Showing posts with label தொழிலாளர் நிர்வாகம். Show all posts
Showing posts with label தொழிலாளர் நிர்வாகம். Show all posts

Thursday, May 11, 2017

முதலாளிகளை அகற்றி விட்டு தொழிலாளர்களே நிர்வகிக்க முடியமா?


தொழிலாளர்களே நிறுவனங்களை நிர்வகிக்க முடியமா? இந்தக் கேள்வியை பிரபல வலதுசாரி  எழுத்தாளர் ஜெயமோகனும் எழுப்பி இருக்கிறார். அரசிடம் வாங்கிய கோடிக்கணக்கான கடனைக் கட்ட மறுத்து, நாட்டை விட்டோடிய கிரிமினல் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு வக்காலத்து வாங்கும் கட்டுரையில் இதைக் கேட்டுள்ளார்.

அவரது கூற்றின் படி, அவர்கள் முதலாளிகள் அல்ல, தொழில்முனைவோர். அதுவும் ஒரு கலை தான். அதற்கென்று தனித் திறமை வேண்டும் என்று சொல்லிக் கொண்டு போகிறார். இடதுசாரிகள், அல்லது மார்க்சிஸ்டுகள் எதிர்பார்ப்பது போல தொழிலாளர்கள் நிர்வாகத்தை பொறுப்பெடுப்பது சாத்தியமில்லை என்று வாதாடுகிறார்.

ஜெயமோகனின் கட்டுரையில் இருந்து ஒரு பகுதி:
//மார்க்சியச் செவ்வியல் பார்வையில் மூலப்பொருட்கள், உழைப்பு, மூலதனம், நிர்வாகம் என்பதில் நிர்வாகத்திற்கான இடம் எவ்வகையிலும் முக்கியமானதல்ல. அதை உழைப்பாளிகள் தாங்களே செய்து கொள்ள முடியும் என்ற எண்ணத்திலிருந்துதான் மார்க்சியம் தொடங்குகிறது. நிர்வாகிகளான முதலாளிகளை முழுமையாக அகற்றி மூலப்பொருட்களையும் முதலீட்டையும் கைப்பற்றி தொழிலாளர்சமூகம் தாங்களே நிர்வாகத்தை நடத்தி உற்பத்தி வினியோகம் அரசமைப்பு ஆகியவற்றை ஆற்றுவவதற்குப்பெயர்தான் மார்க்ஸியப்பொருளியல்.
ஆனால் நடைமுறை அப்படி அல்ல. எப்படி அறிவியலாளர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள், அரசியல் நிபுணர்கள் தன்னியல்பான திறமைகளால் உருவாகி எழுந்து வருகிறார்களோ அதே போல உருவாகிவருபவர்கள்தான் முதலாளிகள். அவர்கள் குன்றாத தன்னம்பிக்கையும் புதுப்புது வாய்ப்புகளாகத் தேடும் கற்பனைவளமும் ஆளுமைத் திறனும் கொண்டவர்கள். அவர்களுடைய ஆளுமைத்திறன்தான் மூலப்பொருட்களையும் உழைப்பையும் மூலதனத்தையும் ஒருங்கிணைத்து உற்பத்தி சக்தியாக மாற்றுகிறது. ஓர் அறிவியலாளரும் சிந்தனையாளரும் எப்படி மாற்றீடு செய்யப்பட முடியாதவர்களோ அப்படித்தான் முதலாளிகளும். அவர்களைத் தொழில்முனைவோர், பெருநிர்வாகிகள் என்ற சொற்களால் குறிப்பிட விரும்புகிறேன்.//

மார்க்சியம் நடைமுறைச் சாத்தியமா என்று சந்தேகம் எழுப்புவோர் முதலில் முதலாளித்துவம் பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும். வருங்கால சோஷலிச சமுதாயத்திற்கான மையக்கரு இன்றைய முதலாளித்துவ சமுதாயத்தில் இருந்து தான் தோன்றுகிறது.

