Showing posts with label இந்துக்கள். Show all posts
Showing posts with label இந்துக்கள். Show all posts

Wednesday, February 14, 2018

இந்துக்களின் தாயகம் துருக்மேனிஸ்தானில் உள்ளது!


துருக்மெனிஸ்தான் சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த காலத்தில், Gonur Tepe எனும் இடத்தில் நான்காயிரம் வருடங்களுக்கு முந்திய பண்டைய நாகரிகம் கண்டுபிடிக்கப் பட்டது. எழுபதுகளில், Viktor Sarianidi என்ற ரஷ்ய அகழ்வாராய்ச்சியாளர் இதைக் கண்டுபிடித்த பின்னர் தான் மத்திய ஆசியாவிலும் ஒரு வெண்கல கால நாகரிகம் இருந்துள்ளமை தெரிய வந்தது. அதாவது, எகிப்திய, மொஹெஞ்சேதாரோ நாகரிக காலகட்டத்தை சேர்ந்தது.

பனிப்போர் காலத்தில், சோவியத் யூனியனில் நடந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் மேற்குலகால் புறக்கணிக்கப் பட்டு வந்துள்ளன. அதனால், இது தொடர்பான அகழ்வாராய்ச்சித் தகவல்கள் இன்னமும் ரஷ்ய மொழியில் தான் உள்ளன. கோனூர் தேபே நாகரிகம் தனியாக ஆராயப் பட வேண்டியது என்பதால் அதற்கு "ஒக்சுஸ் நாகரிகம்" என்று பெயரிடப் பட்டது. ஒக்சுஸ் என்பது துருக்மெனிஸ்தான் எல்லையில் ஓடும் நீண்ட நதியின் பெயர். அங்கு சுற்றுலா செல்ல விரும்புவோர், முதலில் மாரி (Mary) என்ற நகரத்திற்கு செல்ல வேண்டும். துருக்மேனிஸ்தான் நாட்டில் எண்ணை, எரிவாயு போன்ற இயற்கை வளம் நிறைந்த பகுதியில் நவீன மாரி நகரம் அமைந்துள்ளது.

கோனூர் தேபே என்பது துருக்கி மொழிப் பெயர். (துருக்மேன் மொழியானது துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்தது.) அந்தப் பண்டைய நகரத்தின் பூர்வீகப் பெயர் என்னவென்பது யாருக்கும் தெரியாது. அதற்கு அருகில் இன்னொரு பண்டைய நகரமான மேர்வ் உள்ளது. அதை உருவாக்கியவர்கள் கோனூர் தேபே வாசிகளாக இருக்கலாம். ஏனெனில், ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்தில் கோனூர் தேபே நகரம் கைவிடப் பட்டு விட்டது. அதற்கு இயற்கை அழிவுகளோ, தண்ணீர்ப் பற்றாக்குறையோ காரணமாக இருந்திருக்கலாம்.

மேர்வ் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் தாராளமாக கிடைக்கின்றன. ஏனெனில், கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு பிறகு மொங்கோலியாவில் இருந்து படையெடுத்து வந்த செங்கிஸ்கான் படைகளால் தரைமட்டமாக்கப் படும் வரையில், அங்கு ஒரு தலைசிறந்த நாகரிகம் இருந்துள்ளது. மொங்கோலிய படைகள் நடத்திய பேரழிவுகளில் மேர்வ் நகரில் இருந்த வான சாஸ்திர ஆய்வு மையம், நூலகம் எல்லாம் தீக்கிரையாகி விட்டன. தொண்ணூறு சதவீதமான குடிமக்களும் இனப்படுகொலை செய்யப் பட்டுவிட்டதால், அறிவியல் தெரிந்தவர் யாரும் எஞ்சவில்லை.

பண்டைய மேர்வ் நகரில் இருந்த அறிவியல் நூல்கள் ஒன்று விடாமல் எரிக்கப் பட்டதால், அவற்றில் எழுதப் பட்டிருந்த ஆயிரம் ஆண்டு கால அறிவுச் செல்வம் ஒரு சில நாட்களில் அழிந்து விட்டது. சில நேரம், அந்த நூல்கள் இப்போதும் இருந்திருந்தால், கோனூர் தேபே பற்றிய விபரங்களும் கிடைத்திருக்கலாம். ஏனெனில், கோனூர் தேபே நகரம் இருந்த இடத்தில் எழுத்துக்களைக் கொண்ட களிமண் தட்டு எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை. சிலநேரம், அவர்கள் எதையும் எழுதி வைக்காமல் இருந்திருக்கலாம்.

நான்காயிரம் வருடங்களுக்கு முந்திய ஹரப்பா நாகரிகத்தில் இருந்ததைப் போன்று, கோனூர் தேபே நகரமும் சிறந்த நீர்ப் பாசன திட்டத்தையும், கழிவு நீர் அகற்றும் கால்வாய்களையும் கொண்டிருந்தது. அரச மாளிகை மாதிரியான ஒரு கட்டிட இடிபாடுகளும் அங்குள்ளது.

ரஷ்ய அகழ்வாராய்ச்சியாளர் விக்டர், கோனூர் தேபே வாசிகள் வழிபட்ட ஆலயம் இருந்ததை கண்டுபிடித்துள்ளார். அந்த ஆலயத்தில் அக்னி (நெருப்பு) கடவுளாக வழிபடப் பட்டுள்ளது. முற்காலத்தில் ஈரானில் இருந்த சொராஸ்திரிய மதத்தவர் நெருப்புக் கடவுளை வழிபட்டு வந்தனர். அந்த மத்தவர் நெருப்பை வணங்கக் கட்டிய பண்டைய ஆலயங்கள் இன்றைய ஈரானிலும், அசர்பைஜானிலும் நிறையவே இருந்துள்ளன. இருப்பினும் கோனூர் தேபே ஆலயம் காலத்தால் பழமையானது. ஆகவே, ஆரியர்களான இந்தோ- ஈரானிய மக்களின் பூர்வீக இடம் கோனூர் தேபே ஆக இருந்திருக்கலாம்.

ஈரானியர்களும், வட இந்தியர்களும் இனத்தால் ஒன்று தான். ஆரியர்கள் என்பதும் அதைத் தான் குறிக்கும். சைபீரியாவில் தோன்றி, மத்திய ஆசியா வழியாக தெற்கு நோக்கி புலம்பெயர்ந்த இனத்தவரின் வழித்தோன்றல்கள் தான், இன்றைய ஈரானியரும், வட இந்தியர்களும். அனேகமாக, மத்திய ஆசியாவில் இருந்து அவர்கள் இரண்டு வேறு கிளைகளாக பிரிந்து சென்றிருக்கலாம். இருப்பினும் தெய்வங்கள், மத வழிபாடுகள், புராணக் கதைகள் சில சிறிய மாற்றங்களோடு அப்படியே இருந்துள்ளன.

இருக்கு (Rig) வேதத்தில் சோம பானத்தை போற்றும் செய்யுள்கள் நிறைய உள்ளன. தேவர்கள் சோம பானம் அருந்தியதாக குறிப்பிடப் படுகின்றது. நீண்ட காலாக, இந்தியாவில் வாழும் இந்துக்கள் பலர் சோம பானத்தை ஒரு கற்பனையான புராணக் கதை என்றே கருதி வந்தனர். அதற்குக் காரணம், ஈரான், ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த ஆரியர்கள் (அதாவது இந்துக்கள்/பிராமணர்கள்) பிற்காலத்தில் இஸ்லாமியராக மாறி விட்டனர். அதனால், இந்தியாவுக்கும் மத்திய ஆசியாவுக்கும் இடையிலான பண்டைய தொடர்பு அறிந்து விட்டது.

ஆப்கானிஸ்தானில் இன்றைக்கும் சில இடங்களில் சோம பானம் தயாரிக்கத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். (இது பற்றி ஏற்கனவே ஒரு பிபிசி ஆவணப்படம் வெளிவந்துள்ளது. பார்க்க: http://kalaiy.blogspot.nl/2012/01/blog-post_21.html) அந்நாட்டில் வளரும் கஞ்சா செடிகளில் இருந்து பதப்படுத்தப் பட்டு வடித்தெடுக்கப் படும் திரவம் தான் சோம பானம் என அழைக்கப் படுகின்றது. பண்டைய காலங்களில் அது மதுவாக மட்டுமல்லாது, மருத்துவ பானமாகவும் அருந்தப் பட்டது. இன்றைக்கும் கஞ்சாவில் உள்ள மருத்துவ அம்சங்கள், நவீன பரிசோதனைக் கூடங்களில் ஆய்வு செய்து நிரூபிக்கப் பட்டுள்ளன. ஆகவே, பண்டைய காலத்து "தேவர்கள்" சோம பானத்தை "அமிர்தமாக" கருதியதில் வியப்பில்லை.

கோனூர் தேபே நாகரிகத்தை கண்டுபிடித்த ரஷ்ய அகழ்வாராய்ச்சியாளர்  விக்டர், அங்கு சோம பானம் தயாரிக்கப் பயன்படுத்திய களிமண் தட்டுகளை கண்டுபிடித்துள்ளார். அதில் கஞ்சாவில் இருந்து எடுக்கப் பட்ட மருத்துவ பதார்த்தமான Ephedrine என்ற இரசாயனக் கூறுகளும் கண்டுபிடிக்கப் பட்டன. இதன் மூலம் சோம பானம் தயாரிப்பதற்கான மூலப் பொருளாக கஞ்சா பயன்பட்டிருக்கலாம் என்பதும் நிரூபணமாகிறது. மேலும், சோம பானத்திற்கும், நெருப்பை வழிபடும் அக்னிக் கடவுளின் ஆலயத்திற்கும் தொடர்பிருக்கிறது.

இன்றைக்கும் இந்து மத திருமணங்களில் ஐயர் ஹோமம் வளர்ப்பதை கண்டிருப்பீர்கள். வேறு சில நோக்கங்களுக்காகவும் ஹோமம் வளர்க்கப் படுகின்றது. பிராமண பூசாரிகள் ஒரு சதுர வடிவிலான அடுப்பில் தீமூட்டி எரிப்பார்கள். அதை ஹோமம் என்பார்கள். பண்டைய காலங்களில் வாழ்ந்த ஆரியர்கள், பெரியளவில் ஹோமம் வளர்ப்பதை ஒரு மதச் சடங்காகக் கொண்டிருந்தனர். அதே நேரம், ஈரானிய சொராஸ்திரிய மதத்தவர் போன்று, நெருப்புத் தெய்வத்தை வழிபடவும் ஹோமம் வளர்த்திருப்பார்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் ஈரானில் வாழ்ந்த சொராஸ்திரிய மதத்தவரும், ஈராக்கில் வாழும் யேசிடி மதத்தவரும், ஒரு குறிப்பிட்ட செடியை மதச் சடங்குகளுக்காக பயன்படுத்தி வந்தனர். அதன் தாவரவியல் பெயர்: Genus Ephedra. அதை அவர்களது மொழியில் "ஹோம்" என்று அழைப்பார்கள். 

ஹோம் என்பது பண்டைய ஈரானிய மொழிச் சொல்லான ஹோமம் என்பதில் இருந்து வந்தது. சம்ஸ்கிருத மொழியில் சோமா என்பது, ஈரானிய மொழியில் ஹோமா என்று பயன்படுத்தப் பட்டு வந்தது. இரண்டு சொற்களும் உச்சரிப்பு மாறுபட்டாலும் ஒரே பொருளைக் குறிப்பவை தான். ஆகவே, சோம பானம், ஹோமம் வளர்த்தல், அக்னி வழிபாடு எல்லாம் ஒரே மூலத்தைக் கொண்டவை தான்.

(பிற்குறிப்பு: Erika Fatland எழுதிய Sojetstan என்ற பயண நூலில் துருக்மேனிஸ்தான் பற்றியா பகுதியில் இந்தத் தகவல் கிடைத்தது. இவற்றிற்கான ஆதாரங்களை நீங்களாகவே இணையத்தில் தேடி வாசிக்கலாம். மேற்கொண்டு ஆராய்வது துறை சார்ந்த அறிஞர்களின் பொறுப்பு.)


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Tuesday, August 21, 2012

ரஷ்யாவிலிருந்து புலம்பெயர்ந்த இந்துக்களின் முன்னோர்கள்

[இந்துக்களின் தாயகம் 
சீனாவில் உள்ளது! - 15]

(பதினைந்தாம் பாகம்)
வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த நிகழ்வுகளையும், அவை நடைபெற்ற ஆண்டுகளையும் மட்டுமே, வரலாற்றுப் பாடத்தில் சொல்லிக் கொடுப்பதால், பலருக்கு அந்தப் பாடம் கசக்கின்றது. ஆனால், சரித்திரத்தில் நடந்த சம்பவங்களால் ஏற்பட்ட விளைவுகளையும், அவை எமது அன்றாட வாழ்க்கையில் உண்டாக்கும் தாக்கங்களையும் சொல்லிக் கொடுத்தால், மக்கள் இலகுவாக புரிந்து கொள்வார்கள். ஆனால், அதிலே ஒரு பிரச்சினை. மக்கள் உண்மைகளை அறிந்து விட்டால், வருங்காலத்தில் ஒரு சமூகப் புரட்சிக்கு வழிவகுத்து விடும். அதனால் தான், நான் இங்கே எழுதிய விடயங்களை பற்றி யாரும் பேசுவதில்லை.  உதாரணத்திற்கு, அலெக்சாண்டரின் இந்தியா நோக்கிய படையெடுப்பில் இருந்து ஆரம்பிப்போம். அலெக்சாண்டர் பற்றி நீங்கள் அறிந்தது என்ன? உலகம் முழுவதும் ஆள வேண்டுமென்று ஆசைப்பட்டான். அடுத்தடுத்து பல போர்களில் வெற்றிகளை குவித்தான். இந்தியாவில் தோல்வியுற்று திரும்பிச் சென்றான்.... அதன் பிறகு? அலெக்சாண்டர் வழிநடத்தி வந்த கிரேக்கப் படைகள் என்னவாகின. மாசிடோனியாவுக்கு (அலெக்சாண்டரின் தாய்நாடு) திரும்பிச் சென்றனவா?

