Showing posts with label இந்திய இராணுவம். Show all posts
Showing posts with label இந்திய இராணுவம். Show all posts

Wednesday, January 01, 2020

இந்தியா இராணுவ சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா?


இந்தியாவில் இராணுவ‌ ச‌ர்வாதிகார‌ ஆட்சி வ‌ரும் என்ப‌தை முப்ப‌டைக‌ளின் த‌ள‌ப‌தி ம‌றைமுக‌மாக‌த் தெரிவிக்கிறார். இல்லாவிட்டால், சொந்த‌ நாட்டு ம‌க்க‌ள், எத‌ற்காக‌ எல்லைக‌ளை பாதுகாக்கும் இராணுவ‌த்தைக் க‌ண்டு அஞ்ச‌ வேண்டும்? இந்திய முத‌லாளிக‌ளின் ந‌ல‌ன்க‌ள் பாதுகாக்கப் ப‌ட‌ வேண்டுமானால், பாஜக அர‌சு இராணுவ‌த்தை ஏவி விட்டு சொந்த‌ ம‌க்க‌ளையே கொல்ல‌த் த‌ய‌ங்காது.

 "இராணுவத்தை கண்டால் மக்கள் அஞ்ச வேண்டும்" என்று பிபின் ராவத் சொன்னது ஏன்? இந்தியாவில் புரட்சி நடந்தால், அதை ஒடுக்கக் காத்திருக்கும் இராணுவத்தைக் கண்டு மக்கள் அஞ்ச வேண்டும்....

இருபது வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு, நான் பெல்ஜிய‌ க‌ம்யூனிஸ்ட் தொழிலாள‌ர் க‌ட்சி ஒழுங்கு ப‌டுத்திய‌ கோடை கால‌ முகாமில் ப‌ங்குப‌ற்றி இருந்தேன். அப்போது எம‌க்கு வ‌குப்பெடுத்த‌ க‌ட்சியின் பிர‌தான‌ உறுப்பின‌ர் ஒருவர் பின்வ‌ரும் த‌க‌வ‌லை தெரிவித்தார்:

//பெல்ஜிய‌த்தில் உள்ள‌ இராணுவ‌ முகாம்கள் பெரும்பாலும் ஏழை உழைக்கும் வ‌ர்க்க‌ ம‌க்க‌ள் நெருக்க‌மாக வாழும் ப‌குதிக‌ளை அண்டியே உள்ள‌ன‌. இது ஒன்றும் த‌ற்செய‌ல் அல்ல‌. நாளை இங்கு ஒரு புரட்சி நடந்தால் அதை ஒடுக்குவதற்கு இராணுவம் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது.

எதிரி நாட்டு ப‌டையெடுப்பை எதிர்நோக்குவ‌தை விட‌, உள்நாட்டில் ஏற்ப‌ட‌ப் போகும் பாட்டாளிவ‌ர்க்க‌ புர‌ட்சியை நசுக்குவ‌தற்கே முதலாளிய வர்க்கத்திற்கு இராணுவ‌ம் முக்கியமாகத் தேவைப்படுகிறது. உள்நாட்டில் புரட்சி நடப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லையென்ற‌ கால‌ங்க‌ளில் தான் எதிரி நாடுக‌ளுட‌ன் யுத்த‌ம் செய்வார்க‌ள்...//

உண்மையில் இந்த‌த் த‌க‌வ‌ல் அன்று என‌க்கு ம‌ட்டும‌ல்லாது, பல பெல்ஜிய‌ தோழ‌ர்க‌ளுக்கும் நம்புவ‌த‌ற்கு க‌ஷ்ட‌மாக‌ இருந்த‌து. எம‌து ச‌ந்தேக‌த்தை நேரடியாகக் கேட்டோம். அத‌ற்கு அவ‌ர் பின்வ‌ரும் ப‌திலைக் கூறினார்:

//உதார‌ண‌த்திற்கு 19 ம் நூற்றாண்டின் இறுதிப் ப‌குதியில் ந‌ட‌ந்த‌ பாரிஸ் கம்யூன் புர‌ட்சியை எடுத்துப் பாருங்க‌ள். அந்த‌ நேர‌த்தில் "ஜென்ம‌ விரோதிக‌ளான‌" பிரெஞ்சு இராணுவ‌மும், ஜேர்ம‌ன் இராணுவ‌மும் விட்டுக்கொடாமல் கடும் போரில் ஈடுப‌ட்டுக் கொண்டிருந்த‌ன‌.

பாரிஸ் க‌ம்யூன் புர‌ட்சி வெடித்த அடுத்த நாளே அதுவரை ஒன்றையொன்று கொன்று குவித்துக் கொண்டிருந்த ஜேர்ம‌ன் இராணுவ‌மும், பிரெஞ்சு இராணுவ‌மும் தமது "ஆயிர‌ம் வ‌ருட‌ கால‌" ப‌கைமையை ம‌ற‌ந்து ஒன்று சேர்ந்து விட்ட‌ன‌.

அன்று "எதிரி" நாட்டுப் ப‌டைக‌ளின் ஒத்துழைப்பு இருந்த‌ ப‌டியால் தான், பிரெஞ்சு இராணுவ‌ம் இல‌குவாக‌ பாரிஸ் புர‌ட்சியை ந‌சுக்க‌ முடிந்த‌து. அது முடிந்த‌ பின்ன‌ர் இர‌ண்டு நாட்டுப் ப‌டைக‌ளும் வ‌ழ‌மை போல‌ மீண்டும் யுத்த‌திற்கு திரும்பிச் சென்று விட்டன.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள‌ வேண்டிய‌ பாட‌ம் ஒன்றுள்ள‌து. இந்த முத‌லாளித்துவ‌ தேச‌ங்க‌ள் ஒன்றையொன்று விழுங்கும் அள‌வு ப‌கைமை பாராட்டினாலும் பாட்டாளிவ‌ர்க்க‌ புர‌ட்சி ந‌ட‌க்கும் போது ஒன்று சேர்ந்து விடுவார்க‌ள்.//

இந்தியாவில் புதிதாக‌ முப்ப‌டைத் த‌லைமைத் த‌ள‌ப‌தியாக‌ ப‌த‌வியேற்றுள்ள‌ பிபின் ராவ‌த் "இராணுவ‌த்தைக் க‌ண்டு ம‌க்க‌ள் அஞ்ச‌ வேண்டும்" என்று சொல்லி இருக்கிறார். இத‌ன் மூல‌ம், எதிரி நாடான‌ பாகிஸ்தானுட‌ன் யுத்த‌ம் செய்வ‌தை விட‌, சொந்த‌ நாட்டில் புர‌ட்சி ஏற்ப‌ட‌ விடாம‌ல் த‌டுப்ப‌து தான் இந்திய‌ இராணுவ‌த்தின் த‌லையாய‌ ப‌ணி என்ப‌தை சொல்லாம‌ல் சொல்லி இருக்கிறார்.