முதலாளிகளைப் பற்றிப் பேசினால், சினிமாவில் வருவது போன்று, தனி ஒரு நபர் முதல் போட்டு கம்பனி நடத்துவதாக நினைத்துக் கொள்கிறார்கள். அந்த எண்ணத்தில் தான், ஜெயமோகனும் விஜய் மல்லையாவை "தொழில் முனைவோர்" என்று எழுதி இருக்கிறார். சுமார் நூறாண்டுகளுக்கு முன்பே, பெரிய நிறுவனங்களின் கட்டமைப்பு மாறி விட்டது. ஒரு தொழிலதிபர் நிர்வாகியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.  

குறிப்பாக, கார்பரேட் நிறுவனங்களில், பெரிய வரையறுக்கப் பட்ட வர்த்தக நிறுவனத்தில் கூட, தனி ஒருவரை முதலாளியாகக் காண முடியாது. அதை ஒரு நிர்வாகிகள் குழு தான் நடத்துகின்றது. அந்த நிறுவனங்களில் பெருமளவு பங்குகளை வைத்திருப்போர் ஒரு குழுவாக ஒன்று கூடி நிர்வகிப்பார்கள்.

அது பெரும்பாலும் முக்கிய முடிவுகளை எடுக்கும் பங்குதாரர் கூட்டமாக இருக்கும். அவர்களில் பலர் முதல் போட்டு விட்டு, இலாபத்தை எதிர்பார்க்கும் உரிமையாளர்களாக மட்டுமே இருப்பார்கள். சிலர் தமக்கு இலாபத்தில் பங்கான டிவிடன்ட் பணம் கிடைத்தால் போதும் என்று வீட்டில் இருப்பதுமுண்டு.

அதே நேரம், சில முதலாளித்துவ ஆதரவாளர்கள் கற்பனை செய்வது போன்று, பங்கு வைத்திருக்கும் எல்லோருக்கும் முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். அதாவது, ஒரு சில பங்குகளை வாங்குவதால் மட்டும் ஒரு சாமானியன் முதலாளியாக முடியாது. ஒரு பங்கு வாங்கி வைத்திருப்பவரை விட, ஆயிரம் பங்குகள் வைத்திருப்பவருக்கு மட்டுமே பங்குதாரர் கூட்டத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கும். சுருக்கமாக சொன்னால், பெருமளவு பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு மட்டுமே கம்பனியில் உரிமை உண்டு. அவர்களைத் தான் முதலாளிகள் என்று அழைக்கிறோம். 

உண்மையில் பெரும் மூலதனத்தை செலுத்தியோர், அதாவது முதலாளிகள், கம்பனியை நிர்வகிக்கும் வேலை செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது. பொதுவாக அவர்கள் எந்த வேலையும் செய்வதில்லை.  சிலநேரம், தலைமை நிர்வாகிக்கு பங்குகளில் ஒரு பகுதியை கொடுத்து, அவரையும் பங்குதாரர் ஆக்கி இருப்பார்கள். (அதை விட போனஸ் தனியாகக் கிடைக்கும்.) ஏனையோர் சம்பளம் வாங்கிக் கொண்டு நிர்வாக வேலை செய்கிறார்கள். அதாவது, அதிகம் சம்பாதிக்கும் மூளை உழைப்பாளிகள். அவர்கள் வணிக முகாமைத்துவம், அல்லது அது போன்ற ஏதாவதொரு துறையில் பாண்டித்தியம் பெற்ற அறிவுஜீவிக் குழுவாக இருப்பார்கள்.

ஆகவே, வணிகம் பற்றியோ, நிர்வாகம் பற்றியோ எந்த அறிவுமற்ற, சிலநேரம் கல்வியறிவு எதுவுமற்றவர்கள் கூட, பங்குதாரர் என்ற பெயரில் கம்பனியின் நிர்வாகக் குழுவில் இருக்கலாம். இருந்தாலும், அவர்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்களாக இருப்பார்கள்.

அப்படியானால், ஏன் தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்தை நிர்வகிக்க முடியாது? அதாவது, பணம் படைத்த முதலாளிகளை மட்டுமே கொண்ட, பங்குதாரர்களின் நிர்வாகக் குழுவிற்குப் பதிலாக, தொழிலாளர்களின் பிரதிநிதிகளை கொண்ட நிர்வாகக் குழு அமைக்க முடியாதா? எது எப்படியோ, அவர்களுக்கு கீழே நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றவர்கள் சம்பளத்திற்கு தானே வேலை செய்கிறார்கள்?

