Showing posts with label மொங்கோலியா. Show all posts
Showing posts with label மொங்கோலியா. Show all posts

Saturday, February 03, 2018

மொங்கோலியா: எழுத்தறிவித்தவன் கம்யூனிஸ்ட் ஆவான்!


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த மொங்கோலியா, பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தது. பெருமளவில் நாடோடி இடையர்களை கொண்ட மக்கள் சமூகத்தில் இருந்து சோஷலிசப் புரட்சி வெடிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 

முதலில், மொங்கோலிய சோஷலிசப் புரட்சிக்கு காரணமாக இருந்த, டம்டின் சுக்பதார் பற்றி சில குறிப்புகள். டம்டின் சுக்பதார் ஒரு சாதாரண ஏழை இடையர் குடும்பத்தில் பிறந்தவர். இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய காலத்தில், முகாமில் நிலவிய ஊழல், வசதிக் குறைபாடுகளுக்கு எதிரான சிப்பாய்க் கலகத்தில் பங்கெடுத்தவர். பிற்காலத்தில் பௌத்த மத நூல்களை அச்சிடும் அரசு அச்சகத்தில் வேலை செய்த பொழுது மார்க்சியத்தை அறிந்து கொண்டார். 

அப்போது தலைநகர் உலான் பட்டாரில் தங்கியிருந்த ரஷ்ய மார்க்சிஸ்டுகள் மூலம் மார்க்ஸிய நூல்கள் படிக்கக் கிடைத்திருக்கலாம். டம்டின் சுக்பதார் பிற மார்க்ஸிய புரட்சியாளர்களுடன் சேர்ந்து, மக்கள் புரட்சிகர கட்சியை உருவாக்கினார். மொங்கோலிய நாடோடி இன மக்களை அணிதிரட்டி, கெரில்லாப் படை ஒன்றை அமைத்தார். 

இதே நேரம், ரஷ்யப் புரட்சியின் தாக்கம் மொங்கோலியாவில் எதிரொலித்தது. போல்ஷெவிக் செம்படைகளால் தோற்கடிக்கப் பட்ட ஸார் மன்னனுக்கு விசுவாசமான வெண் படைகள், மொங்கோலியாவுக்குள் நுழைந்து பாசிச சர்வாதிகார ஆட்சி நடத்தினர். அதற்கெதிராக மொங்கோலிய மக்கள் கிளர்ச்சி செய்தனர். டம்டின் சுக்பதார் தலைமை தாங்கிய மொங்கோலிய நாடோடிகளின் கெரில்லா இராணுவம், ரஷ்ய செம்படை உதவியுடன் போராடி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

மொங்கோலியாவில், 1924 ம் ஆண்டு நடந்த புரட்சியின் விளைவாக, அந்த நாடு கம்யூனிசப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. உலகில் சோவியத் யூனியனுக்கு அடுத்ததாக தோன்றிய, இரண்டாவது சோஷலிசக் குடியரசு அதுவாகும்.

அதுவரை காலமும், திபெத்திய பௌத்த மதத்தை பின்பற்றும் மதத் தலைவர்களாலும், சீன மன்னர்களாலும் ஆளப்பட்டு வந்த மொங்கோலியா நாட்டில், எழுத்தறிவு பெற்ற மக்கள் தொகை மிகக் குறைவாக இருந்தது. பெரும்பாலான மொங்கோலிய மக்கள், நாடோடி கூட்டங்களாக வாழ்ந்ததால், பாடசாலைகளும் கட்டப் படவில்லை. பௌத்த துறவிகளும், மேட்டுக்குடியினரும் மட்டுமே கல்வி கற்கும் வாய்ப்பை பெற்றிருந்தனர்.

மொங்கோலியா ஒரு சோஷலிச நாடாக இருந்த காலத்தில், மாலை நேர பாடசாலைகள் அமைக்கப் பட்டன. பகலில் வேலை செய்து விட்டு வரும், தொழிலாளர்கள், விவசாயிகள், இடையர்கள் அந்த மாலை நேரப் பாடசாலைகளில் சேர்ந்து கல்வி கற்றனர். உழைக்கும் மக்களுக்கு கல்வியளிக்கும் திட்டம் அமோக வெற்றி பெற்றதால், தலைநகர் உலான் பட்டாரில் "மார்க்சிய-லெனினிய பல்கலைக்கழகம்" அமைக்கப் பட்டது.

