Saturday, December 18, 2010

தமிழீழம் இன்னொரு இஸ்ரேல் ஆகுமா?


[தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?](பகுதி : பதினொன்று)
"தமிழர்கள் கிறிஸ்தவர்கள் என்பதாலேயே சிங்களவன் அடிக்கிறான். புலம்பெயர்ந்த தமிழர்கள், பைபிளையும், சிலுவைகளையும் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி இருந்தால், மேற்குலகின் கவனத்தை ஈர்த்திருக்கலாம்." "இஸ்ரேலை சுற்றி கிறிஸ்தவ நாடுகள் போட்டுள்ள பாதுகாப்பு வலையம் தான் இஸ்ரேலின் பலம். ஈழத்தமிழர்களும் கிறிஸ்தவ நாடுகளை நண்பர்களாக்கிக் கொண்டால், அவர்களது இலட்சியத்தில் வெற்றி பெறலாம். முக்கியமாக சிறிலங்கா படைகள் குண்டு போட்டு அழித்த தேவாலயங்களின் படங்களை பிரச்சாரத்திற்குப் பயன்படுத்த வேண்டும். இலங்கையில் தமிழ் பேசும் கிறிஸ்தவர்களை, பௌத்த-சிங்கள அரசு படுகொலை செய்கின்றது என்ற பிரச்சாரம், மேலைத்தேய கிறிஸ்தவர்களின் அனுதாபத்தை தேடித்தரும்."- ஒரு புலம்பெயர்ந்த தமிழ் ஊடகவியலாளரின் ஆலோசனை.

மேலெழுந்தவாரியாக பார்க்கும் பொழுது, அந்தக் கருத்துக்கள் வேடிக்கையாகத் தோன்றலாம். தமிழர்களில் பெரும்பான்மையோரான இந்துக்களுக்கு ஜீரணிக்க கஷ்டமாக இருக்கலாம். சில முற்போக்கு தமிழ் தேசியவாதிகள், மதவாதம் தமிழ் தேசியத்தை உடைத்து விடும், என்று கவலைப்படலாம். தமிழீழத்தை இன்னொரு இஸ்ரேலாக்கும் கருத்தியல், எழுபதுகளில் தமிழ் தேசிய அரசியல்வாதிகளால் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக வலதுசாரி தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள், அதனை பகிரங்கமாக தேர்தல் மேடைகளில் பேசினார்கள். தமிழீழத்தை ஆசியாவின் இஸ்ரேலாக்குவோம், என்று பெருமையாக முழங்கினார்கள். அவர்கள் உதாரணம் காட்டிய இன்னொரு நாடு சிங்கப்பூர்.

சாமானியன் கூட தமிழீழம் என்றால், இன்னொரு இஸ்ரேலாக, இன்னொரு சிங்கப்பூராக கற்பனை செய்து பார்க்கத் தொடங்கினான். தமிழர்கள், யூதர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்ட காலமும் அது தான். இன்று வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பெருகி விட்டார்கள். அன்று, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமே சிறு தொகை படித்த ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். அதனால், மலேசியா, சிங்கப்பூர், பிஜி, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் வாழ்ந்த தமிழர்களை, புலம்பெயர்ந்த தமிழர்களாக காட்டினார்கள். "தமிழன் உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்றான். தமிழர்களுக்கு என்றொரு நாடில்லை." என்று அவர்களைத் தான் உதாரணமாக காட்டினார்கள். அன்று தமிழீழம் உருவானால், அது உலகத் தமிழர்களின் தாயகமாக இருக்கும் என்றார்கள். அதாவது இன்று இஸ்ரேல் உலக யூதர்களின் தாயகமாக இருப்பதைப் போல. (ஒரு யூதர் உலகின் எந்த மூலையில் இருந்து சென்றாலும் இஸ்ரேலிய பிரஜை ஆகலாம்.)

தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடுவதற்கு இன்னொரு காரணம் இருந்தது. "தமிழர்கள் உலகிலேயே புத்திசாலிகள்" என்ற இன மேலாண்மைக் கருத்தியல். அதற்காக எல்லா தமிழர்களும் புத்திசாலிகள் என்று தவறாக கருதி விடக்கூடாது. யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டுமே உலகிற் சிறந்த மூளைசாலிகள். "எலிசபெத் மகாராணிக்கு கணிதப் பாடம் படிப்பித்த தமிழன் கதை", யாழ்ப்பாண தமிழரின் அதி சிறந்த புத்திசாதுர்யத்திற்கு உதாரணமாக கூறப்படுகின்றது. இப்போதும் பல யாழ்ப்பாண தமிழர்கள், பிற மாவட்ட தமிழர்களை விட, சிங்களவர்களை விட, முஸ்லிம்களை விட, தாம் உயர்ந்தவர்கள் என்று நம்புகின்றார்கள். தற்போது யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றி பேசும் போது கூட:"ஒரு காலத்தில் ஆண்ட பரம்பரைக்கு இந்த நிலைமையா?" என்று தான் ஆதங்கப் படுகின்றனர். (அடிமைப் பரம்பரையாக இருந்த தலித் மக்களும் தமிழர்கள் தான்.) மேற்குறிப்பிட்ட சமூகப் பின்னணி அவர்களை, யூதர்களுடன் மட்டுமே தம்மை ஒப்பிடத் தூண்டியது. ஏனெனில் உலகில் யூதர்கள் மட்டுமே அதி புத்திசாலிகள், அவர்களுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் (யாழ்ப்பாண) தமிழர்கள் உலகிற் சிறந்த மூளைசாலிகள்.

"யூதர்களும் ஒரு காலத்தில் ஆண்ட பரம்பரையாக இருந்தவர்கள். உலகம் முழுக்க அகதியாக அலைந்தார்கள். இப்போது இஸ்ரேல் என்ற தேசத்தை ஆள்கிறார்கள். யூதரின் வரலாற்றுடன் ஒப்பிட்டு, ஆண்ட தமிழினத்தின் கதையை தமிழர்கள் வாழையடி வாழையாக தங்கள் சந்ததிகளுக்கு சொல்லிக் கொடுத்து வர வேண்டும்." வருங்காலத் தமிழீழமும் இஸ்ரேலைப் போன்று அமெரிக்க அடியாளாக செயற்பட வேண்டுமென்றால், அதையிட்டு அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. மாறாக அது ஒரு பெருமைக்குரிய விடயம். அமெரிக்காவின் ஆப்கான், ஈராக் படையெடுப்புகள், அல்கைதா எதிர்ப்பு போர், எல்லாவற்றையும் ஆதரிப்பார்கள். அமெரிக்கா முஸ்லிம் நாடுகளை குறிவைத்து தாக்குகிறது என்று இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவார்கள். வியட்னாம் போர் நடந்த காலத்தில், அமெரிக்கா கம்யூனிசத்தை அழிக்க வேண்டும் என்று அகமகிழ்ந்தார்கள். இஸ்ரேல்- அமெரிக்க ஆதரவை, யாழ்ப்பாண சமூகப் பின்னணியில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். சைவ-கிறிஸ்தவ வெள்ளாள ஆதிக்கவாதிகள், முஸ்லிம்களை எதிரி இனமாக கருதினார்கள். அதே நேரம், கம்யூனிஸ்ட்கள் நடத்திய சாதிய எதிர்ப்பு போராட்டத்தையும் சகித்துக் கொள்ள முடியவில்லை. தாழ்த்தப்பட்ட சாதிகள் சம உரிமை கேட்டால், ஆண்ட பரம்பரைக்கே ஆபத்தாகி விடும்.

யூதர்களுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும் தமிழர்கள், "உலகில் அதிகமான நோபல் பரிசுகளை வென்றவர்கள் யூதர்கள்." என்று விஞ்ஞானபூர்வமாக தர்க்கம் செய்வார்கள். மேலைத்தேய நாடுகளிலும், யூத ஆதரவு அரசியல்வாதிகளால் இத்தகைய பிரச்சாரம் பல வருடங்களாக முன்னெடுக்கப்படுகின்றது. கணிசமான யூதர்களும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். நூறு வருடங்களுக்கு மேலாக பலதரப்பட்ட சாதனையாளர்களுக்கு பரிசு வழங்கிக் கொண்டிருக்கிறது நோபல் நிறுவனம். இது வரை வழங்கப்பட்ட பரிசுகளில் 18 வீதமானவை, யூத இனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்களுக்கு போய்ச் சேர்ந்துள்ளன.