கி.மு. 300 ல் படையெடுத்து வந்த அலெக்சாண்டரின் படைகள் திரும்பிச் செல்லவில்லை. வெள்ளையின கிரேக்கர்கள், ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் நிரந்தரமாக தங்கி விட்டிருந்தனர். அலெக்சாண்டர் அதிக காலம் உயிர் வாழவில்லை. 32 வயதில் இறந்தான். உண்மை. ஆனால், அலெக்சாண்டரின் தளபதிகள், அவன் கைப்பற்றிய நாடுகளை ஆண்டு வந்தார்கள். அதாவது, ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானின் மேற்குப் பகுதியும், அடுத்த 300 ஆண்டுகளுக்கு கிரேக்கர்களால் ஆளப்பட்டன! கிரேக்க வெள்ளையரின் காலனிகள் ஏற்பட்டன. அவர்கள் தமது மொழி, மதம், கலாச்சாரம் எதையும் விட்டுக் கொடாமல், தொடர்ந்து பின்பற்றி வந்தனர். இன்று அந்த கிரேக்கர்கள் எங்கே? உள்ளூர் மக்களுடன் ஒன்று கலந்து விட்டனர். கிரேக்க வம்சாவளியினர், இந்து, கிரேக்க தெய்வங்களை வழிபட்டு வந்தனர். அந்தக் காலத்தில், ஆப்கானிஸ்தான் முதல் காஷ்மீர் வரையிலான கிரேக்க குடியேறிகளின் நாட்டில், இந்து-பௌத்த மதங்களின் செல்வாக்கு மேலோங்கிக் காணப்பட்டது. (பார்க்க:  India and Central Asia: Classical to Contemporary Periods, by Braja Bihari Kumara)

அலெக்சாண்டரின் படையெடுப்பு மட்டுமல்ல, செங்கிஸ்கானின் படையெடுப்பும் இந்திய மக்கள் சமூகத்தில் மாபெரும்  மாற்றங்களை உண்டாக்கின. செங்கிஸ்கான் தலைமையில், துருக்கி மொழி பேசும் மொங்கோலியர்கள் உலக வரலாற்றில் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டார்கள். அவர்களின் சாம்ராஜ்யத்திற்குள் வட இந்தியாவின் ஒரு பகுதியும் (பஞ்சாப், காஷ்மீர், டெல்லி) அடங்கியது. மொங்கோலியர்களும் வெள்ளை இனத்தவர்கள் தான். அப்போது வந்த வெள்ளையின துருக்கியர்கள், வட இந்தியாவில் நிரந்தரமாக தங்கி விட்டனர். மொங்கோலியர்கள் படையெடுத்த காலத்தில், அவர்கள்  முஸ்லிம்களாக மாறி இருக்கவில்லை.  மொங்கோலிய மக்களின் புராணக் கதைகள் சில, இந்து மத புராணக் கதைகளை ஒத்திருப்பதை ஏற்கனவே எழுதி இருக்கிறேன். பாரசீகத்தில் இருந்து படையெடுத்து வந்த பஹ்லவி மன்னர்கள், தென்னிந்தியா வரை பிடித்து ஆண்டார்கள். அவர்களுடன் ஈரானை தாயகமாக கொண்ட, வெள்ளையின படைவீரர்களும் வந்தார்கள்.  அவர்களும் திரும்பிச் செல்லவில்லை. பல்லவர்கள் என்ற பெயரில் தமிழர்களாக மாறி விட்டனர்!

செங்கிஸ்கானின் சாம்ராஜ்யம் இந்தியா வரை விரிந்த அதே காலகட்டத்தில்,  தென்னிந்தியாவில் சோழர்கள் ஒரு சாம்ராஜ்யத்தை கட்டியிருந்தனர். சோழர்களுக்கும், செங்கிஸ்கானின் அரசுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்த விடயம் எத்தனை பேருக்குத் தெரியும்? சீனாவில் குவான் ஸௌ என்னும் நகரத்தில்,  சோழ நாட்டு வணிகர்கள் கட்டிய சைவக் கோயில் ஒன்றிருந்தது. அந்தக் கோயில் செங்கிஸ்கானுக்காக கட்டப்பட்ட விபரம், தமிழிலும், சீன மொழியிலும் ஒரு கல்வெட்டில் பொறிக்கப் பட்டுள்ளது. அந்தக் கல்வெட்டை இன்றைக்கும் குவான் ஸௌ அருங்காட்சியகத்தில் காணலாம். சோழர்கள் காலத்தில் சைவ மதம் நிறுவனமயப் படுத்தப் பட்டது. இன்றைய இந்து மதத்திற்கு அடிப்படையான, சோழர்களின் சைவ மதத்திற்குள், பல மொங்கோலிய கலாச்சாரக் கூறுகள் உள்வாங்கப் பட்டன. 

"என்னது! நாங்கள் (மொங்கோலிய) துருக்கியரின் கலாச்சாரத்தை பின்பற்றுகிறோமா? அதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா?"
நீங்கள் தமிழ்க் கலாச்சாரம் என்று கருதிக் கொண்டிருக்கும் பல விடயங்கள், மொங்கோலியாவில் இருந்து இறக்குமதியானவை! இன்றைய முற்போக்காளர்கள் அவற்றை பழமைவாதம் என்று ஒதுக்கலாம். உதாரணத்திற்கு, ஒரு குடும்பத்தில், ஆண்களுக்கும், விருந்தினருக்கும் உணவளித்த பின்னர் எஞ்சியதை தான், அந்தக் குடும்பத்து பெண்கள் சாப்பிட வேண்டும்.  மணமாகாத பெண்கள் கற்பைக் காப்பற்றப் பாடுபடும் கலாச்சாரமும், துருக்கியரிடம் இருந்து கடன் வாங்கியது தான். இன்றைக்கும், தமிழ் சினிமாக்களில் வரும் கதாநாயகன், தன்னை காதலிக்காத பெண்ணை பலவந்தப் படுத்தி தாலி கட்டுவான். அதற்குப் பிறகு, அந்தப் பேதைப் பெண், கல்லானாலும் கணவன் என்று வாழத் தொடங்கி விடுவாள். அதெல்லாம்  தமிழரின் கலாச்சாரம் அல்ல. இன்றைக்கும், மத்திய ஆசிய நாடுகளில், துருக்கி மொழி பேசும் மக்கள் மத்தியில் அது போன்ற சம்பிரதாயம் பின்பற்றப் படுகின்றது. 

வரலாற்றில் எழுதப்பட்டுள்ள அன்னியப் படையெடுப்புகளுக்கு முன்னரும், வெள்ளையினத்தவர்களின் ஊடுருவல் இருந்துள்ளதை மறுக்க முடியாது.  கி.மு. 3000 அல்லது 5000 ஆண்டுகளுக்கு முன்னர், ஆசியாக் கண்டம் எவ்வாறு காட்சியளித்தது? நாம் இலகுவாக புரிந்து கொள்வதற்காக, அன்றைய ஆசியாவை மூன்றாக பிரித்துப் பார்ப்போம். இந்தியாவுக்கு மேற்கே ஆப்பிரிக்க-திராவிட இனத்தவரின் நாகரீகம், இன்றைய ஈராக், ஈரான் ஆகிய நாடுகளை உள்ளடக்கி இருந்தது. இந்தியா, இலங்கை, பர்மா, தாய்லாந்து, மலேசியா, கம்போடியா ஆகிய நாடுகளில் நாகா இன மக்களின் நாகரீகம் காணப்பட்டது. இந்த இரண்டு நாகரீகங்களும், பல துறைகளில் சிறந்து விளங்கின. 

மேற்கேயிருந்து ஆப்பிரிக்க-திராவிடர்கள், கிழக்கு நோக்கி நகர்ந்தனர். அந்த தருணங்களில், திராவிடர்-நாகர் மோதல்கள் நடந்துள்ளன. (இன்று மியான்மரில், நடக்கும் ரோஹிங்கியா பிரச்சினையையும், ஒரு வகையில் திராவிடர்-நாகர் போரின் தொடர்ச்சியாக கருதலாம்.) இருப்பினும், ஆப்பிரிக்க-திராவிடர்கள் இலங்கையின் அம்பாந்தோட்டை வரை வெற்றிகரமாக நகர்ந்து, தமது குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர். அதாவது, இந்திய உப கண்டத்தைப் பொறுத்த வரையில், திராவிடர்களும் வந்தேறு குடிகள் தான். ஆனால், இரு இனங்களும் பரஸ்பரம் நட்பு பாராட்டி, ஒன்று கலந்து விட்டன. ஒரு இனத்தின் நாகரீகத்தை, மற்ற இனம் அழிக்கவில்லை. இரண்டும் சேர்ந்து புதிய நாகரீகம் உருவாகியது. (பார்க்க: Sun and the Serpent, by C.F. Oldham &  The Ruling Races of Prehistoric Times in India, South- Western Asia, and Southern Europe, By James Francis Katherinus Hewitt)

ஆசியாக் கண்டத்தின் தெற்குப் பகுதில், நாகரீகத்தில் சிறந்து விளங்கிய திராவிடர், நாகர் இனங்கள் வாழ்ந்த காலத்தில், வெள்ளையின மக்கள் நாடோடிகளாக அலைந்து திரிந்தனர். அவர்களின் தாயகம், இன்றைய ரஷ்யாவுக்கு சொந்தமான சைபீரியா, காசகஸ்தான், அல்லது மொங்கோலியா. அவர்களது தாயகப் பூமி விவசாயத்திற்கு ஏற்ற நிலவமைப்பை கொண்டிருக்கவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்த புல்வெளிகள், கால்நடைகளை வளர்ப்பதற்கு ஏற்ற இடம். அதனால், கோடை  காலத்தில் ஓரிடம், பனிக் காலத்தில் இன்னொரு இடம் என்று, கால்நடைகளுடன் இடம்பெயர்வது வழக்கம். இன்றைக்கும் அந்த நாடுகளில் வாழும் கிராமப்புற மக்கள், கால்நடைகளை வளர்க்கும் நாடோடிக் கலாச்சாரத்தை பின்பற்றுகின்றனர். அவர்கள் குதிரைகளையும் சவாரி செய்யப் பயன்படுத்தி வந்தனர். ஓடிக் கொண்டிருக்கும்  குதிரைகள் மீது மாறி மாறி சவாரி செய்யும் திறமை காரணாமாக, பிற இனங்களுடனான போரில் வெல்ல முடிந்தது. 

திராவிட, நாக இன மக்கள் குதிரைகளின் பயன்பாட்டை அறிந்திருக்கவில்லை.  வடக்கே இருந்து படையெடுத்து வந்த வெள்ளையின நாடோடிக் குழுக்களுடன் நடந்த போர்களில், இதன் காரணமாக தோல்வியை தழுவி இருக்கலாம். வெள்ளையின நாடோடிக் குழுக்கள், சில்லுகளின் பயன்பாட்டையும் அறிந்திருந்தனர். அதனால், நாற்புறமும் மூடப்பட்ட வண்டிகளுக்கு சில்லு பூட்டி, குதிரைகளில் இழுத்துச் சென்றனர். அந்த குதிரை வண்டிகள் சிறிய வீடு போன்று, (நமது காலத்தில் "கரவன்" போன்று) காணப்பட்டன. முழுக் குடும்பமும் அதற்குள் இருந்து, நாடு விட்டு நாடு குடிபெயர்ந்தது. பிற்காலத்தில், மிகப்பெரிய கூடார வீட்டைக் கூட, குதிரைகள் கட்டி இழுத்துச் சென்றனர். இதை எல்லாம் உங்களுக்கு நிரூபிப்பதற்கு, நான் அதிகம் சிரமப் படத் தேவையில்லை. காசகஸ்தான் போன்ற மத்திய ஆசிய நாடுகளுக்கு சென்று, நீங்களே நேரில் பார்க்கலாம்.  

