Showing posts with label ஐரோப்பா. Show all posts
Showing posts with label ஐரோப்பா. Show all posts

Monday, April 06, 2020

கொரோனா பேரிடரின் முடிவில் ஒரு சமூகப் புரட்சி வெடிக்குமா?


அன்றைய கொள்ளை நோயையும், இன்றைய கொரோனா தொற்று நோயையும் ஒப்பிட்டால் ஆச்சரியப்படத்தக்க ஒற்றுமைகள் தெரிய வருகின்றன. அன்று இத்தாலி வர்த்தகர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சர்வதேச வாணிபம் தான் பிளேக் நோய் ஐரோப்பாவில் பரவுவதற்கு காரணமாக இருந்தது. கிரீமியாவில் நடந்த யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட இத்தாலி வணிகர்களின் கப்பல்கள், அங்கு நடந்த உயிரியல் யுத்ததின் விளைவாக பெற்ற பிளேக் நோய் கிருமிகளை காவிக் கொண்டு இத்தாலிக்கு வந்து சேர்ந்தன.

தற்போது ஒவ்வொரு நாடும் தனது எல்லைகளை மூடி விட்டதைப் போன்று தான், அன்றைய ஐரோப்பிய நாடுகளும் நடந்து கொண்டன. அப்போது இத்தாலி ஒரே நாடாக இருக்கவில்லை. பல்வேறு தனித் தனி இராச்சியங்களாக பிரிந்திருந்தது. வணிகக் கப்பல்களால் தான் நோய் பரவுகிறது என்பதை கண்டு கொண்ட தெற்கு இத்தாலியில் இருந்த அரசுகள் கிரீமியாவில் இருந்து வந்த கப்பல்களை தரையிறங்க விடவில்லை. இருப்பினும் தெற்கு இத்தாலியில் ஏற்கனவே நோய் தொற்றி விட்டிருந்தது. சிசிலித் தீவு சனத்தொகையில் அரைவாசிப் பேர் பிளேக் நோயால் மரணமுற்றனர்.

இத்தாலியில் தரையிறங்க மறுக்கப்பட்ட வணிகக் கப்பல்கள் பிரான்சுக்கு சென்றன. மார்செய் துறைமுகத்தில் வணிகப் பொருட்களுடன் பிளேக் நோய்க் கிருமிகளும் இறக்குமதி செய்யப்பட்டன. அங்கிருந்து நோய் பாரிஸ் நகருக்கு பரவியது. பின்னர் பிரெஞ்சு வணிகர்களால் இங்கிலாந்தில் பரவியது. அதற்குப் பிறகு ஆங்கிலேய வணிகர்களால் ஸ்கண்டிநேவிய நாடுகளுக்கு பரப்பப் பட்டது. இவ்வாறு வணிகர்கள் தான் பிளேக் நோய்க் கிருமிகளை காவிச் சென்று பரப்பி இருந்தனர்.

இருப்பினும் பிளேக் நோய் உள்நாட்டில் பெருமளவில் பரவத் தொடங்கியதும், இது ஆரம்பத்தில் வணிகர்களால் பரப்பப் பட்டது என்ற உண்மை மறந்து விட்டது. அதே போன்றதொரு நிலைமை தான் இன்றைய கொரோனா நோய்த் தொற்று உலகம் முழுவதும் பரவக் காரணமாக இருந்தது. அதாவது "உலகின் தொழிற்சாலை" என்று கருதப்பட்ட சீனாவில் வணிகத்தில் ஈடுபட்ட அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் தத்தமது நாடுகளுக்கு திரும்பிச் சென்ற நேரம் கொரோனா வைரஸை பரப்பி விட்டனர்.

முதலாளித்துவ உலகமயமாக்கல் காரணமாகத் தான் கொரோனா வைரஸ் தொற்றியது என்பதை ஊடகங்கள் தெரிவிப்பதில்லை. ஒன்றிரண்டு தடவைகள் குறிப்பிடப் பட்டாலும் பின்னர் மறக்கப் பட்டு விட்டது. அதற்குப் பதிலாக யார் மீதாவது பழி போடும் படலம் தொடங்கியது. மேற்கத்திய நாடுகள் முழுப் பழியையும் சீனாவின் தலையில் போட்டன. மத்திய கால ஐரோப்பாவிலும் அது தான் நடந்தது. அன்றைய ஐரோப்பியர்கள் யூதர்கள் மீது பழி போட்டனர். யூதர்கள் கிறிஸ்தவப் பிள்ளைகளை கடத்திச் சென்று கொலை செய்வதாகவும், நீர் நிலைகளில் நஞ்சு கலப்பதாகவும் குற்றம் சாட்டப் பட்டனர். அதாவது யூதர்களே திட்டமிட்டு இந்த தொற்று நோயை பரப்பியதாக பெரும்பாலான ஐரோப்பிய மக்கள் நம்பினார்கள்.

சுவிட்சர்லாந்தில் ஒரு யூத வைத்தியர் கிணற்றில் நஞ்சு கலந்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டார். அவர் கடுமையான சித்திரவதைகளுக்கு பின்னர் தான் குற்றத்தை ஒப்புக் கொண்டார் என்பதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. அதை தமது குற்றச்சாட்டுகளுக்கான நிரூபணமாக எடுத்துக் கொண்டனர். அதைத் தொடர்ந்து யூதர்களுக்கு எதிரான கலவரம் வெடித்தது. ஆத்திரமுற்ற மக்கள் யூதர்களின் வீடுகளை தாக்கினார்கள். சுவிஸ் பாசல் நகரில் மட்டும் ஆறாயிரம் யூதர்களை ஒரு மரக் கட்டிடத்திற்குள் பூட்டி வைத்து எரித்துக் கொல்லப் பட்டனர். ஜெர்மனியிலும் பல நகரங்களில் யூத இனப்படுகொலை நடந்ததுள்ளது.

உலக வரலாற்றில் பரவிய பெருந்தொற்று நோய்களை எடுத்துப் பார்த்தால், ஒவ்வொரு பேரிடரின் முடிவிலும் சமூகப் புரட்சிகள் நடந்துள்ளன. பதினான்காம் நூற்றாண்டில் ஏற்பட்ட கொள்ளை நோய் எனும் பிளேக் தொற்று காரணமாக கோடிக்கணக்கான மக்கள் செத்து மடிந்தனர். ஐரோப்பிய நாடுகளின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு குறைந்தது. ஆனால், தொற்று நோய்க் காலம் முடிந்த பின்னர் கத்தோலிக்க திருச்சபையின் ஏகபோக அதிகாரம் ஆட்டம் கண்டது. புரட்டஸ்தாந்து மத எழுச்சி ஏற்பட்டது. அதைத்தவிர இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும் விவசாயிகளின், விவசாயக் கூலித்தொழிலாளர்களின் புரட்சிகள் நடந்தன. துரதிர்ஷ்டவசமாக ஆரம்பத்தில் முற்போக்கானதாக கருதப்பட்ட புரட்டஸ்தாந்து மதம், மன்னர்களுடன் ஒத்துழைத்து புரட்சியை ஒடுக்க உதவியது.

அதே போன்று இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஸ்பானிஷ் புளு எனும் வைரஸ் தொற்று பரவியது. அதன் பெயர் "ஸ்பானிஷ்" என்றாலும், ஸ்பெயினில் மட்டுமல்லாது பல ஐரோப்பிய நாடுகளிலும் பரவிய வைரஸ் பல இலட்சம் மக்களை காவு கொண்டது. முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் கொல்லப்பட்ட மக்களை விட அதிக எண்ணிக்கையில் இந்த தொற்று நோய்க்கு பலியானார்கள். இருப்பினும் அதே காலகட்டத்தில் தான் ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சி வெடித்தது. ஜெர்மனியிலும், ஹங்கேரியிலும் சோஷலிச மாற்றுக்கான பாட்டாளிவர்க்க புரட்சிகள் நடந்தன.

Sunday, March 29, 2020

இத்தாலியை கைவிட்ட ஐரோப்பா; சீனா, கியூபா,ரஷ்யா மட்டுமே உதவுகின்றன!


இதோ இத்தாலி அரசின் வாக்குமூலம்: "கியூபா, சீனா, ரஷ்யாவில் இருந்து நிறைய உதவிகள் கிடைத்துள்ளன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் எமக்கு எதுவுமே செய்யவில்லை!"


எற்கனவே நான் இது பற்றி குறிப்பிட்ட நேரம், "சித்தாந்த அரசியல் பிரச்சாரம் செய்வதாக" உதாசீனப் படுத்தினார்கள். ஐரோப்பாவில் வாழும் சிலர் "இதோ பாருங்கள். ஜெர்மனி கொரோனா நோயாளிகளை அழைத்து வந்து சிகிச்சை அளிக்கிறது." என்று காட்டினார்கள். அது ஒரு கண்துடைப்பு நாடகம். கொரோனா தொற்றுக்கு ஆயிரக் கணக்கானவர்கள் பலியான நாட்டில் இருந்து, வெறும் பத்துப் பதினைந்து பேரை அழைத்து சிகிச்சை அளிப்பது என்ன வகையான உதவி? ஜெர்மனி மட்டுமல்ல ஆஸ்திரியாவில் உள்ள மருத்துவமனைகளிலும் இத்தாலி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். ஆனால் மிக மிகக் குறைந்த அளவினர் தான் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இது தொடர்பாக இத்தாலி ஊடகங்களில் நிறைய பேசப் படுகின்றது. அவர்கள் சீன, கியூபா, ரஷ்ய நாடுகளில் இருந்து என்னென்ன உதவிகள் கிடைத்துள்ளன என்பதை விபரமாகக் காட்டுகிறார்கள். ஆனால் ஐரோப்பிய நாடுகளின் உதவி பற்றி சொல்லிக் கொள்ள அப்படி என்ன இருக்கிறது? ஆபத்துக் காலத்தில் தான் உண்மையான நண்பர்களை அறியலாம் என்று இத்தாலியர்கள் பேசிக் கொள்கின்றனர்.

மேலதிக தகவல்களுக்கு, டச்சு பத்திரிகையில் வந்த முழுமையான கட்டுரை: Italië: wel steun van Russen, China en Cuba, nauwelijks van Europa

*****


உங்களிடம் ஒரேயொரு வேண்டுகோள்! 
மருத்துவத்தில் தனியார்மயத்தை ஆதரிக்காதீர்கள்!!

ஓர் ஐரோப்பிய ஒன்றிய நாடான இத்தாலியில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமான போதிலும், எந்தவொரு ஐரோப்பிய நாடும் இத்தாலிக்கு உதவ முன்வரவில்லை. இந்த நிலையில் கியூப மருத்துவர்கள் வந்ததை உலகமே பாராட்டிக் கொண்டிருக்கும் பொழுது மேற்குலக- முதலாளித்துவ விசுவாசிகளுக்கு மனம் பொறுக்கவில்லை. அவர்கள் தமது எஜமான விசுவாசத்தை காட்டுவதற்காக கியூப எதிர்ப்புப் பதிவுகளை வெளியிட்டு தம்மைப் போன்ற பிற விசுவாசிகளின் மனங்களை குளிர வைக்கின்றனர்.

அந்த வகையில் ஜெர்மனியில் வாழும் Raj Siva என்ற எழுத்தாளர் (https://www.facebook.com/rajsivalingam) பேஸ்புக்கில் எழுதிய ஒரு பதிவு பல உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது.

அவரது பதிவில் இருந்து: 
//உங்களிடம் ஒரேயொரு வேண்டுகோள்! கியூபா, சீனா போன்ற நாடுகள் இத்தாலிக்கும் ஏன் ஏனைய நாடுகளுக்கும் கூட முடிந்தளவுக்கு உதவுகின்றனதான். மனிதாபிமானம் என்பது உலகப் பொது மறை. அதை யாரும் இன்னும் மறக்கவில்லை.//

ஐரோப்பாவில், குறிப்பாக இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதும் முதலில் காணாமல்போனது மனிதாபிமானம் தான். இத்தாலி, கியூபா போன்றதொரு மூன்றாமுலக ஏழை நாடு அல்ல. பணக்கார முதலாமுலகத்தை சேர்ந்த, அதிகளவு தொழிற்துறை வளர்ச்சி அடைந்த நாடு. அத்தகைய நாட்டில், கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் மரணமடைய வேண்டிய காரணம் என்ன?

முதலில் இந்நாடுகளில் மருத்துவ வசதி தனியார்துறையிடம் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. அதன் அர்த்தம் காசு கொடுத்தால் தான் மருத்துவம் கிடைக்கும். இல்லையென்றால் கிடந்தது சாக வேண்டியது தான். ஏராளமான கொரொனோ நோயாளிகள் அம்புலன்ஸ் வராமலே வீடுகளில் கிடந்து வருந்தி இறந்திருக்கிறார்கள். தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததும் தேசத்தின் மருத்துவக் கட்டுமானம் முழுவதும் வீழ்ச்சி அடைந்தது. அத்தகைய நிலைமையில் தான் கியூப மருத்துவர் குழு வருகை தந்தது.

இந்த நேரத்தில் கியூபாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளையும் நினைவுகூர வேண்டும். முன்பு அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதாரத் தடைகளை இத்தாலியும் ஆதரித்தது. இன்று வரையில் அந்தத் தடைகள் நீக்கப்படவில்லை. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்பது திருக்குறள். ஓர் ஏழை நாடான கியூபா பணக்கார நாடான இத்தாலி தனக்கு செய்த துரோகத்தை மன்னித்து ஆபத்துக் காலத்தில் உதவ வந்தது மெச்சத் தக்கது. அதுவும் வேறெந்த ஐரோப்பிய நாடும் உதவாத நிலையில் தான் வந்துள்ளது.

முகநூலில் இந்தப் பதிவை இட்டவரிடம் ஐரோப்பிய நாடுகள் ஏன் உதவவில்லை என்ற கேள்வி எழுப்பியதும், ஜெர்மனி சில நோயாளிகளை அழைத்து வந்து சிகிச்சை அளிப்பதாக ஓர் ஆதாரத்தை காட்டினார். இத்தாலி சென்று கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடுவதும், ஒரு சில நோயாளிகளை அழைத்து சிகிச்சை அளிப்பதும் ஒரே விடயம் அல்ல. இத்தாலியிலும் முன்னர் குறிப்பிட்ட ஓர் இடத்தில் (வடக்கு இத்தாலி) தான் தொற்று காணப்பட்டது. அங்குள்ள மருத்துவ மனைகளின் வேலைப்பளு அதிகரித்ததும், நோயாளிகள் இத்தாலியின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப் பட்டனர். அதே மாதிரி தான் ஜெர்மனிக்கும் அனுப்பப் பட்டனர்.

இதை சுட்டிக் காட்டியதும், தற்போது எல்லா ஐரோப்பிய நாடுகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், "அவர்களது அவஸ்தையை புரிந்து கொள்ளுமாறும்" கெஞ்சினார். சரி, அப்படிப் பார்த்தால் கியூபாவில் யாருக்கும் இந்த நோய் தொற்றவிலையா? (தகவலுக்காக: கியூபாவில் இதுவரை எண்பது பேருக்கு நோய் தொற்றி உள்ளது. அதில் இரண்டு பேர் மரணம்.)

இது ஒரு உலகளாவிய தொற்று நோய் என்று WHO கூட அறிவித்திருந்ததே? மேற்கு ஐரோப்பிய பணக்கார நாடுகள் தம்மிடம் நிறையப் பணம் இருந்தும் உதவ முன்வரவில்லை. அதே நேரம் ஓர் ஏழை நாடான கியூபா உதவ முன்வந்தது. எது ஞாலத்தில் பெரிது? பொதுவாக பணக்காரர்கள் தம்மிடம் உள்ள செல்வத்தை பகிர்ந்து கொள்ள முன்வர மாட்டார்கள். ஏழைகள் தம்மிடம் இருப்பதை பங்கிட்டு வாழ்வார்கள்.

//ஐரோப்பிய நாடுகள் ஒன்று சேர்ந்து, தங்கள் ஒனறியத்திலுள்ள ஒவ்வொரு நாட்டுக்கும், ஒன்றிய உள் கட்டமைப்பின் மூலம் உதவிகளைச் செய்ய ஆயத்தமாகிறார்கள். சில உதவிகளைச் செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள். ட்ரில்லியன் யூரோக்களில் பொருளாதார உதவிப் பொதிகளை ஆயத்தம் செய்துவிட்டன.//

இது முற்றிலும் தவறான தகவல். பெருமளவில் கொரோனா தொற்றுதலால் பாதிக்கப்பட்ட தெற்கு ஐரோப்பிய நாடுகள், இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் அமெரிக்கா கொண்டு வந்த மார்ஷல் உதவி போன்றதொரு திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருமாறு கோரின. அதற்காக அவசரகால நிதியத்தில் உள்ள பணத்தை செலவிடுமாறு கோரின. ஆனால், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகள் அதற்கு மறுத்து விட்டன. இது தொடர்பான சர்ச்சை இன்னமும் நீடிக்கிறது.

மேலும் "ட்ரில்லியன் யூரோக்கள் தொகை"(?) ஒதுக்குவது கூட கொரோனாவால் பாதிக்கப் பட்ட மக்களுக்கான உதவி அல்ல. அது இந்த நெருக்கடியால் வருமானம் இழந்த வணிக நிறுவனங்களுக்கான மீட்பு நிதி. இதை ஏற்கனவே ஒவ்வொரு நாடும் அறிவித்து விட்டன. ஆனால் ஒன்றிணைந்த ஐரோப்பிய ஒன்றிய உதவி பற்றி இன்னமும் எந்தக் கதையும் இல்லை. ஆகவே "பொருளாதார உதவிப் பொதிகளை ஆயத்தம் செய்துவிட்டன" என்பது இதைப் பதிவிட்டவரின் எதிர்பார்ப்பு மட்டுமே. உண்மை அல்ல.