முதலாளித்துவ நிறுவனங்களில், தலைமை நிர்வாகிக்கு சில பங்குகள் கொடுப்பதன் மூலம், அவரையும் பங்குதாரர் குழுவில் உறுப்பினர் ஆக்குகிறார்கள். அது ஏன் ஒரு சோஷலிச பொருளாதார நிர்வாகத்தில் சாத்தியப் படாது? அதாவது, ஒரு முதலாளித்துவ நிறுவனத்தில் ஒரு நிர்வாகி முதலாளிகளில் ஒருவர் ஆகிறார். ஆனால், சோஷலிச நிறுவனத்தில் ஒரு நிர்வாகி தொழிலாளிகளில் ஒருவர் ஆகிறார். அது மட்டும் தானே வித்தியாசம்? அவரது கடமையும், வேலையும் ஒன்று தானே?

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதை, பலர் தவறாக நினைத்துக் கொள்வதுண்டு. உண்மை நிலவரம் வேறு. இன்றைய முதலாளித்துவ கட்டமைப்பில், முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரம் நிலவுகின்றது. அதாவது, இங்கே ஒரு நிறுவனத்தை கட்டுப்படுத்தும் சர்வாதிகாரம் பங்குதாரர் எனப்படும் முதலாளிகள் குழுவிடம் உள்ளது. அதற்கு மாறாக, அதே நிறுவனத்தை கட்டுப்படுத்தும் சர்வாதிகாரம் தொழிலாளர் குழுவிடம் இருந்தால் அது தவறா?

மேலும், பங்குதாரர்களான முதலாளிகளுக்கு, அந்தத் தொழில்துறை சார்ந்த அடிப்படை அறிவிருக்குமா என்பது சந்தேகமே. அதற்குப் பதிலாக, தொழிற்சாலையும், அதன் உற்பத்தி பற்றியும் அனுபவ அறிவு கைவரப் பெற்ற தொழிலாளர்கள் நிறுவனத்தை மேற்பார்வை செய்கிறார்கள்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அடிப்படையில் ஜனநாயகத் தன்மை கொண்டது. ஏனென்றால், ஒரு தொழிலகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களால், ஒரு பொதுத் தேர்தலில் வாக்களித்து தெரிவான பிரதிநிதிகள் தான் தொழிலாளர் நிர்வாகத்தில் இடம்பெறுகிறார்கள்.  இன்றைய நிறுவனங்களின் முதலாளிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களா? இல்லையே! நாம் அன்றாடம் சந்திக்கும் சர்வாதிகாரத்தை, சாதாரணமாக எடுத்துக் கொள்வது எப்படி?  

இன்றைய காலத்தில், "ஜனநாயகம்" இருப்பதாக சொல்லப்படும் நாடுகளில், தனியார் நிறுவனங்கள் வளர்ந்து, பொருளாதாரத்தில் பெரும் பகுதியை கட்டுப்படுத்துகின்றன. அது எப்படி ஜனநாயகம் ஆகும்? அதிகாரமற்ற அரசியல்வாதிகளை பாராளுமன்றத்திற்கு தெரிந்தெடுப்பதால் மட்டுமே, அந்த நாட்டில் ஜனநாயகம் இருப்பதாக சொல்ல முடியுமா?

மேலதிக விபரங்களுக்கு,
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:


Saturday, July 05, 2014

விரும்பிய நேரத்தில் வேலை! இப்படியும் ஒரு நிறுவனம் இருக்கிறது!!

நீங்கள் வேலைக்குச் செல்லும் நிறுவனத்தின் விதி முறைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? 

1. எத்தனை மணிக்கு வேலை தொடங்க வேண்டும்? எத்தனை மணிக்கு    முடிக்க வேண்டும்? எவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டும்?
  - அதை நீங்களாகவே தீர்மானித்துக் கொள்ளலாம். வேலைக்கு நடுவில் சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம். மன நிலை சரியில்லை என்றால் வீட்டில் நிற்கலாம்.

2. என்ன வேலை செய்ய வேண்டும்?
  - உங்களது தகுதி, திறமைக்கு ஏற்ற வேலையை தெரிந்தெடுத்துக் கொள்ளலாம்.