உலக சனத்தொகையில் ௦௦௦0.3% மாக உள்ள யூதர்களுடன் ஒப்பிடும் போது இது அதிகம் தான். ஆயினும் பரிசு வாங்கிய இஸ்ரேலிய யூதர்கள் மிக மிகக் குறைவு என்பது ஆர்வத்தை தூண்டும் விடயம். அநேகமாக நோபல் பரிசு பெற்ற யூத சாதனையாளர்கள், ஒன்றில் ஐரோப்பாவில் வாழ்ந்திருப்பார்கள், அல்லது சிறிது காலமாவது அமெரிக்காவில் படித்திருப்பார்கள். திறமைசாலிகளின் சுதந்திரத்தில் தலையிடாத, அவர்களை ஊக்குவிக்கும் மேற்கத்திய சமூகத்தில் வாழ்ந்த யூதர்கள் மட்டுமே சாதிக்க முடிந்துள்ளது. (சோவியத் யூனியன் போன்ற சோஷலிச நாடுகளிலும் அத்தைய சுதந்திரம் இருந்தது.) இலங்கை, இந்தியா போன்ற பழமைவாத கலாச்சாரம் பேணும் சமூகங்களில் தனி மனித சுதந்திரத்தை எதிர்பார்க்க முடியாது. பழமைவாத யூத குடும்பங்களிலும் இறுக்கமான கட்டுப்பாடுகள் நிலவுகின்றன. மேற்கொண்டு ஆராய விரும்புவோர், நோபல் பரிசு வென்ற யூதர்களின் சுயசரிதையை வாசித்துப் பார்க்கலாம். அவர்கள் எல்லோரும் பழமைவாத மதக் கட்டுப்பாடுகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டவர்கள். மதச்சார்பற்ற கல்வி கற்றவர்கள். நாசிஸ சர்வாதிகார ஆட்சியின் பயனாக பல ஐரோப்பிய யூத விஞ்ஞானிகள் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தனர். அங்கே கிடைத்த வரவேற்பு, வசதி, வாய்ப்புகளும் அவர்களுக்கு பக்கபலமாக இருந்துள்ளன.

நோபல் பரிசுகள் யாவும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்பதை பலரும் ஏற்றுக் கொள்கின்றார்கள். ஒவ்வொரு வருடமும் சமாதானத்திற்காக வழங்கப்படும் நோபல் பரிசு சர்வதேச அரசியலில் கலகத்தை தோற்றுவிக்கும். உண்மையிலேயே சமாதானத்திற்காக பாடுபட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர். எதிரிகளாலும் மதிக்கப்பட்ட மாமனிதர். அவருக்கு சேர வேண்டிய நோபல் பரிசு, நீண்ட காலமாக கொடுக்கப்படாமல் இழுபறிப்பட்டது. அதற்கு முன்பே போர்வெறியன் புஷ்ஷுக்கு சமாதான பரிசு கொடுத்து விட்டார்கள். இஸ்ரேலிய அரசியல் தலைவர்கள் மெனாகேம் பெகின், இட்சாக் ராபின், ஷிமோன் பெரேஸ் ஆகிய யூதர்களுக்கும் சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. யார் இவர்கள்? இஸ்ரேலை ஆண்ட காலங்களில் போர்க்குற்றம், மனித உரிமைகள் மீறல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள். மெனாகேம் பெகின் ஒரு பயங்கரவாதி என்று பிரிட்டிஷ் அரசே அறிவித்திருந்தது. மற்ற இருவரும் பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்த யுத்தத்திற்கு தலைமை தாங்கியவர்கள். ஒரு வேளை மகிந்த ராஜபக்சவுக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டால், தமிழர்கள் எந்தளவு கொதித்தெழுவார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள். நோபல் பரிசின் யோக்கியதை அந்தளவுக்கு தான் உள்ளது.

(தொடரும்)
முன்னைய பதிவுகளை வாசிக்க:
10.பாலஸ்தீனப் பாதையில் ஈழ விடுதலைப் போராட்டம்
9.தமிழீழ - பாலஸ்தீன சகோதரத்துவம் : ஒரு மீள் பார்வை
8. "தமிழர்கள்" ஒப்பிட விரும்பாத கம்யூனிச யூதர்கள்
7.பிரிட்டிஷ் பாலஸ்தீனம், யூத இஸ்ரேலான வரலாறு
6.இஸ்ரேலின் வாகரையும், இலங்கையின் காஸாவும்
5.
சியோனிஸம்: ஏகாதிபத்தியத்தின் நவ காலனிய முகம்
4.யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள்
3.அயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்
2.
இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்
1.
தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?

