Showing posts with label பனிப்போர். Show all posts
Showing posts with label பனிப்போர். Show all posts

Tuesday, April 15, 2014

உக்ரைன் போர் ஆரம்பமாகி விட்டது!

உக்ரைன் போர் ஆரம்பமாகி விட்டது! 

கிழக்கு உக்ரைனில், பாசிச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி வைத்திருந்த, கிரமாட்டோர்ஸ்க் (Kramatorsk) விமான நிலையத்தின் மீது, உக்ரைனிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. விமான நிலையம், உக்ரைனிய படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. வலது அணி என்ற பாசிசக் கட்சி உறுப்பினர்கள் பலர், உக்ரைனிய இராணுவ சீருடை அணிந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது. சில வெளிநாட்டு பாசிஸ்டுகளும் தாக்குதலில் பங்குபற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்றது. அதனை உறுதிப் படுத்த முடியவில்லை.  


டானியேஸ்க் (Donetsk) நகரில், சோவியத் ஆதரவு ஆர்ப்பாட்டக் காரர்கள், பல பொலிஸ் நிலையங்களை கைப்பற்றி உள்ளனர். கடமையில் இருந்த உக்ரைனிய பொலிஸ்காரர்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள் பக்கம் சேர்ந்து விட்டனர். பொலிஸ் நிலையங்கள் மட்டுமல்லாது, நேற்று ஒரு சிறிய விமானத் தளமும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தது. அதைத் தான், தற்போது உக்ரைனிய படைகள் கைப்பற்றியுள்ளன. 

கிழக்கு உக்ரைனிய கிளர்ச்சியாளர்கள், "ரஷ்ய ஆதரவாளர்கள், பிரிவினைவாதிகள்" என்று உக்ரைனிய அரசும், மேற்கத்திய நாடுகளும் பிரச்சாரம் செய்து வருகின்றன. உண்மையில், கிளர்ச்சியாளர்கள் தம்மை உக்ரைனியர்கள் என்று கூறிக் கொள்கின்றனர்.

கிளர்ச்சியாளர்கள் எல்லோரும் ரஷ்ய மொழி பேசுவோர் அல்ல. ரஷ்யா மொழிக்கும், உக்ரைனிய மொழிக்கும் இடைப்பட்ட வட்டார வழக்கு மொழியை பேசும் மக்களும் அடங்குவார்கள். அவர்கள் தம்மை ரஷ்ய இனத்தவராக அடையாளம் காட்டவில்லை. உக்ரைனியர்கள் என்றே அழைத்துக் கொள்கின்றனர்.

ரஷ்யர்களையும், உக்ரைனியர்களையும் இணைக்கும் வகையில், "சோவியத் பிரஜை" என்ற அடையாளத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டங்களில் முன்னாள் சோவியத் யூனியனின் கொடிகள் பறப்பதில் இருந்தே, அதனைப் புரிந்து கொள்ளலாம். பாசிச எதிர்ப்புணர்வு, பல்லின கிளர்ச்சியாளர்களை ஒன்றிணைக்கிறது.

முன்பு ஆப்கானிஸ்தானில் போரிட்ட ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள், கிளர்ச்சிக்கு தலைமை தாங்குகின்றனர். பொலிஸ் நிலையங்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை, அவர்களே முன்னின்று தாக்கி உள்ளனர். பாசிச எதிர்ப்பு முன்னணி ஒன்றை அமைக்கும் நோக்குடன், ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கின்றனர்.

கிளர்ச்சியை அடக்குவதற்காக, கீவ் அனுப்பிய இராணுவ-பொலிஸ் படையினரும், கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து விட்டனர். கீவில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி உள்ள பாசிஸ்டுகள், இராணுவ ரீதியாக மிகவும் பலவீனமாக இருக்கின்றனர். ஆக்கிரமிக்கப் பட்ட அரசாங்க கட்டிடங்களை விட்டு, கிளர்ச்சியாளர்கள் வெளியேற வேண்டும் என்று, அவர்கள் விதித்த காலக்கெடு காலாவதியாகி விட்டது.

உக்ரைன் அரசு, மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறுகின்றது. அதனால், ஐ.நா. சமாதானப் படை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே, உக்ரைனின் பாசிச ஆட்சியாளர்களுக்கு ஆயுத தளபாடங்களை விநியோகம் செய்வதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது.

ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை பற்றி வாய் கிழியப் பேசும் தேசியவாதிகள், இன்னொரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை நசுக்குவது ஒரு முரண்நகை. உலக நாடுகள் முழுவதும் உள்ள தேசியவாதிகள், குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாக உள்ளனர். 

உக்ரைன், கீவ் நகரில் சுயநிர்ணய உரிமை கோரிப் போராடியவர்களின் அரசாங்கம், இன்று கிழக்கு உக்ரைனில் ஸ்லாவியான்ஸ்க் நகரில் சுயநிர்ணய உரிமை கோருவோரின் போராட்டத்தை நசுக்குவதற்காக ஹெலிகாப்டர்களையும், படையினரையும் அனுப்பியுள்ளது. 


********


உக்ரைன் விவகாரம் தொடர்பாக, அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் கருத்து முரண்பாடு நிலவுவதாக தெரிய வருகின்றது. ஐ.நா.மன்றத்தில் ரஷ்யாவை கண்டிக்கும் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விட்ட பொழுது, இஸ்ரேல் கலந்து கொள்ளாமல் வெளிநடப்புச் செய்தது. அதிலிருந்தே, ஒபாமா நிர்வாகத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது. 

பாசிஸ்டுகள் ஆட்சி செய்யும் உக்ரைனில், யூதர்களின் வழிபாட்டுஸ்தலங்கள் தாக்கப் படுவது அதிகரித்துள்ளது. யூதர்களின் சமாதிகள் மீது, நாஸி சின்னம் கீறி களங்கப் படுத்திய நிகழ்வுகளும் நடந்துள்ளன. உக்ரைனில் பாசிச சதிப்புரட்சிக்குப் பின்னர், ஆயிரக் கணக்கான யூதர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இது தொடர்பான தகவல்களுக்கு, இஸ்ரேலிய ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டன. இஸ்ரேல், அமெரிக்காவின் "உக்ரைனிய கொள்கையை" ஆதரிக்காமைக்கான காரணம் இது தான் என்று தெரிய வருகின்றது. ஆயினும், "உக்ரைனிய நாஸிகளின் யூத வெறுப்பு ஒரு கட்டுக்கதை(?)" என்று, ஒபாமா நிர்வாகம் மறுத்து வருகின்றது.

********

ஸ்லாவியான்ஸ்க் நகரில் அரசாங்க கட்டிடங்களையும், பொலிஸ் தலைமையகத்தையும் கைப்பற்றிய மக்கள், அவற்றை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றனர். உள்ளூர் பொலிஸ்காரர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பக்கம் சேர்ந்து விட்டனர். ஸ்லாவியான்ஸ்க் நகரில் மக்கள் மனிதச் சங்கிலி அமைத்து வருகின்றனர். 


ஸ்லோவியான்ஸ்க், உக்ரைனிய படைகளை எதிர்த்துப் போராடுவதற்கு தயாராக காத்திருக்கும் மக்கள்.

வீடியோ: ஸ்லோவியான்ஸ்க் நகருக்குள் நிலை கொண்டிருந்த உக்ரைனிய அரச படையினர், மக்களிடம் தமது ஆயுதங்களை ஒப்படைத்த காட்சி.

 

*******


இவை, மேற்குலக ஊடகங்கள் மக்களுக்கு காட்டாமல் மறைக்கும் காட்சிகள். உக்ரைன், லுகான்ஸ்க் நகரில் அரசாங்க கட்டிடங்களை ஆக்கிரமித்துள்ள மக்கள் மத்தியில், மேற்குலக எதிர்ப்பு தன்மை மிகவும் அதிகமாக உள்ளது. லுகான்ஸ்க் நகர ஆர்ப்பாட்டத்தில் காணப்பட்ட சில காட்சிகள்.


உக்ரைனை ஆளும் பாசிச அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் மக்களின் கட்டுப்பாட்டின் கீழ், லுகான்ஸ்க் (Luhansk) நகரமும் வந்துள்ளது. அங்குள்ள அரசாங்க கட்டிடம் ஒன்றில், முன்னாள் சோவியத் யூனியனின் கொடி பறக்கிறது.



*********

ஒடேசா (Odessa) நகரில் (10-4-2014), செம்படை வீரர்களின் சீருடை அணிந்த இளைஞர்கள், சோவியத் கொடிகளை ஏந்தியவாறு அணிவகுத்துச் செல்கின்றனர். 2 ம் உலகப் போரில், ஜெர்மன் நாஸிப் படைகளின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த ஒடேசா நகரம், சோவியத் செம் படையினரால் விடுதலை செய்யப்பட்ட எழுபதாண்டு நிறைவை கொண்டாடுவதற்காக, இந்த அணிவகுப்பு நடந்தது. 70 வருடங்களுக்கு முன்னர், வெற்றி விழாக் கொண்டாடிய செம்படை வீரர்கள், இதே தெருக்களில், இதே மாதிரித் தான் அணிவகுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.