3. எவ்வளவு சம்பளம் வேண்டும்?
- சம்பளத்தின் அளவையும் நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

4. எந்த நேரமும் கண்காணிக்கும் மேற்பார்வையாளர்கள் இருப்பார்களா?
- நீங்கள் வேலை செய்கிறீர்களா என்று பார்ப்பதற்கு யாரும் வரப் போவதில்லை. உங்களிடம் ஒப்படைத்த வேலையை பொறுப்புடன் செய்து முடித்துக் கொடுத்தால் போதும்.

5. முகாமையாளர் உங்களுக்கு மேலே அதிகாரம் செலுத்தும் ஒருவராக இருப்பாரா?
- இல்லை. முகாமையாளரை தொழிலாளர்கள் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். பிடிக்காத முகாமையாளரை வேலையை விட்டு தூக்கும் அதிகாரம் தொழிலாளர்களிடம் உண்டு.

இதை வாசிக்கும் சிலர், ஒரு நகைச்சுவையாகக் கருதி வாய் விட்டுச் சிரிக்கலாம். அப்படி ஒரு நிறுவனம் கனவில் கூட சாத்தியமில்லை என்று நினைக்கலாம். "தொழிலாளர்களுக்கு இந்த அளவு சுதந்திரம் கொடுத்தால், அந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி திவாலாகும்" என்று, பொருளாதார மேதைகள் கூட பரிகசிக்கலாம்.

நம்பினால் நம்புங்கள். நான் இங்கே எழுதியது எதுவும் கற்பனை அல்ல. மேற்குறிப்பிட்ட விதிகளை கடைப்பிடிக்கும் ஒரு நிறுவனம் (Semco SA) பிரேசில் நாட்டில் இருக்கிறது. அது ஒரு சிறிய நிறுவனம் அல்ல. 250 பேருக்கு மேற்பட்ட பணியாட்களைக் கொண்ட மிகப் பெரிய நிறுவனம். அதன் நிகர இலாபம் வருடாந்தம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதன் உரிமையாளர் பிரேசிலில் அதிக செல்வம் படைத்த கோடீஸ்வரர்களில் ஒருவர். அவர் பெயர் : ரிக்கார்டோ செம்லர் (Ricardo Semler)

சுமார் 25 வருடங்களுக்கு முன்னர், ரிக்கார்டோ Semco SA  நிறுவனத்தை, அவரது தந்தையிடம் இருந்து பொறுப்பெடுத்தார். அப்போது அந்த நிறுவனம், நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. தந்தையிடம் இருந்து நிர்வாகத்தை பொறுப்பெடுத்த ரிக்கார்டோ செய்த முதல் வேலை, மூன்றில் இரண்டு பங்கு முகாமையாளர்களை வீட்டிற்கு அனுப்பியது தான். அதில் பல உறவினர்களும் அடங்குவார்கள். 

செம்கோ நிறுவனம் முழுமையாக மறு சீரமைக்கப் பட்டது. அங்கு வேலை செய்து வந்த தொழிலாளர்கள், மகிழ்ச்சியின்றி கட்டாயத்தின் பேரில் வேலை செய்வதைக் கண்டார். ரிக்கார்டோ, தனது மனதில் தோன்றிய புதிய சிந்தனைகளை நடைமுறைப் படுத்தினார். தொழிலாளர்கள் என்ன வேலை செய்ய வேண்டும் என்று யாரும் வற்புறுத்தப் போவதில்லை. அவர்களுக்கு பூரண சுதந்திரம் வழங்கப் படும். தொழிலகத்தின் நிர்வாகத்தில் பங்கு வகிப்பார்கள். 

தொழிலாளர்கள் அனைவரும் செம்கோ தமது சொந்த நிறுவனம் என்று உணரத் தொடங்கினார்கள். ஒவ்வொரு நாளும் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை அவர்களே தீர்மானித்தார்கள். யாரும் அவர்களுக்கு உத்தரவிடவில்லை. யாரும் அவர்களை கண்காணிக்கவில்லை. அவர்களுக்கு விரும்பிய நேரத்தில் வேலை செய்தார்கள். களைத்து விட்டால் சிறிது ஓய்வெடுத்தார்கள். 