தாயக பூமியில் அரிதாகக்  கிடைத்த இயற்கை வளங்கள், வெள்ளையின நாடோடிக் குழுக்களை தெற்கு நோக்கி இடம்பெயர வைத்ததில் வியப்பில்லை. ஏற்கனவே பல குழுக்கள் மேற்கு நோக்கி இடம்பெயர்ந்திருந்தன. இன்றைய ஐரோப்பிய இனங்களின் மூதாதையர் அவர்களே. வெள்ளையின நாடோடிக் குழுக்கள், இயற்கையை வழிபட்டு வந்தன. மரம், குன்று, ஆகாயம், நீர், இடிமுழக்கம் எல்லாமே அவர்களின் தெய்வங்களாக இருந்தன. இன்றைக்கும் சைபீரியாவில் வாழும் மக்கள், இயற்கை வழிபாட்டாளர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பல ஆயிரம் வருடங்களாக, இயற்கை வழி வந்த தெய்வங்கள் தான், வெள்ளையினத்தவரின் மத நம்பிக்கையை தீர்மானித்தன. ஸ்கன்டிநேவியர்கள், ரோமர்கள், கிரேக்கர்கள் வழிபட்ட தெய்வங்களுக்கும், இந்திரன், வருண பகவான், அக்னி போன்ற இந்து-சம்ஸ்கிருத மக்கள் வழிபட்ட தெய்வங்களுக்கும் இடையிலான ஒற்றுமையே அதனை நிரூபிக்க போதுமானது. ஆனால், அந்த மத நம்பிக்கைகளுக்கும், எமக்குத் தெரிந்த இந்து மதத்திற்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அதனை எப்படி விளக்குவீர்கள்?  எங்கோ ஒரு இடத்தில், வெள்ளையின நாடோடிக் குழுக்கள் தம்மை இந்துக்களாக, அல்லது பிரம்மாவை முழுமுதற் கடவுளாக வழிபடும் பிராமணர்களாக, தம்மை மாற்றிக் கொண்டன. அந்த மாற்றம் எங்கே நடந்தது? 

சமர்கண்ட் நகரம், இன்றைய உஸ்பெகிஸ்தான் நாட்டில், தாஜிகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. மூவாயிரம் வருடங்களுக்கு முன்பும் அது பல்லின கலாச்சாரங்களைக் கொண்ட நகரமாக திகழ்ந்தது. அப்பொழுது அதன் பெயர் "மார்க்கண்டு".  சொக்டியானா அல்லது சுகுதா என்ற ராஜ்யத்தின் தலைநகரம். அந்த நகர மக்கள், பிரமா, இந்திரன், சிவன், விஷ்ணு ஆகிய தெய்வங்களை வழிபட்டு வந்தனர்.இந்த தெய்வங்களுக்கு, அவர்களின் மொழியில் வேறு பெயர்கள் இருந்தன. அவை முறையே, சிரவன்  (பிரமா), அட்பட் (இந்திரன்), வெஷ்பாகர் (சிவன்). ஆனால், கடவுளர் உருவங்கள் ஒரே மாதிரி உள்ளன.   (அந்த சுவரோவியங்கள் சமர்கண்ட்  நகரில் இருந்து 60 கி.மி. தூரத்தில்  Penjikant ல்  உள்ளன. அல்லது ரஷ்யாவில், சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் உள்ள  Hermitage Museum ல் பார்வையிடலாம்.) அன்றைய மத்திய ஆசியாவின் வேறு பகுதிகளிலும், இந்து மத வழிபாடு நிலவி இருக்கலாம். எப்போதும் பொருளாதார வளர்ச்சி காணும் நாடு, தன்னை விட அதிக வளர்ச்சி கண்ட நாட்டு நாகரீகத்தை பின்பற்றுவது வழமை. பண்டைய காலத்திலும் அது தான் நிலைமை. சொக்டியானா, தெற்கில் வாழ்ந்த திராவிடர்களின் மத வழிபாட்டை பின்பற்றி இருக்கலாம். ஏற்கனவே திபெத் பகுதிகளில், திராவிடர்களின் தாந்திரிய மதம் பரவி இருந்தது. 

வெள்ளையின நாடோடிக் குழுக்களின் தெற்கு நோக்கிய இடப்பெயர்வு, இரண்டு திசைகளில் நடந்துள்ளது. ஒன்று, சீனாவில் இருந்து திபெத் ஊடாக நடந்த இடப்பெயர்வு. மற்றது, ஈரானில் இருந்து பாகிஸ்தான் ஊடாக நடந்த இடப்பெயர்வு. இன்றைய நவீன காலத்திலும், சீனாவும், இந்தியாவும் ஆயிரக்கணக்கான மைல் நீளமான எல்லையைக் கொண்டுள்ளன. ஆகவே, பெருமளவு வெள்ளையின மக்களின் ஊடுருவல், சீனாவில் இருந்து நடந்திருக்க வாய்ப்புண்டு. இடைப்பட்ட காலத்தில், அவர்கள் இந்து மத தெய்வங்களை, தமது கடவுளராக மாற்றிக் கொண்டனர். ஏனெனில், சைபீரியாவில் வாழ்ந்த காலத்தில் பின்பற்றிய இயற்கை வழிபாட்டை விட, திராவிட-நாகர்களின் "இந்து மதம்" வளர்ச்சி அடைந்திருந்தது. ஈரானில் இருந்து நடந்த இடப்பெயர்வு, குறைந்தது ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் நடந்திருக்கலாம். ஈரானில் தங்கி விட்ட வெள்ளையின மக்கள், தனியான நாகரிக மாற்றத்திற்கு உட்பட்டனர். சரதூசர் என்ற தத்துவ ஞானி, திராவிட மக்களின் தெய்வங்களில் ஒன்றை வைத்து, ஓரிறைக் கொள்கை கொண்ட புதிய மதம் ஒன்றை உருவாக்கி இருந்தார்.  அது புதியதொரு நாகரிக வளர்ச்சிக்கு வழி திறந்து விட்டது. 

சரதூசரின் மதத்தை பின்பற்றிய ஈரானியரின் மத நூல்கனான, அவெஸ்தா போன்ற இலக்கியங்கள், இந்து மத வேதங்களின் வடிவில் எழுதப் பட்டுள்ளன. இரண்டுமே செய்யுள் வடிவில் எழுதப் பட்டுள்ளது மட்டுமல்ல, பல கதைகள் ஒரே மாதிரி உள்ளன. சில சுவாரஸ்யமான விடயங்களையும் அவதானிக்க முடிகின்றது. பண்டைய ஈரானிய மத நூல்களில், "தேவர்கள் கெட்டவர்கள், அசுரர்கள் நல்லவர்கள்!"  மேலும், சரதூசரின் மதத்தின் ஒரேயொரு கடவுளின் பெயர், "அசுரா" மாஸ்டா! அப்படியானால், எதற்காக இந்து மத நூல்கள், தேவர்களை நல்லவர்களாகவும், அசுரர்களை கெட்டவர்களாகவும் சித்தரிக்கின்றது? காரணத்தை நாங்கள் ஊகிக்க மட்டுமே முடியும். 

அநேகமாக, ஈரானில் குடியேறிய வெள்ளையின மக்கள், ஏற்கனவே அங்கிருந்த உன்னதமான திராவிட நாகரீகத்தை பின்பற்ற விரும்பி இருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் குடியேறிய வெள்ளையினத்தவர்கள், அசுரர்கள் (நாகர்கள்), தாசர்கள் (திராவிடர்கள்) ஆகிய இனங்களுடனான யுத்தங்களில் வென்றனர். அத்தோடு நில்லாது, யுத்த வெற்றிகளை பறைசாற்றும் புதிய மதம் ஒன்றையும் உருவாக்கிக் கொண்டனர். அதுவே, பிராமண மதம் என்றும், பிற்காலத்தில் இந்துமதம் என்றும் அழைக்கப் பட்டது. ஈரானில் தோன்றிய சரதூசரின் மதத்திற்கும், இந்தியாவில் தோன்றிய இந்து மதத்திற்கும் இடையில், நடைமுறையில் பாரிய வித்தியாசங்கள் இருந்தன. இந்து மதத்தில், சைபீரியப் பழங்குடியின மக்களின் கலாச்சாரம் தொடர்ந்தும் பின்பற்றப் பட்டு வந்தது ஒரு முக்கிய வேறுபாடு ஆகும். 

மேற்கு சீனப் பிரதேசத்தில், தொகாரியன் என்ற ஐரோப்பியர் போன்ற தோற்றம் கொண்ட, ஒரு வெள்ளையினம் வாழ்ந்து வந்தது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், பட்டு வாணிபம் காரணமாக உண்டான பொருளாதார வளர்ச்சியினால், அவர்களும் நகரங்களை கட்டி நாகரீகமடைந்த சமுதாயமாக திகழ்ந்தனர். பிற்காலத்தில், கிழக்கே இருந்து படையெடுத்து வந்த சீனர்களுடனான போரின் விளைவாக, இன்று அந்த இனம் அழிந்து விட்டது. எஞ்சிய மக்கள், தாஜிக், துருக்கி இன மக்களுடன் ஒன்று கலந்து விட்டனர். சீனாவில் இன்றைக்கும் அழியாமல் உள்ள, துகாரியன் நகர இடிபாடுகளில் காணப்படும் ஓவியங்கள் சில உண்மைகளை உணர்த்துகின்றன. சுவரோவியங்களில் காணப்படும்  வெள்ளையின துகாரியன் மக்கள், இந்தியர்களைப் போல நெற்றியில் பொட்டு வைத்திருக்கிறார்கள்! சில முகங்கள் (வெள்ளை நிற) இந்திய முகங்கள் போல தெரிகின்றன.
(மேலதிக தகவல்களுக்கு இந்த இணைய வீடியோவை பார்க்கவும்:

China's Tocharian mummies - Silent witnesses of a forgotten past, http://video.google.com/videoplay?docid=-1362674044731979808)   

பண்டைய இந்துக்களின் சடங்கு, சம்பிரதாயம், கலை, கலாச்சாரங்களை எடுத்துப் பார்த்தாலே புரிந்து விடும், அவர்கள் எங்கிருந்து வந்திருக்கிறார்கள் என்று. பிராமணர்கள் அஸ்வமேத யாகம் வளர்த்து, குதிரைகளை யாகத்தீயில் தூக்கிப் போடுவது வழக்கம்.  ஊர் மத்தியில், பெரியதொரு நெருப்பை உண்டாக்கி, அதனருகில் விருந்துண்டு மகிழ்வது, ஆதி கால வெள்ளையரின் பண்டைய காலப் பழக்கம். பிற்காலத்தில் கிறிஸ்தவ மதம் அந்த சம்பிரதாயத்தை தடை செய்து விட்டாலும், அது இன்னமும்  சில இடங்களில் தொடர்கின்றது. சில வருடங்களுக்கு முன்னர், நோர்வேயிலும், சைப்பிரசிலும், நானே நேரில் சென்று பார்த்திருக்கிறேன்.

உலக வரலாற்றில், எந்த இனம் அதிகளவு குதிரைகளை வீட்டுத் தேவைகளுக்காக பயன்படுத்தியது? மத்திய ஆசியாவிலோ வாழும், மொங்கோலிய/துருக்கி மொழிகளை பேசும் மக்களின் வாழ்வில் இன்றைக்கும் குதிரைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. வேத நூல்களில் எழுதப் பட்டுள்ள உணவுப் பதார்த்தங்கள் பல, இன்றைய இந்தியர்கள் யாருக்கும் தெரியாது. உதாரணத்திற்கு, சோம பானம். இன்றைக்கும் நீங்கள் ஆப்கானிஸ்தான் சென்றால், அங்கே சோம பானம் பருகலாம்! அடுத்தது, பெண்களை கடத்திச் சென்று மணம் முடிக்கும் கலாச்சாரம். வேதங்களில் எட்டு வகை திருமணங்கள்  பற்றி கூறப் பட்டுள்ளன. அசுரம், ராக்ஷசம், மற்றும் காந்தர்வம் போன்ற மண முறைகள், ஒரு பெண்ணை பலவந்தமாக கடத்திச் சென்று மணம் முடிப்பதைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. அப்படியானால், அந்த மண முறைகள் எல்லாம், பண்டைய (ஆரிய) இந்துக்களின் பண்பாடாக இருந்துள்ளது. அந்தப் பண்பாடு, உலகில் வேறெந்த நாட்டிலாவது இருக்கின்றதா? கிரிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் போன்ற மத்திய ஆசிய நாடுகளில், இன்றைக்கும் இளைஞர்கள் தனது வருங்கால துணைவியாரை கடத்திச் சென்று மணம் முடிக்கின்றனர். 

இந்துக்களின்  தாயகம் எது? பூர்வீக இந்துக்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள்? இது போன்ற விபரங்களை இந்தத் தொடர் கட்டுரை தெளிவாக விளக்கி இருக்கும் என்று நம்புகின்றேன். இதற்குப் பிறகும் நம்ப மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பவர்கள், சீனா, ரஷ்யா, அல்லது மத்திய ஆசிய நாடுகளுக்கு சென்று, அங்குள்ள கலாச்சார, சம்பிரதாயங்களை மேற்கொண்டு ஆராயும் பொறுப்பை அவர்களிடமே விட்டு விடுகிறேன். இந்தக் கட்டுரையை முடிப்பதற்கு முன்னர் சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன். சமஸ்கிருதம், ஒரு இனத்தை சேர்ந்த மக்களின் தாய் மொழியாக இருந்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை. அது, இறைவனை வழிபடவும், மத இலக்கியங்களை புனையவும், பிராமணர்களால் பயன்படுத்தப் பட்ட "இரகசிய" மொழியாகும். ஆதி காலத்தில், பிராமணர் என்பது சாதியைக் குறிக்கவில்லை. பௌத்த பிக்குகள் போன்று, ஒரு துறையில் பாண்டித்தியம் பெறுவதற்காக தெரிந்தெடுக்கப் பட்டவர்களை குறிக்கும். 