ஒடேசா நகரில் நடந்த, பாசிச எதிர்ப்பு ஊர்வலத்தில் இருந்து ஒரு காட்சி. ஊர்வலத்தில் கலந்து கொண்ட, உக்ரைனில் வாழும் ஆப்பிரிக்கர்கள் இருவரை இந்தப் படத்தில் பார்க்கலாம். இந்தப் படமும், ஊர்வலம் பற்றிய தகவலும், "ஜனநாயகம் காக்கும்" மேலைத்தேய ஊடகம் எதிலும் வரவில்லை. அது தான் அவர்களது நடுநிலை தவறாத ஊடகத் தர்மம்.



உக்ரைன் நாட்டில், ஆயிரக் கணக்கான ஆப்பிரிக்கர்கள், இந்தியர்கள், தமிழர்கள் வாழ்கிறார்கள். முன்பு கீவ் நகரில் இடம்பெற்ற, ஐரோப்பிய ஒன்றிய ஆதரவாளர்களின் Euro Maidan ஆர்ப்பாட்டத்தில், ஒரு வெளிநாட்டவர் கூட தலை காட்டவில்லை. "வெளிநாட்டவர்களை வெறுக்கும் நவ நாஸிகளை ஆதரிக்கும் அளவிற்கு," அவர்கள் யாருக்கும் பைத்தியம் பிடிக்கவில்லை. ஆனால், இந்தியாவிலும், இலங்கையிலும், மேற்கத்திய நாடுகளிலும் வாழும், ஒரு சில மேட்டுக்குடித் தமிழர்கள் மட்டும், இன்னமும் உக்ரைனிய நாஸிகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.



 *******


உக்ரைன் தொடர்பான முன்னைய பதிவுகள்:

Friday, January 06, 2012

ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் புதிய பனிப்போர்

"கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள், சீனக் கடற்படையுடன் இராணுவ ஒத்திகையில் ஈடுபடுவதற்கு ஒப்பந்தங்கள் போடப் பட்டுள்ளன." இது போன்ற செய்தி, சர்வதேச அரங்கில் எந்தளவு கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று கற்பனை செய்து பாருங்கள். ஆசிய பசுபிக் பிராந்தியத்தில், சீனாவை சுற்றி வளைக்கும் அமெரிக்காவின் வியூகமும் அது போன்றது தான். நாங்கள் அமெரிக்காவையோ, சீனாவை ஆதரிக்க வேண்டுமென்பது அவசியமில்லை. ஆனால், கடந்த நூற்றாண்டில் சோவியத் யூனியனுடனான பனிப்போர் யாரால், எப்போது தொடங்கப்பட்டது என்பதை இன்று எல்லோரும் மறந்து விட்டனர். அன்று "சிவப்பு அபாயம்" குறித்து, மேற்குலக நாடுகளில் பிரச்சாரம் செய்யப் பட்டது. இன்று, "மஞ்சள் அபாயம்" பற்றிய அச்சவுணர்வு மக்கள் மனதில் விதைக்கப் படுகின்றது. முன்னரைப் போலவே, இரண்டு அணுவாயுத வல்லரசுகளான அமெரிக்காவும், சீனாவும் ஆயுதக் குவிப்பில் ஈடுபடுகின்றன. சென்ற ஆண்டின் இறுதியில் இடம்பெற்ற சில இராஜதந்திர சந்திப்புகள், ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. அந்த நேரம், அனைத்து ஊடகங்களும், லிபியா, சிரியா என்று மத்திய கிழக்குப் பக்கமே தமது பார்வையை செலுத்தி இருந்தன. புதிய பனிப்போரின் வரவை கட்டியம் கூறும், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த, அந்த சந்திப்புகளை விரிவாகப் பார்ப்போம்.

நவம்பர் 2011, பராக் ஒபாமா, அவுஸ்திரேலியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்திருந்தார். அமெரிக்க ஜனாதிபதியின் விஜயத்தின் விளைவாக சில முடிவுகள் எட்டப் பட்டன. அவுஸ்திரேலியாவின் வட பகுதியில் உள்ள டார்வின் நகரில் 250 அமெரிக்க மரைன் படையினர் நிறுத்தப் படுவார்கள். மேலதிகமாக 2500 படையினரை அனுப்பும் திட்டம் குறித்து ஆலோசிக்கப் படுகின்றது. இந்தோனேசியாவுக்கு 24 'F - 16' ரக விமானங்கள் விற்கப்படும். அதே காலகட்டத்தில் இடம்பெற்ற அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டனின் பயணங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. மியான்மர் நாட்டு விஜயம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. 54 வருடங்களுக்குப் பின்னர், முதல் தடவையாக ஒரு அமெரிக்க உயர் அதிகாரி அந்த நாட்டிற்கு விஜயம் செய்துள்ளார்.

ஹிலாரி அடுத்ததாக பிலிப்பைன்ஸ் சென்ற செய்தியை அறிவிப்பதில் ஊடகங்கள் அதிக அக்கறை காட்டவில்லை. ஆயினும், அமெரிக்கர்களின் உள்நோக்கத்தை அந்த விஜயம் வெளிப்படுத்துகின்றது. "மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் பிரச்சினை தீர்க்கப் பட வேண்டும்." என்று கிளிண்டன் கூறியமை சர்ச்சையை உண்டாக்கியது. அதற்கு காரணம், சீனாவுக்கும், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கும் இடையிலான கடற்பகுதி, "தென் சீனக் கடல்" என்று தான் இவ்வளவு காலமும் அறியப் பட்டு வந்துள்ளது. உலகம் முழுவதும், பூகோள வரைபடங்களில் அவ்வாறு தான் குறிப்பிடப் படுகின்றது. பிலிப்பைன்ஸ் நாட்டில் மட்டும் புழங்கும் "மேற்கு பிலிப்பைன்ஸ் கடல்" என்ற பெயரை, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம், அவர்கள் கொடுக்க விரும்பும் செய்தி என்ன என்பது வெட்ட வெளிச்சமானது.

சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடையிலான கடற்பரப்பில் மீன்பிடி உரிமை பற்றி, இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்கனவே இழுபறி நிலைமை காணப்படுகின்றது. குறிப்பிட்ட கடற்பிரதேசத்தில் சீனப் படகுகள் மீன் பிடிக்கக் கூடாது என்று, பிலிப்பைன்ஸ் தடையுத்தரவு போட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எண்ணை ஏற்றி வரும் கப்பல்கள் அந்த வழியாகத் தான் பயணம் செய்கின்றன. இதனால், அந்தக் கடற்பகுதி சீனாவைப் பொறுத்தவரையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும், பிலிப்பைன்ஸ் சீனாவுடன் மட்டும் கடல் எல்லைக்காக சண்டை பிடிக்கவில்லை. மலேசியா, இந்தோனேசியா போன்ற அயல்நாடுகளுடனும் மீன்பிடி உரிமை, கடல் எல்லை குறித்த சர்ச்சைகள் தீர்க்கப் படவில்லை. அமெரிக்க வெளிவிவகார அமைச்சருக்கு அவை எதுவும் கண்ணில் படவில்லை என்பது ஆச்சரியம்.

அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் ஹிலாரி கிளிண்டன் ஆற்றிய உரையில், சீனாவுடன் நல்லுறவைப் பேண விரும்புவதாகக் கூறினார். இருப்பினும், திரைமறைவில் புதிதொரு பனிப்போருக்கான ஆயத்தங்கள் முன்னெடுக்க படுகின்றன. கடந்த பத்து வருடங்களாக, ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் மட்டுமே அமெரிக்கா கவனம் செலுத்தி இருந்தது. அந்தக் காலகட்டத்தில், சீனா ஆசிய நாடுகளுடன் வர்த்தக உறவுகளை நெருக்கமாக்கிக் கொண்டது. இதன் மூலம், ஆசியக் கண்டத்தில் சீனா தன்னிகரற்ற பொருளாதார வல்லரசாக திகழ்ந்தது. அமெரிக்க உயர் மட்ட விஜயமானது, அவுஸ்திரேலியா என்ற நெருங்கிய உறவினனை, அமெரிக்கா கைவிடவில்லை என்பதைக் காட்டுவதற்காக. ஏற்கனவே ஆப்கானிஸ்தான் போரில் அவுஸ்திரேலிய துருப்புகள் வகித்த பாத்திரமும் குறிப்பிடத் தக்கது. அவுஸ்திரேலியா என்ற தீவு நாடு (அவர்கள் தங்களை ஒருகண்டம் என்று அழைத்துக் கொள்கின்றனர்.) ஆசியக் கண்டத்தை சேர்ந்தது. தமக்கு அயலில் உள்ள சீனாவுடன் மோதுவதற்கு தயாராக, தூரத்தில் இருக்கும் அமெரிக்கர்களை துணைக்கு அழைக்கின்றனர்.

வேறு பல ஆசிய நாடுகளுடனும், அமெரிக்கா இராணுவ உடன்படிக்கைகளை செய்து வருகின்றது. சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளுடன் 1945 ம் ஆண்டிலிருந்து போடப்பட்டு வரும் ஒப்பந்தங்கள், புதிப்பிக்கப் படுகின்றன. ஏற்கனவே, அரசியல் ரீதியாக ஒற்றுமையைக் கொண்டுள்ள, நாடுகளுடனான அமெரிக்க உறவு குறித்து யாரும் அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். இருப்பினும், வியட்னாமும், அமெரிக்காவும் கூட்டு இராணுவ ஒத்திகையில் ஈடுபடும் செய்தி நம்ப முடியாத அளவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். நீண்ட காலமாக, அமெரிக்கா வியட்னாமின் பகைவனாக திகழ்ந்தது. இரண்டு நாடுகளும் பல்லாயிரம் மக்களை பலி கொண்ட யுத்தத்தில் ஈடுபட்டிருந்தன.

