“இணையம் எமது சமுதாயத்தை தலை கீழாக மாற்றி வருகின்றது. முன்னொருபோதும் இல்லாதவாறு, சாமானிய மக்களின் கருத்துக்களும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. ஸ்னோடன் என்ற தனி மனிதன், ஒபாமாவுக்கு சவாலாக உருவெடுத்துள்ள அதிசயம், வரலாற்றில் இதற்கு முன்னர் நடந்ததில்லை. இது நமது சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாபெரும் ஜனநாயகப் புரட்சி. இணையப் புரட்சியாளர்களின் நடவடிக்கைகள் ஒரு பக்கம் கற்பனாவாதமாக தோன்றினாலும், மறு பக்கம் அதிகார வர்க்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன.” - மிஷேல் செரெஸ்
83 வயதான பிரெஞ்சு தத்துவவியல் பேராசிரியர் மிஷேல் செரெஸ் (Michel Serres), புதிய தலைமுறை இணையப் புரட்சியாளர்களை வரவேற்று, ஒரு நூலை எழுதி இருக்கிறார். Pettite Poucette (சிறிய சுண்டுவிரல்) என்ற அந்த நூல், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டதாக நான் இன்னும் அறியவில்லை. அதன் டச்சு மொழிபெயர்ப்பு அடுத்த மாதம் வெளிவரவுள்ளது. இதற்கிடையில், நெதர்லாந்தில் வெளியாகும் Vrij Nederland சஞ்சிகை, அவரது பேட்டி ஒன்றைப் பிரசுரித்துள்ளது. தமிழ் வாசகர்களுக்காக, நான் அதனை தமிழில் சுருக்கமாக மொழிபெயர்த்துள்ளேன்.
______________________________________________________________________________
1930 ம் ஆண்டு பிறந்த செரெஸ், ஸ்பெயின் உள்நாட்டு யுத்தம், இரண்டாவது உலகப்போர், பிரான்சின் இரண்டு காலனிய போர்களையும், அவரது வாழ்நாளில் பார்த்து விட்டார். தனது பிறப்பில் இருந்து, முப்பது வயது வரையில் போர்களை மட்டுமே கண்டு வளர்ந்ததாக கூறுகினார். தற்கால பத்திரிகைகள், போர்கள், பயங்கரவாத தாக்குதல்களுக்கு, தேவையற்ற அளவு அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிப்பதாக குறைப்படுகின்றார். உண்மையில், உலகம் முன்பிருந்ததை விட பெருமளவு முன்னேறி விட்டதாகவும், பயங்கரவாதம் குறிப்பிடத் தக்க அளவு தாக்கத்தை உண்டாக்கவில்லை என்றும் கூறுகின்றார்.
செரெஸ் சுயமாக படித்து முன்னேறிய ஒருவராக தன்னைத் தானே சொல்லிக் கொள்கிறார். (கணிதவியல், இலக்கியம், தத்துவியல் கற்றவர். பாரிஸ் சோர்போன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார். அமெரிக்காவில் பத்து வருடமும், கோஸ்டாரிகா, தென் கொரியா, மாலி, மெக்சிகோ ஆகிய நாடுகளில் விஜயம் செய்யும் விரிவுரையாளராகவும் பணியாற்றி உள்ளார்.) பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொடுக்காத பலவற்றை, அனுபவத்தில் அறிந்து கொண்டதாக கூறுகின்றார். அவரது கூற்றில்: “அறிவு மகிழ்ச்சியை அளிக்கின்றது. அறிவு விடுதலை செய்கின்றது.” மிஷேல் செரெஸ் தனது என்பது வயதில், இணையப் பாவனை பற்றி ஒரு நூலை எழுதி வெளியிட்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை.