தொழிலாளர்கள் தாம் விரும்பிய நேரத்தில் வேலை செய்த போதிலும், அந்த தொழிலகத்தின் உற்பத்தி எந்த விதத்திலும் பாதிக்கப் படவில்லை. மாறாக, அது பல மடங்கு அதிகரித்தது. ஒரு காலத்தில் நஷ்டத்தில் இயங்கிய நிறுவனம், இலாபம் சம்பாதிக்கத் தொடங்கியது. அதனால், நிறுவனத்தில் வேலை செய்யும் அத்தனை பேருக்கும் இலாபத்தில் பங்கு கிடைத்தது. தொழிலாளர்கள் மத்தியில் அது அவர்களது சொந்த நிறுவனம் என்ற உணர்வு ஏற்பட்டது. அவர்கள் மகிழ்ச்சியுடன் மனம் விரும்பி வேலை செய்தார்கள். 

தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் மனம் விரும்பி வேலை செய்தால், அவர்களுக்கும் நன்மை, அதே நேரம் முதலாளிக்கும் நன்மை. ஒரு நிறுவனத்தின் வெற்றியின் இரகசியம் அது தான். இந்த உண்மையை உலகின் பிற பாகங்களில் உள்ள முதலாளிகள் என்றைக்கு உணர்ந்து கொள்ளப் போகிறார்கள்? 

மேலதிக விபரங்களுக்கு:
De kapitale kracht van geluk;
http://tegenlicht.vpro.nl/afleveringen/2012-2013/Semler.html

வீடியோ: 
பிரேசில் நாட்டு தொழிலதிபர் ரிக்கார்டோ செம்லர்  டச்சு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு (ஆங்கிலத்தில்) வழங்கிய பேட்டி :



Sunday, February 19, 2012

எங்களால் முடியும்! தொழிலாளர் நிர்வாகத்தில் பத்திரிகை நிறுவனம்

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு, திவாலான கிரேக்க பத்திரிகை நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள், தாமே நிர்வாகத்தை எடுத்து நடத்தும் நிலைக்கு வந்து விட்டனர். நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதால், பங்குதாரரின் கடனை அடைக்க முடியாத முதலாளி, நீதிமன்றத்தில் திவால் நோட்டீஸ் வாங்கியுள்ளார். இதை அடுத்து வேலை நிறுத்தத்தில் குதித்த ஊழியர்கள், தற்பொழுது தாமே நிறுவனத்தை பொறுப்பெடுத்து இயக்குகின்றனர். பெப்ரவரி 15 முதல், கிரேக்க தொழிலாளர்களின் Eleftherotypia பத்திரிகை, கடைகளில் விற்பனைக்கு வைக்கப் பட்டிருக்கும். உலகம் முழுவதும் தொழிலாளர் வர்க்கத்திற்கு நம்பிக்கை தரும் செய்தியை, ஊடகத் துறையை சேர்ந்தவர்களே புறக்கணித்து வருவது கவனத்திற்குரியது. நாம் செய்திக்காக தங்கியிருக்கும் வெகுஜன ஊடகங்கள், எந்த வர்க்கத்தின் நலன்களுக்காக பாடுபடுகின்றனர் என்பது இது போன்ற சந்தர்ப்பங்களில் தெரிய வருகின்றது.

கிறீஸ் நாட்டில், Eleftherotypia என்ற தினசரி பத்திரிகையை நடத்தி வரும் நிறுவனமான, H.K. Tegopoulos தின் 800 ஊழியர்கள், 22 டிசம்பர் 2011 முதல் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். ஆகஸ்ட் 2011 லிருந்து, ஊழியர்களின் சம்பளம் கொடுக்கப் படவில்லை. கடன்காரர்களின் தொல்லையில் இருந்து தப்புவதற்காக, பத்திரிகை நிறுவன முதலாளி, நீதிமன்றத்தில் திவால் நோட்டீஸ் வாங்கியுள்ளார். அதே நேரம், தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய 7 மில்லியன் யூரோ சம்பளப் பாக்கி பற்றி எந்தக் கதையும் இல்லை. இதனால், வேலை நிறுத்தத்தில் குதித்துள்ள தொழிலாளர்கள், போராட்டத்தை ஒழுங்கு படுத்தல், சட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் நில்லாது, தாமாகவே பத்திரிகையை எடுத்து நடத்துகின்றனர். புதிய தொழிலாளர்களின் பத்திரிகை, வழமையான விநியோகஸ்தர்களால் நாடு முழுவதும் விநியோகிக்கப் படும். ஆனால், வழமையான வெகுஜன பத்திரிகைகளை காட்டிலும் சிறிது விலை குறைந்துள்ளது. பத்திரிகை விற்பனையால் கிடைக்கும் வருமானம், தொழிலாளர்களின் போராட்ட செலவுகளுக்கும், அவர்களது குடும்பங்களை பராமரிக்கவும் பயன்படுகின்றது.

