Tuesday, February 18, 2014

ட்ராஸ்கிசம் : நிரந்தரப் புரட்சி எனும் ஒரு நிரந்தரக் கனவு

" புரட்சிகர தத்துவம் இன்றி, ஒரு புரட்சிகர இயக்கம் இருக்க முடியாது. புரட்சிக்கான சூழ்நிலை இல்லையென்றால், புரட்சி சாத்தியமில்லை. ஆனால், எல்லா  புரட்சிகரமான  சூழ்நிலையும்  புரட்சியை நோக்கிச் செல்வதில்லை."   - லெனின் 

நான் நெதர்லாந்துக்கு வந்த புதிதில், ட்ராஸ்கிச "சர்வதேச சோஷலிஸ்டுகள்" (IS) (Internationale Socialisten) கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில், ட்ராஸ்கிச கட்சிகள் தான் பெருமளவு உறுப்பினர்களை கொண்டுள்ள "இடதுசாரி" கட்சிகள். பிரான்சிலும், பிரிட்டனிலும் ட்ராஸ்கிச கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக குட்டி முதலாளிய சிந்தனை கொண்ட மாணவர்கள் மத்தியில் ட்ராஸ்கிச செல்வாக்கு அதிகமாக உள்ளது.

ட்ராஸ்கிஸ்டுகளும் பல கட்சிகளாக பிரிந்திருக்கின்றனர். நான் தொடர்பு கொண்ட Internationale Socialisten (IS) பெருமளவு இளைஞர்களை கொண்டிருப்பதால், நாட்டில் எந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தாலும் முன்னுக்கு நிற்பார்கள். அந்த விஷயத்தில் அவர்களை பாராட்டலாம். ஆனால், சித்தாந்த அடிப்படையில் மேற்கத்திய ஜனநாயக அமைப்பிற்குள் ஒரு தீர்வைத் தேடுவது ஒரு முரண்பாடாகத் தெரிந்தது.

என்றைக்கோ ஒரு நாள், மக்கள் தாமாகவே புரட்சி செய்வார்கள் என்று கூறுகின்றார்கள். சரி, மக்கள் எப்போது புரட்சி செய்வார்கள்? நீங்கள் எப்போது தலைமை தாங்கப் போகிறீர்கள்? தங்களை லெனினிசவாதிகளாக காட்டிக் கொள்ளும் ட்ராஸ்கிஸ்டுகள், பல தடவைகள் லெனினின் கோட்பாடுகளுக்கு மாறாக நடந்து கொள்வதை அவதானித்தேன்.

"உங்களுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் என்ன வித்தியாசம்?" இந்தக் கேள்வியை எந்த ட்ராஸ்கிஸ்டிடம் கேட்டாலும், " ஐயோ! நாங்கள் ஸ்டாலினிஸ்டுகள் இல்லை"  என்று பதில் சொல்வார்கள். ஸ்டாலின் பற்றி மேற்கத்திய நாடுகளில் சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை அப்படியே ஒப்புவிப்பார்கள். அவர்களைப் பொறுத்த வரையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாமே ஸ்டாலினிச கட்சிகள் தான். பிரான்சிலும், இத்தாலியிலும் "ஐரோப்பிய கம்யூனிசம்" என்றொரு சித்தாந்தம் எழுந்தது. ஐம்பதுகளிலேயே ஸ்டாலினை நிராகரித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தன. இதெல்லாம் ட்ராஸ்கிஸ்டுகள்  தெரிந்து கொள்ள விரும்பாத  உண்மைகள்.

வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளில் வாழும் மக்கள், ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு தயாராக இல்லை. சமாதானமாக வாழும் மக்கள் வன்முறைப் புரட்சியை விரும்பப் போவதில்லை. அதனால் தான், என்றோ ஒரு நாள் மக்கள் புரட்சி செய்வார்கள், நாங்கள் அதற்கு தலைமை தாங்கலாம் என்று ட்ராஸ்கிஸ்டுகள் காத்திருக்கிறார்கள். சுருக்கமாக, இரத்தம் சிந்தாமல் அஹிம்சா வழியில் நடக்கும் புரட்சி ஒன்றுக்காக காத்திருக்கிறார்கள். இது வெறும் குட்டி முதலாளிய மனோபாவம். " அமைதியான வழியில் ஒரு புரட்சி நடந்தால் எமக்கும் சந்தோஷமே. ஆனால், முதலாளிய வர்க்கம் அந்தளவு சுலபமாக தனது அதிகாரத்தை விட்டுக் கொடுக்குமா?" என்று 150 வருடங்களுக்கு முன்னர் கார்ல் மார்க்ஸ் எழுதியிருந்தார்.