யுத்தம் நடந்த காலங்களில், ரஷ்யாவும், சீனாவும் வியட்னாமின் கூட்டாளிகள் என்று அமெரிக்கா பரப்புரை செய்து வந்தது. நேற்று வரை, ஜென்மப் பகைவர்களாக ஒருவரை ஒருவர் கொன்று குவித்த அமெரிக்க, வியட்நாமியப் படைகள், இன்று கூட்டாளிகளாக இராணுவ ஒத்திகையில் ஈடுபடப் போகின்றனர். உலகம் எவ்வளவு விரைவாக மாறுகின்றது? கடந்த கால வரலாற்றை எடுத்துப் பார்த்தால், வியட்னாம் அமெரிக்காவுடன் மட்டும் மோதவில்லை. சீனாவுடனும் தீர்க்கப் படாத எல்லைப்போரில் ஈடுபட்டது. வியட்நாம் சோஷலிச நாடாவதற்கு முன்னமே, பல நூறாண்டுகளாக, வியட்நாமியருக்கு சீனா மீதான வெறுப்பு இருந்து வந்துள்ளது. சீனா- வியட்நாம் முரண்பாடுகள் குறித்து அன்று வெளியில் யாரும் அக்கறைப் படவில்லை. இனிமேல் அந்த நிலைமை மாறலாம். இனி வருங்காலங்களில், "சீனாவை ஆக்கிரமிப்பாளன் என்றும், வியட்நாமை பாதுகாக்க வேண்டியது சர்வதேசத்தின் கடமை என்றும்," ஊடகங்கள் புலம்பலாம்.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பிருந்தே, சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகின்றது. பத்து வருடங்களுக்கு முன்னர், சீனா மூன்று மில்லியன் பீப்பாய் எண்ணை நாளொன்றுக்கு செலவழித்தது. அதில் மூன்றில் இரண்டு பங்கு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகின்றது. 2008 ம் ஆண்டு, சீனா நாளொன்றுக்கு எட்டு மில்லியன் பீப்பாய் எண்ணை பயன்படுத்தியது. அடுத்து வரும் இருபது வருடங்களில், இந்த அளவு இரு மடங்காகலாம். சீனாவை சூழவுள்ள நாடுகளுடன், அமெரிக்கா இராணுவ ஒப்பந்தங்களை போட்டு வருகின்றது. அதனால், சீனாவும் கடற்பலத்தை பெருக்குவதற்கு முனையலாம். சீனாவிடம் அணுவாயுதங்கள், உலகிற் பெரிய இராணுவம் எல்லாம் இருக்கலாம். ஆனால், வலுவான கடற்படை கிடையாது. அந்த விஷயத்தில் அமெரிக்கா இன்னமும் பலமாகவே உள்ளது. உண்மையில், ஆசிய நாடுகளில் சீனாவின் தலையீடு, இராணுவ பிரசன்னம் பற்றிய செய்திகள் அதிகளவு மிகைப் படுத்தப் பட்டவை. ஆசிய நாடுகளுடன் பொருளாதார நலன்களை விருத்தி செய்வதற்கப்பால், சீனாவின் நடவடிக்கைகள் மட்டுப் படுத்தப் பட்டுள்ளன. ஆனால், அமெரிக்காவோ, ஆசிய நாடுகளுடனான பொருளாதார உறவை விட, இராணுவ உறவிலே அதிக நாட்டம் கொண்டுள்ளது.


---------------------------------------------
அமெரிக்க - சீன பனிப்போர் தொடர்பான முன்னைய பதிவு:
திரையில் கலாச்சார மோதல், மறைவில் வல்லரசு மோதல்

Thursday, August 28, 2008

ரஷ்ய கரடியும் ஐரோப்பிய காகிதப் புலிகளும்

"உலகப்போர்" , "பனிப்போர்", என்பன ஐரோப்பிய மையவாத சொற்பதங்கள். அதாவது ஐரோப்பாவை சுற்றியே உலகம் சுழலுவதாக காட்டுவதற்கு புனையப்பட்டவை. "முதலாம் உலகப்போர்" என்பது ஐரோப்பாவில் மட்டுமே நடந்தது. அமெரிக்கா மட்டுமே ஐரோப்பாவிற்கு வெளியே இருந்தது.

"இரண்டாம் உலகப்போரில்" ஐரோப்பியரின் காலனி நாடுகளும்  தமது எஜமானர்களுக்காக பங்குபற்றின. அப்போதே, ஐரோப்பிய நாடுகள் ஒரு முடிவுக்கு வந்தன. தமக்குள் சண்டையிடுவதை நிறுத்தி, அதனை(போரை) புதிதாக விடுதலையடைந்த, அல்லது அடையப்போகும் நாடுகளுக்கு திருப்பி விட்டன. அப்போது வந்தது தான் "பனிப்போர்" என்ற சொற்பதம். ஏனெனில் "பனிப்போர்" ஐரோப்பாவில் மட்டும் தான், அதன் காலனிகள் நிஜப்போரினால் பாதிக்கப்பட்டன.

சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் விளைவுகளில் ஒன்று, நிஜப்போர் ஐரோப்பாவையும் தாக்கியது. முன்னாள் யூகோஸ்லேவியா, முன்னாள் சோவியத் யூனியன் போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், எதோ ஒரு வகையில், அமெரிக்க-ஐரோப்பிய அல்லது ரஷ்ய தலையீட்டுதன் இடம்பெற்ற யுத்தங்கள், தற்போது சர்வதேச பிரச்சினைகளாகியுள்ளன.

"இரண்டு யானைகள் சண்டையிட்டால் புல்லுக்கு தான் சேதம்" என்று ஒரு ஸ்வஹிலி (ஆப்பிரிக்க) பழமொழி ஒன்றுண்டு. பெரும் வல்லரசுகளுக்கிடயிலான பனிப்போரில் பாதிக்கப் படுவது சிறிய நாடுகள் தான். கொசோவோ தனிநாடாக(ஐ.நா. சபையின் ஒப்புதலைப் பெறாமல்) பல மேற்குலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட போது, ரஷ்யா அதனை கண்டித்தது. தற்போது அதற்கு பதிலடியாக, ரஷ்யா அப்காசியா, தெற்கு ஒஸ்ஸெத்தியா ஆகிய (ஜோர்ஜியாவின் பகுதிகளை), தனி நாடாக அங்கீகரித்துள்ளது.

சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட யுகோஸ்லேவியா என்ற நாட்டை ஆறு புதிய நாடுகளாக்கிய போது, வரவேற்ற மேற்குலக நாடுகள், ரஷ்யாவின் செயலை கண்டித்துள்ளன. (பக்கச் சார்பற்றவை என்று சொல்லப்படும்) மேற்குலக ஊடகங்களும் தமது இரட்டைவேடத்தை வெளிக்காட்டியிருந்தன. கொசோவோ சுதந்திரப் பிரகடனத்தை, தமது முதல் பக்கத்தில் "ஆஹா, ஓஹோ" என்று புகழ்ந்த பத்திரிகைகள், அப்காசியா, தெற்கு ஒசெத்திய சுதந்திரத்தை ரஷ்யா அங்கீகரித்த போது, "மேற்குலகம் சீற்றமடைந்துள்ளது" என்று தலைப்புச் செய்தி வெளியிட்டன.

அப்காசியா, ஒஸ்ஸெத்தியா சுதந்திரப் பிரகடனத்தை வாபஸ் பெற வேண்டுமென்றும், அல்லாவிட்டால் ரஷ்யா மீது தடைகளை கொண்டு வரப்போவதாக ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவும் "இது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது" என்று கூறியது நகைப்புக்கிடமானது. யுகோஸ்லேவியா, ஈராக் மீது படையெடுக்கும் போது ஐக்கிய நாடுகள் சபையை மதிக்காமல் நடந்து கொண்ட அமெரிக்கா, தற்போது சர்வதேச சட்டம் பற்றி பேசுவதனாது, அதனது வழக்கமான இரட்டை அளவுகோலை காட்டுகின்றது. அதாவது மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம். அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் "சர்வதேச வர்த்தக மையம்", "G 7(+ரஷ்யா)" ஆகிய அமைப்புகளில் இருந்து ரஷ்யாவை விலக்குவதாக பயமுறுத்துகிறது.

முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி புத்தின், தற்போதய "பனிப் போர்- 2" குறித்து ஏற்கனவே கடந்த 2007 நவம்பரில் நடந்த G 8 மகாநாட்டில் தெரிவித்துள்ளார். அப்போது புத்தினுடன் நடந்த பத்திரிகையாளர் மகாநாடு, மேற்குலக ஊடகங்களில் முக்கியத்துவம் பெறாத போதும் (அல்லது தணிக்கைக்கு உள்ளான போதும்), அப்போதே தற்போதைய பிரச்சினைகளுக்கான பல விளக்கங்கள் கிடைத்தன. புத்தின் தனது உரையில், நேட்டோ அமைப்பானது ஒப்பந்தத்தை மீறுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

அதாவது சோவியத் யூனியனின் கடைசி ஜனாதிபதி கோர்பச்சேவும், அமெரிக்க ஜனாதிபதி ரீகனும் செய்து கொண்ட, "ஆயுதக் களைவு ஒப்பந்தப்" படி சோவியத் யூனியன் முன்னாள் வார்ஷோ ஒப்பந்த நாடுகளில் இருந்த தனது படைகளை விலக்கிக் கொண்டது. அணுவாயுதங்களை ரஷ்யாவின் யூரல் மலைகளுக்கு அப்பால்(ஐரோப்பாவுக்கு வெகு தொலைவில்) நகர்த்தியது. ஆனால் அதற்கு மாற்றாக, நேட்டோ அமைப்பு நாடுகள் என்ன செய்தன? "வடக்கு அட்லாண்டிக் இராணுவக் கூட்டமைப்பை" கலைத்திருக்க வேண்டாமா? குறைந்த பட்சம் அமெரிக்கா தனது (அணுகுண்டு பொருத்திய) கண்டம் விட்டு கண்டம் பாயும் எவுகணைகளையாவது ஐரோப்பிய கண்டத்தை விட்டு அகற்றியிருக்க வேண்டாமா?