இது பிற பல்கலைக்கழகங்களில் இருந்து வேறுபட்டது. கல்வி கற்கும் வயதில் உள்ள சாதாரண மாணவர்களுக்காக அமைக்கப் படவில்லை. வறுமை காரணமாக இளம் வயதில் வேலைக்கு போக வேண்டியிருந்த இளம் வயதினர் முதல், முதுமையிலும் அறிவைத் தேடுபவர்கள் வரையிலான பலதரப் பட்டோர் அங்கே கல்வி கற்றனர். மாலை நேர பாடசாலைகளில் சித்தி பெற்ற தொழிலாளர்களும் மேற்படிப்புக்காக வந்தனர்.

மார்க்சிய - லெனினிய பல்கலைக்கழகத்தில், வெறும் கம்யூனிச சித்தாந்தம் மட்டுமே போதிப்பார்கள் என்று, தவறாக நினைத்து விடக் கூடாது. சாதாரண பல்கலைக் கழகத்தில் போதிக்கப் படும் அனைத்து பாடங்களையும் அங்கே பயில முடியும். அந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்ற பலர், பொறியியலாளர்களாக, பொருளியல் நிபுணர்களாக, விவசாய நிபுணர்களாக, பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றனர். 1953 ம் ஆண்டு, உலான் பட்டார் நகரில் தொடங்கப்பட்ட நாளில் இருந்து, பத்து வருடங்களுக்குள் 900 பேர் பட்டதாரிகளாக வெளியேறினார்கள்.

(மேலேயுள்ள படத்தில் : மார்க்சிய - லெனினிய பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள். தகவல்: Mongolia Today, January 1963)

Friday, December 30, 2011

விஷ்ணுவின் வாகனமான, "ஷாருக்கான்" என்ற கருடன்!

[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது! - 13]
(பதின்மூன்றாம் பாகம்)

இந்து மதத்தில் உள்ள கருட புராணம், வைஷ்ணவர்களுக்கு உரியது. இந்து மதத்தில் இரண்டு பிரிவினர் பெரும்பான்மையாக உள்ளனர். ஒரு பிரிவினர், சிவனை முழுமுதற் கடவுளாக வழிபடும் சைவர்கள். மற்ற பிரிவினர், விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் வைஷ்ணவர்கள். கருட புராணத்தில் விஷ்ணுவுக்கும், கருடனுக்கும் இடையில் நடைபெறும் ஆன்மீக உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

கருடன் விஷ்ணுவின் வாகனமாகும். இன்றுள்ள இந்துக்களுக்கு, கருடனைப் பற்றி மேலதிகமாக எதுவும் தெரியாது. மதத்தை அமைப்பாக்குவதில் பங்கெடுத்தவர்கள், தமது வருங்கால சந்ததி எதைப் படிக்க வேண்டும், எதைப் படிக்கக் கூடாது என்று, அன்றே முடிவெடுத்திருந்தனர். தகவலை தணிக்கை செய்வது, செய்தியை இருட்டடிப்பு செய்வது எல்லாம், நமது கால அரசுக்களுக்கு மட்டுமே பொதுவான ஒன்றல்ல. பண்டைய கால மதவாதிகள் அதைத் தான் செய்தனர். நிசெயா நகரில் (துருக்கி) கூடிய கிறிஸ்தவ துறவிகள், விவிலிய நூலில் எந்தக் கதைகள் இடம்பெற வேண்டும், எதை நீக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அவர்களின் தீர்மானத்தின் விளைவு தான், இன்று நாம் வாசிக்கும் பைபிள் நூல்.

இந்தியாவில் விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் வைஷ்ணவ மதம் அறியப் பட்ட காலத்திற்கு முன்பே கருட வழிபாடு இருந்துள்ளது. வேத கால ஆரியரின் தெய்வங்களில் ஒன்றாக ரிக் வேதத்தில் எழுதப் பட்டுள்ளது. இன்றைக்கு இஸ்லாமிய மயப்பட்டுள்ள நாடுகளிலும் கருட வழிபாடு நிலவியது. அரேபியர்கள், கருடனை "ரூக் (Rukh, Roc) பறவை" என்று அழைத்தனர். அரேபியரின் தேவதைக் கதைகளிலும் ரூக் பறவையின் சாகசங்கள் பற்றி கூறப் பட்டுள்ளது. பிரமாண்டமான ரூக் பறவை, யானையையும் தூக்கிச் செல்லும் வல்லமை பெற்றது. மகாபாரதத்தில் எழுதப்பட்ட கிளைக் கதைகளில், கருடனின் கதையும் ஒன்று.