அன்றாட வாழ்க்கைக்கு கஷ்டப்படும் மக்கள் வாழும் மூன்றாமுலக நாடுகளில், "ஸ்டாலினிசத்திற்கு" நிறைய ஆதரவு உள்ளது. இதை ட்ராஸ்கிஸ்டுகளே ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், இலங்கை மட்டும் விதிவிலக்கு. உலகிலேயே, இலங்கையில் மட்டும் தான், முதன்முதலாக ட்ராஸ்கிஸ்டுகள் அரசியல் பலம் பெறத் தொடங்கினார்கள். அதனால், இன்றைக்கு எந்தத் ட்ராஸ்கிஸ்டிடம் கேட்டாலும், இலங்கையை ஒரு உதாரணமாகக் காட்டுவார்கள். அதாவது, இலங்கை தான்  "ட்ராஸ்கிஸ்டுகளின் புண்ணிய பூமி"! 

இலங்கையில் ட்ராஸ்கிஸ்டுகள், சிங்களப் பேரினவாத கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து  ஆட்சி அமைத்திருக்கிறார்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? அது ஒன்றும் ட்ராஸ்கிச கொள்கைக்கு முரணானது அல்ல. ஏனென்றால், ட்ராஸ்கிஸ்டுகள் புரட்சிகர கம்யூனிஸ்டுகள் அல்லர். அது ஒரு சமூக ஜனநாயகவாத இயக்கம். அதன் அடிப்படையில், ஒரு ஆளும் கட்சி தங்களையும் சேர்த்துக் கொண்டு ஆட்சியமைக்க விரும்பினால் ஏற்றுக் கொள்வார்கள். ஏனென்றால், அரசாங்கத்தை உள்ளிருந்த படியே மாற்றி விடுவார்களாம். மகிந்த ராஜபக்சவை கூட ஒரு ட்ராஸ்கிஸ்டாக மாற்றி விடலாம் என்று கனவு காண்கிறார்கள்.

ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேருவது இலகுவான காரியமல்ல. கொஞ்சக் காலம் அந்தக் கட்சிக்காக வேலை செய்ய வேண்டும். ஒருவரது கொள்கைப் பற்று, அர்ப்பணிப்பு, சேவை உணர்வு, இவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் அவதானித்த பின்னர் தான், கட்சியில் உறுப்பினராக சேர்த்துக் கொள்வார்கள். உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், அப்படித் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஒரு ட்ராஸ்கிச கட்சியில் மட்டும், எதுவுமே முக்கியமில்லை. உறுப்பினர்களின் எண்ணிக்கை மட்டுமே அவர்களுக்கு முக்கியம். ஒருவர் இன்றைக்கே அறிமுகமானாலும், அவரை உறுப்பினராக சேர்த்துக் கொள்வார்கள். ட்ராஸ்கிசம் பற்றி எதுவும் தெரியாவிட்டாலும், கட்சிக்காக வேலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. சந்தா தொகையை ஒழுங்காக செலுத்தி வந்தால் போதும். 

முதன்முதலாக, IS அமைப்பினரின் கலந்துரையாடலுக்கு சென்றிருந்த நேரம், எனக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டது. கட்சியின் உறுப்பினராவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தருமாறு, என்னிடம் படிவத்தை கொண்டு வந்து நீட்டினார்கள். நான் அதற்கு மறுத்து விட்டேன். கட்சியின் அரசியல் கொள்கை பற்றி, ஓரளவேனும் தெரிந்து கொள்ளாமல் அங்கந்தவராக சேர முடியாது என்று மறுத்து விட்டேன். எனது விருப்பத்தை ஏற்றுக் கொண்ட IS அமைப்பாளர்கள், தமது கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்கள்.