ஆரியர் என்பதும், சிறந்தவர்கள் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப் பட்டது. அது ஒரு இனத்தைக் குறிக்கும் சொல் என்பதற்கோ, அல்லது ஆரியர்கள் எல்லோரும் வெள்ளையர்கள் என்பதற்கான ஆதாரம் எதுவும் கிடையாது. "ஆரியர்கள் வெள்ளையர்கள்" என்பது ஒரு நிறவெறிக் கோட்பாடு. சமஸ்கிருதத்திற்கும், ஜேர்மனிய மொழிகளுக்கும் இடையிலான ஒற்றுமை, இவற்றுடன் சிவந்த நிற இந்தியர்களையும் ஒன்று சேர்த்து பார்த்து, பிரிட்டிஷ் காரர்கள் உருவாக்கிய கோட்பாடு.  "ஈரான்" (ஆரியர்களின் நாடு) என்ற பெயர் கூட, ஒரு இனத்தைக் குறிக்கும் பெயர் என்ற அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. "மேன் மக்களின் நாடு", என்ற ஒரு சிறப்பு தேசிய அடையாளமாகவும் இருக்கலாம்.  பண்டைய வரலாற்றை இலகுவாக புரிந்து கொள்வதற்காக, சில அறிஞர்கள் உருவாக்கிய ஆரியர், திராவிடர் போன்ற சொற்கள், இன்று வெகுவாக அரசியல் மயப் படுத்தப் பட்டு விட்டன. 

வரலாறு நெடுகிலும், மக்கள் மாறாமல் அப்படியே இருந்ததில்லை.  ஆனால், இருபதாம் நூற்றாண்டு இனவாதிகள் மட்டுமே, ஒரு இனத்தின் மாறாத் தன்மை பற்றிய மூட நம்பிக்கைகளை கொண்டுள்ளனர்.  எமது மூதாதையர் யாரும், எம்மைப் போல இனவாதிகளாக இருக்கவில்லை. அதற்கு மிகச் சிறந்த உதாரணம், இந்து மதம். இந்திய நாகரக்ளினதும், திராவிடர்களினதும் மத நம்பிக்கைகளை ஆரியர்களும் பின்பற்றினார்கள். மதம், மொழி, இவை எல்லாம் மக்களால் இலகுவில் மாற்றிக் கொள்ளக் கூடியவை.  ஒருவர் பிறப்பால் மட்டுமே இந்துவாக முடியும் என்று இன்னமும் நம்புகிறவர்கள், தமது முன்னோர்களை  சீனாவிலோ, ரஷ்யாவிலோ தேடிச் செல்லட்டும். 

(முற்றும்) 

உசாத்துணை :
1. The Horse, the Wheel, and Language: How Bronze- Age Riders from the Eurasian Steppes, by David W.Anthony
2.Lost Cities of China, Central Asia and India, by David Hatcher Childress
3. Sons of the Conquerers, by Hugh Pope
4. In Centraal Azië, Een reis langs tradities en godsdiensten, by Linda Otter
5. Sun and the Serpent, by C.F. Oldham
6. India and Central Asia: Classical to Contemporary Periods, by Braja Bihari Kumara 


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்
6.தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்
7.பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !
8.கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி?
9.தமிழர் தொலைத்த விமானம் செய்யும் தொழில்நுட்பம்
10.எல்லாளனை வீழ்த்திய, "தமிழ்த் துரோகக் கடவுள் கந்தன்!"
11. புத்தரின் பல்லுக்காக போரிட்ட, சிங்கள-தமிழ் மன்னர்கள்
12.நாக நாட்டு குகைக் கோயில் மர்மம்
13. விஷ்ணுவின் வாகனமான, "ஷாருக்கான்" என்ற கருடன்!
14.காஷ்மீரில் மறைந்த நாகர்களின் நாகரீகம்

Monday, August 20, 2012

காஷ்மீரில் மறைந்த நாகர்களின் நாகரீகம்

[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது! - 14]

(பதினான்காம் பாகம்)

19 ம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் காலனியாக இருந்த இந்தியாவில் தான், முதன்முதலாக "ஆரிய சித்தாந்தம்" தோன்றியது.  இந்தியா என்ற தேசத்திற்காக, அரசியல் நிர்ணய சட்டம் எழுத வேண்டிய நேரம் வந்தது. அதற்காக ஒரு பிரிட்டிஷ் நீதிபதி சமஸ்கிருதம் படித்தார். சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமையடைந்த நீதிபதிக்கு, ஒரு கலாச்சார அதிர்ச்சி காத்திருந்தது. ஆங்கிலம், ஜெர்மன், லத்தீன், கிரேக்கம், ஆகிய ஐரோப்பிய மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையில் நிறைய ஒற்றுமை இருந்ததை கண்டுபிடித்தார்.  அந்த தகவல், ஐரோப்பிய அறிவுஜீவிகள் மத்தியில் ஆர்வத்தை உண்டாக்கியது. பல ஐரோப்பிய தத்துவ அறிஞர்கள், இந்திய தத்துவ இயல், இந்து மதம், பௌத்த மதம், ஆகியவற்றை பற்றி அறிந்து கொள்வதற்காக இந்தியாவுக்கு படையெடுத்தார்கள்.

அவர்களின் தேடல் இந்தியாவுடன் மட்டும் நிற்கவில்லை. இலங்கை, திபெத் (அன்று சுதந்திரமான தனிநாடு) ஆகிய  நாடுகளுக்கும் சென்றார்கள். சமஸ்கிருதம், பாளி மொழிகளில் எழுதப் பட்ட இலக்கியங்களை எல்லாம் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்தனர். அவர்கள் கற்றறிந்த பண்டைய இலக்கியங்களில் இருந்து, தாமாகவே சில முடிவுகளுக்கு வந்தார்கள். அவர்களது ஆராய்ச்சி பெரும்பாலும் தொல்பொருள் துறை, அகழ்வாராய்ச்சி, பண்டைய வரலாறு, போன்ற "நாகரிக உலகிற்கு சம்பந்தமற்ற" விடயங்களாக இருந்தன. ஆனால், எமது இன்றைய கருத்துருவாக்கம், சிந்தனை முறை, அரசியல்-மத நம்பிக்கைகள், எல்லாம், குறிப்பிட்ட சில ஐரோப்பிய அறிவுஜீவிகளால் உருவாக்கப் பட்டவை என்பதை பலர் அறிவதில்லை. 

ரிக் வேதத்தை மொழிபெயர்த்தவர்கள், அதனை முதலில் இந்துக்களின் புனித நூல் என்றார்கள். ஆனால், விரைவிலேயே அது ஆரியர்களின் வரலாற்று நூலாக புரிந்து கொள்ளப்பட்டது. வேத நூல்களில் எந்த ஒரு இடத்திலும், இந்து என்ற சொல்லே எழுதப் பட்டிருக்கவில்லை. அதனால், அதனை ஆரியர்கள் என்ற இனத்தை சேர்ந்த மக்களின் நூல் என்று கருதலாமா? பைபிளை (பழைய ஏற்பாடு) "யூதர்களின் வரலாற்றைக் கூறும் நூல்", என்று படித்தவர்களால் அப்படித் தான் புரிந்து கொள்ள முடியும். இந்திரனும், அவனது மக்களும், குதிரை வண்டிகளில்,  கால்நடைகளை ஓட்டிக் கொண்டு வந்த கதைகள் செய்யுள்களாக இயற்றப் பட்டுள்ளன. ஆனால், அவர்கள் ஆரியர்கள் என்றால், அந்த இன மக்கள் எங்கிருந்து வந்தார்கள்? அவர்களின் தாயகம் எங்கேயுள்ளது? அதைப் பற்றி எந்த தகவலும் இல்லை.

ரிக் வேதத்தில் எழுதப் பட்டுள்ள அரசர்கள்/தலைவர்கள்  எல்லாம் ஆரியர்களும் அல்ல.  ஆரிய இனக்குழுக்களுக்கு திராவிட அரசர்கள் தலைமை தாங்கியுள்ளமை, அவர்களின் பெயர்களைப் பார்த்தாலே தெரிகின்றது. (The Horse, the Wheel, and Language: How Bronze-Age Riders from the Eurasian Steppes Shaped the Modern World, David W. Anthony) ஆகவே, இங்கே ஒரு குழப்பம் எழுகின்றது. ஆரியர்கள் என்றால் யார்? அது ஒரு இனத்தைக் குறிக்கும் சொல்லா?  முக்கியமாக, ஆரியர் என்பது வெள்ளையினத்தைக் குறிக்கும் சொல்லா? 19 ம் நூற்றாண்டு, ஐரோப்பிய அறிவுஜீவிகளுக்கு அந்தக் குழப்பம் இருக்கவில்லை.  "ஆரியர் என்பது வெள்ளயினத்தைக் குறிக்கும்.வெள்ளையினக் குடியேறிகளின் இந்தியப் படையெடுப்புகளைப் பற்றிய கதைகள் தான் ரிக் வேதத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளன." இத்தகைய ஒரு தலைப்பட்சமான முடிவுகள் தான், பிற்காலத்தில் நிறவெறிக் கொள்கை வகுப்பாளர்களால் ஹிட்லருக்குப் போதிக்கப் பட்டன.

"இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது" என்று, அர்த்தமில்லாமல் எழுந்தமானமாக தலைப்பிடவில்லை. இந்து என்ற சொல், இந்தியாவில் வாழ்ந்த புராதன மத நம்பிக்கைகளை கொண்ட மக்களைக் குறிப்பதற்காக, பிரிட்டிஷ் காரர்களால் சூட்டப் பட்ட பெயராகும். முன்பு இஸ்லாமிய-அரேபியர்கள் பாவித்த சொல்லை, பிரிட்டிஷார் கடன் வாங்கி இருந்தனர். இந்துக்களின் புனித சின்னமாக கருதப்படும் ஸ்வாஸ்திகா, ஹிட்லரினால் நாஜிக் கட்சியின் சின்னத்திற்காக கடன் வாங்கப் பட்டது. அது தொடர்பாக, இந்துக்களின் பூர்வீகத்தை ஆராய அக்கறை கொண்டிருந்தார். அதற்காக சில தூதுவர்களை திபெத் வரை அனுப்பினார். (1938–1939 German expedition to Tibet, http://en.wikipedia.org/wiki/1938%E2%80%931939_German_expedition_to_Tibet) அவர்கள், திபெத்தில் இந்துக்களின் தாயகத்தை கண்டுபிடித்தார்களா, இல்லையா என்பது தெரியாது. அதற்குள் நாஜி ஜெர்மனி போரில் தோற்று விட்டது. சில வருடங்களில், தீபெத் சீனாவினால் ஆக்கிரமிக்கப் பட்டது. உண்மையில், ஜெர்மனியர்கள் மத்திய ஆசியாவிலும்  இந்துக்களின் வேர்களை தேடிச் சென்றிருப்பார்கள். ஆனால், அன்று அந்தப் பகுதி முழுவதும், எதிரியான சோவியத் யூனியனின் பகுதியாக இருந்தது. 

"இந்து மதம் உலகிலேயே மிகவும் பழமையான மதம். அதனை தோற்றுவித்தவர் யார் என்பது தெரியாது." என்று இந்துக்கள் பெருமையாக கூறிக் கொள்கின்றனர். சரி, பழமையான மதம் என்பதற்கு எதை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்?  ரிக் வேதத்தை விட, காலத்தால் பழைமையான வேறு நூல்கள் ஏதாவது கிடைக்கின்றனவா? ரிக் வேதம், இந்துக்களின் புனித நூல் என்றால், ஆரியர்களின் வரலாறும் அதில் மட்டுமே எழுதப் பட்டுள்ளது. ஆகவே, இந்து மதம் ஆரியர்களின் மதம் என்ற முடிவுக்கு வருகின்றனர். ஆனால், அது சரியா? இந்து மதம் ஆரியர்களுடையது என்றால், ஆரியர்கள் வெள்ளையினத்தவர் என்றால், அவர்களின் பூர்வீகம் எது? சீனாவில் உள்ள திபெத்தில் தான், இந்து மத சின்னங்கள் இன்றைக்கும் அழியாமல் பாதுகாக்கப் படுகின்றன.

யாரும் எளிதில் நெருங்க முடியாத, இமய மலை உச்சியில் இருக்கும் நாடு என்பதால், அந்நிய நாகரீகங்களால் பாதிக்கப்படவில்லை. மேலும், "சிவபெருமான் வசிக்கும்" கைலாய மலை, "சிவனின்  உச்சந் தலையில் இருந்து உற்பத்தியாகும்" கங்கை நதியின் மூலம், போன்ற பல புனித ஸ்தலங்கள் திபெத்தில் உள்ளன. சிவபெருமான் கழுத்தை சுற்றி இருக்கும் பாம்பு பற்றிய கதையும், அந்தப் பிரதேசத்தில் பிரசித்தமானது. முன்னொரு காலத்தில், கருட இனத்தவர்களுக்கும், நாக இனத்தவர்களுக்கும் இடையில் கடும் போர் நடந்தது. போரில் நாக இனத்தை அழிய விடாமல், சிவன் பாதுகாத்ததாக ஒரு கர்ணபரம்பரைக் கதை உலாவுகின்றது.  (சில புராணங்கள் நூல் வடிவில் எழுதப் படாமல் மறைந்து விட்டன. அப்படி ஒரு புராணத்தில் இருந்த கதை.) அந்தக் கதைகளை, காஷ்மீர், திபெத் பகுதியில் வாழும் மக்கள் சொல்லக் கேட்டு சிலர் எழுதியுள்ளனர்.

