Showing posts with label ஊடகங்கள். Show all posts
Showing posts with label ஊடகங்கள். Show all posts

Wednesday, February 28, 2018

சிரியாவின் இறுதிப் போர் - இதுவரை வெளிவராத உண்மைகள்


ம‌ன்னிக்க‌வும், சிரியா யுத்த‌ம் ப‌ற்றிய‌ பின்வ‌ரும் தக‌வ‌ல்க‌ளை உங்க‌ளுக்கு எந்த‌ ஊட‌க‌மும் சொல்ல‌ப் போவ‌தில்லை:

- த‌ற்போது யுத்த‌ம் ந‌ட‌க்கும், த‌லைந‌க‌ர் ட‌மாஸ்க‌ஸ் ந‌க‌ருக்கு கிழ‌க்கே உள்ள‌ புற‌ந‌க‌ர்ப் ப‌குதியான‌ கூத்தா (Ghouta) க‌ட‌ந்த‌ ஐந்தாண்டுக‌ளாக‌ இர‌ண்டு கிள‌ர்ச்சிக்குழுக்க‌ளின் க‌ட்டுப்பாட்டில் இருந்து வ‌ருகின்ற‌து.

- இத‌ற்கு முன்ன‌ர் இடிலிப் பிர‌தேச‌த்தை நோக்கி சிரிய‌ப் ப‌டைக‌ள் முன்னேறிய‌ நேர‌ம், அங்கிருந்த‌ கிள‌ர்ச்சிக் குழுக்க‌ள் துருக்கி ம‌த்திய‌ஸ்த்த‌த்தை ஏற்றுக் கொண்டு பின்வாங்கிச் சென்ற‌ன‌.

- ஒரு வார‌த்திற்கு முன்ன‌ர், கூத்தா மீது யுத்த‌ப் பிர‌க‌ட‌ன‌ம் செய்த‌ சிரிய‌ அர‌சு இடிலிப் பாணி ச‌ம‌ர‌ச‌த்திற்கு முன்வ‌ந்திருந்த‌து. ஆனால், இம்முறை கிள‌ர்ச்சிக் குழுக்க‌ள் வெளியேற‌ ம‌றுத்த‌ன‌. அத்துட‌ன் ம‌க்க‌ளையும் வெளியேற‌ விடாம‌ல் ப‌ண‌ய‌க்கைதிக‌ளாக‌ பிடித்து வைத்துக் கொண்ட‌ன‌ர்.

- கூத்தா பிர‌தேச‌த்தை மீட்ப‌த‌ற்கான‌ சிரிய‌, ஈரானிய‌ கூட்டுப்ப‌டை ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌ட்ட‌து. சிரிய‌ இராணுவ‌ப் பிரிவான‌ "புலிப் ப‌டை" தரைவ‌ழித் தாக்குத‌லை ஆர‌ம்பித்த‌து. ர‌ஷ்ய‌ விமான‌ங்க‌ளும் குண்டு வீசிய‌தாக‌ கிள‌ர்ச்சியாள‌ர்க‌ள் தெரிவித்த‌ன‌ர்.

- அமெரிக்கா ம‌ற்றும் மேற்க‌த்திய‌ நாடுக‌ளின் நெருக்குத‌லால் ஐ.நா. பாதுகாப்பு ச‌பை கூடி தீர்மான‌ம் எடுத்த‌து. அத‌ற்கு ர‌ஷ்யாவும் ஒத்துழைத்த‌து. உட‌ன‌டியாக‌ போர் நிறுத்த‌ம் கொண்டு வ‌ர‌ப் ப‌ட‌ வேண்டும் என‌த் தீர்மானிக்க‌ப் ப‌ட்ட‌து.

- சிரிய‌ அர‌சு ம‌ட்டுமே ஒரு த‌லைப்ப‌ட்ச‌மாக‌ போர் நிறுத்த‌ம் அறிவித்த‌து. இத‌ற்கு கிள‌ர்ச்சிக் குழுக்க‌ளை பொறுப்பேற்க‌ வைக்க‌ முடியாது. ஏனென்றால் அவை ஐ.நா. வினால் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ அமைப்புக‌ளாக‌ ஏற்றுக்கொள்ள‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. சிரிய‌ அர‌சு அந்த‌ சாட்டை ப‌ய‌ன்ப‌டுத்தி மீண்டும் போரைத் தொட‌ங்கிய‌து.

- ஐ.நா., சிரிய‌ அர‌சின் மீது போர்நிறுத்த‌ மீற‌ல் குற்ற‌ம் சும‌த்த‌ முடியாது. ஏனெனில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ இய‌க்க‌ங்க‌ளுக்கு எதிரான‌ யுத்த‌த்தில் போர்நிறுத்த‌ம் க‌டைப்பிடிக்க‌ப் பட‌ வேண்டிய அவ‌சிய‌ம் இல்லை.

- கூத்தா பிர‌தேச‌ம் இர‌ண்டாக‌ப் பிரிக்க‌ப் ப‌ட்டு நான்கு பெரிய‌ ம‌ற்றும் சிறிய‌ இய‌க்க‌ங்க‌ளின் க‌ட்டுப்பாட்டில் உள்ள‌து. Jaysh al-Islam, al-Nusra Front, Ahrar al-Sham, Faylaq al-Rahman ஆகிய‌ நான்கும் கூட்டுச் சேர்ந்தோ, த‌னித் த‌னியாக‌வோ செய‌ற்ப‌டுகின்ற‌ன‌.

- இவ‌ற்றில் மிக‌ப்பெரிய‌ இய‌க்க‌மான‌ அல் நுஸ்ராவின் முந்திய‌ பெய‌ர் அல் கைதா. மிக‌த் தீவிர‌மான‌ இஸ்லாமிய‌ ம‌த‌ அடிப்ப‌டைவாதிக‌ள் என்ப‌து சொல்லாம‌லே புரியும். ஏனைய‌ இய‌க்க‌ங்க‌ளும் அப்ப‌டித் தான்.

- சிரிய‌ப் ப‌டைக‌ளின் எறிக‌ணை வீச்சுக்கும், விமான‌க் குண்டுக‌ளுக்கும் இதுவ‌ரை ஐநூறு பொதும‌க்க‌ள் ப‌லியாகியுள்ள‌ன‌ர். அதில் நூற்றுக்க‌ண‌க்கான‌ பெண்க‌ளும், குழ‌ந்தைக‌ளும் அட‌ங்குவார்க‌ள்.