//அது தவிர்ந்து, G20 நாடுகள் ஒன்றிணைந்து 5 பில்லியன் டாலர்களை உடனடிக் கொரோணா உதவிக்கும், இனி வரப்போகும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடுகளை மீட்பதற்கு, 5 முதல் 8 ட்ரில்லியன் டாலர் வரை ஒதுக்குவதெனவும் தீர்மானித்துள்ளன.//

உண்மையில் இது பற்றி G20 நாடுகள் எதையும் அறிவிக்கவில்லை. இது முழுக்க முழுக்க பொய்யான தகவல். G20 நாடுகளில் இந்தியா, பிரேசில் போன்ற வளர்ந்து வரும் நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்தியா தனது நாட்டையே மீட்க முடியாத ஏழை நாடு. இதற்குள் ஐரோப்பாவுக்கு நிதி வழங்கும் என எதிர்பார்ப்பது மடமைத்தனம். இப்படி ஒரு செய்தியை கேள்விப்பட்டாலே இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் துள்ளிக் குதிக்கும். முதலில் பணக்கார நாடுகள் உதவட்டும், அதற்குப் பிறகு பார்க்கலாம் என்று தான் கூறுவார்கள்.

//சீனாவில் மட்டும் கொரோணா இருந்தபோது, எத்தனையோ நாடுகள் அவர்களுக்கு மருத்துவ சாதனங்களை அனுப்பியுள்ளனர். கிருமி நீக்கிப் பொருட்களில் கொடுத்து உதவினர். இதுவெல்லாம் நாடுகளுக்கிடையில் நடக்கும் சாதாரண செயல்கள்தான்.//

உண்மையில் சீனாவில் மட்டும் கொரோனா இருந்த நேரம் பிற நாடுகள் அது தமது பிரச்சினை அல்ல என்று ஒதுங்கி இருந்தன. அமெரிக்கா ஒரு சில மருத்துவ சாதனங்களை அனுப்பியது உண்மை தான். ஆனால் அந்த உதவி மிக மிக சொற்பமானது. மேலும் எந்தவொரு நாடும் மருத்துவர் குழுவை அனுப்பவில்லை.

கியூப விஞ்ஞானிகள் சீனாவுக்கு சென்று கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் பங்குபற்றினார்கள். அந்த ஆய்வின் விளைவாக கியூபாவில் தயாரிக்கப் பட்ட தடுப்பு மருந்தினை கியூப மருத்துவர்கள் பல நாடுகளுக்கும் கொண்டு சென்றுள்ளனர். அதுவும் இலவசமாக கொடுக்கப் படுகிறது. பணக்கார நாடுகள் உதவ முன்வராமல் பின்னடிப்பதற்கு இதுவும் ஒரு காரணம். அதாவது, அவர்களிடம் தடுப்பு மருந்து இருந்தாலும் சந்தைக்கு கொண்டு வந்து அதிக விலைக்கு விற்கப் பார்ப்பார்களே தவிர, ஒரு நாளும் இலவசமாக கொடுக்க மாட்டார்கள்.

//இது இப்படியிருக்க, “கியூபா, சீனா போன்ற கம்யூனிச நாடுகள் மட்டும்தான் கடவுளாக உதவிக்கு வந்தன. முதலாளித்துவ நாடுகள் உதவி செய்யாமல் தங்கள் புத்தியைக் காட்டிவிட்டன. ஜனநாயக நாடுகளுக்கு மனிதாபிமானமே செத்துப் போய்விட்டது. கியூபாதான் அனைவரையும் காப்பாற்றுகிறது” என்று சிலர் கிளப்பியிருக்கிறார்கள்.//

இது ஒன்றும் இப்போது தான் "கிளம்பிய" கதை அல்ல. கடந்த நூறு வருடங்களாக உலகில் அனைவருக்கும் தெரிந்த விடயம். கியூப மருத்துவர் குழு வேறொரு நாட்டுக்கு செல்வது இதுவே முதல் தடவை அல்ல. ஏற்கனவே பல்வேறு ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் பணி புரிகிறார்கள். எதற்காக அந்த நாடுகளில் கியூப மருத்துவர்களின் உதவி தேவைப் படுகிறது என்ற கேள்வி இங்கே கேட்கப் பட வேண்டும்.

இன்று எல்லா நாடுகளிலும் மருத்துவம் தனியார் துறையிடம் உள்ளது. அதன் அர்த்தம் பண வசதி உள்ளவர்கள் மாத்திரம் மருத்துவம் பார்க்கலாம். அதனால் ஏழைகளுக்கு மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை. அந்தக் குறையை போக்குவதற்கு தான் கியூப மருத்துவர்களை தருவிக்கிறார்கள். தென் ஆப்பிரிக்கா, அங்கோலா, பிரேசில், கயானா போன்ற பல நாடுகளில் கியூப மருத்துவர்கள் கடமையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

முதலாளித்துவ நாடுகள் இலாபம் கருதாமல் எதையும் செய்வதில்லை. இலங்கை, இந்தியாவுக்கு அபிவிருத்திக்கான கடன் கொடுப்பது கூட அதனால் கிடைக்கும் வட்டித் தொகை காரணமாகத் தான். இந்த இடத்தில் சீனா கூட ஒரு முதலாளித்துவ நாடு, கம்யூனிச நாடு அல்ல என்பது இந்த பதிவருக்கு தெரியாதது வருத்தத்திற்கு உரியது.

இருப்பினும் சீன அரசியல் அமைப்பு வித்தியாசமானது. கிட்டத்தட்ட ஸ்கண்டிநேவிய நாடுகளைப் போன்று மக்கள் நலன் காக்கும் அமைப்பைக் கொண்டுள்ளது. மிக அத்தியாவசியமான மருத்துவத் துறையை அரசே கட்டுப்படுத்துகிறது.

அதனால் தான் வூஹானில் கொரோனா தொற்று ஏற்பட்ட நேரம் பதினைந்து நாட்களில் ஒரு தற்காலிக மருத்துவமனை அமைக்கப் பட்டது. மேலும் இன்றைக்கு ஐரோப்பிய நாடுகள் கூட சீனாவின் தடுப்பு முறையை தான் பின்பற்றுகின்றன. அதை அவர்கள் வெளிப்படையாகவே சொல்லிக் கொள்கிறார்கள்.

//இது பிரிவினையை இப்போது விளைவிக்கும் ஒன்று. இந்தச் செயல் மனவருத்தத்தைத் தருகிறது. ஏதோ இன்று உலகத்தையே இரட்சிக்க வந்திருக்கும் தேவதைகள் சீனாவும், கியூபாவும்தான் என்னும் போக்கில் புளகாங்கிதம் அடைகிறார்கள்.//

இதிலே என்ன "பிரிவினை" வந்து விட்டது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்! இவரது பிரச்சினை முழுக்க முழுக்க மருத்துவம் தனியார்துறையின் கைகளை விட்டுப் போய்விடும் என்பது தான். ஏற்கனவே ஸ்பெயின் அனைத்து மருத்துவமனைகளையும் தேசியமயமாக்கி விட்டது. அது பிற நாடுகளிலும் நடந்து விடுமோ என்பது தான் இவரது அச்சம்.

அத்தியாவசிய சேவைகளில் ஒன்றான மருத்துவம் அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகின்றது. அப்படி நடந்தால் மருத்துவமனைகளை நடத்தும் மாபியாக்களின் வருமானம் நின்று விடுமே என்பது தான் இவரது கவலை போலிருக்கிறது. அதைத் தான் "பிரிவினை" என்கிறார். அதாவது முதலாளிகள் நலன் சார்ந்த அரசியலுக்கும், மக்கள் நலன் சார்ந்த அரசியலுக்கும் இடையிலான வர்க்கப் பிரிவினை பற்றிப் பேசுகிறார்.

//இங்கே நான் சீனாவையும், கியூபாவையும் குறைத்துக் கூறவேயில்லை. அவர்களே நினைக்காததை நாம் பிரிவினையாக உருவாக்குகிறோம்.//

அது தானே? அவர் எப்படிக் குறைத்துக் கூறுவார்? சீனாவிலும், கியூபாவிலும் மருத்துவம் தனியார் துறைக்கு திறந்து விடப் பட வேண்டும் என்பது தானே இவர் போன்றவர்களின் பேரவா? உலக நாடுகள் முழுவதும் மருத்துவத்தை தேசியமயமாக்க வேண்டும் என்று கூற முன்வருவாரா? மருத்துவம் மக்களுக்கானதா? அல்லது முதலாளிகளின் இலாப நோக்கிற்கானதா? அது தான் நாம் உருவாக்கும் "பிரிவினை".

இவர் மாதிரி பணக் கொழுப்பெடுத்த நடுத்தர வர்க்கத்தினருக்கு இலவச மருத்துவம் தேவையற்ற ஆணி தான். ஆனால் வசதியற்ற ஏழை மக்களுக்கு அது அத்தியாவசியம். நீங்கள் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மறுத்தால், உங்களால் வெறுக்கப்படும் வர்க்கப் பிரிவினையை பற்றிப் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது.

//இப்போது உலகின் அனைத்து நாடுகளும், தங்கள் எல்லைகளைப் பூட்டியபடி, ஏனைய நாடுகளிலிருந்து தனியாகப் பிரிந்திருந்தாலும், தமக்குள்ளே ஒற்றுமையாக இந்தப் பொது எதிரியை விரட்டிதடிக்கவே முயன்று கொண்டிருக்கின்றன என்பதே மறுக்க முடியாத உண்மை.//

இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நடக்கும் சர்ச்சை குறித்தும், அவர்களுக்குள்ளே நிலவும் ஒற்றுமையின்மை குறித்தும் நான் கேள்வி எழுப்பியவுடன் "அவர்கள் படும் அவஸ்தையை புரிந்து கொள்ள வேண்டும்" என்று கெஞ்சினார். இதே பணக்கார நாடுகள் தானே தானே Red Cross, Medicin Sans Frontier போன்ற மருத்துவ தொண்டு நிறுவனங்களை வைத்திருக்கின்றன? அவற்றிற்கு பெருமளவு நிதி கொடுத்து ஆதரித்தன? இலங்கை போன்ற நாடுகளில் யுத்தம் நடந்த நேரம் கேட்காமலே வந்து உதவிய தொண்டு நிறுவனங்கள் இப்போது எங்கே போய் பதுங்கிக் கொண்டன?

//இதற்குள், அரசியல் இலாபம் கருதி இப்படிப் பேசுவது கடைந்தெடுத்த சுயநலமே!//

சுயநலம் என்பது முதலாளித்துவத்துடன் கூடிப் பிறந்த குணம். ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அவசர கால நிதியம் குறித்து சர்ச்சை எழுந்த நேரம் ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகள் சம்மதிக்க மறுத்தது ஏனோ? அவை தமது நலன் மட்டுமே பெரிதென நினைத்தன. நெதர்லாந்து தனது நாட்டை சேர்ந்த மீனவர்கள், விவசாயிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நிதி வழங்கி உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டது. இது சுயநலம் இல்லையா? பிற நாடுகள் அதை இரட்டை வேடம் என்று குற்றம் சாட்டின.

அது போகட்டும். இந்தப் பதிவை எழுதியவருக்கு எந்த அரசியல் இலாபமும், சுயநலமும் இல்லையா? அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்குவதை விட, மருத்துவத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் மாபியாக்களின் இலாபம் முக்கியம் என்று கருதினால் அது தான் கடைந்தெடுத்த சுயநலம்.

Wednesday, July 19, 2017

யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள்


["தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?"]
(பகுதி : நான்கு )
மேலைத்தேய ஏகாதிபத்திய விசுவாசிகளான சில தமிழர்கள், அதே ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களால் ஒடுக்கப்பட்ட யூதர்களை முன்னுதாரணமாகக் கொள்ளும் வினோதமான அரசியல் தோன்றியுள்ளது. பிரிட்டனும், அமெரிக்காவும் தமது ஏகாதிபத்திய நலன்களுக்காக இஸ்ரேல் என்ற அடியாளை உருவாக்கியது. இதன் மூலம் ஐரோப்பியர்கள் தமது கடந்த கால யூத அடக்குமுறைக்கு பிராயச்சித்தம் தேடிக் கொண்டனர். அது ஒன்றும் இதயசுத்தியுடனான பாவவிமோசனம் அல்ல. ஐரோப்பிய நரிகளின் குள்ள புத்தியில் உதித்த யோசனை அது. ஐரோப்பிய கண்டத்தினுள் இஸ்ரேல் என்ற தேசம் உருவாவது தடுக்கப்பட்டது. அதே நேரம் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்த அரபு நாடுகளுடன், யூதர்களை மோத விட்டு வேடிக்கை பார்த்தார்கள். கடந்த 60௦ வருடங்களாக, நிரந்தர யுத்தத்தில் சிக்குண்டு மரணிப்பது அரபுக்களும், யூதர்களும் தான். மேற்கத்திய குள்ளநரிகளின் சூழ்ச்சியை அறியாது, (அல்லது தெரிந்தாலும் காட்டிக் கொள்ளாது) தமிழர்களை யூதர்களின் உதாரணத்தை பின்தொடர வருமாறு அழைக்கின்றனர்.

"யூதர்கள் உலகம் முழுவதும் அகதிகளாக அலைந்தார்கள். யூதர்கள் இஸ்ரேல் என்ற தாயகத்திற்கு திரும்பிச் செல்கிறார்கள்." போன்ற புராணக் கதைகளை ஒதுக்கி விட்டு அறிவியல் பூர்வமாக அணுக வேண்டிய பிரச்சினை இது. நாடிழந்து நாடோடியாக அலைவதற்காக, நரிக்குறவர்களும் தாயக உரிமை கோரி ஐ.நா.வில் மனுப் போடலாம். மத்திய அமெரிக்காவில், எட்டு நாடுகளில் வாழும், எட்டு மில்லியன் மாயா மக்களுக்கு ஒரு தேசமில்லை. 500 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்பானிய காலனியதிக்கவாதிகள் மாயாக்களின் தேசத்தை அழித்து, அந்த மக்களை அடிமைகளாக்கினார்கள். இவை சரித்திரத்தில் எழுதப்பட்டுள்ளன. முன்னாள் காலனிய எஜமானான ஸ்பெயின் தலையிட்டு மாயாக்களுக்கு தனி நாடு பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று யாரும் ஐ.நா. சபையில் குரல் எழுப்பவில்லை.

யூதர்கள் அகதிகளாக அலைய ஆரம்பித்ததாக கூறப்படும் அதே காலத்தில் தான், இந்திய உப கண்டத்தில் இருந்து ரோமா இன மக்கள் வெளியேறினார்கள். ரோமா இன மக்களும் ஐரோப்பிய நாடுகள் எங்கும் அகதிகளாக அலைந்தார்கள். யூதர்களைப் போலவே அவர்களும் மோசமாக அடக்கப்பட்டார்கள், ஈவிரக்கம் பாராது படுகொலை செய்யப்பட்டனர். ஜெர்மன் நாஸிகள், லட்சக் கணக்கான ரோமா மக்களையும் நச்சு வாயு பிரயோகித்து இனவழிப்பு செய்தார்கள். ரோமா இன மக்களுக்கு தனி நாடு வேண்டுமென்று யாரும் வாதாடுவதில்லை. இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்கும் நியாயவான்களும் இந்த விஷயத்தில் மூச்சு விடுவதில்லை. (தெரிந்தெடுத்த சில இனங்களுக்கு மட்டுமே இவர்கள் சுயநிர்ணய உரிமை கோருவார்கள்.) இஸ்ரேலின் உதாரணத்தை பின் தொடர்ந்து, ஐரோப்பாவில் இனவழிப்பில் எஞ்சிய ரோமா இன மக்களை கூட்டிச் சென்று இந்தியாவில் குடியேற்றியிருக்க முடியாதா? இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள், இந்தியாவின் ஒரு பகுதியை ரோமா மக்களின் தாயகமாக அங்கீகரித்திருந்தால் இன்று நிலைமை எப்படி இருந்திருக்கும்? பாகிஸ்தான் பிரிவினையை ஏற்றுக் கொள்ளாத இந்திய தேசியவாதிகள், "ரோமா தேசிய அரசை" ஏற்றுக் கொள்வார்களா? அமெரிக்க அரசு நிதி, ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து, இந்தியாவில் அத்தகைய குட்டி அரசை தக்க வைத்திருக்கலாம். அது "இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை போல", இந்திய உப கண்டத்தில் தீராத யுத்தத்தை கொண்டு வந்திருக்கும்.

யூதர்களின் பிரச்சினை, ஒரு ஐரோப்பியரின் பிரச்சினை. நினைவு தெரிந்த நாளில் இருந்து, அல்லது வரலாறு எழுதப்பட்ட காலத்தில் இருந்து கிறிஸ்தவ ஐரோப்பாவில் யூதர்கள் சொல்லொணா அடக்குமுறைகளை சந்தித்துள்ளனர். யூதர்கள் ஐரோப்பாவில் மட்டும் வாழவில்லை. மத்திய ஆசியாவிலும், அரபு நாடுகளிலும், சுருக்கமாக இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் பிரஜைகளாக நீண்ட காலம் வாழ்ந்தனர். அங்கெல்லாம் ஐரோப்பாவில் இருந்த அளவுக்கு, மோசமான அடக்குமுறை நிலவியதாக எந்தவொரு வரலாற்று சான்றும் கிடையாது. அப்படிக் கூறுபவர்கள் இதுவரை ஒரே ஒரு ஆதாரத்தையேனும் காட்டவில்லை.(சிலுவைப்போர் காலத்தில் எழுதப்பட்ட குறிப்புகளை ஒரு கட்டுரையாளர் எடுத்துக் காட்டினார். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் ஜெருசலேம் கிறிஸ்தவ நாடாக இருந்த உண்மையை மட்டும் மறைத்து விட்டார்.)

ஏன் ஐரோப்பாவில் யூதர்கள் இனவழிப்பு செய்யப்பட்டது போல அரபு நாடுகளில் நடக்கவில்லை? யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மும்மதங்களுக்கு இடையிலான வேறுபாடுகளே அதற்கு காரணம். இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களையும், யூதர்களையும் புனித நூலின் மக்களாக கருதினார்கள். திருக்குர்ஆன் அவர்களை சகோதர மதத்தவர்களாக நடத்தக் கோரியது. இஸ்லாமிய கலீபாக்கள், அந்த மதங்களை சேர்ந்தவர்கள் மீது வரி மட்டும் விதித்தார்கள். அதனால் தான், ஸ்பெயினை கத்தோலிக்க படைகள் கைப்பற்றிய நேரம் யூதர்கள் இஸ்லாமிய மொரோக்கோவில் அகதித் தஞ்சம் கோரினார்கள்.