Friday, April 08, 2011

ஈழ அகதிகளுக்கு தஞ்சம் அளித்த சிங்கள அரசு!


[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 12)

சிக்கலான ஈழத்தமிழர் பிரச்சினையின் அடிப்படை தமிழகத்திலும், வெளியிலும் அரிதாகவே புரிந்து கொள்ளப் படுகின்றது. ஈழப்போராட்டத்தின் கொள்கைகள் அதனை முன்னெடுக்கும் அமைப்புகளால் அடிக்கடி மாறுபட்டு வந்துள்ளன. ஒரு காலத்தில் இந்திய இராணுவத் தலையீட்டைக் கோருபவர்கள் தமிழ் தேசிய உணர்வாளர்களாக கருதப் பட்டார்கள். இன்னொரு காலத்தில் அவர்கள் துரோகிகளாக கருதப்பட்டனர். இந்திய இராணுவம் யாழ் நகரைக் கைப்பற்றியவுடன், புலிகளின் ஊடகமான "நிதர்சனம்" தொலைக்காட்சி நிலையத்தின் அண்டெனா கோபுரத்தை குண்டு வைத்து தகர்த்தனர். அதற்கு அவர்கள் விளக்கம் எதுவும் தெரிவிக்கவில்லை. அதே போல, புலிகள் அமைப்பினரால் கைப்பற்றப் பட்டு, ஏறத்தாள உத்தியோகபூர்வ பத்திரிகையான ஈழமுரசும் முடக்கப்பட்டது. அதன் ஆசிரியர் சிறை வைக்கப் பட்டார். போரின் முடிவில் இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்த யாழ்ப்பாணத்தில் "ஈழநாடு" மட்டுமே வெளிவந்து கொண்டிருந்தது.

ஈழநாடு, யாழ்ப்பாணத்தில் இருந்து அச்சிடப்பட்ட முதலாவது பிராந்தியப் பத்திரிகை. அன்றைய யாழ் குடாட்டில், இந்தியத் தினசரியான தினமணி அடுத்த நாளே கடைகளில் கிடைத்தது. பிரபல இந்திய நாளேடுகளான தினத்தந்தி, தினமணி "யாழ் பதிப்பை" வெளியிடாத குறை மட்டுமே எஞ்சியிருந்தது. அத்தகைய சூழ்நிலையில், ஈழநாடும் இந்திய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்து வந்தது. பொதுவாகவே ஆறுமுக நாவலரின் சித்தாந்த வழிவந்த யாழ் மக்கள் இந்தியாவை தமது தாய்நாடாக கருதி வந்தனர். ஈழநாடு ஆசிரிய பீடமும் அத்தகைய மாயையில் இருந்து மீள முடியாமல் இருந்தது. இருப்பினும் அந்த எண்ணமே அவர்களுக்கு எமனாகிப் போனது. ஈழநாடு பத்திரிகை அச்சகத்தை புலிகள் குண்டு வைத்து தகர்த்தார்கள். அதற்கு உரிமை கோரும் துண்டுப் பிரசுரங்கள் யாழ் நகரெங்கும் ஒட்டப் பட்டிருந்தன. "இந்திய செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்த, இந்திய நலன் பேணிய..." காரணங்களுக்காக ஈழநாடு காரியாலயம் தாக்கப் பட்டதாக புலிகள் அறிவித்திருந்தனர்.

யாழ் நகரில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த வாராந்த செய்தி இதழ்களில் "Saturday Review " குறிப்பிடத் தக்கது. தமிழரின் இனப்பிரச்சினையின் பால் பரிவு கொண்ட சிங்கள இடதுசாரிகள் யாழ் நகரில் இருந்து வெளியிட்டுக் கொண்டிருந்தனர். இந்திய இராணுவத்துடனான போரை அவர்கள் ஆதரித்தனர். "ஈழம் இந்தியாவின் வியட்நாமாக மாறும்" என்பன போன்ற ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வந்தனர். இதனால் அடிக்கடி இந்திய இராணுவத்தின் தொல்லைகளுக்கு முகம் கொடுத்தனர். "திசை" என்ற தமிழ் வாராந்த பத்திரிகை கொழும்பில் இருந்து பிரசுரமானது.

முதன் முதலாக எனது கவிதை ஒன்றை, திசை வெளியிட்டிருந்தது. அந்தக் கவிதையில் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின் கீழான அவலங்களை பதிவு செய்திருந்தேன். மேற்குறிப்பிட்ட இடதுசாரி ஊடகங்கள், புலிகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போரில் ஈடுபட்டிருப்பதாக நம்பின. புலிகளும் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை மக்கள் மனதில் வளர்ப்பதை குறிக்கோளாக கொண்டிருந்தனர். போரின் பின்னர் மீள உயிர்த்தெழுந்த சாவகச்சேரி நகர சந்தையில், காந்தித் தாத்தா A .K .47 துப்பாக்கியுடன் காணப்படும் "கட் அவுட்" ஒன்று வைக்கப் பட்டிருந்தது. இந்திய படையினர், அதைக் காணாதது போல நடந்து கொண்டனர். புலிகளின் ஆட்சி நடந்த காலத்தில் கட்டப்பட்ட சிலைகளை, போராளிகளின் 'கட் அவுட்' களை உடைப்பதிலேயே அவர்கள் அதிக ஆர்வம் காட்டினர்.

யாழ் நகரில் இந்திய இராணுவத்துடன் யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில், யாழ் பல்கலைக் கழகத்திற்கு அருகில் பிரபாகரன் மறைந்திருந்ததாக இந்திய இராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. ஒரு நாளிரவு, பாரசூட் படையினர் பலகலைக்கழக வளாகத்தை நோக்கி தரையிறக்கப் பட்டனர். இதனை எதிர்பார்த்துக் காத்திருந்த புலிகள், பரசூட் இறங்கும் பொழுது சுட்டனர். இறக்கப்பட்ட அத்தனை படையினரும் கொல்லப் பட்டனர். இந்திய இராணுவத் தலைமையின் அவமானகரமான தோல்வியாக அந்தச் சம்பவம் கருதப் படுகின்றது. அங்கிருந்து தப்பிய பிரபாகரன், வன்னிக்கு செல்லும் வழியில் தென்மராட்சிப் பகுதியில் மறைந்திருந்தார். அப்போது ஆதரவாளர்களைக் கூப்பிட்டு எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராய்ந்துள்ளார்.