- அங்குள்ள‌ ம‌க்க‌ள் விருப்பத்திற்கு மாறாக‌ கிள‌ர்ச்சியாள‌ர்க‌ளால் தடுத்து வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். போர் தொட‌ங்குவ‌த‌ற்கு முன்ன‌ர் அர‌ச‌ ஊழிய‌ர்க‌ள் ட‌மாஸ்க‌ஸ் சென்று வ‌ர‌ அனும‌தித்திருந்த‌ன‌ர். ஆனால், "பாதுகாப்புக் கார‌ண‌ங்க‌ளை முன்னிட்டு" பெண்க‌ளும், குழ‌ந்தைக‌ளும் வெளியேற‌ அனும‌திக்க‌வில்லை.

- சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன்ன‌ர் ஐ.எஸ். க‌ட்டுப்பாட்டில் இருந்த‌ ராக்கா மீது அமெரிக்க‌ விமான‌ங்க‌ள் குண்டு போட்ட‌ன‌.ஒரு க‌ட்டிட‌ம் கூட‌ மிச்ச‌மில்லாம‌ல் த‌ரைம‌ட்ட‌மாகின‌. அன்று ப‌லியான‌ குழ‌ந்தைக‌ள், பெண்க‌ள், பொது ம‌க்க‌ளின் ச‌ரியான‌ எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. அது ப‌ற்றி உல‌கில் யாருக்கும் அக்க‌றை இருக்க‌வில்லை. ஏனெனில் அது அமெரிக்காவின் ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்திற்கு எதிரான‌ போர்.

கூத்தா (Ghouta) பிரதேசம்
******

சிரியா போர் தொடங்கிய காலத்தில் இருந்து மறைக்கப் பட்டு வரும் சில உண்மைகள்: 

1. மேற்குலகம், சிரிய அரச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிப்பது தெரிந்த விடயம். ஆனால், பெரும்பான்மை சிரிய மக்களின் ஆதரவைப் பெறாத பிழையான சக்திகளை தெரிவு செய்ததுள்ளதாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. " சிரியாவில் நடைபெறும் கிளர்ச்சிக்கு பெரும்பான்மையான சிரிய மக்களின் ஆதரவு கிட்டவில்லை. சிரிய அரசுக்கான மக்கள் ஆதரவை, மேற்குலகம் குறைத்து மதிப்பிட்டு விட்டது! ஊடகங்கள் அங்கு நடக்கும் சம்பவங்களை மிகைப் படுத்திக் கூறுகின்றன." - இதைக் கூறியது சிரியாவுக்கான பிரெஞ்சு தூதுவர் Eric Chevalier. (http://blog.lefigaro.fr/malbrunot/2012/03/syrie-un-diplomate-francais-me.html

2. "இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களால் வழிநடாத்தப்படும் சிரியாவின் கிளர்ச்சியாளர்கள், சிரிய மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கவில்லை." அமெரிக்காவின் உளவுத் துறை ஒத்துக் கொண்டுள்ளது. (https://www.jungewelt.de/loginFailed.php?ref=/artikel/179801.im-blindflug.html)

3. சிரியாவினுள் அதிகரித்து வரும் ஜிகாத் போராளிகளின் பிரசன்னம் காரணமாக, சிரியாவில் ஆட்சி மாற்றம் நடைபெறுவதை இஸ்ரேல் விரும்பவில்லை. ஆயினும், சிரியாவின் ஆதரவின்றி ஹிஸ்புல்லா பலவீனமடையும், அந்தப் பிராந்தியத்தில் ஈரானின் செல்வாக்கு குறையும் என்ற காரணங்களால், இஸ்ரேல் ஆட்சி மாற்றத்திற்கு சம்மதித்தது. (http://www.jpost.com/Opinion/Op-Ed-Contributors/The-case-of-Syria-could-prove-different )

4. சிரிய அரச படையினர் மனித உரிமைகளை மீறும் விடயம் ஏற்கனவே தெரிந்தது தான். ஆனால், கிளர்ச்சிக் குழுக்களும் குற்றங்களை இழைத்து வருவதாக, மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தல்கள், சித்திரவதைகள், நீதிக்கு புறம்பான கொலைகள், இவற்றோடு சிறுவர்களை கட்டாயப்படுத்தி படையணிகளில் சேர்த்தல்... இது போன்ற குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது. (https://www.hrw.org/news/2012/03/20/syria-armed-opposition-groups-committing-abuses

*******

சிரியாவில் நடப்பது என்ன? நாம் யாருடைய அரசியலைப் பேசுகின்றோம்?

எதிரும் புதிருமாக‌ காண‌ப்ப‌டும் முத‌லாளிய‌- த‌மிழ் வெகுஜ‌ன‌ ஊட‌க‌ங்க‌ளும், சுன்னி- இஸ்லாமிய‌ அடிப்படைவாதிக‌ளும், வ‌ல‌துசாரி த‌மிழ்த்தேசிய‌வாதிக‌ளும் ஓர‌ணியில் நின்று சிரியாவுக்காக‌ அழுகிறார்க‌ள் என்றால், பின்ன‌ணியில் ஏதோ ஒரு அர‌சிய‌ல் ச‌க்தி அவ‌ர்க‌ளை ஒன்றிணைக்கிற‌து என்று அர்த்த‌ம்.

ஒரு மாத‌த்திற்கு முன்ன‌ர் வ‌ட‌ மேற்கு சிரியாவில் உள்ள‌ அப்ரின் (Afrin) பிர‌தேச‌ம் துருக்கி ப‌டையின‌ரால் தாக்க‌ப் ப‌ட்ட‌து. அப்போதும் பொது ம‌க்க‌ளின் உயிரிழ‌ப்புக‌ள், சொத்த‌ழிவுக‌ள் அதிக‌மாக‌ இருந்த‌ன‌. விமான‌க் குண்டுத் தாக்குத‌லில் ப‌லியான‌ குழந்தைக‌ளின் ப‌ட‌ங்க‌ள் வெளியாகின‌. அது குறித்து ச‌ர்வ‌தேச‌ ம‌ட்ட‌த்தில் எந்த‌ எதிர்வினையும் எழ‌வில்லை. எங்கும் க‌ள்ள‌ மௌன‌ம் நில‌விய‌து.