இல்லை, எதுவுமே நடக்கவில்லை. ஒப்பந்தத்தால் ஏமாந்தது சோவியத் யூனியன் தான். புருஸ்செல்சில் தலைமையகத்தை கொண்ட "நேட்டோ"அமைப்பு அப்படியே இருந்தது. அது மட்டுமல்ல புதிய அங்கத்தவர்களாக முன்னாள் வர்ஷோ ஒப்பந்த நாடுகளான, போலந்து, ஸெகொஸ்லொவெக்கிய, ருமேனிய நாடுகளையும் சேர்த்துக் கொண்டது. மேலும் முன்னாள் சோவியத் குடியரசுகளான எஸ்டோன்யா, லாட்வியா போன்றவற்றையும் இணைத்துக் கொண்டது. அது மட்டுமல்ல அணுவாயுத ஏவுகணைகளை அந்நாடுகளிலேயே கொண்டு வந்து நிறுத்தியது. அந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் புத்தின் கேட்டது போல, ரஷ்யா தனது ஏவுகணைகளை கியூபாவிலேயோ, அல்லது மெக்சிகொவிலேயோ கொண்டு வந்து பொருத்தினால் என்ன நடந்திருக்கும்?

G 8 பத்திரிகையாளர் மகாநாட்டில் புத்தின் ஐரோப்பாவின் எரிபொருள் பிரச்சினை பற்றியும் பதிலலளித்திருந்தார். சோவியத் யூனியன் இருந்த காலத்தில், அதன் குடியரசுகள் பெட்ரோல், எரிவாயு போன்றவற்றிற்கும் மானியம் அளிக்கப்பட்டது. அதாவது சந்தை விலையை விட அரைவாசி விலைக்கு விற்கப்பட்டது. இது சோவியத் யூனியன் மறைந்த பின்னரும் தொடர்ந்தது. இதனால் எண்ணை வளமற்ற உக்ரைன், ஜோர்ஜியா, எஸ்டோனியா, லாட்வியா போன்ற குடியரசுகள் பலனடைந்து வந்தன.

ஆனால் கடந்த பத்தாண்டுகளாக இந்த நாடுகளில் ஆட்சிக்கு வந்த மேற்குலக சார்பு அரசியல் தலைவர்கள், ரஷ்யாவை பகிரங்கமாக எதிர்த்து வந்தனர். இதன் எதிரொலியாக ரஷ்யா, அந்நாடுகளை எரிபொருளுக்கு சந்தை விலையை கொடுக்குமாறு கோரியது. அப்போது நெருக்கடிக்கு தள்ளப்பட்ட இந்த நாடுகள் தம்மை காப்பாற்றுமாறு மேற்கு ஐரோப்பிய நாடுகளை கெஞ்சின. ஆனால் மேற்கு ஐரோப்பா கூட ரஷ்ய எரிபொருளில் தங்கியிருக்கின்றது என்ற விடயம் அப்போது அம்பலத்திற்கு வந்தது.

ஜோர்ஜிய பிரச்சினையால் போலந்து, உக்ரைன் போன்ற நாடுகள் அமெரிக்காவுடன், நேட்டோவுடன் நெருக்கமாகி வருகின்றன. போலந்து அணுகுண்டு பொருத்திய ஏவுகணைகளை தன்நாட்டில் வைத்துக்கொள்ள ஒப்பந்தம் போட்டது. உக்ரைன் கூடிய சீக்கிரம், தன்னையும் நேட்டோவில் இணைத்துக் கொள்ளுமாறு கெஞ்சுகின்றது. அப்படி சேரும் நேரம், ரஷ்யா அந்நாட்டையும் தாக்கும் அபாயம் உள்ளது.

ஏனெனில், உக்ரைனின் கருங்கடல் குடா நாடான, "கிரீமியா" ரஷ்ய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி. அங்கே இப்போதும், லெனின் சிலைகள், பழைய சோவியத் ஞாபக சின்னங்கள் நிலைத்து நிற்கின்றன. மேலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. 1917 ம் ஆண்டு, போல்ஷெவிக் புரட்சியை அடக்கும் பொருட்டு ஆங்கிலேய, பிரெஞ்சு படைகள் கிரீமியாவை ஆக்கிரமித்திருந்தன. சோவியத் யூனியன் உடைந்த பின்னர், ரஷ்ய கடற்படை கிரீமிய தலைநகர் செவஸ்தபோலில் பெரிய தளத்தை வைத்திருக்கின்றது. இதற்காக 2017 ம் ஆண்டு வரை, உக்ரைன் அரசுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.

உக்ரைன் நேட்டோவில் சேரும் பட்சத்தில், கிரீமியா பிரச்சினைக்குரியதாக மாறலாம். அப்பகுதி ஒரு காலத்தில் ரஷ்யாவுக்கு சொந்தமானது என்பதையும், குருஷேவ் காலத்தில் உக்ரைனுக்கு தாரை வார்க்கப் பட்டது என்பதையும், நிகழ்கால ரஷ்ய அரசு சுட்டிக்காட்டி உரிமை கோரலாம். அதே நேரம் உக்ரைனின் மேற்கு பகுதியில் (மொல்டோவிய என்ற நாட்டின் ஒரு பகுதியான) "ட்ரான்ஸ் ட்நியெஸ்தர்" என்ற அங்கீகரிக்கப்படாத தனி நாடு ஒன்றில் ரஷ்ய இராணுவம் தளம் அமைத்துள்ளது. அப்காசியா, தெற்கு ஒசேத்தியா போன்றே, டிரான்ஸ் ட்நியெஸ்தர் சுதந்திரப்பிரகடனம் ரஷ்யாவினால் அங்கீகரிக்கப்படலாம்.

"நாம் புதிய பனிப்போருக்கும் அஞ்சவில்லை" என்று ரஷ்ய ஜனாதிபதி மெட்வெடேவ் அறிவித்திருப்பதானது, ரஷ்யா இந்த நெருக்கடியை ஏற்கனவே எதிர்பார்த்தது, என்பதை குறிப்பிடுகின்றது. தாம் நினைப்பது போல, தமது நலனுக்காக மட்டுமே உலகம் இயங்க வேண்டும் என்பது, மேற்குலக அரசியல்வாதிகளின் அவா. இதுவரை ரஷ்யா பல விடயங்களில் மேற்குலகுடன் ஒத்துழைத்தது. ஆனால் அந்த நிலைப்பாடு இனி மாறலாம். ரஷ்யாவை தண்டிக்க நினைக்கும், மேற்குலக நாடுகள் விரைவிலேயே அதன் எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்.

வட கொரியா, ஈரான் போன்றவற்றின் அணுவாயுத தயாரிப்பை தடுக்க நினைக்கும், மேற்குலக பிரயத்தனத்திற்கு ரஷ்யாவின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம். அதே நேரம் பல அமெரிக்க எதிர்ப்பு நாடுகள்(ஈரான், வெனிசுவேலா போன்றன), பனிப்போர் நெருக்கடியை தமக்கு சாதகமாக பயன்படுத்த காத்திருக்கின்றன. ஏற்கனவே முன்னாள் சோவியத் நட்பு நாடான சிரியா, ரஷ்யாவின் நவீன ஆயுதங்களை வாங்க விரும்புகின்றது. முக்கியமாக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மீது சிரியா கண்வைத்துள்ளது. அதற்கு மாறாக, சிரியாவுக்கு சொந்தமான மத்தியதரைக் கடல் பகுதியில் ரஷ்ய கடற்படைத்தளம் அமைத்துக்கொள்ள இணங்கியுள்ளது.

வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்களின் நஷ்டத்தால், பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கும் அமெரிக்கா ஒரு பக்கம். பெட்ரோல் விலையேற்றத்தால் அதிக லாபம் சம்பாதித்த ரஷ்யா மறுபக்கம். வருடக்கணக்காக நீடிக்கும் டாலரின் மதிப்பு சரிவு, வங்கிகளின் வருமான இழப்பு என்பனவற்றால், ஐரோப்பிய நாடுகள் கூட அமெரிக்காவில் தங்கியிருக்க முடியாது என்ற நிலையை தோற்றுவித்துள்ளது. இதனால் சீனா, ரஷ்யா போன்ற வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் (ரஷ்யா பொருளாதாரம் ஆண்டொன்றுக்கு 7 % வளர்கின்றது), முதலீடு செய்ய யோசித்து வருகின்றன. இதனால் தற்போது நிலவும் "பனிப்போர் அபாயம்" எதிர்காலத்தில் பல இராஜதந்திர பேரம் பேசல்களை ஏற்படுத்தலாம்.