காஷ்மீரின் பண்டைய சரித்திரம், நாகர்  இன மக்களே காஷ்மீரின் பூர்வகுடிகள் என்று கூறுகின்றது. காஷ்மீரை சேர்ந்த முஸ்லிம்களும், இந்துக்களும் அதனை நம்புகின்றனர். இன்றைக்கும் காஷ்மீரில், நதி நீர் உற்பத்தியாகும் மூலத்தை "நாகா" என்ற பெயரில் அழைக்கின்றனர். அந்த இடங்களில் நாகதேவதைகள் வசிப்பதாக நம்புகின்றனர். அது மட்டுமல்ல, வருடத்தின் முதலாவது பனிப் பொழிவை, "நிலா பண்டிகை" என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். காஷ்மீர் மக்களுக்கு மட்டுமே சிறப்பான, இந்துக்கள், முஸ்லிம்களுக்கு பொதுவான பண்டிகை அது.  நமது காலத்தில், எழுத்து வடிவில் வாசிக்கக் கிடைக்கும் பண்டைய இலக்கியம் ஒன்றின் பெயர், "நிலா மத புராணம்". (The Nilamata Purana, http://www.koausa.org/Purana/index.html)  பிற்போக்கான இந்து மத புராணங்களோடு ஒப்பிடும் பொழுது, நிலா மத புராணம் ஒரு இனத்தின் அல்லது நாட்டின், அனைத்து அம்சங்களையும் கூறுகின்றது. அதாவது, கடவுளரின் வீரசாகசக் கதைகளும் உண்டு. அதே நேரம், வரலாறு, சட்டம், பூகோளம், சமூகவியல், மதச் சுதந்திரம், பெண் சுதந்திரம், போன்ற பல துறைகளைப் பற்றி குறிப்பிடுகின்றது. 

அதை வாசிக்கும் பொழுது, இன்றைய "மேற்கத்திய ஜனநாயக சமூகம்" போன்றதொரு நாகரிக சமுதாயம், காஷ்மீரில் இருந்துள்ளமை தெரிய வருகின்றது.  பிராமணர்களுக்கு உயர்ந்த அந்தஸ்து கொடுத்தாலும், சூத்திரர்களை கீழானவர்களாக கருதவில்லை. மன்னனின் முடிசூட்டு விழாவில் அவர்களின் பங்களிப்பு இருந்துள்ளது. பெண்கள் பொது இடங்களில் நடக்கும் பண்டிகைகளில் கலந்து கொள்ள முடிந்தது. விசேட தினங்களில் நடக்கும் நீர் விளையாட்டுகளில், ஆண்களோடு பெண்களும் சேர்ந்து பங்குபற்றினார்கள். நாக தெய்வத்தை வழிபடும் மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப் பட்டாலும், பிரம்மா, சிவன், விஷ்ணு, புத்தர்  போன்ற தெய்வங்களை வழிபடுபவர்களுக்கும், மதச் சுதந்திரம் இருந்தது. மன்னன் எப்போதும் நாக இனத்தை சேர்ந்தவனாக இருந்த போதிலும், "மன்னன் சட்டத்திற்கு கீழ்ப்படிய வேண்டும்!" இத்தகைய "சட்டத்தின் ஆட்சி", 19 ம் நூற்றாண்டில் தான் ஐரோப்பா முழுவதும் நடைமுறைக்கு வந்தது என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. 

நிலாமத்த புராணத்தில் குறிப்பிடப் படும், நாகர்களின் மன்னனின் பெயர் நிலா. (வாசுகி என்பதும் ஒரு நாக இன மன்னனின் பெயர் தான். நிலா, வாசுகி இருவரும் நாக (பாம்புத்) தெய்வங்களாக மக்களால் வழிபடப் பட்டு வந்தனர்.) நிலா வின் தந்தை, காசியப்ப முனிவர். அவரின் பெயரில் இருந்து காஷ்மீர் (காஷ்யப்பா) என்ற பெயர் வந்ததாக கூறுகின்றனர். ஆதி காலத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும், மலைகளால் அணைக்கட்டு போல சூழப்பட்ட நீரேரி போன்று காணப்பட்டதாம். நீர் அகற்றப் பட்ட பின்னர், நாகா இன மக்கள் வந்து குடியேறினார்கள். இது ஒரு காலத்தில், ஐரோப்பாவில் இருந்து ஆசியா வரையிலான பகுதி, பனியினால் மூடப்பட்டு கிடந்ததது என்ற விஞ்ஞான அறிவியலை நினைவு படுத்துகின்றது. பனி உருகும் பொழுது, பெரும் நீர்ப் பெருக்கெடுத்து, மலைகளை ஊடறுத்து ஓடிய அடையாளங்களை கிரேக்க நாட்டில்  இப்பொழுதும் காணலாம். 

பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர், காஷ்மீரில் குடியேறிய நாகா இன மக்கள், புதிய குடியேறிகளான மனுவின் மக்களுடன் (ஆரியர்கள்) கூடி வாழ வேண்டியேற்பட்டது. மேற்கே இருந்து வந்த மணவர்கள் என்ற இன்னொரு இனம் பற்றியும் குறிப்பிடுகின்றது. அவர்களோடு மோதல் ஏற்பட்டு, பின்னர் (கடவுளர் தலையிட்டு) சமரசம் செய்து வைத்தார்கள்.  (நிலாமத்த புராணம், Glimpses of Kashmiri Culture, The Nilamata Purana,  http://ikashmir.net/glimpses/nilmatapurana.html )  இந்த மணவர்கள், ஆப்பிரிக்காவில் இருந்து வந்த திராவிடர்களாக இருக்கலாம்.  ஆப்பிரிக்க திராவிடர்கள் இந்திய உப கண்டத்தில் குடியேறிய காலத்தில், அங்கே நாகா இன மக்கள் வாழ்ந்து வந்தனர். ஒரு சில இடங்களில் மோதல்கள் இடம்பெற்றாலும், பல இடங்களில் இரண்டு இனங்களும் கூடிக் கலந்து வாழ்ந்தன. நாகர்-திராவிடர் இனக்கலப்பு, இலங்கைத் தீவு வரையில் இடம்பெற்றுள்ளது. (பார்க்க: The Ruling Races of Prehistoric Times in India, South- Western Asia, and Southern Europe, By James Francis Katherinus Hewitt) பண்டைய காலத்தில், திராவிடர் என்ற சொல் இருக்கவில்லை. ரிக் வேதத்தில் தாசர்கள், மகாவம்சத்தில் இயக்கர்கள், இவ்வாறு பல பெயர்களால் அழைக்கப் பட்டு வந்தனர். 

இந்து புராணங்களுக்கும், சீனப் புராணங்களுக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் காணப்படுவது ஒன்றும் புதினமல்ல. உதாரணத்திற்கு சில: விஷ்ணுவின் இரண்டாவது அவதாரம் ஆமை. சிருஷ்டிப்பு பற்றிய சீனக் கதையிலும் ஆமை முக்கிய பாத்திரம் வகிக்கின்றது. சீன பௌத்த நம்பிக்கையிலும், பூமியை தாங்கிப் பிடிக்கும் அண்ட வெளி ஆமை முக்கிய இடம் வகிக்கின்றது. சுன் வுகொங் (Sun Wukong) என்ற குரங்கு அரசன் பற்றிய சீனப் புராணக் கதை, இராமாயணத்தில் வரும் அனுமானை நினவு படுத்துகின்றது. அனுமான் சீதையை தேடிச் சென்றால், சுன் வுகொங் பௌத்த சூத்திர நூல்களை தேடிச் செல்கிறான். அனுமான் போன்று, சுன் வுகொங் மலையைத் தூக்குமளவு பலம் பொருந்தியவன். நினைத்த நேரம், உருவத்தை மாற்றிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவன். எமக்கு நன்கு தெரிந்த வேலேந்திய முருகன் போன்று, வாளேந்திய மஞ்சு ஸ்ரீ  (Manjushri) தெய்வம் சீனாவில் பிரசித்தமானது. மஞ்சுஸ்ரீ தெய்வத்தை வழிபடும் மந்திரமான, "ஓம் அர பசா நாதின்..."(Oṃ A Ra Pa Ca Na Dhīḥ)    உங்கள் காதில் "ஓம் அரஹரா நாதா" என்று ஒலிக்கலாம். முருகன் சிவனுக்கும், மஞ்சுஸ்ரீ புத்தனுக்கும், "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தை சொல்லிக் கொடுத்தனர் என்பது ஐதீகம். 

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், நாடுகளின் சர்வதேச எல்லைகளும், அவற்றுக்கு இடையிலான தொடர்புகளும், வேறு விதமாக இருந்தன. வட இந்தியப் பிரதேசங்களுக்கும், மத்திய ஆசியா, ஆப்கானிஸ்தான், சீனாவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளன. பட்டு வாணிபமும், அதனோடு தொடர்பான நகரங்களும், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே, வட சீனாவில் இருந்து வட இந்தியா வரையில், ஒரு நாகரிக உலகை சிருஷ்டித்து இருந்தன. அந்த மக்களுக்கிடையில் வர்த்தகத் தொடர்பு மட்டுமல்ல, மத, கலாச்சாரத் தொடர்புகளும் ஏற்பட்டன. எந்த மத நம்பிக்கையும், யாரும் யாரையும் அடிமைப் படுத்தி பரவவில்லை.

இன்றைய உலகில், ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் மற்ற மதங்களை கீழாகப் பார்க்கின்றனர். மதச் சகிப்புத் தன்மை குறைந்து வருகின்றது. ஆனால், நாங்கள் "நாகரீகமடைந்த மனிதர்கள்" என்று பெருமையடித்துக் கொள்கிறோம். வடக்கே சமர்கண்ட் (இன்று உஸ்பெகிஸ்தான்) நகரில் இருந்து, தெற்கே காஷ்மீர் வரையில், மக்கள் தாம் விரும்பிய மதத்தை பின்பற்றும் சுதந்திரம் இருந்தது. யாரும் யாரையும் கட்டாயப் படுத்தவில்லை. அதனால், மக்கள் விரும்பினால் பிற மதத்தவரின் தெய்வங்களையும் வழிபட்டார்கள். ஆட்சியாளர்களும் தமது மதங்களை மக்கள் மேல் திணிக்கவில்லை. (பார்க்க: Lost Cities of China, Central Asia and India, by David Hatcher Childress)

ஆரியர்கள் இந்திய உபகண்டத்திற்கு வந்த காலம், கி.மு. 1000 க்கும் 5000 க்கும் இடைப்பட்டதாக அறிஞர்கள் கருதுகின்றனர். ஆனால், ஆரியர்களின் படையெடுப்பு,  ஒரே நேரத்தில் நடந்திருக்க முடியுமா? உலக வரலாற்றில் பல பொய்கள் புனையப் பட்டுள்ளன என்பதை, இன்று பல சரித்திர ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். ஆரியர்கள் என்ற வெள்ளையின மக்களின் இந்தியா நோக்கிய இடப்பெயர்வு, வரலாற்றில் ஒரு தடவை மட்டும் நடந்திருக்குமா? இந்திய உபகண்டத்தில் வெள்ளையின மக்களின் குடியேற்றம், கி.மு. 5000 ஆண்டிலிருந்து, 20 ம் நூற்றாண்டு வரையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது! இந்த உண்மையை எல்லா வரலாற்று நூல்களும் மறைத்து வந்துள்ளன. எதற்காக?


(தொடரும்)

மேலதிக தகவல்களுக்கு:
1.The Nilamata Purana, http://www.koausa.org/Purana/index.html
2.Glimpses of Kashmiri Culture, The Nilamata Purana,  http://ikashmir.net/glimpses/nilmatapurana.html
3.Sun Wukong, http://en.wikipedia.org/wiki/Sun_wukong
4.Manju Shri,  http://en.wikipedia.org/wiki/Manjusri
5.China's Tocharian mummies - Silent witnesses of a forgotten past, http://video.google.com/videoplay?docid=-1362674044731979808

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்
6.தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்
7.பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !
8.கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி?
9.தமிழர் தொலைத்த விமானம் செய்யும் தொழில்நுட்பம்
10.எல்லாளனை வீழ்த்திய, "தமிழ்த் துரோகக் கடவுள் கந்தன்!"
11. புத்தரின் பல்லுக்காக போரிட்ட, சிங்கள-தமிழ் மன்னர்கள்
12.நாக நாட்டு குகைக் கோயில் மர்மம்
13. விஷ்ணுவின் வாகனமான, "ஷாருக்கான்" என்ற கருடன்!