ஆம்ஸ்டர்டாம் பல்கலைக் கழகத்தில் ஓரிடத்தில், IS கட்சிக் கூட்டம் வாரத்திற்கு ஒரு தடவை, வகுப்புகள் இல்லாத மாலைநேரத்தில் நடைபெறும். அதிலே கலந்து கொள்வோர் பெரும்பாலும் பல்கலைக்கழக மாணவர்கள். அதனால், தாம் பயிலும் பல்கலைக்கழகத்தில் இலகுவாக இடம் ஒதுக்கிக் கொள்ள முடிந்தது. இது எனக்கு ஆரம்பத்தில் ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், கம்யூனிஸ்ட் மாணவர்கள் எந்தவொரு நிகழ்வை நடத்த விரும்பினாலும், பல்கலைக்கழக நிர்வாகம் அதற்கு அனுமதிப்பதில்லை. தீவிர இடதுசாரிகளான அனார்க்கிஸ்டுகளையும் அனுமதிப்பதில்லை. ட்ராஸ்கிஸ்டுகளுக்கு மட்டும் விசேட சலுகை கிடைத்தது எப்படி என்று தெரியவில்லை. அது போகட்டும்.

மார்க்சியம் ஒரு பாட்டாளி வர்க்க சித்தாந்தம். ஆனால், கூட்டங்களில் கலந்து கொள்வோர் (குட்டி முதலாளிய) மாணவர்கள். அது சிலநேரம், அவர்கள் மனதிலேயே நெருடலாக இருந்திருக்கும். ஒரு தடவை, துருக்கியை சேர்ந்த புதிய தோழர் ஒருவரை எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்கள். அந்த அறிமுகத்தில் இப்படிச் சொன்னார்கள் : " இன்று எமது கூட்டத்திற்கு ஒரு பாட்டாளி வர்க்க பிரதிநிதி வந்திருக்கிறார்."   அங்கே கூடியிருந்த எல்லோரும் கரகோஷம் செய்து, "அரிதாகக் காணக் கிடைக்கும், பாட்டாளி வர்க்க பிரதிநிதியை" வரவேற்றார்கள். சில நாட்களின் பின்னர், அந்தப் புதிய தோழருடன் உரையாடிய பொழுது தான் உண்மை தெரிய வந்தது. உண்மையில், அவரும் ஒரு மாணவர் தான். ஆனால், தனது வருமானத்திற்காக ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்கிறார்.

ட்ராஸ்கிஸ்டுகள் பேசும் மார்க்சியம் எனக்குப் புதுமையாக தோன்றியது. அவர்கள் தம்மைத் தாமே மார்க்சிஸ்ட் என்றும், லெனினிஸ்ட் என்றும் கூறிக் கொள்கின்றனர். ஆனால், மார்க்ஸ், லெனின் சொன்னவற்றை திரிபு படுத்தி பேசிக் கொண்டிருந்தார்கள். மார்க்ஸ், லெனின் எழுதிய எந்த நூலில் தேடினாலும், ட்ராஸ்கிஸ்டுகளின் கோட்பாடுகளை கண்டுபிடிக்க முடியாது. அவர்களுக்கென்றே, விசேடமாக ட்ராஸ்கி சில நூல்களை எழுதி இருக்கிறார். ட்ராஸ்கிஸ்டுகள், ட்ராஸ்கியின் எழுத்துக்களை தவிர வேறெதையும் வாசிப்பதாகத் தெரியவில்லை.

" சோஷலிசத்தின் இறுதி இலக்கு கம்யூனிசம்."  என்று லெனின் கூட எழுதி இருக்கிறார். ஆனால், எந்தவொரு ட்ராஸ்கிஸ்டும் தன்னை ஒரு கம்யூனிஸ்டு என்று சொல்லிக் கொள்வதில்லை. தப்பித் தவறி, கம்யூனிசம் என்ற வார்த்தையை கூட பயன்படுத்துவதில்லை. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர் கம்யூனிசம் என்ற சொல்லை பாவித்த இடங்களில் எல்லாம், ட்ராஸ்கிஸ்டுகள் சோஷலிசம் என்ற சொல்லைப் போட்டு நிரப்பிக் கொள்கிறார்கள். 