இந்த வயதிலும் தளராமல், சமூக வலைத்தளங்களில் செயற்பட்டு வருகின்றார். அவருக்கென்று ஒரு வலைப்பூ (Blog) வைத்திருக்கிறார். அமெரிக்க தொழில்நுட்ப பூங்காவான சிலிக்கான் வலியில் பணியாற்றும் பொழுதே இணையத்தை பாவிக்கத் தொடங்கி விட்டதாகவும், தற்போது தனது பேரப் பிள்ளைகள் மூலம் நிறையக் கற்றுக் கொள்வதாகவும் கூறுகின்றார்: “அறிவும், விஞ்ஞானமும், பெற்றோர் மூலம் பிள்ளைகளுக்கு கடத்தப் படுகின்றது. ஆனால், தொழில்நுட்பத்தை பெற்றோர்கள் பிள்ளைகளிடம் இருந்து கற்றுக் கொள்கிறார்கள்.”
- கேள்வி: உங்களது நூலில், பிரஜைகள் தலைவர்களாவதாகவும், இளைய சமுதாயம் அதிகார பலத்தை தங்கள் கையில் எடுத்திருப்பதாகவும், பழைய அதிகார வர்த்தினரின் பலம் நொறுங்கி வருவதாகவும் குறிப்பிட்டு உள்ளீர்கள். அதன் அர்த்தம் என்ன?
பதில்: தொழில்நுட்பம், (சமுதாய) மாற்றத்தை கொண்டு வந்திருந்தாலும், அதில் குறைபாடுகளும் உள்ளன. கூகிள் உலகம் முழுவதும் உளவு பார்க்க முடியும். அவர்கள் அதை செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கெலா மெர்க்கலின் தொலைபேசி உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப் பட்டன. அனால், இவை அனைத்தும் தனி ஒரு மனிதனின் முயற்சியால் வெளியில் தெரிய வந்தது. அதன் அர்த்தம், ஜனாதிபதி ஒபாமா அளவிற்கு, ஒரு தனி மனிதனின் செல்வாக்கு வளர்ந்துள்ளது. ஏனென்றால் அவர் தான் ஒட்டுக் கேட்கும் உளவுத் தகவல்களை வெளிக் கொணர்ந்தார். ஒரு தனி மனிதன்! அது நானாக இருக்கலாம், நீங்களாக இருக்கலாம். இது ஒரு நவீன ஜனநாயகம்.
- கேள்வி: அது சில நேரம் அச்சத்தை உண்டாக்குகின்றது.
பதில்: ஆமாம், அச்சமும் தான். ஆனால், உலகில் ஒரு புதிய சமநிலை தோன்றி உள்ளது. உலகின் மிகப் பெரிய சக்தி வாய்ந்த தலைவர்களுக்கு சவாலாக, ஒரு தனி மனிதன் வந்துள்ளான். ஒரு தனி மனிதனால் அதிகாரத்தை எதிர்த்து போராட முடிகின்றது. அது ஒரு கற்பனாவாதமாக தெரிந்தாலும், அதே நேரத்தில் அச்சத்தையும் உண்டாக்குகின்றது.
- கேள்வி: ஆகவே, உங்களது நூலில் எழுதி இருப்பதைப் போல, நீங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றீர்கள்.
பதில்: ஆமாம். இந்தப் போக்கு, மேலதிக ஜனநாயகத்தையும், சமத்துவத்தையும் கொண்டு வரும் என்று நம்புகின்றேன். எமது சமுதாயம் ஈபில் கோபுரம் போன்று கட்டப் பட்டுள்ளது. உச்சியில் ஒரு சில அரசியல்வாதிகள் இருந்து கொண்டு, கீழே இருக்கும் மக்கள் திரளின் மேல் தமது முடிவுகளையும், கொள்கைகளையும் திணித்துக் கொண்டிருக்கிறார்கள். உச்சியில் ஒரு சில ஊடகவியலாளர்கள் இருந்து கொண்டு, கீழே இருக்கும் ஏராளமான மக்களுக்கு தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் நினைக்கிறேன், கணணி யுகமானது, அறிவுடைமையை ஜனநாயக மயப் படுத்துவதிலும், சமுதாயத்தை மாற்றுவதிலும் முக்கிய பங்காற்றியுள்ளது. ஒரு நூறு வருடங்களுக்கு முன்னர் கூட, ஆட்சியில் இருந்த அரசன், அல்லது ஜனாதிபதிக்கு, தனது விவசாயக் குடிமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெரியாது. தற்போது ஒரு விவசாயிக்கு, உலக தானிய விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் பற்றி தெரிந்திருக்கிறது. அது ஜனநாயக உறவுகளில் மாற்றத்தை கொண்டு வரும்.