முன்னைய பதிவுகள்:

1.இனங்களின் சமாதானமும் ரஷ்யாவின் வெகுமானமும்
2.அணுவாயுத போரின் விளிம்பில் ஐரோப்பா?
3.விளாடிமிர் புட்டின் தயாரிப்பில் "ருஸ்ய ரூபம்"


Tell a Friend

Sunday, August 17, 2008

அணுவாயுத போரின் விளிம்பில் ஐரோப்பா?

ஐரோப்பா மீண்டும் அணுவாயுத பேரழிவை நோக்கி நகர்த்தப்படுகின்றது. கண்டம் விட்டு கண்டம் பாயும் அமெரிக்க ஏவுகணைகளை தனது நாட்டினுள் வைத்திருக்க, போலந்து அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. உக்ரைனும் அதே வழியில் அமெரிக்காவுடன் நெருக்கமாகலாம். 20 ம் நூற்றாண்டு "பனிப்போர்" காலகட்டத்தில் நடந்தது போன்றே, நிகழ்கால பூகோள அரசியல் மாற்றங்கள் உள்ளன. பலமுறை வரலாறு திரும்புகின்றதா, என்ற சந்தேகம் எழுவது இயல்பு.

போலந்தில் நிறுவப்படும் ஏவுகணைகள், ஈரான் போன்ற "முரட்டு நாடுகளில்" இருந்து வரும் அச்சுறுத்தலை தடுக்கவே, என்று அமெரிக்க அரசு கூறுகின்றது. ஆனால் இந்தக் கதையாடல்களை ரஷ்யா ஏற்கத்தயாராக இல்லை. போலந்து நோக்கி அணுகுண்டு பொருத்தப்பட்ட ஏவுகணைகளை நிறுத்தி வைக்கப் போவதாக ரஷ்ய பிரதி இராணுவ தளபதி கூறியுள்ளார். மேலும் போலந்து வடக்கு எல்லையோரமாக உள்ள, இன்னும் ஜெர்மனிக்கும் அருகில் உள்ள, "காலினின் கிராத்" என்ற ரஷ்யாவின் பகுதியில், அணுவாயுத ஏவுகணைகள் பொருத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஜோர்ஜிய போரானது, "பழைய ஐரோப்பா", "புதிய ஐரோப்பா" என்று இரு கருத்து வேறுபாடுகள் கொண்ட முகாம்களை உருவாக்கியுள்ளது. ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவுடன் மோத விரும்பாமல், நல்ல உறவைப் பேண விரும்புகின்றன. அதற்கு மாறாக போலந்து போன்ற புதிய கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ரஷ்ய ஏகாதிபத்திய விஸ்தரிப்பு கட்டுப்படுத்தப் பட வேண்டும் என்று கூறி வருகின்றன. 20 ம் நூற்றாண்டில், சோவியத் யூனியனின் ஆதிக்கத்தின் கீழ், சோஷலிச முகாமாக இருந்த காலகட்டத்தை, அவை தற்போது நினைவு கூறுகின்றன. சோவியத் வீழ்ச்சியின் பின்னர் அதிகாரத்தை கைப்பற்றிய கிழக்கு ஐரோப்பிய ஆட்சியாளர்கள், தீவிர அமெரிக்க(அல்லது மேற்குலக) ஆதரவாளர்கள்.
அரசன் எவ்வழியோ, குடிமக்களும் அவ்வழியே அமெரிக்க பக்தர்களாக காட்சிதருகின்றனர்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் மேற்குலக சார்பு குணாம்சம், 20 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்தே வரும் அரசியல் தொடர்ச்சி தான். 1917 ம் ஆண்டு, ரஷ்யாவில் கம்யூனிச புரட்சி வெற்றி பெற்ற கையோடு, லெனின் போலந்திற்கும் செம்படையை அனுப்பி வைத்தார், அங்கேயும் புரட்சிக்கு மக்கள் ஆதரவு கிட்டும் என்ற நினைப்பில். ஆனால் போலந்து தேசிய படைகளின் மூர்க்கமான எதிர்ப்பிற்கு முகம் கொடுக்க மாட்டாமல், செம்படை திரும்பி வந்தது. அப்போது ஸ்டாலின் கூறியதானது, "போலந்தை விட்டுவிடுங்கள், அவர்கள் கத்தோலிக்கர்கள், தேசியவாதிகள், நம்மோடு ஒத்துழைக்க மாட்டார்கள்." போலந்து குறித்த லெனினின் கணிப்பீடு பிழைத்த போது, ஸ்டாலினின் கூற்று நிதர்சனமானது.

போலந்து போலவே இன்று ஐரோப்பிய யூனியனிலும், நேட்டோவிலும் சேர்ந்துள்ள, முன்னாள் சோவியத் பால்ட்டிக் குடியரசுகளான, எஸ்தோனியா, லத்வியா, லிதுவேனியா ஆகிய நாடுகளும், தீவிர ரஷ்ய எதிர்ப்பாளர்கள் தான். எந்த அளவுக்கு என்றால், 2 ம் உலக யுத்த காலத்தில் ஹிட்லரின் நாஸிப் படைகளுடன் சேர்ந்து போரிட்ட முன்னாள் இராணுவவீரர்களுக்கு இன்றுவரை அரச மரியாதை செலுத்தப்படுகின்றது.

இந்த புதிய ஐரோப்பிய நாடுகள் அனைத்தும், அமெரிக்கா ரஷ்யாவுடன் இராணுவ மோதலுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றன. அதனாலேயே ஜோர்ஜியாவில் ரஷ்யா படையெடுத்த காரணத்தை காட்டி, நேட்டோவின் விரிவாக்கம், அமெரிக்க (அணுவாயுத)ஏவுகணைகள் நிறுத்துதல் போன்றவற்றை நியாயப்படுத்த பார்க்கின்றன. மேற்கு ஐரோப்பாவோ அதே காரணத்தை காட்டி, இதெல்லாம் உங்களுக்கு வேண்டாம், என்று கூறுகின்றன.

இதற்கிடையே ஜோர்ஜிய போரின் போது, "கோரி" நகரில் இருந்த ஜோர்ஜிய இராணுவ நிலைகள் மீது ரஷ்ய விமானங்கள் குண்டுவீசித் தாக்கிய போது, சில அமெரிக்க இராணுவ ஆலோசகர்களும் பலியாகியிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. அங்கு ஏற்கனவே 172 அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள், ஜோர்ஜிய இராணுவத்திற்கு பயிற்சியளித்து வந்தனர். ஜோர்ஜியாவில் ரஷ்ய படையெடுப்பை காட்டி, ரஷ்யாவுடன் புதிய பனிப்போரை ஆரம்பிப்பது, அமெரிக்க கடும்போக்காளரின் அரசியல் திட்டமாக உள்ளது. வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில், புஷ்ஷின் குடியரசு கட்சி வேட்பாளர் மக் கெயினை வெற்றி பெற செய்வதற்கு, ரஷ்யாவுடனான முறுகல் நிலை பயன்படலாம்.


இது தொடர்பான கடந்தகால பதிவுகள் :
ஜோர்ஜியா: பனிப்போர் இரண்டாம் பாகம் ஆரம்பம்
விளாடிமிர் புட்டின் தயாரிப்பில் "ருஸ்ய ரூபம்"
அமெரிக்க தொலைக்காட்சியின் தணிக்கை அம்பலம்

____________________________________________________

Thursday, August 14, 2008

விளாடிமிர் புட்டின் தயாரிப்பில் "ருஸ்ய ரூபம்"

"ரஷ்யர்கள் வந்துவிட்டார்கள்!", என்ற வதந்தி கிளப்பிய பீதியினால், பல்லாயிரக்கணக்கான ஐரோப்பியர்கள் அமெரிக்காவிற்கு அகதிகளாக சென்ற காலம் ஒன்றுண்டு. 2 ம் உலக யுத்த முடிவில், ஐரோப்பாவை சித்தாந்தரீதியாக பிளவுபடுத்த, "ஜனநாயக தலைவர்களால்" உருவாக்கப்பட்ட வதந்தி அது. ரஷ்யா(அன்று சோவியத் யூனியன்) நேச நாடுகளுக்கிடையில் போடப்பட்ட "யால்ட்டா ஒப்பந்தத்தை" நிரந்தரம் என்று நம்பிக் கொண்டிருந்த நேரம் தான்; மேற்குலக வல்லரசுகளின் சதியினால், "பெர்லின் பிரச்சினை" என்ற ஒன்று புதிதாக கிளப்பப்பட்டு, அது பின்னர் "பனிப்போர்" ஆனது வரலாறு. அன்று கூட ஆரம்பத்தில் யாரும் இந்த வல்லரசுப் போட்டியை கவனமெடுக்கவில்லை. "பனிப்போர்" என்ற சொற்பதம் புழக்கத்திற்கு வர நீண்ட காலம் எடுத்தது.