அன்றைய ஐரோப்பாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள், மத சகிப்புத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தார்கள். கிறிஸ்தவ ஐரோப்பாவில் வாழ்ந்த பிற மதத்தவர்கள் யூதர்கள் மட்டுமே. "எமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை காட்டிக் கொடுத்த அல்லது கொலை செய்த பாவிகள் யூதர்கள்" என்று தேவாலயங்களில் கிறிஸ்தவ பாதிரிகள் பிரசங்கம் செய்தனர்.

உதாரணத்திற்கு விவிலிய நூலில் இருந்து சில மேற்கோள்கள்:
You suffered from your own countrymen the same things those churches suffered from the Jews, who killed the Lord Jesus and the prophets and also drove us out. They displease God and are hostile to all men in their effort to keep us from speaking to the Gentiles so that they may be saved. In this way they always heap up their sins to the limit. The wrath of God has come upon them at last. (1 Thessalonians 2:14-16)
I will make those who are of the synagogue of Satan, who claim to be Jews though they are not, but are liars - I will make them come and fall down at your feet and acknowledge that I have loved you.(Revelation 3:9)
ரோமர்களின் காலத்தில் யூதர்கள் மீது அவ்வளவு வெறுப்பு இருந்ததில்லை. ஆயினும், யூதர்களின் வினோதமான பழக்க வழக்கங்களையிட்டு, ரோமாபுரியின் குடிமக்கள் நல்ல அபிப்பிராயம் கொண்டிருக்கவில்லை. ரோமர்களின் குறிப்புகளில் இருந்து தெரிய வருவதாவது:
"ரோமாபுரியில் குடியேறிய முதலாவது தலைமுறையை சேர்ந்த கிரேக்க, ஆப்பிரிக்க, ஜேர்மனிய மக்கள் மட்டுமே தமது தாயகத்தில் இருந்து எடுத்து வந்த பண்பாட்டை கடைப்பிடிக்கின்றனர். அவர்களது பிள்ளைகள் சில காலம் அவற்றை பின்பற்றலாம். ஆனால் படிப்படியாக ரோமாபுரி பிரஜைகளாக இயைபாக்கம் அடைகின்றனர். தமது தாயகத்துடனான தொடர்புகளை துண்டித்துக் கொள்கின்றனர். இரண்டாவது தலைமுறை தன்னை ரோமர்களாக அடையாள படுத்துகின்றது. யூதர்கள் அதற்கு மாறாக தமது குடியிருப்புகளுக்குள் ஒதுங்கிக் கொள்கின்றனர். தமது மூதாதையரைப் போன்ற வாழ்க்கை நெறிகளின் படி வாழ்கின்றனர். தலைமுறை தலைமுறையாக ரோமர்களுடன் ஒன்று கலக்காது ஒதுங்கி வாழ்கின்றனர்." (Cassius Dio,ரோமாபுரியின் சரித்திரம் 17,1-2)
மேலேயுள்ள வாக்கியங்களை வாசிக்கும் பொழுது இன்றைய நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டும். குறிப்பாக ஐரோப்பாவில் வாழும் இஸ்லாமிய சமூகத்தினர் பற்றி, இதே போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் படுகின்றன. அன்று யூத மதம் கிறிஸ்தவத்திற்கு அடுத்த சிறுபான்மையின மதமாக இருந்தது. இன்று அதே இடத்தை இஸ்லாம் பிடித்துள்ளது. ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போரில் அழிக்கப்பட்ட யூதர்களில் எஞ்சியவர்களை இஸ்ரேலில் கொண்டு சென்று குடியேற்றி விட்டார்கள். அதனால் இன்றைய தீவிர வலதுசாரிகளின் பார்வையில், யூதர்களை விட இஸ்லாமியர்களே ஆபத்தானவர்களாக தெரிகின்றனர். அன்று யூதர்களுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்ட பொய்ப் பரப்புரைகள் யாவும், இன்று இஸ்லாமியருக்கு எதிராக திருப்பி விடப் பட்டுள்ளன.

இஸ்ரேலில் இருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்களுக்கும், ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்த தமிழர்களுக்கும் இடையில் என்ன ஒற்றுமை? வரலாறு கூறுவதன் படி, இஸ்ரேலியரின் நாடு ரோமர்களால் அழிக்கப்பட்டது. அதனால் அவர்கள் ரோம சாம்ராஜ்யத்தின் பகுதியான ஐரோப்பாவுக்கு புலம் பெயர்ந்தார்கள். அதாவது தங்கள் தாயகத்தை அழித்த எதிரியின் தேசத்தினுள் தான் அகதிகளானார்கள். (கி.பி. 637 ல் இடம்பெற்ற இஸ்லாமியப் படையெடுப்பு தான் முதன் முதலாக இஸ்ரேலிய பகுதியை, ரோம சாம்ராஜ்யத்தில் இருந்து துண்டித்தது. பிற்காலத்தில் போப்பாண்டவர், சிலுவைப் படைகளை அனுப்பி இழந்த ஜெருசலேமை மீட்டெடுத்தார்.)

தமிழர்களை யூதர்களை ஒப்பிட்டு வரும் அரசியல் அறிஞர்கள், சிங்கள தேசத்தினுள் இடம்பெயர்ந்து வாழும் தமிழ் அகதிகளை மனதில் கொண்டு சொல்லவில்லை. கடல் கடந்து பல்லாயிரம் மைல்களுக்கப்பால் உள்ள அமெரிக்க, ஐரோப்பிய கண்டங்களுக்கு புலம்பெயர்ந்த மக்களை குறித்தே பேசுகின்றனர். இஸ்ரேலை ரோம ஏகாதிபத்தியம் அழித்தது போல, தமிழீழத்தை சிங்கள ஏகாதிபத்தியம் அழித்தது. "சிங்கள ஏகாதிபத்தியம்" என்பது வழக்கமாக தமிழ் தேசியவாதிகள் பயன்படுத்தும் சொற்தொடர். ரோம சாம்ராஜ்யத்தில் அகதிகளாக அலைந்த யூதர்களை போல, மலையகத்திலும், கொழும்பிலும் பெருந்தொகை தமிழர்கள் (இலங்கையின் மொத்த சனத்தொகையில் 7 %) இன்னலுறுகின்றனர். ஆகவே, இஸ்ரேலியரின் உதாரணத்தை பின்பற்றி, அவர்கள் எதிர்கால ஈழத்தை நோக்கி அணிதிரட்டப் படுவார்கள் என நம்புவோமாக.

ரோமாபுரியின் தலைநகரில் வாழ்ந்த யூதர்கள் கூட, ரோம ஏகாதிபத்திய விசுவாசமாக இருந்ததில்லை. ரோமர்கள் எத்தனை அடக்குமுறைகளை பிரயோகித்த போதிலும், ஒரு யூதர் கூட ரோமர்களின் மதத்தை தழுவவில்லை. யூதர்கள் ஹீபுரு பேசுவதை மறந்தாலும், தங்கள் பிள்ளைகளுக்கு ஹீபுரு மொழிப் பெயர்களை மட்டுமே சூட்டினார்கள். அன்று யூதர்கள் வாழ்ந்த மேற்கத்திய நாடுகளில், இன்று தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். புலம்பெயர்ந்த தமிழர்களின் நிலையோ, யூதர்களுக்கு எதிர்மாறானது. புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுவதில்லை. ஆங்கில மொழி, அல்லது ஐரோப்பிய உச்சரிப்பு கொண்ட பெயரிடுவது பரவலாக காணப்படுகின்றது. இதனால் இரண்டாவது தலைமுறை தமிழர்களை, பெயரை வைத்து அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. தமிழ் பேசுவதை கைவிடும் இரண்டாவது தலைமுறை, ஐரோப்பிய சமூகத்தில் இரண்டறக் கலந்து விடும்.

யூதர்களை பொறுத்தவரை புலம்பெயர்ந்த ஐரோப்பிய நாடுகள், எப்போதும் அடக்குமுறை இயந்திரங்களாகவே இருந்தன. யூதர்களின் இரண்டாயிரம் வருட புலம்பெயர் வாழ்வில், ஒரு ஐரோப்பிய அரசு கூட அவர்களிடம் இரக்கம் காட்டியதில்லை. இன ஒடுக்குமுறையால், இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட யூதர்கள் ஒரு நாளும் மேற்கத்திய விசுவாசிகளாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை. யூதர்கள் ஐரோப்பியர்களை அரக்கர்களாக கருதி வெறுத்திருந்தால், அந்த உணர்வு புரிந்து கொள்ளத் தக்கதே. யூதர்கள், கொடுமைக்கார ஐரோப்பியர்கள் வசிக்காத பாலஸ்தீனம் சென்று குடியேற விரும்பியிருந்தால், அதுவும் புரிந்து கொள்ளத் தக்கதே. பெரும்பாலான புலம்பெயர்ந்த தமிழர்கள், யூதர்களை விட முற்றிலும் மாறுபட்ட குணாம்சத்தை கொண்டுள்ளனர். ஐரோப்பிய குடியுரிமை கிடைத்தவுடனே விருந்து வைப்பார்கள். தாம் குடியேறிய ஐரோப்பிய நாட்டிற்கான விசுவாசத்தை காட்டும் வண்ணம் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவார்கள். சுவிட்சர்லாந்தில் பிறந்த குழந்தைக்கு "சுவிஸ்த்ரா", டென்மார்க்கில் பிறந்த குழந்தைக்கு "டேனிஷா". இவ்வாறு சில உதாரணங்களை குறிப்பிடலாம்.

புலம்பெயர்ந்த யூதர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் மலைக்கும், மடுவுக்கும் இடையிலான வித்தியாசம் உள்ளது. தமிழீழத் தனியரசை அழித்த ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளில் கூட, தமிழர்கள் அகதிகளாக அலைகின்றனர். ஆனால் எத்தனையோ தமிழர்கள் தம்மை மேற்குலக விசுவாசிகளாக காட்டிக் கொள்வதில் வெட்கப்படுவதில்லை. இஸ்ரேல் ஆதரவு நிலை எடுத்த அதே தமிழர்கள், மேலைத்தேய நாடுகளுக்கு ஆதரவாக வாதாடுவார்கள். இந்த முரண்பாட்டை எவ்வாறு புரிந்து கொள்வது?

(தொடரும்)

Friday, March 10, 2017

சர்வசன வாக்குரிமை : முதலாளிகள் போட்ட பிச்சை அல்ல!


ச‌ர்வ‌ச‌ன‌ வாக்குரிமை, எம‌க்கு முத‌லாளிக‌ள் போட்ட‌ பிச்சை அல்ல‌. அத‌ற்காக‌ ஐரோப்பாவில் சோஷ‌லிச‌க் க‌ட்சிக‌ள் நீண்ட‌ கால‌ போராட்ட‌ம் ந‌ட‌த்த‌ வேண்டியிருந்த‌து. இந்த‌ உண்மை இன்றைய‌ இளைய‌ த‌லைமுறைக்கு தெரியாது.

 அந்த‌க் கால‌த்தில், ஐரோப்பாவில் இருந்த‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் யாவும் முத‌லாளிக‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ இருந்த‌ன‌. அத‌னால் அவை வெளிப்ப‌டையாக‌வே முத‌லாளித்துவ‌ க‌ட்சிக‌ள் என‌ அழைக்க‌ப் ப‌ட்ட‌ன‌. அத‌ற்கு மாறாக‌, ச‌மூக‌ ஜ‌ன‌நாய‌க‌க் க‌ட்சிக‌ள் ம‌ட்டுமே பெரும்பான்மை உழைக்கும் ம‌க்க‌ளை பிர‌திநிதித்துவப் ப‌டுத்தின‌. பிற்கால‌த்தில் அதில் இருந்து பிரிந்த‌து தான் க‌ம்யூனிஸ்ட் க‌ட்சிக‌ள்.

மேற்க‌த்திய‌ நாடுக‌ளில், 20 ம் நூற்றாண்டின் தொட‌க்க‌ம் வ‌ரையில், ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌ பேச்சுக்கே இட‌மிருக்க‌வில்லை. செல்வ‌ந்த‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே தேர்த‌லில் ஓட்டுப் போடும் உரிமை இருந்த‌து. இட‌துசாரிக் க‌ட்சிக‌ளின் நீண்ட‌ கால‌ போராட்ட‌த்திற்குப் பிற‌கு தான் ச‌ர்வ‌ச‌ன‌ வாக்குரிமை ந‌டைமுறைக்கு வ‌ந்த‌து.

இங்கேயுள்ள‌ ப‌ட‌ம், 1907 ம் ஆண்டு ஆம்ஸ்ட‌ர்டாம் ந‌க‌ரில் எடுக்க‌ப் ப‌ட்ட‌து. ச‌ர்வ‌ச‌ன‌ வாக்குரிமைக்காக‌ ந‌ட‌ந்த‌ மாபெரும் ஆர்ப்பாட்ட‌ ஊர்வ‌ல‌ம். SDAP (ச‌மூக‌ ஜ‌ன‌நாய‌க‌ தொழிலாள‌ர் க‌ட்சி) க‌ட்சியால் ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌து.

ப‌தாகைக‌ளில் காணப்ப‌டும் வாச‌க‌ங்க‌ள்: "நாங்க‌ள் ஆண்க‌ளுக்கும், பெண்க‌ளுக்குமான‌ நிப‌ந்த‌னைய‌ற்ற‌ பொது வாக்குரிமை கோருகின்றோம்." "வ‌ர்க்க‌ வாக்குரிமை ஒழிக‌"

(ஆதார‌ம்: Geschiedenis van Amsterdam 1900 - 2000)



உருளைக்கிழ‌ங்கு க‌ல‌வ‌ர‌ம்

இருப‌தாம் நூற்றாண்டின் தொட‌க்க‌த்தில் ஐரோப்பா முழுவ‌தும் உழைக்கும் ம‌க்க‌ளின் எழுச்சி ந‌ட‌ப்ப‌து ஒரு ச‌ர்வ‌ சாதார‌ண‌மான‌ விட‌ய‌ம். ப‌ல‌ இட‌ங்க‌ளில் உண‌வுப் பொருள் விலையேற்ற‌ம் க‌ல‌வ‌ர‌ங்க‌ளுக்கு கார‌ண‌மாக‌ இருந்த‌து.

பிற‌ ஐரோப்பிய‌ர்க‌ளைப் போன்று, ட‌ச்சுக் கார‌ருக்கும் உருளைக்கிழ‌ங்கு பிர‌தான‌மான‌ உண‌வு. 1917 ம் ஆண்டு, ஜூலை மாத‌ம‌ளவில், நெத‌ர்லாந்தில் உருளைக்கிழ‌ங்கிற்கு த‌ட்டுப்பாடு நில‌விய‌து. அத‌ன் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டிருந்த‌து. அதே நேர‌ம் வெளிநாடுக‌ளுக்கான‌ உருளைக் கிழ‌ங்கு ஏற்றும‌தியும் குறைந்த‌ பாடில்லை. இத‌னால் வ‌றிய‌ உழைக்கும் ம‌க்க‌ள் க‌டுமையாக‌ப் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

ஆம்ஸ்ட‌ர்டாம் ந‌க‌ரில் ஏழை ம‌க்க‌ள் கிள‌ர்ந்தெழுந்து அர‌சுக்கு எதிராக‌ க‌ல‌க‌ம் செய்த‌ன‌ர். த‌ன்னெழுச்சியான‌ ஆர்ப்பாட்ட‌ங்க‌ள் ந‌ட‌ந்த‌ன‌. ந‌க‌ர‌ ம‌த்தியில் இருந்த‌ க‌டைக‌ள் சூறையாட‌ப் ப‌ட்ட‌ன‌. இட‌துசாரிக் க‌ட்சிக‌ள் கால‌வ‌ரைய‌ற்ற‌ பொது வேலைநிறுத்த‌திற்கு அழைப்பு விடுத்த‌ன‌. ஆயிர‌க் க‌ண‌க்கான‌ தொழிலாள‌ர்க‌ள் வேலைநிறுத்த‌ம் செய்த‌ன‌ர்.

அர‌சாங்க‌ம் க‌ல‌வ‌ர‌த்தை அட‌க்குவ‌த‌ற்காக‌ இராணுவ‌த்தை அனுப்பிய‌து. 3500 ப‌டையின‌ர் ஆம்ஸ்ட‌ர்டாம் ந‌க‌ர‌ ம‌த்தியில் கூடார‌ங்க‌ளை அடித்து த‌ங்கினார்க‌ள். (ப‌ட‌த்தில் பார்க்க‌வும்) க‌ல‌வ‌ர‌ம் அட‌க்க‌ப் ப‌ட்டு, ஜூலை 6 நிலைமை வ‌ழ‌மைக்கு திரும்பிய‌து. 10 பேர் ப‌லியானார்க‌ள். 113 பேர் காய‌ம‌டைந்த‌ன‌ர்.

(ஆதார‌ம்: Geschiedenis van Amsterdam 1900 - 2000)


பெப்ரவரி வேலைநிறுத்தம்


1941 ம் ஆண்டு, நெத‌ர்லாந்தை ஆக்கிர‌மித்த‌ ஜேர்மன் நாஸிப் ப‌டையினர், யூத‌ர்க‌ளை வெளியேற்றும் ந‌ட‌வ‌டிக்கைக‌ளை ஆர‌ம்பித்த‌ன‌ர். அத‌ற்கு எதிர்ப்பு தெரிவிப்ப‌த‌ற்காக‌, நெத‌ர்லாந்து க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி பெப்ரவரி 25 அன்று பொது வேலைநிறுத்த‌திற்கு அழைப்பு விடுத்த‌து. 

