கொள்கைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. "கம்யூனிஸ்டுகள் என்போர் கடவுள் மறுப்பாளர்கள். கிறிஸ்தவ விரோதிகள்..." போன்ற கருத்துக்களை தான் அவர்களின் பெற்றோர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறார்கள். 

அப்படிப் பட்ட குடும்பப் பின்னணியை கொண்ட மாணவர்கள், கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரின் நூல்களை தேடிப்  படித்தார்கள். ஐரோப்பிய மாணவர்களும், தமது போராட்டத்திற்குள் எந்த அரசியல் கட்சியையும் தலையிட விடவில்லை. அன்றிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட, மாணவர்கள் பார்வையில் பிற்போக்கான திரிபுவாதிகளாக தென்பட்டார்கள். 

ஐரோப்பிய மாணவர்கள், தமது கல்லூரி வளாகங்களிற்குள் மட்டும் போராடிக் கொண்டிருக்கவில்லை. மாவோயிச கற்கை மையங்களை உருவாக்கினார்கள். அவை பின்னர் ஐரோப்பிய மாவோயிச கட்சிகளாக உருமாறின. மாணவர்கள் மக்கள் மத்தியில் இறங்கி வேலை செய்தார்கள். தொழிற்சாலைகளுக்கு சென்று, தொழிலாளர்களுக்கு அரசியல் கற்பித்தார்கள். பாடசாலைகளுக்கு சென்று, பாடசாலை மாணவர்களையும் அணி திரட்டினார்கள். 

இவ்வாறு, மாணவர்கள், தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்த வெகுஜன அமைப்பு தோன்றியது. தெருக்களில் அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மாணவர்களுக்கு ஆதரவாக தொழிற்சாலைகளில் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடந்தன.  ஒரு கட்டத்தில், பிரான்ஸ் நாட்டில் ஒரு சோஷலிசப் புரட்சி வெடித்து விடும் என்றளவுக்கு நிலைமை இருந்தது. 

அன்றைய ஐரோப்பா, அந்தளவுக்கு மாறா விட்டாலும், மாணவர்களின் போராட்டம் தனது குறிக்கோளை நிறைவேற்றிக் கொண்டது எனலாம். அவமானகரமான தோல்வியை சந்தித்த அமெரிக்கப் படைகள், வியட்நாமில் இருந்து வெளியேறின. 

தென் வியட்நாம் விடுதலை பெற்றது. அது வட வியட்நாமுடன் இணைந்து, வியட்நாம் என்ற புதிய சுதந்திர நாடு உருவாகியது. இதனை எந்தவொரு ஐ.நா. தீர்மானமும் சாதிக்கவில்லை. ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்லாது, அமெரிக்காவிலும் இடையறாது போராடிய மாணவர்கள் சாதித்துக் காட்டினார்கள். அந்த மாணவர்களில் யாருமே, வியட்நாமிய இனத்தவர் அல்ல என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.