அப்ரின் பிர‌தேச‌த்தில் ப‌லியான‌ ம‌க்க‌ளின் அவ‌ல‌க் குர‌ல் வெகுஜ‌ன‌ ஊட‌க‌ங்க‌ளின் காதுக‌ளை எட்ட‌வில்லை. அங்கு கொல்ல‌ப் ப‌ட்ட‌ குழ‌ந்தைக‌ளுக்காக‌ யாரும் அழ‌வில்லை. அந்த‌ப் ப‌ட‌ங்க‌ளை யாரும் பார்க்க‌வில்லை. ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் செய‌ற்ப‌டும் ஒருவ‌ர் கூட‌ கொந்த‌ளிக்க‌வில்லை. ஏன்? ஏன்? ஏன்?

குர்திய‌ர்க‌ளும் சுன்னி முஸ்லிம்க‌ள் தானே? அது த‌மிழ் பேசும் சுன்னி முஸ்லிம் ம‌த‌வாதிக‌ளின் உண‌ர்வுக‌ளை த‌ட்டி எழுப்பாத‌து ஏன்? சிரியாவில் குர்திய‌ரும் த‌னி நாடு கேட்டு போராடிய‌ தேசிய‌ விடுத‌லை இய‌க்க‌த்த‌வ‌ர் தானே? அது த‌மிழீழ‌த்தை த‌லையில் வைத்திருக்கும் த‌மிழ்த்தேசிய‌வாதிக‌ளின் க‌ண்க‌ளை உறுத்தாது ஏனோ? அப்போது ம‌ட்டும் க‌ண்க‌ளையும், காதுக‌ளையும் மூடிக் கொண்டிருந்த‌து ஏனோ?

என‌க்கு இந்த‌ லாஜிக் என்ன‌வென்று புரிய‌வில்லை. உல‌க நாடுக‌ளை விட்டு விடுவோம். சிரியாவில் ந‌ட‌க்கும் சிக்க‌லான‌ யுத்த‌த்தில் எந்த‌ப் ப‌க்க‌த்தில் ம‌க்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்டாலும் க‌ண்டிப்ப‌தை விட்டு விட்டு, குறிப்பிட்ட‌ சில‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை ம‌ட்டும் தேர்ந்தெடுத்து அழுவ‌து ஏனோ?

ட‌மாஸ்க‌ஸ் ந‌கருக்கு அருகில் உள்ள‌ கூத்தா பிர‌தேச‌ம், கிள‌ர்ச்சிக் குழுக்க‌ளின் க‌ட்டுப்பாட்டில் இருந்த‌து. அங்குள்ள‌ இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக‌ள் அமெரிக்கா, சவூதி அரேபிய நிதியில் இய‌ங்குவ‌தால், அவ‌ர்க‌ள் வெளியிடும் த‌க‌வ‌ல்க‌ளும் ச‌ர்வ‌தேச‌ அள‌வில் முக்கிய‌த்துவ‌ம் பெறுகின்ற‌ன‌. அத‌னால், போரில் வெல்ல முடியா விட்டாலும் பிர‌ச்சார‌ப் போரில் வெல்ல‌ வேண்டும் என்ற‌ வெறியுட‌ன் செய‌ற்ப‌டுகின்ற‌ன‌.

க‌ட‌ந்த‌ ஐந்தாண்டு கால‌மாக‌ ந‌ட‌க்கும் சிரியா போரில் அடிக்க‌டி காணும் காட்சிக‌ள் இவை. அர‌சும், கிள‌ர்ச்சிக் குழுக்க‌ளும் மாறி மாறி பிர‌ச்சார‌ம் செய்வ‌து வ‌ழ‌மை. ஒருவ‌ர் மாறி ஒருவ‌ர் போர்க்குற்ற‌ச்சாட்டு, இன‌ப்படுகொலைக் குற்ற‌ச்சாட்டு சும‌த்தி, த‌ம‌க்கு சார்பான‌வ‌ர்க‌ளின் அனுதாப‌த்தை பெற்றுக் கொள்ள‌ விரும்புகின்ற‌ன‌ர்.

இத‌னால் க‌ளைப்ப‌டைந்த‌ மேற்கைரோப்பிய‌ ஊட‌க‌ங்க‌ள், த‌ற்போது ந‌ட‌க்கும் கூத்தா யுத்த‌ம் தொட‌ர்பான‌ த‌க‌வ‌ல்க‌ளுக்கு அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌தில்லை. அன்றாட‌ம் செய்தி தெரிவிக்கும் போதும், "கிள‌ர்ச்சிக் குழுக்க‌ளின் பிர‌ச்சார‌ மைய‌த்தால் வெளியிட‌ப் ப‌ட்ட‌ உறுதிப் ப‌டுத்த‌ப் ப‌டாத‌ த‌க‌வ‌ல்க‌ள்" என்று சேர்த்தே சொல்கின்ற‌ன‌.

சிரியா இராணுவ‌ம் ஒன்றும் சிற‌ந்த‌து அல்ல‌. அர‌ச‌ ப‌டைக‌ளின் க‌ண்மூடித்த‌ன‌மான‌ எறிக‌ணைத் தாக்குத‌ல்க‌ளில் ஏராள‌ம் பொது ம‌க்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். அவை போர்க்குற்ற‌ங்க‌ளுக்குள் அட‌ங்கும் என்பதில் ம‌றுப்பில்லை. இருப்பினும், கிள‌ர்ச்சியாள‌ர்க‌ளும் புனித‌ர்க‌ள் அல்ல‌. ஐ.எஸ். வான‌த்தில் இருந்து குதிக்க‌வில்லை. FSA க்கும் ISIS க்கும் இடையில் பெரிதாக‌ வித்தியாச‌ம் இல்லை.

ஐ.எஸ்.க‌ட்டுப்பாட்டில் இருந்த‌ ராக்கா மீதான‌ போரின் போதும், ஏராள‌மான‌ பொது ம‌க்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர். குழ‌ந்தைக‌ளும் ப‌லியாகின‌. ஐ.எஸ். அந்த‌ப் ப‌ட‌ங்க‌ளைக் காட்டி பிர‌ச்சார‌ம் செய்து அனுதாப‌ம் தேடிய‌து. "உல‌க‌மே பார்த்துக் கொண்டிருக்க எம்மின‌ ம‌க்க‌ளை இன‌ப்ப‌டுகொலை செய்கிறார்க‌ள்" என்று ஓல‌மிட்ட‌ன‌ர். கொத்துக் குண்டுக‌ள் வீச‌ப் ப‌ட்ட‌தாக‌வும், இது குறித்து ஜெனீவா சென்று ஐ.நா. வில் முறையிட‌ப் போவ‌தாக‌வும் சொன்னார்க‌ள்.