ஆம்ஸ்ட‌ர்டாம் ந‌க‌ரிலும் அதை அண்டிய‌ ப‌குதிக‌ளிலும், அன்று யாரும் வேலைக்கு போக‌வில்லை. க‌ம்யூனிஸ்டுக‌ளுக்கு அந்த‌ளவு செல்வாக்கு இருந்த‌து. மூன்று நாட்க‌ளாக‌ போராட்ட‌ம் தொட‌ர்ந்த‌து. 2ம் உலகப் போர் காலத்தில், அன்று நாஸிக‌ள் ஆக்கிர‌மித்த‌ ஐரோப்பிய நாடுக‌ளில் ந‌ட‌ந்த‌ முத‌லாவ‌து ம‌க்க‌ள் போராட்ட‌ம் அது தான். 

த‌ற்கால‌த்தில், ஒவ்வொரு வ‌ருட‌மும், அர‌சு அனுச‌ர‌ணையில் பெப்ர‌வ‌ரி வேலைநிறுத்த‌ம் நினைவுகூர‌ப் ப‌டுகின்ற‌து. இருப்பினும், ஊட‌க‌ங்க‌ள் வேண்டுமென்றே க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி ப‌ற்றி எதுவும் குறிப்பிடாம‌ல் இருட்ட‌டிப்பு செய்து வ‌ருகின்ற‌ன‌.

Friday, September 11, 2015

ஈழக் குழந்தைக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் போலித் தமிழ் உணர்வாளர்கள்


"சிரிய குழந்தைக்காக உலகமே அழுகிறது, ஈழக் குழந்தைக்காக யாரும் அழவில்லை..." என்று, இப்போது சிலர் பிரச்சாரம் செய்யக் கிளம்பி உள்ளனர். இவர்கள் உண்மையில் தமிழ் உணர்வாளர்களும் அல்ல, ஈழக் குழந்தை மீது கரிசனை கொண்டவர்களும் அல்ல.

மேற்கத்திய அரசுக்களின் இரட்டை வேடத்தை மூடி மறைப்பது மட்டும் அவர்களது நோக்கம் அல்ல. சர்வதேச மட்டத்தில் தமிழ் மக்களை தனிமைப் படுத்தி, அவர்களை அறியாமையில் வைத்திருக்கும் உள் நோக்கில் இந்தப் பிரச்சாரம் முன்னெடுக்கப் படுகின்றது. 

முதலில் நாங்கள் ஒரு முக்கியமான விடயத்தை அவதானிக்க வேண்டும். சிரியா, பாலஸ்தீனம் போன்ற, மூன்றாமுலகை சேர்ந்த, மத்திய கிழக்கு மக்களின் பிரச்சினை ஊடகங்களின் கவனத்தைப் பெறும் நேரத்தில் "மட்டும்" தான், இவர்கள் இது போன்ற வாதங்களை அடுக்குவார்கள்.

அமெரிக்க, ஐரோப்பிய மக்களின் பிரச்சினை என்றால் இவர்களும் சேர்ந்து அழுவார்கள். உதாரணத்திற்கு, கொசோவோவுக்காக உலகமே அழுத நேரம் இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இவர்களும் சேர்ந்து அழுதார்கள்! அப்போது யாருக்கும் ஈழப்போரில் இறந்து கொண்டிருந்த குழந்தைகள் நினைவுக்கு வரவில்லை!

2000 ம் ஆண்டு, அமெரிக்காவில் கிட்டத்தட்ட இதே மாதிரியானதொரு சம்பவம் நடந்தது. எலியான் என்ற ஐந்து வயது கியூபா நாட்டுக் குழந்தை, தாயுடன் அகதியாக அமெரிக்காவை நோக்கி படகில் சென்று கொண்டிருந்தான். எதிர்பாராத விதமாக, படகு கடலில் மூழ்கியதால், தாய் உட்பட பல அகதிகள் இறந்து விட்டனர். எப்படியோ குழந்தை எலியான் உயிர் தப்பிப் பிழைத்து மியாமிக் கரையை வந்து சேர்ந்து விட்டான். 

மியாமியில் வசிக்கும் தாய் மாமன், எலியானை பராமரித்து வந்தாலும், கியூபாவில் வசிக்கும் தந்தை, மகனைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரினர். அதனால் அமெரிக்க அரசு தலையிட்டு, குழந்தையை தாய் மாமனிடம் இருந்து பிரித்து, கியூபாவுக்கு அனுப்பி விட்டது. (Elián González affair; https://en.wikipedia.org/wiki/Eli%C3%A1n_Gonz%C3%A1lez_affair)

அமெரிக்கா - கியூபா முரண்பாடு காரணமாக, ஒரு குடும்பப் பிரச்சினை, சர்வதேசப் பிரச்சினையாகி, அன்று "உலகமே ஒரு கியூபக் குழந்தைக்காக அழுது கொண்டிருந்தது". அப்போது நமது போலித் தமிழ் உணர்வாளர்கள் என்ன செய்தார்கள்? "ஒரு கியூபக் குழந்தைக்காக" அவர்களும் சேர்ந்து அழுதார்கள்! அந்த நேரத்தில் ஈழப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. பல ஈழக் குழந்தைகள் செத்து மடிந்து கொண்டிருந்தனர். அப்போது யாருக்கும் கியூபக் குழந்தையையும், ஈழக் குழந்தையையும் ஒப்பிடத் தோன்றவில்லையே? அது ஏன்?

ஈழக் குழந்தைகள் குறித்து அக்கறைப் படாமல், மேற்கத்திய நாடுகள் பாராமுகமாக இருந்தமையை காட்டுவதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. ஒரு தடவை, ஈழப் போர் நடந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில், 2007 ம் ஆண்டு, போர்த்துக்கல் நாட்டில் உள்ள சுற்றுலா ஸ்தலமான அல்கார்வே பகுதியில், மடலின் என்ற ஒரு பிரிட்டிஷ் குழந்தை காணாமல் போனது. அன்று அது பிரதானமான செய்தியாக அனைத்து ஊடகங்களிலும் பேசப் பட்டது. (Disappearance of Madeleine McCann; https://en.wikipedia.org/wiki/Disappearance_of_Madeleine_McCann)

ஈழப் போரில் இறந்து கொண்டிருந்த ஈழக் குழந்தைகளை பற்றி, ஒரு வார்த்தை பேசாத மேற்கத்திய ஊடகங்கள், காணாமல்போன ஒரு பிரிட்டிஷ் குழந்தைக்காக அழுதன. உலகம் முழுவதையும் அழ வைத்தன. ஏனென்றால், அது ஒரு மேலைத்தேய பணக்கார நாட்டில் பிறந்த அதிர்ஷ்டக்காரக் குழந்தை! 

அப்போது நமது "தமிழ் உணர்வாளர்" யாரும் பொங்கியெழுந்து, "பிரிட்டிஷ் குழந்தைக்காக அழுகிறீர்களே! ஈழக் குழந்தைக்காக அழுதீர்களா?" என்று கேட்கவில்லை! எப்படிக் கேட்பார்கள்? அவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் வெள்ளை எஜமானுக்கு கோபம் வராதா?


கரை ஒதுங்கிய திமிங்கிலத்தை கடலுக்குள் தள்ளி விட்ட மிருக காருண்யம் பற்றி, மேற்கத்திய ஊடகங்கள் முக்கிய கவனமெடுத்து தகவல் தெரிவிக்கும். ஆனால், விலங்குகள் மீது காட்டும் அன்பு, பாசத்தில் நூற்றில் ஒரு பங்கைக் கூட, மேற்கத்திய நாட்டவர்கள் போரில் கொல்லப் பட்ட ஈழக் குழந்தைகள் விடயத்தில் காட்டவில்லை.

துருக்கிக் கடற்கரையில், சிரிய அகதிக் குழந்தை இறந்து ஒதுங்கிய சம்பவம் நடப்பதற்கு, ஓரிரு மாதங்களுக்கு முன்னர், அமெரிக்க மக்கள் அனைவரும் ஒரு சிங்கத்திற்காக அழுது வடித்தார்கள். (https://en.wikipedia.org/wiki/Cecil_(lion))

சிம்பாப்வே வன விலங்கு சரணாலயத்தில், ஒரு அமெரிக்க பல் வைத்தியர் சிசில் என்ற சிங்கத்தை சுட்டுக் கொன்ற சம்பவம், அமெரிக்கர்களை கிளர்ந்தெழ வைத்தது. "சிங்கத்தை கொன்ற படுபாவி! இரக்கமற்ற கொலைகாரன்!" என்றெல்லாம் அந்த வைத்தியரை திட்டித் தீர்த்தார்கள். நேரில் கண்டால் என்ன செய்திருப்பார்களோ தெரியாது. 


இதே அமெரிக்கர்கள், ஆயிரக் கணக்கான தமிழ் மக்களை கொன்ற மகிந்த ராஜபக்சவும், கோத்தபாய ராஜபக்சவும் அமெரிக்கா வந்திருந்த நேரம் என்ன செய்தார்கள்? ஒன்றுமே செய்யவில்லை. 

"தமிழர்களை கொன்ற படுபாவிகள்! இரக்கமற்ற கொலைகாரர்கள்!" என்று எந்தவொரு அமெரிக்கரும் முணுமுணுக்கக் கூட இல்லை! அது சரி, நமது "தமிழ் உணர்வாளர்கள்" அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள்? "அமெரிக்கர்களுடன் நாங்களும் சேர்ந்து, அந்த சிங்கத்திற்காக அழுவோம் வாருங்கள்!" என்று அமெரிக்காவுக்கு விசுவாசமான அடிமைகளாக நடந்து காட்டினார்கள்.


முதலில் "சிரியக் குழந்தை = ஈழக் குழந்தை ஒப்பீடு" அடிப்படையிலேயே தவறானது. உலகில் யாரும் "சிரியக்  குழந்தைகளுக்காக," அல்லது "சிரியாவுக்காக" அழவில்லை! இப்போதும் கூட சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தத்தில் அகப்பட்டு குழந்தைகள் மரணிக்கின்றன. உலகில் யாருக்குமே அதைப் பற்றிக் கவலையில்லை! "சிரியாவில் இன்றைக்கு நடந்த குண்டுவீச்சில், இத்தனை குழந்தைகள் கொல்லப் பட்டனர்...." என்று எந்த ஊடகமாவது அறிவித்திருக்கிறதா? மேற்கத்திய நாடுகளின் இதே கள்ள மௌனம் தான், ஈழக் குழந்தைகள் விடயத்திலும் பாராமுகமாக இருந்துள்ளது.

அப்படியானால், எதற்காக "அந்த சிரியக் குழந்தை" பற்றிய தகவல் முக்கியத்துவம் பெற்றது? முதலில், அது ஒரு "சிரியக்" குழந்தை என்பதற்காக ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. அது ஓர் அகதிக் குழந்தை என்பதற்காக எல்லோரும் அழுதார்கள். ஐரோப்பியரின் உணர்வுகளை தட்டி எழுப்பும் விடயம் எல்லாம் ஊடகங்களுக்கு பரபரப்பான தகவல்கள் தான். அதைப் பற்றி பேசுவதற்கு முன்னர், ஐரோப்பிய அரசியல் நிலவரம் பற்றி ஓரளவாவது அறிந்திருக்க வேண்டும்.

தற்போது அகதிகளின் நெருக்கடி ஐரோப்பாவை பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஓர் ஐரோப்பிய நாட்டில் வசித்தால் அந்த நிலைமையை புரிந்து கொள்ள முடியும். ஐரோப்பிய பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சிகளில், தினந்தோறும் அகதிகள் தான் தலைப்புச் செய்தியாக இடம்பெறுகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் பாராளுமன்றங்கள், ஏன் ஐரோப்பிய ஒன்றியத்தில் கூட, அகதிகள் நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பதைப் பற்றி விவாதங்கள் நடக்கின்றன. ஆயிரக் கணக்கில் ஐரோப்பாவுக்குள் வந்து குவியும் அகதிகள் பிரச்சினை, ஐரோப்பாவை பிடித்தாட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் தான், அய்லான் என்ற அகதிக் குழந்தை கடலில் மூழ்கி இறந்தது.

ஐரோப்பிய மக்கள் அனைவரும் ஒரு முனைப்பாக அகதிகள் பிரச்சினை பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், "சிரியக் குழந்தையின்" மரணம் ஐரோப்பியரின் மனச்சாட்சியை பிடித்து உலுக்கியதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்னர்,  பெரும்பான்மையான ஐரோப்பியர்கள், பொதுவாக அனைத்து அகதிகளுக்கும் எதிராக பேசிக் கொண்டிருந்தார்கள். அதாவது, ஈழத் தமிழர்கள் அகதிகளாக வருவதையும் அவர்கள் விரும்பவில்லை.
"கிறிஸ்தவ குழந்தைகளுக்காக யாருமே அழவில்லை." என்று கவலைப்படும், ஐரோப்பிய தீவிர வலதுசாரிகளின் இனவாதக் கார்ட்டூன். 

இந்த உண்மை தெரியாமல், "சிரியக் குழந்தைக்காக உலகமே அழுகிறது. ஈழக் குழந்தைக்காக எவன் அழுதான்?" என்று சிலர் நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். இது தான் சந்தர்ப்பம் என்று உங்களது "தமிழினப் பற்றை" விளம்பரப் படுத்துவது ஒரு பக்கம் இருக்கட்டும். இதே சிரியக் குழந்தை, சிரியாவில் நடந்த யுத்தத்தில் கொல்லப் பட்டிருந்தால், "உலகம் அழுதிருக்குமா"? 

அய்லான் என்ற அந்தக் குழந்தை, சிரியாவில் கொபானி என்ற இடத்தில் பிறந்தது. அது பிறக்கும் பொழுதே யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அய்லான் குர்டியின் குடும்பத்தினர், குர்திய சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள். சிரியாவில் உள்ள குர்து சிறுபான்மை இனம், இலங்கையில் தமிழருடன் ஒப்பிடத் தக்கது. 

மூன்று வருடங்களுக்கு முன்னர், அதாவது அய்லான் பிறந்த நேரம், குர்து மக்களின் பிரதேசமான கொபானியை (சிரிய- முள்ளிவாய்க்கால் என்று நினைத்துக் கொள்ளுங்கள்) கைப்பற்றுவதற்காக ISIS படைகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தன. அப்போது பெருந்தொகையான கொபானி வாசிகள் அகதிகளாக வெளியேறி துருக்கியில் அகதித் தஞ்சம் கோரினார்கள். அங்கிருந்து ஐரோப்பா செல்வதற்காக கிளம்பிய பொழுது தான், கிரேக்க கடல் எல்லையில் அய்லானின் மரணம் நிகழ்ந்தது.

போலித் தமிழ் உணர்வாளர்களே! இப்போது சொல்லுங்கள். ஒரு "தமிழ் அய்லானும்" அவனது குடும்பமும், முள்ளிவாய்க்கால் முற்றுகையில் இருந்து தப்பி தமிழ்நாட்டுக்கு அகதியாக செல்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். இந்தியாவில் இருந்து வெளியேறி, ஐரோப்பாவில் அகதித் தஞ்சம் கோருவதற்காக, படகில் பயணம் செய்த பொழுது, அந்தத் தமிழ்க் குழந்தை கிரேக்க கடல் எல்லையில் மூழ்கி இறந்து விடுகின்றது. 

அப்படி ஒரு சம்பவம் நடந்து, அது உலக ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை என்றால், "சிரியக் குழந்தை = ஈழக் குழந்தை ஒப்பீடு" சரியாக இருந்திருக்கும். இங்கே நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஈழப் போர்க் களத்தில் இறந்த குழந்தையை, ஐரோப்பிய கடலில் இறந்த அகதிக் குழந்தையுடன் ஒப்பிடுகின்றீர்கள். ஈழக் குழந்தைகளும், ஐரோப்பாவுக்கு அகதிகளாக செல்கின்றன என்ற உண்மையை மறந்து விட்டுப் பேசுகின்றீர்கள்.

ஐரோப்பிய நாடுகள் எதுவும், அகதித் தஞ்சம் கோருவோருக்கு இலகுவான வழி வகைகளை செய்து கொடுக்கவில்லை. ஐரோப்பிய நாடொன்றின் தூதுவராலயத்தில் அகதித் தஞ்சம் கோரலாம் என்று சட்டம் எழுதி வைத்திருகிறார்கள். ஆனால், நடைமுறையில் எதுவுமே நடப்பதில்லை.

எந்தவொரு ஈழத் தமிழ் அகதியும், கொழுப்பு அல்லது புது டில்லியில் உள்ள ஐரோப்பிய நாடொன்றின் தூதுவராலயத்தில், அகதித் தஞ்சத்திற்கு விண்ணப்பித்து விட்டு, ஐரோப்பாவுக்கு செல்லவில்லை. அது சாத்தியமல்ல என்பது அவர்களுக்கும் தெரியும்.

அதிகம் பேசுவானேன். சம்பந்தப் பட்ட சிரிய குழந்தையின் குடும்பமும், கனடாவில் தஞ்சம் கோருவதற்கு விண்ணப்பித்து இருந்தது. ஆனால், கனடிய குடிவரவு அமைச்சு அந்த விண்ணப்பத்தை நிராகரித்து விட்டதால் தான், சட்டவிரோதமாக ஐரோப்பா செல்ல முற்பட்டு மரணம் சம்பவித்தது.

ஆகவே, இங்கே முக்கியமான பிரச்சினை ஐரோப்பாவை சுற்றிலும் உள்ள கண்ணுக்குப் புலப்படாத கோட்டை மதில்கள். வறிய நாடுகளில் இருப்பவர்களுக்கு விசா கொடுக்க மறுக்கும் பாகுபாடு. ஏன் எந்தவொரு "தமிழ் உணர்வாளரும்"(?) இந்தப் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதில்லை?

ஈழத் தமிழ் அகதிகளுக்கு இருக்கும் ஒரே வழி, சட்டவிரோதமாக விசா இல்லாமல் ஐரோப்பாவுக்குள் நுழைவது தான். அதைச் செய்ய முயன்ற பொழுது தான், சிரியக் குழந்தையான அய்லானும் அவனது குடும்பமும் கடலில் மூழ்கி இறந்துள்ளன. ஈழம், சிரியா எங்கிருந்து வந்தாலும்,   ஐரோப்பாவில் அவர்கள் அகதிகள் தான். 