இந்திய இராணுவத்துடனான போருக்கு பெரும்பான்மை தமிழ் மக்கள் ஆதரவளிக்கவில்லை என்ற உண்மையை புலிகள் உணர்ந்திருந்தனர். இந்திய இராணுவ ஒடுக்குமுறை ஆட்சி நீடித்தால், மக்கள் புலிகளை ஆதரிப்பார்கள் என்று எடை போட்டனர். எனது உறவினர்கள் சிலரும் புலிகளின் ஆதரவாளர்களாக இருந்ததால், ஒரு பொறுப்பாளரை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. போரின் போக்குக் குறித்து அவரின் கருத்துகளை கேட்ட எமக்கு அதிர்ச்சியாகவிருந்தது. ஈழப்போராட்டம் தொடங்கிய நாள் முதல், இந்தியா இராணுவப் பயிற்சியும், ஆயுதங்களும் வழங்கியிருந்தது. அது மட்டுமல்ல, இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. மன்றம் வரையில் பேசக் கூடிய நட்பு நாடாகவே இந்தியாவை கருதி வந்தோம்.

அத்தகைய இந்தியாவை பகைப்பதால், ஈழத்தமிழருக்கு நன்மை ஏற்படுமா? என்பதே பலரின் கேள்வியாகவிருந்தது. "போர் தொடர்ந்தால் இந்தியாவின் எதிரியான பாகிஸ்தானுடன் நட்புறவை ஏற்படுத்துவோம். முன்னாள் எதிரியான சிறிலங்கா இராணுவத்துடனும் கூட்டுச் சேருவோம். எமக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும், அந்நிய இராணுவத்தை வெளியேற்றுவதில் ஒன்று பட்டு செயற்படுவோம்." என்று அந்தப் பொறுப்பாளர் கூறினார். பல வருடங்களுக்குப் பின்னர், தமிழகத்தில் சந்தித்த இடதுசாரி பதிப்பாசிரியர் ஒருவரும் அத்தகைய கருத்துகளை உதிர்த்தார். நக்சல்பாரி பாரம்பரியத்தில் வந்த அந்தப் பதிப்பாசிரியர், "உதாரணத்திற்கு, இந்தியா மீது அமெரிக்கா படையெடுத்தால், நாம் (இந்து பாசிச)ஆர்.எஸ்.எஸ். உடனும் கூட்டுச் சேர்ந்து எதிர்ப்போம்." என்றார்.

இந்திய இராணுவத்துடனான போரானது, ஈழப்போராட்ட வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது. அது வரை காலமும் இந்தியாவை தளமாக வைத்திருந்த தேவை அற்றுப் போனது. மேற்கத்திய நாடுகளை தளமாகப் பயன்படுத்தினார்கள். சோவியத்-ஆப்கான் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், பாகிஸ்தானில் ஆயுதங்கள் கறுப்புச் சந்தையில் விற்கப் பட்டன. பாகிஸ்தானில் அமெரிக்க ஆயுதங்களை வாங்கி, கப்பல் மூலம் கடத்தும் திட்டம் அதற்கு முன்னரே ஆரம்பிக்கப் பட்டிருக்கலாம். இதற்கிடையே இந்திய எதிர்ப்பாளரான பிரேமதாசா, இலங்கையின் ஜனாதிபதியானார். இந்திய படைகளை வெளியேற்றுவதை இலட்சியமாக கொண்டிருந்த பிரேமதாசா, புலிகளுக்கு ஆயுதங்களை வழங்க முன்வந்தார். வவுனியாவில் சிறிலங்கா இராணுவம் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை மிக இரகசியமாக வைக்கப் பட்டிருந்தாலும், புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான நெருக்கம் அதிகரித்தது.

பிரேமதாசா, அரசியலில் தன்னை ஒரு சிங்கள கடும்போக்கு இனவாதியாக காட்டிக் கொண்டவர். அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் எதிரிகளையும், நண்பர்களையும் வியக்க வைத்தார். பிரேமதாசாவின் நம்பிக்கைக்குரிய அந்தரங்க ஆலோசகர் ஒரு தமிழர். பிரேமதாச அரசுடன், புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் கொழும்பில் பேச்சுவார்த்தை நடாத்தினார்கள். முக்கிய அரசியல் தலைவர்களான யோகி, தினேஷ்(தமிழ்ச்செல்வன்),ஆகியோர் கொழும்பு நகரில் தங்கியிருந்தனர். அரச செலவில் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்க வைத்ததை, எதிர்க்கட்சி அடிக்கடி சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தது. இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட எதிர்பாராத நட்புறவு பல பரிமாணங்களைக் கொண்டிருந்தது.

"வட-கிழக்கு மாகாணங்களில் இந்தியப் படைகளின் அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், கொழும்பில் அரசியல் தஞ்சம் கோரலாம்," என்று அரசே அறிவித்தது! அவ்வாறு வரும் அரசியல் அகதிகளுக்கு அடைக்கலம் வழங்குவதற்காக, "சரஸ்வதி மண்டபம்" அகதி முகாமாக மாற்றியமைக்கப் பட்டது!! கொழும்பு, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் அருகில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில், புலிகளும், அவர்களது குடும்பத்தினரும் அகதிகளாக பதிந்து கொண்டனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை சிறிலங்கா அரசு செய்து கொடுத்தது.

யாழ் குடாநாட்டில் பெரியளவு தாக்குதல்கள் நடக்கா விட்டாலும், புலிகள் குறைந்த பட்சம் இயல்பு வாழ்வை சீர்குலைக்க விரும்பினார்கள். இராணுவக் காவலரன்களுக்கு கிரனேட் வீசி விட்டுப் போவது அடிக்கடி நடந்து கொண்டிருந்தது. புலிகள் அமைப்பின் தலைவர்கள் வன்னிக் காட்டுக்குள் மறைந்திருந்ததால், இந்திய இராணுவமும் காடுகளுக்குள் போர் நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. இதனால் வியட்நாமில் நடந்ததைப் போன்ற கெரில்லா யுத்தத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டது. மரங்களில் வெடி குண்டு பொருத்தி வைப்பது போன்ற, கெரில்லா போர்த் தந்திரங்களால் இந்தியப் படையினர் நிலை குலைந்து போயினர்.

இதே நேரம், தமிழகத்தில் புலிகளின் போராட்டத்தை சித்தரிக்கும் பிரச்சார ஒலிப்பேழை ஒன்று தயாரிக்கப் பட்டது. எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுசீலா போன்ற பிரபல பின்னணிப் பாடகர்களின் குரலில், மெல்லிசையில் இசையமைக்கப்பட்ட பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகின. யாழ்ப்பாணத்தில் மக்கள் இரகசியமாக கேட்டு மகிழ்ந்தனர். புலிகளை ஆதரிக்காதவர்களையும் அந்தப் பாடல்கள் முணுமுணுக்க வைத்தன. நான் கொழும்பில் நின்ற காலத்தில், வெள்ளவத்தையில் இருந்த தமிழ் தேநீர்க் கடைகள் எங்கும் அந்தப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவத்தால் தடை செய்யப்பட்ட ஒலிப்பேழை, கொழும்பில் கடைகளில் பகிரங்கமாக விற்பனையானது.

"புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான தேனிலவு" தென்னிலங்கை பத்திரிகைகள் குறிப்பிட்டு எழுதின. அரச தொலைக்காட்சியும், வானொலியும் புலிகளை விடுதலைப் போராளிகள் என்று அழைத்தன. அதிகம் பேசுவானேன்? ஜனாதிபதி கூட அப்படித் தான் அழைத்தார். அரசியலில் நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை, நலன்கள் மட்டுமே நிரந்தரம். அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படையை புரிந்து கொள்ளாத மக்கள் தான், ஒருவர் மற்றவரை எதிரியாகப் பார்க்கின்றனர்.

அன்று யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் ஒரு பயணி, வவுனியா வரை பல சோதனைச் சாவடிகளை கடந்து வர வேண்டும். இந்திய இராணுவம் சந்தேகப்படும் நபரை தடுத்து வைத்தது. வவுனியாவில் இருந்து, கொழும்பு வரையில் சிங்கள இராணுவத்தின் சோதனைச் சாவடிகள் காணப்பட்டன. இப்போது கேட்டால் நம்ப முடியாமல் இருக்கும். அடையாள அட்டையில் யாழ்ப்பாணம் என்றிருந்தால், சிங்களப் படையினர் எந்த சோதனையுமின்றி போக விட்டனர். ஜே.வி.பி.யினரின் போராட்டம் நடந்து கொண்டிருந்ததால், சிங்களவர்களை மட்டும் தனியாக பிரித்து சோதனை செய்தார்கள். "அரசு என்ற ஸ்தாபனத்தின் அதிகார நலன்களே இனப்பிரச்சினைக்கும் மூல காரணம்." இது பல தடவை மீண்டும் மீண்டும் நிரூபிக்கப் பட்டுள்ளது.

(தொடரும்...)

தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
11.யாழ் குடாநாடெங்கும் ஆயுதப் புதையல்கள்
10.ஈழத் தமிழருக்கு இந்தியர்களும் அடக்குமுறையாளர்கள்
9.அந்நிய இராணுவத்தின் முற்றுகைக்குள் யாழ் குடாநாடு
8.ஆக்கிரமிப்புப் படையாக மாறிய அமைதிப் படை
7.ஆயுதக் குழுக்களுடன் அமைதி காத்த இந்திய இராணுவம்
6.இந்தியத் தலையீடுகளும், ஜேவிபி யின் ஐயப்பாடுகளும்
5.யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய இந்தியப் படைகள்
4.சென்னையில் அடைக்கலமான அகதிகளும், போராளிகளும்
3.தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை
2.ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா
1.இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்

Wednesday, April 06, 2011

ஈழத் தமிழருக்கு இந்தியர்களும் அடக்குமுறையாளர்கள்


[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 10)

இந்திய இராணுவம், சிங்கள இராணுவம் போன்று கடுமையாக நடந்து கொள்ளாது என்று தான் பெரும்பான்மை ஈழத் தமிழர்கள் நம்பினார்கள். இந்தியா தமிழரின் தாய்நாடு என்று நம்பும் ஒரு பிரிவினர் இன்றும் உள்ளனர். ஆனால் போர் தொடங்கியவுடன் அத்தகைய கற்பனைகள் எல்லாம் தூள் தூளாக நொறுங்கிப் போயின. சிறிலங்கா இராணுவம் கைது செய்யும் சந்தேக நபர்களை எவ்வாறு சித்திரவதை செய்ததோ, அதற்கு சிறிதும் குறையாமல் இந்திய இராணுவம் நடந்து கொண்டது. ஆனால் ஒரேயொரு வித்தியாசம் இருந்தது. கைது செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள் என்று தெரிந்தாலும், அவர்கள் தமிழர்கள் என்ற காரணத்தால் சிங்கள படையினர் வதைத்தனர். நிரந்தர சிறைச்சாலைக்கு மாற்றி விடும் வரையில் சித்திரவதை செய்வார்கள். இந்திய இராணுவத்திற்கு புலி உறுப்பினர்கள் மீது மட்டுமே வெறுப்பிருந்தது. மற்றவர்கள் மீதான சந்தேகம் தீர்ந்து விட்டால் விடுதலை செய்தார்கள்.

ஒரு முறை முல்லைத்தீவு நகரில் ஈரோஸ் உறுப்பினர்களை, புலிச் சந்தேகநபர்களாக கருதி கைது செய்தார்கள். உறவினர்கள் என்ன சொல்லியும் விடாததால், ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் நேரடியாக சென்று பேச வேண்டியிருந்தது. எதிர்பாராதாவிதமாக அங்கு நடந்த "பேச்சுவார்த்தையில்" நானும் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. பாலகுமாரை இரண்டாம் முறை சந்திக்கும் சந்தர்ப்பம் அது. ஏற்கனவே யாழ்ப்பாணம் கொக்குவிலில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒழுங்கு செய்த கலந்துரையாடலில் சந்தித்திருக்கிறேன். இரு வருடங்களின் பின்னர், முல்லைத்தீவில் என்னை அடையாளம் கண்ட பாலகுமாரின் நினைவாற்றல் வியக்க வைத்தது. முல்லைத்தீவு இராணுவ முகாமில், பாலகுமாரின் தலையீட்டின் பின்னர் கைது செய்யப்பட்ட ஈரோஸ் உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்தியப் படையினர் நிலை கொடிருந்த காலம் முழுவதும் ஈரோஸ் அமைப்பு போர்நிறுத்த விதிகளை மீறாததால் அவர்களை யாரும் சீண்டவில்லை. மோதலில் ஈடுபட்ட அனைத்து தரப்பினருடனும் நல்லுறவைப் பேணி வந்ததால் மக்களின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார்கள்.

துரதிர்ஷ்டவசமாக எல்லோருக்கும் அத்தகைய மேலிடத்து செல்வாக்கு கிடைப்பதில்லை. இந்தியப் படையினர் என்னை இரண்டு தடவைகள் என்னைக் கைது செய்து கொண்டு சென்ற பொழுது யாரும் மீட்க வரவில்லை. முதலாவது தடவை வழமையான வீதிச் சோதனையில் தடுத்து நிறுத்தப் பட்டேன். வழக்கம் போல மன்மூட்டைகளுக்கு பின்னால் பாதுகாப்பு அரணுக்குள் மறைந்திருந்த "தலையாட்டி" காட்டிக் கொடுத்ததால் பிடிபட்டேன். முன்னாள் புலி உறுப்பினரான அந்த நபர், என்னை தன்னுடைய முகாமில் இருந்ததாக பொய் கூறியிருந்தார். ஒவ்வொரு சோதனை நடவடிக்கையின் போதும், யாராவது ஒருவரைக் காட்டிக் கொடுக்க வேண்டுமென தலையாட்டிகளுக்கு நிர்ப்பந்தம் இருந்தது. அதனால் சில நேரம் வேண்டுமென்றே கண்ணில் படும் அப்பாவிகளை எல்லாம் பிடித்துக் கொடுத்தார்கள். அவ்வாறு குறைந்தது ஒருவரையாவது காட்டிக் கொடுக்கா விட்டால், அடிவிழும் என்று பின்னர் கேள்விப் பட்டேன்.