நீடித்த பனிப்போர் ஆயுத போட்டியை அதிகரித்து நாடு திவாலாகியதால், எண்பதுகளின் இறுதியில் சோவியத் ஜனாதிபதியான கோர்பசேவ், அமெரிக்காவுடன் சமாதானமாகப் போனால் நாடு முன்னேறும் என்று அப்பாவித்தனமாக நம்பி, பனிப்போரை முடிவுக்கு கொண்டுவந்தார். இரு நாடுகளுக்கிடையிலும் போடப்பட்ட ஒப்பந்தப்படி, கிழக்கு ஐரோப்பாவில் இருந்து சோவியத் படைகளை மீளப்பெற்றதுடன், வர்ஷோ (இராணுவ) ஒப்பந்த கூட்டமைப்பை கலைத்து, பேரழிவு தரும் ஆயுதங்களும் அழிக்கப்பட்டன. இறுதியில் சோவியத் யூனியன் உடைந்து சிதறி, சோஷலிச நாடுகள் யாவும் முதலாளித்துவ நாடுகளாகவும் மாறி விட்டன. அன்று பலர், உலக அழிவு காப்பாற்றப்பட்டு விட்டது என்றும், இராணுவமயமாக்கல், ஆயுதக்குவிப்பு போன்றன இனி இருக்காது என்றும், பல்வேறு கனவுகளில் மிதந்தனர்.

சமாதான விரும்பிகளின் பகற்கனவு பலகாலம் நீடிக்கவில்லை. வர்ஷோ ஒப்பந்த இராணுவ கூட்டமைப்பு கலைக்கப்பட்டாலும், வட அட்லாண்டிக் ஒப்பந்த இராணுவ கூட்டமைப்பு (நேட்டோ) அப்படியே இருந்தது. அதுமட்டுமல்லாமல், முன்னாள் வர்ஷோ ஒப்பந்த நாடுகளையும் புதிய அங்கத்துவர்களாக சேர்த்துக் கொண்டு விரிவடைந்தது. புதிய அங்கத்தவர்களுக்கு ஆயுதங்கள் விற்பதன் மூலம், அமெரிக்கா தனது ஆயுதக்குவிப்பை தொடர்ந்தது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, அமெரிக்கா உலகின் ஒரே வல்லரசு தான் மட்டுமே என்ற மமதையில், ஐக்கிய நாடுகள் சபையையும் மதிக்காமல், உலக போலீஸ்காரனாக மாறியது.

மறுபக்கத்தில் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் மிகப்பெரிய நாடான ரஷ்யா, மேற்குலக சார்பு ஜனாதிபதி யெல்ட்சின் தலைமையில் சீர்குலைந்து போய்க்கொண்டிருந்தது. நாட்டு பொருளாதாரம் வங்குறோத்தாகி, பணக்கார நாடுகளின் பிச்சையை எதிர்பார்த்து நின்றது. தேசிய நாணயமான ரூபிளின் மதிப்பிறங்கி, சாதாரண மக்கள் கூட அமெரிக்க டொலர்களை பயன்படுத்த விரும்பினர். ஆலைத் தொழிலாளர்கள், அரச ஊழியர்கள் மட்டுமல்ல, இராணுவ வீரர்களும் மாதக்கணக்காக சம்பளம் கிடைக்காமல், குடும்பத்தை பராமரிக்க கஷ்டப்பட்டனர். இதே நேரம் புதிதாக கோடீஸ்வரர்களான சிலர், அநியாயமாக சேர்த்த செல்வத்தை கொண்டு போய், மேற்கு ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் முதலீடு செய்து கொண்டிருந்தனர்.


ரஷ்யா 21 ம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்த போது நிலைமைகள் மாற ஆரம்பித்தன. முன்னாள் கே.ஜி.பி. உளவுத்துறை அதிகாரியான விளாடிமிர் புட்டின் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட போது, அவரும் "யெல்ட்சின் வழி"யில் செல்ல வேண்டும் என்று மேற்குலக நாடுகள் விரும்பின. ஆட்சிக்கு வந்தவுடன் புட்டின் செய்த முதல் வேலை, ரஷ்யாவின் செல்வத்தை சூறையாடி, வெளிநாடுகளுக்கு கப்பலேற்றிக் கொண்டிருந்த கோடிஸ்வரர்களை தனது எதிரிகளாக்கியது தான். வரிஏய்ப்பு குற்றச்சாட்டுகளை காரணமாக காட்டி, சில கோடிஸ்வரர்களை சிறையிலிட, மற்றவர்கள் நாட்டை விட்டே ஓடிப்போனார்கள்.

அந்த இடத்தில், வர்த்தக நிறுவனம் சம்பாதிக்கும் லாபத்தை ரஷ்யாவிலேயே முதலீடு செய்யும், தேசிய முதலாளிகள் வந்தார்கள். தொழிலாளர்களின் சம்பளப்பணம், ஓய்வூதியம் என்பன கிரமமாக வழங்கப்பட்டன. பொருளாதார சீர்குலைவு தடுக்கப்பட்டு, தேசிய பொருளாதாரம் வளர்ந்துகொண்டே போனது. இவையெல்லாம் நல்லது தானே, என்று பலர் நினைக்கலாம். ஆனால் நமக்கு நல்லதாகப் படுவது, மேற்குலகிற்கு கெட்டதாகப் படுகின்றது. புட்டின் ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் பற்றி, மேற்குலக ஊடகங்கள் விலாவாரியாக எடுத்தியம்பி, மக்கள் மனதில் ரஷ்ய எதிர்ப்பு(அல்லது புட்டின் எதிர்ப்பு) உணர்வுகளை தூண்டி விட்டன.

2000 ம் ஆண்டு, சி.என்.என். தொலைக்காட்சி விவரணப்படம் ஒன்று, எளிதில் நம்ப முடியாத கதையை கொண்டு வந்தது. அதாவது, பனிப்போர் காலத்தில் இருந்தது போலவே, இன்றும் அமெரிக்க ஏவுகணைகள் ரஷ்யாவை நோக்கி இருக்கின்றன. ரேடர்கள் ரஷ்ய இராணுவ நகர்வுகளை கண்காணிக்கின்றன என்ற தகவலானது, அமெரிக்கா இன்றும் ரஷ்யாவை முக்கிய எதிரியாக பார்க்கின்றது, என்பதை அமெரிக்க உயர் அதிகாரிகளின் வாக்குமூலம் எடுத்து காட்டியது. ரஷ்யா இன்றும் அணுவாயுத வல்லரசு என்பது மட்டுமல்ல, உலகில் பெருமளவு பெட்ரோலிய, எரிவாயு வளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதனால் பொருளாதரீதியாக வளர்ச்சியடைந்த ரஷ்யா, எதிர்காலத்தில் தன்னோடு ஏகாதிபத்திய போட்டியில் இறங்கும் என்பதை அமெரிக்கா எப்போதோ கணித்து வைத்துள்ளது.

நேட்டோ இராணுவ கூட்டமைப்பின் விரிவாக்கம் என்பது, ரஷ்யாவை சுற்றி வளைத்து முன்னரங்க காவல்நிலைகளை கட்டும் நோக்கம் கொண்டது என்பதை ரஷ்ய அரசாங்கம் உணராமல் இல்லை. கொசோவோவிற்கு சுதந்திரம் வழங்கியது கூட, முன்னாள் யூகோஸ்லேவியாவில் ரஷ்ய செல்வாக்கை கட்டுப்படுத்தும் நோக்கில் தான். கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல, சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த குடியரசுகள் கூட, நேட்டோ அங்கத்துவராவதை ரஷ்யா எப்போதும் எதிர்த்து வந்தது. மேற்குலகமோ ரஷ்ய எதிர்ப்பை கணக்கெடுக்காமல், தம் பாட்டில் போய்க் கொண்டிருந்தன. அதே நேரம், ரஷ்யாவை குஷிப்படுத்தும் நோக்கில், உலக வர்ததக நிறுவனம், பணக்கார நாடுகளின் G7 அமைப்பு ஆகியவற்றில் உறுப்பினராக்கின.

அண்மைக்காலமாக முன்னாள் சோவியத் குடியரசுகளான ஜோர்ஜியா, உக்ரைன் போன்ற நாடுகளில் ஏற்பட்ட "புரட்சிகள்", ரஷ்யாவின் கடுமையான கண்டனத்தை சம்பாதித்தன. ஏனெனில் உண்மையில், அமெரிக்க கோடீஸ்வரனின் "சோரோஸ் பவுன்டேஷன்" போன்ற NGO க்களின் உதவியினால், பெருமளவு பணத்தை கொட்டி தயார்படுத்தப்பட்ட சதிப்புரட்சிகள் தான், மேற்குறிப்பிட்ட "மக்கள் புரட்சிகள்" யாவும். இவற்றின் முக்கிய நோக்கம், ரஷ்ய சார்பு அரசியல் தலைவர்களை ஓரங்கட்டுவதும், மேற்குலக சார்பு தலைவர்களை பதவியில் அமர்த்துவதும் தான். அப்போதெல்லாம் ரஷ்யா வெறும் கண்டனங்களோடு நிறுத்திக் கொள்ளும்.