குடிமக்கள் ஒரு வல்லாட்சிக்கு வளைந்து கொடுக்க தயாராக இல்லை. பழைய உலகம் எம் கண் முன்னால் நொறுங்கிக் கொண்டிருக்கிறது. எமக்கு நல்லது எது, கெட்டது எது என்று கூறிக் கொண்டிருந்த அரசியல்வாதிகள். தாங்கள் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதையே வாசிக்க, கேட்க, பார்க்க வேண்டுமென்று எதிர்பார்த்த ஊடகங்கள். அவர்களின் காலம் போய் விட்டது. குடி மக்களான நாங்கள், அடிமைகளோ அல்லது புத்தி சுவாதீனமற்றவர்களோ அல்ல. எங்களுக்கும் ஏதோ கொஞ்சம் தெரியும், அல்லது நன்றாகத் தெரியும் என்று நினைத்துக் கொள்கிறோம்.
தேசங்களும், தேவாலயங்களும் பல நூறாண்டுகளாக யுத்தம் செய்யும் இயந்திரங்களாக மட்டுமே இருந்து வந்துள்ளன. அதை விட, இன்னொருவரின் உயிரைக் கேட்காத, மாய உலகில் வாழ்வதை நான் விரும்புவேன். ஆனால், சமுதாய கட்டுமானம் உடையுமாக இருந்தால், தன் முனைப்பு அதிகமான தனி மனிதர்கள் அல்லவா எஞ்சி இருப்பார்கள்? அப்படி நினைத்தால், இதற்கு முந்திய தலைமுறையை ஒரு தடவை திரும்பிப் பாருங்கள். அவர்கள் எந்தளவுக்கு கூடி வாழ்ந்திருக்கிறார்கள்? விவாகரத்துகள் பெருகின. இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய அரசியல் கட்சிகள், எந்தக் கொள்கையும் இல்லாத வெறும் கோதுகளாக மட்டுமே இருந்து வருகின்றன. அதிகார வர்க்கத்தை சொகுசான பஞ்சு மெத்தையில் வைத்திருப்பதற்காக, ஓட்டு வாங்கும் இயந்திரங்களாக மட்டுமே அரசியல் கட்சிகள் உள்ளன.
இணையத்தில், வலைப்பூவில் தனது அரசியல் கருத்தை வெளியிடும் ஒருவருக்கு கிடைக்கும் ஓட்டுகள், ஒரு அரசியல் கட்சி தேர்தலில் பெற்ற ஓட்டுகளை விட அதிகமாக உள்ளது. இது எதைக் காட்டுகின்றது? அவர்கள் உங்களையும், என்னையும் போன்று சாதாரண மக்கள். ஆனால், அரசியல்வாதிகளின் பேச்சை விட, அவர்களின் கருத்துக்களை கேட்போரின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. இது, ஒரே சமயத்தில், ஆச்சரியத்திற்கு உரியதாகவும், கவலையளிப்பதாகவும் உள்ளது.
இந்த நிலைமை, இன்னும் இருபது, முப்பது வருடங்களில் எத்தகைய விளைவுகளை கொண்டு வரும்? ஒரு புதிய வகை அரசியல் தோன்றலாம். ஆனால், என்ன வகை? அது பற்றி சொல்லத் தெரியவில்லை.
தொழில்நுட்ப வளர்ச்சியை நாங்கள் நன்மையாக எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல திசையில் வழிநடத்தினால், தொழில்நுட்ப மாற்றத்தினால் நன்மையை உண்டாக்கலாம். எனது பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் இந்தப் புதிய உலகில் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். புதியதோர் உலகைப் படைப்பதற்கு, நாங்கள் அவர்களுக்கு உதவ முடியும். இது தத்துவ அறிஞர்களின் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், ஒரு சிலர் மட்டுமே அதில் ஆர்வமாக உள்ளனர்.