மகாபாரதக் கருடனும், யானையை தூக்கிச் செல்லும். "இந்து இந்தியாவிலும்", "இஸ்லாமிய அரேபியாவிலும்" வாழும் மக்கள் ஒரே மாதிரியான புராணக் கதையை பகிர்ந்து கொண்டமை ஆச்சரியத்திற்கு உரியது. நமது நாட்டு இந்து மத அடிப்படைவாதிகள், "முஸ்லிம்கள் என்றால் வேற்றுக் கிரக வாசிகள்" என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு தெரியாத ஒன்றை, மற்றவர்கள் அறிய விடவும் மாட்டார்கள். ஆங்கிலேயர்கள், யூதர்களுடன் தம்மை இனங் காட்டிக் கொள்ள விரும்புவார்கள். அரேபியர், சீனர்களுடனான ஒற்றுமைகளை மூடி மறைக்கப் பார்ப்பார்கள்.

கருடனைப் பற்றிய புராணக் கதைகள் இந்தியாவுக்கு மட்டுமே உரிய சிறப்பம்சமல்ல. சீனா, தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும், கருடனைப் பற்றிய கதைகள், இன்றும் மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ளன. மொங்கோலியாவில் குலத் தலைவர்களை கருடனின் பெயரால் அழைக்கும் வழக்கம் இருந்தது. மொங்கோலிய நாட்டு தேசிய விமான சேவையின் பெயர் "Khan Garid" (கருட ராஜா). பிரபல ஹிந்தி சினிமா நடிகர் ஷாருக்கானை தெரியாதவர் எவருமிருக்க முடியாது. ஆனால், ஷாருக்கான் என்ற பெயருக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் மிகச் சிலரே. அது ஒரு முஸ்லிம் பெயர் என்று பிழையாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

"ஷா" என்றால் ஈரானிய மொழியில் ராஜா என்று அர்த்தம். "ருக்" என்பது, புராண கால ராட்சதப் பறவையின் (கருடன்) பெயர். அதாவது, கருட ராஜா. கான், துருக்கி மொழியில் தலைவனைக் குறிக்கும். மொங்கோலியர்கள் "கான் கரிட்" என்று அழைக்கும் பாரம்பரியத்தை பின்பற்றி, ஈரானியர்கள் "ஷா-ருக்" என்ற பெயரிட்டனர். இந்திய இந்துக்களின் பூர்வீகம், ஈரான், சீனா, மொங்கோலியா போன்ற நாடுகளில் இருப்பதை நிரூபிக்க இத்தனை சான்றுகள் போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

இந்து மதம் கருடனைப் பற்றி வேறென்ன எல்லாம் சொல்கிறது? பறவைகளின் ராஜாவான கருடன், ஒரு யானையை தூக்கிச் செல்லுமளவு ராட்சதப் பறவை. அது எமது குடியிருப்புகளுக்கு மேலே பறக்கும் பொழுது, சூரியனின் வெளிச்சத்தை மறைத்து விடுவதால், நிலத்திலே பெரியதொரு நிழல் படரும். அரபு நாட்டு புராணக் கதையும் அவ்வாறு தான் கருடனை (ரூக்) விபரிக்கின்றது. சிந்துபாத்தின் கடல் பயணத்தின் போது, ரூக் பறவை இரண்டு தடவைகள், கப்பல்களை தாக்கி சேதப் படுத்தியது. மார்கோ போலோ தனது கடற் பயணங்களின் பொழுது, மடகஸ்கார் தீவில் இருந்த ராட்சதப் பறவைகள் குறித்து கேள்விப் பட்டுள்ளார். உள்ளூர் மக்கள் அதனை, "யானை காவிப் பறவை" என்றழைத்தனர்.

கருடன் (ரூக்), Qaf மலையில் வசிப்பதாக அரேபியர்கள் நம்பினார்கள். அதனை உறுதிப் படுத்துவது போல, மொங்கோலியாவில், கருடனை வழிபட்ட மக்கள், தமது தெய்வம் ஒரு புனித மலையில் வசிப்பதாக நம்பினார்கள். மொங்கோலியாவில் பௌத்த மதத்தின் வருகைக்கு பின்னர், கருட வழிபாடு ஏறத்தாள மறைந்து விட்டது. அகழ்வாராய்ச்சியாளர்கள், கருட தெய்வச் சிலைகளை மண்ணுக்குள் இருந்து தோண்டி எடுத்தனர். பாதி பறவை, பாதி மனிதனாக அந்தச் சிலைகள் காணப் பட்டன. இதே போன்ற கருடன் சிலைகள், துருக்கி இன மக்கள் பரவி வாழ்ந்த, ரஷ்யாவின் பிற பகுதிகளிலும் கண்டெடுக்கப் பட்டன.