இந்த‌ விட‌ய‌த்தில் சுன்னி- முஸ்லிம் அடிப்ப‌டைவாதிக‌ளுக்கும், வ‌ல‌துசாரி- த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளுக்கும் இடையில் ந‌ல்ல‌ ஒற்றுமை உள்ள‌து. ச‌ரி, அது உங்க‌ளுக்கிடையிலான‌ இர‌க‌சிய‌மான‌ கொள்கை உட‌ன்பாடு. இத‌ற்குள் எத‌ற்கு ம‌ற்ற‌வ‌ர்க‌ளை இழுக்கிறீர்க‌ள்?

சிரியாக் குழ‌ந்தைக‌ளுக்காக‌ நீலிக்க‌ண்ணீர் வ‌டிக்கும் போலி மனிதநேய‌வாதிக‌ள், யேம‌ன் குழ‌ந்தைக‌ள் கொல்ல‌ப் ப‌ட்ட‌ நேர‌ம் எங்கிருந்தார்க‌ள்? அங்கு ந‌ட‌க்கும் போர் ப‌ற்றி, ப‌லியான‌ ம‌க்க‌ள் ப‌ற்றி ஒரு நாளாவ‌து பேசி இருப்பார்க‌ளா?

சிரியாவுக்கும், யேம‌னுக்கும் என்ன‌ வித்தியாச‌ம்? இர‌ண்டுமே அரேபிய‌ தீப‌க‌ற்ப‌த்தில் தான் உள்ள‌ன‌. இர‌ண்டு நாடுக‌ளிலும் கொல்ப‌வ‌ர்க‌ளும், கொல்ல‌ப் ப‌டுப‌வ‌ர்க‌ளும் அரேபிய‌ர்க‌ள், அல்ல‌து முஸ்லிம்க‌ள் தான்.

யேம‌னில் குண்டு போட்டு குழ‌ந்தைக‌ளைக் கொல்வ‌து ச‌வூதி அரேபிய‌ விமான‌ங்க‌ள் என்ப‌தால், யாருக்கும் அதைப் ப‌ற்றி அக்க‌றை இல்லை. ச‌வூதி அரேபியாவுக்குப் பின்னால் அமெரிக்கா இருப்ப‌தால் ச‌ர்வ‌தேச‌மும் க‌ண்ணை மூடிக் கொண்டிருக்கிற‌து. அது ப‌ற்றி விவாதிக்க‌ ஐ.நா. பாதுகாப்புச் ச‌பை கூட்ட‌ப் ப‌டுவ‌தில்லை.

யேம‌னில் ப‌லியான‌ குழ‌ந்தைக‌ள் ஷியா முஸ்லிம்க‌ள் என்ற‌ ஒரேயொரு கார‌ணத்திற்காக‌, த‌மிழ் பேசும் சுன்னி முஸ்லிம்க‌ள் க‌ண்டுகொள்ளாம‌ல் புற‌க்க‌ணிக்கிறார்க‌ள். ஆனால், சிரியாவில் சுன்னி முஸ்லிம்க‌ள் ப‌லியாகும் போது ம‌ட்டுமே கொந்த‌ளிக்கிறார்க‌ள். இதுவா ம‌னித‌ நேய‌ம்? இதுவா ம‌த‌ உண‌ர்வு?

ம‌னிதாபிமான‌ உண‌ர்வு கூட‌ தான் சார்ந்த‌ ம‌த‌ப் பிரிவு பார்த்து தான் வ‌ருகின்ற‌து. த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளும் இத‌ற்கு விதிவில‌க்க‌ல்ல‌. த‌மிழ‌ர் கொல்ல‌ப் ப‌ட்டால் ம‌ட்டுமே அவ‌ர்க‌ளுக்கும் ம‌னித‌நேய‌ உண‌ர்வு பொங்கி எழும். ம‌ற்றும் ப‌டி மேற்க‌த்திய‌ ந‌ல‌ன் சார்ந்த‌வ‌ர்க‌ள் பாதிக்க‌ப் ப‌டும் போது ம‌ட்டுமே தாமும் சேர்ந்து அழுவார்க‌ள்.

சிரியாப் போரின் ஆர‌ம்ப‌ கால‌ங்க‌ளில் அந் நாட்டின் பெரும் ப‌குதி கிள‌ர்ச்சிப் ப‌டைக‌ளின் க‌ட்டுப்பாட்டின் கீழ் வ‌ந்திருந்த‌து. அப்போது, ஆயிர‌ம் ஆண்டுக‌ளாக‌ அங்கு வாழ்ந்து வ‌ந்த‌ ஷியா முஸ்லிம்க‌ளும், கிறிஸ்த‌வ‌ர்க‌ளும் இன‌ச்சுத்திக‌ரிப்பு செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌ர். அந்த‌ ந‌ட‌வ‌டிக்கையின் போது ப‌ல‌ர் க‌ழுத்து வெட்டிக் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர். பெண்க‌ள், குழ‌ந்தைக‌ள் என்றும் பாராம‌ல் ப‌ல‌ர் குடும்ப‌த்தோடு கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

ISIS ம‌ட்டும‌ல்ல, அல் நுஸ்ரா, FSA ம‌ற்றும் சிரியாவில் போராடும் ஒரு ட‌சின் கிள‌ர்ச்சிக் குழுக்க‌ள், ஷியா, கிறிஸ்த‌வ‌ ம‌க்க‌ளை ப‌டுகொலை செய்துள்ள‌ன‌. பொதுவாக‌ எல்லா கிள‌ர்ச்சிக் குழுக்க‌ளின் போராளிக‌ளும் சுன்னி முஸ்லிம்க‌ள் தான். தீவிர‌ இஸ்லாமிய அடிப்ப‌டைவாதிக‌ள் தான்.

"சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஹோம்ஸ் நகரில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப் பட்டுள்ளனர். சிரிய அரசுக்கெதிரான சிரிய சுதந்திர இராணுவம், அல்கைதா குழுக்கள் கிறிஸ்தவ மக்களை இனச்சுத்திகரிப்பு செய்கின்றனர். மேற்குலகம் இதைக் கண்டும் காணாதது போல கண்ணை மூடிக் கொண்டிருக்கிறது." - சிரிய ஒர்தொடக்ஸ் கிறிஸ்தவ திருச்சபை வத்திகானுக்கு எழுதிய கடிதத்தில் இது குறிப்பிடப் பட்டுள்ளது. (http://www.politique-actu.com/osons/syrie-eglises-accusent-france-vouloir-vider-syrie-chretiens/383926/

அப்போது யாரும் சிரிய‌க் குழ‌ந்தைக‌ளுக்காக‌ அழ‌வில்லை. கொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் கிறிஸ்த‌வ‌ர்க‌ளாக‌ இருந்த‌ போதிலும், ஒரு "கிறிஸ்த‌வ‌ நாடு" கூட‌ க‌ண்ட‌ன‌ம் தெரிவிக்க‌வில்லை. இஸ்லாமிய‌ அடிப்ப‌டைவாத‌ ஆயுத‌பாணிக‌ள், இர‌ண்டாயிர‌ம் ஆண்டு ப‌ழ‌மை வாய்ந்த‌ கிறிஸ்த‌வ‌ கிராம‌ங்க‌ளை தாக்கி அழித்து, அங்கு வாழ்ந்த‌ ம‌க்க‌ளை ப‌டுகொலை செய்த‌ன‌ர். எத்த‌னை கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கு இந்த‌ விப‌ர‌ம் தெரியும்? எத்த‌னை பேர் அந்த‌ப் ப‌ட‌ங்க‌ளை ப‌கிர்ந்து கொண்டார்க‌ள்? பூஜ்ஜிய‌ம்.

அந்நேர‌ம் மேற்குறிப்பிட்ட‌ இன‌ப்ப‌டுகொலைக‌ளில் ஈடுப‌ட்ட‌வ‌ர்க‌ள் சுன்னி முஸ்லிம் தீவிர‌வாதிக‌ள். அமெரிக்கா, ச‌வூதி அரேபியாவால் நிதி, ஆயுத‌ம் கொடுத்து வ‌ள‌ர்க்க‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள். ஆக‌வே எல்லோரும் பேசாம‌ட‌ந்தைக‌ளாக‌ வாயை மூடிக் கொண்டிருந்தார்க‌ள்.

பார‌ப‌ட்ச‌மின்றி அனைத்துக் கொலைக‌ளையும் க‌ண்டியுங்க‌ள். அது நேர்மையான‌து. ச‌ந்த‌ர்ப்ப‌ம் பார்த்து, "ந‌ண்ப‌ர்க‌ள்" பாதிக்க‌ப் ப‌டும் போது ம‌ட்டும் பொங்கி எழுவ‌து, குறுகிய‌ அர‌சிய‌ல் ஆதாய‌ம் க‌ருதி செய்ய‌ப் ப‌டும் பிர‌ச்சார‌ம். அத‌ற்குப் பெய‌ர் இர‌க்க‌ம் அல்ல‌, பிண‌த்தை காட்டி காசு வாங்கும் ஈன‌த்த‌ன‌ம்.

ஏனிந்த‌ பார‌ப‌ட்ச‌ம்?

அப்போது குழ‌ந்தைக‌ளை கொன்ற‌வ‌ர்க‌ள் தாம் சார்ந்த‌ சுன்னி இஸ்லாமிய‌ ம‌த‌ப் பிரிவின‌ர் என்ப‌தால், த‌மிழ் பேசும் சுன்னி முஸ்லிம்க‌ள் க‌ண்டுகொள்ள‌வில்லை. அதே மாதிரி, தாம் ஆராதிக்கும் அமெரிக்காவின் ஆசீர்வாத‌ம் பெற்ற‌வ‌ர்க‌ள் என்ப‌தால், வ‌ல‌துசாரி த‌மிழ்த்தேசிய‌வாதிக‌ளும் க‌ண்டுகொள்ள‌வில்லை. இது தான் உண்மை.

ராக்காவில் அமெரிக்க விமானங்கள் குண்டு போட்ட நேரம், "ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்திற்கு எதிரான‌ போர் ந‌ட‌க்கிற‌து" என்று கூறி கைத‌ட்டி வ‌ர‌வேற்ற‌வ‌ர்க‌ள் தான் இன்று "குழ‌ந்தைக‌ளுக்கு எதிரான‌ போர் ந‌ட‌க்கிற‌து" என்கிறார்க‌ள். இவ‌ர்க‌ள் எப்போது யாரை ஆத‌ரிப்பார்க‌ள், யாரை எதிர்ப்பார்க‌ள், யாரின் காலை வாரி விடுவார்க‌ள் என்று தெரியாம‌ல் உள்ள‌து. ஒரு கால‌த்தில் ஐ.எஸ். விடுத‌லைப் போராளிக‌ள் என்றார்க‌ள். பிற‌கு ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் என்று சொல்லி காலை வாரினார்க‌ள்.

ஒன்று ம‌ட்டும் நிச்சய‌ம். நாம் என்ன‌ அர‌சிய‌லைப் பேச‌ வேண்டும் என்ப‌து வாஷிங்ட‌னில் தீர்மானிக்க‌ப் ப‌டுகிற‌து. அங்கிருந்து வ‌ரும் அறிவுறுத்த‌ல்க‌ளை எல்லோரும் பின்ப‌ற்ற‌ வேண்டும். அவ‌ர்க‌ள் எதிர்க்க‌ சொன்னால் எதிர்க்க‌ வேண்டும். ஆத‌ரிக்க‌ சொன்னால் ஆத‌ரிக்க‌ வேண்டும்.


சிரியா தொடர்பான முன்னைய பதிவுகள்:
சிரியாவில் மூன்றாம் உலகப்போர் ஆரம்பிக்குமா?
அலெப்போவின் முள்ளிவாய்க்கால்
இறுதிப்போர்: ஐ.எஸ். அழிப்புப் போருக்கு தயாராகும் இருபது உலக நாடுகள்!
இஸ்லாமிய தேசத்தின் (ஐ.எஸ்.) உள்ளே என்ன நடக்கிறது?