Saturday, January 21, 2012

தமிழரின் பூர்வீகம் ஆப்பிரிக்கா! இந்துக்களின் பூர்வீகம் துருக்கிஸ்தான்!!

"இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது" என்ற கட்டுரைத் தொடரில், இந்துக்கள் (ஆரியர்கள்) மத்திய ஆசியாவில் இருந்து வந்து குடியேறிய துருக்கி இனத்தவர்கள் என்று பல விளக்கங்களுடன் எழுதி இருந்தேன். (இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!) அப்போது எனது கட்டுரைகளை நிராகரித்த நண்பர்கள், இந்த ஆவணப் படத்தை பார்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். தமிழர்கள், ஆபிரிக்காவில் இருந்து வந்து குடியேறிவர்கள் என்பதையும், முன்னர் ஒரு தடவை ஆப்பிரிக்கா தொடர்பான கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். (ஆப்பிரிக்காவில் தமிழரின் வேர்கள்) தமிழ் மொழியை, ஐரோப்பிய மொழிகளுடன் ஒப்பிட்டு மகிழும் தமிழினவாதிகள், எந்தவொரு ஆப்பிரிக்க மொழியுடனும் ஒப்பிட நினைத்துக் கூட பார்ப்பதில்லை. தமிழரின் ஆப்பிரிக்க தொடர்பை கண்டுகொள்ளாமல், "முன் தோன்றிய மூத்த குடி" என்று பெருமை பேசுவதால் பயனென்ன விளைந்திடப் போகின்றது? தமிழர்களின் ஆப்பிரிக்க பூர்வீகம் குறித்து ஆராய்வதற்கு, எந்தவொரு தமிழ் அறிஞரும் முன்வராதது ஆச்சரியத்தை அளிக்கின்றது. இந்த நிலைமை இனி வருங்காலத்தில் மாற வேண்டும். "நாம் தமிழ் பேசும் ஆப்பிரிக்க இனத்தவர்கள்" என்று பெருமையாக பேசிடும் காலம் வர வேண்டும்.

தமிழரின் முன்னோர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்பது மரபணு மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பழங்குடியினத்தை சேர்ந்த விருமாண்டி என்பவரின் மரபணு, முதலாவது ஆப்பிரிக்க குடியேறிகளின் டி.என்.ஏ. என்பது ஆராய்ச்சின் முடிவில் தெரிய வந்துள்ளது. சுமார் எண்பதாயிரம் வருடங்களுக்கு முன்பே, ஆதித் தமிழர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறி இருக்கலாம். அவர்கள் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து தமிழ் மொழியை பேசுபவர்களாக மாறியிருக்கலாம். இனம் என்பதும், மொழி என்பது இரண்டு வேறு பட்ட விடயங்கள். ஒரு இனத்தை சேர்ந்த மக்கள், தாம் பேசும் மொழியையும், மதத்தையும் பிற்காலத்தில் மாற்றிக் கொண்டிருப்பார்கள்.


இந்துக்களின் புனித நூலான ரிக்வேதம், அமிர்தம் என்று குறிப்பிடும் சோம பானம், இன்றும் ஆப்கானிஸ்தானில் கிடைக்கிறது! சோம பானம் தயாரிக்க பயன்படும் சோமா செடி, ஆப்கானிஸ்தானில் மட்டுமே வளர்கின்றது. வட இந்திய "இந்துக்களும்", ஆப்கானிய "முஸ்லிம்களும்" அடிப்படையில் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க பல ஆதாரங்கள் உள்ளன. மொழியல் ஆய்வின் பிரகாரம், சமஸ்கிருதம் பேசும் ஆரியர்களும், ஐரோப்பியரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள். சமஸ்கிருதம், கிரேக்கம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் காணப்படும் ஒரே மாதிரியான சொற்கள் அதனை நிரூபிக்கின்றன. உதாரணத்திற்கு, சமஸ்கிருதத்தில் குதிரையை குறிக்கும் "அஸ்வா" என்ற சொல், லிதுவேனியா மொழியிலும் ஒன்றாக உள்ளது.

துருக்மெனிஸ்தான், காரகோரம் பாலைவனத்தில் இந்து ஆரியர்களின் நாகரீகம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த மன்னரின் புதைகுழி பல தகவல்களை வழங்குகின்றது. இந்தியாவில், சிந்து வெளி நாகரிக காலத்தில் குதிரைகளின் பாவனை அறியப் படவில்லை. வந்தேறுகுடிகளான ஆரியராலேயே அவை அறிமுகப் படுத்தப் பட்டன. துருக்மேநிச்தானில் மன்னரின் புதைகுழியில் குதிரையின் எலும்புக்கூடும், ரிக் வேதம் விபரிப்பது போன்ற ரதங்களும் கண்டெடுக்கப் பட்டன. சோம பானம் தயாரிக்க பயன்படுத்தும் இடமும் அங்கே காணப்படுகின்றது. இந்தியாவின் இந்து ஆரியர்கள், துருக்கி மொழி பேசும் மக்கள் வாழும் மத்திய ஆசியப் பகுதிகளில் இருந்து ஈரானை நோக்கி நகர்ந்துள்ளனர். அங்கிருந்து வட இந்தியாவில் குடியேறி உள்ளனர்.





தமிழர், இந்துக்களின் பூர்வீகம் தொடர்பாக எழுதிய கட்டுரைகள்:
* ஆப்பிரிக்காவில் தமிழரின் வேர்கள்
* இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!

Tuesday, November 29, 2011

திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்


(இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது ! - இரண்டாம் பாகம்)

திபெத் பிரச்சினை பற்றி ஹாலிவூட் தயாரிப்பில் உருவான, "Seven Years in Tibet" எனும் திரைப்படம், ஒரு ஜனரஞ்சகப் படம் என்றளவில் உலகளவில் வெற்றி பெற்றது. "சீனாவினால் ஆக்கிரமிக்கப் பட்ட திபெத்" பற்றிய சித்திரத்தை அரசியல் செய்தியாக கொண்டிருந்ததால், அதன் முக்கியத்துவம் பலராலும் பேசப் பட்டது. ஆனால், அந்தத் திரைப்படம் மறைத்த இனவாத / நிறவாதக் கருத்தியல் குறித்து பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை. ஒரு சரித்திரக் கதையை ஆதாரமாக கொண்டு தான் அந்தப் படம் தயாரிக்கப் பட்டது. அந்த சரித்திர நாயகன் Heinrich Harrer, ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த ஜெர்மனியர். இந்த விபரம் படத்தில் வருகின்றது. "செவன் இயர்ஸ் இன் திபெத்" என்பது கூட அவர் எழுதிய நூலை அடிப்படையாக கொண்டது தான். 1939 ம் ஆண்டு, ஹைன்ரிஷ் இந்தியாவில் பிரிட்டிஷ்காரரால் சிறை வைக்கப் பட்டிருந்தார். அங்கிருந்து தப்பி ஓடி, உலகப்போரில் நடுநிலை வகித்த திபெத்தினுள் தஞ்சம் புகுந்து, ஏழு ஆண்டுகள் பாதுகாப்பாக வாழ்ந்துள்ளார். யார் இந்த ஹைன்ரிஷ்? அவருக்கு திபெத்தில் என்ன வேலை? அவரை அங்கே அனுப்பியது யார்?

ஹைன்ரிஷ் ஹிட்லரின் பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்கும் உரிய நாசிக் கட்சி உறுப்பினர். வெள்ளை நிற ஆரிய இனத்தின், ஆதிமூலம் குறித்து ஆராய்வது ஹிட்லரின் நோக்கம். திபெத்தில் ஆரிய இனத்தின் தூய்மை இன்னமும் பேணப் படுவதாக கிடைத்த தகவலை உறுதிப் படுத்துவதற்காக, ஹைன்றிஷை அனுப்பி வைத்தார். மேலும், நாசிக் கட்சியின் சின்னமான ஸ்வாஸ்திகா, மத்திய ஆசியாவில் இருந்து வந்தது என்பது, அன்றைய ஜெர்மனியில் அறியப் பட்டிருந்தது. (இந்துக்களின் மங்கலச் சின்னமான அதே ஸ்வாஸ்திகா தான்.) ஆகவே, ஹிட்லரின் நிறவெறிக் கொள்கைக்கு சான்றுகளை திரட்டுவதற்காகவே, ஹைன்ரிஷ் திபெத் சென்றுள்ளமை இதிலிருந்து புலனாகும். இந்தத் தகவல்களை எல்லாம், செவன் இயர்ஸ் இன் திபெத் திரைப்படம் இருட்டடிப்பு செய்துள்ளது. ஜெர்மனியில் நாஜிகளின் ஆட்சிக் காலத்தில், தீபெத்தியர்கள் கௌரவ விருந்தினர்களாக நடத்தப் பட்டனர். அவர்கள் நாஜிப் படையிலும் இணைந்து போரிட்டிருக்கலாம். போரின் முடிவில், பெர்லின் நகரை செம்படையினர் கைப்பற்றிய வேளை, நூற்றுக்கணக்கான திபெத்தியர்களின் இறந்த உடல்கள் கண்டெடுக்கப் பட்டன. (The Morning of the Magicians, authors: Louis Pauwels and Jacques Bergier)

தலாய் லாமா பாதுகாத்து வைத்திருந்த இரகசிய நூல்கள் சில நாஜி ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டன. மேற்கத்திய இனவாத தத்துவ ஆசிரியர்களுக்கு பயன்படத் தக்க தகவல்கள் பல அவற்றில் இருந்திருக்கலாம். நாஜிகள் ஆராய்ச்சி செய்யுமளவிற்கு திபெத்தில் அப்படி என்ன இருக்கிறது? பல இரகசியங்கள் இன்னும் வெளிவரவில்லை. தன்னைச் சுற்றியுள்ள உலகம் நாகரீகமடைந்து கொண்டிருந்த காலத்தில், திபெத் ஆயிரம் வருடங்கள் பின்னோக்கி இருந்தது. உயரமான இமய மலையில், தனிமைப் படுத்தப் பட்டிருந்த திபெத், ஆரிய இனத் தூய்மையை பாதுகாத்து வைத்திருக்கும் என்பது, நாஜிகளின் எண்ணம். உண்மையில், திபெத் என்பது மொழியைக் குறிக்கும். குறைந்தது நான்கைந்து இனங்கள் அந்த மொழியைப் பேசுகின்றன. அவர்கள் எல்லோரும் பௌத்த சமயத்தை சேர்ந்தவர்களும் அல்ல. குறிப்பிட்ட அளவு முஸ்லிம்களும், "பொன்" (Bon) எனும் பழமையான மதத்தை பின்பற்றுவோரும் சிறுபான்மையாக உள்ளனர். (பொன் மதம் குறித்து பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.) இனத்துவ அடிப்படையில் பார்த்தால், திபெத்தியர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள். பெரும்பான்மை ஆளும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள், வெள்ளை நிறமாக இருப்பர். இவர்களுக்கும், சீனர்களுக்கும் (பெரும்பான்மை ஹான் இனத்தவர்கள்) இடையில் வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினமானது. அதே நேரம், அந்த நாட்டில் காணப்படும் பழுப்பு நிற மக்களை மட்டுமே திபெத்திய இனமாக வெளியுலகம் தவறாக கருதிக் கொண்டிருக்கிறது.

திபெத்தியர்கள், மொங்கோலிய இனத்திற்கும், ஐரோப்பிய இனத்திற்கும் இடைப்பட்டவர்கள். அதாவது, வெள்ளை இனத்தின் பரிணாம மாற்றம் அங்கே தான் நடைபெற்றது என்பது நாஜிகளின் நம்பிக்கை. திபெத்திய ஆட்சியாளர்களும், ஜெர்மனியில் இருந்து வருகை தந்த நாஜி விருந்தினர்களை இரு கரம் நீட்டி வரவேற்று உபசரித்தனர். (1926 க்கும் 1940 க்கும் இடையில் பல ஜேர்மனிய ஆராய்ச்சியாளர்கள் திபெத் மீது ஆர்வம் காட்டியுள்ளனர்.) நாஜிகளின் இனங்களை பகுப்பாய்வு செய்யும் ஆராய்ச்சிகளுக்கும் இடம் கொடுத்தனர். இந்த விபரம் எல்லாம் வெளியில் தெரிந்தால், தலாய் லாமாக்களின் முகத்திரை கிழிந்து விடும் என்பதால், வரலாறு அவற்றை இருட்டடிப்பு செய்து விட்டது. அது ஒரு புறமிருக்க, நாஜிகளிற்கு தேவையான ஆதாரங்கள் கிடைத்தனவோ இல்லையோ, ஸ்வாஸ்திகா சின்னம் பற்றிய உண்மைகள் தெளிவாகின. திபெத்தில், இந்திய எல்லையோராமாக உள்ள இமய மலைத் தொடர்கள் ஸ்வாஸ்திகா வடிவத்தில் காணப்படுகின்றன. அதனை பண்டைய "இந்துக்கள்" (அல்லது ஆரியர்கள்) தமது புனிதச் சின்னமாக கருதியிருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம்? வெவ்வேறு திசைகளை நோக்கிய ஆரிய இனங்களின் புலம்பெயர்வு அங்கிருந்து தான் ஆரம்பித்திருக்க வேண்டும்.

