யாழ்ப்பாணம், சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்த ஊழலை அம்பலப் படுத்திய டாக்டர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக மக்கள் போராட்டம். சாவகச்சேரியில் முன் ஒருபோதும் இல்லாத மக்கள் எழுச்சி.
அரச நிதியில் மக்களுக்கு இலவச மருத்துவம் வழங்குவதற்காக நடத்தப்படும் ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் நோயாளிகளை கவனிப்பதில்லை என்றும், வேண்டுமென்றே தனியார் மருத்துவமனைக்கு செல்லுமாறு ஊக்குவிக்கிறார்கள் என்றும் டாக்டர் அர்ச்சுனா சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டி இருந்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட வைத்திய அதிகாரியும், தனியார் மருத்துவமனை நிர்வாகிகளும் அவரை வெளியேற்ற முயற்சித்து வருகின்றனர். போலிஸ் அனுப்பி கைது செய்து வெளியேற்ற எடுத்த முயற்சி மக்கள் போராட்டம் காரணமாக தோல்வி அடைந்தது.
சாவகச்சேரி பகுதியில் பூரண கடையடைப்பு அறிவிக்கப்படடது. இதே நேரம் "சிங்களப் பொலிஸ் எதற்கு வந்தது?" என்று கேட்டு அரசியல் செய்ய சென்ற "தீவிர தமிழ்த் தேசியவாதி" சுகாஸ் @Sugashkanu மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அங்கிருந்து வாலை சுருட்டிக் கொண்டு ஓடினார். எல்லா இடங்களிலும் இவர்களது தமிழ்த் தேசிய நாடக அரசியல் எடுபடாது என்பதை மக்கள் உணர்த்தி உள்ளனர். தமிழ் மக்கள் இனியும் இந்த கபடவேடதாரிகளை நம்பி ஏமாறத் தயாராக இல்லை.
இன்று இலங்கை முழுவதும் ஒரு Whitsle blower ஆக அறியப்படும் அர்ச்சுனா, மருத்துவ ஊழல் தொடர்பாக மேலும் பல தகவல்களை தெரிவித்து உள்ளார். குறிப்பாக தனியார்மயத்தை ஊக்குவிக்கும் இலங்கை அரசுக்கு "நல்ல பிள்ளை" பெயர் எடுப்பதில் யாழ் மருத்துவமனை நிர்வாகம் முதல் இடத்தில் இருக்கிறதாம். அரசு ஒதுக்கும் நிதியை செலவிடாமல் பெரும் பகுதியை திருப்பி அனுப்புகின்றனர். அத்துடன் நிர்வாகத்தில் பிரதேசவாதம், சாதியவாதம் தலை தூக்கி உள்ளமை மருத்துவ துறை சீர்கேடுகளுக்கு காரணமாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் இயங்கும் தீவிர தமிழ்த் தேசியவாதிகள், புலி விசுவாசிகள் யாரும் இதைப் பற்றி பேசாமல் மௌனமாக இருப்பதை அவதானிக்கலாம். இதை வைத்து இனவாத பிழைப்பு அரசியல் செய்ய முடியாது என்பது மட்டுமல்ல, உண்மையில் அவர்கள் சிங்கள அரச கைக்கூலிகள் தான் என்பதையும் நிரூபித்து வருகின்றனர்.
தமிழ்த் தேசியம் ஒரு குட்டி முதலாளிய வர்க்க அரசியல் என்பது மறுபடியும் நிரூபிக்க பட்டிருக்கிறது. யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை ஊழல் தொடர்பாக தமிழ் உழைக்கும் வர்க்க மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நேரம், அவர்களது வர்க்க கோபாவேசத்தை மழுங்கடிக்கும் வகையில் so called தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் நடந்து கொள்கிறார்கள். பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழரசு கட்சி தலைவர் ஸ்ரீதரன் "இது ஒரு இன அழிப்பு!" என்றார். இவர்களுக்கு இனத்தை தவிர வேறெந்த மண்ணாங்கட்டியும் தெரியாது. சும்மா எதையாவது உளற வேண்டியது.
இன்னொரு எம்.பி. கஜேந்திரன் ஊழல் செய்த டாக்டர்கள் தண்டிக்க பட வேண்டும் என்றார். ஆனால் தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறவில்லை. ஆனால், வேண்டுமென்றே அரச மருத்துவமனைகளில் நடக்கும் ஊழல்களை கண்டுகொள்ள மறுக்கும் அரசை கண்டிக்கவில்லை! என்னே அதிசயம்! இந்த விஷயத்தில் அரசுக்கு முட்டுக் கொடுப்பது தவறாக தெரியவில்லை. இவர்கள் யாரும் போராட்டம் நடத்திய மக்களை சென்று சந்திக்கவில்லை.
இவர்களை விட, புலிகளின் பெயரால் ஜிகாத் (புனிதப் போர்) நடத்தும் ஏக இறைவனின் போராளிகள் சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக வாயே திறக்கவில்லை. தானடா விட்டாலும் சதை ஆடும். சிங்கள அரசுக்கு நெருக்கடி வந்தால் புலி அரசியலை கையில் எடுப்பார்கள். இந்த விஷயத்திலும் "புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?" என்று புறநானூறு பாடினார்கள். அதாவது சாவகச்சேரி மருத்துவமனை ஊழலை வெளிக் கொணர்ந்த டாக்டர் அர்ச்சுனாவின் தந்தை முன்பு புலிகளின் காவல்துறையில் இருந்தாராம். அந்த பெருமை மட்டும் அவர்களுக்கு போதும். தமிழ் மக்கள் எக்கேடு கெட்டால் இவர்களுக்கு என்ன வந்தது?
சரி, தனியார் மருத்துவமனை தொடர்பாக இவர்களது நிலைப்பாடு என்ன?
முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அவர்களது நிர்வாகத்தில் இயங்கியது மருத்துவமனையில் பணியாற்றிய so called "தமிழ்த் தேசிய மருத்துவர்கள்", தற்போது தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்கிறார்கள். தமிழ்த்தேசியர்கள் நோக்கம் பணக்காரர்களுக்கு சேவை செய்வது என்பதாக மாறி விட்டது. இது தான் குட்டி முதலாளிய அரசியல் சிந்தனை.
"காசு இருந்தால் மருத்துவம். இல்லை என்றால் வருத்துவோம்!" - இது தானே மருத்துவ மாபியாவின் கொள்கை? இதற்கு சிங்கள பேரினவாத அரசும் உடந்தை. தமிழ்த் தேசியவாதிகள் கூட்டுக் களவாணிகள்.
No comments:
Post a Comment