அன்று நடந்த சோதனையில், "ஒரு புலியை" பிடித்து விட்ட சந்தோஷத்தில் படையினர் என்னை முகாமுக்கு கொண்டு சென்றார்கள். அங்கிருந்த மேலதிகாரி விசாரணைகளை நடத்தினார். புலிகள் அமைப்பில் எனது பொறுப்பென்ன? எந்த முகாமில் இருந்தேன்? என்றெல்லாம் விசாரித்தார்கள். புலிகள் அமைப்பிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று சொன்னதை நம்ப மறுத்தார்கள். அவர்களைப் பொறுத்த வரையில், தலையாட்டி காட்டிக் கொடுத்தால் அது புலி தான். விசாரணை செய்த அதிகாரி புலிகள் அமைப்பினர் குறித்த விபரங்களை விரல் நுனியில் வைத்திருந்தார். அதனால், புலிகளைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்று சாதிக்க முடியாது. அனைத்து மக்களுக்கும் பகிரங்கமாக தெரிந்த விஷயங்களை தெரியாது என்று சொன்னால், வேண்டுமென்றே மறைப்பதாக சந்தேகப் பட்டார்கள். தம்மிடம் இருந்த புலி உறுப்பினர்களின் புகைப்படங்களை கொண்டு வந்து காட்டினார்கள்.

இந்தியப் படையுடன் யுத்தம் தொடங்குவதற்கு முன்னர் கொல்லப்பட்ட சில தலைவர்களும், வேறு சில இனந் தெரியாத உறுப்பினர்களும் அந்தப் புகைப் படங்களில் இருந்தனர். அவற்றைக் காட்டி, யார் யாரை எனக்குத் தெரியும் என்று கேட்டார்கள். "சில மரணமடைந்த தலைவர்களை தெரியும்," என்றேன். "எப்படித் தெரியும்?" என்று கேட்டார்கள். "அவர்களின் படங்கள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன, போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தார்கள்," என்று பதில் கூறினேன். எனது பதில் அப்பாவித்தனமாக தெரிந்திருக்க வேண்டும். உயிருடன் இருக்கும் போராளிகளில் யாரைத் தெரியும் என்று கேட்டார்கள். உண்மையிலேயே அவர்கள் யாரையும் எனக்குத் தெரியாது. விசாரணை செய்த அதிகாரி என்னை நம்பினாரா, நம்பவில்லையா என்று தெரியவில்லை. என்னைக் கொண்டு சென்று அடைத்து வைக்குமாறு சொல்லி விட்டு சென்று விட்டார்.

நல்லூர் நகரத்திற்கு அண்மையில் இருந்த பிரபல பாடசாலையில் ஒரு பகுதியை இந்திய இராணுவத்தினர் முகாமாக பயன்படுத்தினார்கள். மேலே வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. கீழே படிகளுக்கு பின்னால் இருக்கும் அறை ஒன்றில் எங்களை அடைத்து வைத்திருந்தார்கள். என்னோடு ஐந்து, ஆறு கைதிகள் அந்த குட்டிச் சிறைக்குள் அடைக்கப் பட்டிருந்தனர். உணவோ, குடிநீரோ எதுவும் தரப்படவில்லை. கைதிகளைப் பார்க்க வருபவர்கள் கொண்டு வந்து கொடுப்பதை பகிர்ந்துண்ண வேண்டியிருந்தது. இருந்திருந்து அந்தப் பக்கம் வரும் சிப்பாய்கள் பீடி மட்டும் தருவார்கள். பாடசாலை மாணவர்களும் பார்க்கக் கூடிய இடத்தில் தான் சிறை வைக்கப் பட்டிருந்தோம். அவர்கள் எங்களை ஏதோ மிருகக்காட்சிசாலையில் வைக்கப் பட்ட மிருகங்களைப் போல பார்த்து விட்டு நகர்ந்தார்கள். அன்றிரவு ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. இராணுவத்தினர் வீதி ரோந்து சென்ற சமயம், மூக்கு முட்டக் குடித்து விட்டு விழுந்து கிடந்த ஒருவரைக் கொண்டு வந்து எங்கள் சிறையில் போட்டார்கள். இரவு ஊரடங்கு சட்டம் என்பதால், அங்கே படுத்து விட்டு விடிய எழுந்து போகலாம் என்று கூறியிருக்கிறார்கள். இதற்கிடையே என்னைக் காட்டிக் கொடுத்த தலையாட்டியை இராணுவத்தினர் நம்பவில்லை என்று கேள்விப்பட்டேன். எனது நல்ல காலம், அந்தப் பாடசாலையின் அதிபர் எனது உறவினர் என்பதால், அடுத்த நாளே விடுதலை செய்தார்கள்.

அதிர்ஷ்டக் காற்று எப்போதும் எம்பக்கம் வீசுவதில்லை. சந்தர்ப்பம், சூழ்நிலை எமக்கு பாதகமாக அமைந்தால், ஆண்டவனே வந்து சாட்சி சொன்னாலும் காப்பாற்ற முடியாது. எனது வீட்டுக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்று, திடீரென படையினரால் சுற்றி வளைக்கப் பட்டது. குறிப்பாக ஓரிடத்தில் வந்து சந்திக்கும் மூன்று பாதைகளில் மறைந்திருந்தார்கள். அந்தப் பாதையில், அந்த நேரத்தில் சென்ற இளம் வயதினர் அனைவரையும் தடுத்து நிறுத்தினார்கள். எனது கஷ்ட காலம், நான் தான் முதலில் அகப்பட்டேன். என்னை விசாரித்து, சோதனை போட்டும் எந்த தடயமும் கிடைக்கா விட்டாலும் தடுத்து வைத்திருந்தார்கள். அயல் கிராமங்களில் நிதி சேகரிக்கும் புலி உறுப்பினர்கள் அந்தப் பாதையைப் பயன்படுத்துவது வழக்கம் என்று யாரோ தகவல் கொடுத்திருந்தனர். பத்து நிமிடங்களுக்குப் பின்னர், இரண்டு சைக்கிள்களில் மூன்று புலி உறுப்பினர்கள் அந்த வழியால் வந்தார்கள். முன்னாள் வந்தவனைக் கண்டதும் அதிர்ச்சியாகவிருந்தது. பாடசாலையில் ஒரே வகுப்பில் படித்த மாணவன். அவன் புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருப்பது அப்போது தான் தெரியும். பின்னால் வந்த இரண்டு பெரும் அயல் கிராமத்தை சேர்ந்த விடலைப் பையன்கள். அவர்களை சோதனையிட்ட படையினர் மடியில் இருந்து கிரனேட்டை கண்டெடுத்தார்கள். உடனே "எல்.டி.டி.ஈ.... எல்.டி.டி.ஈ...." என்று கத்தினார்கள்.