19 ம் நூற்றாண்டு தத்துவ அறிஞர்களிடம் ஒரு அரசியல் நோக்கு இருந்தது. உதாரணத்திற்கு: சோஷலிசம். சிலர் அதனை ஒரு கற்பனையான கோட்பாடாக கருதி இருக்கலாம். ஆனால், அதற்குப் பதிலாக, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில், சமூக காப்புறுதி, ஏழைகளுக்கு உதவுதல் போன்ற திட்டங்கள் கொண்டு வரப் படவில்லையா? தற்போதும் சமுதாயம் திரும்பவும் மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால், அது எதை நோக்கி செல்கின்றது என்பதை தீர்மானிக்க முடியாது. மரபு ரீதியாக, தத்துவ அறிஞர்கள் புத்தகங்களை மட்டுமே நம்பி இருந்தார்கள். கணனித் திரைகளை அல்ல. அவர்கள் தம்மை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள வேண்டும்.
- கேள்வி: நீங்கள் அதைச் செய்கிறீர்கள் தானே?
பதில்: நான் பல வருட காலமாக, என்னை அதில் ஈடுபடுத்தி வந்திருக்கிறேன். ஐம்பது வருடங்களுக்கு முன்னர் “ஹெர்மெஸ்” என்ற தலைப்பின் கீழ், நான் ஒரு புத்தகம் எழுதினேன். கிரேக்க புராணத்தின் படி, ஹெர்மஸ் என்பவன் கடவுளின் தூதுவன் அல்லது தகவல் தொடர்புக்கான தெய்வம். நெருப்பு அல்லது தொழிற்துறை புரட்சியின் தெய்வமான புரொமதெயுசிடம் இருந்து, ஹெர்மஸ் எமது சமுதாயத்தின் அதிகாரத்தை கைப்பற்றுவதாக எழுதி இருந்தேன். ஆனால், அன்றைக்கு நான் சொன்னதை யாரும் கேட்கவில்லை. ஹா… ஹா… ஹா…
- கேள்வி: கணணி மயமாக்கல் எமது மூளை வளர்ச்சியில் பங்காற்றுவதாக சொல்கிறீர்கள்.
பதில்: நாங்கள் ஒரு புத்தகத்தை வாசிக்கும் பொழுது, எமது மூளையில் எந்தெந்த நரம்புகள் இயங்க ஆரம்பிக்கின்றன என்று, விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தார்கள். அந்த குறிப்பிட்ட நரம்புகள், வாசிப்பதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தன? ஒன்றுமேயில்லை! அதனால், நாங்கள் தகவல்களை பெற்றுக் கொள்ளும் பொழுது, எமது மூளையும் வளர்ச்சி அடைகின்றது. இது எமது சிந்தனா முறையில் ஒரு புரட்சியை உண்டு பண்ணலாம். வரலாற்றில் ஏற்கனவே இது போன்ற இரண்டு புரட்சிகள் நடந்துள்ளன. எழுதும் கலை கண்டுபிடிக்கப் பட்ட பொழுதும், நூல்களை அச்சடிக்கும் கலை கண்டுபிடிக்கப் பட்ட பொழுதும், எமது சிந்தனா முறை மாற்றமடைந்தது.
- கேள்வி: எல்லோரும் எல்லோருடனும் தொடர்பாடுவதாக உங்களது நூலில் புகழ்ந்து எழுதி இருக்கிறீர்கள். ஆனால் இந்த தொடர்பாடல் மேலோட்டமானது அல்லவா?
பதில்: உண்மை தான். இதெல்லாம் கண்ணுக்கு புலப்படாத கற்பனையான தொடர்பாடல் தான். ஆனால், முந்திய காலத்திலும் அப்படித் தான் இருந்தது. தந்தி, தொலைபேசி மூலமான தொடர்பாடல் எப்படி நடைபெற்றது? கண்ணுக்கு புலப்படாத தொடர்பாடல் எப்போதும் மேலோட்டமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் தொலைபேசி மூலம், ஒருவரை ஒருவர் பார்க்காமலே, மறுமுனையில் இருப்பவருடன் ஆழமான உரையாடல் ஒன்றை நடத்தலாம். அதே நேரம், உங்களுக்கு எதிரில் இருப்பவருடனான உரையாடல் மேலோட்டமாக இருக்கலாம். நான் இளைஞனாக இருந்த காலத்தில், சினிமா நட்சத்திரமான இங்க்ரிட் பெர்க்மான் மீது காதல் வயப் பட்டிருந்தேன். அவளை நான் எனது வாழ்கையில் ஒரு நாளும் நேரில் காணவில்லை. ஆனால், நான் மானசீகமாக காதலித்தேன்.