புராண கால கதைகளுக்கு அப்பால், கருடனை விஞ்ஞான அடிப்படையில் விளக்க முடியுமா? உலகில் மனித இனம் தோன்றுவதற்கு முன்னர், டைனோசர்கள், டிராகன்கள் என பல ராட்சத விலங்கினங்கள் வாழ்ந்துள்ளன. கற்கால நியாண்டர்தால் மனிதன் கூட, எம்மை விட அளவிற் பெரிய ராட்சதனாகத் தான் இருந்திருப்பான். பல இலட்சம் வருடங்களாக நடந்து வரும் பரிணாம வளர்ச்சியின் காரணமாக, ராட்சத விலங்கினங்கள் அழிந்து விட்டன. இருப்பினும், மனித சமுதாயம் தோன்றிய காலத்திலும், எஞ்சிய உயிரினங்கள் சில அங்கும் இங்கும் வாழ்ந்திருக்கலாம்.

பண்டைய மக்கள், அந்தத் தகவல்களை புராணக் கதைகளாக பரம்பரை பரம்பரையாக சொல்லிக் கொண்டு வந்துள்ளானர். எங்கேயோ ஒரு புள்ளியில் தோன்றிய மனித இனம், வெவ்வேறு திசைகளில், ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் புலம்பெயர்ந்து செல்லும் பொழுது, கதைகள் மாற்றமடைவது இயல்பு. பெயர்கள், சம்பவங்கள் மாறினாலும், பெரும்பாலான மூலக் கதைகள் மாற்றமடைவதில்லை. கருடன் பற்றிய கதையும் அவ்வாறானது தான். கற்காலத்தில் வாழ்ந்த டைனோசர்களின் எலும்புக்கூடுகள் மொங்கோலியாவில் உள்ள கோபி பாலைவனத்தில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. டைனோசர்களை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள், ஒரு காலத்தில் இராட்சதப் பறவையினங்கள் வாழ்ந்திருக்கலாம் என நம்புகின்றனர்.

கருடனின் பூர்வீகத்தை பற்றி, இப்போது நாங்கள் அறிந்து கொண்டோம். அடுத்ததாக, கருடனுக்கும், பாம்புக்கும் இடையில் என்ன பகை என்று பார்ப்போம். கருடனின் இனத்தவருக்கும், பாம்பு இனத்தவர்களுக்கும் இடையில் நடந்த போரில், ஓரிடத்தில் சிவபெருமானும் சம்பந்தப் பட்டுள்ள விடயம் சுவாரஸ்யமானது. சிவனின் கழுத்தில் பாம்பு சுற்றி இருப்பதும் காரணத்தோடு தான். "பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது, கருடா சௌக்கியமா?" உண்மையில், கருடன் தான் பாம்பைப் பார்த்து அவ்வாறு கேட்டிருக்க வேண்டும். போரில் தோல்வியடைந்த ஒரு சிறுபான்மை சமூகத்தை இகழ்ச்சியுடன் பார்த்த பெரும்பான்மை சமூகத்தவரின் வன்மம், தற்கால சினிமாவிலும் எதிரொலித்தது.

(தொடரும்)


மேலதிக தகவல்களுக்கு:
Garuda
Roc (mythology)
Shahrokh (mythology)
The Search for Gold Guarding Griffins
-------------------------------------------------------

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்
6.தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்
7.பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !
8.கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி?
9.தமிழர் தொலைத்த விமானம் செய்யும் தொழில்நுட்பம்
10.எல்லாளனை வீழ்த்திய, "தமிழ்த் துரோகக் கடவுள் கந்தன்!"
11. புத்தரின் பல்லுக்காக போரிட்ட, சிங்கள-தமிழ் மன்னர்கள்
12.நாக நாட்டு குகைக் கோயில் மர்மம்

Sunday, November 27, 2011

இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!