10 comments:

Mohamed Faaique said...

நல்லாயிருக்கு சார்.... ரொம்ப நல்லாயிருக்கு... உங்க பார்வை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு...

-/பெயரிலி. said...
This comment has been removed by the author.
RMD said...

// சைவ-கிறிஸ்தவ வெள்ளாள ஆதிக்கவாதிகள், முஸ்லிம்களை எதிரி இனமாக கருதினார்கள். அதே நேரம், கம்யூனிஸ்ட்கள் நடத்திய சாதிய எதிர்ப்பு போராட்டத்தையும் சகித்துக் கொள்ள முடியவில்லை. தாழ்த்தப்பட்ட சாதிகள் சம உரிமை கேட்டால், ஆண்ட பரம்பரைக்கே ஆபத்தாகி விடும்.//

இதெல்லாம் உண்மைதான்.தமிழர்களின் மீதான ஆக்க பூர்வம்மன விமர்சமாகவே இதனை எடுத்துக் கொள்ளவேண்டும்.

// தமிழர்கள் கிறிஸ்தவர்கள் என்பதாலேயே சிங்களவன் அடிக்கிறான்.//

சிங்களவர்களிலும் கிறித்தவர்கள் உண்டு. தமிழர்களுக்கு எதிரான சிங்கள இனவாத்தை வளர்த்தவர்களில் அவர்களின் பங்கு பற்றியும் குறிப்பிட்டு இருக்கலாம்.(உ.ம்)டான் டேவிட் ஹேவாவித்தரனே( அனாகரிக தர்மபாலா) ,சாலமன் பண்டாரனாயகா அன்ட் கோ,ஜூலியஸ் ரிச்சர்டு ஜெயவர்த்தனே ,பெர்சி மகிந்த ராஜபக்சே.

ஆனால் அவர்கள் தங்களை பவுத்த மத்த்தினர் போலவே காட்டிக் கொள்வதும் சூழ்நிலையின் கட்டாயமே.

Kalaiyarasan said...

//சிங்களவர்களிலும் கிறித்தவர்கள் உண்டு. தமிழர்களுக்கு எதிரான சிங்கள இனவாத்தை வளர்த்தவர்களில் அவர்களின் பங்கு பற்றியும் குறிப்பிட்டு இருக்கலாம்.//

நீங்கள் குறிப்பிட்ட விடயம், "இலங்கை அரசியலில் வெள்ளாள-கொவிகம ஆதிக்கம்" என்ற தொடரின் ஒரு பகுதியாக விரிவாக வருகின்றது. அதனால் அது பற்றி இங்கே குறிப்பிடவில்லை. தமிழ் தேசியத்தினுள் கிறிஸ்தவ மதவாதிகளின் செல்வாக்கு, இங்கே யூதர்கள் தொடர்பான கட்டுரையில் முக்கியமானது. அதனை அவர்கள் ஒரு நாளும் மறைத்ததில்லை. அதற்கு தான் புலம்பெயர்ந்த தமிழ் ஊடகவியலாளரின் கட்டுரையின் சுட்டியைக் கொடுத்தேன்.

சீனு said...

//தமிழர்கள் கிறிஸ்தவர்கள் என்பதாலேயே சிங்களவன் அடிக்கிறான்//

இலங்கையை அரசின் ஜனாதிபதிகளில் மெஜாரிட்டி கிருத்துவர்கள் தான். விக்கியில் தேடிப்பாருங்கள், இலங்கை அதிபர்கள் என்று. அனைவரும் கிருத்துவர்கள் தாம். பௌத்த சட்டம் அதிபராக இடம் கொடுக்காததால் அவர்கள் மீண்டும் பௌத்தர்களாக மதம் மாறியவர்கள்.

எனக்கென்னவோ நீங்கள் வேறு ஏதோ உள்நோக்கத்தோடு எழுதுகிறீர்களோ என்று தோன்றுகிறது.