Sunday, February 19, 2012

எங்களால் முடியும்! தொழிலாளர் நிர்வாகத்தில் பத்திரிகை நிறுவனம்

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு, திவாலான கிரேக்க பத்திரிகை நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள், தாமே நிர்வாகத்தை எடுத்து நடத்தும் நிலைக்கு வந்து விட்டனர். நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதால், பங்குதாரரின் கடனை அடைக்க முடியாத முதலாளி, நீதிமன்றத்தில் திவால் நோட்டீஸ் வாங்கியுள்ளார். இதை அடுத்து வேலை நிறுத்தத்தில் குதித்த ஊழியர்கள், தற்பொழுது தாமே நிறுவனத்தை பொறுப்பெடுத்து இயக்குகின்றனர். பெப்ரவரி 15 முதல், கிரேக்க தொழிலாளர்களின் Eleftherotypia பத்திரிகை, கடைகளில் விற்பனைக்கு வைக்கப் பட்டிருக்கும். உலகம் முழுவதும் தொழிலாளர் வர்க்கத்திற்கு நம்பிக்கை தரும் செய்தியை, ஊடகத் துறையை சேர்ந்தவர்களே புறக்கணித்து வருவது கவனத்திற்குரியது. நாம் செய்திக்காக தங்கியிருக்கும் வெகுஜன ஊடகங்கள், எந்த வர்க்கத்தின் நலன்களுக்காக பாடுபடுகின்றனர் என்பது இது போன்ற சந்தர்ப்பங்களில் தெரிய வருகின்றது.

கிறீஸ் நாட்டில், Eleftherotypia என்ற தினசரி பத்திரிகையை நடத்தி வரும் நிறுவனமான, H.K. Tegopoulos தின் 800 ஊழியர்கள், 22 டிசம்பர் 2011 முதல் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். ஆகஸ்ட் 2011 லிருந்து, ஊழியர்களின் சம்பளம் கொடுக்கப் படவில்லை. கடன்காரர்களின் தொல்லையில் இருந்து தப்புவதற்காக, பத்திரிகை நிறுவன முதலாளி, நீதிமன்றத்தில் திவால் நோட்டீஸ் வாங்கியுள்ளார். அதே நேரம், தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய 7 மில்லியன் யூரோ சம்பளப் பாக்கி பற்றி எந்தக் கதையும் இல்லை. இதனால், வேலை நிறுத்தத்தில் குதித்துள்ள தொழிலாளர்கள், போராட்டத்தை ஒழுங்கு படுத்தல், சட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் நில்லாது, தாமாகவே பத்திரிகையை எடுத்து நடத்துகின்றனர். புதிய தொழிலாளர்களின் பத்திரிகை, வழமையான விநியோகஸ்தர்களால் நாடு முழுவதும் விநியோகிக்கப் படும். ஆனால், வழமையான வெகுஜன பத்திரிகைகளை காட்டிலும் சிறிது விலை குறைந்துள்ளது. பத்திரிகை விற்பனையால் கிடைக்கும் வருமானம், தொழிலாளர்களின் போராட்ட செலவுகளுக்கும், அவர்களது குடும்பங்களை பராமரிக்கவும் பயன்படுகின்றது.

கடந்த ஏழு மாதங்களாக வேலை நிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்களுக்கு, பல இடதுசாரி அமைப்புகளும், தனிநபர்களும் நிதி சேர்த்து கொடுத்து வந்துள்ளன. மீண்டும் தொடங்கப் பட்டுள்ள பத்திரிகை விநியோகம், தொழிலாளர்கள் தமது சொந்தக் காலில் நிற்பதற்கு வழி வகுத்துள்ளது. "முதலாளியும், மனேஜர்களும் இல்லாமலே, ஒரு நிறுவனத்தை தொழிலாளர்கள் பொறுப்பெடுத்து நிர்வகிக்க முடியும்," என்ற கம்யூனிசக் கொள்கையை, கிரேக்கத் தொழிலாளர்கள் மெய்ப்பித்து வருகின்றனர். வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்கள் ஒன்று கூடி வாக்களித்து, புதிய நிர்வாகத்தை தெரிவு செய்துள்ளனர். இந்த புதிய நிர்வாகம், பத்திரிகையின் ஆசிரியர் குழுவாக இயங்கி வருகின்றது. நிறுவனத்தின் அதிகாரம் தொழிலாளர் கைகளில் சென்றுள்ளதால் கலக்கமடைந்துள்ள பழைய நிர்வாகம், சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டி வருகின்றது. மூலதன சர்வாதிகாரத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கும் ஊடக சர்வாதிகாரிகள், நாட்டின் உண்மையான நிலவரத்தை மக்களுக்கு தெரிவிப்பதில்லை. தொழிலாளர்களின் மாற்றுப் பத்திரிகை, உழைக்கும் மக்களின் பிரச்சினைகளை பிரதிபலிக்கும் என்பதால், பிற ஊடகவியலாளர்களும் வரவேற்றுள்ளனர்.

Eleftherotypia


கீழே: பத்திரிகை நிறுவன தொழிலாளர்களின், கடந்த வருட வேலை நிறுத்தம் குறித்த வீடியோ.

Tuesday, September 28, 2010

ஊடகங்கள் எவ்வாறு எம்மை ஏமாற்றுகின்றன?


சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர், சோவியத் யூனியனில் லெனின், ஸ்டாலின் சிலைகளை தள்ளி விழுத்தும் காட்சிகளை தொலைக்காட்சிகள் காண்பித்தன. தொலைக்காட்சி என்ற சக்தி வாய்ந்த ஊடகம் வளர்ச்சியடைந்த காலகட்டம். உலகம் முழுவதும் பரவலாக வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்து விட்டது. மேற்குலகில் கேபிள் தொடர்பு வீடுகளை இணைத்து விட்டிருந்தது.

கம்யூனிச வீழ்ச்சியின் அடையாளமாக சிலை உடைப்பு வைபவங்களை உலகம் முழுவதும் மக்கள் கண்டுகளித்தார்கள். ஊடகங்கள் சொல்ல வந்த செய்தி கச்சிதமாக மக்கள் திரளிடம் போய்ச் சேர்ந்தது. கம்யூனிச நாடுகளிலேயே மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கம்யூனிசத்தை வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் தூக்கி வீசி விட்டார்கள். நல்லது. உண்மையில் உலகில் நடப்பதை மட்டுமே ஊடகங்கள் தெரிவிக்கின்றனவா? ஊடகங்கள் எமக்கு சொல்லாத சேதிகள் பல உள்ளன.

முன்னை நாள் கம்யூனிச நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை யாரும் மறுக்கவில்லை. கம்யூனிஸ்ட்கள் ஆட்சி செய்த காலத்தில் பலதரப்பட்ட அரசியல் அமைப்புகள் இரகசியமாக இயங்கி வந்தன. லிபரல்கள், சமூக ஜனநாயகவாதிகள், பாசிஸ்ட்கள், தேசியவாதிகள் இவ்வாறு பலதரப்பட்ட அரசியலை சேர்ந்தவர்கள் தமது காலம் வரும் வரை காத்திருந்தார்கள்.