ஆகவே, "தமிழ் உணர்வாளர்களே"! நீங்கள் உண்மையிலேயே ஈழக் குழந்தைகளில் கரிசனை கொண்டவர்கள் என்றால், "ஐரோப்பிய நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி, தாராள மனதுடன் அகதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைத்துப் போராடுங்கள். அது தான் உங்களது தமிழ் உணர்வு நேர்மையானது என்பதை எடுத்துக் காட்டும். உண்மையான பிரச்சனைகளை மூடி மறைத்துக் கொண்டு, "சிரியக் குழந்தை = ஈழக் குழந்தை ஒப்பீடு" செய்து கொண்டிருந்தால், அது உங்களுடைய "தமிழ் உணர்வு" போலியானது என்பதைத் தான் நிரூபிக்கும்.


Thursday, December 25, 2014

தேசிய வெறி தோற்கடிக்கப் பட்ட கிறிஸ்துமஸ் போர் நிறுத்தம்


இன்று (25-12-2014) கிறிஸ்துமஸ் போர்நிறுத்தத்தின் நூறாவது ஆண்டு நினைவு தினம். ஐரோப்பாவில் முதலாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், 1914 ம் ஆண்டு, டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினத்தன்று போர்நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது யாரும் எதிர்பாராத அந்த அதிசயம் நிகழ்ந்தது.

தமிழர்களும், சிங்களவர்களும், இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் எந்தளவு தூரம் ஒருவரையொருவர் வெறுக்கும் பகைவர்கள் என்பதை நான் விளக்கத் தேவையில்லை. நூறு வருடங்களுக்கு முந்திய ஐரோப்பியர்களும், அப்படித் தான் வாழ்ந்தார்கள். தேசியவெறி, இனவெறி காரணமாக ஒருவரை ஒருவர் கொன்று இரத்தம் குடித்துக் கொண்டிருந்தார்கள்.

ஐரோப்பிய தேசிய இனங்கள், தமிழர்-சிங்களவர், இந்தியர்-பாகிஸ்தானிகளை விட மோசமான பகைவர்களாக இருந்தனர். ஐரோப்பியர்களின் தேசியவெறி, கோடிக் கணக்கான உயிர்களை பலி கொண்ட முதலாம் உலகப் போருக்கு இட்டுச் சென்றது. இனவெறியூட்டப் பட்ட ஐரோப்பிய நாடுகளின் படைகள், ஈவிரக்கமின்றி படுகொலைகளை செய்து கொண்டிருந்தன. அப்படியான ஒரு தருணத்தில் தான், கிறிஸ்துமஸ் போர் நிறுத்தம் வந்தது.

பெல்ஜியத்தில், ஒரு பக்கம் ஜெர்மன் படைகளும், மறுபக்கம் பிரிட்டிஷ் படைகளும் போர்க் களத்தில் நின்று கொண்டிருந்தன. அன்றைய ஐரோப்பாவில், ஜெர்மனியர்களும், ஆங்கிலேயர்களும், தமிழர், சிங்களவர் மாதிரி ஜென்மப் பகைவர்கள் ஆவர். அப்படியான தேசியவெறி/இனவெறி ஊட்டப்பட்ட படைவீரர்கள், போர் நிறுத்தம் ஏற்பட்டதும், ஒருவரோடு ஒருவர் கைகுலுக்கிக் கொண்டனர்.

காட்டுமிராண்டித் தனமான போருக்கு மத்தியில், போர்நிறுத்தம் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியது. ஜெர்மன் படையினரும், பிரிட்டிஷ் படையினரும், ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் பரிசுகளை பகிர்ந்து கொண்டனர். ஒன்றாக சேர்ந்து கால்பந்து விளையாடினார்கள். சில நாட்களுக்கு முன்னர், ஒருவரை ஒருவர் கொன்று குவித்த எதிரிகள், போர்நிறுத்த காலம் முழுவதும் நட்புடன் பழகினார்கள்.

படையினருக்கு இடையில் இது போன்ற நட்புறவு தொடர்ந்திருக்க ஆட்சியாளர்கள் சம்மதிப்பார்களா? மீண்டும் போர் வந்தது. ஒன்றாக கால்பந்து விளையாடியவர்கள், மீண்டும் துப்பாக்கிகளை எடுத்து ஒருவரை ஒருவர் சுட்டுக் கொன்றார்கள். இன்னும் பல இலட்சம் பேரைக் காவு கொண்ட போர், 1917 ம் ஆண்டு தான் ஓய்ந்தது.

ஈழப்போர் நடந்த காலத்திலும், இது மாதிரியான சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், பிரேமதாச ஆட்சிக் காலத்தில், பலாலி இராணுவ முகாமுக்கு அருகில் நடந்த சம்பவம் ஒன்று, யாழ்ப்பாண தமிழ்ப் பொது மக்களால் அடிக்கடி மேற்கோள் காட்டிப் பேசப் பட்டது.

பலாலி இராணுவ முகாமுக்கு அருகில், சிறிலங்கா படையினரும், புலிகளும் எதிரெதிரே காவலரண்களை போட்டிருந்தார்கள். இரண்டுக்கும் இடையில் உரிமை கோரப் படாத பிரதேசம் (No man's land) இருந்தது. அங்கே எப்போதும் சண்டை நடப்பதில்லை. சில நேரம் அமைதியாக இருக்கும். சிங்களப் படையினரும், புலிப் போராளிகளும், நட்பாகவும் பேசிக் கொள்வார்கள். அப்போது பழக்கமான புலிப் போராளியிடம், சிங்களப் படையினன் பின்வருமாறு கூறினானாம்: "என்னுடைய ஐயாவும், உன்னுடைய ஐயாவும் ஏ.சி. ரூமுக்குள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். நானும், நீயும் தான் இந்த வெட்ட வெளியில் நின்று சண்டை பிடிக்கிறோம்..."

தேசியவெறி/இனவெறிக் கொள்கையால் ஆதாயம் அடையும் பிரிவினர், அப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்று மறுக்கலாம். ஆனால், சாதாரண சிங்கள-தமிழ் மக்கள், சாதாரண சிங்களப் படையினர், தமிழ்ப் புலிப் போராளிகள் எல்லோரும், தேசியவாதிகளோ அல்லது இனவாதிகளோ அல்ல. அப்படி கருதிக் கொள்வது ஒரு கற்பனாவாதம்.

Saturday, August 09, 2014

சாரு நிவேதிதாவும் கம்யூனிசத்தை வெறுக்கும் சாரைப் பாம்புகளும்

இலங்கையில், இந்தியாவில் இருந்து புதிதாக மேற்கு ஐரோப்பிய நாடொன்றுக்கு வந்து தங்கி விடும் குடியேறிகள், தாயகத்தில் இருக்கும் தமது உறவினர்கள், நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடுவதுண்டு. சில நேரம், தவிர்க்க முடியாமல், அவர்களது உரையாடல்கள் எனது காதுகளை எட்டுவதுண்டு. 

பெரும்பாலானவர்கள் மறுமுனையில் இருப்பவருக்கு எரிச்சல், பொறாமையை கிளப்பும் நோக்குடன், வேண்டுமென்றே பலதையும் மிகைப் படுத்திக் கூறுவார்கள். தாங்கள் மாதம் எவ்வளவு சம்பாதிக்கிறோம், எவ்வளவு காசு மிச்சம் பிடிக்கிறோம் என்று, இலங்கை/இந்திய ரூபாய் கணக்கில் சொல்வார்கள். தாயகத்தில் அதனை கேட்டுக் கொண்டிருக்கும் சொந்தங்கள், நண்பர்களுக்கு, கனவில் மிதப்பது போன்றிருக்கும்.

 “அதிர்ஷ்டம் உள்ளவன்… கொடுத்து வைச்சவன்…” என்று நினைத்துக் கொண்டே, தாங்களும் எப்போது அந்த “சொர்க்க லோகத்திற்கு” போகப் போகிறோம் என்று கனவு காண்பார்கள். ஆனால், அவர்கள் மறு பக்க உண்மையை உணர்வதில்லை. எரிச்சலை கிளப்பி விடும் நண்பரும், ஒரு நாளும் கூற மாட்டார். அதாவது, ஐரோப்பாவில் சம்பாதிப்பதில் அரைவாசி வீட்டு வாடகைக்கு போகின்றது. தாயகத்துடன் ஒப்பிடும் பொழுது பொருட்களின் விலைகள் பல மடங்கு அதிகம் என்பன போன்ற உண்மைகளை அவர்கள் என்றைக்கும் கூறப் போவதில்லை.

இந்த நண்பர்கள், தாம் “அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள்” என்று நினைத்துக் கொள்வார்கள். ஆனால், தெரிந்தோ தெரியாமலோ, ஒரு குறிப்பிட்ட அரசியலை பிரச்சாரம் செய்து கொண்டிருப்பார்கள். தமிழகத்தின் பிரபல பின் நவீனத்துவ எழுத்தாளர் சாருநிவேதிதா, அந்த அரசியல் என்னவென்று வெளிப்படையாக ஒரு பதிவில் எழுதியுள்ளார். 

சாருநிவேதிதாவின் பதிவு, சில புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் கடுமையாக கண்டிக்கப் பட்டாலும், யாரும் சாருநிவேதிதாவின் அரசியலை ஆராயும் அளவிற்கு ஆழமாக செல்லவில்லை என்று நினைக்கிறேன். 

முதலில் சாருநிவேதிதா தனது இணையத் தளத்தில் எழுதி இருக்கும், அந்த சர்ச்சைக்கு உரிய பந்தியை பார்ப்போம்:

//ஐரோப்பாவில் கம்யூனிச சித்தாந்தம் இல்லாமலேயே இப்போது கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையான ”எல்லோரும் சமம்; எல்லோருக்கும் சமமான வாழ்வாதாரங்கள்” என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்தி விட்டார்கள். அங்கே ஏழைக்கும் பணக்காரனுக்கும் இங்கே இருப்பது போன்ற பயங்கரமான வேறுபாடு கிடையாது. ஜெர்மனியில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஒன்று, தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியத்தை 8.5 யூரோக்களாக நிர்ணயித்து உள்ளது. வரும் ஜனவரி முதல் தேதி முதல் இச்சட்டம் அமலுக்கு வரும். எட்டு மணி நேர வேலைக்கு ரூ.5,600. மாத ஊதியம் ஒன்றரை லட்சம் ரூபாய். கம்யூனிச சர்வாதிகாரம் இல்லாமலேயே மக்கள் நல அரசுகள் அங்கே நடந்து கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம், கார்ல் மார்க்ஸோ எங்கெல்ஸோ அல்ல. அங்கே இருந்த தத்துவப் பாரம்பரியம்தான் அதற்குக் காரணம். ”நீங்கள் சொல்வதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்; ஆனால் உங்கள் கருத்தைச் சொல்லும் உரிமைக்காக என் உயிரையும் தருவேன்” என்பதுதான் ஐரோப்பியச் சிந்தனை மரபின் அடிப்படை. ஆனால் ”நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும்; இல்லாவிட்டால் உங்கள் உயிரைப் பறிக்கும் உரிமை எனக்கு உண்டு” என்று சொல்வது கம்யூனிசம்.//
- சாருநிவேதிதா (http://charuonline.com/blog/?p=1437)

சாருநிவேதிதா பல தடவைகள் மேற்கு ஐரோப்பாவுக்கு சென்று வந்துள்ளார். அங்கு வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களை சந்தித்து இருக்கிறார். அதை விட, ஸ்பானிஷ் மொழி கற்றிருக்கிறார். லத்தீன் அமெரிக்க முற்போக்கு இலக்கியங்களில் பரிச்சயம் கொண்டவர். ஆனால், எந்தளவு நேரடி அனுபவமும், இலக்கிய அறிவும் இருந்த போதிலும், கம்யூனிச எதிர்ப்புவாதம் எனும் சகதிக்குள் மூழ்கியவர்களின் எண்ணங்கள் மாறப் போவதில்லை.

கம்யூனிச எதிர்ப்பு சகதிக்குள் மூழ்கிய ஒருவர், சேறடிப்பதைத் தவிர வேறெதுவும் அறிந்திருக்க மாட்டார். அதற்கு சாருநிவேதிதா ஓர் உதாரணம் மட்டுமே. இந்த எதிர்வினை சாருநிவேதிதாவுக்கு மட்டுமானதல்ல. அவரைப் போன்று, சதா சர்வ காலமும் கம்யூனிச எதிர்ப்பு நச்சுக் கருத்துக்களை கக்கிக் கொண்டிருக்கும் சாரைப் பாம்புகளுக்கும் சேர்த்து தான்.

//ஐரோப்பாவில் கம்யூனிச சித்தாந்தம் இல்லாமலேயே இப்போது கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையான ”எல்லோரும் சமம்; எல்லோருக்கும் சமமான வாழ்வாதாரங்கள்” என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்தி விட்டார்கள்.//

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள “நலன்புரி அரசு” (Welfare state) எனும் அரசின் கொள்கையை தான் அவ்வாறு கூறுகின்றார். (சாருநிவேதிதா "மக்கள் நல அரசு" என்று குறிப்பிடுகிறார். ஆனால், ஐரோப்பிய அரசுக்களின் கொள்கைகளில் "மக்கள் நலன்" என்ற சொற்பதம் பயன்பாட்டில் இல்லை.) அது ஏன் உருவானது என்ற வரலாற்றை யாரும் படிப்பதில்லை.

2 ம் உலகப் போர் வரையில், “கம்யூனிசம் இல்லாமல் கம்யூனிசத்தை நடைமுறைப் படுத்தும்” எண்ணம், எந்தவொரு ஐரோப்பிய நாட்டு அரசிடமும் இருக்கவில்லை. 1ம் உலகப் போருக்கும், 2 ம் உலகப் போருக்கும் இடைப்பட்ட காலத்தில், அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்த மக்கள், ஒன்றில் பாசிசக் கட்சிக்கு, அல்லது கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவளித்தனர். அதற்குக் காரணம், அன்றைய மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நிலவிய சமூக ஏற்றத் தாழ்வு, இன்றைக்கு இந்தியாவில் இருப்பதை விட மிகவும் மோசமாக இருந்தது. வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது. தொழிலாளர்களை கசக்கிப் பிழியும் உழைப்புச் சுரண்டல், சர்வசாதாரணமாக நடைமுறையில் இருந்தது.

ஏற்கனவே, முதலாம் உலகப் போரின் முடிவில், ரஷ்யாவில் சோவியத் யூனியன் எனும் உலகின் முதலாவது சோஷலிச நாடு உருவாகி இருந்தது. அதனால், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் உழைப்பாளர் புரட்சி ஏற்படலாம் என்ற அச்சம் அதிகரித்துக் காணப் பட்டது. ஜெர்மனியில் மூன்று நகரங்களில் கம்யூனிசப் புரட்சி வெடித்தது. 

குறைந்தது ஒரு மாத காலமாவது, பெர்லின், மியூனிச், ஹம்பேர்க் ஆகிய மாநகரங்களில், சோவியத் அமைப்பு நடைமுறையில் இருந்தது. அதே நேரம், ஹங்கேரியிலும் கம்யூனிஸ்டுகள் புரட்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்றினார்கள். ஸ்பெயினில், குடியரசு அரசாங்கத்தில் கம்யூனிஸ்டுகளின் கை ஓங்கியிருந்ததால், அங்கே ஒரு உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது.

அன்றைக்கு ஐரோப்பா இருந்த சூழ்நிலையில், எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் கம்யூனிஸ்ட் புரட்சிகள் நடக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக, முதலாளிய வர்க்கம் உண்மையிலேயே பயந்திருந்தது. அதனால் தான், கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை கைப் பற்றுவதை தடுக்கும் நோக்கில், இத்தாலியிலும், ஜெர்மனியிலும் பாசிஸ்டுகளை ஆதரித்தார்கள். பிற ஐரோப்பிய நாடுகளிலும் அது தான் நிலைமை.

2 ம் உலகப்போரின் முடிவில், நாஸிகளுக்கு ஏற்பட்ட எதிர்பாராத தோல்வி, முதலாளிய வர்க்கத்திற்கு பேரிடியாக அமைந்தது. அது மட்டுமல்ல, “ஐரோப்பாவில் கம்யூனிசப் புரட்சி ஏற்படும் அபாயம்” முன்னரை விட பல மடங்கு அதிகரித்திருந்தது. போரினால் ஏற்பட்ட பேரழிவுகள் ஐரோப்பிய மக்களை தலை நிமிர முடியாமல் செய்திருந்தது. பசி, பஞ்சம், பிணி எங்கும் தலைவிரித்தாடியது. அது மட்டுமல்லாது, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சோவியத் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. மேற்கு ஐரோப்பிய நாடுகளில், போருக்கு பின்னர் நடந்த பொதுத் தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் குறைந்தது பத்து சதவீத வாக்குகளைப் பெற்று முன்னேறிக் கொண்டிருந்தன.

வெகு விரைவில், மேற்கு ஐரோப்பிய நாடுகளும் கம்யூனிச நாடுகளாகி விடும் என்ற அச்சம் காரணமாக, முதலாளிய வர்க்கம் பல விட்டுக் கொடுப்புகளை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அது தான், நலன் புரி அரசுக்களின் தோற்றம்.

//அங்கே ஏழைக்கும் பணக்காரனுக்கும் இங்கே இருப்பது போன்ற பயங்கரமான வேறுபாடு கிடையாது. //

முப்பது வருடங்களுக்கு முன்னர், இதைச் சொல்லி இருந்தால், ஓரளவு நம்பக் கூடியதாக இருந்திருக்கும். அப்போது, ரஷ்யாவிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோஷலிசம் இருந்தது. அதனால் அடக்கி வாசிக்க வேண்டிய நிலைமை. பணக்காரர்கள் என்றைக்குமே அதிகளவு சொத்துக்களை வைத்திருந்தனர். ஆயினும், அவர்கள் தமது ஆடம்பரங்களை வெளியே காட்டிக் கொள்ள வெட்கப் பட்டார்கள்.