சிறு வயதில், வீட்டில் எல்லோரும் சாமி கும்பிடும் பொழுது, சிவபெருமான் படம் மட்டும் கண்ணை உறுத்தும். பிறைச் சந்திரனையும், கங்கை நதியையும் தலையில் வைத்துள்ள சிவன், இமயமலைச் சாரலில் தியானத்தில் ஆழ்ந்திருப்பார். இமய மலைக்கும், இலங்கைக்கும் இடையிலான புவியியல் வித்தியாசங்களை கணக்கில் எடுக்கும் பொழுது, சிவபெருமான் எனக்கு அந்நியமான ஒருவராக தெரிந்தார். 


இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால், கைலாச மலையில் வசிக்கும் சிவன், எவ்வாறு எமக்கு கடவுளாக முடியும்? இந்தக் கேள்விக்கு சைவ மத நம்பிக்கையாளர்களான பெற்றோரும், மதக் கல்வி போதித்த ஆசிரியர்களும் சரியான பதிலைக் கூற முடியவில்லை. இந்து மதம், இந்திய உப கண்டத்திற்கு பொதுவான சமயம், என்று பொத்தாம் பொதுவாக விளக்கம் அளித்தார்கள். என்ன இருந்தாலும், சிறுவர்களின் மாயாஜாலக் கதைகளில் வரும் விசித்திர உருவமாக காட்சியளித்த சிவபெருமானின் மூலத்தை அறியும் ஆர்வம் மட்டும் மறையவில்லை.

பல வருடங்களுக்குப் பிறகு, புலம்பெயர்ந்து குடியேறிய நாட்டில், எனது தேடுதலுக்கான தீனி கிடைத்தது. ஆம்ஸ்டர்டாம் நூலகத்தில், நாம் அதிகம் அறிந்திராத நாடுகளைப் பற்றிய நூல்களை தட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். எதிர்பாராத விதமாக, மொங்கோலியா பற்றிய நூலில், அவர்களது கடவுளரின் படங்கள் அச்சடிக்கப் பட்டிருந்தன. 


பண்டைய மொங்கோலியா இன்று இரண்டாகப் பிரிந்துள்ளது. நாட்டின் அரைவாசிப் பகுதி, சீன தேசத்துடன் இணைக்கப்பட்டு, "உள்ளக மொங்கோலியா" என்ற மாநிலமாக உள்ளது. 

 பெரும்பான்மையான மொங்கோலியர்கள் பௌத்த மதத்தினர். ஆனால், பிரம்மா, விஷ்ணு, சரஸ்வதி, கணபதி அவர்கள் வணங்கும் தெய்வங்களாக இருந்தன. நமக்கு நன்கு பரிச்சயமான அதே இந்துத் தெய்வங்கள் தான். அந்தப் படங்களில் சற்று வித்தியாசமாக, மொங்கோலியர் போன்ற சப்பட்டை மூக்குடன், தட்டை முகத்துடன் காணப்பட்டனர். 

சரஸ்வதி வைத்திருந்த வீணை, மொங்கோலியரின் பாரம்பரிய நரம்பிசைக் கருவி போலத் தோன்றியது. இந்தக் கருவி இன்றைக்கும் மத்திய ஆசியாவின், துருக்கி இன மக்களால் இசைக்கப் படுகின்றது. மொங்கோலிய மக்களும் துருக்கி மொழி பேசும் இனத்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்து மதம் உண்மையில் பிராமணர்களின் மதம். ஆரியர்கள் என்போர், மத்திய ஆசியாவில் இருந்து வந்து குடியேறிய வெள்ளை நிறமான மக்கட் கூட்டத்தினர். இது குறித்த பல தகவல்களை, ஏற்கனவே பகுத்தறிவு நூல்களில் வாசித்தறிந்திருக்கிறேன். மொங்கோலியாவில் இந்து மதக் கடவுளரின் படங்கள், ஆரியரை வேறொரு கோணத்தில் ஆராய வைத்தது. 


வெள்ளையின மக்கள், ஐரோப்பாவுக்கும், ஆசியாவுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் இருந்து புறப்பட்டிருக்கலாம். ஒரு பிரிவினர் ஐரோப்பாவிலும், மறு பிரிவினர் ஈரான் வழியாக இந்தியாவை வந்தடைந்தனர். ஐரோப்பிய மொழிகளில் "கொகேசியர்கள்" என்று குறிப்பிடுகின்றனர். உண்மையில் ஆரியர்களின் ஊற்றுக்கண்ணாக கருதப்படும் பகுதியில் இன்று வாழும் மக்கள், சீனர்கள் போன்று தோற்றமளிக்கும் துருக்கி இனத்தவர்கள். 