ட்ராஸ்கிசம் ஒரு சமூக ஜனநாயக சித்தாந்தம். ட்ராஸ்கிஸ்டுகள் தம்மை நேரடியாக சமூக ஜனநாயகவாதிகள் என்று அழைத்துக் கொள்வதில்லை. ஆனால், அவர்களது நடவடிக்கைகள் யாவும் அவ்வாறே அமைந்துள்ளன. சமூக ஜனநாயக் கட்சிகளுடன் தமக்கு நிறைய ஒத்துப் போகும் என்று, தனிப்பட்ட முறையில் என்னுடன் பேசிய ட்ராஸ்கிஸ்ட் ஒருவர் கூறினார். அதனால் தான் போலும், இலங்கையை சேர்ந்த  ட்ராஸ்கிஸ்டுகள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரிக்கிறார்கள். (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய இடது கொள்கை கொண்டது. அதனை அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியுடன் ஒப்பிடலாம்.)

கார்ல் மார்க்ஸ் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் பற்றி எழுதியவற்றை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். உலக வரலாற்றில் எல்லாக் காலங்களிலும் ஏதாவது ஒரு வர்க்கத்தின் சர்வாதிகாரம் நிலவி வந்திருக்கிறது. தற்போதும், ஜனநாயக நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகளில் கூட, முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வாதிகாரம் உள்ளது. அதற்குப் பதிலாக, பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை கொண்டு வருவதே சோஷலிசப் புரட்சியின் நோக்கம் என்று மார்க்ஸ் எழுதி இருக்கிறார். மார்க்ஸ் கூறிய "சர்வாதிகாரம்" ஒரு தத்துவார்த்த அடிப்படை கொண்டது. ஆனால், நாம் அன்றாட மொழி நடையில் பயன்படுத்தும் சர்வாதிகாரம் என்ற சொல், கொடுங்கோன்மை என்ற அர்த்தம் கொண்டது. 

குறிப்பாக, ஒவ்வொரு பிரஜைக்கும் ஜனநாயக சுதந்திரம் இருப்பதாக காட்டிக் கொள்ளும் மேற்கத்திய நாடுகளில், சர்வாதிகாரம் என்ற சொல் எதிர்மறையான அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகின்றது. ஆகவே, மேற்கத்திய சமூகத்தில் பிறந்த குட்டி முதலாளிய மாணவர்களும், சர்வாதிகாரம் என்ற சொல்லை எதிர்மறையாக கருதுவது புரிந்து கொள்ளத் தக்கதே. ஆனால், தம்மை "மார்க்சிஸ்டுகள்" என்று காட்டிக் கொள்ளும் ட்ராஸ்கிஸ்டுகள், மேற்கத்திய சிந்தனை முறையை கொண்டிருப்பது தான், என்னால் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது. மார்க்ஸ் எழுதிய பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற சொற்பதத்தை, "பாட்டாளி வர்க்க ஜனநாயகம்" என்று திரிபுபடுத்துவதே மார்க்சியத்திற்கு முரணானது. ஆனால், ட்ராஸ்கிஸ்டுகள் தம்மை "(மேற்கத்திய) ஜனநாயகவாதிகள்" என்று காட்டிக் கொள்வதற்காக, அந்த திரிபுபடுத்தலை தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதெல்லாவற்றையும் விட மிகப் பெரிய கொடுமை, சோவியத் யூனியனின் வீழ்ச்சியை, "ட்ராஸ்கிசத்தின் எழுச்சியாக" கருதினார்கள். அவர்களைப் பொறுத்தவரையில், தொன்னூறுகள் வரையில், முன்னாள் சோஷலிச நாடுகளில் "ஸ்டாலினிஸ்டுகள்"(?) ஆட்சி செய்தார்கள். குருஷேவ் காலத்திலேயே, ஸ்டாலினிச எதிர்ப்பு அரசியல் ஆதிக்கம் பெறத் தொடங்கி விட்டது. உலகம் முழுவதும், கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டாக பிளவு பட்டன. ஒரு பக்கம், ஸ்டாலினை ஆதரிக்கும், மறுபக்கம் குருஷேவை ஆதரிக்கும் பிரிவுகள் தோன்றின. ஆனால், ட்ராஸ்கிஸ்டுகளின் பார்வையில், அவை எல்லாமே "ஸ்டாலினிச கட்சிகள்" தான்!

