இந்தியாவில் இராணுவ சர்வாதிகார ஆட்சி வரும் என்பதை முப்படைகளின் தளபதி மறைமுகமாகத் தெரிவிக்கிறார். இல்லாவிட்டால், சொந்த நாட்டு மக்கள், எதற்காக எல்லைகளை பாதுகாக்கும் இராணுவத்தைக் கண்டு அஞ்ச வேண்டும்? இந்திய முதலாளிகளின் நலன்கள் பாதுகாக்கப் பட வேண்டுமானால், பாஜக அரசு இராணுவத்தை ஏவி விட்டு சொந்த மக்களையே கொல்லத் தயங்காது.
"இராணுவத்தை கண்டால் மக்கள் அஞ்ச வேண்டும்" என்று பிபின் ராவத் சொன்னது ஏன்? இந்தியாவில் புரட்சி நடந்தால், அதை ஒடுக்கக் காத்திருக்கும் இராணுவத்தைக் கண்டு மக்கள் அஞ்ச வேண்டும்....
இருபது வருடங்களுக்கு முன்பு, நான் பெல்ஜிய கம்யூனிஸ்ட் தொழிலாளர் கட்சி ஒழுங்கு படுத்திய கோடை கால முகாமில் பங்குபற்றி இருந்தேன். அப்போது எமக்கு வகுப்பெடுத்த கட்சியின் பிரதான உறுப்பினர் ஒருவர் பின்வரும் தகவலை தெரிவித்தார்:
//பெல்ஜியத்தில் உள்ள இராணுவ முகாம்கள் பெரும்பாலும் ஏழை உழைக்கும் வர்க்க மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளை அண்டியே உள்ளன. இது ஒன்றும் தற்செயல் அல்ல. நாளை இங்கு ஒரு புரட்சி நடந்தால் அதை ஒடுக்குவதற்கு இராணுவம் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது.
எதிரி நாட்டு படையெடுப்பை எதிர்நோக்குவதை விட, உள்நாட்டில் ஏற்படப் போகும் பாட்டாளிவர்க்க புரட்சியை நசுக்குவதற்கே முதலாளிய வர்க்கத்திற்கு இராணுவம் முக்கியமாகத் தேவைப்படுகிறது. உள்நாட்டில் புரட்சி நடப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லையென்ற காலங்களில் தான் எதிரி நாடுகளுடன் யுத்தம் செய்வார்கள்...//
உண்மையில் இந்தத் தகவல் அன்று எனக்கு மட்டுமல்லாது, பல பெல்ஜிய தோழர்களுக்கும் நம்புவதற்கு கஷ்டமாக இருந்தது. எமது சந்தேகத்தை நேரடியாகக் கேட்டோம். அதற்கு அவர் பின்வரும் பதிலைக் கூறினார்:
//உதாரணத்திற்கு 19 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் நடந்த பாரிஸ் கம்யூன் புரட்சியை எடுத்துப் பாருங்கள். அந்த நேரத்தில் "ஜென்ம விரோதிகளான" பிரெஞ்சு இராணுவமும், ஜேர்மன் இராணுவமும் விட்டுக்கொடாமல் கடும் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன.
பாரிஸ் கம்யூன் புரட்சி வெடித்த அடுத்த நாளே அதுவரை ஒன்றையொன்று கொன்று குவித்துக் கொண்டிருந்த ஜேர்மன் இராணுவமும், பிரெஞ்சு இராணுவமும் தமது "ஆயிரம் வருட கால" பகைமையை மறந்து ஒன்று சேர்ந்து விட்டன.
அன்று "எதிரி" நாட்டுப் படைகளின் ஒத்துழைப்பு இருந்த படியால் தான், பிரெஞ்சு இராணுவம் இலகுவாக பாரிஸ் புரட்சியை நசுக்க முடிந்தது. அது முடிந்த பின்னர் இரண்டு நாட்டுப் படைகளும் வழமை போல மீண்டும் யுத்ததிற்கு திரும்பிச் சென்று விட்டன.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்றுள்ளது. இந்த முதலாளித்துவ தேசங்கள் ஒன்றையொன்று விழுங்கும் அளவு பகைமை பாராட்டினாலும் பாட்டாளிவர்க்க புரட்சி நடக்கும் போது ஒன்று சேர்ந்து விடுவார்கள்.//
இந்தியாவில் புதிதாக முப்படைத் தலைமைத் தளபதியாக பதவியேற்றுள்ள பிபின் ராவத் "இராணுவத்தைக் கண்டு மக்கள் அஞ்ச வேண்டும்" என்று சொல்லி இருக்கிறார். இதன் மூலம், எதிரி நாடான பாகிஸ்தானுடன் யுத்தம் செய்வதை விட, சொந்த நாட்டில் புரட்சி ஏற்பட விடாமல் தடுப்பது தான் இந்திய இராணுவத்தின் தலையாய பணி என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
1 comment:
ஒரு முக-நூல் பதிவில் வாசித்தது நினைவிருக்கிறது.பாகிஸ்தான் போல இந்தியாவில் ஏன் இராணுவ ஆட்சி அமையவில்லை என்பதை பற்றிய நூலிலுள்ள கருத்து:-
1.சுதந்திரம் அடைந்த ஆரம்ப நாட்களிலேயே உள் நாட்டு விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்த போது, குடிமை அமைப்புகள் (தலைவர்கள்) இராணுவத்தை கண்டித்து அதன் இடம் என்னவென்று உணர்த்தி இருக்கிறது.
2.இராணுவத்தின் அதிகார எல்லைகள் அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளன.
ஓய்வுபெற்ற இராணுவ உயரதிகாரிகள்/தளபதிகள் உள் நாட்டு பணி அல்லாத வெளி நாட்டு தூதரக பணிகளில் அமர்த்தப்பட்டனர்.
3.இந்திய இராணுவ ஆள் எடுக்கும் போதும் வேற்றுமைகளை கணக்கில் கொண்டு ஒரு குறிப்பிட்ட சாதி/இன/மொழி/மத ஆதிக்கம் இராணுவத்தில் வராது பார்த்து கொள்ள பட்டது.
இதிலுள்ளவைகள் காலாவதி ஆகிக்கொண்டு இருக்கின்றன
Post a Comment