பல்லாயிரம் வருடங்களுக்கு முந்திய இடப்பெயர்வில், இனத்தூய்மை காப்பாற்றப் பட்டிருக்கும் என்று கூற முடியாது. மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியையும் கருத்தில் எடுக்க வேண்டும். இவை எல்லாம், சமூக விஞ்ஞானிகளின் ஆய்வுகளின் முடிவுகள்.

மொங்கோலியா நாட்டின் புராணக் கதைகளை வாசித்த பொழுது, இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. மொங்கோலியர்கள் பௌத்தர்கள் என்பதால், அந்தக் கதைகளில் புத்தரின் பெயரையும் சேர்த்திருக்கின்றனர். சில கதைகள், மொங்கோலிய நாடோடி சமூகத்தை அடிநாதமாக கொண்டுள்ளன. இருப்பினும், சில கதைகள் இந்து மதக் கதைகளை ஒத்திருக்கின்றன. 


இன்று, இந்து மதமானது பல்லினங்களை சேர்ந்தவர்களின் நம்பிக்கையாக மாறி விட்டது. ஆனால், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு, குறிப்பிட்ட சில (வட இந்திய) இனத்தவர்களின் மதமாக இருந்துள்ளது. அந்த வகையில், வட இந்திய இனக் குழுக்களும், மொங்கோலிய இனத்தவரும் ஒரே மூலத்தைக் கொண்டிருக்க வேண்டும். 

உண்மையில், மத்திய ஆசியாவை சேர்ந்த பிற துருக்கிய இனத்தவர்கள் மத்தியிலும் இது போன்ற புராணக் கதைகள் நிலவியிருக்கலாம். ஆனால், இஸ்லாம் மதமானது அவற்றை மறக்கச் செய்து விட்டது. அதற்கு மாறாக, பௌத்த மதத்தினுள் தெய்வங்களுக்கு வெற்றிடம் இருப்பதால், மொங்கோலிய மக்களின் பாரம்பரிய நம்பிக்கைகளையும் உள்வாங்கியுள்ளது.

மொங்கோலியாவில், அதன் எல்லையோரமாக உள்ள ரஷ்ய பகுதிகளில் திபெத்திய பிரிவான "லாமாயிச பௌத்தம்" பின்பற்றப் படுகின்றது. அதனால் தான், மனிதர்களின் சிருஷ்டி பற்றிய மொங்கோலிய கதை, கடவுளின் இடத்தில் ஒரு லாமா (திபெத்திய பௌத்த மதகுரு) வை குறிப்பிடுகின்றது. 


முன்னொரு காலத்தில் வாழ்ந்த ஒரு லாமா, ஒன்பது சொர்க்கங்களையும், ஒன்பது உலகங்களையும், ஒன்பது ஆறுகளையும் படைத்ததாக அந்தக் கதை கூறுகின்றது. திபெத்திய மத நம்பிக்கையின் படி, "ஒன்பது" மிக முக்கியமான அதிர்ஷ்ட எண். இந்து மதத்தில் அது ஏழாக மாறி விட்டது. இந்து மத நம்பிக்கையின் பிரகாரம், கடவுள் எல்லாவற்றையும் ஏழு, ஏழாக படைத்துள்ளார். 

ஏழு உலகங்கள் (பூலோகம், புவர்லோகம், ஸ்வர்கலோகம், மகரலோகம், ஜனலோகம், தபோலோகம் மற்றும் பிரம்ம லோகம்). ஏழு ஆறுகள் (சிந்து, அஷிக்னி, பருஷ்னி, ஸரஸ்வதி, யமுனா, கங்கை மற்றும் சரயூ). திபெத்திய பௌத்தர்களின் அதிர்ஷ்ட எண்ணான ஒன்பது, இந்துக்களின் அதிர்ஷ்ட எண்ணான ஏழு ஆகிய நம்பிக்கைகள் கைலாய மலையில் இருந்து தோன்றின. அது குறித்து பிறிதொரு இடத்தில் பார்க்கலாம்.