ஸ்டாலினை விமர்சிக்கும் குருஷேவின் உரையை, போலந்து தான் முதன்முதலாக உலகிற்கு அறியத் தந்தது. எண்பதுகளில் போலந்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றம், வேறெந்த முன்னாள் சோஷலிச நாட்டிலும் ஏற்படவில்லை. லேக் வலேசா, "சொலிடார்நொஸ்க்" என்ற தொழிற்சங்க அமைப்பை உருவாக்கி, கத்தோலிக்க திருச்சபையின் உதவியுடன், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினார். இதெல்லாம், போலந்தை தவிர, வேறெந்த சோஷலிச நாட்டிலும் சாத்தியப் பட்டிருக்காது. போலந்து பெரும்பான்மை கத்தோலிக்கர்களை கொண்ட நாடென்பதும், அன்று போப்பாண்டவராக தேர்தெடுக்கப் பட்ட ஜான் பால் ஒரு போலிஷ்காரர் என்பதும் குறிப்பிடத் தக்கது. லேக் வலேசாவும் ஒரு மேற்கத்திய ஆதரவாளர் என்பது, உள்ளங்கை நெல்லிக்கனியாக அப்போதே தெரிந்த விடயம்.

லேக் வலேசாவின் தொழிற்சங்க போராட்டத்தை, பிற்போக்கான கத்தோலிக்க மத நிறுவனம் முழு மூச்சுடன்  ஆதரித்தது. அது வெளிப்படையாகவே மேற்குலகிற்கு ஆதரவான தன்மை கொண்டிருந்தது. ஆனால், ட்ராஸ்கிஸ்டுகள் அந்தப் போராட்டத்தை வரவேற்றார்கள். "லேக் வலேசா ஒரு லெனினிஸ்ட்" என்றும், அவரது தலைமையின் கீழ் போராடிய தொழிலாளர்கள், "ட்ராஸ்கி காலத்து சோவியத் அமைப்பை கட்டுவதாகவும்," உண்மைக்கு புறம்பான  தகவல்களை பரப்பிக் கொண்டிருந்தார்கள். போலந்து மட்டுமல்லாது, பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், சோவியத் யூனியனிலும், சோஷலிச அரசுகள் வீழ்ந்தன. அங்கெல்லாம், கட்டுப்பாடற்ற முதலாளித்துவ பொருளாதாரம் நடைமுறைக்கு வந்தது. 

அன்று ட்ராஸ்கிஸ்டுகள் என்ன சொன்னார்கள்? அவர்கள் அதனை "ஸ்டாலினிசத்தின் வீழ்ச்சியாக" கொண்டாடினார்கள். " இதோ பாருங்கள், பாட்டாளி வர்க்க மக்கள் புரட்சி ஏற்படப் போகின்றது"  என்று நம்பிக்கையை விதைத்தார்கள். இவர்களது தத்துவ ஆசிரியர் ட்ராஸ்கி கூட, " இரண்டாம் உலகப் போரில், பாசிசம் ஸ்டாலினிசத்தை தோற்கடிக்கும்" என்று எதிர்வு கூறியவர் ஆயிற்றே. அதுவே அப்போது  அவரது மனதில் இருந்த விருப்பமாகவும் இருந்திருக்கும். (இது குறித்த விவாதம் IS கூட்டங்களில் நடைபெற்றது. போரின் முடிவை ட்ராஸ்கி தவறாகக் கணித்திருந்தார் என்பதை சிலர் ஏற்றுக் கொண்டார்கள்.)

"ஸ்டாலினிசம் வீழ்ந்து" இருபதாண்டுகளுக்கு மேலாகியும், ட்ராஸ்கிஸ்டுகள் எதிர்பார்த்த நிரந்தரப் புரட்சி ஏற்படவில்லை. அப்படி ஒரு புரட்சி எந்தக் காலத்திலும் வராது போலிருக்கிறது. அதனால் தான் ட்ராஸ்கியும் தனது தத்துவத்திற்கு "நிரந்தரப் புரட்சி" என்று பெயரிட்டார் போலும்.