தகுந்த தருணம் பார்த்து காத்திருந்த ரஷ்யாவிற்கு, ஜோர்ஜிய ஜனாதிபதி சகாஷ்விலியின் பின்விளைவுகளை உணராத, விவேகமற்ற இராணுவ சாகசம் வழிசமைத்துக் கொடுத்தது. அமெரிக்க, இஸ்ரேலிய இராணுவ ஆலோசகர்களால் பயிற்சியளிக்கப்பட்ட ஜோர்ஜிய இராணுத்தின் திறமை மீது அதீத நம்பிக்கை வைத்த காரணமாகவோ, அல்லது அமெரிக்க படைகள் வரும் என்று நம்பியோ, சகாஷ்விலி "தெற்கு ஒசெத்திய" மீதான இராணுவ நடவடிக்கையை தொடங்கியிருக்கலாம். ஆனால் ரஷ்ய இராணுவத்தின் மின்னல் வேக பதிலடியை கடைசி வரை எதிர்பார்க்கவில்லை. ஜோர்ஜிய அரசு மட்டுமல்ல, மேற்குலக அரசுகளும் அதிர்ச்சியில் உறைந்து போயின. ஜோர்ஜிய படைகள் புறமுதுகு காட்டி ஓடவும், ரஷ்ய படைகள் ஜோர்ஜிய பகுதிகளை ஆக்கிரமிக்கவும்; ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்று சமாதானமாகப் போக வேண்டிய நிலை ஜோர்ஜியாவிற்கு ஏற்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவும் ரஷ்யாவும் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டாலும், ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா.தடை சாத்தியமில்லை. அமெரிக்கா செய்யக் கூடியது, உலகப் பொருளாதார நிறுவனம், G 7 ஆகியவற்றில் ரஷ்யாவின் உறுப்புரிமையை பறிப்பது தான். ஆனால் இவை அதிக பலன் தரப்போவதில்லை. ரஷ்யா ஏற்கனவே சீனா, ஈரான், போன்ற பொருளாதாரக் கூட்டாளிகளை சேர்த்துள்ளது. பனிப்போர் காலத்தை போலவே, கியூபா போன்ற நாடுகளின் நட்புறவை புதுப்பித்துள்ளது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்த வரை, ரஷ்யாவுடன் நல்லுறவைப் பேணவே விரும்புகின்றன. ஏனெனில் தற்போது ஐரோப்பிய வர்த்தகத்தில் ரஷ்யாவின் கை ஓங்கியுள்ளது. மேற்கு ஐரோப்பா தனது எரிவாயு தேவைக்கு ரஷ்யாவில் பெரிதும் தங்கியுள்ளது. அண்மையில் கூட உக்ரைனிடம் இரண்டு மடங்கு விலை கேட்டு, ரஷ்யா எரிவாயு குழாய்களை மூடி விட்டது. இதனால் இத்தாலி, ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளும் பாதிப்படைந்தன.

தெற்கு ஒசெத்தியாவில் ஜோர்ஜியா கைவைக்கப் போய் வந்த போரின் விளைவாக, அந்நாட்டில் திட்டமிடப்பட்ட அசர்பைஜானிலிருந்து துருக்கி வரையான எண்ணை குழாய் அமைக்கும் பணியை நிறுத்தியுள்ளதாக, அதனை நிர்மாணித்துக் கொண்டிருந்த BP தெரிவித்துள்ளது. இது போன்றே பல வெளிநாட்டு முதலீடுகளை இழக்க வேண்டி வரலாம். இது ஜோர்ஜிய அபிவிருத்தியை பின்னோக்கி தள்ளும். மேலும் (கடுமையான ரஷ்ய எதிர்ப்பு காரணமாக) நேட்டோ உறுப்புரிமை நிறைவேறாத கனவாகவே போகலாம். இதை விட தற்போதைய ஜனாதிபதி சாகஷ்விலியே, எல்லாவற்றிக்கும் பொறுப்பெடுக்க வேண்டும் என்று கணிசமான ஜோர்ஜிய மக்கள் நம்புவதால், இந்த அரசாங்கம் நீண்ட காலம் நிலைத்து நிற்கப் போவதில்லை. தெற்கு ஒசெத்தியாவை காரணமாக வைத்து தொடங்கிய ரஷ்யாவின் இராணுவ பதிலடி, ஜோர்ஜியாவில் தனக்கு சார்பான மாற்று அரசாங்கம் அமைப்பதையே இறுதி லட்சியமாக கொண்டுள்ளது.



ஜோர்ஜியா: பனிப்போர் இரண்டாம் பாகம் ஆரம்பம்
______________________________________________________

Friday, April 11, 2008

வட கொரியாவில் அகதித் தஞ்சம் கோரிய அமெரிக்கர்கள்!

ஒரு பெரும் நகரத்தையே இரண்டாக பிரித்த பெர்லின் மதில் கட்டப் பட்டுக் கொண்டிருந்த நேரம், கம்யூனிச கிழக்கு பெர்லின் எல்லையில் காவல் கடமையில் இருந்த ஒரு போர் வீரன், தன் துப்பாக்கியை கீழே போட்டு விட்டு, "சுதந்திர" மேற்கு பெர்லின் நோக்கி ஓடும் காட்சியை எடுத்த புகைப்படம் உலகப்புகழ் பெற்றது (அல்லது பெற வைக்கப் பட்டது).

அந்தப் படம் தற்போதும், அமெரிக்க, மேற்கு-ஐரோப்பிய நாடுகளின் சரித்திர நூல்களில் பதிப்பிக்கப் பட்டு, "கம்யூனிச சர்வாதிகாரத்தில்" இருந்து "சுதந்திர மேற்கு" நோக்கி இடம்பெயர்ந்த "வீர மக்கள்" பற்றிய கதைகள், பாடசாலை பிள்ளைகளுக்கு போதிக்கப் படுகின்றது. அதேபோல் கம்யூனிச நாடுகளுக்கு இடம்பெயர்ந்தவர்கள் பற்றி யாருக்கும் தெரியக் கூடாது என்று கவனமாக இருக்கின்றனர்.

கொரிய போர் முடிந்து, கொரிய மக்கள் ஜனநாயக குடியரசு (வட கொரியா) உருவான போது, லட்சக் கணக்கான கொரியர்கள், ஜப்பானில் இருந்து போய் குடியேறினர். அதே போலே இரண்டு கொரியாக்களையும் பிரிக்கும் எல்லையில், காவல் கடமையில் இருந்த சில அமெரிக்க இராணுவ வீரர்களும், வட கொரியா நோக்கி ஓடிப்போய், ராஜ போக வாழ்க்கை வாழ்கின்றனர்.

இவர்களைப் பற்றிய தகவல்களை, அமெரிக்க அரசாங்கம் இரகசியமாக வைத்திருந்தது. ஒரு சில வருடங்களுக்கு முன்னர், ஒரு வயதான அமெரிக்கர், தனது ஜப்பானிய மனைவியுடன் இணையும் நோக்கில் வெளியுலகம் வந்த படியால் கைது செய்யப்பட்டார். அந்தச் சம்பவம், ஊடகங்களில் சர்வதேச செய்தியாகிய பின்னர் தான், இந்த தகவல்கள் உண்மை என்பது உலகிற்கு தெரிந்தது.

அந்த சம்பவத்தின் பின்னணியை ஆராய்ந்த இரண்டு பிரிட்டிஷ் இளைஞர்கள், “Crossing the Line” என்ற பெயரில் ஓர் ஆவணப்படம் தயாரித்தனர். ட்றேச்நோக் என்ற அமெரிக்க வீரர், தென் கொரியாவையும், வட கொரியாவையும் பிரிக்கும் எல்லைக்கோட்டில் கடமையாற்ற பணிக்கப்பட்டவர். தனக்கு எதிரான இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு அஞ்சி, கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட எல்லையை கடந்து, வட கொரிய சென்று தஞ்சம் கோரும் காட்சியுடன் படம் ஆரம்பமாகின்றது.

ஆரம்பத்தில் அவர் ஓர் அமெரிக்கர் என்பதால், அவரைக் கொலை செய்ய நினைத்த வட கொரியர்கள், பின்னர் மனம் மாறி, தலைநகர் பியங்கியாங்கிற்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கே நடந்த விசாரணையில், ஒரு சாதாரண போர்வீரர் என்பதை அறிந்து கொண்ட கொரியர்கள், பின்னர் அவரை பிற அமெரிக்க வீரர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.

இவரைப் போன்று, நான்கு அமெரிக்கர்கள், வட கொரியாவில் அறிமுகமாகினர். அவர்கள் புகலிடம் கோரிய அந்நிய நாட்டில், பல கலாச்சார சிக்கல்களை எதிர் கொண்டனர். கொரியர்கள் மட்டும் வாழும் அந்த நாட்டில், தாம் அமெரிக்கர்கள் என்பதால் வெறுக்கப் படுவதாக உணர்ந்தனர். அதற்கு முன்னர் நடந்து முடிந்த கொரியப் போரில், அமெரிக்கா குண்டு வீசி, பல பொதுமக்களை கொன்றுள்ளதால், அனைத்து கொரியர்களும் தம்மை வெறுப்பதாக கலாச்சார அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

வட கொரியாவில் இருந்து தப்பிச் செல்வதற்காக, சோவியத் தூதுவராலயத்தில் தஞ்சம் கோரினார்கள். தாம் ஐரோப்பிய இனத்தவர் என்பதால், ரஷ்யர்கள் தம்மை பாதுகாப்பார்கள் என்ற எண்ணம் இருந்தது. அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, ரஷ்யர்கள் அவர்களை கொரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்கள்.

வசமாக மாட்டிக் கொண்ட நான்கு அமெரிக்கர்களும், கொரியர்கள் தம்மை சிறையில் அடைத்து சித்திரவதை செய்யபோவதாகஅஞ்சினார்கள். அவர்கள் நினைத்தற்கு மாறாக, கொரியர்கள் அவர்களை அரசியல் பாடசாலைக்கு அனுப்பி, கொரிய சரித்திரம், கலாச்சாரம், சித்தாந்தம் போன்றவற்றை போதித்தார்கள்! அன்றிலிருந்து அந்த நான்கு அமெரிக்கர்களும் வட கொரியாவில் தங்கிவிட தீர்மானித்தார்கள்.