ஜப்பானை சேர்ந்த ஆய்வாளர்கள், மொங்கோலிய புராணக் கதைகளை தொகுத்துள்ளனர். (Mongol creation stories: man, Mongol tribes, the natural world, and Mongol deities, Nassen-Bayer; Kevin Stuart, Asian Folklore Studies, Vol.51 No.2, pp.323-334) அவற்றில் சில. நிது மலையில், காட்டுக்குள் இருக்கும் குளம் ஒன்றினுள் தேவ லோக கன்னிகைகள் சிலர் நீராடிக் கொண்டிருந்தனர். அந்த வழியால் சென்று கொண்டிருந்த ஒரு வேட்டைக்காரன் அந்தக் காட்சியைக் கண்டு விட்டான். ஒரு கன்னியின் உடைகளை எடுத்து மறைத்து வைத்தான். 


ஒரு மானுடன் பார்த்து விட்டதை அறிந்த தேவ லோக கன்னிகள், அன்னப் பறவையாக மாறி சொர்க்கத்திற்கு பறந்து சென்று விட்டனர். ஆடைகளை பறிகொடுத்த கன்னி மட்டும், பூமியில் தங்கி விட்டாள். வேடனின் வற்புறுத்தலுக்கு இணங்கி, அவனை மணந்து ஒரு குழந்தை ஈன்றெடுத்தாள். தேவ லோக கன்னிகைகள் நீண்ட காலம் பூவுலகில் வாழ முடியாது. அதனால், தேவ லோகம் செல்வதற்கு தக்க தருணம் பார்த்து காத்திருந்தாள். 

ஒரு நாள், குழந்தையை தனியாக தொட்டிலில் விட்டு, அதற்கு காவலாக ஒரு மஞ்சள் பறவையை நியமித்து விட்டு தேவ லோகத்திற்கு சென்று விட்டாள். அந்தக் குழந்தையின் வழித்தோன்றல்கள் தாமே என, Dorbed என்ற மொங்கோலிய இனக்குழுவினர் நம்புகின்றனர்.

இந்து மதத்தில் இதே போன்றதொரு கதை உள்ளது. அதிலும் தேவ லோக கன்னிகள், பூலோக வனத்தில் உள்ள குளத்தில் நீராடுகின்றனர். தேவ லோகத்தை சேர்ந்த மேனகை, விஸ்வாமித்திர முனிவருடன் குடித்தனம் நடத்தி, ஒரு குழந்தையை பெற்றெடுத்து விட்டு சென்றதாக ஒரு கதை உண்டு. அந்தக் கதையில், மேனகை விட்டுச் சென்ற குழந்தையை சகுந்தப் பறவைகள் கொஞ்சியதால், சகுந்தலா என்று பெயர் வந்தது. 


இந்திய இந்துக்களும், மொங்கோலியர்களும் ஒரே புராணக் கதையை பகிர்ந்து கொள்வது எப்படிச் சாத்தியமானது? ஒரே வேரில் இருந்து கிளம்பிய கிளைகள் போன்று, இரு இனங்கள் வெவ்வேறு திசைகளில் புலம் பெயர்ந்து சென்றிருக்க வேண்டும். அந்த வேர் எங்கேயுள்ளது? கி.மு. 5000 வருடங்களுக்கு முன்னர், ஒரே மொழி பேசும் இனங்கள் ஓரிடத்தில் ஒன்றாக வாழ்ந்துள்ளன. அது ஈரானுக்கும், இந்தியாவுக்கும் இடைப்பட்ட இமய மலைப் பிரதேசம் ஆகும். 

ஆரிய இனங்களின் குடிசனப் பரம்பலை ஆராய்ச்சி செய்த அறிஞர்கள், அவர்கள் நாடோடிக் கூட்டங்களாக இந்தியா வந்தடைந்திருக்கலாம் என்று நம்புகின்றனர். அதற்கு அவர்கள் காட்டும் ஆதாரங்களில் ஒன்று, புராணக் கதைகள். குறிப்பாக ஈரானிய ஆரிய இனம், இந்திய ஆரிய இனத்திற்கு நெருக்கமானது. ஈரானிய புராணங்களிலும் தேவர்கள், அசுரர்கள் வருகின்றனர். இந்துக்களின் ரிக் வேதமும், ஈரானியர்களின் அவேஸ்தாவும் ஒரே மாதிரியான கதைகளை கொண்டுள்ளன.

சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஏற்படுவதைப் பற்றிய இந்துக்களின் நம்பிக்கை என்ன? சூரியனையும், சந்திரனையும் ராகு, கேது என்ற பாம்புகள் விழுங்குகின்றன. அதனால் தான் கிரகணம் ஏற்படுகின்றது. அதற்கு விஷ்ணுபுராணம் கூறும் கதை இது. ஒரு முறை பாற்கடலை கடையும் பொழுது, ராகு என்ற அசுரன், சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் ஒளிந்திருந்து அமிர்தத்தை பருகி விட்டான். 