Kalaiyarasan said...

//எனக்கென்னவோ நீங்கள் வேறு ஏதோ உள்நோக்கத்தோடு எழுதுகிறீர்களோ என்று தோன்றுகிறது. //

நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். மேற்படி கருத்தை கூறியது நான் அல்ல. ஒரு புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர், இஸ்ரேலிடம் இருந்து தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழ்வின் தளத்தில் எழுதி வருகிறார். அதற்கு அவர் தெரிவித்த காரணங்களே மேலே உள்ளது. இதனை நான் தெளிவாக கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். மீண்டும் அந்த சுட்டியை தருகிறேன்.
http://www.tamilwin.org/view.php?22ipXdc3PI34b82F302HQ6cd2ojP2eP982e2ILB4b31GO0

Kalaiyarasan said...

//இலங்கையை அரசின் ஜனாதிபதிகளில் மெஜாரிட்டி கிருத்துவர்கள் தான். விக்கியில் தேடிப்பாருங்கள், இலங்கை அதிபர்கள் என்று. அனைவரும் கிருத்துவர்கள் தாம். பௌத்த சட்டம் அதிபராக இடம் கொடுக்காததால் அவர்கள் மீண்டும் பௌத்தர்களாக மதம் மாறியவர்கள்.//

இதனை அடுத்த பகுதியில் எழுதவிருக்கிறேன். இம்முறை கட்டுரை நீண்டு விடும் என்பதால் சேர்க்கவில்லை. மேலும் "பௌத்த சட்டம் அதிபராக இடம் கொடுக்காததால்" என்பது தவறு. அந்த சட்டத்தை அவர்கள் தான் இயற்றினார்கள். இலங்கையில் நடைமுறையில் உள்ளது பௌத்த சட்டம் அல்ல, ரோமன் டச்சு என்ற மேலைத்தேய சட்டம்.

Colvin said...

// தமிழர்கள் எந்தளவு கொதித்தெழுவார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள். நோபல் பரிசின் யோக்கியதை அந்தளவுக்கு தான் உள்ளது.//

கொடுக்கப்படும் என்றுதான் எண்ணுகிறேன். சமாதானத்தி்கென்று அல்ல வேறு எதற்காகவேனும் கொடுக்கப்படலாம். ஆயினும் சமதானத்திற்கான நோபல் பரிசு கொடுத்தால் கூட ஆச்சரியப்பட இதில் ஒன்றுமில்லை.
விடயம் தெரிந்த தமிழர்கள் கொதித்தெழ மாட்டார்கள். எனக்கு அவருக்கு விருது கொடுக்காதிருந்தாலே ஆச்சிரியத்தை ஏற்படுத்தும்.

Colvin said...

//பௌத்த சட்டம் அதிபராக இடம் கொடுக்காததால்" என்பது தவறு. //
இதுபுதிய விடயமாக தெரிகிறது. தெளிவாக அரசியல் சாசனத்தைக் குறிப்பிடவும். முன்னைய ஜனாதிபதிகள் எப்படியென்றால் ஏன் பௌத்தத்தை தழுவினர்.

Kalaiyarasan said...

//இதுபுதிய விடயமாக தெரிகிறது. தெளிவாக அரசியல் சாசனத்தைக் குறிப்பிடவும். முன்னைய ஜனாதிபதிகள் எப்படியென்றால் ஏன் பௌத்தத்தை தழுவினர். //

1972 ம் ஆண்டு வரை ஆங்கிலேயர்கள் எழுதிய அரசியல் சாசனமே இலங்கையில் இருந்தது. அந்த ஆண்டில் தான் சிறிமாவோ அரசு குடியரசாவதற்காக புதிய சட்டங்களை மாற்றினார்கள். இருப்பினும் பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் சட்டம் 1978 ல் ஜே.ஆர். ஜெயவர்த்தன காலத்தில் தான் வந்தது. ஜே.ஆர். கிறிஸ்தவராக இருந்து பௌத்தராக மாறியவர். அவரைப் போல பல கிறிஸ்தவ அரசியல்வாதிகள் பெரும்பான்மை பௌத்த மக்களின் வாக்குகளை குறிவைத்து தான் பௌத்த மதத்திற்கு மாறினார்கள். அரசியலில் இது எல்லாம் சகஜம்.