அந்த அமெரிக்கர்கள், கொரியப் பெண்களை மணந்து கொண்டு, அங்கேயே தங்கிவிட்டனர். வட கொரிய அரசு, அவர்களுக்கு வீட்டு வசதிகளை செய்து கொடுத்ததுடன், தன் நாட்டுப் பிரஜைகளாக ஏற்றுக் கொண்டது. இந்த ஆவணப் படத்தின் நாயகன் ட்றேஸ்நோக், ஒரு ரோமானிய பெண்ணை மணம் முடித்து, இரண்டு ஆண் பிள்ளைகளுடன் அமைதியான குடும்ப வாழ்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது மகன் தன்னை ஒரு கொரியனாக அடையாளப் படுத்துவதுடன், எதிர்காலத்தில் இராஜ தந்திரியாக பணி புரிய ஆசைப்படுகின்றார்.

ஆவணப் படத்தில் வரும் நான்கு அமெரிக்கர்களில் ஒருவர், கொரியர்களால் கடத்தப்பட்ட ஒரு ஜப்பானிய பெண்மணியை திருமணம் செய்த படியால் தான், இந்தத் தகவல்கள் வெளியுலகிற்கு தெரிய வந்தன. வட கொரிய உளவாளிகளுக்கு, ஜப்பானிய மொழி சொல்லிக் கொடுக்கும் நோக்கில் கடத்தப்பட்ட அந்தப் பெண்மணி, பின்னர் ஜப்பானிய அரசுடன் செய்து கொள்ளப் பட்ட உடன்படிக்கையின் படி திருப்பி அனுப்பப் பட்டார்.

ஜப்பானிய மனைவியைத் தேடிச் சென்ற அமெரிக்கக் கணவர், ஜப்பானிய பிரதமர் தடுத்தும் கேளாமல், அமெரிக்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார். அது பின்னர் உலக செய்தியானது. கைது செய்யப்பட்டவர், அப்போது தன்னை விடுவித்து விடுவார்கள் என்று நினைத்து, வட கொரிய அரசினால் தனக்கு ஆபத்து என்று பொய் சொன்னதாக, இந்த ஆவணப் படத்தில் தெரிவித்துள்ளார்.

எனது நண்பர் ஒருவருக்கு பழக்கமான ஒரு வட கொரியர், தனது நாட்டில் உள்ள அடக்குமுறைகள் பற்றிக் கூறிய விளக்கங்கள், பலருக்கு சிரிப்பை வரவழைக்கலாம். கிழமைக்கு நாற்பது மணித்தியாலம் வேலை நேரத்திற்கும் அப்பால், ஒரு நாள் கட்டாய அரசியல் வகுப்பில் பங்கு பற்ற வேண்டும், என்ற நடைமுறை உள்ளதாக தெரிவித்தார்.

சாதாரண தொழிலாளிகள் கூட, அரசியல், சமூகவியல், சரித்திரம் கற்பது ஒரு சிலருக்கு "அடக்குமுறை" போல தெரிகின்றது. சர்வதேச நாடுகளினால் திரிக்கப் பட்ட பொய்கள், தற்போது நம்பகத் தன்மையை இழந்து வருகின்றன.

உண்மையில், வட கொரியாவில் சர்வாதிகார ஆட்சி இருந்திருந்தால், அந்த அமெரிக்கர்கள் சோவியத் தூதுவராலயத்தில் தஞ்சம் கோரியிருக்க முடியாது. அது மட்டுமல்ல, அவர்களது தப்பி ஓடும் முயற்சிக்காக சிறையில் அடைத்து வைக்கப் பட்டிருக்க வேண்டும். அதற்கு மாறாக, அவர்களுக்கு அரசியல் பாடம் கற்பித்தவுடன் நில்லாது, திரைப்பட துறையில் தொழில் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தனர்.

ஆவணப்படம் தயாரித்தவர்கள், “அரசின் பிரச்சாரப் படங்களில் நடித்தீர்களா?" என்று கேட்டதற்கு, ட்றேஸ்நோக் சரியான பதிலடி கொடுத்தார். கொரியாவில் அமெரிக்கா செய்த கொடூரங்கள், ஏற்கனவே ஆவணப் படுத்தப் பட்டுள்ள நிலையில், அதைப் பற்றி படம் தயாரித்தால், அது எப்படி "பிரச்சாரப் படம்" ஆகும்? அப்படிப் பார்த்தால் தற்போது வரும் ஹோலிவூட் படங்கள் பல, அமெரிக்க அரசின் கொள்கைகளை பிரதிபலிக்கும் பிரச்சார படங்களாக கருத இடமுண்டு.

தலைநகர் பியங்கியாங்கில் கூட தண்ணீர் தட்டுப்பாடு , மின்சார வெட்டு முதலிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் ட்றேஸ்நோக் குடும்பம், இன்று வரை வட கொரியா அரசாங்கத்திற்கு, மறைந்த தலைவர் கிம் உல் சுங்கிற்கு, தனித்துவமான ஜூகே கொள்கைக்கு விசுவாசமாக இருப்பதை காட்டுவதுடன் அந்த ஆவணப் படம் முடிகின்றது. நாட்டில் நிலவிய கடுமையான பஞ்சத்தால், லட்சக்கணக்கான மக்கள் மடிந்த போதும், தமக்கு உணவு கிடைத்து வந்ததாக இந்த குடும்பத்தினர் நன்றியுடன் நினைவு கூர்கின்றனர்.

அந்தப் ஆவணப் படத்தில், ஒரு குறிப்பிடத் தக்க காட்சி வருகின்றது. பல வட கொரியர்கள் இன்று ஆங்கில பாடம்கற்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம், இன்றைய தொழில்நுட்பம் பற்றி கற்பதற்கு ஆங்கிலம் அவசியமாகவுள்ளது என்பது தான். நமது மக்களைப் போன்று, “உலகம் முழுவதும் சுற்றுவதற்கு ஆங்கிலம் படிக்கவில்லை.” கொரிய மக்கள் அமெரிக்காவின் வல்லரசு ஆதிக்கத்தை மட்டுமே வெறுக்கின்றனர். அமெரிக்க மக்களையோ, அல்லது ஆங்கில மொழியையோ அவர்கள் வெறுக்கவில்லை என்ற உண்மை படத்தில் அழுத்திக் கூறப்பட்டுள்ளது.

இந்தப் படம் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் பரப்பி வரும் பொய்களுக்கு, பதிலடி கொடுக்கின்றது. வட கொரியாவில் வாழும் மக்கள், “ஒரு திறந்தவெளி சிறைச்சாலைக்குள்” வாழ்வதாக கூறி வந்த பொய்களை இந்தப் படம் உடைக்கின்றது. இதைப் போன்று, டச்சு திரைப்பட துறையினர் தயாரித்த, "வட கொரியாவில் ஒரு நாள்" என்ற படமும், வட கொரியர்கள் பிறரைப் போல சாதாரண வாழ்க்கை வாழும் மக்கள் தான் என்று நிரூபித்தது. அது தான் உண்மையும் கூட.

வட கொரியர்களும், பிற நாட்டு மக்களைப் போல, தமது வேலை, குடும்பம், வருமானம் என்று வாழ்பவர்கள் தான். பொது மக்கள் தமது அடிப்படை தேவைகளைப் பற்றியே சிந்திக்கின்றனர். தாம் வாழ்வது ஒரு சோஷலிச நாடா? அல்லது முதலாளித்துவ நாடா? ஜனநாயக நாடா? என்று கவலைப் படுவதில்லை. இதையே தென் கொரியா வந்து தஞ்சம் கோரும், வட கொரியர்களும் கூறுகின்றனர். தென் கொரியாவில் நடக்கும் பிரச்சாரம், தமது நாட்டின் உண்மை நிலையை கூறுவதில்லை என்று இவர்கள் குறைப்படுகின்றனர். ஜெர்மனியை பின்பற்றி, கொரியாக்களை இணைக்க, பல முயற்சிகள் நடக்கின்றன. .

மேற்குலக ஊடகங்களின் பிரச்சாரம் முழுக்க, பிற தடைசெய்யப்பட்ட அரசியல் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பற்றியே இருக்கிறது. தமது அரசியல் எதிரிகளை சிறையில் போடும் விடயம், எந்த நாட்டில் இல்லை? அமெரிக்கா தமது அரசியல் எதிரிகளை "குவந்தனமோ" வில் வைத்து சித்திரவதை செய்ததை, மக்கள் அதற்கிடையில் மறந்து விட்டார்களா? வட கொரியாவிலும், அரச எதிரிகள் சிறையில் இருப்பதை மறுப்பதற்கில்லை.

இருப்பினும், பெரும்பான்மை மக்கள் அந்த அரசாங்கத்தை ஆதரிப்பதாலேயே, மேற்குலகம் எதிர்பார்க்கும் "புரட்சி" எதுவும் அங்கே நடக்கவில்லை. இந்த விவரணப் படத்தை தயாரித்தவர்கள் கூட, அமெரிக்காவுடன் யுத்தம் வந்தால், வட கொரிய அணு ஆயுதம் பயன் படுத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக உலக வல்லரசான அமெரிக்க கூட, வட கொரியா மீது கை வைக்க தயங்குவதற்கு, அணு ஆயுதம் தான் காரணம்.

ஆவணப் படங்களைப் பார்க்க கீழே உள்ள தொடுப்பை அழுத்துங்கள் :





_____________________________________________

கலையகம்