ட்ராஸ்கிசம் தொடர்பான முன்னைய பதிவுகள்:

5 comments:

குருத்து said...

//"ஸ்டாலினிசம் வீழ்ந்து" இருபதாண்டுகளுக்கு மேலாகியும், ட்ராஸ்கிஸ்டுகள் எதிர்பார்த்த நிரந்தரப் புரட்சி ஏற்படவில்லை. அப்படி ஒரு புரட்சி எந்தக் காலத்திலும் வராது போலிருக்கிறது. அதனால் தான் ட்ராஸ்கியும் தனது தத்துவத்திற்கு "நிரந்தரப் புரட்சி" என்று பெயரிட்டார் போலும். //

:). ட்ராஸ்கியவாதிகள் பற்றியும், அவர்களின் சித்தாந்தம் பற்றியும் நிறைய தகவல்கள் தந்துள்ளீர்கள்.

Kalaiyarasan said...

நன்றி, குருத்து.
ட்ராஸ்கிச திரிபுவாதிகள் பற்றி, எனது அனுபவத்தில் இருந்து நிறையக் கற்றுக் கொண்டேன்.

Unknown said...

arumai kalai well done not this one YESTER YEAR youre serial hindusim I KNOW RECENT LERAN COMMENT HOW DO; SO SORREY IMMEDIATE RESPONS

Unknown said...

SUPER

Prithiviraj kulasinghan said...

நீங்கள் தந்துள்ள பல கருத்துக்கள் சரியானவை. ஆனால் நீங்கள் ஸ்டாலினிச கண்ணாடியைப் போட்டுக்கொண்டு சிலவற்றை ஆராய்ந்திருக்கிறீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
1. இலங்கையில் டரொட்ஸ்கியிசத்தை அறிமுகப்படுத்திய கொல்வின், என்.எம். போன்றோருடன் ஸ்டாலிச வழிவந்த விக்ரமசிங்க, பீட்டர் கெனமன் போன்றோரும் பண்டாரநாயக்க, சிறிமா அரசில் இணைந்து கொண்டனர்.
2. சமாதான சகவாழ்வு என்பது முதலில் ஸ்டாலினிச வழிவந்தோராலேயே முன்வைக்கப்பட்டது. இதற்கு ஓரளவு சமாந்திரமான கொள்கை அக்காலத்தில் பீஜிங் இலிருந்து வந்தது (அரசு-அரசு உறவு, கட்சி-கட்சி உறவு) இதுதான் பல இடதுசாரிகள் சரணடைவுக்கொள்கையை முன்வைக்கத் துணை போனது.
3. இரு தரப்பிலும் அரசுக்குப் பரிபூரண எதிர்ப்புடன் அமைப்புகள் இருந்தன. புரட்சிக் கம்யுனிஸ்ட் கழகம், இடது கம்யூனிஸ்ட் கட்சி என்பன இருதரப்பினதும் உதாரணங்கள்.
4. ஐரோப்பிய நிலை பற்றித் தெரியாது.இலங்கையில் கம்யுனிஸ்ட் பெயருடன் ட்ரொட்ஸ்கிச அமைப்புகள் இயங்கின. (அது இல்லாமலும் இயங்கின) அது போலவே பெயரில் கம்யுனிசம் இல்லாமல் ட்ரொட்ட்ஸ்கிச அமைப்புகளும் ஸ்டாலினிச அமைப்புகளும் இயங்கின.
இரு முகாம்களுள்ளும் சந்தர்ப்பவாதிகளும் அதி தீவிர இடதுசாரிகளும் வலதுபுறம் சாய்ந்தவர்களும் சீர்திருத்தவாதிகளும் இருந்தார்கள், இருக்கிறார்கள்.


கூடுமானவரை ட்ரொட்ஸ்கியிசத்தை அவரது எழுத்தில் இருந்தே அடையாளம் காண்பது நல்லது. நிரந்தரப்புரட்சிக் கோட்பாடு பற்றிய அறிமுகம் அது தவறும் இடங்களை சுட்டிக்காட்டுங்கள். அது அனைவரதும் வளர்ச்சிக்கு உதவும்.