அதிகம் சம்பாதிப்பவர்களிடம், அரசு அதிக வரி அறவிட்டது. அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு நலன்புரி அரசுக்கான செலவினத்தை ஈடுகட்டி வந்தது. இன்று அவை எல்லாம் பழைய கதைகள். கடந்த இருபது வருடங்களில், பெருமளவு அரசு மானியங்கள், சலுகைகள் குறைக்கப் பட்டு விட்டன. அதனால் அடித்தட்டு மக்களின் வாங்கும் திறன் குறைந்து ஏழைகள் அதிகரித்து வருகின்றனர். மறு பக்கத்தில் பணக்காரர்களின் செல்வம் அதிகரிக்கின்றது. தொழில்நுட்பப் புரட்சி, கணணிமயமாக்கலும் இந்த ஏற்றத்தாழ்வு அதிகரிப்பதற்கு பெருமளவு பங்களிப்பை செய்துள்ளது. 

 //ஜெர்மனியில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஒன்று, தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியத்தை 8.5 யூரோக்களாக நிர்ணயித்து உள்ளது. வரும் ஜனவரி முதல் தேதி முதல் இச்சட்டம் அமலுக்கு வரும். எட்டு மணி நேர வேலைக்கு ரூ.5,600. மாத ஊதியம் ஒன்றரை லட்சம் ரூபாய்.//

ஜெர்மனியில், என்றைக்குமே குறைந்த பட்ச ஊதிய சட்டம் இருக்கவில்லை. ஆனால், அதைச் சுற்றியுள்ள பல ஐரோப்பிய நாடுகளில், ஏற்கனவே பல தசாப்த காலமாக பின்பற்றப் படுகின்றது. உழைக்கும் மக்கள் எல்லோரும் அதன் பலன்களை அனுபவிக்க முடியும் என்று தோன்றவில்லை. இன்னமும், நாட்டில் அதிகரித்து வரும் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு காணப் படவில்லை. 

கடந்த பத்தாண்டுகளில் (குறிப்பாக, யூரோ நாணயம் அறிமுகப் படுத்தப் பட்ட பின்னர்) விலைவாசி இரு மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக பணவீக்கம் அதிகரித்து வந்த போதிலும், அதற்கு சமமமாக சம்பளம் உயரவில்லை. உண்மையில், ஜெர்மன் அரசு நிர்ணயிக்க வேண்டிய குறைந்த பட்ச ஊதியம், இன்னும் அதிகமாகும். குறைந்தது பத்து யூரோ இருந்தால் தான், செலவுகளை சமாளிக்க முடியும்.

முன்னாள் சோஷலிச நாடுகளில், "ஒரு வேலையை பத்து பேருக்கு பங்கிட்டுக் கொடுப்பார்கள்..." என்று முதலாளிய ஆதரவாளர்கள் கிண்டலடிப்பார்கள்.  அந்த சமுதாயத்தில், ஒரு நிறுவனம் சம்பாதிக்கும் இலாபத்தை விட, ஊரில் இருக்கும் எல்லோருக்கும் வேலை போட்டுக் கொடுப்பது முக்கியமாகக் கருதப் பட்டது. மேற்கு ஐரோப்பாவில் என்ன நடக்கிறது? அவர்களுக்கு வேலை செய்யும் மக்களை விட, நிறுவனத்தின் இலாபம் பெரிதாகத் தெரிகின்றது. ஒவ்வொரு நிறுவனமும் தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைத்து, இலாபத்தை அதிகரிக்க விரும்புகின்றது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில், கணணிமயமாக்கல் காரணமாக, பல தொழில்கள் காணாமல் போய் விட்டன. அந்த நிலைமை இன்றைக்கும் தொடர்கின்றது. ஏற்கனவே வேலையிழந்த ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள், வேலை கிடைக்காமல் கஷ்டப் படுகிறார்கள். புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கோ, அல்லது வேலையிழந்த தொழிலாளர்களுக்கு தொழிற்கல்வி வழங்குவதற்கோ, அரசிடம் எந்தத் திட்டமும் கிடையாது. முதலாளிகளிடம் கேட்டால், அது தங்களது பொறுப்பு அல்ல என்று தட்டிக் கழிக்கிறார்கள். 

இந்த இலட்சணத்தில், ஐரோப்பாவில் கம்யூனிசம் இல்லாமலே கம்யூனிசம் நடைமுறைக்கு வந்துள்ளது என்று சாருநிவேதிதா உளறுவது அருவருக்கத்தக்கது. சாருநிவேதிதா பாரிசுக்கு சென்றிருந்த போது, உயிரற்ற சிற்பங்களை பார்த்து இரசித்திருக்கலாம். ஆனால், நடைப்பிணங்களாக வாழும் வேலையற்ற தொழிலாளர்கள் யாரும் அவர் கண்களுக்கு தட்டுப் படவில்லைப் போலும்.

//கம்யூனிச சர்வாதிகாரம் இல்லாமலேயே மக்கள் நல அரசுகள் அங்கே நடந்து கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம், கார்ல் மார்க்ஸோ எங்கெல்ஸோ அல்ல. அங்கே இருந்த தத்துவப் பாரம்பரியம்தான் அதற்குக் காரணம்.//

ஐரோப்பிய வரலாறு பற்றி எதுவும் தெரியாத, மேட்டுக்குடியினரின் வழமையான உளறல் இது. இன்று ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும், ஏதாவதொரு சமூக ஜனநாயகக் கட்சி ஆட்சியில் அமர்ந்திருக்கும். (பிரிட்டனில் உள்ள தொழிற்கட்சி போன்றன) மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள சமூக - ஜனநாயகக் கட்சிகள், இன்று முதலாளித்துவ கட்சிகளாக மாறிவிட்டாலும், அவை தொடங்கப் பட்ட ஆரம்ப காலங்களில் மார்க்சியக் கட்சிகளாகத் தான் இருந்துள்ளன. 

சமூக ஜனநாயகக் கட்சிகள், மார்க்ஸையும், ஏங்கல்சையும் பின்பற்றி வந்தன. தீவிரமான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டன. முன்னொரு காலத்தில், லெனினின் ரஷ்ய சோஷலிச கட்சியுடன், இரண்டாம் அகிலத்தில் அங்கம் வகித்தன. கொள்கை முரண்பாடு காரணமாக, சமூக ஜனநாயகக் கட்சிகளில் இருந்து பிரிந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாகின. அவை பின்னர் மூன்றாம் அகிலம் என்ற அமைப்பை உருவாக்கிக் கொண்டன.

கம்யூனிஸ்ட் கட்சிகள் பாட்டாளிவர்க்கப் புரட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தன. நடைமுறையில் உள்ள முதலாளித்துவ அரசுக்களை தூக்கி எறிவதில் ஆர்வம் காட்டின. அதற்காக ஆயுதமேந்திப் போராடவும் தயாராக இருந்தன. அதற்கு மாறாக, பாராளுமன்ற தேர்தல்கள் மூலம் சோஷலிசத்தை கொண்டு வரலாம் என்று நம்பிய சமூக - ஜனநாயகக் கட்சிகள், இறுதியில் முதலாளியக் கட்சிகளாக சீரழிந்து போயின. 

சமூக ஜனநாயகவாதிகள், ஜனநாயகம் என்ற போர்வையின் கீழ், முதலாளிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டார்கள். முதலாளிகளும் அவர்களை இரு கரம் நீட்டி வரவேற்றார்கள். ஏனெனில், சமூக ஜனநாயகக் கட்சிகளுக்கு பின்னால், கணிசமான அளவு தொழிலாளர்கள் திரண்டிருந்தனர். உண்மையில், சமூக ஜனநாயகக் கட்சிகள் தமது கொள்கைக்கு விரோதமாக நடந்து கொண்டன. தொழிலாளர்களுக்கு துரோகம் இழைத்தன. துரதிர்ஷ்டவசமாக, உலகம் முழுவதும் துரோகிகள் தான் நாயகர்களாக போற்றப் படுகிறார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சமூக ஜனநாயகக் கட்சிகளுக்கு பின்னால் அணிதிரண்ட மக்கள், தமக்கு சோஷலிசம் வேண்டும் என்று மனதார விரும்பினார்கள். கட்சி உறுப்பினர்கள் மார்க்ஸையும், எங்கல்ஸ்ஸையும் படித்தார்கள். தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக தொழிற்சங்க போராட்டங்களை நடத்தினார்கள். அந்தப் போராட்டங்களின் விளைவு தான், பிற்காலத்தில் நலன்புரி அரசு என்ற பெயரில் கொண்டு வரப் பட்ட திட்டங்கள் ஆகும். 

சுருக்கமாக, சாருநிவேதிதா போற்றும் "மக்கள் நல அரசு"க்களின் ஆதாரமே மார்க்சிய தத்துவப் பாரம்பரியம் தான். அதை இன்றைக்குப் பலர் மறந்து விட்டார்கள். தம்மை பெற்றெடுத்து, கஷ்டப் பட்டு வளர்த்து ஆளாக்கிய, பெற்றோரை மறந்து விட்ட பிள்ளைகள் போன்று நடந்து கொள்கின்றனர். சாருநிவேதிதா முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கப் பார்க்கிறார்.

//”நீங்கள் சொல்வதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்; ஆனால் உங்கள் கருத்தைச் சொல்லும் உரிமைக்காக என் உயிரையும் தருவேன்” என்பதுதான் ஐரோப்பியச் சிந்தனை மரபின் அடிப்படை. ஆனால் ”நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும்; இல்லாவிட்டால் உங்கள் உயிரைப் பறிக்கும் உரிமை எனக்கு உண்டு” என்று சொல்வது கம்யூனிசம்.//

சாருநிவேதிதாவின் உச்சகட்ட உளறல் இது தான். கருத்துரிமை பேசும் ஐரோப்பிய சிந்தனை மரபுக்குள் கம்யூனிச சித்தாந்தம் அடங்காதா? அது என்ன அண்டார்ட்டிக்கா சிந்தனை மரபா? கம்யூனிச சித்தாந்தத்தின் கரு உருவான, “உத்தொப்பியா” என்ற, பூவுலகில் சொர்க்கம் அமைப்பது பற்றிய நாவலை எழுதியவரும் ஓர் ஐரோப்பியர் தான். மார்க்ஸ், எங்கெல்ஸ் , லெனின் எல்லோரும் ஐரோப்பியர்கள் தான். ஐரோப்பிய தத்துவஞானிகளின், குறிப்பாக ஹெகலின் சிந்தனை மரபினை அடிப்படையாகக் கொண்டு தான், கார்ல் மார்க்ஸ் தனது நூல்களை எழுதினார்.

”நீங்கள் சொல்வதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்; ஆனால் உங்கள் கருத்தைச் சொல்லும் உரிமைக்காக என் உயிரையும் தருவேன்” என்று இன்றைய முதலாளித்துவ - ஜனநாயக ஆட்சியாளர்கள் கூறிக் கொள்கின்றனர். ஆனால், அந்தக் கருத்துரிமை நூறு வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பிய மக்களுக்கு மறுக்கப் பட்டு வந்தது.

கார்ல் மார்க்ஸ் மட்டுமல்லாது, அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பிற சோஷலிசவாதிகளும், தம்மை கருத்துரிமைப் போராளிகளாக அறிவித்துக் கொண்டார்கள். அந்தளவுக்கு, அன்றைய ஐரோப்பாவில் கருத்துச் சுதந்திரம் இருக்கவில்லை. கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், இடதுசாரிகள் தான், ஐரோப்பிய வரலாற்றில் முதன் முதலாக கருத்துரிமைக்காக போராடினார்கள். அந்த வரலாறு இன்று இருட்டடிப்பு செய்யப் படுகின்றது.

Thursday, May 15, 2014

ஐரோப்பாவில் கல்வி : முற்றிலும் இலவசம் அல்ல

"கற்றுக் கொள்ளுங்கள்...கற்றுக் கொள்ளுங்கள்... மேலும் மேலும் கற்றுக் கொள்ளுங்கள்..." - லெனின்

கல்வி கற்க விரும்புவதும், அனைவருக்கும் இலவசக் கல்வி கிடைக்க வசதி செய்து கொடுப்பதும், ஒரு சிலரின் பார்வையில் "கம்யூனிசம்" என்றால், சாதாரண பாமர மக்கள் கம்யூனிஸ்டாக இருக்கவே விரும்புவார்கள். தமது சொந்தக் காசை செலவு செய்து வெளிநாட்டில் படிப்பவர்கள், தமது மூளை உழைப்பை பணக்கார நாடுகளின் அபிவிருத்திக்கு காணிக்கை ஆக்குபவர்கள், கம்யூனிசத்தை வெறுப்பதைப் போன்ற அறிவிலித்தனம் வேறு இருக்க முடியாது.

நோர்வே போன்ற ஸ்கண்டிநேவிய நாடுகளில், ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலை உயர்கல்வி வரையில், கல்வி அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கிறது. வெளிநாட்டு மாணவர்களும் இலவசமாக கல்வி கற்கலாம். ஆனால், "முற்றிலும் எல்லாம் இலவசம்" என்று கருதி விட முடியாது. நான் நோர்வேயில் வாழ்ந்த அனுபவத்தைக் கொண்டு சொல்கிறேன். அந்த நாட்டில், இடைத்தர தொழிற்கல்வி இலவசமாக கிடைப்பதில்லை.

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும், பல்கலைக்கழக கல்வி கற்பவர்களை விட, தொழிற்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும். நோர்வேயும் அதற்கு விதிவிலக்கல்ல. குடும்பக் கஷ்டம் காரணமாக, உடனடியாக வேலைக்கு போக வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளவர்கள், ஏதாவதொரு தொழிற்கல்வியை தான் தேர்ந்தெடுப்பார்கள். கஷ்டப் பட்டவனிடம் பணம் பறிப்பது, என்ன வகை நியாயம் என்று தெரியவில்லை.

உயர்கல்விக்கு கட்டணம் எதுவும் அறவிடுவதில்லை. ஆனால், மாணவர்களின் வாழ்க்கைச் செலவுக்காக, அரசு கல்விக் கடன் கொடுக்கிறது. இந்தக் கடனை, வேலை செய்யும் காலத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும். மேலும், கல்வியை தனியார்மயமாக்கும் திட்டத்தின் கீழ், தற்போது பல தனியார் பாடசாலைகளும், தனியார் கல்லூரிகளும் வந்து விட்டன. அவர்கள் நிர்ணயிக்கும் விலையை கொடுத்து படிப்பது, பணக்கார வீட்டு பிள்ளைகளுக்கு மட்டுமே முடிந்த காரியம்.

முன்னொரு காலத்தில், ஜெர்மனியில் கல்வி இலவசமாக கிடைத்தது. அனால், இப்போது நிறைய கட்டணம் வசூலிக்கிறார்கள். முன்பு, கிழக்கு ஐரோப்பாவில் பல சோஷலிச நாடுகள் இருந்த படியால், சில மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இலவசக் கல்வி வழங்கி வந்தார்கள். பெர்லின் மதில் விழுந்து, சோவியத் யூனியனும் உடைந்த பின்னர் அந்த தேவை இல்லாமல் போய் விட்டது. அதனால், தற்போது எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் கல்விக் கட்டணத்தை கூட்டி வருகின்றனர். இன்னொருவிதமாக கூறினால், இதுவரை காலமும் கல்விக்கு அரசு கொடுத்து வந்த மானியத்தை குறைத்துக் கொண்டு வருகின்றது.

சோஷலிச நாடுகளில் கல்வி முற்றிலும் இலவசம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் கல்வி கற்ற வெளிநாட்டு மாணவர்கள் சிலரை சந்தித்துப் பேசினேன். ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, கியூபா ஆகிய பல நாடுகளை சேர்ந்த மாணவர்கள், புலமைப்பரிசில் (Scholarship) கிடைத்து, மொஸ்கோவில் படித்து விட்டு வந்துள்ளனர். மேற்கத்திய நாடுகளில் கல்வி கற்பதற்கு, குறிப்பிட்டளவு அதி புத்திசாலி மாணவர்களுக்கு மட்டுமே புலமைப் பரிசு கொடுக்கிறார்கள். ஆனால், அது பெரும்பாலும் பணக்கார நாடுகளுக்கே நன்மை பயக்கின்றது.

தங்களது சொந்தக் காசில் படிக்கும் வசதி படைத்த மாணவர்களானாலும், ஸ்காலர்ஷிப் கிடைத்து செல்லும் ஏழை மாணவர்கள் ஆனாலும், பெரும்பாலானோர் அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில் வேலை வாய்ப்பு கிடைத்து தங்கி விடுகின்றனர். இதன் மூலம், மூன்றாமுலக நாடுகளை சேர்ந்த புத்திசாலி மாணவர்களின் மூளை உழைப்பை பயன்படுத்திக் கொள்ளும் பணக்கார நாடுகள், காலப்போக்கில் அந்த "சொத்தை" தமதாக்கிக் கொள்கின்றன. வறிய நாடுகளில் இதனை மூளை வெளியேற்றம் (brain drain) என்று அழைப்பார்கள். அதாவது, வறிய நாடுகளை சேர்ந்த அறிவுஜீவிகளின் திறமை, அந்த நாட்டு மக்களுக்கு பயன்படுவதில்லை. பணம் உள்ள நாடுகள் அதனை பயன்படுத்திக் கொள்கின்றன.

முன்னாள் சோஷலிச நாடுகளில் அப்படி அல்ல. அந்த நாடுகளை சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள், சோவியத் யூனியனில் உயர்கல்வியை முடித்து விட்டு, தமது சொந்த நாடுகளில் வேலை செய்து வந்தனர். சோவியத் யூனியனில் கல்வி கற்கும் வாய்ப்பு, ஒரு சில "அதி புத்திசாலி மாணவர்களுக்கு" மாத்திரம் கிடைக்கும் சலுகையா? அப்படி அல்ல. இது குறித்து, சோவியத் யூனியலில் கல்வி கற்ற எனது ஆப்கானிய நண்பர்களிடம் வினாவினேன். 

எண்பதுகளில், ஆப்கானிஸ்தானும் சோஷலிச நாடாக இருந்தமை எல்லோருக்கும் தெரியும். அந்தக் காலங்களில், "சோவியத் ஒன்றியத்தில் உயர்கல்வி கற்க விரும்புவோர் பதிவு செய்யுமாறு" இடைத்தர, உயர்தர வகுப்புகளில் படிக்கும் மாணவர்களிடம் வகுப்பாசிரியர் வந்து கேட்பார். வெளிநாட்டில் படிக்கும் ஆர்வமுள்ள எல்லா மாணவர்களுக்கும் அந்தச் சந்தர்ப்பம் கிடைக்கும். இறுதித் தேர்வில் அதி கூடிய புள்ளிகள் பெற்றிருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. 