Tagzig Olmo Lung Ring என்ற பெயரைக் கொண்ட மலைத் தொடரானது, கிழக்கே திபெத்திலும், மேற்கே தஜிகிஸ்தான் வரையிலும் நீண்டுள்ளது. மலையின் பெயரில் வரும் தாஜிக் என்ற சொல்லானது, இன்றைய தாஜிகிஸ்தான் நாட்டின் பெயருக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. தாஜிக்கியர்கள் பாரசீக (ஈரானிய) மொழி பேசும் மக்கள். அதாவது தாஜீக்கும், பார்சியும் ஒன்றுக்கொன்று தொடர்பான மொழிகள். நாகரிக வளர்ச்சி காரணமாக, நவீன ஈரான் எமக்கு நன்கு பரிச்சயமாகியுள்ளது. ஆனால், பார்சி மொழி பேசும் ஈரானியரின் மூதாதையர் தாஜிகிஸ்தானில் இருந்து வந்திருப்பார்கள், என்று சரித்திர ஆசிரியர்கள் நம்புகின்றனர். அநேகமாக, துருக்கிய மொழி பேசும் இனங்களுக்கும், இந்தோ-ஈரானிய மொழி பேசும் இனங்களுக்குமிடயிலான பிரிவினையும் அங்கே தோன்றியிருக்க வேண்டும். அது வேறு விடயம். இப்போது அந்த, தாஜிக் ஒல்மோ லுங் ரிங் மலையில் அப்படி என்ன விசேஷம் என்று பார்ப்போம்.

தாஜிக் ஒல்மோ லுங் ரிங் மலைத் தொடரை முழுமையாகப் பார்த்தால், எண் கோண வடிவில் அமைந்த தாமரைப் பூ போன்றிருக்கும். அதன் மையப் பகுதி ஸ்வாஸ்திகா என்று அழைக்கப் படுகின்றது. திபெத் பொன் மத ஸ்தாபகர், சொர்க்கத்தில் இருந்து நேராக, அந்த மலையில் தான் வந்திறங்கியதாக, பொன் மதத்தவர்கள் நம்புகின்றனர். அந்த மலைப் பகுதியின் மேலே உள்ள ஆகாயம், தர்ம சக்கரம் போன்றிருக்கும். இந்து மத நம்பிக்கையாளர்கள் புனிதமாகக் கருதும், "ஸ்வாஸ்திகா, தாமரை மலர், தர்ம சக்கரம்" போன்ற குறியீடுகள் திபெத்தில் தான் தோன்றின. இந்த உண்மை பெரும்பாலான இந்துக்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. "ஒரு இனத்தின் பூர்வீகத்துடன் சம்பந்தப்பட்ட குறியீடுகள்", இவ்வாறு தான் மதச் சின்னங்களாக மாறின. நான் முன்னர் குறிப்பிட்டது போன்று, ஆரம்பத்தில் இந்து மதமானது, பிராமணர்கள் என்ற இனத்தை சேர்ந்தவர்களின் மதமாக இருந்தது. பிற்காலத்தில் அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட நாடுகளில் வாழ்ந்த உள்ளூர் மக்களும், ஆக்கிரமிப்பாளர்களின் மதத்தை ஏற்றுக் கொண்டனர். பிராமணர்கள் என்றால், பிரம்மாவின் மக்கள் என்று அர்த்தம். முன்னொரு காலத்தில் படைத்தற் கடவுளான பிரம்மாவை வணங்கும் வழக்கம் இருந்தது.

புனிதமான தாஜிக் ஒல்மோ லுங் ரிங் மலையை, அதன் குறியீடுகளை எல்லாம் புனிதமாக கருதி வழிபட்ட பொன் மதம் திபெத் முழுவதும் பரவியிருந்தது. அது திபெத் மக்களுக்கு மட்டுமே பிரத்தியேகமான மதம். அது ஒரு பண்டைய மத நம்பிக்கை. இயற்கையை கடவுளாக வழிபடும் மக்களுடைய நம்பிக்கை. லாமாக்களின் பௌத்த மதமானது, பொன் மதத்தை ஏறக்குறைய அழித்து விட்டது. அடக்குமுறைக்கு தப்பிப் பிழைத்த சில ஆயிரம் பொன் மத திபெத்தியர்கள், இன்றைக்கும் அந்த மதத்தை அழிய விடாது பாதுகாத்து வருகின்றனர். பௌத்த மதம் இந்தியாவில் இருந்து திபெத்திற்கு பரவியது. அரசர்களும், மதகுருக்களும் பௌத்த மதத்தை மக்கள் மேல் திணித்தனர். இருந்தாலும், திபெத்திய மக்களின் பொன் மத நம்பிக்கையை முற்றாக அகற்ற முடியவில்லை. அந்த மதத்தின் வழிபாட்டு முறைகள் சில உள்வாங்கப் பட்டன. உதாரணத்திற்கு, வண்ண மயமான கொடிகளில் பிரார்த்தனையை எழுதி தொங்க விடும் வழக்கமானது, பொன் மதத்திற்கு உரியது. கொடிகளின் வர்ணங்கள் ஒவ்வொன்றும், பஞ்ச பூதங்களைக் குறிக்கும். இந்த உலகமானது நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் எனும் ஐந்து பூதங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. பொன் மதத்திலும், திபெத்திய பௌத்தத்திலும் இது ஒரு அடிப்படை நம்பிக்கையாகும். இந்து மதத்திலும், பஞ்சபூதங்கள் பற்றிய நம்பிக்கைகள் நிலவுவது, இங்கு குறிப்பிடத் தக்கது.

திபெத்திற்கு அருகில் உள்ள நேபாளத்தில், இந்துக் கோயில்களுக்கும், பௌத்த ஆலயங்களுக்கும் இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. உள்ளேயிருக்கும் புத்தர் சிலை ஒன்று மட்டுமே வித்தியாசம். நேபாளத்தில் உள்ள லும்பினி எனுமிடத்தில் புத்தர் அவதரித்ததாக கருதப் படுவதால், இன்றைக்கும் அங்கே ஒரு ஆலயம் உள்ளது. புத்த சமயம், உண்மையில் இந்திய உப கண்டத்தில் தோன்றிய மதமாகும். அது பிராமண மதத்தில் இருந்த காட்டுமிராண்டித் தனமான பழக்க வழக்கங்களை எதிர்த்து உருவானது. அந்தக் காலத்தில் இந்து மதம் என்றால், புரோகிதர்கள் எல்லாம் சேர்ந்து யாகத்தீ மூட்டுவது முக்கியமான வழிபாடாக இருந்தது. யாகத்தீயில் குதிரை, மாடு, ஆடு என்று வளர்ப்பு மிருகங்களை தூக்கிப் போட்டு கடவுளுக்கு பலி கொடுப்பது வழக்கம். இதைத் தவிர, ரிக் வேதம் என்ற செய்யுள்களை பாடுவார்கள். மத்திய ஆசியாவில் இருந்து நாடோடிக் கூட்டங்களாக வந்த ஆரியர்கள், "வரும் வழியில் எத்தனை தேசங்களை அழித்தனர், எத்தனை மக்களை இனப்படுகொலை செய்தனர், எவ்வளவு சொத்துகளை கொள்ளையடித்தனர்," என்பன போன்ற கதைகள் அந்த செய்யுள்களில் பாடப்படும். நமது காலத்தில், யாராவது இப்படியான செய்யுள்களை இயற்றினால், சர்வதேச நீதிமன்றத்தின் போர்க்குற்ற விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். ஆரிய ஆக்கிரமிப்பாளர்கள், தமது இனப்பெருமையை பறைசாற்றுவதற்காக எழுதப் பட்டதே ரிக் வேதம். அதில் எந்த தத்துவ விசாரத்தையும் எதிர்பார்க்க முடியாது.

இந்திய ஆரியர்களின் சகோதர இனத்தவர்கள், மத்திய ஆசிய பாலைவனங்களில் இன்னமும் நாடோடிகளாக அலைந்து கொண்டிருந்தனர். பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், பௌத்த மதமும், இஸ்லாமிய மதமும் பரவும் வரையில், அவர்கள் நாகரீகத்தை அறிந்திருக்கவில்லை. அதே நேரம், இந்திய உப கண்டத்திற்கு வந்து சேர்ந்த ஆரிய இனத்தவர்கள், அங்கே ஏற்கனவே வளர்ச்சி அடைந்த நாகரிக சமுதாயத்தை கண்டனர். அவர்களது மதமும், இயற்கையோடு இணைந்திருந்தது. இயற்கையின் அற்புதங்களுக்கு மதத்தின் பெயரால் விளக்கங்கள் கொடுத்தனர். அது வரையில், வருண பகவானையும், வாயு தேவனையும், இன்ன பிற இயற்கையின் அமானுஷ்ய சக்திகளை கண்டு அஞ்சி கடவுளாகக் கருதி வழிபட்ட "இந்துக்கள்"; இந்திய மண்ணில் மெய்யியல் தத்துவங்களை கற்றுக் கொண்டனர்.

(தொடரும்)

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:

இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!

Sunday, November 27, 2011

இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!



சிறு வயதில், வீட்டில் எல்லோரும் சாமி கும்பிடும் பொழுது, சிவபெருமான் படம் மட்டும் கண்ணை உறுத்தும். பிறைச் சந்திரனையும், கங்கை நதியையும் தலையில் வைத்துள்ள சிவன், இமயமலைச் சாரலில் தியானத்தில் ஆழ்ந்திருப்பார். இமய மலைக்கும், இலங்கைக்கும் இடையிலான புவியியல் வித்தியாசங்களை கணக்கில் எடுக்கும் பொழுது, சிவபெருமான் எனக்கு அந்நியமான ஒருவராக தெரிந்தார். 


இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால், கைலாச மலையில் வசிக்கும் சிவன், எவ்வாறு எமக்கு கடவுளாக முடியும்? இந்தக் கேள்விக்கு சைவ மத நம்பிக்கையாளர்களான பெற்றோரும், மதக் கல்வி போதித்த ஆசிரியர்களும் சரியான பதிலைக் கூற முடியவில்லை. இந்து மதம், இந்திய உப கண்டத்திற்கு பொதுவான சமயம், என்று பொத்தாம் பொதுவாக விளக்கம் அளித்தார்கள். என்ன இருந்தாலும், சிறுவர்களின் மாயாஜாலக் கதைகளில் வரும் விசித்திர உருவமாக காட்சியளித்த சிவபெருமானின் மூலத்தை அறியும் ஆர்வம் மட்டும் மறையவில்லை.

பல வருடங்களுக்குப் பிறகு, புலம்பெயர்ந்து குடியேறிய நாட்டில், எனது தேடுதலுக்கான தீனி கிடைத்தது. ஆம்ஸ்டர்டாம் நூலகத்தில், நாம் அதிகம் அறிந்திராத நாடுகளைப் பற்றிய நூல்களை தட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். எதிர்பாராத விதமாக, மொங்கோலியா பற்றிய நூலில், அவர்களது கடவுளரின் படங்கள் அச்சடிக்கப் பட்டிருந்தன. 


பண்டைய மொங்கோலியா இன்று இரண்டாகப் பிரிந்துள்ளது. நாட்டின் அரைவாசிப் பகுதி, சீன தேசத்துடன் இணைக்கப்பட்டு, "உள்ளக மொங்கோலியா" என்ற மாநிலமாக உள்ளது. 

 பெரும்பான்மையான மொங்கோலியர்கள் பௌத்த மதத்தினர். ஆனால், பிரம்மா, விஷ்ணு, சரஸ்வதி, கணபதி அவர்கள் வணங்கும் தெய்வங்களாக இருந்தன. நமக்கு நன்கு பரிச்சயமான அதே இந்துத் தெய்வங்கள் தான். அந்தப் படங்களில் சற்று வித்தியாசமாக, மொங்கோலியர் போன்ற சப்பட்டை மூக்குடன், தட்டை முகத்துடன் காணப்பட்டனர். 

சரஸ்வதி வைத்திருந்த வீணை, மொங்கோலியரின் பாரம்பரிய நரம்பிசைக் கருவி போலத் தோன்றியது. இந்தக் கருவி இன்றைக்கும் மத்திய ஆசியாவின், துருக்கி இன மக்களால் இசைக்கப் படுகின்றது. மொங்கோலிய மக்களும் துருக்கி மொழி பேசும் இனத்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்து மதம் உண்மையில் பிராமணர்களின் மதம். ஆரியர்கள் என்போர், மத்திய ஆசியாவில் இருந்து வந்து குடியேறிய வெள்ளை நிறமான மக்கட் கூட்டத்தினர். இது குறித்த பல தகவல்களை, ஏற்கனவே பகுத்தறிவு நூல்களில் வாசித்தறிந்திருக்கிறேன். மொங்கோலியாவில் இந்து மதக் கடவுளரின் படங்கள், ஆரியரை வேறொரு கோணத்தில் ஆராய வைத்தது. 


வெள்ளையின மக்கள், ஐரோப்பாவுக்கும், ஆசியாவுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் இருந்து புறப்பட்டிருக்கலாம். ஒரு பிரிவினர் ஐரோப்பாவிலும், மறு பிரிவினர் ஈரான் வழியாக இந்தியாவை வந்தடைந்தனர். ஐரோப்பிய மொழிகளில் "கொகேசியர்கள்" என்று குறிப்பிடுகின்றனர். உண்மையில் ஆரியர்களின் ஊற்றுக்கண்ணாக கருதப்படும் பகுதியில் இன்று வாழும் மக்கள், சீனர்கள் போன்று தோற்றமளிக்கும் துருக்கி இனத்தவர்கள். 