ஒரு நிமிடத்திற்குள் அங்கே என்னென்னவோ எல்லாம் நடந்தன. சற்று தூரம் முன்னோக்கி சென்றிருந்த, எனது பள்ளித் தோழன் சயனைட் குப்பியை கடித்து விட்டான். அவனது உயிரற்ற உடல் சரிந்து விழுவதை கண் முன்னால் கண்டேன். அவன் தான் இயக்கத்தின் மூத்த உறுப்பினன். அதனால் முக்கியமான ஆவணங்கள் எல்லாம் வைத்திருந்தான். ஆரம்பத்தில் படையினருக்கு அவன் மேல் சந்தேகம் எழவில்லை. சயனைட் உட்கொண்ட பிறகு தான் அவனும் புலி என்பது படையினருக்கு உறுதியானது. இப்போது படையினரின் ஆத்திரம் என் பக்கம் திரும்பியது. ஒருவன் தனது துப்பாக்கியை சுழற்றி தலையில் பலமாகத் தாக்கினான். நான் மூர்ச்சையாகி விழுந்தேன். பலர் சுற்றி வர நின்று உதைத்தார்கள். கைகளை முதுகுக்குப் பின்னால் வளைத்துக் கட்டினார்கள். ஒரு டிரக் வண்டியில் தூக்கிப் போட்டார்கள். கிரேனேட்டுடன் அகப்பட்ட புலி உறுப்பினர்களையும் அதே டிரக் வண்டியில் கொண்டு வந்து போட்டார்கள். "இவனும் உங்கள் இயக்க உறுப்பினனா?" என்று என்னைக் காட்டிக் கேட்டார்கள். அவர்கள் இதற்கு முன்னர் என்னைப் பார்த்ததே இல்லை என்று தலையாட்டினார்கள். சிறிது நேரத்தில் சயனைட் உட்கொண்டு இறந்த பள்ளித் தோழனின் உயிரற்ற உடலை எனக்கு மேலே தூக்கிப் போட்டார்கள். எம்மை ஏற்றிக் கொண்டு அந்த டிரக் வண்டி இராணுவ முகாமை நோக்கிப் புறப்பட்டது.

(தொடரும்...)

தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
9.அந்நிய இராணுவத்தின் முற்றுகைக்குள் யாழ் குடாநாடு
8.ஆக்கிரமிப்புப் படையாக மாறிய அமைதிப் படை
7.ஆயுதக் குழுக்களுடன் அமைதி காத்த இந்திய இராணுவம்
6.இந்தியத் தலையீடுகளும், ஜேவிபி யின் ஐயப்பாடுகளும்
5.யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய இந்தியப் படைகள்
4.சென்னையில் அடைக்கலமான அகதிகளும், போராளிகளும்
3.தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை
2.ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா
1.இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்

Monday, April 04, 2011

அந்நிய இராணுவத்தின் முற்றுகைக்குள் யாழ் குடாநாடு


[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 9)

யுத்தப் பிரதேசம் முழுவதும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு பகுதியில் கடுமையான சண்டை நடக்கும் அதே நேரம், இன்னொரு பகுதி அமைதியாகக் காட்சியளிக்கும். ஒரு பக்கம் மக்கள் செத்துக் கொண்டிருப்பார்கள். மற்ற பகுதிகளில் மக்கள் சிறிது பதற்றத்துடன் இயல்பு வாழ்க்கையில் ஈடுபடுவார்கள். யாழ் குடாநாட்டின் மேற்குப் பகுதியில், இந்திய இராணுவத்துடன் கடுமையான யுத்தம் நடந்து கொண்டிருந்தது. கிழக்குப் பகுதியில் ஒரு துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கூட கேட்கவில்லை. மக்கள் தமது வழமையான கடமைகளில் ஈடுபட்டிருந்தனர். ஆயினும் அது ஒன்றும் சாதாரண இயல்பு வாழ்க்கை அல்ல. அமைதி காக்க வந்த இந்தியப்படை பொருளாதாரத் தடை விதித்து தமிழ் மக்களை நசுக்கியது. கொழும்பில் இருந்து வந்த விநியோகம் தடைப்பட்டதால், உள்ளூரில் இருந்த பாவனைப் பொருட்கள் தீர்ந்து கொண்டிருந்தன. வியாபாரிகள் மட்டுமல்ல, அரசு நடத்தும் கூட்டுறவு சங்கக் கடைகளையும் இழுத்து மூடி விட்டார்கள். எமது ஊர் மக்கள் வேறு வழியின்றி, சங்கக் கடையை உடைத்து திறந்து, அங்கிருந்த பாவனைப் பொருட்களை தமக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள்.

சாவகச்சேரி நகர சந்தை வழமை போல கூடியது. உள்ளூரில் விளையும் காய்கறியின் விலை சரிந்து கொண்டிருந்தது. வழக்கமான வியாபாரிகளை விட புதிதாக சிலர் வந்திருந்தனர். வசதியற்றவர்கள் சந்தையில் எதையாவது விற்று பணம் புரட்டலாம் என நினைத்தார்கள். வாங்கும் திறன் படைத்த மத்திய தர வர்க்கத்தினரின் சேமிப்புப் பணமும் கரைந்து கொண்டிருந்தது. இதற்கிடையே, யுத்தம் நடைபெறும், யாழ் நகர், வலிகாமம் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கும் உணவு கொடுக்க வேண்டிய தேவையிருந்தது. அன்று ஒவ்வொரு வீடும் குட்டி அகதி முகாமாக மாறியிருந்தது. பொதுவாகவே சனத்தொகை அடர்த்தி குறைந்த, நிலப்பரப்பால் விரிந்த தென்மராட்சிப் பிரதேசம், இடம்பெயர்ந்த அகதிகளை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டவில்லை. தென்மராட்சி பிரதேசம், காடுகளும், சோலைகளும், தென்னந் தோப்புகளும் கொண்டது. நகரமயமாக்கலில் வளர்ச்சி அடைந்த, யாழ் நகர், வலிகாமம் பகுதிகளை சேர்ந்த மக்கள், தென்மராட்சியை "குழைக் காடு" என்று தாழ்வாகக் குறிப்பிட்டு பேசுவது வழக்கம். அத்தகைய நகர மாந்தர், தற்போது குழைக் காட்டில் அடைக்கலம் கோர நேரிட்டதை எண்ணி, தென்மராட்சி மக்கள் பெருமிதம் கொண்டனர்.