ஒரு காலத்தில், சோவியத் யூனியனுடன் நட்புறவு பேணிய, முன்னாள் சோஷலிச நாடுகளை சேர்ந்த பிரஜைகள் எல்லோருக்கும், மேற்படிப்புக்காக சோவியத் யூனியனுக்கு செல்லும் வாய்ப்புக் கிட்டியது. அவை சோஷலிச நாடுகளாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை. பிரேசில், இந்தியா, இலங்கை போன்ற சோவியத் ஒன்றியத்துடன் நட்புறவு பேணிய பன்னாட்டு மாணவர்களுக்கு அந்தச் சலுகை கிடைத்து வந்தது. 

சோவியத் யூனியனில், கல்விக் கட்டணம் கிடையாது என்பது மட்டுமல்ல, மாணவர்களின் வாழ்க்கைச் செலவையும் அரசே கொடுத்து வந்தது. மேலும் அது கடன் அல்ல. வெளிநாட்டு மாணவர்களாக இருந்தாலும், திருப்பிக் கட்ட வேண்டிய அவசியமில்லை. அதனால், பண வசதி இல்லாத ஏழை மாணவர்களுக்கும், வெளிநாட்டில் உயர்கல்வி கற்கும் வாய்ப்புக் கிட்டியது.

அது மட்டுமல்ல, கோடை கால விடுமுறைக்கு ஊருக்கு செல்ல முடியாதவர்கள், அல்லது விரும்பாதவர்கள், ஏதாவதொரு வேலை செய்து சம்பாதிக்க முடிந்தது. மேற்கத்திய நாடுகளுக்கு படிக்கச் சென்றால் தான் வேலை செய்து சம்பாதிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்தத் தகவல் நம்ப முடியாமல் இருக்கலாம். சோவியத் யூனியனில் எல்லோருக்கும் வேலை இருந்தது. அது மட்டுமல்ல, ஒரு தொழிலாளிக்கு கிடைத்த குறைந்த பட்ச சம்பளம் கூட, அண்ணளவாக மாதமொன்றுக்கு 1000 டாலர்கள்.

சோவியத் யூனியனில் வசிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், வேலை செய்வதற்கு விசேட அனுமதி பெற்றிருக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. அதே நேரம், கஷ்டப் பட்டு தேட வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. வேலை செய்ய விரும்பியவர்கள், சும்மா ஒரு தொழிற்சாலைக்கு நேரில் சென்று கேட்டால் போதும். அங்கே எப்போதும் ஏதாவதொரு வேலை இருக்கும். ஒரு மாத கோடை கால விடுமுறையில், வேலை செய்து சம்பாதித்த பணத்தை ஊருக்கு அனுப்பி விட்டு படித்தவர்கள் நிறையைப் பேர். இந்தத் தகவல்கள் யாவும், அங்கு கல்வி கற்ற வெளிநாட்டு மாணவர்களிடம் இருந்து பெறப் பட்டவை.


"கற்றுக் கொள்ளுங்கள்...கற்றுக் கொள்ளுங்கள்... மேலும் மேலும் கற்றுக் கொள்ளுங்கள்..." - லெனின்

Monday, March 31, 2014

ஐரோப்பிய நேர மாற்றம் : இயற்கையை கட்டுப்படுத்தும் முதலாளித்துவம்


மேற்கு ஐரோப்பிய நாடுகளில், ஒவ்வொரு வருடமும், மார்ச் மாதத்தில் வரும் கடைசி சனிக்கிழமை/ஞாயிற்றுக்கிழமை (சரியாக ஞாயிறு அதிகாலை இரண்டு மணிக்கு) அன்று, "கோடை கால நேரம்" மாற்றுவார்கள். அதன் பிரகாரம், மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை 23 மணித்தியாலங்களை கொண்டிருக்கும். இதனால், ஐரோப்பாவிற்கும், இந்தியா, இலங்கைக்குமான நேர வித்தியாசம் மூன்றரை மணித்தியாலமாகும். 

அதே மாதிரி ஒக்டோபர் மாதத்தில் வரும் கடைசி வார இறுதி நாளன்று, குளிர்கால நேரம் மாற்றப்படும். அன்று வரும் ஞாயிற்றுக்கிழமை 25 மணிநேரத்தைக் கொண்டிருக்கும். அதனால், இந்தியா, இலங்கைக்கான நேர வித்தியாசம் நான்கரை மணித்தியாலமாக அதிகரிக்கும். (மேற்கு)ஐரோப்பாவைத் தவிர, அமெரிக்கா, கனடாவிலும் நேர மாற்றம் அமுல் படுத்தப் படுகின்றது. இந்த நேர மாற்றத்தை Daylight Saving Time (DTS)  என்று குறிப்பிடுவார்கள்.

ஐரோப்பாவில் வாழும் மக்கள் பலருக்கு, எதற்காக இந்த நேர மாற்றம் என்ற காரணம் தெரியாது. பலரும் இதனை ஒரு பாரம்பரிய கலாச்சாரம் போன்று பின்பற்றி வருகின்றனர். "கோடை காலத்தில், அதிக சூரிய ஒளி கிடைப்பதால், எரிபொருள் மிச்சம் பிடிக்கலாம்" என்று இதற்குக் காரணம் சொல்லப் படுகின்றது. "கோடை காலத்தில் பறிக்கப் படும் ஒரு மணித்தியாலத்தை, குளிர்காலத்தில் திருப்பித் தருகிறார்கள்" என்று பொது மக்கள் நினைத்துக் கொள்கின்றனர்.

உண்மையில் இந்த நேர மாற்றம், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் அறிமுகப் படுத்தப் பட்டது. அதுவும், "முதலாளித்துவ நாடுகள்" என்று அழைக்கப் படும், மேற்கு ஐரோப்பாவில் மட்டுமே அமுலுக்கு வந்தது. காலப்போக்கில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அந்த நடைமுறையை பின்பற்றத் தொடங்கின. எழுபதுகளில் ஏற்பட்ட, எண்ணைத் தட்டுப்பாடு காரணமாக, எல்லா மேற்கத்திய நாடுகளிலும் பின்பற்றப் பட்டது.

நேர மாற்றத்தை கொண்டு வருவதற்கு, இயற்கை, காலநிலை, எரிபொருள் சேமிப்பு என்று, பலரும் நம்பக் கூடிய காரணங்கள் சொல்லப் பட்டன. ஆனால், ஐரோப்பாவுடன் ஒரே பூகோள அமைவிடத்தை, ஒரே மாதிரியான காலநிலையை கொண்டுள்ள முன்னாள் சோவியத் யூனியனில் அந்தப் பழக்கம் இருக்கவில்லை. இன்றைக்கும் ரஷ்யா, அதனோடு சேர்ந்த நாடுகளில் வாழும் மக்களுக்கு, கோடை கால நேர மாற்றம் பற்றி எதுவும் தெரியாது.

இந்த நேர மாற்றம் குறித்து, பல ஐரோப்பிய மக்கள் மத்தியில் குழப்பமும், சந்தேகமும் காணப் படுகின்றது. பொதுவாக விவசாயிகளுக்கு இதனால் எந்தப் பிரயோசனமும் கிடையாது. ஏனென்றால், மிருகங்களும், தாவரங்களும் தமக்கென்று ஒரு நேரத்தை வைத்திருக்கின்றன. மாடு தனது நேரத்திற்கு தான் பால் தரும். செடிகள் தனது நேரத்திற்கு தான் பூக்கும்.

குறிப்பாக, எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மட்டுமே, இந்த நேர மாற்றத்தால் நன்மை அடைந்து வருகின்றன. ஏனெனில், ஐரோப்பாவில் குளிர் காலம் என்பது, நீண்ட இரவுகளைக் கொண்டது. பெரும்பாலான நாடுகளில், மாலை நான்கு மணிக்கே இருண்டு விடும். மீண்டும் சூரிய வெளிச்சம் வருவதற்கு காலை எட்டு மணி ஆகும். அதே நேரம், குளிரும் அதிகமாக இருக்கும். ஆகையினால், மின் விளக்குகள் அதிக நேரம் எரிய விடப் படும். வெப்பமூட்டிகளும் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப் படும்.

கோடை காலம் அதற்கு நேர் மாறானது. அதி காலை ஐந்து மணிக்கே சூரிய வெளிச்சம் கண்ணைப் பறிக்கும். இருட்டு வருவதற்கு, சில நேரம் இரவு பத்து மணி ஆகும். அதே நேரம், வெக்கையாக இருப்பதால், வீட்டிற்கு செயற்கை வெப்பம் உண்டாக்க வேண்டிய அவசியம் இல்லை.

எரிவாயு, மின்சாரம் விநியோகிக்கும் நிறுவனங்களைப் பொறுத்த வரையில், குளிர்காலம் என்பது அதிகளவு இலாபம் ஈட்டக் கூடிய பொற்காலம் ஆகும். இதனால், குளிர்காலத்தில் ஒரு மணித்தியாலத்தை கூட்டுவதன் மூலம், இலாபத்தையும் பன்மடங்கு அதிகரிக்க முடியும். அநேகமாக, இது ஒரு பகற்கொள்ளை தான். அதனால் தான், இந்த நேர மாற்றம் முதலாளித்துவ நாடுகளில் மட்டுமே நடைமுறைப் படுத்தப் படுகின்றது.


மேலதிக தகவல்களுக்கு:
 Daylight Saving Time (DTS)

Monday, August 27, 2012

ஒரு ஜனநாயக கம்யூனிச ஐரோப்பாவை நோக்கி...

(குறிப்பு: இந்தக் கட்டுரை நெதர்லாந்தில் இருந்து வெளியாகும் அரசியல் - சமூக வார இதழான Vrij Nederland இல், டச்சு மொழியில் பிரசுரமானது.  தமிழ் பேசும் மக்களுக்காக,  அதனை இங்கே தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்.)

ஒரு ஜனநாயக கம்யூனிச ஐரோப்பா
 (Een democratisch communistisch Europa)

- இல்யா லெயோனார்ட் பைபர் (Ilja Leonard Pfeijffer)

1989 ம் ஆண்டு, மதில் வீழ்ந்த பொழுது, அது முதலாளித்துவத்தின் இறுதி வெற்றியாக கொண்டாடப் பட்டது. சோவியத் சாம்ராஜ்யம் நொறுங்கிய பொழுது, கம்யூனிச அமைப்பு செயற்பட முடியாது என்பதற்கான ஆதாரமாக புரிந்து கொள்ளப் பட்டது. கம்யூனிசத்தின் எதிர்மறை விம்பமான பாஸிசம், நாற்பத்திநான்கு வருடங்களுக்கு முன்னர், பெர்லின் இடிபாடுகளுக்குள் புதைக்கப் பட்டதோடு ஒப்பிட்டு, மிகப்பெரிய அரசியல் சித்தாந்தங்களின் முடிவு காலம் வந்து விட்டது என்று சொன்னார்கள். வெற்றிவாகை சூடிக் கொண்ட, சுதந்திரமான மேற்குலகம் என்று அழைக்கப்படும் நாடுகளின் அரசியல் பொருளாதாரமானது, எந்த வகையான சித்தாந்தந்திற்கும் உட்படாதது என்று கருதப் பட்டது. அது பன்முகத் தன்மை வாய்ந்த பாராளுமன்ற ஜனநாயகத்திலும், பொருளாதார தாராளவாதத்திலும் தங்கியிருந்தது.

மேற்கத்திய அரசியல்வாதிகளைப் பொறுத்த வரையில், சுதந்திர சந்தையின் சட்டங்கள், இயற்கை வகுத்த சட்டங்களுக்கு ஒப்பானது. அவற்றை எதிர்ப்பதோ, அல்லது ஒதுக்குவதோ, பிரயோசனமற்றதும், முட்டாள்தனமானதுமாகும். கம்யூனிசமும், பாசிசமும் திவாலான நிலையில்; இறுதியில், சந்தையின் செயல்முறையே நம்பத் தகுந்ததாக கருதினார்கள். அதுவே முன்னேற்றத்தையும், சுபீட்சத்தையும், நீதியையும் அளிப்பதற்கான உத்தரவாதமாக கருதப் பட்டது. அப்படித் தான் நினைத்துக் கொண்டார்கள். சிலர் இதனை, சரித்திரத்தின் முடிவு என்ற அர்த்தத்தில் பேசினார்கள். உலகம் முழுவதும், தடையற்ற சுதந்திர வர்த்தகத்தின் ஆயிரம் வருட ராஜ்ஜியம் ஆரம்பமாகியது. 

ஆயிரம் வருட கால சாம்ராஜ்யத்தில், நாம் வெறும் இருபது வருடங்களை மட்டுமே அனுபவிக்க முடிந்தது. 2008 ம் ஆண்டிலிருந்து, அடுத்தடுத்து நெருக்கடிகள் எம் தலை மேல் விழுந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு புதிய நெருக்கடியும், முன்னையதை விட மோசமானதாக இருக்கின்றது. எமது கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் முடிவு தெரியவில்லை. ஒன்று மட்டுமே உறுதியானது: "மிகவும் மோசமான நெருக்கடி இனிமேல் தான் வரப் போகின்றது." எமது அரசியல்வாதிகளும், பொருளாதார கொள்கை வகுப்பாளர்களும் நல்லதே நடக்கும் என்ற நினைப்பில் சந்தை மீது நம்பிக்கை வைத்துப் பேசுகின்றனர். நுகர்வோரின் நம்பிக்கையை பாதிக்கக் கூடாது என்பதற்காக அப்படி நடந்து கொண்டாலும், இந்த அமைப்பு உள்ளுக்குள் விழுந்து நொறுங்கி கொண்டிருக்கிறது என்பதே பட்டவர்த்தனமான உண்மை. 

கடந்த மாதங்களாக, இந்த துறை பற்றி பேசிக் கொண்டிருந்த தகமையாளர்கள் அனைவரும் மிகவும் நொடிந்து போயுள்ளனர். கிரேக்க நாடு நெருக்கடியில் இருந்து மீளும் சாத்தியம் எதுவும் இல்லை. கடன் நெருக்கடி ஸ்பெயினுக்கு தாவி விட்டது. அடுத்ததாக பிரான்சும் பிரச்சினைகளுக்குள் மாட்டிக் கொள்ளும் சாத்தியக்கூறுகள் நிறையவே காணப்படுகின்றன. அதற்குப் பிறகு, யூரோ நாணயத்தின் கதை முடிந்து விடும். அது தெளிவானது. அது இலட்சக் கணக்கான மக்களின் பொருள் இழப்பு, வாழ்க்கைத்தரம் பாதிக்கப் படுவதில் கொண்டு சென்று முடிக்கும். நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாடுகள் மட்டுமல்ல, யூரோ நாணயம் பயன்படுத்தும் நாடுகள் அனைத்தும் இதனால் பாதிக்கப்படும். 

நெதர்லாந்தில்  நாம், "மூன்று A தராதரம்" என்ற பாதுகாப்பான அணைக்கட்டுக்குப் பின்னால் நின்று கொண்டு, எம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். தேவைப்பட்டால், எமது பழைய, நம்பிக்கைக்குரிய கில்டர் நாணய காலத்திற்கு திரும்பிச் செல்லலாம் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால், அது நாணயம் பற்றிய பிரச்சினை அல்ல. எமது ஓய்வூதிய நிதியம் போன்றவையே பிரச்சினை ஆகும். யூரோவில் கணக்கிட்டாலும், அல்லது கில்டரில் கணக்கிட்டாலும், பெரும்பாலான (ஓய்வூதிய) நிதியங்கள் தமது நோக்கத்தை நிறைவேற்றப் போவதில்லை. எனது கருத்தை மறுதலிக்கும் நிபுணர் யாரையும் நான் காணவில்லை. அதற்கு நிறைய அர்த்தங்கள் உள்ளன.  அதன் அர்த்தம், எமது வயோதிப காலத்திற்காக நாம் சேமித்த பணம், வட்டியோடு திருப்பிக் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு நாம் காப்புறுதி நிதியத்தில் வைப்பிலிட்ட பணம், இனிமேல் எமக்கு கிடைக்கப் போவதில்லை. 
"மன்னிக்கவும். ஓய்வூதியம் கிடையாது." 
"ஆனால், அது எமது சொந்தப் பணம். அதைத் தானே நாங்கள் திருப்பிக் கேட்கிறோம்?" 
துரதிர்ஷ்ட வசமாக, பணம் அங்கே இல்லை. எமது  பணம், எந்த வித பெறுமதியுமற்ற சிக்கலான பங்குகளில் முதலீடு செய்யப்பட்டு விட்டது.  

"அப்போ? நாங்கள் என்ன செய்ய வேண்டும்? வறுமையில் வாட வேண்டுமா?" துரதிர்ஷ்டவசமாக, எமக்கு வேறெந்த வழியும் இல்லை. ஒரு வேளை, வீட்டை  விற்று விடலாம். ஆனால், வீட்டு மனை சந்தை ஏற்கனவே வீழ்ந்து விட்டது.  யாரும் அதை இப்போது ஒரு சந்தையாகவே கருதுவதில்லை, ஏனென்றால் வீட்டின் விலை குறைந்து கொண்டு செல்கிறது. மறு பக்கத்தில், அடைமான செலவு அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. அத்தோடு, ஒரு பக்கத்தில் அலுவலக கட்டிடங்கள் வெறுமையாகக் கிடக்கின்றன. அவற்றை வீடுகளாக மாற்றலாம் என்று சிலர் ஆலோசனை கூறுகின்றனர். நாங்கள் வசதியாக வாழ்வதாக நினைத்துக் கொண்டு, "எதுக்கும் பிரயோசனமற்ற கிரேக்கர்களை" மீட்டு விட்டோம்.  ஆனால், நாங்கள் விற்கவும் முடியாத, செலவையும் ஈடுகட்ட முடியாத வீடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஓய்வூதியமும் கிடைக்குமா என்பது நிச்சயமில்லை.  எமது மருத்துவ காப்புறுதித் தொகையும் கட்ட முடியாத அளவு உயர்ந்து விட்டது. சுருங்கி வரும் பொருளாதாரத்தில், எல்லோரிடமும் செலவளிப்பதற்கான பணம் குறைந்து வருகின்றது. அதனால் வேலை வாய்ப்பும் குறைந்து வருகின்றது. அரசாங்கத்தினால் அறவிடப் படக் கூடிய வரியின் அளவு குறைந்து வருவதால், சமூகநல திட்டங்களையும் தொடர்ந்து பேண முடியாது. இந்தப் பிரச்சினை எல்லாம், கிரேக்கர்களாலோ அல்லது யூரோவினாலோ ஏற்படவில்லை. இவையெல்லாம் சந்தையின் கடுமையான சட்டங்கள். சந்தையின் இரும்புக் கரங்களில் இருந்து எம்மை நாமே விடுதலை செய்து கொள்ளா விட்டால், அதனை தடுத்து நிறுத்த முடியாது.