பல்லாயிரம் வருடங்களுக்கு முந்திய இடப்பெயர்வில், இனத்தூய்மை காப்பாற்றப் பட்டிருக்கும் என்று கூற முடியாது. மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியையும் கருத்தில் எடுக்க வேண்டும். இவை எல்லாம், சமூக விஞ்ஞானிகளின் ஆய்வுகளின் முடிவுகள்.

மொங்கோலியா நாட்டின் புராணக் கதைகளை வாசித்த பொழுது, இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. மொங்கோலியர்கள் பௌத்தர்கள் என்பதால், அந்தக் கதைகளில் புத்தரின் பெயரையும் சேர்த்திருக்கின்றனர். சில கதைகள், மொங்கோலிய நாடோடி சமூகத்தை அடிநாதமாக கொண்டுள்ளன. இருப்பினும், சில கதைகள் இந்து மதக் கதைகளை ஒத்திருக்கின்றன. 


இன்று, இந்து மதமானது பல்லினங்களை சேர்ந்தவர்களின் நம்பிக்கையாக மாறி விட்டது. ஆனால், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு, குறிப்பிட்ட சில (வட இந்திய) இனத்தவர்களின் மதமாக இருந்துள்ளது. அந்த வகையில், வட இந்திய இனக் குழுக்களும், மொங்கோலிய இனத்தவரும் ஒரே மூலத்தைக் கொண்டிருக்க வேண்டும். 

உண்மையில், மத்திய ஆசியாவை சேர்ந்த பிற துருக்கிய இனத்தவர்கள் மத்தியிலும் இது போன்ற புராணக் கதைகள் நிலவியிருக்கலாம். ஆனால், இஸ்லாம் மதமானது அவற்றை மறக்கச் செய்து விட்டது. அதற்கு மாறாக, பௌத்த மதத்தினுள் தெய்வங்களுக்கு வெற்றிடம் இருப்பதால், மொங்கோலிய மக்களின் பாரம்பரிய நம்பிக்கைகளையும் உள்வாங்கியுள்ளது.

மொங்கோலியாவில், அதன் எல்லையோரமாக உள்ள ரஷ்ய பகுதிகளில் திபெத்திய பிரிவான "லாமாயிச பௌத்தம்" பின்பற்றப் படுகின்றது. அதனால் தான், மனிதர்களின் சிருஷ்டி பற்றிய மொங்கோலிய கதை, கடவுளின் இடத்தில் ஒரு லாமா (திபெத்திய பௌத்த மதகுரு) வை குறிப்பிடுகின்றது. 


முன்னொரு காலத்தில் வாழ்ந்த ஒரு லாமா, ஒன்பது சொர்க்கங்களையும், ஒன்பது உலகங்களையும், ஒன்பது ஆறுகளையும் படைத்ததாக அந்தக் கதை கூறுகின்றது. திபெத்திய மத நம்பிக்கையின் படி, "ஒன்பது" மிக முக்கியமான அதிர்ஷ்ட எண். இந்து மதத்தில் அது ஏழாக மாறி விட்டது. இந்து மத நம்பிக்கையின் பிரகாரம், கடவுள் எல்லாவற்றையும் ஏழு, ஏழாக படைத்துள்ளார். 

ஏழு உலகங்கள் (பூலோகம், புவர்லோகம், ஸ்வர்கலோகம், மகரலோகம், ஜனலோகம், தபோலோகம் மற்றும் பிரம்ம லோகம்). ஏழு ஆறுகள் (சிந்து, அஷிக்னி, பருஷ்னி, ஸரஸ்வதி, யமுனா, கங்கை மற்றும் சரயூ). திபெத்திய பௌத்தர்களின் அதிர்ஷ்ட எண்ணான ஒன்பது, இந்துக்களின் அதிர்ஷ்ட எண்ணான ஏழு ஆகிய நம்பிக்கைகள் கைலாய மலையில் இருந்து தோன்றின. அது குறித்து பிறிதொரு இடத்தில் பார்க்கலாம்.

ஜப்பானை சேர்ந்த ஆய்வாளர்கள், மொங்கோலிய புராணக் கதைகளை தொகுத்துள்ளனர். (Mongol creation stories: man, Mongol tribes, the natural world, and Mongol deities, Nassen-Bayer; Kevin Stuart, Asian Folklore Studies, Vol.51 No.2, pp.323-334) அவற்றில் சில. நிது மலையில், காட்டுக்குள் இருக்கும் குளம் ஒன்றினுள் தேவ லோக கன்னிகைகள் சிலர் நீராடிக் கொண்டிருந்தனர். அந்த வழியால் சென்று கொண்டிருந்த ஒரு வேட்டைக்காரன் அந்தக் காட்சியைக் கண்டு விட்டான். ஒரு கன்னியின் உடைகளை எடுத்து மறைத்து வைத்தான். 


ஒரு மானுடன் பார்த்து விட்டதை அறிந்த தேவ லோக கன்னிகள், அன்னப் பறவையாக மாறி சொர்க்கத்திற்கு பறந்து சென்று விட்டனர். ஆடைகளை பறிகொடுத்த கன்னி மட்டும், பூமியில் தங்கி விட்டாள். வேடனின் வற்புறுத்தலுக்கு இணங்கி, அவனை மணந்து ஒரு குழந்தை ஈன்றெடுத்தாள். தேவ லோக கன்னிகைகள் நீண்ட காலம் பூவுலகில் வாழ முடியாது. அதனால், தேவ லோகம் செல்வதற்கு தக்க தருணம் பார்த்து காத்திருந்தாள். 

ஒரு நாள், குழந்தையை தனியாக தொட்டிலில் விட்டு, அதற்கு காவலாக ஒரு மஞ்சள் பறவையை நியமித்து விட்டு தேவ லோகத்திற்கு சென்று விட்டாள். அந்தக் குழந்தையின் வழித்தோன்றல்கள் தாமே என, Dorbed என்ற மொங்கோலிய இனக்குழுவினர் நம்புகின்றனர்.

இந்து மதத்தில் இதே போன்றதொரு கதை உள்ளது. அதிலும் தேவ லோக கன்னிகள், பூலோக வனத்தில் உள்ள குளத்தில் நீராடுகின்றனர். தேவ லோகத்தை சேர்ந்த மேனகை, விஸ்வாமித்திர முனிவருடன் குடித்தனம் நடத்தி, ஒரு குழந்தையை பெற்றெடுத்து விட்டு சென்றதாக ஒரு கதை உண்டு. அந்தக் கதையில், மேனகை விட்டுச் சென்ற குழந்தையை சகுந்தப் பறவைகள் கொஞ்சியதால், சகுந்தலா என்று பெயர் வந்தது. 


இந்திய இந்துக்களும், மொங்கோலியர்களும் ஒரே புராணக் கதையை பகிர்ந்து கொள்வது எப்படிச் சாத்தியமானது? ஒரே வேரில் இருந்து கிளம்பிய கிளைகள் போன்று, இரு இனங்கள் வெவ்வேறு திசைகளில் புலம் பெயர்ந்து சென்றிருக்க வேண்டும். அந்த வேர் எங்கேயுள்ளது? கி.மு. 5000 வருடங்களுக்கு முன்னர், ஒரே மொழி பேசும் இனங்கள் ஓரிடத்தில் ஒன்றாக வாழ்ந்துள்ளன. அது ஈரானுக்கும், இந்தியாவுக்கும் இடைப்பட்ட இமய மலைப் பிரதேசம் ஆகும். 

ஆரிய இனங்களின் குடிசனப் பரம்பலை ஆராய்ச்சி செய்த அறிஞர்கள், அவர்கள் நாடோடிக் கூட்டங்களாக இந்தியா வந்தடைந்திருக்கலாம் என்று நம்புகின்றனர். அதற்கு அவர்கள் காட்டும் ஆதாரங்களில் ஒன்று, புராணக் கதைகள். குறிப்பாக ஈரானிய ஆரிய இனம், இந்திய ஆரிய இனத்திற்கு நெருக்கமானது. ஈரானிய புராணங்களிலும் தேவர்கள், அசுரர்கள் வருகின்றனர். இந்துக்களின் ரிக் வேதமும், ஈரானியர்களின் அவேஸ்தாவும் ஒரே மாதிரியான கதைகளை கொண்டுள்ளன.

சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஏற்படுவதைப் பற்றிய இந்துக்களின் நம்பிக்கை என்ன? சூரியனையும், சந்திரனையும் ராகு, கேது என்ற பாம்புகள் விழுங்குகின்றன. அதனால் தான் கிரகணம் ஏற்படுகின்றது. அதற்கு விஷ்ணுபுராணம் கூறும் கதை இது. ஒரு முறை பாற்கடலை கடையும் பொழுது, ராகு என்ற அசுரன், சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் ஒளிந்திருந்து அமிர்தத்தை பருகி விட்டான். 


இதைக் கண்ட விஷ்ணு சக்கராயுதத்தை வீசி ராகுவின் தலையை சீவி எறிந்தார். அமிர்தத்தை அருந்தியதால் உயிர் பிழைத்த, ராகுவின் தலையுடன் பாம்பின் வாலையும், ராகுவின் உடலுடன் பாம்பின் தலையையும் இணைத்து விட்டார்கள். அவை தான் ராகு, கேது என்ற கிரகங்கள். கிட்டத்தட்ட இதே போன்ற கதையொன்று மொங்கோலியரிடம் புழங்கி வருகின்றது.

கடவுள் ஒரு தடவை, மிகவும் சக்தி படைத்த ராட்சதனான ராகுவை (கவனிக்கவும்: மொங்கோலிய பெயரும் ராகு தான்.) தண்டிக்க நினைத்தார். இதை அறிந்த ராகு எங்கேயோ போய் ஒளிந்து கொண்டு விட, தேடிக் கண்டு பிடித்து வருமாறு, கடவுள் சூரியனை அனுப்பி வைத்தார். எங்கேயும் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் சூரியன் திரும்பி விட்டான். 


கடவுள் அதற்குப் பிறகு சந்திரனை அனுப்பினார். சந்திரன் ராகுவை பிடித்துக் கொண்டு வந்து கொடுக்கவே, கடவுள் தண்டனை வழங்கினார். அன்றில் இருந்து, தன்னை பிடித்துக் கொடுத்த சூரியனையும், சந்திரனையும் விரட்டுவதே ராகுவின் வேலையாகி விட்டது. அதனால் தான், சூரிய- சந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன.

புராணக் கதைகள் உண்மையில் நடந்தவையா, அல்லது கற்பனையா என்ற விவாதத்திற்கு அப்பால், அவை குறிப்பிட்ட மக்களின் பாரம்பரியத்தை கட்டிக் காக்க உதவுகின்றன. ஒவ்வொரு இனமும், தமது தனித்துவத்தை பேணுவதற்காக, இது போன்ற கதைகளை பரம்பரை பரம்பரையாக சொல்லி வருகின்றது. 


தாமே கடவுளின் நேரடி வழித்தோன்றல்களாக காட்டுவதற்கும் இந்தக் கதைகளை உருவாக்கி உள்ளனர். சில நேரம், அவர்களின் மூதாதையர் இடம் பெயர்ந்து வந்த தாயகத்தை நினைவூட்டுவதாகவும் அமைந்திருக்கும். வருங்கால சந்ததியினர், தமது பூர்வீகத்தை மறக்காமல் இருப்பதற்கு புராணக் கதைகள் உதவுகின்றன. அந்த வகையில் பார்த்தால், "இந்துக்களின்" பூர்வீகமும் இந்தியாவாக இருக்க முடியாது.

உண்மையில் "இந்து" என்ற சொல், பிற்காலத்தில் உருவானது. இஸ்லாமிய சாம்ராஜ்யம் உருவான பின்னர் புழக்கத்தில் வந்த சொல்லாகும். சிந்து நதியை எல்லையாக கொண்டிருந்த முஸ்லிம்கள், நதிக்கு அப்பால் இருந்த பகுதியை ஹிந்துஸ்தானம் என்று அழைத்தனர். ஆகவே, இந்துக்களின் தாயகம் இந்தியா என்று நினைப்பது தவறான எண்ணக் கரு. அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்கள், அந்த மண்ணுக்கு உரிமை கொண்டாடுவதைப் போன்றது தான் இதுவும். 


வைதீக இந்துக்களான பிராமணர்கள், ஆரியர்கள் என்ற இனமாக, இமய மலைப் பகுதிகளில் இருந்து வந்து குடியேறினார்கள். அவர்களின் பூர்வீகம், இன்று சீனாவின் பகுதியாகவுள்ள திபெத்தில் உள்ளது. அதனை அவர்கள் இன்றைக்கும் மறக்கவில்லை. சிவபெருமானும், சிவஸ்திகாவும் அதனை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள். இந்துக்களின் தாயக பூமியை தரிசிக்க வேண்டுமானால், நாம் சீனா செல்ல வேண்டும்.


(தொடரும்)