சாவகச்சேரி நகரில் போர் வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. ஆயுதமேந்திய புலி உறுப்பினர்களும் மிகக் குறைவாகவே நடமாடினார்கள். சாவகச்சேரி நகர சந்தை கூடிய பகற்பொழுதில், திடீரென ஆகாயத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தோன்றியது. நகரை சுற்றி வட்டமிட்டு விட்டு, சந்தையை நோக்கி சிறிய ரக எறிகணைகளை வீசியது. எறிகணைகள் ஹெலியின் இரண்டு பக்கமும் உள்ள இறகுகளில் பொருத்தப் பட்டிருந்தன. ரஷ்யத் தயாரிப்பான MI -24 சுடும் பொழுது, அது நெருப்பைக் கக்குவது போலிருந்தது. அதைக் கண்டதும், சிறுவர் கதைப் புத்தகத்தில் படித்த நெருப்பைக் கக்கும் டிராகன் நினைவுக்கு வந்தது. இதற்கு முன்னர், தொலைக்காட்சியில் ஆப்கானிஸ்தானில் நடந்த போரைக் காட்டும் படங்களில் அந்தக் ஹெலிகாப்டர் வரும். அப்போது தான் கண்ணெதிரே பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. சாமானியரின் நாவில் அது "முதலைக் ஹெலி" என்று அழைக்கப் பட்டது. நான் கண்ட காட்சியை, ரம்போ சினிமா போன்று இரசிக்க முடியவில்லை. ஹெலிகாப்டர் தாக்குதலில் சந்தையில் இருந்த பத்துக்கும் குறையாத பொது மக்கள் கொல்லப்பட்டனர். சந்தை வளாகத்தில் மரண ஓலம் கேட்டது. மக்கள் அன்றைய கருமங்களை அப்படியே போட்டு விட்டு வீடுகளுக்குள் சென்று மறைந்து கொண்டனர். சாவகச்சேரி நகரம், ஒரு சில மணிநேரத்தில் வெறிச்சோடியது. அன்றிரவே நாவற்குழி முகாமில் இருந்து புறப்பட்ட இராணுவம், சாவகச்சேரி நகர மத்தியில் இருந்த பாடசாலைகளில் முகாமிட்டது. அடுத்து வந்த சில நாட்களுக்கு மக்களுக்கு தடை செய்யப்பட்ட பிரதேசமாகியது.

நாவற்குழி முகாமிலிருந்து, ஆனையிறவு முகாம் வரையிலான கண்டி வீதி இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டது. தற்போது கிராமப் பகுதிகளில் மட்டும் புலி உறுப்பினர்கள் நடமாடினார்கள். அவர்களைக் கேட்டால், "இந்தியப் படையினர் கண்டி வீதியை பயன்படுத்துவதற்கு தாம் அனுமதி வழங்கியுள்ளதாக," கூறினார்கள். அடுத்து வந்த சில நாட்களில், இந்தியப் படையினர் கிராமங்களுக்குள் ஊடுருவினார்கள். இந்தியப் படைகள் வருவதைக் கண்காணிப்பதற்கென்று, ஒவ்வொரு சந்தியிலும் இவ்விரண்டு புலி உறுப்பினர்கள் காவலுக்கு நின்றனர். ஒரு சந்திக்கருகில் பட்டப் பகலில் இராணுவம் ஜீப் வண்டியில் வந்ததைக் புலிகள் கிரனேட் அடித்து விட்டு தப்பியோடினார்கள். இன்னொரு சந்தியில் கும்மிருட்டில் சத்தமின்றி வந்த படையினர், காவலுக்கு நின்ற புலிகளை பிடித்து விட்டார்கள். சில வாரங்களில், சந்தியில் தற்காலிக முகாம் அமைத்திருந்த இராணுவம் பின் வாங்கிய பிறகு, அவர்களின் உயிரற்ற உடல்கள் கண்டெடுக்கப் பட்டன.

இந்திய இராணுவத்துடன் போர் தொடங்கி ஒரு மாதம் கழிந்த பின்னர், யாழ் குடா நாடு முழுவதும் இராணுவமயமாக காட்சியளித்தது. இரண்டு கிலோ மீட்டருக்கு ஒரு இராணுவ முகாம் காணப்பட்டது. இராணுவம் நிலை கொண்டிராத சந்தியைக் கடந்து செல்வது கஷ்டம். ஒவ்வொரு முகாமிலும், போவோர் வருவோரை நிறுத்தி அடையாள அட்டை பார்த்து தான் விட்டார்கள். "கொல்லைப் புற வழியாக நமது நாட்டினுள் புகுந்த அந்நிய இராணுவம், எம்மிடம் அடையாள அட்டை கேட்கின்றது..." என்று மக்கள் மனதுக்குள் புழுங்கினார்கள்.

பெரும்பாலான முகாம்களில், ஏற்கனவே பிடிபட்ட புலி உறுப்பினர் "தலையாட்டியாக" நிறுத்தி வைக்கப்பட்டார். தனக்கு தெரிந்த புலி உறுப்பினர்களை தலையாட்டி காட்டிக் கொடுக்க வேண்டும். இதனால் நிராயுதபாணிகளான முன்னாள், இந்நாள் புலி உறுப்பினர்கள் மட்டுமல்லாது, சில அப்பாவிகளும் தடுத்து நிறுத்தி கைது செய்யப் பட்டனர். யாழ் குடா நாடு முழுவதும், இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த போதிலும், புலிகளும் மறைந்திருந்தனர். அவர்கள் அடிக்கடி தமது மறைவிடங்களை மாற்றிக் கொண்டிருந்தனர். ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு செல்கையில் இராணுவ முகாம்களை தவிர்க்க வேண்டியிருந்தது. குறுக்கு வழிகளை, ஒழுங்கைகளை பாவித்து கடந்து சென்றனர். இருந்த போதிலும், எதிர்பாராத விதமாக சந்திக்கும் இந்தியப் படைகளுடன் மோதல்கள் ஏற்படுவதுண்டு.