"எது நடந்ததோ, அது நன்றாக நடந்தது" என்று நிபுணர்கள் நினைக்கிறார்கள். இது ஒரு சுயதேவையை தானே பூர்த்தி செய்து கொள்ளும் தீர்க்கதரிசனம். சரிந்து வரும் பங்குகள், பொருள் இழப்பு, நிறுவனங்கள் திவால் ஆதல், இவற்றில் எல்லாம் ஊகவணிகம் செய்யலாம். அதிலே நீங்கள் நிறையப் பணம் சம்பாதிக்கலாம். ஒரு பொருள் நஷ்டத்தில் ஓடப் போகின்றது என்று எல்லோரும் நினைத்தால், அதிலே ஊகவணிகம் செய்யலாம்.

ஏதாவது ஒரு பொருளில் நஷ்டம் வராது என்று நம்பினால், அது ஊக வணிகர்களின் பொருளாக இருக்கும். அந்தப் பொருளை நஷ்டமடையச் செய்வதற்கு, அவர்களுக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் ஏராளமான பணத்தை அதிலே முதலிட்டிருக்கிறார்கள். இப்படி எத்தனை ஊக வணிகர்கள் சிந்திக்கிறார்களோ, அது நடப்பதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகம். அது நன்றாக நடந்து கொண்டிருக்கிறது என்று நிச்சயப் படுத்தப் பட்டால், இன்னும் அதிகமான ஊக வணிகர்கள் அதைப் பற்றி சிந்திப்பார்கள். இது குறள் வடிவில் அமைந்த முதலாளித்துவம்.  

நாங்கள் பல்லைக் கடித்துக் கொண்டு முன்னேறுவதற்கு, தற்போதைய நெருக்கடி ஒன்றும் தற்காலிகமான வசதிக் குறைபாடல்ல. அது அடுத்த நெருக்கடிக்கான ஊற்றுக்கண். அந்த நெருக்கடி இன்னொரு நெருக்கடியை உருவாக்கும். 2008 ம் ஆண்டில் இருந்து தொடரும், ஒன்றோடொன்று தொடர்பு பட்ட நெருக்கடிகள் யாவும், முதலாளித்துவத்தின் உடன்பிறப்புகள். தவணை முறையில் திருத்திக் கொள்வதற்கு, இவை எல்லாம் சந்தையின் சுயமான ஊசலாட்டங்களல்ல. மாறாக, சந்தைப் பொருளாதார அமைப்பின் அடிப்படைப் பிரச்சினை. இப்பொழுது நடப்பது மாதிரி, எப்போதும் நடக்கப் போவதில்லை என்பதில் எல்லோரும் ஓரளவு ஒரு மனதாக கருதுகின்றனர். நாம் வாரியிறைக்கும் கோடிக்கணக்கான மீட்பு நிதிகள், பிரச்சினையை ஒரு சில மாதங்கள் தள்ளிப் போடலாம். செயற்படக் கூடிய தீர்வுகள் எதுவும் இல்லை. நாம் இந்தப் பிரச்சினையை வேறு விதமாக அணுக வேண்டும். 

ஏற்கனவே எங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டது. இன்றைய பொருளாதார நெருக்கடி பற்றி, மயிர் சிலிர்க்க வைக்கும் துல்லியத்துடன் எதிர்வு கூறப் பட்டது. கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு முன்னர். தொழிற்புரட்சிக் காலகட்டத்திற்கு பின்னரான இங்கிலாந்தின் நிலைமைகளை வைத்து, கார்ல் மார்க்ஸ் "அரசிய பொருளாதாரம் மீதான விமர்சனங்களை" எழுதியிருந்தார். முதலாளித்துவ அமைப்பின் குறைபாடுகள் பற்றிய அவரின் ஆய்வுகள், முன்னெப்போதையும் விட இன்று தான் பொருந்திப் போகின்றன.  

மார்க்ஸ் கூறியதன் படி,  சங்கிலித் தொடரான நிதி மற்றும் பொருளாதார நெருக்கடிகள், முதலாளித்துவத்திற்கு சாவுமணி அடிக்கும். அவை வர வர தீவிரமடையும், ஒன்றை மற்றொன்று தொடர்ந்து வரும். மிகச் சரியாக, அதனை நாங்கள் இன்று நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மார்க்ஸ் கூறினார்: "இலாபம் ஒருவரின் தனிச் சொத்தாக இருக்கும் அதே நேரத்தில், நஷ்டத்தை பொது மக்களுக்கு பகிர்ந்து அளிக்கின்றனர்."  மிகச் சரியாக, அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இத்தனை வருட காலமாக வங்கியாளர்களுக்கு கிடைத்த இலாபத்தை அவர்களே வைத்துக் கொள்ளலாம். ஆனால், திவாலானான வங்கிகளை மீட்பதற்கான பொறுப்பு அனைத்து வரி செலுத்துவோரின் தலைகளிலும் விழுகின்றது.  

மார்க்சின் மிகப் பிரபலமான, மூலதனக் குவிப்பு பற்றிய கோட்பாடு ஒன்றுண்டு. அதாவது, முதலாளித்துவ அமைப்பு, மூலதனம் குவிக்கப் படுவதை ஊக்குவிக்கிறது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர் ஆகின்றனர். ஏழைகள் இன்னும் ஏழைகள் ஆகின்றனர். "எங்கேயோ போகும் கோடிக் கணக்கான யூரோக்கள் எல்லாம் மண்ணில் வந்து விழுவதில்லை." நெருக்கடியை புரிந்து கொள்வதற்காக, ஒரு பார வாகன சாரதி அவ்வாறு கூறினார். அவர் கூறியது மிகச் சரியானது.  சந்தைகள் இயற்கையான தோற்றப்பாடுகள் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். 

சந்தைகள் நெருக்கடிகளை உருவாக்குவதால், வெள்ளத்தை தடுக்க ஆணை கட்டுவதைப் போல அவற்றை நாங்கள் தடுக்க வேண்டியுள்ளது. ஆனால், சந்தைகள், உண்மையில் மக்களைக் குறிக்கும். ஒரு சிறு தொகை ஊக வணிகர்கள், நெருக்கடியினால் நாறிப் போகுமளவிற்கு பணத்தை அள்ளுகின்றனர். மண்ணில் வந்து விழாத கோடிகள் எல்லாம் அங்கே தான் போகின்றன.  ஒரு இயற்கையான தோற்றப்பாட்டை நாங்கள் தடை செய்ய முடியாது. ஆனால், மனிதர்களின் துர் நடத்தையை தடை செய்யலாம். கோடிக் கணக்கான மக்களுக்கு பாதகமான முறையில், செல்வம் சேர்க்கும் ஒரு சிலருக்கு மட்டுமே உதவுமாக இருந்தால், அப்படிப் பட்ட சந்தைகளை தடை செய்வதற்கு அதுவே ஒரு சிறந்த காரணமாக இருக்கும். 

தாராளவாதம் என்பது சாலச் சிறந்தது. பல தடவைகளாக தவறாக பயன்படுத்தப் பட்ட சுதந்திரம் என்ற சொல்லானது, ஒவ்வொரு அரசியல் அமைப்பினதும் உயரிய இலட்சியமாக உள்ளது. "அனைத்து பிரஜைகளினதும் தனித்துவமான சுதந்திரத்தை உறுதிப் படுத்துவது. ஒரு தனிநபர் அதிக பட்சம் முன்னேறுவதற்கு நிபந்தனைகள் விதிப்பது. ஒவ்வொருவரும் அவர் விரும்பியவாறு வாழ அனுமதிப்பது."  அதுவே ஒவ்வொரு அரசினதும், ஒரேயொரு, புனிதமான கடமையாக உள்ளது. 

அனைவருக்குமான சுதந்திரத்தை உறுதிப் படுத்துவதற்காக, சுதந்திரத்திற்கான பாதை செப்பனிடப் பட வேண்டியுள்ளது. ஒருவரின் சுதந்திரத்தை மட்டுப் படுத்தி, இன்னொருவரின் சுதந்திரம் குறைக்கப் படுகின்றது. அடுத்தவரின் சுதந்திரத்தில்  தலையிடுவதும், பாதிப்பதுமான நடத்தைகள் தடை செய்யப் பட வேண்டும். அதனால் தான், நாங்கள் சில நேரம் பிரஜைகளின் சுதந்திரத்தை பறிக்கிறோம். இன்னொருவரின் கழுத்தை அறுப்பதற்கு, இன்னொருவரின் பொருளை திருடுவதற்கு, போக்குவரத்திற்கு இடையூறாக வாகனமோட்டுவதற்கு, அயலவரின் வீட்டை எரிப்பதற்கு, இது போன்றவற்றுக்கு எல்லாம் சுதந்திரம் கொடுக்கப் படுவதில்லை. மற்றவர்களின் சுதந்திரத்தை உறுதிப் படுத்துவதற்காக, எமது சுதந்திரத்தை குறைத்துக் கொள்வதை நாங்கள் சாதாரணமாக எடுக்கிறோம். 

தாராளவாதம் (லிபரலிசம்) என்ற சொல்லை, கட்டற்ற சந்தைப் பொருளாதாரத்தின் ஒத்த கருத்துள்ள சொல்லாக புரிந்து கொள்கிறோம். பண்பாட்டு தாராளவாதத்திற்கும், பொருளியல் தாராளவாதத்திற்கும் இடையில் பாகுபாடு காட்டப்பட வேண்டும். சிந்திப்பதற்கு, நம்புவதற்கு, கருத்துக் கூறுவதற்கான சுதந்திரமும், கட்டற்ற சந்தைப் பொருளாதாரமும் ஒன்றல்ல.  சுதந்திரமான சந்தை, குடிமக்களின் நலன்களை பாதிக்கின்றது. அதனால், அது தனிநபர் சுதந்திரத்தை மீறுவதாக கருதப்பட வேண்டும். அதனாலேயே தடை நியாயப் படுத்தப் படுகின்றது, அத்தோடு அவசியமானதும் கூட. ஆனால், அதற்கு இன்னும் சில அர்த்தங்கள் உள்ளன. கட்டற்ற சுதந்திர சந்தையை தடை செய்வதென்பது, உண்மையில் முதலாளித்துவத்தை ஒழிப்பதற்கு ஒப்பானது. அந்த இடத்தில் இனி வரப்போவது, அரசினால் நிர்வகிக்கப் படும் பொருளாதாரம் என்று அறியப் பட்டாலும், நாங்கள் அதனை கம்யூனிசம் என்றழைப்போம். 

இத்தகைய மாற்றத்தை தான் மார்க்ஸ் கண்டார். ஆனால், அதைக் கேட்டவுடன் நாங்கள் அதிர்ச்சி அடைகிறோம். ஏனென்றால், கம்யூனிசம் பற்றி தெரிந்து கொள்ள, இப்போதைக்கு எமக்கு எந்த விருப்பமும் கிடையாது. கம்யூனிசம் நடைமுறைச் சாத்தியமில்லாதது என்று,  நாங்கள்  இருபது வருடங்களுக்கு முன்னரே முடிவு செய்து விட்டோம். "ஐந்தாண்டு பொருளாதாரத் திட்டங்களை செயற்படுத்தி, வறுமையையும், பஞ்சத்தையும் மட்டுமே உண்டாக்கும்", அரசியலாளருடன் கம்யூனிசத்தை ஒன்று படுத்திப் பார்க்கிறோம். ஆனால், அரசினால் நிர்வகிக்கப் படும் பொருளாதாரம் குறித்து நாங்கள் அச்சப் படத் தேவையில்லை. 

அரசு என்பது ஒரு காவல் நிலையம் அல்ல. ஒரு ஜனநாயக அமைப்பில், (மக்களாகிய) நாங்கள் தான் அரசாங்கம்.  எல்லாவிதமான அவலங்களையும் எமக்களித்த சுதந்திர சந்தையினால், மக்களாகிய நாங்கள் பொருளாதாரத்தை எமது கையில் எடுப்பதை தடுக்க முடியுமா? ஒரு ஜனநாயக அமைப்பின் கீழ் கட்டுப்படுத்தப் படும் பொருளாதாரத்தை விமர்சிக்கும் தகுதி யாருக்காவது இருக்கிறதா?  தங்களுக்கு மட்டுமே செல்வம் சேர்க்கும், மனச்சாட்சியே இல்லாத ஊக வணிகர்களிடம் நாங்கள் அதனை விட்டு விட முடியுமா? 

அதனால் தான், மதில் வீழ்ந்ததையும், சோவியத் சாம்ராஜ்யம் நொறுங்கியதையும் உதாரணமாக காட்டி,  "கம்யூனிசம் நடைமுறையில் சாத்தியப் படாது" என்ற முடிவுக்கு நாங்கள் வந்து விட முடியாது.  அங்கே இருந்தது கம்யூனிசம் அல்ல. இருபதாம் நூற்றாண்டில் இருந்த, இப்போது இருக்கும் ஒரு சில, "கம்யூனிச நாடுகள்" என்று கருதப் பட்ட நாடுகள் எல்லாம், உண்மையில் கூட்டுத்துவ அமைப்பு நாடுகள். 

மார்க்சின் அடிப்படைச் சுலோகத்தின் படி, மக்களின் கைகளில் உற்பத்திச் சாதனங்கள் இருந்தால் தான் அது கம்யூனிசம் என்று அறியப்படும். ஆனால், கம்யூனிச நாடுகள் என்று அழைக்கப் பட்ட எந்த நாட்டிலும் அது நடைமுறையில் இருக்கவில்லை. மக்கள் எதையும் தீர்மானிக்க முடியாது. மதிலின் வீழ்ச்சியானது எமக்கு எதனை உறுதிப் படுத்தியுள்ளது என்றால், "சர்வாதிகாரம் நடைமுறையில் சாத்தியப் படாது." மக்கள் ஜனநாயகமான உண்மையான கம்யூனிசம், சரித்திரத்தில் என்றுமே முயற்சிக்கப் படவில்லை. 

நிச்சயமாக,  அதற்கேற்ற ஜனநாயக கட்டமைப்பு இன்னமும் உருவாக்கப் பட்டிருக்கவில்லை. ஆனால், அந்த நிலைமை தற்போது மாறிக் கொண்டிருக்கிறது. Occupy இயக்கமானது, கட்டற்ற சுதந்திர சந்தைக்கு எதிராக எழுச்சியுறும் போராட்டங்கள் பற்றிய நற்செய்தியை அறிவித்த முதலாவது தூதுவன். இந்த இயக்கமானது பெருமளவு ஆர்வத்தை தூண்டுவதற்கு காரணம், அது அடித்தட்டு மக்களிடம் இருந்து தானாக கிளர்ந்தெழுந்தது.  19 ம் நூற்றாண்டில் மார்க்ஸ் திட்டமிட்டதைப் போல, அது ஒரு பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சி. 

Occupy இயக்கத்தினரால் குறைந்தளவு தாக்கம் மட்டுமே செலுத்த முடிந்ததது. அத்தோடு எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கவில்லை. ஆனால், அவர்கள் ஒரு விடயத்தில் உறுதியாக இருந்தார்கள். இப்போது இருக்கும் நிலைமை, என்றென்றைக்கும் தொடரப் போவதில்லை. வருங்காலத்தில், நெருக்கடிகளால் பாதிக்கப்படும் மக்கள் இந்த உணர்வைப் பெறுவார்கள்.  ஓய்வூதியம் கிடைக்கப் போவதில்லை என்றால், யாருமே வீட்டை விற்க முடியாது என்றால், அது விரைவில் நடக்கும். நாங்கள் அடிப்படையை மாற்றி அமைக்க வேண்டும் என்று, சமூகத்தின் பல பிரிவுகளை சேர்ந்த மக்கள் கருதுவதையும் கணக்கெடுத்துக் கொள்ளுங்கள். ஒரு ஜனநாயக கம்யூனிச ஐரோப்பாவில் நான் வாழ விரும்புகின்றேன். ஒரு தடவை, நாங்கள் அதனை முயற்சித்துப் பார்க்க வேண்டும். 

(நன்றி: Vrij Nederland , 11 ஆகஸ்ட் 2012 )

(மூலப் பிரதியை இங்கே வாசிக்கலாம்: http://www.vn.nl/boeken/essay-2/een-democratisch-communistisch-%E2%80%A8europa/)


அடிக்குறிப்பு: 
Vrij Nederland ஒரு "வழக்கமான இடதுசாரிகளின் பிரச்சார சஞ்சிகை" அல்ல. நாஜிகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்த நெதர்லாந்து நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய மக்களின் குரலாக ஒலித்தது. சுதந்திரமடைந்த பின்னர் அரசாங்கத்தின் குறை நிறைகளை விமர்சித்து எழுதி வருகின்றது. சர்வதேச மட்டத்தில், முதலாளித்துவ நாடுகளின் தவறுகளையும், சோஷலிச நாடுகளின் தவறுகளையும் சுட்டிக் காட்டி எழுதி வந்துள்ளது. நேர்மையான ஊடகவியல் காரணமாக, வலது, இடது பாகுபாடின்றி, சமூகத்தின் பலதரப்பட்ட மக்களாலும் விரும்பி வாசிக்கப் படுகின்றது. மேலதிக தகவல்களை விக்கிபீடியா இணைப்பில் வாசித்து அறிந்து கொள்ளலாம்.