இதைக் கண்ட விஷ்ணு சக்கராயுதத்தை வீசி ராகுவின் தலையை சீவி எறிந்தார். அமிர்தத்தை அருந்தியதால் உயிர் பிழைத்த, ராகுவின் தலையுடன் பாம்பின் வாலையும், ராகுவின் உடலுடன் பாம்பின் தலையையும் இணைத்து விட்டார்கள். அவை தான் ராகு, கேது என்ற கிரகங்கள். கிட்டத்தட்ட இதே போன்ற கதையொன்று மொங்கோலியரிடம் புழங்கி வருகின்றது.

கடவுள் ஒரு தடவை, மிகவும் சக்தி படைத்த ராட்சதனான ராகுவை (கவனிக்கவும்: மொங்கோலிய பெயரும் ராகு தான்.) தண்டிக்க நினைத்தார். இதை அறிந்த ராகு எங்கேயோ போய் ஒளிந்து கொண்டு விட, தேடிக் கண்டு பிடித்து வருமாறு, கடவுள் சூரியனை அனுப்பி வைத்தார். எங்கேயும் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் சூரியன் திரும்பி விட்டான். 


கடவுள் அதற்குப் பிறகு சந்திரனை அனுப்பினார். சந்திரன் ராகுவை பிடித்துக் கொண்டு வந்து கொடுக்கவே, கடவுள் தண்டனை வழங்கினார். அன்றில் இருந்து, தன்னை பிடித்துக் கொடுத்த சூரியனையும், சந்திரனையும் விரட்டுவதே ராகுவின் வேலையாகி விட்டது. அதனால் தான், சூரிய- சந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன.

புராணக் கதைகள் உண்மையில் நடந்தவையா, அல்லது கற்பனையா என்ற விவாதத்திற்கு அப்பால், அவை குறிப்பிட்ட மக்களின் பாரம்பரியத்தை கட்டிக் காக்க உதவுகின்றன. ஒவ்வொரு இனமும், தமது தனித்துவத்தை பேணுவதற்காக, இது போன்ற கதைகளை பரம்பரை பரம்பரையாக சொல்லி வருகின்றது. 


தாமே கடவுளின் நேரடி வழித்தோன்றல்களாக காட்டுவதற்கும் இந்தக் கதைகளை உருவாக்கி உள்ளனர். சில நேரம், அவர்களின் மூதாதையர் இடம் பெயர்ந்து வந்த தாயகத்தை நினைவூட்டுவதாகவும் அமைந்திருக்கும். வருங்கால சந்ததியினர், தமது பூர்வீகத்தை மறக்காமல் இருப்பதற்கு புராணக் கதைகள் உதவுகின்றன. அந்த வகையில் பார்த்தால், "இந்துக்களின்" பூர்வீகமும் இந்தியாவாக இருக்க முடியாது.

உண்மையில் "இந்து" என்ற சொல், பிற்காலத்தில் உருவானது. இஸ்லாமிய சாம்ராஜ்யம் உருவான பின்னர் புழக்கத்தில் வந்த சொல்லாகும். சிந்து நதியை எல்லையாக கொண்டிருந்த முஸ்லிம்கள், நதிக்கு அப்பால் இருந்த பகுதியை ஹிந்துஸ்தானம் என்று அழைத்தனர். ஆகவே, இந்துக்களின் தாயகம் இந்தியா என்று நினைப்பது தவறான எண்ணக் கரு. அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்கள், அந்த மண்ணுக்கு உரிமை கொண்டாடுவதைப் போன்றது தான் இதுவும். 


வைதீக இந்துக்களான பிராமணர்கள், ஆரியர்கள் என்ற இனமாக, இமய மலைப் பகுதிகளில் இருந்து வந்து குடியேறினார்கள். அவர்களின் பூர்வீகம், இன்று சீனாவின் பகுதியாகவுள்ள திபெத்தில் உள்ளது. அதனை அவர்கள் இன்றைக்கும் மறக்கவில்லை. சிவபெருமானும், சிவஸ்திகாவும் அதனை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள். இந்துக்களின் தாயக பூமியை தரிசிக்க வேண்டுமானால், நாம் சீனா செல்ல வேண்டும்.


(தொடரும்)