யாழ் குடாநாட்டிற்குள் பதுங்கியிருந்த புலி உறுப்பினர்கள், பொது மக்களின் ஆதரவில் தங்கியிருக்க வேண்டியிருந்தது. பெரும்பாலான பொது மக்கள், "எங்கட பெடியள்" என்ற எண்ணத்தில் அனுதாபம் காட்டினார்கள். எந்தப் பாதையில், எந்த திசையில் இராணுவம் போகின்றது, என்பன போன்ற தகவல்களை வழங்கினார்கள். பொதுவாக ஊர் விட்டு ஊர் இடம்பெயரும் புலிகள், சிறுவர்களை முதலில் அனுப்பி உளவு பார்த்து விட்டு வரச் சொல்வார்கள். "பாதையில் தடங்கல் இல்லை" என்ற சமிக்ஞை கிடைத்ததும் புறப்படுவார்கள். மக்கள் அனைவரும் புலிகளுக்கு ஆதரவளித்தார்கள் என்று கூற முடியாது. ஒரு சிலர், புலிகளின் நடமாட்டம் குறித்து இந்திய இராணுவத்திற்கு தகவல்களை வழங்கினார்கள். சில நாட்களில் மோப்பம் பிடித்து விடும் புலிகள், காட்டிக் கொடுத்தவரை தெருவோரமாக சுட்டுப் போட்டு விட்டுப் போவார்கள். அவ்வாறு சுட்டுக் கொல்லப் பட்டவர்களில், காட்டிக் கொடுத்ததாக நிரூபிக்கப் படாதவர்களும் இருந்தனர். அவர்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களான உணவுக்கு வழியற்ற ஏழைகள். போரினால் ஏற்பட்ட பொருளாதார தடையினால் அதிகமாக பாதிக்கப் பட்டவர்கள். இந்திய இராணுவ முகாமில் இலவசமாக கொடுத்த அரிசியை வாங்கிக் கொண்டு வந்த காரணத்திற்காக கொலை செய்யப் பட்டனர்.

யாழ் குடாநாட்டை கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததும், இந்தியப் படையினர் ஊர் ஊராக சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். குறிப்பிட்ட ஒரு நாளில் திடீரென ஒரு ஊரை சுற்றி வளைப்பார்கள். அந்த ஊரில் வீடு வீடாக சென்று, ஆண்கள் எல்லோரையும் அழைத்து வந்து தெருவில் உட்கார வைப்பார்கள். பின்னர் அவர்கள் எல்லோரையும் முகமூடி அணிந்த நபரின் முன்னால் வரிசையாகப் போகச் சொல்வார்கள். மக்கள் என்ற தண்ணீரை வடி கட்டி, புலிகள் என்ற மீன்களை பிடிக்கும் நடவடிக்கை அது என்று எல்லோருக்கும் தெரியும். இதிலே அதிசயம் என்னவென்றால், இராணுவ சுற்றி வளைப்புக்கு ஒரு நல்ல முன்னதாகக் கூட, அந்த ஊரில் புலிகள் நடமாடி இருப்பார்கள். ஆனால் முற்றுகைக்குள் எவரும் அகப்பட மாட்டார்கள். முகமூடி அணிந்த நபர் யாரையாவது காட்டிக் கொடுத்தாலும், அது முன்னர் ஒரு நேரம் இயக்கத்தை விட்டு விலகியவராக இருப்பார். எமதூரில் நிலை கொண்டிருந்த இந்திய இராணுவத்தில், முத்து என்றொரு தமிழ்நாட்டை சேர்ந்த சிப்பாய் இருந்தார். சிடு சிடுப்பான மூஞ்சியைக் கொண்ட படைவீரர்களிடையே வித்தியாசமானவர். மக்களுடன் கடுமையாக நடந்து கொள்வதில்லை. இராணுவ நடவடிக்கை தொடர்பாக முத்து வழங்கிய தகவல்கள் காரணமாகவே புலிகள் தப்ப முடிந்தது என்பது பின்னர் தெரிய வந்தது. சில மாதங்களில் அவரை இடம் மாற்றி விட்டார்கள்.

ஆரம்ப காலத்தில், இந்தியப் படையினர் புலி உறுப்பினர்களை மட்டுமே குறி வைத்து தேடிக் கொண்டிருந்தார்கள். இதனால் புலிகளுடன் தொடர்பற்ற பெரும்பான்மை மக்கள் படையினருடன் ஒத்துழைத்தனர். அல்லது ஒத்துழைக்க வேண்டிய கட்டாயம். எங்கேயும் ஓடி ஒளிக்க முடியாது. ஒரு முறை, பல கிராமங்களை ஒரே நாளில் சுற்றி வளைத்து, ஆண்கள் எல்லோரையும் நகரில் இருந்த பாடசாலை முகாமில் ஒரு நாள் வைத்திருந்தார்கள். அன்றிரவு சாப்பிட ஆளுக்கொரு சப்பாத்தியும், சாம்பாரும் தந்தார்கள். இரவு படுக்கும் பொழுது நுளம்புத் தொல்லையை சமாளிக்க ஒரு எண்ணை கொடுத்தார்கள். அடுத்த நாள் காலை, அனைவரையும் வீட்டுக்கு அனுப்பினார்கள். ஆனால் இந்தக் கவனிப்பு எல்லாம் ஒரு சில வாரங்கள் மட்டும் தான். ரோந்து செல்லும் இந்தியப் படை வாகனங்கள், புலிகளின் கண்ணி வெடிக்கு இலக்காகி பல வீரர்கள் கொல்லப் பட்டனர். இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு படையினரின் நடவடிக்கைகளில் மூர்க்கம் தெரிந்தது. தாக்குதல் நடந்த இடத்தில் அகப்பட்ட பொது மக்கள் படையினரின் பழிவாங்கும் நடவடிக்கையால் கொல்லப்பட்டனர். கைது செய்யப்பட்டால், கடுமையாக அடித்து நொறுக்கினார்கள். சந்தேக நபர்களை சித்திரவதை செய்வதும் வழக்கமான சமாச்சாரங்களாகி விட்டன. ஒரு நாள் புலி உறுப்பினர்களை பிடிப்பதற்காக, வீதியோரம் மறைந்திருந்த படையினர் விரித்த வலையில் நானும் அகப்பட்டேன்.


(தொடரும்...)

தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
8.ஆக்கிரமிப்புப் படையாக மாறிய அமைதிப் படை
7.ஆயுதக் குழுக்களுடன் அமைதி காத்த இந்திய இராணுவம்
6.இந்தியத் தலையீடுகளும், ஜேவிபி யின் ஐயப்பாடுகளும்
5.யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய இந்தியப் படைகள்
4.சென்னையில் அடைக்கலமான அகதிகளும், போராளிகளும்
3.தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை
2.ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா
1.இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்

Tuesday, January 12, 2010

இந்திய படையினரை கல் வீசி விரட்டும் வீரப் பெண் (வீடியோ)

அசாமில் தன்னை மானபங்கப் படுத்த முனைந்த இந்திய இராணுவ வீரனை, பொது இடத்தில் வைத்து செங்கற்களை வீசி விரட்டும் வீர நங்கை. சம்பவத்தை வேடிக்கை பார்த்த ஒருவரின் கைத்தொலைபேசியால் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது. அசாமை ஆக்கிரமித்துள்ள இந்திய இராணுவம் அப்பாவி மக்களை வதைப்பதும், அத்துமீறலுக்கு எதிராக மக்கள் போராட்டமும் தொடர்கின்றன.



வெறுங்கையால் இராணுவத்துடன் போராடும் பாலஸ்தீன வீரப்பெண் (வீடியோ)