- கேள்வி: அறிவு எல்லா இடங்களிலும் வியாபித்துள்ளதாக நீங்கள் உணர்கிறீர்கள். ஆனால், அது ஒரு குழப்பகரமான சூழ்நிலையாக தோன்றவில்லையா? நாலாபுறமும் இருந்து, தகவல்கள் குண்டு மழையாகப் பொழிகின்றன. இணையமானது ஒரு பெரிய நீர்த் தேக்கமாக உள்ளது.
பதில்: தகவலும், அறிவும் ஒன்றல்ல. அணுப் பௌதிகவியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், விக்கிபீடியாவில் தேடினால் அது பற்றி நிறைய அறிந்து கொள்ளலாம். அதை வாசித்தாலும், எனக்கு ஒன்றுமே புரியாது. அதாவது, எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது. ஆனால், அறிவு கிடைக்கவில்லை. பெருங் குழப்பம்? ஐயா, நீங்கள் ஒரு தடவை நூலகத்திற்கு சென்று பாருங்கள். அங்கேயும் நீங்கள் குழம்பிப் போகலாம். புத்தகங்கள் அகர வரிசைப் படி அடுக்கி வைக்கப் பட்டுள்ளன. அது மட்டும் தான். அறிவும் ஒரு காலத்தில் ஒழுங்கு படுத்தப் படாமல் கிடந்தது. அரிஸ்டாட்டில், லைப்னிஸ், எராஸ்முஸ்… மிகப் பெரிய தத்துவ அறிஞர்கள் அறிவை ஒழுங்கு படுத்தும் முயற்சியில் இறங்கினார்கள். ஆனால், அது அனேகமாக சாத்தியப் படாத வேலை.
- கேள்வி: ஆனால், ஊடகங்கள் இப்போது அந்த வேலையை செய்கின்றன. (தகவல்களை) தெரிவு செய்கின்றன, வகைப் படுத்துகின்றன, விளக்குகின்றன.
பதில்: ஊடகங்கள் மக்களுக்கு தகவல்களை கொடுப்பது நல்ல விடயம் தான். ஆனால், அதில் தீமையும் உள்ளது. எனக்குப் பதிலாக இன்னொருவர், தகவல்களை வகைப் படுத்தி, எனக்குத் தருகிறார். இணையத்தில் நானாகவே தெரிவு செய்ய முடியும். எனக்கு வேண்டிய தகவல்களை வகைப் படுத்தி பெற்றுக் கொள்ள முடியும். நீங்களாகவே ஒரு தகவலை தேடி எடுத்து அறிந்து கொள்வதில் இருந்து தான், உண்மையான அறிவு வளர்கின்றது.
- கேள்வி: ஆனால், குடிப்பதற்கு கடலளவு தண்ணீர் உள்ளது. நல்ல தகவல்களும், தவறான தகவல்களும் ஒன்று கலந்து உள்ளன. பொய்கள் பரப்பப் படுகின்றன. எல்லாம் தெரிந்த மனிதர்களும் தவறான விக்கிபீடியா கண்டுபிடிப்புகளால் நோய் வாய்ப் படலாம்.
பதில்: மனிதர்கள் தவறிழைகிறார்கள், மிகைப் படுத்தி சொல்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளலாம். இன்னொருவரையும் ஏமாற்றலாம். உங்களுக்கு ஒரு விடயத்தை எடுத்துக் கூறும் ஒருவர், எப்போதும் உண்மையை சொல்வதில்லை. பத்திரிகை மூலம் சொல்லப் படும் தகவல்களும் உண்மையாக இருப்பதில்லை. தகவல்களை கொடுப்பவர்கள் எப்போதும் அதற்குத் தகுதியானவர்களும் அல்ல. நடைமுறை வாழ்வில் உள்ள அத்தனை சிக்கல்களும், இணைய வெளியிலும் இருக்கவே செய்யும்.
(நன்றி: Vrij Nederland, 8 februari 2014)
No comments:
Post a Comment