கோர்பசேவ், யெல்சின் கும்பல் கம்யூனிசத்தை கைவிட்டு விட்டு முதலாளித்துவத்தை தழுவிக் கொண்டனர். தொடர்ந்து அனைத்து அரசியல் அமைப்புகளுக்கும் சுதந்திரம் வழங்கி ஆதரவை தேடிக் கொண்டனர். புதிதாக சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சியில் அவர்கள் லெனின், ஸ்டாலின் சிலைகளை நெட்டித் தள்ளினார்கள். அதுவும் மாஸ்கோ போன்ற சில முக்கிய நகரங்களில் மட்டுமே இடம்பெற்றது. இதைத் தான் "பெருந்திரள் மக்கள் சிலைகளை விழுத்தியதாக" ஊடகங்கள் பிரச்சாரம் செய்தன.

எதற்கும் நாம் இதனை இன்னொரு கோணத்தில் இருந்து பார்ப்போம். ஈராக் போரை எதிர்த்து அமெரிக்காவிலேயே லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற அரச எதிர்ப்பு ஊர்வலங்கள் நடந்தன. அவர்கள் நியூயோர்க் நகரில் அமெரிக்க குடியரசை நிறுவிய ஜோர்ஜ் வாஷிங்டன் சிலையை உடைக்கிறார்கள் என்று வைப்போம். அப்போது இந்த ஊடகங்கள் எவ்வாறு நடந்து கொள்ளும்? அந்த செயலை மாபெரும் தேச விரோத செயலாக சொல்லிக் கொண்டிருப்பார்கள். சிலை உடைத்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கு அறிவுறுத்துவார்கள்.

கிட்டத்தட்ட அப்படியொரு சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றது. லண்டன் மாநகரில் ஈராக் போர் எதிர்ப்பு ஊர்வலம் நடந்த சமயம் சேர்ச்சில் சிலை மீது சிவப்பு சாயம் பூசப்பட்டது. உடனே அரசும், ஊடகங்களும் நடக்கக் கூடாத அசம்பாவிதம் நடந்ததைப் போல கண்டிக்க ஆரம்பித்து விட்டார்கள். பெல்ஜியத்திலும் இதே போல முன்னாள் மன்னர் போதுவாவின் சிலைக்கு சிவப்பு சாயம் பூசப்பட்ட பொழுதும், அது பொறுப்பற்ற விஷமிகளின் வேலையாக பார்க்கப்பட்டது.

சோவியத் யூனியனில் சிலை உடைத்தால் அது மக்கள் எழுச்சி. மேற்குலகில் அரசியல் தலைவர்களின் சிலைகள் மீது சாயம் பூசினாலே குற்றம். தப்பித் தவறி உடைத்து விட்டால், உடனே ஊடகங்கள் சாமியாடி இருக்கும். "சுதந்திர ஊடகம்", "நடுநிலை ஊடகம்" எல்லாம் மக்களை ஏமாற்ற பாவிக்கப்படும் வெறும் அலங்காரச் சொற்கள். உலகில் எந்த ஊடகமும் ஒரே தன்மை கொண்டதாக இல்லை.

சோவியத் யூனியனின் லெனின் சிலை உடைந்த பொழுது தொலைக்காட்சி கமெராக்கள் ஒளி வெள்ளம் பாய்ச்சின. அப்போதே நகரம் நகரமாக, கிராமம் கிராமமாக லெனின் சிலைகள் உடைக்கப்பட்டதாக பலர் கற்பனைக் குதிரையை தட்டி விட்டார்கள். இன்று முன்னாள் சோவியத் யூனியனில் எங்குமே லெனின் சிலையை காண முடியாது என்று பலர் இப்போதும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். (ஊடகங்கள் அப்படி நம்ப வைத்தன.)

சோவியத் குடியரசுகளான ரஷ்யாவில் மட்டுமல்ல, பெலாரஸ், உக்ரைன், மற்றும் மத்திய ஆசிய நாடுகளிலும் இன்றைக்கும் லெனின் சிலைகள் நிமிர்ந்து நிற்கின்றன. அதுவும் பெரிய நகரங்களின், பிரதான வீதிகளில் காட்சியளிக்கின்றன. நான் சொல்வதை நம்பாதவர்கள் கீழ் குறிப்பிட்ட இடங்களுக்கு நேரே சென்று பார்க்கலாம்.

உக்ரைனில் கிரீமியா பகுதி, மொல்டேவியாவில் டிரான்ஸ் நிஸ்திரியா பகுதி, பெலாரஸ் குடியரசு, ரஷ்யாவில் சைபீரிய நகரமான நொறில்ஸ்க்.... இப்படியே அடுக்கிக் கொண்டே போகலாம். ஜோர்ஜியாவில் ஸ்டாலின் பிறந்த இடமான கோரியில் இருந்த ஸ்டாலின் சிலை, கடந்த வருடம் தான் அகற்றப்பட்டது. (தீவிர மேற்குலக சார்பு ஜனாதிபதி ஷாகாஷ்விலி தனது விசுவாசத்தைக் காட்ட வேண்டாமா?)

மேற்கத்திய ஊடகங்கள் எப்போதும் உண்மை சொல்கின்றன என்று நம்பும் பாமரர்கள் வாழும் உலகம் இது. அதனால் தான் மக்களை மூளைச் சலவை செய்வதும் அவர்களுக்கு இலகுவாக உள்ளது. பல ஊடகங்கள் எந்த வித சமூகப் பொறுப்புணர்வும் இன்றி செயற்படுகின்றன. அவர்கள் தமக்குக் கிடைக்கும் செய்தி உண்மையா என்று நிச்சயப் படுத்திக் கொள்வதில்லை. சில நேரம் வதந்திகளையும் உண்மை போல கூறுகின்றார்கள். அதற்கு பல உதாரணங்களை காட்டலாம்.

ஒரு முறை அமெரிக்காவில் பிளேர் என்ற இடத்தில் சில மாணவர்களைக் காணவில்லை என்ற செய்தி வந்தது. தொடர்ந்து அந்த இடத்தில் சூனியக்காரர்களின் நடமாட்டம், குழந்தைகளின் புதைகுழி போன்ற திகில் செய்திகளும் வந்தன. அதை எல்லாம் உண்மை என்றே பலரும் நம்பினார்கள். சில மாதங்களுக்கு பின்னர் தான் உண்மை வெளிவந்தது. "Blair Witch Project" என்ற ஆங்கிலப் படத் தயாரிப்பாளர்கள், தமது திரைப்படத்துக்கான விளம்பரத்திற்காக கட்டி விட்ட கதை அது.