கடந்த ஏழு மாதங்களாக வேலை நிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்களுக்கு, பல இடதுசாரி அமைப்புகளும், தனிநபர்களும் நிதி சேர்த்து கொடுத்து வந்துள்ளன. மீண்டும் தொடங்கப் பட்டுள்ள பத்திரிகை விநியோகம், தொழிலாளர்கள் தமது சொந்தக் காலில் நிற்பதற்கு வழி வகுத்துள்ளது. "முதலாளியும், மனேஜர்களும் இல்லாமலே, ஒரு நிறுவனத்தை தொழிலாளர்கள் பொறுப்பெடுத்து நிர்வகிக்க முடியும்," என்ற கம்யூனிசக் கொள்கையை, கிரேக்கத் தொழிலாளர்கள் மெய்ப்பித்து வருகின்றனர். வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்கள் ஒன்று கூடி வாக்களித்து, புதிய நிர்வாகத்தை தெரிவு செய்துள்ளனர். இந்த புதிய நிர்வாகம், பத்திரிகையின் ஆசிரியர் குழுவாக இயங்கி வருகின்றது. நிறுவனத்தின் அதிகாரம் தொழிலாளர் கைகளில் சென்றுள்ளதால் கலக்கமடைந்துள்ள பழைய நிர்வாகம், சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டி வருகின்றது. மூலதன சர்வாதிகாரத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கும் ஊடக சர்வாதிகாரிகள், நாட்டின் உண்மையான நிலவரத்தை மக்களுக்கு தெரிவிப்பதில்லை. தொழிலாளர்களின் மாற்றுப் பத்திரிகை, உழைக்கும் மக்களின் பிரச்சினைகளை பிரதிபலிக்கும் என்பதால், பிற ஊடகவியலாளர்களும் வரவேற்றுள்ளனர்.

Eleftherotypia


கீழே: பத்திரிகை நிறுவன தொழிலாளர்களின், கடந்த வருட வேலை நிறுத்தம் குறித்த வீடியோ.

Monday, March 16, 2009

வெனிசுவேலாவில் தொழிலாளர் நிர்வகிக்கும் தொழிற்சாலை ( வீடியோ)

வெனிசுவேலாவில் 2006 ம் ஆண்டிலிருந்து, தொழிற்சாலை நிர்வாகத்தை தொழிலாளர்கள் பொறுப்பெடுத்து நடத்துவது அதிகரித்து வருகின்றது. முதலாளிகள் நட்டத்தில் இயங்குவதாகக் கூறி தொழிலகத்தை மூடுவதற்கு எத்தனிக்கும் வேளை, உற்பத்தி சாதனங்களை கையகப்படுத்தும் தொழிலாளர்கள், மனேஜர்களையும் விரட்டி விட்டு தாமே நடத்துகின்றனர். விற்பனையில் கிடைக்கும் லாபத்தை தொழிலாளர்கள் சமமாக பங்கிட்டுக்கொள்கின்றனர்.

வெளிநாட்டுக் குழுவொன்று தொழிலாளரால் நிர்வகிக்கப்படும் தொழிற்சாலைக்கு விஜயம் செய்த போது எடுத்த வீடியோ இது:

[VIDEO] Sanitarios Maracay under workers' control
Hands Off Venezuela delegation tours Sanitarios Maracay, a factory in Venezuela under workers control, to learn more about the revolutionary process taking place there, and to offer solidarity to the workers.


[Video] Venezuela Sanitarios Maracay Workers' Assembly