ஒரு தடவை, நெதர்லாந்து பத்திரிகைகள் அனைத்திலும் ஒரு பரபரப்புச் செய்தி வெளியானது. அநேகமாக ஜெர்மன் ஊடகங்களில் இருந்து அந்த தகவல் வந்திருக்கலாம். முன்னை நாள் கிழக்கு பெர்லினில், பெர்லின் சுவருக்கு அருகில் இருந்த வீடொன்று இருபது வருடமாக ஆளரவம் இல்லாமல் திறந்து கிடந்ததாம். அங்கே வாழ்ந்த மக்கள் பெர்லின் மதில் உடைந்த செய்தி கேள்விப் பட்ட உடனேயே மேற்கு பெர்லினுக்கு ஓடியிருக்கலாமாம். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவுப் பொருட்கள் கூட மேசையில் அப்படியே இருந்தனவாம்.

கேட்பவன் கேணையன் என்றால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டுமாம். இருபது வருடங்களுக்கு முன்னர் மிஞ்சிய உணவுப்பொருட்கள் அப்படியே கெடாமல் இத்தனை வருடங்களாக இருந்திருக்கிறது, என்று பத்திரிகைகள் நமது காதில் பூச் சுற்றுகின்றன. இருபது வருடங்கள் அந்த வீட்டின் வாடகை, மின்சார, தண்ணீர் பில்களை எவன் கட்டினான் என்று யாரும் கேட்கவில்லை. இப்படியான செய்திகள் உலகம் முழுவதும் வாழும் கம்யூனிச எதிர்ப்பாளர்களின் மனங்களை குளிர்விப்பதற்காக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஒரு தடவை, "பிடல் காஸ்ட்ரோ, கம்யூனிசம் தோற்று விட்டதாக ஏற்றுக் கொண்டார்" என்ற செய்தி உலகம் முழுவதும் அடிபட்டது. கியூபா சென்று காஸ்ட்ரோவை பேட்டி கண்ட பத்திரிகையாளர் வெளியிட்ட ஒரு சிறு டிவிட்டர் தகவல் தான் அது. பின்னர் வெளியான காஸ்ட்ரோவின் முழுமையான நேர்காணலை வாசித்தவர்கள் நிச்சயமாக ஏமாற்றமடைந்திருப்பார்கள். இருந்தாலும் யார் அதையெல்லாம் வாசிக்கவில்லை என்று கவலைப்பட்டார்கள்? 

இத்தனை காலம் அவர்கள் எதிர்பார்த்தது எல்லாம் கியூபா சோஷலிசத்தை கைவிட்டு விட்டது என்ற செய்தியைத் தான். அத்தகைய மகிழ்ச்சிகரமான செய்தியை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாமா? மக்களுக்கு போதையேற்றுவது மட்டுமே ஊடகங்களின் பணியாகி விட்ட காலம். இருந்தாலும் அல்கஹோல் விகிதாசாரம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.

Tuesday, February 03, 2009

மனிதாபிமான நெருக்கடிக்குள் மக்களும் ஊடகங்களும்


சர்வதேச ஊடகங்கள் ஈழத்தமிழரின் மனிதாபிமான நெருக்கடி பற்றி தொடர்ந்து செய்தி அறிக்கைகளை வெளியிட்டு வருவதை பொறுக்க முடியாத இலங்கை அரசு, அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயற்படுவதாக குற்றஞ்சாட்டி, நாட்டை விட்டு விரட்டப் போவதாக எச்சரித்துள்ளது. ஊடகங்கள் பாராமுகமாக இருந்திருந்தால், பொது மக்களின் இழப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்பதால், மனித அவலத்தை தவிர்ப்பதில் அவற்றின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. சர்வதேச ஊடகங்கள் நடுநிலை தவறி விட்டனவா? இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோக்கள் எடுத்துக் காட்டும்.

Civilians trapped in Sri Lanka fighting - (Al Jazeera, 2 Feb 09 )


Tamils share concerns over Sri Lankan conflict

Tuesday, September 02, 2008

CNN ஒளிபரப்பிய(ஒளி மறைத்த) மொழி திரிப்பு வீடியோ

ரஷ்ய பிரதமர் புத்தின் "பனிப்போர்" பற்றி கூறிய கருத்துகளை CNN இருட்டடிப்பு செய்தது. கடந்த வாரம் CNN சார்பில் Matthew Chance ரஷ்ய பிரதமர் புத்தினை நேர்கண்டார். ஜோர்ஜிய போருக்கு பின் ஏற்பட்ட, மேற்குலகிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான "பனிப்போர் நெருக்கடி" குறித்து பல்வேறு கேள்விகளையும் எழுப்பிய போது, புத்தின் அதற்கு தகுந்த பதில்களை அளித்த போதும், இதுவரை முழுமையான பேட்டியை பார்த்தவர்கள் மிகக்குறைவு. புத்தின் அமெரிக்கா குறித்து கூறிய குற்றச்சாட்டுகளை மட்டும் CNN தெரிந்தெடுத்து ஒளிபரப்பியது. அதுவும் சரியான மொழிபெயர்ப்பு செய்யாமல், மொழிதிரித்து தான் ஒளிபரப்பியது. எமக்கு ரஷ்ய மொழி தெரியாது என்பதால், ஏமாற்றுவது எளிதல்லவா?

இதோ முழுமையான புத்தின் நேர்காணல் வீடியோ(மூன்று பகுதிகள்), நேரடி ஆங்கில மொழிபெயர்ப்புடன் (உபதலைப்புகளாக) இங்கே பார்க்கலாம். அமெரிக்கர்களுக்காக CNN ஒளிபரப்பிய வீடியோவும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், இரண்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களை நீங்களாகவே பார்த்து அறிந்துகொள்ளுங்கள்.

CNN Putin Video 1



CNN Putin Video 2



CNN Putin Video 3



CNN transcript Video (truncated broadcast, for Western consumption)


_____________________________________________________________________________________
அமெரிக்க தொலைக்காட்சியின் தணிக்கை அம்பலம்
_____________________________________________________________________________________